455 views
அத்தியாயம் 23
படம் முடிந்து வெளியே வந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே வீட்டிற்குச் சென்றனர்.
“அக்கா…! படம் சூப்பரா இருந்துச்சுல்ல?” என்று பேசிக் கொண்டே வந்தாள்.
“ஆமா சுபா. நல்லா இருந்துச்சு”
கோயிலுக்குப் போய் விட்டு, வீடு திரும்பிய சிவசங்கரி மகள்கள் வந்ததும் குடிப்பதற்கு ஏதுவாக தேநீர் தயாரிக்க நினைத்தார்.
அதற்கான வேலையில் இறங்கும் போது இருவரும் உள்ளே வந்தார்கள்.
தேநீரின் மணம் அவர்களை வரவேற்றது.
அந்த மணமே அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்தது.
ஆனால் சுபாஷினி,” எனக்கு மட்டும் பூஸ்ட் போட்டுக் குடுங்க அம்மா” என்று அவரிடம் வந்தாள்.
இளந்தளிர் அங்கே நின்று தாய்க்கு உதவி செய்தவாறே தங்கையின் குறும்பை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“டீ போட்டுட்டேன் சுபா.இதைக் குடி நைட் பூஸ்ட் போட்டுத் தர்றேன்” என்று அவளிடம் சொல்ல,
” சரிங்க அம்மா” என்று தேநீரை எடுத்துப் பருகினாள்.
“இன்னைக்குத் தியேட்டருக்குக் கோவர்த்தனனும் வந்திருந்தார் அம்மா. சுபா அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டா” என்று தெரிவித்தாள் இளந்தளிர்.
“ஓஹோ…! இனிமே நீ இதை நினைச்சுக் கவலைப்பட மாட்டியே…! அதுவே போதும் சுபா” என்று சொன்னதோடு அவ்விஷயத்தை விட்டு விட்டார்.
‘அவனும் தியேட்டருக்கு வருவது எனக்குத் தெரியும், சுமதி சொன்னார் என்று ஒரு வார்த்தைக் கூட அவரிடமிருந்து வெளிப்படவில்லை’
“அக்கா இந்தா” என்று அவளுக்கான கோப்பையை நீட்டிய சுபாஷினி பாடல் பாடிக் கொண்டே அறைக்குச் சென்று மறைந்தாள்.
கோப்பையைக் காலி செய்து விட்டு,
அவளும் அறைக்குள் வர,
“இப்போ தான் நிம்மதியாக இருக்கு அக்கா. இனிமே இந்த சுபாஷினி எதுக்கும் கவலைப்பட மாட்டா” சிரித்துக் கெண்டே அவளிடம் கூறினாள்.
அதைக் கேட்டு முறுவலித்தாள் இளந்தளிர்.
🌸🌸🌸🌸
கோவர்த்தனனிடம்,”அடுத்த தடவை ரோகினியையும் கோயிலுக்குக் கூப்பிட்டுப் போகனும் ப்பா “என்றார் சுமதி.
” ம்ம்… மூனு பேரும் போய்ட்டு வாங்க அம்மா” என்று சிரித்தான் மகன்.
“ஆமாம் கோவர்த்தனா. எனக்குமே மனசு லேசா இருக்கு.அதுவும் சிவசங்கரி கிட்ட பேசினா ரொம்பவே ஆறுதலாகவும் இருக்கு. இளந்தளிரோட அப்பாவும் இறந்துட்டாரே. அவரைப் பத்தி சொல்லிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும் படிப்பில் படு புத்திசாலிகள் என்று சொன்னாங்க”
பேச்சுவாக்கில் மகனிடம் இதைச் சொல்லிக் கொண்டிருந்தவர்,
“ரொம்ப வருஷம் கழிச்சு இப்படி ஒரு நட்பு கிடைச்சிருக்கு ப்பா.”
நெகிழ்ந்து போனவர் மகனைப் பார்த்துப் புன்னகை செய்ய,
“எனக்கும் உங்க நட்பு பிடிச்சிருக்கு அம்மா” என்றான்.
அதன் பிறகு வந்த நாளில் , அடுத்த முறை ரோகினியையும் அழைத்துச் செல்வதைப் பற்றி மூவரும் கூட்டுத் தொலைபேசி அழைப்பில் பேசினர்.
“அடுத்த முறை எந்தக் கோயிலுக்குப் போகலாம்?” – சிவசங்கரி.
“ரோகினி கிட்ட கேட்போம் சிவா. அவங்க இந்த முறை வர்றாங்கல்ல. சோ அவங்களே சொல்லட்டும்” – சுமதி.
” சிவன் கோயிலுக்குப் போகலாம் அக்கா” என்றார் ரோகினி.
“பிரதோஷம் வேற வருது. சோ போகலாம் ம்மா” – சிவசங்கரி.
ரோகினி ,”பிரதோஷம் நாள் பாத்துட்டுப் பக்கத்தில் இருக்கிற சிவன் கோயிலுக்குப் போய்ட்டு வரலாம் அக்கா”.
“விசேஷ நாள் ஆச்சே… ! அப்படியே செய்வோம் ரோகினி. நீ என்ன சொல்ற சிவா?” என்று கேட்டார் சுமதி.
“நானும் பிள்ளைங்களைக் கூப்பிட்டு வர்றேன் சுமதி”
பிள்ளைகளின் படிப்பு விஷயம் பற்றிப் பேசியவர்கள்,
“என் சின்ன மகளுக்கும், உங்கப் பொண்ணு மைதிலிக்கும் ஒரே வயது தான் போல?” என்று ரோகினியிடம் கேட்டார் சிவசங்கரி.
“ஆமாங்க.அப்படின்னா கோயில்ல நச்சுப் பேசும் போது ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிடுவாங்க”
“நல்லது தானே ங்க ரோகினி”
இவ்வாறாக தாங்கள் பேசிக் கொள்ள நேரம் போதாது என்பதைப் போல் மூவரும் மனம் விட்டு மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்க்கவும் அவர்களது பிள்ளைகளுக்குமே மனம் நிறைந்தது.
ஹரீஷ் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் தான் தன் அன்னைப் பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்கிறானே…!
“அப்போ வர்ற பிரதோஷம் நாள் நம்ம எல்லாரும் மீட் பண்ணப் போறோமா? சூப்பரு”
அந்த நாளை வெகுவாக எதிர்பார்த்திருந்தது என்னவோ ஹரீஷ் தான்.
🌸🌸🌸🌸
பிரதோஷம், நல்ல நாள், குடும்பம் மொத்தமும் கோயிலுக்குப் போனால் நல்லது என்று மகள்களிடம் சொன்னார் சிவசங்கரி.
“நாங்களும் வந்தே ஆகனுமா அம்மா?” – சுபாஷினி.
“வந்தே ஆகனும் தான் சுபா. ஏன் அந்த நாளில் எதாவது எக்ஸாம் இருக்கா?”
“இல்லை அம்மா. லீவ் போடனுமா?” என்று கேட்டாள்.
“சாயந்தரம் தான் பிரதோஷ வழிபாடு நீ காலேஜ் போய்ட்டு வந்த பிறகு தான் போகிற மாதிரி இருக்கும்”
“இளா…! நீயும் கண்டிப்பாக வரனும்.” என்று தாய் சொல்லிட,
” வர்றேன் அம்மா” என்று ஒப்புக் கொண்டாள்.
அங்கே தாயின் தோழிகள் மட்டுமல்லாமல் அவர்களது புத்திரர்களும், மகளும் வருவார்களே… !
“ஹர்ஷோட சிஸ்டருக்கு சுபாவோட ஏஜ் தான்.அவங்க நல்லா பழகுவாங்க.இந்த கோவர்த்தனனும், ஹரீஷூம் நம்மளோட விரோதிகள் ஆச்சே…!” என்று அவள் சிந்தித்தாள்.
அவளைப் பொறுத்தவரை அவர்களிருவரும் விரோதிகள் தான்…! ஏனென்றால் அன்று திரையரங்கில் வைத்தே கோவர்த்தனன் தன்னை ஜென்ம விரோதி போல பார்த்துக் கொண்டு இருந்தானே! அதை இவளும் தான் கண்டாளே…!
அவனது உணர்ச்சியற்ற பார்வை இவளுக்குமே அப்படித் தான் தோன்றினாலும் அவளைக் குற்றவாளி போல உணர வைத்ததால், இளந்தளிருக்கு கோவர்த்தனன் மீது சினம் தான் ஏற்பட்டது.
‘கோயிலுக்கு வரட்டும்.பேசிக்கிறேன்’ என்று கருவிக் கொண்டாள்.
🌸🌸🌸
“நீயும், ஹரீஷூம் அடிக்கடி கோயிலுக்குப் போவீங்க தான? இந்த தடவை எல்லாரும் ஒன்றாகப் போகலாம் கோவர்த்தனா” என்று அவர் கூறிட,
தாய் சொல்லைத் தட்ட விரும்பாமல்,
” சரிங்க அம்மா” என்று கூறிவிட்டு, நண்பனுக்குக் கால் செய்தான்.
” டேய் காட்டுத்தீ… ! “
“நண்பா.. அங்கேயும் அம்மா சொல்லிட்டாங்களா..! இங்க என்கிட்ட சொல்லி முடிச்சு மைதிலி கிட்ட சொல்லிட்டு இருக்காங்க.அவளும் வந்துருவா தான்.”
“ம்ம்.. நாம ப்ளான் பண்ணினதை விட நம்மைப் பெத்தவங்களோட ப்ளானிங் செம்மயா இருக்குல்லடா” என்றான் கோவர்த்தனன்.
“ஆமா.அதுவும் இளந்தளிர் சிஸ்டர் ஃபேமிலி வருவாங்க.அவங்க வேற செம்ம ஜாலி டைப்” என்று வம்பிழுத்தான் ஹரீஷ்.
“ஜாலி டைப்…! ம்ம்.. காட்டுத்தீ… ஃபர்ஸ்ட் தீயாய் முறைக்கிற அந்தக் கண்ணுல விழுந்துப் பொசுங்காம இருக்கியா என்று பார்ப்போம். அப்பறம் ஜாலி பிஹேவியரைப் பற்றி யோசிப்போம்”
“யோசிப்போம் நண்பா” என்று பயந்த குரலில் கூறினான்.
அவனுக்குப் பின்புறம் இருந்த ரோகினி மற்றும் மைதிலியின் உரையாடல் இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
“வர்றேன் ம்மா. ஆனா ஒரு கண்டிஷன் இந்தக் குரங்கு அங்க வந்து எல்லார் முன்னாடியும் கிண்டல் பண்ணக் கூடாது” என்று ஹரீஷ்ஷைக் காட்டிக் கூறினாள் மைதிலி.
“ஹாஹா…!” அதைக் கேட்டு சிரித்தே விட்டான் கோவர்த்தனன்.
அவள் குரங்கு என்றது ஹரீஷிற்குக் கோபத்தை ஏற்படுத்தியது எனவே,
” நிச்சயமாக உன்னைக் கலாய்ப்பேன் கொரில்லா.” என்று சபதம் செய்தான்.
“அம்மா… ” மைதிலி கோபித்துக் கொள்ள,
“ப்ச்…டேய் நீ ஃபோன் தான பேசுற? இங்க என்னப் பேச்சு? அதைக் கண்டினியூ பண்ணு.” மகனுடைய தலையில் கொட்டி அனுப்பி வைத்தவர்,
மகளிடம், “அவன் கிண்டல் பண்ணினா நீயும் சரிக்குச் சமமாகப் பேசுற தான? ஒழுங்கா கோயிலுக்கு வந்துரு” என்று சொல்லி விட்டுப் போனார்.
இன்னும் நண்பன் சிரித்துக் கொண்டு இருப்பது ஹரீஷூக்குப் புன்னகை வரவழைத்தாலும், போலியான கோபத்துடன்,
“என்ன நண்பா இப்படி நீயே என்னக் கிண்டல் செய்ததைக் கேட்டு சிரிக்கிற?” என்று கேட்டான்.
“தங்கச்சி தான… விட்றா.”
அவனைச் சமாதானம் செய்தவன் மேற்கொண்டு பேசினான்.
🌸🌸🌸🌸
கோயிலுக்குச் செல்லும் நாளும் வர, மூன்று குடும்பங்களும் கிளம்புவதற்கே அமர்க்களம் செய்தனர்.
“சேலையா? சுடிதாரா?” இளந்தளிருக்குக் குழப்பம் ஏற்பட்டது.
” அக்கா.. இந்தச் சுடிதார் போடு. உனக்கு சூப்பரா இருக்கும்” என்று அவள் முன்னிருந்தச் சுரிதாரைக் காட்டினாள்.
அவள் எடுத்துக் கொடுத்ததாலோ, என்னவோ சுரிதாரையே அணிந்துக் கொள்ள விரும்பினாள்.
சுபாஷினியும் தனக்குப் பிடித்தமான நிறத்தில் இருக்கும் சுரிதார் ஒன்றை அணிந்து கொள்ள, அதற்குப் பிறகு தனக்கும், தமக்கைக்கும் ஏற்றவாறு அணிகலன்களைத் தேட ஆரம்பித்தாள்.
சிவசங்கரி,” சுபா.. இன்னுமா தேடிக்கிட்டு இருக்க? சீக்கிரம் வாங்க. லேட் ஆகப் போகுது” தாய் அழைத்ததும்,
“இதெல்லாம் வேண்டாம் சுபா. ஒரு செயின் மட்டும் போட்டுட்டுப் போகலாம்” என்று அவசர அவசரமாக தன்னுடைய செயினை அணிந்து, தங்கைக்கும் ஒரு செயினை கழுத்தில் மாட்டி விட்டாள்.
“வந்துட்டோம் ம்மா” இவர்கள் கிளம்பி விட,
🌸🌸🌸
“குரங்கு..” சத்தமாகக் கத்தினாள் மைதிலி.
” நீ தான் கொரில்லா.ஸ்பெக்ஸைப் போடு” என்று திட்டினாலும் அவளது கண் கண்ணாடியை எடுத்துக் கண்களில் போட்டு விட்டான்.
“ப்ச்… ஏய் குரங்கு, கொரில்லா வாங்க” என்று ரோகினி கோபமாக அழைக்கவும் கப்சிப் என்று சென்றனர் இருவரும்.
” அப்பா வரலையா ம்மா?” – மைதிலி.
ரோகினி,” அவர் வீட்டுக்கு வரவே நைட் ஆகிடும். சோ நாம மட்டும் தான் போறோம்”
🌸🌸🌸
கோவர்த்தனன்,
“ஆட்டோ வந்தாச்சு அம்மா.வாங்க” என்றவன் சுமதி ஏறி அமர்ந்ததும்,
தானும் ஏறிக் கொண்டான்.
மூன்று குடும்பங்களும் கோயிலில் வந்திறங்கினர்.
தாய்மார்கள் மூவரும் தங்களது தோழிகள் பார்த்ததும் புன்னகைத்துக் கொள்ள, தன் வயதையொத்த மைதிலியைப் பார்த்ததும் தோழமையுடன் முறுவல் செய்தாள் சுபாஷினி.
கோவர்த்தனன் தனது மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, இளந்தளிரைப் பார்க்க, அவளோ இவனைப் பார்த்து முறைத்தாள்.
இவர்களைப் பார்த்துப் பதறிய ஹரீஷ்,
நாம அப்படியே ஒதுங்கி விட வேண்டியது தான்” என்று தனது அம்மாவுடனும் மற்ற இருவருடனும் சேர்ந்து கொண்டான்.
“காட்டுத்தீ” அடிக்குரலில் திட்டினான்.
அதற்குள் மூவரும் தம் மக்களைப் அறிமுகம் செய்து வைத்தனர்.
சுமதி, “கோவர்த்தனனைப் பற்றி உனக்கு ஏற்கனவே தெரியுமே சிவா. இளந்தளிரைப் பற்றியும், சுபாவைப் பற்றியும் எனக்குத் தெரியும்.அதனால் நமக்கு அறிமுகம் தேவைப்படாது. ரோகினி தான் அவளோட பிள்ளைங்களை அறிமுகம் செய்து வைக்கனும்” எனவும்,
” இவன் தான் என்னோட மூத்த மகன் ஹரீஷ், படிச்சிட்டு கோவர்த்தனன் கூட வேலைப் பார்க்கிறான். இவ என்னோட மகள் மைதிலி, கம்ப்யூட்டர் சயின்ஸ் செகண்ட் இயர் படிக்கிறா” என்று கூறவும்,
“நானும் செகண்ட் இயர் தான் படிக்கிறேன்” என்று சுபாஷினி குதூகலமாக கூற,
” சூப்பர்..” என்று ஹை ஃபைவ் கொடுத்துக் கொண்டனர்.
பெரியவர்களிடம் பிள்ளைகள் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தனர்.
இதில் கோவர்த்தனன் மற்றும் இளந்தளிர் இருவருக்கும் சங்கடம் நேரக் கூடாது என்று அவர்களது அறிமுகங்கள் தாய்மார்களால் சாமர்த்தியமாக தவிர்க்கப்பட்டது.
அதேபோல், சுமதி மலர்ந்த முகமாகவே தன்னைப் பார்த்துப் பேசவும், இளந்தளிருக்கு அவரிடம் பேசாமல் ஒதுங்கிப் போகத் தோன்றவில்லை. அவரோடு சகஜமாகப் பழகினாள்.
ஆனால் பெண்ணவளின் கோபம் கொப்பளிக்கும் விழிகளைக் கோவர்த்தனன் ஏறிட நேர்ந்தது.
சுபாஷினியும் , மைதிலியும் தாய்மார்கள் அருகில் அமர்ந்து கொள்ள,
இளந்தளிர், “ஹாய் மைதிலி…!” என்று ஹரீஷின் தங்கையிடம் பேச ஆரம்பித்து விட்டாள்.
அதை விழி பிதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரீஷ்.
நண்பனிடம்,”மைதிலி கிட்ட மட்டும் இளந்தளிர் என்னைப் பற்றி எதாவது உண்மையை சொல்லிட்டாங்க – ன்னா என் நிலைமை என்ன ஆகும் கோவர்த்தனா?” என்று நடுங்கினான்.
“கஷ்டம் தான்” என்றான் இவன் அலட்டிக் கொள்ளாமல்.
பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் முடிந்து, கடவுளுக்கு அபிஷேகம் நடக்க ஆரம்பிக்கவும் இவர்கள் அமைதியாக சாமி கும்பிட்டனர்.
மூன்று குடும்பங்களும் தங்களது வேண்டுதல்களைத் தவறாமல், சிவபெருமானிடம் சேர்த்து விட்டு, பக்தியுடன் கோயிலிலிருந்து வெளியேறினர்.
அன்னையர்கள் தங்களுக்குள் விடைபெற்றுக் கொள்ளும் சாக்கில் ஓரிரு நிமிடங்கள் பேசிக் கொண்டு இருக்க, இளைய பெண்களே தங்களது கல்லூரியில் நேர்ந்த கலாட்டாக்களைப் பேசிச் சிரித்தனர்.
எஞ்சியது என்னவோ, இளந்தளிர், கோவர்த்தனன் மற்றும் ஹரீஷ் மட்டுமே.
கோவில் என்பதால் முறைப்பிலேயே தன் கண்டனத்தைக் காட்டிக் கொண்டிருந்த இளந்தளிரோ ‘ எப்போது இவனை வாய் விட்டு, முகத்திற்கு நேராகத் திட்டுவோம்?’ என்று கோவர்த்தனனைப் பஸ்பமாக்கும் முயற்சியில் இருந்தாள்.
கோவர்த்தனன்,”தளிர்…! கோயிலுக்குள்ளப் பேச நேரம் கிடைக்கல. வெளியே வந்துட்டோமே இப்போ பேசலாமா?” என்று கேட்டு குறும்பாகச் சிரிக்க,
‘அப்படி என்னப் பேசி விடப் போகிறான்?’என்று நினைத்தது இவள் மனம்.
ஹரீஷோ, ” நீங்கப் பேசுங்கள்” அலைபேசியில் எவருடனோ உரையாடக் கிளம்பி விட்டான்.
“ஆங்… என்னை முறைச்சுட்டே இருக்கீங்களே, எதனால்?”
“ம்ம்… அதென்ன எப்போ பார்த்தாலும் என்னைக் குற்றவாளி மாதிரியே பார்க்கிறீங்க? பிடிக்கல என்று சொன்னது ரொம்ப பெரியத் தப்பா?” என்று கேட்டாள்.
“நான் உங்களைக் குற்றவாளியாகவும் பார்க்கல, பிடிக்கல என்று சொல்றதும் தப்பு இல்லங்க. ஆனால் உங்களுக்கு என்னைப் பிடிச்சு இருந்தும் ஏன் பிடிக்கல என்று சொன்னீங்க என்று தான் எனக்குக் கஷ்டமாக இருந்துச்சு? ”
“என்னென்னவோ சொல்லாதீங்க மிஸ்டர். கோவர்த்தனன். நான் உண்மையைத் தான் சொல்லி ரிஜக்ட் செய்தேன்” என்று காட்டமாக கூற,
“பொய்…! நீங்க ஏன் பிடிக்கல என்று சொன்னீங்க என்பதற்குப் பதில் உங்ககிட்டயே இருக்கு” என்று சொன்னவன்,
” பாய் ஸ்வீட் பெப்பர்…!” என்று ரசித்துக் கூறி விட்டு அவளை விட்டு விலகித் தாயிடம் சென்றான்.
தாங்கள் பேசிக் கொண்டு இருந்த நேரம் கோவர்த்தனன் மற்றும் இளந்தளிர் பேசுவதையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர் சிவசங்கரி, சுமதி மற்றும் ரோகினி.
‘ஏதாவது நல்லது நிகழ்ந்தால் சரி’ என்று முடிவெடுத்தவர்கள் பிள்ளைகளுடன் வீடு போய்ச் சேர்ந்தனர்.
இளந்தளிருக்கு அவன் சொன்ன ‘ஸ்வீட் பெப்பர்’ மட்டும் தலைக்குள் புகுந்து அவளை ஆட்டுவித்தது.
- தொடரும்