Loading

காழ்ப்புணர்ச்சி நீ..
கவிதையும் நீ..
அன்பும் நீ..
பண்பும் நீ..
ஆசையும் நீ..
வஞ்சமும் நீ..
தேவையும் நீ..
சேவையும் நீ..
நினைப்பதெல்லாம் நீ..
காரியம் நிகழ்த்துவதும் நீ..

அனைத்தையும் செய்துவிட்டு ஊழ்வினையின் பெயரில் பழி போடுவதும் நீ..

மகிழுந்தை நேராக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தியிருந்தான். சிறிது அமைதி. அவன் ஏன் அங்கு நிறுத்தினான் என்று அவனும் கூறவில்லை. நிரண்யாவின் அன்னையும் வினவவில்லை.

“என்னை மன்னிச்சிடுங்க. நான் அவளைக் கஷ்டப்படுத்தணும்னு எதையும் செய்யல” என்றார் கண்ணீருடன்.

“புரியிது அத்தை. நானும் அப்படி நினைக்கல. உங்க நம்பிக்கை வேற. என்னோட நம்பிக்கை வேற. இனி நிரண்யாவை நான் பார்த்துக்குறேன்” என்றான் பக்குவமாக.

அவரும் புரிதலாய் தலையை ஆட்டிவிட்டு விடைபெற்றார். இதையெல்லாம் நிரண்யா உணர்ந்ததுபோல் இல்லை. அவள் வேறு ஒரு உலகில் இருந்தாள்.

“நிரண்யா..” என்று அழைத்தான் கீதன். அவள் திரும்பி பார்க்கவில்லை.

“மொழி” என்று அழைத்ததும் அவனைப் பார்த்தாள்.

“என்ன யோசனை?”

“நீங்க யாரு?”

“நான் யாருன்னு நீதான் சொல்லேன்.”

“தெரியலையே.. என்னோட மூளைக்குள்ள பூதக்கண்ணாடி வச்சு பார்த்துட்டேன். நீங்க இல்லையே.”

“சரி.. யோசிக்க வேண்டாம். நான் யாரா இருக்கும் சொல்லு.”

“என்னோட ஃபிரெண்டா?”

“எப்படி சொல்ற?”

“எனக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறீங்க. அதனால் அப்படித்தான் இருக்கணும்.”

“உண்மைதான்.. நான் உன்னோட ஃபிரெண்ட். நீ என்னை நம்பலாம்.”

“கண்டிப்பா.. உங்களை மட்டும்தான் இப்போ நம்புறேன். இனியும் நம்புவேன்”.”

“குட்.‌”

“ஆமா.. நிரண்யா யாரு?” என்றாள்‌. சற்று நேரம் அவளை சிந்தனையுடன் பார்த்தான்.

“நிரண்யா என்னோட மனைவி.”

“நீங்க அவளைத்தான் பார்த்துப்பீங்களா?”

“நான் எப்போ அப்படி சொன்னேன்?”

“இப்போ அந்த அம்மாட்ட சொன்னீங்களே.”

“ஓ.. அதுவா?” என்று இழுத்தான். அவள் இதை கவனித்திருக்கிறாள்.

“ஆமா..அப்போ அவளைத்தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா. என்னைப் பிடிக்காதா?”

“எனக்கு நிரண்யாவையும் பிடிக்கும். உன்னையும் பிடிக்கும்” என்று அவன் கூற, அவள் பதில் கூறவில்லை. இவன் பதிலில் அவளுக்கு ஒப்புமையில்லை என்பது நன்றாக விளங்கியது அவனுக்கு.

“இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு.. நிரண்யாவுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்” என்று அவன் கூற, அவள் மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

“நிரண்யாவை நான் பார்த்தது இல்லையே. அப்புறம் எப்படி பிடிக்கும். பொதுவா என்னை யாருக்கும் பிடிக்காது” என்றாள் விரக்தியுடன்.

“நீதான் அவளைப் பார்த்தது கிடையாது. ஆனால் அவ உன்னைப் பார்த்திருக்கா. ஊருக்குப் போயிருக்கா. வந்தோன பார்க்கலாம்” என்று அவன் கூற, அவள் சரி என்று தலையசைத்தாள்.

நிரண்யாவை மூன்று வயது குழந்தையாக பாவித்து பதிலளித்தான் அவன். அவளை மொழி என்று அழைக்க அவன் மனம் ஒப்பவில்லை. ஆனால் வேறு வழியும் இருக்கவில்லை. மனதைத் திடப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டான். அவனால் முடியாத பட்சத்தில் கவுன்சிலிங் சென்றான். மனம் பிறழ்ந்த ஒருவரைப் பார்த்துக் கொள்வது சாதாரண காரியமல்ல. பார்த்துக் கொள்பவரின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அவர். அதை அனைத்தையும் உணர்ந்து சரியாய் செய்தான் கீதன். முன்பு உள் மனதில் இருந்த சலசலப்பு கூட இப்பொழுது இல்லை. மூளையும் மனதும் ஒத்த சிந்தனையுடன் இருந்தது அவனைத் தெளிவாக பேச வைத்தது.

“மொழி.. உனக்கு என்ன பிடிக்கும். வெளில சாப்பிட்டு வீட்டுக்குப் போகலாமா?”

“ம்ம்ம்.. போகலாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

“என்ன சாப்பிடணும்?”

“நண்டு.. எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவள் கூற, அவளை ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்.

அந்த உணவகத்தைப் பார்த்ததும் அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“நான் ஏற்கனவே இங்க வந்திருக்கேன். இங்க நண்டு நல்லா செய்வாங்க” என்றாள் அவனுக்கு தகவலாக. உண்மையில் அவனுக்கு அது தகவல்தான். ஏனெனில் நிரண்யா நண்டைப் பார்த்தாலே வாந்தி எடுப்பாள்.

பின் மொழிக்குப் பிடித்தமான உணவு வகையறாக்களை எடுத்து வருமாறு பணித்தான்.

உணவு வந்ததும் அவள் ரசித்து உண்டாள்‌. உண்மையில் அவள் நிம்மதியாக உட்கொண்டு பல நாட்கள் ஆகியிருந்தது.

“நீங்க சாப்பிடலையா கீதன்?”

“எனக்குப் பசிக்கலை.”

“அப்போ எனக்கும் வேண்டாம்.”

“இல்ல.. இல்ல நீ சாப்பிடு. நானும் சாப்பிடுறேன்” என்று கூறியவன், உணவினை வரவழைத்து உண்டான்‌.

“நண்டு பிடிக்காதா?”

“இல்லை. பிடிக்காது.”

“ஏன்?”

“நிரண்யாவுக்குப் பிடிக்காது” என்று கூறிவிட்டு அவளைப் பார்த்தான்.

“ஓ.. உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதா? அப்போ நானும் சாப்பிடாம இருக்கேன்‌. எனக்கும் வேண்டாம்” என்றாள் வெள்ளை மனதுடன்.

இதுதான் எதுவும் எழுதாத மனதில் தோன்றும் உணர்வோ. பின் கரும்புள்ளி வைப்பது நம்மின் முதிர்வோ? என்று தோன்றியது கீதனுக்கு‌.

“இல்லை. நீ சாப்பிடு. அடுத்தவுங்களோட சுதந்திரத்தில் தலையிடுவது நாகரிகம் இல்லை. அதே மாதிரி உனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருந்து, அது சரின்னு பட்டுச்சுன்னா, உலகமே எதிர்த்தாலும் விட்டுக் கொடுக்காத” என்றவனை குழப்பத்துடன் பார்த்தாள் அவள்.

“இப்போ நீ நிரண்யாவுக்காக நண்டு சாப்பிடாம இல்லையா? அப்போ அது தப்புதானே” என்றாள் தெளிவாக.

“அது எனக்கும் பிடிக்காம போச்சு. அவளுக்குப் பிடிக்காதுங்கிறது ஒரு காரணமா இருக்கலாம். ஆனால் அதை நான் தியாகமா நினைக்கல. உனக்காக சாப்பிடாம இருக்கேன்னு நிரண்யாவிடம் சொல்ல மாட்டேன். அப்படி என்னைக்கு நான் சொல்றேனோ அன்னைக்கு அது அழுத்தமாயிடும். எனக்கு சாப்பிடணும்னு தோணுச்சுன்னா நிச்சயம் சாப்பிடுவேன்” என்றவனைக் குழப்பத்துடன் பார்த்தாள் அவள்.

“உனக்குப் பிடிக்காதுன்னா எனக்குப் பிடிக்காதுங்கிறதுல புரிதல் இல்லை மொழி. அவுங்களுக்குப் பிடிச்சதை செய்யட்டும்ங்கிறதுல இருக்கு புரிதல். அப்போ நமக்கு பிடிச்ச எல்லாத்தையும் நாம செய்யலாம்னு அர்த்தம் பண்ணக் கூடாது. நமது பிடித்தத்திற்கும் எல்லை இருக்கு. அது அடுத்தவர்களை பாதிக்காதவரை, அடுத்தவர்களை காயப்படுத்தாதவரையில் அது சரி. இது சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறும்” என்றான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன பாத்துட்டே இருக்க?”

“இன்னும் ஏதாவது பேசுவீங்களான்னு பார்க்கிறேன்” என்றாள் புன்னகையுடன்.

“நான் பாடம் எடுக்குறேன்னு நிரண்யா என்னைக் கிண்டல் பண்ணுவா” என்றான்.

“நல்ல பாடம். கத்துக்கலாம். நிரண்யா கொடுத்து வச்சவுங்க.”

“நீயும் கத்துக்கலாம்..”

“நீங்க ஏன் என்னோட வாழ்க்கையில் முன்னாடியே வரல” என்றாள் ஏக்கத்துடன்.

“புரியலை..”

“இப்படிலாம் வாழ்க்கையைப் பத்தி எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கல. நீங்க சொன்ன ரெண்டு வரில என்னால… என்னால.. எனக்கு சொல்லத் தெரியலை. ஆனா பிடிச்சிருக்கு. வாழணும்னு தோணுது. எனக்கு இப்படி வாழணும்னு நினைச்சு ரொம்ப நாளாச்சு” என்றாள் விரக்தியுடன்.

இப்பொழுது மொழியை நினைத்து உண்மையில் வருந்தினான் கீதன்.

“சாகுறதுக்கு நிறைய தைரியம் வேணும். ஆனா வாழ கொஞ்சம் ஆசையிருந்தா போதும். நம்ம உயிர் கீழ சிந்தக் கூடாது. ஏனா மில்லியன் விந்தணுக்களில் வெற்றி கொண்ட ஒரு விந்து உருவாக்கிய உயிர். அப்புறம் அம்மாவோட கர்ப்பப்பையில் என்ன கோளாறு வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம். ஆனா அதிலிருந்து தப்பிச்சு ஆரோக்கியமா பிறக்குறோம். பின் ஆயிரம் பிணிகள். காலன் நம்மை அள்ளிச் செல்லலாம். ஆனால் அவனிடமிருந்தும் தப்பிச்சிட்டோம். இப்படி வாழ ஆயிரம் முறை பிழைச்சு வந்திருக்கோம். ஆனால் நம்முடைய ஒரு தாழ்வுணர்ச்சி கொடுக்கும் தற்கொலை எண்ணம் எல்லாத்தையும் சுழியமா ஆக்கக் கூடாது. அதுக்கு நாம விடக்கூடாது. என்னைப் பொறுத்தளவு தற்கொலை ஒரு பாவம். நமக்கு நாமே இழைச்சுக்கிற பாவம்.”

இதைக் கேட்டதும் அவளின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. கைகள் நடுங்க ஆரம்பித்தது.

“என்ன ஆச்சு மொழி?”

“நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று அவள் பதற்றம் கொள்ள, அவன் அவளை அமைதிப் படுத்தினான்.

“கூல்.. கூல்… விடு.. போனது போகட்டும். இனி நடக்கப் போவதைப் பத்தி மட்டும் யோசி.”

“சரி..” என்று தலையசைத்தாள்‌.

“நான் ஒண்ணு கேட்கலாமா?”

“ம்ம்ம்.. கேளுங்க..”

“அந்த கோவிலில் சுடுதண்ணி ஊத்துவாங்க, அடிப்பாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்.”

“எந்த கோவிலில்..” என்றாள் புரியாமல்.

“ஓ.. ஞாபகம் இல்லையா… விடு.. கஷ்டபட வேண்டாம்” என்றான் புரிதலுடன்.

பின் உணவிற்கு பணத்தை செலுத்திவிட்டு இருவரும் மகிழுந்து சென்றனர். அமைதியாகவே வந்தாள் நிரண்யா.

“அந்த கோவிலுக்கு ஏற்கனவே என்னைக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. எனக்கு சரியா ஞாபகம் இல்லை” என்றாள்.

“சரி விடு..”

கீதனுக்கு ஒரு விஷயம் நிம்மதியைக் கொடுத்தது‌‌ இதுநாள் வரை கற்பனையில் உள்ள ஒரு பிம்பத்தை நம்பியவள் இன்று தன்னை நம்புகிறாள். இதுவே இரு நல்ல அறிகுறிதான். அவளை நோயிலிருந்து மீட்டெடுக்க. அவள் வார்த்தைக்கு வார்த்தை உதிர்த்த தீபன் காணாமல் போயிருந்தான்.

திகையாதே மனமே!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்