443 views

இரவு தாமதமாக உறங்கிய நாயகனின் விழிகள் ஒட்டிக்கொண்டிருந்தது இமையோடு இமையாக. ஜன்னல் வழியாக வரும் கதிரவனின் ஒளியால் கூட அவனை வெல்ல முடியவில்லை. பத்து பேரை அடித்து போட்டது போல் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால், அவளின் பக்கத்தில் அந்தோ பரிதாபமாக அமர்ந்திருந்தார் அழகுசுந்தரம். பாவம் வயதானவர் கடமையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் வந்த தூக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு அவனின் கதையை கேட்டுக் கொண்டிருந்தார். முக்கால்வாசி வந்தவன் முழுமையாக முடிக்காமல் உறங்க வந்து விட, உறக்கத்திலிருந்து எழுந்த அனைவரும் அவரிடம் சண்டை பிடித்தார்கள்.

வாய்க்கு வந்ததை சொல்லி சமாதானம் செய்து அனுப்பியவர் ரகுவரனிடம் மீதி கதையைக் கேட்க, “காலையில சீக்கிரமா எழுப்புங்க சொல்றேன்.” என்று கண் மூடியவன் தான் அதன் பின் எழவே இல்லை.

அவரவர் வீடுகளுக்கு சென்ற இல்லத்தரசிகள் தங்கள் வேலைகளை முடித்த கையோடு அழகுசுந்தரத்தை தொல்லை செய்ய ஆரம்பித்தார்கள். எட்டு மணிக்கு எழுப்ப ஆரம்பித்தவர் பதினோரு மணி ஆகியும் எழுப்புவதை நிறுத்தவில்லை.

“மருமகனே மணி பதினொன்றை ஆகுது. இதுக்கு மேல தூங்குனா உன்ன மாதிரி வயசு பையனுக்கு அழகு இல்ல. தயவு செஞ்சு எந்திருச்சு மீதி கதைய சொல்லுப்பா.”

….

“ராசா”

“ஐயா”

“சாமி”

“தெய்வமே”

“குலசாமி எந்திரிப்பா”

“வயசானவன்ப்பா இதுக்கு மேல பேசினா மயங்கிடுவேன்.” என்றவர் பேச்சை நிறுத்தாமல் எழுப்பிக் கொண்டிருக்க, ஒரு வழியாக அவன் உடல் அசைந்தது. மகிழ்ச்சி வெல்லம் ஊற்றெடுக்க, “எழுந்திரு மருமகனே எழுந்திரு. வீரம் கொண்டு வெற்றி நடை போட்டு… பாக்கியத்தை அருளும்.” என அவனை உசுப்பி விட, “ம்ம்ம்” என்பதை தவிர வேறு எதுவும் வரவில்லை அவனிடமிருந்து.

பாவம் வயதில் மூத்தவர் சோர்ந்து விட்டார். அழைக்கும் ஓசை மிக மெல்லிய அளவில் வர, அப்பொழுதும், “ம்ம்ம்” என்ற ஓசை தான் அவனிடம்.

“என்னப்பா இப்படி பண்றியேப்பா. இப்ப முடிவா எந்திரிக்க போறியா இல்லையா?”

“இப்ப மட்டும் நீ எந்திரிக்கல இந்த அழகுசுந்தரம் யாருன்னு காட்ட வேண்டியதா இருக்கும்.” என்றவர் மீது கை போட்டவன் தன்னோடு மெத்தையில் சாய்த்து கொண்டான்.

அவர் விடாமல் கதறிக் கொண்டிருக்க, கையை கழுத்தில் போட்டவன் இறுக்க ஆரம்பித்தான். மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டவர் செய்கைகளால் உயிரை விடும்படி மன்றாட, அசைவில்லை அவனிடம்.

தன்னால் முடிந்தவரை போராடி தப்பித்து எழுந்தவர் அவனையும் எழுப்ப முயன்றார். கல்லு போல் படுத்திருந்தவன், “அப்பா” என்ற மகளின் ஓசையில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.

“அப்பா மான்குட்டி வந்திருக்கு.” என்றதும் சுழன்று மேலாடையை அணிந்தவன் புயலென கதவை திறக்க, அவனது இளவரசி வாசலில்.

“தங்கம்!” என்றவன் இரண்டு நாள் பிரிவிற்கும் சேர்த்து அணைத்து கொள்ள, மகளும் அவனுக்கு ஈடாக அணைத்தால் தந்தையை பிரிந்த ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள.

எப்படி இங்கு இவள் என்பதை எல்லாம் கேட்டுக் கொள்ளாமல் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தவன், “என்னடா தங்கம் உடம்பு இளைச்ச மாதிரி இருக்கு சாப்டியா இல்லையா?” என்றான் கவலையாக.

“மான்குட்டி நல்லா சாப்ட்டுச்சு அப்பா. நீங்க சாப்டீங்களா.”

“அப்பா சாப்பிட்டேன்டா தங்கம்.” என மகளின் கன்னத்தை ஆசையாகக் கிள்ள, அவர்களுக்கு முன் வந்து நின்றான் மகிழ்வரன்.

மகனைப் பார்த்தவன் ஏளனத்தோடு, “என்னடா, எதுக்கு இங்க வந்திருக்க?” என்று விட்டு, “தங்கம் இவனெல்லாம் எதுக்குடா கூட்டிட்டு வந்த. குரங்கு சேட்டை புடிச்சவன் நம்ம ரெண்டு பேருக்கும் தொந்தரவா இருப்பான்.” வெறுப்பேற்றினான் மகனை.

“அப்பா தம்பி பாவம் பா.”

“யாருடா தங்கம் இவனா பாவம்… இவனையும் இவங்க அம்மாவையும் மட்டும் நம்பாதடா தங்கம் ரெண்டும்  கேடிங்க.”

“அப்போ நம்ம ரெண்டு பேர் அப்பா”

“நம்ம ரெண்டு பேரும் ஏஞ்சல்ஸ் தங்கம்.” என்று கண் சிமிட்டியவன் மகளுக்கு நெற்றியில் முத்தம் வைக்க, “அப்பா ஏஞ்சல்… மான்குட்டி ஏஞ்சல்” தனக்குள் சொல்லிக் கொண்டவள் தந்தையிடமும் சொல்லி சிரித்தாள்‌.

“ஆமாண்டா தங்கம்” 

“அக்கா” என்ற மகனின் ஓசையில் முறைத்தவன், “எதுக்குடா இப்போ என் தங்கத்தை கூப்பிட்டுட்டு இருக்க. அவள விட்டுட்டு உன்னை கொஞ்சுவன்னு பார்த்தியா. உன்னை எல்லாம் நான் என்னைக்கும் கொஞ்சம் மாட்டேன். என் பொண்ணு மேல பொறாம படாம போடா இங்க இருந்து.” என்றான்.

“அப்பா, தம்பி பாப்பா நீங்க ரெண்டு பேரும் இல்லன்னு ரொம்ப அழுதான். அவன திட்டாதீங்கப்பா மான்குட்டிக்கு அழுக வரும்.”

“இவனுக்காக எல்லாம் நீ இவ்ளோ வருத்தப்படாதடா தங்கம் அப்பா மனசு தாங்காது.” இருவரும் பேசிக் கொண்டிருக்க, “அக்கா” என இடை புகுந்தான் குட்டி ரகுவரன்.

கடுப்போடு மகன் புறம் திரும்பியவன், “எதுக்குடா இப்போ உனக்கு இவ்ளோ பொறாமை வருது. உன்னை எல்லாம் நான் கொஞ்ச மாட்டேன் என்னை பார்க்க வந்திருக்கியான்னு ஆச்சரியப்பட மாட்டேன். சும்மா எங்க ரெண்டு பேரையும் தொந்தரவு பண்ணாம தூரமா நில்லு போ…” கடுமையை காட்டினான் பேச்சில்.

“அக்கா” அடுக்கடுக்காக  வார்த்தைகளால் தந்தை கோபத்தை ஏற்படுத்த, ஒரே வார்த்தையில் மகன் கோபத்தை ஏற்படுத்தினான்.

இரண்டு நாட்களாக மகளைப் பார்க்காமல் உள்ளுக்குள் வருத்தம் கொண்டிருந்தவன் அதை ஆற்றிக்கொள்ள முடியாத தடைக்கல்லாக இருக்கும் மகனை, “உங்க அம்மா அங்க தான் இருக்கா போடா” என விரட்டி அடித்தான்.

மான்விழி தம்பிக்காக பரிந்து பேச, மகளை சமாதானம் செய்தவன் கொஞ்சிக் கொண்டிருந்தான். பொறுக்க முடியாமல் இடையில் வந்த மகனை தலையில் அடித்து ஒரமாக நிற்க வைக்க, சிறிய மூக்கை விரித்துக் காட்டி கோபத்தை வெளிப்படுத்தியது குட்டி வாண்டு.

அதைக் கூட அறியாமல் ரகுவரன் மகளிடம் பேசிக் கொண்டிருக்க, அருகில் சென்றவன் தன் உயரத்திற்கு எட்டும் அளவிற்கு தந்தையின் காலை கடித்தான். வலியில் ஒரு அடி விலகி நின்றவன் தொடையை தேய்த்துக் கொண்டு அடிக்க வர,

“என் அக்கா” கோபத்தோடு கூறினான்.

அதட்ட வந்தவன் திருத்திருவென்று முழிக்க, “அம்மா அந்த வீட்ல இருக்காங்க அக்கா, நீ எதுக்கு இங்க வந்த? அம்மாவ மட்டும் கூட்டிட்டு நம்ம போகலாம் வா.” என்றவன் தந்தையை முறைத்துக் கொண்டே அக்காவை கூட்டிச் சென்றான்.

‘அப்போ இவ்ளோ நேரம் நான் கொஞ்சலன்னு இவன் பொறாமை படல… அவங்க அக்காவை நான் கொஞ்சுனன்னு பொறாமை பட்டிருக்கான்.’ நாசுக்காக அவமானப்படுத்திய மகனின் செயலை அப்போதுதான் உணர்ந்தான்.

கூடவே, ‘இவன் நம்மள கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்குறானே…. என்ன காரணமா இருக்கும்? நான் பெத்ததே என்னை மதிக்கலனா இந்த ஊரு உலகம் எப்படி என்னை மதிக்கும். இவனுக்கு நம்ம அருமை பெருமைய புரிய வைக்கணும்.’ உறுதி எடுத்துக் கொண்டான் தனக்குள்.

அக்காவை கூட்டிச் சென்ற குட்டி ரகுவரன், “அம்மா, அப்பா என்னை அடிச்சுட்டாங்க. அவர இங்கயே விட்டுட்டு போயிடலாம்.” வந்ததும் வராதமாக புகார் வாசித்தான் தந்தை மீது.

“இப்படி சொல்றான்னு உன் பையன நம்பாத மகி. நேத்து முழுக்க ஒரே அழுகை. இப்பவே அம்மாவ பார்க்கணும் அப்பாவ பார்க்கணும்னு.”

“தெரியும் அத்தை இதுங்க ரெண்டுத்துக்கும் என்னை விட அப்பன தான் அதிகம் பிடிக்கும்னு.”

“அம்மா மாதிரியே தான பிள்ளைங்களும் இருக்கும்” என்ற ஆகாஷை அவள் முறைக்க, “எதுக்கு லேடி பாஸ் இப்போ என்னோட பாஸ  முறைக்கிறீங்க? அவர் என்ன இப்ப தப்பா சொல்லிட்டாரு. உங்களுக்கு எல்லாரையும் விட உங்க வீட்டுக்காரர தான ரொம்ப பிடிக்கும். அம்மாவ அப்படியே பிள்ளைங்க  ஃபாலோ பண்ணுதுங்க.” என்றான் சதீஷ்.

“இவங்களை விட எங்க அண்ணனுக்கு தான் இவங்களை ரொம்ப பிடிக்கும். இல்லனா பொண்டாட்டி போன கையோட பாசமான பிள்ளைங்களை கூட விட்டுட்டு இங்க வந்து இருப்பாரா.”

“அப்படி சொல்லுங்க இனன்யா. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் புதுசா கல்யாணம் பண்ணவங்க மாதிரி சண்டை போடுறது என்ன, உடனே சமாதானம் ஆகிறது என்ன….அப்பப்பப்பா” இனன்வியாவிற்கு தேதாக இனியாவும் கேலி செய்தாள் அண்ணியை.

தன்னை குடும்பமாக தாக்க வந்திருக்கும் தன் குடும்ப உறுப்பினர்களை கண்டு கொள்ளாதவள் பிள்ளைகளோடு ஐக்கியமானாள். புரிந்து கொண்ட பெரியவர்கள் இருவரும் ஓய்வெடுக்க சென்றுவிட, சிறியவர்கள் நால்வரும் போதும் என்றவரை மகிழினியை கேலி செய்தார்கள்.

பிள்ளைகளுக்கு பின்னே வந்த ரகுவரன் இவர்களை பார்த்துவிட்டு எதுவும் பார்க்காதது போல், “தங்கம் இவ்ளோ தூரம் டிராவல் பண்ணி வந்திருக்க… குளிச்சிட்டு வரலாம் வாங்கடா.” என அழைத்தான் மகளை.

சம்மதமாக தலையசைத்த மான்விழி தந்தையின் கைபிடிக்க, “மானு அம்மா உன்ன குளிக்க வைக்கிறேன் வா.” தந்தையிடமிருந்து மகளை பிரித்தாள்.

“என் பிள்ளைங்களை குளிக்க வைக்க எனக்கு தெரியாதா?”

“பிள்ளைங்க மேல அப்படியே ரொம்ப பாசம்தான் உனக்கு. எக்கேடோ போகட்டும்னு விட்டுட்டு வந்துட்டு நடிக்காதடா.”

“இந்த வார்த்தைய நீ சொல்ல கொஞ்சம் கூட தகுதி இல்லடி. இவங்க மேல அக்கறையே இல்லாம வீட்டை விட்டு ஓடி வந்தது நீ தான் நான் இல்ல.”

தம்பதிகள் இருவரும் வாக்குவாதங்கள் செய்து கொண்டிருக்க, மான்குட்டி தாய் தந்தையரை சமாதானப்படுத்தியது. கேட்பதாக இல்லை இருவரும். ஓய்வெடுக்க சென்ற பெரியவர்கள் இருவரும்,

“இத்தோட உங்க சண்டைய முடிச்சுக்கோங்க. உங்க புள்ளைங்க ரெண்டு பேரும் நீங்க இல்லாம எங்க எல்லாரையும் ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க.” என்றார்கள்.

நல்லவன் ரகுவரன் சாந்தியிடம் புகார் வாசிக்க, அவனது அன்பு மனைவி மாமியாரிடம் புகார் வாசித்தாள். அத்தோடு நிறுத்தாமல் தங்கள் பக்கம் வாதங்களுக்கு ஆள் சேர்க்க ஆரம்பித்தார்கள். 

“தயவு செஞ்சு உங்க பஞ்சாயத்தை உங்களோட வச்சுக்கோங்க. உங்க பிள்ளைங்களை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டு எங்க பொழப்ப பார்க்கலாம்னு தான் எல்லாரும் கிளம்பி இங்க வந்ததே. எங்க வேலை இத்தோட முடிஞ்சுது. நாங்க எல்லாரும் கிளம்புறோம்.” என்றதும் ரகுவரன் மனைவியைப் பார்த்தான்.

அவளும் இவனை பார்க்க, “ஆகாஷ் ரிட்டன் டிக்கெட் போடு.” என்றார் சாந்தி.

“உடனே கிடைக்கல மம்மி. ராத்திரி தான் டிக்கெட் இருக்கு.‌” பயணச்சீட்டை பரிசோதித்தவன் கூற, “எதுவா இருந்தாலும் போடுப்பா இவங்க பேச்சை எங்களால கேட்க முடியாது.” அவசரப்படுத்தினார் லட்சுமி.

இவர்கள் சம்பாஷனைகளுக்கு நடுவில் தம்பதிகள் இருவரும் பேச்சு கொடுக்க வர, மீண்டும் முட்டிக்கொண்டது இருவருக்குள்ளும்.

“ராத்திரி வரைக்கும் கூட இங்கே இருக்க முடியாது போல. எங்கயாவது ஹோட்டல்ல கூட ஸ்டே பண்ணிக்கலாம். முதல்ல எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க.” என்று மொத்தமாக கிளம்பி விட்டார்கள்.

***

குளியல் அறையில் இருந்து ஒரே கும்மாள சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தலையில் கை வைத்துக் கொண்டு அந்த அறையவே பார்த்துக் கொண்டிருந்த மகிழினி பொறுக்க முடியாமல் அங்கு நகர பார்க்க, “அட கொஞ்ச நேரம் இரு மகி என்னதான் பண்றாருன்னு பார்ப்போம்.” என்றார் ரேகா.

“ஒன்னும் நடக்காது எவ்ளோ நேரம் ஆனாலும். நான் இப்ப போய் கதவை தட்டி மூணு பேரையும் அதட்டணும் அதான் அவன் பிளான்.”

“ஹா ஹா ஹா! இருந்தாலும் இது ரொம்ப ஓவர் மகி.”

“அடிக்கடி நடக்கிற சம்பவம் தான் இது. மூணு பேரும் கூட்டணி வச்சி காலையில இருந்து ராத்திரி வரைக்கும் என்னை ரொம்ப டென்ஷன் பண்ணுவாங்க. அதுலயும் குளிக்கப் போறேன்னு சொல்லிட்டு அந்த வேலைய பார்க்காம பக்கெட், கதவுன்னு கிடைக்கிற எல்லாத்தையும் தட்டி பாட்டு கச்சேரி நடத்திட்டு இருப்பாங்க.”

“தினமும் இயல் இசை நாடகம் பார்க்கிறன்னு சொல்லு மகி.” எனும் பொழுது குளியலறையில் இருந்து சோப்பு ஒன்று மகிழினி மீது விழுந்தது.

சரியாக அது அவள் நெற்றியில் விழ, அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “எரும மாடு கதவை திற.” என தட்டினாள். இந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த ரகுவரன் கதவை மின்னலென திறந்து மனைவியை இழுத்துக் கொண்டான்.

“டேய் விடுடா!” என்றவளை ஷவரின் முன்பு நிறுத்தியவன், “நம்ம மிஷன் சக்சஸ் ஆகிடுச்சு. அம்மாவ அட்டாக் பண்ணுங்கடா செல்லங்களா.” உத்தரவு பிறப்பித்ததும் பிள்ளைகள் இரண்டும் அன்னையை முடிந்த அளவிற்கு இம்சை செய்தது.

கதறி துடித்தவள் ஓய்ந்து போனாள் முழுவதும் நனைந்து. பிள்ளைகள் மீது காட்ட முடியாத கோபத்தை கணவனிடம் காட்டினாள். அவனோ, இதுதான் சமயம் என்று கட்டிப்பிடித்து, “ஐயையோ பொண்டாட்டி ரொம்ப நனைச்சிட்டாளே… குளிருமே என் அழகிக்கு.” காப்பாற்றுவது போல் குறும்பு சேட்டைகளை ரகசியமாக செய்தான்.

பிள்ளைகள் இருப்பதால் ஒன்றும் சொல்ல முடியாமல் முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது. தன் போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை நோட்டம் விட்டவன் அவர்கள் அறியாது கண்ணடித்து, “ஓகே சொல்லுடி பொண்டாட்டி அதுக்கான வேலைய பார்ப்போம்.” என்றான் முத்த செய்கைகளை கொடுத்து.

“நடக்கவே நடக்காது ரகு. ஒழுங்கு மரியாதையா நீயும் உன் பிள்ளைங்களும் இங்க இருந்து கிளம்பிடுங்க. எனக்கு இன்னும் மூணு நாள் வேலை இருக்கு. முடிச்சுட்டு அங்க வரேன்.”

“சாரி மை டியர் பொண்டாட்டி” என்றவன் பிள்ளைகளோடு பேச்சு கொடுத்துக் கொண்டே தன்னால் முடிந்தவரை இம்சை செய்து முடித்தான்.

