Loading

“எப்படி இருக்க சத்யா? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க…” என மகளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் தாமரை.

“நல்லா இருக்கோம்மா. நீங்களும் ஆயாவும் எப்படி இருக்கீங்க. வயல்ல வேலை எல்லாம் சரியா போகுதா?” எனக் கேட்டாள் சத்யரூபா.

“தெரியாத மாதிரி கேட்காத சத்யா. அதான் வேலை எல்லாம் முடிஞ்சு, தோட்டத்தை குத்தகைக்கும் விட்டாச்சே.” என்றதில் திகைத்தாள்.

“என்னம்மா சொல்றீங்க? தோட்டத்தை ஏன் குத்தகைக்கு விட்டீங்க. எனக்கு புரியல.” எனக் குழப்பத்துடன் கேட்க,

“ப்ச். விளையாடாத சத்யா. மாப்பிள்ளை தான், மறுவீட்டுக்கு வந்துட்டு போனதுல இருந்து, தினமும் என்கிட்ட பேசி, சென்னைக்கு வர சொல்லி பிடிவாதம் பிடிச்சுட்டாரு. வைஷுவை விட்டுட்டு எப்படி வர்றதுன்னு மறுத்து பார்த்தேன். அவள எழிலு தஞ்சாவூருக்கு கூட்டிட்டு போய்டும். நீங்க இருந்து தினமும் அவளுக்கு நிலா சோறா ஊட்டப்போறீங்கன்னு சொன்னாரு.

வயலை அப்படியே போட்டுட்டு வரமுடியாதுன்னு அடுத்து ஒரு மறுப்பு சொன்னா, அதையும் வேலைக்கு ஆளை அதிகமா போட்டு, அறுப்பு வேலையை முடிச்சுட்டு, இப்போ ஊருக்குள்ளேயே ஒருத்தருக்கு குத்தகைக்கும் விட்டாச்சு. என்னையும் சாவித்ரி அம்மாவையும் உங்க கூடவே வந்து இருக்க சொன்னாங்க.

அதெப்படி பொண்ணை கட்டிக்குடுத்துட்டு நாங்களும் பின்னாடியே வர முடியும் அது மட்டும் வேணாம் மாப்பிள்ளைன்னு சொன்னதும், சரின்னு, வைஷு இருந்த வீட்லயே நாங்களும் இருக்கறதா முடிவாகிடுச்சு.

அவள் தான் இன்னும் வீட்டை காலி பண்ணவே இல்லைல. நம்ம பொருளும் அந்த வீட்ல கொஞ்சம் இருக்கு.

அதோட, எழிலுகிட்ட கேட்காம முடிவு எடுக்க கூடாதுன்னு, அது கிட்டயும் கேட்டேன் சத்யா. எழிலும் மொத வேலையா கிளம்பி சென்னைக்கு போக சொல்லிடுச்சு. மாசத்துக்கு ஒரு தடவை வைஷுவை கூட்டிட்டு வரேன். இல்லன்னா, நீங்க வந்து இருந்துட்டு போங்கன்னு சொல்லுச்சு. அதுவும் போக, வைஷு இருந்த வீட எழிலே லீசுக்கு வாங்கிடுச்சு. அந்த ஹவுஸ் ஓனரும் வெளிநாட்டுக்கு போறதுனால, நாலஞ்சு நாள்ல அந்த வேலையை முடிச்சதும் குடி வர சொன்னாரு. எப்படியும் அடுத்த வாரம் நாங்க வந்துடுவோம். என்னமோ, ரெண்டு மாப்பிள்ளையும் ஒரே பிடிவாதமா நின்னுட்டாங்க. என்னை பேச கூட விடல. அதுவும் சின்ன மாப்பிள்ளை இருக்காரே… விட்டா என்னையும் உன் ஆயாவையும் கடத்திட்டே வந்துருப்பாரு…” எனக் குறை போல சொன்னாலும், அதில் பெருமிதமே அதிகமாய் தெரிந்தது.

சில நொடிகள் பிரம்மை பிடித்தவள் போல நின்ற சத்யரூபா, “இவ்ளோ நடந்துருக்கு என்கிட்ட சொல்லவே இல்ல நீங்க. உங்க மாப்பிள்ளை கூட மட்டும் தினமும் பேசிட்டு இருந்தீங்களாக்கும்” எனக் கோபித்துக் கொண்டாள் செல்லமாக.

“உனக்கு தெரியும்ன்னு நினைச்சேன். இப்ப தான தெரியுது, மாப்பிள்ளை உனக்கு கூட தெரியாம இதெல்லாம் செஞ்சுருக்காருன்னு…” என்னும் போதே, சாவித்ரி போனை பிடுங்கினார்.

“எல்லாம் சரி தான் சத்யா. ஒரே ஒரு குறை தான்…” என்றதும், “என்ன ஆயா?” எனக் கேட்டாள்.

“நாங்களே உன்னை கட்டிக்குடுத்துட்டு, அமைதியான சூழ்நிலைல நிம்மதியா இருக்கோம். திரும்பவும் இந்தர் மாப்பிள்ளை எங்களை உன்கிட்டயே கோர்த்து விடுறாரு.” என வாரிட,

சற்றே கடியான சத்யா, “அதை உங்க மாப்பிள்ளை கிட்டயே கேட்க வேண்டியது தான” என்றாள்.

“அதையும் கேட்டேனே… அதுக்கு அவரு தான், ‘நான் மட்டும் மாட்டிக்கிட்டு பாடு படுறேன். நீங்கலாம் நிம்மதியா ஊர்ல இருப்பீங்களா… அதுலாம் முடியாது’ன்னு சொல்லிட்டாரு.” என்று சிரித்தபடி கூறியதில், “காண்டாமிருகம்…” எனப் பல்லைக்கடித்தாள்.

அந்நேரம், இந்திரஜித்தும் குளியலறையில் இருந்து வெளியில் வர, அவனைத் தீயாக முறைத்தவள், “நீ போனை வை ஆயா… உன் மாப்பிளைக்கு திருஷ்டி சுத்த வேண்டியது இருக்கு…” எனக் கறுவியபடி போனை வைத்து விட,

அவளைப் புரியாமல் பார்த்த இந்திரஜித்தோ, “நான் பேசிக்காவே அழகு தான் தியாக்குட்டி. அதுக்காக திருஷ்டி எல்லாம் வேணாம்.” என வெட்கியபடி கூற, தலையணையை எடுத்து அவன் முகத்திலேயே விட்டெறிந்தவள், “என் கிட்ட மாட்டிக்கிட்டு நீ பாடு படுறியாயா?” என்று சண்டைக்கு நின்றாள்.

“ஹே… ச்சே… நான் போய் அப்படி சொல்லுவேனா புஜிலி. உங்கிட்ட மாட்டிக்கிட்டதுனால தான், தினமும் லவ் பாட்டா பாடுறேன்னு சொன்னது, அந்த கிழவி காதுல தப்பா விழுந்துருக்கு. வயசாகிடுச்சுல. காத செக் பண்ணனும் பாவம்…” என உதட்டைப் பிதுக்கி பாவமாகக் கூறினான்.

அவனது சமாளிப்பில், இருந்த பொய் கோபமும், பறந்து விட, அவனை ரசிக்கத் துடித்த விழிகளை அடக்கியபடி, “வாய் மட்டும் இல்லன்னா, உன்னை நாய் கவ்விட்டு போய்டும்.” என்றாள் கிண்டலாக.

அவளை இழுத்து, தன் மீது மோத வைத்தவன், “என்னைக் கவ்விட்டு போறதுக்கு உன்னை தவிர யாருக்கும் ரைட்ஸ் இல்ல தியாக்குட்டி.” என காந்தப்பார்வையால் ஈர்த்தான்.

அவனது நெருக்கமும், வார்த்தைகளும் தந்த கதகதப்பில் குளிர் காய்ந்த சத்யரூபாவின், இதழ்கள் மென்புன்னகை வீசியது.

தயக்கத்துடன் மெல்ல விலகி, அவனைப் பார்க்கவே கூச்சம் கொண்டு, நகரப் போனவள், அப்படியே நின்றாள்.

“தேங்க்ஸ் ஜித்து. அம்மாவை கம்பெல் பண்ணி இங்க வர வைக்கிறதுக்கு. நான் சொல்லிருந்தா கண்டிப்பா கேட்டிருக்க மாட்டாங்க.” என உணர்ந்து நன்றி கூறிட,

“சொல்ல வேண்டியவங்க சொல்ல வேண்டிய விதத்துல சொன்னா, யாரா இருந்தாலும் கேட்டுப்பாங்க புஜிலி” எனக் கண் சிமிட்டி கேலி செய்தான்.

மெல்ல முறைத்தவள், “நீங்க வக்கீல் ஆகியிருக்கலாம். பேசியே கவுத்துடுறீங்க” என்றாள் அவனைப் பாராமல்.

“ம்ம்ஹும்… அப்போ நீ கவுந்துட்டியா?” ஆழ்ந்த குரலில் கேட்டபடி அவளை நோக்கி எட்டு எடுத்து வைக்க, அக்குரலின் மென்மையில் “இல்லை” என்று கூட கூற இயலவில்லை அவளால்.

“உன் பேச்சுலாம் வர வர சரியே இல்ல ஜித்து.” என்றவளின் கால்கள் தானாகவே பின்னால் நகர்ந்தது.

“உன் பேச்சும் தான் சரி இல்ல. லவர்ஸ்க்குள்ள தேங்க்ஸ், சாரி எல்லாம் வெறும் வாய் வார்த்தையா சொல்றது மிகப்பெரிய குற்றம் தியா.” என்றான் குறும்பாக.

“வேற எப்படி சொல்ல?” புருவம் நெறித்து சத்யா கேட்டதில்,

“ஆக்ஷன்ல தான் சொல்லணுமாக்கும்” என கண்ணடித்தான்.

“எப்படி? மொழி படத்துல வர ஜோதிகா மாதிரி சைகைல சொல்லணுமா?” நக்கலாக அவனைப் பார்த்தாள்.

“இதுவும் ஒரு வகையான சைகை தான். ஆனா, தூரமா நின்னு சொல்றது இல்ல. பக்கத்துல வந்து, ஒரு டைட் ஹக் வித், டீப் கிஸ் ஓட சொல்லணும்.” என ரகசிய குரலில் அவளை சிவக்க வைத்தான்.

செங்கொழுந்தாய் கன்னங்கள் சிவப்பேறி இருக்க, அவனைத் தள்ளி விட்டு, வெளியில் ஓடி விட்டாள் சத்யரூபா.

அதரங்கள் மட்டும் மாயப்புன்னகை ஒன்றை நிரந்தரமாகத் தாங்கி இருக்க, இங்கு இந்திரஜித்தும் நளினமாக புன்னகைத்துக் கொண்டான்.

சனிக்கிழமை காலை அழகாய் விடிந்தது. ஆனால், அவ்விடியல் தரப்போகும் பேரதிர்ச்சி தான் யாருக்கும் புரியவில்லை.

ஊருக்கு சென்றிருந்த பாலகிருஷ்ணனும், பானுரேகாவும் அன்று காலை தான் வந்திருந்தனர்.

சனிக்கிழமை அதுவுமாக, காலையிலேயே டிப் டாப்பாக உடை அணிந்து கீழே வந்த இந்திரஜித்தைக் கண்டு இருவரும் விழிக்க, அவனோ “குட் மார்னிங் டியர் பேரண்ட்ஸ்” என்றான் சிரிப்புடன்.

“என்ன ஒரு உலக அதிசயம். ஆபிஸ் லீவ்ன்னா உன்னை எழுப்புறதே பெரிய டாஸ்க்கா இருக்குமே.” என பாலகிருஷ்ணன் அதிசயிக்க,

“அதெல்லாம் க. மு. இது க. பி ப்பா” என்றபடி அடுக்களைக்கு சென்று அவனே காபி தயாரித்தான்.

சத்யரூபாவிற்கும், கணவன் தனக்கு முன்னே விழித்துத் தயாரானதில் பெரும் அதிர்ச்சி தான்.

அதில் அவளும் கீழிறங்கி வந்து, “எப்போ அத்தை வந்தீங்க” என பானுரேகாவிடம் விசாரித்தாள்.

அவர் பதில் கூறும் போதே, நான்கு கப்பில் காபியுடன் வந்த இந்திரஜித்திடம், பாலகிருஷ்ணன், “அது என்னடா க. மு. க. பி” எனக் கேட்டார் புரியாமல்.

“அதான் ப்பா. கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின்” என்று இளித்ததில் அவர் வாயில் கை வைத்தார்.

“இதுக்கே ஷாக் ஆனா எப்படிப்பா. இனிமே தான மெய்ன் விஷயத்தையே ஓபன் பண்ண போறேன்” என்று பீடிகையுடன் ஆரம்பிக்க, பானுரேகாவிற்கு அபாயமணி அடித்தது.

என்னமோ வில்லங்கமாக கூற போகிறான் என்று எண்ணியபடி அவனைப் பார்க்க, அவனோ, “இன்னைக்கு நீங்களும் அம்மாவும் ரெஸ்ட் எடுங்க. நான் கார்மெண்ட்ஸ்க்கும் ஃபேக்டரிக்கும் போய் பாத்துக்குறேன். வார நாள்லையும் ஆபிஸ் முடிச்சுட்டு அங்க வந்து கொஞ்ச நேரம் பாத்துக்குறேன். முக்கியமா, கணக்கு வழக்கை எல்லாம் ஃபிங்கர் டிப்ல வச்சுக்குறேன்” என சமத்தாக கூறியதில் பெற்றவர்கள் தான் வியப்பின் உச்சத்தில் விழித்தனர்.

“என்னடா இது… கூப்பிட்டா கூட வர மாட்ட. இப்போ நீயாவே ஆஜர் ஆகுற. இதுல உள்குத்து எதுவும் இல்லையே” என மிரண்ட பாலகிருஷ்ணனுக்கு, இப்போதும் மகனை நம்ப இயலவில்லை.

“சே சே… இல்லப்பா நான் சீரியஸா தான் சொல்றேன். ஆனா ஒரு கண்டிஷன்.” என்று நிறுத்தியவன், “நான் வேலை பார்க்குற நேரத்தை பேஸ் பண்ணி, எனக்கு சம்பளம் குடுத்துடணும்.” என்றான் அமைதியாக.

அதில், கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, பானுரேகா சத்யாவை முறைத்தார்.

“இது உன் வேலை தானா?” என நேரடியாக அவளிடம் கேட்க, சத்யாவும் அவன் இத்தனை சீக்கிரமாக தான் சொன்னதை செய்வான் என்று எதிர்பாராமல் வியந்து விட்டு, மாமியாரைப் பார்த்தாள்.

பாலகிருஷ்ணனோ, “அவன் கார்மெண்ட்ஸ்க்கு வரேன்னு சொன்னப்பவே தெரிய வேணாம். இது மருமக வேலை தான்னு” என்று பூரிப்பாய் கூற,

அவரோ “நான் அதை சொல்லல. இந்த சம்பள விஷயம் உன் வேலை தானான்னு கேட்டேன்.” என்றார் முறைப்பாக.

முதலில் தயங்கியவள், பின் “ஆமா அத்தை…” என ஒப்புக்கொண்டதில், அவளை அழுத்தமாய் பார்த்து விட்டு, மகனிடம் “சரி” என்றார்.

பின், கைப்பையில் இருந்த பணத்தில் சில தாள்களை எடுத்து சத்யாவிடம் நீட்ட, அவளோ “எதுக்கு அத்தை இது” எனக் குழப்பத்துடன் பார்த்தாள்.

“பெத்த பையனுக்கே சம்பளம் குடுக்குறதுன்னு முடிவானதுக்கு அப்பறம், உனக்கு குடுக்கலைன்னா, நல்லா இருக்காதே. பிடி.” என்றதில் அவளே அதிர்ந்து விட்டாள்.

“என்ன அத்தை இப்படி பேசுறீங்க…” பதற்றமாக அவள் கணவனைப் பார்க்க, அவன் தாயை தான் கடுப்புடன் பார்த்திருந்தான்.

“வேற எப்படி பேச சொல்ற. உரிமையா வந்து பார்க்க வேண்டிய தொழிலுக்கு கூட, சம்பளம் எதிர்பார்த்து வந்தா, அங்க வேலை எதுவும் நடக்காது. யாரும் எங்களுக்கு ரெஸ்ட் குடுக்க வேண்டிய அவசியம் இல்ல. நாங்களே பார்த்துக்குறோம். உனக்கும் சேர்த்து தான்…” என்று சத்யாவை கடிந்து கொள்ள,

அவளோ, “இதை இவ்ளோ சீரியஸா எடுத்துக்க வேண்டிய அவசியமே இல்லை அத்தை. பிசினஸ் பண்ண உங்ககிட்ட பணம் கேட்க உரிமை இருக்குற மாதிரி, சம்பளம் கேட்கவும் உரிமை இருக்கு தான. அதுவும் சம்பளம் கேட்டது உங்க பையன். நான் இல்ல.” என்றவள், அவர் கையில் இருந்த பணத்தை பிடுங்கி, மீண்டும் அவரது கைப்பையிலேயே வைத்து விட்டு, சென்றாள்.

“திமிரு…” மருமகளைக் கடுமையாக முறைத்த பானுரேகாவின் பார்வை இப்போது மகன் புறம் திரும்ப, அவன் தான், சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“ஒருத்தன் பொறுப்பா மாறுனா அதை ஆராதீங்க. ஆராயாதீங்க. சரி… உரிமையா பார்க்க வேண்டிய தொழிலோட உரிமைக்காரனா சொல்றேன். சனிக்கிழமை உங்க ரெண்டு பேருக்கும் லீவு. எனக்கு வேண்டிய சம்பளத்தை நானே எடுத்துக்குறேன். இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்…” என்று இடுப்பில் கை வைத்து அதிகாரமாகக் கூறியவன், தாயை கடுப்பேற்றிய திருப்தியுடன் கிளம்பினான்.

எப்போதும் போல முந்தைய நாள் இரவும், உண்ணாமலேயே உறங்கிப்போனாள் வைஷாலி.

இன்றாவது தாயைப் பார்த்து விட்டு வர எண்ணியவளுக்கு, வீட்டினரை மீறி எப்படி செல்வதென்ற தயக்கம் ஏற்பட்டது. இறுதியில், எழிலிடமே கேட்டு விட எண்ணி அவனுக்கு அழைக்க, அதிசயமாக அவனும் அழைப்பை ஏற்றான்.

“அத்தான்…” உள்ளே சென்ற குரலில் அவள் அழைக்க,

“ம்ம். சொல்லு” என்றான் எழில்.

“அது… அம்மாவை பார்க்க போகணும். போயிட்டு வரவா?” தட்டுத் தடுமாறி கேட்டதில், எழில் புருவம் சுருக்கி போனை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.

“என்ன உளறுற? பக்கத்துல தான இருக்க. இவ்ளோ நாளா அத்தையை போய் நீ பார்க்கவே இல்லையா?” சற்றே அதட்டலாகக் கேட்டதில், அவள் மிரண்டாள்.

“அதில்ல அத்தான். அத்தை தான்… அடிக்கடி போக வேணாம்ன்னு…” என்று சொல்லி முடிக்கும் முன்பே அங்கு ஆனந்தி வந்து விட்டார்.

மகனிடமே தன்னைப் பற்றிக் கூறியதில் ஆத்திரம் பெருக்கெடுத்து ஓடியது அவருக்கு.

“அம்மாவா?” என குழம்பியவன், “பைத்தியம்! சத்யாவும் ஊர்ல இல்ல. அம்மா சொன்னா தலையை ஆட்டிடுவியா நீ. சரி இரு. நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன். சேர்ந்தே போய் பாக்கலாம். உன் திங்க்ஸயும் எடுத்து வை. அப்படியே தஞ்சாவூருக்கு வந்துடலாம்…” என பேசிக்கொண்டே சென்றவனுக்கு ‘பீப்’ சத்தம் தான் கேட்டது.

அவனது தாய் தான், கோபத்தில் போனை வாங்கி உடைத்திருந்தார். அதில் திகைத்த வைஷாலி, “அத்தை” எனப் பதறிட, அவள் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

அதில் தடுமாறி கீழேயே விழுந்து விட்டவளுக்கு, அதிர்ச்சி தாளவில்லை.

“ஏதோ அண்ணன் பொண்ணாச்சேன்னு பொறுமையா போனா, என் பையனையே ஏத்தி விட்டு, சண்டை இழுக்க பாக்குறியா?” என கர்ஜிக்க, பாவம் அவளுக்கு சண்டை இழுத்து விடுவதென்றால் என்னவென்று கூட தெரியாது.

கண்ணில் நீர் ததும்ப, “இல்ல அத்தை… அப்படிலாம் இல்ல.” என வேகமாக மறுத்தவளிடம்,

“உன் தங்கச்சிக்காரி இந்த வீட்டுக்கு வர ஆசைப்பட்டப்பவே, என் புள்ளைகிட்ட இருந்து பிரிச்சு விட்டேன். நீ தைரியமா, வீட்டுக்குள்ளேயே வந்து எங்களையே அதிகாரம் பண்ண நினைக்கிறியா. இவ்ளோ நாள் உன்னை வீட்டுக்குள்ள இருக்க விட்டதே பெரிய தப்பு. கூடிய சீக்கிரம் என் புள்ளையை வச்சு உன்னை அத்து விட வைக்கிறேன்” என அகங்காரத்துடன் பேசி விட்டு சென்றவரை வெறித்தாள் வைஷாலி.

‘தங்கச்சி ஆசைப்பட்டாளா? சத்யாவா?’ ஒன்றும் புரியாமல் யோசித்தவளுக்கு, மெதுவாய் எதுவோ புலப்பட்டது. திடீரென சத்யா எழிலிடம் இருந்து விலகியது, எழிலின் பாராமுகம் அனைத்தும் சேர்ந்து அவள் இதயத்தை உடைக்க, அப்படியும் எதையும் முழுதாய் நம்ப இயலவில்லை.

எழிலின் மீதிருந்த கண் மூடித்தனமான நம்பிக்கையும் காதலும், அவளை சுக்கு நூறாகக் கிழித்தது.

இங்கோ ஆனந்தி ஹாலில் அமர்ந்து, ‘இவளை வீட்டை விட்டு துரத்திட்டு தான் எனக்கு அடுத்த வேலையே.’ என முணுமுணுக்கும் போதே, அங்கு எழில் வந்து விட்டான்.

அவனை எதிர்பாராமல் திகைத்தது என்னவோ ஆனந்தி தான். வைஷாலியை அவசரப்பட்டு அடித்து வேறு விட்டாரே!

ஒரு நொடி பதறிப் போனவர், இப்போதும் சட்டெனக் கண்ணீரை தாரை தாரையாக ஊற்றினார்.

“வா எழிலு. சரியான நேரத்துக்கு தான் வந்துருக்க. என்ன தான் எங்க விருப்பமில்லாம நடந்த கல்யாணமா இருந்தாலும், எங்க வீட்டு மருமகன்னு கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டதுக்கு… உன் பொண்டாட்டி எங்களை வீட்டை விட்டு துரத்த பாக்குறா.

முறைப்படி ரிசப்ஷன் எல்லாம் வச்சதுக்கு அப்பறம், அண்ணியை பார்க்கலாம்ன்னு தான் சொன்னேன். அதுக்குள்ள, அத பெரிய விஷயமாக்கி, உங்கிட்ட எங்களை பத்தி தப்பா சொல்லிட்டா. அதை கேட்டதுக்கு, எங்களையே வீட்டை விட்டு போக சொல்றா…” என்று நீலிக்கண்ணீர் வடித்தார்.

பாவம்… இம்முறை சரியான திட்டத்துடன் நடிக்காததால், எழில் சற்றே நிதானமாக அவரை ஏறிட்டான்.

“வைஷு உங்களை பத்தி என்கிட்ட தப்பாவே சொல்லலையேமா.” என கூர்மையாய் பார்க்க, அவர் விழித்தார்.

“அது… சொல்ல தான் வந்தா… எழிலு… நான் வரவும் போனை தூக்கி போட்டுட்டா” என்று உளறிட,

“ம்மா… அவளுக்கு யாரையும் எதிர்த்து பேச கூட தெரியாது. அவள் உங்களை வீட்டை விட்டு போக சொன்னாளா? நீங்களா ஏதாவது நினைச்சுக்கிட்டு உளறாதீங்க. வைஷு எங்க…?” எனக் கேட்டபடி தாயை அசட்டை செய்து விட்டு அறைக்கு செல்ல, ஆனந்திக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

சத்யாவைப் பற்றி சொன்னதையே நம்பியவன், வைஷாலியைப் பற்றி லேசாக பேசினாலே நம்பி விடுவான் என்றல்லவா எண்ணினார்.

இப்போது அனைத்தும் பாழாகிப் போக, நடந்தது எதுவும் தெரியாமல், அறைக்கு சென்ற வைஷாலி அங்கு எழில் இருந்ததில் லேசான அதிர்ச்சியைக் காட்டி விட்டு, முகம் மாறினாள்.

அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன், விரல்கள் பதிந்திருந்த கன்னத்தை தொட்டுப் பார்த்து, “என்ன இது? எப்படி ஆச்சு வைஷு” எனக் கேட்டான் பதற்றமாக.

அவனது முதல் தொடுதல். முதல் பதற்றம். ஆனால் அவளுக்கு ரசிக்கவில்லை.

கணவனை நிதானமாக ஏறிட்டு, “சத்யாவும் நீங்களும் விரும்புனீங்களா?” எனக் கேட்டாள்.

முதலில் திகைத்தவன், பின் பெருமூச்சுடன் “ம்ம்..” என்றதில், மொத்தமாக உடைந்து போனாள்.

“ஓ!” என்றவளுக்கு வேறெதுவும் பேச இயலவில்லை.

எப்போதும் தன்னை அத்தானென்று அழைப்பவளின், இறுகிய முகம், அவனை அசைத்துப் பார்க்க, விடாமல் வந்த அலைபேசி அழைப்பை தவிர்த்தான்.

அவனுக்கும் சத்யாவிற்கும் நடந்த பிரச்சனையை சுருக்கமாகக் கூற, அப்போதே தெரிந்து விட்டது, அவர்களின் பிரிவிற்கு காரணம் அவனது பெற்றோர்கள் தான் என்று.

ஆனாலும் சில நொடிகள் அமைதி காத்தவள்,

“என்ன பிரச்சனை வந்தாலும், குடும்பத்தை தாண்டி, சத்யா உங்க காதலுக்கும் உங்களுக்கும் முக்கியத்துவம் குடுக்கலைன்ற கோபத்துல அவளுக்கு தண்டனை குடுக்க நினைச்சீங்க சரி தான்…

ஆனா, நீங்க கேட்ட அடுத்த நிமிஷம் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு, என் அம்மாவையும் தங்கச்சியையும் தூக்கி போட்டுட்டு, உங்க கூட வந்த எனக்கும் அதே தண்டனை தான்ல?” கண்ணில் முட்டி நின்ற கண்ணீருடன் அவனை நேருக்கு நேராய் பார்த்தவளின் வார்த்தைகளில் தான் உயிரை உருக்கும் வலி நிறைந்திருந்தது.

பேச்சற்று, அசையாமல் சிலையானான் எழிலழகன். உண்மை தானே… தான் கேட்டதும், அவள் ஒப்புக்கொண்டது தாமரைக்காக தானென்று தானே எண்ணி இருந்தான். அவளும் அப்படி தானே கூறினாள்.

ஆனால், இப்போது அவளது கண்ணீர் வேறெதையோ உணர்த்துகிறதே… என்ன அது? என படபடவென துடித்த மனதுடன் தவிப்பாய் நின்றவனை சிந்திக்க விடாமல், அலைபேசி மீண்டும் அழைக்க, அதனை எடுத்து காதில் வைத்தான்.

எதிர்முனையில் சாவித்திரி தான் பேசினார் அழுகுரலில்.

“எழிலு, தாமரை நம்மள விட்டுட்டு போய்ட்டாப்பா. ஆஸ்பத்திரில நின்னுட்டு இருக்கேன் எழிலு. திடீர்ன்னு நெஞ்சு வலி வந்துடுச்சு. வைஷுவுக்கு போன் பண்ணுனா, அவள் போனும் எடுக்கல. நீயும் எடுக்கல. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல எழிலு. எங்க இருந்தாலும் சீக்கிரம் வாய்யா…” என கேவலுடன் கூறிட, எழில் அதிர்ச்சியின் விளிம்பில் உறைந்தான்.

அலைபாயும்
மேகா

🏃🏃🏃🏃🏃🏃

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
49
+1
112
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.