1,085 views

வாசலை தாண்டிய அன்பினி சித்திரை திரும்பி நின்று  , “வெளியே போ!” என்றாள் அக்னியை பார்த்து.

 
அவ்வார்த்தையில் வீட்டில் இருந்த அனைவரும் முழித்தார்கள் என்றால் விக்ரமோ முழி பிதுங்கி நின்றான். அன்பினி வீட்டை விட்டு செல்வதால் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்த அக்னி கப்சிப்   என்று ஆகிவிட்டான். 
 
“அன்பினி என்ன பண்ற?” விக்ரம் கேட்டதும்,
 
“அவன வீட்டை விட்டு வெளிய போக சொல்றேன்.” என்றாள் அக்னியை பார்த்துக் கொண்டு.
 
“அன்பு!” என்று அவன் தடுமாற,
 
“நீ தண்டமா வளக்குற அளவுக்கு நான் தரம் கெட்டு போயிடல.  இதுல இருக்கிறது உன்னோட டிரஸ். நான் சொல்ற வரைக்கும் இந்த வீட்டுக்குள்ள நீ வரக்கூடாது.” என்றவள் அமைதியாக உள்ளே சென்றாள்.
 
“அவன எதுக்கு இங்க இருந்து அனுப்புற இது அவனோட வீடு. நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம்.” உள்ளே செல்லும் அன்பினியை விக்ரம் தடுத்தான்.
 
“இது இப்ப என்னோட வீடு விக்ரம்.”
 
அக்னி பாவமாக வீட்டில் இருந்த அனைவரையும் திரும்பி பார்க்க, “அவங்கள என்ன பார்க்குற? உன்னை போக வேணாம்னு யாரும் தடுக்க மாட்டாங்க. ஒருவேளை தடுத்தா அவங்களும் உன் கூட கிளம்ப வேண்டியது தான்.” என்றாள்.
 
“அன்பினி என்னம்மா இதெல்லாம் யாரும் எங்கயும் போக வேணாம். பேசி தீர்த்துக்கலாம்.” என்ற அன்னபூரணி தன் பேரனிடம்,
 
“நீ வேலைக்கு கிளம்பு பா.” என்றார்.
 
“இது எனக்கும் என் புருஷனுக்கும் நடக்கிற பிரச்சினை இதுல யாரும் தலையிடாதீங்க.”என்றவளின் வார்த்தைக்கு ஏற்றவாறு அக்னியின் பெற்றோர்கள் இருவரும் அமைதியாக உள்ளே சென்று விட்டனர்.
 
 
திவ்யா பாவமாக தன் அண்ணனை பார்க்க, அவன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான். அன்னபூரணியிடம் சொல்லிய பதிலில் இனியும் இங்கு இருந்தால் மரியாதை கிடைக்காது என்பதை உணர்ந்த விக்ரம் கிளம்பி விட்டான். 
 
அன்பினியை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தவன், “அன்பு எத்தனை நாளைக்கு வீட்டுக்கு வரக்கூடாது.” கேட்டான்.
 
“உன் பொண்டாட்டிய மத்தவங்க முன்னாடி விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு உரைக்கிற வரைக்கும்.” 
 
“இப்பவே உணர்ந்துட்டேன்.” என்றவனை பரிதாபமாக பார்த்தாள் திவ்யா.
 
 
“இப்ப நீ போக போறியா இல்லையா.” என அன்பினி சித்திரை முறைக்க,
 
“உள்ளையா வெளியயா” என்றான் பாவமான முகத்தோடு.
 
 
“நான் உள்ள இருக்கணுமா வெளிய போகணுமா.” என்ற கேள்வியை அவனிடம் வைக்க, பரிதாப பார்வையோடு தன் துணிகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். 
 
 
திவ்யாவிற்கு சங்கடமாக இருந்தது அண்ணனை பார்க்க. இப்போது ஏதாவது பேசினால் அண்ணி கையால் அடி கிடைக்கும் என்பதால் அவள் வருத்தத்தோடு உள்ளே சென்றுவிட,
 
“வந்தான், பேசினான், வெளிய அனுப்பிட்டான்…” என்று மச்சானை புகழ்ந்து கொண்டே சென்று விட்டான் அக்னி.
 
அறையில் தனியாக அமர்ந்திருந்த அன்பினி மனம் வெந்து வெதும்பியது. அக்னி உடனான அனைத்து காட்சிகளையும் முடிச்சு போட்டு பார்த்தவள் கடைசியாக அவன் சென்றதை நினைத்து கண்ணீர் வடித்தாள். தனியாக அவன் என்ன செய்தாலும்  தடுக்கும் எண்ணம் வந்ததில்லை அன்பினிக்கு. மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்படுத்துவதை தான்  சகித்துக் கொள்ள முடியவில்லை. வெளி ஆட்களுக்கு முன்பு கோபமாக வெறுப்பவன் அறையில் சிரிப்பதை பெண் மனம் தவறாக எண்ணிக்கொண்டது. இதே போல் சில முறை தானும் அவனை அவமானப்படுத்தி இருக்கிறேன் என்பதை இப்போது உணர்ந்து வருந்தினாள்.  இந்த பிரிவு இருவரையும் இணைக்கும் என்ற எதிர்பார்ப்போடு அவள் அவனுக்காக காத்திருக்க,
 
அன்பினி வெளியில் செல்லாமல் தன்னை அனுப்பியது பெரும் நிம்மதியாக   இருந்தது அக்னிக்கு. நேற்று இரவு அவள் கூறியது போல் அனைத்தும் அக்னிக்கு தெரியும். இருந்தும் மனதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் குடும்பம். மீண்டும் ஒருமுறை அன்னையை யார் முன்பும் அவமானப்படுத்தக் கூடாது என்பதற்காகவும், தனக்கு எதிரியாக இருந்தாலும் செல்வகுமார் அன்பினிக்கு தந்தை. தான் செய்யும் சிறு செயலால் குடும்ப வாழ்க்கை சிதையும் என்பதற்காகவும் ஒதுக்கி வைத்தான்.
 
 
ஒரே வீட்டில் அவளுடன் வாழ்ந்து கொண்டு அவள் தந்தையை எப்படி எதிர்ப்பது என்ற பலவீனம் அவனுக்குள் ஏற்பட அதுவே கோபத்திற்கான முதல் காரணம். ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும் அவள் திருமணம் செய்த முறையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அக்னியால்.  அதுவும் குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் தானே என்று உள்ளம் எடுத்துரைத்தது. 
 
 
இருவரும் தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை தாண்டி உள்ளிருக்கும் காதலை அடிக்கடி வெளிப்படுத்தி இல்லற வாழ்க்கையையும் ஆரம்பித்த பின்னர்  நடந்த பிரிவு இது. மனதால் காயம் ஏற்பட்ட பின் சேர்ந்து இருப்பதை விட சிறிது காலம் பிரிந்திருந்தால் இடைவெளி காயத்தை மருந்திடும் என்ற புரிதலோடு இருவரும் முடிவை ஏற்றுக் கொண்டார்கள்.
 
 
 
***
 
வீட்டிற்கு வந்த விக்ரமிடம் நந்தினி மகளைப் பற்றி விசாரிக்க அங்கு நடந்ததை கேட்டு வருத்தப்பட்டார். மகளின் வாழ்வை நினைத்து எழுந்த கோபத்தை அப்படியே கணவரிடம் காட்டிவிட, 
 
“இப்ப எதுக்கு கத்திக்கிட்டு இருக்க. என் பொண்ணு சாமர்த்தியசாலி. அவன அந்த வீட்டை விட்டு துரத்துன மாதிரி கம்பெனில இருந்தும் துரத்தி என்கிட்ட தருவா.” என்று இன்னும் நம்பிக்கையோடு பேசினார்.
 
விக்ரம்”இப்ப கூட உங்க புத்தி கம்பெனிய பத்தி மட்டும் தான் யோசிக்குது. நீங்க எல்லாம் மனுசனே இல்ல. ஏற்கனவே உங்க பொண்ணு உங்கள மதிக்காம போயிட்டா என்னையும் போக வச்சிடாதீங்க.” என்றவன் அவர் பேசுவதையும் காதில் வாங்காமல் சென்று விட்டான்.
 
 
வீட்டில் இருப்பவர்கள் தன்னை மதிக்காமல் பேசியதையும், அக்னிக்கு எதிராக கொடுத்த புகார் மனுவை பற்றியும் நாகராஜ் இடம் பேச முயல,  மகேஷின் நிலைமைமை பார்த்த நாகராஜ் வம்பு வளர்க்க விரும்பாமல்…
 
“இதுக்கு மேல உன் விஷயத்துல தலையிட  விருப்பம் இல்லை செல்வகுமார். என்னை அசிங்கப்படுத்தின உன் தங்கச்சிய அசிங்கப்படுத்திட்டேன் அந்த நிம்மதி போதும். தேவை இல்லாம உன் பகைய தீர்க்க என்னை யூஸ் பண்ணிக்காத.” என்று கழன்று கொண்டார். 
 
 
அடி வாங்கி கிளம்பிய மகேஷை அழைக்க, ” உன் வீட்டுல இருக்க எல்லாருக்கும் நான் என்ன கிள்ளு கீரையா ஆளாளுக்கு அடிக்கிறாங்க. நான் போதையில இருந்ததால உன் பொண்டாட்டிய சும்மா விட்டுட்டேன். இல்லனா ஒரு பொட்டச்சி என்னை அடிச்சதுக்கு தூக்கி போட்டு மிதிச்சி இருப்பேன்.” என அவர் அடித்த கோபத்தில் கத்தினான்.
 
