Loading

விதுவும், அஜயும் மீண்டும் ஜன்னல் வழியே வெளியில் குதித்து ஓட, துருவ் “டேய் டேய்… நில்லுங்கடா” என்று கத்தியதை கூட காதில் வாங்கவில்லை.

உத்ரா, வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.

துருவ் “இவனுங்களை எல்லாம்  எப்படி நீ கூட வச்சுருக்க” என்று கேட்க, அவள் மேலும் சிரிக்க ஆரம்பித்தாள்.

வெளியில் மீண்டும் சத்தம் கேட்க, உத்ராவின் சிரிப்பை சற்று ரசித்து விட்டு, பின், ஷ்ஷ் என்று அவளை  அமைதியாய் இருக்க சொல்லி விட்டு, வெளியில் சென்று பார்த்தான்.

உத்ராவும், யாரென பார்க்க, அங்கு அர்ஜுன் தான் நின்று கொண்டிருந்தான்.

உத்ரா, “அடக்கடவுளே இவனை பார்த்தா அவனுங்க பயந்து ஓடுனானுங்க” என்று கலகலவென சிரித்தாள்.

அர்ஜுன், உத்ராவை அங்கு எதிர்பார்க்காமல், பேந்த பேந்த முழித்து, “இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்க,

அவள் “இதென்ன கேள்வி நான் என் லவரை பார்க்க வந்தேன்…” என்று சொன்னதும், அர்ஜுன் அவளை வியப்பாய் பார்க்க, துருவ் அவளை முறைத்தான்.

பின், உத்ராவிடம், “நீ எதுக்கு இங்க வந்த.?” என்று கேட்க,

“என்னை எதுக்கு கேக்குறீங்க. அவன் எதுக்கு வந்தான்னு அவனை கேளுங்க…” என்று சிலுப்பிக் கொள்ள,

துருவ் “நான் தான் அவனை வரச்சொன்னேன்…” என்றதும், அவள் குழம்பி “எதுக்கு” என்று கேட்டாள்.

அர்ஜுன், “அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. பர்சனல்” என்று சொன்னதும் தான் தாமதம்.

அவனை அடி அடியென அடித்து “அதென்னடா எனக்கு தெரியாம உனக்கு மட்டும் பெர்சனல். இந்த ஆஸ்திரேலியாகாரன் கூட சேர்ந்து ஓவரா சீன் போடுறியா. நானும் பார்த்துகிட்டே இருக்கேன்… ரெண்டு பெரும் ரொம்ப டூ மச் ஆ போறீங்க. இனிமே இவன் கூட உன்னை பார்த்தேன்” என்று அவனை மிரட்டினாள்.

அர்ஜுனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“உனக்கு ஏன் இவ்ளோ பொறாமை?” என்று கேட்க, அவள் முகத்தை சுருக்கி கொண்டு, “எனக்கு என்ன பொறாமை. ரெண்டு பேரும் என்னமோ பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு,

துருவிடம், நான் ரிஷியை பத்தி பேச தான் வந்தேன். என்றாள் அவனைப் பாராமல்.

துருவ் என்ன என்று பார்க்க, அவள், “அவனை பெயில்ல எடுக்க லாயர் கிட்ட சொன்னேன். ஆனால் அவன் எதுக்குமே ஒத்து வரமாட்டுறான். இவனை என்ன பன்றதுன்னு தெரியல. நீங்க சொன்னா அவன் கேட்பான்.” என்று துருவ் முகத்தை பார்க்க,

அவன் “நான் பேசியிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா… நான் திட்டியும் பார்த்துட்டேன். கெஞ்சியும் பார்த்துட்டேன். ஆனால் அவன் சொன்னதையே தான் சொல்றான். இங்க வந்தாலும், எனக்கு குற்ற உணர்ச்சியா தான் இருக்கும்… எனக்கு தனிமை தான் வேணும். இனிமே என்னை யாரும் பார்க்கவராதீங்கன்னு சொல்றான்..” என்றான் சலிப்பாக.

உத்ராவும் பெருமூச்சு விட்டு, “சரி. கொஞ்ச நாள் போகட்டும். அவன் மனசு மாறுதான்னு பார்க்கலாம்.”. என்று விட்டு,

“நான் கிளம்புறேன்” என்று சொல்ல, அர்ஜுன், “இரு நானும் வரேன் சேர்ந்து போகலாம்.” என்றான்.

அவள் அவனை முறைத்து விட்டு, “தேவையில்லை… உன் ஃப்ரெண்ட் கூட கொஞ்சி குழாவிட்டு நீ பொறுமையா வா. நான் எதுக்கு உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆ.”என்று முகத்தை உம்மென்று வைக்க,

அர்ஜுன், “ஹே லூசு. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். உனக்கு தெரியாம நான் என்ன பண்ண போறேன்…” என்று அவளை சமாதானப்படுத்த, அவள் துருவை தான் முறைத்தாள்.

துருவ் அவளை அமைதியாய் பார்க்க, அர்ஜுன் அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

அவள் அதனை எல்லாம் காதில் வாங்கவே இல்லை.

துருவ் “அர்ஜுன் நீ கிளம்பு.” என்று சொல்ல, அவன் முழித்துக் கொண்டு நின்றான். துருவ் நான் பார்த்துக்கறேன் என்று கண்ணைக் காட்டியதும் தான் கிளம்பினான்.

அர்ஜுன் கிளம்பியதும், உத்ரா அருகில் வந்த துருவ் “இப்போ என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்க,

அவள், “உனக்கு நான் மட்டும் தேவை இல்லை. என் கிட்ட மட்டும் பேசமாட்ட. எதுவும் சொல்லமாட்ட. ஆனால் என் அத்தை பசங்க, அண்ணனுங்ககிட்ட மட்டும் எல்லாம் சொல்லுவ. என் மூலமா தான உனக்கு அவனுங்களை தெரியும். அதென்ன என்னை மட்டும் அவாய்ட் பண்றது.” என்று சற்று பிசிறிய குரலிலே கேட்டாள்.

அதில் பதறியவன், “என்ன உதி இது…” என்று அவள் தோளைத் தொட வர, அதனை தட்டி விட்டு விட்டு, வெளியில் சென்றாள்.

உண்மையில் அவளுக்கு, துருவ் அவளை அவாய்ட் செய்வதும், மற்றவர்கள் அதிலும் அர்ஜுன், எதற்கெடுத்தாலும் துருவிடமே பேசுவதும் அவளுக்கு எல்லாரிடம் இருந்து அவளை தனிமைபடுத்துவது போல் இருந்தது.

துருவ் அவளிடமும் சாதாரணமாய் பேசி இருந்தால், அவளுக்கு ஒன்றும் தெரிந்து இருக்காது. ஆனால், இப்பொழுது, எல்லார் மீதும் கோபம் வந்தது.

காரில் வந்ததை கூட மறந்து விட்டு, அவள் பாட்டிற்கு ரோட்டில் நடக்க,  அங்கு அஜயும், விதுவும் மறுபடியும் துருவ் வீட்டிற்கு போகலாமா? அடிவாங்க உடம்பில் தெம்பு இருக்கிறதா? என்று யோசித்து கொண்டு நின்றிருந்தவர்கள் இவள் வருவதைக் கண்டதும், காரை எடுத்து கொண்டு, அவளை நிறுத்தினர்.

அஜய், “உதி ஏன் நடந்து போற, எதுவும் பிரச்சனை இல்லைல?” என்று கேட்க,

“அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க. போய் அவன் கிட்டயே கேளுங்க.” என்றாள் கோபமாக.

அஜய், “என்னாச்சு உதி… அவன்கூட சண்டை போட்டியா என்ன?” என்று கேட்க, இதில் விது வேறு, “ஏன் உதி… இப்படி சுவரேறி குதிச்சு அவனை கஷ்டப்படுத்திட்டு வர்ற” என்று மாறி மாறி கேட்டவர்களுக்கு உண்மையில், அவள் அவனிடம் காதலிக்கிறேன் என்று சொன்னது தெரியவில்லை. அவள் தான் இன்னும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் என்றே தான் நினைத்தனர்.

உத்ரா, கடுங்கோபத்துடன், “ஆமாடா. எனக்கு வேற வேலை இல்ல பாரு. நான் தான் அவனை கஷ்டப்படுத்துறேன். அவன் கூடவே எல்லாரும் போய்டுங்க”என்று திரும்பி நடக்க, எப்போதும் இவளிடம் இப்படி ஒரு குரலை இதுவரை கேட்காததால், இருவரும் பதறி,  அவளிடம்  செல்ல,

அவளோ “என் பின்னாடி வந்தீங்க அப்பறம் என் அண்ணன் யாரையும் பார்க்கமாட்டேன்னு ஜெயில்ல இருக்குற மாதிரி. நானும் எங்கயாவது போய்டுவேன்…” என்று மிரட்டியதில் இருவரும் அதிர்ந்தே விட்டனர்.

அவர்கள் துருவிடம் விஷயத்தை சொல்ல, அவன் காரில் அவளை வழிமறித்தான்.

அவள் அங்கிருந்து தள்ளி நடக்க, மீண்டும் வந்து வழிமறித்தான்.

அவள், “ப்ச் என்ன வேணும் உங்களுக்கு..” என்று கோபமாக கேட்க,

“இப்போ என்ன உனக்கு நான் இங்க இருந்து, எல்லாரும் என்கிட்டே பேசுறது தான பிரச்சனை…” என்றவனை உறுத்து விழித்தவள்,

அவன் அருகில் வந்து, “என்னம்மோ என் எண்ணத்துல கூட நீ தான் இருக்கன்னு அன்னைக்கு வசனம் பேசுன… இவ்ளோ தான் நீ என்னை புருஞ்சுக்கிட்டது.

இப்போ இல்லை… என்னைக்கு நான் உன்னை மறந்தேனோ அன்னைல இருந்து நீ என்னை தப்பாதான் புருஞ்சுருக்க.

ஆமாடா நான் உன்னை தப்பா தான் நினைச்சேன். எனக்கு நீ யாருனு கூட தெரியாது. உன்னை பத்தி நான் கேள்விப்பட்ட விஷயமும் நல்லதா இல்ல. என்கிட்ட நீ நடந்துகிட்ட முறையும் சரி இல்லை. அப்போ நான் உன்னை எப்படி நினைக்கிறது ஹான்…” என்று கேள்வியாய் கேட்டவள், அவன் சட்டையை பிடித்தாள்.

“என்னம்மோ மறந்துட்டேன் மறந்துட்டேன்னு சொல்ற. எதைடா மறந்தேன்…” என்று தேம்பியவள்,

அவள் அணிந்திருந்த செயினை காட்டி”, இதோ நீ போட்டுவிட்ருக்கியே இந்த செயினை மறந்தேனா. நீ  சொல்லி குடுத்த பிசினெஸ மறந்தேனா. என்னையைவே அறியாமல், எனக்குள்ள வர்ற உன் ஆட்டிடியூட மறந்தேனா. சொல்லு நான் என்ன மறந்தேன்…?” என்று கத்தினாள்.

துருவ் செய்வதறியாமல் திகைத்து நிற்க,

அவள்,” இதான் பிரச்சனைன்னு நீ இத்தனை வருஷமா கஷ்டப்பட்டுருக்க. உனக்கு என்னை தெரிஞ்சுருந்தும், உன்னால எனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு என்னை விட்டு தள்ளி இருந்த. ஆனால் நான்… என்ன பிரச்னைன்னே தெரியாம, என் மனசு யாரை தேடுதுன்னு தெரியாம, எவ்வளவோ சாதிச்சும், எதுக்கு வெறுமையா உணருறோம்னே தெரியாம, எத்தனை நாள் பைத்தியக்கார மாதிரி, ரூம் குள்ள அடைஞ்சு கிடந்துருக்கேன் தெரியுமா…

எத்தனை நாள் ஏன் தூங்காம இருக்கோம்னே தெரியாம… மனசுல நிம்மதி இல்லாம விடிய விடிய முழிச்சு இருந்துருக்கேன் தெரியுமா.

நான் நல்லா தூங்கி 3 வருஷம் ஆகுது. அன்னைக்கு நான் உன்னை இங்க முதல் தடவை பார்த்தேனே அப்போ தான் எனக்கே தெரியாம மனசுல ஒரு நிம்மதி.

ஏதோ பல நாள் இழந்தது திரும்ப கிடைச்ச மாதிரி ஒரு திருப்தி. அது ஏன்னு எனக்கு புரியல.

ஆனால் அன்னைக்கு நான் நிம்மதியா தூங்குனேன்.அதுக்கு அப்பறமும்… உன்கிட்ட ஏதோ ஒன்னு என்னை உன் பக்கம் இழுக்க தான் செஞ்சுச்சு.

ஒருவேளை நீ என்கிட்ட நல்ல மாதிரியா நடந்துருந்தா, நல்ல சிச்சுவேஷன்ல உன்னை பார்த்திருந்தா, அப்போவே உன்மேல இருக்குற உணர்வை உணர்ந்துருப்பேனோ என்னவோ…

ஆனால் சத்தியமா சொல்றேன். நான் சொன்ன எதுவும் மனசுல இருந்து சொல்லல. உன்னை அந்த மாதிரி திட்டிட்டு நான் நாலு நாள் தூங்கவே இல்ல. எதுக்குமே எனக்கு காரணமும் தெரியல.

எனக்கு என்னடா தெரியும். நான் உன்னை மறந்தேன்னு… எனக்கு என்ன தெரியும் நான் உன்னை லவ் பண்ணிருப்பேன்னு…”

“ஆனால்… என் மூளை தானடா உன்னை மறந்துச்சு. என் மனசும், என்கிட்ட நீ விட்டுட்டு போன உன்னோட உணர்வுகளும் என்கிட்ட அப்டியே தான இருந்துச்சு.

உன்னை என்னால அடையாளம் தெரிஞ்சுக்க முடில ஆனால் உணர முடிஞ்சுதே… உன்னை உணரமாட்டேன்னு நினைச்சு தான நீ என்னை விட்டுட்டு போன.

அப்போ என் காதல் உனக்கு அவ்ளோ ஈஸியா போச்சாடா.

நீ பழசை பத்தி சொன்ன போதும் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. இப்பவும் இல்லை.

ஆனால் என் மனசு உன்னை முழுசா நம்புச்சுடா. உன்னை தப்பா நினைச்சுருந்தா எப்படிடா நான் நம்புவேன்.

ஒரு தடவையாவது நீ சொல்றது உண்மையானு உன்கிட்ட கேட்டிருக்க மாட்டேன்.  ஆனால் நான் கேட்கலையே…” என்று சோர்வுடன் சொன்னவள், கண்ணில் வழிந்த நீரை அழுந்த துடைத்து கொண்டு,

“அப்போவே நான் உன்னை லவ் பண்றேன். நான் உன்னை நம்புறேன்னு சொல்லிருப்பேன்… ஆனால் எனக்கு உன்மேல கோபம்.

அப்போ கூட நீ நான் வேணும்னு நினைச்சு வரல. என்மேல உரிமை எடுத்துக்க வரல. எனக்கு உன் காதலை புரிய வச்சு, எனக்கு ஞாபகப்படுத்தணும்னு நீ வரல.

சண்டை போட்டுகிட்டாவது என் கூட இருன்னு தான நீ என்கிட்டே அப்போ ப்ரொபோஸ் பண்ணுன. அது இப்போ என்ன ஆச்சு.

எங்க நான் செத்து கித்து போயிருவேனோன்னு நினைச்சு தான் இப்போகூட வந்துருக்க… மூணு வருஷமா நான் காரணமே தெரியாம செத்துக்கிட்டு தானடா இருந்தேன்.

நீ என்கூட அப்போ இருந்துருக்கணும்லடா. உன்னை நம்பமாட்டேனு… உன்னை திட்டிருந்தாலும், அடிச்சுருந்தாலும் நீ எப்படிடா என்னை விட்டு போயிருந்துருக்கலாம்.

அப்போ நீ போட்டு விட்ட, இந்த தாலிக்கு என்னடா மரியாதை. இல்ல நான் உன்மேல வச்ச காதலுக்கு என்னடா மரியாதை”என்று மனதில் இருக்கும் வேதனையைக் கொட்டி மூச்சு வாங்கினாள்.  

“இப்போ கூட உனக்கு என்னை முழுசா ஏத்துக்க முடியாது. ஏன்னா இப்ப… நான் உனக்கு உத்ரா தான். உன் ஹனி இல்ல.

எனக்குள்ள தான் உன் ஹனியும் இருக்காள்ன்னு நீ புரிஞ்சுக்க போறதும் இல்ல.” என்றவள், அவ்வளவு நேரம் என்ன ஆனதோ என்று பதறி அங்கு வந்து அவள் பேசியதை கேட்டிருந்த, அர்ஜுன் அஜய், விதுனை காட்டி,

“அதுசரி. இத்தனை வருஷமா என்கூட இருந்த இவனுங்களே என்னை புருஞ்சுக்கல. உன்னை மறந்துட்டேன்னு நான் எவ்ளோ ஃபீல் பண்ணுவேன்னு இவனுங்களே யோசிக்கல. நீ மட்டும் யோசிக்கவா போற…” என்று சலிப்பாக சொல்லி விட்டு, துருவை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

மற்றவர்கள் அவள் மனதை அறியாமல் போனோமே என்று தன்னையே நொந்து கொண்டு நிற்க, துருவிற்கு அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதை தீயாய் சுட்டது.

‘என்ன காரியம் செய்து விட்டேன். அவள் சொல்வது உண்மைதானே. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த விஷயத்தை கவனக்குறைவாக மறந்தாலே, என்ன நடந்தது என்று நினைவு படுத்துவதற்குள் எவ்வளவு மன அழுத்தம் ஆகும்.

முழுதாய் ஆறு மாத காலத்தையும் மறந்து, மனதில் அவள் சொன்ன வலியுடன் எவ்வளவு வேதனை பட்டிருப்பாள்.

தான் இந்த நேரத்தில் தானே அவளுக்கு தைரியம் சொல்லி ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். தைரியமான பெண்ணாய் இருந்ததால், அதனை ஒருவாறு கடந்து வந்து விட்டாள். இல்லை என்றால்..’ என்று யோசித்து பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது.

மேலும், ‘அவளை தான் ஏன் இப்படி உணராமல் போனோம்… என்னை அவளுக்கு ஞாபகமே இல்லை என்றாலும் என்னை அவள் நம்பினாளே. முட்டாள்தனம் செய்துவிட்டேனே. என் ஹனியை நானே புரிந்துகொள்ளாமல் விட்டு விட்டேனே’ என்று அங்கேயே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

அஜய், தான் அவன் அருகில் வந்து “சாரி துருவ்… எல்லாமே என்னாலதான். நான் தான் தேவையில்லாமல் உன்னை பத்தி அவள்கிட்ட அப்படி தப்பா சொன்னேன்.

நான் உன்னை பத்தி கேள்விப்பட்டதை தான் சொன்னேன். வேணும்னு பண்ணல துருவ். சாரி. நான் உன்னை பத்தி தப்பா சொல்லாமல் இருந்திருந்தா அவளும் உன்னை தப்பா நினைச்சுருக்க மாட்டாள். நீயும் அவள் காதலை புருஞ்சுருப்பல்ல.”என்று வருத்தமாய் சொல்ல,

விது, “என்னடா நீ… உனக்கு தெரியாம நடந்த விஷயத்துக்கு நீ எப்படி காரணம் ஆவ. நீ என்ன தெரிஞ்சா சொன்ன” என்று சமாதானமாய் சொல்வது போல் பேசியவன், அவனை குனிய வைத்து கும்மு கும்மு என்று கும்மி,

“சும்மா இருந்தவள்கிட்ட, இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி, இப்படி ரெண்டு பேருக்கும் சண்டை இழுத்து விட்டுட்டு செண்டிமெண்ட் ஆ பேசுனா உன்னை விட்ருவோம்னு நினைச்சியா…” என்று முறைக்க,

அர்ஜுன், “இவனை என்னடா பண்ணலாம்…” என்று விதுவிடம் கேட்டு விட்டு, துருவிடம், “துருவ்… அவள் உன்னை போட்டோல பார்த்து ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸ் தான் ஆனாள். ஆனால் இவன் பார்த்த வேலைதான் அவளை குழப்பி விட்டுட்டான்…” என்று அவன் பங்கிற்கு அவனை கும்மினான்.

 அஜய், “டேய் நான் என்னடா பண்ணுவேன். இவனை பத்தி விசாரிச்சப்ப அப்படி தான் சொன்னாங்க. நான் என்ன பண்ணுவேன்” என்று பாவமாய் கேட்டான்.

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவனை இருவரும் துரத்தி துரத்தி அடிக்க, துருவ் அவர்களை தடுத்தான்.

“என் மேல தான் எல்லா தப்பும். நான் தான் அவளை சரியா புருஞ்சுக்கல.” என்று வருத்தத்துடன் கூறினான்.

அவனை மூவரும் சேர்ந்து சமாதானம் செய்ய, அர்ஜுன், “விடுடா. இனிமே அவளை விட்டு போகணும்னு நினைக்காத”  என்று சொல்ல, துருவ் அமைதியாய் உத்ரா சொன்னதையே யோசித்து கொண்டு இருந்தான்.

அதில் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

பின், விது, “பங்கு, இவன் யோசிக்கிறத பார்த்தா அடுத்த பஞ்சாயத்தை கூட்டுவான் போல. தூக்குங்கடா” என்று இருவரிடமும் சொல்ல, மூவரும் அவனை அப்படியே தூக்கி காரில் அமர வைத்தனர்.

துருவ் “டேய் என்னடா பண்றீங்க விடுங்கடா” என்று கத்த கத்த, அவனை காரினுள் போட்டதும், அர்ஜுன், “சாரி பங்கு. என் அத்தை பொண்ணை விட்டு போனாலும் போய்டுவ. அதனால உன்னை ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ண போறோம்” என்று சொல்லி, அவர்களின் வீட்டை நோக்கி காரை செலுத்தினர்.

துருவ், “அடேய் நான் எங்கயும் போக மாட்டேண்டா. நான் சும்மாதாண்டா யோசிச்சுகிட்டு இருந்தேன். முதல்ல காரை நிறுத்து”  என்று மீண்டும் கத்த, அஜய் காரை நிறுத்தவே இல்லை. துருவ் மிரட்டி பார்த்தும், அஜய் மண்டையில் அடித்து பார்த்தும் அவன் கேட்கவே இல்லை.

வீடு வந்தும் துருவை காரிலிருந்து, மூவரும் தூக்கி கொண்டு தான் வந்தனர்.

“கருமம் பிடிச்சவங்களா இறக்கியாவது விடுங்கடா, நான் வந்து தொலையிறேன்” என்று தலையில் அடிக்க, நீர் அருந்தலாம் என்று அறையில் இருந்து வெளியில் வந்த மீரா, இவர்களை புரியாமல் பார்த்தாள்.

பின், அர்ஜுனிடம், “என்ன ஆச்சு அர்ஜுன்… ஏன் இப்படி அண்ணாவை தூக்கிட்டு வர்றீங்க… அடி எதுவும் பட்டுருக்கா?” என்று பதட்டமாய் கேட்க,

அவனை இறக்கி விட்டவன் “உன் அண்ணனை நாங்க கடத்திட்டு வந்துருக்கோம். இங்க இருந்து எங்க பெர்மிசன் இல்லாமல் அவன் ஆஃபீஸ் கூட போக முடியாது” என்று கெத்தாக சொல்ல,

அவள் சிரித்து விட்டு, “இப்போ அண்ணா, பழைய ஃபார்ம்க்குக்கு வந்து உங்களை அடிக்க ஆரம்பிச்சாரு . நீங்க யாரும் எந்திரிக்கவே முடியாது. வந்துட்டாரு வசனம் பேச.” என்று அவனை நக்கலடிக்க, அர்ஜுன் அவளை முறைத்தான்.

மற்றவர்கள் இங்க என்னடா நடக்குது என்று பார்க்க, அஜய் அர்ஜுனிடம் “அண்ணியை எப்படா கரெக்ட் பண்ணுன சொல்லவே இல்ல” என்று மெதுவாய் கேட்க,

விதுன், “மீரா நீயா பேசுற..
என்ன ஒரு ஆச்சர்யம். அப்போ உனக்கும் அர்ஜுனுக்கு அடுத்து கல்யா” என்று சொல்ல வருவதற்குள் அவன் வாயை பொத்தி, இருவரையும் தனியாக அழைத்து போன அர்ஜுன் பதறி

“சத்தமா சொல்லாதடா. நானே பட்டிங் டிங்கரிங் பண்ணி அவளை நார்மலா பேச வச்சுருக்கேன். இப்போதான் அவள் என் மூஞ்சியை பார்த்தே பேசுறா. மறுபடியும் காதல், கல்யாணத்தை பத்தி பேசி அதுல மண்ணள்ளி போட்றாதீங்கடா” என்று கதற,

இருவரும், ” உனக்காடா இந்த நிலைமை. சோ சேட்” என்று வாயை பொத்திக் கொண்டு சிரித்தனர்.

மீரா, என்னாச்சு இவங்களுக்கு என்று அவர்களை புரியாமல் பார்த்து கொண்டு நிற்க, இவர்களின் அலப்பறையில் துருவ் அவர்களை முறைத்து கொண்டிருந்தான்.

பின், துருவிற்கு ஒரு அறையை காட்டி தூங்க சொல்ல, அவன் “ப்ச் அர்ஜுன் நான் வீட்டுக்கு போறேன் என் திங்க்ஸ்லாம் அங்க தான் இருக்கு..” என்று சொல்ல,

அர்ஜுன் “அதெல்லாம் நாளைக்கு எடுத்துக்கலாம். நீ இனிமே இங்க தான் இருக்க. ஒழுங்கா என் அத்தை பொண்ணை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு அவளை கூட்டிகிட்டு நீ எங்க வேணும்னாலும் போ. அதுவரை நீ எங்ககூட தான் இருக்க.” என்று பொய்யாய் மிரட்டி விட்டு போனவனுக்கு, அவன் மட்டும் தனியாய் இருப்பதில் விருப்பமே இல்லை.

எப்படியாவது அவனை வீட்டிற்கு வர வைக்கவேண்டும் என்று நினைத்தவன் இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி கொண்டான்.

மறுநாள் காலையில், உறக்கம் கலைந்து எழுந்த உத்ராவிற்கு, எழுந்திருக்கவே முடியவில்லை.

ஏதோ பாரமாய் இருப்பது போல் தோன்ற, கண்ணைக் கசக்கி, முழித்து பார்த்த உத்ரா, அருகில் அவளை சொகுசாக கட்டிக்கொண்டு படுத்திருந்த துருவை கண்டு அதிர்ந்து விட்டாள்.

மீண்டும் ஒரு முறை கண்ணை கசக்கி பார்த்தவள், உண்மையிலேயே அவன் அருகில் இருப்பதை கண்டு, அவனை உலுக்கினாள்.

அவன்” ப்ச் கொஞ்ச நேரம் தூங்கு ஹனி” என்று அவளை இழுத்து அவன் மேல் போட்டு கொண்டு தூங்க

அவள் “அப்படிலாம் இங்க யாரும் இல்ல… முதல்ல விடுங்க என்னை” என்று திமிர,

அவன் ‘ஒன்னு வாடா போடான்னு திட்றா… இல்ல ரொம்ப மரியாதை குடுக்கறா…’ என்று தனக்குள் சிரித்து கொண்டவன்,

அவளை விட்டு விட்டு, “சரி நீ போ… நான் தூங்குறேன்” என்று தூங்க போக, அவள் அவன் முடியை பிடித்து இழுத்து “ஒழுங்கா எந்திரிச்சு வெளிய போ… நீ எதுக்கு இங்க வந்த?” எனக் கேட்டாள் கண்ணில் தீப்பொறியுடன்.

அவன், “என் ஹனி ரூம்க்கு நான் வந்துருக்கேன்… இதுக்குலாம் காரணம் சொல்லனுமா” என்று குறும்புடன் கேட்டான்.

அவனின் ஹனி என்ற அழைப்பு அவளை என்னமோ செய்ய, பிடிவாதமாய் மனதைத் திருப்பி, “முதல்ல வெளிய போக போறியா இல்லையா… யாரவது பார்த்தா அவ்ளோ தான். எப்படி உள்ள வந்தீங்க” என்று அவள் கத்தி கொண்டிருக்கையிலேயே, அவள் அறை வழியே வந்த அர்ஜுன் என்ன சத்தம் கேக்குது என்று கதவை திறந்து பார்க்க,

அப்பொழுது, “நான் எப்படி வந்தேன்னு சொல்றேன் ஹனி.” என்று துருவ் அவளை மீண்டும் அவன் மேல் இழுத்து போட்டுக்கொண்டிருந்தான்.

அர்ஜுன் அதிர்ந்து, டக்கென்று வெளியில் வந்து விட்டான்.

அப்பொழுது கர்ணன் அங்கு வர, உத்ரா அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனை பார்த்து விட்டு, “ஏண்டா இங்க நிக்கிற.” என்று கேட்க,

அவன் பதறி “அது வந்துப்பா…” என்று  யோசித்தவன், “ஹான் எக்சர்சைஸ் பண்றேன்” என்று கையை காலை ஆட்டினான்.

அவர் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, உத்ரா அறைக்கு செல்ல போக, அவன் “அப்பா” என்று ‘ஹை பிட்ச்’ இல் கத்தினான்.

அவர் மிரண்டு “ஏண்டா இப்படி கத்துற.,.” என்று கேட்க, அவன் கதவை மறைத்து கொண்டு, “இங்க எங்கப்பா போறீங்க…” என்று கேட்க, “உதிக்கிட்ட வேலை விஷயமா ஒன்னு பேசணும் அதான் போறேன்.” என்று சொல்ல அவன் “அது அவள் தூங்குறாள்… அப்பறம் பேசுங்க” என்று சமாளித்தான்.

கர்ணன், “நான் எழுப்பி சொல்லிட்டு போறேண்டா.” என்று விடாமல் அங்கேயே நிற்க,

“என்னப்பா நீங்க… அவள் எவ்ளோ வேலை பார்த்துட்டு அசந்து தூங்குறாள். இப்படி தூங்குறவளை எழுப்புறீங்க… பாவம் பா உதி.” என்று போலியாய் கண்ணை கசக்க, கர்ணனுக்கு என்ன ஆனது இவனுக்கு என்று தான் இருந்தது. யோசித்துக்கொண்டு அங்கிருந்து நகர போக,

அப்பொழுது என்று பார்த்து அஜய், “என்ன இங்க மீட்டிங்கு” என்று கேட்க, கர்ணன் நடந்ததை சொல்லவும்,

“அட என்னப்பா நீங்க… அவளை எழுப்பி விட்டு சொல்லிட்டு போகாம. இவன் பேசுறதை கேட்டுகிட்டு இருக்கீங்க.” என்று உள்ளே போக எத்தனித்தான்.

அர்ஜுன் தான் ‘ஐயோ இவன் வேற சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறானே…’ என்று மனதில் புலம்பிக் கொண்டு அவனை தடுக்க, அவன் வலுக்கட்டாயமாக கதவை திறந்து அவர்கள் இருக்கும் நிலையை கண்டு பேந்த பேந்த முழித்தான்.

பின், அர்ஜுனை பாவமாகப் பார்க்க, கர்ணன் அஜயை “வழியை விடு” என்று முன்னேற போக, டக்கென்று கதவை சாத்திவிட்டு,

“எதுக்குப்பா உள்ள போறீங்க?” என்று அஜய் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான்.

கர்ணன் கடுப்பாகி, “இப்போதானடா சொன்னேன்.” என்று சொல்ல,

அவன் “அவள் பச்சை மண்ணு மாதிரி தூங்குறாப்பா அவளை போய் எழுப்புறேன்னு சொல்றீங்க. இந்நேரம் எங்க அத்தை இருந்தால், இப்படி அவள் தூங்குறப்ப எழுப்புவாங்களா” என்று வராத கண்ணீரை துடைத்து கண்ணில் விரல்களை வைத்து நின்றான்.

கர்ணன் தான் இதில் மிரண்டு, ‘இவனுங்க இதை போய் லட்சுமிகிட்டயும் மச்சான்கிட்டயும் சொன்னானுங்கன்னா… ரெண்டு பேரும் நம்மள உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க’ என்று நினைத்துக் கொண்டு,

“யப்பா நான் பெத்த ரத்தினங்களா… போய் வேலைய பாருங்க. இனிமே நான் யாரு தூங்குனாலும் எழுப்ப மாட்டேன்.” என்று பாவமாய் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

முதலில் அர்ஜுன் கத்தும் போதே, உத்ரா பதறி, “ஐயோ மாமா வந்துட்டாரு துருவ் முதல்ல எந்திரிங்க. மாமா பார்த்தா என்ன நினைப்பாங்க.” என்று சொல்ல,

அவன் “என்ன நினைப்பாங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைப்பாங்க…” என்றதும்,

அவள் “நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இல்ல…” என்று சிலுப்பிக்கொண்டாள்.

பின், “ப்ச், மாமா உள்ள வந்துட போறாங்க துருவ்” என்று சொல்ல, அவன், “அதுக்குதான் வெளிய உன் அருமை அத்தை மகனுங்க இருக்கானுங்கள்ல அவனுங்க சமாளிப்பாங்க…” என்று சொல்லிவிட்டு, கர்ணன் சென்று விட்டதை அறிந்து கொண்டு, அவள் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு வெளியில் வந்தான்.

 வந்தவனை அர்ஜுனும் அஜயும் முறைத்து, “உன்னை அந்த ரூம்ல தானடா இருக்க சொன்னோம்… இங்க என்னடா பண்ற” என்று கேட்க,

அவன் நெளிப்பு விட்டுக் கொண்டு, “நீங்க தான உங்க அத்தை பொண்ணை கரெக்ட் பண்ண சொன்னீங்க. அந்த வேலைய தான் பார்க்குறேன்.” என்று தோளை குலுக்கி அசால்டாக சொல்லி விட்டு,

“அப்பறம், டெய்லி காலைல இப்படி வந்து ரூம் வாசல்ல நின்னுடுங்க. யாரவது பார்த்துட்டா அப்பறம் எனக்கு கூச்சமா இருக்கும் ஓகே வா” என்று இருவர் தலையிலும் தட்டி குஷியாக அவன் அறைக்குச் சென்றான்.

அர்ஜுனும் அஜயும் தான் ‘அப்போ நீ தினமும் இங்க தான் தூங்க போறியா’ என்று முழித்து கொண்டு நின்றனர்.

அஜய், அர்ஜுனிடம், “அவன் ஒழுங்கா அவன் வீட்லயே இருந்துருப்பான். இப்போ என்ன பிரச்சனைய இழுக்க போறானோ… வேலியில போன ஓணானை வீட்டுக்குள்ள வரவச்சு வீட்டுல எல்லார்கிட்டயும் தர்ம அடி வாங்க போறோம்” என்று புலம்ப,

அர்ஜுன் அந்த நேரத்திலும், “அது வீட்ல இல்லடா வேட்டியில” என்று சரி செய்ய, அஜய் அவனை “இப்போ இது ரொம்ப முக்கியம்” என்று முறைத்தான்.

காலையிலேயே மீரா, தான் அனைவர்க்கும் சமைத்து கொண்டிருந்தாள். துருவும் அங்கு இருப்பது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அர்ஜூனுக்கும் என்ன பிடிக்கும் என்று அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த படியால், அவனுக்கு பிடித்ததாக சமைத்தாள், லட்சுமி வேண்டாம் என்று மறுத்தும்.

லட்சுமியும் கர்ணனும் எழுந்ததுமே அர்ஜுன், துருவ் கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருப்பான் என்று சொல்லி விட்டான்.

உத்ரா, இவன் எப்படி இங்க வந்தான் என்று புரியாமல் இருந்து விட்டு, பின், ‘இதென்ன சிதம்பர ரகசியமா இந்த வீணா போன வெளங்காதவனுங்க தான் இங்க கூட்டிட்டு வந்துருக்கணும்.’ என்று கடிந்து,

“இவன் இஷ்டத்துக்கு வான்னா வரணும் போன்னா போகணுமாக்கும். எனக்கு ஞாபகம் வரட்டும்னு தான வெயிட் பண்ணுன. எப்படியாவது… எல்லாத்தையும் நியாபகப்படுத்திட்டு தான் உன்கிட்ட காதலை சொல்லுவேன்’ என்று தனக்குள் முடிவெடுத்துக்கொண்டாள். அது நடக்கவே போவதில்லை என்று அறியாதவளாய்.

அஜய்க்கு சுஜியின் ஞாபகமாய் இருந்தது. எப்பொழுதும் காலையில் அவள் அனுப்பும் காலை வணக்கம் குறுஞ்செய்தியும், சிறிது நேரத்தில், “சீக்கிரம் ஆஃபீஸ் கிளம்பு…” என்று கட்டளையாய் வரும் குறுஞ்செய்தியும் இன்று வராததால் என்ன ஆனது அவளுக்கு என்று யோசித்தவன், அவளை அழைத்துக்கொண்டு அலுவலகம் செல்லலாம் என்று சாப்பிடாமல் கூட, அவள் வீட்டிற்க்கு சென்று விட்டான்.

அங்கு, சுஜி முயன்று சாதாரணமாய் அம்மா அப்பாவிடம் பேசி கொண்டிருக்க, அஜய் வந்து ஹார்ன் அடித்தான்.

அவள் வெளியில் வந்து அஜயை யோசனையை பார்த்து விட்டு என்ன என்று கேட்க,

அவன் “கிளம்பிட்டியா வா போகலாம்” என்றான்.

“எங்க” என்று கேட்டவளிடம்,  “ஆஃபீஸ்க்கு தான்… இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டேன். அதான் உன்னை பிக் அப் பண்ணலாம்னு வந்தேன்.” என்று சொன்னதும்,

அவள், “இல்ல சந்துரு வரேன்னு சொன்னாரு மேரேஜ் பத்தி பேச. பேசிட்டு அவரே ட்ராப் பண்றேன்னு சொன்னாரு. சோ நீ கிளம்பு” என்றாள்.

அஜயோ, “அவன் எதுக்கு உன்னை ட்ராப் பண்ணனும்…” என்று கோபமாக சொன்னவன், சற்றுத் திணறி “மேரேஜ் பத்தி அவங்க பேசட்டும் நீ வா” என்று வம்படியாக அழைக்க, அதில் கடுப்பானவள்,

“ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு. சந்துரு தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போறவரு. அவருக்கு என் மேல எல்லா ரைட்ஸும் இருக்கு உன்னை விட… நான் அவர் சொல்றது தான் கேட்க முடியும் நீ கிளம்பு” என்று கண்ணில் வழிந்த நீரை அவனுக்கு காட்டாமல் திரும்பி நடந்தாள்.

அஜய்க்கு தான் ஒன்றுமே ஓடவில்லை. ‘அதெப்படி என்னை விட இவள் மேல் அவனுக்கு உரிமை இருக்க முடியும். என்னை விட அவளுக்கு அவன் முக்கியமாக போய்ட்டானா. அப்போ, அவள் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லையா…’ என்று குழம்பி கொண்டிருந்தவன், காரை அலுவலகம் நோக்கி செலுத்தி நிறுத்தியவனுக்கு அவளின் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று வார்த்தை மனதை வெகுவாய் சுட்டதை அதிர்ச்சியுடன் நினைத்தான்.

வீட்டில், மீராவே அனைவர்க்கும் பரிமாற, அர்ஜுன் அவனுக்காக அவள் செய்ததை ரசனையுடன் அவளை பார்த்து கொண்டே சாப்பிட்டான். லட்சுமி அவனுக்கு வேண்டுமென்றே பூரியை வைக்க, மீரா டக்கென்று, “அவருக்கு பூரி பிடிக்காது” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள்.

அர்ஜுன், ‘அச்சோ நம்ம ஆளு இப்படி மாட்டிக்கிருச்சே’ என்று மனதினுள் சிரிக்க, லட்சுமி நக்கலாக,” என் பையனுக்கு பூரி பிடிக்காதுன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்க, அவள் பேந்த பேந்த முழித்தாள்.

உத்ராவும், துருவும் முன்னாடியே கிளம்பி சைட்டிற்கு செல்ல, துருவ் அவளை “ஹனி” என்று அழைத்தான். அவள் அவனை பார்க்காமல் வெளியில் வேடிக்கை பார்க்க,
“ஹனி” என்று மீண்டும் அழைத்தான்.

இப்படி அவன் அழைத்துக் கொண்டிருக்கையிலேயே இடம் வந்து விட, காரை விட்டு இறங்கி உள்ளே போனாள்.

துருவ் வேகமாக காரை நிறுத்தி, உள்ளே சென்று “ஹனி நான் சொல்றதை கேளேன்… ப்ளீஸ் டி” என்று கெஞ்ச,

அவள், “ஜஸ்ட் கால் மை நேம். இந்த ஹனி சனி எல்லாம் வேணாம்” என்று முதலில் சொன்னது போல்  சொல்ல, அவன் குறும்பாக “நான் அப்டித்தான் ஹனி சொல்லுவேன்” என்று கண்ணடித்தான்.

அவள் அவனை முறைத்து விட்டு, மீண்டும் உள்ளே போகையில், அந்த கட்டிடத்தில் இருந்து, சில பல, செங்கல்கள் அவள் மேல் விழ போவதை கண்ட துருவ் “உதி” என்று கத்தி, விருட்டென்று அவளை தள்ளினான்.

உறைதல் தொடரும்.
– மேகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
47
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.