Loading

“அம்மா… ஒரு கம்பெனில இருந்து லேபர்ஸ் யூனிபார்ம்ஸ்க்கு ஆர்டர் வந்துருக்கு. இந்த டிசைன் ஓகே வான்னு பாருங்க.” என்று மடிக்கணினி சகிதம் பானுரேகா முன்பு வந்து நின்றான் சிரஞ்சீவி.

ஹால் சோபாவில் அமர்ந்து, காபி பருகிக் கொண்டிருந்த பானுரேகா மகனை நிமிர்ந்து முறைத்து விட்டு, “வேலை விஷயத்தை ஆபிஸ்ல பேசிக்கிட்டா போதும். அதுவும், என் கார்மெண்ட்ஸ்ல வேலை பாக்குற ஃபேஷன் டிசைனர்ன்ற அளவோட தான்.” என்றார் சுருக்கென.

முகம் வாடிப்போன சிரஞ்சீவி, “அப்போ நான் அங்க வெறும் பேஷன் டிசைனர் தானா?” என ஏமாற்றமாகக் கேட்டதில்,

“ஆமா.” என உறுதியாக கூறினார்.

“அங்க மட்டும் தானா… இல்ல வீட்லயாவது உன் பையன்ற அடையாளம் இருக்காம்மா?” உடைந்த குரலில் சிரஞ்சீவி கேட்டதில்,

“என் பையன்ற அடையாளம் வேணாம்ன்னு தான, என்னை அசிங்கப்படுத்திட்டு, என் பேச்சை மீறி இன்னொருத்திக்கு புருஷன் ஆன. அப்பறம் எதுக்கு உனக்கு பையன்ற அடையாளம் வேணும். என்னை பொறுத்தவரை இந்த வீட்ல நீ வெறும் கெஸ்ட் தான். என்ன… விருந்தும் மருந்தும் மூணு நாலு தான்ற கணக்குல, வந்த கெஸ்ட்லாம் கிளம்பிடுவாங்க. நீ ஓசில இங்கயே இருக்க போற. பரவாயில்ல. எக்ஸ்டரா ரெண்டு பேருக்கு சாப்பாடு போட முடியாதபடி இங்க யாரும் வறுமைல இல்ல.” என முடிந்த அளவு அவனை வருத்தி விட்டு சென்றார்.

தாயின் கூற்றில் அதிர்ந்த சிரஞ்சீவிக்கு கண்ணில் நீர் முட்டியது. அடுக்களையில் நின்று கொண்டிருந்த சத்யரூபா, சிரஞ்சீவியின் பேச்சு சத்தம் கேட்டு, அவனுக்கும் காபி கலந்து கொண்டு வர, பானுரேகாவின் வார்த்தைகளைக் கேட்டு சற்று சங்கடம் எழுந்தது.

மனமுடைந்து போனவன், அவள் நீட்டிய காபி கப்பை வாங்காமல், உள்ளே சென்று விட, அறையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த நீரஜாவிற்கும், பானுரேகாவின் கூற்றில் கோபம் எழுந்தது.

‘இதற்கு கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி இருக்கலாமே!’ ஆதங்கத்துடன் அங்கு வந்த சிரஞ்சீவியைப் பார்த்து பேச வந்தவள், அவனது இறுகிய முகம் கண்டு மௌனமாகிப் போனாள்.

தானும் கோபப்பட்டு அவனை வருத்த விரும்பவில்லை. அவன் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டவள், “இதுக்குலாம் அசந்தா ஆண்டியை சமாதானம் பண்ண முடியுமா ரஞ்சி. சியர் அப்.” என்று கண் சிமிட்டி சமாதானம் செய்தாள்.

அதில் அவளை அமைதியாக ஏறிட்டவனுக்கும் வலித்தது. அவளுக்கும் இந்நேரம் கோபம் தலைக்கு ஏறி இருக்கும். ஆனாலும் தனக்காக யோசித்து, பொறுமையாக பேசுபவளின் புரிதலில் காதல் கூடிப் போக, கீற்றுப் புன்னகை உதிர்த்தவன், குளியலறைக்குள் புகுந்தான்.

சிறிது நேரம் கழித்து, பெரியவர்கள் இருவரும் அலுவல் செல்லும் பொருட்டு கிளம்பி உணவு மேஜையில் உண்டு கொண்டிருக்க, பாலகிருஷ்ணன், “இந்தர் எங்க சத்யா?” என்று மருமகளிடம் வினவினாள்.

தோசை வார்த்து, ஹாட் பாக்சில் நிரப்பிக்கொண்டிருந்தவள், “கிளம்பிட்டு இருக்காரு மாமா. இப்ப வந்துடுவாரு.” என்றதும், “சரி நீ உட்காந்து சாப்பிடு. அவன் வரட்டும்” என்று அமர சொல்லும் போதே இந்திரஜித் வந்து விட்டான்.

வந்தவன், “ஜீவியும் அண்ணியும் இன்னும் வரல.” எனக் கேட்டபடி உண்ண அமர, அதற்கு யாரும் பதில் கூறவில்லை.

அதில், அவனே “ஜீவி… சாப்பிட வாடா.” என அவன் அறை நோக்கி சத்தமாக அழைக்க, இருவரும் வெளியில் வந்தனர்.

“டைம் ஆச்சுடா. கிளம்புறோம்” என தம்பியிடம் கூறி விட்டு, அவன் நகர முயல, “டேய், சாப்பிடாம எங்க போறீங்க. அண்ணி உட்காரு” என்று நீரஜாவிற்கு கண்ணை காட்டியவனுக்கு, மனையாளின் முன்பு அவளை உரிமையாகவும் அழைக்க இயலவில்லை.

“டைம் ஆச்சு இந்தர்…” எனத் தயங்கியவள் சிரஞ்சீவியைப் பார்க்க, பாலகிருஷ்ணனுக்கும்  ஒன்றும் புரியவில்லை. 

“இன்னும் டைம் இருக்கு உட்காருங்க.” என்று அழுத்தமாக கூறி நாற்காலியை இழுத்துப் போட்டதில், சிரஞ்சீவியும் அமைதியாக அமர்ந்தான்.

அதில், நீரஜாவும் அமர்ந்து உண்ண ஆரம்பிக்க, சில நிமிடங்கள் அங்கு பெரும் மௌனமே நிலவியது.

உண்டு முடித்த பின்பு, சிரஞ்சீவி சில கட்டு ரூபாய் நோட்டை எடுத்து தாயின் முன்பு நீட்டினான்.

புருவம் சுருக்கிப் பார்த்த பானுரேகாவிடம், “நானும் என் பொண்டாட்டியும் இவ்ளோ நாள் ஓசில சாப்பிட்டு, இங்க தங்குனதுக்கு…உங்களை பொறுத்தவரைக்கும் இங்க நாங்க கெஸ்ட்டாவே இருந்துக்குறோம். ஐ மீன் பேயிங் கெஸ்ட்டா.” என அழுத்தத்துடன் உரைத்தவன், “ஆனா, உங்க பையன்ற அடையாளத்தை, நான் சாகுற வரை இழக்க மாட்டேன்மா.” என்றான் கரகரத்த குரலில்.

பானுரேகாவும் சிறிதாய் திகைத்து விட்டு, பணத்தை வாங்காமல் நிற்க, இந்திரஜித் தான் பொங்கினான்.

“என்ன பேசுற ஜீவி. இது உன் வீடு.” என்று அதட்டிட,

“ஆனா, உரிமை தான் இல்ல.” என உணர்வற்று கூறியவனின் பணத்தை பானுரேகா மறுத்துவிட்டு, அங்கிருந்து நகன்று விட, விழித்தபடி அருகில் நின்றிருந்த சத்யரூபாவின் கையில் திணித்தான் சிரஞ்சீவி.

அவளோ அதிர்ந்து, “என்கிட்ட ஏன் குடுக்குறீங்க.” எனப் பதறிட,

“ம்ம்… நீயும் தான ஓசில சாப்பாடு போடுற. இதை நீயே என் அம்மாகிட்ட குடுத்துடு.” என்றவன்,

“காதலிச்சா குடும்பத்தை மறந்துட்டு போகணும்ன்னு அவசியம் இல்லை தான். அதுக்காக காதலை தூக்கி எறியிற அளவு பரந்த மனசு எனக்கு இல்லை சத்யா. அஃப்கோர்ஸ்… கல்யாணத்து அன்னைக்கு ஓடிப்போனா தெய்வீக காதலா தான் இருக்கணும். அப்டி இல்லன்னா, இந்நேரம் உன் அக்காவை கல்யாணம் பண்ணி, பொய்யா வாழ்ந்துட்டு இருந்துருப்பேன். எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையுமே வெறும் நடிப்பா தான் இருந்திருக்கும். அப்படி நடிச்சா தான் நல்லவங்கன்னு முத்திரை குத்துவீங்க… இல்ல?” என அவள் பேசிய வார்த்தைகளை வைத்து, அவளை குட்டி விட்டே, நீரஜாவை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

மனையாளை முறைத்த இந்திரஜித், “இதுக்கு தான் சொல்றது… வார்த்தையை பார்த்து பேசுன்னு. காசை தூக்கி குடுக்குற அளவு இப்போ என்ன நடந்து தொலைஞ்சுச்சு…” என சற்றே எரிச்சலுடன் கேட்டான்.

அவளுக்கும் மனம் சுணங்கியது போலும்… “காலைல அத்தை தான் பேசுனாங்க.” என்று நடந்ததைக் கூற, இந்திரஜித்திற்கு கோபம் வந்தது.

நேராக தாயிடம் சென்றவன், “இப்போ சந்தோஷமா உங்களுக்கு. வார்த்தையால குத்தி குதறுறதுல அப்படி என்ன தான் திருப்தியோ உங்களுக்கும் உங்க மருமகளுக்கும்.” என பானுரேகாவை முறைத்திட, அவரும் “ரொம்ப சந்தோஷம்” என அசட்டையாக கூறி விட்டு சென்றதில், மேலும் மண்டை காய்ந்தது.

அதில் மீண்டும் ஹாலுக்கு வந்தவனிடம், கையிலிருந்த பணத்தை நீட்டிய சத்யரூபா செய்வதறியாமல் நிற்க, “இதை எதுக்கு என்கிட்ட குடுக்குற. எப்படியோ, அவன் மேல கோபப்படலன்னு தான ஃபீல் பண்ணுன. இப்போ நீ நினைச்ச மாதிரி நடந்துடுச்சு. அப்படியே அவன் வீட்ட விட்டு போய்ட்டா, இன்னும் நிம்மதியாகிடும் உனக்கு.” என்று சீற்றத்தில் கடிந்தவன், அலுவலகம் கிளம்பி விட்டான்.

சத்யரூபாவிற்கு தான் கண்ணீர் அதோ இதோவென வெளிவரத் துடித்தது. அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும், அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. கணவனின் ஊடல், அவளது மனதை ஊசலாட வைத்தது.

இந்திரஜித்திற்கோ, தமையனின் வருத்தம் கண்டு அத்தனை ஆதங்கம்! பானுரேகாவின் கோபம் நியாயம் தான். கோபத்தில் அடிக்க கூட செய்து விடலாம். இதுவோ அவனுக்கு மனஉளைச்சலை அல்லவா தருகிறது…? என்று வருந்தினான்.

கணவனின் வருத்தம் அவளைத் தாக்கியதோ என்னவோ, சிரஞ்சீவி வீட்டிற்கு திரும்பியதும் முதல் வேலையாக, அவன் முன் சென்று நின்றாள்.

“இந்த பணத்தை வாங்கிக்கோங்க.” என்று அவன் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க,

“இதை அம்மாகிட்ட குடுன்னு சொன்னேன்.” என்றான் அமைதியாக.

“ப்ளீஸ் மாமா… உங்களுக்கும் அத்தைக்கும் பிரச்சனைன்னா, அதை பேசி தீர்த்துக்கோங்க. இப்படி பணத்தை நீட்டுனா, அது எல்லாருக்கும் கஷ்டம்.” என்றவள், அருகில் நின்று கொண்டிருந்த நீரஜாவின் கையைப் பிடித்து பணத்தை வைத்து விட்டாள்.

அந்நேரம், இந்திரஜித்தும் அங்கு வர, அவனை நிமிர்ந்து பாராமல், சிரஞ்சீவியை ஏறிட்டாள் சத்யரூபா.

“எனக்கு உங்க மேல கோபம் இருக்கு தான் மாமா. இல்லைன்னு சொல்லல. அதுக்காக உங்களை வீட்டை விட்டு அனுப்பி, குடும்பத்தை பிரிச்சு பாக்குற அளவு, நான் மோசமானவ இல்ல. நான் பேசுனது உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா என்னை மன்னுச்சுடுங்க.” என்று கூறும் போதே குரல் நடுங்கி, ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இந்திரஜித் தான், கையைக் கட்டிக்கொண்டு அமைதியாக வேடிக்கைப் பார்க்க, சிரஞ்சீவிக்கும் அவளது கலங்கிய முகத்தைப் பார்க்க என்னவோ போல் ஆகிவிட்டது.

“தப்பு என் மேல தான் சத்யா. வைஷுவும் எழிலை விரும்புனனால தான், இவ்ளோ டிராமா நடந்துச்சு. இல்லன்னா, நிச்சயமா இப்படி ஒரு கல்யாண டிராமா நடந்துருக்காது. யாரோட வாழ்க்கையும் ஸ்பாயில் ஆகிட கூடாதுன்னு தான் நினைச்சோமே தவிர, எல்லாரையும் காயப்படுத்தி ஏமாத்தணும்ன்னு நாங்க நினைக்கல. இதுனால, நீயும் ரொம்ப அஃபெக்ட் ஆகியிருக்கன்றதை மறுக்க முடியாது தான். ஐ ஆம் சாரி.” என்று மனமுவர்ந்து மன்னிப்பு கேட்டான்.

பின், தம்பியையும் அவளையும் ஒரு பார்வை பார்த்தவன், “தேவை இல்லாம, நான் ஓடிப்போனனால, உனக்கும் இந்தருக்கும் கல்யாணம் ஆகி, உன்னை இன்னும் கஷ்டப்படுத்திருச்சு. இப்போ கூட ஒண்ணும் குறைஞ்சு போகல. என் பிரெண்டு ஒருத்தன் வக்கீலா தான் இருக்கான். காலைல கல்யாணம் ஆனா கூட சாயந்தரம் டைவர்ஸ் வாங்கி குடுத்துடுவான். நீ சரின்னு சொல்லு, என்னால ஆன இந்த தப்பை நானே சரி பண்ணி, உனக்கு இவன்கிட்ட இருந்து விடுதலை வாங்கி குடுத்து, வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்று சிரிப்பை வெகுவாய் அடக்கிக்கொண்டு தீவிரமாய் கேட்டான்.

பதில் சொல்லத் தெரியாமல், திருதிருவென விழித்துக்கொண்டு நின்ற சத்யரூபா, இந்திரஜித்தைப் பார்க்க, அவனோ அப்போதும் பெரியதாக உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அவளது தவிப்பை ரசித்திருந்தான்.

நீரஜா தான், “சும்மா சொல்லு சத்யா. நானும் உனக்கு அக்கா மாதிரி தான். உன் கல்யாணத்தை நான் முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறேன்.” என்று அவள் பங்கிற்கு வார, எச்சிலை விழுங்கிய சத்யரூபா, “ஏன் நான் இங்க இருக்குறது உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கலையா?” என்று கேட்டு மடக்கினாள்.

சிரஞ்சீவியோ, “நாங்க எப்பமா அப்படி சொன்னோம். நீ தான, திடீர்ன்னு கல்யாணம் ஆகிடுச்சு. என்னால அவசரமா கல்யாணம் ஆகிடுச்சுன்னு புலம்பிட்டு இருந்த. என்னைக்கா இருந்தாலும், இதை நீ சொல்லிக்காட்டிகிட்டே இருப்ப. எங்களுக்கு பிடிக்காத கல்யாணத்தை நாங்க நிறுத்திக்கிட்டோம். அதே மாதிரி, உனக்கு பிடிக்காததையும் உன்மேல திணிக்க கூடாதுல. அந்த நல்ல எண்ணத்துல தான கேட்குறோம். அப்படி தான வாட்டர்…?” என நீரஜாவிடம் யோசனை கேட்டுக்கொண்டான்.

“ஆமா சத்யா. சும்மா சொல்லு.” என்று ஏற்றி விட, அவளுக்கோ இந்திரஜித் அமைதியாக இருந்ததில் கடுப்பு எழுந்தது.

“ஐயோ… அதெல்லாம் ஒண்ணும் இல்ல. புலம்ப தான செஞ்சேன். கல்யாணமே வேணாம்ன்னு வெளிநடப்பா செஞ்சேன்.” என்று தவித்திட,

“அப்போ, இந்தர் கூட வாழுறதுல உனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல அப்படி தான…?” நீரஜா பொங்கிய சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியபடி கேட்டாள்.

“இல்லக்கா. போதுமா?” என யாரையும் பாராமல் சொல்லி விட்டு சென்றவளுக்கு, இதயம் அதிகமாக துடித்தது.

என்னவோ, இந்த கல்யாண உறவை முறித்து விடலாம் என்று பேச்சுக்கு சொன்னால் கூட, அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அவன் மீதிருக்கும் மெல்லிய உணர்வை என்னவென்று வெளிப்படுத்துவதென்றும் புரியாமல் குழம்பினாள்.

அந்நேரம், முதுகுக்கு பின்னால் நிழலாட, கடுப்புடன் திரும்பினாள்.

“உங்க அண்ணன் டைவர்ஸ் பண்ணுனா பிரச்சனை இல்லைன்னு சொல்றாரு. கேட்டுட்டு கல்லு மாதிரி நிக்கிறீங்க.” என கடுகடுக்க,

“அவன் அதை என்கிட்ட கேட்கல. உங்கிட்ட தான் கேட்டான். அதுக்கு நான் எப்படி தியா ரியாக்ட் பண்ண முடியும்?” குறுநகையுடன் கேட்டவனை முறைத்தவள்,

‘தியாவாம் தியா. காலைல என்னை சீரியல் வில்லி ரேஞ்சுக்கு பேசிட்டு போயிட்டு இப்ப வந்து ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுறான்…’ என முணுமுணுத்தபடி, நாற்காலியில் இருந்த காய்ந்த துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.

அவளது புலம்பல்கள் அவன் காதில் தெள்ளந்தெளிவாக விழுந்திட, அதற்கும் வசீகரப் புன்னகை வீசியவன், உதட்டை மடித்தவாறு, மெல்ல அவளருகில் சென்று பின்னால் நின்றான்.

அவள் காதருகில் குனிந்தவன், ரகசிய குரலில் “தியா” என அழைக்க, அவனது மூச்சுக்காற்று பட்டதும் சிலிர்த்த மேனியை அடக்க இயலாமல் விலகியவளை, அவன் விலக விடத்தான் இல்லை.

“நம்ம லவ் பண்ணலாமான்னு கேட்டேன். நீ பதிலே சொல்லல.” சத்யரூபாவின் கையைப் பிடித்து கேட்டான் இந்திரஜித்.

அதற்கு பதிலளிக்க இயலாமல், “கையை விடுங்க இந்தர். டிபன் செய்ய போகணும்.” எனத் தப்பிக்க முயன்றாள்.

“அம்மா இப்ப தான் போன் பண்ணுனாங்க. அப்பாவோட ரிலேட்டிவ்ஸ்ல யாரோ சடன் டெத் – ஆம். சோ ஊருக்கு போயிருக்காங்க. டிபன் அவசரம் இல்ல. நீ பதில் சொல்லு.” என்றவனிடம்,

“வீட்ல மத்தவங்களுக்குலாம் வயிறு இல்லையா. விடுங்க இந்தர்.” எனக் கையை விடுவித்துக் கொள்ள போராட, “இன்னைக்கு டின்னர் வெளில போய் சாப்பிடலாம். வேலை மிச்சம்ல.” என்றபடி, அவளை இன்னும் நெருங்கினான்.

“அத்தைக்கு தெரிஞ்சா திட்டுவாங்க…” எனப் பின்னால் நகர்ந்தபடி கூற,

“உங்க அத்தைகிட்ட பெர்மிஷன் எல்லாம் வாங்கியாச்சு. இப்போ மேடம் பதில் சொல்றீங்களா?” மீண்டும் அங்கேயே வந்து நின்றான்.

“என்… என்ன பதில் சொல்லணும். மொதல்ல தள்ளி நில்லுயா…” என மிரட்டலாக கூற வந்தவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது.

“ஐ லவ் யூ சொல்லு. நம்ம லவ் பண்ணலாம்.” குறும்பாய் அவளை வம்பிழுக்க, அவள் தலையைக் குனிந்து மௌனமானாள்.

சில நொடிகளில் அவனது முகமும் மாறியது.

“எழிலை இன்னும் மறக்க முடியலையா சத்யா?” இறுக்கத்துடன் இந்திரஜித் கேட்க, சட்டென நிமிர்ந்தவள், “உளறாத இந்தர்.” என்றாள் முறைப்பாக.

“அப்போ லவ் பண்றதுல என்ன பிரச்சனை…” அர்த்தப்பார்வையுடன் வினவியவனிடம், “நீ விருப்பமெல்லாம் கேட்டு தான் கல்யாணம் பண்ணுனியா?” எனக் கோபமாய் பார்த்தாள்.

அதுவும் அழுத்தமாய் வரவில்லை. காதலென்ற வார்த்தையைத் தவிர்க்க, கோபத்தை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டாள்.

எழில் கேட்டபோதும், ‘சரி’ என்று கூறி விட்டு, அவை அனைத்தும் தெரிந்த கணவனிடமும் காதலுக்கு ஒப்புக்கொள்வது சங்கடத்தின் உச்சமாக இருந்தது பெண்ணவளுக்கு.

அவளை முழுதாய் ஒரு நிமிடம் ஆராய்ந்த இந்திரஜித், “விருப்பம் கேட்டு கல்யாணம் பண்ணல தான். அதான், பிடிக்கலைன்னா டைவர்ஸ் வாங்கிட்டு போன்னு சொல்லியாச்சே.” என்றான் நக்கலாக.

அதில் ஆத்திரத்துடன் முறைத்தவள், “ஓஹோ… நீ உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணுவ. நாங்க டைவர்ஸ் வாங்கிட்டு போய் வாழாவெட்டியா இருக்கணும். நீ அடுத்த மாசமே உன் ஒன் சைட் லவரை கல்யாணம் பண்ணிக்குவ. உனக்கு என்ன… யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ஜடம் மாதிரி தாலி கட்டி குடும்பம் நடத்துவ.” என்று மூச்சிரைக்க கத்தினாள்.

பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்குவது தான் பெரும்பாடாக இருந்தது இந்திரஜித்திற்கு.

‘முட்டாள் பெண்ணே… எப்படியும் உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன் என்று தெரிந்து தான், அசட்டையாக இருந்தேன்’ என்று கூற வேண்டும் போல இருந்தாலும், அனைத்தும் வெளியில் வந்து விடுமென்ற எண்ணத்தில், அதற்கு பதில் கூறாமல் தவிர்த்தான்.

“நான் ஒண்ணும், நீ எப்படா போவ. வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு அலையல. உன்னை போக சொல்லவும் இல்ல. கூட இருந்து லைஃப் லாங் என்னை லவ் பண்ணுன்னு தான் சொல்றேன்.” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“நீ செஞ்சதை மறந்துட்டு, லவ் பண்ண வேற செய்யணுமா. முடியாது…” வாய்க்கு வந்ததை உளறியவளைக் கண்டு கடியானவன்,

“அடிப்பாவி, விட்டுட்டும் போக மாட்ட, என் கூட வாழவும் மாட்ட… இதான் உன் பிளானா? ஐயோ… இப்படி ஏமாந்து போய்ட்டேனே.” என்று வாயில் கை வைத்து புலம்புவது போல நடித்தான்.

அவனது பாவனையில், மெல்ல புன்னகை மலர, “ஆமா…” என மேலும் கீழும் தலையாட்டிய சத்யரூபா, அவனை சமாளித்து விட்ட நிம்மதியில் அவன் கையை எடுத்து விட்டு ஓடினாள்.

வாசல் கதவை தாண்டும் வேளையில், “புருஷன்கிட்ட லவ்வ ஒத்துக்க ஆக்வர்டா பீல் பண்ண வேண்டிய அவசியம் இல்ல தியா. என்னை பொறுத்தவரைக்கும் உனக்கும் எழிலுக்கும் இருந்த ரிலேஷன்ஷிப்பை லவ்வுன்னே டிபைண்ட் பண்ண முடியல. அப்படி உண்மையாவே லவ்வா இருந்தா, அவ்ளோ சீக்கிரம் உங்க ரெண்டு பேராலயும் அதை தூக்கி எறிஞ்சுருக்க முடியாது.” என நிறுத்தி நிதானமாக இந்திரஜித் கூறியதில், சரட்டென நின்று விட்டாள்.

அவனோ மேலும், “எழிலுக்கு கூட காதல் இருந்துருக்கலாம். ஆனா, உன் மனசுல காதல் இல்ல. கடமை மட்டும் தான் இருந்துச்சு. கடமைக்காக காதலிக்கிறதை, காதல்ன்னு சொல்லவே முடியாது ரூப்ஸ்.” என்றான் கேலியாக.

அவள் எழிலின் மீது வைத்த அன்பும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதும் உண்மை தானே. அதனை மறுக்க இயலவில்லை அவளால்.

“எதை வச்சு இப்படி சொல்றீங்க இந்தர். குடும்பத்துக்காக காதலை தூக்கி போட்டதுனாலயா?” அவன் புறம் திரும்பி அவள் கேள்வி எழுப்ப,

அமர்த்தலாக புன்னகைத்தவன், “காதல்ன்னு வந்துட்டாலே, ஒரு குட்டி சுயநலமும் வந்துடும் தியா. காதலா குடும்பமான்றது இங்க பிரச்சனை இல்லை… உன் மனசுல காதல் இருந்திருந்தா, குடும்பத்தையும் காதலையும் சரியா பாலன்ஸ் பண்ணிருப்ப. ஸ்கூல் படிக்கிற வயசுல இருந்து குடும்பத்தை பொறுப்பா பார்க்குற உனக்கு, உறவுகளை எப்படி அட்ஜஸ்ட் பண்ணனும்ற ட்ரிக் எல்லாம் நல்லாவே தெரியும். ஆனானப்பட்ட என் அம்மாவையே சமாளிக்கிறியே… அது போதாது!” என்றான் கையைக்கட்டிக் கொண்டு.

ஒட்டுமொத்தமாக குழம்பிப் போனவள், “இப்ப என்ன தான் சொல்ல வர்றீங்க. எனக்கு புரியல.” என்று நெற்றியைப் பிடிக்க,

“நீ புருஞ்சுக்கவே வேணாம் தியா. நம்ம லவ் பண்ணலாம்ன்னு சொல்லு, உனக்கு புரியாததை எல்லாம் புரிய வைக்கிறேன்.” என்று கண் சிமிட்டினான்.

ஒரு வித குழப்ப மனநிலையில் இருந்தவள், “சரி” என குழப்பத்துடன் தலையாட்டி விட்டு, நகரப் போனாள்.

விழிகளை விரித்தவன், “வாவ்… நிஜமாவா தியா… லவ் யூ சோ மச்” என வேகமாக அவளருகில் வந்து, கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “சீக்கிரம் கிளம்பு நம்ம பர்ஸ்ட் டின்னர் போறோம்.” என்று கூறிட,

அவன் கொடுத்த முத்தத்தில் திகைத்து, மிரண்டு விழித்தாள் சத்யரூபா.

அலைபாயும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
36
+1
172
+1
1
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்