1,755 views

 

வீட்டிற்கு வந்த மகளின் கோலத்தை வைத்து பதறிய சுகன்யா என்னவென்று விசாரித்தார். எதையும் சொல்லாதவள் தன் அறைக்குள் அடைந்து கொண்டு வெதும்ப, சம்மந்தி வீட்டை அழைத்து விபரம் கேட்டார்.

முழுவதையும் தெரிந்து கொண்டவர், “நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா? என் பொண்ணோட வாழ்க்கையில எதுக்காக இப்படி திரும்பத் திரும்ப விளையாடுறீங்க. எவளோ ஒருத்தி வீட்டுக்கு வந்தா அடிச்சு வெளிய தொரத்தாம என் பொண்ண அனுப்பி வைப்பீங்களா. என் பொண்ணு அப்பவே தல பாடா அடிச்சுக்கிட்டா இந்த கல்யாணம் வேணாம்னு. அவ வாழ்க்கைய நானே நாசமாக்கிட்டேன்.” என்று கொதித்தார் ஆதிலட்சுமியிடம்.

பேச வேண்டிய தகுதியை இழந்து விட்டதாலும், பெற்றவராய் அவர் கேள்வி நியாயம் என்பதாலும் அனைத்து வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டார். பக்கத்தில்‌ இருந்த தயாளனுக்கு தான் மனைவியின் நிலை பெரும் சங்கடத்தை கொடுத்தது. ஆதிலட்சுமி இடத்தில் வேறு யாராக இருந்திருந்தாலும் இந்த அளவிற்கு அனைத்தையும் தாங்கிக் கொண்டு நடமாட மாட்டார்.

ஆதங்கம் மொத்தத்தையும் சம்மந்தியிடம் கொட்டிய சுகன்யா நேராக மகளிடம் வந்தார். அவளோ அழுது  சோர்ந்து போயிருந்தாள். திட்ட வந்தவர் மகளின் நிலையை பார்த்து அழுக ஆரம்பித்தார். அன்னையின் அழுகையில் நினைவு திரும்பியவள்,

“இப்ப என்ன நடந்துச்சுன்னு ஒப்பாரி வைக்கிற?” காட்டமாகவே கேட்டாள்.

“நான் தான்டி தப்பு பண்ணிட்டேன் உன் பேச்சைக் கேட்டு இருக்கணும். பெத்தவ நானே பிள்ளையோட வாழ்க்கைய அழிச்சிட்டேனே.”

“இப்ப யோசிச்சு ஒன்னும் ஆக போறது இல்ல. போய் ஆக வேண்டிய வேலைய பாரு.” என்றவள் வயிற்றில் இருக்கும் சிசு காலையிலிருந்து தன்னை கவனிக்காததால் உதைத்து ஞாபகப்படுத்தியது.

அசையும் குழந்தையின் உணர்வில் கண்ணீர் தாரைதாரையாக கொட்ட ஆரம்பித்தது அவளுக்கு. எப்பொழுதும் குழந்தை உதைத்தால் உடனே அழைத்து விடுவாள் கணவனை. நேரில் இருந்தால் அவனும் வயிற்றில் கை வைத்து அதை உணர்வான். அருகில் இல்லாத நேரம் தொலைபேசி வாயிலாக பிள்ளையோடும் அதன் அன்னையோடும் உரையாடி தன் மகிழ்வை பகிர்வான்.

கணவனின் பேச்சு தனக்கு வேண்டும் என்று எண்ணியவள் வருந்தினாள் அங்கு நடந்ததை நினைத்து. மகளின் அழுகையில் மீண்டும் ஒருமுறை பெரிய தவறு செய்து விட்டதாக உணர்ந்த சுகன்யா மருமகனை திட்டிக் கொண்டிருக்க, “என் புருஷன முன்னாடி திட்டுற வேலை வச்சுக்காத. இது எனக்கும் அவருக்கும் நடக்குற பிரச்சனை நடுவுல நீ வராத.” என்று விட்டாள் உடனே.

***

சோர்ந்த கர்ப்பிணி பெண் குழந்தைக்காக சிறிது சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தாள். தூங்கவிடாமல் கணவனின் நினைவு சதி செய்தது. இந்நேரம் தன் வீட்டில் இல்லை என்ற செய்தி அவனுக்கு சென்று இருக்கும். இன்னும் ஏன் தன்னை தேடி வரவில்லை என்றும், இனி தேடி வரமாட்டான் என்றும் தானே யோசித்து பதிலையும் கொடுத்து குழம்பியது.

ஒரு கட்டத்தில் முடியாமல் சோர்ந்து தூங்கிவிட்டாள். உடல் சோர்வில் மயங்கி இருந்தாலும் உள்ளம் கொதித்துக் கொண்டே இருந்தது. அதன் பலனாய் லேசாக தூக்கம் தெளிய ஆரம்பித்தது அகல்யாவிற்கு. வயிற்று குழந்தையோடு உடனே திரும்பி படுக்க சிரமப்பட்டவள் மெதுவாக தன்னை திருப்பி இடப்புறமாக படுத்தாள். தூக்கத்தில் கண் மூடிக்கொண்டே திரும்பியவள் அதிர்ந்து இமையைப் பிரிக்க, அகல்யாவின் கணவன் படுத்திருந்தான் அங்கு.

அவன் உருவம் கனவில் பார்ப்பது போல் இருக்க, இமை சிமிட்டி நன்றாக விழித்திறந்தாள். அவன் தான் உண்மையாக படுத்திருந்தான் அவளோடு. சந்தோஷம் வருவதற்கு பதில் அழுகை தான் அதிகமானது அவளிடத்தில்.

“உன்ன அழ வைக்கணும்னு நான் இங்க வரல. நீ இல்லாம தூங்க முயற்சி பண்ணேன் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் கடைசியா உன்னோட தூங்கிட்டு போலாம்னு வந்தேன். நாளைல இருந்து என் தொந்தரவு இருக்காது லயா. பயப்படாம படு என் விரல் நுனிக்கூட உன்னை தீண்டாது.” விழி திறந்து தான் இருந்தது ஆனால் அவளைப் பார்க்கவில்லை.

ஆடவன் வார்த்தையில் இன்னும் அவளுக்கு அழுகை கூட, எழுந்து அமர்ந்தான் தரணீஸ்வரன். அவளைப் பார்க்காமல் முதுகை காட்டியவன், “நான் இங்க வந்திருக்கக் கூடாது. தொந்தரவு பண்ண மாட்டன்னு சொல்லிட்டு நானே தொந்தரவு பண்றேன். வீட்ல சொன்ன மாதிரி இருக்கதான் முயற்சி பண்றேன் லயா மனசு ஏத்துக்க மாட்டுது.” என்றான்.

“ஏன் ஏத்துக்க மாட்டேங்குது? அதான் வீட்ல ஒருத்திய இருக்க சொன்னிங்களே அவகிட்ட போக வேண்டியது தான.”

“என் மனைவியைத் தவிர வேற யார்கிட்டயும் என்னால இப்படி இருக்க முடியாது.”

“சும்மா நடிக்காதீங்க. அவ்ளோ பாசம் இருந்தா அப்புறம் எதுக்கு வீட்ல தங்க வைச்சிருக்க போறிங்க. உங்களுக்கு நான் வேணான்னு முடிவு பண்ணதால தான அவளை இருக்க வச்சிங்க.”

“ஏன்னு உனக்கு தெரியும் லயா.”

“தெரியும்” என எழுந்து அமர்ந்தவள், “உருகி…உருகி காதலிச்ச காதலிய மறக்க முடியாம இருக்க சொன்னீங்க. என்ன இருந்தாலும் முதல் காதலை மறக்க முடியுமா.”  என்ற அகல்யா அழுக ஆரம்பித்து விட்டாள் தேம்பி.

“நிம்மதியா தூங்கிட்டு இருந்த உன்ன தேவையில்லாம அழுக வச்சுட்டேன். இனிமே இங்க வராம இருக்க முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்றேன். இப்ப வந்ததுக்கு மன்னிச்சிடு.” என்றவன் சென்று விட்டான்.

எவ்வளவு நேரம் கதறி அழுதாளோ அவளுக்கு மட்டும் தான் தெரியும். நாக்கு வறண்டு தண்ணீர் கேட்டது. அறையில் இல்லாததால் குடிக்க எழுந்து வந்தாள். இரவு விளக்கு எப்பொழுதும் ஹாலில் எரியும் என்பதால் பயமில்லாமல் வந்தவள் அந்த இருட்டில் தண்ணீர் அருந்தினாள். போதும் என்ற வரை குடித்தவள் தண்ணீர் மக்கை வைத்துவிட்டு திரும்ப, சோபாவில் கையை தலைக்கு தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் தரணீஸ்வரன்.

இருந்த அழுகை எல்லாம் காணாமல் சென்று கோபம் வந்துவிட்டது அவள் முகத்தில். பற்களை கடித்துக் கொண்டு கணவரிடம் சென்றவள் சுரீர் என்று கன்னம் பழுக்க ஒரு அடி வைத்தாள். வாங்கிக் கொண்டவன் அசராமல் அதே நிலையில் இருக்க, வேகமாக இரு கைகளாலும் அடிக்க ஆரம்பித்தாள் அவன் உடம்பெங்கும்.

மனம் இருக்கும் நிலைக்கு இந்த வலி அவசியம் தேவைப்படுவதால் அத்தனையையும் வாங்கிக் கொண்டான். ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கும் கணவன் மீது இன்னும் அவளுக்கு கோபம் அதிகரிக்க, “நீ பாட்டுக்கு வர நீ பாட்டுக்கு போற என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? அவ்ளோ ரோஷமா சொன்ன என் வீட்டை விட்டு போனு. இப்ப எதுக்காக நீ என் வீட்டுக்கு வந்திருக்க. நான் இல்லாம ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாதுன்னு எத்தனை தடவை இந்த வாய் பேசி இருக்கும்.” என்றவள் வாயில் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தாள்.

அப்போதும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அதில் இன்னும் சினம் ஏற, “நான் இவ்ளோ நேரம் அழுகுறதை கேட்டுட்டு சந்தோஷமா உட்கார்ந்து இருக்கியா. என்ன சொன்ன வீட்ல…விவாகரத்து கொடுப்பியா எனக்கு. கொடுத்து தான் பாரு அப்ப தெரியும் இந்த அகல்யா யாருன்னு.” என்று கத்தினாள் நள்ளிரவில்.

மருமகன் நடுராத்திரி கதவைத் தட்ட, திறந்துவிட்ட சுகன்யா எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டார். என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் அவர் தூங்காமல் இருக்க மகளின் பேச்சுக்கள் காதில் விழுந்தது. வெளியில் வந்தவர், “அகல் என்னதான் நடக்குது இங்க?” என்று கோப வார்த்தைகளை வீசினார்.

“என்ன நடந்தா உனக்கு என்ன. நான் என் புருஷன் கிட்ட பேசிட்டு இருக்கேன் உன் வேலைய போய் பாரு.”  சிடுசிடுக்கும் மகளின் பேச்சைக் கேட்டவர் முறைத்துக் கொண்டே தன் அறைக்கு சென்று விட்டார்.

“நான் கோபத்துல ஏதாச்சும் பேசுனா போனு சொல்லுவியா. அவ்ளோ தானா நான் உனக்கு. எவ்ளோ தைரியம் இருந்தா அவள அந்த வீட்ல இருக்க சொல்லி இருப்ப. இந்த மாதிரி நான் ஒருத்தனை கூட்டிட்டு வந்து உன்னையும் அவனையும் ஒரே வீட்ல வைக்கட்டுமா. சிரிச்சுகிட்டே வாழ்த்து சொல்லுவியா‌ இல்ல என்னை மாதிரி கத்துவியா. என் பிள்ளை இருக்க வேண்டிய இடத்துல யாரோ ஒரு பிள்ளைய வச்சா என்னால இப்படி ஏத்துக்க முடியும். சொல்லு… எப்படி ஏத்துக்க முடியும்.” அடிப்பதை நிறுத்தவில்லை அகல்யா.

எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறேன் என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் தரணீஸ்வரன். அதில் ஆத்திரம் அளவில்லாமல் உருவாகியது. தலைமுடியை பிடித்து தன்னை பார்க்க வைத்தவள்,

“நீ என்ன என்னை வேணாம்னு சொல்றது நான் சொல்றேன் நீ எனக்கு வேணாம். சீக்கிரம் விவாகரத்து கொடு. எனக்கு பிடிச்சவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன். இந்த குழந்தைக்கு அவனையே அப்பான்னு சொல்லிக்கிறேன்.” பேசிக் கொண்டிருந்தவள் கன்னத்தில் கை வைத்து விட்டாள் அவன் கொடுத்த அடியில்.

முதல்முறையாக அடுத்த கணவனை அவள் அதிர்வோடு பார்க்க, “உனக்கு வேணும்னா எவனையாது கல்யாணம் பண்ணிக்க. இந்த அசிங்கமானவன் தடுக்க மாட்டேன். என் பிள்ளைக்கு நான் மட்டும் தான் அப்பா. அந்த உரிமைய வேற எவனுக்காவது கொடுத்த கொன்னுடுவன்டி.” என்று உண்மையாகவே அங்கிருந்து கிளம்பி விட்டான்.

உடல் நடுங்க தன் அறைக்கு திரும்பினாள் அகல்யா. புயலாக உள்ளே வந்து தரணீஸ்வரன் அவளை‌ அசுர வேகத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டான். உடல் குலுங்கி அவனுள் அடங்கிப் போனவள் சத்தம் இல்லாத அழுகையை கொடுத்தாள்.

அணைத்துக் கொண்டே, “சாரி லயா கோபத்துல அடிச்சிட்டேன். சாரி…ப்ளீஸ் அழாத. நீ பேசுன வார்த்தை தப்பு. நீயும் என் பிள்ளையும் எனக்கு சொந்தமானவங்க. அதை இன்னொருத்தனுக்கு கொடுக்க போறன்னு சொன்னா எனக்கு கோபம் வரும் தான.” என்று பேசிக் கொண்டிருக்க, அவனை தள்ளி விட்டாள்.

விட்டுக்கொடுக்காமல் சிறை பிடித்துக் கொண்டவன் அவளை சமாதானம் செய்து கொண்டிருக்க, “தள்ளி போ” என்று போராடிக் கொண்டிருந்தாள்.

அடி கொடுக்கும் பொழுது அமைதியாக இருந்தது போல் இந்த முறை இல்லை தரணி. அவள் விலக முயற்சிக்க அதை இறுக்கமாக தடுத்துக் கொண்டிருந்தான். இருவருக்குள்ளும் என்ன நடக்கிறதோ இருவருக்கும் புரியவில்லை. 

“எதுக்கு இப்ப தள்ளி விட்டுட்டு இருக்க. இந்த அசிங்கம் உன்னை தொடக்கூடாதா.” பிரிந்து நின்று கோபமாக கேட்டவன் அதற்கு அப்படியே எதிர்மறையாக, “நான் தொடுவேன் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உனக்கு பிடிக்கலைன்னா நீ என்னை தொடாத.” என்றதோடு வேகமாக அவளை தாக்க ஆரம்பித்தான் முத்தத்தால்.

முகம் எங்கும் முத்தமழை பொழிந்து கொண்டிருக்க நனைய தயாராக இல்லாதவள் தடுத்துக் கொண்டிருந்தாள். மனைவியின் போராட்டத்தில் கோபம் அவனை ஆக்கிரமித்துக் கொள்ள, கை இரண்டையும் பிடித்து ஒரு கைக்குள் வைத்துக் கொண்டவன் இதழை சிறைப் பிடித்துக் கொண்டான் தன் இரு இதழுக்குள்.

வலிக்காதவாறு கையைப் பிடித்திருந்தவன் வலிக்குமாறு முத்தத்தை தொடர்ந்தான். பலம் இழந்து அவனோடு ஐக்கியமானவள் மனம் காலையிலிருந்து பட்ட அவஸ்தைக்கு குளிர ஆரம்பித்தது. கையை விடுவிக்க போராடினாள் அவனை அணைத்துக் கொள்ள. முதலில் புரிந்து கொள்ளாமல் கையில் அழுத்தம் கொடுத்தவன் தன் இதழை மென்னு முழுங்கும் மனைவியின் செய்கையில் விடுதலை கொடுத்தான்.

காற்றுக்கு கூட இடமளிக்காமல் அவனை தன்னோடு சேர்த்துக் கொண்டவள் முத்தத்தை தொடர்ந்தாள் கோபத்தையும் ஏக்கத்தையும் சரிசமமாக கொடுத்து.

அசுர வேகத்தில் ஆரம்பித்த முத்தம் நிதானம் பிடித்தது இருவர் மனதும் நிதானம் அடைந்ததாள். குழந்தை வந்ததிலிருந்து இந்த முத்தத்திற்கு தடை போட்டவர்கள் அதை மறந்து ஒருவர் இதழோடு ஒருவர் இடம் மாறி கொண்டனர்.

****

 

வயிற்றில் இருக்கும் சிசுவை அகல்யா மறந்து கணவனோடு இணைந்து செல்ல, பிள்ளையின் கவனத்தில் உடனே விலகாமல் இடைவெளி கொடுத்து பொறுமையாக அவளை விட்டு பிரிந்தான். முத்தத்தை வழியனுப்பிய பின் தான் என்ன செய்தோம் என்பது அகல்யாவிற்கு புரிய, தன்மீது கோபம் கொண்டாள்.

மனைவியின் முக மாறுதலை வைத்து அவளின் உள்ளத்தை படம் பிடித்தவன், “மன்னிச்சிடு லயா. நான் எவ்ளோ விலகி போகணும்னு நினைச்சாலும் அடுத்த நொடியே நீ வேணும்னு நினைக்கிறேன். இப்ப நான் கிஸ் பண்ணும் போது கூட நீ எவ்ளோ அருவருப்ப உணர்ந்து இருப்பன்னு பீல் பண்ண முடியுது.” என்றவனை கொலை வெறியில் முறைத்துக் கொண்டிருந்தாள் அகல்யா.

அதை அறியாது, “என் மனசுல இருந்து எல்லாத்தையும் அழிக்கணும். இல்லன்னா உன் சந்தோஷம் தான் கெட்டுப் போகும். ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்க  லயா தூங்கு.” என்றவன் தவித்துக் கொண்டிருந்தான் செல்வோமா இங்கேயே இருப்போமா என்ற யோசனையில்.

கணவன் மீது இருந்த கோபத்தில் எதையும் பேசாமல் அவள் தன்னிடத்தில் படுத்துக்கொள்ள, மனைவியை விட்டு போக மனம் இல்லாதவன் ரோஷத்தை கைவிட்டு அவள் பக்கத்தில் படுத்தான். காலையிலிருந்து அழுது கொண்டிருந்தவள் சற்று ஓய்வெடுக்கட்டும் என்று அவன் தன்னை கட்டுப்படுத்தி தூங்க முயல, பழக்க தோஷம் மனைவியை கேட்டது.

சுருண்டு படுத்தவன் நினைவில் அன்று நடந்த நிகழ்வு வரத் துவங்கியது. அகல்யாவிற்கு சரியாக ஐந்தாவது மாதம் தொடங்கியிருந்தது. தாய்மையின் பூரிப்பில் அவள் இருக்க தந்தையாக போகும் மகிழ்வில் கண்ணும் கருத்துமாக மனைவியை பார்த்துக் கொண்டான். வயிறு சற்று தெரிய ஆரம்பிக்கும் நிலையில் அவள் மார்போடு படுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்தான்.

அதன்படி அவன் தன்னிடத்தில் படுத்துக்கொள்ள அகல்யா யோசனையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “தூங்காம எதுக்கு என் மூஞ்சிய பார்த்துட்டு இருக்க.”

“இன்னும் உங்க வேலைய காட்டாம இருக்கீங்க. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.”

அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து புன்னகையோடு அவள் புறம் திரும்பியவன் தலைக்கு ஒரு கையை தாங்கிக் கொண்டு, “கொஞ்ச நாளைக்கு வேணாம் லயா. பாப்பாக்கு தொந்தரவா இருக்கும். அதுவும் இல்லாம நீ இந்த மாதிரி நேரத்துல நல்லா தூங்கணும்.” என்றான் மற்றொரு கையால் அவள் கன்னத்தை தடவிக் கொண்டு.

“குழந்தைக்கும் நீங்க என் பக்கத்துல படுக்குறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.”

“வெயிட்டா இருக்கும் லயா. அதுவுமில்லாம ஒரு கைய என் மேல போட்டுட்டு திரும்பி படுக்க முடியாம ஒரே மாதிரி படுத்துட்டு இருப்ப.”

அவன் அருகில் நெருங்கி படுத்தவள் தானாகவே கணவனை தன் மீது சாய்த்து கொள்ள, எழ பார்த்தான். அவன் தலையை கோதிக்கொண்டு, “எனக்கு நீங்களும் குழந்தைதான். நான் இல்லாம நீங்க தூங்க மாட்டீங்கன்னு தெரிஞ்சும் எப்படி தனியா தூங்குவேன். ரெண்டு குழந்தையையும் பார்த்துக் வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.” நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.

“எனக்கு பயமா இருக்கு லயா. இன்னும் ஒரு நாலு மாசம் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.”

மறுப்பாக தலையசைத்தவள், “இப்படியே படுத்து பழகிட்டீங்களா நீங்க இல்லாம எனக்கே தூக்கம் வரமாட்டேங்குது.” என்றாள் கண்ணில் பொங்கி வழியும் காதலோடு.

அதில் மறுப்பு சொல்ல முடியாதவன் அவளோடு இணைந்து கொண்டான் தூக்கத்தை. மனைவி தூங்கும் வரை அவளுக்காக படுத்திருப்பவன் பதமாக பாதுகாப்பு கொடுப்பான் தூங்கும் போது. அகல்யாவின் ஒவ்வொரு அசைவும் அத்துபடி இரவு நேரத்தில் அவனுக்கு.

கவனமெல்லாம் மனைவி மீது இருக்க தூக்கம் அரைகுறையாக தான் இருந்திருக்கிறது அவள் கர்ப்பம் தரித்த நாளிலிருந்து. நினைவில் இருந்து வெளிவந்தவன் மனைவியின் முதுகை வெறித்துக் கொண்டிருந்தான்.

தானே விலகிப் போனாலும் நெருங்கி வந்து அணைத்துக் கொள்ளும் மனைவி இன்று உதாசீனம் செய்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துப் போனான். மனைவியிடம் மண்டியிடுவதில் தவறில்லை என்று நினைத்தவன் நெருங்கி படுத்தான் அவள் முதுகை உரசி.

“லயா ஒரு பத்து நிமிஷம் மட்டும் படுத்துக்கவா.” சங்கடத்தோடு கேட்கும் கணவனின் குரலில் அதிக அளவு பாரம் உண்டானது மனதில்.

வீம்பு பிடிக்க மனம் இல்லாதவள் திரும்ப, “தேங்க்ஸ்” என்று கட்டிக் கொண்டான். இருவரும் தூங்குவது போல் நடித்தார்கள். யார் மீது தவறு? யார் அதிகம் இன்று கோபம் கொண்டது? என்றெல்லாம் யோசனைகள் சென்று சோர்ந்து துயில் கொண்டார்கள்.

***

கதிரவன் சுறுசுறுப்பான பகலை தோற்றுவிக்க கர்ப்பிணியின் உடல் தூக்கத்தில் இருந்து வெளிவந்தது. வயிற்றில் கை வைத்து எழுந்தமர்ந்தவள் முதலில் தேடியது கணவனை தான். பக்கத்தில் இல்லாதவன் யோசனையில் வெளியில் வந்தவள்,

“எங்கம்மா அவரு?” விசாரித்தாள் அன்னையிடம்.

“காலைல அஞ்சு மணிக்கு எழுந்து போயிட்டாரு.” என்ற பதிலில் அறைக்கு வந்தவள் அவனை தொடர்பு கொண்டாள்.

கைபேசி எடுக்கப்பட்டதும் அவள் பேச்சு கொடுக்க வாயைத் திறக்க, “ஹலோ!” என்று சிவானியின் ஓசை கேட்டது.

உச்சி மண்டை சூடானது அகல்யாவிற்கு. கோபத்தில் உதடுகள் பேச முடியாமல் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. எரிச்சலில் கைபேசியை வைத்து விட்டாள்.

“ஏய்! என் ரூம்ல  நீ என்ன பண்ணிட்டு இருக்க.” அதிரும் வேகத்தோடு தரணியின் குரல் கேட்டது.

திடுக்கிட்டு திரும்பியவள் முகத்தை ஒரு நொடியில் மாற்றிக் கொண்டாள் பாவமாக. அதைக் கண்டு கொண்டவன் முறைத்துக் கொண்டே எதற்காக இங்கு இருக்கிறாய் என்று விசாரிக்க, “கௌஷிக் பத்தி உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்.” என்று பேச்சை துவங்கினாள்.

“நீ யாரை பத்தி வேணா பேசு அதை பத்தி எனக்கு கவலை கிடையாது. ஆனா இன்னொரு தடவை நீ இந்த ரூமுக்குள்ள கால் வைக்க கூடாது. இது எனக்கும் என் மனைவிக்கும் சொந்தமான அறை. கண்ட நாயெல்லாம் இங்க வர்றது எனக்கு பிடிக்கல.” என்ற வார்த்தை கொல்லாமல் கொன்றது சிவானியை.

“என்ன தரணி இந்த மாதிரி பேசுற”

“இத்தோட நிறுத்தி இருக்கன்னு சந்தோஷப்படு. நீ என்ன பண்ணாலும் நான் பொறுத்துட்டு அமைதியா போவேன் என் மனைவி விஷயத்தை தவிர. முதல்ல இங்க இருந்து வெளிய போ.” என்றவன் கத்தலில் அமைதியாக வெளியே சென்றாள்.

“ஏய்! உன் கையில இருக்குறது என்னோட போன் வச்சிட்டு போ.” இந்த தரணி பார்ப்பதற்கு புதிதாக இருப்பதால் ஒருவித யோசனையில் பார்த்துக் கொண்டிருந்தவளை சொடக்கு போட்டு நிகழ்வுக்கு கொண்டு வந்தவன்,

“வெச்சுட்டு கிளம்புன்னு சொன்னேன்.” என்றான் அழுத்தமாக.

‌ இவனை மாற்ற நேரமெடுக்கும் என தவறாக நம்பிக்கையை வளர்த்துக் கொண்டவள் கைபேசியை வைத்து விட்டு சென்றாள். அதை எடுத்து ஆராய்ந்தவன் மனைவியின் அழைப்பை அறிந்து  திரும்பி அழைத்தான். அவள் தான் அழைக்கிறாள் என்ற கடுப்பில் எடுக்காமல் இருந்தாள் அகல்யா.

நிறுத்தாமல் மூன்றாவது முறையாக கைபேசி அடிக்க ஆரம்பிக்க எடுத்தாள். நேற்று இரவு அவளை தொந்தரவு செய்வதாக எண்ணியவன் விடியலுக்கு முன்பாகவே எழுந்து வந்து விட்டான் இனிமேல் அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில்.

கணவனின் குரலை கேட்டவள், “ராத்திரியானா என் கூட பகல்ல அவ கூடயா. உன்ன போய்  நல்லவன்னு நினைச்சு இடம் கொடுத்தேன் பாரு என்னை சொல்லணும். இன்னொரு  தடவை என் மூஞ்சில முழிச்சிடாத.” படபடவென்று வார்த்தையை கொட்டினாள்.

“லயா பார்த்து பேசு.”

“அது ஒன்னு மட்டும் தான் இங்க குறை. உன்ன நெனச்சா  அவ்ளோ கோபம் வருது. அவ இல்லாததுனால என்னை கூட வச்சிருந்த இப்போ அவ வந்ததால என்னை அனுப்பிட்ட.”

“பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்காத லயா. அவ கூட வாழ நினைக்கிறவன் எதுக்காக உன்னை தேடி வர போறேன்.”

“ஆமா நான் பெரிய பைத்தியம் தான். நீ என்ன சொன்னாலும் இளிச்சவாயி நம்பி  ஏமாந்து போறேன்ல.”

“என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு”

“இப்ப நான் என்ன பேசிட்டேன் உனக்கு கோபம் வருது.”

“ஃபோன வை எனக்கு வேலை இருக்கு.”

“அவ கூட கும்மாளம் அடிக்கிற வேல தான.”

“என்ன தாண்டி உன் பிரச்சனை.”

“நீதான் என்னோட பிரச்சனை. என் வாழ்க்கையில நீ வராம இருந்திருந்தா நான் ரொம்ப நிம்மதியா இருந்திருப்பேன். உன்ன கல்யாணம் பண்ணி என்னோட நிம்மதி சந்தோஷம் எல்லாம் போயிடுச்சு. இப்படி இன்னொருத்தி கூட கூத்தடிக்கிறதை பார்த்தும் இன்னும் உயிரோட இருக்கேன் பாரு என்ன சொல்லணும்.”

“லயா”

“என்னை ஏமாத்துன மாதிரி என் குழந்தையும் ஏமாத்திட்டியே. எனக்கும் என் குழந்தைக்கும் இனிமே நீ வேணாம். எப்பவுமே எங்க முகத்துல முழிச்சிடாத.”

“என் குழந்தைக்கு நான் எந்த துரோகமும் பண்ணலடி.”

“இந்த வார்த்தைய சொல்ல அசிங்கமா இல்ல உனக்கு. துரோகம் பண்ணாமையா உன் முன்னாள் மனைவி இதுதான் நம்ம பிள்ளைன்னு சொல்லும் போது அமைதியா இருந்த. உன் மனசாட்சிக்கு தெரியுது அது உன் குழந்தைன்னு.”

“என் வார்த்தைய நம்ப மாட்டியா லயா”

“இதுக்கு மேலயும் உன்னை நம்பிட்டு இருந்தா என்னை விட முட்டாள் வேற யாரும் இருக்க மாட்டாங்க. அந்த குழந்தை என்னோடதுன்னு சொல்லாம சொல்லிட்டு இப்ப நடிக்கிறியா.”

“ப்ளீஸ் டி இப்படி பேசாத. நீ என்னை வெறுக்குறதை தாங்கிக்க முடியல.”

“தயவு செஞ்சு என்கிட்ட இனிமே பேசாத. உன்னோட வாழ்ந்துட்டு உன் பிரண்டு கூட போனவளை நாலு அற விட்டு துரத்தி விடாம வீட்டுக்குள்ள சேர்க்கும் போதே தெரியுது அவளை விட நீ மோசமான ஆளுன்னு. அந்தக் குழந்தை உன்னோடது தான். எனக்கும் என் பிள்ளைக்கும் துரோகம் செஞ்ச நீயும் அவளும் நிம்மதியா வாழ மாட்டீங்க.

இனியும் உன் கூட வாழற எண்ணம் எனக்கு இல்லை. ஒழுங்கா எனக்கு விவாகரத்து கொடுத்துடு இல்லன்னா நான் உனக்கு கொடுப்பேன்.” என்றவள் கைப்பேசியை தூக்கி அடித்தாள்.

கைப்பேசி உடைந்து அலங்கோலமாக கிடைக்க அதைவிட அலங்கோலமாக உள்ளம் உடைந்து நின்றிருந்தான் தரணீஸ்வரன். உணர்வுகளை கொட்டாமல் அவள் பேசிய வார்த்தையை தனக்குள் வைத்துக் கொண்டான் வைராக்கியமாக. தவறாக பேசி விட்டோம் என்பதை உள் மனம் எடுத்துக்கூற, யார் மீதோ இருக்கும் கோபத்தை அவனிடம் காட்டி விட்டதால் தவித்து கதறினாள்.

இருவர் மீதும் தவறு இருக்க இருவரும் விட்டுக் கொடுக்காமல் வீம்போடு வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு தகுதியும் இல்லாமல் உடைந்து போயிருந்த தன்னை மீட்டெடுத்து அழகு பார்த்தவளே இன்று அசிங்கப்படுத்தியதை எண்ணி வெதும்பியவன் தீர்க்கமான முடிவு எடுத்து விட்டான் அவளுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று.

அப்படி ஒரு எண்ணம் இல்லாதவள் கோபத்தில் விட்ட வார்த்தைக்காக தவித்துக் கொண்டிருக்கிறாள் அவனிடமிருந்து வந்து விடுமோ என்ற எண்ணத்தில்.

கோபம் தணிந்த அகல்யா கணவனுக்கு அழைக்க, எடுக்கக் கூடாது என்ற முடிவில் கைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டான். அழுகையோடு அன்றைய நாளை கடத்தியவள் இரவு அவன் நிச்சயம் வருவான் என்று எதிர்பார்த்தாள். மணி பதினொன்று கடந்த பின்னும் அவன் வரவில்லை.

யோசனையில் சுழன்றவள் கைபேசி அலறுவதை அறிந்து எடுத்தாள். மாமனார் தான் அழைத்து இருந்தார். அன்று நடந்த சண்டையால் சங்கடத்தோடு அழைப்புக்கு பதில் கொடுத்தாள்.

“தரணி அங்க இருக்கானாமா.”

“இல்லங்க மாமா இங்க வரல.” என்றவள் காரணத்தை கேட்க, “இன்னும் வீட்டுக்கு வரல அகல். நேத்து அங்க வரதா சொல்லிட்டு போனான் அதனால இன்னைக்கும் வந்திருப்பான்னு நினைச்சி கேட்டேன்.” என்றவர் அவளை நலன் விசாரித்து விட்டு வைத்து விட்டார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
55
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *