1,010 views

வரும் வழி எல்லாம் விக்ரம் பலமுறை கேட்டு விட்டான் நந்தினியை. ஒரு வார்த்தை உதிக்காமல் அமைதியாக வீட்டிற்கு வந்தவர் கொதித்து விட்டார் மகேஷ், செல்வகுமார் நிலையைப் பார்த்து.

 
 
விக்ரம் தந்தையோடு இருக்கும் மகேஷை ஒரு அடி கொடுத்து எழுப்ப முயற்சிக்க அவன் எழவில்லை. ஆங்காங்கே முகம் சிவந்திருந்து நல்ல போதையில் படுத்து இருந்தான். செல்வகுமார் சோபாவில் அமர்ந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்தார். மகனை சமாதானப்படுத்திய நந்தினி காலை விடியலுக்கு காத்திருந்தார் ருத்ர தாண்டவம் ஆட. 
 
முதலில் எழுந்த மகேஷ் போதை தெளிய நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தான். தன் மேல் கை வைத்த அக்னியை இன்றோடு ஒழித்து கட்ட வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் எழ, நந்தினி அடித்த அடியில் தெளிந்த போதை மீண்டும் பிடித்துக் கொண்டது .
 
“யாரைக் கேட்டுடா என் வீட்டுல குடிச்சிட்டு படுத்திருந்த. இவ்ளோ நாள் என் பொண்ண கெடுத்த… இப்போ என் புருஷனை கெடுத்துட்டு இருக்க. இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்க இனி ஒரு தடவை இந்த வீட்டுல உன்ன பார்த்தேன் மனுஷியா இருக்க மாட்டேன்.” என்றவர் சத்தத்தில் மெல்ல எழுந்தார் செல்வகுமார்.
 
 
ஆரம்பத்தில் இருப்பதால் அவ்வளவாக குடிக்கவில்லை செல்வகுமார். ஆனால் அதுவே அவரை தள்ளாட வைத்திருக்க மனைவி திட்டுவதை தாமதமாக உணர்ந்தார். மகேஷிற்கு ஆதரவாக அவர் பேச வர, 
 
“வாய மூடுயா! புருஷன்னு கூட பார்க்க மாட்டேன். நீ பண்ண பாவத்துக்கு தான் என் பொண்ணு அங்க அவ்ளோ கஷ்டப்படுறா. பெத்தவளா என் பொண்ணு நிலைமைய பார்த்து ராத்திரி எல்லாம் தூக்கம் வரல. அதெல்லாம் தெரிஞ்சுக்காம உன்னை விட வயசுல சின்ன பையன் கூட சேர்ந்து குடிக்கிறியே வெக்கமா இல்ல உனக்கு.” என ஆதங்கத்தோடு கத்திக் கொண்டிருந்தார் நந்தினி.
 
வெளியில் வந்த விக்ரம் அவ்வார்த்தையில் என்னவென்று விசாரிக்க நேற்று அன்புக்கு நடந்ததை அழுகையோடு விவரித்தார். எங்கிருந்துதான் விக்ரமுக்கு அப்படி ஒரு கோபம் வந்ததோ இதுவரை செல்வகுமாரை பேசாத வார்த்தைகளில் பேசி விட்டான். அவருக்கு ஆதரவாக மகேஷ் வர நேற்று அக்னி அடித்ததை விட பல மடங்கு அடித்து நொறுக்கி விட்டான் அவனை. விக்ரம் அடித்த அடியில் மயங்கிய விழுந்து விட்டான் மகேஷ். மகன் பேசிய வார்த்தையில் முதல் முறையாக வருத்தத்தோடு அமர்ந்திருந்தார் செல்வகுமார். 
 
 
அக்னி மீது இருந்த கோபத்தை இருவரிடமும் காட்டியவன் குறையாத கோபத்தோடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க, மகனை சமாதானப்படுத்த முயன்றார் நந்தினி.
“நேத்து என்கிட்ட சொல்லாம எதுக்காக அமைதியா வந்தீங்க. கேட்க ஆள் இல்லன்னு நினைச்சானா அவன். இன்னையோட அவனுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.” என்றவன் நந்தினி தடுப்பதையும் மீறி புறப்பட்டான். 
 
 
நேற்று இரவு காதல் கொடுத்த தித்திப்பில் மெய் மறந்து தூங்கிக் கொண்டிருந்த அக்னிசந்திரன் தாமதமாக கண்விழித்தான். உடல் அசதியில் திரும்பி படுத்தவனுக்கு ஆடையில்லா உடல் கூடலை ஞாபகப்படுத்த மனைவியை தேடினான். அருகில் இல்லாததை உணர்ந்த அக்னி கண்விழித்து தேட, பால்கனியில் நின்றிருந்தாள் அவனின் மனைவி.
 
தூக்கம் கலையாத குரலில், “அன்பு” என்று அவன் அழைக்க, அமைதியாக நின்றிருந்தாள். பலமுறை அழைத்துப் பார்த்தவன் கால் சட்டையை அணிந்து கொண்டு அவள் அருகில் சென்றான்.
 
இடுப்பில் கைகோர்த்து தோளில் முகம் புதைத்தவன் அவளின் வாசத்தை ஆழ்ந்து நுகர, அக்னியின் கைகளில் பட்டது பெண்ணவளின் கண்ணீர். பதறி தன்னிடம் திருப்பிய அக்னி எதற்கு என்று விசாரிக்க,
 
“நான் ரொம்ப சீப்பா பிகேவ் பண்ணிட்டேன்ல நேத்து ராத்திரி.” என்றாள் மொட்டையாக.
 
“என்னடி சொல்ற ஒன்னும் புரியல.” என்றவன் அவள் முகத்தை பற்றிக்கொள்ள,
 
“என்னை எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்திட்ட. ஞாயமா நேத்தோட உன் மூஞ்சிலயே முழிக்காம கிளம்பி இருக்கணும். ஆனா நீ தொட்டதும் அடங்கிட்டேன்ல.” என்றவள் முகம் தாழ்வு மனப்பான்மையில் சுழன்றது.
 
 
அவள் வார்த்தையில் கோபம் கொண்ட அக்னி, “பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு. எத எதோட  முடிச்சு போடுற. நான் உன் புருஷன் டி.” என்று சீற,
 
“இது எப்போ இருந்து அக்னி. நேத்து உன் கிட்ட கேவலமா அடங்கி போனனே அப்போதுல இருந்தா.” என்றதும் அவளை அடிக்க கை ஓங்கினான் அக்னி. 
 
“அடி! ஏன் அடிக்காம நிறுத்திட்ட. உனக்கு கோபம் வந்தா அசிங்கப்படுத்துவ, அடிப்ப. யாருக்கும் தெரியாம ரூம்குள்ள சாரி கேப்ப எல்லாத்தையும் மறந்துட்டு உன் கூட வாழனும்.” என்றவளை முறைத்தவன்,
 
“என்னடி இப்போ உனக்கு பிரச்சனை. நேத்து நைட்டு நல்லா தான இருந்த.” என்றான்.
 
“நானா இல்ல நீ இருக்க வச்ச. என் பலவீனம் எதுன்னு தெரிஞ்சு சரியா அடிச்ச. நானும் மானங்கெட்டு புருஷன் தொட்டதும் உருகிட்டேன். இதனால தான் நீ ஒவ்வொரு தடவையும் என்னை அசிங்கப்படுத்தினியா.” என்றவளின் கழுத்தைப் பிடித்தவன்,
 
“திரும்பத் திரும்ப அதை பத்தியே பேசாத அன்பு. நேத்தோட பிரச்சினை முடிஞ்சுது இப்ப திரும்பவும் எதுக்கு கிளறிட்டு இருக்க.” என்றிட,
 
“இன்னும் ரெண்டு நாள்ல திரும்பவும் நீ பழையபடி பண்ண தான போற அக்னி. பண்றது எல்லாம் பண்ணிட்டு இந்த ரூமுக்குள்ள உருகுவ நான் அடங்கிடுவேன்.” இந்த முறை அவளின் பேச்சைக் கேட்டு அடித்து விட்டான்.
 
“நீ என் பொண்டாட்டி. திட்ட எவ்ளோ உரிமை இருக்கோ அதே அளவுக்கு உன்னை நெருங்கவும் உரிமை இருக்கு. நேத்து நைட்டு உன்னை சமாதானப்படுத்த தொடல என்னை விட்டு போறன்னு சொன்னதை தாங்கிக்க முடியாம தொட்டேன். அதுக்கு என்னலாம் பேர் சொல்ற. வாய் இருக்குன்னு என்ன வேணா பேசாத அன்பு.” என்று எச்சரித்தான்.
 
 
“நான் போனா என்ன பிரச்சனை உனக்கு. நான் இல்லன்னா இன்னொருத்தி. அதான் உங்க அம்மா யார கை காட்டினாலும் தாலி கட்டுவியே.” என்று பழையதை மீண்டும் கிளறி பேச,
 
“முடிஞ்சு போனது எதுக்குடி இப்ப பேசுற.” மனம் நொந்து கேட்டான் அக்னி.
 
“எதுவும் முடியல. நான் தான் சூடு சொரணை இல்லாம உன்கிட்ட அடங்கிட்டேன். என்னை எனக்கே பிடிக்கல அக்னி. உன் விஷயத்துல  சராசரி பொண்ண விட கீழ இறங்கி நடந்துட்டதா தோணுது. என்னோட சுய கௌரவத்தை இழந்து உனக்கு பின்னாடி ஒளிஞ்சி நிக்கிற மாதிரி தோணுது. காதலுக்காக என்னை நானே தொலைச்சிட்டேன்னு தோணுது. என் முகத்தை கண்ணாடில பார்க்க அருவருப்பா இருக்கு. நாளைக்கு நீ வேற ஏதாவது பண்ணிட்டு வந்து இதே மாதிரி பண்ணுவ நானும் அடங்கிடுவேன்னு என் மனசாட்சி காரி துப்புது. இந்த மாதிரி ஒரு பொழப்புக்கு சாகலாம்னு தோணுது.” என்றதும் அங்கிருந்து வெளியேறினான் அக்னி.
 
வீட்டின் நடுக்கூடம் வந்த அக்னியை வீட்டில் இருந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. நேற்று இரவு செய்த செயலில் அவன் மனம் மருண்டு பேசவிடாமல் செய்ய, “பரமு நேத்தே அந்த பொண்ணு சாப்பிடல, சாப்பிட சொல்லு.” என்றார் மணிவண்ணன். 
 
“எந்த முகத்தை வச்சுக்கிட்டு அந்த பொண்ணு கிட்ட பேச சொல்றீங்க. இப்படி ஒரு மகனை பெத்ததுக்காக அவ கால்ல விழுந்து தான் மன்னிப்பு கேட்கணும்.” என்று எரிந்து விழுந்தார் பரமேஸ்வரி.
 
“அம்மா என்ன பேசுறீங்க.” என அக்னி பேச ஆரம்பித்ததும் கொதித்து எழுந்தவர், “இன்னொரு தடவை என்னை அம்மானு சொல்லாத. என் வளர்ப்ப நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு. அப்படி என்னதான் கோபம் உனக்கு. உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு நாளைக்கு அவ போற வீட்டுல கஷ்டப்படுறதை பார்க்கும் போது தான் புரியும் அந்த வலி என்னன்னு.” என அவனை கண்டித்துக் கொண்டிருக்கும் நேரம் உள்ளே நுழைந்தான் விக்ரம்.
 
 
வந்தவன் யாரையும் கண்டு கொள்ளாமல் அக்னியை அடித்து விட, வீட்டில் இருந்த மூவரும் பதறினார்கள். வாங்கிய அடியில் அக்னிக்கும் கோபம் வந்துவிட திரும்பி விக்ரமை அடிக்க பாய்ந்தான். இருவரும் யாரையும் கண்டுகொள்ளாமல் ஒருவர் மாற்றி ஒருவர் அடித்துக் கொண்டிருக்க, தடுக்க முயன்றார் மணிவண்ணன்.
 
“நீ யாருடா என் தங்கச்சிய கஷ்டப்படுத்த. என் வீட்டுல எப்படி வளர்ந்த பொண்ணு தெரியுமா அவ. என்ன கேடு வந்துச்சோ உன்னை நம்பி இங்க வந்து கஷ்டப்படுறா. உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் அவ பண்ண விஷயத்துக்காக காலம் முழுக்க காலடியில உக்கார்ந்து சேவகம் பண்ணனும் குடும்பமே.” என்றவன் அக்னியை அடிக்க,
 
“இது என் குடும்ப விஷயம் நீ யாருடா தலையிட?” என்று அவனும் பதிலுக்கு பதில் அடி கொடுத்தான்.
 
விக்ரமிற்கு கோபம் அதிகரித்து விட அவள் செய்த ஒவ்வொன்றையும் சொல்லிக் காட்டி அடிக்க ஆரம்பித்தான் அக்னியை. கோபத்தில் அடித்துக் கொண்டிருந்த அக்னி  விஷயங்களை கேட்ட பிறகு அமைதியாகிவிட்டான் . 
 
 
விக்ரம் போட்ட சத்தத்தில் அன்பினி வெளியில் வந்தாள். நடப்பதை பார்த்து தடுக்க முயற்சித்தவளை, “அறிவில்ல உனக்கு அப்படி என்ன இவன் உனக்கு பண்ணிட்டான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு குடும்பம் நடத்துற. கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லையா. இவன் பண்ண வேலைக்கு எந்த பொண்ணா இருந்தாலும் காரி துப்பிட்டு கிளம்பி இருப்பா. நீ இன்னும் இவன் வீட்டுல இருக்க. ” என்று தங்கையிடம் பாய்ந்தவனை பரமேஸ்வரி சமாதானப்படுத்த முயற்சித்தார்.
 
 
“தயவுசெஞ்சு பேசாதீங்க அத்தை எனக்கு உங்க மேலயும் செம கோவம். உங்க பையன் பண்ற எல்லாத்தையும் பார்த்துட்டு சும்மா தான இருக்கீங்க. இதுவே உங்க பொண்ணுக்கு நடந்தா இருப்பீங்களா இப்படி.” என கேட்க,
 
“தேவையில்லாம பேசாதீங்க மாமா இப்ப கூட அம்மா அண்ணனை திட்டிட்டு தான் இருந்தாங்க.” என்றாள் திவ்யா.
 
“என்ன திட்டினாங்க? வந்ததுல இருந்து பையன் அடி வாங்க கூடாதுன்னு என்னை தான குடும்பமே சேர்ந்து தடுக்குறீங்க.”அவளிடமும் சண்டைக்கு பாய்ந்தான்.
 
“நான் பண்ணதுக்கு எதுக்காக என் குடும்பத்தை கேள்வி கேட்கிற இதுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என அக்னி பேசியதும்,
 
“நீ இந்த வீட்ல தான இருக்க ரோட்ல ஒன்னும் இல்லையே. உன்ன அடிக்கும் போது மட்டும் வந்து தடுத்தாங்க அப்ப மட்டும் எங்க இருந்து வந்தது சம்பந்தம்.” நறுக்கென்று கேட்டான் விக்ரம்.
 
 
“விக்ரம் கொஞ்சம் அமைதியா பேசு. முதல் தடவை இப்படி நடந்து இருக்கு நாங்களே என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம்.” என்றார் மணிவண்ணன்.
 
“முதல் தடவையா அப்படின்னு உங்களுக்கு யார் சொன்னது.”என்றவன் அன்று ஷாப்பிங் மாலில் நடந்ததை விவரித்தான்.
 
பெற்றோர்கள் அக்னியை வன்மையாக முறைக்க, அவன் செய்வதறியாது தலை குனிந்து நின்றான். விஷயம் விக்ரம் வரை சென்றிருக்கிறது என்பதை அறிந்த அன்பினி மானம் இழந்து அனைவரின் முன்பும் நின்றாள்.
 
“அன்னைக்கு இந்த மாதிரி உன்ன அடிச்சிருந்தா நேத்து என் தங்கச்சிய திரும்பவும் அசிங்கப்படுத்தி இருக்க மாட்ட. என் தங்கச்சிக்கு பண்ண பாவத்துக்கு உன் தங்கச்சிக்கு இதைவிட பெரிய அவமானம் கிடைக்கும் பாரு.”  என்றதும் திவ்யா அவனை அதிர்வோடு பார்க்க,
 
“என் தங்கச்சி பத்தி பேச நீ யாருடா.” என்று அடித்தான் அக்னி.
 
“உன் தங்கச்சிய ஒரு வார்த்தை சொன்னதும் இவ்ளோ கோபம் வருதே அதே தான எனக்கும் இருக்கும். நீ அவளுக்கு பண்ண பாவத்துக்கு இவ தான் அனுபவிப்பா.” என்று விக்ரம் வார்த்தையை விட,
 
 
அன்பிற்காக அமைதியாக இருந்தவன் குதிக்க தொடங்கினான். இருவரும் காரசாரமாக வாக்குவாதங்களில் ஈடுபட, “உங்க அப்பா பண்ண பாவம் தான் டா உன் தங்கச்சிக்கு இப்படி எல்லாம் நடக்குது. முதல்ல உன் அப்பனை திருத்துற வழிய பாரு அப்புறம் என்கிட்ட வந்து பேசலாம்.” 
 
ஒவ்வொன்றாக சபையில் அரங்கேற, “அன்பு உனக்காக தான் அமைதியா இருக்கேன். மரியாதையா இவனை இங்க இருந்து போக சொல்லு.” என்றான் அக்னி.
 
“அவளுக்காகவா அவ இல்லனா என்னடா பண்ணி இருப்ப. வா வந்து காட்டு.” சண்டைக்கு பாய்ந்தான் விக்ரம்.
 
 
“விக்ரம் பிரச்சனை பண்ணாத அமைதியா இரு.” என அன்பினி கூறியதும் கோபம் முழுவதும் அவளிடம் திரும்பியது.
 
“என் தங்கச்சி அன்பினிசித்திரை நீ இல்ல. அவளுக்கு யாராவது தர குறைவா பார்த்தா கூட பிடிக்காது நீ என்னடான்னா வெட்கம் கெட்டு அவன் காலடியில இருக்க. அப்படி என்ன பண்ணிட்டான் இவன் உனக்கு. எங்க எல்லாரையும் விட்டுட்டு இவன் பின்னாடி வந்து என்ன சாதிச்சிட்ட நீ. கடைசி வரைக்கும் ஒரு ஈ அளவுக்கு கூட உன்னை மதிக்க மாட்டான். அது தெரிஞ்சும் இன்னும் கூட இருக்கியே அசிங்கமா இல்ல.” என்று தன் மனதில் இருக்கும் ஆதங்கங்களை கொட்ட,
 
“டேய்! அவ கிட்ட நீ தேவை இல்லாம பேசிட்டு இருக்க? இது எங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற பிரச்சனை இதுக்கு நடுவுல நீ வராத.” என்றான் அக்னிசந்திரன்.
 
“சபைக்கு நடுவுல பண்ணிட்டு உங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட பிரச்சனைன்னு சொல்ற வெட்கமா இல்ல. நான் வருவேன் என் தங்கச்சிக்காக அதை தடுக்குற உரிமை உனக்கு இல்லை.”
 
“அன்பு! இதுக்கு மேல சும்மா இருக்க மாட்டேன் கிளம்ப சொல்லு அவனை.” என்றதும்,
 
“விக்ரம் சொன்னா கேளு. என்ன நடந்துச்சுன்னு நான் அப்புறம் சொல்றேன். அமைதியா உட்காரு.” என்று தங்கையின் வார்த்தையில் கொதித்தவன்,
 
“அவன் பேச்சைக் கேட்டு என்ன அடக்குற. ஆனா அவன் உன்ன எவ்ளோ அசிங்கமா பேசினான்னு தெரியுமா. போனா போகுதுன்னு வீட்டுல இடம் கொடுத்து தண்டமா மூணு வேளை சோறு போட்டு வளர்க்கிறானாம். எந்த புருஷனாது பொண்டாட்டிய இப்படி ஒரு வார்த்தை சொல்லுவானா.  நம்ம வீட்டுக்கு வந்து அத்தனை பேருக்கு முன்னாடியும் சொன்னான். வேணும்னா பாட்டி கிட்ட கேட்டு பாரு.” அதுவரை நடப்பதை பார்த்து அழுகையோடு அமர்ந்திருந்த அன்னபூர்ணிடம் வார்த்தையை மாற்ற, அவரோ அமைதியாக அழுது கொண்டிருந்தார்.
 
 
விக்ரமின் வார்த்தையில் மனம் நொந்து போனாள் அன்பினிசித்திரை. ஆதங்கமான பார்வையோடு அவள் கணவனை பார்க்க, அக்னி செய்வதறியாது நின்றிருந்தான். 
 
 
அன்பினியின் மௌனத்தை உணர்ந்த விக்ரம், “இதுக்கு மேலயும் இங்க இருக்கணுமா அன்பினி கிளம்பு நம்ப வீட்டுக்கு !” என்றான் அவள் முகத்தை பார்த்துக் கொண்டு.
 
 
விக்ரம் பேசியதை கேட்டு வீட்டில் இருந்து அனைவரும் பதட்டத்தோடு அன்பினியை பார்க்க, “என் பொண்டாட்டி என் கூட தான் இருப்பா அவ எங்கயும் வரமாட்டா நீ கிளம்புடா.”என கத்தினான் அக்னி.
 
“பொண்டாட்டியா அந்த வார்த்தைய சொல்ற  தகுதி உனக்கு இல்லை. பல பேருக்கு முன்னாடி அவமானப்படுத்திட்டு உரிமை வேற கேக்குதா உனக்கு.” என்ற விக்ரம் தன் தங்கையிடம்,
 
“நீ இங்க வாழ்ந்து கிழிச்சது எல்லாம் போதும் அன்பினி இப்பவே கிளம்பு.” என்றான் விடாப்படியாக.
 
பயம் கலந்த பதட்டத்தோடு மனைவியை பார்த்தவன், “அன்பு அவன் பேசுறதை கேட்காத நீ நம்ம ரூமுக்கு போ.” என்றான்.
 
 
அவள் விழி எடுக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, தடுமாறியவன், “அன்பு தனியா பேசிக்கலாம்டா உள்ள போ.”  எங்கு அவள் சென்று விடுவாளோ என்ற பயத்தில் கைப்பிடித்து அமைதியாக கூறினான்.
 
“அவன் பேசுறதை கேட்டு இங்க இருந்தின்னா இத்தோட என் உறவை மறந்திடு அன்பினி.” எதிர்ப்புறத்தில் இந்த விக்ரம் முடிவோடு கூற,
 
“இங்க பாருடா என்னை பழி வாங்கணும்னு இந்த விஷயத்தை யூஸ் பண்ணிக்காத. அவ என்னை விட்டு எங்கயும் வரமாட்டா.” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே படியேறினாள் அன்பினி.
 
அவள் என்ன முடிவெடுத்து செல்கிறாள் என்பதை அறிந்து கொள்ள விரும்பிய அக்னி பின்னால் செல்ல, “நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன் பத்து நிமிஷத்துல கீழே வரணும் இல்லனா இத்தோட உனக்கும் எனக்குமான எல்லாம் முடிஞ்சிடும் அன்பினி.” உரக்க கூறினான் விக்ரம்.
 
 
“அவன் சொல்றத கேட்காத அன்பு. அப்ப ஏதோ ஒரு கோபத்துல சொல்லிட்டேன். நேத்தே எல்லாம் பேசி முடிச்சிட்டோம். இவன் தேவை இல்லாம வந்து பிரச்சனை பண்றான்.” என்றவனை கண்டு கொள்ளாமல் அலமாரியில் இருக்கும் துணிகளை அடுக்கி வைக்கும் வேலையில் இறங்கினாள் அன்பினி.
 
 
அதை உணர்ந்தவன் அவசரமாக அவளிடம் பல கெஞ்சல்களை வைத்துக் கொண்டிருக்க, எதற்கும் செவி சாய்க்கவில்லை அன்பினி. இரண்டு பெட்டிகளை தயார் செய்தவள் அறையை விட்டு வெளியேறும் நேரம் கதவை சாற்றியவன்,
 
“அன்பு போகாத ப்ளீஸ்டா. அவன் உன்னையும் என்னையும் பிரிக்க பார்க்கிறான். நேத்து நைட்டு எவ்ளோ சந்தோஷமா இருந்தோம் அதை கொஞ்சம் நினைச்சு பாரு அன்பு.”என அவன் கெஞ்சுவதை காதில் வாங்காதவள் வெளியேறினாள்.
 
 
“ஏய்! சொல்லிட்டே இருக்கேன்ல எங்கடி போற.”வலுக்கட்டாயமாக அன்பினியை பிடித்து வைக்க, கீழே நின்றிருந்த விக்ரம் பார்த்து விட்டான்.
 
 
வேகமாக படியேறி தங்கையை அவனிடம் இருந்து பிரித்தவன், “அவ மேல கை வச்ச அவ்ளோ தான்.” என்று அழைத்து வந்தான்.
 
விக்ரம் சட்டையை பிடித்து கன்னத்தில் ஒன்று வைத்த அக்னி, ” நைட்டே நான் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்திட்டேன். இப்ப புதுசா நீ வந்து பிரச்சினைய கிளறி விட்டு என்கிட்ட  இருந்து அவளை பிரிக்க பார்க்கிற. இதெல்லாம் உங்க அப்பா பிளான் தான. ” என்று அன்பினியை தன் புறம் எடுத்துக் கொண்டவன்,
 
 
“அவன் பேசுறான் நீயும் பார்த்துட்டு சும்மா இருக்க. வரமாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு உள்ள போடி.”என்ற அக்னியை அமைதியாக பார்த்தவள் பிடித்திருந்த கையை எடுத்து விட்டாள்.
 
 
அதில் அவன் முரட்டுத்தனமாக மாற, “கடைசியாக கேட்கிற அன்பு உனக்கு நான் வேணுமா அவன் வேணுமா.” என்றான்.
 
 
பதில் சொல்லாமல் அவள் நடந்து வாசல் வரை செல்ல, “அன்பு இப்ப போனா இனி நான் செத்தா கூட இந்த வீட்டுக்கு வரக்கூடாது.” என்று நடு ஹாலில் அக்னி கத்திக் கொண்டிருக்க, காதில் வாங்காதவள் தான் கொண்டு வந்த இரண்டு பெட்டிகளை வாசலில் தாண்டி வைத்தாள்.
 
 
தன் வார்த்தையை மீறி செல்லும் அன்பினியை வேகமாக இழுத்து, “அக்னி வேணாம் அப்படித்தான. போ! அவன் கூட சேர்ந்து உன் வீட்டுக்கே போ. இனி நீயே வந்தாலும் என் வாழ்க்கையில உனக்கு இடமில்லை.” என்று முடிவாக கூறி விட, குடும்பமே அன்பினியை தடுத்தது.
 
“அண்ணி ப்ளீஸ் போகாதீங்க அண்ணனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இனிமே அவன் எதுவும் செய்யாத மாதிரி அம்மா பார்த்துப்பாங்க.” என்ற திவ்யா கெஞ்சி கொண்டிருக்க,
 
 
“இதுவரைக்கும் அவ அசிங்கப்பட்டு நின்னதை பார்த்ததே போதும். இதுக்கு மேலயும் எதுவும் நீங்க செய்ய வேணாம். என் தங்கச்சியா என் வீட்டுல  ராணியா இருப்பா.” திவ்யாவின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசினான் விக்ரம்.
 
“அவ ராணியா எங்க போனாலும் இருக்கலாம். ஆனா நான் இல்லாம சந்தோஷமா இருக்க மாட்டாடா.” சத்தமாக விக்ரமுக்கு கேட்கும் படி கூறினான் அக்னி.
 
“அசிங்கப்படறதுக்கு பேரு தான் சந்தோஷம்னா அது அவளுக்கு வேணாம்.”என்றவன் அன்பினியின் கைபிடித்து அழைத்துச் செல்ல,
 
“மாமா அவசரப்பட்டு தப்பான முடிவு எடுக்குறீங்க.” என்றவளை கடுமையாக முறைத்தான்.
 
“என் விஷயத்துல தப்புன்னு சொல்ற உரிமைய உனக்கு யார் கொடுத்தது. உன் வேலையை மட்டும் பாரு.” என்றான் மூஞ்சியில் அடித்தது போல். 
 
 
அதன்பின் திவ்யா எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்க, அன்னபூரணி அழுகையோடு நின்றிருந்தார். அன்பினியின் முடிவை தடுக்க விரும்பாத பெற்றோர்கள் நடப்பதை பார்த்துக் கொண்டு ஒதுங்கினர்.
 
 
வாசற்படி அருகில் நின்ற அன்பினி திரும்பி அனைவரையும் பார்த்து கடைசியாக தன் கணவனை பார்க்க, ‘போகாத டி’ என விழியால் கெஞ்சினான்.
 
 
 
அதைப் பார்த்த பின்னும் எந்த சலனமும் இல்லாமல் வாசற்படியை தாண்டினாள் அன்பினி.
 
 
அம்மு இளையாள் ‌
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
27
+1
4
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *