Loading

தன்னை நொந்து மந்த்ராவின் புலம்பல்களை அலைபேசி வாயிலாகக் கேட்டுக் கொண்டிருந்தான் மாதவ். இத்துடன் இருபதாவது முறையாக அமிஷை திட்டித் தீர்த்திருப்பாள்.

“அவனுக்கு எவ்ளோ திமிரு இருக்கணும் மாதவ். ‘லவ் பண்ணேன்… ஆனா என் ஃபிரெண்டை விட முடியாது’ன்னு சொல்லிருந்தா கூட நான் ஏதோ சமாதானம் ஆகிருப்பேன். க்ரஷ்ன்னு சொல்லிட்டான் மாதவ். க்ரஷ்க்கும் லவ்க்கும் வித்தியாசம் தெரியாமலா ப்ரொபோஸ் பண்ணுனான். அவன் என்கிட்ட வழியிறானா, இல்லையான்னு கூடவா தெரியாம நான் அந்த பஸ் ஸ்டாப்ல பைத்தியக்காரி மாதிரி வெய்ட் பண்ணுனேன். அவனோட காதலை ஃபீல் பண்ணுனனால தான, ஃப்ரெண்ட பாத்துட்டா என்னை கழட்டி விடுவான்னு தெரிஞ்சும் கூட அவன் மேல காதலை வளர்த்துக்கிட்டேன். இருக்கட்டும்… க்ரஷ்ஷாம்லா கிரஷு! என்கிட்ட சிக்காமயா போய்ட போறான்…” வாய்க்கு வந்தபடி அமிஷை வறுத்து எடுத்தவளுக்கு, இறுதியில் கண்ணில் நீர் முட்டியது.

“இந்நேரம் நான் பையனா இருந்திருந்தா, சரக்கடிச்சுட்டு அவன் வீட்டு முன்னாடி போய் கலவரமே பண்ணிருப்பேன்.” என்று மூக்கை உறிஞ்சிட, மாதவிற்கு சிரிப்பு ஒரு புறம் வந்தது.

“இப்ப கூட ஒண்ணும் குறைஞ்சு போகல. சரக்கடிப்போமா?” மாதவ் இளித்தபடி கேட்டதில், “என் அம்மாகிட்ட நீயும் செருப்படி வாங்குறது ஓகேன்னா… எனக்கும் ஓகே” என்றாள்.

“யுவர் லவ்க்கு நீ ஸ்லிப்பர் ஸ்லாப் வாங்கு. வை மீ வாங்கணும்.” கடுப்புடன் கூறிட.

“டேய்… நானே கொலைவெறில இருக்கேன். தப்பு தப்பா இங்க்லீஷ் பேசி, அநியாயமா ஒரு கொலை பண்ண வைக்காத…” என்று பற்களை கடித்தாள்.

“அடிப்பாவி, உன்னை ஏமாத்துனவனை கேட்காம, நானே ஒரு மூலைல நான் உண்டு என் ஹார்ட்டு வேலை உண்டுன்னு இருக்கேன். என்னை போய் கொலை பண்ணுவேன்னு சொல்றியே. நீ எல்லாம் நல்லா இருப்பியா. இந்த ஜென்மத்துல உனக்கு லவ் செட் ஆகாது.” என மாதவ் சாபமிட,

அவளும் கடியாகி, “ஆனா நான் இவ்ளோ நல்ல சாபம்லாம் குடுக்க மாட்டேன்டா. நீயும் லவ்ல விழுந்து, புரண்டு, சட்டையெல்லாம் மண்ணாகி, பைத்தியம் பிடிச்சு என்னை சரக்கடிக்க கூப்டுவ. இது செத்து போன என் தாத்தா மேல சத்தியம்.” என்று மூச்சு வாங்க அர்ச்சனை செய்து விட்டு போனை வைத்தாள்.

“அஸ்கு புஸ்கு… நான் ஆல்வேஸ் சிங்கிள்!” என சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டவனை, தாதியரின் குரல் தடை செய்தது.

“சார்… பேஷண்ட்டை வர சொல்லவா?”

“வர சொல்லுங்க.” என்றவன், குறும்பை எல்லாம் ஓரம் கட்டி விட்டு, இதயம் சார்ந்த மருத்துவனாக மாறினான், முகத்தில் தீவிரத்தை ஏற்றி.

நோயாளிகளை எல்லாம் பார்த்து முடித்தவன், கிளம்ப எத்தனிக்கும் போது, அவசரமாக உள்ளே வந்த செவிலியப் பெண், “சார்… ஒரு பேஷண்ட் நெஞ்சு வலின்னு வந்துருக்காங்க. எமெர்ஜென்சி” என்றதும், அவசரமாக விரைந்தான்.

நோயாளியைக் கண்டதும், அவனுக்கு ஒரு திகைப்பும் வியப்பும். “ராணிம்மா!” என அவன் உதடுகள் முணுமுணுக்க, அவரோ மயக்கத்தில் இருந்தார்.

