Loading

அத்தியாயம் 25:

“க்கும்…” தொண்டையை செருமிக் கொண்டு ஆஷாவின் அறைக்குள் நுழைந்த மந்த்ராவின் வரவில், ஆஷாவிற்கு அருகில் அமர்ந்திருந்த அமிஷ் எழுந்து வெளியில் சென்றான். அவனை முறைத்துக் கொண்டே, அன்றைக்கான செக் அப் – ஐ முடித்தவள் அமிஷை தேடி சென்றாள்.

படிக்கட்டின் ஓரம் இருந்த ஜன்னல் வழியே இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்தவனின் தோற்றம் அவள் மனதில் பதிந்து போனது. கல்லூரி காலத்தில் கூட, அவனை இப்படி வெளிப்படையாக ரசித்து தொலைத்ததில்லை இந்த மனது. அவனிடம் மனதை இழக்கக் கூடாதென்றே பிடிவாதத்துடன் தனது சிந்தனைகளை பிடித்து வைத்துக் கொள்பவளுக்கு, இன்றேனோ எண்ணங்கள் அலைபாய்ந்தது.

அவனிடம் காதலை பெற்றே ஆக வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை. அவனது விலகல் வலித்தது தான். ஆனால், அவளுக்கு வேண்டியது ஒன்றே ஒன்று. தன் மீது வீற்றிருந்த உணர்வுக்கு பெயர் க்ரஷ் அல்ல, காதல் என்று ஒரு முறை அவன் கூறி விட்டால் போதும். அதன் பிறகு அவன் இருக்கும் திசை பக்கம் கூட வரக்கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

‘என்னை பார்த்தா கிள்ளுக்கீரை மாதிரி இருக்கா?’ என எகத்தாளத்துடன் எண்ணியபடி, அவனருகில் வந்து நிற்க, அமிஷ் என்னவெனப் பார்த்தான்.

“இன்னைக்கு கிளைமேட் நல்லா இருக்குல்ல சீனியர்…” என்றபடி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

அவளை புரியாமல் ஏறிட்ட அமிஷ், பதில் கூறாமல் நகர முயல, அவளோ பாதையில் வந்து நின்று அவனைத் தடுத்தாள்.

ஏற்கனவே, அவளருகில் அவனுக்கு சத்திய சோதனையாக இருக்கிறது. இதில் இவள் வேறு? என சலித்துக் கொண்டவன், “ஏமி?(என்ன)” எனக் கேட்டான்.

“ஏமிலேது” என தோளைக் குலுக்கியவள், அவனிடம் பேச்சை வளர்க்கும் பொருட்டு, “தங்கச்சி என்ன பண்ணிட்டு இருக்கா?” என்றாள்.

அவன் பதில் கூறாமல் நிற்க, “என் ஸ்டூடண்ட் பத்தி ஒரு அக்கறைல கேக்குறேன். என்னமோ உங்க சொத்தை கேட்ட மாதிரி நிக்கிறீங்க?” அவள் உதட்டை சுளித்துக் கொள்ள, அதில் தலையை அழுந்தக் கோதினான்.

முழுதாய் தன்னை ஒரு நிமிடம் நிதானத்திற்குட்படுத்தியவன், “எஞ்சினியரிங் லாஸ்ட் இயர் படிக்கிறா!” என்றதில், “உங்க ஆருயிர் தோழி என்ன செய்றாங்க.” எனக் கேட்டாள் சிறிது நக்கலுடன்.

அதில் சிறிதாய் முறைத்தவன், “தெரியாது…” என்று பதிலளிக்க, அவளோ நம்பாமல் பார்த்தாள்.

அவள் பார்வையில், “நிஜமா தெரியாது!” என்னும் போதே, குரல் கரகரத்தது. சற்றே திகைத்தவள், “பிராக்டிஸ் பண்ணிட்டு இருப்பா தான?” எனப் புரியாமல் கேட்க, “அப்படி தான் நினைக்கிறேன்.” என்றான் அவனும்.

“என்கிட்ட சொன்னா, தஷுகிட்ட சொல்லிடுவேன்னு இப்படி சொல்றீங்களா சீனியர்?” என்று மந்த்ரா கேட்டதில்,

“அவன்கிட்ட சொல்லி என்ன ஆக போகுது. தேவை இல்லாம என்னை பேச வைக்காத. அவன் மேல கொலைவெறில இருக்கேன்.” என்று பல்லைக்கடிக்க,

“ஹலோ, இதெல்லாம் தஷு தான் சொல்லணும். உங்க ஃப்ரெண்டால அவன் தான் எல்லா கஷ்டமும் பட்டான். அவள் மட்டும் இவன் வாழ்க்கைல வராமல் இருந்திருந்தா, இந்நேரம் என் ஃபிரெண்டு எப்பவும் எங்க கூட இருந்து இருப்பான். உங்க ஃபிரெண்டு லிவ் இன் – ல இருக்கும் போது அவளுக்கு பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு, இப்ப தஷுவையே தப்பு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை.” என இருக்கும் இடம் மறந்து கத்தியவள், அங்கு இருந்த செவிலியர்கள் தங்களை பார்ப்பதைக் கண்டு வாயை மூடினாள்.

அவனும் அதனாலேயே வார்த்தைகளை அடக்கிக் கொண்டு அவள் மீது தீப்பார்வை பொழிந்தான்.

“உங்கிட்ட ஆர்கியூ பண்ண எனக்கு விருப்பம் இல்ல மந்த்ரா. மஹூ பண்ணது தப்பாவே இருக்கட்டும், ஆனா அவள் காட்டுன அன்பு உண்மை தான. இப்ப வரை அவளை பத்தி எதுவுமே கேட்காம இருக்குறவன பார்த்தா கடுப்பா இருக்கு.” என்று எரிச்சலுடன் கூறியவன், அவள் ஏதோ பேச வருவதை தடுத்து,

“லுக்… காலேஜ்ல நீ ஜுனியர் நான் சீனியர். அவ்ளோ தான் நம்ம ரிலேஷன்ஷிப். இனிமே நமக்குள்ள பேச எதுவும் இல்ல. காட் இட்.” என்று நகர போனான்.

“ஓ! நமக்குள்ள எதுவும் இல்லையா? நீங்க என்னை லவ் பண்ணவே இல்ல அப்படி தான?” அவள் கிண்டலுடன் கூடிய கடுப்பில் கேட்க, அதில் ஒரு நொடி தயங்கியவன், பின் “இல்ல” என்றான் அழுத்தமாக.

அவள் முறைப்பது புரிந்தும் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தான்.

ஆஷாவின் அருகில் யாரும் இல்லாததைக் கண்டு, மதன் அவளருகில் சென்றான்.

மனதெங்கும், அவள் மீதான உரிமைப் போராட்டம். ஆனால், உரிமையற்றவளின் மீதல்லவா ஏற்படுகிறது… தளர்ந்து அவள் முன் அமர்ந்தவன், பாவையின் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டான். வார்த்தைகளற்ற அந்த மௌன போராட்டத்தில் சிக்கி சிதறியவன், மானசீகமாக காதலை கூறி, அவளது உள்ளங்கைகளில் இதழ்களை பதிக்க, ஆஷாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அதனைக் கண்டதும் சட்டென எழுந்தான். இதுவரை ஒரு சிறிய முன்னேற்றம் கூட இல்லாமல் இருந்தது அல்லவா? செய்வதறியாமல் நின்றிருந்த மதனை அப்போது தான் உள்ளே வந்த அமிஷ் கண்டு என்னவென்று கேட்க, அவன் கூறியதும் அவனுக்கும் வியப்பு தான்.

இந்த விஷயம் உடனே தஷ்வந்திற்கும் சொல்லப்பட்டிருக்க, “நல்ல விஷயம் தான் மதன். அவள் நம்மளை ஃபீல் பண்றா. ஷீ இஸ் ஸ்டில் வித் அஸ்.” என்றதில், பல நாள் கழித்து நண்பர்களுக்குள் ஒரு மகிழ்வு வழிந்தோடியது.

“நிஜமாவே… நல்ல ரெஸ்பான்ஸ் தான தஷ்வா…” மஹாபத்ராவிடம் என்றுமே அவன் பார்த்திருக்காத தவிப்புக் குரல்.

“ம்ம்!” கண்ணை மூடி திறந்து தஷ்வந்த் ஆமோதிக்க, “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் அவள் எந்திரிக்கணும்” என்றாள் மனதினுள் எதையோ உருப்போட்ட படி.

“மாத்திரை மருந்து மட்டுமே ஒருத்தரோட ஆழ்மனசை தட்டி எழுப்ப முடியாது பத்ரா. அவங்களுக்கு பிடிச்ச ஆர், மனசுக்கு நெருங்குனவங்களோட அரவணைப்பும் தொடர்ந்து கிடைக்கணும்.” என்று விட்டு அவளைப் பார்த்தான்.

“நான்… நான் அவளை பார்க்க மாட்டேன்.” அவள் கலங்கி நின்ற கண்களை சிமிட்டிக் கூற,

“இதென்ன முட்டாள்தனம். எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் பத்ரா. ஓடி ஒளியுறதுல எந்த பியோஜனமும் இல்ல…” மீண்டும் அவளைக் குத்தினானோ?

“நான் ஒண்ணும் ஓடி ஒளியல!” கோபத்தில் சிவந்தாள் பெண்ணவள்.

“அப்போ இதுக்கு பேர் என்ன?” விழியுயர்த்தி அவன் கேட்டதில், மஹாபத்ரா பதிலுரைக்காமல், படுக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவனும் அவளுக்கு பக்கவாட்டில் அமர்ந்து, அறை வெளிச்சத்தை மங்கலாக்கி விட்டு, “எல்லாத்துக்கும் வன்முறையை கையில எடுக்குறது எவ்ளோ ஆபத்தோ… அதே அளவு ஆபத்து இந்த அமைதிலயும் இருக்கு டாலு!” இறுக்கத்துடன் வந்த வார்த்தைகள் அவளுக்கேனோ தவிப்பாக தெரிந்தது.

அதற்கும் அமைதி காத்தவளை, இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டவன், “ஓகே பிஸிக்கல் பார்ட்னர்…அவ உன் ப்ரெண்டு… அவளை பாரு… பார்க்காம போ! எனக்கென்ன வந்துச்சு.” என்றபடி அவளை ஆராய முற்பட, தீச்சுட்டார் போல விலகினாள்.

“என்ன டாலு?” புருவம் சுருக்கி அவன் கேட்க, “எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கல தஷ்வா” என்றாள் குரலை உயர்த்தி.

“ஆனா எனக்கு பிடிச்சு இருக்கே பிஸிக்கல் பார்ட்னர்…! ஐ லைக் திஸ் நோ லவ் கான்செப்ட்.” என அவளைத் தூண்டி விட, “இந்த பிஸிக்கல் பார்ட்னரை நிறுத்துறியா?” என்றாள் அடிக்குரலில்.

“ஃபைன்… அப்போ நம்ம ரிலேஷன்ஷிப்க்கு நல்ல பேரா நீயே சொல்லு.” என தலை சரித்துக் கேட்டவனிடம் பதில் கூற இயலாமல் திணறினாள்.

“உன்னால சொல்ல முடியாது பத்ரா. பிகாஸ் நமக்குள்ள ஒண்ணுமே இல்ல. இதை தவிர…!” என்றவன், அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கினான்.

இத்தனை நேரமும் பேசியதும், தற்போது மொத்த அன்பையும் காட்டுவதும் அவனே என்று ஏற்றுக்கொள்ளவே அவளுக்கு சில நிமிடம் பிடித்தது.

வேண்டுமென்றே பேசிவிட்டு, அதனை சரி செய்யும் வழி தெரியாமல், அவளுடன் இரண்டறக் கலப்பவன், அந்த உறவில் சிறிதும் அவள் முகம் சுளிக்க விட மாட்டான்.

நாட்கள், பகலில் குத்தல் வார்த்தைகளுடனும், இரவில் தூங்கா இரவாகவும் இருவருக்கும் மாறி இருக்க, ஆஷாவின் உடல்நிலையிலும் முன்னேற்றம் தெரிந்தது. அதுவே, அனைவர்க்கும் ஒரு பலத்தையும் கொடுத்தது.

அன்று, நிதினை பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. கூடவே ஒரு பதற்றமும் தொற்றிக் கொண்டது.

அவசரமாக வீட்டினுள் நுழைந்து கதவை சாத்தியவளை, வசீகரன் குழப்பமாக பார்க்க, அப்போது தான் வெளியில் கிளம்ப வந்த மஹாபத்ரா, “என்ன ஆச்சு மஞ்சு?” எனக் கேட்டாள்.

“ஷ்ஷ்…” என வாயில் ஒரு விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி பணித்தவள், “ஒரு சின்ன பிரச்சனை ஆகிடுச்சு” என்றாள் ஹஸ்கி குரலில்.

“என்ன பிரச்சனை மஞ்சுமா? ஏன் இப்படி வேர்த்து போயிருக்க…” வசீகரனும் என்னவோ ஏதோவென்று கேட்க,

“வர்ற வழியில கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு வசீ” என்றாள் பயத்துடன்.

“அட ச்சீ. முழுசா சொல்லு.” மஹாபத்ரா பொறுமை இழந்ததில், அவளும், “நான் நிதினை டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தேனா, அப்போ, முன்னாடி போன கார் திடீர்ன்னு பிரேக் போட்டு நின்னுடுச்சு. அந்த காருக்கு பின்னாடி வந்த நான், நல்லவேளை சட்டுன்னு பிரேக் போட்டேன்” என்றதும் வசீகரன் பதறினான்.

“ஹே உனக்கு ஒன்னும் இல்லைல மஞ்சுமா?” என அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய, “ம்ம்ஹும் இல்ல வசீ. ஆனா வேற பிரச்சனை ஆகிடுச்சு” என்றவள், மேலும் தொடர்ந்தாள்.

“நான் எவ்ளோ பிரேக் போட்டும் அந்த காரை இடிக்காம இருக்க முடியல. ஆனா தப்பு அவங்கமேல தான். அப்படி இருந்தும், என்கிட்ட சண்டை போட்டாங்க. நான் உங்க மேல தான் தப்புன்னு சொன்னதுக்கு என்னை அடிக்க வந்தாங்க வசீ. போலீசுக்கு போறேன்னு சொன்னதுக்கு என்னை துரத்திக்கிட்டே வந்துட்டாங்க. எல்லாம் ரௌடி பசங்களா இருந்தாங்க. அடிச்சு புடிச்சு ஓடி வந்துட்டேன் ஆனாலும் வீட்டு வாசல்ல தான்…” என்னும் போதே, வாசற்கதவு பலமாக தட்டப்பட்டது.

மஞ்சுளா கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே வெளியில் வந்து விட்ட தஷ்வந்த், “அங்க மட்டுமா ரௌடி இருக்காங்க…” என அனைவர்க்கும் கேட்கும் படியே முணுமுணுத்து விட்டு, சாவகாசமாக சென்று சோஃபாவில் அமர்ந்தான்.

“டேய் தஷு… ரௌடி பசங்க தான் கதவை தட்டுறானுங்கடா. போலீசுக்கு போன் பண்ணலாம்” என வசீகரனும் வேகமாக செயல்பட எத்தனிக்க, “அட… கூல் ஆகுங்க மாம்ஸ். இதுக்குலாம் பயந்துக்கிட்டு…” என அவனையும் அமர செய்ய, மஹாபத்ரா இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், விறுவிறுவென கதவை திறந்தாள்.

அதில் பதறிய மஞ்சுளா “ஐயோ வேணாம் மஹா. திறக்காத…” என்னும் போதே, ஒருவன் உள்ளே வந்து விட, “ஏய்… எவ்ளோ தெனாவெட்டு இருந்தா, காரை இடிச்சதும் இல்லாம, எங்ககிட்டயே போலீசுக்கு போவேன்னு சொல்லுவ… சென்னைல பிரபல ரௌடி வீரா தெரியுமா. அவரோட ஆளுங்ககிட்டயே எதிர்த்து பேசுற…” என்று மஞ்சுளாவை நோக்கி செல்ல, மஹாபத்ரா சொடுக்கிட்டாள்.

“ஹலோ பிரதர்… மிஸ்டேக் உங்க மேல தான். அதுக்கும் மேல, அவள் ஸ்கூட்டி இடிச்சு உங்க கார் ஒண்ணும் டேமேஜ் ஆக போறது இல்ல. சோ தேவை இல்லாம பிரச்சனை பண்ணாதீங்க…” என்று ஏகத்துக்கும் பொறுமையை இழுத்து பிடித்து பேச, அவனோ “த்தோ பாருடா… நியாயமா பேசுற ஃபிகரு.” என இப்போது மஹாபத்ராவை நோக்கி சென்றதில், மஞ்சுளா திகைத்தாள்.

“வசீ, தஷு இங்க வாங்க… மஹா நீ தள்ளி போ. சார்… நான் உங்ககிட்ட சாரி வேணா கேட்குறேன் ப்ளீஸ் அவளை ஒன்னும் பண்ணிடாதீங்க.” என்று கெஞ்சிட, “டேய் கையை விட்டு தொலைடா” என்று வசீகரன் தான், தஷ்வந்திடம் சிக்கி இருந்த தனது கரத்தை எடுக்க போராடிக் கொண்டிருந்தான். அவனோ ஏதோ டி-20 கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல சுவாரஸ்யமாக மஹாபத்ராவைப் பார்த்திருந்தான்.

“நான் இடிச்சா கூட தான் உனக்கு டேமேஜ் ஆகாது… லேசா இடிச்சுக்கவா…?” கோண சிரிப்புடன் பேசியபடி மஹாபத்ராவின் அருகில் வந்த ரௌடிக்கு, சில நொடிகளில் என்ன நிகழ்ந்தது என்றே புரியவில்லை.

மஹாபத்ரா தான், நொடி நேரத்தில் அவனது கையைப் பற்றி திருகி முறித்திருந்தாள். “நானும் லேசா கையை பிடிச்சுக்குறேன்டா. உனக்கு டேமேஜ் ஆகாம பாத்துக்குறேன்…” என்று அவனைப் போன்றே கோண சிரிப்புடன் கூறியவள், கோபத்துடன் அவனை மிதித்து தள்ளினாள்.

அவனுடன் வந்த மற்ற இரு ரௌடிகளும் திகைத்திருக்க, “என்னடா உங்களையும் டேமேஜ் பண்ணனுமா?” என மஹாபத்ரா சீறியதில் ஒருவன் பயந்து ஓடி இருக்க, மற்றொருவன் தடுமாறியபடி அவளை தாக்க முயன்றான்.

அவன் முடியை கொத்தோடு பிடித்தவள், “நானே பெரிய ரௌடி. நீ என்னை விட பெரிய ரௌடியா என்ன? யாருடா அந்த வீரா… அந்த நாயை இங்க வர சொல்லு… நாயை கண்டதுண்டமா வெட்டி, தெருநாய்க்கு எலும்புத்துண்டா போடுறேன். போனை போடு. போடுடா…” என்று மிரட்டியதில், அவன் திகைத்து வீராவிற்கு போன் செய்திட, அதைக் கேட்டு கொதிநிலைக்கு சென்றார் வீரா.

மஞ்சுளாவும் வசீகரனும் ‘பே’ வென பார்த்திருக்க, அடுத்த சில நிமிடங்களில் வீரா அங்கு வந்திருந்தார்.

“டேய் யாருடா உங்களை அடிச்சது?” என வீராப்பாக வந்தவர், மஹாபத்ராவைக் கண்டதும் திகைத்தார்.

“மஹாம்மா… நீங்களா! உங்ககிட்டயா இவனுங்க பிரச்சனை பண்ணுனாங்க” என்று கீழே வலியில் சுருண்டிருந்த இருவரையும் ஓங்கி எத்தியவர், “சாரிமா… ஏதோ தெரியாம உங்ககிட்ட வச்சுக்கிட்டாங்க” என்று பதறிய வீரா, ஹர்மேந்திரனுக்கு அடியாளாக வேலை செய்தவர் தான். பின், தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்து, அங்கேயே தனது ரௌடிசத்தை தொடர்ந்தார்.

“இந்த ஏரியாலயே உன்னையும் பார்க்க கூடாது… உன் ஆளுங்களையும் பார்க்க கூடாது. ரௌடிசம் பண்ற  மூஞ்ச பாரு… போயா!” என முகத்தை சுருக்கி அவரை அதட்டிட, அவரும் விட்டால் போதுமென கிளம்பியே விட்டார்.

தந்தை வயதில் இருப்பவரையே இந்த மிரட்டு மிரட்டுகிறாளே என மஞ்சுளா வாயில் விரல் வைக்க, வசீகரன் தான் உறைந்திருந்தான்.

“சொல்லுங்க… சொல்லுங்க சொல்லுங்க… நீங்க யாரு? பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” வசீகரன் பாட்சா வசனத்தை மஹாபத்ராவை பார்த்து கேட்க, அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

“பாம்பேல இல்ல மாம்ஸ்… ஹைதராபாத். ஒரு பெரிய பேட்டை ரௌடியை அநியாயமா உங்க மச்சினனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சு என் வாழ்க்கையை பாழாக்கிட்டீங்களே மாம்ஸ்…” என தஷ்வந்த் நீலிக்கண்ணீர் வடித்ததில்,

“அடப்பாவி… நாங்க எப்படா உனக்கு கல்யாணம் பண்ணுனோம். நீ தானடா அவசர அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்ட.” என்று நொந்து போன வசீகரன், “உண்மையாவே நீ ரௌடியா மஹா?” எனக் கேட்டான் அப்பாவியாக.

“யோவ்…” கடுப்பாகி மரியாதையைக் குறைத்திட, “இருக்க இருக்க மரியாதை தேயுதுடா தஷு.” பாவமாக கூறிய வசீகரனைக் கண்டு சிரிப்பு எழுந்தாலும், “இவ தான் பெரிய பாட்சா ரஜினி ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுக்குறான்னா நீங்களும் பயந்துகிட்டு…” என அசட்டையாகக் கூறியவன், ஒரு முறை பழைய மஹாபத்ராவாக தன் முன் நின்றவளை கண்ணில் நிரப்பி விட்டு வெளியில் சென்றான்.

“வெறும் பில்ட் அப்ல கையெல்லாம் உடையுமா?” என மஞ்சுளா எச்சிலை விழுங்கி விட்டு, “மஹா, அவனுக்கு கை உடைஞ்சுருக்கு பாரு…” என்றாள் பரிதாபமாக.

“நீ வேணும்ன்னா போய் ஹாஸ்பிடல்ல விட்டுட்டு பில் கட்டிட்டு வரியா” என்றதும், அவள் வேகமாக தலையாட்ட, “போடிங்…” என திட்ட வந்தவள், அந்த இரண்டு ரௌடிகளையும் ஒரு எத்து விட்டு, “இங்க என்ன படமா ஓடுது. போங்கடா வெளிய” என துரத்தி விட்டாள்.

அவர்களுக்காகவே வெளியில் காத்திருந்த தஷ்வந்த், மஹாபத்ராவிடம் திமிராக பேசியவனைப் பிடித்து, வயிற்றிலேயே குத்தினான்.

“என் பொண்டாட்டி உனக்கு ஃபிகராடா? என் டாலுவை இடிச்சு வேற பாப்பியோ” என்றபடி அவனை தலையைப் பிடித்து வாசலில் இருந்த தூணில் இடிக்க வைக்க, அவனுக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

“போதும் சார்… இன்னைக்கு என்னமோ நாள் சரி இல்ல போல. எல்லாம் ரெண்டா தெரியுது…” என கெஞ்சிய பிறகே அடங்கியவன், “உனக்கு எதுக்குடா இந்த ரௌடி வேலை…” என்ற தஷ்வந்த், ஒரு ஆட்டோவை பிடித்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.

‘அடிக்கவும் செய்றான்… ஆஸ்பத்திரிக்கும் அனுப்புறான்…’ என ரௌடிகள் தான் தலையை சொறிந்து கொண்டனர்.   

அத்தியாயம் 26:

நாட்கள் மெல்ல நகர, எப்போதும் போல மஹாபத்ராவை பின்னிருந்து அணைத்த தஷ்வந்த், அவள் கழுத்தில் குட்டி முத்தங்களை பதிக்க, அவள் கரம் கொண்டு அவனது தலைமுடியைப் பற்றி தடுத்தாள்.

“என்னடி?” முத்தங்களை நிறுத்தாமல் அவன் கேட்க, கண்ணாடி வழியே அவனைப் பார்த்தபடி, “ஐ ஆம் ப்ரெக்னன்ட்” என்றதில்,

ஒரு நிமிடம் செயல்களை நிறுத்தியவன், பின் இயல்பாக மீண்டும் முத்தமிட்டு, “தெரியும்” என்றான்.

ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவள், “உனக்கு எப்படி தெரியும்?” என்று புரியாமல் கேட்க, “ரெண்டு நாளா ரொம்ப டயர்டா இருக்க. உன் பீரியட்ஸ் மிஸ் ஆகி பத்து நாள் ஆகுது. இன்னும் ஒரு ஒன் வீக் வெய்ட் பண்ணிட்டு செக் பண்ண சொல்லலாம்ன்னு நினைச்சேன்.” இன்னும் அவன் முகம் அவள் கழுத்தில் தான் புதைந்திருந்தது.

“என் பீரியட்ஸ் டேட் உனக்கு எப்படி தெரியும்?” பட்டென அவள் கேட்க,

“நம்ம என்ன இப்ப தான் புதுசா ஒண்ணா இருக்கோமா? ஏற்கனவே மூணு வருஷம் ஒரே வீட்ல தான் இருந்துருக்கோம். அப்பவே தெரியும்.” என்றதில், இதழ்களை கடித்தாள் சிவப்புடன்.

ஆனால் இருவரும் அதற்கு மேல் குழந்தையைப் பற்றி பேசிக் கொள்ளவில்லை. மேலும் இரு நாட்கள் கழித்து, “ஹாஸ்பிடல் போய் ஒரு தடவை செக் பண்ணிட்டு வரலாம்” என்று மஹாபத்ராவை அழைக்க, “பிஸிக்கல் பார்ட்னரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற அளவு நமக்குள்ள ஒண்ணும் இல்லை தஷ்வா” என்றாள் நிதானமாக.

அவளை அழுத்தமாக ஏறிட்டவன், “அஃப்கோர்ஸ். உனக்கும் எனக்கும் தான் ஒன்னும் இல்ல. ஆனா, இங்க வளர்ற பேபிக்கும் எனக்கும் எல்லாமே இருக்கு!” என அவள் வயிற்றை தடவிக் கொடுக்க,

“நான் போயிட்டு வரேன். நீ வர தேவையில்ல” என்றாள் அவன் கையை தட்டி விட்டு.

“நான் என்ன பண்ணனும்ன்னு நீ சொல்ல தேவையில்லை. நாளைக்கு நம்ம போறோம் தட்ஸ் இட்.” என உறுதியாகக் கூறி விட்டு சென்றான்.

அவள் கருவுற்றதை அறிந்து வீட்டாருக்கு மகிழ்ச்சி பரவியது. நிதினோ, “இந்த வயித்துக்குள்ள இருந்து எப்படி குட்டி பாப்பா வரும்? அந்த பாப்பாவை நான் எப்படி கூப்பிடனும்? எப்ப பாப்பா வரும்? பாப்பா வந்ததும், அதையும் நம்ம பீச் ஹவுஸ்க்கு கூட்டிட்டு போலாமா டாலுமா? பாப்பா பார்க்க எப்படி இருக்கும் என்னை மாதிரி இருக்குமா?” என விடாமல் கேள்வி கேட்டு மஹாபத்ராவை திணறடித்தான்.

“டேய்… போதும் டா முடியல!” அவளே உதட்டைப் பிதுக்கிட, வாயை பொத்தி சிரித்தவன், “சரி… சரி மாம்ஸ் உன்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொன்னதுனால விடுறேன்.” என்று விட்டு சென்றதில், “அடப்பாவி… டிஸ்டர்ப் பண்ணாமயே இவ்ளோ கேள்வி கேக்குறானே” என சிரித்துக் கொண்டாள்.

கதிரேசனும், சகுந்தலாவும் வந்து மருமகளை பார்த்துக் கொள்ள, வீடே சந்தோஷத்தில் நிறைந்தது.

மறுநாள் மஞ்சுளாவும் மஹாபத்ராவுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தாள். அவள் குழந்தையை தாங்கும் செய்தி கேட்டதில் இருந்தே அவளை தரையில் நடக்க விடவில்லை அவள்.

மந்த்ரா வேலை செய்யும் மருத்துவமனைக்கு தான் வந்திருந்தான் தஷ்வந்த். நண்பர்களிடமும் இனிமேல் திருமணமானதை மறைக்கக் கூடாது என்றெண்ணிருக்க, அவசர டெலிவரி கேஸில் மாட்டி இருந்த மந்த்ராவால் வர தான் இயலவில்லை. அங்கிருந்த டியூட்டி டாக்டரிடமே மீண்டுமொரு முறை செக் செய்து விட்டு, ஸ்கேன் செல்லும் நாளையும் குறித்து வைத்துக் கொண்டு மூவரும் வெளியில் வந்தனர்.

மஞ்சுளா தான், “தஷு… நீ மஹாவை கூட்டிட்டு வீட்டுக்கு போ. நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்.” என்றதில், அவர்களும் காரில் ஏறிய சமயம், மந்த்ரா அங்கு வந்தாள்.

“தஷு ஏன் இத்தனை தடவை கால் பண்ணிருக்கான்…” என போனை நோண்டியபடி வந்தவன், தஷ்வந்த்தையும் அவனுடன் காரில் அமர்ந்த மஹாபத்ராவையும் பார்த்து உறைந்தே விட்டாள்.

“ஹே மந்த்ரா… நீ மந்த்ரா தான…?” மஞ்சுளா அவளை அடையாளம் கண்டுகொண்டு கேட்க, “மஞ்சுக்கா எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள் இன்னும் அதிர்ச்சி குறையாமல். கல்லூரி படிக்கும் போதே, ஒரு முறை தஷ்வந்தின் வீட்டிற்கு மாதவும் மந்த்ராவும் வந்திருந்தனர். அதிலிருந்தே மஞ்சுளாவுடன் நல்ல பழக்கம் இருந்தது.

“நான் நல்லா இருக்கேன். சென்னைல இருந்துகிட்டு வீட்டுக்கு வரவே இல்ல…” என்று கோபித்துக் கொள்ள, “அக்கா… இப்ப போனது தஷு தான…” என்றாள் சந்தேகமாக.

“ஆமா, மந்த்ரா தஷுவே தான். ரீசண்டா தான் மேரேஜ் ஆச்சு. பேர் மஹாபத்ரா. இப்ப கன்சீவ்வா இருக்கா. அதான் வந்தோம். நீ இங்க இருக்கன்னு தம்பூவும் என்கிட்ட சொல்லல பாரேன்…” என அங்கலாய்த்தது எதுவும் மந்த்ராவின் மனதில் ஓடவில்லை.

‘அடப்பாவி… கல்யாணம் ஆகி, குழந்தையே வர போகுது… என்கிட்ட என்னமா ஆக்டிங்க விட்டான்’ என்று வாயில் கை வைத்தவளுக்கு, அமிஷிடம் இதனைக் கூறியே ஆக வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.

மஹாபத்ரா இங்கு வந்து போனது, மதன் அமிஷ் இருவருக்குமே தெரியவில்லை. அமிஷ் ஆஷாவின் அறையில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலையாக இருக்க, ஒரு ஓரத்தில் மந்த்ராவின் நினைவு வந்து போனது.

சில நாட்களாகவே, தன்னிடம் அவள் பேச முயல்வது அவனுக்கு புரிந்தது தான். தன் காதலை ஒப்புக்கொள்ள வைக்கவே, அவள் முயல்வது புரிந்தே இருந்தது. ஆனால், அவனுக்கு தான் நாள் செல்ல செல்ல, அவளிடம் இளகும் மனதை என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு முறை இதனை வளர விடக்கூடாது என்று உறுதியாக இருக்கும் போதே, வேகமாக உள்ளே வந்தாள் மந்த்ரா.

“அமிஷ்… உங்க ஃப்ரெண்டு…” என ஆரம்பிக்கும் போதே, பட்டென எழுந்தவன்,

“என்னடி உனக்கு பிரச்சனை? ஆமா உன்னை லவ் பண்ணி தொலைச்சேன் தான். இப்ப என்னடி அதுக்கு. அதான் என்னை நாய் மாதிரி அலைய விட்டு வேடிக்கை பார்த்தீல. அப்பவே நான் உன்னை மறந்துட்டேன். ஆஷா தான் என் லைஃப். என்னை இம்சை பண்ணாத… இன்னொரு தடவை என் முன்னாடி வந்து நின்ன…” என ஆத்திரத்துடன் மிரட்டியவனைக் கண்டு அதிர்ந்தவள், கன்னத்தை தொட்ட கண்ணீரில் தான் சுயநினைவிற்கு வந்தாள்.

உணர்வற்ற குரலில், “உங்களை இம்சை பண்ணனும்ன்னு நான் வரல. உங்க பிரெண்டை பார்த்தேன். தஷு கூட. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இருக்கு. இப்ப ப்ரெக்னன்ட்டா இருக்கா. அதை சொல்ல தான் வந்தேன். இனிமே உங்க முன்னாடி வந்து இனிமே நிக்க மாட்டேன்.” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அவனோ சில நொடிகள் அவள் கூறியது புரியாமல் மலைத்திருந்தான்.

அந்நேரம், “அ… அமி…” வாயை திறந்து பேச இயலாமல், கோமாவில் படுத்திருந்த ஆஷா, கண்ணைத் திறந்து கைகள் நடுங்க சுற்றிலும் பார்வையிட, மந்த்ரா மற்றவை மறந்து வேகமாக அவளிடம் வந்தாள்.

இத்தனை வருடமாக அவள் விழிப்பதற்காக காத்திருந்த அமிஷ் இப்போது அவள் விழித்து விட்டாள் என்றதை கூட உணராமல் பேயறைந்தது போல நின்றான்.

“அமிஷ்… அவள் கண்ணு முழிச்சுட்டா.” என்று உலுக்க, அவனிடம் அப்போதும் அசைவில்லை. அவளோ நொந்து, அவசரமாக தஷ்வந்திற்கு போன் செய்ய நல்லவேளையாக அவன் அப்போது தான் மருத்துவமனை வாசலில் காரை நிறுத்தி இருந்தான். அதில் உடனடியாக உள்ளே நுழைந்து, ஆஷாவை பரிசோதித்தான்.

கண்ணைத் திறக்க இயலாமல் மூடி மூடி திறந்தவள், “த… தஷு!” என ஈனக்குரலில் அழைக்க, அவனுக்கும் கண் கலங்கி போனது. “ஆர் யூ ஓகே சீனியர்?” எனக் கேட்டவனிடம், தலையை மட்டும் ஆட்டி விட்டு, அமிஷைப் பார்க்க, அவனோ திகைத்த முகத்துடன் நின்றிருந்தான்.

பின் முயன்று ஆஷாவைக் கண்டு முறுவலித்து “யூ ஆர் பேக்…” என்றவன், மந்த்ராவிடம் “பாத்துக்கோ” என்று விட்டு, தஷ்வந்தை தரதரவென இழுத்து வந்தான்.

அவன் செயலில் புரியாமல் பார்த்த தஷ்வந்த், “வாட் இஸ் ராங் வித் யூ அமிஷ்?” எனக் கேட்டதில், அவனை தீர்க்கமாக பார்த்தவன், “மந்த்ரா சொன்னது உண்மையா? நீயும் மஹுவும் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்களா? இஸ் ஷீ ரியலி ப்ரெக்னன்ட்?” என நம்ப இயலாமல் கேட்டான்.

தோளைக் குலுக்கிய தஷ்வந்த், அதனை ஆமோதிப்பது போல பார்க்க, அமிஷ் பின்னந்தலையைக் கோதினான்.

“அவ… அவள் உன் அத்தை பொண்ணு!” ஆங்கிலத்தில் இறுக்கத்துடன் அமிஷ் உரைக்க, அவனை நோக்கி அர்த்தப்பார்வை வீசியவன், “ஐ நோ!” என்றான் அமர்த்தலாக.

அதில் திகைத்த அமிஷ், “அவள் உண்மையாவே உன்னை லவ் பண்ணுனா!” என்றதில், அதற்கும் ஒரு தோள் குலுக்களை பரிசாகக் கொடுத்தவன், “ஐ நோ” என்றிட, அமிஷோ குழம்பி விட்டான்.

“உங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் ஓகே வா?” அவன் புருவம் சுருக்கி கேட்டதில், “உன் பிரெண்டு இப்ப ப்ரெக்னன்ட் – ஆ இருக்கா? இதுலயே தெரியலையா நாங்க ரெண்டு பேரும் அன்னியோன்யமா தான் இருக்கோம்ன்னு” என்றவனின் கூற்றில் சிறு நக்கல் தென்பட்டது.

அதனை ஒதுக்கியவன், “இல்ல… அப்படி எல்லாமே நல்லா இருந்திருந்தா, அவள் ப்ரெக்னன்ட் ஆகியிருக்க மாட்டா” என்றான் உறுதியாக.

சட்டென பார்வையை கூர்மையாக்கிய தஷ்வந்த், ‘என்ன சொல்ற?’ என்பது போல பார்க்க,

“ஷீ… அவள் ப்ரெக்னன்ட் ஆக கூடாதுடா. அவளோட யூட்ரஸ்ல மேஜர் இன்ஜியூரி ஆகிடுச்சு. அப்பவே அவளை யூட்டரஸ் ரிமூவல் சர்ஜெரி பண்ண சொன்னாங்க. அவள் தான், அசால்ட்டா விட்டுட்டா. அவள் கூட ஒரு சின்ன பையன் இருந்ததுனால, அவனை விட்டுட்டு இப்போதைக்கு சர்ஜரி போக முடியாதுன்னு தள்ளி போட்டுக்கிட்டே போய்ட்டா. நானும் எவ்ளவோ சொன்னேன். அவள் சரியாகி வர்ற வரை நிதினை நான் பாத்துக்குறேன்னு அவள் தான் கேட்கவே இல்ல. என்னை நம்பி கூட நிதினை விட மாட்டேன்டா…” என்றவன், “ஐயோ உனக்கு நிதினையே தெரியாதுல… சே…” என தரையில் காலை உதைத்துக் கொண்டான்.

இன்னும் நடந்த விவரங்கள் எதுவுமே அமிஷிற்கு தெரியவில்லை. அமிஷிற்கு தெரிந்த விவரங்கள் இப்போது தான் தஷ்வந்திற்கும் தெரிகிறது. அவளது ‘ஓகே’ விற்கான பின்விளைவுகள் என்னவென்று இப்போது புரிந்தது.

கடினமான முகத்துடனே, “என்ன…” என்று ஆரம்பித்தவன், குரலை சரி செய்து கொண்டு, “என்ன ப்ராப்ளம்?” எனக் கேட்க,

“ஒரு குழந்தையை காப்பாத்த போய் ஒருத்தன் அவளை வயித்துல கத்தியால குத்திட்டான். அதுல அவளுக்கு ரொம்ப அடி. யூட்டரஸ் தான் ரொம்ப வீக் ஆகி, தையலும் போட்டு… அவள் ப்ரெக்னன்ட் ஆனா, டெலிவரி டைம்ல ரொம்ப கஷ்டம்…” என எச்சிலை வேதனையுடன் விழுங்கிய அமிஷ், “ப்ளீடிங் ரொம்ப ஆகிடும். கண்ட்ரோல் பண்ண முடியாது. அவ… அவளால ஹோல்டு பண்ண முடியாது… பேபிக்கு ப்ராப்லம் இல்ல. ஆனா அவளை காப்பாத்த முடியாதுடா! அவளுக்கு என்ன பைத்தியமா… இதெல்லாம் அவளுக்கே தெரியும் தான.” என முகத்தை மூடி தரையில் அமர்ந்து விட்டான்.

பின் சட்டென நிமிர்ந்து, “அவள் உன் அத்தை பொண்ணுன்னு தெரிஞ்சு வச்சுருக்க, உன்னை லவ் பண்ணுணான்றதும் தெரிஞ்சு வச்சுருக்க, அப்போ இதுவும் உனக்கு தெரியும் தான. தெரிஞ்சே அவளை பழி வாங்குனியாடா?” என தஷ்வந்தின் சட்டையை பிடித்தான்.

அவன் பதில் பேசவில்லை. ஏனோ அனைத்து உணர்வுகளும் மரத்திருந்தது. முகமோ பாறையாக இறுகி இருக்க, மெல்ல அவன் கரத்தை எடுத்து விட்டான்.

“இப்ப என்ன? அவள் செத்துருவா அவ்ளோ தான…?” என்றவனின் குரலில் அசட்டுத்தன்மையே இருந்தது. ஆனால், உள்ளுக்குள் அவனும் மரித்திருந்தான் என்று மற்றவருக்கு எப்படி புரிய வைப்பது… வீண் நேர விரயம்!

அமிஷோ, அவனை கொலைவெறியுடன் பார்த்து, “மஹூ எங்க. நான் அவளை பாக்கணும்.” என்று எரிச்சலுடன் கேட்க, “கம்…” என இயல்புடன் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

“மஹா… இந்த ஜுஸை குடி.” என்று பழச்சாற்றை அவள் முன் நீட்டிய மஞ்சுளாவை முறைத்த மஹாபத்ரா, “உனக்கு மனசாட்சியே இல்லையா மஞ்சு. இப்ப தான குடிச்சேன்.” என்றதில், “அது ஆரஞ்சு ஜுஸ். இது ஆப்பிள் ஜுஸ்…” என்று இளித்தவளைக் கண்டு காண்டானாள்.

வசீகரனோ, “ரௌடி சிஸ்டர், அடுத்த ஐட்டம் வேற ரெடி ஆகிட்டு இருக்கு…” என்று மாதுளையை உரித்துக் கொண்டிருக்க, “அதை உரிக்கிற மாதிரி புருஷனையும் பொண்டாட்டியையும் நான் உரிக்க போறேன்” என்று பற்களை கடித்தாள்.

“நோ நோ இந்த மாதிரி நேரத்துல, வன்முறையா யோசிக்க கூடாது. அப்பறம் பேபியும் உன்ன மாதிரி வன்முறையா பிறக்கும்” என்றதில், ஏனோ சட்டென அமைதியாகி விட்டாள்.

அந்நேரம் தான் தஷ்வந்துடன் உள்ளே நுழைந்த அமிஷைக் கண்டு திகைத்த மஹாபத்ரா, “அமி… மிரு இக்கட ஏமி சேஸ்துன்னாரு?” என்றதில், கோபத்தையும் காட்ட இயலாமல், கண்ணீரையும் அடக்க இயலாமல், அவளைக் கட்டிக்கொண்டான்.

தஷ்வந்திடம் எதை உளறி வைத்தான் என்று புரியாமல், அவசரமாக கணவனின் முகம் பார்க்க, அது என்னவோ சாதாரணமாக தான் இருந்தது.

மஞ்சுளா தான், அமிஷை யாரென பார்க்க, “அவனை விடுங்க… மாம்ஸ் உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் ஒரு விஷயம் கேட்கணும்…” இயல்பாக ஆரம்பித்தவனை இருவரும் என்னவென நோக்கினர்.

“என் குழந்தையை நீங்க ரெண்டு பேரும் உங்க குழந்தையா வளர்க்கணும்…” என அழுத்தம் திருத்ததுடன் கூறியவன், மறந்தும் கூட மஹாபத்ராவின் முகத்தைப் பார்க்கவில்லை. அவன் கூற்றில் நால்வருமே விழித்தனர்.

மஞ்சுவோ, “என்னடா உளறுற. எப்படி பார்த்தாலும் உன் குழந்தையும் எங்க குழந்தை மாதிரி தான?” என்றதில்,

“மாதிரி இல்ல. உங்க குழந்தையா வளர்க்கணும்.” அவனது வார்த்தைகள் கடினத்துடனே வந்தது.

வசீகரனோ, அவன் ஏதோ விளையாடுகிறான் என்றெண்ணி, “டேய்… நீ உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்றதுக்காக, பேபியை எங்க கிட்ட ஒப்படைச்சுட்டு, எஸ்கேப் ஆக பாக்குறியா? அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்… போய் வேற வேலை இருந்தா பாரு” என்னும் போதே, தஷ்வந்தின் அழுத்த முகம் அவனை என்னவோ பதற வைத்தது.

“ஆமா, எஸ்கேப் ஆக தான் பாக்குறேன்.” என இதழ் வளைத்தவன்,

“பேபி பிறந்ததுக்கு அப்பறம், பேபியோட அம்மா உயிரோட இருக்க மாட்டா. அந்த பேபியோட அப்பாவும் உயிரோட இருக்க மாட்டேன். என் குழந்தை அநாதை ஆகுறதுல எனக்கு விருப்பம் இல்ல. அதான் உங்ககிட்ட வந்து நிக்கிறேன். என் குழந்தையை பத்திரமா பாத்துப்பேன்னு சொல்லுங்க… நிம்மதியா சாகுறேன். ப்ளீஸ்…” என இருவரிடமும் இறுதி வரியை யாசகத்துடன் கேட்க, மஹாபத்ரா அவனது வார்த்தைகளில் உறைந்து விட்டாள்.

காயம் ஆறும்!
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
44
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்