கதிரை பற்றிய கவலையில் அவ்விரவை உறங்கா இரவாகக் கழித்தாள். விடயலுக்காகவே காத்திருந்த அழகி செய்த முதல் வேலை கதிரின் அறைக்குச் சென்றது. அறை வாசல் வரை சென்றுவிட்டு தயங்கினாள். அவள் கதவைத் தட்டலாமென்று கையெடுத்தப் பொழுது கதவை திறந்துக் கொண்டு கதிர் வெளியே வந்தான்.
அழகி நிற்பதைக் கண்டு அவன் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
“என்ன இவ்வளவு காலைல இங்க நிக்கிற?”
“இல்ல நீ தூங்குனியா இல்லையானு தெரியல. அதான்.” என்று அவள் இழுத்தாள்.
“ரொம்ப நேரம் தூக்கம் வரல. ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கியிருப்பேன். சரி இரு. நீ தூங்குனியா இல்லையா?”
அவன் குறுகுறுவென்று பார்க்க, அவள் தலைக் கவிழ்ந்துக் கொண்டாள்.
“ஆக மேடம் தூங்கல?”
“அதுவந்து கதிர்…”
“சரி அப்போ இன்னைக்கு லீவ் போட்ரு. நாம நைட் திருச்சி கிளம்பணும். பகல்ல தூங்கி எழுந்துட்டனா நைட் எனக்கு பேச்சு துணைக்கு நீ இருப்பல்ல.” என்று மிக இயல்பாக உரைத்தவனை கண்டு அழகி ஞேவென விழித்தாள்.
நேற்று அவ்வளவு கவலையாக இருந்தவன் இப்பொழுது மிக சாதாரணமாக பேசுகிறானே என்று அவளுக்கு வியப்பாக இருந்தாலும் அவன் இயல்பாகப் பேசியது நிம்மதியாக இருந்தது.
“ரொம்ப முழிக்காத டி கண்ணு வெளில வந்துட போகுது. நீ குளிச்சுட்டு சாப்பிட்டுட்டு தூங்கு செல்லம். எனக்கும் நல்லா தூங்கி எழுந்தா தேவைலனு தோணுது.” என்று கைநீட்டி சோம்பல் முறித்துவிட்டு “எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து நானும் உன்கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்றுரைத்து அவளது கன்னத்தில் தட்டி கண்ணடித்துவிட்டு அவன் செல்ல, அவளோ அவன் செல்வதையே பார்த்திருந்தாள்.
பின் மெலிதாக முறுவலித்தபடி தனது அறைக்குச் சென்றாள்.
உற்சாகமாக இறங்கி வந்த கதிரவனை கண்டு சக்கரவர்த்தி புன்னகைக்க, அவருக்கு காலை வணக்கம் சொல்லியபடியே அவர் அருகில் வந்து அமர்ந்தான்.
நடைபயிற்சிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராம்குமாரும் கதிரின் முகத்திலிருந்த தெளிவை உணர்ந்து மென்னகைத்தான். அப்பொழுது தான் எழுந்து வந்த மிருதுளாவிற்கும் கண்களால் சுட்டிக் காட்டினான்.
அவளும் புன்னகைத்தாள்.
“என்ன டா ஒரு முடிவுக்கு வந்துட்ட போலயே!” என்றபடி கதிரின் தோளில் தட்டினாள். அவன் பதிலுரைக்காது புன்னகைக்க, அவளும் இதழ் மலர்ந்தாள்.
“சரி காபி கொண்டு வரவா?”
“ம்ம் கொண்டு வா.” என்றவன் சக்கரவர்த்தியிடம் திரும்பினான்.
“மாமா! நானும் அழகியும் நைட் திருச்சி கிளம்புறோம். அதுக்கு முன்னாடி நான் செய்ய வேண்டிய வேலைய செஞ்சுடலாம்னு பார்க்குறேன்.”
சக்கரவர்த்தி பெருமூச்சு விட்டார். கிளம்பிய ராம்குமாரும் தேங்கி நின்றான்.
“சரி பா. லாயர்ட்ட டாக்குமெண்ட் ரெடி பண்ணி கொண்டு வர சொல்றேன் பா.” என்றவர் ராம்குமாரை காண, அவன் உடனே தனது கைப்பேசியில் வக்கீலுக்கு அழைத்தான்.
மிருதுளா கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு காபி போட செல்ல, ராம்குமார் அவளை கவலையாய் பார்த்தபடியே வக்கீலிடம் சுருக்கமாக விவரம் கூறி மதியம் வீட்டிற்கு வரும்படி உரைத்து அழைப்பை துண்டித்தான்.
“அவரு மதியம் வந்துருவார் ப்பா!”