வேகமாக சிகிச்சையைத் தொடங்கியவனுக்குள் பெரும் குழப்பம். ‘இவங்க திருச்சில என்ன பண்றாங்க’ என்று புரியாமல், அவருக்கு ஏற்பட்டு இருந்த மைல்டு அட்டாக்கில் கவலை கொண்டு, சிகிச்சையும் கொடுத்து விட்டு வெளியில் வந்தான்.

அங்கு, முகத்தை கையால் மூடிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டவனுக்குள் ஒரு உந்துதல், ரோஜாவாக இருக்குமோ என்று.

“ரோஜா?” சந்தேகத்துடனே அழைத்ததில், அவள் பட்டென நிமிர்ந்தாள்.

கன்னத்தில் கண்ணீர்த் தடம். ஆறு வருடங்களுக்கு முன் பார்த்த குழந்தை முகம் மாறி, முதிர்ச்சி பிறந்திருந்தது. ராணியைக் காணும் முன் இவளைப் பார்த்திருந்தால், நிச்சயம் தான் விளையாடி கிண்டல் செய்யும் பாட்டி இவளே என்று சிறிதும் நம்பி இருக்க மாட்டான். அந்த அளவு அவளது வனப்பும், அழகும் மெருகேறி இருந்தது. ஆனால், இதுவரை அவளிடம் அவன் பார்த்தே இராத சோகம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெறித்தது.

அவனைக் கண்டதும் ரோஜாவிற்கும் அதிர்ச்சி தான். ஆனால், அதை விட தாயின் உடல்நிலையே பெரிதாக இருக்க, “அம்மா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டவளின் குரலில் அத்தனை பயம்.

‘யோவ் டாக்டரு!’ என எப்போதும் எகத்தாளமாக வெளிவரும் அவளது வார்த்தைகள் இன்று அந்நியத்தன்மையுடன் வந்ததில் ஏதோ ஒரு புரியா வலி அவனுக்குள்.

பின், அவனே ‘சே… அம்மா ஐசியூல இருக்கும் போது எப்படி சகஜமா பேச முடியும்’ எனத் தன்னை தானே திட்டிக் கொண்டவன், “இப்ப பரவாயில்ல ரோஜா. மைல்டு அட்டேக்.” என்னும் போதே, அவளது விழிகள் மீண்டும் நீரைத் தாங்க எத்தனிக்க,

“பயப்படாத. சரி ஆகிடும்.” என்றான் சட்டென.

தலையை மட்டும் உருட்டியவள், “அம்மாவை பார்க்கவா?” என்றதில்,

“ரெண்டு நாள் ஐசியூல இருக்கட்டும் ரோஜா. இம்ப்ரூவ்மெண்ட் பார்த்துட்டு நார்மல் வார்டுக்கு மாத்தலாம். இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும். ஐசியூக்குள்ள யாரையும் அலோ பண்ண முடியாது” என்றான்.

“இப்ப தான் பரவாயில்லன்னு சொன்னீங்க. ரெண்டு நாள் ஐசியூல இருக்கணுமா?” கேட்டவளின் குரல் கமறிட,

“ஏய்… அட்டாக் வந்துருக்கு பாட்டி. உடனே டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்ப முடியுமா? பட் பயப்பட எதுவும் இல்ல. அதுக்காக எந்திரிச்சு ஓட வைக்க முடியாது. புருஞ்சுக்கோ” என்று படபடவெனப் பேசியதில், அவள் அழுகையை அடக்கிக் கொண்டு அமைதியானாள்.

அதுவே அவனுக்கு பெரிய அதிர்ச்சி தான். இந்நேரம், தான் பேசியதற்கு தன்னை உண்டு இல்லையென ஆக்கிருப்பாளே!

“ஒரு காபி குடிச்சுட்டு வரலாம் வா!” மாதவ் அழைத்ததில், “இல்ல இங்கயே இருக்கேன்” என்றாள்.

“ஐசியூ வாசலை உன் கண்ணீரால கழுவ வேணாம் பாட்டி. இங்க ஏற்கனவே மாப் போட்டுட்டாங்க. வா…” என நக்கலுடன் கூறியதில், லேசாக முறைத்தாள்.

சிரிப்பை அடக்கியவன், அவளைத் தரதரவென கேண்டினுக்கு இழுத்துச் சென்றான்.

அங்கு ஒரு இருக்கையில் அமர வைத்து விட்டு, காபியை வாங்கி வந்து அவள் முன் வைக்க, “நானே எடுத்துருப்பேனே!” என்றாள் தயக்கத்துடன்.

“பாருடா… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, காலேஜ் போறவனை கூப்பிட்டு வச்சு வீட்டு வேலை சமையல் வேலை வாங்கி டார்ச்சர் பண்ணதுலாம் மேடம்க்கு மறந்து போச்சோ?” கேலியுடன் மாதவ் கேட்டதில், அவளுக்கும் புன்னகை பிறந்தது.

இப்போது நினைத்தால், சிறு பிள்ளைத்தனமாக அவனுடன் போட்டி போட்டு வாயடித்து, வேலை வாங்கியது சங்கடமாகவே இருந்தது.

அதிலும் அப்போது மாணவனாக இருக்கையில், பெரியதாக தெரியவில்லை. அவளது வயதும் அதனை எண்ண விடவில்லை. இப்போது மதிப்பு மிக்க மருத்துவராக, தன் முன் இருந்தவனிடம் இயல்பாக பேச இயலவில்லை. ஆறு வருட இடைவெளியும் ஒரு காரணம்.

நெளிந்தபடி அமர்ந்திருந்தவளை விசித்திரமாக பார்த்த மாதவ், “காபியை குடி பாட்டி” என்றதில், அவளும் பருகினாள்.

“இப்ப என்ன பண்ணிட்டு இருக்க? நீயும் ராணிம்மாவும் திருச்சிக்கு எப்ப வந்தீங்க?” எனக் கேள்வியாகக் கேட்க,

“கேட்டரிங் முடிச்சுட்டு, ரெஸ்டாரண்ட்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். என் சொந்த ஊரே திருச்சி தான். நாங்க இங்க வந்து ரொம்ப வருஷமாகுதே!” என்றாள்.

அவள் எப்போது ஹைதராபாத்தில் இருந்து கிளம்பினாள் என்றே தெரியவில்லை அவனுக்கு. “நீ எங்க கூட தான சுத்திட்டு இருந்த, எப்ப இங்க வந்த?” என்றான் புரியாமல்.

“ஹர்மேந்திரன் ஐயா இறந்து கொஞ்ச நாள்ல மஹா அக்கா எங்களை ஊருக்கு போக சொல்லிட்டாங்க. நானும் எவ்ளவோ கெஞ்சுனேன், அவங்க கூட இருக்கேன்னு ஆனா கேட்கவே இல்ல.” எனப் புருவம் சுருக்கிக் கூற, அவன் திகைத்தான்.

“என்ன சொல்ற, அவள் அப்பா இறந்துட்டாரா எப்போ?” எனக் கேட்டதில், “ஆஷா அக்காவுக்கு ஆக்சிடெண்ட் ஆன மறுநாள். உங்களுக்குத் தெரியாதா?” அவளும் குழப்பமாகக் கேட்டாள்.

தலையை மறுப்பாக அசைத்தவன், “சீனியர்க்கு ஆக்சிடெண்ட் ஆனதே உன்னை பாக்குறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கே தெரியும்.” என்றான்.

“ஓ!” என்றதோடு அவளும் அமைதியாகிட, “பாவம் ஆஷாக்கா. இன்னும் சரி ஆகல.” என பெருமூச்சு விட்டவள், “தஷு அண்ணா எப்படி இருக்காங்க…” எனக் கேட்டாள்.

“உன் அக்காவை லவ் பண்ணுனா எப்படி நல்லா இருக்க முடியும். அவனும் நல்லா இல்ல. நாங்களும் நல்லா இல்ல.” என்றவனுக்கு ஆற்றாமை தான் அதிகம் இருந்தது.

இப்படி மஹாபத்ரா விட்டுச் செல்வாள் என அவன் எண்ணவே இல்லை. அவள் காட்டிய பாசமும் அன்பும் தஷ்வந்திற்கு புரிந்ததோ இல்லையோ மாதவ் நன்றாகவே புரிந்து கொண்டான். அதனாலேயே, அவள் எப்படியும் அவனை விட மாட்டாள் என உறுதியாக நம்பினான்.

அதற்கு அவள் பதிலேதும் கொடுக்கவில்லை. அதில் அவனே, “இப்ப மஹா எங்க இருக்கா?” எனக் கேட்க,

“‘யூகே’ல இருக்காங்க. இதுவரை ஆஷா அக்காவை பார்க்க கூட வரல. ஆனா, அவங்க தான் ட்ரீட்மெண்ட்க்கு தேவையான எல்லாமே பார்த்துட்டு இருக்காங்க.” என்றதும், “ஏன்?” என்றான் புரியாமல்.

“எனக்கும் தெரியலங்க. மஹா அக்கா எப்பவுமே எதையும் ஷேர் பண்ண மாட்டாங்க. நம்மளா கேள்வி கேட்டாலும் திட்டு தான் விழும்… அதான் இதுவரை அவங்க பண்ற எதுக்குமே நான் எந்த கேள்வியும் கேட்டதே இல்ல. அப்பறம் வர்ற ஒன்னு ரெண்டு மெஸேஜ் கூட நின்னுடும்.” என வருத்தத்துடன் கூறியதில்,

“ம்ம்க்கும்… இங்க எல்லா கலவரமும் செஞ்சது போதாதுன்னு, யூகேல போயும் ரௌடிசம் பண்றாளாக்கும்” மாதவ் கிண்டலாக கேட்டான்.

அதில் அவளுக்கும் சிரிப்பே வர, மெல்ல இதழ் விரித்தவள், “நீங்க இன்னும் மாறவே இல்ல. அப்போ பார்த்த மாதிரி தான் இப்பவும் ஜாலியா பேசுறீங்க.” என்றாள்.

“ஆனா, நீ ரொம்ப மாறிட்ட. எனக்கே வேற யாருகிட்டயோ பேசுற மாதிரி இருக்கு பாட்டி. உன் யோவ் டாக்டரை மிஸ் பண்றேன்.” என்றவனின் பேச்சில் உண்மையான வருத்தம் இருக்க, அவளோ விழித்தாள்.

“அது… அப்ப… ஏதோ விளையாட்டுத்தனமா இருந்தேன்” என அசடு வழிய, “ஏன்? இப்ப என்ன ஆச்சு?” எனக் கேட்டான் குழப்பமாக.

“அதே மாதிரி இருக்க முடியுமாங்க. மெச்சூரிட்டி வந்துடுச்சு.” அவளும் புரிய வைக்க முயல,

“அதே மாதிரி இருந்தா என்ன தப்பு ரோஜா. மெச்சூரிட்டி சில விஷயத்துல வந்தா போதும், எல்லாத்துலயும் இருக்கனும்ன்னு அவசியம் இல்ல.” எனப் புன்னகைத்ததில், அவள் மேலும் விழித்தாள்.

மருத்துவமனையில் தன் அறையில் அமர்ந்து இன்னும் அமிஷை தான் திட்டிக் கொண்டிருந்தாள் மந்த்ரா.

“எக்ஸ்கியூஸ் மீ?” யாரோ கதவைத் தட்ட, நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் மகிழ்வும் கூடவே கோபமும் கொப்பளித்தது.

உதட்டை மடித்து சிரித்தபடி தஷ்வந்த் தான் அங்கு நின்றிருந்தான்.

“யாரு சார் நீங்க? உங்களை இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி இல்லையே?” என சிந்தித்தவள், “நீங்க டாக்டரை பார்க்க வந்துருக்கீங்கன்னா, அவர் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருப்பாரு.” என கடகடவெனப் பேசினாள்.

“பட், நான் இந்த டாக்டர் மேடமை தான பார்க்க வந்துருக்கேன்…” என்றபடி அவளருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவனிடம், “வெரி சாரி, நான் கைனகாலஜிஸ்ட். உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க முடியாது…” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.

அவள் தாடையை பற்றித் திருப்பியவன், “நீ கோபப்படுறதை பார்த்த சிரிப்பா வருது மந்த்ரா.” என்று அவளை வார, அவன் கையை தட்டி விட்டாள்.

“வரும் வரும்… உங்களுக்கு என்னை பார்த்தா சிரிப்பா தான இருக்கு. கொஞ்சமாவது என்மேல அக்கறை இருந்துருந்தா ஒரு தடவையாவது நீ என்னை வந்து பார்த்துருப்ப தஷு. அவன் அவன் ப்ரெண்டுக்காக லவரையே கழட்டி விடுறான். எனக்கு ரெண்டுமே ஒழுங்கா இல்ல.” என்று ஆதங்கத்தில் தேம்பினாள்.

“ஹே! லூசு மாதிரி பேசாத. என் சிட்டுவேஷன் அப்படி… உனக்கு தெரியும் தான?” தஷ்வந்த் சமாதானம் செய்ய முயல,

“என்ன பெரிய சிட்டுவேஷன்? எந்த சூழ்நிலையா வேணாலும் இருக்கட்டும். ஏதோ கொஞ்ச நாள் தனியா இருக்கனும்ன்னு சொன்ன… சரின்னு விட்டோம்… இப்போ எத்தனை வருஷம் ஓடிடுச்சு பார்த்தியா?” அவள் ஆற்றாமையில் பொங்கினாள்.

அவன் பதில் ஏதும் பேசவில்லை. “நான் இப்ப என்ன சமாதானம் சொன்னாலும் உன்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது மந்த்ரா. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு. நான் சொல்றேன்.” என்னும் போதே, கதவு தட்டப்படும் அரவம் கேட்க, இருவரும் திரும்பினர்.

அமிஷ் தான் நின்றிருந்தான். முகத்தில் சிறு கடுப்பு. “மார்னிங் ரொட்டின் செக் அப் பண்ண வர்றதில்லையா? வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமோ…” என்றவன், தஷ்வந்தையும் முறைத்தான்.

