Loading

தெம்மாங்கு 26

 

பதிலை எதிர்பார்த்து, விழிகளுக்குள் அவன் உருவத்தைப் பதிக்கத் துவங்கியவளின் கேள்விக்கான பதிலைக் கொடுக்க விரும்பாதவன், உள்ளே சென்று விட்டான். அவன் தராத பதிலில் துவண்டாலும், கண்ணில் தெரிந்த வலியில் மீண்டும் ஒருமுறை பெருத்த அடி விழுந்தது அவள் உள்ளத்திற்கு. 

 

வெளியே அமர்ந்திருந்தவளைக் கண்டு அக்கறையாக விசாரித்தவன், உள்ளே சென்றதிலிருந்து கண்டு கொள்ளவே இல்லை. அவளாகவே கொசுக்கடி தாங்க முடியாமல் உள்ளே வந்தாள். இறுக்கமான முகத்தோடு சமையல் கட்டு அருகில் அமர்ந்திருந்தான். குமரவேலனின் தோற்றம் பேசிவிட்டுச் சென்றவளின் வார்த்தைக்கு ஈடானதாக இருக்க, 

 

“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல.” மென்மையாக வினவினாள். 

 

“என்ன தெரியணும்?”

 

“தெய்வானை யாரு உனக்கு?”

 

“தேவதை!” 

 

ஒரே வார்த்தையில் அவன் மனதைப் படம் போட்டுக் காட்டியவன், அதன் பின் பேசத் தெம்பு இல்லாமல் எழுந்து, தன் வேலைகளைக் கவனிப்பது போல் நடிக்கத் துவங்கினான். கால் வலி எடுக்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, வேதனைக்கு மேல் வேதனை. செய்வதற்கு ஒன்றும் இல்லாமல், காலிப் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்கிறான் அர்த்தம் இல்லாமல்.

 

தன் முன்னால் சங்கடப்பட்டு நிற்பவனை மேலும் சோதிக்காமல், தன் இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டாள். அப்போதுதான், சுவாசக் காற்று சீராக வரத் துவங்கியது குமரவேலனுக்கு. இரவு உணவைச் சமைத்து முடிக்கும் வரை, சமையலின் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தங்களும் அங்கு இல்லை. 

 

“இன்னைக்குச் சேமியா தான் செஞ்சிருக்கேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கம்மா.” 

 

“ம்ம்”

 

“எனக்குக் கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு, படுத்துக்கிறேன். ஏதாச்சும் வேணும்னா கதவைத் தட்டு.” என நகர்ந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்து, 

 

“கதவை உள் தாழ்ப்பாள் போட்டுகிட்டுப் படுத்துக்கம்மா. காலைல எந்திரிச்சுத் திறந்து விட்டா போதும்.” சொன்னவன் பேச்சில் சிறு சலனம் இல்லை.

 

கேட்டவளுக்குத்தான் உடம்பு எங்கும் ஊசி குத்தியது. தெய்வானை பேசிவிட்டுச் சென்றது தான் செவியை நிறைத்துக் கொண்டிருந்தது. குமரனின் நிலையை உணர்ந்த பின், அவள் பேசிய வார்த்தைகள் யாவும் அப்பட்டமான அநியாயங்களாக உணர்ந்தாள். 

 

இரவு உணவைச் சாப்பிட மனம் இல்லாமல், போர்வையைப் போத்திக் கொண்டு படுத்து விட்டான். ‘எத்தனை இரவுகள் இப்படிச் சாப்பிடாமல் படுத்திருக்கிறான்?’ என்ற புதுக் கேள்வி அவளுக்குள் உருவானது. 

 

“சாப்பிடலயா?”

 

படுத்தவன் தலையை உயர்த்தி அவள் முகம் பார்த்து, “இன்னைக்கு உனக்கு என்னம்மா ஆச்சு? புதுசு புதுசாய் கேக்குற?” கேட்டான்.

 

“சாப்பிடாமப் படுத்தியேன்னு கேட்டேன்.”

 

“யாராவது வந்து பிரச்சனை பண்ணாங்களா?”

 

“இல்ல.”

 

“உன் முகமே ஒரு மாதிரியா இருக்கு, அதான் கேட்கிறேன்.”

 

“யாரும் வரல.”

 

“பசி எடுக்கலம்மா, நீ சாப்பிட்டுட்டுப் படு.”

 

“இன்னைக்கு மட்டும் தான் எடுக்கலயா, இல்ல தினமும் எடுக்கலயா?” 

 

அவள் கேள்வியில் எழுந்தமர்ந்து விட்டான். அவனையே நொடி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், “மனசாட்சியே இல்லாம இத்தனை நாள் நடந்திருக்கனா?” திக்கிக் கேட்டாள்.

 

“சுத்தி வளச்சி எதுக்குப் பேசுற? என்ன கேட்கணுமோ, அதை நேரடியா கேளும்மா.” 

 

“தினமும் சரியா சாப்பிடுறியா?”

 

“சாப்பிடாம…”

 

“இப்பதான் யோசிச்சுப் பார்க்கிறேன். நீ சாப்பிட்டு நான் பார்த்தது ரொம்பக் கம்மி. நைட்ல பார்த்த மாதிரி ஒரு நாள் கூட நியாபகம் இல்லை.” 

 

“மதியம் லேட்டா சாப்பிடுறதால ராத்திரி சாப்பிட முடியல.”

 

“மதியம் எங்க சாப்பிடுற?”

 

“வீட்ல தான்”

 

“சரி”

 

“என்னம்மா?”

 

“அதான் சொன்னனே நீ சாப்பிட்டுப் பார்த்தது இல்லைன்னு. நீ சொல்ற. நான் சரின்னு சொன்னேன்.”

 

“நீயே பாதி நாள் மயக்கத்துல இருக்க, எங்க இருந்து என்னைக் கவனிப்ப…”

 

“கவனிக்கக் கூடாதுன்னு நினைச்சால் கூட கவனிக்காம இருக்கலாம்.”

 

“திடீர்னு நீ இப்படிப் பேசுறதைக் கேட்கப் பயமா இருக்கு.” 

 

“எனக்கே என்னை நினைச்சா பயமா இருக்கு. இவ்ளோ கொடுமையான பொண்ணாவா உன்கிட்ட நடந்து இருக்கேன்?” 

 

மெல்ல எழுந்து உள் அறைக்குச் சென்றான். அவளை நெருங்காமல் தூரமாக நின்றவன், “என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?” கேட்டான். 

 

“நான் இன்னைக்குத் தான் தெரிஞ்சுகிட்டேன்.”

 

“ஒன்னும் புரியலம்மா”

 

“எனக்குக் கூட ஒன்னும் புரியல. இதுவரைக்கும் நடந்ததும் சரி, இப்ப நடக்குறதும் சரி.” 

 

“ஏதோ ஒரு மனக் குழப்பத்துல இருக்கன்னு புரியுதும்மா. ரொம்ப நேரம் ஆயிடுச்சு. யோசிச்ச வரைக்கும் போதும், சாப்டுட்டுத் தூங்கு. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.” 

 

“ம்ம்” என அவள் படுத்துக் கொள்ள, “சாப்பிடலையாம்மா?” கேட்டான்.

 

“மதியம் லேட்டா சாப்பிட்டதால பசிக்கல.”

 

“என்னை என்னதாம்மா பண்ணச் சொல்ற?” 

 

“ரெண்டு பேரும் சாப்பிடலாமா?”

 

திடீரென்று மாறிய அவளின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணம் புரியாது பார்த்தபடி நின்றிருந்தான். அவனைப் பார்க்காமல், ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள் தேனிசை தேவி. உள்ளே சென்று ஒரு தட்டை எடுத்து வந்தவன், கொஞ்சமாகச் செய்த சேமியாவைத் தனக்காக எடுத்துக் கொள்ள, அதே யோசனையோடு தான் இன்னும் அமர்ந்திருந்தாள்.

 

“சாப்பிடும்மா” 

 

“மூச்சு முட்டுற மாதிரி இருக்கு, வெளிய உட்கார்ந்து சாப்பிடலாமா?”

 

“வாம்மா” 

 

இருவரும் வெளித் திண்ணையில், அவரவருக்கான உணவுத் தட்டைக் கையில் வைத்தபடி அமர்ந்திருந்தார்கள். தேனிசை தேவியின் மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை அவன் யோசித்துக் கொண்டிருக்க, தெய்வானையைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது என்று இவள் யோசித்துக் கொண்டிருந்தாள். 

 

“தேவதைய ரொம்பப் பிடிக்குமா?”

 

தெய்வானையைப் பற்றித் தெரிந்து கொள்ளத்தான், தன்னிடம் இவ்வளவு பேச்சு வார்த்தைகளை நடத்துகிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன், வாயைத் திறக்காமல் இருந்தால் விடமாட்டாள் என்று உணர்ந்து, “ம்ம்” என்றான்.

 

“எப்போல இருந்து?”

 

“இவ நம்ம அத்த மக. கட்டிக்க உரிமை இருக்குன்னு தெரிஞ்சதுல இருந்து.” 

 

“ரொம்ப வருஷ லவ்வோ?”

 

“அப்படித்தான் நம்பிட்டு இருந்தேன்”

 

“இப்போ?”

 

“அந்தப் பிள்ளையை உண்மையா நேசிச்சு இருந்தா, உன் கழுத்துல தாலி கட்டிக் கஷ்டப்படுத்தி இருக்க மாட்டேன்.”

 

“எதுக்காக இப்படிப் பண்ண? ஒத்த வார்த்தையே அவ மேல உனக்கு இருந்த காதலைச் சொல்லிடுச்சு. அவளைக் கட்டி இருந்தா, என்கிட்ட வாங்கக் கூடாத பேச்சை வாங்கி இருக்க மாட்ட‌. நானும் ஊருக்கு முன்னாடித் தல குனிஞ்சு நின்னு இருக்க மாட்டேன்.” 

 

“என்னைக் கல்யாணம் பண்ணலனாலும், தெய்வானை வாழ்க்கை இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஒரு நாள் நல்லபடியா மாறும். அன்புவோட வாரிசுக்கு, அப்படி ஒரு நாளான மாற்றம் வரவே வராது. நான் கல்யாணம் பண்ணி வைக்காம இருந்திருந்தா, நிச்சயம் அன்பு உன்னைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்டான். எப்படியாவது சுமுகமா சமாளிக்கப் பார்த்திருப்பான். என்னோட முடிவால, அவன் உசுரு போய் அவனை நம்பி வந்த நீ நிர்கதியா நிக்கும் போது எனக்கான வாழ்க்கையை எப்படித் தேர்ந்தெடுப்பேன்?” 

 

“என் கழுத்துல தாலி கட்டிட்டா எல்லாம் மாறிடும்னு நம்புறியா?”

 

“நீ அன்புவோட மனைவியா இருப்ப, நான் அன்புவோட நண்பனா இருப்பேன். இதுல எந்த மாற்றமும் எப்பவும் வராதுன்னு உறுதியாத் தெரியும். எனக்கு வேண்டியது எல்லாம், என் அன்பு இந்த ஜென்மத்துல வாழாத வாழ்க்கையை மறுபிறவி எடுக்கப் போற ஜென்மத்துல முழுசா வாழனும்.” 

 

“எனக்கு ஒன்னு மட்டும் புரியல. அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள? சுயநலமே இருக்காதா உங்க ரெண்டு பேருக்கும். அன்புக்குத் தனக்காக ஒருத்தி தவிப்பான்னு நினைப்பு இல்ல. ஒருத்தியோட வாழ்க்கையே தன்னை நம்பி தான் இருக்குன்னு புத்தி இல்ல உனக்கு. உங்க ரெண்டு பேர் நட்புக்காக, ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சி இருக்கீங்க. இது எந்த விதத்துல சரின்னு சொல்லுவீங்க?”

 

“உங்க ரெண்டு பேர் முன்னாடியும் பேசுற தகுதியை இழந்துட்டு நிற்கிற நான், எங்க இருந்து பண்ணதைச் சரின்னு சொல்லுவேன். சுத்திச் சுத்தி எல்லாம் ஒரு இடத்துல வந்து நிக்குது, அது எங்களோட நட்பு! அப்படி என்ன இதுல குற்றம் கண்டுட்டான் அந்தக் கடவுள்னு தெரியல. மன்னிச்சுப் போனால் போகுதுன்னு விட்டு இருக்கலாம்.”

 

“ஒரு ராத்திரில எல்லாம் மாறிடுச்சுல. அந்த ராத்திரி மட்டும் வராம இருந்திருந்தா, நான் ஆசைப்பட்ட வாழ்க்கையும், நீ ஆசைப்பட்ட வாழ்க்கையும் கிடைச்சிருக்கும். எல்லாரும் சந்தோஷமா வாழ்ந்திருப்போம்.”

 

“அந்த நாளப் பத்திப் பேச நான் விரும்பல.”

 

“உன்கிட்ட ஒன்னு கேட்டா வெளிப்படையா உண்மையைச் சொல்லுவியா?” 

 

“கேளும்மா”

 

“அன்பு கூட நீ தான கடைசி நிமிஷத்துல இருந்த, என்னைப் பத்தி ஏதாச்சும் சொன்னானா?”

 

உயிர் பிரியும் நேரத்தில் கூடத் தன் பெயரை உச்சரித்தவன், தன் நலனை மட்டுமே கருத்தில் கொண்டான் என்பதை இப்பாவைக்கு எப்படிப் புரிய வைப்பான். ஏற்கனவே, நட்புக்காகத் தன்னைத் தூக்கி எறிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பவள் உள்ளத்தை மேலும் சிதைத்து வதைக்க விரும்பாதவன், 

 

“இசைய பத்திரமாய் பார்த்துக்கன்னு சொன்னான். நீ சந்தோஷமா வாழ்றதுதான் அவனுக்குச் சந்தோஷம்னு சொன்னான்.” என்றான். 

 

ஆனந்த மகிழ்வில், இமை ஓரம் சூழ்ந்திருந்த நீர் சொட்டுச் சொட்டாகக் கன்னம் தாண்டி, ஆடையில் பட்டு வந்த தடையத்தை மறைத்தது. இருவருக்கும் உணவு இறங்கவில்லை. நேரத்தைக் கடத்தி ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். 

 

“நடந்ததைப் பத்திப் பேசி ஒன்னும் ஆகப்போறது இல்லம்மா. என் மனசு முழுக்க உன் வயித்துல இருக்க குழந்தையோட எண்ணம் மட்டும் தான். நீயும் அந்தக் குழந்தையை மட்டும் நினைச்சுக்க. ஒருத்தன விட்ட மாதிரி இதையும் விடக்கூடாது. மனசை வைராக்கியமா வச்சிக்க. கணவனா அன்பு கூட வாழாத வாழ்க்கையை, மகனா உன் பிள்ளை கூட வாழனும். அதுக்கு எல்லா விதத்துலயும் நான் துணையா இருப்பேன்.” 

 

“சாரி…”

 

“நான் உனக்கு நிறையச் சொல்லனுமேம்மா… இனிமே இதைப் பத்திப் பேசிக்க வேண்டாமே.” 

 

“கடைசியா ஒன்னு கேட்கட்டுமா?”

 

“முடிவு பண்ணிட்ட, கேளு.” 

 

“தெய்வானைய மறந்துட்டியா?”

 

“மறந்தாதான் அந்தப் புள்ள வாழ்க்கை நல்லா இருக்கும். குதிரைக்குக் கடிவாளம் கட்டின மாதிரி, வாழ்க்கை முழுக்க உங்க ரெண்டு பேரச் சுத்தியே ஓட முடிவு பண்ணிட்டேன். அந்தப் புள்ளையைக் கல்யாணக் கோலத்துல, மன நிறைவாய் பார்த்துட்டா எனக்குள்ள இருக்க குற்ற உணர்ச்சி போயிடும்.”

 

“நான் ஒன்னு சொல்றேன், செய்யறியா?” என்றவளை என்ன என்பது போல் பார்க்க, 

 

“இந்தத் தாலியக் கழற்றிப் போட்டுடறேன். நீ தெய்வானையக் கல்யாணம் பண்ணிக்க. அந்தப் பொண்ணோட வலிய என்னை விட யாராலயும் சரியா புரிஞ்சுக்க முடியாது.” என்றாள்.

 

மெல்லியதாகப் புன்னகைத்தவன், “இப்பவாவது என்னைக் கொஞ்சம் புரிஞ்சிப்பன்னு நினைச்சேம்மா. தாலி கட்டினதால இங்க இருக்கன்னு நினைக்கிறயா? அந்தப் புள்ளை எதிர்ல உனக்குத் தாலியக் கட்டிட்டு, இப்ப வா உனக்கு ஒரு தாலியைக் கட்டுறன்னு எப்படிச் சொல்லுவேன்? நான் அப்படிக் கூப்பிட்டாலும் வராது.” என்றவன் திண்ணையில் படுத்துக் கொண்டு இருட்டான வானத்தை வெறித்தான்.

 

 

***

 

வெகு நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தவன், தன் முன்னால் இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தான். பாயும், தலைகாணியும் போர்வையோடு நடுக் கூடத்தில் இருந்தது. தேனிசை தேவி, படுக்கும் இடத்திற்கு நேர் எதிரான இடத்தில் இருந்தது. நெருங்க முடியாத அளவிற்கு, இரண்டு படுக்கைக்கு நடுவில் வெகு இடைவெளிகள்.

 

கண்மூடிப் படுத்திருப்பவளின் மீது பார்வையைத் திருப்ப, “உன்னைப் புரிஞ்சுக்காம இருக்கலாம். ஆனா, நம்புறேன். உன் மனசுல எந்தத் தப்பான எண்ணமும் இல்லைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அந்த நம்பிக்கைல தான் படுக்கை இங்க வந்திருக்கு. இனி இங்கயே படுத்துக்க.” என்றவள் சுவரின் பக்கம் தன் உடலைத் திருப்பி உறங்க ஆரம்பித்தாள். 

 

தனக்குக் கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் கால் நோக நின்றிருந்தவன், வேறு வழி இல்லாததால் படுத்தான். சட்டென்று தூக்கம் வர மறுத்தது குமர வேலனுக்கு. தேனிசையின் இந்த மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை ஆராய்ந்து தோற்றுப் போனவன், நள்ளிரவைத் தாண்டிய பின் தான் உறங்க ஆரம்பித்தான். 

 

எப்பொழுதும் போல் காலை எழுந்தவன் சமைக்கத் துவங்கினான். நேற்று வரை உறக்கத்தில் இருப்பது போல், அவன் முன்பு படுத்தே இருந்தவள் எழுந்ததோடு கூட இல்லாமல், முகம் கை, கால்களைக் கழுவி வந்து அடுப்பங்கரை முன்பு நின்றாள்.

 

“என்னம்மா இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட?”

 

“தூக்கம் வரல”

 

“சரி, போய் ரெஸ்ட் எடு.”

 

“நான் சமைக்கிறேன், தள்ளு.”

 

“வாசனைக்கே ஓயாம வீட்டு வாசல்ல போய் நிக்கிற. நீ சமைக்கப் போறியாம்மா.”

 

“நக்கலா?”

 

“சத்தியமா இல்லம்மா. உன்னால சமைக்க முடியாது.”

 

“என்னால நீ சமைக்கிறதைச் சாப்பிட முடியாது.”

 

“ஆங்!”

 

“சத்தியமா தான் சொல்றேன். இத்தனை நாள் பல்லைக் கடிச்சுகிட்டுச் சாப்பிட்டுட்டு இருந்தேன் தெரியுமா. ஒரு சொரணையும் இருக்காது நீ ஆக்கிக் கொட்டுறதுல. வயித்துல இருக்க என் குழந்தை ரொம்பப் பாவம். இதுக்கு மேலயும் என்னால அந்தக் கொடுமையை அனுபவிக்க முடியாது. தயவு செஞ்சு இந்த இடத்தை விட்டுக் கிளம்பிடு.”

 

“என்னம்மா, இப்படி மனசு வருத்தப்படுற மாதிரிப் பேசுற.”

 

“இவ்ளோ நாள் என் வயிறு வருத்தப்பட்டுச்சு.”

 

‘தின்றதெல்லாம் தின்னுட்டுப் பேச்சைப் பாரு.’ என உள்ளுக்குள் குமைந்து கொண்டான்.

 

“அஞ்சு மாசம் ஆயிடுச்சு, இனிமே நல்லா வேலை பார்த்தா தான் நார்மல் டெலிவரி ஆகும்.” 

 

“இன்னும் ஒரு மாசம் போகட்டும்மா…”

 

“முடியாது.”

 

“நீ என்னைத் திட்டிட்டு இருந்ததே மேலும்மா…” என்றவன் முகத்தில் அப்பட்டமான அலுப்பு.

 

“நல்ல சோறு திங்க ஆசை இல்லையா?”

 

“உன்ன வேலை பார்க்க விட்டுச் சாப்பிட ஆசை இல்லம்மா.” என்றான் தீவிரமாக.

 

“சரி. எப்படிச் சமைக்கனும்னு நான் சொல்றேன், நீ சமை.”

 

“சூப்பர்… இப்படிச் சொல்ல ஆள் இல்லாம தான், இத்தனை நாள் உன்னைக் கொடுமைப்படுத்தி இருக்கேம்மா.”

 

“தெரிஞ்சா சரி.” என்றவள் சமையல் கலையை ஒவ்வொரு படியாகச் சொல்லிக் கொடுக்க, முதலில் தடுமாறியவன் ஒரு வழியாகச் செய்து முடித்தான்.

 

குளித்து முடித்துவிட்டு வந்தவள், மறைந்தவர்களுக்கு விளக்கேற்றி வைத்துவிட்டு, ‘ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் பேசின வார்த்தையைக் கேட்டவனை விட, உங்களுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன். என் பார்வைக்கு, இங்க இருக்கிறவன் அப்படித் தான் தெரிஞ்சான். என் புருஷனுக்காக, அவர் மேல வச்சிருந்த பாசத்துக்காக, இங்க வந்து கஷ்டப்படுறவன ஒரு நாளும் இனி நான் கஷ்டப்படுத்த மாட்டேன். அதே நேரம், எப்பவும் அன்புவோட மனைவியா மட்டும்தான் வாழ்வேன்.’ என மனமாறப் பிரார்த்தித்து விட்டுக் கண் திறந்தாள். 

 

அவள் கண் விழிக்கும் வரை அமைதியாக நின்றிருந்தவன், “சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன், சாப்பிடுமா… ரெண்டு மணி நேரம் கழிச்சுப் பழம் சாப்பிடு. மதியத்துக்கு மேல வீட்டுக்கு வந்திடுவேன். ஏதாச்சும் தேவைனா, போன் பண்ணுமா.” என்றவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

 

“நில்லு!”

 

“என்னம்மா?”

 

“நீ தியாகி ஆகி என்னைக் கொடுமைக்காரி ஆக்கிடாத. இந்தச் சாப்பிடாம பட்டினி இருக்குற வேலை எல்லாம் போதும். என் புருஷனும், தாத்தாவும், நீ பண்றதுக்கு என் மேல கோபப்படுவாங்க.”

 

அமைதியாக உள்ளே வந்தவன் தனக்கான சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, “தண்ணி பாய்ச்சிற வேலை இருக்கு, முடிச்சிட்டுச் சாப்பிடுறேம்மா.” என்று வைத்து விட்டு வெளியேறினான். 

 

பெருமூச்சு விட்டவள், காலை உணவை முடித்துவிட்டுப் பிள்ளையோடு நேரம் செலவழிக்க, வேலைகளை முடித்துவிட்டுச் சாப்பிட அமர்ந்தவனுக்குப் புதிதாக இருந்தது. ஒரு வாய் எடுத்து வைத்ததுமே முழி பிதுங்கிப் போனான்.

 

‘சோறு இப்படித்தான் ருசியா வைக்கணுமா.’ 

 

இவ்வளவு நாள்களாக, ‘சாப்பாடு’ என்ற பெயரில் அவன் செய்து கொண்டிருந்த கொடுமை நன்றாகப் புரிந்தது. இதுவரை செய்த கொடுமைக்கு, மானசிகமாக அவளிடம் மன்னிப்புக் கேட்டவன் சமையலில் ஒரு கை பார்க்க முடிவெடுத்தான்.

 

***

 

“ம்மா…” எனப் பத்தாவது முறையாக அழைத்தும், பதில் கொடுக்கவில்லை தேனிசை.

 

“வயலுக்குப் போகணும்மா”

 

அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கதவைத் திறந்தவள், “போகலாம்” என்றாள்.

 

“என்னம்மா முகம் ஒரு மாதிரி இருக்கு.”

 

“கால் ரொம்ப வலிக்குது.”

 

“முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதாம்மா. நம்ம எங்கயும் போக வேண்டாம், நீ போய் படுத்துக்க.”

 

“இப்பக் கொஞ்சம் பரவால்ல.”

 

“சரிம்மா, நாளைக்குப் போயிக்கலாம்.”

 

“அதெல்லாம் வேண்டாம். இன்னைக்கு வேலைய முடிச்சுட்டு வந்துட்டா, ரெண்டு வாரத்துக்கு எங்கயும் போகாம ரெஸ்ட் எடுக்கலாம்.” 

 

அவளுக்காக வரவழைக்கப்பட்ட காரில் ஏற்றி விட்டவன் பின் தொடர்ந்தான். இருவரும் கடை வீதிக்குச் சென்றார்கள். அவன் சம்பாதித்த பணம், செலவிற்கே சரியாக இருந்தது. போன மாதத்திலிருந்து தான் கொஞ்சம் எடுத்து வைத்தான்.

 

கைக்கு வந்த பணத்தை அவளிடம் கொடுக்க, “உன் காசு எனக்கு எதுக்கு?” கேட்டாள்.

 

“பிரசவ நேரத்துல செலவு நிறைய ஆகும்னு காமாட்சி அத்தை சொன்னாங்க. என்கிட்ட இருந்தா செலவாகிடும்.” 

 

“பிரைவேட் ஹாஸ்பிட்டல்லயா பார்க்கப் போற?” 

 

“ஆமாம்மா, இப்ப நம்ம பார்க்குற ஆஸ்பத்திரில தான்.”

 

“அதெல்லாம் வேண்டாம். டெலிவரிய கவர்மெண்ட்ல பார்த்துப்போம். இப்ப இருக்க நிலைமைக்கு அவ்ளோ பணத்துக்கு எங்க போவோம்?” 

 

“அதைப் பத்திக் கவலைப்படாதம்மா. கொடுக்கிற காச பத்திரமா எடுத்து வை. போதும்.” என இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே வந்த காமாட்சி, “முதல்ல அந்தப் பொண்ணுக்குப் போட்ட வளையல மாத்திப் போட்டு, காதுல கழுத்துல ஏதாச்சும் வாங்கிப் போடு. டெலிவரி நேரத்துல அதை வச்சுக் கூடச் செலவைச் சமாளிக்கலாம்.” என்றார்.

 

அந்த யோசனை அவனுக்கும் சரியென்று பட, வேண்டாம் என்று மறுத்தாள் தேனிசை தேவி. அவன் சமாதானப்படுத்த முயல, “எனக்கு எதுவும் வேண்டாம். அன்பு இல்லனாலும், அவனோட வசதிக்கேத்த மாதிரி வாழ நினைக்கிறேன். அதனாலதான் போட்டுட்டு வந்த நகையைக் கூட ஆளை விட்டு அவங்ககிட்டயே கொடுத்தேன்.” என்றாள். 

 

“அன்பு கைல காசு வந்திருந்தாலும், முதல்ல உனக்குத் தான் ஏதாச்சும் எடுத்துக் கொடுத்திருப்பான். தங்கம் வாங்கிப் போட்டு உன்னை அழகு படுத்தணும்னு ஆசை அவனுக்கு. அவனோட ஆசைய நிறைவேத்தனும்னு நினைக்கிறேன்.” 

 

இரண்டு நாள்களாக யோசித்துச் சரி என்று சம்மதம் சொன்னவளைத் தான் அழைத்துச் சென்றிருக்கிறான். நகைக்கடை உள்ளே அமர்ந்த இருவரும், என்ன எடுப்பதென்று தெரியாமல் முழிக்கத் துவங்க, “குழந்தைக்கு எடுக்க வந்திருக்கீங்களா?” என அவர்களாகவே அவள் வயிற்றைப் பார்த்துக் கேட்டார்கள்.

 

குமரவேலன் கண்கள் ஆசையில் மிளிர்ந்தது. குழந்தைக்கு எடுக்க வேண்டும் போல் தோன்ற, “ஆமா” என்றான்.

 

பக்கத்தில் இருந்தவள் சட்டென்று திரும்பிக் கேவலமாக முறைத்தாள். அதை அறியாதவன், “முதல் முதல்ல குழந்தைக்கு என்ன எடுப்பாங்க?” ஆர்வமாகக் கேட்டான் கடைக்காரரிடம்.

 

அவரோ வந்த வாடிக்கையாளருக்கு அனைத்தையும் விவரித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்தவளின் முறைப்பு அதிகமானது. முழுவதுமாகக் கேட்டும், என்ன எடுப்பது என்று தெரியாமல் தேனிசை தேவியிடம் கேட்கத் திரும்ப, வார்த்தை வராமல் உதட்டுக்குள் ஒட்டிக் கொண்டது.

 

திருதிருவென முழித்தவன், “எ.. என்னம்மா” என மெதுவாகக் கேட்க,

 

“சரியான சுயநலவாதி நீ… உன்ன எதுல சேர்க்குறதுன்னே தெரியல.” எனக் கேவலமாகப் பார்த்தாள்.

 

அதன்பின் தான், அவள் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது மங்குனி குமரவேலனுக்கு. தவறு செய்துவிட்ட பெரிய பிள்ளை சமத்தாக, “குழந்தைக்கு நாளைக்கு வந்து எடுக்கிறோம். குழந்தையோட அம்மாக்கு இப்பக் காட்டுங்க.” எனத் தேனிசை தேவியைப் பார்த்துப் பல்லைக் காட்ட,

 

“ச்சைக்!” என முகத்தைத் திருப்பினாள். 

 

அவமானப்பட்டதைப் பெரிதுபடுத்தாமல், “கம்மல் காட்டுங்க” என்றான். 

 

“எனக்கு ஒன்னும் தேவையில்லை. நீ கெஞ்சிட்டு இருந்தன்னு கூட வந்தேன், அவ்ளோதான். குழந்தைக்கே எடு.” 

 

“இல்லம்மா, அவர் சொன்னதும் டக்குனு யோசனை மாறிடுச்சு. இப்போ உனக்கு எடுத்துட்டு அடுத்த மாசம் காசு வந்ததும் குழந்தைக்கு எடுக்கலாம்.” 

 

இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து கம்மல் எடுக்க ஆரம்பித்தனர். ஏழாவது மாதம் என்பதால் வெகு நேரம் அமர்ந்திருக்க முடியவில்லை அவளால். இடுப்பு வலி எடுக்க, அசைந்து கொண்டே இருந்தாள். அதைக் கவனித்தவன், சாய்ந்து அமரும்படி இருக்கையை எடுத்து வந்து அமர வைத்தான்.

 

ஒரு கிராமில் காதணி ஒன்று எடுத்தவள், “இது நல்லா இருக்கா?” என்று கேட்க, “உனக்குப் பிடிச்சிருந்தா எடுத்துக்கம்மா.” என்றான். 

 

“உனக்குப் பிடிச்சதை எடுக்கப் போறன்னு சொன்னனா…” என்றதும் தன்னை நொந்து கொண்டு பார்க்க, 

 

“நான் எடுத்தது நல்லா இருக்கான்னு கேட்டேன்.” என்றாள். 

 

“அன்னைக்கு ஒரு நாள் தாத்தா ஒன்னு சொன்னாரும்மா. அதுக்கான அர்த்தம் அப்பப் புரியல, இப்பதான் புரியுது.” 

 

“என்ன சொன்னாரு?” என்றவளின் முறைப்பை அதிகமாக்கினான்,

 

“நீ அன்பு மாதிரி இல்லாம சரியான கோபக்காரின்னு சொன்னாரும்மா. நான் பார்த்த வரைக்கும் நீ அப்படி இல்ல, சமத்தான புள்ளனு நம்பிட்டு இருந்தேன். இப்பதாம்மா தெரியுது…” என்று.

 

அவள் விழியில் தெரியும் உக்கிரத்தைக் கண்டு, வாயில் கை வைத்து முழுவதுமாக மூடிக் கொண்டான். அதைக் கண்டு,

 

“ரொம்ப அப்பாவி மாதிரி நடிக்காத. ஒவ்வொரு தடவையும் என்னை வில்லி ஆக்குறதே நீ

தான். உன்னோட ஆஸ்கார் நடிப்பை நிறுத்திட்டு, எப்பவும் போலச் சாதாரணமா இருந்தாலே நாலு பேருக்கு நான் நல்லவளாய் தெரிவேன்.” என்றதற்கு மேல் அமர முடியாது என்று எழுந்து வெளியே சென்று விட, வாங்கியதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவனுக்கு எதிரில், வந்து கொண்டிருந்தனர் இந்திராவும் முத்துமாரியும். 

 

தெம்மாங்கு ஒலிக்கும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்