Loading

தெம்மாங்கு 24

 

நாள்கள் நகர்ந்து கொண்டிருப்பதற்குச் சாட்சியாக, தேனிசை தேவியின் வயிறு மெல்ல மேடிட ஆரம்பித்தது. மேடிட்ட வயிற்றைக் கண்ணாடியில் பார்த்த பின்பு தான், முழுத் தாய்மையை உணர ஆரம்பித்தாள். முதல்முறையாகத் தன் வயிற்றைத் தொட்டு ரசித்து, பரவசம் ஆக்கிக் கொண்டாள் உள்ளத்தை. அன்புக்கரசன் அவளுக்காக விட்டு விட்டுச் சென்ற உயிர் நான்காம் மாத முடிவை நெருங்கி வருகிறது.

 

“ஐயோ… முடியலம்மா, என்னை விட்டுடு.” எனப் பிள்ளையிடம் கோரிக்கை வைத்தபடி திண்ணையில் அமர்ந்தாள். 

 

பிள்ளைக்காக உணவை எடுத்துக் கொள்வது, மீண்டும் அதை வெளியில் தள்ளுவது, பாதி நேரம் மயக்கம், மீதி நேரம் சோர்வு என்று முழு கர்ப்பிணியாகவே மாறிவிட்டாள். யாராவது ஒருவர், துணைக்கு வேண்டும் என்று ஏக்கம் கொள்ள ஆரம்பித்தது அந்தத் தாய் உள்ளம். ஒவ்வொரு முறையும், வாந்தி எடுத்து விட்டு நிமிரும் பொழுது தலை சுற்ற ஆரம்பிக்கும். அந்த நொடி தான் இந்த எண்ணம் அதிகமாகத் தோன்றும்.

 

குமரவேலன் உடன் இருந்தாலும், அவன் நெருக்கத்தை விரும்பவில்லை. சமைத்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்பவன், திரும்பி வரும் வரை அவள் மட்டுமே அந்த வீட்டில். மயக்கத்தில் படுத்திருப்பவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் கூட, குமரவேலன் வந்தால் அல்லது அழைத்தால் மட்டுமே தெரிய வரும்.

 

கைபேசியின் ஒலி கேட்டது. எழுந்து எடுக்க முடியவில்லை. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவன் தான் அழைப்பான். 

 

“இவன் வேற ஒருத்தன்…” 

 

மீண்டும் வந்த அழைப்பைக் கேட்டுச் சலித்துக் கொண்டவள், முடியாமல் திண்ணையிலேயே படுத்துக் கொண்டாள். அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்த குமரவேலன், “என்னம்மா…” எனப் பதறி ஓடி வந்தான்.

 

“போன் எடுத்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல.” 

 

“எழுந்து எடுக்கிற மாதிரி இருந்தா எடுக்க மாட்டனா?”

 

“என்னமா பண்ணுது உடம்பு…”

 

“தெரிஞ்சா சொல்ல மாட்டனா?”

 

“சொன்னால் தானம்மா தெரியும்.” 

 

“நானே முடியாமப் படுத்திருக்கேன். தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாத.” என்றவளைக் கண்டு பயந்தவன் திண்ணை ஓரம் அமர்ந்து கொண்டான்.

 

மயக்கம் தெளிந்து மெல்ல எழுந்து நிற்க முயன்றாள். அதில் வெற்றி கண்டவள் முழுதாக நிற்பதற்குள் தள்ளாட, தாங்கிப் பிடித்தான் குமரவேலன்.

 

“ரொம்ப முடியலனா ஆஸ்பத்திரி போவோமாம்மா” 

 

“கொஞ்சம் உள்ள மட்டும் விடு.” 

 

கைத் தாங்கலாக அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று படுக்க வைத்தவன், சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சாதாரணமாக இருந்திருந்தால், இப்படி அவன் அமர்ந்திருப்பதற்குக் குதிக்க ஆரம்பித்து இருப்பாள். இந்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாமல், அரை மணி நேரத்திற்கு மேலாக மயக்கத்தில் படுத்திருந்தவள், தன்னையும் அறியாமல் தூங்கிப் போனாள். 

 

“ம்மா…” 

 

மெல்லத் தூக்கம் கலைந்து எழுந்தவளிடம், “கொஞ்சம் சாப்பிடுமா” என்றான்.

 

 

முழுதாக விழி திறந்து நேரத்தைப் பார்த்தவள், “நீ இங்க என்ன பண்ற?” வினவ, 

 

“இப்படிப் படுத்திருந்தா, எப்படிம்மா வேலை பார்க்க முடியும்?” என வருந்தினான்.

 

“அதுக்காக என் கூடவே உட்கார்ந்து இருப்பியா?”

 

“ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா என்னமா பண்ணுவ?”

 

“என்ன தேவைப்பட்டாலும் நான் பார்த்துக்கிறேன். நீ இப்படி உட்காரனும்னு எந்த அவசியமும் இல்லை. உன் வேலையைப் போய் பாரு.” 

 

“சரிம்மா. நீ கொஞ்சம் சாப்பிடு.” 

 

“எனக்குத் தெரியும், கிளம்புன்னு சொன்னேன்.” 

 

ஒரு நொடி முகம் வாடிவிட்டது குமரவேலனுக்கு. அதை அடுத்த நொடி தொடராது எழுந்தவன், “தட்டுல பழம் நறுக்கி வச்சிருக்கேன். தண்ணி சூடு பண்ணி வச்சிருக்கேன். ஏதாச்சும் தேவைனா போன் பண்ணுமா…” என்று அங்கிருந்து கிளம்பி விட்டான்.

 

***

 

நேற்றுப் போல், இன்றைய நாளும் மிக மோசமான நாளாக இருந்தது தேனிசை தேவிக்கு. முன்பை விட ஐந்தாம் மாதம் தொடங்கப் போகும் இந்தத் தருணத்தில் தான் வாந்தியும், மயக்கமும் மிக அதிகமாக இருந்தது. அவள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட குமரவேலனாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை. நல்லதுக்குச் சென்று விசாரித்தால் கூட, ஏதோ பார்க்கக் கூடாத கயவனைப் பார்ப்பது போல் பார்க்கிறாள்.

 

அந்தப் பார்வைக்கு அஞ்சியே அவளிடம் இருந்து தள்ளி இருப்பவன், அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்கிறான். “அம்மா…” என்ற குரல் கேட்டு அவள் முன்பு நின்றவன், “ம்மா…” எனப் பிடிக்கப் போவதற்குள் மயங்கி விழுந்து விட்டாள். 

 

தண்ணீர் எடுத்து வந்து மெல்ல மயக்கத்தைத் தெளிய வைத்தான். சுவரில் சாய்ந்து அமர வைத்தவன், அடுப்பங்கரைக்கு ஓடிச் சென்ற கையோடு சாத்துக்குடி பழச்சாறு கொண்டு வந்தான். தேனிசை தேவிக்கு இருந்த மயக்கத்திற்கு அருந்த முடியவில்லை. சில நொடி தயக்கங்களுக்குப் பிறகு, அவள் வாய் அருகே கொண்டு செல்ல, மெல்லக் குடிக்க ஆரம்பித்தாள். 

 

“போதும்” 

 

“நீயா இன்னும் கொஞ்சம் எடுத்துக் குடிம்மா” எனப் பழச்சாறை அவளிடம் கொடுத்தான்.

 

“ஆஸ்பத்திரி போவோமா?”

 

“இதைத் தானம்மா நேத்துல இருந்து கேட்டுட்டு இருக்கேன். முதல்ல கிளம்பு, போலாம்.” 

 

“பத்து நிமிஷம் படுத்து எந்திரிக்கிறேன். அப்புறம் போலாம்.”

 

“ம்ம்” என்றவன் பத்து நிமிடம் கடந்து எழுப்பினான். அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள் சற்று அசைந்து “கொஞ்ச நேரம்…” என்று விட்டுத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

 

எழுப்ப ஆரம்பித்தவன் இரவு வரை எழுப்பிக் கொண்டே இருந்தான். இரவு எட்டு மணி போல் எழுந்தவளை அழைக்க, “இப்போ நல்லா இருக்கேன். திரும்ப அந்த மாதிரி ஆனா போகலாம்.” என்றாள்.

 

“ரெண்டு நாளுக்கே உன்னால தாங்க முடியலம்மா. திரும்ப ஆச்சுன்னா, தாக்குப் பிடிக்க மாட்ட. இப்பக் கிளம்பினா கூட டாக்டரைப் பார்த்துட்டுச் சீக்கிரம் வந்திடலாம்.”

 

“தூங்கி எழுந்ததும் சரியாயிடுச்சு.” 

 

வற்புறுத்தி அழைத்துச் செல்ல முடியாதவன், அவளுக்குத் தேவையான உணவைக் கொடுத்து மீண்டும் உறங்கும் வரை பக்கத்திலேயே இருந்தான். அவள் நன்றாகத் தூங்கி விட்டதை உறுதி செய்தவன், தன்னிடத்தில் உறங்கச் சென்றான். 

 

நள்ளிரவு நேரம் ஏதோ ஓசை கேட்டு எழுந்தவன், தேனிசை தேவியின் குரல் என்றுணர்ந்து கதவைத் திறக்க, “ஆஹா… ஆ… அம்மா.” எனப் பிதற்றிக் கொண்டிருந்தாள்.

 

“என்னம்மா…” 

 

“மூச்சு விடக் கஷ்டமா இருக்கு.”

 

“ஆஸ்பத்திரிக்குப் போகலாம்னு சொன்னா கேக்குறியா?” என்றவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

 

“வெளிய கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாரும்மா” என்றவனுக்குச் சம்மதமாகத் தலையசைத்தவள், மெல்ல எழுந்து கொள்ளக் கை கொடுத்து உதவி செய்தான்.

 

வெளித் திண்ணையில் அமர வைத்தவன், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். குடிக்க மறுத்தவள் மூச்சை இழுத்து விட்டுச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். நடுராத்திரியில் எந்த மருத்துவமனைக்கு, எப்படி அழைத்துச் செல்வது என்று தெரியாமல் பயந்தவன் இன்னும் அலறிப் போனான்.

 

“என்னால சுத்தமா முடியல, ரொம்பப் பயமா இருக்கு.” என்றதில்.

 

விசிறி எடுத்து வந்து விசிறி விட்டவன், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து பார்த்து விட்டான். மூச்சு இழுத்து விடுவதில் சிரமப்பட்டவளைக் காணச் சகிக்காது சந்தானம் வீட்டிற்கு ஓடினான். சந்தானத்தின் மனைவியிடம் விஷயத்தைக் கூறி அழைத்து வந்தவன், 

 

“என்னன்னு பாருங்க அத்தை. மூச்சு விட முடியலன்னு ரொம்பத் துடிக்குது இந்தப் புள்ளை.” என்றான். 

 

“என்னமா பண்ணுது?”

 

“மயக்கமா வருது. மூச்சு விடக் கஷ்டமா இருக்கு.”

 

“சில பேருக்கு இந்த மாதிரி தான், மூச்சு விடக் கஷ்டமா இருக்கும். நீ பதட்டப்படாம, நிதானமா கண்ண மூடி மூச்ச நல்லா இழுத்து விடு. அப்படி முடியலனா நல்லா வாயைத் திறந்து மூச்ச இழுத்து விடு.” என்ற சந்தானத்தின் மனைவி, முதுகை நன்றாக நீவி விட்டார். 

 

அப்போதுதான் அவளின் ஆடையைக் கவனித்து, “வயிறு பெருசாகுற நேரத்துல, இந்த மாதிரித் துணி போட்டுட்டு இருந்தா எப்படி மூச்சு விட முடியும்? இப்ப இருக்க உடம்புக்கு ஏத்த மாதிரி நல்லா காத்தோட்டமா இருக்க அளவுக்குத் துணி போடு. நாள் கூட இன்னும் வயிறு பெருசாகும். இதுக்கே மூச்சு விட முடியலன்னா, இன்னும் பெருசாகும்போது என்ன பண்ணுவியோ?” என்றார்.

