1,512 views

 

மாமனாரின் பேச்சில் பயந்தாள் அகல்யா. இந்த இரவில் இன்னும் வீட்டுக்கு வராமல் எங்கிருக்கிறான் என்று பயம் கொண்டவள் அவனுக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்தாள். மாமனார் அழைத்து ஒரு மணி நேரம் சென்று இருக்க, அவருக்கு அழைத்து, “அவரு வந்துட்டார மாமா?” என விசாரித்தாள்.

“இன்னும் வீட்டுக்கு வரலமா போன் போட்டாலும் எடுக்க மாட்றான்.”

இருப்பு கொள்ளவில்லை தாய் வீட்டில். எண்ணத்தை பயம்  ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய வார்த்தையில் மனம் நொந்தவன் மதுவை தேடி இருப்பானோ என்று சந்தேகம் கொண்டவள் உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள் தன் கணவன் அப்படி செய்ய வாய்ப்பில்லை என்று.

கணவனின் நினைவு அதிகமாக வாட்டி எடுக்க தாய் வீட்டிலிருந்து அடம் பிடித்து கிளம்பினாள். மகளை தனியே விட மனமில்லாத சுகன்யாவும் சம்பந்தி வீட்டிற்கு புறப்பட, தரணி வராததை அறிந்து ஒரு நாடகத்தை அரங்கேற்ற இருந்தாள் சிவானி.

“கௌஷிக் உங்க அப்பா எங்க போனாருன்னு தெரியல. அம்மாக்கு ஒரே பதட்டமா இருக்கு. உன் அப்பாக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு கடவுளை வேண்டிட்டு வரேன்.” என்றவள் அவ்வீட்டின் தெய்வங்கள் குடியிருக்கும் அறைக்கு செல்ல,

“என் மகன் சொன்னதால தான் உன்ன அந்த ரூமுக்குள்ள இருக்க விட்டிருக்கேன். அதைத் தாண்டி எங்கயாது உன் கால் போச்சு வெட்டி எறிய தயங்க மாட்டேன். தினமும் என் மருமக ஆத்மார்த்தமா பூஜை செஞ்சு இந்த வீடு நல்லபடியா  இருக்கனும்னு  வேண்டுற இடம் இது. இங்க உன்ன மாதிரி ஒரு சாக்கடைக்கு இடமில்லை.” என்ற ஆதிலட்சுமியின் வார்த்தையில் அவள் உடம்பு எரிய ஆரம்பித்தது.

“சும்மா மருமகன்னு பேசி என்னை வெறுப்பேத்தாதீங்க. ஒரு காலத்துல நானும் உங்களுக்கு மருமக தான்.”

“அப்படின்னு யாரு உனக்கு சொன்னது? என் மனசு அறிஞ்சு ஒரு நாள் கூட உன் அந்த மாதிரி நான் நினைச்சது இல்லை.”

“நீங்க நினைக்காம போனாலும் நான் உங்களுக்கு மருமக தான்.”

“என் கையால மிதிபட்டு சாகறதுக்கு முன்னாடி வாய மூடிக்கிட்டு போயிடு.”

“சாமி கும்பிடனும் வழிய விடுங்க. நானே என் புருஷன் வீட்டுக்கு வரலன்னு பரிதவிச்சிட்டு இருக்கேன் நீங்க வேற பேசிட்டு.” என்றவளை பாவம் பார்க்காது அடித்துவிட்டார் ஆதிலட்சுமி.

“சொல்லிட்டே இருக்கேன் மரியாதையா போய்டுன்னு புரிஞ்சுக்காம அடி வாங்கிட்டு இருக்க.”

“ரொம்ப ஆடிட்டு இருக்காதீங்க உங்க ஆட்டத்தை சீக்கிரமா அடக்கிடுவேன். தரணி மட்டும் என் வழிக்கு வரட்டும் அப்புறம் இருக்க உங்களுக்கு கச்சேரி.”

“என் மருமக இப்ப மனசு சரியில்லாம உன்னை விட்டு வச்சிருக்கா. திரும்பி வந்து உன்ன விளக்குமாத்தால அடிச்சு விரட்டுறதுக்கு முன்னாடி நீயே போயிட்டா இல்லாத மரியாதைய காப்பாத்திக்கலாம்.”

“யாரு உங்க மருமக வந்து என்னை அடிக்க போறாளா! நல்லா காமெடி பண்றீங்க முன்னாள் மாமியாரே. நான் வந்ததை தாங்கிக்க முடியாம ஓடுனவ வந்து என்னை அடிக்க போறாளாம்.” எனும்போது சரியாக உள்ளே வந்தாள் அகல்யா.

சிவானியின் வார்த்தையை கேட்டு சுகன்யா முறைத்துக் கொண்டு நிற்க, “மாமா அவரு கம்பெனில இருக்காரான்னு விசாரிச்சிங்களா?” சிறிதும் மதிக்காமல் சாதாரணமாக தன் மாமனாரிடம் பேசினாள் அகல்யா.

மருமகளின் வரவை உணர்ந்த ஆதிலட்சுமி புன்னகையோடு, “இந்த நேரத்துல எதுக்கு வந்த அகல். அவன் எங்கயாது வேலையா வெளிய இருப்பான். விடிஞ்சதும் வந்திருக்கக் கூடாதா.” என்றார் அக்கரையாக.

“விடியுற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது அத்தை. காலையில வேற கோபத்துல கண்டுபடி பேசி விட்டுட்டேன். அந்த கஷ்டத்துல எங்கயாது போய்ட்டாரோன்னு பயமா இருக்கு.”

“உன்னால தான் என் புருஷன் இன்னும் வீட்டுக்கு வராம இருக்கானா. நீ யாரு என் தரணிய திட்ட. நான் ஒரு வார்த்தை கூட தரணிய பேசமாட்டேன் தெரியுமா.” கோபத்தோடு பேசுவது போல் முகத்தை வைத்தவள் திடீரென்று அழுதாள்.

அதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை அகல்யா. மாறாக மற்ற மூவரும் தான் அவளை முறைத்துக் கொண்டு இருந்தார்கள். அதிலும் சுகன்யா பற்களை கடித்துக் கொண்டு அவளிடம் சண்டைக்கு பாய, கைப்பிடித்து அன்னையை தடுத்து விட்டாள் அகல்யா.

“ஐய்யோ என் தரணி எங்க போய் கஷ்டப்படுறான்னு தெரியலயே…” என தலையில் அடித்துக் கொண்டு அழுதவளை பார்த்த கௌஷிக்கும் அழுக ஆரம்பித்தான். அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவள்,

“பாரு என் பிள்ளை அப்பா இல்லாம எப்படி அழுகுதுன்னு. தரணிக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு உன்னை உயிரோட விடமாட்டேன்.”  என்றவள்,

“அழாத கௌஷிக் அப்பா எனக்காக இல்லனாலும் உனக்காக கண்டிப்பா வந்துருவாரு.” குழந்தையை சமாதானப்படுத்தினாள்.

நடப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் சுகன்யா சம்மந்தியை கடுமையாக முறைக்க, “நடிக்காம உன் வேலைய பாரு.” மூஞ்சியில் அடித்தது போல் பேசினார் ஆதிலட்சுமி.

பதில் கொடுக்காமல் சிவானி முறைத்துக் கொண்டிருக்க, “மாமா உங்களால கார் ஓட்ட முடியுமா? கொஞ்சம் கம்பெனி வரைக்கும் போயிட்டு வரீங்களா.” கணவன் மீதே குறியாக இருந்தாள் அகல்யா.

“பதட்டப்படாத அகல் நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்றவர் கிளம்ப… கூடவே சிவானியும், “நில்லுங்க மாமா நானும் உங்க கூட வரேன் என்னால என் புருஷன் இல்லாம இருக்க முடியல.” என்று புறப்பட்டாள்.

“என்னதான் நடக்குது இந்த வீட்ல. என் பொண்ண கேட்டு வரும்போது என்ன வார்த்தை சொன்னிங்கன்னு ஞாபகம் இருக்கா. எவளோ ஒருத்தி வந்து என் பொண்ணுக்கு சரிசமமா பேசிட்டு இருக்கா நீங்களும் பார்த்துட்டு சும்மா இருக்கீங்க. எல்லா விஷயத்துலயும் பொறுத்து போன மாதிரி இந்த விஷயத்தை பொருத்துக்க மாட்டேன். இப்பவே இவள வீட்டை விட்டு அனுப்புங்க.”

“நான் வீட்டை விட்டு போகணுமா…முதல்ல நீங்க யாரு? எதுக்காக என் வீட்ல உட்கார்ந்து இருக்கீங்க.”

“உன்னோட லிமிட்ட  தாண்டிட்டு இருக்க. மேல கை வைக்க கூடாதுன்னு ரொம்ப பொறுமையா இருக்கேன் என் பொறுமைய சோதிக்காத.”

“அவங்கள கேள்வி கேட்டா நீங்க எதுக்காக பதில் சொல்றீங்க.” தன்னைத் திட்டிய ஆதிலட்சுமி இடமும் எரிந்து விழுந்தாள் சிவானி.

“மாமா சண்டை போடுறதுக்கான நேரம் இது இல்ல. எனக்கு இப்போ அவர பார்த்தே ஆகணும் தயவு செஞ்சு எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க.”

“ஏய்! இப்ப எதுக்கு சீன் போட்டுட்டு இருக்க. என்னமோ நீ மட்டும் தான் ரொம்ப பாசம் வெச்சிருக்க மாதிரி. உன்ன விட தரணி மேல அதிக பாசம் நான் வச்சிருக்கேன் தெரியுமா.”

“இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது சம்மந்தி. இவளை வெளிய அனுப்ப முடியுமா முடியாதா?” எரிச்சலில் கேட்டார் சுகன்யா.

“இவளை இங்க வச்சிருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசையா சம்மந்தி. இந்த நாய் வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து என் வீட்டு நிம்மதி கெட்டுப் போச்சு. எல்லாம் நான் பெத்தவனை சொல்லணும். இவ புத்தி தெரிஞ்சும் வீட்டுக்குள்ள இருக்க வச்சிருக்கான்.”

“என்னது! மாப்பிள்ளை இருக்க சொன்னாரா? இதுக்கு என்ன அர்த்தம் சம்மந்தி. கட்டுன பொண்டாட்டி வயித்துப் பிள்ளையோட இருக்கும் போது எவளோ ஒருத்திய வீட்டுல இருக்க சொன்னா என்ன அர்த்தம்? அப்போ என் பொண்ணோட நிலைமை அவ்ளோ தானா. நீங்க எல்லாரும் ஒன்னு கூடிக்கிட்டு என் பொண்ண வேணும்னே துரத்தி இருக்கீங்களா. இதுக்கு எதுக்காக என் பொண்ண கல்யாணம் பண்ண கேட்டீங்க. உங்களை நம்பி தான என் பொண்ணு ரெண்டாம் தாரமா இருந்தாலும் கட்டி கொடுக்க சமாதிச்சேன்.” ஏற்கனவே கோபத்தில் இருந்த சுகன்யா அவர் வார்த்தையை கேட்டு எரிமலை போல் கொதித்தார்.

“பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க. உங்க பொண்ணு மட்டும் இல்ல யார் வந்தாலும் தரணி என்னை எப்பவும் மறக்க மாட்டான்.”

“மாமா என் பதட்டம் புரியாம எல்லாரும் பேசிட்டு இருக்கீங்களே. நேரம் ஆக.. ஆக ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. நீங்க வரிங்களா இல்ல நானே என் புருஷன தேடி கிட்டுமா.”

“இந்த மாதிரி மயக்கி தான் என் புருஷன கல்யாணம் பண்ணிக்கிட்டியா. உன்னோட ஆக்டிங் இனிமே வேலைக்கு ஆகாது. வந்த வழியே திரும்பி போயிடு. தரணிய எப்படி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரணும்னு எனக்கு தெரியும்.”

“இது பேசுறதை காதுல வாங்கிக்காத அகல். அவன் வரட்டும் ரெண்டு செவில்ல விட்டு அவன் கையாலயே பிடிச்சு வெளியே தள்ள வைக்கிறேன்.”

“அத்த நீங்களும் இப்படியே பேசிட்டு இருக்காதீங்க. என் புருஷன் இப்போ எங்க இருக்காருன்னு எனக்கு தெரியணும்.”

“என்னது உன் புருஷனா? இன்னொரு தடவை என் தரணிய பங்கு போட்ட அவ்ளோ தான். ரெண்டாம் தாரமா வந்த உனக்கு அந்த உரிமை இல்லை. மரியாதையா வெளிய போடி.” என்ற சிவானியின் கன்னம் எண்ணெயில் பட்ட பூரி போல் புஸ் என்று வீங்கி விட்டது நம் அகல்யா அடுத்த அடியில்.

அடித்த அடியில் கண்ணெல்லாம் கலங்கி மயக்கம் வருவது போல் இருந்தது அவளுக்கு. அடி வாங்கிய கன்னத்தில் யாரோ தீ வைத்து கொளுத்தியது போல் எரிந்தது. நொடி கழித்து உணர்வு பெற்றவள் அகல்யாவை திரும்ப தாக்க வர, அதற்குள் அடுத்த அடியை கொடுத்து கீழே விழ செய்தாள் அகல்யா.

ஆதிலட்சுமியின் உதட்டில் புன்னகை. தயாளனுக்கு திகைப்பாக இருக்க, சுகன்யா ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருந்தார். குழந்தை மட்டும் சிவானியை பார்த்து அழுக ஆரம்பித்தது. சூனியக்காரி சிவானி மீது இருந்த பார்வை குழந்தை மீது சென்றது அகல்யாவிற்கு.

குழந்தையின் அழுகையில் தன் கோபத்தை குறைத்தவள், “என் அனுமதி இல்லாம என் வீட்டுக்குள் இருந்துட்டு என்னையவே சட்டம் பேசுற. யாருக்கு யாரடி புருஷன். என் புருஷன் கட்டுன தாலி உன் கழுத்துல இருக்கா? இல்ல வருஷ கணக்கா குடும்பம் நடத்தி பத்து பிள்ளைய பெத்துக்கிட்டியா. ஓடிப்போன உனக்கு என் புருஷன் கேட்குதோ. உன்ன மாதிரி ஜென்மத்துக் கிட்ட பேச பிடிக்காம தான் ஒதுங்கி இருக்கேன். அத புரிஞ்சுக்காம என்கிட்ட உன் வால ஆட்டணும்னு நினைச்ச… வால மட்டும் இல்ல என் கண்ணுல படுற எல்லாத்தையும் நறுக்கிடுவேன்.” பொறுமையாக அதே நேரம் அழுத்தமாக ஒவ்வொரு வார்த்தையையும் வெளியிட்டாள் அகல்யா.

பேச முடியாமல் சதி செய்தது அடி வாங்கிய கன்னம். இருந்தும் அகல்யாவிற்கு பதில் கொடுக்க நினைத்தவள் பேச ஆரம்பிக்க, கன்னத்தை தாங்கி இருந்த விரல் மீது ஓங்கி ஒரு அடி கொடுத்தாள். கன்னத்தோடு சேர்ந்து இப்பொழுது கை விரல்களும் எரிச்சலில் துடித்துக் கொண்டிருக்க,

“நான் என் புருஷனை பார்க்காம ரொம்ப பதட்டத்துல இருக்கேன். தேவை இல்லாம டென்ஷன் பண்ணாத. நான் நினைச்சா இந்த நிமிஷம் உன்னை என்ன வேணாலும் பண்ண முடியும். என்னை தடுக்க இங்க யாரும் இல்லை. மரியாதையா வாய மூடிட்டு நில்லு.” என்றிட, ஐம்புலன்களும் அடங்கிவிட்டது சிவானிக்கு.

******

“லயா” என்ற அழைப்பில் கணவனின் வருகையை உணர்ந்து கொண்டவள் அழுகை கலந்த நிம்மதியோடு திரும்பி பார்த்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன். கணவனின் முகத்தை பார்த்ததும் ஓடி சென்று கட்டிக்கொண்டாள். எந்த கேள்வியும் கேட்காமல் அவள் அழுது கொண்டிருக்க,

“கொஞ்சம் வேலை  அதனால வர லேட் ஆயிடுச்சு.” பட்டும் படாமலும் பதில் சொன்னான்.

அதை உணர்ந்து கொண்டவள் கூடவே இன்னும் கணவன் தன்னை அணைக்கவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டாள். புரியாத முகபாவனையோடு அவனை ஏறிட, மனைவியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான். தரணீஸ்வரனின் செய்கையில் விலகி நின்றாள் அகல்யா.

“இந்த நேரத்துல என்ன பேச்சு வேண்டி இருக்கு. அவ இவ்ளோ நேரம் முழிச்சிட்டு இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது. வேலைக்கு போன எனக்கு வர தெரியாதா. அவளை நடு வீட்டுல பேச வச்சுட்டு சுத்தி நீங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க.” நள்ளிரவை தொடப்போகும் நேரம் வரைக்கும் மனைவி தூங்காமல் இருப்பதால் சுற்றி இருந்த தன் வீட்டு ஆட்களை சத்தம் போட்டான்.

“நீ வரலன்னு பயத்துல அவ தூங்கலப்பா.”

“முன்ன மாதிரி எந்த தப்பான வேலையும் நான் செய்ய மாட்டேன். இனி என்னை பத்தி கவலைப்படாதீங்க. நான் கூட இருந்தாலும் இல்லனாலும் என் பொண்டாட்டி பிள்ளைய பார்த்துக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு.” என்ற வார்த்தை மற்றவர்களுக்கு அக்கறையாக தெரிந்தாலும் அகல்யாவிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.

“உங்க கிட்ட காலையில என்ன சொல்லிட்டு வந்தேன் அத்தை? அவள சரியா பார்த்துக்கோங்கன்னு சொன்னனா இல்லையா. இந்த நேரத்துல  இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ண விட்டிருக்கீங்க.” மாமியாரையும் விட்டு வைக்காமல் சத்தம் போட்டான்.

“நான் அப்பவே சொன்னேன்…” என அவர் தன் தரப்பு விளக்கத்தை கொடுக்க முயல,

“சாக்கு சொல்லாதீங்க அத்தை. ஏதாச்சும் ஆச்சுன்னா என் பொண்டாட்டி பிள்ளைய நீங்க தருவீங்களா. இன்னொரு தடவை அவளை நான் இந்த நிலைமைல பார்க்க கூடாது.” என்றான் முடிவாக.

“நீங்க பேசறது எல்லாம் சரிதான். ஆனா எதுக்காக இவளை இந்த வீட்டுக்குள்ள வச்சிருக்கீங்க. இவ வந்ததால தான என் பொண்ணு என் வீட்டுக்கு வந்திருக்கா.”

அதுவரை அமைதியாக நின்றிருந்த சிவானி வேகமாக ஓடிவந்து, “நீ இல்லாத தைரியத்துல எல்லாரும் என்னை வீட்டை விட்டு போக சொல்றாங்க தரணி. நம்ம பிள்ளைய வாய்க்கு வந்த மாதிரி பேசுறாங்க. இனிமே நீ எங்க போறதா இருந்தாலும் என்னையும் நம்ம மகனையும் கூட்டிட்டு போய்டு.” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

காதால் கேட்டு கற்பனை செய்து கொண்டதை விட சிவானியின் குணம் மிகவும் மோசமானது என்பதை இப்போது தான் உணர்ந்தாள் அகல்யா. இத்தனை பேர் சுற்றி இருந்தும் வாய் கூசாமல்  பொய் பேசுபவளை அவள் திட்ட வருவதற்கு முன்,

“வாய மூடிட்டு உன் ரூமுக்கு போய்டு. இல்லன்னா என் பொண்டாட்டி கிட்ட வாங்குனதை விட டபுள் மடங்கா என்கிட்ட வாங்குவ.” என்று அவளின் நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டான். எதுவும் செய்ய முடியாத நிலையில் சிவானி தன் அறைக்கு சென்று விட்டாள். கேள்வி கேட்ட மாமியாருக்கு,

“என் மனைவிய தவிர இந்த கேள்விய கேட்குற உரிமை வேற யாருக்கும் இல்லை. வேணும்னா அவளை கேக்க சொல்லுங்க பதில் தரேன்.” இவ்வளவு பேச்சுக்களையும் அகல்யாவை பார்க்காமல் தான் பேசிக் கொண்டிருக்கிறான் தரணி.

அவனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தவள் ஆழமாக கணவனை பார்க்க, “எப்படி அவ வாயை விட்டு இதை பத்தி பேசுவான்னு நினைக்கிறீங்க. இந்த மாதிரி ஒரு நிலைமைல நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க?” தன் மகளுக்காக வாதாடினார் சுகன்யா.

“காலம் பதில் சொல்லும் அத்தை. ரொம்ப நேரம் ஆயிடுச்சு அவள போய் தூங்க சொல்லுங்க.” என்றான் மனைவியை பார்க்காது.

மருமகன் மீது பெருமளவு சீற்றம் தோன்றியது சுகன்யாவிற்கு. மகளின் வாழ்வுக்காக பொறுத்துக் கொண்டவர் அகல்யாவை அழைக்க, நகராமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கணவனை.

“அத்தை அவள தூங்க சொல்லுங்க.” மனைவி தன்னைத்தான் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து அவன் கூற,

“அகல் அதான் அவன் வந்துட்டானேமா இன்னும் எதுக்காக நிற்கிற. ரெண்டு பேரும் போய் தூங்குங்க.” என்றார் ஆதிலட்சுமி.

“லயா கூட அத்தை படுத்துக்கட்டும் நான் வேற ரூம்ல படுத்துகிறேன்.” என்றவன் காலியாக இருக்கும் அறைக்கு சென்று விட்டான்.

மகனின் நடவடிக்கையில் பெற்றோர்களின் பார்வை மருமகள் மீது செல்ல, அவளோ யாரையும் கண்டுகொள்ளாமல் கணவன் முதுகை வெறித்தாள். சுகன்யா தான் மகளை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார் அவர்கள் அறைக்கு.

படுத்தும் தூக்கம் வரவில்லை இருவருக்கும். பக்கத்து பக்கத்து அறை என்றாலும் இருவருக்கும் நடுவில் பெரும் சுவர் ஒன்று தடையாக இருப்பது போல் உணர்ந்தார்கள். மகளைப் படுக்க வைத்த நிம்மதியில் சுகன்யா நன்றாக உறங்கி விட, பக்கத்து அறைக்கு சென்றாள் அகல்யா.

கதவு திறக்கும் ஓசையில் அவன் வாசல் பக்கம் பார்வையைத் திருப்ப, “டிரஸ் மாத்திட்டு சாப்ட வாங்க.” என்றாள்.

“நான் சாப்பிட்டேன்.”

“சாப்பிட வாங்கன்னு சொன்னேன்.”

“காது கேக்கலையா? நான் சாப்டுட்டேன்னு சொல்றேன் தூங்குற வேலைய மட்டும் பாரு.”  எரிந்து விழுந்தான் அவளிடம்.

“நான் இன்னும் சாப்பிடல.” என்ற அகல்யா கோபமாக தன் அறைக்கு திரும்ப, அவளின் கைகளை பற்றினான் தரணீஸ்வரன்.

“இவ்ளோ நேரம் சாப்பிடாம என்ன பண்ற லயா. கொஞ்சம் கூட குழந்தை மேல அக்கறை இல்லையா உனக்கு.
இப்படி சாப்பிடாம இருந்தா உன் உடம்பு என்னத்துக்கு ஆகுறது.” கோபம் கலந்த அக்கறையோடு கேட்டவன் சாப்பிட அழைத்துச் சென்றான்.

நள்ளிரவு நேரம் என்பதால் எந்த உணவும் இல்லை சாப்பிட. சிறிது நேரம் யோசித்தவன், “பத்து நிமிஷம் லயா.” என்று விட்டு தோசை கல்லை அடுப்பில் வைத்தான்.

“பாலும் வேணும்.” என்றாள் கணவனை பார்க்காது.

அகல்யா இருக்கையில் அமர்ந்திருக்க, தரணி தனியாக தூங்குவதை அறிந்து அவனிடம் பேச வெளியில் வந்த சிவானி இருவரையும் பார்த்தபடி நின்றாள். அகல்யா கேட்டது போல் பாலை சூடு செய்தான்.

“பால் ரொம்ப சூடா இருக்கு லயா. தோசை சாப்பிடு அதுக்குள்ள ஆறிடும்.” என்றவன் அவளை கேட்காமல் ஊட்ட ஆரம்பித்தான்.

வாங்கிக் கொள்ளாமல் அகல்யா அடம் பிடிக்க, “என் மேல இருக்க கோபத்தை குழந்தை கிட்ட காட்டாத லயா.” என்றவன் பார்வை இப்பொழுதுதான் மனைவியை நேராக சந்தித்தது.

இந்தப் பார்வைக்கு தான் அவள் வீம்பு பிடித்தது. வார்த்தைகள் எதுவும் இன்றி அவன் விழியோடு தன் விழியை தூது விட்டவள் கோபம் அனைத்தையும் கொட்டி தீர்த்தாள். மனைவி எண்ணத்தைப் படித்தவன் உடனே தன் விழியை நகர்த்திக் கொள்ள,

“சாப்பிடுங்க” என்றாள்.

“நான் ஏற்கனவே சாப்டுட்டேன் லயா.” வார்த்தையில் சிறு கோபம் இருப்பது போல் தெரிந்தது அகல்யாவிற்கு.

“நீங்க சாப்பிடலன்னு எனக்கு தெரியும். என் மேல இருக்க கோபத்தை சாப்பாடுல காட்டாதீங்க. இனி நீங்க நேரத்துக்கு சாப்பிடாம இருந்தா உங்க குழந்தையும் சாப்பிடாம இருக்கும்.”

திரும்பிய பார்வை மனைவியை பார்த்து முறைத்தது. அவளும் சலிக்காமல் முறைத்துக் கொண்டிருக்க, வேறு வழி இல்லாமல் சாப்பிட ஆரம்பித்தான். எழுந்து சென்றவள் அவனுக்கு தண்ணீர் கொண்டு வர, “உண்மையாவே சாப்டியா லயா” கேட்டான்.

“பொண்டாட்டி மேல அவ்ளோ அக்கறை இருந்தா போன் போட்டு சாப்டியான்னு கேக்க வேண்டியது தான.”

“உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு  திரும்ப தொந்தரவு பண்ண விரும்பல.”

“அப்போ சாப்பிட்டியானு கேக்காதீங்க.” முறைப்போடு அவன் எதிரில் அமர்ந்தவள் உணவு மேஜையில் இருக்கும் ஆப்பிளை எடுத்தாள்.

புரிந்து கொண்டவன் வேகமாக அதை கழுவி வந்து நறுக்கி கொடுக்க, முறைத்துக் கொண்டே சாப்பிட்டாள். தேவைக்கு சாப்பிட்டு முடித்தவன் பால் டம்ளரை அவளிடம் நீட்ட, “அதுவும் உங்களுக்கு தான்.” என்றாள்.

முறைத்துக் கொண்டே நின்றான் தரணீஸ்வரன்.”நீங்க குடிக்கிற வரைக்கும் உங்க பிள்ளை தூங்காம இருக்கும்.” என்று மிரட்ட, நொந்து கொண்டு குடிக்க ஆரம்பித்தான். இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த சிவானிக்கு பற்றி எரிய ஆரம்பித்தது மொத்த உடலும்.

மனைவியை தூங்கச் சொன்னவன் அவன் அறைக்கு சென்றுவிட்டான். தரணியை மனதில் திட்டிக்கொண்டே தன் அறைக்கு சென்றவள் தூங்க முயற்சிக்க கால் வலி குடைந்து எடுத்தது. ஏழாம் மாதம் என்பதால் அவளால் அவள் பாதங்களைப் பிடிக்க முடியாமல் போக சுகன்யாவை எழுப்பினாள்.

மகளின் நிலை உணர்ந்து கால் பிடித்துக் கொண்டிருந்தார். தன்‌ அறைக்குச் சென்றவன் மனைவி தூங்கி விட்டாளா என்று கவனிக்க அவர்கள் அறைக்கு வர, பார்த்த காட்சியில் பதறி விட்டான். ஓடி வந்தவன் என்னவென்று அகல்யாவை விசாரிக்க, பதில் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“பாதம் குடையுதாம் மாப்பிள வேற ஒன்னும் இல்ல.” என்று மாமியார் முழுதாக முடிப்பதற்குள் அவரை எழுப்பியவன் கால் பிடித்து விட துவங்கினான்.

பத்து நிமிடங்களுக்கு மேலாக அவன் கால் பிடித்துக் கொண்டிருக்க உடல் சோர்ந்து படுத்தாள் அகல்யா. அவள் அசைவை வைத்து படுக்க உதவி செய்தவன் மீண்டும் கால் பிடித்துக் கொண்டிருக்க, சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தார் சுகன்யா.

அன்னையின் அவஸ்தை புரிந்தும் அகல்யா எதுவும் பேசவில்லை. பொறுத்துப் பார்த்தவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். அதை அறியாத தரணீஷ்வரன் கால் பிடித்து விடும் வேளையில் மும்முறமாக இருந்தான். கணவனை பார்த்துக் கொண்டிருந்தவள் கண் சொருகி தூங்கிவிட்டாள்.

பல மணி நேரங்கள் கழித்து கால் பிடிப்பதை நிறுத்தியவன் அவளுக்கு தொந்தரவு தராத வகையில் போர்வையை போர்த்தி விட்டான். மனைவியின் அருகில் படுத்தவன் அவளையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். என்னவோ யோசித்துக் கொண்டே தூங்கி இருப்பாள் போல புருவங்கள் கேள்வி முடிச்சோடு சுருங்கி இருந்தது.

அதை அவள் உணராத வண்ணம் லேசாக விரல் கொண்டு வருடியவன் சாதாரண நிலைக்கு மாற்றினான். முகத்தில் வந்து விழும் சிறு பூனை முடிகளை ஒதுக்கி விட்டவன் நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யூ லயா” என்றான்.

நினைவுகள் அவளோடு ஒன்றாக தூங்கிய பொக்கிஷங்களை ஞாபகப்படுத்த, இங்கு இருந்தால் அவளோடு ஐக்கியமாகி விடுவோம் என்ற பயத்தில் எழுந்து விட்டான். அப்பொழுதுதான் மாமியார் என்ற ஜீவன் அவன் நினைவிற்கு வர, தேடி வெளியில் வந்தான். அவர் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தார். தூங்குபவரை எழுப்ப மனமில்லாதவன் தன் அறைக்கு திரும்ப, இருப்பு தங்காமல் மனைவியிடம் வந்தான்.

மனைவியோடு தூங்க அவன் தன்மானம் மறுக்க, தனியாக விட்டு செல்லவும் மனம் இல்லாமல் தரையில் படுத்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
62
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *