1,525 views

 

இமை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனைவியை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன். அவள் மனதில் இருக்கும் வலி புரிந்தாலும் தன்னை இப்படி நினைத்து விட்டாளே என்ற ஆதங்கமும் அதிகமாக இருந்தது அவனுக்குள்.

சிவானி மட்டுமல்ல இனி அவன் வாழ்வில் யார் வந்தாலும் அகல்யா என்னும் தேவதையிடம் அல்லவா அவன் உயிர் இருக்கிறது! அவளோடு வாழ ஆரம்பித்த பின் அவளே அவன் உலகமாகி போக, பிள்ளையின் செய்திக்கு பின் அவளுக்கு அடிமையாக இருக்கிறான்.

தூக்கம் கலையாமல் தலைமுடியை வருடி கொடுத்தவன் நெற்றியில் முத்தமிட்டு, “உன்னை விட்டு போய்டுவேனா லயா. நீ என் பக்கத்துல இருக்கும்போது எவளோ ஒருத்திய நான் எதுக்காக பார்க்கணும். அப்படி நான் பார்த்தா அது உனக்கு செய்ற துரோகம் இல்லையா. அதனாலதான் எந்த உணர்ச்சியும் காட்டாம உன் மேல மட்டும் என் பார்வைய வச்சிருந்தேன்.” என்றவனுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.

மனைவியின் நெற்றியில் சிந்திய தன்னுடைய கண்ணீர் துளிகளை அழுங்காமல் துடைத்தவன் முத்தமிட்டு பக்கத்தில் படுத்துக்கொண்டான். மனதில் அகல்யாவின் எண்ணங்கள் தான். கடந்த கால வாழ்வில் இருந்து அவளை எவ்வளவு தூரமாக கொண்டு வர முயன்றாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் மீண்டும் அங்கு செல்வதாக உணர்கிறான்.

நினைவுகளை கலைத்தாள் அகல்யா. மனைவியின் சிணுங்களில் எழுந்து கொண்டவன், “என்னடா” என பதட்டமாக விசாரிக்க, “இடுப்புக்கு மேல விட்டு விட்டு வலிக்குதுங்க.” என முகம் சுழித்தாள்.

“ஒன்னும் இல்லடா பயப்படாத. நான் ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணிட்டு அம்மாவை கூட்டிட்டு வரேன்.” என்றவன் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது பதட்டத்தில்.

கதவு வரை ஓடியவன் மீண்டும் அவசரமாக அவளிடம் வந்து, “ஒரே ஒரு நிமிஷம் மட்டும் வெயிட் பண்ணுடா.” அவளுக்கு பிரசவ வலி வந்து விட்டதாக நினைத்தவன் அவசரமாக அன்னையை அழைக்க நகர,

“என்னங்க” கணவனின் கை பிடித்தாள்.

பயத்தோடு அவள் அருகில் அமர்ந்தவன் நடுங்கிக்கொண்டு விசாரிக்க, “இது பிரசவ வலி இல்லங்க. கொஞ்சம் பெயினா இருக்கு அவ்ளோ தான். இதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க. இந்த மாதிரி நேரத்துல பயப்படக்கூடாது. ஒருவேளை எனக்கு உண்மையாவே பெயின் வந்தா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க மத்ததெல்லாம் தான நடக்கும்.” என கன்னத்தில் கை வைத்து தட்டிக் கொடுத்தாள்.

“என்னடா இவ்ளோ சாதாரணமா சொல்ற. இரு நான் அம்மாவ கூட்டிட்டு வரேன்.” அவள் சொல்வதைக் கேட்காமல் அன்னையை இழுத்து வந்தான் அவசரமாக.

மகன் கொடுத்த அதிர்ச்சியில் அவருக்கும் பயம் அதிகமாக தொற்றிக்கொள்ள மருமகளிடம் வருவதற்குள் ஒரு வழி ஆகிவிட்டார். வந்தவரிடமும் அவள் அதே பதிலை சொல்ல, “தரணி நீ கார எடு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்.” என்றார் ஆதிலட்சுமி.

