1,546 views

அகல்யா போட்ட சத்தத்தில் சிவானியின் மனம் குதுகளித்தது. தான் வந்த வேலை எளிதாக முடிந்து விடும் என்ற எண்ணத்தில் அவள் சாவகாசமாக சோபாவில் அமர்ந்தாள். மனைவியின் சத்தத்தை விட அவள் சொன்ன வார்த்தை தான் அதிகமாக காயப்படுத்தியது தரணீஸ்வரனை.

“லயா” அதிர்வு மாறாமல் அவன் மனைவியை அழைக்க, “சொல்லாத என் பேர தயவு செஞ்சு சொல்லாத. என்ன ஒரு அசிங்கமான இடத்துல நான் நிற்கிறன்னு தெரியுதா.  இப்ப என்னை நினைச்சா எனக்கே ரொம்ப அருவருப்பா இருக்கு.” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

தரணி ஒடிச்சென்று அவளை தடுக்க, “ச்சீ!” என்று அருவருப்பான முகத்துடன் அவனைப் பார்த்தாள். உள்ளத்தை சுட்டது அந்த பார்வை. ஸ்தம்பித்த மனநிலையில், “லயா எதுக்கு இப்படி பார்க்குற.” என்று கேட்டான்.

“இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் எப்படி உன்னால எதுவுமே நடக்காத மாதிரி கேட்க முடியுது.” அவன் சட்டையை பிடித்தவள் கோபம் தீர உலுக்கினாள்.

“அகல்” என்ற மாமியாரின் குரலில் கொதித்து எழுந்தவள், “தயவு செஞ்சு நீங்க ஒரு வார்த்தை பேசிடாதீங்க என்கிட்ட. இருக்கிற கோபத்துக்கு என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது. இது எல்லாத்துக்கும் நீங்க மட்டும் தான் காரணம். எந்த தப்பும் செய்யாத என்னை இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில நிக்க வச்ச குற்றத்துக்காக  ஞாயமா உங்களை கேட்டு இருக்கணும்.” என்று பேசிக் கொண்டே செல்ல,

“லயா அம்மா என்ன பண்ணாங்க.” என்றான் அன்னைக்கு ஆதரவாக.

“என்ன பண்ணல உங்க அம்மா. சொல்லுங்க என்ன பண்ணல அவங்க எனக்குன்னு. சிவனேனு  வாழ்க்கைய பார்த்துட்டு இருந்த என்னை சுயநலமா உங்க வாழ்க்கையோட சேர்த்து விட்டாங்க. இந்த வாழ்க்கையில இருந்து விடுதலை கிடைக்கணும்னா என் மகனை பழைய மாதிரி மாத்தி கொடுன்னு டீல் பேசுனாங்க. இவங்களோட சூழ்ச்சி தெரியாம உங்களை திருத்துறன்னு நானே என் வாழ்க்கையில திருத்த முடியாத பெரிய அசிங்கத்தை பண்ணிட்டேன்.” என்று கத்தினாள்.

“லயா அப்போ இதெல்லாம் நீ என் மேல அக்கறைப்பட்டு செய்யலையா?” மனைவியின் பேச்சில் தான்  பனைய பொருளாக இருந்திருக்கிறோம் என்ற அதிர்வில் அவன் கேட்க,

“உங்க மேல அக்கறைப்பட நான் யாரு. எனக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. இந்த வீட்டை விட்டு போறதுக்காக தான் உங்க கூட பேசினேன். உங்க மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிச்சேன்.” என்று அவளால் தேற்றப்பட்ட இதயத்தை அவளே நசுக்கினாள்.

பேச்சு இழந்து போனவன் பார்வையால் அவளிடம் நியாயம் கேட்க, பதில் சொல்ல முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். “அகல் நீ இவ்ளோ கோபப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்கல. அவ வேணுமே பிரச்சனை பண்ண வந்திருக்கா. இந்த டைம்ல நீயும் சண்டை போட்டினா அவளுக்கு வசதியா போய்டும். கொஞ்சம் பொறுமையா இரு அவளை இந்த வீட்டை விட்டு அனுப்புறேன்.”

“அனுப்பி என்ன பண்ண போறீங்க? எவ்ளோ உரிமையா இந்த வீட்டுக்குள்ள வந்தான்னு பார்த்தீங்க தான. அந்த நேரம் என்னால தான் அங்க நிக்க முடியல. அப்போ உரிமை இல்லாதவள் நான் தான.”

“தப்பா புரிஞ்சுக்காத அகல்… இந்த வீட்டுக்கு என்னைக்கும் உரிமையானவ நீ மட்டும் தான்.”

“விஷத்தை அன்புன்ற வார்த்தையால என் உடம்பு முழுக்க ஏத்தித்தான் நான் இந்த நிலைமைல இருக்கேன். இனிமேலும் தயவு செஞ்சு உங்க வார்த்தை விளையாட்டை என்கிட்ட காட்டாதீங்க.”

“என்னம்மா இப்படி எல்லாம் பேசுற.” ஆதங்கத்தோடு தயாளன் கேட்க,

“வேற எப்படி பேச சொல்றீங்க. உங்களோட சுயநலத்துக்காக என்னைய நல்லா யூஸ் பண்ணிக்கிட்டீங்க. அது புரியாம வயித்து பிள்ளையோட அசிங்கமா நிக்கிறேன் யாரோ ஒருத்தி முன்னாடி.” அகல்யாவின் சத்தம் கீழே இருப்பவளின் காதில் தேனாக பாய்ந்தது.

“கத்தாதம்மா குழந்தைக்கு ஏதாச்சும் ஆகப்போகுது.”

“இந்த குழந்தை எப்படி போனா உங்களுக்கு என்ன அதான் வீட்டுக்கு ஒரு வாரிசு வந்து நிக்குதே.” உரக்க கத்தியவள் அதை சற்று குறைத்து கண்ணீரோடு,

“நான் தான் ரெண்டாவதா ஒரு வாழ்க்கைய ஏத்துக்கிட்டன்னு பார்த்தா என் பிள்ளைக்கும் அதே நிலைமை வந்துடுச்சு. எவ்ளோ பெரிய அவமானத்தை இன்னும் பூமிய பார்க்காத என் பிள்ளை மேல சுமத்தி இருக்கேன். நான் எப்படி இந்த மாதிரி ஒரு கீழ்த்தரமான வேலைய செஞ்சன்னு இப்ப வரைக்கும் புரியல.” என்றாள்.

“அகல் கொஞ்சம் பார்த்து பேசுமா. உன்னோட கோபம் எனக்கு புரியுது அதுக்காக வாய்க்கு வந்ததை பேசாத.”

“பேசுனா என்ன தப்பு? உங்களோட வார்த்தைல மயங்கி எந்த வாழ்க்கை எனக்கு வேணாம்னு நினைச்சனோ அதே வாழ்க்கைய நானே விரும்பி வாழ்ற மாதிரி மதி கெட்டுப் போனது உண்மை தான.”

“இப்போ என்ன தாம்மா எங்கள பண்ண சொல்ற. அவன் முகத்தைப் பாரு எப்படி நிக்கிறான்னு. உன் புருஷனுக்காகவாது கொஞ்சம் கோபத்தை குறை.”

“இந்த மாதிரியான வார்த்தைய தான் பேசாதீங்கன்னு சொல்றேன். என்னமோ நான் இல்லன்னா உங்க பையன் இல்லன்ற மாதிரி பேசுறீங்க. இவருக்கு நான் மட்டுமா பொண்டாட்டி. அதான் கீழ ஒருத்தி இருக்காளே அப்புறம் எதுக்காக கவலைப்படுறீங்க. அப்படியே ரெண்டு பேர் இல்லனாலும் மூணாவதா யாராது ஒருத்திய கட்டி வைங்க. பையனுக்காக யார் வாழ்க்கையும் அழிக்க தயங்காத அம்மா தான நீங்க.”