 

வீட்டை விட்டு அப்படியே ஓடி வந்தவளுக்கு, அன்புக்கரசன் எடுத்துக் கொடுத்த சில துணிகள் மட்டுமே. அதுவும் அவள் அளவு தெரியாமல் அவனாகவே எடுத்து வந்தது. அன்றைய நிலைமைக்கு வேறு வழி இல்லாததால், போட்டிருந்த தையலைப் பிரித்து அந்தத் துணிகளை உபயோகித்தாள். அதன் பின் நடந்த சம்பவங்களால் தன் தேவையை மறந்தவள், துணி போடும் பொழுதெல்லாம் உணரத்தான் செய்தாள். எப்படிக் குமரனிடம் கூறுவது என்ற சங்கடத்தில், தனக்குள் வைத்துக் கொண்டவள் பெரும் அவஸ்தையில் சிக்கிக் கொண்டாள். 

 

ஒரு மாதிரியான நிலையில், அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் குமரவேலன். அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இந்த நொடி கவலைக்கிடமானது. தன் எதிரில் இருக்கும் பெண்ணுக்கு என்ன தேவை என்பது தெரியாமலே, இத்தனை நாள் தேவையானதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தாமதமாக உணர்ந்தான். 

 

ஒரு மணி நேரம் கடந்த பின், இயல்புக்குத் திரும்பினாள் தேனிசை தேவி. இருட்டிய கண்கள் இப்போதுதான் தெளிவானது. நள்ளிரவு என்று பார்க்காமல், உதவிக்கு வந்த சந்தானத்தின் மனைவி சென்று விட, இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

 

“டிரஸ் பத்தலன்னா சொல்லலாம் இல்லமா…” 

 

“உன்கிட்ட எப்படிச் சொல்ல முடியும்?”

 

“கடைக்குப் போகலாம்னு சொல்லி இருந்தா கூட புரிஞ்சு இருக்குமே.”

 

“எந்த உரிமையில் கடைக்குக் கூப்பிடுவேன். ஏற்கனவே நீ எனக்குச் செய்யறதை எல்லாம் ஏத்துக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். இதுல உரிமையா கூட்டிட்டுப் போய் வாங்க எப்படி மனசு வரும்?” 

 

“எத்தனையோ தடவை சொல்லிட்டேம்மா உனக்கும், எனக்கும் நடுவுல உரிமைன்னு எதுவும் இல்லை. உன்னோட தேவைக்கும், பாதுகாப்புக்கும் மட்டும் தான் நானுன்னு.”

 

“அதைத்தான் நானும் சொல்றேன். நீ இங்க பாதுகாப்புக்கு இருக்கியே தவிர, என் தேவைக்கு இல்லை.”

 

“உன் வாழ்க்கைய அழிச்சதுக்காகக் காலம் முழுக்க உனக்குச் செருப்பா உழைக்கத் தயாரா இருக்கேன். தயவு செஞ்சு புரிஞ்சுக்கப் பாரும்மா…” என்றவன் உள்ளே சென்று வந்து அவளிடம் ஒரு ஆடையை நீட்டினான்.

 

தேனிசை தேவி கேள்வியாகப் பார்க்க, “இது அன்புவோட சட்டை. கொஞ்ச நேரத்துக்குப் போட்டுக்க. விடிஞ்சதும் கடைக்குப் போலாம்.” என்றவன் உள்ளே சென்றுவிட, தன் கணவன் ஆடையை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவள் விழிகள் கலங்கியது.

 

விடியும் வரை இருவருக்கும் தூக்கம் வரவில்லை. அவன் கொடுத்துவிட்டுச் சென்ற ஆடையை மாற்றியவளுக்கு, இறந்தவன் நினைவு வட்டமடித்தது. ‘சென்றவன் தன்னுடன் இருந்திருந்தால், இது போன்ற நிலை வந்திருக்காது.’ என்றவள் விழிகளில் ஓராயிரம் வலிகள். அதைவிட அதிகமான வலி உள்ளே இருந்தவனுக்கு. போதும் என்ற வரை இரவு முழுக்க வருந்தியவன், காலை எழுந்ததும் தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். 

 

***

 

சந்தானத்தோடு உள்ளே வந்த அவர் மனைவி காமாட்சி, “இப்ப எப்படிம்மா இருக்கு?” நலம் விசாரிக்க, “ம்ம்… இப்போ பரவால்லம்மா.” என்றாள். 

 

“பிள்ளையப் பெத்து எடுக்கிற வரைக்கும், இந்த மாதிரிப் பல தொந்தரவைப் பார்க்கணும். எப்ப என்ன வரும்னே தெரியாது. நானெல்லாம் ஒன்பது மாசம் வரைக்குமே படாதபாடு பட்டேன். அஞ்சாவது மாசம் முடிஞ்சுட்டா வாந்தி ஓரளவுக்கு நின்னுடும். அதுவரைக்கும், நீர் ஆகாரமா குடிச்சி உடம்ப நல்லா வச்சுக்க.” என்றவரைப் பார்த்து மனம் கனிந்தது தேனிசைக்கு.

 

இது போன்று எடுத்துச் சொல்ல ஆளில்லாமல் தான், தவியாகத் தவித்துக் கொண்டிருக்கிறாள். தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக உரைக்க ஒரு ஆள் இல்லை அவளுக்கு. அதுவே பெரிய மன அழுத்தமாக இருக்கிறது கர்ப்பிணிக்கு. 

 

“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே.” 

 

“சொல்லுங்கம்மா”

 

“மாசமா இருக்கற பொண்ணு இப்படி இருக்குறது நல்லா இல்ல. உனக்கு இருக்குற பிரச்சனை உள்ள இருக்க குழந்தைக்குத் தெரியுமா? அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு, உன்னோட பேச்சும், நீ கொடுக்குற சத்தங்களும் தான் பெரிய நம்பிக்கை.” என்றதும் அவள் முகம் மாறத் துவங்கியது.

 

அதை உணர்ந்தவர், “நீ இப்படித் தான் இருக்கணும்னு நான் சொல்லல. இப்படி இருந்தா, உன் குழந்தைக்கு நல்லதுன்னு சொல்றேன். கடவுள் எழுதி வச்சதை மாத்த நம்மளால முடியாது. போன உசுர நினைச்சு வர உசுரத் தண்டிக்காத.” என்றார்.

 

அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் குமரவேலன். எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காதவள், இவர் பேச்சுக்காவது செவிமடுப்பாளா? என்ற எதிர்பார்ப்புடன் அவன் இருக்க, 

 

“கைல நாலு வளையல வாங்கிப் போடு. உன் பிள்ளைகிட்டப் பேசு. உனக்குப் பிடிச்சதை செஞ்சு சாப்பிடு. செய்ய முடியலனா என்கிட்டச் சொல்லு, நான் செஞ்சு தரேன்.” என்றார் காமாட்சி‌.

 

“சரிம்மா” என்றவளைக் கண்டு புன்னகைத்தவர், “எங்கிட்ட எந்தத் தயக்கமும் வேண்டாம் தேனிசை. மனசு விட்டுப் பேசணும்னு தோணுச்சுனா சொல்லி அனுப்பு, நானே வரேன். இல்லனா காலாட நடந்து வீட்டுக்கு வா…” என்றிட, மெல்லிய புன்னகை அவள் உதட்டில். 

 

“அந்தப் புள்ள வாயை விட்டுக் கேட்கலனா கூட, என்ன தேவைன்னு பார்த்துச் செஞ்சு கொடு. சும்மா ஊதாரியா சுத்திட்டு இருக்காத.” 

 

“நான் ஊதாரியாவா சுத்திட்டு இருக்கேன்?”

 

“இருக்கப் போய் தான் இந்தப் புள்ளை இப்படி உட்கார்ந்து இருக்கு.”

 

“பேசுவய்யா பேசுவ… என் போதாத காலம், இப்படி நீ பேசுறதைக் கேட்க வேண்டியதா இருக்கு.”

 

“எல்லா நேரமும், காத்து உன் பக்கமே அடிக்காதுடா திருட்டுப் பயலே.”

 

“அத்தை, இவரைக் கூட்டிட்டுப் போயிடுங்க…”

 

“தைரியமான ஆம்பளயா இருந்தா சண்டைக்கு வாடா”

 

“டைம் இல்ல கிழவா…”

 

“பயந்து ஓடுறான் பாரு, காமாட்சி.”

 

“கொஞ்சம் சும்மா இருங்க. இந்த மாதிரிப் பேசுறதால தான் உங்க பல்லை உடைக்கத் துடிக்கிறான்.” 

 

“நல்லாச் சொல்லுங்க அத்தை. இந்த மனுஷனோட எப்படித்தான் இத்தனை வருஷம் குப்பை கொட்டுனீங்களோ.”

 

“இந்த மாதிரி அடக்கியே தான்.” என்றவர் புன்னகையோடு, “நீங்க வேலையப் பாருங்க, நாங்க அப்புறம் வரோம்.” என முறைத்துக் கொண்டு நிற்கும் சந்தானத்தை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

 

“சாப்பிட்டுக் கிளம்புமா…”

 

அவள் சாப்பிடும் வரை பொறுமை காத்தவன், வண்டியை வரவழைத்து வழக்கம் போல் அவளை ஏற்றி விட்டுப் பின் தொடர்ந்தான். போன முறை நண்பனோடு கடை வீதிக்கு வந்த நியாபகங்கள் துரத்தியது. அதிலும் ஜிகர்தண்டா கடையைப் பார்த்ததும், ஒரு நொடி அப்படியே நின்றவன் வருத்தப் புன்னகையோடு அதைக் கடந்தான். 

 

“உனக்குத் தேவைப்படுறதை எடுத்துக்கமா…” என ஓரமாக ஒதுங்கிக் கொண்டான்.

 

தர்ம சங்கடமான நிலையில், தனக்கு வேண்டியதை அளவாக எடுக்கத் துவங்கினாள். விலையைப் பார்ப்பதும், வைப்பதுமாக இருப்பவளை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன்,

 

“விலையப் பார்க்காம இந்தப் புள்ளைக்குத் தேவையான துணிய எடுத்துப் போடுங்க அண்ணா. மாசமா இருக்க புள்ள, டிரஸ் பத்தாம ராத்திரி எல்லாம் அவஸ்தை பட்டுடுச்சு.” என்றான் கடைக்காரரிடம்.

 

“எனக்கு இந்தத் துணியே போதும்.”

 

“இது எப்படிம்மா பத்தும்? நாலு நாளுக்கு ஒரு தடவை மாத்தி மாத்திப் போட்டுகிட்டு இருப்பியா.” 

 

“நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்ற தேவியின் பேச்சைக் காதில் வாங்காமல், “இப்ப இந்தப் புள்ள எடுத்ததை விட ஒரு சைஸ் அதிகமா நாலு அஞ்சு துணிங்களை எடுத்துப் போடுங்க அண்ணா.” என்றவன் நிறம், ரகம் என்று எதுவும் பார்க்காமல் கைக்கு வந்ததை எடுத்து வைத்தான்.

 

இப்போது அவள் எடுத்திருக்கும் ஆடைக்கு ஏற்றார் போல் இன்னும் நான்கு ஆடைகளை எடுத்தவன், முன்னர் தேர்ந்தெடுத்ததையும் சேர்த்து விலையைக் கேட்க, பக்கத்தில் இருந்தவளுக்குத் தலை சுற்றியது கேட்டதும். ‘இவனிடம் இவ்வளவு பணம் இருக்குமா?’ என்று கூடச் சிந்தித்தாள். அந்தச் சிந்தனை தேவையில்லாதது என்று உணர வைத்தான் சொல்லிய பணத்தைக் கொடுத்து. 

 

வாங்கிய ஆடைகளை அவள் கையில் எடுத்துக் கொள்ள, “வெயிட் தூக்கக் கூடாதும்மா.” என வாங்கியவன் அவள் முறைப்பையும் சேர்த்து வாங்கிக் கொண்டான்.

 

காமாட்சி சொன்னது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. முதல் முறையாக வளையல் அணியலாம் என்ற எண்ணம் தோன்றியது. தனக்காக இல்லை என்றாலும், தன் பிள்ளைக்காக ஆசை கொண்டவள், தன்னுடன் நடப்பவனிடம் கேட்க மனம் இல்லாது நடந்து கொண்டிருக்க, “இங்க போலாம் வாம்மா” என ஒரு கடைக்கு அழைத்துச் சென்றான்.

 

சென்றதுமே எதற்கென்று கண்டு கொண்டவள் மனம், அநியாயத்திற்குப் புழுவைப் போல் நெளிந்தது. அதையெல்லாம் உணராதவன் அங்கிருந்தவரிடம், “இந்தப் புள்ளை அளவுக்கு, மாசமா இருக்குறவங்க போடுற வளையல் கொடுங்கண்ணா.” என்றான்.

 

நான்கு டசன் வளையல்களை அள்ளிக்கொண்டு, அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தவன், “வேற ஏதாச்சும் வாங்கனுமாம்மா…” கேட்டிட, மறுப்பாகத் தலையசைத்தாள்.

 

“எதா இருந்தாலும், கூச்சப்படாம கேளுமா.”

 

“எதுவும் வேணாம்” எனத் தலை குனிந்து கொண்டாள்.

 

அவள் நிலை உணர்ந்தானோ என்னவோ, அமைதியாக நடந்து வந்தான். நடந்து வந்தவன் பார்வையில் பழங்கள் விழ, அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு மலைக்குச்சி கிராமத்திற்குள் நுழைந்தான். கார் சந்தானம் வீட்டு முன்பு நிற்கக் கேள்வியோடு அமர்ந்திருந்தாள். 

 

வந்தவருக்கான பணத்தைக் கொடுத்தவன், “உள்ள போம்மா…” என்க, காரணம் புரியாமல் அப்படியே நடுரோட்டில் நின்றிருந்தாள்.

 

“ஒன்னும் இல்லம்மா, உள்ள போ…” 

 

உள்ளே வந்த தேனிசை தேவியைக் காமாட்சி அன்போடு வரவேற்க, “இந்தப் புள்ளை கையில வளையல் போட்டு விடுங்க அத்தை.” என வாங்கி வந்த வளையல்களை அவர் கையில் கொடுத்தான்.

 

தன் நிலையை வெறுத்தவாறு தலை கவிழ்ந்தபடி நின்றிருந்தவள் தலையில் பூ வைக்கப் போக, “வேணாம்” என்றாள்.

 

“நானும் ஒரு பொண்ணப் பெத்தவ. ஒரு அம்மாவா, இப்படி உன்னப் பார்க்க முடியல. பெத்தவளா நினைச்சுச் செய்யறேன், அமைதியா இரு.” என்று பூ வைத்து விட்டவர் வளையல்களைப் போட்டு விட்டார். 

 

கண்ணில் திரண்டு உருண்ட கண்ணீர், அவள் அனுமதி இன்றி வெளியேற, “ஏன்டா அழற? நல்லா இருப்ப. இந்த மாதிரி நேரத்துல மனசு சங்கடத்தோட இருக்கக் கூடாது.” என்று விட்டு, 

 

“இப்பதான் பார்க்க லட்சணமா இருக்க…” எனத் திருஷ்டி கழித்தார்.

 

“குங்குமம் வைக்காம என்னத்த லட்சணமா இருக்கு.” என்றதும் பதறியவள் எண்ணம் போல், “நீயே வச்சு விடுடா” எனக் குங்குமச்சிமிழை குமரவேலன் முன்பு நீட்டினார் சந்தானம். 

 

ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், “நான் எப்படி வைக்க முடியும்? அத்தை கிட்டே கொடுங்க, வச்சு விடுவாங்க.” என்றான். 

 

சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் நிலையறிந்து, காமாட்சிக்குக் கண்ணைக் காட்டினான். எதிரே நிற்பவளின் நிலை உணர்ந்து குங்குமத்தை நடு நெற்றியில் வைத்தவர், “நல்லபடியா குழந்தையைப் பெத்து எடு.” என்று ஆசீர்வதித்தார். 

 

அங்கு நிற்க முடியவில்லை தேனிசையால். உடல் மொத்தமும் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது. எப்படிக் கிளம்புவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவள், மனம் புரிந்து அங்கிருந்து அழைத்து வந்து விட்டான். வீடு வரும் வரை அமைதியாக இருந்தவள், உள்ளே வந்ததும் முகத்தை மூடியபடி அமர்ந்து கொண்டாள். 

 

***

நல்லபடியாக ஐந்தாவது மாதம் தொடங்கியது. சற்று வாந்தியின் அளவும் குறைந்தது. அடுத்த வாரம் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல இருப்பதால், தேவையான பணத்திற்கு அலைந்தான் குமரவேலன். பணப் பற்றாக்குறை இல்லாத குடும்பத்தில் பிறந்தவன் பணத்தைத் தேடி ஓடுகிறான். 

 

வயிறு நன்றாகவே தெரிய ஆரம்பித்தது தேனிசை தேவிக்கு. அடிக்கடி தொட்டுத் தடவி ரசிக்கிறாள். அன்று காமாட்சி போட்டுவிட்ட வளையல்கள் விடாமல் சலசலக்க, தேனிசை தேவிக்குத் தினமும் பூ கொண்டு வந்து கொடுக்கிறார். மறுத்தாலும், தலையில் வைத்து விட்டுச் சென்று விடுவார் காமாட்சி. 

 

“உள்ள எப்படி இருக்க? அம்மா மாதிரி வருத்தத்துல இருக்கியா, இல்ல இன்னும் கொஞ்ச நாள்ல அம்மாவப் பார்க்கப் போறோம்னு சந்தோஷத்துல இருக்கியா? உன் முகத்தைப் பார்க்குறதுக்காகத் தான் தவம் இருக்கிறேன். நீ உன் அப்பா மாதிரியே இருக்கணும். உன் அப்பாவோட சிரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை உன் முகத்துல பார்க்கணும்.” என்றவளின் பேச்சைக் கேட்டபடி உள்ளே நுழைந்தவன், அவள் முகம் பார்க்காது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

 

குமரவேலன் வந்ததும் பேச்சை நிறுத்தியவள், அமைதியாகப் படுத்துக் கொண்டாள். அன்னையின் பேச்சைக் கேட்ட அன்புவின் வாரிசு, முதல் முறையாகப் பதில் கொடுத்தது எட்டி உதைத்து. முதல் பிரசவத்தில் அவ்வளவு எளிதாகத் தாய்க்குத் தெரிந்து விடாது பிள்ளையின் அசைவு. ஒரு சிலருக்கு மட்டுமே இந்தப் பேரானந்தம் சீக்கிரம் கிடைக்கும். 

 

வெகு நாள்களாக வருத்தத்தையும் கண்ணீரையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் முகத்தில் புன்னகை ஊற்றெடுத்தது. வயிற்றில் கை வைத்துத் தடவிக் கொடுத்தவள் உணர்ச்சிப் பெருக்கில் மனம் நிறைந்து போனாள். தன் வாரிசை நினைத்து வெகு நாள்கள் கழித்து மனமாறச் சிரித்தவள் உள்ளத்தில் பட்டாம்பூச்சி பறந்தது. 

 

யாரிடமாவது சொல்ல மனம் பரபரத்தது. சத்தமாகக் கத்தி வான் பிளக்கச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது. எதுவும் செய்ய முடியாத நிலையில் தன் ஆனந்தத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டவள், 

 

“செல்லம்!” என வயிற்றைக் கிள்ளி முத்தமிட்டாள்.

 

அன்புக்கரசனின் வாரிசு நாளுக்கு நாள் பலமானது. பெற்றவளை மகிழ்விக்க அடிக்கடி எட்டி உதைத்தது. கடந்த ஒரு வாரமாக மிகவும் ஆனந்தமாக இருக்கிறாள் தேனிசை. இவளின் இந்தத் திடீர் மாற்றத்தில் யோசனைக்கு உள்ளானவன், கேட்டு கெடுத்து விடக்கூடாது என்பதால் வாயை மூடிக் கொண்டான். 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்