Loading

23 – விடா ரதி… 

 

அதோ இதோவென நாட்களும் ஓடியது… அவள் பெங்களூர் சென்று பத்து நாட்கள் முடிந்துவிட்டது. அவனும் அவள் வாசம் நிறைந்த உடைகளை அணிந்துக் கொண்டு அவள் இல்லாத தவிப்பைக் குறைத்துக் கொண்டிருந்தான். 

 

ஆம்… அவளது வாசனை நிறைந்த அவனின் உடைகள் தான்… 

 

அவள் ஊருக்கு கிளம்பும் முன் அவனின் அத்தனை மேல் சட்டை மற்றும் டீ ஷர்ட் அனைத்தையும் அவளை போட்டுக் கழட்டிக் கொடுக்கச் செய்து வாங்கிக்கொண்டான். அவள் இல்லாத போதும் அவளின் வாசனை அவனை சூழ்ந்தே இருக்க வேண்டுமாம். 

 

“இரு டி.. ஃபோட்டோ எடுத்துக்கறேன்…..”, என ஒவ்வொரு துணிக்கும் எடுத்தான். 

 

“ஏண்டா இப்படி அழிச்சாட்டியம் பண்ற? ஒரு ஃபோட்டோ பத்தாதா உனக்கு?”, நேரம் செல்லச் செல்லக் கடுப்பாகிக் கேட்டாள். 

 

“தினம் நீயே எனக்கு ட்ரெஸ் எடுத்து வச்சி பழக்கிட்ட.. இப்போ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கறேன்… இப்போ இந்த ஃபோட்டோ எல்லாம் உனக்கும் ஒரு செட் அனுப்புவேன்.. நீ சொல்ற டிரஸ் தான் போடுவேன்.. “

 

“இதுலாம் உனக்கே ஓவரா இல்லையா ராக்கி? நமக்கு கல்யாணம் ஆகி இன்னும் ஒரு மாசம் கூட ஆகல டா… உனக்கு 15 நாள் தான் டிரஸ் எடுத்து வச்சேன். அதுகே நீ 60 வருசம் உன்ன பழக்கினமாதிரி பேசற….”

 

“அத்தனை நாள் நீ எங்கூடவே இருந்து என்னை ஸ்பாயில் பண்ணனும்-ன்னு தான் நானும் நினைக்கறேன்….”, என அவன் கூறிய விதம் கண்டு அவள் தான் கண்கலங்கி நின்றாள். 

 

இதெல்லாம் அவள் இவனிடம் கூற ஆசைப்பட்ட விஷயங்கள், வார்த்தைகள், உணர்வுகள்… அதை இன்று அவன் வாயிலாக காதலும், தவிப்புமாக அவனது குரலில் கேட்க உள்ளம் நெகிழ்ந்து தான் போகிறது. 

 

அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “எவ்ளோ சீக்கிரம் வேலைய முடிக்க முடியுமோ முடிச்சிட்டு வந்துடறேன்…. நடுவுல உனக்கு ப்ரீ கிடைச்சா பெங்களூர் வா…. “, என அவன் இதழில் இதழியல் தொடங்கினாள். 

 

தலைவி தொடங்கிய வேலையை தலைவன் தனதாக்கி அன்றைய பொழுது அவளோடு உறவாடியே கழிந்தது. 

 

“பத்திரமா இரு… கடைக்கு போறப்போ பாத்து போ… வேலை செய்யறவங்க நேரத்துக்கு வந்து உனக்கு சாப்பாடு செஞ்சிடுவாங்க… மதியம் கடைக்கு வந்துடும். நைட் சூடு பண்ணி சாப்பிடு.. எங்கம்மாவும் உனக்கு நடுவுல சமைச்சி குடுத்து விடறேன்னு சொல்லி இருக்காங்க.. மாப்பிள கெத்த காட்டாம சாப்பிடு… நான் தினம் ஃபோன் பண்றேன்… நீ செஞ்சி நான் எடுக்கலன்னா கோச்சிக்காத…. நானே மறுபடியும் கூப்பிடுவேன்…. வீட்ட சுத்தமா வச்சுக்கோ.. நான் வரப்போ குப்பையா இருந்தது உன்னை கடிச்சிடுவேன் …. “, எனக் கன்னத்தைக் கடித்தாள். 

 

“ஆ… ராட்சசி…. வலிக்குது டி.. அன்னிக்கே கடை பையன் என் கழுத்துல இருந்த பல் தடம் பாத்து கிண்டல் செஞ்சான்… நீ கண்ணுக்கு தெரியறமாறியே கடிச்சி வைக்கற….”

 

“நீ என் பிராபெர்டி அதுக்கு தான் இது.. கடைக்கு உன்ன சைட் அடிக்கறதுக்கு எத்தன பேரு வருவாங்கன்னு எனக்கு தெரியாதா? அவளுங்க கண்ணுல படணும்-ன்னு தான் இப்படி பண்றேன்…”

 

“அடிப்பாவி…. இப்படி ஒரு நெனைப்பா உனக்கு? இரு நானும் கடிச்சி வைக்கறேன்….”, என மீண்டுமோர் காதல் விளையாட்டு அரங்கேறியது. 

 

“நீ அங்க போய் பத்திரமா இருக்கணும்… யார்கிட்டேயும் வம்புக்கு போகாத…. பொறுமையா இரு… சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வா… முடிஞ்சா வீட்ல இருந்து வேலை பாக்க முடியுமான்னு பாரு…. “

 

இப்படியாக பிரியாவிடைக் கொடுத்து அவளை அனுப்பி வைத்தான். அவளும் அவன் சொற்படி தினமும் அவனுக்கான உடையை ஃபோட்டோ அனுப்ப, அதையே அணிந்துக் கொண்டான். 

 

இருபதுகளில் ஆட வேண்டிய ஆட்டம் எல்லாமிருவரும் முப்பதின் தொடக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

 

இந்த பிரிவு அவனுக்கு அவளின் காதலின் தாக்கத்தை வெகுவாக உணர்த்தியது. உடன் இருந்து பொழிந்தக் காதலை, மிகவுமே தேடினான். காலை தேநீர் உரையாடல் முதல், இரவு படுக்கையில் சிறு குழந்தை போல அவள் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து ஏங்கித் தவித்தான். 

 

“ஹேய் பொண்டாட்டி… சீக்கிரம் வாடி….”, எனத் தட்டச்சு செய்து அவளின் புலனத்திற்கு அனுப்பினான். 

 

முக்கியமான குழு உரையாடலில் இருந்தவள் அவனின் புலனச் செய்தி வந்த சத்தத்தில் மென்னகைக் கொண்டு மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தாள். 

 

“என்ன ரதி மேடம்… தானா சிரிக்கறீங்க?”, குழுவில் இருந்த ஒருவன் கேட்டான். 

 

“புதுசா கல்யாணம் ஆனவங்க சிரிக்காம உன்ன மாதிரி உர்ருன்னா இருப்பாங்க விஜய்?”, டீம் மேட் சுவாதி கூறினாள். 

 

“கல்யாணம் ஆகிரிச்சா?”, என இன்னொருவன் வந்து அதிர்ச்சியாகக் கேட்டான். 

 

“ஆமா பரம்ஸ்.. உனக்கு தெரியாதா?”, விஜய் கேட்டான். 

 

“இல்ல.. நான் லீவ் முடிஞ்சி 2 நாளா தான் வரேன்.. யாரையும் நீங்க கூப்பிடவே இல்லயே ரதி…. ஏன்?”, அவன் குரல் கொஞ்சம் ஏமாற்றத்துடன் ஒலித்ததாகத் தோன்றியது.

 

“பெரியவங்க முடிவு பண்ணிட்டாங்க…. அதான் டைம் இல்ல…. “, ரதி பட்டும் படாமல் பதில் கொடுத்தாள் . 

 

“பெரியவங்க சொன்னாங்கன்னு செஞ்சிகிட்டீங்களா? நீங்களும் வழக்கமான பொண்ணா தான் இருக்கீங்களா ரதி?”, என நக்கலாகக் கேட்டான். 

 

“என் வாழ்க்கைல என்ன எப்படி முடிவு பண்ணனும்னு எனக்கு தெரியும் பரம்… நீங்க சீக்கிரம் அந்த பக் ஃபிக்ஸ் பண்ற வேலைய பாருங்க… நாளைக்கு டெஸ்டிங் வேலை முடிக்கணும்….”, எனக் கறாராகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றாள் கைப்பேசியுடன். 

 

“மேடம் முகத்துல இப்போ தான் சிரிப்பே பாக்கறேன்…. “, விஜய் சென்றவளைப் பார்த்தபடிக் கூறினான். 

 

“பின்ன சும்மாவா? அவங்க லவ்வர் அஹ் அவங்க அப்பா அம்மா சர்ப்ரைஸ்சா கட்டி வச்சி இருக்காங்களாம்…. அவங்க ஹப்பி கூட செம ஹாண்ட்சமா இருக்காராம்… ஜனனி சொன்னா….”

 

“இது புதுசா இருக்கு .. நம்ம அப்பா அம்மாவும் தான் இருக்காங்களே… தெளிவா ரூட் போட்டு குடுத்தா கூட ஒன்னும் செய்யறது இல்ல..”, என பேசியபடி அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றான். 

 

பரம் என்பவன் மட்டும் அங்கேயே அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு சுவாதி அருகில் வந்தான். 

 

“சுவாதி…. மேடம் ஹஸ்பண்ட் பேரு என்னன்னு தெரியுமா?”

 

“நீங்க எதுக்கு கேக்கறீங்க?”, சந்தேகத்துடன் கேட்டாள் . 

 

“நம்ம டீம் சார்பா அவங்களுக்கு கிப்ட் குடுக்கலாம்ன்னு தான்…. நம்மள அவங்க கூப்பிடலன்னாலும் நாம அவங்களுக்கு விஷ் பண்ணனும்ல…..”

 

“அட ஆமா…. இது எனக்கு தோணவே இல்ல…. அவங்க ஹப்பி பேரு ரகுபதி …. கொடைக்கானல்ல ரீடெயில் ஷோரூம் வச்சிருக்காங்க…. நம்ம டீம்ல எல்லாரையும் கேட்டுட்டு சொல்றேன் நம்ம சேர்ந்தே கிஃப்ட் பண்ணலாம்…. “, என அவனுக்கு தேவையான தகவல்களைக் கொடுத்துவிட்டு மற்றவர்களைக் காணச் சென்றாள். 

 

பரம்ஸ் என்கிற பிரேம் அங்கிருந்துச் சென்று யாருக்கோ அழைத்தான். 

 

“அவளுக்கு கல்யாணம் ஆனதால தான் இவளோ நாள் வரல… கொடைக்கானல்ல ரகுன்னு யாரு ரீடெயில் ஷோரூம் வச்சிருக்கான்னு விசாரி…. சாயிந்தரம் எனக்கு முழு தகவலும் வேணும்…”, எனக் கூறிவிட்டு ரதியின் புகைப்படத்திற்கு ஆவேசத்தோடு முத்தம் தந்தான் பிரேம். 

 

“என் தங்கத்துக்கு என்னாச்சி? சாப்பிடலியா இன்னும் நீ?”, எனக் கேட்டபடிக் கேன்டீன் வந்தமர்ந்தாள். 

 

“சாப்பிடவே பிடிக்கல டி… நீ எப்போ வருவ?”, சோகமாகக் கேட்டான். 

 

“இன்னும் பத்தே நாள் தான்…‌வேலைய முடிச்சிட்டு வந்துடுவேன்… அடம் பிடிக்காம ஒழுங்கா சாப்பிடணும்…. “

 

“நீ சாப்டியா?”, எனக் கேட்டான். 

 

“இப்போ தான் கேன்டீன் வந்தேன்…. என் டீம் மேட்ஸ் எல்லாம் நமக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சி ட்ரீட் கேக்கறாங்க டா…. என்ன செய்யலாம்?”

 

“குடுக்கணும் தான்…. நான் இந்த சண்டே வரேன்…. உன்ன பாத்த மாதிரியும் இருக்கும். அங்க பர்சஸ் பண்ற வேலையும் இருக்கு…. அதுவும் முடியும்…”

 

“ஹேய்…. அப்போ லஞ்ச் நல்ல ஹோட்டல்ல இன்னிக்கே புக் பண்ணிடவா?”, என ஆவலோடு கேட்டாள் . 

 

“ம்ம்.. பண்ணிடு… நான் சனிக்கிழமை வந்துடறேன்.. நீ என்கூட தங்கணும்…. எனக்கும் ரூம் புக் பண்ணிடு…”, எனக் கூறினான்.  

 

“டபிள் டன்…. நான் இங்க கொஞ்ச தூரத்துல ஒரு ரிசார்ட் பாத்தேன்.. செம்மயா இருந்தது… ஹனிமூன் சூட் கூட இருக்காம்… அங்க போலாம்ன்னு நெனைச்சேன்… பட் இப்போ அது முடியாது…”, எனப் பேச்சை வளர்த்தாள்.

 

“விடு உன் வேலை முடியட்டும் நாம ரிலாக்ஸ் அஹ் ஒரு தடவ போலாம்… நானும் கூட உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்…”, இருவரும் சில நிமிடங்கள் பேச்சை வளர்த்து மனம் மலர்ந்தவுடன் வேலையைக் கவனிக்கச் சென்றனர். 

 

ரதி அவன் நினைவோடு பல வருடங்கள் வாழ்ந்திருந்தாலும், இப்போது அவனை விட்டுப் பிரிந்திருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. தினம் அவனோடு வம்பு செய்து விளையாடி கோபமேற்றி, ஊடலும் கூடலும் கொண்ட மனமும் உடலும் அவனை வெகுவாகத் தேடியது. 

 

எத்தனை விரைவாக முடிக்க முடியுமோ அத்தனை விரைவாக இதை முடித்துவிட்டு அவனிடம் சென்று அவனுள் புதைந்துக் கொள்ளும் வேகமும், ஆர்வமும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. 

 

“பிரேம்…. ஆளு பேரு ரகுபதி… கொஞ்சம் வசதியான ஆளு தான். மதுரையில தான் அப்பா அம்மா எல்லாம் இருக்காங்க.. இவன் படிச்சி முடிச்சி வந்ததும் துணிக்கடைய கொடைக்கானல்ல ஆரம்பிச்சி நடத்திட்டு இருக்கான். இவங்க கல்யாணமே அவசர கல்யாணமாம்…. அந்த பொண்ண ஏதோ சொல்லி வரவச்சி உடனே கல்யாணம் செஞ்சி இருக்காங்க… ஆனா அந்த பொண்ணு அவன ரொம்ப வருஷமா விரும்புதாம்… அதனால ரெண்டும் சந்தோசமா தான் சுத்துதாம்… நீ வேற பொண்ண பாக்கலாம்…. கல்யாணம் ஆன பொண்ண நீ பாக்கறது சரியில்ல….“, முழு தகவலும் திரட்டியவன் அறிவுறையோடு முடித்தான்.  

 

“உனக்கு சொன்ன வேலைய மட்டும் நீ பாத்தா போதும்.. வை…”, எனக் கடுப்புடன் அழைப்பைத் துண்டித்தான். 

 

“அப்புடி எல்லாம் அவள விட்டுற முடியாது…. எதாவது செஞ்சி அவள எங்கூடவே வச்சிக்கணும்.. என்ன பண்ணலாம்?”, என யோசித்தபடி மதுவருந்திக் கொண்டிருந்தான். சட்டென ஒரு யோசனை தோன்றவும் அதைச் செயல்படுத்த வேண்டிய விஷயங்களைத் தயார் செய்தான். 

 

“ரதி…. நீ எனக்கு மட்டும் தான்.. உன்ன யாருக்கும் நான் விட்டுக்குடுக்க மாட்டேன்… “, என வெறிப் பிடித்தவன் போல சொல்லியபடி மது போதையில் சரிந்தான். 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
9
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்