மனைவியை தரை குறைவாக பேசியதை கேட்டு செல்வக்குமார், “என் பொண்டாட்டிய மரியாதை இல்லாம பேசுற வேலை வச்சுக்காத. அப்புறம் நான் யாருன்னு உனக்கு காட்ட வேண்டியதா இருக்கும்.” என்று கண்டிக்க,
 
“யோவ் வாய மூடுயா! நான் யாருன்னு உன் குடும்பம் மொத்தத்துக்கும் காட்டுறேன். என் மேல கைய வச்ச உன் மருமகன் நிலைமை என்ன ஆகுதுன்னு பாரு. அவன் நிலைமைய பார்த்து ஏன்டா என்னை அடிச்சோம்னு உன் பொண்டாட்டி கதறனும். அதுவரைக்கும் இந்த மகேஷ் அடங்க மாட்டான்.” என்ற சபதத்தோடு செல்வகுமார் உடனான உறவை துண்டித்தான் ‌.
 
 
ஏற்கனவே  குடும்பம்  கைவிட்ட நிலையில் புதிதாக உருவான நட்புகளும் கைவிரித்து விட தோல்வியை ஒத்துக் கொள்ளாத மனபாவனையுடன் சுற்றிக் கொண்டிருந்தார். அவரை மேலும் சோதித்தான் அக்னி. தன்னிடம் இருக்கும் அனைத்து பத்திரங்களையும் ஒப்பந்த ஊழியர்களிடம் காட்டியவன் தன் அம்மா மட்டுமே உரிமையானவர் என்று நிரூபித்து. 
 
 
தீர விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டவர்கள் அக்னிக்கே அந்த ஒப்பந்தத்தை கொடுக்க, விஷயம் அறிந்தவர் வெளியில் தலை காட்ட வில்லை. வெற்றி பெற்றதை மீண்டும் நிரூபித்து வெற்றி பெற்ற மகிழ்வோடு ஒப்பந்தம் தொடர்பான வேலைகளை கவனித்தான் அக்னிசந்திரன்.
 
 
***
 
அன்பினி முடிவு அவ்விருவரையும் சம்பந்தப்பட்டது என்றாலும் பரமேஸ்வரிக்கு கஷ்டமாக இருந்தது. அதை வாய்விட்டு தன் கணவரிடம் புலம்ப, அவர் புலம்ப முடியாத நிலையில் கேட்டுக் கொண்டிருந்தார். கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்த திவ்யா வழக்கம் போல்  துருதுறுப்பை காட்டாமல் எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தாள் அண்ணன் வருவானா என்று.
 
அன்னபூரணி பேத்தியிடம் பேச முயற்சிக்க அவளோ இடம் கொடுக்கவில்லை. வீட்டில் இருக்கும் நால்வரும் சோக கீதம் வாசிப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இருந்தும் யாரிடமும் விளக்கம் தர விரும்பாதவள் தன் அறைக்கு செல்ல, அங்கு தான் அவனின் ஞாபகங்கள் அதிகமாக துரத்தியது அவளை. ஊடலும் கூடலும் ஒரே இரவில் நடந்து முடிந்திருக்க அடுத்த நாள் இரவு தனிமையில் கழிய போவதை எதிர்கொள்ள துணிவில்லை அவளுக்கு. 
 
 
அக்னி மீது கோபம் கோபமாக வந்தது. கிளம்ப சொல்லியதும் உடனே கிளம்பியவன் அதன்பின் தொடர்பு கொள்ளவில்லை அவளை. இரவு உணவை முடித்தவள், “அத்தை சாப்பிட வாங்க.” என்றழைத்தாள்.
 
 
மனதில் மகன் இன்னும் வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் மருமகளை சங்கடப்படுத்த விரும்பாமல் சாப்பிட அமர, அன்னபூரணி தான் புலம்பிக்கொண்டே சாப்பிட்டார்.
திவ்யா சாப்பாடு வேண்டாம் என்றிட காரணம் கேட்டாள்.
 
“அண்ணா சாப்பிட்டானா இல்லையான்னு தெரியல.” என்றதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூவரும் சங்கடப்பட்டார்கள். 
 
என்ன சொல்வதென்று தெரியாமல் அன்பினி அமைதி காக்க, “அம்மா.” என்ற சத்தம் கேட்டது.
 
 
அனைவரின் முகத்திலும் ஆயிரம் பாலா பட்டாசு வெடித்தது அக்னியின் குரல் என்பதால். இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தார்கள் அன்பினிகாக. அவளுக்கும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும் எங்கே உள்ளே வந்து விடுவானோ என்ற சந்தேகமும் உருவானது.
 
 
மீண்டும் குரல் கேட்டது, “அன்பு” என்று. கால்கள் தானாக வாசலை அடைய, “புருசன துரத்தி விட்டோமே அவன் சாப்பிட்டானா இல்லையான்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லாம உள்ள என்னடி பண்ற.” என்று எகிறியவன்,
 
“என்னை பெத்தவங்க எங்க உள்ள சாப்பிட்டுட்டு இருக்காங்களா? பெத்த மகன் பட்டினி கிடக்கிறான் அவங்களால எப்படி சாப்பிட முடியுது.”என்றான் சத்தமாக. 
 
அதில் எழுந்தவர்கள் கையை கூட கழுவாமல் வெளியில் வந்து பார்க்க, “எல்லாம் வந்துட்டீங்க எனக்கு பின்னாடி பிறந்த பிசாசு அந்த குண்டம்மா எங்க.” என்று முடிப்பதற்குள் அவளும் வந்துவிட்டாள்.
 
அனைவரையும் ஒரு முறை சுழன்று நோக்கியவன், “ஐய்யோ அம்மா…!” என்று கத்தினான்.
 
“அக்னி”  என பதறி ஓடிய அன்பினி நொந்து போனாள் அவன் செய்கையில். அருகில் வந்தவளை கட்டிப்பிடித்து, “எனக்கு அப்பவே தெரியும் அன்பு நான் இல்லாம நீ இருக்க மாட்டன்னு வா நம்ம வீட்டுக்குள்ள போகலாம்.”  அவளை சுற்றிக்கொண்டு உள்ளே செல்ல தாஜா வைக்க,
 
“சரி நீ உள்ள போ நான் வெளிய போறேன்.” என்ற வார்த்தையில் தான் விலகி நின்றான்.
 
“போயிடுவியா என்னை மீறி என் வீட்டை விட்டு போயிடுவியா.” என்றவன் “சாரி தப்பா சொல்லிட்டேன் உன் வீட்ட விட்டு போயிடுவியா. ” சம்பந்தமில்லாமல் சட்டம் பேசியவன்,
 
 
“நான் ரோசக்காரன் நீயே கூப்பிட்டாலும் இனி இந்த வீட்டுக்குள்ள வரமாட்டேன்.” என்று கிளம்பினான். 
 
“அண்ணா சாப்பிட்டியா.” என்று திவ்யா அவசரமாக விசாரிக்க,
 
“ரொம்ப தான் குண்டம்மா உனக்கு அக்கறை. வீட்டுக்கு வந்தவ இந்த வீட்டுக்கு சொந்தக்காரன வெளிய அனுப்புறா பார்த்துட்டு சும்மா இருந்துட்டு இப்ப வந்து நலம் விசாரிக்கிற ப்பே உன் வேலையை பார்த்துட்டு.” என்றதும் ஏன் தான் கேட்டோம் என்று தலையில் அடித்தாள் திவ்யா.
 
 
“கொஞ்சம் சாப்டுட்டு போப்பா.” என்று அன்னபூரணி கெஞ்ச,
 
“இந்த அக்கறை எல்லாம் சாப்பாட்டுல கை வைக்கிறதுக்கு முன்னாடி வந்திருக்கணும். என் பொண்டாட்டி மட்டும் சமாதானம் ஆகட்டும் உங்க நாலு பேருக்கும் இருக்கு கச்சேரி.” என்று புலம்பிக்கொண்டே சென்றான்.
 
மகன் சாப்பிடாமல் செல்வதால், “அக்னி சாப்பிட்டு போ.” என்றார் பரமேஸ்வரி.
 
திரும்பி மனைவியை பார்க்க, அவளோ புருவம் உயர்த்தினாள். அதில் உள்ளுக்குள் நொந்தவன், “சாப்பிடு சாப்பிடுன்னா எங்க உட்கார்ந்து சாப்பிட இங்கயா” என்று வாசல் படியை கை காட்ட, உடனே “ஆமாம்” என்றாள் அன்பினி.
 
 
மனைவியை முறைத்தவன், “ஐடியா நல்லா இருக்கு.”என்று விட்டு தரையில் அமர்ந்தான்.
 
 
அதை எதிர்பார்க்காத அன்பினி பதறி எழ சொல்ல, “நான் ரோசக்காரன் டி உன் வீட்டுக்குள்ள கால் வைக்க மாட்டேன்.” என்று கொள்கை முடிவை சொன்னவன்,
 
“குண்டம்மா என் பொண்டாட்டி என்ன செஞ்சு வச்சிருக்கா எடுத்துட்டு வா.” என்று கட்டளையிட்டான்.
 
திருமணமான நாளில் இருந்து இவர்கள் செய்யும் அலப்பறையை பார்த்து திட்டவும் முடியாமல் ஒதுங்கி செல்லவும் முடியாமல் கடுமையான மனநிலைக்கு ஆளானது என்னமோ பரமேஸ்வரி மணிவண்ணன் தான். இன்றும் அதே போல் உள்ளத்தில் இருவரையும் அர்ச்சித்துக் கொண்டிருக்க, “குண்டம்மா என்ன பார்த்துகிட்டு இருக்க எடுத்துட்டு வா போ.” என்றான் மீண்டும்.
 
 
அவள் பரமேஸ்வரியை பார்க்க, அவரோ மருமகளை பார்த்தார். அன்பினி அமைதியாக அவனின் செய்கைகளை கவனித்துக் கொண்டிருக்க, “அம்மாடி போதும் உன் பிடிவாதம். உள்ள வர சொல்லு.” என்றார் அன்னபூரணி.
 
 
 
அமைதியாக உள்ளே சென்றவள் இரவு உணவு அனைத்தையும் வெளியில் எடுத்து வந்தாள். வீட்டில் இருந்த நால்வரும் தலையில் அடித்துக் கொண்டு அக்னியோடு அமர்ந்தார்கள். இதை எதிர்பார்க்காத அக்னி, “பார்த்தீங்களா இதுதான் என் பொண்டாட்டி. எனக்காக உங்க எல்லாரையும் வாசலுக்கு கூட்டிட்டு வந்துட்டா.” என்று பெருமைப்பட்டுக் கொண்டே சாப்பிட்டான்.
 
“கழுதைக்கு வாக்கப்பட்டா கனைச்சு தான ஆகணும்.” என்று அனைவருக்கும் கேட்குமாறு புலம்பிய திவ்யா அண்ணனோடு சாப்பிட ஆரம்பித்தாள்.
 
 
எத்தனை நாளுக்கு இந்த கூத்து என்ற மனநிலையில் மற்ற மூவரும் சாப்பிட ஆரம்பிக்க அன்பினி மட்டும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் அக்னிசந்திரனை.
 
அவனுக்கும் தெரியும் மனைவி  பார்க்கிறாள் என்று. அவளே ஏதாவது பேசட்டும் என்று அவன் மௌனம் காக்க, வார்த்தை உதிக்கவில்லை அன்பினி. சாப்பிடவும் ஆரம்பிக்கவில்லை. இருவரின் கள்ளத்தனமான பார்வையை அங்கிருந்தவர்கள் உணர்ந்து கொண்டு வேகமாக சாப்பிட்டு முடித்து கிளம்பினார்கள். 
 
 
தனிமையில் இருவர் மட்டும் அமர்ந்திருக்க, “அன்பு சாப்பிடு.” என்றான்.
 
பதில் உரைக்காமல் தலையை குனிந்து அமர்ந்து இருந்தாள் அன்பினி சித்திரை. நெருங்கி அமர்ந்தவன் தன் தட்டில் இருப்பதை ஊட்ட, தலை நிமிர்த்தி பார்த்தாள் அவனை. விழி கலங்கி இருக்குமோ என்னவோ வித்தியாசமாக தெரிந்தது அவனுக்கு. 
 
இன்னும் நெருங்கி அமர்ந்தவன் வாய் அருகே கொண்டு செல்ல, அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். அவளோடு இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைக்கு ஊட்டுவது போல் சிறு சிறு வாய் ஊட்டி கொண்டிருக்க கவனிக்கும் நிலையில் இல்லை அன்பினி. இருந்தும் அரை மணி நேரத்தில் காலியானது இருவருக்குமான உணவு. 
 
 
கை கழுவாமல் அவன் அமைதியாக அமர்ந்திருக்க அன்பினி எதுவும் பேசவில்லை. நிமிடங்கள் தான் கரைய ஆரம்பித்தது. “உன்னையும் உன் வீட்டுல இருக்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல அக்னி.” வெகு நேரம் கழித்து அவள் வாயிலிருந்து வார்த்தை வர,
 
“அதுக்கு தான்டி சொல்றேன் புருஷன வீட்டுக்குள்ள விடுன்னு.” என்று அவள் மடியில் படுத்தான். 
 
 
“இதுக்கு பேசாம நானே வீட்டை விட்டு போய் இருக்கலாம் நீங்களாவது நிம்மதியா இருந்திருப்பீங்க.” என்றதும் சட்டென எழுந்தவன் கழுவாத கையோடு புறப்பட்டான் வேகமாக. 
 
 
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ கொசுக்கள் அதிகம் ரத்தத்தை உறிஞ்சி நிகழ்வுக்கு கொண்டு வந்தது. அவனுடன் ஏற்பட்ட இணக்கம் நாளை எப்பேர்பட்ட அவமானத்தையும் தாங்கிக் கொள்ளும் என்று புத்தி எச்சரிக்கை மணி அடிக்க,  தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றாள்.
 
 
அறையில் கால் வைத்ததும் அவனின் ஞாபகங்கள் பளிரென்று அறைந்தது மனதை. பல நாள் மெத்தையில் படுக்க அடம் பிடித்து இருக்கிறாள் அவனோடு. இன்று அவன் இல்லாமல் அந்த மெத்தை மரண படுக்கையாக தெரிந்தது. பால்கனியில் நின்றவள் அக்னி இருக்கிறானா என்று தேட, எங்கும் இல்லை. 
 
 
அன்பினி வார்த்தையில் கோபம் கொண்டவன் விரைந்தான் கம்பெனிக்கு. கோபத்தில் உடைகளை கூட மாற்றாமல் தன் அறையில் படுத்தவன் நினைவு அவளையே துரத்தியது. அன்பினியின் வாசம் வேண்டுமென்று மனம் அடம் பிடிக்க கட்டுப்படுத்திக் கொண்டு கண் மூடினான். 
 
முதல் நாள் மோதல் நினைவு வர கோபம் துளிர்ந்தது. இருவருக்குமான சண்டை நினைவு வர அவள் நடவடிக்கை எரிச்சலை கொடுத்தது. மறைமுகமாக ரசிக்கும் அன்பினியின் பார்வை அம்பு இப்போதும் அவன் மனதை குத்தி கிழிப்பது போல் தோன்றியது. ஒப்பந்தம் கைவரும் நாள் அன்று அவள் தன்னை ரசித்து வீடியோ எடுத்த தருணம் சிரிப்பை கொடுக்க, தந்தை உடல்நிலை சரியில்லாத பொழுதும் தன்னை ரசித்த அந்த காந்தம் ஈர்த்தது அவனை. 
 
 
அடம் பிடித்து கல்யாணம் செய்ததில் பிடிவாதம் தெரிய, தன்னிடம் அடங்கி போன அவளின் ஆணவம் அழகாக தெரிந்தது. கோபத்தில் வார்த்தையை விடாமல்  ஒதுங்கி நின்ற மனநிலை பிரமிப்பை கொடுத்தது. ஒரு முத்தத்திற்கு பல மணி நேரம் கெஞ்சும் அவள் வார்த்தை காதில் இனிக்க, உடல் உரசி கொஞ்சும் உடல் மொழி மோகத்தை கொடுத்தது. 
 
 
அவளுக்கு தன் மேல் கோபம் இருப்பதை விட வருத்தம் அதிகம் என்பதை உணர்ந்து தான் அன்பினி மனம் மாறும்வரை பிரிந்து இருக்கலாம் என்ற முடிவு செய்தான் அக்னிசந்திரன். தவறான முடிவு இது என்று  இப்போது அவன் மனநிலை ஆணி அடித்து உணர்த்த, தனிமை அவள் இல்லாமல் சோதித்தது. 
 
 
இரண்டு வார காலங்கள் எந்த சண்டைகளும் இல்லாமல் காதலோடு கடந்தது. அந்த நினைவு ஒவ்வொன்றும் மீண்டும் வேண்டும் என்ற பெரும் பிடிவாதம் அவனுக்குள் பிறக்க காரை எடுத்தான் மனைவியை சந்திக்க. 
 
 
அக்னி இல்லாமல் அந்த அறை சிறை போல் காட்சி அளிக்க பால்கனியில் தஞ்சம் புகுந்தாள். அமர்ந்த நிலையில் கார் நிற்கும் இடத்தை பார்த்துக் கொண்டிருக்க, மனம் அவன் வேண்டும் என்றது. அந்த இடத்தை பார்த்தால் அவனின் ஞாபகம் அதிகம் வருகிறது என்பதால் தலையை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் மனதை அடக்க. அடங்க மறுத்து பேய் ஆட்டம் ஆடியது கேட்ட ஹாரன் சத்தத்தில். 
 
 
லேசான சிரிப்பு அவள் உதட்டில். வேகமாக தலை திரும்ப அவளைப் பார்த்தபடி நின்று இருந்தான் அக்னிசந்திரன். மகிழ்வில் எழுந்து நின்றவள் அவனை கண்ணெடுக்காமல் பார்க்க, “லவ் யூ அன்பு” என்று கத்தினான். 
 
 
பதில் உரைக்காமல் அவள் சிரிக்க, ‘மேல வரவா’ என்று சைகையால் கேட்டான்.
 
‘வேணா’ என தலையசைக்க, ‘உன் அக்னி பாவம்.’ என்று முகத்தை தொங்க போட்டான் அக்னி.
 
‘இருக்கட்டும்’  தலையை சிலிப்பி காட்டியவளுக்கு, பறக்கும் முத்தத்தை ஜெட் வேகத்தில் அனுப்பினான். 
 
‘ஒரு கிஸ் கொடு.’ கன்னத்தை காண்பித்து சைகை செய்ய, தலையை இட வலமாக ஆட்டினாள்.
 
‘ஒன்னு’ என கெஞ்சும் முகத்தோடு ஒரு விரலைக் காட்ட, திரும்பிக் கொண்டாள்.
 
 
 
குழந்தை போல் உதடு பிதிக்கிய அக்னி, பார்க்குமாறு சைகை செய்ய புரிந்ததோ என்னவோ திரும்பினாள். ‘தரலன்னா நான் போயிடுவேன்.’ என்றிட, கல்லை தூக்கி அடிப்பது போல் சைகை செய்தாள்.
 
கையை தேய்த்தவன், ‘இப்படியா அடிப்ப வலிக்குது.’ என்றான் பாவமாக.
 
விழிகள் முறைத்தாலும் இதழ்கள் சிரித்தது. பற்கள் பளிச்சிட்டதில் அவனும் அதை கண்டுகொள்ள, ‘அழகு டி’ என்று திருஷ்டி கழித்தான்.
 
ஐஸ் வைத்ததால் குளிரடிக்கிறது என்று இரண்டு கைகளையும் மடக்கி ஊதி காட்ட, ‘மாமா வரவா கட்டி பிடிச்சிக்கலாம்.’ என்றான்.
 
 
‘வராதே’ என்பது போல் சைகை அவளிடம் இருந்து  தாவ, ‘நான் வர அன்னைக்கு மேடம் நிலையை மோசமா இருக்கும்’  சைகையை இடம் மாற்றினான்.
 
 
‘அதையும் பார்க்கலாம்’ என்றதும்,
‘நீ கண் மூடி இருப்ப பார்க்க மாட்ட.’ என கேலி செய்தான்.
 
‘பொறுக்கி!’ என்றதும் நெஞ்சில் கை வைத்து தலை குனிந்து ‘நன்றி’ என்றான்.
 
 
அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க, ‘போகவா’ நேரம் ஆவதை உணர்ந்து உத்தரவு கேட்டான்.
 
மனம் எதையோ பறி கொடுப்பது போல் அலை பாய்ந்தது அவ்வார்த்தையில். வேண்டாம் என்று மறுக்கவும் முடியாமல் உத்தரவு கொடுத்து வழி அனுப்பவும் முடியாமல் அவள் தடுமாறிக் கொண்டிருக்க, ‘போகல சிரி.’ என்றான் உதட்டில் கை வைத்து இதழ்களை விரித்து.
 
தானாக கண்கள் கலங்கி விட்டது அதில். இந்த காதல் பொல்லாத மந்திரவாதி போல மயக்கவும் செய்கிறது மறையவும் செய்கிறது. வலி கொடுத்து விலகும் நொடி காதலை காட்டி இம்சிக்க, நெருங்கும் நேரம் பிரிவை கொடுத்து சோதிக்கிறது.  கண்ணுக்குத் தெரியாமல் காதல் சேட்டை செய்ய, இதோ இங்கு இருவர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
 
நல்ல இருட்டில் கூட இருவரின் முக பாவனைகளும் இருவருக்கும் புரிந்தது. சற்று நெருங்கும் தொலைவில் இருவரும் இருக்க மனம் சேர்ந்து விடுங்களேன் என்று கெஞ்சியது. மனைவியை மகிழ்விக்க எண்ணியவன் இரவு விளக்கின் வெளிச்சத்தில் நிழலை காட்ட அவனிடம் பறந்து சென்றது அன்பினியின் மனது.
 
 
இதய வடிவில் விரல்களை இணைத்தவன் அவளிடம் காட்டி, ‘
அனுப்பவா’ என்றிட, தலை அசைத்தாள்.
 
நிழலை மறைத்து நிஜத்தை அவளுக்கு முன்பாக காட்டியவன் ‘இப்ப இத வச்சுக்க. இன்னும்  கொஞ்ச நாள்ல அங்க உன் கூட நான் இருப்பேன்.’ என்று இதயத்துக்கு நடுவில் முத்தத்தை கொடுத்து அஞ்சல் அனுப்பினான் அக்னி. 
 
 
மின்னலை விட வேகமாக அஞ்சல் கைக்கு கிடைத்தது அன்பினிக்கு. இரண்டு கையால் பிடித்து தன் நெஞ்சில் வைத்து காட்டியவள், ‘சாரி’ என்றாள்.
 
மறுப்பாக தலை அசைத்து, ‘நான் அங்கதான் இருக்கேன் பத்திரமா பார்த்துக்க.’ என்றான் சிரிப்போடு.
 
 
நெஞ்சில் இரண்டு முறை தட்டி ‘பார்த்துக்கிறேன்’ என்றாள் அன்பினி சித்திரை.
 
‘தூங்கு போ!’ என்ற சைகைக்கு, மறுத்து தலை அசைத்தவள், ‘நீ போ!”என்றாள்.
 
‘அப்ப என்னை அனுப்பு.’ 
 
‘மாட்டேன்’
 
‘அப்ப நானும் போக மாட்டேன்.’ என்ற சைகையோடு காரில் சாய்ந்தான்.
 
 
‘நீ வா அன்பு’ என்றவன் ஏக்கமாக பார்க்க,
 
‘ப்ச்!’ என தலையை திருப்பிக் கொண்டாள்.
 
‘அக்னி வேணாமா’ 
 
‘தூங்கு போடா’ என்று விரட்டினாள்.
 
 
‘அக்னிக்கு கிஸ் வேணும்.’கை கால்களை உதறி அடம்பிடிக்க, ஒருமுறை கூட அவன் ஆசையை நிறைவேற்றவில்லை அன்பினி.
 
‘போடி உன் பேச்சு கா.’ என்று கோபித்துக் கொண்டவன் காரில் அமர்ந்து கொள்ள, அன்பினியும் பால்கனியில் அமர்ந்தாள் அவனை பார்த்தவாறு.
 
 
கண்ணாடியை இறக்கிவிட்டு தொடர்ந்து கெஞ்சி கொண்டிருக்க, ‘அடி வேணா தரேன் ‘ என்று சிரித்தாள்.
 
‘அடிக்கிறத இங்க அடி.’ உதட்டில் கை வைத்து வம்பு செய்ய, விரல் நீட்டி எச்சரித்தாள்.
 
தொடர்ந்து இருவரும் சைகை செய்து பிரிவை நிவர்த்தி செய்து கொண்டிருக்க, தூக்கம் தொலைந்து போனார்கள்.
 
 
விடியற்காலை நேரம் அன்பினிக்கு தூக்கம் வந்துவிட, கண்ணெடுக்காமல் அவள் உறங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். தூங்கிய அன்பினி ஒரு பக்கம் சாய, “அன்பு” என்றவன் காரை விட்டு இறங்கினான்.
 
 
அதற்குள் அவள் தரையில் சரிந்து விட்டாள். மனம் வலித்தது அருகில் இல்லாமல் இருப்பதை நினைத்து அக்னிக்கு. சிறிது நேரம் யோசித்தவன் திவ்யாவை அழைக்க, தூக்க கலக்கத்தில் எடுத்தாள். 
 
“குண்டம்மா என் பொண்டாட்டி வெறும் தரையில படுத்துட்டு இருக்கா. பெட்ல படுக்க வை.” என்றதும் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. 
 
 
ஒருவழியாக புரிய வைத்தவன் உடனே மேலே போக சொல்ல, “இந்த பொழப்புக்கு எதுக்கு வெளிய அனுப்பனும்.” என்று புலம்பியவாறு அண்ணனின் அறை கதவை திறந்தாள்.
 
 
“சத்தம் போடாம போடி குண்டம்மா என் பொண்டாட்டி தூங்கிட்டு இருப்பா.” என்றவனுக்கு வக்கனை செய்தவள் அன்பினி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டாள்.
 
 
எப்படி எழுப்புவது என்று தெரியாமல் அவள் முழிக்க, “குண்டம்மா என்ன வேடிக்கை பார்க்குற தூக்கு.”  அவளை டென்ஷன் செய்தான்.
 
 
எதிரில் இருக்கும் அண்ணனை மிரட்டியவள் அன்பினியை தூக்க செல்ல முடியவில்லை. அவள் கொடுத்த அசைவில் அன்பினி லேசாக புரண்டு படுக்க, “குண்டம்மா அவ இப்ப தான் தூங்குனா எழுப்பிடாத.” என்றான் அவசரமாக.
 
 
“கீழ வந்தனா கொன்றுவேன். இப்ப நான் என்ன பண்ணட்டும்.”அண்ணன் செய்யும் அலப்பறையில் கோபமாக கேட்டாள்.
 
யோசித்தவன்,”போர்வை எடுத்துட்டு வந்து போர்த்தி விடு போதும்.” என்றான்.
 
உடனே அவள் அதை செய்து விட்டு கிளம்ப, “குண்டம்மா தலைகாணி யாரு வைப்பா.” என்று விடியற்காலை அவளின் சாபத்தை வாங்கிக் கொண்டான்.
 
அவனிட்ட கட்டளை அனைத்தையும் செய்து முடித்தவள் விட்டால் போதும் என்று தூங்கச் சென்று விட, மனைவியல ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான். 
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
27
+1
2
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    1 Comment