மழையில் நனைந்தது போல் நனைந்த நால்வரும் ஒரு வழியாக வெளியில் வர, அங்கு ரேகா இல்லை. விவரம் அறிந்தவர் தொந்தரவு செய்யாது விலகி விட, வசதியானது ரகுவரனுக்கு. தலையை துவட்டி விட்டு பிள்ளைகளுக்கு உடை மாற்றும் வரை பெற்றோர்கள் கூடவே இருக்க,

“தங்கம் டிவி பாருடா அம்மாக்கு தல துவடிட்டு வரேன்.” மறுக்கும் மனைவியை இழுத்துச் சென்றான் தரதரவென.

அறைக்குள் வந்தவள் செய்த சேட்டைகள் அனைத்திற்கும் சேர்த்து  அடித்தாள். கேலி கிண்டல்களுக்கு இடையில் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டவன் ஆடையில் கை வைக்க, “போடா பொறுக்கி” என நகர்ந்து நின்றாள்.

“புருஷனுக்கு மரியாதை கொடுடி வக்கீலு…”

“புருஷன் மாதிரி என்னைக்கு நடந்திருக்க?” என்றதும் கோபத்தில் அசையாமல் நின்று விட்டான்.

மகிழினி கண்டு கொண்டது போல் தெரியவில்லை. தலையை துவட்டிக் கொண்டிருக்க, “நான் புருஷனா என்னோட கடமைய சரியா செய்யலையா?” என குரல் கேட்டதும் திரும்பி கணவனை பார்க்க, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்.

பதில் சொல்லாமல் அவள் போக்கில் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். கேட்டு பார்த்து சலித்தவன் அருகில் வர, “ரகு பசங்க வெளிய இருக்காங்க ரொம்ப சேட்டை பண்ணாம நகரு.” என்றதெல்லாம் வீணானது மெத்தையில் சாய்த்த கணவனால்.

கத்தி காட்டிக்கொடுக்கும் வாயை உள்ளங்கையில் அடைத்தவன், “புருஷனா நடக்கலன்னு நீ தானடி சொன்ன. உன் மனசுல எந்த அளவுக்கு ஒரு குறைய வச்சிருந்தா இப்படி சொல்லுவ. இன்னைக்கே குறைய நிறை ஆக்காம இந்த ரகுவரன் ஓய மாட்டான்.” என அவன் உள்ளங்கையை எடுக்க, தன் கைகளால் வாயை மூடிக் கொண்டாள்.

நிறையாக்க நினைத்தவன் உதடு கை என்ற பாரபட்சம் இல்லாமல் கிடைக்கும் இடத்தில் எல்லாம் இதழ் பதித்தான். வெளியில் பிள்ளைகள் இருப்பதால் அதிக வன்முறையில் ஈடுபடவில்லை மகிழினி. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவன் ஈரமான ஆடைகளை நெருங்கினான்.

மகிழினி மிக மெல்லிய ஓசையில் தடுப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்க, உதடுகள் அடங்கிப் போனது அவனுக்குள். ஈர ஆடையை விட இதழுக்குள் ஈரம் அதிகமாக ஊற்றெடுக்க… நெஞ்சில் காதல் மழை பொழிந்தது. எதிர்ப்புகள் அவளிடம் குறைய, வெகு நாட்களாய் ஆடிய விளையாட்டு நீண்ட நேரம் முத்தத்தால் முடிவுக்கு வந்தது.

தடுத்த கைகள் அவனோடு பின்னிக் கொள்ள, காலை கதிரவன் பார்க்க கூடாத கட்சிகளை பார்த்தான். விலகி முகத்தை பார்த்துக் கொண்டவர்கள் சத்தம் வராமல் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள, “பொறுக்கி ரகுவரா.” என கணவனின் கன்னம் கிள்ளினாள்.

பதில் சொல்லாமல் உதட்டை இழுத்து அதில் இதழ் பதித்து, “பொண்டாட்டி ஓகே சொல்லு.” என அந்த நேரத்தை தன் வாயால் கெடுத்துக் கொண்டான்.

அவளை சூழ்ந்த கனவுகள் சற்றென்று விலகி விட, “ஃபிராடு கொஞ்ச நேரத்துல என்னையவே ஏமாத்த பார்த்துட்டான்.” விலகி தாக்குதல் கொடுத்தாள்.

இணங்கி வந்தவள் மீண்டும் இணங்கி வர வளைந்து கொடுத்து போனவன் சில நொடிகளில் மீண்டும் தன் நெஞ்சில் சாய்த்து மயக்கிக் கொள்ள, “ரகு நோ” என்ற வேண்டுதலோடு காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.

இதழ் ஒன்றும் விழி ஒன்றும் கூற, “பார்த்துடலாம் பொண்டாட்டி.” மிதமான கர்வத்தில் அவளை ஆழ துவங்கினான் நெருங்கி.

விலக முடியாமல் கண்களை மூடிக்கொண்டவள் கொடுக்கப் போகும் முத்தத்திற்கு எதிர்பார்க்க, மனைவியின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நெருங்கினான். இருவரும் பல போராட்டங்களுக்கு நடுவில் இந்த அழகான சூழலை அனுபவிக்க, கதவு வேகமாக தட்டப்பட்டது.

பிள்ளைகளின் நினைவு வந்து சட்டென்று விலகிய தம்பதிகள் அவசரமாக கதவை திறக்க, பல்லை இளித்துக் கொண்டு நின்றிருந்தார் அழகுசுந்தரம். கொடைக்கானலின் ஹீரோவை கண்டதும் வில்லன் பற்களை கடிக்க, “கடமை உங்களை அழைக்கிறது மருமகனே சீக்கிரம் வாருங்கள்.” என்றார் அப்பாவியாக.

“யோவ்!” கோபத்தின் உச்சத்தில் இருந்த ரகுவரன் செய்வதறியாது கழுத்தை நெறிக்க நெருங்கினான்.

தள்ளி நின்று தன்னை காப்பாற்றிக் கொண்டவர் நாசுக்காக மீண்டும் அழைக்க, “மரியாதையா வெளிய போயா.” குதித்தான்.

“மருமகனே காலையில சொல்றதா சொன்னீங்க நம்ம குழு உறுப்பினர்கள் அத்தனை பேரும் காத்துட்டு இருக்காங்க.”

“வக்கீல் நானே எனக்கு ஜாமீன் எடுக்கிற மாதிரி பண்ணிடாதய்யா”

ரகுவரனின் பேச்சில் அழைப்பதை நிறுத்தியவர் செல்ல முடியாத சூழ்நிலையில் பாவமாக நிற்க, தன்னை காப்பாற்றிய ஹீரோவை வைத்து கணவனை பழித்திருக்க எண்ணினாள் மகிழினி.

“ரகு உங்களை கடமை அழைக்கிறதாம் கிளம்புங்கள், கிளம்புங்கள்…” நக்கல் தோணியில் சிரிக்க, முறைத்தான் மனைவியை.

அதில் இன்னும் ஆழகாக சிரித்தவள், “அப்படிப் பார்த்தால் என்ன அர்த்தம் ரகுவரா அவர்களே… கடமையை காக்க வைக்க கூடாது. தங்களுடைய கடந்த காலத்தை விம் சோப்பு வைத்து விளக்கிட்டு வாருங்கள். அதுவரை உங்கள் மனைவியும் பிள்ளைகளும் உங்கள் தொந்தரவு இல்லாமல் ஆனந்தமாக இருப்பார்கள்.” என்றதோடு நிறுத்தாமல்,

“மானு இந்த தாத்தா தான் அப்பாக்கு ரெண்டு நாளா சாப்பாடு கொடுத்துட்டு இருக்காங்க. இப்போ ஒரு சின்ன ஹெல்ப் கேக்குறாங்க உங்க அப்பா பண்ண மாட்டன்னு சொல்றாரு, என்னன்னு கேளுடா” ரகுவரனுக்கு சரியான செக் வைத்தாள்.

“அப்பா, ஹெல்ப் பண்றது நல்ல விஷயம்னு நீங்க தான எனக்கு சொல்லிக் கொடுத்தீங்க. இப்ப நீங்களே பண்ண மாட்டன்னு சொல்றது தப்பு தான.” நீதி தேவதை நியாயத்தை தந்தையிடம் அனுப்ப, வேறு வழியில்லாமல் மனைவியை முறைத்துக் கொண்டே நகர்ந்தான்.

எப்படியும் தனியாக சிக்கினால் நிச்சயம் தன்னை அடிப்பான் என அஞ்சிய அழகுசுந்தரம் வீட்டு வாசலிலேயே குழு உறுப்பினர்களை பாதுகாப்பிற்கு வைத்திருந்தார். கதவைத் திறந்ததும் அவர்கள் ரகுவரனை ஆக்கிரமித்துக் கொள்ள, தூரமாக நிற்கும் முதியவரை முறைத்தே பஸ்பம் ஆக்கினான்.

குழு உறுப்பினர்கள் அவன் முறைப்பை கடுப்பாக மாற்றினார்கள் கேள்வி கேட்டு. சொல்லவே முடியாது என்று அடம் பிடித்தவன் சிக்கிக் கொண்டான் இல்லத்தரசிகளிடம். அவர்களோ விடாமல் மீதி கதையை கேட்டு அடம் பிடித்தார்கள்.

மறுத்து செல்லும் நாயகனை வழி மறித்தவர்கள், “எங்களுக்கு மீதி கதை தெரியாம உன்னை இங்க இருந்து அனுப்ப மாட்டோம்.” என சிறை பிடித்தார்கள்.

அவன் பிடிவாதம் பிடிக்க, அவர்களும் பிடிவாதம் பிடித்தார்கள். சொல்லவே மாட்டேன் என்றவன் நொந்து போனான் கேள்வி கேட்கும் பெருசுகளால். இம்சை தாங்க முடியாமல் அவன் இருக்கையில் அமர்ந்து காதை மூடிக்கொள்ள,

“உங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆகிடுச்சா, இல்லனா விவாகரத்து பிராசஸ் நடந்துட்டு இருக்கா?” கேள்வி ஒன்று மூடி இருக்கும் காதுகளையும் தாண்டி விழுந்தது.

அதன்பின்னும் நிற்காமல், “அந்த சண்டைக்கு அப்புறம் உன் பொண்டாட்டி உன் கிட்ட பேசவே இல்லையா?”

“எவ்ளோ நாள் ஆகுது இந்த பிரச்சனை நடந்து?”

“விவாகரத்துக்கப்புறம் பிள்ளைங்க உன் கூட தான் இருக்காங்களா?”

“இனிமே மகிழினி இங்க தான் இருக்க போறாளா?” என வரிசையாக வந்து கொண்டே இருந்தது.

“நேத்து ராத்திரி சொல்லும் போது கேட்காம எல்லாரும் தூங்கிட்டு இப்ப வந்து கேக்குறீங்க. எனக்கு இப்போ கதை சொல்ற மைண்ட் இல்ல.”

“மருமகனே வயசானவங்க எங்களையும் மீறி தூங்கிட்டோம். கொஞ்சம் மனசு வச்சு சொல்லுப்பா.”

“சரி சொல்றேன்.” என்றதும் குஷி ஆகினார்கள். அதை ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் ஆக்கினான், “என் பொண்டாட்டி பிள்ளைங்க எனக்காக காத்துட்டு இருக்காங்க சாப்ட்டு வந்துட்டு.” என்று.

அவன் வார்த்தையில் கோபம் கொண்டவர்கள் போராட்டம் நடத்த, அத்தனை பேரையும் கண்டுகொள்ளாமல் சாப்பிட சென்று விட்டான். அவனது மனைவி அவனையும் விட ராஜ தந்திரியாக கதவை அடைத்து வைத்திருந்தாள்.

குழந்தைகள் இருப்பதால் ஆர்ப்பாட்டம் செய்யாதவன் மிக மெல்லிய ஓசையில் கதவை தட்ட, கதவு திறந்த பாடில்லை. அவனுக்கு பின்னால் போராட்டம் செய்த கும்பல் நின்று கொண்டிருக்க, “அதான் நோ என்ட்ரி போர்டு போட்டுட்டாங்களே மருமகனே இப்பவாது சொல்லுங்க.” என்றார் அழகு.

இத்தனைக்கும் காரணமானவரை அவன் தாக்க வர, தடுத்தவர்கள் கதையை கேட்டு அழ ஆரம்பித்தார்கள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்