Loading

அனு “எல்லாம் என் நேரம்” என்று தன்னை நொந்து, விதுனுக்கு டீ வாங்கி வந்து கொடுக்க, அவனும், தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அதை வாங்கி குடித்தான்.

அனு மெதுவாக அங்கிருந்து நகர போக, அவளை பிடித்தவன், “எங்க ஓடுற. எனக்கு ரொம்ப தூக்கம் வருது. நான் தூங்கிட்டா பேஷண்ட் – அ யாரு பார்த்துகிறது. ஒழுங்கா இங்கயே இரு.” என்று சொல்ல,

அவள், “சார் எனக்கு டைம் ஓவர் ஆகிடுச்சு சார். இதுக்குமேல லேட்டா போனா எங்க அப்பா என்னை திட்டுவாரு சார்” என்று பாவமாக சொல்ல,

விது தான், ‘நம்மளை மாதிரியே பயப்படறாளே’ என்று நினைத்தவன், “சரி போ. காலைல இங்க சீக்கிரம் வந்துடனும் ஓகே வா” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, அவனின் மொத்த குடும்பமும் அங்கு வந்தது.

‘அய்யோயோ’ என்று பதறி விட்டு, அனுவை “போ போ” என்று கிளப்பினான்.

அவள் வந்தவர்கள் யார் என்று பார்த்து கொண்டே  நிற்க, அன்னம், விது காதை பிடித்து திருகி, “ஏண்டா இவ்ளோ விஷயம் நடந்துருக்கு. யாருமே எங்க கிட்ட சொல்லல.” என்று திட்ட,

கருணாகரன்,. “கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு. உத்ராவை காப்பாத்த போய் துருவ்க்கு கால்ல ஃபிராக்சரே ஆகியிருக்கு. காலைல நடந்த விஷயம், நைட் ஆகிடுச்சு யாருமே எங்க கிட்ட மூச்சு கூட விடல. மீரா சொல்லித்தான் எங்களுக்கே தெரியுது. ஒரு போன் பண்ணி சொல்லக்கூடாது. எல்லாரை விட பெரியவன் தான நீ. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா…” என்று அவனை சரமாரியாக திட்ட,

இதில் லட்சுமி வேறு, “சரி நீயாவது அந்த தம்பியை பார்த்துக்க வேண்டியது தான. இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்று அனுவை பார்த்தார்.

அவள் தான் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாள்.

விது ‘இப்போதான் இவள்ட்ட ஹீரோயிசம் காட்டுனேன். அது உங்களுக்கு பொறுக்கலையா’ என்று நொந்து கொள்ள, அப்போது அர்ஜுன் வந்தவன், “ஆஹா சிக்கினோமா” என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேய, அவனுக்கும் சரமாரியாக திட்டுக்கள் விழுந்தது.

அனு தான், “நம்மளை பண்ணுன டார்ச்சர்க்கு இவனுங்களுக்கு நல்லா வேணும்…” என்று உள்ளுக்குள்ள சிரித்து கொண்டிருக்க, அர்ஜுன்,

“அம்மா. நான் விதுகிட்ட அப்போவே உங்களுக்கு போன் பண்ணி சொல்ல சொன்னேன். எனக்கு நிறைய வேலைமா. அதான் நான் போன் பண்ண முடியல” என்று தெளிவாக அவனை கோர்த்து விட, விது ‘சோலி முடிஞ்சுது’ என்று தலையை தொங்க போட்டான்.

ஆனால் நடப்பதை யூகித்து கொண்ட அனுவிற்கு தான் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கலகலவென சிரித்து விட்டாள்.

கருணாகரன் அவளை தீயாய் முறைக்க, அவள் அப்பொழுதும் சிரிப்பை நிறுத்தவே இல்லை. அர்ஜுன் “ஷட் அப் இடியட்… கிளம்பு முதல்ல” என்று பல்லைக்கடித்து கொண்டு கூற, அவள் வாயை பொத்தி விதுவை பார்த்து சிரித்து கொண்டு கிளம்பி விட்டாள்.

இப்பொழுது அனைவரும் உள்ளே செல்லப் போக, அர்ஜுன் அவர்களை தடுத்தான்.

“இப்போ அவன் தூங்கிகிட்டு இருக்கான் யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது” என்று சொல்ல, மற்றவர்கள் அவனை முறைத்து, “பரவாயில்லை நாங்க டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வரோம்” என்று முன்னேற, அவன் “இல்ல இல்ல அது… அவன் வந்து அது” என்று திணறினான்.

‘உள்ளே உதி வேறு இருக்கிறாளே. இவன் என்ன என்ன சில்மிஷங்கள் செய்து கொண்டிருக்கிறானோ.’ என்று தான் அவன் பயந்தான்.

அவன் நினைத்தது சரி தான் என்பது போல, உள்ளே துருவ் தூங்காமல், உத்ராவின் கையைப் பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

உத்ரா, கையை இழுத்துக் கொண்டு, “தூங்குங்க துருவ்… டேப்லெட் போட்ருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க” என்று சொல்ல,

அவன் மீண்டும் அவள் கையைப் பிடித்து அவன் கைக்குள் வைத்துக் கொண்டு, “தூக்கமே வரல உதி…” என்க,

“கால் வலிக்குதா துருவ். அதான் தூக்கம் வரலையா.” என்று அவன் அருகில் சென்றாள்.

அவளை கட்டிலில் அமர வைத்து அவள் மடியில் படுத்துக் கொண்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

உத்ரா கடுப்பாகி “இப்போ தூங்க போறீங்களா இல்லையா” என்று திட்ட, அவன் கேட்கவே இல்லை.

சிறிது நேரத்தில் அப்படியே பின்னால் சாய்ந்து உத்ரா தான் தூங்கியிருந்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன், மெதுவாக எழுந்து, அவன் படுக்கையிலே படுக்க வைத்து கொண்டு, அவன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.

அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த அனைவரும், அதை திகைப்புடன்  பார்க்க, அர்ஜுனும் விதுனும் ‘இன்னைக்கு நமக்கு சங்கு கன்ஃபார்ம்’ என்று பயந்து கொண்டு நின்றிருந்தனர்.

கருணாகரன் உத்ராவை பார்த்து விட்டு, லக்ஷ்மியை முறைக்க, அவர்,  “உதி” என்று அவளை உலுக்கப் போனார்.

துருவ் வேகமாக அவரை தடுத்து, “அவளை எழுப்பாதீங்க. தூங்கட்டும்” என்று சொல்ல, அவர் செய்வதறியாமல் கருணாவை பார்த்தார்.

பின் அன்னம், “இப்போ எப்படி இருக்குப்பா. தெய்வம் மாதிரி வந்து என் பொண்ணை காப்பாத்திட்ட தம்பி.” என்று கண் கலங்க,

லட்சுமி, “சாப்ட்டியாப்பா” என்று கேட்க, அவன் ‘சாப்பிட்டேன்’ என்று தலையாட்டினான்.

அர்ஜுனிடம் “அவனுக்கு என்ன சாப்பாடு குடுத்த” என்று கேட்க, அவன் கடையில் வாங்கி கொடுத்தேன் என்று கூறவும், அவனை திட்டினர்.

“நாங்க இருக்கும் போது, எதுக்கு கடையில வாங்கி குடுத்த” என்று, அவரே அவனுக்கு கொண்டு வந்த பாலில் ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தார்.

அவன் வேணாம் என்று மறுக்க, லட்சுமி, “அர்ஜுன் அஜய் மாதிரி நீயும் என் பையன் தான்பா. குடி” என்று குடுக்க, அவனுக்கு தான் என்னவோ போல் இருந்தது.

தயங்கிக் கொண்டே, அதனை வாங்கி குடித்ததும், அர்ஜுனிடம் “எப்போ டிஸ்சார்ஜ்?” என்று கேட்க, அவன் “ஒரு வாரமாவது பெட் ரெஸ்ட் எடுக்கணும்மா” என்றான்.

அவர் “சரி, நீங்க வீட்டுக்கு போங்க, நானும் அப்பாவும் இங்க இருக்கோம்.
.” என்று சொல்ல, துருவ் வேணாம் .. என்று தடுத்தும், அவர்கள் கேட்கவே இல்லை.

இந்த கலவரத்தில் என்ன சத்தம் என்று உத்ரா முழிக்க, மொத்த குடும்பம் அங்கு நிற்பதை பார்த்து பேந்த பேந்த முழித்தாள்.

லட்சுமி, “இதான் நீ அடி பட்டிருக்க பிள்ளையை பார்க்குற லட்சணமா…” என்று திட்ட, கருணா அவளை முறைத்தார்.

சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தவள் ‘நம்ம எப்படி தூங்குனோம்’ என்று குழம்ப, லட்சுமி அவளை வீட்டிற்கு கிளம்ப சொன்னார்.

அவள் “இல்லை நான் இங்க இருக்கேன் நீங்க போங்க” என்று சொல்ல,

“நீ இங்க இருந்து தூங்கனது போதும்.. கிளம்பு முதல்ல,” என்று கண்டிப்பாக கூற, அவளுக்கு அவனை விட்டு போகவே மனம் இல்லை. அவனையே பாவமாக பார்த்து விட்டுக் கிளம்பினாள்.

வீட்டில் சஞ்சுவை தூங்க வைத்து கொண்டிருந்த மீராவிடம் சென்ற அர்ஜுன், “உன்னை யாரு துருவ் ஹாஸ்பிடல்ல இருக்கான்னு வீட்ல  சொல்ல சொன்னது. அவன் வேற கைய காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறான். இன்னைக்கு ஜஸ்ட் மிஸ் வீட்ல மாட்ட  தெரிஞ்சோம்.” என்றவன்,

“இல்ல இல்ல மாட்டியாச்சு… கருணா மாமா பார்வையே சரி இல்லை. எப்படியும் காலைல விடிஞ்சதும் ஒரு விசாரணை கமிஷன் இருக்கு” என்று தன் போக்கில் புலம்பி கொண்டிருந்தவனை புரியாமல் பார்த்தாள் மீரா.

“என்ன அர்ஜுன் ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கீங்க. உடம்பு ஏதாவது சரி இல்லையா” என்று அவன் நெற்றியில் கை வைத்து பார்க்க,

அவன் முறைத்து “வீட்ல சொன்னதை என்கிட்டயாவது போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல, நான் உதியை அங்க இருந்து கிளம்ப சொல்லிருப்பேன். இப்போ என்ன ஆக போகுதோ” என்று தலையில் கை வைக்க, மீரா திரு திருவெனவிழித்து, “நீங்க ஏதோ திட்டுறீங்கன்னு தெரியுது. ஆனால் எனக்கு எதுவுமே சத்தியமா புரியல” என்று பாவமாக சொன்னாள்.

அவள் பாவனையில் பக்கென்று சிரித்தவன், நடந்ததை சொல்ல, மீரா, “இப்போ வீட்ல தெரிஞ்சா என்ன பிரச்சனை. என் அண்ணன் மாதிரி ஒரு மாப்பிள்ளை எந்த கண்டத்துல போய் தேடுனாலும் கிடைக்காது. அதுவும் இல்லாம, துருவ் அண்ணா உத்ராவை கல்யாணம் பண்ணி இருக்காரு. அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு அவள் மேல” என்று வாய் கிழிய பேச,

அவளையே சிறிது நேரம் பார்த்திருந்த அர்ஜுன், அப்போ “உன்னையும் நான் லவ் சொன்னப்பவே கல்யாணம் பண்ணி இருந்தா, என்னை விட்டு போயிருந்திருக்க மாட்டீல.” என்று அழுத்தமாய் கேட்க, அவள் பேச்சற்று அவனையே பார்த்திருந்தாள்.

பின் அவனே, “சரி அதை விடு. நடக்காத விஷயத்தை பத்தி எதுக்கு பேசி டைம்  வேஸ்ட் பண்ணிக்கிட்டு…” என்று சலித்து கொள்ள, உத்ரா அர்ஜுனையும், மீராவையும் சாப்பிட அழைத்தாள்.

மீரா இறுகிப் போய் அங்கு வர, உத்ரா, “இதுங்க பிரச்சனையை எப்படி சரி பண்றது” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து தான், அவளுக்கு அஜய் நினைவே வந்தது. “மீரா அஜய் வந்துட்டானா” என்று கேட்க, அவள் “இல்லையே நான் சாயந்தரம் வந்ததுல இருந்து அஜயை பார்க்கவே இல்ல” என்று சொல்ல, அர்ஜுன் வேகமாக அவனுக்கு போன் அடித்தான்.

அவன் தான் எடுக்கவே இல்லை. உடனே சுஜிக்கு அழைக்க அவளின் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது விது அவசரமாய் அங்கு வந்து, “டேய் உன் தம்பிக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சுருச்சாடா…” என்று கத்த, மற்றவர்கள் அவனை புரியாமல் பார்த்தனர்.

உத்ரா, “என்னடா ஆச்சு” என்று கேட்டதும், விது கடுங்கோபத்தில், “என்ன ஆச்சா, நான் மட்டும் கரெக்ட் டைம்க்கு போகலைன்னா. உன் அத்தை பையன் அற்பாயுசுல போய் சேர்ந்துருப்பான்…” என்று கடுப்படிக்க,

அர்ஜுன் “என்னடா சொல்ற எங்க அவன்?” என்று பதறியதும், “கார்ல தான் இருக்கான்.” என்று சொல்ல, அங்கு சென்று பார்த்தனர்.

எதையோ இழந்தது போலவே தலையை தொங்க போட்டு கொண்டு அமர்ந்திருந்தான்.

அப்பொழுது தான் விது வந்து நடந்ததை சொன்னான். அவன் வீட்டிற்கு செல்லும் வழியில், அஜயின் கார் சீரில்லாமல் செல்வதை கண்டு அவன் பின்னே செல்ல, அப்பொழுது மரத்தில் மோதி அவன் கார் நின்றது.

அந்த நேரம் எதிரில் லாரி ஒன்று வர, அப்பொழுதும் அவன் காரை விட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்ததை கண்டு விது தான் அவனை இழுத்து கொண்டு வெளியில் வந்தான். ஒரு நொடி தாமதமாகி இருந்தாலும், இந்நேரம் லாரிக்கு அடியில் காருடன் நசுங்கி இருப்பான் என்று சிறிது நடுக்கத்துடன் விது சொல்ல, அனைவரும் பதறினர்.

உத்ரா, “லூசாடா நீ. கவனத்தை எங்க வச்சுக்கிட்டு கார் ஓட்டுற” என்று கடிந்து கொள்ள,

அர்ஜுன், “டேய் வாயை திறந்து பேசுடா. என்ன ஆச்சு உனக்கு” என்று கேட்க, அவன் எதுவும் சொல்லாமல் அறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டான்.

என்ன செய்வது என்று புரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, பின், எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்து கொள்ளலாம் என்று உறங்க சென்றனர்.

வெகு நேரம் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்த உத்ராவிற்கு மனது ஏதோ போல் இருந்தது. உடனே துருவைப் பார்க்க வேண்டும் என்று பரபரவென்று வர, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் அர்ஜுன் அறை கதவை தட்டினாள்.

அவன் தூக்க கலக்கத்தில் வந்து என்னவென்று கேட்க, அவள் “உன் ஹாஸ்பிடல் பிளான் குடு…” என்று கேட்டாள்.

அவன் புரியாமல் “எதுக்கு” என்று வினவ,

“இல்லை எந்த பக்கம் சுவர் ஏறி குத்திக்கனும்னு பார்க்கத்தான். அதுவும் இல்லாமல் துருவ் ரூம்க்கு போறதுக்கு வேற வழி இருக்கான்னு பார்க்கணும்” என்று வெகு தீவிரமாக பேச, அர்ஜுன் அவளை கொலை வெறியுடன் பார்த்தான்.

“ஒழுங்கா போய் தூங்கு. அவனை நாளைக்கு பார்த்துக்கலாம். ஏற்கனவே வீட்ல என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம குழம்பி போயிருக்கேன்” என்று கடுப்படிக்க,

அவள் “பங்கு. நீ இப்போ துருவை பார்க்க எனக்கு ஹெல்ப் பண்ணுனா. நான் மீராவை உன் கூட சேர்த்து வைக்க சூப்பர் பிளான் ஒன்னு சொல்லுவேன்” என்று சொல்ல, அவன் விழி விரித்து “நிஜமாவா உதி” என்று கேட்டான்.

“சத்தியமாக பங்கு” என்று அவன் தலையில் அடித்து சத்தியம் செய்தவள்,

“எந்த சுவர் ஏறி குத்திக்கணும்னு சொல்லு பங்கு” என்று விடாமல் கேட்க, அவன் வழி சொன்னதும், ஹையா என்று நடந்த கலவரத்தில் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே அர்ஜுன் அறையில் தூங்கி கொண்டிருந்த விதுனை எழுப்பி, இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல போனாள்.

அர்ஜுன் அவளைத் தடுத்து.. “எருமை ஐடியா சொல்லிட்டு போ” என்று கேட்டதும்,

அவள், “அட என்ன பங்கு நீ… பச்ச புள்ளையா இருக்க. அவள் முன்னாடி வேற ஒரு பொண்ணுகிட்ட ரொம்ப க்ளோஸ் – ஆ இருக்குற மாதிரி பில்டப் குடு. அப்பறம் பாரு. பொஸஸ்ஸிவ்நெஸ் ஜாஸ்தியாகி அவளே இந்த ஜாதகம் மண்ணாங்கட்டி எல்லாம் மறந்துட்டு உன்கிட்ட ஓடோடி வந்துடுவா” என்று சொல்ல,

அர்ஜுன், “இது சரியா வருமா உதி” என்று சந்தேகமாக கேட்க, “கண்டிப்பா பிளான் சக்சஸ் ஆகும்” என்றதில் அர்ஜுன் குஷியானான். அவள் அவன் காதலில் மண்ணை அள்ளி போட்டதை அறியாமல்…

பின், அவள் கிளம்ப போக, மறுபடியும் அவளை தடுத்தவன்,

“பட் எனக்கு தான் கேர்ள் பிரெண்ட்ஸ் யாருமே இல்லையே. அப்பறம் எப்படி” என்று கேட்க,

விது தூக்க கலக்கத்திலேயே “ப்ச் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லைன்னா என்ன. அதான் உன் ஹாஸ்பிடல்ல நிறைய ஃபிகர்ஸ் இருக்கே. அதுல ஒன்னை கரெக்ட் பண்ணுடா. சும்மா நச நச ன்னு பேசிகிட்டு இருக்கான்” என்று இப்பொழுது அவன் தலையில் அவனே மண்ணை வாரிப் போட்டான்.

அர்ஜுன் அப்பொழுதும் “யார் இருக்கா அப்படி” என்று யோசிக்க, உத்ரா, இவன் நம்மள விட மாட்டான் போலயே என்று கடுப்பாகி விட்டு, “அதான் இன்னைக்கு துருவ்க்கு நீ மருந்து எழுதும் போது, உன் பக்கத்துல ஒரு பொண்ணு நின்னுகிட்டு இருந்துச்சே அந்த பொண்ணை கரெக்ட் பண்ணு.
.” என்று சொல்லி விட்டு, விதுவை இழுத்து கொண்டு போக,

அர்ஜுன் “ஹே நீ அனுவையா சொல்ற…” என்று கத்தினான். ஆனால் அதை கேட்கத்தான் அங்கு யாரும் இல்லை.

அஜய் பால்கனியில் நின்று விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான். இன்று சுஜியின் காதலையும் கூடவே தனக்கு அவள் மேல் உள்ள காதலையும் உணர்ந்து கொண்டவன்,அவளை காண வீட்டிற்கு செல்ல, அங்கு அவளுக்கு கல்யாணத்திற்கு பட்டு சேலை செலக்ஷன்  நடந்து கொண்டிருந்தது.

அதிலும் சந்துரு அவள் மேல் ஒவ்வொரு புடவையாக வைத்து பார்க்க, அவள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் எதையும் தடுக்கவும் முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அங்கு வந்து இதனை பார்த்த, அஜய்க்கு கோபம் தான் வந்தது. சுஜியின் அம்மா அவனைக் கண்டதும் வரவேற்று இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் முடிவாகி இருப்பதால், இப்போது இருந்தே எல்லாம் வாங்க ஆரம்பித்து விட்டோம் என்று சந்தோசமாய் சொல்லி விட்டு சந்துரு விடம், “மாப்பிள்ளை. இவனால் தான் சுஜி இந்த கல்யாணத்துக்கு சம்மதமே சொன்னாள்…” என்று எரியும் தீயில் எண்ணையை ஊற்ற, அஜய் தன்னையே நொந்து கொண்டான்.

சுஜி அஜயை ஏறெடுத்தும் பார்க்காமல், எங்கோ பார்வையை பதிக்க, இதுவரை அவளை இப்படி ஒரு நிலையில் காணாதவனுக்கு என்னால் தானே இதெல்லாம் என்று வருத்தமாக இருந்தது.

சந்துரு சுஜியிடம் உரசிய படியே பேச, அஜய்க்கு அவனின் மேல் கோபம் கோபமாக வந்தது. நான் சுஜியிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, யார் அனுமதியும் கேட்காமல், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

அவள் கையை உதறி விட்டு, “என்ன பண்ற அஜய்… அங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க.” என்று அதட்ட,

அவன் “என்ன நினைப்பாங்க. இதுவரை நான் உன் கையை பிடிச்சதே இல்லையா” என்று எதிர்கேள்வி கேட்டான்.

“அப்போ வேற, இப்போ”

“இப்போ இப்போ என்ன சுஜி…? இப்பயும் என்னை தவிர உன் மேல யாருக்கும் உரிமை இல்ல. உன்னை யாருக்கும் நான் விட்டு குடுக்க மாட்டேண்டி. எனக்கு நீ வேணும். ஐ நீட் யு மேட்லி.” என்று கத்த, அவன் கன்னத்தில் இடியாய் அவள் கை இறங்கியது.

அதில் அவன் அதிர்ந்து அவளை பார்க்க, அவள், “இன்னொருத்தருக்கு நிச்சயமான பொண்ணுகிட்ட இப்படி தான் வந்து பேசுவியா. சென்ஸ் இல்ல உனக்கு. ஹான்… ? உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம். நீ எதுக்கு என் மேல உரிமை காட்டணும். யாருடா நீ எனக்கு.” என்று கோபமாக கேட்க,

அவன் அதே கோபத்தில், “நான் தான்டி உனக்கு எல்லாம்… நான் உன்னை லவ் பண்றேன். நீ தான் என் பொண்டாட்டி” என்று சொல்ல, அவள் கலகலவென சிரித்து,

“உனக்கு எது எதுல விளையாட்றதுன்னு விவஸ்தையே இல்லையா. உன்னை லவ் பண்றதுக்கு நான் பாழுங்கிணத்துல விழுந்து செத்துடலாம். லூசுத்தனமா பேசிகிட்டு இருக்க…” என்று அவன் சொன்னதையே அவனுக்கு குரல் கமற ரிப்பீட் செய்ய,  அவன் திகைத்து நின்றான்.

பின், அவளே “என்னைக்கு என் காதலை நீ காமெடின்னு நினைச்சியோ அப்பவே நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். இங்க இருந்து போய்டு… என் வாழ்க்கைல இருந்தும்” என்று கண்டிப்பாய் சொல்லி விட்டு உள்ளே சென்றவள், ‘லவ் பண்றானாம் லவ்வு. அதை திமிரா வேற வந்து சொல்றான். உன்னை ஒரு மாசத்துக்காவது வச்சு செய்றேன் இரு…’ என்று உள்ளுக்குள் அவனை வறுத்து கொண்டிருந்தாள். அவள் பேசியதை கேட்டு தான் அஜய் காரை கவனம் இல்லாமல் ஓட்டியது.

“தொம்” என்று மருத்துவமனை சுவற்றில் இருந்து உத்ரா குதிக்க, விது தான், “இவள் கூட டெயிலி இதே ரோதனையா போச்சு… முதல்ல இவளோட அண்ணன் பதவியை ராஜினாமா பண்ணனும். அப்போ தான் உசுரோட இருக்க முடியும் போல” என்று புலம்பிக் கொண்டே அவனும் குதித்தான்.

பின், துருவுக்கு பக்கத்துக்கு அறையில், கர்ணனும் லக்ஷ்மியும் இருக்க, விதுவை யாரும் வராமல் பார்த்துக்க சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக, விது.. “ஹே நான் என்ன அண்ணனா என்னடி.” என்று திட்ட வருகையில், அவள் அதை காதில் வாங்காமல் சென்று விட்டாள்.

உள்ளே சென்ற உத்ரா கால் வலியில் முனங்கி கொண்டிருந்தவனை கண்டு, வேகமாக அருகில் சென்று, “துருவ் என்ன ஆச்சுடா…” என்று பதறி கொண்டு கேட்க, அவன் விழித்து,

“இங்க என்ன உதி பண்ற இந்த நேரத்துல.” என்று புரியாமல் கேட்டான்.

“ப்ச் முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு. ரொம்ப வலிக்குதா. தூங்குனியா இல்லையா. லைட்டா காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு” என்று படபடப்பாய் பேச,

துருவ் “எனக்கு ஒன்னும் இல்ல ஹனி. லைட்டா வலிச்சுச்சு அவ்ளோதான்…” என்றதும் அவள் அதனை கண்டுகொள்ளாமல்,

வெளியில் நின்ற நர்ஸை அழைத்து, வலிக்கு மருந்து கொடுக்க சொல்ல, அவள், “சார்க்கு இன்ஜெக்ஷன் போட வந்தேன் மேம். ஆனால் சார் எந்த இன்ஜெக்ஷனும் போடவே விடல, அர்ஜுன் சாரும் மாத்திரை மட்டும் குடுக்க சொன்னாரு” என்று சொன்னதும், துருவை முறைத்தவள்,

“நீங்க இன்ஜெக்ஷ்ன் எடுத்துட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு, அவனை திட்டினாள்.

“ஒழுங்கா ஊசி போட்டா தான சரியாகும். இப்படி வலியில புலம்பிகிட்டே படுத்திருக்க…” என்றவள், நர்சிடம் ஊசியை வாங்கி, அவளை வெளியே அனுப்பி விட்டு, “திரும்பு” என்று அவனிடம் இடுப்பை காட்ட சொன்னாள்.

அவன், “வேணாம் உதி வலிக்கும்” என்று முகத்தை சுருக்க,

“இவ்ளோ அடி பட்டு காலே உடைஞ்சுருக்கு. இந்த ஊசி தான் உனக்கு வலிக்குதாகும்… ஒழுங்கா திரும்பு.” என்று அவன் கத்த கத்த ஊசியை போட்டு விட்டாள்.

பின், அவன் வாயைப் பொத்தியவள், “எதுக்குடா இந்த கத்து கத்துற. நான் என்ன உனக்கு டெலிவரியா பார்க்குறேன்” என்று முறைக்க, அதில், அவன் அவளை பார்த்து மெலிதாய் சிரித்தான்.

ஆனால்… முதலில் நடந்தது எல்லாம் அவளுக்கு நியாபகம் இல்லை. அவன் சொன்னதும் தற்போது அவளுக்கு நினைவு இல்லை. தன்னிச்சையாக தான் எல்லாமே செய்தாள். அதனை அவனும் புரிந்தே இருந்தான்.  

பின் அவளை ரசனையுடன் பார்த்து விட்டு, “எதுக்கு உதி வந்த” என்று கேட்க,

அவள், “என்னன்னே தெரியல. உன்னை பார்க்கணும் போல இருந்துச்சு. நீ என்னை தேடுவியோன்னு தோணுச்சு அதான் வந்தேன்… நான் வந்ததும் சரியா போச்சு. இல்லைன்னா விடியிற வரைக்கும் இப்படி முனங்கிகிட்டே படுத்துருப்பீல. இந்த அத்தையும் மாமாவும் பெருசா உன்னை பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு தூங்குறாங்க” என்று பொரிய,

அவன் மனதில் அவளைக் கொஞ்சி கொண்டு “இல்லை உதி அவங்க நான் கம்பெல் பண்ணதுனால தான் போய் தூங்குனாங்க. இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாங்க” என்று சொன்னதும்,

அவள் “சரி நீ தூங்கு.” என்று அவனை மடியில் கிடத்தினாள்.

அவளையே பார்த்திருந்த துருவ் “உதி” என அழைத்து, ஏதோ பேச வருகையில் சட்டென்று நிறுத்தியவன், “உதி ஏதோ சத்தம் கேக்குதுல” என்று கூர்மையாக கவனிக்க, அவளும் கவனித்து விட்டு, “ஆமா துருவ்… காலடி சத்தம் மாதிரி கேக்குது. விது வரானோ” என்று யோசித்து கேட்க, அவன் இல்ல என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே ஒரு உருவம் திடும் என கத்தியுடன் உள்ளே வந்து, துருவ் மீது பாய்ந்தது.

துருவ் அதனை தடுத்து, அவன் கையை பிடிக்க, உத்ரா, “யாருடா நீ” என்று அவனை பிடித்து இழுத்தாள்.

அந்த உருவம், அவளை அங்கு எதிர்பார்க்காமல் திகைத்தது அதன் உடல் அதிர்விலேயே தெரிய, இருவரிடமும் இருந்து தப்பித்து, அங்கிருந்த ஜன்னல் வழியே வெளியில் சென்றது.

உத்ரா அவன் பின்னே ஓட போக, துருவ் “வேணாம் உதி. அவன் தப்பிச்சுருப்பான் விடு..” என்று சொல்ல,

உத்ரா, “யாரு துருவ் அது. உங்களை கத்தியால் குத்த வந்தான். கடவுளே நீங்க தூங்கி கிட்டு இருந்தீங்கன்னா என்ன ஆகியிருக்கும். இல்ல நான் வரலைனா…” என்று புலம்பியவளுக்கு  கண்ணீரும்,மேலும் இதனை செய்தவனை கண்டுபிடித்து உண்டு இல்லை என்று ஆக்க வேண்டும்  என கோபமும் வந்தது.

துருவ் தான் அவளை அணைத்து அமைதிபடுத்தி, “யாரு இந்த புது பிரச்சனை” என்று புருவத்தை சுருக்கி யோசித்தான்.

உறைதல் தொடரும்..
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
49
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.