“எல்லாம் வந்தாளே அவளால வந்தது. அவளுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முக்கியமா என் பையன் வாழ்க்கைல அவளுக்கு இடமே இல்லை. இன்னைக்கு நான் கொடுக்கிற அடியில இனி ஜென்மத்துக்கும் உங்களுக்கு நடுவுல வரக்கூடாது.” ஆவேசமாக சிவானி பற்றி பேசிய ஆதிலட்சுமி அவளை துரத்துவதற்காக செல்ல,

“யாருக்கு இடமில்லன்னு சொல்றீங்க? அவளுக்கு மருமகளா இந்த வீட்ல இடமில்லாம இருக்கலாம்
ஆனா உங்க பேரனோட அம்மாவா அவளுக்கு இருக்க உரிமைய உங்களால தடுக்க முடியாது. அந்த குழந்தைக்கு உங்க பையன் இனிஷியல் தான போட்டுட்டு இருப்பா. அதை இல்லன்னு நிரூபிக்க முடியுமா உங்களால?”

“அந்த குழந்தை என்னோட பையன் குழந்தைன்னு எப்படிம்மா நம்ப சொல்ற. அவளை பத்தி உன்ன விட எனக்கு நல்லா தெரியும். அப்படியே அது என் பையன் குழந்தையா இருந்திருந்தா இத்தனை வருஷம் வராம கண்டிப்பா இருந்திருக்க மாட்டா. அட்லீஸ்ட் காசுக்காகவாது என் பையனை தேடி வந்து இருப்பா.”

“உங்களுக்கு பேச சொல்லியா தரணும். இதெல்லாம் எங்கிட்ட பேசுறதுக்கு பதிலா கீழே இருக்கிறாளே அவ கிட்ட பேசி பாருங்க அப்போ உங்களுக்கான பதில் கிடைக்கும்.”

“சும்மா அவ அவன்னு பேசிட்டு இருக்காத அகல். அவளுக்கும் உன் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீ அவளுக்கு இடம் கொடுக்காத.”

“இடம் கொடுக்கிற அளவுக்கு அவ இல்ல. அவ வாழ்க்கைய தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். வெளிய போன்னு சொன்னா நான் வெளிய போய் தான் ஆகணும்.”

“உன்கிட்ட பேசுறது வேஸ்ட் அகல்.” என்ற ஆதிலட்சுமி அங்கிருந்து வெளியேற, தயாளன் மகனை ஒரு முறை பார்த்துவிட்டு நகர்ந்தார்.

கணவன் மனைவி இருவர் மட்டுமே அறைக்குள் இருந்தார்கள். இரண்டாம் திருமணத்தை பிடிக்காமல் செய்து கொண்டவள் பிடித்து வாழ ஆரம்பித்தாள் கணவனோடு. எல்லா பெண்களைப் போல் அவளுக்கும் தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் அதிகம் பாதுகாத்தால் அவனை.

சாதாரணமாக ஒரு மனைவி தனக்குபின் இன்னொருத்தி வருவதை விரும்ப மாட்டாள். அப்படி இருக்க தனக்கு முன்னால் இருந்தவள் எங்கு உரிமை கேட்டு வந்து விடுவாளோ என்ற பயத்திற்கு ஏற்றது போல் இன்று நடந்துவிட, மன அழுத்தத்தில் சுற்றி இருந்த அனைவரையும் காயப்படுத்தி விட்டாள்.

லேசாக புத்தி அதை உரைக்கவும் செய்தது. இருந்தும் தன் பேச்சை நிறுத்த விரும்பாதவள் பேசி முடித்த பின் குற்ற உணர்வில் தவித்தாள். அசையாமல் நிற்கும் கணவனின் நிழலை பார்த்தே அவனின் என்ன ஓட்டத்தை புரிந்து கொண்டவள் நேராக பார்க்க முடியாமல் தவித்தாள்.

“லயா நீ ஆசைப்பட்டு என் கூட வாழலையா.” அவனை பார்க்காது திரும்பிக் கொண்டாள்.

“கேட்டதுக்கு இன்னும் பதில் வரல லயா.” அவள் புறம் நகர்ந்தவன் முகத்தை நேராக பார்த்து கேட்க, பதில் சொல்லாமல் வேறு புறம் முகத்தை திருப்பினாள்.

தொட சென்றவன் அவள் விலகியவதை உணர்ந்து விரக்தியாக புன்னகைத்தான். கணவனின் சிரிப்பு உள்ளத்தை ஒரு நொடி அசைத்துப் பார்த்தாலும் இருக்கும் கோபத்திற்கு இறங்கி செல்லவில்லை.

“இத்தனை நாள் நீ என் மேல காட்டுன காதல் எல்லாமே பொய் அப்படித்தான லயா.”

….

“என்னை திருத்திட்டு இந்த வீட்டை விட்டு போலாம்னு இருந்திருக்க. இதுக்கு நடுவுல நான் கட்டாயப்படுத்துனதால இந்த குழந்தைய சுமக்குற”

….

“உன்னோட அன்பு நடிப்புன்னு புரியாம உன்கிட்டயும் ஏமாந்து இருக்கனா லயா.”

….

“என்னை இன்னும் குப்பையா, அசிங்கமா தான் பார்க்குறீயா.”

…..

“ஒவ்வொரு தடவையும் நான் உன்கிட்ட பாசமா பேசும் போது என்னை பைத்தியக்காரன் மாதிரி பார்த்தியா லயா. இல்ல இவன் இதே மாதிரி தான் அவ கூடயும் பேசி இருப்பான்னு சந்தேகப்பட்டாயா.”

….

“எதுக்காது வாய தொறந்து பதில் சொல்லு லயா. நீ என்ன பதில் சொன்னாலும் அது என் மனச ரொம்ப காயப்படுத்தும். இருந்தாலும் பரவால்ல ஏதாச்சும் ஒரு வார்த்தை சொல்லு.” என்பதற்கும் அவள் மௌனத்தை பதிலாக கொடுக்க,

“இந்த அசிங்கமானவனுக்கு பதில் கொடுக்க கூட நீ விரும்பலயா” என்றான் முற்றிலும் உடைந்து.

ஆடவன் குரலில் இருக்கும் வருத்தம் சட்டென்று மனதை மாற்ற நிமிர்ந்து பார்த்தாள். கலங்கிய விழிகளோடு தரணீஸ்வரன் நின்றிருக்க, “ஈஷ்வா” என பதட்டத்தோடு கண்ணீரை துடைக்க சென்றாள்.

அவளைப் போல் சற்றென்று விலகி நின்று தன் மனதின் வருத்தத்தை வெளிக்காட்டினான். தான் விலகி நிற்கும் பொழுது ஏற்படாத வலி கணவனின் விலகலில் அதிகம் ஏற்பட்டது பெண்ணுக்கு.

“நான் உனக்கு இதுவரைக்கும் பண்ணதே போதும் லயா. இனியும் உன்னை கஷ்டப்படுத்த விரும்பல. உனக்கு இந்த வாழ்க்கை வேணாம். இந்த அசிங்கத்தோட வாழ்ந்து நீயும் அசிங்கமாகிடாத. உனக்கு பிடிச்ச மாதிரி நீ வாழு என்னால எந்த தொந்தரவும் வராது.” என்றவன் நொடி நிறுத்தி…

“நான் உனக்கு விவாகரத்து கொடுத்திடுறேன்.” என்றான்.

இதயத்தை பிய்த்து எறிந்தது போல் இருந்தது அவன் சொல்லிய வார்த்தை. இவ்வளவு நேரம் கோபத்தில் சிவந்த கண்கள் சற்றென்று வலியின் வீரியம் தாங்காமல் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தது.

சிலையாக நிற்கும் மனைவியை உயிர் பெற செய்தான், “இந்த வீட்டை விட்டு போய்டு லயா.” என்ற வார்த்தையில்.

“என்னங்க” திகைப்போடு வரும் மனைவியின் வார்த்தையை உள்வாங்கியவன், “இதுக்கு மேலயும் இந்த வீட்ல உன்ன வச்சிருந்தா நானெல்லாம் மனுசனே இல்ல. போதும் என் கூட வாழ்றன்னு உன்னை நீயே ஏமாத்திட்டு இருந்தது. உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கைய வாழு லயா.” என்று விட்டு வேகமாக அறையிலிருந்து மறைந்தான்.

ஆடவன் என்ன பேசி விட்டு சென்றான் என்பதை முழுவதுமாக உணர்ந்து கொள்ள பல நொடிகள் தேவைப்பட்டது அகல்யாவிற்கு. அப்போதுதான் அவள் மனம் பொறுமையாக என்ன பேசினாய் என்பதை ஒவ்வொன்றாக நினைவு படுத்தியது. மனதில் இருந்து பேசவில்லை என்றாலும் வந்த வார்த்தை உண்மை என்பதால் பேசிய குற்றத்திற்காக கண்ணீர் வடித்தாள்.

அழுகாமல் தன்னை திடப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தவன் செவியில், “போதுமா! நீ வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சிருச்சு இப்போ உனக்கு சந்தோஷம் தான. நல்லா இருந்த புருஷன் பொண்டாட்டிய இப்படி பிரிச்சிட்டியேடி பாவி. ஏற்கனவே நீ பண்ண பாவத்துக்கும் சேர்த்து சீரழிஞ்சு தான் நிப்ப.” என சபித்துக் கொண்டிருந்தார் சிவானியை.

இப்பொழுது வாக்குவாதம் செய்தால் தனக்கு எதிராக சூழ்நிலை திரும்பிவிடும் என்பதால் பாவமான முகத்தோடு அமர்ந்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே தரணிஸ்வரன் படியிறங்க,

“கடைசியா சொல்றேன் இங்க இருந்து கிளம்பிடு.” என்றார் ஆதிலட்சுமி.

“இங்க பாருங்க நான் உங்க கிட்ட  சண்டை போடவோ இல்ல புருஷன் பொண்டாட்டிய பிரிக்கவோ வரல. என் குழந்தை உயிரை காப்பாத்த தான் உங்க கிட்ட வந்து இருக்கேன். இந்த குழந்தைக்கு அப்பா என்கிற உரிமையில தான் தரணி கிட்ட பிச்சை கேட்க வந்திருக்கேன். என் குழந்தை உயிரை மட்டும் காப்பாத்தி கொடுங்க  நீங்க சொல்றதுக்கு முன்னாடி நானே கிளம்பிடுவேன்.”

“உன் வார்த்தைய மத்தவங்க வேணா நம்பலாம். என்னால ஒரு துளி கூட நம்ப முடியாது. சாமி மேல சத்தியமா சொல்றேன் இது என் பிள்ளையோட குழந்தையா இருக்க வாய்ப்பே இல்லை.”

“அதே சாமி மேல சத்தியமா சொல்றேன் இது தரணியோட குழந்தை.”

“என் பையனோட குழந்தைன்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?”

“அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கை தான் ஆதாரம்.”

“அடிச்சு பல்ல ஒடச்சிடுவேன். ஆதாரம் கேட்டா அது மட்டும் கொடுடி.” என்று அடிக்க கையை ஓங்கினார் ஆதிலட்சுமி.

உள்ளுக்குள் தகாத வார்த்தைகளால் முன்னாள் மாமியாரை திட்டிக் கொண்டிருந்தவள் தரணி வருவதை அறிந்து, “என் பையன் உடம்புல ஓடுற ரத்தம் உங்க மகனோடது. உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் செக் பண்ணி பாருங்க. நான் சொல்றது உண்மைன்னு உங்க எல்லாருக்கும் புரியும்.” என முதலைக் கண்ணீர் வடித்தாள்.

“ஆதி இந்த பொண்ணு கிட்ட பேசுறது எல்லாம் ஆகாத காரியம். நீ போலீஸ்க்கு போன் பண்ணு அவங்களே இவளை வெளிய அனுப்புவாங்க.”

“நான் வெளிய போக தயாரா இருக்கேன் மாமா. ஆனா, என் குழந்தைய மட்டும் பத்திரமா பார்த்துப்பன்னு எனக்கு வாக்கு கொடுங்க.”

“என்னை மாமான்னு சொல்ல என் மருமகள் அகல்யாவிற்கு மட்டும் தான் உரிமை இருக்கு. பொண்ணா இருக்கன்னு பொறுமையா பேசிட்டு இருக்கேன். தேவை இல்லாம பேசி அசிங்கத்தை தேடிக்காத” நாசுக்காக தன் கோப அளவை காட்டிவிட்டார் தயாளன்.

“நீங்க என்னை எவ்ளோ வெறுத்து ஒதுக்கினாலும் எனக்கு சந்தோசம் தான். நான் பண்ணதுக்கு தண்டனையா உங்க கோபத்தை ஏத்துகிறேன். என் மேல இருக்க கோபத்தை என் மகன் கிட்ட காட்டிடாதீங்க. அவனால வாய் பேச கூட முடியாது.” என கௌசிக்கை கட்டி அணைத்துக் கொண்டு கதறினாள்.

சிறிதும் மனம் இறங்கவில்லை அங்கிருந்த பெரியவர்களுக்கு. முடிவாக அவளை அங்கிருந்து கிளம்ப சொன்னார்கள். அவளோ அழுது ஆதிலட்சுமியின் காலில் விழுந்தாள். இரக்கம் பார்க்காமல் அவளை தள்ளி விட்டவர் இழுத்தவாறு வெளியே போக,

“அம்மா அவள விடுங்க.” சத்தமாக சொன்னான் தரணீஸ்வரன்.

மகனின் பேச்சைக் கேட்டவர் தன் செயலை நிறுத்த, “இப்பவாது உனக்கு இந்த வார்த்தைய சொல்லணும்னு தோணுச்சே தரணி.” என்றாள் சிவானி.

கணவன் பேசி விட்டு சென்ற வார்த்தையில் தன் தவறை உணர்ந்தவள் அவனிடம் மன்னிப்பு கேட்க வெளியில் வந்தாள். அந்த நேரம் சரியாக தரணீஸ்வரன் சிவானியை காப்பாற்ற, திட்டுக்கிட்ட அகல்யா அவனுக்கு பின்னால் நின்றாள் திகைப்போடு.

“நம்ம மகன் முகத்துக்காகவாது என் இந்த வீட்ல இருக்க அனுமதி தரணி.” என அவன் காலை பிடித்து கெஞ்சினாள்.

“தரணி அவ வார்த்தைய நம்பி எதையும் செஞ்சிடாத. விஷமுள்ள பாம்பு எப்ப வேணாலும் உன் உயிரை எடுக்கும்.”

“அவ இந்த வீட்ல தான்  இருக்க போறா. எங்க மகனோட உடம்பு முழுசா சரியாகுற வரைக்கும் அவ என்னோட பாதுகாப்புல இங்க தான் இருப்பா.” என்றவன் வார்த்தையை கேட்ட அகல்யா நிலைத்தடுமாறி படிக்கட்டில் அமர்ந்தாள்.

உச்சி மண்டை குளிர்ந்தது சிவானிக்கு. வாய்க்கொள்ளா புன்னகையோடு தரணீஷ்வரனை நெருங்கியவள் தொட செல்ல, அவன் கொடுத்த முறைப்பில் செயலை நிறுத்தினாள். போகப் போக தன் வழிக்கு வந்து விடுவான் என்ற எண்ணத்தில்,

“இந்த ஒரு வார்த்தை போதும் தரணி எனக்கு. நம்ம மகன் முழுசா சரியாகிடுவான்னு நம்பிக்கை வந்துடுச்சு. கௌஷிக்க சரி பண்ணி கொடுத்துட்டா நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன். உனக்கும் உன் மனைவிக்கும் நடுவுல கண்டிப்பா வரமாட்டேன்.” நல்லவளாக பேசினாள்.

“உன் வார்த்தைய நம்புறேன். குழந்தைக்கு என்ன பண்ணனுமோ பண்ணு. எவ்ளோ செலவானாலும் நான் தரேன்.”

“தரணி” கோபத்தோடு அழைத்த அன்னையிடம், “இது என்னோட முடிவு அம்மா இதுல நீங்க தலையிடாதீங்க. என் மகன் இந்த வீட்ல இருக்குறது உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்லுங்க நாங்க மூணு பேரும் வெளிய தங்கிக்கிறோம்.” தரணியிடமிருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்காத அகல்யா சத்தம் இல்லாமல் தன் அறைக்கு திரும்பினாள்.

உடல் முழுவதையும் ஐஸ்பெட்டில் வைத்தது போல் இருந்தது சிவானிக்கு. திமிரோடு ஆதிலட்சுமியை ஏறிட்டவள் கமுக்கமாக சிரிக்க, “அந்த ரூம்ல தங்கிக்கோ.” என்று அவளுக்கு ஒரு அறையை காட்டினான்.

கௌஷிக்கை அழைத்துக் கொண்டு எதுவும் நடக்காது போல் அவளுக்கான அறையில் நுழைந்து கொண்டாள். மகனை முடிந்த அளவிற்கு கோபமான வார்த்தைகளால் திட்டி விட்டார்கள் பெற்றோர்கள். எதற்கும் பதில் கொடுக்காதவன் அமைதியாக வெளியேறினான் வீட்டை விட்டு.

வீட்டின் பெரியவர்களுக்கு என்ன செய்வதென்று சுத்தமாக புரியவில்லை. சிவானியின் வருகை ஏதோ சதி திட்டத்தால் நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. கூடவே மீண்டும் மகனின் குணம் அவள் புறம் சாய்ந்ததை எண்ணி வருந்தினார்கள்.

நம்பி வீட்டிற்கு அழைத்து வந்த பெண்ணின் வாழ்க்கை என்னாவது என்ற பயமும் அவர்களுக்குள் உருவாக, வீட்டிற்கு வந்த துஷ்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது என்று சிந்தித்து கொண்டு இருந்தார்கள். அதில் நேரம் போனதே தெரியவில்லை அவர்களுக்கு. காலை நடந்த சம்பவம் மாலை வரை இழுத்துச் சென்றிருந்தது.

தயாளன் மனைவியை முடிந்த அளவிற்கு சகஜ நிலைக்கு மாற்ற, நிறைமாதமாக இருக்கும் மருமகள் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தார் ஆதிலட்சுமி.  தலையில் அடித்துக் கொண்டு வேக வேகமாக உணவை தயாரித்தார். சூடு குறைவதற்கு முன் தட்டில் கொஞ்சம் போட்டவர் மருமகள் அறை நோக்கி நகர, அவளே வந்து கொண்டிருந்தாள்.

புன்னகை முகமாக சாப்பிட அழைத்தவர் அதிர்ந்தார் அவள் கையில் இருக்கும் பெட்டிகளை பார்த்து. “என்னங்க” என்று சத்தமிட்டு அழைத்தார் கணவனை. அந்த சத்தத்தில் சிவானியும் வெளியில் வர,

“நீங்க சொன்ன மாதிரி உங்க மகனை  மாத்திட்டேன். என் வேலை முடிஞ்சுது நான் கிளம்புறேன்.” அவர் முகத்தை பார்க்காமல் சொன்னவள் நடக்க,

“உன் வயித்துல இருக்க குழந்தையோட நிலைமை என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றார் ஆதிலட்சுமி.

“நான் பண்ண தப்புக்கு கிடைச்ச தண்டனை இந்த குழந்தை. வாழ்க்கை முழுக்க என்னோட சேர்ந்து அதுவும் கஷ்டப்படட்டும்.”

“என் வீட்டு வாரிசு எதுக்காக கஷ்டப்படணும். அதுக்கு நான் இருக்கேன். உன்ன அவ்ளோ சீக்கிரம் இந்த வீட்டை விட்டு போக விடமாட்டேன். குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ இங்கதான் இருக்கணும்.”

ஏளன சிரிப்போடு மாமியாரை பார்த்தவள், “குழந்தைக்காக தான் இருக்க சொல்றீங்களா.” கேட்டாள்.

“சொல்றதுல என்ன தப்பு இருக்கு? உங்கள மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு என்னால முடிவெடுக்க முடியாது. உங்களுக்கு வேணா ஒரு குழந்தையோட எதிர்காலம் சாதாரணமா இருக்கலாம். என்னை பொறுத்த வரைக்கும் விதை சரியா இல்லன்னா நாளைக்கு அது ஒரு நல்ல மரமா நிக்காது. என் பேர குழந்தை இந்த சமூகத்துக்கு முன்னாடி நல்லபடியா வாழனும்னு நினைக்கிறேன். இப்போ உன்ன பத்தியோ இல்ல என் மகனைப் பத்தியோ கவலைப்பட நான் தயாரா இல்லை.”

“பேச்சு மாற மாட்டன்னு சொல்லிட்டு இன்னைக்கு பேச்சு மாறுறது நல்லா இல்ல.”

“அங்க மட்டும் என்ன வாழுதாம்.”

“சொல்லாம சொல்றீங்க போல நீயும் அசிங்கமான வாழ்க்கைய தான் விரும்பி வாழ்ந்தன்னு.”

“அசிங்கம்னு அடிக்கடி சொல்லாத அகல்யா. ஒரு அம்மாவா என் மகனை இந்த மாதிரி சொல்றதை ஏத்துக்க முடியல.”

“எனக்கு இங்க இருக்க பிடிக்கல நான் எங்க வீட்டுக்கு போறேன் அவ்ளோ தான்.”

“எடுக்கிற முடிவ நல்லா யோசிச்சு எடு. இப்போ நீ இங்க இருந்து போனினா வந்தவளுக்கு நீயே இடம் கொடுத்த மாதிரி ஆகிடும்.”

“அது அவளோட இடம்”

“அப்போ உனக்கு வேணாம்”

“வேணாம்னு முடிவு பண்ணதால தான் இங்க இருந்து போறேன்.”

“உன் புருஷனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுத்துட்டு போற.”

“விட்டுட்டு போனவ கிட்ட திரும்ப கொடுக்கிறேன்.”

ஆதிலட்சுமி கடுமையாக மறுத்துக் கொண்டிருக்க, “அன்னைக்கு என்ன கேட்டாலும் செஞ்சு தரேன்னு சொன்னிங்களே. இன்னைக்கு கேட்கிறேன் என்னை இந்த வீட்டை விட்டு போக விடுங்க.” என்றாள் மருமகள்.

மருமகளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஆதிலட்சுமி. என்ன நினைப்பில் இப்படி ஒரு வார்த்தையை சொல்கிறாள் என்பதை அறிய முடியாது யோசனைக்கு ஆளானவரை, “கிளம்புறேன்” என நினைவுக்கு திருப்பினாள் அகல்யா.

“அவசரப்படாதம்மா தரணி இப்போ இங்க இல்ல. வரட்டும் எல்லாரும் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்.” தன் பங்கிற்கு மருமகளை தடுத்தார் தயாளன்.

அவள் பதில் கொடுப்பதற்கு முன்னால் ஒலித்தது, “அவ போகட்டும் தடுக்காதீங்க. வாழ விருப்பம் இல்லன்னு சொல்றவளை கட்டாயப்படுத்தி வாழ வைக்க நமக்கு உரிமை இல்லை. பண்றது தப்புன்னு ஒரு நாள் நிச்சயம் புரியும். அன்னைக்கு என் மருமகளா உரிமையோடு இந்த வீட்டுக்கு வரட்டும்.” என்றவர் அகல்யாவிடம்,

“இந்த வீட்டை விட்டு நீ தாராளமா போகலாம்.” என்றார்.

தான் போறேன் என்றாலும் போகவிடாமல் தடுக்க வேண்டிய மாமியாரே ‘போ’ என்றதில் இன்னும் வலி அதிகமானது அவள் உள்ளத்தில்.  வேண்டியவள் வந்ததும் தன்னை ஒதுக்குவதாக உணர்ந்து வெளியேறினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
49
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *