Loading

26 – காற்றிலாடும் காதல்கள் 

 

சிறிது நேரம் கழித்து,“நம்பனால என்ன கட்டாயம் வந்துச்சி? மிருதங்கம். உங்கக்கா என்ன சொல்றா?” இந்திரன் கேட்டான். 

“இந்திரண்ணா கொஞ்ச நேரம் கம்முன்னு இரு. என்ன விஷயம்ன்னு தெரியாமயே நானும் ஆவியாட்டம் அலைஞ்சிட்டு இருக்கேன்.  நேரம் ஆக ஆக என் உடம்போட கனமே தெரியமாட்டேங்குது. ரொம்பவும் லேசா இருக்கவும் கால் இப்பவே ஒரு அடி மேல காத்துல நிக்குது. உடம்புக்குள்ள என்ன என்னமோ பண்ணுது. வீட்டாளுங்க முன்ன நம்ம எப்படி போய் நிக்கறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு. எங்கம்மா வந்ததும் என்னை தான் பிடிச்சி ஏறும். அத எப்டி சமாளிக்கறதுன்னு தெரியல. உங்க வீட்ல எல்லாம் என்ன சொல்லி சமாளிக்கறது? ராத்திரி கயல கூட்டிட்டு எப்டி போறது? கீதன் வீட்ல விடுவாங்களா? இத எப்டி சரி பண்றது? அந்த விநாயகருக்கும், தீர்த்தத்துக்கும் என்ன சம்பந்தம்? இதுக்கும் இப்ப முனியப்பன் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு மண்ணும் எனக்கு புரியல. இதுல நீங்க ரெண்டு பேரும் கடுப்ப கெளப்பிக்கிட்டு இருக்கீங்க.” என பொறிந்துத் தள்ளினாள். 

“தங்கச்சிமா.. ரிலாக்ஸ்.. இன்னிக்கி ராத்திரி வரைக்கும் எப்பிடியோ சமாளிச்சிட்டா போதும். அதான் கிருபா சொல்லிச்சில்ல இந்த நெலமை மாற தான் அந்த கோவிலுக்கு போகணும்ன்னு. இன்னிக்கி மட்டும் எப்பிடியாவது சமாளிச்சிடலாம். நீ அமைதியா சுவடிய பாரு. நிரந்தர தீர்வ நீ தான் தேடமுடியும். உனக்கு நாங்க சப்போர்ட் அஹ் இருப்போம். முடிஞ்சா உன் அக்காவ கூப்பிட்டு ஹெல்ப் கேளு.” என அன்வர் அவளைச் சமாதானம் செய்தான். 

“சாரி.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். கயல், இந்த டைரி தவிர வேற ஏதாவது உங்கம்மா மறைச்சி வச்சிருக்காங்களா?” எனக் கேட்டாள். 

“இல்ல அண்ணி. இது ஒண்ணு தான். மத்த எல்லாம் அண்ணன் எடுத்துட்டான். நீங்க எல்லாரும் சரி ஆகிடுவீங்க தானே?”கண்களில் வழியும் நீருடன் கேட்டாள். 

“சரிபண்ணிடலாம் கயல். எனக்கு வந்து உதவி பண்ணு வா.“ என அவளை ஒரு நோட் பேனாவுடன் வரச்சொல்லி அவள் சொல்வதை எல்லாம் எழுதச்சொன்னாள். 

கீதனும் அன்வரும் ஒரு பக்கமும், மிருணாவுடன் கயல் ஒரு பக்கமும் 3 மணிநேரமாக விளக்கங்களைத் தேடியெடுத்து, அதை வரிசைப்படிக் கோர்க்க ஆரம்பித்தனர். 

“கயல்… நான் சொல்றத எழுது. எது முன்ன எது பின்னன்னு தெரியணும். இப்போ பாட்ட மட்டும் சொல்றேன். சரியா…“ எனக் கூறிவிட்டு சொல்ல ஆரம்பித்தாள். 

“சந்திரனில்லா நள்ளிரவு ஏற, 

குகையின் வடக்கும், தெற்கும் வைரவன் வாள் வீச,

மத்தியில் நாச்சியின் அபயகரத்தினைப் பற்றிட,

உச்சியில் பாறை விலகிய நாள் கணக்கிட்டு வரும் ,

நித்ய பௌர்ணமியில்

சந்திரன் முழு வீரியத்தில் சுற்றும் வேளை,

எல்லைக் கோவில் தம்பக்கூடமதில்  மூவாறு வரிசையிலே,

அட்டக் காலை மீட்ட,

குகையின் முக்கிய தாழ்  திறக்கக் கடவுமே… 

மற்றவர்கள் இதைப் பார்த்துவிட்டு,“இது சரியா இருக்கு. அமாவாசைல ஆரம்பிச்சி பௌர்ணமில வருது.” எனக் கீதன் கூறினான். 

“ஆனா முக்கியமான தாழ்  திறக்கும்ன்னுதான் வருது.  மொத்தமா தொறக்கும்ன்னு வரலியே”யுகேந்தரும் இந்திரனும் கேட்டனர். 

“அந்த செய்யுள் இனிமே தான் கண்டுப்பிடிக்கணும்.” மிருணாக் கூறிவிட்டு சோபாவில் அமர முற்பட அவளின் உடல் அங்கே படவே இல்லை. காற்றில் தான் மிதந்துக் கொண்டிருந்தது.

அதைக் கண்ட அன்வரும், கயலும் மற்றவர்களைப் பார்க்க அவர்களும் முன்பிருந்ததை விட அதிகமாக மேலேறி தான் இருந்தனர். 

“அண்ணா.. உங்களுக்கு பசிக்கலியா?”

“இல்ல டா.. நீ இப்ப வீட்டுக்கு போறியா?”எனக் கேட்டான். 

“வீட்டுக்கு போனா எப்டி திரும்பி உங்ககூட வர்றது? தவிர அண்ணியோட அப்பா அம்மா இங்க தானே வருவாங்க. அவங்களுக்கு இங்க தங்க இடமும், சாப்பாடும் தயார் பண்ணனும்ல? நான் இங்க அண்ணி கூட இருக்கேன்னு அம்மாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடு.” எனக் கூறினாள். 

“அம்மாச்சி என்ன சொல்றாங்கன்னு தெர்ல.. பாப்போம்..” எனக் கூறியபடி அம்மாவுக்கு அழைத்து விஷயத்தைக் கூறினான். 

அவர்கள் நினைத்தது போலவே விசாலாட்சி மறுக்க, மிருணாளினி தான் பேசுவதாகக் கூறி, “பாட்டி, என்கூட கயல் இன்னிக்கி தங்கட்டுமே.. நாளைக்கு மதியம் சாப்ட்டு அனுப்பி வைக்கறேன். அவ கல்யாணத்துல நான் அங்க வந்து தங்கணுமா இல்லயா?” எனச் சற்றே மிரட்டலாகப் பேசி சம்மதிக்க வைத்தாள். 

“உன் அப்பா அம்மா வந்தா எப்டி சமாளிக்கறது?” என அடுத்தச் சங்கடத்தைக் கேட்டான். 

“கொஞ்சம் அந்த புள்ளைக்கு ரெஸ்ட் விடுங்க டா. பாவம் மூணு மணிநேரமா அது மண்டைய கொடஞ்சி இந்த பாட்ட வரிசைப்படுத்தி சொல்லியிருக்கு. அவங்க வரட்டும் நம்ம சமாளிச்சிக்கலாம். ஏ புள்ள மிருதங்கம் உன் அக்காவ என்ன இன்னும் காணோம்? மணி 8 ஆச்சி.”என இந்திரன் கேட்டான். 

“இப்ப எதுக்கு அவள கேக்கற நீ?” யுகேந்தர் கடுப்புடன் கேட்டான். 

“2 மணிக்கு நம்மள வர சொல்லிச்சி அதான் ஏதாவது பூசைக்கு கொண்டு போகணுமான்னு  கேக்கணும்ல. கோவிலுக்கு எப்புடி வெறுங்கையோட போறது?”எனக் கேட்டதும் கொலைவெறியோடு யுகேந்தர் அவனை முறைத்தான். 

“ஹாஹாஹாஹா  இந்திரண்ண..  நீ என்கூட எப்பவும் இருப்பியா? உன் பேச்சு எவ்ளோ டென்ஷனையும் கொறச்சிடும்.”

“கொஞ்ச நேரமுன்ன தான் பேயாட்டம் கத்தின அவங்கிட்ட, இப்ப இப்டி பேசற?” யுகேந்தர் கேட்டான். 

“ரெண்டும் சேர்ந்தது தானே அன்பு.” என மிருணா கேட்டதும் கயல் கீதனைப் பார்த்தாள். 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு அமைதியாக வேறுபக்கமாகத் திரும்பிக் கொண்டனர். 

“அண்ணி.. அவினாஷ் அண்ணே கார் வரமாறி தெரியுது.” என கயல் ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டுக் கூறினாள். 

“சுத்தம். இப்ப எப்புடி சமாளிக்கறது?”என மிருணா பதற்றமானாள். 

“எதுக்கு பதர்ற மிரு? ரிலாக்ஸ்.” என கீதன் அவளை ஆசுவாசப்படுத்தினான். 

“எங்கம்மா வந்தா தெரியும் உங்களுக்கு.  எவ்ளோ கேள்வி கேக்கும் தெரியுமா? எப்டி இப்டி காத்துல பறந்துட்டே சமாளிக்கறது?” எனப் புலம்பியபடி அங்கும் இங்குமாக அலைந்தாள். 

“இந்தா புள்ள ஒரு எடத்துல அமைதியா தான் நில்லு. பெரிய போர்வையாட்டம் ஒரு துணி இருந்தா எடுத்து போட்டுக்க. காலு தெரியாது.” என இந்திரன் கூறினான். 

“நல்ல ஐடியா. உங்க எல்லாருக்கும் என்ன பண்றது?” என அவர்களைக் கேட்டாள். 

“நாங்க வேஷ்டி தானே கட்டியிருக்கோம் அத கீழ இழுத்து விட்டுக்கறோம். அன்வரு கூடவே இருடா. கயலு அவங்க தங்க கீழ வலதுபக்கமிருக்க ரூம தொறந்து வை.” என இந்திரன் கூறக் கூற கயல் செய்தாள். 

“சரி நம்ம இப்ப வீட்டுக்கு போகணுமே எப்டி போறது?”, கீதன் கேட்டான். 

“அவங்க வந்ததும் நம்ம அன்வரோட கெளம்பிறலாம். இருட்டி தானே இருக்கு சமாளிக்கலாம். டே புது மாப்ள நீ என்ன பண்ற?”

“உங்ககூடதான்.. இப்டியே நான் வீட்டுக்கு போனா அவளோதான்.. எங்கம்மாகிட்ட இருந்து தப்பிக்க முடியாது. ராத்திரி  கால அமுத்தினா தான் நானும் தூங்குவேன். இப்ப காத்துல மெதக்குற என் கால பாத்தா எங்கம்மா பயந்து ஊர கூட்டிரும்.”

“நாலு கழுத வயசாவுது உனக்கு இன்னும் கால அமுத்தி விட்டா தான் தூக்கம் வருமோ? பாத்தியா கயலு.. கல்யாணமான அப்பறமும் இப்டியே நீ பழக்காத.” என இந்திரன் கயலிடம் முறையிட்டான். 

“ஏண்டா இப்ப நம்ம இருக்க நெலமைக்கு இந்த பேச்செல்லாம் அவசியந்தானா? நானே எங்க கல்யாணம் நடக்குமோ நடக்காதோன்னு பீதில இருக்கேன்.”

“சரி விடுங்க.. வாங்க கீழ போலாம். ஷோபா பின்னாடி நின்னு புடிச்சிக்கிட்டா மேல பறக்கர உசரம் கம்மியா தெரியும். அன்வர் அவனுங்க நடுவுல நீ நின்னுக்க. கயலு நீ மிருவ பிடிச்சி நின்னுக்க. ஒரு கால் மணிநேரம் சமாளிச்சி அவங்க உள்ள போற வரை சமாளிக்கணும்.” கீதன் முன்னேற்பாடாகக் கூறினான். 

“அதெல்லாம் சரி, அவங்க தூங்கிட்டா பிரச்சனை இல்ல. முழிச்சிருந்து மிருதங்கம் கூட பேச வந்துட்டா என்ன பண்றது? வெள்ளைச்சாமி தாத்தா இங்க வந்தப்பறம் எப்டி சமாளிக்கறது? பெருசு அதிர்ச்சில பொட்டுன்னு  போயிட்டா?” என இந்திரன் சந்தேகம் கேட்டான். 

“அதுக்குதான் அவங்க சாப்பிட நின்னப்ப டீ காப்பில தூக்க மாத்திரை கலந்து குடுக்க சொன்னேன். அவினாஷ கேட்டுட்டு அடுத்து யோசிக்கலாம்.” அவசரமாக கயலும் அன்வரும் முற்றம் ஓடி வந்து நிற்க மிச்சமுள்ள நால்வரும் காற்றில் சல்லென பறந்து வந்து நின்றனர். 

மிருணாவின் அன்னையும் தந்தையும் உள்ளே வந்து அவளைப் பார்த்துவிட்டு கயலிடம் பேசினர். 

“நீ மாலா பொண்ணு தானே? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? உங்கண்ணன் இதுல யாரு?” என ஜெயந்தி சோபாவின் பின்னால் நின்ற ஆடவர்களைப் பார்த்துக் கேட்டார். 

“நான் தான் அத்த.. கீதன்… போனமுறை கோவில்ல பாத்தீங்க மறந்துட்டீங்களா?” எனக் கீதன் சோபாவைப் பிடித்தபடியே அவரின் பக்கம் வந்தான். 

“சட்டுனு ஞாபகம் வரலப்பா.. நீங்க எல்லாம் பேசிட்டு இருந்தீங்களா? அப்பா எங்க ?”என கனகவேலு மகளைப் பார்த்தபடிக் கேட்டார்.   

“தாத்தாவும் அண்ணியும் எங்க வீட்ல தான் மதியம் இருந்து இருக்காங்க. நான் தான் அண்ணியோட புடவை குடுக்கலாம்ன்னு அண்ணனோட அவங்களையும் கூட்டி வந்தேன். இது இந்திரன் மாமா. இது அன்வர் அண்ணன். இங்க வர வழில புதுசா சூப்பர்மார்க்கெட் இன்னிக்கி தான் தொறந்தாங்க. நான் தான் கொஞ்சம் பொருள கொண்டு வரச்சொன்னேன்.. அப்டியே எல்லாரும் பேசிட்டு இருக்கோம்.” என கயல் சமாளித்தாள். 

“இது ராமசாமி மகன் தானே?”என கனகவேலு யுகேந்தரைப் பார்த்துவிட்டுக் கேட்டார். 

“ஆமா சித்தப்பா, நாங்க எல்லாம் ஃப்ரெண்ட்ஸ்.  நானும் கொஞ்ச நேரம் பேசலாம்னு வந்தேன்.” என அசடு வழிந்தபடிக் கூறினான். 

“உனக்கு பாத்திருக்க மாப்ள இவரு தானே?” ஜெயந்தி கயலிடம் கேட்டார். 

“ஆமாங்கத்த..” கயலும் அசடு வழிய கூறிவிட்டுத் தலையைக் குனிந்துக் கொண்டாள். 

“சரி. நேரமாச்சி நீங்க எல்லாம் கெளம்புங்க. கயலு இங்கயே இரு.” எனக் கீதன் சொல்லும்போது வெள்ளைச்சாமியும், விஸ்வநாதனும் அங்கே வந்து சேர்ந்தனர். 

“அச்சச்சோ.. இவங்களா? இவங்கள யாருடா இங்க இப்ப வரச்சொன்னது?”இந்திரன் முனகினான். 

“அவங்க வீடு அவங்க வராங்க மாப்ள.  நம்ம மெல்ல இருட்டுல மறைஞ்சி நடக்கலாம் வா.” என மெல்ல சகாக்களோடு கதவுப் பக்கமாகச் சென்றான். 

“என்னடா இருட்டுல நின்னுட்டு இருக்கீங்க?” எனக் கேட்டபடி வெள்ளைச்சாமி தாத்தா அங்கிருந்த விளக்கைப் போட்டார். 

மிருவும், கயலும் அதிர்ந்துப் பார்த்தனர்.கீதனும் அன்வரும் சட்டென வீட்டுக்குள் நுழைய யுகேந்தரும், இந்திரனும் முன்னால் தெரிந்தனர். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்