தெம்மாங்கு 23
விடிந்ததில் இருந்தே குமரவேலனின் மனம் சரியில்லை. நேற்று இரவு நடந்த சம்பவங்கள் போட்டு, பாடாய் படுத்துகிறது அன்புவின் நண்பனை. உள்ளே நுழைந்தது அநாகரீகம் என்று தன்னைக் குற்றம் சாற்றிக் கொண்டவன், இனி அதுபோன்று ஒரு நாளும் நடந்து கொள்ளக் கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
வெளிப்படையாக இரு முறை அவள் மனதைச் சொல்லிய பின்பும், பாதுகாப்பு என்ற போர்வையில் கூட அவள் முன்பு நிற்க விரும்பவில்லை. அதேநேரம் இரவு நேரத்தில் அவளை விட்டு எங்கும் நகரவும் மனம் வரவில்லை. இதற்கு ஒரு தீர்வைக் கண்டால் தான், இனி வரும் நாள்களில் தேனிசை தேவியை மனம் நோக வைக்காமல் நடந்து கொள்ள முடியும் என நம்பியவன், அதற்கான வழியை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.
எவ்வளவு தூரம் அவன் மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும் ஆராய்ச்சிக்கான பலன் கிடைக்கவில்லை. காலை உணவை மட்டும் செய்து கொடுத்தவன், இன்னும் மதிய உணவிற்கு என்ன செய்வதென்று கூட யோசிக்கவில்லை. காலை உணவு முடிந்து ஒரு மணி நேரம் கழித்த பின், பழங்களை நறுக்கித் தருவான் கர்ப்பிணிக்கு.
மணியாவதை உணர்ந்தவன் தட்டை எடுத்துப் பழங்களைத் தேட, அவை அங்கு இல்லை. வாங்க மறந்ததை நினைத்துத் தலையில் அடித்துக் கொண்டான். சிசுவைச் சுமப்பவளுக்குப் பசி எடுக்குமே என்று கவலை கொண்டவன்,
“பழம் காலி ஆயிடுச்சும்மா. பசி எடுத்தா கொஞ்சமா இட்லி ரெண்டு சாப்பிடு. அதுக்குள்ள வாங்கிட்டு வந்திடுறேன். நான் வரவரைக்கும், யாரு தட்டினாலும் கதவைத் திறக்காத.” என்று கடைவீதிக்குக் கிளம்பினான்.
அவன் வந்து குரல் கொடுத்தால் மட்டுமே கதவைத் திறக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தியும் கேட்க மாட்டாள் தேனிசை தேவி. அவன் இல்லாத நேரம் தான், அந்த வீட்டில் சுதந்திரமாக நடமாடுவதாக உணர்வாள். அன்புவோடு, வாய்விட்டு மனதில் இருப்பதை எல்லாம் பேசுவாள். அவன் சென்ற அடுத்த நொடி கணவன் புகைப்படத்திற்கு முன்பு நின்றவள்,
“இதெல்லாம் நீ எனக்குச் செஞ்சிருக்கணும். உன் நண்பன்கிட்ட எத எதை விட்டுட்டுப் போகணும்னு விவஸ்தை இல்லையா அன்பு. என்னால எப்படி ஏத்துக்க முடியும்னு நினைக்கிற.” எனக் கண்ணீர் வடித்தாள்.
ஒவ்வொரு முறையும் குமரவேலன், தன் நண்பனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வரும் பொழுது எல்லாம், திண்ணையில் சந்தானம் இருக்கிறாரா என்பதைக் கவனிப்பான். அன்பு இவ்வுலகை விட்டு மறைந்ததிலிருந்து அவருக்கும், ரேடியோவிற்கும் வேலையில்லை. அதனால் திண்ணை காலியாக இருக்கும்.
தன் நண்பன் தனக்குள் இருக்கிறான். இனி நானும் அவனும் வேறு இல்லை என்பதை, முழுதாகத் தனக்குள் நம்ப வைத்துக் கொண்டவன் செய்த முதல் வேலையே, வரும்பொழுதும் போகும் பொழுதும் அந்தப் பாடலை ஒளிபரப்புவது மட்டுமே. இன்றும் அவர் இல்லாமல், தனியாக இருக்கும் ரேடியோ கண்டு வாகனத்தை நிறுத்தினான்.
வண்டிச் சத்தத்தை வைத்துக் குமரவேலன் வந்து விட்டதை அறிந்த சந்தானம், வெளியே எட்டிப் பார்த்தார். வீட்டுக்குள் இருந்து உளவு வேலை செய்யும் அவரைச் சிறிதும் கண்டு கொள்ளாதவன், பாடலை ஒளிபரப்பினான். தன்னை மறந்து கண் மூடிச் சிறிது நேரம் அந்தப் பாடலை ரசித்தான்.
அன்றொரு நாள், “அந்தப் பாட்டுல வர வரியைக் கேட்கும்போது நமக்காகவே எழுதின மாதிரி இருக்கு.” அன்புக்கரசன் சொன்னது நினைவிற்கு வந்தது.
இதழோரம் மறைந்துபோன புன்னகையை, வெளிவர வைக்க விரும்பாதவன் வண்டியை நோக்கி நகர, “நில்லு!” எனக் கட்டளையிட்டார் சந்தானம்.
திரும்பியவனின் முகம் பார்க்கச் சங்கடமாக இருந்தது அவருக்கு. அதுவரை நல்ல மனநிலையில் இருந்தவன், அவர் முகத்தைப் பார்த்த பின் நண்பனோடு இருந்த தருணங்கள் நினைவிற்கு வந்தது. உடனே அவன் முகம் மாறிவிட்டது. அதை உணர்ந்தவர் உணராதது போல்,
“கொஞ்சம் உட்காரு, கை கழுவிட்டு வந்திடுறேன்.” எனச் சாப்பிட்ட கையைக் கழுவ உள்ளே சென்றிட, யோசனையோடு நின்று கொண்டிருந்தான்.
கையை நன்கு துடைத்து விட்டு, மீசையை வருடிவிட்டுத் திண்ணையில் அமர்ந்தவர், “இந்தா…” எனக் கட்டுப் பணத்தை உயர்த்தினார்.
யோசனையில் புருவங்கள் மட்டுமல்லாமல், முகம் மொத்தமும் சுருங்கியது. பதிலை எதிர்பார்ப்பவனுக்குக் கொடுத்தார். “எவ்ளோ நாள் ஒன்னும் இல்லாம அந்தப் புள்ளையப் பார்த்துக்க முடியும். உன் வீட்டுக்கும் போக மாட்டேன்னு தெரிஞ்சு போச்சு. மாணிக்கத்துக்கு ஒரு நிலம் இருக்கு. அதை அன்புக்கரசன் காலேஜ் படிப்புக்காக அடமானம் வச்சிருந்தார். நான்தான் அதுக்கு உதவி பண்ணி பணம் வாங்கிக் கொடுத்தேன்.” என்றார்.
இவை அனைத்தும் குமரவேலன் அறிந்தது என்பதால், மேற்கொண்டு வரப்போகும் வார்த்தைக்காகக் காத்திருக்க, “நேத்துப் போயிட்டு எவ்ளோ ஆகுது, என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வந்தேன். அவர் இல்லாத விஷயத்தையும், அங்க இருக்கவங்க கிட்டச் சொல்லி இருக்கேன். இந்தப் பணத்தை எடுத்துட்டுப் போயிட்டு அந்த நிலத்தை மீட்டுட்டு வா.” என்றார்.
“எதுக்கு?”
“அந்த நிலத்தை வச்சு விவசாயம் பாரு. விவரம் எல்லாத்தையும் நான் சொல்லித் தரேன். அதுல வர வருமானம் உன்னையும், உன் பொண்டாட்டியையும் காப்பாத்தும்.”
“எனக்கு வேண்டாம்”
“சும்மா உதவி பண்றன்னு நினைக்காத. என்னைக்கா இருந்தாலும், நீ என்னோட எதிரி தான். போனவன் திரும்ப வர வரைக்கும் கொஞ்சம் விட்டு வைக்கிறேன்.” என்றவரைப் புரியாது குமரவேலன் நோக்க,
“அதான்டா… உன் நண்பன் அன்பு. இன்னும் எட்டு மாசத்துல இந்த ஊருக்குள்ள என்ட்ரி கொடுக்கப் போறான்ல. நீயும் அவனும் சேர்ந்து வாங்க, விட்டதைத் தொடரனும்.” என்றதும் குமரவேலன் பற்கள் பளபளத்தது.
அப்படியான தருணத்திற்காகத் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறான். சந்தானம் சொல்வதைக் கற்பனை செய்து பார்க்கவே பேரானந்தமாக இருந்தது. சின்னவன் முகத்தில் தோன்றிய பூரிப்பைக் கண்டு மன நிம்மதி அடைந்தவர்,
“விவசாயத்துல கால் வச்சவன், அதோட நுணுக்கம் தெரிஞ்சா கெட்டுப் போக மாட்டான். நம்பி இறங்கு. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றார்.
அதுவரை அவரிடம் இருந்து பணம் வாங்க விருப்பம் இல்லாதவன் கையை உயர்த்த, “இதுல கொஞ்சம் அதிகமாவே பணம் இருக்கு. கூர வீட்டப் பிரிச்சிட்டு, கல்லு வீட்டோட சேர்த்துச் சின்னதா சமைக்க இடம் கட்டிக்க.” என்றதும் உயர்ந்த கைகள் தாழ்ந்து விட்டது.
கம்பீரமாகப் பேசிக் கொண்டிருந்தவர், தன் குரலைத் தாழ்த்தி, “தினமும் காவலுக்கு வெளியப் படுத்து இருக்கன்னு தெரியும். நேத்து மழை ரொம்ப அதிகமா வரவும் எங்க இருக்கன்னு பார்க்க வந்தேன். அந்தப் புள்ள பேசுன எல்லாத்தையும் கேட்டேன். உங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற விஷயத்துல தலையிட நான் விரும்பல. நாளைக்கே குழந்தை பிறந்துட்டா எந்நேரமும் நீ கவனமா இருக்கணும். ரெண்டு வீட்டையும் இணைச்சு நீ படுத்துக்குற மாதிரி சின்ன இடத்தைக் கட்டி அங்கயே இருந்துக்க.” என்றார்.
அன்பு சென்றதில் இருந்தே அழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன், அன்று தேனிசை தேவி முன்பு உடைந்து விட்டான். அதுபோன்று இனி யாரிடமும் உடையக்கூடாது என்ற உறுதியைச் செதுக்கிக் கொண்டவன், சந்தானத்தின் முன்பு அதைக் காட்டவில்லை. உள்ளம் நொறுங்கும் அளவிற்கு உடைந்தவன், நன்றி தெரிவிக்கக் கூட நினைக்கவில்லை.
எத்தனையோ முறை வயது வித்தியாசம் பார்க்காமல், மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறான். தன்னுடைய காரியத்தால் ஊருக்குள் சந்தானத்தின் மரியாதையும் கெட்டு இருக்கிறது. அப்படிப்பட்டவர், தன்னைத் தூற்றிப் பேசுவதற்குச் சமயம் கிடைத்தும், அதைச் செய்யாமல் தூக்கிவிட நினைப்பதை உணர்ந்து உள்ளம் கனிந்து விட்டது.
“இந்தக் காசைத் திருப்பித் தந்துடுவேன்.”
“வட்டியோட”
“கண்டிப்பா தருவேன். நீங்க சொன்ன மாதிரி என் அன்பு கையால.”
“போடா…” என அவன் தோளைத் தட்ட,
“இப்பப் போறேன். திரும்ப ஒரு நாள் நெஞ்ச நிமித்திக்கிட்டு நிற்பேன்.” என்றவன் முகத்தில் தெரியும் பாவனைகளைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார்.
***
தேனிசை தேவிக்குத் தேவையான பழங்களை வாங்கி வந்தவன், சந்தானம் சொன்னதைத் தெரிவித்தான். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “இப்போதைக்கு அந்தப் பத்திரத்தை மீட்டுட்டு, கொஞ்ச நாள்ல உன் பேர்ல மாத்திடுறம்மா.” என்றதற்கும் எந்தப் பதிலும் இல்லை.
மெல்லத் தயங்கி, “நாளைக்கு ஆள் வரச் சொல்லி இருக்கம்மா. உனக்கு இதுல விருப்பம் தான.” அவள் அபிப்பிராயத்தைக் கேட்டான்.
“நான் வேணான்னு சொன்னா விட்டுடுவியா? உனக்கும் எனக்கும் நடுவுல ஒரு கோடு எப்பவும் இருக்கும். அந்தக் கோடு கதவா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.”
நீயும் நானும் ஒரே வீட்டில் இருந்தாலும், இருவருக்கும் நடுவில் கதவு இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சொல்லும் தேனிசை தேவியின் எண்ணத்தைப் புரிந்து கொண்டான். அவள் விருப்பப்படியே செய்ய முடிவெடுத்தான்.
பல வருடங்களாக, அழகுப் பதுமையாக இருந்த அந்தப் பழைய கூரை வீட்டைப் பிரிக்கும் பொழுது மனம் பாரமானது. பழுது போன கூரைகளுக்குப் பின்னால், நண்பர்களின் பொக்கிஷங்கள் ஒளிந்திருக்கிறது. அவர்களைவிட மாணிக்கத்தின் வேர்வைத் துளி, கூரைகளின் வாசத்தை விடத் தூக்கலாக இருந்தது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்தவன், சற்று நேரம் மனம் கலங்கி அமர்ந்திருந்தான்.
கூரை வீடு முழுவதும் கலைக்கப்பட்டது. அதே வாசலை வைத்தவன், கல்வீட்டோடு சேர்த்து அவன் படுத்துக் கொள்ளும் அளவிற்கான அடுப்பங்கரையைக் கட்டினான். வசதியாக வாழ்ந்தவன் அந்தச் சின்ன இடத்தைத் தனது படுக்கை அறையாக மாற்றிக் கொண்டான். அவள் தினமும் உறங்கும் இடமும், குமரவேலன் உறங்கும் இடமும் எதிரெதிரே இருந்தது.
இருவருக்கும் நடுவில் அவள் சொன்னது போல் கதவைப் போட்டவன், “இந்தக் கதவு எப்பவும் உனக்குப் பாதுகாப்பா இருக்கும்மா.” என்று விட்டுத் தன் குரலைத் தாழ்த்திச் சொன்னான்.
“உயிர் இல்லாத இந்தக் கதவு மேல வச்ச நம்பிக்கையைக் கொஞ்சமாது என் மேல வச்சிருக்கலாம்.” என்று.
உடனே தேனிசை தேவியின் முகம் உயர்ந்து அவன் முகத்தை நோக்கியது. சொல்ல முடியாத அளவிற்கான துயரங்கள், முகத்தில் நிரம்பி இருப்பதைப் போன்று உணர்ந்தவள்,
“உன் மேல நம்பிக்கை இருந்ததால தான், தனித்தனியா இருந்த வீடு ஒன்னாகி இருக்கு. இந்த அளவுக்கான நம்பிக்கையே நமக்குள்ள போதும். இதுக்கு மேல தேவைப்படாது.” என்றாள்.
இவைதான் இந்தச் சூழ்நிலைக்கு இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். வாழ்வென்பது ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டி நகரும் அற்புதமான ஓட்டப்பந்தயம். அப்படியே நிற்பேன் என்று எவராலும் அடம்பிடிக்க முடியாது. நேற்று வரை நண்பன் இல்லாமல் வாழ முடியாது என்றிருந்தவன், அவன் இல்லாமல் வாழ ஆரம்பித்து விட்டான். உள்ளே நுழையக்கூடாது என்று கட்டளையிட்டவள், கதவைக் காவலுக்கு வைக்கும் அளவிற்கு வந்துவிட்டாள். இவை மாற்றத்திற்கான படிகள் இல்லை என்றாலும், மாற்றம் வரும் வரை இவையே பாலம்.
***
விடியலை வரவேற்கத் தயாரானவன், புதுச் சமையலறையைப் பால் காய்ச்சத் தயார் படுத்தினான். பொங்கி வழிந்த பாலை இரண்டு டம்ளரில் ஊற்றித் தன் இரு உயிர்களுக்கும் வைத்தவன், தன்னைப் பெரிய சமையல்காரனாகவே நினைத்துக் கொண்டான். அதன் பலனாக இன்று வடகறி வைக்கும் அளவிற்குக் கை துணிந்து விட்டது.
போனுக்குப் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காதவன், சிறிது நாள்களாக அதைத்தான் கடவுளாக எண்ணிக் கொண்டிருக்கிறான். சில புண்ணியவதிகள் கொடுத்த சமையல் குறிப்புகள் மூலம் தான், குமரவேலனின் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இட்லி தயாராவதற்குள் வடகறி வைக்க அனைத்தையும் தயார் செய்து விட்டான்.
ஏன் தான் வீட்டை மாற்றி அமைக்கச் சம்மதம் சொன்னோமோ? என்று காலையிலிருந்து நொந்து கொண்டிருக்கிறாள் தேனிசை தேவி. ஏற்கனவே அவளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் வாந்தி, சமையல் வாசனையை நுகர்ந்து ஒரு வழி ஆக்கிக் கொண்டிருக்கிறது. தூக்கத்திலிருந்து அலறியடித்து எழுந்தவள் பலமுறை வாந்தி எடுத்துவிட்டாள்.
அவள் அவஸ்தை புரியாதவன், சமையல் கலையைக் காட்டிக் கொண்டிருக்க, “உவாக்! உவாக்!!” ஓடிச்சென்று வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.
அடுப்பை நிறுத்தியவன், தண்ணீரை எடுத்துக்கொண்டு பின்னால் ஓட, “என்னதான் சமைக்கிற? கொஞ்ச நேரம் உட்கார முடியல என்னால.” என்றவளின் அவஸ்தை அப்போதும் புரியவில்லை.
“வாசனை ஆளைத் தூக்குதா?”
வெட்டவா குத்தவா என்ற ரீதியில் அவனை முறைக்க, ‘ம்ம்… தூக்குதான்னு தான கேட்டேன். எதுக்கு இந்தப் புள்ள புருவத்தைத் தூக்குது.’ என உள்ளுக்குள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.
“தள்ளு!”
அவனை விலகுமாறு கைகாட்டியவள், கடுப்போடு உள்ளே சென்று அமர்ந்தாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
“தாத்தா சொன்ன மாதிரி ரொம்பக் கோவம் வருது இந்தப் புள்ளைக்கு. உப்பு, காரத்தைக் கம்மி பண்ணிட வேண்டியது தான்.” என்றவாறு உள்ளே சென்று அடுப்பை ஆன் செய்தான்.
தலையில் கை வைத்துக் கொண்டு சோர்வாக அமர்ந்திருந்தவள், பட்டென்று நெஞ்சில் கை வைத்துக் குமட்ட ஆரம்பித்தாள். இப்போதும் அவள் நிலை அறியாதவன், வடகறிக்குத் தாளிப்பைப் போடத் துவங்க, “உவாக்!” என்ற கூச்சலோடு வெளியே ஓடினாள்.
அவள் ஓடும் பொழுதெல்லாம் தண்ணீர் சொம்பைத் தூக்கிக் கொண்டு ஓடுவது தான் குமரவேலனின் வேலை. பாதியில் நிறுத்த முடியாத சமையலைக் கண்டு நொந்தவன், “ஆனா… ஊனா… வெளிய ஓடுது சாமி.” என்றவாறு வெளியே வந்தான்.
இதற்கு மேல் எடுப்பதற்கு ஒன்றுமில்லை தேனிசை வயிற்றில். அனைத்தையும் வெளியே கொட்டியவள், குடித்த தண்ணீரைக் கூடச் சேர்த்து எடுத்து விட்டாள். தெம்பில்லாமல் மயக்க நிலையில் தள்ளாடி நின்றவளிடம்,
“ஆஸ்பத்திரி போகலாமா ம்மா?” கேட்டான்.
பதில் சொல்லாமல் திண்ணை விளிம்பில் அமர்ந்தவளிடம், “என்னன்னே தெரியலையே, காலைல இருந்து இப்படி வாந்தியா எடுத்துட்டு இருக்கியேம்மா. உள்ள இருக்க பிள்ளைக்கு ஏதாச்சும் ஆகப்போகுது. கிளம்பி வாம்மா, போகலாம்.” என்றிட,
“முதல்ல நீ சமைக்கிற அந்தக் கருமத்தை நிறுத்து. காலைல இருந்து உசுர வாங்கிட்டு இருக்க.” எரிந்து விழுந்தாள்.
கப்பென்று வாயை மூடிக் கொண்டான். இத்தோடு தன் சோதனை முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தவள் நாசியை வருடியது தீயும் வாசனை. வடகறிக்கான தாளிப்பு கருகிப் போன கரிச்சட்டியானது. அமர்ந்து கொண்டிருந்தவள், நின்றிருந்தவனைத் தலை உயர்த்தி முறைக்க, அகப்பட்ட கோழியாக மருண்டவன் உள்ளே ஓடினான்.
அவனுக்கு எதிராக ஓடியவள் வயிற்றைக் காலி செய்துவிட்டு அமர, தலையில் கை வைத்தபடி கருகிப்போனதைப் பார்த்துக் கொண்டிருந்தான் குமரவேலன். அனைத்து வாசனையும் வீட்டை விட்டு அகன்றதும், உள்ளே நுழைந்தவள் அவனை எட்டிப் பார்த்தாள். பரிதாபமான நிலையில் கருகிப் போன தன் கனவை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எல்லாம் போச்சா?”
“ஆமாம்மா”
“ரொம்ப நல்லது!” என்றவளை முறைக்க முடியாத நிலைக்குத் தள்ளிய சூழ்நிலையை மனதில் திட்டிக் கொண்டவன்,
“பசிக்குதாம்மா?” கேட்டான்.
மறுப்பாகத் தலையசைத்தவளிடம், “இட்லி ரெடியா இருக்கு. கொஞ்ச நேரத்துல குழம்பு ஆகிடும்.” என்றவன் அவசரமாகத் திரும்பித் தன் சமையலைத் தொடர்ந்தான்.
அவன் செய்யப் போகும் செயலை நினைத்து அரண்டவள் வெளியே போவதற்குள், இருவருக்கும் நடுவில் இருந்த கதவைச் சாற்றினான். நிம்மதிப் பெருமூச்சோடு சோர்ந்தவள் படுத்துக் கொள்ள, வேர்க்க விறுவிறுக்க சமைத்து முடித்தவன் சாப்பிட அழைத்தான்.
***
“கிளம்பிட்டியாமா?”
“ம்ம்” என்றதோடு அலைபேசியைத் துண்டித்தாள்.
சந்தானம் கொடுத்த பணத்தை வைத்து மாணிக்கத்தின் நிலத்தை மீட்டவன், விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டான். இதுவரை செய்யாத வேலையைச் செய்யத் தடுமாறியவன், இப்பொழுதுதான் சற்று நிதானம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறான்.
தேனிசை தேவிக்கு இது மூன்றாவது மாதம். எப்படியோ வாந்தி, மயக்கத்தோடு நாள்களைத் தள்ளி விட்டாள். இன்று மூன்றாவது மாத ஸ்கேன் இருக்கிறது. காலை நான்கு மணிக்கு எழுந்தவன், அவளுக்குத் தேவையானதைச் செய்து வைத்துவிட்டு வேலைக்குக் கிளம்பி விட்டான்.
அவன் மறந்து விட்டான் என்று நினைத்தவள் அழைத்து, “இன்னைக்கு ஆஸ்பத்திரி போகணும்.” என்றாள்.
“தெரியும்மா. சாப்பிட்டுட்டு ரெடியாயிரு, கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடுறேன்.” என்றவன் தான், இப்பொழுது அழைத்துக் கிளம்பி விட்டாயா? என்று விசாரித்தான்.
செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தவன் இல்லம் வர, வீட்டைப் பூட்டிவிட்டு அவனுக்காகக் காத்திருந்தாள். சாப்பிடாமல் இருந்தவன், சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று வர, பூட்டிய இல்லம் அந்த எண்ணத்தை மூடிவிட்டது. தன் பசியை அவளுக்குக் காட்டாதவன் புறப்பட்டான். வழியில் அவர்களைப் பார்ப்பவர்கள் ஜாடை மாடையாகக் கண் காட்டிக்கொள்ள, நடை குறுகியது தேனிசைக்கு. அதை அறிந்தவன் தெருவில் கண்ணை வைத்துக்கொண்டு,
“நம்மளைப் பத்திப் பேசுற இவங்களைப் பத்திப் பேச இன்னொருத்தன் பின்னாடியே நிப்பான். அது தெரியாம நம்மளை ஜாடை பேசிட்டு இருக்காங்க. இவங்களுக்குப் பயந்து உன் நடையக் குறுக்குனா, அவங்க பேச்சு உண்மையாகிடும். உண்மை எதுன்னு நீ தான் காட்டணும். உன்னப் பார்த்து நாளைக்கு உன் பிள்ளையும் இதையே பண்ணும்.” என்றவனின் பேச்சைக் கேட்டவள் நடை பழைய நிலைக்குத் திரும்பியது.
மருத்துவமனை வரும் வரை சாதாரணமாக இருந்த இருவரும், பிள்ளையின் நலனை நினைத்து நடுக்கம் கொள்ள ஆரம்பித்தனர். ஒவ்வொரு பெண்ணும் பிள்ளையை உறுதி செய்த நாளிலிருந்து, அவை நலமாகக் கைக்கு வரும் நாள் வரை, இப்படித்தான் ஒவ்வொரு முறையும் மருத்துவர் முன்பு அமர்ந்திருப்பாள். அதையே பெண்ணவளும் செய்ய, பக்கத்தில் இருந்தவனுக்கு நடுக்கம் சற்றும் குறையவில்லை.
கடைசியாக மருத்துவரைப் பார்த்து விட்டுச் சென்றதிலிருந்து ஆயிரம் மாற்றங்கள். நண்பன் மனைவியாக இருந்தவள், அவன் மனைவியாக மாறி இருக்கிறாள். இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், அதுதான் உண்மை. அவ்வளவு பெரிய மாற்றங்களை நிகழ்த்திய பின் சந்தித்த பிரச்சனையால் தான், பிள்ளையின் நலனைக் குறித்துப் பயம் கொள்கிறான்.
சாப்பிடாமல் பட்டினி இருந்தவள், அதன்பின் வாந்தியைக் காரணம் காட்டி சரியாகச் சாப்பிடவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்து வைத்து இப்போது பயமாக வெளிப்படுகிறது. கொண்டு வந்த தண்ணீரைக் குடிக்க வைத்து அவளைத் தயாராக வைத்தவன், அங்கிருந்த செவிலியரைப் பலமுறை தொந்தரவு செய்து விட்டான்.
இவன் தொந்தரவு தாங்காமல், “தேனிசை தேவி” என்றழைத்தார்.
“பார்த்து மெதுவாப் போம்மா.” என்றவன் ஸ்கேன் எடுக்கும் அறை வாசல் வரை பின்னால் வந்தான்.
“நீங்க எங்க வரீங்க?”
“நடக்க முடியாதுல்லமா துணைக்கு வரேன்.”
“நடக்க முடியாமதான் இவ்ளோ தூரம் வந்தனா?”
“இல்லம்மா, குழந்தை எப்படி இருக்கு, என்ன ஏதுன்னு தெரியல.”
“அதுக்கு தான உள்ள போறேன்.”
அமைதியாக வாயை மூடிக் கொண்டவன், இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான். அவனை முறைத்து விட்டு உள்ளே செல்லும் தேனிசை தேவியின் உருவம் மறைந்த பின், மீண்டும் அறைக்கதவு பக்கம் வந்து நின்று தவித்துக் கொண்டிருந்தான்.
படுத்துக் கொண்டிருந்தவள் உணர்வுகள் எக்குத் தப்பாக ஏங்கியது. குழந்தையைப் பார்க்கப் பேராவல் பிறந்தது. எதையெதையோ செய்து கொண்டிருந்த மருத்துவர், ஒருவழியாக அவள் வயிற்றில் கை வைக்க, அடிவயிறு சில்லென்று ஆனது. தானாகக் குழந்தையைப் பார்க்கத் தலை திரும்ப,
“நேராப் படுங்க” கரகரத்த குரலில் கண்டித்தார் மருத்துவர்.
உதட்டைச் சுழித்துக் கொண்டு நேராகப் படுத்தவள், சிறிது நேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் தலையைத் திருப்பிக் கொண்டாள். அரைகுறையாகத் தன் பிள்ளையின் உருவத்தைப் பார்த்தவள் மனம் குளிர்ந்தது. தன்னவனின் முகத்தை மனக் கண்ணில் கொண்டு வந்தவள், அவனோடு இந்தத் தருணத்தைக் கொண்டாடினாள். கண்களின் ஓரம் மெல்ல நீர் உருண்டோடிக் காதில் சங்கமித்தது.
“எந்திரிங்கம்மா”
எழுந்தவள் தன் அடிவயிற்றைச் சுத்தம் செய்து கொண்டு ஆடையைச் சரி செய்து நிற்க, “வெளிய வெயிட் பண்ணுங்க. ரிப்போர்ட் வந்ததும் கூப்பிடுவாங்க.” என்றவருக்குச் சம்மதமாகத் தலையசைத்தவள் கதவைத் திறந்தாள்.
“நர்ஸ் அக்கா, குழந்தை எப்படி இருக்கு?” என்றவன் வாய் அந்தரத்தில் பிளந்து கொண்டிருந்தது, தேனிசை தேவியைக் கண்டு.
சுற்றியும் ஆள்கள் இருப்பதால் மூஞ்சைக் காட்டிச் சிடுசிடுக்காமல், முறைத்துக் கொண்டு இருக்கையில் அமர, “குழந்தையைப் பார்த்தியாம்மா? நல்லா இருக்கா? என்ன குழந்தைன்னு தெரிஞ்சுதா? பாப்பா எப்ப வரும்னு ஏதாச்சும் சொன்னாங்களா?” அடுக்கடுக்காகக் கேட்டான்.
அவன் முகம் நோக்கியவள், முகத்தில் இருந்த கோபம் குறைந்தது. பரவசமான முகத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். உணர்வுகளின் துடிப்பு விழிகளில் தெரிந்தது. அதைக் கண்டு, “ரிப்போர்ட் வந்தாதான் தெரியும்” என்றாள் அமைதியாக.
“குழந்தை நல்லாதாம்மா இருக்கும். கொஞ்ச நேரத்துல நர்ஸ் அக்கா வந்து சொல்லுவாங்க பாரு.”
அவளுக்குச் சொல்லிக் கொண்டானோ, அல்லது தனக்கே சொல்லிக் கொண்டானோ தெரியவில்லை. தேனிசையின் பெயரைக் கூறி மருத்துவ அறிக்கையைக் கையில் கொடுக்கும் வரை இருக்கையில் தங்கவில்லை அவன் உடல். மருத்துவ அறிக்கையை வாங்கிக் கொண்டு ஓடினான் மருத்துவரைக் காண.
மருத்துவர் முன்பு சரியாகக் கூட அமரவில்லை, “மேடம், இந்தப் புள்ள சரியாவே சாப்பிடல. அதனால குழந்தை ஏதாச்சும் மெலிஞ்சு இருக்கான்னு பாருங்க. வயிறு வேற இன்னும் தெரியல. குழந்தை வெயிட் ரொம்பக் கம்மியா இருக்கா?” என்றவனைக் கேலியோடு பார்த்தவரைச் சங்கடத்தோடு பார்த்தாள் தேனிசை தேவி.
அவள் அறிக்கையைப் பார்த்தவர், “இனிமேதான் வயிறு தெரிய ஆரம்பிக்கும். வயிரோட அளவுக்கும், குழந்தையோட வெயிட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்ப வரைக்கும் உங்க குழந்தை ரொம்ப நல்லா இருக்கு.” என அவன் பரபரப்பைக் குறைத்தவர், தேனிசை தேவியிடம் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அவளுக்குத் தேவையானதை எழுதிக் கொடுத்து ஐந்தாம் மாதம் வரச் சொல்லி அனுப்பி வைக்க, இதுவரை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவைச் சொல்லியவன், இனி என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டான். பத்து நிமிடத்தில் முடிக்க வேண்டிய கேள்வியை, அரை மணி நேரத்திற்கு மேல் கடத்திக் கொண்டிருக்கிறான்.
சுற்றி வளைத்து அவன் கேட்பது குழந்தையின் நலனும், இனிக் குழந்தையின் நலனை எப்படிக் காப்பது என்பதும் மட்டுமே. அவரும் பொறுமையாகப் பதில் சொன்னார். இருந்தும் திருப்தி அடையாதவன் வேறு வழிகளில் நச்சரிக்க, “தேங்க்ஸ் டாக்டர்” என வெளியே வந்தாள் தேனிசை.
போகும் முன் பார்வையால் மிரட்டி விட்டுச் சென்றவளைக் கண்டு தன் கேள்விகளை நிறுத்தியவன், “இந்தப் புள்ளைக்கு ரொம்பக் கோபம் வருது டாக்டர். அதனால குழந்தைக்கு ஏதாச்சும் ஆகுமா?” வெளியில் இருந்தவளுக்குக் கேட்டு விடாதபடி ரகசியமாகக் கேட்டான்.
இப்படி ஒருவனோடு எப்படி அந்தப் பெண், நாள் முழுவதும் இருக்கிறாள் என்ற கவலையோடு ஒரு வழியாக அவனைத் துரத்தி விட்டார் மருத்துவர்.