‘ஆரம்பிச்சுட்டானுங்க தெலுங்கு பேச…’ என சலித்துக் கொண்டவன், “என்னவாம்?” என்று மந்த்ராவிடம் வினவ,

“இவரு வெளில போயிருந்தப்ப நான் ஆஷாவுக்கு ரொட்டின் செப் – அப் பண்ணி முடிச்சுட்டு வந்துட்டேன் தஷு. அது தெரியாம சார் வந்துருக்காரு…” என்று ஆங்கிலத்தில் நக்கல் மிக கூற, அமிஷிற்கு ஐயோ என்றிருந்தது.

‘அஞ்சு நிமிஷம் தான வெளில போனேன். அந்த கேப்ல வந்துட்டாளோ?’ என எண்ணிக்கொண்டு, “ஓ! அலாகே…” என்று விட்டு சட்டென வெளியில் செல்ல, “உன்னை கழட்டி விட்டதும் இல்லாம, அழகுன்னு ஐஸ் வச்சுட்டு போறான் மந்த்ரா”, தஷ்வந்த் வாயைப் பொத்தி நகைத்தான்.

அவளோ தலையில் அடித்துக் கொண்டு, “ஓகேன்னு தெலுங்குல சொல்லிட்டு போறாண்டா. இத்தனை வருஷமா ஒருத்தன் கூட போராடி இப்ப தான் பேசிக் தெலுங்கு சொல்லி குடுத்து முடிச்சேன். இப்போ நீ ஸ்டார்ட் பண்ணிட்டியா?” என்றதில், அதே புன்னகை.

பின் அவளே, “இரு இரு… அவன் என்னை கழட்டி விட்டுட்டான்னு உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டவள், “மாதவ் எருமை உளறிடுச்சா?” என்றாள் முகத்தை சுருக்கி.

“ம்ம். காலைல தான் பேசுனேன் அவன்கிட்ட. அப்போ தான் உன் லவ் மேட்டரே தெரியும். என்கிட்ட சொல்லிருக்கலாம்ல.” என்றவன், அவள் ஏதோ பேச வருவதை உணர்ந்து, “வெய்ட் வெய்ட் வெய்ட்… உடனே ‘நீ இத்தனை வருஷமா கூடவா இருந்த சொல்றதுக்கு’ன்னு கேட்டு மொக்கை போடாத. அதுக்கு முன்னாடி கொஞ்சம் மாசம் உங்க கூட தான இருந்தேன். அப்போ ஏன் சொல்லல?” என்றான்.

“நீயே பேபியை காணோம்ன்னு தவிச்சு போயிருந்த. இதுல ஏன் ஒண்ணும் இல்லாத இந்த விஷயத்தை பேசணும்ன்னு தான்…” என அவள் சோம்பலாக புன்னகைக்க முயன்றாள்.

“அக்கா எப்படி இருக்காங்க. பேபி பத்தி தகவல் கிடைச்சுதா?” மந்த்ரா விசாரித்ததில்,

“பேபியே கிடைச்சுடுச்சு…” என்றான் மலர்ந்த முகத்துடன்.

“வாவ்! இத்தனை வருஷம் கழிச்சு செம்ம குட் நியூஸ் தஷு. ஆனா, எப்படி… எங்க தொலைஞ்ச போனான். இப்ப எப்படி கிடைச்சான்…?” குதூகலத்துடன் அவள் கேட்க, மாதவிடம் கூறிய அதே பதிலை இவளிடமும் உரைத்தான்.

“அது ஒரு பெரிய கதை. அப்பறம் சொல்றேன். இப்போ ஆஷாவை பார்க்க போகலாம். வா…” என்றதும், அவளும் எழுந்தாள்.

“ஆனால், உன்மேல கோபம் மட்டும் போய்டுச்சுன்னு நினைக்காத.” என அவள் சிலுப்பிக் கொள்ள, “சரி சரி வாம்மா… ரொம்பத்தான்!” என்று தோள் மீது கை போட்டு அழைத்துச் சென்றான்.

மதனுக்கு தான் அன்று நாள் சரியாகவே இல்லை. ஆஷாவின் காதல் மனதை அறிந்து கொண்டதிலிருந்தே அவளுக்கு வந்திருந்த இந்த கோமா தனக்கு வந்திருக்க கூடாதா என்று மனம் அடித்துக் கொண்டது. நொடிக்கு நொடி கலங்கிய கண்களை சிமிட்டி சரி செய்து கொண்டே இருந்தான்.

வேக நடையுடன் ஆஷாவின் அறைக்குள் நுழைந்த தஷ்வந்தைக் கண்டதும் மதன் விழி விரிக்க, அமிஷ் அவன் புறம் திரும்பவே இல்லை.

“தஷு சார்? எப்படி இருக்கீங்க…” என மதன் ஆர்ப்பரித்து கட்டிக் கொள்ள, தஷ்வந்தோ அவனை தள்ளி விட்டு முறைத்தான்.

“இப்பவும் நான் உனக்கு சாரா?” என்றதில், “அது… பழகிடுச்சு!” என்றான் சிறு சிரிப்புடன்.

“பழகுன எல்லாரும் ஒரே மாதிரியா இருக்காங்க. எல்லாமே மாறிட்டு தான இருக்கு. அதே மாதிரி இதையும் மாத்திக்கோ.” மஹாபத்ராவை மனதில் வைத்து அவன் கூற, மதனுக்கும் சங்கடம் தான்.

பின், சட்டென இயல்பாகிய தஷ்வந்த், “இன்னும் இந்த ரௌடி கெட் – அப் அ நீ மாத்தவே இல்லையாடா?” எனக் கிண்டலாகக் கேட்க, அதற்கு சிரித்து வைத்தவன், “இதுவும் பழகிடுச்சு…” என்றான்.

“நல்லா பழகுச்சு!” என்றவன், ஆஷாவைப் பார்த்து, அவள் நிலையைக் கண்டு வருந்தினான்.

இருப்பினும், சொந்த உணர்வுகளை தள்ளி வைத்து விட்டு, மருத்துவனாக மட்டும் அவளை சோதித்து, மேலும் அவளது மருத்துவ அறிக்கைகளை பார்வையிட்டான். சொந்த உணர்வுகள், தன் கவனத்தை சிதைக்கும் என்றறிந்தவன், முழுக்க முழுக்க நோயாளியை நோயாளியாக மட்டுமே பார்ப்பான். மேலும் எந்தவொரு தனிப்பட்ட கவலைகளையும் அவனுக்குள் வர விட மாட்டான். அதனாலேயே, முற்றிலும் ஆராய்ச்சி, பிராக்டிஸ் என்று தன்னை அர்ப்பணித்திருந்தான். இதுவும் இல்லாது போயிருந்தால், அவளது நினைவில் நிச்சயம் சிதைந்திருப்பான்.

மஹாபத்ரா பற்றி தன்னிடம் கேட்பான் என மதன் எதிர்பார்த்திருக்க, தஷ்வந்தோ ஆஷாவின் நினைவிலேயே மூழ்கி இருந்தான். இரண்டு மணி நேரமாக, அவளுக்கு தேவையான அட்வான்ஸ் சிகிச்சை பற்றி பேசி விட்டு, “சீனியர் முன்னாடி முடிஞ்ச அளவு பாசிட்டிவ்வா பேசுங்க. ஷீ கேன் ஃபீல் அஸ்.” என்றதோடு முடித்துக் கொண்டவன், மேற்படி எதுவும் சொல்லத் தோன்றாமல் நின்றான்.

அவளை வைத்திருந்த அறையும், வீட்டின் அமைப்புடன் காற்றோட்டமாக தான் இருந்தது. கோமா நோயாளி முன்பு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அமிஷ்ற்கும் மந்த்ராவிற்கும் தெரியும் என்றுணர்ந்தவன், மதனிடம் “தினமும் வீல் சேர்ல உட்கார வச்சு ஹாஸ்பிடல்க்கு வெளில இருக்குற கார்டென்க்கு கூட்டிட்டு போ மதன். கொஞ்சம் ஃப்ரெஷ் ஏர் கிடைக்கும்.” என்றதில், அவனும் தலையசைத்தான்.

“புது மெடிசின் எழுதி குடுத்துருக்கேன். நர்ஸ் டைம்க்கு குடுப்பாங்க. டெய்லி நான் வந்து பார்த்துக்கிறேன். கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டியது இருக்கு. அதை பார்த்துட்டு, சொல்றேன்.” என்றவன், மேலும் சிறிது நேரம் மதனிடமும் மந்த்ராவிடமும் வளவளத்து விட்டு கிளம்பலானான்.

மதனுக்கோ மஹாபத்ரா பற்றி அவன் கேட்காது வியப்பைக் கொடுக்க, அமிஷிற்கு ஆத்திரமாக வந்தது.

“ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டானா?” பல்லைக்கடித்தவனுக்கு வாய் துறுதுறுவென இருந்தது. ஆனால், முயன்று கட்டுப்படுத்திக் கொண்டான், ஆனால் கேட்கும் நேரம் வரும் போது நிலைமை கை மீறி இருக்கும் என்றறியாது போனான்.
இன்னும் அவனுக்கு, மஹாபத்ரா அவனை அடிக்க வைத்து அனுப்பியதும், அவனது தமக்கையின் குழந்தை அவன் தாமதமாக சென்றதால் தொலைந்து போனதும் தெரியாது.

கார் பார்க்கிங் வரை தஷ்வந்துடன் வந்த மந்த்ரா தான், “சீனியர் பத்தி மதன் அண்ணாகிட்ட கேட்பன்னு நினைச்சேன்.” என்றாள் யோசனையுடன்.

“கேட்க என்ன இருக்கு?” தோளைக்குலுக்கிக் கொண்டவன், “டியூட்டிக்கு டைம் ஆச்சு மந்த்ரா. நாளைக்கு பார்க்கலாம்.” என்று விட்டு காரில் ஏறி அமர்ந்தவனுக்கு, முந்தைய நாள் இரவு நிகழ்ந்தது கண் முன் நிழலாடியது.

“ஐ ஹேட் யூ டாலு…” என்றே அவளது ரத்த கொதிப்பை அதிகப்படுத்தி மகிழ்ந்தான் தஷ்வந்த். அவனை முறைத்து விட்டு, மடிக்கணினியுடன் அமர்ந்து விட்டவளை, கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் என்ன இருந்தது என்று அவன் மட்டுமே அறிவான். சில நொடிகள் பொறுத்துப் பார்த்தவள், “இப்ப எதுக்கு இப்படி பார்த்துக்கிட்டே இருக்க?” என்று நிமிர்ந்திட, “என் கண்ணு என் உரிமை… நான் எங்க வேணாலும் பார்ப்பேன்…” என்று அவளை ஆராய முற்பட, அவன் விழி சென்ற திசையைக் கண்டு சிவந்தாள்.

“கொன்றுவேன்!” விரல் நீட்டி எச்சரிக்க, “ஆல்ரெடி கொன்னுட்டியே!” அவனும் இழிவாய் இதழ்களை விரித்தான்.

அவளோ திகைத்து பின் இயல்பாகி, மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லப் போக, அவளைப் பிடித்து இழுத்தவன், “எங்க போற?” என்றான் உணர்வுகளற்ற குரலில்.

“ஆன்லைன் கௌன்சிலிங் இருக்கு. மாடிக்கு போறேன்.” என்றதில், விட்டு விட்டான்.

ஒரு மணி நேரம் கடந்து, மீண்டும் அறைக்குள் வந்தவளிடம், “யூகேல இருக்குற வேலையை ரிசைன் பண்ணலையா? இல்ல… நான் ஏமாந்த நேரத்தில எனக்கு தண்ணி காட்டிட்டு திரும்ப ஓடிப்போறதா இருக்கியா?” பின்னந்தலை கோதியபடி அர்த்தப்பார்வை வீசினான்.

“உன்னை கல்யாணம் பண்ணுவேன்னு நான் கனவா கண்டேன். ரெண்டு மாசம் லீவ்ல தான் வந்தேன். இனிமே தான் ரிசைன் பண்றதை பத்தி யோசிக்கணும்.” என்றதும், “ம்ம்… பத்ரகாளி எதுல ஸ்பெஷலிஸ்ட்?” எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.

‘நான் பத்ரகாளியாடா?’ என்று அவன் தலை முடியை பிடித்து ஆட்ட முயன்ற கரங்களை அடக்கிக்கொண்டு, “ஆர்த்தோ…” என்றாள் அவனைப் பாராமல்.

பக்கென சிரித்து விட்டவன், “சரியான ஃபீல்டு தான். நீயே கையை உடைச்சுட்டு, அதை நீயே பிக்ஸ் பண்ணி குடுத்துடுவ. பேஷண்ட் கம்மியாகிட்டாங்கன்னா, பிரச்சனையே இல்ல. உடைக்குறதும் நீயே, ஒட்ட வைக்கிறதும் நீயேன்னு பிரபலம் ஆகிடலாம்…” என்றான் இகழ்ச்சி நிறைந்த கேலியுடன்.

“நீயும் தான் நியூரோ டாக்டர். அதுக்காக, எல்லாரோட நரம்பையும் அறுத்துக்கிட்டு இருக்கியா?” மூச்சு வாங்க பொரிந்தவளிடம், “எதையும் அறுத்துட்டு போறது எனக்கு பழக்கம் இல்லையே.” மீண்டும் அவளை குத்திக் காட்டும் பேச்சிற்கே வந்து நின்றான்.

அந்நேரம், திடுதிடுவென உள்ளே நுழைந்த நிதின், “அம்மா… அமி அங்கிள் நிறைய டைம் கால் பண்ணிட்டாங்க. ப்ளீஸ் டாலுமா பேசவா?” என்று கெஞ்சலாகக் கேட்க, அவனிடம் இருந்து போனை பருங்கியவள், “நான் பதில் சொல்லிக்கிறேன் அமுல் பேபி. போனை குடுத்துட்டு போய் தூங்கு.” என்றிட, “அதே பதிலை நானே சொல்றேனே. நம்ம இங்க வந்து இருக்கறதை நான் சொல்லவே மாட்டேன் ம்மா ப்ராமிஸ்.” என்றான் தலையில் கை வைத்துக் கொண்டு.

அதில் சற்று சிந்தித்தவள், “நோ வீடியோ கால். ஓகே வா?” என்றதும்,

“டீல்…” என கட்டை விரலை காட்டி விட்டு, “அங்கிள் கிட்ட பேசிட்டு, ஒரு லெவல் மட்டும் முடிச்சுட்டு, தூங்குறேன் ம்மா குட் நைட். குட் நைட் மாம்ஸ்…” என்று ஓடியவனைக் கண்டு பெருமூச்சு விட்டாள்.

‘சைக்கிள் கேப்ல கேம் விளையாட போறான்… இவனை…’ என்று பல்லைக்கடித்துக் கொண்டவளை தஷ்வந்த் தான் ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

ஆனால், எதுவும் கேட்கவில்லை. கேட்டாலும், அவளிடம் உருப்படியான பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அதற்கும் மேல், அந்த ஏகாந்த இரவின் தனிமையையும், அந்த நேரத்தில் மட்டுமே இருவரும் தங்களது ஈகோவையும் குழப்பங்களையும் துரத்தி விட்டு தீண்டல்களால் ஏற்படும் சில்லென்ற உணர்வுகளையும் இழக்க விரும்பவில்லை.

இருவருக்குமே, வார்த்தைகளற்ற இரவுகள் பிடித்தது. குத்தலாகவும், காயப்படுத்தவென்றுமே வெளிவரும் போலியான வார்த்தைகளைப் போல தொடுதல் போலியைக் காட்டாதே. போலியைக் காட்டும் தொடுதல் நிறைவான தாம்பத்யத்தையும் கொடுக்காது.

நிறைவான ஸ்பரிசங்கள் தான். காதலான கூடல் தான். ஆனால், முழுதாக ஏற்றுக்கொள்ள இருவருக்குமே மனம் வரவில்லை. இருப்பினும், உலகம் மறக்க செய்யும் நிமிடங்களை தங்களுக்குள் சேமித்துக் கொண்டனர்.

தன்னவனால் ஏற்பட்ட பெரு மூச்சுக்களுடன், அவன் மீது சாய்ந்திருந்தாள் மஹாபத்ரா. தன்னிச்சையாக, தஷ்வந்தின் கரங்கள் கலைந்திருந்த பாவையின் கேசத்தை சரி செய்தது.

யோசனையில் மிதந்திருந்தவள், “தஷ்வா” என்றழைக்க, “ம்ம்” என்றான்.

“நாளைக்கு ஆஷாவை பார்க்க போறியா?” கரகரத்த குரலில் கேட்டாள்.

அதற்கும் “ம்ம்” மட்டுமே வந்தது.

“நான்… நான் இங்க இருக்குறதையும், நம்ம மேரேஜ் ஆனதையும் கொஞ்ச நாள் யாருகிட்டயும் சொல்ல வேணாம்.” என்றதில், “நீ சொல்லி நான் கேட்கணுமா? நான் நாளைக்கு உன்னையும் கூட்டிட்டு போற ஐடியால தான் இருந்தேன். நீயும் வர்ற…” என்றான் கட்டளையாக.

அதில் அதிர்ந்து நகர்ந்தவளை, தன் அரவணைப்பிற்குள் கொண்டு வந்தவனிடம், “சொன்னா புருஞ்சுக்கோ தஷ்வா. நான் அங்க வரல. ஆஷாவை என்னால பார்க்க முடியாது…” என சொல்லும்போதே குரல் கலங்கியது.

“சரி வரவேணாம். ஆனா நம்ம மேரேஜ் பத்தி சொல்லுவேன்.” என்றவனுக்கு, அமிஷிடம் கூட அவள் இன்னும் உரைக்காதது ஆச்சர்யம் தான்.

“வேண்டாம். ஒரு ஒன் மந்த் போகட்டும். அப்பறம் சொல்லிக்கலாம்.” என ஏதோ கணக்கிட்டுக் கூறியவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன், “காரணம்?” எனக் கேட்டான்.

“ஆஷாக்கு கொஞ்சமாவது இம்ப்ரூவ்மெண்ட் வரட்டும்… பெருசா காரணம் இல்ல… ஆனா, ஒரு மாசம் தான. ப்ளீஸ்.” என்றாள் பதற்றமாக.

அவனோ அதனை கேட்காதது போல தோன்ற, எக்கி அவன் இதழ்களில் தன் அதரங்களை இணைத்தவள், “ப்ளீஸ் அமுல் பேபி. சொல்லாத!” என்றவள், மீண்டும் அவனிதழ்களை நாடினாள்.

பல வருடங்கள் ஏங்கிய அழைப்பு! அவனை இப்போதும் அவ்வழைப்பு அடிபணியத்தான் வைத்தது. பெண்ணவளின் கொஞ்சல் மொழிகள் அவனது சிந்தையை மயக்கி இருக்க, அழுத்தக்காரப் பெண்ணின் பேரழுத்தத்தை உணராது அவளுடன் இசைந்தான். 

காயம் ஆறும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
40
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்