26 – விடா ரதி…
“நில்லுங்க….”, என்றபடி பின்னே ரகு நின்றிருந்தான்.
“எய்யா.. மருமவனே… எப்படிய்யா இருக்க? உன்ன இந்த நிலமைல பாக்கவா இவளோ கஷ்டப்பட்ட?”, நீலிக்கண்ணீர் வடித்தார்.
“இப்போ என்ன சொன்னீங்க நீங்க? வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவீங்களா? “
“உண்மைய தானே சொன்னேன்….. அடுத்தவன் கூட ராத்திரி இருந்தவ தான இவ…. வெளிநாட்ல எத்தன பேரோ யாரு கண்டா?”
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அத்தைன்னு கூட பாக்கமாட்டேன்… முச்சந்தில பொதச்சிருவேன்…. மொத அவகிட்ட மன்னிப்பு கேளுங்க…”, என அவரை வெளியவே நிற்க வைத்துப் பேசினான்.
“நான் எதுக்கு கேக்கணும்?”
“அபாண்டமா அவ மேல பழி போட்டதுக்கு.. அவ மனச நோகடிச்சதுக்கு… மன்னிப்பு கேக்காம இங்க இருந்து நகரமுடியாது…”
ரதி அந்த அம்மாவின் கூற்றில் அதிர்ந்து நின்றவள் ரகுவின் தோளணைப்பில் உணர்வு பெற்று அவனைப் பார்த்தாள்.
இத்தனை நாட்களாக இப்படி ஒரு பேச்சு வரும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தன் மாமியார் மாமனாருக்கு இதே நினைப்பு வந்திருந்தால்? என் ரகுவிற்கு வந்திருந்தால்? என்கிற நினைப்பே அவளுக்கு அதிகம் வலியைக் கொடுத்தது. மூன்றாவது மனிதர்களை என்றும் அவள் கருத்தில் கொள்வதே இல்லை….
“அவ பெரிய பத்தினி பாரு நான் மன்னிப்பு கேக்க… அதுலாம் முடியாது…. வீட்டுக்கு வந்தவள உள்ள விடாம வெளியவே நிக்கவச்சி அசிங்க படுத்தறீங்களா?”
“அசிங்கத்தை எல்லாம் வீட்டுக்குள்ள நாங்க எப்பவும் வச்சிக்கறதும் இல்ல, உள்ள விடறதும் இல்ல… நீங்க என் பொண்டாட்டிகிட்ட மன்னிப்பு கேட்டா தான் வெளியவும் போக முடியும்…. “, கறாராக அவன் பேசிய தொனியில் ரதி அவனை அண்ணாந்துப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
அப்போது தான் ரகுவின் அன்னையும், தந்தையும் வயலில் இருந்து வீட்டிற்கு வந்தனர்.
“என்ன செல்லி…. என்ன கூப்பாடு போட்டுட்டு இருக்க?” சாந்தம்மாதேவி கேட்டபடி அங்கே வந்தார்.
“உங்க கேடுகெட்ட மருமககிட்ட நான் மன்னிப்பு கேக்கணுமாம் … எவனோடவோ ரா தங்கிட்டு வந்தவகிட்ட நான் மன்னிப்பு கேக்கணுமாம் …”, எனக் கூறி முடிக்கும் முன் சாந்தம்மாதேவி அவரை அறைந்து இருந்தார்.
“என்ன வாய் நீளுது? நாக்கறுத்து போற்றுவேன்…. அவ சொக்க தங்கம்… அவள தரகொறவா பேசினா எம்புள்ள சும்மா விடுவானா? இல்ல வீட்டுகாரிய அசிங்கமா பேசிட்டு அவ வீட்டுக்குள்ளயே போயி தண்ணி தான் வாங்கிடுவியா? என் புருஷனுக்கு ஒன்னு விட்ட தங்கச்சியாச்சேன்னு நான் பொறுத்து போனா நீ என் வீட்டு குத்துவிளக்கு மேல சாணி வீசுவியா? அவகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு திரும்பி பாக்காம ஓடிரு….”, அத்தனை ஆவேசமாக அவரும் பதில் கொடுத்தார்.
“என்ன மதினி என்னைய அடிக்கற அளவுக்கு வந்துட்டீங்களா? அண்ணே.. பாருண்ணே….. உங்க தங்கச்சிய அடிச்சி அவமானப்படுத்தறாங்க உங்க புள்ளையும் பொண்டாட்டியும்….”, என அவரிடம் முறையிட்டார்.
“என்ன செல்லி.. என்வூட்டு புள்ள மேலயே சேறு வீசற அளவுக்கு வந்துட்டியா நீ? உன்னைய இந்த அளவுல நிக்கவச்சி பேசவே எனக்கு பிடிக்கல….. என் வூட்டு புள்ளைய, எங்க குலவிளக்க நீ அசிங்கமா பேசினா நான் கம்முன்னு இருப்பேனா? என்ன தெரியும் உனக்கு அந்த புள்ளையப்பத்தி? அது குணத்துக்கு நீ எல்லாம் அத பேர கூட நினைச்சி பாக்கக்கூடாது….. இனிமே எந்த ஒட்டு உறவும் சொல்லிட்டு இந்த வாசல மிதிக்காத…. சாந்தா அவள வெளிய அனுப்பி வெளிகேட்ட பூட்டிட்டு வா….. நீ புள்ளைய கூட்டிட்டு உள்ள போடா….”
செல்லி வன்மத்துடன் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே சென்றார்.
அதன்பின் ரதி அமைதியாக அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.
இரவு உணவிற்கு கூட அவள் கீழே செல்லவில்லை.
ரகு தான் இருவருக்கும் போட்டுக் கொண்டு மேலே சென்றான்.
“வா சாப்பிடலாம்…”
“வேணாம்…”
“மாத்திரை போடணும்ல சாப்பிடு வா…”, அதட்டினான்.
“இப்படி தான் எல்லாரும் பேசிட்டு இருக்காங்களா ராக்கி?”
“………………”
“எத்தன நாளா இப்படி பேசிட்டு இருக்காங்க?”
“நீ இங்க வந்ததுல இருந்தே தான்… அவங்களுக்கு என்ன தெரியும் உன்னப்பத்தி? இதுக்கு எல்லாம் நீ கவலைப்படாத… “
“நான் மத்தவங்களைப்பத்தி எப்பவும் கவலைப்பட்டது இல்ல… அந்த பொம்பள அப்படி சொன்னதும் எனக்கு பக்குன்னு இருந்துச்சி…. நீங்க மூணு பேரும் அப்படி நெனைச்சிருந்தா? நினைக்கவே பயமா இருக்கு….. இந்த நெனப்பு ஒரு நொடி கூட வரலியா?”, அவள் தவிப்போடு கேட்டாள்.
“எதுக்கு வரணும்? அப்படியே அவன் உன் உடம்ப காயப்படுத்தியிருந்தாலும் அதுக்கும் நாலு ஊசி போட்டு காயத்த தான் ஆத்துவோம்… உன்ன அப்படி யோசிக்கமாட்டோம்….”
“அவன் என்னை… என்னை…. அப்யூஸ்”, அதற்குமேல் அவளுக்கு வார்த்தைத் தடுக்கியது.
“இல்ல டி.. அப்படி எல்லாம் ஒண்ணுமே நடக்கல.. நீ வீணா எதையும் யோசிக்காத…. “, என அவளை வேகமாக அணைத்துக் கொண்டான்.
“உண்மைய சொல்லு ராக்கி… எனக்கு ஒண்ணுமே ஞாபகம் இல்லை அன்னிக்கி என்ன நடந்தது….? என் உடம்புல ஒரு மாறுதலும் தெரியல…. ஆனா இப்ப சந்தேகமா இருக்கு…”, என அவள் வேண்டாத விசயங்களை எல்லாம் நினைத்து மனதை அழுத்திக் கொண்டாள்.
“ரதி.. ரதி… இங்க பாரு… நீ என்னோட ரதி.. எப்பவும் என்ன ஆனாலும் நீ என் ரதி மட்டும் தான்… உனக்கு ஒன்னும் ஆகலை… அவன் உன்னை மயக்கத்திலயே தான் வச்சிருந்தான்… “
ஆனாலும் அவள் முழுதாக அவன் கூறியதை கேட்காமல் அரற்றியபடி அழுது அழுது தலை வலியை இழுத்துக் கொண்டாள்.
“என்னை பாரு… இங்க பாரு.. . என்னை நம்புற தானே?”, அவளின் கண் பார்த்துக் கேட்டான்.
“ஆம்..” , என அவள் தலையசைந்ததும், “உனக்கு ஒன்னும் ஆகல…. அத மட்டும் மனசுல பதியவை.. நீ எப்பவும் என்னோட ரதி… ஆமா தானே?”, எனக் கேட்கவும் அவள் ஆமென தலையசைத்தாள்.
சிறிது நேரம் கழித்து சாந்தம்மா தேவி அவனை அழைத்தப்படி மேலே வந்தார்.
“என்னம்மா?”
“அப்பா உன்ன கூப்பிட்டாரு.. புள்ள என்ன பண்றா? சாப்பிட்டாளா?”
“அவ தலவலிக்குதுன்னு அழுதுட்டு இருக்கா?”
“ஏன்?”
அவன் நடந்ததை கூறியதும், “ரகு…. நீ போய் அப்பாவ பாரு… நான் அவள பாத்துக்கறேன் “, என அவனை அனுப்பினார்.
“ரதி… அம்மாடி….”, என குரல் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.
“அத்த…. வாங்க…. ஏதாவது வேலை இருக்கா? கீழ வரவா? ”, எனத் தன்னை சமன்படுத்தியபடிக் கேட்டார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல … ஏண்டி அழுதுட்டு இருக்க? கண்ட சிறுக்கிங்க கண்ட கழுத தனமா என்னமோ உளரிட்டு தான் இருப்பாளுங்க… நீ அத எல்லாம் ஏன் காதுல வாங்கற?”
“இல்ல அத்த… அப்படி ஒரு நெனப்ப நான் இதுவரை யோசிச்சிக் கூட பாத்தது இல்ல… இன்னிக்கி அவங்க அப்படி பேசினதும்….. உங்க 3 மூணு பேருல ஒருத்தருக்கு அந்த சந்தேகமோ நெனைப்போ வந்திருந்தா ? அது தான் என்னை ….”
“ஏண்டியம்மா நாங்க அப்படி நெனைக்கற ஜென்மங்களா டி?”
“இல்ல அத்த… உங்களுக்கா வரலன்னாலும் இப்படி யாராவது சொல்றப்போ சின்னதா ஒரு சலனம் வந்தாலும் மனசுல உறுத்தல் வருமே. அப்படி வந்துட்டா?”
“அடி பைத்தியக்காரி…. மொத சொன்னியே இப்படி ஒரு நினைப்பே உனக்கு இல்லன்னு.. அந்த அளவுக்கு எங்கள நம்பினவ இன்னிக்கி யாரோ ஒரு பொழப்பத்த சிறுக்கி சொல்லிட்டான்னு எங்கமேல இருந்த நம்பிக்கைய இல்லன்னு ஆக்கிட்டியா?”
“அச்சோ… அப்படியெல்லாம் இல்லத்த…. அந்த வார்த்தைய என்னால தாங்க முடியல…. இத்தன நாளா நீங்க எல்லாரும் இந்த பேச்சை என் காதுக்கே வராம எவ்ளோ என்னைய பாத்துகிட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சிகிட்டேன் …. “
“அப்பறம் என்னடி?”
“எனக்கு அத என்னனு சொல்ல தெரியலத்த…. “, நிஜமாக அவள் ஏன் அழுகிறாள் என்று அவளுக்கும் நேரம் செல்ல செல்ல புரியவில்லை.
“இங்க வா.. என் மடில படு….”, என அவளை தன் மடியில் படுக்கவைத்து, தலைக்கு தைலம் தேய்த்துவிட்டார்.
“இங்க பாருடி…. பொம்பளைய சாய்க்க எப்பவும் இன்னொரு பொம்பள தான் நம்ம முன்ன வந்து நிப்பா…. அதும் ஒரு பொம்பளையோட ஒழுக்கத்தை தான் காலம் காலமாக அத்தனை ஜனமும் பேசுபொருளா மாத்தும். அவளால தான் எங்க மானமே போச்சுன்னு சொல்வானுங்க.. ஆனா இவனுங்க கண்ட பரத்தியா வீட்டுக்கு போயிட்டு வருவானுங்க.. கேட்டா ஆம்பளன்னா அப்படி தான் இருப்பான்னு இந்த வெக்கங்கெட்ட பொம்பளைங்களே சப்பக்கட்டு கட்டுவாளுங்க… நம்ம எப்படின்னு நமக்கு தெரிஞ்சா போறாதா? கண்டவனுக்கும் நிரூபிக்கணும்ன்னு என்ன இருக்கு? இவளோ ஏன்? உன் புருஷனுக்கு கூட உன்னை நீ நிரூபிக்கணும்- ன்னு எந்த அவசியமும் இல்லை… அப்படி உன்னை நிரூபிச்சி காட்டினா தான் குடும்பம் நடத்தணும்னா அப்படி தன்மானத்தை எழந்து வாழறதுக்கு பேரு வாழ்க்கையே இல்ல டி…. உனக்கே தெரியாம எது நடந்திருந்தாலும் அதுக்கு நீ பொறுப்பு ஆகமாட்ட… அப்பறம் எதுக்கு இந்த அழுகையும் வலியும்? நீ தெளிவான புள்ள… இன்னும் சீதா காலத்து ஆளாட்டம் யோசிக்காம மதுர மீனாட்சி கணக்கா சொக்கன கண் அசைவுல ஆட்டுவியா அத விட்டுட்டு….“,
“அப்ப உங்க புள்ளைய நான் முந்தில முடிஞ்சிக்கவா அத்த?”, என குறும்புடன் கேட்டாள் மனம் தெளிந்தப் புன்னகையுடன்.
“இதுக்கு எவளாவது மாமியாகிட்ட அனுமதி கேப்பாளா டி? நீ தான் சாமர்த்தியமா முடிஞ்சிக்கணும்…”, என அவளது கன்னத்தைக் கிள்ளினார்.
“நீங்களும் அப்படி தான் மாமாவ முடிஞ்சிகிட்டீங்களா அத்த?”
“அவர கல்யாணம் முன்னேயே நான் தாவணில முடிஞ்சிகிட்டேன் டி..”, எனச் சிரிப்புடன் கூறிவிட்டு அவளை உறங்கக் கூறிவிட்டு எழுந்துச் சென்றார்.
“தம்பி ரகு…. நீ புள்ளைய கூட்டிட்டு கொடைங்கானல் கெளம்பு…. “
“ஏம்ப்பா?”
“இனி கண்டவழும் வந்து நம்ம புள்ள மனச நோகடிக்க கூடாது… அது எவ்ளோ கஷ்டபட்டு தன்னை காப்பாத்திக்க போராடி, உசுரு போய் உசுரு வந்திருக்கு… அத காப்பாத்த நாம பட்டப்பாடு நமக்கு தான் தெரியும்…. நம்ம வீட்டு புள்ள மனசு நொந்து கண்ணீர் விடக்கூடாது…. இங்க மத்த வேலை எல்லாம் நானும் உங்கம்மாவும் பாத்துக்கறோம்….”
“அவகிட்ட சொல்றேன் ப்பா… இன்னும் ஒரு தடவை ஆஸ்பத்திரி போயிட்டு வந்துட்டு கூட்டிட்டு போறேன் .. இப்பவும் தலவலிக்குது- ன்னு சொன்னா….”, மனபாரத்துடன் கூறினான்.
“ஏண்டா?”
அவன் அனைத்தும் கூறியதும் அவரும் மனம் கணத்து அமர்ந்தார்.
“ஒரு புள்ள தானா சுயமா சம்பாதிச்சு மருவாதையா வாழ்ந்தா யாருக்கும் பொறுக்கறது இல்ல….. “, எனத் தன்னை போல புலம்பியவர், “தம்பி.. புள்ளைய எங்கயாவது கூட்டி போயிட்டு வா…. மனசு மாறும்….”, எனக் கூறினார்.
“சரியா சொன்னீங்க…. அவ தான் ஹனிமூன் சொல்வாளே… அதுக்கு கூட்டிட்டு போயிட்டு வா… இடம் மாறினா மனசும் மாறும்.. காயமும் ஆறிடிச்சி .. எதுக்கும் டாக்டருங்ககிட்ட எங்க போலாம் எங்க போவக்கூடாது இப்பன்னு கேட்டுக்க… சரி தானே?”, என சாந்தம்மா கூறியதும் அவன் அவரை அணைத்துக் கொண்டான்.
“என்னடா ?”, ஆதரவாக முதுகைத் தடவிக் கொடுத்தார்.
“அவ அப்படி கேட்டுட்டு அழவும் எனக்கும் ஒரு நொடி இப்படி நீங்க நினைச்சி இருந்தா எப்படி அத சரி பண்றதுன்னு எனக்கு தெரிஞ்சிருக்காது…. ஆனா நீங்க அவளையும் சமாதானம் பண்ணி எனக்கும் ஆறுதல் தந்துட்டீங்ம்மா….”
“அறிவுகெட்டவனே…. கல்யாணம் முடிஞ்சு இத்தன நாளா பாக்கறோம் டா அவள…. அவ கொணம் எனக்கு தெரியாதா? தரம் தான் தெரியாதா? ஒன்னு புரிஞ்சிக்க அந்த புள்ளைய அவன் பிராண்டி இருந்தாலும் அது ஒரு விபத்து தான்… அந்த புள்ள போராடி தப்பிச்சு வந்திருக்கு… அதோட திடத்த தான் நாம இன்னும் கூட்டனும்… எனக்கு ஒரு வாக்கு குடு… எந்த சூழ்நிழிலையும் அவள தரக்கொறவா நீ பேசமாட்டன்னு வாக்கு குடு…”, என அவர் கேட்டதும் அவனும் கண்கள் கலங்கி வாக்குக் கொடுத்தான்.
“சரி அந்த புள்ள எடுத்த வேலைய முழுசா செஞ்சா தான் அவளுக்கு திருப்தி வரும்.. மொத அவ வேலைய முடிக்கவிட்டு அப்பறம் ஹனிமூனு போங்க… வர்றப்ப எனக்கு பேர புள்ளையோட வரணும்…. அம்புட்டு தான்…”, எனக் கூறி அவனை அனுப்பினார்.
“15 நாளுல பேர புள்ளை வருமா என்ன?”, அவனும் அவரிடம் சிரிப்புடன் கேட்டுவிட்டு மேலே சென்றான்.
உள்ளே வரும்போதே மனைவியின் பாடும் குரல் அவனுக்கு கேட்டது. அவள் மனக்குழப்பம் தீர்ந்துவிட்டது என அவனுக்குப் புரிந்தது.
“பேபி… பேபி…..”
“என்ன ராக்கி?”
“15 நாளுல பேரப்புள்ளை வேணுமாம் எங்கம்மாவுக்கு….. என்ன பண்ணலாம்?”, என விஷமமாகக் கேட்டான்.
“என்ன பண்ணனுமோ அதான் பண்ணனும்..”, என அவளும் வெட்கம் படற கூறவும் அவளை அணைத்திருந்தான்.