1,203 views

அன்னபூரணி மகள் வீட்டில் நன்றாக ஐக்கியம் ஆகிவிட்டார். அக்னி ஒருவனைத் தவிர மீதிம் இருக்கும் அனைவரும் அவரோடு பழகிவிட்டனர். இன்னும் நேரடியாக பேச்சு கொடுக்காத அக்னி முதியவருக்கு தேவையான வசதிகளை மனைவி மூலம் செய்து கொடுத்தான்.  அனைவரும் நெருங்கி இருந்தாலும் ஏனோ தன்னிடம் இருந்து ஒதுங்கி இருக்கும் அக்னியின் பின்னால் தான் அவரின் மனம் அலையத் தொடங்கியது.‌

 
 
“பாட்டி என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க சாப்பிடுங்க.” வெகு நேரமாக சாப்பிடாமல் யோசித்துக் கொண்டிருக்கும் பாட்டியை  திவ்யா கேட்க,
 
மிதமாக சிரித்தவர், “எல்லாம் என் பேரனை பத்தி தான்.” என்றார்.
 
” பேரனுக்கு இப்போ என்னவாம்.” அவர் அருகில்  சாப்பிட்டுக் கொண்டிருந்த அன்பினி கேட்க,
 
“பேரனுக்கு ஒண்ணுமில்ல பேரன் பேசாம இந்த பாட்டிக்கு தான் என்னவோ மாதிரி இருக்கு.” என்று வருத்தப்பட்டார். 
 
அதில் பரமேஸ்வரி வருத்தத்தோடு அவரை பார்க்க, “சீக்கிரம் பேசிடுவான் அத்தை நீங்க அதை நினைச்சு சங்கடப்படாம சாப்பிடுங்க.” என்று மாமியாரை சமாதானப்படுத்தினார் மணிவண்ணன். 
 
“சங்கடம் இல்ல மாப்பிள்ளை. என் பேரன் மனசுல நான் இருக்கணும்னு சின்ன ஏக்கம்.” 
 
“நீங்க மனசுல இல்லாமையா உங்களுக்காக எல்லாத்தையும் பண்றாரு உங்க பேரன்.” என்ற அன்பினியை பார்த்து சிரித்தவர்,
 
“பேசிட்டா இன்னும் மனசுல நிறைவா ஒட்டிக்கலாம்னு ஆசை.” என்றார் .
 
 
“அம்மா அவனுக்கு உங்க மேல கொஞ்சம் கூட கோபம் இல்லை. எங்க பேசிட்டா உங்க மகனுக்கு எதிரா ஒரு விஷயத்தை பண்ணும் போது தடுப்பீங்களோன்னு பயம்.” தன் மகனின் மனதில் இருக்கும் எண்ணத்தை ஒரு தாயாக சரியாக கனித்துவிட்டார் பரமேஸ்வரி. 
 
 
அன்பினிக்கும் அது தெரியும் என்பதால், “ஆமாம் பாட்டி உங்க பேரனுக்கு எந்த கோபமும் இல்லை. அப்படி இருந்தா நிச்சயம் உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்க மாட்டான். அப்பாக்கு எதிரா பண்ணும் போது நடுவுல யாரும் வரக்கூடாதுன்னு நினைக்கிறான். அதுவும் அத்தை   கம்பெனியை கொடுக்க சொல்லி பேசவும் அப்பா கிட்ட தோத்துருவோம்னு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான்.” என்றாள்.
 
 
சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. மகளைப் பார்த்து அன்னபூரணி, “இன்னும் எதுக்காக ம்மா அந்த கம்பெனிய வேணாம்னு சொல்ற. அது உங்க அப்பா உனக்கு ஆசையா கொடுத்தது.  நீ அங்க நிர்வாகம் பண்ண போய்ட்டா அக்னிக்கு கொஞ்சம் கோபம் குறைய வாய்ப்பிருக்கு.” என்று மகளின் பதிலுக்காக பார்க்க, அவரோ மணிவண்ணனை
பார்த்தார். 
 
 
மனைவியின் தயக்கம் அவர் செய்த தவறை உணர்த்தியது . உள்ளம் வதங்கி, “சாரி பரமு நீ இப்படி பார்க்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. உன்னை இத்தனை வருஷம் என்னோட சுயநலத்துக்காக வீட்டுக்குள்ள வச்சுட்டேன்னு வருத்தமா இருக்கு. இனியும் அந்த தப்பு பண்ண மாட்டேன். உனக்கு விருப்பம் இருந்தா  தாராளமா  நிர்வாகம் பண்ணு.” என்றவர் மருமகளிடம்,
 
“தேங்க்ஸ் ம்மா நீ மட்டும் சொல்லலன்னா சாகுற வரைக்கும் என் மனைவியோட எண்ணத்தை புரிஞ்சுக்காமலே போய் சேர்ந்து இருப்பேன்.” உளமாற பேசினார்.
 
“தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு மாமா. நீ என்ன சொல்றதுன்னு விடாம என்னோட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து இவ்ளோ தூரம் இறங்கி வந்ததுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.” என்றாள் அன்பினி.
 
“போதும் போதும்… ஆளாளுக்கு நன்றிய அலைய விடாதீங்க. உங்க பாச போராட்டத்துல நான் கைதி ஆகிடுவேன் போல.” ஒரே சோக கீதமாக போய்க்கொண்டிருக்கும் குடும்ப சூழ்நிலையை பேச்சால் மாற்றி விட்டாள் திவ்யா.
 
 
அன்னபூரணி வீட்டிற்கு வந்த இரண்டாவது நாளே தன் பேத்தி செய்த அனைத்து காரியங்களையும்  சொல்லிவிட்டார் பரமேஸ்வரியிடம். ஆடிப் போய்விட்டார் கேட்டதும். இத்தனை வருடங்களாக யாரை மனதில் நினைத்து பூஜித்துக் கொண்டிருந்தாரோ அவள்  தன் மருமகள் என்ற பின் மகிழ்வுக்கு எல்லை இல்லாமல் போனது.‌ விஷயத்தை மணிவண்ணன் காதில் மாற்ற மருமகளை நன்றாக புரிந்து கொண்டார். அன்றிலிருந்து  புகுந்த வீட்டில் தனக்கான இடத்தை அஸ்திவாரம் போட்டு விட்டாள் அன்பினி. 
 
பரமேஸ்வரிக்கு திரும்பவும் நிர்வாகம் செய்வதில் விருப்பம் என்றாலும்  மகன் அண்ணனைப் போல் ஏமாற்றி வாங்கிய செயல் தான் பிடிக்கவில்லை . அதுவும் தன்னிடம் சொல்லாமல் செய்தது கோபத்தை அதிகரிக்க செய்தது. தற்போது இருக்கும் சூழ்நிலை அவரை மாற்ற நிர்வாகம் செய்து பார்க்கலாம் என்ற உத்வேகம் அவருக்குள் பிறந்தது.
 
அதைப்பற்றி அக்னியிடம் பேசும் முன் விக்ரமிடம் பேச விரும்பினார் பரமேஸ்வரி. தன்மகன் பாதிக்கப்பட்டது போல் அவனுடைய செயலால் விக்ரம் பாதிக்கப்பட்டு இருப்பான் என்ற எண்ணத்தோடு அவர் பேச,
 
“ஆரம்பத்துல இருந்தே அக்னி மேல எனக்கு சந்தேகம் அத்தை. என்னோட எண்ணம் சரின்னு அவன் நிரூபிச்சிட்டான். ஆனா அதுக்கு பின்னாடி இருக்க காரணம் என்னை அமைதியாக்கிடுச்சு. அதுவும் இதுல எப்போ அன்பினி சம்பந்தப்பட்டாளோ அப்பவே ஒதுங்கி நிற்க முடிவு பண்ணிட்டேன்.” என்றதும் பரமேஸ்வரி எதற்கு என்று பார்க்க,
 
“சின்ன வயசுல இருந்தே எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும் நான் தப்பே பண்ணினாலும் அவ என் பின்னாடி தான் இருப்பா. அவளுக்குள்ள எந்த அளவுக்கு திமிர் இருக்கோ அதை விட அதிகமா பாசம் இருக்கும் அத்தை. என்னால என் தங்கச்சி வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வந்திட கூடாது . ” என்றவனை அன்போடு தட்டிக் கொடுத்தார். 
 
இவன் செல்வகுமார் மகன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். தந்தையின் எண்ணம் ஒரு துளி கூட இல்லாமல் போனதை நினைத்து அதிசயத்தார்.   இவனைப் போல் ஒரு அண்ணன் கிடைக்க அன்பினி நிச்சயம் கொடுப்பினை செய்திருக்க வேண்டும் என்று நினைத்தவர் மனம் தனக்கு அமையவில்லை என்பதில் வருந்தியது. 
 
 
அனைத்தும் சுமுகமாக முடிய மகனின் மகிழ்வை பார்க்க நினைத்தவர் அவனுக்காக காத்திருந்தார் .
 
***
 
மீட்டிங்கில் இருந்த அக்னிக்கு அரசாங்கம் சார்பாக நோட்டீஸ் ஒன்று வந்திருந்தது. நல்ல மனநிலையில் அதைப் பிரித்து படித்தவன் மிருகம் போல் சீற ஆரம்பித்து விட்டான். மகேஷ் கொடுத்த ஐடியாவின் பேரில் ஒப்பந்த ஊழியர்களை சந்தித்த செல்வகுமார் கம்பெனியை ஏமாற்றி அவன் பெயருக்கு மாற்றி விட்டான் என்ற புகாரை கொடுத்தார்.
 
 
செல்வகுமார் தான் அந்த கம்பெனியை நிர்வகித்தார் என்பது பலரும் அறிந்த உண்மை. திடீரென அக்னி உள்ளே வந்ததை தொழில் வட்டாரமே பார்த்து அதிர்ந்தது. இருப்பினும் இரு தரப்பும் மௌனம் காத்ததால் விஷயம் வெளிவரவில்லை. கோர்ட் வரை சென்ற பின் தான் அனைவரும் அறிந்தார்கள். ஆளாளுக்கு ஒன்று பேச, ஒப்பந்தம் அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படுவதால் பிற்காலத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யோசிக்க ஆரம்பித்தனர். 
 
 
இது தொடர்பாக உரிய விளக்கம் தரும்படி அக்னிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள் . அதில் இன்னும் ஒரு வாரத்தில் உரிய பதில் வரவில்லை என்றால் ஒப்பந்தம் செல்லுபடி ஆகாது என்ற வாசகம் நிறைந்திருக்க கொதித்து விட்டான். சீற்றம் வெடிக்க அதை காட்ட விரைந்தான் செல்வகுமார் வீட்டிற்கு. 
 
 
அங்கு அவர் இல்லாமல் இருக்க மகேஷ் நல்ல போதையில் இருந்தான். கூடவே  நாகராஜ் இருந்தார். இருவரையும் கண்டு ஏகத்துக்கும் முறைத்தவன், “செல்வகுமார்!” எனக் கத்தினான்.
 
 
அவனைப் பார்த்த மகேஷ், “நீ எதுக்குடா இங்க வந்த.” என தள்ளாடியபடி அவன் சட்டையை பிடிக்க, அக்னி விட்ட அறையில் எங்கோ ஒரு மூலையில் கிடந்தான். 
 
“டேய்! எதுக்குடா அவன அடிச்ச.” என நாகராஜ் வர,
 
வந்தவரின் கையை லாவகமாக பிடித்து, “உன்னை எனக்கு யாருன்னே தெரியாது வீணா வந்து சிக்கிக்காத. அப்புறம் அவன் நிலைமை தான் உனக்கும்” என்று கை காட்டினான் மகேஷை.
 
அவனைப் பார்த்தவர் அமைதியாக நின்று கொள்ள, மீண்டும் அழைத்தான் செல்வகுமாரை. பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தவர் சண்டை போட, அக்னியும் வாதிட்டான்.
 
 
 
 
” உன் ஆசை என்னைக்கும் நிறைவேறாது. இப்ப கொடுத்த புகாரை கூட ஒன்னும் இல்லாம பண்ணிடலாம். ஆனா உன் அம்மா நிர்வாகம் பண்ண வர அன்னைக்கு அந்த கம்பெனி ஒன்னும் இல்லாம போயிடும்.”  குதிக்க ஆரம்பித்தார். 
 
தள்ளாடி  எழுந்து நின்ற மகேஷ், “அப்படி சொல்லுங்க அங்கிள். குடும்பமே சேர்ந்து அங்க கொண்டாடிட்டு இருக்காங்க அந்த பரமேஸ்வரி நாளையில இருந்து நிர்வாகம் பண்ண போறதால. நம்ம இருக்கும் போது அப்படி ஒன்னு நடந்திடுமா என்ன.” என்ற உளறலில்…
 
“என்னடா உளறிட்டு இருக்க.” என அக்னி அவனை அடிக்க நெருங்க, நடுவில் வந்து செல்வகுமார்,
 
“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதடா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என் மகனும், மனைவியும் உன் அம்மா நாளையில இருந்து நிர்வாகம் பண்ண  போறதை சொல்லி சந்தோஷப்பட்டுட்டு இருந்தாங்க. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அவளை அந்த கம்பெனியில உட்கார விடமாட்டேன்.” என்றவர் தன் மருமகனை நெருங்க, மதுவாடை நெடி அவனே அச்சுறுத்தியது.
 
கூடா பழக்கம் அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறது என்பதை உணர்ந்தவன் மனது அவர் சொன்ன விஷயத்தை நினைத்து ஆனந்த கடலில் மூழ்கியது. அவனின் பல  வருட கனவு நிறைவேற போகிற ஆனந்தத்தில் வந்த கோபம் அப்படியே அடங்கிவிட, அதை தூண்டி பார்த்தது மகேஷின் வார்த்தை.
 
 
“ஆமா அங்கிள் இவன் அம்மா அந்த கம்பெனியில கால் வைக்கிற நேரம் குடும்பத்தோட சேர்த்து அந்த இடத்தையே கொளுத்திடுவோம்.”   
 
வேகமாக அவன் சட்டையை பற்றியவன் இருந்த கோபம் மொத்தத்தையும் அடிகளால் காட்டிவிட்டு, “உன்ன உயிரோட விட்டா தானடா சொன்னது செய்வ.” என்று இன்னும் அடித்துக் கொண்டிருந்தான். 
 
அவனை தடுத்த செல்வகுமார், “என்னடா சும்மா பூச்சாண்டி காட்டிகிட்டு இருக்க. யாரைக் கேட்டு என் வீட்டுக்குள் வந்து வெளிய போடா.” என்று அவன் சட்டையில் கை வைத்தார். 
 
பற்கள் முன்னும் பின்னும் தடம் பதிக்க ஆரம்பித்தது அவன் முறைத்த முறைப்பில். அவனின் கோப அளவை பார்த்த நாகராஜ் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விட்டார். உள்ளுக்குள் உதறல் எடுக்க செல்வகுமாரின் கைகள் தானாக அவனின் சட்டையிலிருந்து விடுபட்டது.
 
“இந்த அக்னி பத்தி தெரிஞ்சும் திரும்பத் திரும்ப மோதிப் பார்த்துட்டு இருக்கீங்க. என் அன்பு முகத்துக்காக தான் உங்களை உயிரோட விட்டு வச்சிருக்கேன். அதை காப்பாத்திக் கிட்டு ஒழுங்கா இருக்க பாருங்க. இன்னொரு தடவை அந்த கம்பெனி விஷயத்துல நீங்க தலையிட்டா நிச்சயம் யாருக்காகவும் பார்க்க மாட்டேன்.” என விரல் நீட்டி எச்சரித்தவன் கோபத்தோடு கிளம்ப,
 
“என் சித்த அன்புன்னு சொன்ன கொன்னுடுவேன் டா.” என்று செல்பவனை மீண்டும் சண்டைக்கு இழுத்த மகேஷின் வாயில் ஓங்கி அடித்தவன்,
 
“என் பொண்டாட்டிய  செல்ல பேர் வச்சு கூப்பிடுற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு. இன்னொரு தடவை உன் வாயில இருந்து அந்த பேர் வந்துச்சு பல்லு மொத்தம் கழன்றும்.” என்று கடைசியாக ஒரு தடவை வாயில் குத்த, ரத்தம் அவன் முகத்தில் தெரித்தது.
 
 
அவனை தள்ளிவிட்ட அக்னி அவ்வீட்டை விட்டு வெளியேற, “போடா போ என் சித் உன்னை கல்யாணம் பண்ணதுக்கான காரணம் என்னன்னு உங்க அம்மா ஆபீஸ்க்கு வரும்போது தெரியும்.” என்று உளற, அவனது கால்கள் அப்படியே நின்றது.
 
 
அதைப் பார்த்த மகேஷ் உதட்டில் வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டு, “நீ அங்கிளை அவமானப்படுத்தின மாதிரி உன்ன உங்க அம்மா முன்னாடி அவமானப்படுத்த தான் அவ உன் வீட்டுக்கு வந்திருக்கா. அது தெரியாம பொண்டாட்டின்னு சந்தோஷப்படுற. நல்லா பட்டுக்க நீ அவமானப்பட்டு நிக்க போற நாள் சீக்கிரம் வரும். என் சித் உன் குடும்பத்தை பழி வாங்குவா. அது மட்டும் இல்ல நீ கட்டின தாலிய உன் மூஞ்சில விசிறி அடிச்சுட்டு வரப்போறா ” என்றவனை இந்த முறை எழ முடியாத அளவிற்கு அடித்து நொறுக்கி விட்டான் அக்னி.
 
 
தடுக்க வந்த செல்வகுமாரை பிடித்து சுவற்றில் தள்ள அவர் சரிந்து விழுந்தார். வெறி கொண்டு தன்னால் முடிந்தவரை குதறி எடுத்தவன் அதே கோபத்தோடு புறப்பட்டான் தன் வீட்டிற்கு.
 
***
 
விக்ரம் மூலம் நந்தினிக்கு விஷயம் எட்டியது. உள்ளம் மகிழ்ந்தவர் இனியாவது இந்த குடும்பம் இணையட்டும் என்ற எண்ணத்தில் பரமேஸ்வரியை பார்க்க சென்றார். அன்னையை அங்கு விட்ட விக்ரம் வேலை இருப்பதாக  சென்று விட்டான். அனைவரும் ஒன்றாக கூடியிருந்தனர் கொண்டாட. அக்னி விக்ரம் இருவர் மட்டும் அங்கு இல்லாமல் இருக்க மற்ற அனைவரும் பழைய கதைகளையும், புதிய கதைகளையும் பேசி மகிழ்ந்தனர். 
 
 
அன்பினி தீவிரமாக கிச்சனில் இருக்க, ” இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க அண்ணி.” கேட்கும் திவ்யாவிற்கு அழகாக அவள் செய்த கேக்கை காட்டினாள். 
 
 
“வாவ்! அண்ணி உங்களுக்கு கேக் எல்லாம் செய்ய தெரியுமா.” 
 
“தெரியாது இதான் ஃபர்ஸ்ட் டைம்.” என்றதும்  வியந்த திவ்யா அதில் கை வைக்கப் போனாள்.
 
நாத்தனார் கையில் ஒரு அடி வைத்தவள், “இது என் அக்னிக்காக. அவனோட பல நாள் ஆசை நிறைவேற போறதுக்காக என்னோட சின்ன கிப்ட்.” என்று மறைத்து வைத்தாள்.
 
“அண்ணி ரொம்ப பண்றீங்க.” என்றாலும் அவள் முகத்தில் சிரிப்பு தென்பட்டது. 
 
சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் அனைவரும் மகிழ்வோடு இருக்க நெருப்பின் சாயலோடு உள் நுழைந்தான் அக்னி. அவனைப் பார்த்து அனைவரும் சிரிக்க, அமைதியாக இருந்தான். 
 
 
“அண்ணி அண்ணன் வந்துட்டான்.” என்ற திவ்யாவின் குரலில்  எட்டிப் பார்த்தவள் மின்மினி போல் சிரித்தாள்.
 
அவளின் சிரிப்பை மனம் ரசித்தாலும் முன்கோபம் தடுத்தது. இருக்கும் கோபத்தில் யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்று நினைத்தவன் அமைதியாக தன் அறைக்கு செல்ல முயல, “அக்னி இங்க வந்து உக்காரு” என்றார் பரமேஸ்வரி.
 
 
அவ் வார்த்தையில் வேறு வழி இல்லாமல் அவன் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு அன்னை அருகில் அமர, “அண்ணா அம்மா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்காங்க.” என்றாள் திவ்யா.
 
 
ஏற்கனவே அவன் அறிந்த விஷயம் என்றாலும் சிரிக்க முடியாமல் அமர்ந்திருந்தான். அவன் எண்ணத்தை அறியாத குடும்ப உறுப்பினர்கள் சர்ப்ரைஸ் என்ற பெயரில் சோதித்துக் கொண்டிருந்தார்கள். பொறுத்திருந்தவன் மனது செல்வகுமார் வீட்டில் நடந்த கலவரங்களை நினைக்க தவறவில்லை. 
 
“அக்னி இங்க வா.” என்று கிச்சனில் இருந்து அழைத்தாள் அன்பினி சித்திரை.
 
அவளிடம் செல்ல மனமில்லாதவன் , “அம்மா கொஞ்சம் தலை வலிக்குது ரெஸ்ட் எடுக்கணும்.” என்று யாரையும் பார்க்காமல் நகர்ந்தான்.
 
அவன் செல்வதை உணர்ந்த அன்பினி வேகமாக ஓடிவந்து, “அக்னி ஒரு நிமிஷம் வந்துட்டு போ” என்று கைப்பிடித்து அழைத்தாள்.
 
“ப்ச்! அன்பு விடு.”  கைகளை உதறியவன் நகர பார்க்க, விடவில்லை அவள்.
 
இழுத்துச் சென்றவள் சமையலறையில் நிறுத்தி, “அக்னி உனக்காக இன்னைக்கு ரெண்டு சர்ப்ரைஸ் இருக்கு. ஒன்னு அத்தை கிட்ட இன்னொன்னு என் கிட்ட.” என்று அவன் முகத்தருகே இரு விரலைக் காட்டி அசைத்தவள் அவன் கண்களை மூடினாள்.
 
“அன்பு சொன்னா கேளு கொஞ்ச நேரம் கழிச்சு பேசிக்கலாம்.” என்றவன் அந்த கைகளை எடுத்து விட்டு நகர, மீண்டும் தடுத்தாள்.
 
“என்னடி சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா.” என்று எறிந்து விழ, அவன் குரலில் வெளியில் இருந்து அனைவரும் பார்த்தார்கள்.
 
 
அதை கவனித்த அன்பினி, “என்னடா ரொம்ப பண்ற. இதை மட்டும் பார்த்துட்டு போ.” என்று அவள் செய்து வைத்திருந்த கேக்கை எடுத்து நீட்டினாள்.
 
பார்த்தவன் அமைதியாக நிற்க, “உனக்கு கேக் ரொம்ப பிடிக்கும்னு அத்தை சொன்னாங்க அதான்.” என்றாள் அவன் கேட்காமல்.
 
 
அப்போதும் அக்னி அமைதியாக நிற்க, “நல்லா இருக்கா”  என்று கேட்டாள்.
 
“ம்ம்ம்!”என்றவன் வெளியில் வர , “சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு.” என்று அடம் பிடித்தாள் அன்பினி.
 
“அன்பு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னு சொல்றேன்ல.” என்று அவன் சொல்வதை காதில் வாங்காமல்  கேக்கை கையில் திணித்தாள்.
 
 
வாங்கியவன் மேஜையில் வைத்துவிட்டு நகர, “ப்ச்! சாப்பிட்டு சொல்லு.” என ஒரு வாய் பிய்த்து எடுத்தவள் அவனுக்கு ஊட்ட முயன்றாள்.
 
 
விலகி நகர்ந்தவன், “அன்பு தள்ளிப்போ.” மறுத்து கொண்டிருக்க, அதை எல்லாம் கவனிக்காத அன்பினி அவன் வாயில் திணிக்க கட்டாயப் படுத்தினாள்.
 
அன்னைக்காக நிறுத்தி வைத்திருந்த கோபம் அவளின் செயலில் கொப்பளித்தது. ஒரு கட்டத்தில் கோபத்தோடு மறுத்தவன் வாயில் வேகமாக திணிக்க, “ஏய்!” என்ற அக்னி அங்கிருந்த கேக்கை எடுத்து அவள் மேல் விசிறி அடித்தான். 
 
 
அவை லேசாக அன்புனின் முகத்தில் பட்டு கீழ் விழுந்தது. அக்னியின் செயலில் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்து நின்றார்கள். ஒரு நிமிடம் பேச்சு எழவில்லை  அனைவருக்கும். 
 
“சொன்னா கேக்குற பழக்கம் இல்லையா டி உனக்கு. அதான் சொல்றேன்ல கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னு. ஏன் டி இம்ச பண்ற….” என்றவன் கன்னத்தில் பலத்த ஓசையோடு அடி விழுந்தது.
 
 
அதிர்ந்தவன் பரமேஸ்வரி பார்க்க, “என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல. நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா பண்ற. புருஷன் பொண்டாட்டி குள்ள வர வேணாம்னு ஒதுங்கி இருந்தா உன் இஷ்டத்துக்கு ஆடுவியா. எதுக்குடா இப்படி பண்ண ?” என்று குரல் உயர்த்தினார்.
 
 
எதுவும் பேசாமல் அக்னி அமைதியாக நிற்க, “சந்திரா நீ நடந்துக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. என் பொண்ண என் முன்னாடியே இப்படி பண்றீயே யாரும் இல்லாத அப்போ எவ்ளோ பண்ணுவ.” என்றவர் சகித்து கொள்ள முடியாமல் அழ ஆரம்பித்தார். 
 
 
 
அன்னபூரணி, “என் மகன் மேல இருக்க கோபத்தை என் பேத்தி கிட்ட காட்டாதப்பா. அவ பாவம் எல்லாருக்கும் நல்லது பண்ணிட்டு கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருக்கா.” என்று அழுகையில் கரைந்தார். 
 
அனைவரும் அவனை வசை பாடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள். அசையாமல் நின்றிருந்த அக்னி கண்ணில் நீர் சுரக்க அன்பினி நின்றிருந்த திசை பக்கம் திரும்பினான்.
 
எப்பொழுது அங்கிருந்து நகர்ந்தாளோ அவனுக்காக செய்த கேக் மட்டும் தரையில் கவிழ்ந்து இருந்தது. கீழே அமர்ந்தவன் அதை எடுக்க, மனம் துடித்தது அவனவளை எண்ணி. 
 
 
 
கால்கள் அவளை நோக்கி நகர, வாசல் முன்பு நின்றவன் தயங்கினான் உள்ளே செல்ல. பல நொடிகள் முன் வைத்த கால் பின் நகர்ந்து விட, கண்மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் உள்ளே சென்றான்.
 
 
பால்கனியில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் அன்பினிசித்திரை. அவள் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, நேரங்கள் கடந்தது. 
 
 
மெல்ல தொட சென்றவன் அதை செய்யாமல் விலகி விட, “அன்பு” என்றான்.
 
எந்த பிரதிபலனும் இல்லாமல் போனது அந்த அழைப்பில். தொண்டை கரகரக்க, “சாரி டி” என்றான். 
 
 
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
25
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *