445 views

இன்னைக்கே முடிக்கணும்னு நினைச்சேன் முடியல. நாளைக்கு இறுதி அத்தியாயம் வரும். ரெண்டு பேருக்குள்ள என்ன சண்டையா இருக்கும்னு யாராவது கெஸ் பண்ணீங்களா?)

 

 

 

நிதானத்தோடு வேலை செய்ய முடியவில்லை ரகுவரனால். காலை வீட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்வண்டி போல் விடாமல் அவனை துரத்திக் கொண்டிருந்தது. தலை குனிந்து கண்ணீரை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் மனைவியின் சிந்தனைகள் தான் அவனுக்குள் அதிகம்.

கடைசியாக அவன் நகரும் பொழுது பேச்சை ஆரம்பித்த மகியின் செய்கைகள் நினைவிற்கு வர, ஒரு நொடி தாமதித்து நின்றிருந்தால் இன்றோடு பிரச்சனை முடிந்திருக்குமோ என தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அதே தீவிரமான சிந்தனை தான் தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்த மகிழினிக்கும். கணவன் பேசிய வார்த்தையில் உள்ளம் வெகுவாக காயப்பட்டது உண்மை. கூடவே சுதாரிப்போடு செயல்படாததால் பாதிக்கப்பட்டதை நினைத்து அவன் கோபத்திற்கான சமாதானங்களையும் தனக்குள் செய்து கொண்டாள்.

யோசனையில் இருந்தவளை இடைநிறுத்திய ஜூனியர், “மேடம் லஞ்ச் டைம் முடிஞ்சதும் அந்த கேச விசாரிக்கணும்.”  சம்மதமாக பதில் கொடுத்தவள் வேறொரு வேலையை கவனித்துக் கொண்டிருக்க, கணவன் முகம் ஞாபகத்திற்கு வந்தது.

தினமும் ரகுவரனுக்கு சாப்பாடு அனுப்பும் பொறுப்பை சாந்தி ஏற்றுக் கொண்டார். அந்த நேரம் கணவனிடம் செல்வது மட்டுமே இவள் வேலையாக இருந்தது. இன்று சமையலை தன்னிடமே ஒப்படைத்து விட, மதிய உணவிற்கு என்ன செய்வான் என கவலை கொண்டாள். அவனுக்காக கொண்டு வந்த உணவு இன்னும் அவளிடம் அப்படியே இருக்க, இடம் மாற்றும் யோசனையில் இருந்தாள்.

சிறு நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருந்தான் ரகுவரன். சாந்தி சாப்பாடு அனுப்பாததால் அவள் கொண்டு வருவாள் என்று. வருபவள் தன் முகத்தை பார்த்து தான் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற மிதப்பில் வாசலை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

இருவரும் இன்னும் யோசனையிலேயே இருக்க, மதியம் மூன்றை கடந்தது மணி. ஒரே நேரத்தில் தம்பதிகள் முடிவெடுத்தார்கள் கிளம்பலாம் என்று. அதன்படி மனைவியை பார்க்க ரகுவரன் புறப்பட,  சாப்பாடோடு கிளம்பினாள் மகிழினி.

இவ்வளவு தூரம் இறங்கி வந்தவர்கள் ஒரே ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பி இருக்கலாம். இன்னமும் உள்ளுக்குள் இருக்கும் வீம்பு அதை செய்யவிடாமல் தடுத்து விட, இல்லாத மனைவியைக் காண வந்திருந்தான் ரகுவரன்.

“ஹலோ சார்!” என்றவருக்கு புன்னகையோடு தலையசைத்தவன் மனைவியை விசாரிக்க, “மேடம் இப்பதான் எங்கயோ கிளம்பி போனாங்க” என்றார்.

சிறு ஏமாற்றத்தோடு வெளியில் வந்தவன் அவளுக்கு அழைக்கலாம் என்ற முடிவோடு கைபேசியை எடுக்க, ‘எதுக்குடா அவளுக்கு கால் பண்ற? நேத்து வரைக்கும் நீ சாப்பிட்டியானு அக்கறைப்படல சரி. இன்னைக்கு அவளை விட்டா சாப்பாடு கொடுக்க ஆள் இல்லைன்னு தெரிஞ்சும் ஒரு வார்த்தை கூட கேட்காம இருக்கா. நீயா ஃபோன் பண்ணி அசிங்கப்படாத.’ மனசாட்சி தடுத்து விட்டது.

கண்மூடித்தனமான கோபத்தை தனக்குள் உருவாக்கிக் கொண்டவன் புறப்பட்டான். பாதி தூரம் கடந்து விட்டதும் கைப்பேசி ஒலி கொடுத்தது. கடுப்பில் யார் என்று பார்த்தவன் இன்னும் கடுப்பாகி போனான் மனைவியின் எண்ணைக் கண்டு.

உயிர்பித்து பதில் கொடுக்காதவன் தனக்குள் புலம்பிக் கொண்டான், “இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ற? இப்பதான் நான் ஒருத்தன் இருக்கன்னு உனக்கு தெரிஞ்சதா. ஒருத்தன் காலையிலயே சாப்பிடாம வந்துட்டான் மதியமும் வீட்ல இருந்து சாப்பாடு வரலன்னு தெரிஞ்சும் கொஞ்சமாச்சும் கவலை இருந்துதா உனக்கு. நீ எப்படி இருக்கியோ இனிமே அதே மாதிரி தான் ரகுவரனும் இருப்பான்.” என்று.

தொடர்ந்து அவளிடம் இருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது எதையும் எடுக்கவில்லை ரகுவரன். தவறிய அழைப்புகள் பத்துக்கும் மேலாக சென்றதும் அழைப்பு வருவது நின்று போனது. கவலை கொள்ளாதவன் தன் வேலைகளை கவனித்தான்.

எப்பொழுதும் ஐந்து மணிக்கு மேல் அதிகம் வேலை பளுவை சுமத்திக் கொள்ளாதவனுக்கு இன்று தானாகவே வேலை சூழ்ந்து கொண்டது. அதையெல்லாம் முடித்துவிட்டு வீடு வந்து சேர மணி எட்டு ஆகிவிட்டது. கீழ்வீடு காலியாக இருந்தது. குடும்ப ஆட்களை எண்ணிக்கொண்டே வந்தவனுக்கு உடல் ஒத்துழைக்காததால் ஓய்வெடுக்க தன் வீட்டிற்கு படி ஏறினான்.

சிறிது நேரம் கண் மூடியவன் சோர்வில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டான். கண் திறக்கும் பொழுது அறை இருட்டாக இருந்தது. தூக்க கலக்கத்தில் திரும்பிப் படுத்தவன் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு மணியை பார்த்தான். நள்ளிரவு நேரத்தையும் தாண்டி இருந்தது கடிகார முட்கள். இவ்வளவு நேரம் தூங்கி விட்ட ஆச்சரியத்தில் சுழன்றவன் மீண்டும் தூங்கிவிட்டான்.

ரகுவரனுக்கு போதாத நாள் போல மிக தாமதமாக எழுந்தான். தன்னருகில் இல்லாத பிள்ளைகளை தேடி வெளியில் வந்தவன் மணியை பார்த்து அதிர்ந்தான். அவசரமாக குளியலை போட்டவன் செல்ல மகளை கூட விசாரிக்காமல் ஓட ஆரம்பித்தான் அலுவலகத்திற்கு. வேகமாக படி இறங்கி வந்தவன் கார் பார்க்கிங் இடத்திற்கு செல்ல, கால்கள் தடைப்பட்டது.

யோசனையோடு கீழ் வீட்டை திரும்பி பார்க்க, அங்கு அனைவரும் கூடி இருந்தார்கள். கையில் இருக்கும் கடிகாரத்தில் மீண்டும் மணியை பார்த்தவன், ‘இந்த நேரத்துல எல்லாரும் ஒன்னா இருக்காங்க!’ என்று யோசித்தான்.

கூடவே மான்குட்டியும் அங்கு இருப்பதை அறிந்து புருவம் சுருக்கினான். சர்வ சாதாரணமாக உள்ளேன் நுழைந்தவன், “தங்கம் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலையாடா? என விசாரித்தான்.

“போகல அப்பா”

“எதுக்குடா போகல?”

“அம்மாக்கு கால்ல அடி பட்டுடுச்சி இல்லப்பா அதான்.” என்றதும் திடுக்கிட்டது அவன் மனம்.

“அம்மாக்கு என்னடா?”

“நேத்து எல்லாம் எங்க ரகு போன? ஒரு எமர்ஜென்சிக்கு போன் போட்டா எடுக்க மாட்டியா. அப்படி என்ன அவ மேல உனக்கு கோபம்.”

“என்னம்மா சொல்றீங்க, அவ எங்க? என்னாச்சு அவளுக்கு?”

“ரொம்ப தான் அவ மேல அக்கறை. அத்தனை தடவ போன் பண்றா எடுக்கணும்னு கூடவா தோணாது.” ஆகாஷிடம் மல்லுக்கட்டும் பொறுமை இல்லாததால் ,

“அம்மா எங்கடா இப்போ” விசாரித்தான் மகளிடம்.

“அந்த ரூம்ல அப்பா” பரபரப்பாக ஓடியவன் கதவை திறக்க, எங்கோ பார்த்தபடி அமர்ந்துக் கொண்டிருந்தாள் மகிழினி.

ரகுவரனுக்கு உணவு எடுத்துச் சென்றவள் வலது காலில் சிறு பிசைவு ஏற்பட்டிருந்தது நேற்று நடந்த விபத்தில். காலில் சுள்ளென்று வலி எடுத்ததால் துணைக்கு கணவனை அழைத்தால். தொடர் அழைப்புகளுக்கு பதில் கிடைக்காததால் அங்கிருந்தவர்கள் உதவியோடு மருத்துவமனைக்கு சென்றாள்.

சிறு பிசைவு என்றாலும் நடக்க முடியாமல் சிரமப்பட்டவள் இந்த முறையும் கணவனுக்கு தான் அழைத்தாள். பதில் கிடைக்காததால் உள்ளம் கலங்கியவள் தமையனின் உதவியால் வீடு வந்து சேர்ந்தாள்.

அதைக் கூட ஓரளவுக்கு ஜீரணித்து கொண்டவள் அதிர்ந்து போனால் ரகுவரன் அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் செய்தியை கேட்டு.
எப்பொழுது வந்தான் என்று அங்கு இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. தூங்கச் சென்ற பிள்ளைகள் சொல்லி தான் விவரம் தெரியும்.

“என்னடி ஆச்சு?” எனும்போது குரல் உடைந்து விட்டது ரகுவரனுக்கு.

அவளும் உடைந்து விட்டாள் கண்ணீரைத் தொடர்ந்து வெளியேற்றி. வீட்டுக்காரியின் கண்ணீரில் பதறியவன், “என்னடி ரொம்ப வலிக்குதா” அக்கறையாக கன்னத்தில் கை வைக்க, விலகினாள்.

“இப்ப கூட உனக்கு கோபம் தான் பெருசா டி…”

“உன்ன விடவா ரகு எனக்கு கோபம் பெருசா இருக்க போகுது.”

“இப்ப நான் என்னடி உன்கிட்ட கோபத்தை காட்டிட்டேன். மதியம் கூட எல்லாத்தையும் மறந்துட்டு உன்னை பார்க்க ஆஃபீஸ் வந்திருந்தேன் தெரியுமா. இப்படி ஆச்சுன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்ல மாட்டியா”

“அவ உனக்கு தொடர்ந்து கால் பண்ணிட்டே இருந்திருக்கா நீ தான் எடுக்காம இருந்திருக்க.” என்ற அன்னையின் கூற்றில் அதிர்ந்தவன் பதில் சொல்ல வார்த்தை வராமல் தடுமாறினான்.

“என்னதான் அவ பண்ணது தப்பாவே இருந்தாலும் இந்த அளவுக்கு நீ போவன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நான் ஃபோன் எடுத்தேன் அதனால விஷயம் தெரிஞ்சுது இல்லன்னா என்ன ஆகி இருக்கும். எங்க யாரையும் கூப்பிடாம உன்ன தான் கூப்பிட்டு இருக்கா” ஆகாஷ்.

“நான் அந்த நேரம் உன்ன பார்க்க ஆஃபீஸ்க்கு வந்திருந்தேன். அங்க இருந்தவங்களை வேணா கேட்டு பாரு. நீ இல்லன்னு சொன்னதும்  கிளம்பி வரும்போது தான் போன் வந்துச்சு.”

“அப்போ பார்த்தும் தான் எடுக்காம இருந்திருக்க.”

பதில் கூறாமல் ரகுவரன் மௌனம் காக்க, “இந்த அளவுக்கு நீ என்னை வெறுப்பன்னு கொஞ்சமும் நினைச்சு பார்க்கல ரகு.”  சொல்லும் போதே விசும்பினாள்.

மனைவியின் அழுகையில் துடித்தவன் இன்னும் நெருங்கி அமர்ந்து, “சத்தியமா அப்படி எல்லாம் எதுவும் இல்லடி. என்னை கூட கவனிக்காம வேலை செஞ்சிட்டு இருக்கன்ற கோவத்துல தான் ஃபோன எடுக்கல. ராத்திரி வீட்டுக்கு வரும்போது ரொம்ப டயர்டா இருந்துச்சு. கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கலாம்னு படுத்தேன். எப்படி தூங்குனன்னு தெரியல. காலைல தான் எந்திரிச்சேன்.” தன் தரப்பு விளக்கத்தை எடுத்துரைத்தான்.

மூளைக்கு அவை புரிந்தாலும் மனது ஏற்றுக்கொள்ள மறுத்தது அவளுக்கு. அவனின் நிராகரிப்பு அதுவும் முடியாமல் இருந்த நேரம் அவன் கொடுத்த நிராகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறினாள் உள்ளுக்குள். தவறாக நினைத்து விட்ட மனைவிக்கு புரிய வைக்க முயலாமல் அடிபட்ட காலை கையில் ஏந்தி,

“ரொம்ப வலிச்சுதா பொண்டாட்டி.” என வருந்தினான்.

