Loading

ஆரவிடம் சிறை பிடிக்கப்பட்ட செவ்விதழ்கள், விடுதலையாக மனமின்றி ஆயுள் தண்டனையாக மாற தவித்திட, விலக விருப்பம் துளியும் இன்றியே இருவரும் ஒரே நேரத்தில் நகர்ந்தனர்.

வெட்கத்தில் குளித்திருந்த வான்மதியின் கன்னங்கள் மிளிர, அதரங்களோ ஆடவனின் தயவில் பொன்னிறமாகி இருந்தது. உள்ளங்கை கொண்டு, உதடுகளில் ஒட்டியிருந்த கணவனின் இதழீரத்தை துடைத்துக் கொண்ட வான்மதி, மறுபுறம் திரும்பி அமர்ந்து கொள்ள, ஆரவிற்கோ வெளியில் செல்ல மனமே இல்லை. அப்படியே அவளை அள்ளிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்ட முத்தத்தை தொடர வேண்டும் போல, கரங்கள் பரபரத்தது.

“மதி…” ஹஸ்கி குரலில் கண்ணில் மின்னும் தாபத்துடன் அவளை அழைத்தவன், “நம்ம வீட்டுக்கே போலாமா?” என அவள் புறம் மெல்ல சாய்ந்து வினவ, அவளுக்கே அவளுக்கான தன்னுடையவனின் அத்தாபமும், ஏக்கமும், நேசமும், ஆசையும் அவளை வெகுவாய் உருக்கியது.

மலர்ந்த குறுநகை ஒன்றை வீசியவள், “எனக்கும் வெளிய போக தோணவே இல்ல. ஆனா, போகலைன்னா மோனி திட்டுவா ஆரவ்” என பாவமாக கூறி விட்டு நிமிர்ந்தவள், நிமிர்ந்த கணத்தில் கண்களை தாழ்த்திக்கொண்டாள்.

ஆரவின் விழுங்கி விடும் பார்வையை தாங்கும் சக்தி அவள் விழிகளுக்கு சிறிதும் இல்லையே.

“ஆரவ் ப்ளீஸ்… எனக்கு வெட்க வெட்கமா வருது. அப்படி பார்க்காதீங்க…” என்று சிணுங்கியபடி முகத்தை மூடிக் கொண்டவளைக் கண்டு, இன்னும் அவனுள் காதல் தீ பரவ, “ப்ளீஸ் டி. நீயும் இப்படி வெட்கப்படாத… எனக்கு என்ன என்னமோ தோணுது…” என்றான் அவளைப் போன்றே சிணுங்கியபடி.

“கிண்டல் பண்ணாதீங்க ஆரவ்…” என அவனின் தோளில் சாய்ந்தவளுக்கு, அவன் பேசிய தோரணை சிரிப்பைக் கொடுக்க, அவனும் பொங்கிய சிரிப்பை அடக்கியபடி, தன்விக்கின் வீட்டை நோக்கி சென்றான்.

அங்கு செல்லும் வரையும், அவளும் அவனை விட்டு விலகவில்லை. அவனும் விலக்கவில்லை. அவ்வப்பொழுது, அவளின் தலை மீது அவன் தலையை சாய்த்துக் கொண்டான்.

உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டான். அதில் அவள் மேனி சிலிர்க்க, இன்னும் அவனின் ஆர்ம்ஸை இறுக்கமாக பற்றிக் கொண்டவளிடம், “இதுக்கு பேரு ஹெட் கிஸ் கண்ணம்மா!” என்றான் குறும்பாக.

அவள் தான் சிறிதாய் விழி உயர்த்தி முறைத்து, “ரோட்டுல போகும் போது கூட, விளக்கம் சொல்லணுமா ஆரவ். ரொம்ப மோசம் நீங்க. ஒழுங்கா காரை ஓட்டுங்க.” என்று சிறுகுரலில் போலியாய் அதட்டிட,

“அடிப்பாவி, கியர் கூட போட விடாம, கையை பிடிச்சுட்டு வந்துட்டு, என்னை மோசம்ன்னு சொல்றியா?” என அவன் முறைக்க, நன்றாக சிரித்து விட்டவள், “அப்படி தான் பிடிப்பேன். பிடிக்க கூடாதா?” என்று அழுத்தமாக கூறி விட்டு, கேள்வியும் கேட்டுக் கொண்டாள்.

“பிடிக்கலாமே…! இன்னும் இறுக்கமா கட்டி கூட பிடிச்சுக்கலாம்” என ரசனையுடன் அவன் கூறிட, வான்மதியும் அவனை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

புது மண தம்பதிகளுக்கு, மோனிஷாவின் நண்பர்கள் பரிசளித்து வாழ்த்து தெரிவிக்க, ஹேமா மட்டும் தான் அப்போது வந்திருந்தாள். வந்தவர்களை கவனித்து, சாப்பிட அனுப்பியவள் அவ்வப்பொழுது வாசலை பார்த்துக் கொண்டாள்.

மோனிஷா தான், “ஹேமாக்கா, எங்க உங்க ப்ரெண்ட்ஸ் யாரையும் காணோம்?” என கேட்க,

“வந்துட்டு இருப்பாங்கடா.” என்றிட, தன்விக், “இவ்ளோ நேரம் என்ன பண்றானுங்க?” என திட்டி விட்டு, “சுதாகரையும் இன்வைட் பண்ணேன். அவன் ஏன் வரல” என வினவினான்.

தன்னிச்சையாக கண்கள் கலங்கி நிற்க, அதனை மறைத்தவள், “என்னை கேட்டா, நான் என்ன அவனை பாக்கெட்ல வச்சுக்கிட்டா சுத்துறேன்” என்றாள் சிலுப்பலாக.

“சே… சே… பாக்கெட்ல இல்ல. இதயத்துல வைச்சுட்டு சுத்துறல்ல. அதான், அவனை கொஞ்சம் இறக்கி விட்டா பார்ட்டிக்கு வருவானேன்னு கேட்டேன்” என அவன் நேரம் காலம் தெரியாமல் கிண்டல் செல்ல, ஹேமாவிற்கு அழுது விடுவோமோ என்று பயமாக இருந்தது.

அதில் அமைதியானவள், கவினையும் லயாவையும் கண்டு நிம்மதியாகி, அவர்கள் அருகில் சென்று, “ஏண்டா இவ்ளோ லேட்டு” என்றாள்.

அவனோ லயாவை கை காட்டி, “எல்லாம் இவளால தான். வர்றதா வேணாம்ன்னு முடிவு எடுக்கவே இவளுக்கு இவ்ளோ நேரம் ஆகிடுச்சு ஹேமா.” என்று முறைத்து விட்டு, தன்விக்கின் அருகில் சென்று நிற்க, லயா அவனை தீப்பார்வை பார்த்தாள்.

ஹேமா புரியாமல், “என்னடி ஆச்சு?” எனக் கேட்க, அவள் அதனை கவனியாமல் கவினையே அப்பட்டமாக வெறித்திருந்தாள்.

அதில் இன்னும் குழம்பியவள், “அடியேய். ஏண்டி கவியை இப்படி பாக்குற…?” என அவளை உலுக்க, லயா புருவம் சுருக்கி, “செகண்ட் டைம் கூட லவ் வருமா ஹேமா?” எனக் கேட்டாள்.

ஹேமாவோ விழித்து, “என்ன உளறுற? லவ்ல ஃபர்ஸ்ட் செகண்ட்ன்னு எதுவும் கிடையாது லயா. ஆமா, எதுக்கு இந்த கேள்வி?” என வினவ,

அவளோ, “ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்றது தப்பாடி.” என மீண்டும் கேட்க, “எனக்கு புரியல. நீ யார்கிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் பண்ற. என்ன எக்ஸ்பெக்ட் பண்ற” என்றதில், அவளின் விழிகள் கவினை நோக்க, ஹேமாவும் அதனை கண்டுகொண்டாள்.

“லயா? யூ லவ் ஹிம்?” என விழி விரித்து வினவியதில்,

“ப்ச், ஐ டோன்ட் நோ. அண்ட் ஐ டோன்ட் வாண்ட் டு நோ.” என்று அழுத்தமாக கூறியவள், “தலைவலிக்குது. நான் வீட்டுக்கு போறேன். தன்விட்ட சொல்லிடு” என்று விட்டு, அவளின் பதிலை எதிர்பாராமல் சென்று விட, ஹேமா குழப்பத்துடன் நின்றிருந்தாள்.

அப்போது தான், அவள் முன் ஆரவ் காரை நிறுத்தி விட்டு இறங்கி, “நீ ஏன் பேயறைஞ்ச மாதிரி நிக்கிற?” என நக்கலாக வினவ, “லயாவும் கவியும் லவ் பண்றாங்களா என்ன?” என்று அவனை பார்த்தாள்.

அவனோ யோசியாமல், “கவி லவ் பண்றான். பட் லயா எப்டின்னு தெரியல…” என்று விட, அவளோ திகைத்து, “உனக்கு எப்படா தெரியும்?” என்றதில், புன்சிரிப்பை பூத்தவன், “காலேஜ் படிக்கும் போதே” என்றான் கண்சிமிட்டி.

லயா கிளம்புவதை தூரத்திலேயே பார்த்து விட்ட கவின், அவசரமாக அவர்கள் அருகில் வர, வந்தவன் இந்த சம்பாஷணையைக் கேட்டு அதிர்ந்து விட்டான்.

ஆரவும் அவனை அர்த்தத்துடன் ஒரு பார்வை வீசி விட்டு, இஷாந்தை தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல, வான்மதி நடப்பது புரியாமல் அவன் பின் சென்றவள், “ஆரவ்” என அழைத்தாள்.

அவன் என்னவென்று பார்த்ததும், “நான் ஒன்னு கேட்கட்டா?” என ஆரம்பிக்க, அவனோ கண்ணோரம் சுருங்க, “இங்கேயா?” என சுற்றி முற்றி பார்த்து விட்டு, “ஒன்னு என்ன பத்து கூட கேளு கண்ணம்மா. ஐ ஆம் ரெடி” என்றதில், அதன் பிறகே, அவன் எதை பற்றி பேசுகிறான் என புரிந்து சிவந்தாள்.

செல்லமாக அவன் கைகளில் தட்டியவள், “அது இல்ல ஆரவ்…” என காலை உதைக்க, அவனோ சிறிதாய் சிரித்து, “நீ என்ன கேனைத்தனமான கேள்வி கேட்க போறன்னு தெரியும்டி.” என்றான் நாக்கை துருக்கி.

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள், “ஓஹோ! இப்பயும் என் மைண்ட ரீட் பண்ணிட்டீங்களா? எங்க நான் என்ன நினைச்சேன் சொல்லுங்க” என்று திமிராக கேட்க,

அவளை அங்குல அங்குலமாக ரசித்தவன், “கவி, லயாவை லவ் பண்றது தெரிஞ்சதுனால தான், அவள் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணப்ப, நான் அக்செப்ட் பண்ணலையான்னு தான கேட்க போற…” என உதட்டை மடித்து கேலியாக வினவ, அவள் உறைந்து நின்றாள்.

“எப்படி ஆரவ். கரெக்ட்டா சொன்னீங்க?” அவள் கிட்டத்தட்ட கத்தியே விட்டு, பின் இருக்கும் இடம் மறந்து வாயை பொத்திக் கொண்டாள்.

அதில் அவனும் சத்தமாக சிரித்திட, “சிரிச்சு சமாளிக்காதீங்க. உண்மையை சொல்லுங்க.” என்றாள் விழிகளை உருட்டி.

“என்னடி உண்மையை சொல்லணும் உனக்கு?” ஆரவ் புருவம் நெளித்து கேட்க,

“நீங்க… இல்ல நிஜமாவே உங்களுக்கு லயா மேல…” என கேட்க வந்து விட்டு, கேட்க இயலாமல் நிறுத்தினாள்.

“ம்ம். லயா மேல… என்ன சொல்ல வந்தன்னு முழுசா சொல்லு” என்று கேட்டவனின் தோரணையே, சொல்லி தான் பாரேன் என்ற ரீதியில் வெளிவர, அவள் தான் விழித்தாள்.

ஆரவின் புன்னகை முகம், சற்றே கடுமை பரவி இருக்க, “இங்க பாரு மதி. லயா என் பெஸ்ட் ப்ரெண்ட். இப்போ இல்ல. எப்பவுமே… அவள் என்னை லவ் பண்ணிருக்கலாம். ஆனா, அதுக்காக நான் அவளை வெறுக்கவும் மாட்டேன். அதே நேரம், அந்த லவ்வை அக்செப்ட் பண்ணிக்கவும் மாட்டேன். அது கவிக்காகவும் இல்ல. எனக்குன்னு ஒரு இன்னர் ஃபீலிங்ஸ் இருக்கு. அதை மட்டும் தான் நான் கேட்பேன். அந்த புல்ஷிட் இன்னர் ஃபீலிங்ஸ்னால தான், இப்போ வரை நான் நிறைய தொலைச்சு இருக்கேன்.” என அழுத்தம் திருத்தமாக கூறியவனின் குரல் கர்ஜனையாக தான் வெளிவந்தது.

திடீரென இத்தனை கோபப்படுவான் என அறியாதவள், எச்சிலை விழுங்கியபடி நிற்க, அவனோ அதே கடுமையுடன் நகர எத்தனித்து விட்டு, சட்டென்று நின்று விழி இடுங்க,

“ஒன் செகண்ட்… எனக்கு ஆரம்பத்தில இருந்தே இந்த டவுட் இருக்கு. உங்கிட்ட என் ப்ரெண்ட்ஸ பத்தியோ, லயா பத்தியோ இப்ப வரை கூட சொன்னதே இல்ல. அப்போ எப்படி அவளை முதல் தடவை பாக்கும் போது கூட நீ பெருசா ரியாக்ட் பண்ணல. ஏன் இப்போ கூட, அவள் என்னை லவ் பண்ணது வரை, எப்படி இவ்ளோ அக்கியூரேட்டா சொல்ற?” என வினாக்களை தொடுக்க, அவளுக்கு நெற்றி எங்கும் வியர்த்து விட்டது.

கூடவே, அவனை ஊட்டியில் பார்த்த நினைவுகள் அவளை அலைக்கழிக்க தொடங்க, சிறு வெட்கமும் தொற்றிக் கொள்ள, அவளின் முக மாற்றத்தில் அவனுக்கு இத்தனை நேரம் இருந்த இறுக்கம் மாறி சுவாரஸ்யம் தோன்ற, அவளையே கூர்மையாக பார்த்திருந்தான்.

அவளோ, “நீங்க மட்டும் என் அப்பாவை எப்படி தெரியும்ன்னு கேட்டதுக்கு பதில் சொன்னீங்களா? அப்போ நான் மட்டுமே ஏன் சொல்லணும்.” என்று பந்தை அவன் புறம் திருப்ப, அவனோ கீழ்க்கண்ணால் முறைத்து,

“சிம்பிள் லாஜிக் தான் மதி. இன்னும் கூட நீ அதை கண்டுபிடிக்கல” என தலை சாய்த்து கூற, அவளோ அதனை ஆராயாமல், “இதுவும் சிம்பிள் லாஜிக் தான் ஆரவ். நீங்களே கண்டுபிடிங்க” என குறும்பு மின்ன கூறி விட்டு, அவன் மறு கேள்வி கேட்கும் முன், நல்ல பெண்ணாக மோனிஷாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

மனம் மட்டும் படபடவென வேகமாக துடித்தது அவளுக்கு. இன்னும் சில நொடிகள் அவன் முன் நின்றிருந்தால், அனைத்தையும் உளறி இருப்பாள். ‘மதி… கண்ட்ரோல். அவன் முன்னாடி உளறாம இரு.’ என தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

ஹேமா அதிர்வில் இருந்த கவினின் முகத்தைப் பார்த்து, “ஆரவ் சொன்னது உண்மையா கவி… நீ லயாவ…” என கேள்வியுடன் நிறுத்த, அதற்கு பதிலாக அவன் விழியில் இருந்து ஒரு துளி நீர் வெளிவந்ததில் பதறி விட்டாள்.

“லூசு… என்னடா இது? கண்ணெல்லாம் கலங்கிட்டு.” என அக்கறையுடன் அதட்ட, அவனோ “ஆரவ் அவள் லவ்வ அக்செப்ட் பண்ணிருந்தா, இந்த காதலை நான் லயாட்ட கூட சொல்லாம என்னோட புதைச்சுருப்பேன் ஹேமா. ஆனா, ஆரவ்க்கு எப்படி தெரிஞ்சுது?” என புரியாமல் அவன் நின்றிருந்த திசையை பார்க்க, ஆரவும் அவனை தான் நக்கலாக பார்த்திருந்தான்.

அதில் சட்டென முகத்தை திருப்பியவன், “இப்போ எதுக்கு அவன் என்னை இப்படி பாக்குறான்?” என சற்றே கிலி பிடிக்கக் கேட்க, ஹேமா தான் அவனை மேலும் கீழும் கேவலமாக ஒரு பார்வை பார்த்து, “பரதேசி, அதை அவன்ட்ட போய் கேளு. நீ பண்ற இந்த கேனைத்தனமான லவ்க்கு என்னால சோக மியூசிக்லாம் வாசிக்க முடியாது…” என அவள் பங்கிற்கு வாரி விட்டு சென்றாள்.

தன்விக் தான், “என்னடா வந்துட்டு ஆளுக்கு ஒரு மூலைல நிக்கிறீங்க.” என்பது போல நண்பர்களை பார்த்து வைக்க, அதில் மூவரும் அவனுடன் இணைந்து கொண்டனர்.

மோனிஷா தான், “என் கண் மை அழிஞ்சுருச்சா, லிப்ஸ்டிக் கலைஞ்சுருச்சா” என வான்மதியை படுத்தி எடுக்க, அவளோ “இல்லடி. நல்லா தான் இருக்கு.” என்றாள் பாவமாக.

மீண்டும் சிறிது நேரம் கழித்து, “சேலை மடிப்பு கசங்கிருச்சுடி. எடுத்து விடேன்…” என இளித்து வைக்க, அவளை பொய்யாய் முறைத்து வைத்தவள், சிரிப்புடன் அவள் முன் அமர்ந்து சரி செய்ய, ஆரவ் தான், தன்விக் காதருகில் வந்து, “நீ என்ன பு****டு இருக்கியா?” என மேலும் சில நல்ல வார்த்தைகள் கூறி அபிஷேகம் செய்ய தொடங்க, அதன்பிறகே, வான்மதி கீழே அமர்ந்திருப்பதைக் கண்டு கடுப்பாகிறான் என்றே உணர்ந்தவனுக்கு காதில் இருந்து இரத்தம் மட்டும் தான் வரவில்லை.

“மதி…” என தன்விக் கத்தி விட்டதில், இரு பெண்களுமே சட்டென நிமிர, “நீ எந்திரி. நான் பாத்துக்குறேன்.” என்றான்.

வான்மதி தான் புரியாமல், “என்ன பாத்துக்க போறீங்க?” என குழம்ப, “அது… அது… என் பொண்டாட்டிக்கு நான் தான் இதெல்லாம் செய்யணும்.” என வாய்க்கு வந்ததை உளற, அதில் நமுட்டு சிரிப்பு சிரித்தவள், “ஓஹோ! பாத்துக்கங்க பாத்துக்கங்க…” என்று சிரித்தபடி எழுந்தவளுக்கு, ஆரவின் முறைப்பும் லேசாக உறுத்தியது.

உடனே தன்விக், கீழே அமர்ந்து மோனிஷாவின் புடவை மடிப்பை சரி செய்ய விழைய, அவளுக்கோ அத்தனை பேர் முன்னும் தன்னை மனைவி என்றதிலும், தன் மேல் அவன் காட்டும் உரிமையிலும் தானாக வெட்கம் ஒட்டிக்கொண்டது.

அவனோ தன்னை நொந்து எழுந்து நிற்க, அப்போதும் அவள் முகத்தை பார்க்கவில்லை அவன். அவளோ, “மாமா…” என பேச வர, அவன் தான், “என்னடி உனக்கு இப்ப. மூஞ்சில ஒரு வாளி தண்ணியை ஊத்தி விட்டுருவேன். மூடிக்கிட்டு நில்லு.” என்றான் கடுப்புடன் முணுமுணுத்து. அவனும் இத்தனை நேரம் அவள் வான்மதியை படுத்தியதை கேட்டுக் கொண்டு தான் நின்றான்.

அதில் அவளுக்கு முகம் சட்டென்று சுருங்கி விட, “போடா காட்டெரும.” என்றாள் சத்தமாகவே.

பாவம் அவன் தான் அதில் மேலும் விழிக்க, உடன் இருந்த நால்வரும் கமுக்கமாக சிரித்தனர்.

வான்மதி அவளின் கையை நறுக்கென கிள்ளி, “தனியா இருக்கும் போது, என்ன வேணாலும் பேசு மோனி. எல்லாரும் இருக்கும் போது, கிவ் சம் ரெஸ்பெக்ட்.” என்றாள் கிசுகிசுப்பாக.

“இவனுக்குலாம் நான் ரெஸ்பெக்ட் வேற குடுக்கணுமா. என் மூஞ்சில தண்ணி ஊத்துவேன்னு சொல்றான். அப்படி மட்டும் ஊத்தி இருக்கட்டும். ஆசிட் ஊத்திட்டான்னு நான் கேஸ் போட்டுருப்பேன்.” என அவனை பார்த்து முறைக்க,

“எதே ஆசிட்டா? அதை வேற எதுக்கு வேஸ்ட் பண்ணனும். ஆல்ரெடி பத்து பாட்டில் ஆசிட் ஊத்துன மாதிரி தான இருக்கு.” என்று வாரினான்.

பெண்ணவள் தான் கோப பெருமூச்சுக்கள் வாங்க அவனை தீயாக முறைக்க, “உன் மூஞ்சி மட்டும் எப்படி இருக்காம். ஆசிட்ல முக்கி எடுத்த மாதிரி தான இருக்கு.” என்று பார்ட்டி ஹாலில் நின்றே இருவரும் சண்டையிட, வான்மதி, “மோனி… எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்… ஸ்டாப் திஸ்…” என்று அதட்ட,

தன்விக், “ஆமா உன் மூஞ்சிக்கு பின்ன ரித்திக் ரோஷனா வருவான்.” என்று அவனும் விடாமல் பேச, “அண்ணா… நீங்களாவது கொஞ்சம் அமைதியா இருங்களேன். ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.

அதில் அவன் மேலும் பேசாமல் அமைதியாகி விட, மற்ற மூவருமோ சத்தமாக சிரித்து விட்டனர்.

கவின், “மச்சான்… அப்போ நீ ரித்திக் ரோஷன் இல்லையா? என்ன சிஸ்டர் நீ இப்படி பேசிட்ட” என கேலியாய் பார்க்க, தன்விக் தான், “ஏண்டா ஏன்! பார்ட்டி வைச்ச பாவத்துக்கு, இந்த பாவிட்ட கோர்த்து விடுற.” என்றவன், ஆரவை முறைத்தான்.

‘உன் பொண்டாட்டி, லைட்டா கீழ உட்காந்ததுக்கு என் குடும்பத்தை பிரிக்க பார்த்துட்டியேடா’ என்பது போல பார்த்து வைக்க, அதனை கண்டுகொண்டால் அது ஆரவ் அல்லவே!

வான்மதியோ, “கவின் சார். மறுபடியும் ஸ்டார்ட் பண்ணாதீங்க. ப்ளீஸ்…” என்று கெஞ்சலுடன் உத்தரவிட, அவன் தான் உர்ரென வாயை மூடிக்கொண்டான்.

தன்விக் தன் வாழ்க்கையை காப்பாற்ற பேச்சை மாற்ற, “சுதாகர் எங்க மதி? போன் பண்ணா எடுக்கல. வாட்சப்ல பேசி வர சொல்லி இருந்தேன். ஏன் வரல?” எனக் கேட்க,

அவளும் “தெரியலையே அண்ணா. அவன் திருப்பூர் போயிருக்கான். வீட்ல தான் இருப்பான் போல. நான் போன் பண்ணப்பவும் எடுக்கல.” என்றவள் யோசனையாக ஆரவைப் பார்க்க, அவன் ஹேமாவை பார்த்தான்.

அவளோ, இப்படி ஒரு சம்பாஷணை நிகழ்வதை கண்டுகொள்ளாமல், “ஹே! சொல்ல மறந்துட்டேன். அக்காக்கு மேரேஜ்ன்னு சொன்னேன்ல இன்விடேஷன் வந்துடுச்சு. இன்னும் 10 டேஸ்ல மேரேஜ் தனி தனியா வீட்ல வந்து குடுக்க முடியாது, சோ எல்லாரும் கண்டிப்பா வந்துடுங்க.” என்றவள், கைப்பையில் துழாவி விட்டு பத்திரிக்கையை எடுக்க,

கவின், “அப்போ அடுத்து உனக்கு தான்னு சொல்லு” என்றான் கிண்டலாக.

அதற்கு சின்ன சிரிப்பொன்றை கொடுத்தவள், “ம்ம். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுங்க. அன்னைக்கு என் நிச்சயதார்த்தமும் இருக்கு.” என்று அனைவரும் அதிர்ச்சியைக் கொடுக்க, தன்விக், “அடிப்பாவி. சொல்லவே இல்ல. இது எப்போ முடிவாச்சு?” எனக் கேட்டான் வியப்பாக.

“அக்காக்கு பேசும் போது எனக்கும் பேசிட்டாங்க தன்வி. கன்ஃபார்ம் ஆனதும் சொல்லலாம்ன்னு இருந்தேன்.”

கவினோ, “அப்போ சுதாகரோட வாழ்க்க…” என நக்கலாகக் கேட்க, தன்வி தான், “சூர்யா இல்லன்னா விக்ரம்…” என்று கலாய்த்தான்.

“எக்ஸ்சாக்ட்லி” என கண்ணடித்து தன்விக்கு ஹை ஃபை கொடுத்த ஹேமாவின் விழிகள் கலங்க கூடாதென்று பலமாக தடை போட்டிருந்தது.

கவினும், தன்விக்கும் அவள் எப்போதும் போல கேலியாக சுதாகரை சைட் அடிக்கிறாள் என்று நம்பியதாலேயே இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள, ஆரவ் அவளை அழுத்தமாக பார்த்தான்.

வான்மதியோ ஒரு கணம் திகைத்து விட்டாள்.

பேச்சற்று நின்றவளிடம், “மதி. நீயும் வந்துடு.” என ஹேமா அழைக்க, அவளோ முகத்தில் அடித்தவாறு “சாரி ஹேமா. என்னால வரமுடியாது” என்று விட்டாள்.

ஹேமா இதனை எதிர்பாராமல் அதிர, கவின் புரியாமல் “என்ன பேசுற?” என்றான்.

“என்னை வேற என்ன சார் பேச சொல்றீங்க? என் அண்ணன் லவ் பண்ண பொண்ணு கல்யாணத்துக்கு போய் அட்சதை தூவுற அளவு எனக்கு பரந்த மனசு இல்ல சார்.” என்றதில் அங்கு அதிர்வலைகள் பரவிட, ஆரவ் இன்னும் ஹேமாவை முறைத்தபடி தான் நின்றிருந்தான்.

அவனைப் பாராமல் தவிர்த்த ஹேமா, வான்மதியிடம் “உளறாத மதி. சும்மா விளையாட்டுக்கு பேசுறதை எல்லாம் உன் அண்ணன் சீரியஸ் ஆ எடுத்துக்கிட்டு, லவ் அது இதுனு பினாத்துனா, நான் அதுக்கு எப்படி சம்மதிக்க முடியும்?” என்று அவளை நேராய் பார்த்து வினவ, அவளின் விழிகளை உற்றுப் பார்த்தவள், “நீங்க விளையாட என் அண்ணன் வாழ்க்கை தான் கிடைச்சுதா ஹேமா?” என்றாள் கோபத்துடன்.

அதில் ஹேமா அமைதி காக்க, “உங்க நிச்சயதார்த்தம் பத்தி சுத்திக்கு தெரியுமா?” என கூர்மையாக வினவ, ஹேமா “ம்ம்” என்றாள்.

“அப்போ, அவன் ஊருக்கு போனதுக்கு நீங்க தான் காரணம் இல்ல?” வான்மதி ஹேமாவை குற்றம் சாட்ட, தன்விக்கோ, “இங்க என்ன நடக்குது மதி. சுதாகர் ஹேமாவை லவ் பண்றானா? சரி அப்டினாலும் அவள் தான் சம்மதம் இல்லைன்னு சொல்றாளே…” என குழம்ப,

“அவங்களுக்கு சுதாகர் மேல லவ் இல்லைன்னு ஆரவ் மேல சத்தியம் பண்ண சொல்லுங்க அண்ணா. நான் நம்புறேன்.” என இடக்காக ஹேமாவை மாட்டிவிட, அவளோ திகைத்தாள்.

“நா… நான்… நான் ஏன் சத்தியம் பண்ணனும்?” எனத் திணறியவள், “நான் கிளம்புறேன்…” என்று நகர போக, அவளை சொடுக்கிட்டு நிறுத்திய வான்மதி,

“லுக் ஹேமா. என் அண்ணன் இதுவரை யார் மேலையும் ஆசைப்பட்டது இல்ல. முதல் தடவை அவன் மனசு விட்டு, தன்னோட விருப்பத்தை சொன்னது கூட, உங்க மேல வைச்சுருக்க காதலை பத்தி மட்டும் தான். என்னால உங்களை மாதிரி அவன் மனச உடைக்க முடியாது. யாரை வேணாலும் நிச்சயம் பண்ணிக்கோங்க. ஆனா கல்யாணம் என் அண்ணன் கூட தான் நடக்கணும். அவன் காதலுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்…” என தான் ஒரு சிறந்த தங்கை என்பதை நிரூபிக்க, ஹேமா அவளை நிமிர்ந்து பாராமல் கிளம்பி விட்டாள்.

கவினும் தன்விக்கும் தான், அவளை ‘பே’ வென பார்க்க, ஆரவ் அவ்வப்பொழுது ரௌடியாகி விடும் தன்னவளை ரசித்திருந்தான்.   

ஆனால், வான்மதிக்கு இன்னும் ஆற்றாமை தாங்க இயலவில்லை. அவள் அனுபவிக்கும் காதல் வலியை தன் தமையனும் அனுபவிப்பதை சிறுதும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

“ஆரவ்… நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. ஹேமா வீட்ல பேசி, உடனே அவள் என்கேஜ்மென்ட்ட நிறுத்துங்க. சுத்தி அவளை நல்லா பார்த்துப்பான்.” என்று பிடிவாதமாக பேச, அவன் பற்வரிசை மினுக்க புன்னகைத்து,

“சரிடி ரௌடி. வில்லத்தனம் பண்ணியாச்சு, உன் அண்ணன் காதலை சேர்த்து வைச்சுடலாம். ஓகே வா?” என்றான் முகத்தை குனிந்து.

அதில் தான் கோபம் தணிந்து மெதுவாக புன்னகைத்தவள், “ம்ம்” என தலையாட்ட, உடன் இருக்கும் மற்ற மூவரும் தான் ‘இது எங்க போய் முடியப்போகுதோ’ என்று விழித்தனர்.

பார்ட்டி முடிந்து வீடு திரும்புகையில், இஷாந்தும் விழித்திருக்க, அவனிடம் கொஞ்சியபடி வந்த வான்மதி சட்டென கடுகடுவென ஆனாள்.

காரை செலுத்திக் கொண்டிருந்த ஆரவ், அவள் பேச்சு நின்றதில், வான்மதி புறம் திரும்பி, “என்ன கண்ணம்மா… திடீர்னு அமைதி ஆகிட்ட” என வினவ,

அவளோ, “ப்ச் ஒன்னும் இல்ல. ஒரு விஷ ஐந்து இப்ப நம்மளை க்ராஸ் ஆச்சு. அதை பார்த்ததும் பத்திக்கிட்டு வருது.” என்று பல்லைக்கடித்ததில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“யாருடி. நான் கவனிக்கல?” என்று கேட்க,

“உங்களுக்கு தெரியாது ஆரவ் அந்த ஜந்துவ.” என முகத்தை சுருக்க, “யாருன்னு சொல்லு கண்ணம்மா. ஏன் இந்த திடீர் கோபம்… ம்ம்?” என்றான் மிருதுவாக.

“எல்லாம் அந்த விக்ராந்த்தோட அம்மா தான் ஆரவ். இப்ப தான் கார்ல நம்மளை க்ராஸ் பண்ணாங்க. அந்த பொம்பளையை நினைச்சாலே எரிச்சலா வருது. எப்போ பாரு பிசினஸ், பணம், ஸ்டேட்டஸ்… இதான் அவங்க வாயில இருந்து வரும். பெத்த பையன் தப்பு பண்றான்னா, ஒரு வார்த்தை கூட அதட்ட மாட்டாங்களா என்ன… சே… இவங்கள்லாம் எதுக்கு குழந்தை பெத்துக்குறாங்க. அந்த பொம்பள வயித்துல பிறந்ததுக்கு அவனும், அவனை பெத்ததுக்கும் இவளும் வெட்கப்படணும்.” என சரமாரியாக பொரிந்து தள்ளியவளோ,

“மத்த எல்லாத்தையும் கூட நான் பொறுத்துக்குவேன் ஆரவ். ஆனா, பேபி அபார்ட் ஆனப்ப கூட, ஒரு சொட்டு கண்ணீர் என்ன… அட்லீஸ்ட் ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லிருந்தா கூட, அவளை நான் மனுஷியா மதிச்சு இருப்பேன். அவளும் அவள் பையனும், அந்த குடும்பமும்… நினைச்சாலே எரிச்சலா வருது.” என அவள் பேச பேச, ஆரவின் மேனி இறுகிப் போனது.

முகமோ உணர்வுகளை துடைத்தெறிந்தபடி இருக்க, அவனை திரும்பி பார்த்தவள், “ஆரவ்…?” என்று அவன் தோளை தொட, அதில் நிகழ்வுக்கு வந்தவன், “ம்ம்” என்றதில், “நான் சொன்னது கரெக்ட் தான?” எனக் கேட்டாள்.

“ம்ம். கரெக்ட் தான்…” என்றவனுக்கு குரல் சற்றே பிசிறடிக்க, அதனை அவளும் கவனிக்கவில்லை.

மறுநாள், எப்போதும் போல அலுவலகத்திற்கு வந்து விட்டு, கடைக்கு சென்று விட்டாள் வான்மதி.

அவள் சென்றதும், அலுவலக வேலையில் மூழ்கி இருந்த ஆரவை பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் என்று ரிசப்ஷன் பெண்மணி கூறவும், முகம் கடுமையாக, “வர சொல்லு” என்றான்.

அடுத்த நிமிடமே, கதவை புயலென திறந்து உள்ளே வந்திருந்தார் சௌமியா. சுழல் நாற்காலியில் சுழன்றபடி, அவரை எகத்தாளமாக பார்த்திருந்த ஆரவ், ஒற்றைப் புருவம் உயர்த்தி என்னவென கேட்க, “விக்ராந்த் எங்க?” எனக் கேட்டார் கோபத்துடன்.

அவனோ ஏளனமாக, “விக்ராந்த்? எந்த விக்ராந்த்? எனக்கு அப்படி யாரையும் ஞாபகம் இல்லையே?” என வெகு நக்கலுடன் கூற,

“விளையாடாத ஆரவ். விக்ராந்த் எங்கன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும். அவனை நீ தான் கடத்தி இருக்கன்னு எனக்கு தெரியும். அவனை என்ன செஞ்ச?” சௌமியா மூச்சிரைக்க வினவ,

“ப்ச் ப்ச்… இன்னும் எதுவும் செய்யல. ஆனா, சீக்கிரம் செய்வேன்.” என்றான் கண்ணில் ரௌத்திரத்தை தெளித்து.

“வேணாம் ஆரவ். தேவை இல்லாத விஷயத்துல தலையிட்டு, உன்ன நீயே அழிச்சுக்க நினைக்காத. விக்ராந்த்தோட அப்பாவுக்கு மட்டும், இப்போ அவனை கடத்துனது நீதான்னு தெரிஞ்சா உன்னை, உருத்தெரியாம சிதைச்சுடுவாரு. இது உனக்கு லாஸ்ட் வார்னிங். விக்ராந்தை விட்டுடு” கிட்டத்தட்ட சௌமியா அவனை மிரட்ட,

“ஹா… ஹா… இஸ் இட்? அப்படி என்ன உங்க புருஷன் புடுங்குவாருன்னு நானும் பாக்குறேன். டோன்ட் வொரி. இன்னும் அவன் சாகல. நல்லா தான் இருக்கான். ஆனா, ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஆயுசு குறைஞ்சுக்கிட்டே வருது. என்னைக்கு என் கோபம் ஹை லெவல்ல போகுதோ, அன்னைக்கு செத்துருவான்.” என்றவனின் குரலிலேயே சௌமியாவிற்கு பதற்றம் தொற்றியது.

“உனக்கு என்ன பைத்தியமா? அந்த பிட்ச் வான்மதிக்காக நீ என்னையவே பகைச்சுக்குற?” என சொல்லி முடிக்கும் முன், டேபிளை சடாரென தட்டி எழுந்தவன், ஒரு விரல் நீட்டி எச்சரித்து,

“வார்த்தை…! வார்த்தை பத்திரம். அவளை பத்தி அடுத்த வார்த்தை பேச, நாக்கும் இருக்காது. நீங்களும் இருக்க மாட்டீங்க.” என்றான் உறுமலுடன்.

சௌமியாவிற்கோ ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. “கேவலம், உன் அண்ணனை கல்யாணம் பண்ணி டைவர்ஸ் பண்ணுன அந்த பொண்ணுக்காக, நீ மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்த நினைக்கிற ஆரவ். தெரியாம தான் கேக்குறேன். அண்ணன் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிருக்கியே உனக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல…” என்று அவனை சரியாக குத்த, அவனுக்கோ நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல இருந்தது.

கர்ஜனையுடன், “அம்மா…” எனக் கத்தியவன், “அவன் எனக்கு அண்ணனும் இல்ல. அந்த ஆளு எனக்கு அப்பாவும் இல்ல. நீங்களும் எனக்கு இனிமேவாச்சு அம்மாவா இருக்குறதுன்னா இருங்க. இல்ல… அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்…” என்றவனின் விழிகளில் வழிந்த கனலில் சௌமியாவிற்கு எரிந்தது.

அவரும் அவனை உறுத்து விழித்து விட்டு சென்றிட அதில் சிறிதளவும் மகனென்ற பாசம் இல்லை.

அவர் சென்றதும், தளர்ந்து சேரில் அமர்ந்து விட்ட ஆரவிற்கு, கோபம் கட்டுக்கடங்காமல் தறி கெட்டு ஓடியது.

கடையில் வேலை முடிந்து, கிளம்ப எத்தனித்த வான்மதி, ஆரவிற்கு போன் செய்ய போக, பின் அவளே “வேலையா இருப்பாரு. நம்மளே போகலாம்…” என்று கடையை விட்டு வெளியில் வர, சரியாக அவள் முன்னே கார் ஒன்று வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கியது விக்ராந்த் தான். முகம் முழுதும் காயமாக இருக்க, ஒரு கையிலும் கட்டிட்டு இருந்தான். முகத்தில் அத்தனை ரௌத்திரம் சீறியது. அதிலும் வான்மதியைக் கண்டதும், அவனுக்குள் குரூர சினமொன்று சீறிப் பாய, அவனை எதிர்பாராமல் ஒரு நொடி திகைத்த வான்மதி, மறுநொடியே அவனை நேருக்கு நேராய் எதிர்கொண்டாள்.     

“ஹெலோ… மை டியர் பொண்டாட்டி. ஓ! சாரி எக்ஸ் பொண்டாட்டி… ரைட்?” என இளக்காரமாக வினவியவன், “நோ நோ… வான்மதி ஆரவ் முகிலன்! இது தான் கரெக்ட்டா இருக்கும் இல்ல?” என்றவனின் இதழ்கள் வக்கிரமாய் சிரித்தது.

அவளோ எரிச்சலாகி, “இப்ப என்ன வேணும் உனக்கு? கேஸ்க்கு பயந்து, கோர்ட்டுக்கு வராம ஓடிட்டு, இப்போ இங்க மட்டும் எதுக்கு வந்த?” என்றவள், அவனைக் காணவே அருவருக்க,

“ம்ம். நான் கோர்ட்டுக்கு வர்றது இருக்கட்டும். எங்க, உன் நியூ ஹஸ்பண்ட். எனக்கு இன்ட்ரோ குடுக்க மாட்டியா வான்மதி.” என சீண்டினான்.

அவளோ, அவனுக்கு பதில் கூற பிடிக்காமல் நகர போக, அவன் அவள் முன்னே நின்று தடுத்து, “எனக்கு கொஞ்சம் சந்தேகம். அதை மட்டும் தீர்த்து வைச்சுட்டு நீ கிளம்பலாம். நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்” என்று அடக்கமாக கூறியவனை முறைத்தவள்,

“நீ என்னை ஒன்னும் பண்ண முடியாது. என் முகிலை மீறி…” என்றாள் கர்வத்துடன்.

அவனுக்கோ இன்னும் கோபத்தீ எரிந்தது உள்ளுக்குள். அதனை அடக்கிக்கொண்டு, அதே ஏளனக்குரலில்,

“என் முதல் சந்தேகம் என்னன்னா, இப்போ, உன்ன நான் என் எக்ஸ் பொண்டாட்டின்னு சொல்றதா, இல்ல தம்பி பொண்டாட்டின்னு சொல்றதா?” என குரூர பார்வை ஒன்றை வீச, ஒரு நிமிடம் அவன் சொன்னதை உள்வாங்க இயலாமல் ஸ்தம்பித்து நின்றாள் வான்மதி.

“எ… என்ன… என்ன சொன்ன?” நடுக்கத்துடன் வந்த வார்த்தைகளுடன் கண்ணீரும் வெளிவர துடிக்க, விக்ராந்த் அதனை திருப்தியாக ஏறிட்டு, “என்ன வான்மதி. என் தம்பி என்னை பத்தி எதுவுமே சொல்லலையே? டூ பேட். சரி அதை விட, என் இன்னொரு டவுட் என்னன்னா… என் தம்பி மேல எப்போ கேஸ் குடுக்க போறன்னு சொல்லு… நானும் அவனும் சேர்ந்தே வந்து…” என்று நிறுத்தியவன், “கேஸ் அட்டெண்ட் பண்ணுவோம்ன்னு சொல்ல வந்தேன்” என்றான் சிரிப்புடன்.

அவளுக்கோ அதிர்ச்சியில் வயிற்றில் இருந்து ஏதோ பிரட்ட, கண்ணெல்லாம் இருட்டியது.

அவனோ, “அப்பறம் இதான் எனக்கு பெரிய டவுட்டு… என் தம்பி இருக்கானே, அவனுக்கு ஈகோ ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. அதுவும் என்கிட்ட ரொம்பவே ஈகோ பார்ப்பான். நான் யூஸ் பண்ற பொருளை கூட அவன் யூஸ் பண்ணதே இல்ல. அப்படி இருக்கும் போது, உன்ன மட்டும் எப்படி…” என சந்தேகமாக கேட்டபடி அவளை மேலும் கீழும் ஆராய்ந்தவன், “அவன் டேஸ்ட் இவ்ளோ மட்டமா போகும்ன்னு நான் எதிர்பார்க்கல…” என்றான் ஏகத்துக்கும் நக்கலை ஏந்தி, அதற்கு மேல் பொறுக்க இயலாமல், அவளின் கண்ணீர் மடை திறக்க, கண்ணையும் காதையும் இறுக்கி மூடிக்கொண்டாள்.

ஏமாற்றத்தில் நெஞ்சம் விம்ம, உள்ளிருக்கும் ஒவ்வொரு அணுவும் வலியில் துடித்து அடங்கியது அவளுக்கு. எந்த மாதிரியான சூழ்நிலையில் விதி தன்னை தள்ளி இருக்கிறது என்று உணரவே அவளுக்கு வெகு நேரம் பிடிக்க, உண்மையை ஏற்றுக்கொள்ள முற்றிலும் மனம் மறுத்ததில், அவள் உடைந்து போனாள்.

அவளின் கண்ணீரை ரசித்த விக்ராந்த், ‘எப்படி அவன் உன் கூட வாழ்ந்துடுறான்னு பாத்துடுறேன்டி.’ என கறுவியபடி, கிளம்பி விட, அப்போது தான் அங்கு வந்த ஆரவ், வான்மதி நிற்கும் நிலை கண்டு பதறி விட்டான்.

வேகமாக காரில் இருந்து இறங்கி வந்து, காதை மூடி இருந்த அவளின் கையை எடுத்து விட்டவன், “கண்ணம்மா? ஏன் இப்படி நிக்கிற. கண்ணை திறடி. என்னாச்சு கண்ணம்மா. இங்க பாரேன்.” என துடித்தவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை.

ஆரவ் தான் வந்திருக்கிறான் என அறிந்ததும், அவனை இறுக்கி அணைக்க துடித்த மனதை அடக்கி விட்டு, தீச்சுட்டார் போல விருட்டென விலகி நின்றாள், கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது.

தன் கையை விட்டு விலகிய வான்மதியை புரியாமல் பார்த்தவன், மீண்டும் அவளருகில் நெருங்கி, “நான் உன் முகில் தான் கண்ணம்மா. இப்படி அழுகுற அளவு யார் என்ன சொன்னா?” என அவன் தவிப்புடன் வினவ, அவளோ உட்சபட்ச கத்தலுடன்,

“என்னை கண்ணம்மான்னு கூப்பிடாதீங்க. நான் உங்களுக்கு பொண்டாட்டியும் இல்ல. நீங்க எனக்கு புருஷனும் இல்ல. என்னை அப்டி கூப்பிட உங்களுக்கு உரிமையும் இல்ல” என்று மூச்சு வாங்கினாள்.

அவனுக்கோ, ஒரு நொடி இதயம் நின்றிருந்தது. ஏதோ நடந்திருக்கிறது… என்று உள்மனம் அவனை எச்சரிக்க, அந்நேரம் கவினிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது, விக்ராந்த் தப்பித்து விட்டான் என.

அதில், நிலையை கிரகித்துக் கொண்டவன், “கண்ணம்மா… நான் சொல்றதை கேளேன்” என அவள் புறம் நெருங்க, அவளோ அவனை சப்பென அறைந்திருந்தாள்.

“என்னை அப்படி கூப்பிடாத…!” மரியாதையும் பொறுமையும் காற்றில் பறந்திருந்தது.

அவனுக்கும் கண்ணில் நீர் தேங்கி நின்றாலும், உதட்டை அழுந்தக் கடித்து தன்னை அடக்கி, “நான் கூப்பிடுவேன் கண்ணம்மா” என்றான் அழுத்தமாக. அதில் மீண்டும் அவள் அவனை அறைய, அதனையும் வாங்கி கொண்டவன், மீண்டும் “கண்ணம்மா” என்றே அழைத்தான்.

“என்னை கூப்பிடாதடா. அப்படி கூப்பிடாத…” என அவன் சட்டையை பிடித்து கத்தியவள், அவன் நெஞ்சிலேயே அடிக்க, “நான் கூப்புடுவேன். நான் அப்படித்தான் கூப்பிடுவேன். நீ என்னை கொன்னாலும், நீ எனக்கு என் கண்ணம்மா தான். நான் உனக்கு உன் முகில் தான்” என்றவனுக்கு குரல் கம்மி இருக்க, அவளோ நிதானத்தில் இல்லை.

“இல்ல… இல்ல… இல்ல. யூ ஆர் அ சீட்டர். நீ என் முகில் இல்ல. நான் ரசிச்ச முகில் நீ இல்ல. யூ ஆர் நாட்…” என்றவள் வாய்விட்டு அழுது கரைய, அவள் கண்ணீரைக் காண இயலாமல், அவளை வாரி அணைத்துக் கொண்ட ஆரவ், “என்னை புருஞ்சுக்கோடி. தயவு செஞ்சு நான் பேச சான்ஸ் குடு…” என்றவனின் குரலில் அத்தனை வேதனை.

அவனின் பிடியில் இருந்து நகர முயன்றவளுக்கு, தோல்வியே கிட்ட, அவனோ காற்றும் புகாதவாறு அவளை தனக்குள் அடக்கி இருந்தான், “ஐ லவ் யூ கண்ணம்மா” என்று.

தேன் தூவும்…!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
38
+1
232
+1
5
+1
4

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!

  2. priyakutty.sw6

   என்னது விக்ராந்த் தம்பியா… 😱😱😱😱

   ட்விஸ்ட்….

   என்னாச்சு…

   ஏன் இதுலாம்….

   என்ன சொல்ல னே தெரில….