சக்கரவர்த்தி தலையை மட்டும் அசைத்தார். கதிரிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை. மிக இயல்பாக அமர்ந்திருந்தான்.
ராம்குமார் மிருதுளாவிடம் சென்றான். அவளது தோளைத் தொட, திரும்பி அவனை பார்த்துப் புன்னகைத்தாள்.
“அக்கா, தம்பி ரெண்டு பேருமே இப்படி தானா டி. உனக்கு ஆறுதல் சொல்லலாம்னு வந்தா நீ சிரிக்குற?”
“நாங்க அப்படி தான்ங்க. பிள்ளைங்கள விட பணமும் கெளரவமும் தான் முக்கியம்னு நினைக்கிறவங்கள பத்தி ஏன் கவலைப்படணும்?”
“அப்புறம் எதுக்கு டி ஃபீல் பண்ண?”
“நான் கதிரை நினைச்சு ஃபீல் பண்ணேன்ங்க. பிடிக்கலனாலும் நீங்க பணக்காரர்ன்ற ஒரே காரணத்துக்காக நம்ம லவ்வ அக்செப்ட் பண்ணி நமக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா கதிருக்கு அதுக்கூட இல்லைங்க. அவனுக்கு அவன் ஆசைப்பட்ட கேரியர பர்ஸ்யூ பண்றதுக்கும் போராட்டமா இருக்கு. பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்றதுக்கும் போராட்டமா இருக்கு. ரொம்ப பாவ்ம்ங்க அவன்! நாம எப்பவுமே அவனுக்கு சப்போர்ட்டா இருக்கணும்ங்க.”
“கண்டிப்பா இருப்போம் டி. நமக்கும் அவன விட்டா யார் இருக்கா? அவனுக்கும் நம்மள விட்டா யார் இருக்கா? கடைசி வரைக்கும் அவன்கூட இருப்போம். ஓகே வா.” என்ற ராம்குமாரை மிருதுளா அணைத்துக் கொண்டாள்.
ராம்குமார் புன்னகைத்தான். அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
அழகி குளித்து விட்டு கீழே வர, சக்கரவர்த்தி, மிருதுளா, கதிர் மூவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ராம்குமார் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தான்.
“ஹே அழகி! காபி தரட்டுமா?”, மிருதுளா வினவினாள்.
“இல்லை அண்ணி! நானே போட்டுக்குறேன்.” என்றபடி அழகி அடுக்களைக்குச் சென்று தனக்கான காபிக் கோப்பையோடு வந்தாள்.
“அண்ணி! நாங்க திருச்சிக்கு போயிட்டு வர்ற வரைக்கும் அதிய பார்த்துக்க முடியுமா? அவன் இப்பதான் அந்த பாதிப்புலேர்ந்து வெளில வந்துக்கிட்டு இருக்கான். இப்ப அவன மறுபடியும் அங்க கூட்டிட்டு போய் பழச ஞாபகப்படுத்த விரும்பல.” என்று அழகி மிருதுளாவை பார்த்தாள்.
“பார்த்துக்கோங்க அண்ணினு உரிமையா சொல்லு டி போதும். எதுக்கு இந்த எக்ஸ்ப்ளனேஷன் எல்லாம்? என் தம்பி புள்ளய, என் மருமகன நான் பார்த்துக்க மாட்டேனா என்ன?” என்ற மிருதுளாவின் உரிமையான பேச்சில் அழகி அகமகிழ்ந்தாள். அவளை நன்றியோடு பார்த்தாள்.
கதிர் அவளை பார்த்துப் புன்னகைக்க, அவளும் புன்னகைத்தாள்.
“இங்க ரெண்டு பேருமே இருக்கீங்க. இப்ப பேசலாம். காலைல கோவில்ல தாலி கட்டிட்டு ரெஜிஸ்டர் ஆபிஸ்ல மேரேஜ ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். உங்களுக்கு ஓகே தானே?” என்று சக்கரவர்த்தி கதிரையும் அழகியையும் பார்த்தார்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ஒரு சேர சம்மதம் தெரிவிக்க, சக்கரவர்த்தி புன்னகைத்தார்.
“அப்ப சரி. அதுக்கான வேலைகள நான் பார்க்குறேன். மத்தபடி தாலி, டிரெஸ் எல்லாம் நீங்க பார்த்துக்கோங்க.” என்றபடி அவர் அங்கிருந்து எழுந்துச் சென்றார்.
“தாலி, நகை, எங்களுக்கு டிரெஸ் எல்லாம் நானும் உன் மாமாவும் பார்த்து வாங்கிக்கிறோம். உங்க ரெண்டு பேருக்கும் முகூர்த்த புடவையும் வேட்டி சட்டையும் நீங்களே பார்த்துக்கோங்க டா.” என்று மிருதுளா கூற, கதிர் அழகியை பார்த்தான்.
“கதிர் குடுத்த புடவையையே கட்டாம வச்சுருக்கேன் அண்ணி. எனக்கு எதுக்கு புதுசா புடவைலாம்.” என்றாள்.
“ம்ப்ச். அவக்கிடக்குறா மிருதுளா. எங்க டிரெஸ்ஸ நான் பார்த்துக்கிறேன். அவளுக்கு பிடிச்ச புடவைய அவளே செலக்ட் பண்ணுவா. நீ போய் மத்த வேலைய பாரு. நான் பொட்டிக் வரைக்கும் போயிட்டு வரேன்.” என்ற கதிர் அழகியிடம் விழிகளால் விடைபெற்று செல்ல, அழகி பெருமூச்சு விட்டு அதிரனை எழுப்பச் சென்றாள்.
அதிரனை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்த அழகி, தானும் கதிரும் திருச்சிக்கு செல்லுவதை உரைக்க, அவன் புன்னகையோடு சரி என்றான்.
அவனை அனுப்பி வைத்துவிட்டு மிருதுளாவிற்கு சமையலில் உதவி செய்தாள்.
கதிர் காலையில் சாப்பிட வரவில்லை. வக்கீல் வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் தான் வீட்டிற்கு வந்தான். வந்தவன் மிகவும் அயர்ந்து போய் வந்திருந்தான்.
மிருதுளா அவனுக்கு உணவு பரிமாற, கையில் காயம் இருத்தபடியால் அழகி அவனுக்கு ஊட்டினாள். அவன் உண்டு முடிக்கவும் வக்கீல் வரவும் சரியாக இருந்தது.
ராம்குமாரும் அவரோடு வந்திருந்தான். வக்கீல் பத்திரத்தை சக்கரவர்த்தியிடம் தர, அதனை ஒருமுறை படித்துப் பார்த்தவர் கதிரிடம் நீட்டினார்.
“கதிர் இப்பவும் யோசிச்சுக்கோ. இது தேவையானு?” என்று சக்கரவர்த்தி கூற, புன்னகையை மட்டுமே பதிலாய் தந்த கதிர் கவனமாக அந்த பத்திரத்தைப் படித்தான். சிறிதும் தயங்காமல் தனது தந்தையின் சொத்தில் ஒரு ரூபாய் கூட தனக்கு வேண்டாமென்று எழுதியிருந்த அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டான்.
சக்கரவர்த்தி பெருமூச்செறிந்தார். ராம்குமார் உணர்வுகளற்று நின்றிருந்தான். மிருதுளா ஆதரவாக அவனது கரம் பற்றினாள். அழகி கவலையோடு அவனை பார்த்தாள்.
“இதை இன்னைக்கே அவங்களுக்கு அனுப்பிடுங்க.” என்று பத்திரத்தை வக்கீலிடம் கொடுத்தான்.
சரியென்று தலையசைத்த வக்கீல் அனைவரிடமும் விடைபெற்று செல்ல, அங்கு பலத்த மௌனம் நிலவியது.
“இப்ப என்ன ஆச்சுனு எல்லாரும் மூஞ்சிய இப்படி வச்சுருக்கீங்க? சொத்து தான் வேணாம்னு சொல்லியிருக்கேன். அவங்க வேணாம்னு சொல்லல. அதே நேரத்துல அவங்கள தேடியும் போக மாட்டேன். அவங்களுக்கா என்னைக்கு என்னை புரியுதோ அப்ப அவங்க வரட்டும். அதுவரை விலகி இருக்குறது தான் நல்லது.” என்றவன் உரைக்கவும் மற்றவர்களால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
“நீங்க யாரும் இன்னும் சாப்பிடலல. வாங்க நான் பரிமாறுறேன்.” என்ற கதிர் அனைவருக்கும் உணவு பரிமாற, அதை பெயருக்கு உண்டுவிட்டு எழுந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை.
பின் அவன் சற்று தெளிவாக இருப்பதைக் கண்டு அனைவரும் ஒருவாறு தங்களது மனதைத் தேற்றிக் கொண்டனர்.
சக்கரவர்த்தி ஓய்வெடுக்கச் செல்ல, “வா டி அழகி தூக்கம் வருது!” என்று கதிர் அவளது கைப்பிடித்தான்.
“டேய் என்ன பண்ற?” என மிருதுளா கேட்க,
“என் பொண்டாட்டி கைய பிடிச்சுருக்கேன்.” என்றான் அவன்.
“என்ன நக்கலா? இன்னும் கல்யாணம் முடியல தம்பி. உனக்கு தூக்கம் வந்தா நீ போய் தூங்கு.” என்று மிருதுளா கண்டிப்புடன் கூறினாள்.
“ம்ப்ச் நீ வா அழகி! அவ கிடக்குறா பைத்தியம்.” என்று கதிர் அழகியின் கையைப் பிடித்து கூட்டிச் செல்ல, அழகி சங்கடமாக மிருதுளாவை பார்த்தபடியே சென்றாள்.
“டேய் டேய் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு போற?”, மிருதுளா கத்தினாள்.
“தூங்க தானேடி போறோம். என்னமோ பர்ஸ்ட் நைட் கொண்டாட போற மாதிரி பதறுற. நீ வா டி.” என்றுவிட்டு அழகியை இன்னும் வேகமாக கூட்டிக்கொண்டு படிகளில் ஏறினான். அழகிக்கு தான் தர்மசங்கடமாகிப் போனது.
“எருமை எருமை என்ன பேச்சு பேசுது பாரு. ஏங்க நீங்களாவது கேட்க கூடாதா?” என்று மிருதுளா ராம்குமாரை பார்க்க, அவனோ நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு செல்ல, அவள் தான் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள். பின் அவளும் மெல்ல மென்னகைத்தபடி கவியை காணச் சென்றாள்.
அவனது அறைக்கு அவளை அழைத்துச் சென்று கதவை சாற்றி தாழிட்டான்.
“நான் என் ரூம்ல தூங்குறேன் கதிர்.” என்ற அழகி சங்கடமாக அவனை பார்த்தாள்.
“ஏன்னு நான் ஏத்துக்குற மாதிரி ஒரு ரீசன் சொல்லிட்டு போ.” என்று கைக்கட்டிக் கொண்டான்.
“இல்லை அண்ணி என்ன நினைப்பாங்க? அண்ணா என்ன நினைப்பாரு?”
“அவங்க என்னவோ நினைக்கட்டும். நீ என்ன நினைக்கிற?”
“இதுல நான் நினைக்க என்ன இருக்கு?”
“ம்ப்ச் இங்க பாரு டி. அவங்க என்ன நினைப்பாங்க இவங்க நினைப்பாங்கனு வாழ்ந்ததெல்லாம் போதும். இனி நாம நினைக்கிறபடி வாழலாம்.” என்றவனை விழியெடுக்காது பார்த்தாள்.
மென்மையாக அணைத்துக் கொண்டாள். அவனும் மென்னகைப் புரிந்து அவளைக் கட்டிக் கொண்டான்.
“தூங்கலாமா டி?”, மெல்லியக் குரலில் அவன் கேட்க, அவள் சிறு சிரிப்போடு தலையசைத்தாள்.
இருவரும் பக்கம்பக்கமாக ஒருவரையொருவர் பார்த்தபடி படுத்தனர். இருவரும் சிரித்தனர். அவன் அவளை உறங்கும்படி கூறி இமைமூடி திறக்க, அவளும் புன்னகையோடு விழிகள் மூடினாள்.
அவளையே பார்த்திருந்தவன் உறங்கிப்போக, மெல்ல விழித்திறந்து புன்னகைத்தவள் தானும் உறங்கினாள்.
நன்கு உறங்கிய இருவரும் அதிரன் பள்ளிவிட்டு வரும் வேளையில் தான் விழித்தனர். அதிரன் வந்ததும் அவனோடு நேரம் செலவழித்தனர்.
ஆறு மணியளவில் இருவரும் பைகளோடு தயாராய் கீழே வர, அதிரன் இருவருக்கும் முத்தமிட்டான்.
சக்கரவர்த்தி, ராம்குமார், மிருதுளா மூவரும் அவர்களை பார்க்க, அவர்களிடம் இருவரும் விடைபெற்றனர்.
மிருதுளாவிடம் வந்த அழகி, “அதிய பார்த்துக்கோங்க அண்ணி! அவனால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அவன் வேலைய அவனே பார்த்துப்பான். நீங்க சாப்பாடு மட்டும் செஞ்சு குடுத்தா போதும்.” என்றாள்.
“இதெல்லாம் நீ சொல்லவே தேவையில்ல அழகி! அதி எவ்வளவு சமத்து பிள்ளைனு எங்க எல்லாருக்குமே தெரியும். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க. போன காரியத்த சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டு வாங்க.” என்று மிருதுளா புன்னகைத்தாள்.
கதிரும் அழகியும் சக்கரவர்த்தியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்டனர்.
இருவரும் கொடைக்கானலிலிருந்த திருச்சிக்கு பயணிக்கத் தொடங்கியிருந்தனர். திருச்சி அவர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தர அவர்களது வரவை எதிர்நோக்கியிருந்தது.