கையை வயிற்று பக்கம் ஊனிக் கொண்டு படுத்ததால் இடுப்புக்கு மேல் லேசாக வலி எடுத்தது. பாசமாக விசாரித்த கணவனின் குணம் தெரியாமல் அவள் வார்த்தையை விட்டு விட… வீட்டை கலவரம் ஆகிவிட்டார்கள் காரில் ஏறுவதற்குள். இவ்விருவரும் கொடுத்த அதிர்ச்சியில் நடுங்கிய தயாளன் அகல்யாவின் அன்னைக்கு அழைத்து மருத்துவமனை வருமாறு கூறிவிட்டார். அவரோ மகனை அழைத்துக் கொண்டு அரக்கப்பறக்க ஓடினார்.

***

மருத்துவர் வருவதற்குள் உயிரை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன். மனைவியை பரிசோதித்து விட்டு வெளியில் வந்தவரை முதல் ஆளாக பிடித்துக் கொண்டவன் பதட்டம் குறையாமல் விசாரிக்க,

“குழந்தைக்கு ஒன்னும் இல்ல சார் ரொம்ப சேஃபா இருக்கு.” என்றார் குழந்தைக்காக பயப்படுகிறானோ என நினைத்து.

“குழந்தை இருக்கட்டும் டாக்டர் லயாவுக்கு எப்படி இருக்கு.” என்றதில் புன்னகைத்த மருத்துவர்,

“உங்க மனைவி குழந்தைய விட ரொம்ப ஆரோக்கியமா இருக்காங்க. ஏழாவது மாசத்துக்கு பிறகு இந்த மாதிரி அடிக்கடி வலி வரது சாதாரணம். பிரசவ வலி வர இன்னும் குறைஞ்சது ரெண்டு மாசம் இருக்கு ஒன்னும் பயப்படாதீங்க.” என்று அவன் மனதை நிம்மதி அடையச் செய்தார்.

“நான் என் லயாவ பார்க்க போலாமா.” தரணியின் முகபாவனை பார்த்து மறுக்க  செய்வாரா அவர். தலையசைத்ததும் வேகமாக ஓடினான் அறைக்குள்.

கணவன் பேசிய வார்த்தைகளை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தவள் புன்னகை முகமாக  வரவேற்க, கண்ணீர் முகமாக கட்டிக் கொண்டான் அவஸ்தை கொடுக்காத அளவிற்கு. உடல் குலுங்குவதை நிறுத்த அவள் சமாதானங்கள் செய்து கொண்டிருக்க,

“ரொம்ப பயந்துட்டேன்டி. நமக்கு இந்த ஒரு குழந்தையே போதும் இதுக்கு மேல குழந்தை வேணாம். உன்னை இந்த மாதிரி பார்க்க முடியல என்னால.” என்று முத்தம் வைக்க பிரிந்தவன் அதை கொடுத்துவிட்டு மீண்டும் கட்டிக் கொண்டான்.

“இது என்ன வம்பா இருக்குங்க. ஒருவேளை உங்க ஆசைப்படி பொண்ணு பொறந்திருச்சுன்னா என் ஆசைக்கு ஒரு பையன் வேணாமா.”

“வேணாம்”

“ஒருவேளை நான் ஆசைப்பட்ட மாதிரி பையன் பொறந்துட்டா.” அவனை தன்னிடமிருந்து பிரித்து கேலியாக கேள்வி கேட்க, “எந்த குழந்தையா இருந்தாலும் இத்தோட முடிச்சுக்கலாம். என்னால இதெல்லாம் பார்த்துட்டு சாதாரணமா இருக்க முடியல. டாக்டர் வந்து சொல்றதுக்குள்ள என்னென்னமோ யோசனை வந்துடுச்சு.” வாய் வார்த்தைகள் உடல் மொழியில் தெரிந்தது நடுங்குவதில்.

கணவன் கொடுக்கும் அன்பிற்கு பேச்சால் ஈடு கொடுக்க முடியாதவள் தன் அன்பை மொத்தமாக திரட்டி நெற்றியில் முத்தமிட்டாள். அனுபவிக்கும் நிலையில் இல்லாதவன் இன்னும் பதட்டம் குறையாமல் இருக்க, அவன் கையைப் பிடித்து வயிற்றில் வைத்தாள்.

“உங்க பிள்ளை கூட தைரியமா இருக்குங்க. யாரு குழந்தைன்னு சந்தேகமா இருக்கு எனக்கு.”

“பிறக்கப் போற குழந்தைக்கு அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் இருக்காங்க லயா. யாராது ஒருத்தர் இல்லன்னா கூட இந்த குழந்தை நல்லபடியா வளரும். நான் அப்படி இல்லயே. எனக்கு நீ வேணும்…” இருவரின் பேச்சி சத்தத்தை கேட்டும் கேட்காது போல் அறைக்குள் நின்றிருந்தார்கள் பெரியவர்கள்.

கணவன் சொல்லிய வார்த்தையில் இப்பொழுது அவள் கண்களும் கலங்க, “அழதடா” என்று கண் துடைத்து விட்டவன் நெற்றியில் முத்தமிட்டான்.

இல்லாத ஒன்றுக்கு கலவரம் நடத்தியதற்காக அகல்யா அனைவரையும் வசைபாட, நல்ல பிள்ளையாக தன் குழந்தை மீது கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தரணீஸ்வரன். அதில் தான் அவளின் கோபம் இன்னும் அதிகரிக்க,

“பாருடா குட்டி அப்பாவ எப்படி திட்டுறா. நீங்க வேகமா வெளிய வர வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.” என்று இன்னும் அவளிடம் நன்றாக வசைகளை வாங்கிக் கொண்டான்.

வந்த வேலை முடிந்து விட்டதால் கர்ப்பிணியை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள் மருத்துவமனையை விட்டு. சரியாக மருத்துவமனை வாசலில் தரணீஸ்வரன் கால் வைக்க அவனின் கையை வேகமாக ஒரு கரம் பிடித்தது. மனைவியை பாதுகாப்பாக அழைத்து வந்தவன் யோசனையில் திரும்ப, சிவானி அடிபட்ட முகத்தோடு பாவமாக நின்றிருந்தாள்.

அகல்யா மனம் தூக்கி போட, ஆதிலட்சுமி அவள் கையை வெடுக்கென்று தட்டி விட்டார். யார் என்று தெரியாததால் சுகன்யா பார்த்துக் கொண்டிருக்க, மீண்டும் தரனீஸ்வரன் கையை பற்ற சென்றாள். இந்த முறை இடம் கொடுக்காமல் அவன் நகர்ந்து விட,

“தரணி உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.” அழுகையோடு பேசினாள் சிவானி.

“லயா நடடா வீட்டுக்கு போகலாம்.” தன் எதிரில் யாரும் இல்லாதது போல் சாதாரணமாக மனைவி அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.

ஓடி சென்று அவன் காலடியில் விழுந்தவள், “தரணி ப்ளீஸ் உன்கிட்ட பேச எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. நேத்து உன்னை பார்க்க தான் வீட்டுக்கு வந்தேன். அங்க நான் பார்த்ததை என்னால நம்பவே முடியல. அந்த அதிர்ச்சியோட வெளிய வரும்போது ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. என் கூட இப்ப யாரும் இல்ல தரணி. கொஞ்ச நேரம் நான் சொல்றதை காது கொடுத்து கேளு.” என கதறி அழுதாள்.

அகல்யா தரணீஸ்வரன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, அவள் புறம் திரும்பினான். மனைவி முகத்தில் தெரியும் பதட்டத்தில் உள்ளம் வதங்கியவன் எதையும் கண்டு கொள்ளாமல் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

விடாத சிவானி ஓடி சென்று மீண்டும் அவன் காலடியில் மண்டியிட, லேசாக அகல்யாவின் காலில் இடித்து விட்டாள். வலி தாங்க முடியாதவள் முகத்தை சுளித்து சத்தமிட, மனைவிக்கு என்னமோ ஆகிவிட்டது என்று பயந்தவன் அவளை வேகமாக தள்ளி விட்டான்.

மனைவியின் காலை பிடித்தவன் அவசரமாக அவள் நலனை விசாரிக்க, அகல்யாவின் பார்வை சிவானி மீது இருந்தது. அவளோ அகல்யாவை வெறிகொண்டு முறைத்துக் கொண்டிருந்தாள். மனைவியின் பார்வையை தொடர்ந்தவன் சிவானியின் முறைப்பை கண்டுகொண்டான். வேண்டுமென்றே அகல்யாவை தள்ளி விட்டதாக நினைத்தவன் அவளை அடிக்க செல்ல, தடுத்துவிட்டாள் மனைவி.

“விடு லயா!” என்றவன் அவளை அடிப்பதில் குறியாக இருக்க… கணவனை தடுப்பதில் அவளும் குறியாக இருந்தாள்.

“அகல் அவனை எதுக்கு தடுக்குற? யார் இவ என் மகன் கிட்ட வந்து பேச.  விடு அவளை அடிச்சு கொல்லட்டும்.” என சத்தமிட்டார் ஆதிலட்சுமி.

“நான் உங்க மகனோட மனைவி.” என்ற வார்த்தையை சிவானி முடிக்கும் முன் தரணீஸ்வரனின் ஐவிரல் கடுமையான பரிசளித்தது கன்னத்தில். வலி தாங்க முடியாதவள் மயங்கி சரிந்தாள்.

அங்கு அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிலர் சிவானியை பாதுகாக்க ஓடி வர, அப்பொழுதும் தரணீஸ்வரன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒன்றும் நடக்காது போல் மனைவியை அழைத்துச் செல்ல முயன்றான்.

அவளோ சிவானியை பாவம் பார்த்து உதவி செய்ய முன் சென்றாள். மனைவியின் செயலை அறிந்தவன் கடுமையாக முறைத்து தன் பக்கம் வைத்துக் கொள்ள, “பாவங்க ப்ளீஸ்” என அவனையும் மீறி உதவி செய்தாள்.

எழுந்து கொண்டவள் அகல்யாவின் மீது கோபம் கொள்ள, சிவானின் பேச்சில் பயந்த சுகன்யா மகளை பத்திரமாக தன் பக்கத்தில் வைத்துக் கொண்டார். எழுந்தவள் தரணியை பார்த்து,

“நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. இவதான் யாரோ ஒருத்தி. நான் இல்லாத இந்த நாள்ல உன் கூட ஒட்டி இருக்கா.”  என்று கத்தினாள்.

அடிக்க பாயும் கணவனை அகல்யா தடுத்துக் கொண்டிருக்க, “யாருக்கு யாரடி மனைவி இன்னொரு தடவை என் மருமக இடத்துல பேச்சுக்கு கூட உன்னை வைக்காத. ஒழுங்கா உயிரை காப்பாத்திட்டு ஓடிப் போயிடு. அடிப்பட்டியே அப்படியே எங்கயாது செத்து இருக்க கூடாது. நீ எல்லாம் நாட்டுக்கு பாரம்.” எனக்கொந்தளித்த ஆதிலட்சுமி மகன் மருமகளை அழைத்துச் சென்றார் அங்கிருந்து.

செல்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தவள் பின் தொடர்ந்தாள்.

**””
காரை இயக்கிக் கொண்டிருந்தவன் கண்ணாடி வழியாக மனைவியின் முகத்தை ஆராய்ந்தான். அவளோ சலனமின்றி பார்வையை சாலையில் வைத்திருக்க, சுகன்யா தான் அழுது கொண்டே வந்தார் மகளின் வாழ்வை நினைத்து. மருமகன் மீதும் அவன் குடும்பத்தின் மீதும் அளவு கடந்த கோபம் எழுந்தது. காட்ட முடியாத நிலையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் சுகன்யாவை சமாதானப்படுத்த வழி தெரியாது ஆதிலட்சுமி அமைதியாக அமர்ந்திருந்தார்.

யாரைப் பற்றியும் கவலை கொள்ளாதவன் மனைவியை மட்டுமே பார்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். இறங்க கை கொடுக்கும் தரணீஸ்வரன் கையை நிராகரித்து அவளே இறங்கினாள். மனம் வலித்தாலும் பெரிது படுத்தாமல் தோள் மீது கை போட்டுக்கொண்டு அழைத்துச் சென்றான் அறைக்கு.

இருவரும் எதையும் பேசிக்கொள்ளாமல் படுத்திருந்தனர். இருவரின் எண்ணங்களும் வெவ்வேறு இடத்தில் பயணப்பட்டாலும் கடைசியில் சிவானியிடம் நின்றது. மனதில் இருப்பது பயமா வருத்தமா என்று தெரியாமல் குழம்பி போனவள் தூங்கிப் போனாள். தூங்காமல் விடியலை சந்தித்தான் தரணீஸ்வரன்.

நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் கல் அடி பட்டது. மூன்று நாட்கள் ஆன பின்னும்  முகம் கொடுத்து கணவனை பார்ப்பதை தவிர்த்தாள் அகல்யா. தவறு செய்யாமல் தண்டனை அனுபவிப்பதாக உணர்ந்தவன் மனைவியின் மனம் சரியாகும் வரை தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

என்ன மனநிலையில் இருக்கிறோம் என்பதை யூகிக்க முடியவில்லை அகல்யாவால். அவளுக்குள் ஏற்பட்ட பயம் இன்று கண் முன்னால் நிற்க, அவள் சொன்ன மனைவி என்ற வார்த்தை ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது காதில். அவள் மனைவி என்றால் தான் யார் என்ற கேள்வி அவசியம் அற்றது என்றாலும் மனம் தேவைப்படுகிறது என்று ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

மருமகளின் வாடிய முகத்தை உணர்ந்த ஆதிலட்சுமி அவரிடம் பேச்சுக் கொடுக்க முடியல, இடம் கொடுக்காமல் தவிர்த்தாள். இனிவரும் காலம் என்ன நடக்குமோ என்ற பயத்தோடு அவரும் நான்காவது நாளை சந்திக்க கதவை திறந்தார். சூரியனுக்கு பதில் தரிசனம் கொடுத்தாள் சிவானி.

அவளைப் பார்த்ததும் ஆத்திரத்தில் கத்த ஆரம்பித்த ஆதிலட்சுமியின் சத்தத்தில் அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். அகல்யாவின் முகம் எதையோ இழந்தது போல் கணவனை பார்க்க, அவனோ மனைவியின் கை பிடித்துக் கொண்டு சொல்லாமல் சொன்னான் நான் உன்னுடையவன் என்று.

“நீ எதுக்கு டி என் வீட்டுக்கு வந்த மரியாதையா வெளிய போ.”

“நான் உங்ககிட்ட ஒன்னும் பேச வரலை.” என வீட்டிற்குள் செல்ல முயன்றாள்.

பிடித்து வேகமாக வெளியில் தள்ளினார் ஆதிலட்சுமி. விழுந்த வேகத்தில் இடுப்பு ஒரு பக்கமாக பிடித்துக் கொள்ள, “நான் பேச வந்தது தரணி கிட்ட எங்களுக்கு நடுவுல நீங்க யாரு.” என்று சண்டையிட்டாள்.

“என் மகன் பேர இன்னொரு தடவை சொன்ன நாக்க அறுத்துடுவேன். உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இன்னொரு தடவை என் வீட்டு வாசலுக்கு வந்தின்னா பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன் விளக்குமாத்த எடுத்து மந்திருச்சு விட்டுடுவேன்.”

“தரணி அவங்க அவ்ளோ பேசுறாங்க கேட்டுட்டு சும்மா இருக்க. என்னை காதலிச்சதை மறந்துட்டியா.” என்றதும் அகல்யாவின் கை அவன் கையில் இருந்து பிரிய பார்த்தது.

விடாமல் தனக்குள் வைத்துக் கொண்டவன், “என் வாழ்க்கையில திரும்ப உன்னை சந்திக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, என் வீட்டு வாசல்ல நின்னு என் எண்ணத்தை பொய்யாக்குவன்னு நினைக்கல. எங்க அம்மா அடிச்சு விரட்டுறதுக்கு முன்னாடி நீயே போயிடு. இல்லன்னா என் கையால இதே இடத்துல செத்துடுவ.” கோபம் இல்லாது அழுத்தமாக பேசினான்.

“நான் பண்ணதெல்லாம் தப்புன்னு இப்போ நல்லா புரிஞ்சுகிட்டேன். எனக்கு பேச ஒரு வாய்ப்பு கொடு நான் எதுக்காக அந்த மாதிரி பண்ணன்னு காரணத்தை சொல்றேன்.”

“ச்சீ! அசிங்கமா இல்லையா உனக்கு இந்த மாதிரி பேச. முதல்ல யாருடி நீ எனக்கு? உன்கிட்ட எதுக்காக நான் பேசணும். என் மனைவி இதோ!” என்றவன் அகல்யாவை தனக்குள் வைத்துக்கொண்டு,

“இவ என்னோட மனைவி இவ மட்டும் தான் என்னைக்கும் என்னோட மனைவி. என் மனைவி சந்தோஷத்துக்காக பொறுமையா இருக்கேன் சோதிச்சு பார்க்காம கிளம்பிடு.” என்றவன் வார்த்தையில் சிவானி நகராமல் இருக்க, அகல்யா நகர பார்த்தாள்.

விடாமல் தன் உள்ளங்கையில் பிடித்துக் கொண்டான் மனைவியின் கையை. அதை கவனித்த சிவானி அகல்யாவை உஷ்ணத்தோட முறைக்க, ஓங்கி கன்னத்தில் அடித்தார் ஆதிலட்சுமி. “என்ன தைரியம் இருந்தா என் முன்னாடி என் மருமகள முறைப்ப. உன்னை எல்லாம் இவ்ளோ நேரம் பேச விட்டதே தப்பு.” என்றவர் அவளை இழுத்து வெளியில் தள்ள முயன்றார்.

“தரணி நான் பேச ஒரே ஒரு வாய்ப்பு கொடு எதுக்காக வந்து இருக்கன்னு அப்புறம் தெரியும்.”

“ஒரு இதுவும்… தெரிய வேணாம் போடி.” இரக்கம் பார்க்காமல் தள்ளிவிட்டார் ஆதிலட்சுமி.

விழுந்தாலும் விழாதது போல் உடனே எழுந்து நின்றவள், “நான் எதுக்காக போகணும் இது என் வீடு.” என்று சட்டம் பேச, தரணீஷ்வரன் அடிக்கப் பாய்ந்தான்.

கணவனை தடுத்து வைத்துக் கொண்டாள் அகல்யா.
“வா தரணி, வந்து என்னை நல்ல அடி. உனக்கு பண்ண துரோகத்துக்கு எவ்ளோ அடி கொடுத்தாலும் வாங்கிக்கிறேன். ஆனா நான் சொல்ல வரத கொஞ்சம் காது கொடுத்து கேளு.”

“ஏய் வெளியே போ!” என்று விட்டான் மதிக்காமல்.

“நான் மட்டும் வெளிய போகணுமா இல்ல உன் குழந்தையும் வெளிய போகணுமா.” என்ற வார்த்தையில் அனைவரும் ஸ்தம்பித்தனர்.

தனக்கான வாய்ப்பாக எண்ணியவள், “உனக்கும் எனக்கும் பிறந்த குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு தரணி. நான் பண்ண தப்புக்காக நம்ம பையன எதுக்காக தண்டிக்கிற. அவன் அப்பா இல்லாம ரொம்ப தவிச்சு போயிருக்கான் தயவு செஞ்சு நம்ம மகனுக்காக கொஞ்சம் யோசி.” என்றாள் அனைவரின் காதிற்கும் உரக்க தன் ஒலி போகுமாறு.

“இது என்னடி புது ட்ராமா. உன் பேச்சை எல்லாம் கேட்டு அவன் நாசமா போனது போதும். இனிமே எதையும் அவன் கேட்க மாட்டான் கிளம்பு.” சிவானியை விரட்டுவதில் குறியாக இருந்தார் ஆதிலட்சுமி.

“தரணி என் மேல இருக்க கோவத்துல நம்ம பையனை தண்டிக்காத. அவன் உனக்காக வாசல்ல காத்துட்டு இருக்கான்.” என்றதும் பொறுமை இழந்த ஆதிலட்சுமி  வெளி கதவு பக்கம் இழுத்துச் சென்றார்.

தன்னை நிச்சயம் தள்ளிவிடப் போகிறார் என்பதை உணர்த்த சிவானி, “கௌஷிக்” என வேகமாக கத்த… குழந்தை ஒன்று வந்து நின்றது வாசலில்.

அதைப் பார்த்ததும் ஆதிலட்சுமி கை நின்றுவிட, மனைவியை பிடித்துக் கொண்டிருந்த தரணீஸ்வரன் கை விலகியது. கண்ணில் நீரோடு தன்னை விட்ட கையை பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா.

நடப்பது ஒன்றும் புரியாமல் வந்த பச்ச குழந்தை அழ ஆரம்பித்தது சிவானியை பார்த்து. ஓடிச்சென்று அணைத்துக் கொண்டவள், “அழாத கௌஷிக் அம்மா இருக்கேன்.” என்று சமாதானம் செய்தவள், “அங்க பாரு உங்க அப்பா இருக்காரு. அப்பா கிட்ட போங்க.” என்று கை காட்டினாள்.

குழந்தை தரணீஸ்வரனை திரும்பிப் பார்க்க, அவனும் கௌஷிக்கை பார்த்தான். கூடவே அங்கிருக்கும் அனைவரும் குழந்தையை பார்க்க, அதுவோ அஞ்சி சிவானியோடு சேர்ந்து நின்றது. யாருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அப்படியே சிலையாக நின்றிருக்க,

“நான் தப்பு பண்ணது உண்மைதான் தரணி இல்லன்னு சொல்லல. ஆனா, இது உன்னோட குழந்தை. கடவுள் மேல சத்தியமா உனக்கும் எனக்கும் பிறந்த குழந்தை. இந்த குழந்தை இருக்கிற விஷயமே உன்னை விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியும். முதல்ல அழிக்க தான் முடிவு பண்ணேன். ஆனா குழந்தையோட ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்ததுக்கு அப்புறம் மனசு வரல.

இதையே காரணமா வச்சு சூர்யா என்னை விட்டுட்டு போயிட்டான். திரும்ப உன்கிட்ட வர தைரியம் இல்லாம உன் மகனை வளர்க்க ஆரம்பிச்சேன். நான் செஞ்ச பாவத்தால குழந்தைக்கு பேச வரல. என்ன பண்றதுன்னு தெரியாம  உதவி கேட்கலாம்னு உன் வீட்டுக்கு அன்னைக்கு வந்தேன்.” என்ற பெரும் இடியை தொப்பென்று போட்டாள் அந்த வீட்டில்.

“நம்ம குழந்தைய எப்படியாது காப்பாத்து தரணி. டாக்டர் பேசுறது ரொம்ப கஷ்டம்னு சொல்லி இருக்காங்க. என் மேல உள்ள கோபத்துல நம்ம குழந்தைய தண்டிக்காத. இவன்தான் உனக்கு முதல் மகன்.” என்றவள் கௌஷிக்கை அழைத்துக் கொண்டு தரணியின் முன்பு நின்றாள்.

சிவானி கொடுத்த அதிர்விலிருந்து மீளாதவன் கையில் கௌஷிக்கின் கையை வைத்தாள். குழந்தை பயந்து கொண்டு சிவானிடம் வர, “அப்பாடா செல்லம் பயப்படக்கூடாது.” என்று மீண்டும் அவன் கைக்குள் வைத்தாள்.

குழந்தை கௌஷிக் தன்னை சுற்றி நடப்பது புரியாமல் பேந்த முழிக்க ஆரம்பித்தது. அதை கவனிக்கும் நிலையில் இல்லாத தரணீஸ்வரன் இன்னும் உணர்வு பெறாமல் இருக்க, சிவானி செய்த வேலையால் குழந்தை சத்தமிட்டு அழுதது.

அந்த ஓசையில் உயிர் பெற்றவன் தன் கால் முட்டி உயரம் இருக்கும் குழந்தையை குனிந்து பார்க்க, “உன்ன பார்த்ததும் நம்ம குழந்தை எப்படி அழுயுறான் பாரு தரணி. அவன் உடம்பு முடியாத குழந்தை கஷ்டப்படுத்தாம தூக்கு.” என்று அவனை மூளை சலவை செய்ய ஆரம்பித்தாள் சிவானி.

ஆதிலட்சுமி தயாளன் இருவரும் அதிர்விலிருந்து மீளாமல் மகனைப் பார்த்துக் கொண்டிருக்க, கௌஷிக்கை பார்த்துக் கொண்டிருந்த தரணியின் விழிகளில் நீர் ஊற ஆரம்பித்தது. கணவனின் செய்கைகளைப் பார்த்த அகல்யா உள்ளம் உடைந்து அழுத்தத்தில் மயங்கி சரிந்தாள்.

பார்க்கும் நிலையில் யாரும் இல்லாததால் அவள் தரையில் விழ, அதன் ஓசையில் திரும்பியவன் பதறி விட்டான். தடதடக்கும் ஓசையோடு மனைவியை தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன் எழுப்ப முயன்றான். மகனுக்கு பின் நினைவு திரும்பிய ஆதிலட்சுமி தண்ணீர் தெளித்து மருமகளை கண் முழிக்க வைத்தார்.

கணவன் மடிமீது இருப்பதை அருவருப்பாக பார்த்தவள் உடனே எழுந்து கொண்டாள். அகல்யாவின் செய்கையில் புருவம் இரண்டு முடிச்சிட, “லயா” என தொட சென்றான்.

அவனுக்கு இடம் கொடுக்காமல் எழுந்து நின்றவள் வேகமாக தன் அறைக்கு ஓடினாள். மனைவியின் வேகத்தை கண்டு பதறியவன் பின்னால் ஓட, வீட்டில் பெரியவர்களும் அவர்களை பின் தொடர்ந்தார்கள். தனியாக விடப்பட்ட சிவானி மகன் கௌஷிக்கை சோபாவில் அமர வைத்துவிட்டு நடப்பதை கவனிக்க மேலே சென்றாள்.

உள்ளே வந்த அகல்யா அவன் வருவதற்குள் தாழிட முயற்சிக்க, வாய்ப்பு கொடுக்காமல் வேகமாக உள்ளே வந்தான் தரணீஸ்வரன். மனைவியை தொட அவன் முயற்சிக்க,

“தொடாத என்னை” என்று வீடே அதிரும்படி கத்தினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
51
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *