739 views

பிள்ளைகள் இருவரையும் வைத்து மனைவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்க்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள் கட்டியவள். அன்றைய நாளும் ஓடி இரவு வேலையும் வந்தது.

காலில் சிறு வலி என்பதால் கீழ்வீட்டில் இருந்தவள் இரவு உணவையும் அங்கேயே நிறைவு செய்தாள். பிள்ளைகளோடு அவனும் சாப்பிட்டு முடிக்க, மனைவியை தெரிந்தே இங்கு விட்டு தூங்கச் செல்ல மனம் வரவில்லை.

நேற்று நடந்த சம்பவத்தால் இன்று எதிர்பார்க்காமல் படுத்துக் கொண்டாள் அவளுக்கான அறையில். லேசாக திறந்திருக்கும் அறை கதவை எட்டிப் பார்த்தவன் நடை பழகிக் கொண்டிருந்தான் அந்த அறையை சுற்றி வந்து.

ஆகாஷ், சதீஷ் இருவரும் தங்கள் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று விட, நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் இவனை கவனித்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் மகிழ்வரனுக்கு வழக்கம் போல் தூக்கம் வந்துவிட, பாட்டிகள் வசமானவன் அவர்கள் மடியிலேயே உறங்கினான்.

மான்விழி பாட்டிகளோடு நேரத்தை கடத்த, மனைவியுடன் தனிமை வேண்டி தவித்துக் கொண்டிருந்தான். நெருங்காத வரை ஏதோ நினைப்பில் தன்னில் மருகிக் கொண்டிருந்தவள் நெருங்கிய கணவனின் வாசத்தை அனுபவிக்க ஏங்கிக் கொண்டிருந்தாள்.

இவள் அழைத்தால் அவன் வருவான். இவன் அழைத்தால் அவள் வருவாள். யார் அழைப்பது என்ற கேள்வி தான் இருவருக்குள்ளும். அந்தக் கேள்வி பெரியவர்களுக்கு புரிந்ததோ என்னவோ, “ரகு சின்னவன் தூங்கிட்டான் இதுக்கு மேல எழுப்ப முடியாது. பிள்ளைங்க ரெண்டு பேரும் இன்னைக்கு எங்க கூட படுத்துக்கட்டும்.” என்றார்கள்.

தினமும் தன்னிடம் தூங்கும் குழந்தைகளை அனுப்ப மனம் வராமல் அவன் மறுக்க, “இன்னைக்கு பாட்டி கூடவே படுத்துகிறேன் அப்பா.” என்றது மான்குட்டி.

தங்களுக்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து ரகுவரன் சங்கடத்தோடு நெளிய, அதிகம் அவனை அந்த நிலையில் வைத்திருக்க விரும்பாத பெரியவர்கள் அறையில் நுழைந்து கொண்டனர்.

குழந்தைகள் இருவரும் என்ன நினைப்பார்கள் என்ற யோசனையில் அரை மணி நேரம் அமர்ந்திருந்தவன் ஒரு வழியாக மனைவியின் அறையில் கால் வைத்தான். வாசல் பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தவள் அவன் வருகை அறிந்து விழி மூடிக்கொண்டாள்.

அருகில் அமர்ந்தவன் அவள் முகம் நோக்கினான். அருகில் வந்ததை அறிந்து முகம் படபடத்தது. இன்னும் நெருங்கி அமர்ந்தவன் முகத்தில் கை வைக்க, அடுத்த நொடி மூடி இருந்த  விழிகளில் இருந்து மழை சாரல் போல் கண்ணீர் வழிந்தது. பதறியவன் கண் துடைத்து, “சாரி பொண்டாட்டி.” என்றிட, கணவனின் கையை தட்டி விட்டவள் வேகமாக வெளியில் ஓடினாள்.

கால் வலியோடு ஓட்டம் பிடிக்கும் மனைவியை கண்டித்து கொண்டே பின்னால் ஓடியவன் வராண்டாவில் நிற்க, அழுது கொண்டிருந்தாள் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து. வந்தவன் அவள் அருகில் நெருங்க, முகத்தை மூடிக்கொண்டு வருத்தத்தை காட்டினாள் அழுகையாக.

“கோவத்துல ஏதோ பேசிட்டேன்டி… அன்னைக்கு பசங்க காருக்குள்ள மாட்டி இருக்கும்போது நீ எப்படி இருந்தியோ அதே மனநிலையில தான் அன்னைக்கு நான் இருந்தேன். அதுல தான் உன் மனசு நோகுற மாதிரி வார்த்தைய விட்டுட்டேன். எனக்கு என் பொண்ணு எவ்ளோ முக்கியமோ அதே அளவுக்கு நீயும் முக்கியம்.” எனும் போது அழுகை இன்னும் அதிகமானது அவளுக்குள்.

தயக்கத்தை விடுவித்து மனைவியோடு சேர்ந்து நின்றவன் முகத்தில் கை வைத்து நிமிர்த்த, இடம் கொடுக்காமல் இருந்தாள். வலுவான எதிர்ப்புகளோடு ஒரு வழியாக அவள் முகத்தை நிமிர்த்தியவன் நேசித்த மனதை காயப்படுத்திய வருத்தத்தோடு பார்க்க, மூடிய வழிகள் மூடியப்படியே கண்ணீரை மட்டும் சிந்தி கொண்டிருந்தது.

“பாருடி” என விழிகளில் முத்தம் வைக்க, கைகள் தடுத்தது அவனை. அதையும் மீறி நெருங்கி நின்றவன் நெற்றியில் இதழ் பதித்து,

“தங்கத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணல. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பொண்டாட்டி. எந்த நேரத்திலும் என்கிட்ட திமிர் காட்டுற அந்த குணம் என்னை ரொம்பவே கவர்ந்துச்சு. இப்படி ஒரு பொண்ணு என் கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணேன்.” என்றவன் பேச்சுகளுக்கு எதிராக அவள் உதடுகள் ஏதோ முணுமுணுத்தது.

சரியாக கேட்காததால், “என்னடி” என நெருங்க, தடுத்து விலகி நின்றாள். விடாமல் அவள் அருகே நின்றவன், “இதே மாதிரி உனக்கு ஏதாச்சும் ஆகி இருந்து அதுக்கு காரணம் தங்கமா இருந்தாலும் நான் இதே மாதிரி தான் கோபத்தை காட்டி இருப்பேன்.” என்னும்போது அவள் பேச வர,

“உங்க ரெண்டு பேர் மேல சத்தியமா நான் சொன்ன வார்த்தை உண்மை.” என்றவன் பேச்சில் பேச வந்த உதடுகள் மூடிக்கொண்டது.

“நீங்க ரெண்டு பேர் மட்டும் இல்ல மகிழும் எனக்கு முக்கியம் தான். உன்கிட்ட காட்டுற பாசத்தோட வழிகள் வேணா வேற வேறயா இருக்குமே தவிர நீங்க மூணு பேர்ல யார் என்னை விட்டு விலகி இருந்தாலும் நான் நிம்மதியா இருக்க மாட்டேன். முக்கியமா நீ என்னை விட்டு விலகி இருக்கிறதை ஏத்துக்க முடியலடி. கோபத்துல இத்தனை நாள் என்னை அறியாம இருந்துட்டேன். அப்படி இருந்தது தப்புதான் நியாயப்படுத்த விரும்பல. அதே நேரம் உன்னோட விலகள் நான் பேசுனதை விட அதிக தண்டனைய கொடுத்துடுச்சு. ப்ளீஸ் டி… என்னை பாரேன். உன் முகத்தையும் குரலையும் கேட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.”

“வேணாம் ரகு நான் பார்த்தா உனக்கு பிடிக்காது.” வெகு நாட்கள் கழித்து தமன்னிடம் பேசும் மனைவியின் வார்த்தையில் உள்ள மகிழ்ந்தவன் கட்டி அணைத்துக் கொண்டு, “மிஸ் யூ பொண்டாட்டி” என்றான்.

மகிழினி கட்டி அணைக்காமல் அப்படியே நிற்க, “பாரு பொண்டாட்டி ப்ளீஸ் உன் ரகுவரன் பாவம் இல்ல. அவனுக்கு நீ வேணுமாம். நீ இல்லாம என்னமோ மாதிரி இருக்கானாம்.” தவித்துக் கொண்டிருந்த மனதை அப்படியே அவளிடம் காட்டி விட, அழுகை அதிகமாகிக் கொண்டிருந்தது அவளிடம்.

தன்னருகில் இருந்தும் விலகி நிற்கும் மனைவியின் விலகளை தாங்கிக் கொள்ள முடியாதவன் இதழ் பதிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு முறையும் முத்தம் வைக்கும் பொழுது மன்னிப்பையும் கேட்டுக் கொண்டே இருக்க, அவளிடம் உணர்வுகள்.

துடிக்கும் உதடுகளை வைத்து அவள் மனதை படித்தவன், “விவாகரத்து பண்ண போறன்னு உன் தம்பி கிட்ட பேச்சுக்கு தான் சொன்னேன்.” வெகு நேரமாக அவள் மனதில் அழுந்துக் கொண்டிருந்த கேள்விக்கான பதிலை கொடுத்தான்.

கேட்டவள் பதிலுக்கு அவன் மார்பை அடிகளால் சூழ்ந்து கொள்ள, “உன்னால எப்படி அந்த வார்த்தைய நம்ப முடிஞ்சுது. உன்ன விட்டு போறவனா உன் ரகுவரன். அவன போக நீ விடுவியா. உன்ன விட்டு போனா செத்துடுவான் பொண்டாட்டி.”  கணவனின் வார்த்தைகள் வலியை கொடுக்க, அவள் கைகள் சிறை பிடித்துக் கொண்டது அவனின் சட்டையை.

அதற்கு மேலும் பேச்சு வார்த்தை நடத்த துணிவு இல்லாதவன் துடிக்கும் உதட்டை அடக்கினான் காதலோடு. இதழ் முத்தம் காயப்பட்ட மனதிற்கு தேவைப்பட்டதோ தெரியவில்லை கைகள் இன்னும் இறுக்கிப் பிடித்தது. இறுக்கம் அவனை துரிதப்படுத்த, முத்தம் நீண்டு கொண்டே சென்றது. மூச்சு காற்றுக்கு தவிக்கும் மனைவியை விட்டு விலக, இறுக்கமாக அணைத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் சத்தமாக அழுதாள்.

அழுகை சொல்லியது அவள் கொண்ட வலியை. முதுகை தடவி கொடுத்து சமாதானம் செய்து கொண்டிருந்தவன் முடியாமல் போக முத்தத்தை தொடர்ந்தான். இரண்டாம் முத்தம் சீக்கிரமாக முடிவுக்கு வந்து விட்டது அவள் தள்ளிவிட்டதில். புருவம் நெறித்து அவளை சிறை பிடித்தவன் பார்க்குமாறு உதட்டோரம் கிசுகிசுத்தான்.

‘முடியாது’ என்ற செய்கைக்கு முத்தத்தை பரிசாக கொடுத்தவன், “லவ் யூ பொண்டாட்டி.” என நெற்றியில் முத்தம் வைத்தான்.

அழுகையை நிறுத்தியவள் கண்மூடி அப்படியே இருக்க,
“என்னடி சொன்ன உன் அத்தை கிட்ட? என்னை சந்தோஷப்படுத்த விவாகரத்து கொடுப்பியா. கொடுத்துட்டு எங்க போவேன்னு சொன்ன…ஆஹான்! உன்ன போக விட்டுட்டு ரகுவரன் வேடிக்க பார்ப்பானா. சண்டை போட்டாலும் சரி கொஞ்சுனாலும் சரி நீ என்கூட தான் இருந்தாகணும் அது உன்னோட விதி.” என்றதும் முடி இருந்த வழிகள் திறந்து கொண்டது.

தன்னைப் பார்த்ததும் காதல் உணர்வுகள் வேகமாக அவனை மயக்க, அசுர வேகத்தில் இரு விழிகளுக்கும் முத்தத்தை கொடுத்தவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். கணவனின் நெருக்கம் அவள் வலியை எங்கோ துரத்தி அடித்திருக்க, உடலுக்குள் புதைந்தாள். கோபம், ஏக்கம், பிரிவு, காதல் என அனைத்தையும் மொத்தமாக காட்டினாள் அவனைப் போல் முத்தம் கொடுத்து.

குளிர் வெளியில் இருப்பதை நினைவூட்ட, “என்னை இவ்ளோ நாள் அழுக வச்சதுக்கு தண்டனையா ஒரு மாசத்துக்கு தனியா படு.” என்றாள்.

“எது!” என விழி பிதுங்கி நின்றவன் சுதாரிப்பதற்குள் அவள் அறைக்குள் நுழைந்து கொள்ள, “அடியே ராட்சசி!” என பின்னால் ஓடினான்.

கர்வத்தோடு படுத்திருந்தவள் அவன் கொடுக்கும் அத்தனைக்கும் நிராகரிப்பை பதிலாக கொடுக்க, துவண்டு போனான் சமாதானப்படுத்த முடியாமல். அவனின் சோர்ந்த முகம் சாதிக்கக்கூடாததை சாதித்தது போல் மகிழ்வை கொடுத்தது மகிழினிக்கு. இன்னும் தவிக்க வைக்க நினைத்தவள்,

“டேய் ரகுவரா கதவை சாத்திட்டு போடா எனக்கு தூங்க நேரமாச்சு.” என்றாள்.

அழுகும் குழந்தை போல் கெஞ்சினான். ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்து ரோஷத்தையும் பின் வாசல் வழியாக அனுப்பியவன் காலையும் தொட்டு வணங்க, “போடா டேய் போடா…” என திரும்பி படுத்து கொண்டாள்.

ஆண் மகனுக்கு இதற்கு மேல் வளைந்து போக ஒன்றும் இல்லாததால் தோல்வியோடு அவர்களின் வீட்டிற்கு வந்தான். மனைவி மீது இருக்கும் கோபத்தில் கையில் கிடைப்பதை தூக்கிப் போட்டவன் கடுப்போடு மெத்தையில் படுக்க, அவன் மீது மோதினாள் மகிழினி.

“ஓய் பொண்டாட்டி… சர்ப்ரைஸா” என்றதுதான் அவர்கள் அறைக்குள் கேட்ட கடைசி பேச்சு சத்தம்.

***

அன்று நடந்த சம்பவத்தில் இன்று முகம் சிவந்தது ரகுவரனுக்கு. கூடாத வெட்கம் அவனை கூடிக் கொள்ள, அதற்கு மேல் பேச முடியாமல் வாயை மூடிக் கொண்டான்.

“அட‌ ச்சைக்! இந்த சண்டையும் சமாதானம் ஆயிடுச்சே இன்னும் எத்தனை கதை தான் இருக்கு. பொண்டாட்டி கோவிச்சுட்டு வந்ததுக்கான கதைய சொல்லுப்பான்னு சொன்னா நீ என்னப்பா சீரியல் ஓட்டிட்டு இருக்க.” கடுகடுத்தார் அழகுசுந்தரம்.

“யோவ் பெருசு! இந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் அந்த சம்பவமே நடந்துச்சு. அதை சொல்ல வர்றதுக்குள்ள என்னை கடுப்பாக்கிட்ட. இனிமே என்னால கதை சொல்ல முடியாது.”

“இதுக்கு மேல கதை கேட்கிற பொறுமையும் எனக்கு இல்ல. ஒரே வார்த்தையில உங்களுக்குள்ள எதுனால இந்த சண்டைன்னு சொல்லிட்டு போப்பா.” எனும் பொழுது அவனுக்கு அழைப்பு வந்தது.

மனைவி சாப்பிட அழைக்க, உடனே அங்கு பறந்து விட்டான்‌. கதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தலையைப் பிடித்துக் கொண்டார்கள். காலை உணவை சாப்பிட்டு முடித்த ரகுவரன் குடும்பம் வெளியில் செல்ல கிளம்பி வர, காரணத்தைக் கேட்டு வழி மறைத்தார் அழகுசுந்தரம்.

“நானே இவ்ளோ நாள் கழிச்சு இன்னைக்கு தான் என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன். அதைக் கெடுக்க நந்தி மாதிரி நிக்கிறியே… தள்ளிப் போயா.” சிரிக்கும் மனைவியோடு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

மாலை வேலை போல் நால்வரும் வீட்டிற்கு வர, “இப்பவாது காரணத்தை சொல்லிட்டு போப்பா இங்க இருக்குறவங்க என்னை கொலவெறில தேடிட்டு இருக்காங்க.” பாவம் காரணத்தைக் கேட்டு அவன் பின்னால் அலைந்து கொண்டே இருந்தார்.

எதற்கும் செவி மடுக்காதவன் மாலை சிற்றுண்டை மூவருக்கும் செய்து கொடுத்து அவர்கள் சாப்பிடும் அழகை ரசித்தான். மான்விழி தாத்தாவிற்கு கொடுக்க சொல்ல, மகளுக்காக செய்ததை அழகுசுந்தரத்தின் கையில் திணித்தான்.

காலையிலிருந்து ரகுவரன் பின்னால் அலைந்து கொண்டிருந்தவர் வயிற்றின் மீது பாவம் கொண்டு கொடுத்ததை சாப்பிடும் நேரம் குழு உறுப்பினர்கள் விடாமல் அழைப்பு விடுத்தனர். சாப்பிட முடிவெடுத்த எண்ணம் தடைபட்டு போக, காரணத்தைக் கேட்டு மீண்டும் பின்னால் அலைந்தார்.

அவர் கெஞ்சி கொண்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில் மனைவியோடு சிறு காதல் முத்தத்தை நடத்தி வந்தவன் இரவு உணவையும் தயார் செய்து முடித்தான். வயதானவர் மயங்கும் நிலைக்கே சென்று விட, அப்போது கூட அவர் ஏற்படுத்திய சம்பவம் அவரை விட வில்லை. ஆளாளுக்கு சண்டை பிடிக்க ஆரம்பித்தார்கள் சேவை சரியில்லை என்று.

எதையும் கண்டு கொள்ளாமல், “பொண்டாட்டி சாப்பாடு ரெடி ஆயிடுச்சி சாப்பிட வாடி.” என குடும்பத்தை அழைத்தான்.

கோபம் கொண்ட அழகுசுந்தரத்தை இன்னும் கடுப்பேற்றுமாறு அழைப்பு ஒன்று வந்தது. ஊர் கதையைக் கேட்க பழகியவர்கள் பாதியில் நிறுத்தி விட்ட கடுப்பில் குரூப் காலில் அவரை அழைத்திருந்தனர்.

“அட! நீங்க வேற ஏம்மா சும்மா என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க. அந்த லூசு பையன் என்னென்னமோ சொல்றான் காரணத்தை மட்டும் சொல்ல மாட்டேங்குறான். இப்ப மட்டும் அவன் என்ன நடந்துச்சுன்னு சொல்லல… மண்டைய ஒடச்சி ரத்தம் பார்த்திடுவேன்.” என்றவர் வேகமாக அலறினார் தன் தலையில் ஏதோ ஒன்று பலமாக தாக்கியதில்.

கைபேசியை கீழே போட்டவர் யார் என்று திரும்பிப் பார்க்க, கையில் கிரிக்கெட் மட்டையோடு கோபமாக நின்றிருந்தான் ரகுவரன் பெற்ற சிங்கக்குட்டி மகிழ்வரன்.

“எதுக்குப்பா இப்படி போட்டு அடிச்ச?” என்றவரின் காலில் ஒரு அடியை போட்ட குட்டி ரகுவரன், “எங்க அப்பாவ திட்டுரியா… எங்க அப்பா குட் பாய். அவரை யார் திட்டினாலும் இந்த பேட் பாய் மகிழ் அடிப்பான்.” என்றவன் அடிக்க கை தூக்க, தப்பித்து மன்னிப்பு கேட்டார் அழகு.

“உங்க அப்பா உங்க அம்மாவ
சண்டை போட்டு இங்க அனுப்புனதுக்கான காரணத்தை கேட்டுட்டு இருக்கேன் சொல்லாம அலைய விடுறாரு. அதனாலதான் திட்டிட்டேன் மன்னிச்சிடு ராசா.”

உடனே அடங்காதவன் ரகுவரன் போல் வீம்பு பிடித்தே அடங்கினான். அப்பனை அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும் சிறியவனை ஒரு வழியாக சமாதானம் செய்தவர், “நீயாது தாத்தாக்காக உங்க அப்பா கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்டு சொல்றியா.” என்றார் சோர்ந்த முகத்தோடு.

“அதை எதுக்கு அப்பா கிட்ட கேக்குறீங்க எனக்கே அம்மா எதுக்கு இங்க வந்தாங்கன்னு தெரியுமே.” என்றிட, அதிர்ந்தார் அழகுசுந்தரம்.

பதட்டத்தில் உதடுகள் வேகமாக கேட்டது, “எதுக்குப்பா இங்க வந்தாங்க?” என்று.

அவரின் பதட்டம் சிறு துளி கூட இல்லாமல் மிகவும் சாதாரணமாக மகிழ்வரன் பதிலளிக்க, அழகுசுந்தரம் மட்டுமின்றி கைபேசி வழியாக கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் அதிர்ந்தார்கள்.

***

அந்த அடுக்குமாடி கட்டிடமே தேடிக் கொண்டிருக்கிறது ரகுவரனை. கண்ணில் தான் சிக்கவில்லை அவன். மற்றவர்களை விட அழகுசுந்தரம் வெறியோடு தேடிக் கொண்டிருந்தார். மான்குட்டி மட்டும் வீட்டில் இருக்க,

“அப்பா எங்கடா குட்டி” என விசாரித்தார்.

அவள் பதில் சொல்வதற்கு முன்னர், “சொல்ல மாட்டோம்” குரல் கொடுத்தான் மகிழ்வரன்.

“உங்க அப்பா கிட்ட நான் ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும். எங்க இருக்காருன்னு சொல்லுங்க.”

“நீங்க கேட்க வேணாம் போங்க” என்ற தம்பியை அதட்டினாள், “தம்பி பாப்பா அப்படி தாத்தாவ பேசக்கூடாது.” என்று.

மான்விழியைக் கண்டு புன்னகைத்தவர், “உங்க அப்பா சொன்னதை விட நீ ரொம்ப நல்ல பொண்ணா இருக்கமா.” என்றார். பின், “உன் தம்பி உங்க அப்பா சொன்னதை விட ரொம்ப மோசமானவனா இருக்கான்.” பகைத்துக் கொண்டார் சிறியவனை.

மிதமாக புன்னகைத்தவள், “அப்படி இல்ல தாத்தா என் தம்பி பாப்பா ரொம்ப நல்ல பையன். நீங்க அப்பாவ பத்தி ஏதோ தப்பா சொல்லி இருக்கீங்க. அதனால தான் தம்பி பாப்பா இப்படி பேசுறேன்.” என அழகாக தம்பியின் குணத்தை கூறினாள்.

“அக்கா நம்ம அப்பாவ லூசுன்னு சொன்னாரு. அது மட்டும் இல்ல மண்டைய உடைக்க போறன்னு வேற சொன்னாரு.”

மான்குட்டி புன்னகையை நிறுத்திவிட்டு வயதானவரை முறைக்க, “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உங்க அப்பா மண்டைய யாராச்சும் உடைக்க முடியுமா. உடைக்கத்தான் நீங்க ரெண்டு பேரும் விட்டுடுவீங்களா. அப்பனுக்கு ஏத்த பிள்ளைங்கடா நீங்க ரெண்டு பேரும்.” என்று சரணடைந்தார்.

பேச்சுக்களுக்கு இடையே ரேகா வீட்டிற்கு வர, பிள்ளைகள் சிரித்த முகமாக கட்டிக்கொண்டது. அடிக்கடி போனில் பேசும் ரேகாவை இருவருக்கும் நன்கு தெரியும். தன் வீட்டில் இருக்கும் அழகுசுந்தரத்தை பார்த்தவர் சம்பிரதாயத்திற்கு சிரிக்க,

“என்ன சார் இங்க இருக்கீங்க? கதை சொல்ல போகல.” விசாரித்தார்.

“எங்க மேடம்… அதுக்கு தான் இவங்க அப்பா ஒத்து வர மாட்டேங்குறாரே.”

“ஹா..ஹா… இனி அவர பிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் சார். காதல் பறவைங்க ஒன்னு கூடிடுச்சு இனிமே நம்ம யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டோம்.”

“என்னது…! ஒன்னு சேர்ந்துட்டாங்களா, இது எப்போ?”

“யாருக்கு சார் தெரியும்”

“மேடம் நீங்களாவது முழுசா என்னன்னு சொல்லுங்க, ப்ளீஸ்!”

“சத்தியமா தெரியாது சார். அவங்களுக்குள்ள என்ன சண்டைன்னு இதுவரைக்கும் மகிழினி சொன்னதில்ல. இப்போ சமாதானமானதையும் சொல்லல. நானே அவங்க ரெண்டு பேர் நடவடிக்கைய வைச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.”

“அவங்களுக்குள்ள என்ன சண்டைன்னு எனக்கு தெரியும் மேடம்.” என்று ரேகாவின் முகத்தை அவர் ஆர்வமாக பார்க்க, சாதாரணமாக புன்னகைத்தார்.

“என்ன சண்டைன்னு கேட்காம சிரிக்கிறீங்க.”

“நான் பார்த்த வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுற மாதிரி தான் இருக்கும். ஆனா, அவங்களுக்கு நடுவுல யாரையும் உள்ள விட மாட்டாங்க குழந்தைங்க உட்பட. அப்படி இருக்க கேட்கிறதை வச்சு நம்ம முடிவுக்கு வர முடியாது சார். சண்டை போடும்போது வேடிக்கை பார்ப்போம் சமாதானம் ஆனதும் வேலைய பார்ப்போம்.”

“ஏதோ அவதார் குடும்பத்தை பார்த்த மாதிரியே இருக்கு மேடம் எனக்கு.” என்றவரை இந்த முறையும் தாக்கினான் மகிழ்.

“எங்க அப்பாக்கு காது அப்படியா இருக்கு..” அவதார் படத்தில் வருவது போல் காதை வைத்து முறைத்தான்.

தம்பியை அக்கா அடக்கிவிட்டு தாத்தாவிடம் மன்னிப்பு வேண்ட, “எனக்கு ஒரு உண்மைய சொல்றியா குட்டி” பாவமாக கேட்டார்.

மான்குட்டி உத்தரவு கொடுத்ததும், “உங்க அப்பாவுக்கும் தம்பிக்கும் வாய்க்கா வரப்பு சண்டைன்னு கேள்விப்பட்டேனே அதாவது உண்மையா இல்ல….” முழுதாக கேட்காமல் முறைக்கும் இளையவனை பார்த்தார்.

வாயில் கை வைத்து கமுக்கமாக சிரித்தவள், “தம்பியும் அப்பாவும் சும்மா சண்டை போடுவாங்க. என்னை விட தம்பிக்கு தான் அப்பா மேல அதிக பாசம்.” என்றாள்.

“உங்க வீட்ல யாரும் சாதாரண மனுஷங்க மாதிரி நடந்துக்க மாட்டீங்களா. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமா இருந்தா சுத்தி இருக்க நாங்கெல்லாம் என்னன்னு முடிவு பண்ணிக்கிறது.”

“நீங்க என்ன வேணா முடிவு பண்ணிக்கோங்க எங்களுக்கு என்ன வந்துச்சு” என்றவாறு ரகுவரன் அங்கு வந்தான் மனைவியோடு.

வந்தவனைக் கண்டு கடுமையாக முறைத்தார் அழகுசுந்தரம். அதைக் கண்டு கொள்ளாமல் ரேகாவிடம் பேசியவன், “தங்கம் இன்னைக்கு ராத்திரி நம்ம மாடில படுத்துக்கலாம். அப்பா உங்களுக்காக டென்ட் ரெடி பண்ணி இருக்கேன். சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புவோம்.” என்றிட, அக்கா, தம்பி இருவரும் துள்ளி குதித்தார்கள்.

“ஒரு நிமிஷம்” கடந்து சென்றவனை பாட்ஷா பட ஸ்டைலில் வழி மறைத்தார் முதியவர்.

அலட்சிய பார்வையோடு அவன் புருவம் உயர்த்தினான். “உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? இந்த காரணத்துக்காகவா உன் பொண்டாட்டியோட சண்டை போட்ட.”

“எந்த காரணம்?”

“அதான் அந்த காரணம்”

அழகுசுந்தரம் கொடுக்கும் சைகையில் கணவனை முறைத்தவள், “இதையெல்லாமா இவர் கிட்ட சொல்லிட்டு இருப்ப.” என சண்டை பிடித்தாள்.

“நான் என்ன இவர் மாதிரி லூசாடி இதையெல்லாம் சொல்லிட்டு இருக்க. அந்த ஆள் எதையோ பேசுறான்.”

“ஆமாண்டா நான் லூசு தான். உன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சி என் வீட்ல இடம் கொடுத்து உன் சொந்த கதைய கேட்க மூணு வேலையும் சோறு போட்டேன் பாரு நான் லூசு தான்.”

“யோவ்! யார ‘டா’ போடுற?.”

“உனக்கெல்லாம் என்னடா மரியாதை. உன்ன மாதிரி உலகத்துல எவனும் சண்டை போட்டு இருக்க மாட்டான்டா. இதெல்லாம் ஒரு சண்டைன்னு உன் பொண்டாட்டி வேற மூஞ்ச திருப்பிக்கிட்டு போனா பாரு.” என அவர் தலையில் அடித்துக் கொள்ள,

“உன்னால தான் ரகு எனக்கு இந்த மாதிரி பேச்சு எல்லாம் வருது. மனசு மாறி உன்ன மன்னிச்சது தப்பா போய்டுச்சு. ஒழுங்கா உன் பிள்ளைங்களை கூட்டிட்டு ஊர் போய் சேரு.” கோபித்துக் கொண்டு சென்று விட்டாள் அவனது மனைவி.

மனைவியின் கோபத்தில் வெகுண்டு எழுந்தவன் அழகுசுந்தரத்தின் சட்டையை பிடிக்க, “நியாயமா நான் தான் உன் சட்டைய பிடிக்கணும், கைய எடு.” என்று முறைத்தார்.

“எது கைய எடுக்கணுமா? உன் கைய, வாய உடைக்காம இங்கிருந்து நான் போக மாட்டேன். எவ்ளோ கஷ்டப்பட்டு என் பொண்டாட்டிய சமாதானப்படுத்தி நாளைக்கு ஊருக்கு போகலாம்னு பிளான் போட்டு வச்சேன். அது எல்லாத்தையும் ஒரு சைகைல கெடுத்துட்டு பேச்சு வேறயா பேசுற நீ. இன்னையோட கதை சொல்ல வாய் இருக்காது.” என்றவன் கொட்டுவதற்காக கையை உயர்த்த, என்றும் அவனுக்கு பயந்து நடுங்குபவர் இன்று வெறிக்கொண்டு தாக்கினார்.

அழகுசுந்தரத்தின் தாக்குதலில் அதிர்ந்தான் ரகுவரன். எந்த அளவிற்கு அவர் உள்ளம் காயப்பட்டு இருந்தால் ரகுவரனை அடிக்கும் அளவிற்கு வந்திருப்பார் பாவம்!

வயதிற்கு மரியாதை கொடுத்து அவன் அமைதி காக்க, கிரிக்கெட் மட்டை அழகுசுந்தரத்தின் பின்பகுதியை பதம் பார்த்தது. அழகு கண்மூடி வலியை பொறுக்க, யார் என்று திரும்பிப் பார்த்தான் பெற்றவன்.

“எங்க அப்பாவ அடிச்சா நான் அடிப்பேன்.” முறைக்கும்பொழுது அப்படியே அவனை பார்ப்பது போல் உணர்ந்தான்.

மகனின் செய்கையில் அழகுசுந்தரத்தை நக்கல் செய்தவன், “இப்போ என்ன வேணும் உங்களுக்கு? எதனால எங்களுக்குள்ள சண்டைன்னு தெரியணும் அவ்ளோ தான.” கேட்டான்.

“எதனால சண்டைன்னு தெரிஞ்சிருச்சு. அது உண்மையா பொய்யான்னு மட்டும் தான் இப்ப எனக்கு தெரியணும்” முடிவாக பேச்சை முடித்துக் கொண்டார்.

“உங்களுக்கு இதை யார் சொன்னது?”

“உண்மையா பொய்யான்னு சொல்லிட்டு அப்புறம் நீ என்ன வேணா கேளு நான் பதில் சொல்றேன்.”

“நீங்க சொல்லவே வேணாம் இந்த விஷயத்தை நான் பெத்த பிசாசு தான் சொல்லி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.” என்றவன் மகன் பிடித்திருந்த கிரிக்கெட் மட்டையை பிடுங்கி,

“ஏண்டா குரங்கு பயலே உனக்கு எதுக்குடா இந்த வேலை. குழந்தை மாதிரி நடந்துக்க மாட்டியா. உன்னை எல்லாம் வச்சுட்டு பேசினேன் பாரு என்ன சொல்லணும்.” வலிக்காதவாறு அடித்தான்.

இதுவரை தந்தைக்காக துணை நின்றவன் தன்னை தாக்கிய தந்தையை முறைத்துக் கொண்டு, “தாத்தா இவர அடிங்க.” என்று கட்சி தாவினான்.

“அப்பா தம்பி பாப்பா பாவம் பா அடிக்காதீங்க.” வழக்கம் போல் அக்கா தம்பிக்கு துணை நிற்க, “உன்னால தான்ய்யா என் புள்ள அடி வாங்குனா.” சண்டைக்கு பாய்ந்தான் சும்மா இருந்தவரிடம்.

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர் பேசும் சக்தியை இழந்து விட, “நான் கோவிச்சிட்டு உள்ள வந்து ரொம்ப நேரம் ஆகுது ரகு.” உள்ளிருந்து தன் பங்கிற்கு அவரை நோகடித்தாள் மகிழினி.

உடனே பறந்தவனின் இறக்கைகளை முறித்து பிடித்தவர் காரணத்தைச் சொன்னால் தான் அனுப்புவேன் என்று அடம் பிடிக்க, “இன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு மாடிக்கு வாங்க. என் பிள்ளைங்க ரெண்டு பேரும் தூங்குனதுக்கப்புறம் நாங்க இதை பத்தி தான் பேசி முடிவெடுக்க போறோம். நீங்க கேட்டது உண்மையா பொய்யான்னு அங்க வந்து தெரிஞ்சுக்கோங்க.” என்றான்.

அப்போதும் அவனை நம்பாதவர் விடாப்படியாக நிற்க, “சத்தியமா இன்னைக்கு ராத்திரி உங்க கேள்விக்கான பதில் கிடைக்கும். மிஸ் பண்ணாம கரெக்டான டைமுக்கு ஆஜர் ஆகிடுங்க. அப்புறம் போச்சின்னு என்னை வந்து இம்சை பண்ண கூடாது.” ஏதோ பரீட்சைக்கு தயார்ப்படுத்துவது போல் அவரை தயார்ப்படுத்தினான்.

செல்லும் ரகுவரனின் சட்டையை பிடித்தவர், “எல்லாத்தையும் கூட நான் மன்னிச்சிடுவேன் டா. ஆனா என்னமோ உருகி உருகி காதலிச்ச பொண்டாட்டி ஏமாத்திட்டு போன மாதிரி கையில டீ டம்ளர் வச்சிட்டு பாடுன பாரு ஒரு பாட்டு அதை தாண்டா என்னால மன்னிக்க முடியல.” என வெறிக்கொண்டு முறைத்தார்.

வெட்கத்தோடு தலை குனிந்தவன் திடுக்கிட்டு, “ஆமா அந்த சமயத்துல உங்க என்ட்ரி வரலையே உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.” அர்த்தமில்லாத சந்தேகத்தை கேட்டான்.

“நான் இல்லன்னா என்னடா உன்னை ஒரு ஆளா மதிச்சு படிச்சிட்டு இருந்த அத்தனை பேர் மனசுலையும் இந்த ஆதங்கம் தாண்டா ஓடிட்டு இருக்கும்.”

“ச்சீ போங்க! வெக்கம் வர மாதிரி பேசிட்டு.” அடுத்த நொடி அங்கு இல்லை ரகுவரன்.

கடைசி சந்தர்ப்பமாக எண்ணியவர் உடனே குழுவில் செய்தியை பகிர்ந்தார். அனைவரும் பெரும் எதிர்பார்ப்போடு அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்க, சாவகாசமாக மனைவியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

அவனைக் கண்டதும் குழுவில் செய்தியை பரிமாறியவர் மாடிக்கு செல்லும் நொடிக்காக காத்துக் கொண்டிருக்க, இரக்கம் சிறிதும் இல்லாதவன் வெகு நேரமாக கும்மி அடித்தான் சாப்பிடும் சாக்கை வைத்து. வயதானவர் அந்த உணவையே பாவமாக பார்த்துக் கொண்டிருக்க,

‘மகனே என்னை வச்சி காமெடியா பண்ற… இன்னையோட உன் சாம்ராஜ்யம் சரிஞ்சிடும்.’ உள்ளுக்குள் இன்னும் சிறிது நேரத்தில் நடக்க போகும் சம்பவத்தை நினைத்து உற்சாகம் கொண்டான்.

நடக்கப் போவதை அறியாதவர் எலும்பு தூண்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் நான்கு கால் ஜீவனை போல் காத்துக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்த நேரமும் வந்தது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வெளியில் வந்த ரகுவரனால். லிஃப்ட்டில் நால்வரும் ஏறிக்கொள்ள, ஐந்தாவது நபராக அழகு நுழைந்தார்.

“நீங்க எங்க இதுல வரீங்க? குடும்பமா நாங்க இருக்கும்போது தொந்தரவா இருக்காதீங்க.” என்றவன் பறந்து விட்டான் மின்தூக்கியில்.

“அழகு சார் இதுக்கெல்லாம் சோர்ந்து போகாம மாடிப்படி ஏறுங்க.”

“கமான் உங்களால முடியும்.”

ரகுவரன் சொல்லப் போகும் பதிலுக்காக அனைவரும் லைவ் காலில் சேர்ந்திருக்க, பாவம் இவரைத்தான் வாட்டி வதைத்தார்கள். தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு படியாக ஏறினார்.

மூச்சு வாங்க மொட்டை மாடி படிக்கட்டையும் ஏறி முடித்தவர் திடுக்கிட்டார் இரும்பு கதவை அடைத்து பூட்டு போட்டு இருக்கும் அவன் செயலில். கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செய்தவரை கண்டுகொள்ளாமல் டென்டில் குடும்பத்தோடு படுத்திருந்தான்.

இதையெல்லாம் கேட்ட குழு உறுப்பினர்கள் இன்றே கதை தெரிந்தாக வேண்டும் என்று அவரை சித்திரவதை செய்ய, “டேய் இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா.” என குரல் உயர்த்தினார்.

“சிங்கக்குட்டி அவர  என்னன்னு கேட்டுட்டு வா.” தன் ரத்தத்தை அவன் போருக்கு அனுப்ப, கம்பிகளுக்கு நடுவில் கையை விட்ட மகிழ்வரன் கிள்ளி விட்டு ஓடிவிட்டான் தந்தையிடம்.

அவன் செய்கையில் மற்ற மூவரும் சத்தமிட்டு சிரிக்க, அந்தக் குடும்பத்தை இன்று பழி தீர்க்க எண்ணியவர் மூச்சு வாங்குவதை மறந்து புயலென புறப்பட்டார். அழகுசுந்தரத்தின் வேகத்தை ஓசையாக கேட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருக்கும் பூங்காவில் கூடி விட்டனர்.

அவரோ யாரையும் கண்டு கொள்ளாமல் கயிறு கட்டி மேலே ஏற முயன்று கொண்டிருந்தார். மனம் இல்லாத கதை கேட்கும் பிரியர்கள்  அவருக்கு உதவி செய்து கொண்டே, “சார் நாங்க கால்ல தான் இருக்கோம் கட் பண்ணாம அப்படியே வைங்க.” என அவரை இன்னும் உசுப்பி விட, வேகவேகமாக மலையேறினார்.

ஒரு வழியாக மாடி பக்கம் வந்தவர் அந்த குடும்பத்தை பார்க்க, பிள்ளைகள் இரண்டும் தூங்கிவிட்டது போல இருவரின் குரல் மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

அழகுசுந்தரத்தோடு குழு உறுப்பினர்கள் அனைவரும் அந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்க, “முடிவா கேட்கிறேன் டி ஓகே சொல்லுவியா மாட்டியா.” என்ற ரகுவரின் குரலில் இதயத்தில் திக் திக் ஓசை கேட்டது.

“முடியவே முடியாது ரகு.” என்றதோடு நிறுத்தாமல் மகன் சொல்லியதை சொல்லி கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

பிள்ளை ஏதோ விளையாட்டுக்கு கூட சொல்லி இருக்கலாம் என்ற கற்பனை காணாமல் போனது அவளின் பேச்சால். மனம் நொந்தவர் செய்வதறியாது மனவிரக்தியில் அப்படியே கீழே குதிக்க, கதை பிரியர்கள் அவருக்கு மெத்தை ஆகினார்கள்.

ஒன்றாக இணைந்து வாழ்ந்ததற்கு பிறகு வந்த முதல் பெரிய சண்டை மான்விழி கடத்தல் சண்டை தான். வந்த சண்டை இரண்டு வார காலம் எப்படியோ தாக்குப் பிடித்து விட்டது. மூன்றாம் வாரம் நடுவில் பொறுக்க முடியாமல் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி சுமுக உறவை மீட்டுக் கொண்டனர்.

அன்றிலிருந்து அந்த வீடு பழைய நிலைமைக்கு திரும்பியது. பேசாமல் இருந்ததற்கான தண்டனையும் கொடுத்துக் கொண்டார்கள் சமயம் கிடைக்கும் பொழுது. பிள்ளைகள் இருவரும் இடைப்பட்ட நாட்களில் ஏக்கம் கொண்டிருக்க, அவர்களோடு அதிக நேரத்தை செலவழித்தார்கள்.

கூடவே உப்பு சப்பு இல்லாத காரணத்திற்காக சண்டை போட்டுக் கொண்டதாக மாய பிம்பத்தையும் உருவாக்கியவர்கள் அதையே சிறு சிறு செய்கைகளில் நம்ப வைத்தார்கள். விபரம் தெரிந்த மான்குட்டி நாசுக்காக இருந்து கொள்ள, மகிழ்குட்டி ஒன்றும் புரியாமல் அவர்களோடு சுற்றித்திரிந்தது.

வழக்கம்போல் சனிக்கிழமை இரவு ஆனந்தம் அவர்களை வரவேற்றது. மகிழ்வரன் தன் நண்பன் ஆதவோடு விளையாடிக் கொண்டிருக்க, மான்குட்டி மணாலியை தூக்கி வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.

பெரியவர்கள் அனைவரும் ரகுவரனின் குடும்பத்தை முடிந்தவரை கேவலமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் அறியாதவன் அப்பொழுதுதான் வேலை முடித்து வீட்டிற்கு வந்தான். வந்தவனைப் பார்த்து குடும்பமே சத்தமிட்டு சிரிக்க,

“சிரிங்க… சிரிங்க அடுத்த சண்டை வரும்போது இதைவிட அதிகமா உங்களை நோகடிக்கிறேன். அப்போ தெரியும் இந்த ரகுவரன் யாருன்னு.” என்ற சபதத்தோடு மனைவியைத் தேடி மேலே சென்றான்.

வீட்டிற்குள் கால் வைத்ததும் ஏதோ சத்தம் கேட்டது. உள்ளே வந்தவன் குழப்பத்தோடு, “பொண்டாட்டி எதுக்கு இப்போ கட்ல கழட்டிட்டு இருக்க.” என்று விசாரிக்க,

“இந்த ரூம் நமக்குள்ள பெரிய இடைவெளிய ஏற்படுத்திருச்சு ரகு. நமக்கு அந்த ஒரு ரூம் மட்டும் போதும். சண்டையோ, சமாதானமோ அங்கயே முடிச்சுக்கலாம்.” என வேலைகளை கவனித்தாள்.

இரு உதடுகளையும் மடக்கி சொன்னதற்கான அர்த்தத்தை உணர்ந்து சிரித்தவன் மெதுவாக நகர்ந்து கதவை தாழிட்டான். சட்டை பட்டன் ஒவ்வொன்றையும் கழட்டி விட்டுக்கொண்டு மணியை பார்த்தவன் பிள்ளைகளை சமாளிப்பதற்காக டிவியை ஆன் செய்தான்.

“ரகு இதை கொஞ்சம் புடி”

….

“டேய்! இதைப் பிடிக்க சொன்னேன் டா.” சிறைப்படுத்தி இருக்கும் கணவனின் கைகளை விலக்கியவாறு பேசினாள்.

“அதை எதுக்கு டி பொண்டாட்டி வீணா பிடிச்சுக்கிட்டு. மாமா தேவையானதை தான் பிடிச்சிட்டு இருக்கேன்.” இடுப்பில் அழுத்தம் கொடுத்தான்.

வேலையில் இருந்தவள் உணர்ந்து முகம் நோக்க, “சாரிடி” என்றான் காதலோடு.

பதில் சொல்லாதவள் திரும்ப நின்று கழுத்தை கட்டிக் கொள்ள, “உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனி ஒரு தடவை இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்.” என நெற்றியில் இதழ் பதித்தான்.

“இல்ல ரகு, நானும் கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன். என்னையும் கொஞ்சம் மாத்திக்க வேண்டியது இருக்கு.”

“நீ சரியா தாண்டி இருக்க நான்தான் தப்பு”

“அப்படி எல்லாம் இல்ல ரகு நீ எங்களுக்காக தான யோசிச்ச.”

கவலையில் சோர்ந்தவன் மனைவியின் தோள்பட்டையில் முகம் புதைக்க, முகத்தை உயர்த்தி நெற்றியில் முத்தமிட்டு தேற்றினாள். அதன்பின் சில முத்தங்கள் பரிமாறப்பட, “இந்த ரூமை என்ன பண்ண போற?” கேட்டான்.

“சாமி அறையா மாத்த போறேன்.” என்றதும் சிரித்து விட்டான்.

“சிரிக்காதடா பொறுக்கி. வேற என்னவா வச்சிருந்தாலும் வீம்புக்குன்னு யாராவது ஒருத்தர் இந்த ரூமை யூஸ் பண்ணுவோம். சாமி இங்க வந்தா தான் நமக்கு வேலை இல்லாம போகும்.”

“சாமிக்கு வாடகைக்கு விடுறதுக்கு முன்னாடி நம்ம கடைசியா ஒரு தடவை இந்த ரூமை யூஸ் பண்ணிக்கலாம் பொண்டாட்டி.” என்றவன் அந்த செயலில் இறங்க, ஒப்புக்காக தடுத்தவள் சிக்னல் கொடுத்தாள்.

கொஞ்சிக் கொண்டு ஒவ்வொரு இடமாக இதழ் பதிக்க, உதடுகள் அவசரமாக உணர்வுகளை குவித்து ஒட்டிக்கொண்டது. கண்மூடிக் கொண்டு மனைவியின் முத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்திறந்தான்.

செவியில் என்னவோ ஒரு செய்தி கேட்க, வேகமாக விலகியவன் டிவியை பார்த்தான். அதில்,

“வாடகை தாய் விஷயத்தில் திடுக்கிடும் திருப்பம் நடந்துள்ளது. பதினோரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட ஏஜென்ட் நவநீதன் ஜாமினில் வெளி வந்து அதே வேலையை செய்து கொண்டிருக்கும் ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

வழக்கறிஞர் மகிழினி ரகுவரன் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். நவநீதனுக்கு துணை போன காவல் அதிகாரிகளும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சிபிசிஐடிகள் மெத்தன போக்கை கண்டித்து அரசியல்வாதிகள் குரல் கொடுத்துள்ளனர்.

தப்பி ஓடிய நவநீதனை தேடி வருகிறார்கள் காவல்துறையினர்.” பரபரப்பான பின்னணி இசையில் செய்திகள் வந்து கொண்டிருந்தது.

கேட்டவன் கோபத்தோடு திரும்பி மனைவியை முறைக்க, கண்டுகொள்ளாமல் விட்ட வேலைகளை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி இதெல்லாம்?”

“எதெல்லாம்?”

“என்னடி நக்கலா! யாரைக் கேட்டு இந்த வேலைய பண்ண. இப்ப தான ஒரு பிரச்சனை முடிஞ்சு வீடு பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கு. உன்னால கையும், காலையும் வச்சிட்டு சும்மா இருக்க முடியாதா. ஏதாவது ஒரு பிரச்சனைய தலையில போடுறதே உனக்கு வேலையா.”

“இது பிரச்சனை இல்ல ரகு சமூகத்தோட அநீதி. எல்லாம் தெரிஞ்ச நானே அமைதியா இருந்தா அந்தப் பாவம் என் பிள்ளைகளையும் புருஷன் உன்னையும் சும்மா விடாது.”

“ஏய் பைத்தியக்காரி! பாவம் சும்மா விடுதோ இல்லையோ இது சம்பந்தமான ஆளுங்க நம்மளை சும்மா விட மாட்டாங்க.”

“அதை பார்த்துக்கலாம் ரகு விடு…என் புருஷன் பெரிய ரவுடிதான்.”

மனைவியின் வார்த்தையில் கடுப்பானவன் அவளோடு வாக்குவாதங்களில் ஈடுபட, “சும்மா கத்திட்டு இருக்காதடா. அதான் உனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சுல. கண்ணுல விளக்கெண்ணெய ஊத்திக்கிட்டு என்னையும் என் பசங்களையும் பாதுகாத்துட்டு இரு. சும்மா வாயாலயே அது பண்ணிடுவேன் இது பண்ணிடுவேன்னு மட்டும் தான் சொல்ற… நேர்ல என் பொண்ண கடத்திட்டு போறாங்க பேக்கு மாதிரி நிக்கிற.” என்று அவன் மூக்கை உடைத்தாள்.

“எது பேக்கா?”

“ஆமா பேக்கு மாதிரி தான் நின்ன. ஓடிப்போய் பாஞ்சி அந்த கார பிடிக்கிறதை விட்டுட்டு போஸ் கொடுக்குற. அது கூட பரவால்ல என்னமோ மானு இருக்கிற இடத்தை நீயே கண்டுபிடிச்ச மாதிரி இன்னைக்கு வரைக்கும் பில்டப் கொடுத்துட்டு இருக்க. எவனோ ஒருத்தன் எங்கிட்ட பேசினதால தான உனக்கு தெரிஞ்சது.”

“அடியே!”

“ப்ச்! என்னால இந்த கேஸ்ல இருந்து பின்வாங்க முடியாது ரகு. உன் பிள்ளைங்க உன் பொறுப்பு அவங்களை இனிமேல நீயே பத்திரமா பார்த்துக்க.” என திட்டவட்டமாக பேச்சை முடித்து விட்டாள்.

கடுப்போடு வேறு சேனலை மாற்றிவிட்டு அவன் அமர்ந்திருக்க, “அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ரகு. அந்த நவநீதன் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கான். அதுவும் சித்தம் கலங்கி பைத்தியக்காரனா இருக்கான். அது தெரியாத போலீஸ்காரங்க அவனை தேடிட்டு இருக்காங்க. அவங்களா கண்டுபிடிக்கிற மாதிரி செட் பண்ணி வச்சிருக்கேன். அவன கண்டுபிடிச்சு சுத்தி இருக்க ஆளுங்க கிட்ட விசாரிச்சா நீ தான் அடிச்சன்ற உண்மை தெரியவரும். எந்நேரமும் போலீஸ்காரங்க உன்னை அரெஸ்ட் பண்ணலாம் ரெடியா இரு.” என்றாள்.

“என்னை அரஸ்ட் பண்ண எந்த கொம்பாதி கொம்பனாலும் முடியாதுடி. நீ மட்டும் இல்ல எவன் விசாரிச்சாலும் இதுல நானோ இல்ல என் பொண்ணோ இருந்ததுக்கான ஒரு சின்ன துருப்புச் சீட்டு கூட கிடைக்காது.”

கணவனின் பேச்சில் புருவம் உயர்த்தியவள் “ஏன்” என்று கேட்க, “ரகுவரன் பொண்டாட்டிய மட்டும் தான் அடக்கத் தெரியாதவன். மத்தபடி எவன் வந்தாலும் அடக்கி ஆளுவான்டி.” என்றான் எழுந்து நின்று ராஜா தோரணையாக.

அவள் கடுமையாக முறைக்க, அருகில் சென்றவன் முறைத்து சிவந்திருக்கும் மூக்கை சுண்டி விட்டு, “இந்த மாதிரி என்னைக்காவது ஒரு நாள் நீ கிறுக்குத்தனம் பண்ணுவன்னு தெரியும். புருஷன்னு கூட பார்க்காம உள்ள தூக்கிப்போட்டு பழி வாங்குவன்னும் தெரியும். அதனாலதான் முன்னேற்படா எல்லாத்தையும் செஞ்சு வச்சிருக்கேன். உன்னால முடிஞ்சா இதுல என்னை இழுத்து பாருடி.”  என்று வம்பு வளர்த்தான்.

சட்டப்படி அனைத்தும் நடக்க வேண்டும் என்ற கொள்கையில் ரகுவரன் செயலை அவள் கண்டித்துக் கொண்டிருக்க, அடங்கிப் போகாதவன் அவளையும் வெறுப்பேற்றினான்.

மான்குட்டியை கடத்திய மணிகண்டன் கை கால்கள் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டிருந்தான். இரண்டு நாள் கழித்து அவன் முன்பு நின்றவன் மிரட்டினான் நவநீதனை அடித்தது அவன் தான் என்று ஒப்புக் கொள்ளுமாறு. மணிகண்டன் மறுத்து பிடிவாதம் பிடிக்க, மருத்துவர்களின் உதவியால் கரண்ட் ஷாக் கொடுத்தான்.

அலறி துடித்தவன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவனிடம் சரணடைய, “எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும் என் பொண்ணு பேர் வெளிய வர கூடாது. அப்படி வந்தா அடுத்த நிமிஷம் சாவு உன் முன்னாடி நிக்கும். இது சம்பந்தமான ஆளுங்க எல்லார்கிட்டயும் சொல்லிடு. நான் அவங்க விஷயத்துல தலையிட மாட்டேன்.

அதேநேரம் என் பொண்டாட்டி புள்ளைங்க உயிருக்கு ஏதாச்சும் ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் அத்தனை பேர் ரத்தத்தையும் குடிச்சிடுவேன். என்னோட உலகமே அவங்க மூணு பேரும் தான். நான் இருக்கும் போது அவங்களுக்கு ஒன்னு ஆனதுக்கு அப்புறம் எதை பத்தியும் எனக்கு கவலை இருக்காது. உயிர் முக்கியம்னா என் குடும்பத்தை விட்டு விலகி இருங்க.” என்றவன் எண்ணபடியே மாற்றி இருந்தான் அனைவரையும்.

அடிபட்டுக் கிடந்த அடியாட்கள் அனைவரும் நவநீதன், மணிகண்டன் இருவரின் நிலையை பார்த்து முற்றிலும் ரகுவரன் பக்கம் மாறி விட்டார்கள். விஷயம் அறிந்து நவநீதனை தேடுபவர்கள் மணிகண்டனிடம் வந்து நிற்பார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இதை செய்து விட்டதாக அவன் ஒப்புக் கொள்வான்.

“என்ன பொறுத்த வரைக்கும் நீயும் குற்றவாளி தான் ரகு. உன்னை உள்ள தூக்கி வைக்காம நான் ஓயமாட்டேன்.” சிலுப்பிக்கொண்டு செல்லும் மனைவியை உள்ளுக்குள் அர்ச்சித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தான்.

எண்ணங்கள் எங்கெங்கோ ஓடி அவனை மிகவும் கோபத்திற்கு ஆளாக்கியது. பிபி எகிறி கிடந்தவன் சாந்தம் ஆனான் பிள்ளைகளின் வருகையால். கோபத்தை அடக்கி விட்டு வெளியில் சிரித்தவன் எண்ணத்தில் தொலைக்காட்சி விழுந்தது.

அதில், போடா போடி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ நினைப்பில் பார்த்தவன் மூளைக்குள் பல்ப் எரிந்தது. உதடு கடித்து சிரித்துக்கொண்டவன் கன்னக்குழியில் கை வைத்தாள் மான்குட்டி.

“அப்பாக்கு கன்னக்குழி வந்துடுச்சு.” என்றதும் இன்னும் சிரித்து கன்னக்குழியை உருவாக்கியவன், “தங்கம் அப்பா கன்னக்குழி மாதிரி உனக்கு தங்கச்சி பாப்பா வேணுமா? தம்பி பாப்பா வேணுமா?” கேட்டான் விஷமமாக.

அக்காவை முந்திக்கொண்டு மகிழ்வரன் பதிலளித்தான், “எனக்கு தம்பி பாப்பா வேணும்.” என்று.

என்றும் தம்பிக்கு ஆதரவாக நிற்கும் மான்குட்டி இன்று, “இல்லப்பா எனக்கு தங்கச்சி பாப்பா வேணும். மணாலி பாப்பா மாதிரி குட்டியா அழகா இருக்கணும். மறக்காம உங்களை மாதிரி கன்னத்துல குழி விழனும். தம்பி பாப்பா மாதிரி அந்த பாப்பாவும் என் கூடவே இருக்கணும்.” முடிவை மாற்றியது.

மகன் மகள் இருவரும் தந்தையோடு அடுத்த வாரிசை பற்றி பேசிக் கொண்டிருக்க, வெளியில் வந்த மகிழினி கிறுக்கை பார்ப்பது போல் பார்த்தால் கணவனை. அவள் பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக, “ரெண்டு பேருக்கும் பிடிக்கிற மாதிரி பையன் ஒன்னு பொண்ணு ஒன்னுன்னு அப்பா ரெடி பண்ணி தரேன். ரெண்டு பேரும் வர ரெண்டு குட்டிங்க கிட்ட சண்டை போடாம அன்பா இருக்கணும்.” என்றான்.

அத்தோடு நிறுத்தி இருந்தால் கூட மகிழினி விளையாட்டாக கடந்து இருப்பாள். ஆனால் கண்ணடித்து தொலைக்காட்சியை காட்டினான் அவள் கணவன். அதில் நடனம் ஆடத் துடிக்கும் மனைவியை தடுத்து நிறுத்தினான் அறைக்குள் அழைத்துச் சென்ற கதாநாயகன். அதைப் பார்த்தவள் திரும்பி கணவனை பார்க்க, பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்பியவன் விஷமத்தோடு ரசித்தான் அவனவளை.

“டேய்! நீ பார்க்குறதே சரி இல்ல நகரு…”

“ரகுவரன் ரத்தங்களா…அப்பா நீங்க கேட்ட குட்டீஸ்க்கு வேலை பார்க்க போறேன்… ஆல் தி பெஸ்ட் சொல்லுங்கடா” என மனைவிக்கும் சேர்த்து தன் எண்ணத்தை கூறி விட,

“ஆல் தி பெஸ்ட் அப்பா” வழி அனுப்பி வைத்தார்கள் தங்களுடன் விளையாடும் புதிய வரவை எதிர்பார்த்து.

முழி பிதுங்கி கெஞ்சிக் கொண்டே பின்னால் நகர்ந்தவள் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறாள் அவன் கேட்டதை கொடுக்கக் கூடாது என்று. எதற்காகவோ ஆரம்பித்தவன் முழு நேர வேலையாகவே இந்த விஷயத்தை மாற்றிக் கொண்டான். தினமும் இரவு பிள்ளைகளை வைத்து தன் காரியத்தை சாதிக்க நினைத்தவன் முடியாமல் போனதால் மொத்த குடும்பத்தையும் அழைத்து பஞ்சாயத்து வைத்தான்.

சுவற்றில் முற்றி கொண்டனர் அனைவரும். அப்பொழுது கூட அடங்காதவன் வேலை செய்யும் இடம் முதல் கொண்டு அவள் எங்கு சென்றாலும், “ஓகே சொல்லுடி பொண்டாட்டி” என்ற வசனத்தோடு பின் தொடர்ந்தான்.

கொடுமை செய்யும் கணவனுக்கு கூட ஒரு மனைவி இந்த அளவிற்கு பயந்து இருக்க மாட்டாள் போல… அவனிடம் தனியாக சிக்காமல் இருக்க பெரும் பயத்தையே பார்த்து விட்டாள் மகிழினி. கடைசியாக தன் பலம் மொத்தத்தையும் இழந்தவள் வீட்டை விட்டு ஓடி விட்டாள். அப்பொழுதும் அடங்காதவன் வந்துவிட்டான்…

“ஓகே சொல்லுடி பொண்டாட்டி” என்று.

முற்றும்.

அம்மு இளையாள்.

(இந்த கதை எழுதுற எண்ணம் கொஞ்சம் கூட இல்லங்க‌. ரகுவரன் கதை தான் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்தது. இப்ப வரைக்கும் ரகுவ கேட்டு அதிக குறுஞ்செய்திகள் வரும். வாராயோ நன்னிலவே கதை எழுத முடியாத சூழ்நிலை 🙊. அதனால தான் கதை கரு பெருசா வைக்காம ரசிக்க மட்டுமே இந்த கதை கொடுத்தேன்‌. 

எழுத வேண்டிய கதை நிறைய இருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு சொன்ன மாதிரி இவங்க வாரிசுகளை வச்சி நான்காம் பாகம் எழுதுறேன். இப்பவே சொல்லிடுறேன் அதுல ரகு ஹீரோ கிடையாது. மகிழ்வரன் தான் கதாநாயகன்.

அன்புக்கும் ஆதரவுக்கும் நனி நன்றிகள் 💕💕❤️❤️❤️❤️.)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
23
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்