Loading

“ஏன் பானு… உன் புள்ள முதல் தடவை கார்மெண்ட்ஸ்க்கு போயிருக்கானே. வேலை ஏதாவது பார்ப்பானா?” என மனைவியிடம் கிண்டலாக கேட்டார் பாலகிருஷ்ணன்.

“அதான் எனக்கும் தெரியலைங்க. இந்த லட்சணத்துல நம்மளையும் வர வேணாம்ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.” என்னும் போதே, வாசலில் இந்திரஜித் வண்டியை நிறுத்துவது தெரிந்தது.

அவன் உள்ளே வந்ததும், பானுரேகா, “என்னங்க… உங்க பையன் நைட்டு வரைக்கும் கார்மெண்ட்ஸை விட்டுட்டு வர மாட்டேன்னு சொன்னான். இப்ப என்ன போய் கொஞ்ச நேரத்துல விழுந்து அடிச்சு ஓடி வர்றான்.” என நக்கலடிக்க, இந்திரஜித்தின் முகம் வேதனையை தாங்கி இருந்தது.

“தாமரை அத்தை தவறிட்டாங்கம்மா.” வருத்தம் தோய்ந்த குரலில் அவன் கூறியதில் இருவரும் அதிர்ந்தனர்.

“என்ன சொல்ற இந்தர்? எப்படி? நல்லா தான இருந்தாங்க.” என பானுரேகா பதறிட,

“ம்ம்… நேத்து நைட்டு கூட சத்யா பேசிட்டு இருந்தாளே… சடன் அட்டாக்ன்னு பாட்டி சொன்னாங்க.” என்றவன் ஆதங்கம் தாளாமல் தலையைக் கோதி கொண்டான்.

பாலகிருஷ்ணன், “சத்யாவுக்கு தெரியுமா இந்தர்?” எனக் கேட்டதில், “ம்ம்ஹும். ஊர்ல இருந்து யாரையும் அவளுக்கு போன் பண்ண வேணாம்ன்னு சொல்லிருக்கேன். அங்க கூட்டிட்டு போய் பொறுமையா சொல்லிக்கலாம்.” என்றவனுக்கு, அவள் எப்படி இதை தாங்குவாள் என்ற எண்ணமே வலித்தது.

சில இழப்புகளை ஈடு செய்ய இயலாதே. அதிலும் தாயின் இறப்பை தாங்கவே தனி பலம் வேண்டும்.

இங்கு நீரஜாவோ, “பிளைட் டிக்கட் புக் பண்ணியாவது போய்டலாம் ரஞ்சி. வைஷு எப்படி தனியா சமாளிக்கிறான்னு தெரியல.” எனப் பதற்றத்துடன் விமானச்சீட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.

“திருச்சி வரை போய்டலாம் நீரு. அங்க இருந்து கார் எடுத்துக்கலாம். என் பிரெண்டு அங்க இருக்கான். அரேஞ்ச் பண்ணிடலாம்” எனத் துரிதமாக செயல்பட, அடுத்த விமானத்தில் 3 டிக்கட்டுகளே இருந்தது.

“இப்ப என்ன செய்ய ரஞ்சி?” குழப்பமாக நீரஜா கேட்க,

“பரவாயில்ல, முதல்ல நீ, சத்யா இந்தர் மூணு பேரும் போங்க. நாங்க அடுத்த பிளைட்ல வரோம். இல்லன்னா கார்லயே வந்துடுறோம். நீ போய் வைஷுக்கு துணையா இரு.” என்றதும், அதுவே அவளுக்கும் சரி என்று பட, விமான டிக்கட்டும் எடுத்தாகிற்று.

தன் அறை வாசலுக்கு சென்ற இந்திரஜித், முயன்று முகத்தை சீராக வைத்துக்கொண்டு கதவை திறக்க, அங்கோ, தரையில் காலை கட்டிப்பிடித்தபடி, அழுது கரைந்து கொண்டிருந்தாள் அவனின் உயிரானவள்.

அதிலேயே விஷயம் தெரிந்து விட்டது எனப் புரிந்ததில், புயல் வேகத்தில் அவளருகில் சென்றவன், “தியா…” என்று பரிதாபமாக அழைக்க, மேலும் வெடித்து அழுத்தவள்,

“அம்மா ஜித்து…” எனத் தேம்பியதில், மறுநொடி அவளை நெஞ்சில் சாய்த்துக்கொண்டவனுக்கும் கண்ணில் நீர் துளிர்த்தது.

என்ன சொல்லி ஆறுதலுரைப்பது? இன்னும் நான்கு நாட்களில் இங்கு வர வேண்டியவர். மொத்தமாக உலகை விட்டு சென்றதை அவனாலேயே ஜீரணிக்க இயலாத போது, அவளால் மட்டும் எப்படி ஏற்க இயலும்?

மனிதர்களின் எதிர்பாராத இறுதி முடிவுகளை, எண்ணிப்பார்த்தாலே நாட்டில் பல குற்றம் குறைந்து விடும்! மனதிற்கு நெருக்கமானவர்களின் திடீர் இழப்பு, உயிரையே வதம் செய்யும் பலமிக்கது!

“ஊருக்கு போகலாம் தியா. உடனே கிளம்பிடலாம். கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ. ப்ளீஸ்.” என தவித்துப் போனவனுக்கு, அவளது கண்ணீரைத் துடைக்கும் ஆற்றலின்றி போனது.

என்னதான் உயிரானவர்கள் என்றாலும், அவர்களின் வேதனையை குறைக்கவோ, அவ்வேதனையை தாங்கிக்கொள்ளவோ, கண்ணீரை மட்டுப்படுத்தவோ, சாதாரண மனிதனுக்கு அசாத்தியம் என்று புரிந்தவனுக்கு, மனம் ரணப்பட்டு போனது.

கூடவே, வைஷாலியை எண்ணியும் நொந்திருந்தான். தனியாக என்ன செய்கிறாளோ என்ற பதைபதைப்பு!

மின்னல் வேகத்தில், அனைத்தும் நடைபெற, சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த மூவரும், அங்கிருந்து காரில் ஊருக்கு வந்து விட்டனர். சிரஞ்சீவி தாய் தந்தையை அழைத்துக்கொண்டு வருவதாய் ஏற்பாடு.

ஆனால், பயணத்திலும் ஒரு நொடி கூட கண்ணீர் நிற்கவில்லை சத்யரூபாவிற்கு.

வெற்றுயிராய் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த தாயின் உடலைக்கண்டதும், கத்தி அழுதவளை யாராலும் நிறுத்த இயலாது போனது.

எழிலோ, ஒரு பக்கம் அத்தையை கண்டு கதறிட, இவர்களுக்கு எதிர்மாறாக இறுக்கத்துடன் துளிகூட கண்ணீர் சிந்தாமல், தாயையே வெறித்திருந்தாள் வைஷாலி.

நீரஜா அவள் கையைப்பற்றி, “அழணும்ன்னா அழுதுடு வைஷு…” என்று பயத்துடன் கூற, அவளோ அசையவே இல்லை.

சிறிது நேரம் சென்றதும், சரி ஆகி விடுவாள் என அமைதி காத்த நீரஜாவிற்கு, வைஷாலியின் நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்த, அங்கு மற்ற வேலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இந்திரஜித்திடம் வந்தாள்.

“இந்தர், வைஷுவை பாருடா. சிலை மாதிரி உட்காந்து இருக்கா. பயமா இருக்கு. அவளை அழுக சொல்லுடா…” எனக் கண்ணில் நீர் தேங்க கூற, அவனும் அவளை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

மெல்ல அவளருகில் சென்று அமர்ந்தவன், “வைஷுமா… இங்க பாரு” என்று அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“ஆக வேண்டிய காரியத்தை எல்லாம் நீயே பார்த்துக்கோடா ப்ளீஸ். ஏதாவது தெரியணும்ன்னா, ஆயாகிட்ட இல்லன்னா, சொந்தக்காரங்க யார்கிட்டயாவது கேட்டுக்க.” என்று விட்டு மீண்டும் தாயை பார்க்க தொடங்கி விட்டாள்.

மறந்தும் எழிலை பற்றி பேசாததைக் குறித்துக் கொண்டவன், “வைஷுமா… இப்படி இருக்காதடா. அழுதுடு.” சற்றே இறைஞ்சும் குரலில் இந்திரஜித் கூற,

தோளைக்குலுக்கியவள், “ப்ச், அழ
தோணல. என்னை விட்டுடேன்.” கண்ணை சுருக்கிக் கூறியவள், அதீத அழுத்தத்துடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்து, ஊர்க்காரர்களும் தூற்றி விட்டு சென்றனர். அம்மா செத்ததுக்கு ஒரு சொட்டு கண்ணீராவது விடுறாளா? என்று.

இதயத்தில் இருந்து அவளுக்கு இரத்தமே வடிவது அவர்களுக்கு எங்கு தெரியப்போகிறது…! எப்போதும் வெளியில் தெரியும் கண்ணீருக்குத் தானே மதிப்பு அதிகம்!

இந்திரஜித் அவளை தொந்தரவு செய்யாமல், “விடு நீரஜ். சரி ஆகிடுவா. நீ அவ கூடவே இரு.” என்று விட்டு, எழிலைத் தேடினான்.

அவனும் வைஷாலியின் இறுக்கத்தைக் கண்டு தவிக்கவே செய்தான்.

அவளிடம் சென்று ஆறுதல் கூற விழைந்தவனுக்குள், சிறு குற்ற உணர்ச்சி ஆட்டிப்படைத்தது.

தாயின் இந்த நிலையைக் காண சகிக்காமல், அறைக்குள் சுருண்டு அழுது கொண்டிருந்தாள் சத்யரூபா.

சாவித்திரியும் அழுது ஓய்ந்து, பின் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “சத்யாம்மா. நீயே இப்படி ஒடுங்கிப் போனா எப்படி… வைஷு வேற கல்லு மாதிரி உட்காந்து இருக்கா. இப்பவாவது அவள்கிட்ட போய் பேசு சத்யா.” என்றதும், சீறலுடன் நிமிர்ந்து அவரை எரித்தாள்.

அத்துடன் வாயை மூடிக்கொண்டவர், “மனச தேத்திக்க” என ஆறுதல் உரைத்து விட்டு நகரப் போக,

“ஆயா… என்ன தான் ஆச்சு. நேத்து கூட அம்மா நல்லா தான பேசுனாங்க” எனக் கேட்டாள் ஆற்றாமையுடன்.

“அதான் எனக்கும் மனசு ஆறவே இல்ல சத்யா. காலைல திடீர்ன்னு நெஞ்சை புடிச்சுட்டு உட்காந்துட்டா… எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக ஆட்டோ கூட கிடைக்கல. வைஷுவுக்கு போன் பண்ணுனா, அவ போனும் கிடைக்கல. நேத்து நைட்டு எழிலு கூட போன் போட்டு, இன்னைக்கு வந்துடுவேன்னு சொல்லுச்சு.

அதனால, எழிலுக்கு போன் பண்ணுனா, அதுவும் போனை எடுக்கல. என்ன செய்யன்னு தெரியாம, திண்டாட்டமா போச்சு. அப்பறம் வேற வழி இல்லாம…”  என்றவர் எதையோ மென்று விழுங்கி விட்டு,

“அப்பறம், ஒரு வழியா ஆட்டோ கிடைச்சு ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள இவளுக்கு என்ன அவசரமோ… உடம்பே ஜில்லுன்னு ஆகிடுச்சு…” என்று அழுது தீர்த்தவர், எழிலையும் வைஷாலியையும் குற்றம் சுமத்தவில்லை.

ஒரு ஆதங்கத்தில் மட்டுமே கூறினார். ஆனால், சத்யா தான் உள்ளுக்குள் கனன்றாள்.

“ஏதோ சொல்ல வந்தியே சொல்லு…” என்றாள் கூர்மையாக.

அவரோ தன்னையே நிந்தித்து விட்டு, “ஒ… ஒன்னும் இல்ல” என்று சமாளிக்க பார்க்க, “சொல்லு ஆயா…” என முறைத்தாள்.

“அது… அப்பறம் வேற வழி இல்லாம, ஆனந்திக்கே போன் அடிச்சு, நிலவரத்தை சொன்னேன்… அவ மனசாட்சியே இல்லாம, செத்தா சாகட்டும்ன்னு சொல்லிட்டா…” என்னும் போதே அவருக்கும் குரல் நடுங்கியது.

கூடத்தில் சத்யாவைக் காணாமல், அவளிடம் பேசும் பொருட்டு, அங்கு வந்த எழிலழகன் நடந்த சம்பாஷணையைக் கேட்டு, அதிர்ந்து விட்டான்.

‘அம்மாவா அப்படி சொன்னாங்க…’ என திகைத்துப் போக, அதற்குள் யாரோ அழைத்ததில் சாவித்ரி வெளியே சென்றார்.

எழிலைத் தேடி வந்த இந்திரஜித்திற்கும் அனைத்தும் கேட்கவே செய்தது. அந்நேரம், எழில் அறைக்குள் சென்று “சது” என்று கலக்கத்துடன் அழைக்க, அவள் அவனை பார்த்த பார்வையில் செத்தே போனான்.

“சது… சத்தியமா நான் போனை பார்க்கல. வேணம்ன்னு பண்ணல… நான்…” என தெரியாமல் நடந்த தவறுக்கு, அவன் தன்னிலை விளக்கம் கொடுக்க,

“வேணும்னு கூட செஞ்சுருப்ப.” என்றாள் சுள்ளென.

அவ்வார்த்தையில் வெகுவாய் நொறுங்கி போனான் எழில்.

“சது நான் போய் அப்படி…” என்றவனுக்கு பேச கூட இயலவில்லை. என்ன வார்த்தை கூறிவிட்டாள்! என ஆயாசமாக இருந்தது.

“என்ன பழி வாங்க, வைஷுக்காவை கல்யாணம் பண்ணி, அவளை தெளிவா உன் அப்பா அம்மாட்ட விட்டு கொடுமை படுத்த விட்ட… என்ன விரும்புனதை என் புருஷன்கிட்டயே சொல்லி, சண்டை இழுக்க பார்த்த. என்னையும் ஊரை விட்டு அனுப்பியாச்சு. என் அக்காவையும் ஒடுக்கியாச்சு. அடுத்து என் அம்மா மட்டும் தான் மீதி இருக்காங்க. அவங்களையும் இல்லாம ஆக்கிட்டா, உன் குடும்பத்துக்கே நிம்மதியா இருக்கும்ல.

அதான், உன் அம்மா மாதிரியே நீயும் செத்தா சாகட்டும்ன்னு விட்டுருப்ப…” என்றவளின் வார்த்தைகள் தேள் கொடுக்காக அவனைக் கொன்றது.

அதிர்வில் நிற்காமல் வழிந்த கண்ணீரில், உறைந்து போனான் எழில்.

“சத்யா… என்ன பேசுற?” மனையாளை கண்டனத்துடன் பார்த்தான் இந்திரஜித்.

“நடந்ததை தான பேசுறேன்.” அவளும் விடாமல் பதில் பேச,

“முட்டாள் மாதிரி பேசாத. அவன் வேணும்ன்னா பண்ணிருப்பான். நல்லா இருந்த அத்தைக்கு திடீர்ன்னு நெஞ்சு வலி வரும்ன்னு அவனுக்கு தெரியுமா என்ன… தெரிஞ்சுருந்தா நமக்கு முன்னாடி அவன் தான் வந்துருப்பான்.” என்றதில், அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த எழிலழகன், மீண்டும் தலையை தரையில் புதைத்தான்.

“உங்களுக்கு புரியாது விடுங்க…” அவள் எப்போதும் போல எரிச்சலாக,

“ஆமா, ஆமா, எங்களுக்கு ஒன்னும் புரியாது. உனக்கு எல்லாம் புருஞ்சுடும்” அவனும் காட்டமாக அவளைக் கடிந்தான்.

அவள் எழுந்த கேவலுடன், “முதல்ல ரெண்டு பேரும் வெளில போறீங்களா” என்று கத்தி விட்டு, மீண்டும் அமர்ந்து முகத்தை மூடி தேம்பினாள்.

அதற்கு மேல் அங்கு நிற்க தெம்பில்லாமல், தள்ளாடிய நடையுடன் வாசலுக்கு சென்று விட்ட எழிலழகன், திண்ணையில் அமர்ந்து விட்டான் சோர்வாக.

சத்யரூபாவை பெருமூச்சுடன் பார்த்த இந்திரஜித், அவள் முன்னே, முட்டி இட்டு அமர்ந்து, தலையை தடவிக் கொடுக்க, அவளது தேம்பல் அதிகமே ஆனதில், உச்சந்தலையில் முத்தமிட்டான்.

பின் மென்மையாக, “எல்லாருக்கும் கஷ்டமா தான் இருக்கு தியா. உன் பீலிங்ஸ் புரியுது. அதுக்காக எல்லாரையும் குற்றவாளியா ஆக்குறது ரொம்ப தப்புடா…” என்றான்.

அதற்கு அவள் விருட்டென நிமிர்ந்து பேச வர, ஒற்றை விரலால் அவள் இதழை மூடியவன், “உஷ்… இப்ப மனசு சமநிலைல இருக்காது. எதுவும் பேச வேணாம். போய் அத்தை பக்கத்துல இரு.” என்றழைக்க, அவள் உதட்டைப் பிதுக்கி மறுப்பாக தலையசைத்தாள்.

“இங்க பாரு தியாக்குட்டி… எல்லா சூழ்நிலையையும் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும். உன் அப்பா இறந்தப்ப கூட,  நீ இந்த அளவு உடைஞ்சு போகல தான. அந்த வயசுலயே எல்லாத்தையும் தைரியமா மேனேஜ் பண்ணி, உன் அம்மாவையும் அக்காவையும் ஆறுதல் செஞ்ச தான…” என்றான் கனிவாக.

இதனை அவனிடம் வைஷாலி பல முறை கூறி இருக்கிறாள். அவளுமே, அவன் கூறியதை ஆராயாமல்,

“அப்போ, அம்மாவையும் அக்காவையும் பார்த்துக்கணும், அம்மா அப்படியே அந்த வேதனையில மூழ்கிட கூடாதுன்னு என்னை நானே தைரியப்படுத்திக்கிட்டேன். இப்போ எனக்கு யாரு இருக்கா…” சிறு பிள்ளை போல கலங்கிய கண்களுடன் பேசியவளைக் கண்டு அவனுக்கும் கண் கலங்கியது.

“நான் இருக்கேன்ல. எனக்காக தைரியமா இருக்க கூடாதா தியா. ம்ம்?” கனிவு பொங்க, அவள் கன்னத்தை கையில் ஏந்தினான்.

அவன் கையை வெடுக்கென தட்டி விட்டவள், “போயா… நீ தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணி என்னை திட்டுறியே. உங்க எல்லாருக்கும் என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுது.” என்று அவனைத் தள்ளினாள்.

அவனோ விலகாமல், மெல்ல அவளை அணைத்தபடி, “என் சப்போர்ட் எப்பவும் என் தியாக்குட்டிக்கு தான். பாவம்… அவன் அழுதான்ல. அதான், போனா போகுதுன்னு அவனுக்கு சப்போர்ட் பண்ணுனேன்டி.” என்றவன், இரு கட்டை விரல்கள் கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு,

“இப்போ நல்ல பொண்ணா, போய் அத்தை பக்கத்துல உட்காரு எந்திரி…” என்று சிறு குழந்தைக்கு கூறுவது போல சமாதானம் செய்து எழுப்பினான்.

இந்நிலையில், அவளுக்கு எழிலின் நிலையை புரிய வைப்பது முட்டாள்தனம் என்றுணர்ந்தவன், அவளை கூடத்தில் அமர செய்து விட்டு, எழிலைப் பார்க்க சென்றான்.

மொத்த வேதனையையும் முகத்தில் ஏந்தி, சிறிது சிறிதாய் மனதால் மரணித்துக் கொண்டிருந்தான் எழிலழகன்.

அதிலும் அத்தை மீது உயிரையே வைத்திருந்தவனைப் பார்த்து, அவரைக் கொன்றதே நீ தான் என்பது போல பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவனை வெகுவாய் காயப்படுத்தியது.

காலத்துக்கும் மறையாத வடுவாகிப் போன காயத்தை மனதில் ஏற்று உருக்குலைந்தவன், எங்கோ வெறித்திருக்க, அவனருகில் நிழலாடியதில் மெல்ல நிகழ்விற்கு வந்தான்.

இந்திரஜித் தான் நின்றிருந்தான். அதில், காய்ந்திருந்த கண்களில் மீண்டும் குளம் கட்ட, கீழுதட்டைக் கடித்தபடி குனிந்திருந்தவனின் விழிகளில் இருந்து சொட்டு சொட்டாய் கண்ணீர் சொட்டியது.

அதனைக் கண்டு இந்திரஜித்திற்கும் வருத்தமாகிப் போக, அவனை வயிற்றோடு கட்டிக்கொண்டான்.

எழிலுக்கும் ஆறுதல் தேவைப்பட, இந்திரஜித்தின் சட்டயைப் பற்றி, விசும்பலுடன் அழுதான்.

“விடுடா. அவள் கோபத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசுறா. அப்பறம் புருஞ்சுப்பா.” என சமாதானம் செய்ய, அவன் அழுகை நிற்கவில்லை.

“ப்ச்… முதல்ல அழுகுறதை நிறுத்து எழில். சொல்றேன்ல…” என அதட்டியவன், “இங்க என்ன பார்மாலிட்டின்னு எனக்கு தெரியல. நீ வந்தா தான் அடுத்து அடுத்து வேலை நடக்கும். இப்படியே அழுதுட்டு இருந்தா, செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் யார் பாக்குறது?” என்றதில், உண்மை உணர்ந்து, மெல்ல விலகினான்.

சற்றுப் பொறுத்து, கண்ணைத் துடைத்தவன், எழுந்து “நீயாவது நம்புறல்ல…” எனக் கேட்டான் பரிதாபமாக.

அவன் தோளை தட்டிய இந்திரஜித், “போய் வேலையை பாருடா! கேனைத்தனமா கேள்வி கேட்டுட்டு…” என்று முறைத்திட, சற்றே சமன்பட்ட மனதுடன் நகன்றான்.

அப்போது தான், இந்திரஜித்தின் வீட்டினரும் வந்து இறங்கினர். பானுரேகா உள்ளே செல்ல, பாலகிருஷ்ணன் அங்கிருந்த பெரியவர்களுடன் பேசிட, சிரஞ்சீவி தான் தம்பியை நோக்கி வந்தான்.

வந்தவன், “இந்த நேரத்தில இதை பேச கூடாது தான். ஆனாலும் என் வாய் சும்மா இருக்க மாட்டேங்குது…” என பீடிகையுடன் ஆரம்பிக்க, இந்திரஜித் என்னவெனப் பார்த்தான்.

“ஏன்டா, உன் பொண்டாட்டியை கட்டி பிடிச்சு ஆறுதல் சொல்லுவன்னு பார்த்தா, உன் பொண்டாட்டியோட எக்ஸ் லவரை கட்டி புடிச்சு ஆறுதல் சொல்லிட்டு இருக்க…” என்று தலையை சொறிந்திட, அவனைத் தீயாக முறைத்த இந்திரஜித்,

“அண்ணனாச்சேன்னு பாக்குறேன். மூடிட்டு போய்டு” என்றதில், கப்சிப் என தந்தையுடன் சென்று நின்று கொண்டான்.

இறுதி சடங்கும் நடந்து முடிந்து, தாமரையை நல்லடக்கம் செய்தனர்.

கடைசி நேரத்தில் தான், அங்கு வந்த ஆனந்தி, தாமரை மீது விழுந்து போலி கண்ணீர் விட, வைஷாலியும் சத்யரூபாவும் ஒரு சேர முறைத்தனர்.

சடங்குகள் அனைத்தும் முடிந்த சிறிது நேரத்திலேயே, அறைக்குள் இறுகி அமர்ந்திருந்த வைஷாலியைப் பார்த்த ஆனந்தி,

“சரி சரி நடந்தது நடந்து முடிஞ்சுருச்சு. இங்க இருந்து என்ன செய்ய போற வைஷு. வா வீட்டுக்கு போகலாம்.” என சலித்தபடி அழைக்க, அவரை நிதானமாகப் பார்த்தவள், எழுந்து அவர் கன்னத்திலேயே ஓங்கி ஒரு அறை விட்டாள்.

சர்வமும் அடங்கி விட்டது ஆனந்திக்கு.

“இது என் தங்கச்சியை ஏமாத்தி, அவள் காதலை பிரிச்சு விட்டதுக்கு. வீட்டுக்கு தான வரணும். வரேன் போங்க.” என எகத்தாளத்துடன் கூறியவள், மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொள்ள, ஆனந்திக்கு திகைப்பும் கோபமும் பெருகியது.

கன்னத்தில் கை வைத்தபடி, வெளியில் வந்தவரை கையைக்கட்டிக்கொண்டு அழுத்தமாக பார்த்தாள் சத்யரூபா.

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் அத்தை. என் ரூம்க்கு வாங்க.” என்று விட்டு, அவரது பதிலை எதிர்பாராமல் அறைக்கு செல்ல, அவரும் எரிச்சலுடன் அவள் பின்னே சென்றார்.

அறைக்குள் சென்றதும் தான் தாமதம், அவரது மறுகன்னத்தில் சப்பென அறைந்தாள் சத்யரூபா.

ஆனந்தி விக்கித்து விழிக்க, “இது என் அக்காவை அடிச்சதுக்கு… இன்னொரு தடவை அவள் வாழ்க்கைக்குள்ள புகுந்தன்னு தெரிஞ்சுது, என் அம்மா போன இடத்துக்கே உன்னை பார்சல் பண்ணிடுவேன். ஜாக்கிரதை.” என்று அடிக்குரலில் மிரட்டியவள்,

சட்டென இயல்பாகி, “இதுக்கு தான் அத்தை கூப்பிட்டேன். டயர்டா இருப்பீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.” என்று மரியாதையாய் கூறி விட்டு, வெளியில் சென்றாள்.

அலைபாயும்
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
51
+1
161
+1
4
+1
2

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. Naveena Ramesh

   காண்டாமிருகம் அழகு டா நீ…🥰😍🥰😍😘

   ஆனந்தி இந்த அடி போதுமா 😂🤣😂🤣😂🤣😂🤣😂

  3. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.