பதில் பேசாமல் அவள் எங்கோ பார்த்திருக்க, ரகுவரின் பேச்சு கோபம் கொண்ட அனைவரின் மனதையும் மாற்றியது. இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணிய சாந்தி அப்புறப்படுத்தினார் எல்லோரையும்.

தம்பதிகள் மட்டும் தனித்திருந்தார்கள். தனிமையில் இருப்பதை உணர்ந்தவன் அவளோடு நெருக்கம் கொண்டு, “எனக்கு எப்படி தெரியும் உனக்கு இந்த மாதிரி ஆகி இருக்குன்னு. ஏதோ ஒரு கோபத்துல எடுக்காம இருந்துட்டேன் அவ்ளோ தான். இனிமே சத்தியமா நீ எப்ப கூப்பிட்டாலும் உடனே எடுத்துடுவேன்.” தோள் மீது கை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

அழுகை இன்னும் அதிகமானது அவளிடத்தில். மகிழனியின் அழுகையில் மனம் நொந்தவன் இறுக்கி அணைத்து, “அழாதடி கஷ்டமா இருக்கு.” என தடவி கொடுக்க, கைகளை உதறிக் கொண்டு விலகி அமர்ந்தாள்.

“பொண்டாட்டி உனக்கு இப்படி இருக்குன்னு தெரிஞ்சும் நான் தூங்க போயிருப்பேன்னு நினைக்கிறியா?”

….

“உன்ன தாண்டி கேட்கிறேன் சொல்லு?” பதில் சொல்லாமல் விலகி அமர்ந்தாள்.

வெகு நேரமாக கெஞ்சிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு, “என்னை பத்தி புரிஞ்சு வச்சிருந்தா இந்த மாதிரி ஒரு நினைப்பு மனசுக்குள்ள வந்திருக்குமா. உன் மேல கோபத்துல இருக்கிறது உண்மை தான். அதுக்காக உனக்கு என்ன ஆனாலும் சந்தோஷப்படுவன்னு எப்படி நினைக்க முடிஞ்சது. இந்த நினைப்புல தான் இத்தனை நாள் என் கூட குடும்பம் நடத்திட்டு இருந்தியா.” கொட்டினான் ஆதங்கத்தை.

அதற்கும் மௌனம் காக்க, “உன்கிட்ட எல்லாம் பேசுறதே வேஸ்ட்.” என்றவாறு வெளியேறினான்.

***

 

வீட்டில் இருக்கும் அனைவரும் அவரவர் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க, வெளியில் சென்றவனும் அறைக்குள் முடங்கியவளும் மட்டும் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். வேண்டும் ஆனால் வேண்டாம் என்ற நிபந்தனையோடு இருவரும் தங்கள் வட்டத்தை சுருக்கிக்கொள்ள, பஞ்சாயத்து செய்து மூக்குடைய விருப்பமில்லை வீட்டில் இருப்பவர்களுக்கு.

இவர்களாகவே திருந்தட்டும் என்ற முடிவோடு விலகி விட்டனர். மான்குட்டிக்கு நன்றாக புரிந்தது தாய் தந்தையர் இடையில் மனக்கசப்பு என்று. மகிழ்வரனுக்கும் மூளையில் பொறி தட்டினாலும் விளையாட்டு பிள்ளை விளையாட்டு உலகத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டது.

காலை சுடு தண்ணீர் கொட்டியது போல் வேகமாக வேலைக்கு ஓடியவன் அதை மறந்து விட்டு கடற்கரையில் அமர்ந்துக் கொண்டிருக்கிறான் உச்சி வெயிலில். கடல் அலை மிதமான வேகத்தில் அவன் காலை நனைத்தாலும் ஒட்டி உறவாடாத மனைவியின் ஒதுக்கமே அதிக அளவு ஆக்கிரமித்தது மனதை.

ஏசி அறையில் படுத்து இருந்தவள் கால் முக்கால்வாசி தன் வலியை குறைத்துக் கொள்ள, எழுந்து நடமாடும் எண்ணம் இல்லாமல் சென்றவனோடு தன் எண்ணத்தை விளையாட விட்டுக் கொண்டிருக்கிறாள். இருவருக்கும் தெரியும் ஒரு நொடியில் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும் என்று. தெரிந்ததை தெரியாதது போல் காட்டிக் கொள்வதில் இருவரும் கைதேர்ந்தவர்கள் போல!

உடல்நிலை சரியில்லாத மனைவியிடம் அதிக வீம்பை பிடிக்க துணிவு இல்லாமல் அழைத்தான். அவன் எண்ணத்தில் இருந்தவள் செவியில் அவை விழாமல் போக, அழைப்பு விடுத்தவன் கடுப்பாகி, ‘இப்ப கூட உன்னோட திமிரு கொஞ்சம் கூட குறையல டி. ஒருத்தன் இதுக்கு மேல எப்படி இறங்கி போக முடியும். இதான் லாஸ்ட் இனிமே எப்பவும் உனக்கு ஃபோன் பண்ண மாட்டேன்.’ திட்டினான் மனதிற்குள்.

“மகி ஜூஸ் குடி” சாந்தியின் குரலும் அவள் செவியில் விழவில்லை மொத்த மனதும்  வருத்தத்தில் சிறைப்பட்டுக் கொண்டிருப்பதால்.

“மகி உன்ன தான் கூப்பிடுறேன்.” என்று உசுப்பினார்.

மயக்கத்தில் இருந்து தெளிந்தவள் பதில் கூறாமல் அத்தையை பார்க்க, “இந்த வீம்பு நல்லதுக்கு இல்லை. அவன் நினைப்புல இருக்கிறதுக்கு ஒரு தடவை பேசிப் பார்க்கலாம்.” என்றிட,

“அவனுக்கு நான் வேணாமா அத்தை. விவாகரத்து பண்ண போறானாம். இதுக்கு மேல பேசி என்ன ஆகப்போகுது.” விரத்தியோடு பேச்சை முடித்தாள்.

“ரகு அப்படி பண்ற ஆள் இல்லைன்னு உன் மனசாட்சிக்கு தெரியும் மகி. கோபத்துல அவன் பேசுற வார்த்தைய பெருசு பண்ணாத.”

“கோபத்துல நாயே பேயேன்னு கூட திட்ட வரும் அத்தை. அது எப்படி என்னை விவாகரத்து பண்ண போறன்னு அவன் சொல்லலாம். இதே வார்த்தைய நான் சொல்லியிருந்தா சும்மா இருந்திருப்பானா.”

கண் கலங்கும் மருமகளை தேற்ற எண்ணியவர், “இதுக்கு எதுக்காக மகி இவ்ளோ எமோஷனல் ஆகுற. ரகு சட்டைய பிடிச்சி ஏன்டா இப்படி சொன்னன்னு  கேட்க வேண்டியது தான.” என முதுகை தடவி கொடுத்தார்.

வெகு நேரமாக பேசாமல் இருந்தவள், “அதான் அன்னைக்கே சொல்லிட்டானே நான் செத்தாலும் என் மூஞ்சிய பார்க்காதன்னு. எந்த மூஞ்சிய வச்சிட்டு  அவன் முன்னாடி நிக்க சொல்றீங்க.” கண்கள் கரிப்பதை நிறுத்தவில்லை.

“திரும்பத் திரும்ப நான் சொல்றது ஒரே வார்த்தை தான் மகி. ரகுவரன் கோபத்துல தான் அப்படி சொன்னான்னு உன் மனசுக்கு நல்லா புரியும்.”

“ஒத்துக்கிறேன் அத்தை கோபத்துல தான் சொன்னான். ஆனா, இவ்ளோ நாளா என் மேல அந்த கோபம் எப்படி இருக்குன்னு தான் கேட்கிறேன். அவன் மனசுல என்னைக்கும் எனக்கு ரெண்டாவது இடம் தான் அத்தை. பொண்ணுக்காக கல்யாணம் பண்ணான். பொண்ணுக்காக என் கூட வாழ்ந்தான். என்னால அவன் பொண்ணுக்கு ஒரு ஆபத்துன்னு தெரிஞ்சதும் விலகிட்டான்.”

“இப்ப என்னதான் முடிவு பண்ணி இருக்க?”

“என்ன முடிவெடுத்தாலும் செய்ய மனசு வர மாட்டேங்குது அத்தை. மானுவ இப்படி ஒரு சங்கடத்துல எப்படி தெரிஞ்சே மாட்டி விட்டிருப்பேன். வாடகைத்தாய் விஷயத்துல கார்த்திக்க கூட மன்னிச்சு விடாத நான் எப்படி நவநீதனை விடுவேன். மனசாட்சி சுயநலமா இருக்கன்னு குத்திக்காட்டுச்சு அத்தை. அதுக்கு துரோகம் பண்ணிட்டு என்னால நிம்மதியா வாழ முடியாது.”

“இதுல உன் மேல தப்பு எதுவும் இல்ல மகி. இது எதிர்பார்க்காமல நடந்த விஷயம். உன் புருஷன் கிட்ட இல்லனாலும் எப்பவும் போல ஆகாஷ் கிட்டயாது ஒரு வார்த்தை சொல்லி வச்சிருக்கலாம்.”

