கோபால் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்த யுக்தா சாகித்யன், “யார் கொலை செஞ்சது? நீ பார்த்தியா?” என விழிகளில் கூர்மையை ஏற்றிக் கேட்க,
“நான் பார்க்கல சார்… கொலை செஞ்சது வனஜாவோட அத்தை மகன் குமரேஷ் தான்.” என்று அடித்துக் கூறியவனிடம், “அதெப்படி இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றீங்க?” எனக் கேட்டாள் விஸ்வயுகா.
“மேடம் எனக்குத் தெரியும் அவன் தான் கொலை செஞ்சது. அவனுக்கு தான் வனஜாவை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைல இருந்தான். ஆனா, அவங்க வீட்ல அவனுக்கே தெரியாம மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க. அது மூலமா என்னை கல்யாணம் செய்யப் பேசுனது அவனுக்கு பிடிக்கலை. அவனால வீட்ல ரொம்ப சண்டை வந்துச்சு. கல்யாணத்துக்கு முந்தின நாள் கூட, அவளை மிரட்டுனான்” என்றான் வியர்வையைத் துடைத்தபடி.
“என்ன மிரட்டுனான்?” யுக்தா கேட்டதில்,
“என்னைத் தவிர வேற யாரைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சாலும் சத்தமில்லாம உன்னைக் கொன்னுட்டு தலைமறைவாகிடுவேன்னு சொன்னான் சார். அதே மாதிரி செஞ்சுட்டு இப்போ எங்கயோ போய்ட்டான். என்னையும் கொலை செய்வேன்னு சொல்லிருந்தான் சார். இப்ப தலைமறைவா இருந்துட்டு வந்து என்னை கொல்லுவானோன்னு பயமா இருக்கு” என்றவனின் குரலில் பயம் வழிந்தோடியது.
“இதை ஏன் முதல்லயே சொல்லல?” யுக்தா கோபத்துடன் கேட்டதில்,
“ஏதோ குடும்ப சண்டை வாய் வார்த்தைக்கு மிரட்டிட்டு விட்டுடுவான்னு நினைச்சேன் சார். வனஜா டெத்ல நானும் ரொம்ப ஷாக்ல இருந்தேன். அப்பறமும் உங்ககிட்ட இதை சொல்லலாம்னு வரும்போது என் வீட்ல ரொம்ப தடுத்தாங்க. தேவையில்லாத பிரச்சனை வேணாம்ன்றது அவங்க எண்ணம். ஆனா எனக்கு தான் மனசு கேட்கல” என்றான்.
யுக்தா யோசனையுடன், “ஓகே நான் ஃபர்தரா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு உன்னை காண்டாக்ட் பண்றேன். ஸ்டே சேஃப்” என அவனை அனுப்பி வைக்க, விஸ்வயுகா குழம்பினாள்.
“என்னடா இது? டாக்டர் தற்செயலா இறந்துருக்கலாம்னு சொல்றாரு. இவன் கொலை பண்ணிட்டதா சொல்றான்… மண்டை காயுது” என்று நெற்றியியல் கை வைத்தாள்.
அவளைக் கண்டு முறுவலித்தவன், “என் வேலையைப் பத்தி நீ ஏன் இவ்ளோ டீப்பா யோசிச்சுட்டு இருக்க. இந்த ஒரு கேஸ் இல்ல… இந்த அளவு லீட் கூட கிடைக்காத பல கேஸ் இருக்கு. அதை பத்தியே யோசிச்சுட்டு இருந்தா நமக்கு பைத்தியம் பிடிச்சுடும்” என்றதில், “இதுக்கு மேல பிடிக்கணுமாக்கும்” என முணுமுணுத்திட, அவனே அவளை வீட்டின் முன் இறக்கி விட்டான்.
நெற்றி காயத்தைப் பார்த்தால், இதற்கு வேறு விளக்கம் சொல்ல வேண்டுமே என்ற படபடப்புடன் வீட்டினுள் வந்தவளைக் காப்பாற்றும் விதமாக அனைவருமே தத்தம் அறையில் உறங்கி கொண்டிருந்தனர்.
சிவகாமி இன்னும் வீட்டிற்கே திரும்பி இருக்கவில்லை. இது சில நேரம் நடப்பது தான் என்பதால், அவளும் அறைக்குள் சென்று மெத்தையில் டொம்மென விழுந்தாள். ஏனோ கடமைக்காக வேணும் உறங்கி விடுபவளுக்கு இன்று துயில் தயவு காட்டாமல் சோதித்தது.
அமைச்சர் நாச்சியப்பனுக்கு எதிரில் கையில் வைன் க்ளாஸுடன் அமர்ந்திருந்தார் சிவகாமி.
அவரது முகத்தில் சிந்தனை ரேகைகள் கோடாய் படர, நாச்சியப்பனோ ஒரு கிளாஸை முழுதாய் குடித்து விட்டு, “நீ ஒன்னும் கவலைப்படாதம்மா. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். விஸ்வாவோட பிசினஸ்ல எந்த பிரச்சனையும் வராது. புதுசா வந்துருக்குற சிபிஐ யுக்தா நம்ம ஆளு தான்” என்றார்.
“ப்ச், இதுல விஸ்வாவோட பிசினஸ் மட்டும் அடங்கி இருக்கல அண்ணா. உங்களுக்கே தெரியும்… துபாய்ல இருக்குற புர்ஜ் அல் அரப் மாதிரி சென்னைல 10 ஸ்டார் ஹோட்டல் கட்டணும்ன்றது என்னோட கனவு! மைலாப்பூர் மெய்ன் ஏரியால 20 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சேன் என்னோட கனவை… ஆனா இப்ப வரை அது வெறும் கனவாவே இருக்கு. அந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சதுல இருந்து ஏகப்பட்ட தடங்கல். கோடி கோடியா லஞ்சத்தை வாரி இறைச்சுருக்கேன் ஒவ்வொருத்தனுக்கும். ஆனாலும் ஏதாவது கேஸ்ல மாட்டி வேலை எல்லாம் பாதில நின்னுடுது. அது எனக்கு எவ்ளோ ஸ்ட்ரெஸ் ஆச்சுனு உங்களுக்கே தெரியும்…” என்று மூச்சிரைக்க கூறிவிட்டு, அவரும் வைனை முழு மூச்சாகக் குடித்தார்.
“புரியுதும்மா. இப்ப என்ன… அந்த ப்ராஜக்ட் இல்லைன்னாலும் சென்னை அவுட்டர் ஏரியால ரெண்டு பைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டிருக்கியே. அதுலயும் ‘சீ புட்’ல பெஸ்ட் டேஸ்ட் ஹோட்டல்ன்ற அவார்ட் எல்லாம் சாதிச்சு இருக்கியே…” என தங்கையின் பெருமையை எடுத்துரைத்தார்.
“இருந்து என்ன பிரயோஜனம். இவ்ளோ செஞ்ச என்னால ஆஃப்டர் ஆல் எவ்வளவோ கஷ்டப்பட்டு எவன் எவனையோ கீழ தள்ளி ஆரம்பிச்ச என் 10 ஸ்டார் ஹோட்டல் ப்ராஜக்ட், இன்னும் அந்தரத்துல தொங்குதே. 20 வருஷம் அண்ணா. எவ்ளோ பெரிய போராட்டம்…” என்றவரின் முகத்தில் ஆத்திரம் பீறிட்டது.
“இந்த நேரத்துல விஸ்வா ஆபிஸ்ல நடக்குற பிரச்சனை வேற. இப்ப தான் மறுபடியும் எல்லா கேஸையும் க்ளியர் பண்ணி அந்த கட்டடத்தை ரீ ஸ்டார்ட் பண்ண போறேன். மறுபடியும் பிரச்சனை ஆகாம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. நானும் விஸ்வாவை கவனிச்சுட்டு தான் வரேன். அவள் போக்கே சரி இல்ல. இவ்ளோ பெரிய பிரச்சனை ஆகியும் என்கிட்ட அவளும் சொல்லல. மத்தவங்களும் சொல்லல. ஆனா நான் யாரு அவளோட அம்மாவாச்சே. எனக்கு தெரியாம அவள் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. ஏதோ ஒரு சிபிஐ ஆபிஸர்கூட சுத்திட்டு இருக்குறது தெரிஞ்சு தான் மைத்ரா கூட கல்யாணம் பிக்ஸ் பண்ணுனேன். அதையும் கெடுத்து விட்டுட்டா” எனக் காய்ந்தார்.
“அட நீ நினைக்கிற மாதிரி இல்ல சிவகாமிம்மா. அந்த தம்பி தான் பிரச்சனை வெளில தெரியாம பாத்துக்குறேன்னு சொல்லுச்சு. அதனால தான பாப்பாவும் கேஸ் விஷயமா அங்க இங்க போகுது”
“யார் அவன்?” சிவகாமி கேட்டதில்,
“அவன் டெல்லில இருந்து வந்த ஆபிசர்மா. நீ எதை பத்தியும் யோசிக்காத. சட்டுனு இந்த கேஸை முடிச்சு விட சொல்றேன். ஆள் கிடைக்கலைன்னா நம்ம ஆளுங்கள்ல யாரையாவது பிடிச்சு சீரியல் கில்லர்னு காட்டிட சொல்ல வேண்டியது தான்” என பங்களா அதிர சிரித்திட, சிவகாமியும் கர்வப்புன்னகை வீசினார்.
மறுநாள் மாலை ஐந்து மணிக்கு சரியாக நந்தேஷ் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்து விட்டான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் குறிஞ்சியும் வந்து விட்டவள், “சாரி நந்தேஷ் ரொம்ப லேட் ஆகிடுச்சா?” எனக் கேட்டபடி கடிகாரத்தைப் பார்க்க, அவன் அவசர தொனியில் “எங்க உன் பியான்ஸ்… எனக்கு வேலை இருக்கு. வந்தா பேசிட்டு கிளம்பிடுவேன்…” என்று பரபரத்தான்.
“ஹீ இஸ் ஆன் தி வே நந்தேஷ். ஒரு பைவ் மினிட்ஸ்” என்றதில், “ப்ச்” என உச்சுக் கொட்டியவன் போனை எடுத்து ஏதோ நோண்டிக்கொண்டிருந்தான்.
பத்து நிமிடம் ஆகியும் மணமகன் வராது போக, “அவன் வருவானா மாட்டானா?” என நந்தேஷ் பொறுமை இழந்தான்.
“நான் போன் பண்றேன் நந்தேஷ்” என்றவள் அவளது போனை எடுக்க துரதிர்ஷ்டவசமாக அது அணைந்து இருந்தது.
“காட்! சார்ஜ் போட மறந்துட்டேன். இஃப் யூ டோன்ட் மைண்ட் உங்க மொபைல் தர்றீங்களா?” என்றதும் அவளை முறைத்தபடியே அலைபேசியை நீட்டினான்.
“அட செல்போன் தான கேட்டேன். உங்க சொத்தையா எழுதி கேட்டேன். இந்தப் பசங்களுக்கு பொறுமை இருக்கிறதே இல்லை” என்று சலித்து விட்டு சற்று நகன்றவளைக் கண்டு ஆத்திரம் பெருக்கெடுத்து ஓடியது. இருக்குற பிரச்சனைல இவள் வேற என்று எரிச்சல் கொண்டவனுக்கோ, இன்னும் ஐந்து நிமிடத்தில் அவன் வரவில்லை என்றால் கிளம்பி விடலாம் என்ற எண்ணமே மிகுந்திருந்தது.
ஆனால், நந்தேஷ் எண்ணிலிருந்து பேசிய அடுத்த ஐந்து நிமிடத்தில் மணமகனான ராஜேஷ் வந்து விட்டான்.
“ஹாய் குறிஞ்சி ரொம்ப நேரம் ஆகிடுச்சா?” என்று வழிந்தவன் “சார் யாரு?” எனக் கேட்க, நந்தேஷோ நேரடியாக “நான் யாரா இருந்தா உங்களுக்கு என்ன… இந்தக் கல்யாணத்தை நீங்க நிறுத்தணும். குறிஞ்சிக்கு இதுல விருப்பம் இல்லை” என்று கூறிவிட்டதில் அவன் திகைத்தான்.
குறிஞ்சியோ ‘இவ்ளோ டக்கு இல்லைப்பா’ என்ற ரீதியில், “என்ன நந்தேஷ் கொஞ்சம் பக்குவமா சொல்ல மாட்டீங்களா?” எனக் கடிய, “பக்குவம் பக்கவாதம் எல்லாம் பொறுமையா சொல்லிக்கலாம் விஷயம் இது தான…” என்று அவள் கையிலிருந்த போனை வெடுக்கென பிடுங்கியவனை ராஜேஷ் முறைத்தான்.
“யார் நீங்க தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க. குறிஞ்சி வாட் இஸ் திஸ்?” எனக் கோபம் கொள்ள,
குறிஞ்சியோ சில நொடிகள் தடுமாறிவிட்டு, “சாரி ராஜேஷ். நானே உங்ககிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன். ஆனால் எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் என் லவரையே சொல்ல வைக்க கூட்டிட்டு வந்தேன். மீட் மிஸ்டர் நந்தேஷ். நாங்க ரெண்டு வருஷமா லவ் பண்றோம். வீட்ல ஓகே சொல்லல. அதான்… ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்” என்று கெஞ்சும் தொனியில் கூற ராஜேஷை விட அதிகமாக அதிர்ந்தது நந்தேஷ் தான் என சொல்லவா வேண்டும்.
ராஜேஷ், “என்ன குறிஞ்சி இது? கல்யாணத்துக்கு ஓகே எல்லாம் சொல்லிட்டு இப்ப வந்து இப்படி உளறிட்டு இருக்க? ஒழுங்கு மரியாதையா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு” என விரல் நீட்டி மிரட்டியவன் கத்திப் பேசியதில் அருகில் நின்றிருந்த சிலர் இவர்களையே பார்க்க ஆரம்பித்தனர்.
“இதோ பாருங்க ராஜேஷ். இந்த மிரட்டுற வேலையெல்லாம் வேணாம்…” என்றவளுக்கும் கோபம் வந்தது.
“எவன் கூடவோ கூத்தடிச்சுட்டு உனக்கு என்னடி கோபம் வருது…” ராஜேஷ் அவளை அடிக்கவே செல்ல, நந்தேஷ் அவன் கையைப் பற்றி நிறுத்தி விட்டு அவனை ஓங்கி ஒரு அறை வைத்தான்.
“அவள் தான் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு இன்னொருத்தனை விரும்புறதா சொல்றாள்ல… விருப்பம் இல்லாத பொண்ணை இப்படி தான் போர்ஸ் பண்ணி பப்ளிக்ல இண்டீசன்ட்டா பிஹேவ் பண்ணுவியா? தொலைச்சுடுவேன். கிளம்புடா முதல்ல” என்று எகிறி, அவனை கிளம்ப வைக்க இப்போது அதிர்வது குறிஞ்சியின் முறையானது.
அவள் புறம் திரும்பிய நந்தேஷ் “இங்க பாருங்க அழகி… ஸ்ஸ் சாரி குறிஞ்சி… அவன்கிட்ட சொன்ன பொய்ய எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காதீங்க. இப்ப குடுத்த அடிக்கே அவன் கல்யாணம் வேணாம்னு போயிருவான். இனி மாப்பிள்ளையை சூஸ் பண்ணும் போது கரெக்ட்டா சூஸ் பண்ணுங்க. நம்ம உணர்வுகளை மதிக்க விரும்பாதவங்க லைஃப் பார்ட்னரா வந்தா லைஃபே நரகமாகிடும். டேக் கேர்” என இலவச அறிவுரையை கொடுத்து விட்டு அவன் நகர்ந்தான்.
குறிஞ்சி தான் வெகு நேரம் அதே இடத்தில் நகராமல் நின்றாள்.
காதில் இருந்த ப்ளூடூத் வேறு சத்தம் கொடுத்தது.
“குறிஞ்சி… எல்லாம் ஓகேவா?” தனது அலுவல் அறையில் சூழல் நாற்காலியில் சுழன்றபடி யுக்தாவின் குரல் கேட்டதில் நிகழ்வுக்கு வந்தவள், “ஹான் சார்… நீங்க சொன்ன மாதிரி நந்தேஷ் போனை ஹேக் பண்ண எல்லா வேலையும் பண்ணிட்டேன். அவன் நம்பர்க்கு இனி எந்த கால் வந்தாலும் அந்த ஐபி அட்ரஸ்ல இருக்குற தகவலையும் ஹேக் பண்ணிடலாம். ஆனா சார்…” என்று இழுத்தாள்.
“என்ன?”
“ஒரு சின்ன பிரச்சனை… இந்த டிராமால அவனை லவ் பண்றதா ராஜேஷ்கிட்ட சொல்லிட்டேன். அதை நந்தேஷ் எதுவும் சீரியஸா எடுத்துக்க மாட்டானே?”
“அவன் சீரியஸா எடுத்துக்கிட்டா எடுத்துக்கட்டும். வாட்ஸ் யுவர் ப்ராப்ளம். வேலை முடிஞ்சுதுல. ஆபிஸ்க்கு வந்து சேரு” என போனை வைத்தவனின் முன் நின்றாள் விஸ்வயுகா. அவள் கண்கள் லேசாக சிவந்திருந்தது.
அவளை புருவம் உயர்த்திப் பார்த்த யுக்தா, “ஆர் யூ ஓகே ஏஞ்சல்? இன்னைக்கும் ஆபிஸ்க்கு போனியா. ரெஸ்ட் எடுத்து இருக்கலாமே…” என்றபடி எழுந்து அவளருகில் வந்தவன் அப்போது தான் அவளது கண்களை கவனித்தான்.
“நேத்து நைட்டு தூங்குனியா ஒழுங்கா. ஏன் கண்ணு சிவந்து இருக்கு ஏஞ்சல்?” என அவளது கன்னத்தை நிமிர்த்தி கேட்க, அந்நேரம் கதவைத் தட்டிக்கொண்டு அருண் உள்ளே நுழைந்தான்.
அதில் விஸ்வயுகா நகரப்போக, யுக்தாவோ அவர்களது நிலையை சற்றும் மாற்றாமல், அருணிடம் தீப்பார்வை வீசி, “வாட்?” என்றான்.
அவனோ திருதிருவென விழித்து, “சார் அந்த குமரேஷ் பத்தி…” என ஏதோ சொல்ல வர, “அவன் கிடைச்சான்னா தூக்கிட்டு வாங்க நொவ் ஜஸ்ட் அவுட்” எனக் கத்தியதில் அருண் அவசரமாக கதவை அடைத்து விட்டு வெளியில் சென்றான்.
யுக்தா மீண்டும் அவள் கன்னத்தை நிமிர்த்தி, “என்ன ஆச்சு யுகா” என கேட்க, அவள் “நத்திங்” என்றாள்.
“நோ! சம்திங் இஸ் தேர்…” என அவன் பிடிவாதமாக வினவ, அவனது கையை வெடுக்கென தள்ளி விட்டாள்.
“அதான் ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல” என எரிந்து விழுந்தவள், எப்படி கூறுவாள் பல வருடங்கள் கழித்து முந்தைய நாள் உறக்கமின்றி அவன் கூறிய காதலை எண்ணியே குமைந்ததும், அதிகாரத்தனமான திமிராய் இருந்தாலும் அந்த திமிருடன் அவன் காட்டும் காதலை கேட்டு மனம் அடம்பிடிப்பதையும் அவனிடம் எப்படி ஒப்புக்கொள்வாள்? அவனுக்கு இருக்கும் அதே திமிர் அவளுக்கும் உள்ளதே!
மோகம் வலுக்கும்
மேகா
செம.