Loading

தெம்மாங்கு 25

 

குமரவேலனின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அவன் நண்பன் வாரிசின் நலனை அறிந்து கொள்ளும் நாள் என்பதால். ஐந்தாவது மாதத்தில், பிள்ளையின் அசைவு தெரியும் என்ற காமாட்சியின் பேச்சைக் கேட்டவன் அவளிடம் மெல்ல விசாரிக்க, 

 

“எதுவும் தெரியல.” எனப் பொய் சொல்லி அவனைப் பதற வைத்தாள்.

 

இவ்வளவு நாள்கள் ஆகிய பின்னும், குழந்தையின் அசைவு தெரியவில்லை என்றால் அவை நன்றாக வளரவில்லை என்று பயந்தவன், இந்த நாளுக்காகக் காத்திருந்தான். இந்த ஒரு வாரமாகத் தன்னுடன் இருப்பவனின் பயம் புரியாது, நாளுக்கு நாள் பிள்ளையின் அசைவை அதிகம் உணரத் துவங்கினாள் தேனிசை தேவி.

 

மெல்லிய பட்டாம்பூச்சியாய், வயிற்றுக்குள் உதைக்கும் அவள் சிசுவின் நடவடிக்கைகளை தனக்குள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். தன்னிடம் வெளிப்படையாக உரைக்கச் சங்கடப்படுவாள் என்று காமாட்சியை விட்டுக் கூடக் கேட்டுப் பார்த்து விட்டான். குமரவேலனுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே அவரிடமும் பொய் சொன்னாள். 

 

“இப்பவாச்சும் தெரியுதாம்மா?”

 

“எத்தனை தடவை இதையே கேப்ப?”

 

“இல்லம்மா…” 

 

“என் குழந்தையைப் பத்தி என்னை விட உனக்கு ரொம்ப அக்கறையா? சும்மா அது இதுன்னு ஏதாச்சும் கேட்டுட்டே இருக்க. உன் நடிப்பைச் சுத்தி இருக்குறவங்க வேணா நம்புவாங்க, நான் நம்ப மாட்டேன். என்கிட்ட எப்படி உனக்கு எந்த உரிமையும் இல்லையோ, அப்படித்தான் என் குழந்தை கிட்டயும்.” 

 

“என்னம்மா இப்படிப் பேசுற?”

 

“ப்ச்! கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா உட்கார விடு. நானே ஸ்கேன்ல குழந்தை எப்படி இருக்குமோ, என்னமோன்னு பயந்துட்டு இருக்கேன். அடுத்த தடவைல இருந்து நீ என் கூட வராத…”

 

“சரிமா, கோபப்படாம இரு. அடுத்து உன்னத்தான் கூப்பிடுவாங்க.” 

 

அவளை விட்டு இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்தான். தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தவள் செவியில், “தேனிசை தேவி குமரவேலன்…” என்ற பெயர் விழுந்ததும் கண்கள் விரிய மிரண்டு நின்றாள்.

 

“உன்னத்தாம்மா கூப்பிடுறாங்க, உள்ள போ…”

 

“என்ன பேர் கொடுத்த?”

 

“எங்க ம்மா?”

 

“இப்ப அவங்க என்ன பேர் சொல்லி என்னைக் கூப்பிட்டாங்க?”

 

“உன்னோட பேரு தான்”

 

“சும்மா வெறுப்பேத்திட்டு இருக்காத. என் பேருக்குப் பின்னாடி உன் பேரை எப்படிச் சொன்னாங்க?” 

 

அப்போதுதான் அவர்கள் அழைத்ததே நினைவிற்கு வந்தது குமரவேலனுக்கு. எப்போதும் அவள் பெயரை மட்டும் கேட்பவர்கள், இன்று ஏதோ ஒரு புதிய காகிதத்தை அவனிடம் நீட்டி, “இதுல உங்க டீடெயில்ஸ் எழுதுங்க சார்” என்றிருந்தனர்.

 

குழந்தைக்காக எந்த நொடி அவள் கழுத்தில் தாலி கட்டினானோ, அப்பொழுதே அந்தக் குழந்தையின் தந்தை இவன் என்று முடிவு செய்து விட்டான். அன்புவின் வாரிசு தன்னுடைய வாரிசாக மட்டுமே இந்த உலகை வலம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் கணவன் பெயரில் தன்னுடைய பெயரை எழுதினான். 

 

“நான் தான் எழுதிக் கொடுத்தேன்.” என்னும் பொழுதே அவள் முறைப்பு அதிகரிப்பதை உணர்ந்து குரலைக் குறைத்தான். 

 

“என்னடா நினைச்சிட்டு இருக்க? என்னமோ ஆசையாக் காதலிச்சு, என் கழுத்துல தாலி கட்டின மாதிரி, பொண்டாட்டிக்குப் பின்னாடி உன் பேர் எழுதி இருக்க.” எனப் பல்லைக் கடித்துக் கொண்டு சத்தம் இல்லாமல் எகிறியவளை செவிலியர் மீண்டும் அழைத்தார்.

 

அந்தப் பெயரைக் கேட்டதும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டவள், “வந்து இருக்கு உனக்கு…” என உள்ளே சென்றாள்.

 

‘தான் ஒன்று நினைத்து எழுதிக் கொடுக்கத் தன் முன்னால் இருப்பவள், வேறு ஒன்று நினைத்து விட்டாளே…’ என்ற சங்கடத்தோடு இருக்கையில் அமர்ந்திருந்தவன் எண்ணம் முழுவதும் குழந்தை மீது மட்டுமே இருந்தது. ஓரளவிற்கு உருவம் பெற்ற குழந்தை, ஐந்தாவது மாதத்தில் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. 

 

உள்ளே செல்லும் வரை இருந்த கோபம் அனைத்தும், பிள்ளையைப் பார்த்ததும் காணாமல் போனது. தன் வாரிசை மனம் குளிர்ந்து பார்த்தவள், வெளியில் வந்ததும் மீண்டும் புகைய ஆரம்பித்தாள். அவள் முறைப்புக்கு அஞ்சி நடுங்கி, வாயை மூடியபடி அமர்ந்திருந்தான் குமரவேலன்.

 

சிறிது நேரத்தில் அவளின் அறிக்கை கைக்கு வர, “என் கூட வராத…” என்றபடி மருத்துவரைக் காணச் செல்ல, கேட்காமல் பின் தொடர்ந்தவன், அவளோடு மருத்துவர் முன்பு அமர்ந்தான்.

 

“எல்லாம் கரெக்டா இருக்கு. குழந்தை அசைவு தெரியுதா?” 

 

“தெரியுது டாக்டர்”

 

“குட்!” என்ற வார்த்தையில் மனம் மகிழ்ந்தவள், “ஒரு வாரமா அடிவயித்துல பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருக்கு டாக்டர். வயித்துல தான உதைக்கும்னு சொல்லுவாங்க.” எனச் சந்தேகம் கேட்டாள்.

 

தன்னிடம் பொய் உரைத்தவள் முகத்தை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதை உணர்ந்தாலும் உணராதது போல், “இப்பக் குழந்தை உதைக்கிறது அங்க தான் தெரியும். வளர்ச்சி அடைந்து மெல்ல வயிறு பெருசாகும்போது, வயித்தச் சுத்தி அசைவு தெரியும்.” என்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

 

“குழந்தை நல்லா இருக்கா டாக்டர்?”

 

“நல்லா இருக்கு சார்.” 

 

“நன்றி டாக்டர்” எனக் கையெடுத்துக் கும்பிட்டவன், வெளியே சென்றவள் பின்னே வந்து நின்று, 

 

“ஏன்மா என்கிட்டப் பொய் சொன்ன?” சங்கடத்தோடு கேட்டான்.

 

“நீ யாரு உண்மையச் சொல்ல? என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல. வர வேணாம்னு சொல்லியும், என் கூட வந்து உட்கார்ந்ததும் இல்லாம, தேவையில்லாத கேள்வியைக் கேட்கிற. நீ என்னோட புருஷனா? நான் உன்னையா காதலிச்சேன்? என் அனுமதி இல்லாம சொல்லக் கூடாத பொய்யச் சொல்லி என் கழுத்துல தாலி கட்டிட்டா, என் புருஷன் ஆகிடுவியா? நீ பண்ணதுக்குப் பேரு கல்யாணமே இல்லை. 

 

நானும் பார்த்துட்டே இருக்கேன், ஓவரா அக்கறை காட்டுற. இப்படித்தான் என் புருஷன் கிட்டயும் காட்டிட்டு இருந்த. கடைசில என்னாச்சு? உனக்கும், எனக்குமான உறவு சமையல் கட்டோட நின்னு போச்சு. அதைத் தாண்டி எந்த உரிமையும் எடுத்துக்காத. இது அன்பு குழந்தை. அன்பு தான் இந்தக் குழந்தைக்கு அப்பா. அடுத்தவன் பிள்ளைக்கு உன் இனிசியலைப் போடத் துடிக்காம, உனக்குன்னு ஒரு பிள்ளைய ஒழுக்கமா பெத்துக்கப் பாரு.” 

 

“எதுக்கும்மா, திடீர்னு இவ்ளோ கோவமாப் பேசுற?”

 

“நேத்து என்னமோ, உன் பொண்டாட்டி மாதிரித் தூங்கும் போது எட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்க. உன் அசிங்கமான புத்தி தெரியாதுன்னு நினைக்கிறியா? இதுக்குத் தான் உன்ன உள்ளயே வரக்கூடாதுன்னு துரத்தி விட்டேன். அது இதுன்னு சொல்லி வீட்டுக்குள்ள வந்துட்ட.”

 

“ரெண்டு மூணு தடவை எழுந்து வந்து தண்ணி குடிச்சம்மா… அதான் என்ன ஏதுன்னு எட்டிப் பார்த்தேன்.”

 

“போதும்! எதுவா வேணா இருக்கட்டும். இனி அப்படி என்னைப் பார்க்காத. உன்னோட ஒரே வீட்ல இருக்குறதயே என்னால சகிச்சிக்க முடியல. இதுல உன் குறுக்குப் புத்தியப் பார்க்க…” என வார்த்தை வராமல் தடுமாறியவள் முகத்தில் சொல்ல முடியாத அளவிற்கு அருவருப்பு.

 

முதல்முறையாகக் குற்ற உணர்வில், ஒரு பெண் முன்பு தலைகுனிந்து நின்றான் குமரவேலன். அவன் மனதைப் படிக்காதவள், “செத்தாலும், உன்னோட பேரைப் புருஷன்ற இடத்துல யூஸ் பண்ண மாட்டேன். இதுதான் உனக்குக் கடைசி. இதுக்கு மேலயும், உன்னோட வக்கிரப் புத்திய என்கிட்டக் காட்டுன… இந்த தாலியால தான் என் கூட இருக்கன்னு கழற்றி வீசிட்டுப் போயிட்டே இருப்பேன்.” என அவனைச் சுக்கு நூறாக உடைத்து விட்டு நகர்ந்தாள். 

 

இந்த நொடி வரை, தேனிசை தேவியின் மீதான பார்வை சற்றும் மாறவில்லை குமரவேலனுக்கு. தன் நண்பனின் மனைவியாக மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்படியானவன் உள்ளம் புரியாமல், பேசிவிட்டுச் செல்பவளை ஒரு உருவம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தது. 

 

அப்படியே கல் மனிதனாகப் பத்து நிமிடத்திற்கு மேலாக நின்றிருந்தான். வாழ்க்கை, அவனை அப்படியே நிறுத்தி வைக்க இடம் கொடுக்கவில்லையே. தன் துயரம் தனக்குள் என்று தன்னைத் தேற்றிக் கொண்டவன், தேனிசை தேவியை நெருங்கி, “டிரைவர் அண்ணா ஒரு வேலையா வெளிய போய் இருக்காராம். கொஞ்ச நேரம் உட்காருமா, வந்திடுவாரு.” என ஓரமாக நின்று கொண்டான்.

 

“கார் இல்லனா பரவால்ல. ஆட்டோல போலாம்.”

 

“அய்யய்யோ வேணாம்மா… நம்ம ஊர்ல ரோடு நல்லா இல்ல. இந்த மாதிரி நேரத்துல ரொம்பக் குலுங்கிப் போகக் கூடாது.” 

 

எதுவும் பேசாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவளை விட்டுத் தள்ளி அமர்ந்து கொண்டான். நேற்று இரவு அவன் காட்டிய செய்கைகளைத் தவறாகப் புரிந்து கொண்டவள், இப்படித்தான் காலையில் இருந்து சிடுசிடுவென்ற முகத்தோடு இருக்கிறாள். தேனிசை தேவியையும் தவறு சொல்ல முடியாது. 

 

தன்னுடைய கணவனிடத்தில், வேறொருவனை வைப்பதே கடினம். தனக்குத் திருமணம் செய்து வைத்துக் கணவன் கூடவே இருந்த குமரவேலனை எப்படி வைப்பாள்? தாலி என்ற உரிமையைக் காட்டி நெருங்கி விடுவானோ என்ற பயம் இதுபோன்று சிடுசிடுக்க வைக்கிறது. 

 

குமரவேலனின் மனதை தேனிசை தேவி படிக்கா விட்டாலும், இவள் மனதை நன்றாகப் படித்தவன், அவள் கொண்ட எண்ணம் சரி என்பதால் தான் அமைதியாக விட்டுக் கொடுக்கிறான். இவ்விருவரும் அவரவர் சிந்தனையில் சுழன்று கொண்டிருக்க, இருவரையும் வெகு தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். 

 

அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் கார் வந்தது. அவளை ஏற்றியவன் பின் தொடர்ந்தான் வீடு வரை. ஓட்டுனருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்தவன், கர்ப்பிணிப் பெண் சாப்பிடத் தேவையான பழங்களை நறுக்கித் தட்டில் வைத்தான். கூடவே பால் காய்ச்சி எடுத்து வந்தவன், 

 

“பழம் சாப்பிட்டுட்டு ஒரு அரை மணி நேரம் கழிச்சுப் பால் குடிம்மா… கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு வந்துடுறேன்.” என அங்கிருந்து சென்றுவிட, சென்றவன் நினைவு தான் மனம் முழுவதும்.

 

இன்று அதிகமாகப் பேசிவிட்டது போன்று உணர ஆரம்பித்தாள். சில நேரம் காரணமே இல்லாமல், குமரவேலன் மீது கோபம் வருகிறது. அதைக் காட்டக் கூடாது என நினைத்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் அவளையும் அறியாமல் காட்டி விடுகிறாள். தன்னுடைய இயலாமையா, அல்லது அவன் மீதான பயமா? என்று அவளுக்கே தெரியவில்லை. 

 

குமரவேலன், புதிதானவன் அல்ல தேனிசைக்கு. சிறுவயதில் அவனுடன் விளையாடி இருக்கிறாள். ஒரு வயதிற்கு மேல், பேச்சியப்பனின் மகனாக நன்கு தெரியும். பேசிப் பழக்கம் இல்லையே தவிர, அடிக்கடி அவன் செய்வது காதில் விழுந்து கொண்டே இருக்கும். அதிலும் காதலித்ததற்குப் பிறகு, எந்நேரமும் காதலன் புகழ்ந்து பேசுவது இவனை மட்டுமே. அப்படியானவனோடு எதற்கு இந்தப் பயம்? என்று கேட்டுக் கொண்டிருந்தவள், தன் எதிரே வந்து நின்ற உருவத்தைக் கண்டு புருவம் சுருக்கினாள்.

 

***

 

வந்த உருவத்தைப் பார்த்து எழுந்து நின்றாள் தேனிசை. மெல்ல அவள் அருகே அவளைப் பார்த்தபடி நின்ற தெய்வானை, மாமன் மனைவியாக ஒருத்தி, தன் எதிரில் நிற்பாள் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நீர் சூழ்ந்த கண்களுக்குக் குமரவேலனின் மனைவியாகத் தெரிந்தாள் தேனிசை தேவி.

 

விரக்தியான புன்னகை இதழோரம் தவழ்ந்தது. தெய்வானையைக் கேள்வி முடிச்சோடு பார்த்துக் கொண்டிருக்க, “உங்க கிட்டப் பேசலாமா?” உத்தரவு கேட்டாள் மிக மெல்லிய குரலில்.

 

“என்ன?” 

 

“உங்களையும், மாமனையும் ஆஸ்பத்திரில பார்த்தேன்.” என்றவள் தயக்கமாக, “நீங்க பேசுனதையும் கேட்டேன்” என்றாள்.

 

கர்ப்பிணியானவள், சற்றுப் புருவம் நெறிய அவளைப் பார்க்க, “என் மாமனைப் பத்தி நான் கொஞ்சம் பேசணும்.” என்றாள்.

 

“உட்காரு.”

 

“வேணாம்.”

 

“பரவால்ல உட்காரு.”

 

“நீங்க உட்காருங்க.”

 

இருவரும் திண்ணையில் அமர்ந்தார்கள். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். அவள் பேசட்டும் என்று வெகு நிமிடம் காத்திருந்தாள் தேனிசை.

 

“என் மாமனைத் தப்பாப் புரிஞ்சிட்டுப் பேசிட்டீங்க. அவர் மனசால கூட யாருக்கும் துரோகம் நினைக்க மாட்டார். அதுவும் அவரோட ஃப்ரெண்டுக்கு, சத்தியமா நினைக்க மாட்டார். உங்க அனுமதி இல்லாம, உங்க கழுத்துல தாலி கட்டி இருக்கலாம். ஆனா, அவரு மனசுல நீங்க இல்ல…” என்றவள் கண் கலங்கி,

 

“மாமன் மனசு முழுசும் நான் தான் இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனோம்.” என்றதில் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போனாள் தேனிசை.

 

ஒருமுறை கூடக் காதலித்தவன் இந்த விஷயத்தைப் பகிர்ந்ததில்லை இவளிடம். இருவர் பற்றிய செய்தி எந்த வழியிலும் இவள் காதிற்கு வந்ததில்லை. அத்தை மகளாகவும், இவர்களின் திருமண ஆசை பேச்சியப்பனுக்கு இருக்கிறது என்றும் தெரியும். அப்படி இருக்க என்ன சொல்கிறாள் இவள்? என்று இமைக்க மறந்து பார்த்திருந்தாள் தெய்வானையை.

 

“அந்தச் சம்பவம் நடக்கப் போறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட மாமா என்னைப் பார்க்க வந்துச்சு. ரெண்டு பேரும் கல்யாண விஷயத்தைச் சந்தோசமா பேசிக்கிட்டு, ஊருக்குள்ள வரும் போது தான் உங்க சம்பவம் நடந்துட்டு இருந்துச்சு. அன்னைக்கு அந்தச் சம்பவம் நடக்காம இருந்திருந்தா, இந்நேரம் நான் மாமாவோட பொண்டாட்டியா வாழ்ந்திருப்பேன்.

 

ஆசைப்பட்ட பொண்ண இழந்துட்டு தான், உங்க கழுத்துல தாலி கட்டி இருக்காரு. அப்படி இருக்க, எதுக்கு உங்களை வக்கிரப் புத்தியோட பார்க்கனும்? ரெண்டு வருஷம் காதலிச்சுக் கல்யாணம் பண்ணி, ஒரு மாசம் வாழ்ந்த உங்க புருஷன் இடத்துல, என் மாமன வைக்க முடியலன்னு சொல்றீங்க. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து, இவ தான் என் பொண்டாட்டின்னு மனசுக்குள்ள நம்பிட்டு, ஆசையை வளர்த்த என் மாமா உங்களை எப்படி அந்த இடத்துல வைக்கும்?” 

 

தெய்வானையின் கேள்வியில் ஆட்டம் கண்டது இதயம். இப்படி ஒன்றை எதிர்பார்க்காதவள், என்ன பேசுவது என்று தெரியாமல் எதிரில் இருந்தவளைக் காண,

 

“மாமா மேல என்ன பழிய வேணா போடுங்க, நான் ஒத்துப்பேன். ஆனா, உங்களைத் தப்பா அடைய நினைக்கிறாருன்னு மட்டும் சொல்லாதீங்க. என் மாமனோட கண்ணு ரொம்பச் சுத்தமானது. அத்த மகளைக் கூட வரம்பு மீறிப் பார்த்ததில்லை. கட்டிக்கப் போறவ தானன்னு தொட்டுப் பேசுனது இல்லை. அதோட மனசு தங்கம்…” என்றவள் வார்த்தையில் தொண்டை அடைத்தது தேனிசைக்கு.

 

சிறு அமைதிக்குப் பின் தன்னைத் தேற்றிக் கொண்டவள், “நீ சொல்றது உண்மையா?” எனக் கேட்க, 

 

“உங்க கழுத்துல தாலி கட்டும் போது கூட, என் முகத்தை மட்டும் தான் என் மாமா பார்த்துட்டு இருந்துச்சு. கட்டாதீங்க மாமான்னு கெஞ்சி நின்னேன். மன்னிச்சிடு அத்தை மகளே, எனக்கு என் நண்பனோட குழந்தை முக்கியம்னு…” முழுதாகச் சொல்ல முடியாமல் திக்க ஆரம்பித்தாள்.

 

“அன்னைக்கு ராத்திரி கூட என்னை வந்து பார்த்துச்சு. என்னமோ பேசும்னு நினைச்சேன். ஆனா, என் மாமா, என் முன்னாடி மண்டியிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டுச்சு. அந்த நிமிஷம், அது மேல இருந்த எல்லாக் கோபமும் போயிடுச்சு. மனசார என் மாமா எனக்குத் துரோகம் பண்ணலன்னு புரிஞ்சிக்கிட்டேன்.” என அவள் முகம் பார்க்க, கண் கலங்கியபடி வயிற்றில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

“உங்க இழப்பு ரொம்பப் பெருசு. யாராலயும் உங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. அது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உங்களை விட மோசமா பாதிக்கப்பட்டது என் மாமா மட்டும்தான்.” என்ற தெய்வானையை ஏறெடுத்துப் பார்க்க, 

 

“நீங்க புருஷனை மட்டும் தான் இழந்தீங்க. என் மாமா, உசுருக்கு உசுரான நண்பனை, பல வருஷமா பொத்திப் பாதுகாத்துக் காதலிச்ச காதலிய, உறவா இருந்த தாத்தாவை, உசுரையே வச்சிருக்க அம்மா, வசதியான வீடு, எல்லாத்துக்கும் மேல தன்னோட அடையாளம்னு எல்லாத்தையும் இழந்துட்டு, உங்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு அடிமையா இருக்கு.” என்றவள் மனம் குமரவேலனை நினைத்து அழுதது.

 

“உங்களோட வருத்தத்தை இந்த ஊரும், உலகமும் புரிஞ்சிக்கும். மாமனோட வருத்தத்தை யார் புரிஞ்சுப்பா? தன்னோட மனசுல இருக்குற பாரத்தை அது யார்கிட்ட இறக்கி வைக்கும். தனக்குள்ள பல பாரத்தை அழுத்தி வச்சு ஒரு மாதிரிப் பார்க்கவே பாவமா வாழுது. இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும், அது இன்னும் நடமாடிக்கிட்டு இருக்குனா, அது உங்களுக்காகவும், உங்க குழந்தைக்காகவும் மட்டும்தான்.

 

உங்களை என் மாமா கூடச் சேர்ந்து வாழச் சொல்லல. அவருக்குப் பணிவிடை செஞ்சு சுகமாய் பார்த்துக்கச் சொல்லல. குறைந்தபட்சம் அதோட மனசைப் புரிஞ்சுக்கோங்க. நீங்க எப்படிப் புருஷனை இழந்துட்டு நிக்கிறீங்களோ, அதே மாதிரி தான் அது என்னை இழந்துட்டு நிக்குது.” 

 

சிந்திக் கொண்டிருக்கும் கண்ணைத் துடைத்தவள், மூக்கில் வழிந்து கொண்டிருக்கும் நீரையும் துடைத்து, “காதலிச்சவனை, வேற பொண்ணோட பார்க்குற தைரியம் இருக்கா உங்களுக்கு?” கேட்டிட, எதிரே இருந்தவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.

 

“நான் பார்க்குறேன். அந்தப் பொண்ணு கிட்டக் காதலிச்சவனைக் கொஞ்சமாவது புரிஞ்சுக்கோங்கன்னு பேசிட்டு இருக்கேன். உங்க அழுகைக்குக் காரணம் தெரியும். என் அழுகை, எப்போ ராத்திரி வரும், தனிமையில கொட்டலாம்னு காத்துட்டு இருக்கும். நாளைக்கு நான் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, வாழப் போற செய்தியைக் கேட்டா அது மனசும் இதே வலியத் தான் அனுபவிக்கும்.

 

நீங்க எந்த வலிய அனுபவிக்கிறீங்களோ, அதே வலிய மாமாவும் நானும் அனுபவிச்சிட்டு இருக்கோம். அதனால அது உங்களை ஆசைப்பட்டு, அடைய நினைச்சுக் கல்யாணம் பண்ணுச்சுன்னு சொல்லாதீங்க. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் இன்னைக்கு உங்களை என் மாமனோட பொண்டாட்டியா உட்கார வச்சிருக்கு.” 

 

எதைப் பேச வந்தாளோ, அதைப் பேசி விட்ட நிம்மதியில் அமைதியாக அமர்ந்திருந்தாள். கேட்டவள் அதைவிட அமைதியாக அமர்ந்திருந்தாள். குமரவேலனின் மனைவியை, உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தவள் மனம் இன்னும் நம்ப மறுக்கிறது. இதுதான் விதி என்று மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொண்டாள் தெய்வானை. 

 

“இதை உங்ககிட்டப் பேச எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு தெரியும். இருந்தாலும் சொல்றதுக்குக் காரணம்…” என இடைவெளி விட்டுக் கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்தாள்.

 

சுருங்கிய புருவத்தோடு இருந்தவளிடம், “என் மாமன் முகத்தை ஆஸ்பத்திரில பார்த்த மாதிரி, திரும்ப எங்கயும் பார்த்துடக் கூடாது. அது சந்தோஷமா இல்லனாலும் பரவால்ல, சங்கடத்தோட இருக்கக் கூடாது.” என்று எழுந்து நின்றாள்.

 

தலை உயர்த்தி எழுந்தவளைப் பார்க்க, “நான் வந்து பேசுனதை அதுகிட்டச் சொல்லிடாதீங்க. மனசு தாங்காம நொந்து போயிடும். நான் ஒரு வாழ்க்கையை ஏத்துகிட்டு, சந்தோஷமா வாழ ஆரம்பிச்சா தான், எனக்கு செஞ்ச குற்ற உணர்ச்சில இருந்து அது வெளிய வரும்.” என்றாள்.

 

கீழ் இமையில் ஒட்டிக் கொண்டிருந்த கண்ணீர், உருண்டு திரண்டு மேடிட்ட வயிற்றில் விழுந்தது. குமரவேலன் மீதான பிம்பம் உடைந்தது. ‘எத்தனை நாள் தவறாகப் பேசியிருக்கிறோம்?’ என்று வருந்தியவள், ‘இப்படி ஒருத்தி இருக்க எதற்காகத் தனக்குத் தாலி கட்டினான்?’ என வருந்தினாள். 

 

‘வேறு ஒருத்தியை மணந்தவன் மீது சிறிதும் கோபம் இல்லாமல், அவனுக்காக வந்து பேசும் இவள் தானே குமரனுக்கு ஏற்ற துணை. எவ்வளவு அழகான வாழ்க்கையை உதறித் தள்ளி என்னுடன் வந்து கஷ்டப்படுகிறான்?’ 

 

இவனுக்காக ஒருவன் உயிரை விடுகிறான். விட்டவனுக்காக, இவன் வாழ்க்கையை விடுகிறான். இவர்களின் நட்பில் சின்னா பின்னமானது இந்த இரண்டு பெண்கள் மட்டுமே. 

 

“நான் கிளம்புறேன். உங்க மனசக் கஷ்டப்படுத்துற மாதிரிப் பேசி இருந்தா மன்னிச்சிடுங்க.”

 

எந்தப் பதிலும் கூறாமல், தன்னிலையில் தேனிசை தேவி அப்படியே இருக்க, நான்கு அடி நடந்தவள் திரும்பினாள். அவளை, அமர்ந்திருந்தவள் வைத்த கண் வாங்காமல் பார்த்திட, 

 

“மாமா சரியா சாப்பிடுறது இல்லன்னு நினைக்கிறேன். கன்னம் எல்லாம் வத்தி ஒரு மாதிரி ஆளே மெலிஞ்சி இருக்கு. கண்ணைச் சுத்தி ஒரே கருவளையம். உங்களால முடிஞ்சா, அதைக் கொஞ்சம் நல்லா சாப்பிட வைங்க. இப்படியே இருந்தா உடம்புக்கு நோவு வரும். இப்படி இருக்க மாமன, அத்தை பார்த்தா ரொம்பச் சங்கடப்படுவாங்க.” என்றவள் காதலித்தவன் மனம் முடித்த பெண்ணை, கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.

 

தெய்வானை வந்தது முதல் கிளம்பியது வரை காதில் விழுந்த ஒவ்வொரு வார்த்தையையும், மீண்டும் மீண்டும் தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறாள். எம்மாதிரியான உணர்வுகளை இதற்குக் கொடுக்க வேண்டும் என்பதைக் கூட உணராமல், கேட்டுக் கொண்டிருக்கிறாள். தன்னை அடைந்து விடுவானோ என்ற பயம் அர்த்தமில்லாதது என்பது மட்டும் தெளிவாக விளங்கியது. 

 

தன்னுடைய வருத்தத்திற்கு ஈடான வருத்தத்தைத் தான், அவனும் சுமந்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. தெய்வானை சொல்லிவிட்டுச் சென்றது போல், ‘இத்தனைத் துயரங்களையும் தாங்கிக்கொண்டு எனக்குச் சேவை செய்கிறானே’ என்ற ஆதங்கம் வெகுவாக வாட்டியது. தன்னை உதறித் தள்ளி அவன் வாழ்க்கையைப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்? சுயநலமில்லாத இவனுக்காகத் தான் தன்னவன் உயிர் விட்டானா! 

 

எவ்வளவு நேரம் ஆகியதோ தெரியவில்லை. இருட்டு அவளை முழுவதும் சூழ்ந்து கொண்டது. குமரவேலன் மீது இருந்த சிந்தனை, நொடி கூட அகலவில்லை. வேலையில் சிக்கிக் கொண்டவன், போன் கூட எடுக்காமல் என்ன செய்கிறாள் என்று அவசரமாக இல்லம் திரும்பினான். 

 

அவன் வந்து குரல் கொடுக்கும் வரை, தன்னிலை தெளியாமல் அமர்ந்திருந்தாள். வந்தவன் குரல் கேட்டு மெல்ல விழியை உயர்த்த, 

 

“சாப்பிட வச்சிட்டுப் போனது கூட அப்படியே இருக்கும்மா. என்ன பண்ணிக்கிட்டு இருக்க, கொசுக் கடில உட்கார்ந்துட்டு.” கேட்டான்.

 

அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவள், அவன் மீதான பார்வையை நொடியும் அகற்றவில்லை. தன்னைக் கண் சிமிட்டாமல் பார்ப்பவளைக் கண்டு, புருவம் சுருக்கியவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விசாரித்தும் பதில் கொடுக்காமல் இருப்பவளிடம், 

 

“ஏதாச்சும் பிரச்சனையாம்மா?” கேட்க, 

 

“தெய்வானைய விரும்புனியா?” என்ற கேள்வியை எதிர்பார்க்காதவன் ஆடிப் போனான்.

 

 

தெம்மாங்கு ஒலிக்கும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்