“பயம் அத்தை… ரகு மேல இருக்க பயம். அவன் எந்த விஷயத்துல வேணா அமைதியா இருப்பான் அவன் பொண்ண தவிர. ரகுக்கு தெரியாம இந்த விஷயத்தை முடிக்க நினைச்சேன்.”

“விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம் ஆவது சொல்லி இருக்கலாம்ல.”

“எல்லாரும் இதையேதான் சொல்றீங்க அத்தை. ஒருத்தருக்கும் என் மனநிலை புரியல. எப்படி சொல்ல முடியும்? ரகு எப்படின்னு இங்க யாருக்கும் தெரியாதா என்ன! என்னை கொல்ல கூட தங்கி இருக்க மாட்டான். எனக்குமே ரகு கிட்ட சொல்ற தைரியம் இல்ல அத்தை.

அவன் பொண்ண எப்படியாவது காப்பாத்தி அவன் கைல கொடுத்துட்டு அதுக்கப்புறம் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கலான்னு நினைச்சேன். என் எண்ணத்துக்கு மாறா எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. ரகு மனசுல கோபத்தையும் தாண்டி வெறுப்பு வந்துருச்சு அத்தை. இனி அது எப்பவும் போகாது.”

“ரெண்டு பேரும் எந்த அளவுக்கு அன்பை கொட்டுறீங்களோ அதே அளவுக்கு வீம்பையும் கொட்டுறீங்க. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல மகி. உங்களை நம்பி ரெண்டு குழந்தைங்க இருக்கு. அவங்களோட வாழ்க்கைய மனசுல வச்சு முடிவெடுங்க.”

“பசங்க மட்டும் இல்ல அத்தை என் புருஷனும் நல்லா இருக்கணும்னா ரகு கேட்ட விவாகரத்தை நான் கொடுக்கணும். என் கூட இருந்தா அவங்களுக்கு எப்பவும் பிரச்சனை தான். கால் மட்டும் நல்லா இருந்திருந்தா இந்நேரம் கொடுக்க வேண்டியதை கொடுத்து ரகுவ சந்தோஷப்படுத்தி இருப்பேன்.”

மேற்கொண்டு பேச விரும்பாத சாந்தி அறையை விட்டு வெளியேற திரும்ப, வாசலில் மனைவியை பார்த்தவாறு கைகட்டி நின்று கொண்டிருந்தான் ரகுவரன். பெரியவர் திரும்பி மருமகளை பார்க்க, அவளோ… கணவன் வந்ததை அறியாது சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தாள்.

ரகுவரன் நிற்கும் தோரணையை வைத்தே ஆரம்பத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டவர், “உன் புருஷனுக்கு விவாகரத்து தரலாம்னு உறுதியா இருக்கியா மகி.” கொக்கி போட்டார் மருமகளை சிக்க வைக்க.

துடிக்கும் உதடுகளை பற்களால் கடித்து கட்டுப்படுத்தியவள், “ஆமா அத்தை. என் முகத்தை காட்டி யாரையும் கஷ்டப்படுத்த விரும்பல.” என்றவள் கன்னத்தை நனைத்தது கண்ணீர்.

“பசங்களை என்ன பண்றதா உத்தேசம் மகி?”

“அவங்களுக்கும் நான் தேவை இல்ல அத்தை. அப்பா மட்டும் இருந்தா போதும்.”

“உன் புருஷனுக்கு உன்னோட தேவை இருக்கா இல்லையான்னு ஒரு தடவை கேட்டுப் பாரு”

“இல்லன்னு சொல்றதை தாங்கிக்க முடியாது அத்தை.”

“ரகு கண்டிப்பா பசங்களை தனியா கூட்டிட்டு போக மாட்டான். விவாகரத்து வாங்கிட்டு ரெண்டு பேரும் இங்கயே இருக்கிறது சரி வருமா.”

“அந்த கஷ்டத்தை அவனுக்கு கொடுக்க மாட்டேன் அத்தை. அவங்க மூணு பேரும் எப்பவும் போல இங்க இருக்கட்டும். நான் எங்கயாது இருந்துக்கிறேன்.”

“எங்களை யோசிக்கிற எண்ணம் இல்லையா மகி.”

“உங்களுக்கும் உங்க பேத்தியும் மகனும் தான முக்கியம். இவளால தான் மானுவ கடத்தினாங்கன்னு சொன்னதுக்கு அப்புறம் யாரும் ஒரு வார்த்தை பேசலையே. என்னமோ திமிரெடுத்து பண்ண மாதிரி தான எல்லாரும் நினைக்கிறீங்க. அரை நாள் மானு எங்கயோ இருந்ததுக்கே இவ்ளோ துடிக்கிறீங்களே எத்தனையோ பொண்ணுங்க வறுமைக்காகவும், எதுக்காக இங்க வந்தோம்னு தெரியாம இந்த குள்ளநரி கூட்டத்துல சிக்கி வாழ்க்கைய இழந்து இருக்காங்கன்னு தெரியுமா.

அதுக்காக என் பொண்ண கடத்துனது சரின்னு நான் சொல்லல. அதுல உங்க எல்லாருக்கும் எவ்ளோ வலி இருந்துச்சோ அதைவிட அதிகமா எனக்கு இருக்கும்னு யாருமே புரிஞ்சுக்கல. முக்கியமா ரகு பேசினதை ஜீரணிக்கவே முடியல. ரெண்டு அடி அடிச்சிருந்தா கூட தப்புக்கான தண்டனையா வாங்கி இருப்பேன். மொத்தமா என்னை ஒதுக்கி வச்சுட்டான். செத்தா கூட பார்க்க கூடாதாம்… அப்படி சொல்லும் போதே நான் செத்துட்டேன்.” என்றவள் கண்ணீர் முகத்தோடு அத்தையை பார்க்க, அவருக்கு முன்பாக ரகுவரனின் முகம் தெரிந்தது.

கணவனை கண்டதும் தலை குனிந்தவள் அடக்க முடியாமல் அழ ஆரம்பித்து விட்டாள். இதற்கு மேலும் இங்கிருந்தால் சரி வராது என சாந்தி அங்கிருந்து நகர, அழும் மனைவியை தேற்றாது இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான் ரகுவரன். தன்னிடம் இந்த நொடி கூட வராத கணவனின் செய்கையில் அவள் அழுகை இன்னும் அதிகமானது.

அழுதழுது ஓய்ந்தவள் தெம்பு இல்லாமல் தலை நிமிர, அங்கிருந்த ரகுவரனை காணவில்லை. வந்த அழுகை மாயமானது அவன் செயலில். இவ்வளவு நேரம் மனதில் இருந்து வெளியிட்ட எண்ணங்கள் அனைத்தும் சரிதான் என்பதை நிரூபித்து விட்டதாக முடிவு செய்தவள் விரக்தியான மனதோடு படுத்துவிட்டாள்.

***
பட்டென்று கதவு திறக்கும் ஓசையில் பெண்ணின் பார்வை அங்கு செல்ல, பிள்ளைகளோடு நின்றிருந்தான் ரகுவரன். வந்தவனைக் கண்டு மகிழினி தலை குனிய,

“நான் யாரையும் பார்க்க மாட்டேன் மகிழ். ஓவரா சீன் போடாம இருக்க சொல்லு.” என்றான் பிள்ளையிடம்.

அவனைப் பார்க்காமல் மகிழினி அமைதியாக இருக்க, “தங்கம் உங்க அம்மா கால் இப்போ எப்படி இருக்குன்னு கேளுடா.” தொலைதூரத்தில் மனைவி இருப்பது போல் மகளை வைத்து தந்தி அனுப்பினான்.

தந்தை சொல்லியதை மகள் அப்படியே தாயிடம் கேட்க, இல்லை என்று தலையசைத்தாள் மகிழினி. நிர்மலான முகபாவனையோடு அவள் தலையசைப்பை ஏற்றுக் கொண்டவன், “கால்ல வீக்கம் குறையாத மாதிரி இருக்கு இந்த மருந்த நல்லா தேச்சுக்க சொல்லு.” மகளை வைத்து செய்தி சொன்னவன் அவளுக்கு நேராக  மருந்தை நீட்டினான்.

கட்டியவள் வாங்காமல் அமைதி காக்க, “டேய் குரங்கு!” மகனின் தலையில் அடித்து வம்புக்கு இழுத்தான்.

சிறியவன் கோபத்தோடு தந்தையை முறைக்க, “அப்புறம் லுக்கு விடலாம் இதை வாங்க சொல்லு உங்க அம்மாவ.” என்றிட, “நீங்க வாங்காதீங்க ம்மா.” தந்தைக்கு எதிராக கூட்டணி வைத்தான் தாயோடு மகிழ்வரன்.

“சில்வண்டு அப்படியே ஆத்தா மாதிரி இருக்க.” என்றதும் தலை குனிந்து கொண்டே கணவனை முறைத்து பார்த்தாள்.

“அப்படி எல்லாம் பார்க்க வேணாம்னு சொல்லுடா உங்க அம்மாவ. விவாகரத்து பண்றதுன்னு முடிவாகிடுச்சு இனிமே எதுக்கு. ஈஸியா முடிவு எடுத்துட்டாங்க. கேட்ட எனக்கு உயிரே போற மாதிரி இருக்கு. அவ்ளோதான் ரகுவரன் மேல இருக்குற காதல். வேற கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ சொல்லுடா உங்க அம்மாவ.”

இன்னும் புருவத்தை சுருக்கி முறைத்தவள் கோபமாக மூச்சுகளை இழுத்து விட, “இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.” சத்தமாக சொன்னவன் ரகசியமாக,

“இவளுக்கு விவாகரத்து கொடுக்கவா தாலி கட்டுனேன். நாலு வார்த்தை திட்டிட்டா உடனே கொடுத்துடுவாங்க போல. வர கோபத்துக்கு நல்லா இருக்க அந்த காலையும் உடைக்கனும்.” குறைப்பட்டு கொண்டு அவள் காலடியில் அமர்ந்தான்.

கால்களை நகர்த்திக் கொள்ள கட்டியவள் முயல, “தங்கம் உங்க அம்மா கால கொஞ்சம் புடிடா. விவாகரத்து பண்ண போறதால எனக்கு அந்த உரிமை இல்ல.” மகளை வைத்து கால்களை சிறைப்படித்தான்.

அன்னையின் கால்களை எதிரணியினர் சிறைபிடித்ததும் பொங்கி எழுந்த குட்டி ரகுவரன், “அக்கா, அம்மா பாவம் கால விடு.” மல்லுக்கட்டி கொண்டிருந்தான்.

“தம்பி பாப்பா அம்மா கால்ல அடிபட்டு இருக்குல. அதான் அப்பா மருந்து தேய்க்க போறாங்க.”

“அதெல்லாம் வேணாம்.” என்றது தந்தையின் செயல் பிடிக்காமல்.

மனைவியைப் போலவே சிடுசிடுக்கும் மகனின் தலையில் நறுக்கென்று கொட்டியவன், “ஓரம் போடா குரங்கு பையா.” என்றான்.

வலி பொறுக்க முடியாமல் சிணுங்கினான் மகிழ்வரன். மகன் அழுகையில் மனம் நொந்தவள் தன்னோடு சேர்த்துக் கொண்டு சமாதானப்படுத்த, “இங்க பாருடா பாசத்தை.” என்றவன் வம்புக்கு இழுக்க எண்ணி மகனை விடாமல் இம்சை செய்து கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் குட்டி ரகுவரனால் பொறுக்க முடியவில்லை பெரிய ரகுவரன் கொடுக்கும் சித்திரவதைகளை. சிறு மூக்கை விரித்து தன் கோபத்தை காட்டியவன் தந்தை அசந்த நேரம் கடித்தான் கைகளை.

பதில் தாக்குதல் நடத்த எண்ணிய ரகுவரன் கடித்துக் கொண்டிருக்கும் பிள்ளையின் தலையில் அடிக்க, அந்த அடி அவன் கையிலேயே பட்டது. வலியில் முகம் சுருக்கியவன் கருவிழிகள் பெரிதாகியது நிகழ்காலத்திற்கு வந்ததால். ஆழ்ந்து கடந்த காலத்தை மூச்சு வாங்க சொல்லிக் கொண்டிருந்தவன் கோப  காற்றை அவசரமாக வெளியிட்டான் கதை கேட்க அமர்ந்திருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பதால்.

“பெரிய மனுஷங்கன்னு மதிச்சு சொன்ன என்னை….” என பேச்சை முடிக்காமல் அவன் இழுக்க, “வேணாம் மருமகனே செருப்பு பாவம்.” அரைகுறை உறக்கத்தில் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த  அழகுசுந்தரம் பதில் கொடுத்தார்.

“முறைக்காம கதைய கண்டினியூ பண்ணு மருமகனே.” என்றதும் இன்னும் அவனுக்குள் கோபம் அதிகரிக்க, மகன் தலையில் கொட்டுவதை விட அதிக அழுத்தத்தோடு பதம் பார்த்தான் அவர் தலையை. வலி பொறுக்க முடியாமல் கத்தியவரின் குரலில் அனைவரும் பதறி அடித்து எழ, பரம நிம்மதி ரகுவரன் மனதில்.

பல நொடிகள் தேவைப்பட்டது அனைவரும் சுயநினைவிற்கு வர. கொடைக்கானல் ஹீரோவிற்கு ஆறுதல் சொல்லியவர்கள் விட்ட கதையை தொடர சொல்லி கட்டாயப்படுத்த, “எனக்கு தூக்கம் வருது.” என்றவன் அவர்கள் கெஞ்சுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஓடிவிட்டான் அங்கிருந்து.

****

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்