Loading

ஜீவாவும் கயலும் கண்களாலேயே கண்ணாமூச்சி விளையாடி, காதல் செய்ய, அஸ்வினும் அஞ்சலியும் அவர்களின் திருமண நாளை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்திருக்க, பூவரசி தான் கார்த்தியின் நினைவில் தவித்தாள்.

தான் நினைப்பது சரி இல்லை என்று புத்தி சொன்னாலும், மீண்டும் மீண்டும் மனது கார்த்தியிடம் தஞ்சம் அடைவதை அவளால் தடுக்க முடிலவில்லை.

இதுவரை இல்லாத உணர்வாக, மென்மையாக அவளுள் தோன்றிய அவன் மேலான காதலை தாங்க முடியாமல் திணறினாள்.

மேலும், தான் இருக்கும் இடம் என்ன? அவன் இருக்கும் இடம் என்ன…? தன் லட்சியத்திற்காக இவர்கள் வீட்டுப்பெண் போல், என்னை படிக்கவைத்து பார்த்து கொள்கிறார்கள். நான் படிப்பில் தான் கவனத்தை செலுத்த வேண்டும், என்று முயன்று அதில் சிறிது வெற்றியும் கண்டாள்.

கார்த்திக்கோ என்ன நினைக்கிறோம் என்றே தெரியவில்லை. முதல் காதலில் கிடைத்த ஏமாற்றம். அவனை பல வழிகளில் யோசிக்க வைக்க, இரு நாட்களாய் தீவிரமாக சிந்தித்தவன், ஒரு தெளிவான முடிவு ஒன்றை எடுத்தான். அதன் பிறகே மனம் சற்று அமைதியானது போல் இருந்தது.

அன்று சனிக்கிழமையாய் இருக்க, வழக்கம் போல் ஜீவாவை காலையில் எழுந்ததில் இருந்து விரட்டிக் கொண்டே இருந்தாள் கயல்.

அவனோ, “நீ என்னை கண்டுக்கவே மாட்டுற” என்று அவளைப் பிடித்து மடியில் அமர வைக்க,

அவள், பட்டென்று எழுந்து, “முதல்ல எந்திரிங்க. போய் குளிங்க” என மிரட்ட, அவன் வேண்டும் என்றே “முடியாது என்னடி பண்ணுவ…” என்று வீம்பு பிடித்தான்.

கை தான் அவன் முடியை பிடித்து தரதரவென, இழுத்து குளியலறைக்குள் விட்டு, அவளும் உள்ளே வந்தாள்.

அதில் புருவம் உயர்த்தியவன், “ஐ! நீ என்னை குளிக்க வைக்க போறியா ஸ்வீட் ஹார்ட்” என்று கண்ணடிக்க,

“அய்யே ஆசைதான்” என அவனை அமர வைத்து,

“இன்னைக்கு எண்ணெய் தேச்சு குளிக்கணும்” என்று தலையில் எண்ணையை தேய்த்து விட, அவன் கண்ணை மூடி கொண்டு, பின்னால் நின்றிருந்தவளின் கையை தடவியதில், “ஜீவா அமைதியா இருங்க…” என்றவள், அவன் கேட்கவில்லை என்றதும், அவன் முடியை பிடித்து ஆட்டினாள்.

“ஆ வலிக்குதுடி” என்று கத்தியவனிடம்,

“அப்போ அமைதியா இருங்க…” என மிரட்டி விட்டு, “ஒழுங்கா குளிச்சுட்டு வரணும்…” என்று வெளியில் சென்றாள்.

அவனும் குளித்து விட்டு, வெளியில் வர அவன் போட வேண்டிய உடைகள் கட்டிலில் தயாராக இருக்க, அதனை எடுத்து அணிந்து கொண்டவன் சட்டை பட்டனை போடாமல், கயலை அழைத்தான்.

அடுக்களையில் வேலையாக இருந்தவள் அவன் கத்தியதும் “என்ன ஜீவா?” என்று அவசரமாக செல்ல,

அவன், “டிரஸ் எடுத்து வச்சியே… அதை போட்டு விடணும்னு தோணுச்சா” என்று முறைக்க, அதில் சிணுங்கியவள், அவன் அருகில் வந்து, அவன் சட்டை பட்டனை போட்டு விட, அவனோ அவளின் இடையில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அதில் அவள், “ப்ச் ஜீவா சும்மா இருங்க…” என்க,

“உன்னை இவ்ளோ பக்கத்துல வச்சுக்கிட்டு எப்படிடி சும்மா இருக்குறது…” என்று அவள் மேனியை சிவக்க வைக்க, ஒருவழியாய் அவனின் சீண்டல் தீண்டலுடன் பட்டனை போட்டு முடித்தவள், தலையை துவட்டலையா என்று துண்டை எடுத்து அவன் தலையை துவட்டினாள்.

பின், அவனுக்கு ஒரு நீல நிற கோர்ட்டை போட்டு விட்டு, தலையை வாரி விட்டு, வெளியில் செல்லப் போக, அவளை பிடித்து இழுத்தவன்,

“இன்னும் பௌடர் போட்டு திருஷ்டி பொட்டு தாண்டி நீ வைக்கல” என நக்கலடிக்க,

அதில் அவனை முறைத்தவள், “ஏன் நான் இப்படி செய்றது பிடிக்கலையா?” என்றாள் பாவமாக.

மெலிதாக முறுவலித்தவன், “ரொம்ப பிடிச்சுருக்குடி பொண்டாட்டி… என்னை ரொம்ப அடிக்ட் ஆக்குற ஸ்வீட் ஹார்ட்.” என்று சினுங்க, அதில் சிரித்தவள் அவனை சாப்பிட அழைத்தாள்.

“எனக்கு சாப்பாடு நீதான் ஊட்டி விடணும்…” என அவன் கேட்டதும், கயல் புன்னகைத்து, “சரி இருங்க வரேன்” என்று அடுக்களைக்கு சென்று, சிறிது நேரத்தில் தட்டில் சாப்பாட்டுடன் வந்தாள்.

ஜீவா அவளையே ரசனையாய் பார்க்க, முதலில் அவள் செய்த குலாப் ஜாமூனை ஒரு ஸ்பூன் எடுத்து அவனுக்கு ஊட்ட, அவளை விழிகளால் பருகிக்கொண்டே வாங்கியவனின் பார்வையில் வெட்கியவள், தலையை குனிந்து கொண்டு,

“ஜீ ஜீவா ஒழுங்கா சாப்பிடுங்க…” என்று அதட்டினாள் கூச்சத்துடன்.

அவன், “நான் ஒழுங்கா தான் சாப்புடுறேன் ஸ்வீட் ஹார்ட்” என்று ஒன்றும் தெரியாதவன் போல் முகத்தை வைத்து கொள்ள, அதில் அவள், மெலிதாய் சிரித்தாள்.

பின், “ஆமா என்ன இன்னைக்கு ஸ்வீட் லாம்…” என்று ஜீவா கேட்க, அவனை முறைத்தவள், “ம்ம் சும்மா தான் பொழுது போகல அதான் செஞ்சேன்…” என்றதும்,

அவன் “ஓ… ஓகே ஓகே” என்று சாப்பிடுவதில் பிசி ஆக, அவள் வாய்க்குள்ளேயே ஏதோ முணுமுணுத்தாள்.

ஜீவா மர்மமாய் சிரித்து விட்டு, “இன்னைக்கு நிறைய வேலை இருக்கு ஸ்வீட் ஹார்ட். நான் கிளம்புறேன்” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு கிளம்ப,

அவள் ஓடி சென்று “இருங்க இருங்க, இன்னைக்கு சாயந்தரம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துருங்க” என்றாள்.

“ஏன் கயல்…” ஜீவா புரியாமல் கேட்க,

“ப்ச்… ஏன்னு சொன்னாதான் வருவீங்களா” என்று முகத்தை சுருக்கி கேட்க,

அவன், “எதாவது முக்கியமான விஷயமா இருந்தா வருவேன். இல்லைன்னா லேட் ஆகும் தான் கேட்டேன்” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்கவும்,

“ஒரு முக்கியமான விஷயமும் இல்ல… நீங்க போய் வேலையை பாருங்க” என்று முறுக்கிக் கொண்டு கீழே செல்ல,

அஸ்வினும் கார்த்தியும், “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணியாரே” என்று கோரஸ் பாடினர்.

கயல் வெளியில் சிரித்துக் கொண்டு, மனதில், ‘காலைல இருந்து எல்லாரும் விஷ் பண்ணிட்டாங்க. இவருக்கு மட்டும் என் பர்த்டே தெரியவே இல்லை’ என்று திட்டிக்கொண்டு, சற்று வாடிய முகத்துடன் அடுக்களைக்கு செல்ல, அப்போது ஜீவாவும் கீழே வந்தான்.

கார்த்தி, “அண்ணா கயல் பாவம் அண்ணா. இப்படிலாம் விஷ் பண்ணாம கதற விடாதீங்க…” என்று பாவப்பட,
அஸ்வினும் அதை ஆமோதித்தான்.

ஜீவா, “அவளை நான் பார்த்துக்கறேன் நான் சொன்ன பிளான்லாம் ஓகே வா” என்று கேட்க,

அஸ்வின், “ம்ம்… நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம செய்ற பிளான் எல்லாமே பக்கா…” என்று கண்ணடிக்க,

ஜீவா, “அவள் பர்த்டேக்கு எனக்கு எதுக்கு சர்ப்ரைஸ் குடுக்குறா?” என்று யோசனையாய் கேட்க, அவர்களுக்கும் அது தெரியவில்லை.

ஆனால், அவள் செய்ய போகும் சர்ப்ரைஸ் பற்றி மட்டும் ஜீவாவிடம் வாயை திறக்கவே இல்லை. ஏன் என்றால், அவர்களுக்கே அது கொஞ்சம் தான் தெரியும்.

இப்படியே மாலையும் வர, அதற்கிடையில் ஜீவா தான், கயலுக்கு நான்கு முறை போன் செய்து விட்டான்.

அவளும் பிறந்த நாள் நினைவு வந்துதான் போன் செய்கிறான் என்று ஒவ்வொரு முறையும் ஆர்வமாய் எடுக்க, அவனோ உப்பு சப்பில்லாத எதையாவது பேசிவிட்டு போனை வைக்க, அவள் “போடா … உனக்கு இன்னைக்கு எந்த சர்ப்ரைஸும் இல்லை” என்று மனதில் திட்டிக் கொண்டாள்.

கயலின் புலம்பலை உணர்ந்த ஜீவா தான், “அச்சோ சோ ஸ்வீட்டி நீ…” என்று கொஞ்சியபடி சிறிது நேரத்தில், எஸ்டேட்டிற்கு வெளியில் வந்தான்.

அங்கு அவன் கார் முன்னாடி ஒரு ஸ்கூட்டி பார்க் செய்து இருப்பதைக் கண்டு, சுற்றி முற்றி பார்க்க, அங்கு சிவப்பு நிற ஜார்ஜெட் புடவை உடுத்தி, ஒரு பெண் அவனுக்கு முதுகு காட்டி நிற்பதை பார்த்து, “ஹெலோ…” என்று அழைத்தான்

அவள் திரும்பவில்லை என்றதும் “ஹெலோ ரெட் சாரீ” என மீண்டும் அழைத்ததில், அவன் புறம் திரும்பியவள் “என்ன” என்று புருவத்தை உயர்த்தி கேட்க, ஜீவாவுக்கோ மயக்கம் வராத குறைதான்.

அங்கு அவனின் ஸ்வீட் ஹார்ட் தான் அவனை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ இன்று அவள் கண்களில் காதல் பொங்கி வழிந்தது.

அவளோ அவன் பார்வையை கண்டுகொள்ளாமல், “ஹெலோ எதுக்கு என்னை கூப்பிட்டிங்க?” என்று கேட்க,

அவன் குறும்புடன் “உங்க வண்டியை என் கார் முன்னாடி பார்க் பண்ணிருக்கீங்க. வந்து எடுக்குறீங்களா” என்று அவளை முதல் முதலாய் பார்த்தது போல் கேட்க,

அவள், “அதெல்லாம் எடுக்க முடியாது…” என்றாள் தெனாவெட்டாக.

“அப்போ வண்டியை பங்ச்சர் ஆக்கிடுவேன்” என கயல் மிரட்டலாய் கூறியதும்,

அவள், “என் வண்டியும் பங்ச்சர் ஆனா சார் நடை பயணமா தான் வீட்டுக்கு போகணும் எப்படி வசதி?” என்று நக்கலடிக்க, அவன் புரியாமல், காரை பார்த்தான்.

அதில் அனைத்து டயரும் பஞ்சர் ஆகி இருக்க, ‘அடிப்பாவி ஃபர்ஸ்ட் சீன்ல நான் பண்ணுனதை எனக்கே ரிப்பீட் பண்றாளே…’ என்று நினைத்து அவளைப் பார்க்க,

அவள் வண்டியில் ஏறி அமர்ந்து “பின்னாடி உக்காருங்க நான் உங்களை டிராப் பண்றேன்” என்றாள் பெரிய மனதுடன்.

அவன் சிறு சிரிப்புடன், “இல்… இல்ல வேணாம்… நான் பஸ்ல போய்க்கிறேன்” என்று அவளை மாதிரியே பேசிக்காட்ட, அவள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, வேகமாக யாருக்கோ போன் செய்து, ஜீவாவிடம் கொடுக்க, எதிர்முனையில் கார்த்தி தான் பேசினான்.

“அண்ணா, அவள் எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான், அவளை நம்பி போகலாம்…” என்று கேலியாய் கூற, ஜீவா “டேய்” என்றதும்,

“ஐயோ அண்ணா இது உங்க ஆளு எழுதி குடுத்த டயலாக் தான்…” என்று போனை வைக்க, அவள் முன்னாடி தள்ளி அமர்ந்து, ஆக்சிலேட்டரை அதிகப்படுத்தினாள்.

‘உனக்கு இருக்குடி’ என்று செல்லமாக அதட்டியபடி அவள் பின்னே ஏறி அமர, வேண்டும் என்றே அவள் பிரேக் போட்டு கொண்டே வர, அவனோ சொகுசாக அவள் தோளில் சாய்ந்து வந்தான்.

அவனுக்கோ புது அனுபவமாக இருந்தததில் கண்ணை மூடி அந்த பயணத்தை அனுபவித்து கொண்டு வந்தான்.

சிறிது நேரத்தில் கயல், “எங்க போகணும்னு நீங்க சொல்றீங்களா இல்ல அதையும் உங்க தம்பிகிட்ட போன் பண்ணி கேட்டுக்கவா” என்று அவனை போல் பேசிட,

அவனோ சிரித்து விட்டு, சேலை இடுக்கில் தெரியும் அவள் இடையில் கை வைத்து,

“அடியேய் நீ ரொம்ப ஓவரா போறடி…” என்க,

அவள், “ஐயோ ஜீவா கையை எடுங்க… அப்பறம் ரெண்டு பேரும் கீழ தான் விழுகணும்…” என்று வண்டியை ஆட்டியதில்,

“சரி சரி… நீ எங்கவேனாலும் போ ஆனா என்னை டிஸ்டர்ப் பண்ணாத” என்று மீண்டும் அவளின் முதுகில் சாய்ந்து அமர்ந்து வர, அவளும் அமைதியாய் அதனை ரசித்தாள்.

பின் வண்டி நிறுத்தப்பட்டது உணரவும் கண் விழித்து பார்த்த ஜீவா அதிர்ந்து விட்டான்.

கயலை புரியாமல் பார்த்தவன், “இங்க எதுக்கு கயல் வந்துருக்கோம்?” என்று கேட்க,

அவள்., “நம்ம வீட்டுக்கு தான் வந்துருக்கோம்.” என கண்ணடிக்க அவன் மேலும் குழம்பி அந்த வீட்டை பார்த்தான்.

அது அவன் சிறு வயதில் குடும்பமாக இருந்த வீடு தான். அவனின் சந்தோசம், சேட்டை, கவலை, துக்கம், விரக்தி எல்லாமே அந்த வீடு பார்த்திருக்கிறது.

ஆனால் இதனை தாம் எப்போதோ விற்று விட்டோமே என்று யோசித்தவன், கயலை பார்க்க,

அவள் “உள்ள வாங்க ஜீவா…” என்று அழைத்துச் சென்றாள்.

அவனும் உள்ளே செல்ல, அங்கு அவன் சிறு வயதில் அந்த வீட்டை விற்கும் போது எப்படி இருந்ததோ, அதே மாதிரி இருந்ததில் வியந்து, “எப்படி இதெல்லாம் அப்படியே இருக்கு…” என்று கேட்க, அவள் பதில் கூறாமல் அவனை அவனின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கும் அவன் ஆசையாக வரையும் பெயின்டிங் போர்ட், ஆர்வமாக விளையாடும் செஸ் போர்ட், அவனின் கிரிக்கெட் பேட் என அனைத்தும் சிறு வயதில் அவனுக்கு மிகவும் பிடித்ததாய் இருக்க, அதனை எல்லாம் ஆசையுடன் தொட்டுப் பார்த்தான்.

அவனுக்கு படிப்பைத் தவிர்த்து இந்த மாதிரி நிறைய நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள பிடிக்கும். அதனை ஆர்வத்துடனும் செய்வான்.

ஆனால் சிறு வயதிலேயே அவன் ஏற்றுக்கொண்ட குடும்ப சுமை, அவனுக்கு இதற்கெல்லாம் நேரம் தரவில்லை. அவன் படிப்பை முடித்ததே பெரும் அதிசயம் தான். இதில் இதனை எல்லாம் மறந்து விட்டு, கடிவாளம் கட்டிய குதிரை போல் தான் ஓடிக்கொண்டிருந்தான்.

இப்போது இதை எல்லாம் பார்க்கும் போது மீண்டும் அந்த வயதிற்கே செல்ல வேண்டும் போல் இருந்தது.

கயல் அவனது பாவனையை படித்து, “ஜீவா நீங்க சூப்பரா செஸ் விளையாடுவீங்களாமே. நம்ம ரெண்டு பேரும் விளையாடலாமா?” என்று கேட்க,

அவன், “அது நான் சின்ன வயசுல…” என ஆரம்பிக்க அவள் அதனை காதில் வாங்காமல், பிடித்து, அமர வைத்து, செஸ் விளையாட்டை ஆரம்பிக்க, அவனும் அவனின் உற்சாகத்தை மீட்டுக் கொண்டு, அவளுடன் விளையாடி, செக் வைத்தான்.

அவள் “இதெல்லாம் செல்லாது… நீங்க எனக்கு விளையாட தெரியாததுனால ஏமாத்துறீங்க…” என்று பழிப்புக் காட்ட,

அவன் சிரித்து விட்டு, “கயல் மறுபடியும் சின்ன வயசுக்கு போன மாதிரி இருக்கு… இதெல்லாம் எப்படி கயல்…?” என்று தவிப்புடன்கேட்க,

கயல் மெதுவாக “நீங்க சின்ன வயசுல இழந்தது எல்லாம் என்னால குடுக்க முடியுமான்னு தெரியல. ஆனால் அந்த நினைவுகளை கொடுக்கணும்னு நினைச்சேன்.

அதான் இந்த வீட்டை அஸ்வின் கார்த்தியை வச்சு, அவசர அவசரமா வாங்கி, உங்க சின்ன வயசு போட்டோஸ்ல பார்த்து, இந்த வீட்டை செட் பண்ணேன்.” என்றதும்,

அவன் அவளின் கூற்றில் உருகி, “ஓ அதான் உங்க எல்லாரோட அகௌண்ட்ல இருந்து அவ்ளோ பணம் எடுத்துருந்தீங்களா…” என்றான் குறும்பாக.

அவள் ம்ம் என்று மேலும் கீழும் தலையாட்டி, “வெறும் அட்வான்ஸ் மட்டும் தான் குடுத்துருக்கு. ரெஜிஸ்ட்ரேஷன்க்கு காசு நீங்கதான் குடுக்கணும். இந்த வீட்டு ஓனர் அஸ்வின்க்கு தெரிஞ்சனால இதெல்லாம் பண்ண ஒத்துக்கிட்டாரு” என்றதும்,

அவன் சிரித்தபடி, அவளை நெருங்கி, “தேங்க்ஸ் ஸ்வீட் ஹார்ட்.உண்மையிலேயே இன்னைக்கு இல்ல கொஞ்ச நாளாவே நான் சின்ன வயசுல இழந்தது எல்லாம் எனக்கு நிறையவே கிடைக்குது உங்கிட்ட இருந்து. என்னை குழந்தை மாதிரி பாத்துக்குற. குளிப்பாட்டி விடுற, ஊட்டிவிடுற, நான் பண்ற சேட்டை எல்லாம் பொறுத்துக்குற… ஏண்டி” என்று மனதில் நிறைந்த மகிழ்வுடன் கேட்க,

அவள் “பிகாஸ் ஐ லவ் யூ ஜீவா…” என்றவள்,

“என்னை அம்மாவா நினைச்சுருக்குற உங்களுக்கு நான் அம்மாவா இருக்கணும்னு நினைச்சேன். அதான், இதெல்லாம் பண்ணுனேன். இனிமேலும் பண்ணுவேன். தாய்க்கு பின் தாரம்னு சொல்லுவாங்க. ஆனால், நான் ரெண்டுமாவும் இருக்கணும்னு நினைக்கிறேன். நீங்க எதுக்குமே ஏங்க கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று அவனின் கண்ணை தீர்க்கமாக பார்த்து சொல்ல சொல்ல, அவன் தான் திகைத்து நின்றான்.

காதலை கண்மூடித்தனமாக இப்படி கூட காட்ட இயலுமா, என்று வியந்தவன், அன்பை கொடுப்பதையும் பெறுவதையும் அவளிடமே கற்றுக்கொண்டான்.

அவளின் காதலின் ஆழத்தில் திணறியவன் அவளை இறுக்கி அணைத்து, “எனக்கு… எனக்கு… காதலை எல்லாம் காட்ட தெரியலடி உன்னை மாதிரி. உன்மேல இருக்குற காதலை காட்டணும்னு நினைக்கும் போதெல்லாம் அது கோபமா வெளிய வந்து, உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சு தான் வச்சுச்சு. இப்போ கூட நான்… நான் என் காதலை சரியா உங்கட்ட குடுக்குறேனான்னு எனக்கு தெரியல. பட் ஐ லவ் யூ டி… இட் மீன்ஸ் அ லாட்..” என்று அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டவன், அவள் நெற்றியில் முட்டி, “லவ் யூ ஸ்வீட் ஹார்ட்” என்றான் ஆழமாக.

அவள் “உங்க காதலை நீங்க கோபமாவே காட்டுங்க ஜீவா, அதான் நல்லாருக்கு…” என்று குறும்பாய் சொல்ல,

“ம்ம்ஹும்… கோபமா காட்டவா ஸ்வீட் ஹார்ட்” என்று ஆழமான குரலில் கேட்டு சுவற்றோடு நெருக்கி,

“இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன்…” என சிரிப்புடன் கூறி, கோபத்தை மென்மையாக அவளின் இதழில் காட்டியவன், சட்டென்று அவளை விட்டு தள்ளி மணியை பார்த்து, “ஐயோ டைம் ஆகிடுச்சு வா வா” என்று இழுத்து கொண்டு வெளியில் வந்தான்.

அவளும் “என்ன ஆச்சு இவருக்கு” என்று புரியாமல் அவனுடன் சென்றாள்.

இருவரும் நேராக அவர்கள் வீட்டிற்கு செல்ல, அங்கு அவளின் பெற்றோர் இருப்பதைக் கண்டு, விழி விரித்து, ஜீவாவைப் பார்க்க அவன் காற்றிலேயே உதட்டைக் குவித்து முத்தம் கொடுத்தான்.

அதில் சிவந்தவள், ஓடி சென்று அவர்களிடம் பேச, அவர்களுக்கும் அப்போது தான் கார்த்தி ஜீவாவின் தம்பி என்றே தெரிந்தது.

பின் மேலோட்டமாக அவர்களிடம் விஷயத்தை சொல்லி விட்டு, “என்ன சொல்லாம கொள்ளாம வந்துருக்கீங்க” என்று கேட்க, அவர்கள் “உன் பிறந்தநாளை கொண்டாட மாப்பிளை தான் வர சொன்னாரு…” என்றதும் அவள் ஜீவாவை பார்த்தாள்.

‘வில்லன்… எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு தான் நம்மகிட்ட விளையாடிருக்கான்’ என்று செல்லமாக மனதில் திட்டிட, அப்போதும் அவளுக்கு விஷ் செய்யவே இல்லை.

அங்கு கேக்கை வரவைத்து, அஸ்வினும், கார்த்தியும் ஆர்ப்பாட்டம் செய்ய, உடன் பூவரசியும் அஞ்சலியும் அவளை வாழ்த்தினர்.

கார்த்தி “அண்ணியாரே இதெல்லாம் அண்ணாவோட செட்டப் தான்” என்று கேலி செய்ய,

அஸ்வின், “ஹம்ம் ரெண்டு பேருக்கும் அசிஸ்டன்ட் வேலை பார்க்குறது எவ்ளோ கஷ்டமா இருக்கு” என்று நக்கலடித்தான்.

பின், கேக்கை கட் செய்து, முதலில் ஜீவாவிற்கு கொடுக்க, அவன் அதனை வாங்காமல் அவள் கையில் இருந்த கேக்கை அவளுக்கு ஊட்டி விட, அதில் அவள் முறைத்தாள்.

சரியாக அந்த நேரம் விளக்கு எல்லாம் அணைந்து விட, அந்த சமயத்தை உபயோகப்படுத்தி, அவள் இதழில் இருந்த கேக்கை அவன் இதழ் கொண்டு எடுத்து,

“ஹாப்பி பர்த்டே ஸ்வீட் ஹார்ட்” என்று என்றவன், “சரியா நீ 7 மணிக்கு தான் பிறந்த… சோ இப்போதான் உன் பர்த்டே ஸ்டார்ட் ஆகுது” என குறும்பாய் சொல்லி விலகும் போது சரியாக விளக்கும் எரிந்தது.

அவன் ஒன்றும் தெரியாதவன் போல் நகன்று நின்று விட, கயல் தான் அவனின் இந்த அதிரடி வாழ்த்தில் செவ்வானமாய் சிவந்து நின்றாள்.

இதில் கார்த்தி வேறு “எப்படி நம்ம டைமிங்கு” என்று காலரை தூக்கி விட, கயலுக்கோ ‘ஐயோ எல்லாமே இந்த வில்லன் பிளான் தானா. அதுவும் இவனுங்ககிட்டயா இதை சொல்லணும்’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

பின், அவளை தனியாக அழைத்து சென்று ஜீவா நிறைய பரிசுப்பொருட்களை கொடுத்து, ஒவ்வொரு பரிசுக்கும் ஒரு முத்தத்தை பரிசாக பெற்று கொள்ள,

“ஆமா நான் கேட்கணும்னு நினைச்சேன். இன்னைக்கு உனக்கு தான பர்த்டே. எனக்கு ஏன் சர்ப்ரைஸ் குடுத்த” என்று புரியாமல் கேட்க, அவளோ அவள் கட்டி இருந்த புடவையையும் அவனின் உடையையும் கண்ணாலேயே காட்டினாள்.

அப்போதும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால், நம்ம ஏதோ அவளை கடுப்பேத்துகிறோம் என்று மட்டும் தெளிவாக புரிந்தது அவனுக்கு.

“ஸ்வீட் ஹார்ட் நான் பாவம் டி. நீயே சொல்லிடேன்” என்று விட,

அவள் தலையில் அடித்து “மூணு மாசத்துக்கு முன்னாடி இந்த நாள்ல தான் நான் உங்களை முதன் முதல்ல பார்த்தேன்… அதான் அந்த நாளை செலெப்ரெட் பண்ண சர்ப்ரைஸ் குடுத்தேன்…” என்று முறைக்க, அவனுக்கு அப்போது தான், அந்த நாளில் இருவரும் இதே காஸ்டியூமில் இருந்ததே நினைவு வந்தது.

“ஸ்ஸ் ஆமால்ல…” என்று அசடு வழிய, “ரொம்ப வழியுது” என்றாள் கேலியாக.

பிறகு வெகு நேரம் அவளை கண்ணிலேயே காணவில்லை. இந்த அஸ்வினும், கார்த்தியும் வேறு அவனை வெளியில் அழைத்துச் சென்று, ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஒரு மணி நேரமாய் பேசி வெறியாக்கினர்.

அதில் அவனே பொறுமை இழந்து, “டேய், ஏண்டா இப்படி டார்ச்சர் பண்றீங்க வாங்கடா வீட்டுக்கு போகலாம்” என்று மிரட்டி தான் வீட்டிற்கு வரவேண்டியதாக போயிற்று.

வீட்டிற்கு வந்ததும், அவன் விழிகள் கயலைத் தேடிட, கயலின் பெற்றோரும் ஊருக்கு கிளம்பி இருந்தனர்.

அறைக்கு செல்லப் போனவனை பூவரசியும் அஞ்சலியும் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று வம்படியாக அமர வைக்க,

அவனோ ‘இன்னைக்குன்னு பார்த்து எல்லாம் ரொம்ப பாசமா இருக்குதுங்க’ என்று நொந்து, “கயல் எங்க” என்று கேட்க,

பூவரசி “அக்கா இப்போ தான் சாப்டாங்க. அவங்க பிரெண்ட்ஸ் கூட போன்ல பேசுறாங்க” என்று ஏதோ உளற அவனும், ஏனோ தானோ வென்று சாப்பிட்டு விட்டு, அறைக்கு சென்றவன் திகைத்து நின்றான்.

மலர்களால் மஞ்சம் நிறைந்திருக்க, மெழுகுவர்த்திகள் ஆங்காங்கே தலைவன் வரவுக்காக உருகிக் கொண்டிருக்க, மெல்லிய ரோஜா மலர் வாசம் அறை முழுதும் அதன் தலைவனின் வாசம் தேட, அந்த அலங்கரிப்பில் வியந்து நின்றவன் கயலை தேடினான்.

அப்போது தான் பூத்த மலராய் மெல்லிய காட்டன் புடவையில் அறையினுள் நுழைந்தவள், ஜீவாவைப் பார்க்க முடியாமல் விழி தாழ்த்த, அவள் அருகில் வந்த ஜீவா, அவள் முகத்தை நிமிர்த்தி,

“இதெல்லாம் நீ பண்ணுனியா ஸ்வீட் ஹார்ட்…? உனக்கு ஓகேவா டி..?.” என்று ஆச்சர்யமாய் கேட்க, அவள் வெட்க சிரிப்புடன் ம்ம் என்று அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

அவனுக்கோ மனதெங்கும் ஒரே பரவசமாக இருந்தது. பகலில் தாயாகவும் இரவில் சேயாகவும் தன்னை ஆட்டுவிப்பவளை ஆசை தீர அணைத்து முத்தங்களை தெளித்தவன், மீண்டும்,

“உனக்கு என்மேல கோபம்லாம் இல்லைல ஸ்வீட் ஹார்ட். இன்னும் உன் மனசுல எதாவது உறுத்திகிட்டு இருக்கா” என்று தயக்கமாக கேட்டான்.

அவளை தன்னவளாக ஆக்கும் போது அவள் மனதில் எந்த வருத்தங்களும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன்.

அவள், மெல்லிய புன்னகையுடன், “ம்ம் கோபம் வருத்தம்லாம் இல்ல ஜீவா. ஆனால் நிறைய கேள்வி தான் இருக்கு…” என்று நிறுத்த,

அவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவளையும் மடியில் அமர வைத்து, “சரி என்ன கேட்கணுமோ கேளு. பட் பழசை எல்லாம் பேசுறது இதான் லாஸ்ட். ஓகே வா?” என்க அவள் ம்ம் என்று உருட்டினாள்.

“ஃபர்ஸ்ட் கேள்வி, உங்களை எல்லாரும் வாசுன்னு தான் கூப்பிட்றாங்க. அப்பறம் ஏன் உங்க ஃப்ரெண்ட் அந்த மேரேஜ் ஃபங்கஷன்ல உங்களை ஜீவான்னு சொன்னாரு.” என்று கேட்க,

அவனோ சிரித்தால் மலை ஏறிடுவாளோ என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,

“ஃபார் யுவர் கைன்ட்லி இன்ஃபர்மேஷன். அன்னைக்கு அவன் என் ஃபுல் நேம் தான் சொன்னான். மேடம் தான் என்னை சைட் அடிக்கிறதுல பிசி ஆகி, பாதி பேரை மட்டும் கேட்டீங்க” என்று அடக்கமாக விளக்கம் கொடுக்க, பெண்ணவள் ஐயோ என முகத்தை மூடி கொண்டாள்.

அதில் புன்னகைத்தவன், “ம்ம் நெக்ஸ்ட்” என்று கேட்க,

அவள் யோசித்து விட்டு “ம்ம்…கோயம்பத்தூர் ஆபிஸ்ல அகௌண்ட்ஸ் தப்பா இருக்குனு உங்ககிட்ட வந்து சொன்னேன்ல. அப்போ ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்தீங்க. அதே மாதிரி அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கும் போதும் பார்த்தீங்கள்ல” என்று வினவினாள்.

ஜீவா தான், திருதிருவென முழித்து விட்டு, “அது அந்த அகௌண்ட்ஸ் நான் தான் வேணும்னே பண்ண சொன்னேன். உன் மேல பழி போட்டு…” என்று ஆரம்பித்தவனை பார்வையால் சுட்டெரித்தவளிடம்,

“ஹே அது அப்போ டி. எனக்கு உன்னை பத்தி எதுவும் தெரியலைல, அப்பறம், நீ பணம் முக்கியமே இல்லைன்ற மாதிரி நான் பில் குடுக்குறேன்னு சொன்னதையும் வேணாம்னு சொல்லவும், என்கிட்ட நடிக்கிறியோன்னு பார்த்தேன்” என்று மெதுவாய் முடித்தவனை உம்மென்று பார்த்தாள்.

“ஸ்வீட் ஹார்ட்… அது அப்போ டி நான் தான் உன்னை புருஞ்சுக்காம அப்படி நினைச்சுட்டேன் ஐ ஆம் சாரி கயல்…” என கண்ணை சுருக்கி கூறியதும், அவளும் சமாதானமாகி “சரி விடுங்க” என்று இருவரும் பழையதை அலசி ஆராய்ந்தனர்.

அவனோ இவளை பேச விட்டது தப்பா போச்சு… விட்டா நைட்டு முழுக்க கேள்வியா கேட்பா போல என்று நொந்து விட்டு, அவள் கையை வருடியபடி, “கயல்” என அழைக்க,

அவளோ அவனின் குரல் மாற்றத்தை உணராமல், “அப்பறம் அந்த காட்டுல…” என்று ஆரம்பிக்க,

“அடியேய் போதும் டி… நான் பாவம்” என்று சோகமாய் கூற, அவள் வெட்கத்துடன் சிரித்து விட்டு, “ஒரே ஒரு கேள்வி ப்ளீஸ்” என்றாள்.

“கேட்டுத்தொலை” என்று கடுப்படித்தவனிடம், அவளும் “அன்னைக்கு காட்டுல, எனக்கு காய்ச்சல் வந்த மறுநாள், கார்த்தி நம்ம குடிலுக்கு வந்துருந்தான்ல. அப்போ அவன் கிட்ட பேசிட்டு திரும்பும்போது நீங்க ஏன் என்னை முறைச்சீங்க” என்று கேட்க,

அவனும் அதனை நினைவுபடுத்தி, “பின்ன, உனக்கு என்னை விட உன் பிரெண்டு முக்கியமாடி. அதான் லைட் ஆ பொறாமைல முறைச்சேன்” என்று சிறுவன் போல் புகார் செய்ய, அவள் கலகலவென சிரித்தாள்.

அதனை ரசித்தவன், சிரிக்கும் உதட்டை பிடிக்கப் போக, அவனை தள்ளி விட்டவள், மேலும் ஏதோ பேச போனதில் “போடி இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் கேன்செல்” என்று அவளை மடியில் இருந்து எழுப்பி விட்டு, அவனும் எழும்ப,

கயல் தான், “ப்ச்… ம்ம்ஹும் நீங்க வேஸ்ட். இவ்ளோ நேரமா நானும் உங்களை கோபப்படுத்தலாம்னு ட்ரை பண்ணி மொக்கை போட்டா நீங்க என்ன இப்படி சேன்ஜ் ஆகிட்டிங்க…” என்று சலிக்க,

“அடிப்பாவி இவ்ளோ நேரம் வேணும்னேதான் பேசுனியா? உன்ன…” என்று அடிக்கத் துரத்த, அவள் அவனின் கைகளில் சிக்காமல் ஓடினாள்.

நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என்
பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ
முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்

என் கண்ணீா் என்
தண்ணீா் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே என்
வாழ்வும் என் சாவும் உன்
கண்ணில் அசைவிலே

பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே

வெகு நேரம் அவனின் கையில் சிக்காமல் போக்கு காட்டியவளை, அவனின் கைச்சிறைக்குள் கொண்டு வந்து, “மாட்டுனியா?” என்று மிதப்புடன் கேட்டவனின் இதழ்கள், அவள் முகம் எங்கும் ஊர்வலம் சென்று விட்டு கழுத்தில் பயணிக்க அதில் மங்கையவள் மயங்கி நின்றாள்.

அவளின் மயக்கத்தை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி, அவளை கட்டிலில் கிடத்தியவன், அவனின் முரட்டுத்தனத்தை விடுத்து, பூவினும் மெலிதாய் அவளை கையாண்டு, அவளின் நேசத்தையே தன் சுவாசமாக்கி, அவளிடம் தன் தேடலை தொடங்கி இருக்க, கயல்விழியாள் அவள் ஜீவனில் கலந்தவனின் ஆக்கிரமைப்பில் அவனுள் மொத்தமாக அடங்கினாள்.

நேசம் தொடரும்…
– மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
52
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment