25 – விடா ரதி…
“ஹேய் ரதி….”, என அலறலுடன் ரகு அவளை வந்துத் தூக்கிக் கொண்டான்.
சட்டென அவனை அங்கே எதிர்பார்க்காத பிரேம் அங்கிருந்து தப்ப முனைகையில் நவநீதன் உள்ளே வந்து அவனை மடக்கிப் பிடித்தான்.
அவளை ஆம்புலன்ஸில் மருத்துவமனை கொண்டுச் சேர்க்க, அவள் இரத்தத்தில் அதிகமாக போதை மருந்தின் வீரியம் இருப்பதாகக் கூறினர்.
தலையில் இருந்து இரத்தமும் அதிகமாக வெளியேறியிருந்தது. உடனே இரத்தம் ஏற்ற எல்லா ஏற்பாடுகளும் மருத்துவமனைச் செய்து முடித்து அவளுக்கு முதலுதவி செய்து முடித்தது.
ஆனாலும் போதை மருந்தின் காரணமாக அவளது நிலை இப்போதும் அபாயகட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூற, ரகு நொறுங்கி போய் அமர்ந்தான்.
“கவலைப்படாத மச்சி…. சிஸ்டர் சீக்கிரம் குணமாகிடுவாங்க….”, நவநீதன் ஆறுதல் கூறினான்
“அந்த பன்னாடை எங்க டா? எனக்கு அவன ஒரு பத்து நிமிஷம் மட்டும் குடு…”, கோபம் பொங்கக் கேட்டான்.
“டேய்…. ரகு…..”, தயக்கமாகக் கூறினான்.
“உயிர் போகாது மச்சான்… ஆனா அவன் எனக்கு வேணும் ….”, என மீண்டும் கேட்க, அவனைத் தன்னுடன் தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான்.
“பிரச்சினை வராம பாத்துக்க மச்சி… நானும் வெளிய இருக்கேன்….. “, என அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி தானும் வெளியே சென்று நின்றுக் கொண்டான்.
ரகு தனது மொத்த கோபத்தையும் ஆத்திரத்தையும் அவனை நார் நாராக கிழித்து தொங்கவிடுவதில் காட்டினான்.
வெறும் உயிர் மட்டுமே மிச்சம் இருக்க, மற்றவை எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தது.
கடைசியாக அவன் வைத்திருந்த போதை மருந்தை அவனது மூக்கிலும் வாயிலும் திணித்துவிட்டு வெளியே சென்றான்.
நவநீதன் அவனைப் போதை வழக்கில் கைது செய்து மேலும் சில குற்றங்களைப் போட்டு நிரந்தரமாகச் சிறைக்குள் அடைக்க ஏற்பாடு செய்தான்.
அவனது காயங்கள் பற்றி நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு போதை மருந்தை அதிகமாக உபயோகித்து வண்டியின் முன் விழுந்து விட்டான் என அதற்கும் ஆதாரங்களைக் காட்டி அவனுக்கு ஜாமின் இல்லா தண்டனையை வாங்கிக் கொடுத்தான்.
இரண்டு நாட்கள் போராடி ரதி மெல்ல நினைவுத் திரும்பினாள். உடலும், மனமும் அதீத அழுத்தத்தில் உழன்றது. மருத்துவமனையில் இருப்பதுக் கண்டு டக்கென எழுந்துப் பாத்தாள்.
“மேடம்… படுங்க.. இப்படி வேகமா எந்திரிக்காதீங்க….”, என நர்ஸ் அவளைப் படுக்கவைத்துவிட்டு மருத்துவரை அழைக்கச் சென்றாள்.
ரகு அவள் கண் விழித்த செய்தி தெரிந்ததும் தவிப்போடு கண்கள் கலங்க கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தான்.
மருத்துவர் அவளைச் சோதித்துக் கொண்டிருந்தார். தலை வலிக்கிறது போல முகம் சுறுங்கியேபடியே பேசினாள்.
“உள்ள போய் பாருப்பா… புள்ள உன்ன தான் தேடும்.. நாங்க பத்து நிமிஷம் கழிச்சி உள்ள வரோம்..”, என அவனது அப்பா கூறவும் மருத்துவர் அருகே சென்று நின்றான்.
“வாங்க ரகு… உங்க மனைவி நல்லா இருக்காங்க… நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்….. மதுரைலயே செக்கப் பண்ணிக்கலாம்.. நான் லெட்டர் அண்ட் ரிப்போர்ட் தரேன்…. ரிலாக்ஸ் ஆகுங்க…”, என அவனை தோளில் தட்டிவிட்டுச் சென்றார்.
ரதி அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தால், ஆளே கருத்து, கண்கள் குழி விழுந்து, கண்களில் நீருடன் அவனை காணவும் அவளுக்கு மனது கொய்தது.
“ஏண்டா இப்படி ஆகிட்ட? “, என அவனை தான் முதலில் விசாரித்தாள்.
“உன் மூஞ்சிய பாரு டி….. எப்படி என்ன பயமுறுத்திட்ட நீ…. எவ்ளோ தவிச்சேன் தெரியுமா? ஜீவனே இல்ல டி நீ இல்லாம…. “, என அவளை அணைத்தான் .
“சார்… தலைல தைய்யல் பிரிக்கற வரை கவனமா இருக்கணும்… இவளோ வேகம் வேணாம்…”, என நர்ஸ் கூறியதும் அவன் மெல்ல விலகினான்.
“தைய்யல் பிரிஞ்சா போட்டுக்கலாம் சிஸ்டர்… என் புருஷன என்னை கொஞ்ச விடுங்க…”, எனக் கூறியதும் அவன் சிரித்தான். அந்த சிரிப்பில் ஒளி மீண்டும் வந்திருந்தது.
‘உதட்டில் ஆரம்பித்து கண்களில் முடியும் சிரிப்பு அவனுக்கு ‘ என மீண்டும் மனதில் நினைத்தாள் .
“எவ்ளோ பட்டாலும் வாய் மட்டும் கொறையாது உனக்கு…. காயம் ரொம்ப வலிக்குதா?”, மெல்ல தடவியபடிக் கேட்டான்.
“கொஞ்சம்… எத்தன தையல் போட்டு இருக்காங்க? பின்னாடி ஃபுல்லா மொட்டை அடிச்சிட்டாங்களா?”, எனக் கவலையோடு கேட்டாள்.
“ரொம்ப கவலை தான் டி உனக்கு…. மசுறு போனா வளந்துடும்… எங்க உசுரு எப்படி தவிச்சதுன்னு தெரியுமா? ஊர் கண்ணு பட்டு இப்படி ஆகிரிச்சி டி…. நல்ல வேளை கருப்பன் காப்பாத்திட்டான்… “, என சாந்தம்மா தேவி அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.
“எப்படி ராசாத்தி இருக்க? ரொம்ப வலி இருந்தா சொல்லு ஊசி போட சொல்லலாம்….”, மாமனார் கேட்டார்.
“பரவால்ல மாமா…. “
அவளின் தாயும் தந்தையும் கண்கள் கலங்க அவளை நலம் விசாரித்து, தம்பியின் தலை கலைத்து விளையாடி அவர்களின் இறுக்கத்தைக் குறைத்தாள்.
“ஜாக்கிரதையா இருக்கணும்-ன்னு எத்தன தடவ சொல்றது உனக்கு?”, தந்தைக் கண்டித்தார்.
“அவன் என்னை கடத்தினா நான் என்ன பண்றது?”
“சரி விடுங்க சம்பந்தி… புள்ள இப்போ தான் கண்ணு முழிச்சு இருக்கு… வாங்க போய் சாப்பாடு வாங்கிட்டு வரலாம்….”
அதன்பின் நவநீதன் ஒருமுறை வந்து அவளைப் பாத்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்…. சரியா நீங்க அந்த நேரம் வந்துட்டீங்க….”, மனப்பூர்வமாகக் கூறினாள்.
“நீங்க உங்க டீம் மேட் விஜய்க்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.. அவர் தான் சரியான நேரத்தில் எங்களுக்கு உண்மைய சொல்லி இடத்தையும் கண்டுப்பிடிச்சி சொன்னார்…”
“விஜய் அஹ்? எப்படி?”
அன்று அவளை பிரேம் அங்கிருந்து தூக்கிச் செல்லும் போது விஜய் பார்க்கிங் அருகே தான் நின்று புகைப்பிடித்துக் கொண்டிருந்தான்.
அவனை பிரேம் பார்க்கவில்லை. இவன் அவனைப் பார்த்துவிட்டு அழைக்க அழைக்க அவன் வேகமாக காரில் சென்றுவிட்டான்.
“அவன் கார்டு வாங்காம போயிட்டான்… சரி திங்ககிழம குடுத்துக்கலாம்…. நாளைக்கு நான் தான் ஓனர் இந்த கார்டுக்கு…”, எனக் கூறியபடி அவனும் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.
அதன் பின் ரதியைக் காணவில்லை என அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும் கிளம்பி சென்றவனுக்கு பிரேம் வந்து சென்றது நினைவு வரவில்லை.
நவநீதன் அவனையும் வரவழைக்க சொல்லவும் தான், அவன் இன்று விடுமுறை எடுத்திருப்பதும், யாரும் அறியாமல் பின்பக்க வழியாக வந்து சென்றதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
“சார்… நான் சாயிந்தரம் பிரேம்ம இங்க பார்க்கிங்ல பாத்தேன்… “, என நள்ளிரவு தாண்டி வந்துக் கூறினான்.
“எந்த நேரம் பாத்தீங்க? எந்த பக்கம் வண்டி போச்சி? வண்டி நம்பர் என்ன?”, ரகு அவசரமாகக் கேட்டான்.
“அவனோட வண்டில அவன் இன்னிக்கி போகல.. ரதி மேடம் காணாம போன நேரமே தான் கிட்டத்தட்ட…. நான் கூப்பிட கூப்பிட நிக்காம போயிட்டான்…. ஆனா வண்டில யாராவது இருந்தாங்களான்னு எனக்கு தெரியல…”
“பிரேம் எப்படி? கேரக்டர் பழகறது எல்லாம்?”, என நவநீதன் கேட்டான்.
“கொஞ்சம் முசுடு தான் சார்… யார்கிட்டேயும் அவ்ளோ பேசமாட்டான்.. ஆனா உதவின்னு கேட்டா எவ்ளோ பணம்னாலும் தருவான்.. இப்போ கூட அவன் கிரெடிட் கார்டு என்கிட்ட தான் இருக்கு….”, என அதைக் காட்டினான்.
“பொண்ணுங்ககிட்ட எப்படி பழகுவான்?”
“பெருசா இங்க யார்கிட்டேயும் பழகமாட்டான். ஆனா அடல்ட்ரோர்ஸ் கூட கனெக்சன் இருக்கு… லீவ் வந்தா யாரையாவது புக் பண்ணி கூட்டிட்டு போயிடுவான்…. ரதி மேடம்க்கு கல்யாணம் ஆன விசயம் கேட்டதும் அதிர்ச்சியா இருந்தான் அன்னிக்கி.. அப்பறம் நார்மல் ஆகிட்டான்…. “
“சரி.. அவன் கார்ட் குடுங்க.. கடைசியா எதாவது பணம் குடுத்த ரெக்கார்ட் இருக்கா பாருங்க..”, என காவலர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பினான்.
“ரகு உனக்கு சந்தேகம் வருதா?”
“இவங்க சொல்றத கேட்டா சந்தேகம் வருது தான்… ஆனா அவன் போன வண்டி, எங்க இருக்கான் எல்லாம் தெரியணும்…”
“கண்டுபிடிச்சுடலாம்.. இவன் வந்து போனது பக்கத்துல இருக்க பார்மஸில பதிவாகி இருக்கு… அவன் கைல ரதியோட திங்ஸ் இருக்கறது தெளிவா தெரியுது.. அவன் தான் கடத்திட்டு போய் இருக்கணும்….”, எனக் கூறிப் பார்த்தான்.
“அந்த பாஸ்டர்ட் கைல கிடைக்கட்டும்…”, எனக் கை முஷ்டியை இறுக்கினான்.
அதன் பின் அவனது பண பரிவர்த்தனை மொத்தமும் எடுத்து பார்த்ததில், அவன் அன்று இரவு ஸ்டார் ஹோட்டலில் மது வாங்க பயன்படுத்தி இருப்பது தெரிந்தது. அதைக் கண்டுபிடித்து அவர்கள் அறைக்குள் வரவும் ரதி தலையில் அவன் பாட்டலை வீசவும் சரியாக இருந்தது.
“அவன் எங்க சார்? என் கையாள நாலு அடி அடிச்சா தான் எனக்கு மனசு ஆரும்… சரியான சைக்கோ … “, கோபமாகக் கூறினாள்.
“அவன் ஜெயில்ல டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கான் உங்க புருஷன் காட்டுனா காட்டுல… நீங்களும் அடிச்சா ஒரே அடியா போயிருவான் சிஸ்டர்…. “, எனக் கூறி இருவரிடமும் விடைப்பெற்றுச் சென்றான்.
“சாப்டு கிளம்பரது தான்… ஃப்ளைட் புக் பண்ணிட்டேன்… டூ ஹவர்ல வீட்ல இருப்போம்… ரெஸ்ட் எடு.. நான் டாக்டர் பாத்துட்டு வரேன்…”, எனக் கூறிச் சென்றான்.
அவள் முகம் பார்க்காமல் கூறிச் செல்பவனை ரசனை பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் .
அதன் பின் அவளை மதுரையில் இருக்கும் வீட்டிலேயே விட்டுவிட்டு ரகு ஒரு நாள் கொடைக்கானல் சென்று வந்தான்.
அவளின் தாயும் தந்தையும் இரண்டு நாள் இருந்துவிட்டுக் கிளம்பினர். சாந்தம்மா அவளுக்கு சத்தான ஆகாரமாகக் கொடுத்து உடலைத் தேற்றிக் கொண்டிருந்தார்.
தையல் பிரித்து, காயமும் வடுவாக மாறி இருந்தது. ஆனாலும் சில நாட்கள் கவனமாக இருப்பது நல்லது என அவளைத் தன்னுடனே வைத்துக் கொண்டார் சாந்தம்மா தேவி. அவளுக்கு அவரோடு உரையாடியபடி அவரின் வேலைகளில் உதவுவது பிடித்திருந்தது.
மாமனாரும் அன்பாக தினம் அருகில் அமர்ந்து பேச, அவளுக்கு மனதில் இருந்த இறுக்கமும், கலக்கமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.
அவளின் வேலையை மேனேஜர் எடுத்துப் பார்த்துக் கொண்டார். கடைசியாக அவள் ஒருமுறை சரி பார்த்தால் போதும் எனக் கூறியிருந்தார் கம்பெனி எம்.டி.
ரகு அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்து அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தான். அவனது தவிப்பை குறைக்க அவளும் தன்னை தயார் செய்தபடி அன்று மாலை அவனுக்காக வாசலில் நின்றுக் காத்திருந்தாள்.
“இப்படி மினுக்கிட்டு திரிஞ்சா கண்டவனும் தூக்கிட்டு தான் போவானுங்க…. ஊருல இல்லாத பொண்ணுன்னு வெளிநாட்ல ஊர் மேய்ஞ்ச சிறுக்கிய கட்டிவச்சா இப்படி தான் குடும்பம் சந்தி சிரிக்கும்…”, என ஒரு உறவுக்கார பெண்மணி கூறியபடி வீட்டின் உள்ளே வந்தார்.