Loading

        மணி மதியம் இரண்டை கடந்தும் இருவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். இருவரது கைப்பேசிகளும் ஏழாவது முறையாக அடித்து ஓய்ந்திருந்தன.

 

     மெல்ல கண் விழித்த அழகி கட்டிலில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த கதிரை கண்டு மென்முறுவல் சிந்தினாள். 

 

    “அச்சோ எவ்வளோ நேரமா இவன் மடியில படுத்துருக்கோம். இவனும் எழுப்பாம தூங்குறானே!” என்று பதறி எழுந்தாள்.

 

    அவள் வேகமாக எழுந்ததில் உறக்கம் கலைந்தவன் “என்னாச்சு டி? எதுக்கு இவ்வளோ அவசரமா எழுந்திரிக்கிற?” என்று கண்ணைக் கசக்கியபடியே வினவினான்.

 

    “இல்லை இவ்வளோ நேரம் உன் மடில படுத்து தூங்கிட்டேன். நீயும் என்னை எழுப்பல. உனக்கு கால் வலிக்குமேனு ஒரு பதட்டத்துல எழுந்து உன்னையும் எழுப்பி விட்டேன்.” என்று முகத்தைப் பாவமாக வைத்திருந்தாள்.

 

     மென்மையாக இதழ் வளைத்து நிமிர்ந்து அமர்ந்து சோம்பல் முறித்தான்.

 

    “நீ படுத்து எனக்கு கால் வலிக்க போகுதா டி?! நீ வெயிட்டே இல்லை. ஆமா நல்லா சாப்பிடுறியா நீ?”

 

    “ஏன்? நல்லாதானே சாப்பிடுறேன்.”

 

    “ம்ஹூம். பத்தாது. காத்து மாதிரி இருக்க. உன்னை நல்லா கவனிக்கணும்.” என்றவன் புன்னகைக்க அவளும் புன்னகைத்தான்.

 

   “சரி எழுந்து வா. ரொம்ப நேரம் தூங்கிட்டோம். மணி ரெண்டுக்கு மேல ஆச்சு. சாப்பிடலாம்.” என்றபடி அழகி எழுந்து கைக்கால் கழுவி முகம் துடைத்து வர, அவனும் முகம் கழுவச் சென்றான்.

 

    அவன் திரும்பி வந்தபொழுது இருவருக்கும் நெய் சோறும் முட்டைக்குழம்பும் தனித்தனி தட்டுகளில் பரிமாறியிருந்தாள்.

 

    இருவரும் பசியடங்க நன்றாக உண்டனர். அவனுக்கு குழம்பு மிகவும் பிடித்திருந்தது போல! மூன்று முறை போட்டு சாப்பிட்டான். அழகி சிரித்துக் கொண்டாள்.

 

     உண்டு முடித்து வந்த இருவரும் அப்பொழுது தான் தங்களது கைப்பேசிகளையே கவனித்தனர். இருவருக்கும் மிருதுளா மாற்றி மாற்றி ஏழுமுறை அழைத்திருந்தது கண்டு ஏனென்று புரியாது குழம்பினர்.

 

    சரியென்று திருப்பி அவளுக்கு அழைக்க, இருவரையும் உடனடியாக எஸ்டேட்டிற்கு வரச் சொன்னாள்.

 

     இருவரும் எதற்கென்ற சிந்தனையோடே கிளம்பி எஸ்டேட்டிற்கு சென்றனர்.

 

    அங்கு சக்கரவர்த்தி, ராம்குமார், மிருதுளா, நிரஞ்சன் என அனைவரும் இருக்க, இருவரும் யோசனையோடே அவர்களிடம் சென்றனர்.

 

    “ரெண்டு பேருக்கும் எத்தனை தடவை டா கூப்பிட்றது? என்னதான் பண்ணிக்கிட்டுயிருந்தீங்க?”

 

    “ஏன் அண்ணி என்னாச்சு?”, அழகி கேட்டாள்.

 

   “ஏன் என்னாச்சு மிருதுளா? நைட் எல்லாம் நாங்க தூங்கவேயில்லை. அதான் கொஞ்சம் கண்ணசந்துட்டோம்.”

 

    “சரி சரி வாங்க. மாமா உங்கக்கிட்ட பேசணுமாம்.” என்று மிருதுளா சக்கரவர்த்தியிடம் செல்ல, இருவரும் அவர்முன் போய் நின்றனர்.

 

    “கதிர் உங்கம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு.”

 

   “நேத்து அவங்க வந்து என் ரூம்ல டிடெக்ட்டிவ் வேலை பார்த்தபோதே கண்டுபிடிச்சுட்டேன் மாமா.”

 

   “டேய் மாமா சொல்றத முழுசா கேளு.” என இடைவெட்டிய கதிரை மிருதுளா அதட்டினாள்.

 

   “தெரிஞ்சது ஒரு ஊகமா சந்தேகமாதான் தெரிஞ்சுருக்கு. ஆனா உங்கம்மா சும்மா இருக்க மாட்டாங்கனு தோணுது பா. அவங்களுக்கு எப்படியோ சந்தேகம் வந்துடுச்சு. அதனால நீ எவ்வளோ சீக்கிரம் அழகிய கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறத உங்க அம்மாக்கிட்டயும் அப்பாக்கிட்டயும் நேர்ல போய் சொல்றியோ அவ்வளோ நல்லது.” என்ற சக்கரவர்த்தி தீவிரமாக எதையோ சிந்தனை செய்தபடியே இருந்தார்.

 

   “ஏன் மாமா சொன்னா மட்டும் அவங்க சம்மதிச்சுருவாங்களா?”, கதிர்.

 

   “அவங்க சம்மதிக்கிறாங்களோ இல்லையோ நீ போய் சொல்றது உன் கடமை. அது தான் நல்லதும் கூட.” என்று ராம்குமார் சற்றே உஷ்னமாக உரைத்தான்.

 

    கதிருக்கு கோபம் வந்தாலும் அவன் உரைத்ததிலிருந்த நியாயம் அவனை அமைதியாக ஒப்புக்கொள்ளச் செய்தது.

 

   “கதிர்! அம்மா போகும் போது ஒன்னு சொல்லிட்டு போச்சு.” என்ற மிருதுளாவை என்ன என்பது போல் பார்த்தான்.

 

   “உனக்கு மூனு பொண்ணு பார்த்தாங்களே. அதுல ஒரு பொண்ணுக்கு தான் இன்னைக்கு கல்யாணம். அதுவும் லவ் மேரேஜ். அந்த பொண்ணு விடாம நின்னு வீட்ல சம்மதம் வாங்கியிருக்கு. அதுக்கு நம்ம அம்மா என்ன சொன்னுச்சு தெரியுமா? அப்பப்பா இந்த பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருந்துட்டு என்ன காரியம் பண்ணியிருக்கா? வீட்ல அவ்வளோ ரகளை பண்ணியிருக்கா. நல்லவேளை அந்த பிடாரி எனக்கு மருமகளா வரலனு சொல்லிட்டு என்ன சொன்னுச்சு தெரியுமா?”

 

   “ஏய் சும்மா தெரியுமா தெரியுமானு கேக்காம என்னனு சொல்லித் தொலை.” என்று கதிர் எரிச்சலானான்.

 

   “அந்த பிடாரி போச்சுனு உன் தம்பி ஏதாவது பிச்சைக்காரிய மருமகளா ஆக்கலாம்னு பார்த்தான் நான் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்கனு முழிய உருட்டிட்டு கார்ல ஏறி போயிடுச்சு டா.” என்று மிருதுளா கூறியது தான் தாமதம் கதிருக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது.

 

    அவனது முகமும் உடலும் இறுகி கண்களில் கோபம் நிறைந்து நிற்பதை கண்ட அழகிக்கு ஒரு நொடி உள்ளுக்குள் பயம் ஓடி மறைந்தது. மெல்ல அவனை நெருங்கி மெதுவாக அவள் அவனது கரம் தொட, அவன் இறுக்கம் மெதுவாக தளரத் துவங்கியது.

 

    “அழகி அதிரன் விஷயமா திருச்சிக்கு போகணும்னு சொன்னா. நான் அங்க போயிட்டு வந்து கோயம்புத்தூர் போய் நேரா அவங்கக்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். நீங்க சொல்றத வச்சு பார்த்தா அதை தள்ளி போடக் கூடாதுனு தோணுது.” என்று சிந்தனையில் ஆழ்ந்த கதிரை கண்டு அழகி கலங்கி நிற்க, மற்றவர்கள் கவலைக் கொண்டனர்.

 

    “மாமா! நான் நாளைக்கே கோயம்புத்தூர் போறேன் மாமா.” 

 

    “நல்லது பா. நீ நாளைக்கே போறது தான் சரியா வரும்.” என்ற சக்கரவர்த்தி நிமிர்ந்து அமர்ந்ததை கண்டால் அவர் ஏதோ முடிவுக்கு வந்திருப்பதாகத் தோன்றியது.

 

   “சார் நாளைக்கு எனக்கு லீவ் வேணும்.” என்று அமைதியாக நின்றிருந்த நிரஞ்சன் வாய் திறக்க, ராம்குமார் ஏன் என்பது போல் பார்த்தான்.

 

   “நானும் கதிர் கூட போறேன். அவன் தனியா போறது சரியா வரும்னு தோணல.”

 

   “டேய் நீ எதுக்கு? நான் மட்டும் போயிக்கிறேன்.”

 

   “அவன எதுக்குடா வேணாம்னு சொல்ற. நிரஞ்சன் நீயும் இவன் கூட போ. அங்க என்ன நடக்கும்னு தெரியாது கோவத்துல இவன் கண்ணா பிண்ணானு வண்டி ஓட்டுவான்.” என்றாள் மிருதுளா.

 

   “சரி நிரஞ்சன் நீ கதிர் கூட போ. ஆனா கதிர் மட்டும் வீட்டுக்கு போய் அவங்கக்கிட்ட பேசட்டும்.” என்று ராம்குமார் கூற நிரஞ்சன் சரியென்று தலையசைத்தான்.

 

    மிருதுளாவை முறைத்த கதிர் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, “ஒரு நிமிஷம் நில்லு பா.” என்று சக்கரவர்த்தி தடுத்தார்.

 

   “நீ போய் சொன்னாலும் உங்க அம்மாவும் அப்பாவும் உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க. உங்க அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்ச பின்னாடி உங்க கல்யாணத்த தள்ளி போடுறது நல்லதில்லனு தோணுது.”

 

   “அதுக்கு என்ன அப்பா பண்ண போறீங்க?” என்று அழகி கலவரமாகக் கேட்டாள்.

 

   “அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் வர்ற வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு. அன்னைக்கே உனக்கும் கதிருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் மா.” என்று சக்கரவர்த்தி கூறவும் அழகியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

 

   “அதுக்குனு இவ்வளோ சீக்கரமா ஏன் ப்பா?”

 

    “அழகி! மாமா ஒரு முடிவெடுத்தா அதுல காரணம் இருக்கும். நீ தடுப்பா எதுவும் சொல்லாத ப்ளீஸ். எங்க அம்மாவ பத்தி நல்லா தெரிஞ்சதால தான் மாமா இந்த முடிவுக்கு வந்துருக்காங்க. என் தம்பிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சுருக்குன்ற நிம்மதில இருக்கேன். அது அப்படியே நிலைக்கணும்னா மாமா முடிவு தான் என் முடிவும்.” என்று மிருதுளா அவளுக்கு ஆறுதல் கூற விழைந்தாள்.

 

   “அப்பா சொல்றது சரிதான் அழகி! உன் நிலைமையும் எனக்கு புரியுது. ஆனா வேற வழியில்ல. நாம லேட் பண்ண லேட் பண்ண கதிரோட அம்மா என்ன வேணாலும் செய்வாங்க. ஏன் அதிரன் யாருங்கிறது கண்டுபிடிக்கவும் சான்ஸ் இருக்கு. அதனால தைரியமா நீ கதிர கல்யாணம் பண்ணிக்கோ அண்ணன் இருக்கேன் உனக்கு. எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்குறேன்.” என்று ராம்குமார் அவளுக்கு தைரியம் உரைத்தான்.

 

   அவன் அதிரனை தொட்டு உரைத்தவை நன்கு வேலை செய்தது. அழகிக்கு உள்ளுக்குள் பயம் பிறக்கவும் வேறு வழியின்றி அவள் திருமணத்திகற்கு சம்மதித்தாள். 

 

    திருமணம் பற்றிய பேச்சு கதிரின் கோபத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியிருந்தது. அவனுக்கும் அவர்களது திருமணம் விரைவாக நடப்பது தான் நல்லது என்று தோன்றியது. கலவரப்பட்டு நின்றிருந்த அழகியின் கையில் அழுத்தி கண்களால் தைரியம் உரைத்தான்.

 

   “நீங்க சொல்ற மாதிரியே எங்க கல்யாணம் சீக்கிரம் நடக்கட்டும் மாமா. ஆனா ரொம்ப சிம்பிளா நடக்கட்டும். ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இல்ல ஏதாவது ஒரு கோவில்ல நடக்கட்டும். ஒரு இருபது பேருக்குள்ள மட்டும் வரட்டும். நான் அழகிய சீக்கிரம் கல்யாணம் பண்ணாதான் எங்க அம்மாவும் அப்பாவும் அடுத்தடுத்து பிரச்சனை பண்ணாம இருப்பாங்க.” என்று கதிர் கூறியது அழகிக்கு சற்றே நிம்மதியளித்தது. 

 

   அவளும் தன் மனதை திருமணத்திற்கு தயார் செய்யத் துவங்கியிருந்தாள். ஒரு பக்கம் கவலையிருந்தாலும் மிருதுளா, ராம்குமார், நிரஞ்சன் மூவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை. சக்கரவர்த்தி அமைதியாக அவர்களை பார்த்திருந்தார்.

 

    அன்று இரவு கதிரும் அழகியும் ராம்குமார் வீட்டிலேயே தங்கிக் கொண்டனர். அதிரனையும் பள்ளியிலிருந்து அங்கே அழைத்து வந்திருந்தனர். மறுநாள் விடியற்காலையிலேயே நிரஞ்சனும் கதிரும் கோயம்புத்தூர் கிளம்புவதாக இருந்ததால் நிரஞ்சனும் அங்கேயே தங்கியிருந்தான்.

 

    அன்றைய இரவு அழகிக்கு கவலையோடும் கதிருக்கு யோசனையோடும் கழிய, பளபளவென்று விடியும் முன்னரே கதிரவனும் நிரஞ்சனும் கோயம்புத்தூருக்கு கிளம்பினர்.

 

      அழகியை தவிர மற்றவர்கள் இருவருக்கும் ஆயிரம் அறிவுரை கூறி வழியனுப்பி வைக்க, அழகியோ கவலையோடு கதிரை பார்க்க, அவன் அவளது கையை பற்றி அழுத்தம் கொடுத்துவிட்டு நிரஞ்சனோடு மகிழுந்தில் ஏறி புறப்பட்டான். அவன் கொடுத்த அழுத்தம் அழகிக்கு சற்று தைரியம் தந்தாலும் இனம்புரியா பயமொன்று உள்ளே கிடந்து குடைந்தது.

 

    வீட்டிலேயே இருந்தால் அது இன்னும் பெரிதாக உருவெடுக்கும் என்று எண்ணியவள் ராம்குமார் எவ்வளவோ மறுத்தும் அவனை கெஞ்சி கெஞ்சி அவனோடு எஸ்டேட்டிற்கு வேலைக்கு கிளம்பி விட்டாள்.

 

     எஸ்டேட்டில் நிலுவையிலிருந்த வேலைகள் அவளது கவலையையும் பயத்தையும் தற்காலிகமாக மறக்கச் செய்திருந்தன. மாலை நான்கு மணியளவில் ராம்குமாருக்கு அழைத்த மிருதுளா இருவரையும் உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறினாள். அவளது குரலில் இருந்த பதற்றம் இருவரையும் அரைமணி நேரத்தில் வீட்டில் இருக்க செய்திருந்தது.

 

     “வா அழகி! இப்பதான் வந்தான். வந்ததும் ரூம்க்கு போய் கதவை சாத்திட்டு திறக்க மாட்டேங்குறான். அவன் கைல ஏதோ கட்டு வேற இருந்தது. நிரஞ்சன கேட்டா அவன் எதுவும் சொல்ல மாட்டேங்குறான். அவனும் கோவத்துல இருக்கான். மாமா வேற வீட்ல இல்லை. எனக்கு என்ன பண்றதுனு தெரியல.” என்று மிருதுளா பதற்றமாகக் கூற, ராம்குமார் விரைந்து மாடிப்படிகளில் ஏற, அழகியும் அவன் பின்னேயே ஓடினாள். 

 

      ராம்குமார் கதவை தட்ட கதிர் திறக்கவேயில்லை. பதற்றமான அழகி அவனை விலக்கிவிட்டு தான் கதவை தட்டினாள்.

 

    “கதிர் கதவை திற.” என்ற அழகியின் குரல் கேட்டதும் அறையின் கதவுகள் பட்டென்று திறக்கப்பட்டன.

 

   வேகமாக உள்ளே நுழைந்த அழகி கண்டது தலைக் கலைந்து கலங்கிய விழிகளோடு கட்டிலில் அமர்ந்திருந்த கதிரை தான்! அவனது கோலம் அழகியையும் கலங்கச் செய்ய, வேகமாக அவனை நெருங்கி மெதுவாக அவனது கேசத்தை வருடினாள். பட்டென்று அவன் அணைத்துக் கொள்ள, அவனது தலையை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டாள்.

 

     அவளுக்கு பின்னாலேயே உள்ளே வந்த மிருதுளாவும் ராம்குமாரும் கவலையாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

    பேச வாயெடுத்த மிருதுளாவை வேண்டாமென்று கைப்பிடித்து தடுத்த ராம்குமார் இருவருக்கும் தனிமை தந்து அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

 

     அவனது கேசம் கோதிக் கொண்டிருந்த அழகி மெல்லியக் குரலில், “என்னாச்சு?” என்று வினவ, அவன் இன்னும் இறுக்க அவளை அணைத்துக் கொண்டான். அவனது மனம் வலிக்கும்படி ஏதோ நடந்திருக்கிறது என்பதனை உணர்ந்தவள் கண் கலங்கினாள். அவளது கை அவனது கேசத்தை கோதிக் கொண்டேயிருந்தது. சில நிமடங்கள் அப்படியே மௌனத்தில் கழிந்தன. பின் கதிர் மெல்ல அங்கு நடந்தவற்றை விவரிக்கத் தொடங்கினான்.

 

 

    

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்