533 views
இறுதி அத்தியாயம்
“நேத்து தான் இவங்க சண்டை போட்டாங்க! இப்போ என்னடான்னா சமாதானம் ஆகி வந்துட்டாங்க!” என்று கீழிறங்கி வந்த அதிரூபா மற்றும் பிரித்வியைப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர் மகேஸ்வரனும், லயாவும்.
“ஆமாம் ப்பா! இவங்களை நம்பவே கூடாது!” என்று அவளும் சலித்துக் கொண்டாள்.
தந்தை, மகள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சகுந்தலா மட்டும் அதிரூபா மற்றும் பிரித்வியைக் கண்களால் ஆராய்ந்தார்.
மருமகளின் வதனமோ செவ்வானம் ஆக சிவந்து இருந்தது என்றால், மகனோ பூரிப்பாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவர்களை எதுவுமே கேட்காமல்,”உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று அமரச் சொன்னார் சகுந்தலா.
தங்களைக் குறுகுறுவெனறு பார்த்துக் கொண்டு இருந்த தந்தை மற்றும் லயாவிடம் , “ஏன் இப்படி பார்க்கிறீங்க?” என்று வினவினான் பிரித்வி.
“ஒன்னும் இல்லை. நேத்து சண்டை போட்டுட்டு , இப்போ ஜோடியாக வந்து உட்கார்ந்து இருக்கீங்கன்னு பார்க்கிறோம்!” என்றாள் லயா.
“ஓஹோ! அது யூஷ்வல் ஆக நடக்கிற சண்டை தான் ம்மா!” என்று அவளிடம் சமாளித்துப் பேசினாள் அதிரூபா.
“ஆஹான்! ஓகே அண்ணி!” என்று அவளைக் கிண்டல் செய்து விட்டே உண்ண ஆரம்பித்தாள்.
“சாப்பிட்டு முடிச்சிட்டு உடனே கிளம்பி போகாமல் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க” என்று உத்தரவிட்டார் சகுந்தலா.
“ஏன் சகு?” என்று அவர்களுக்குப் பதிலாக மகேஸ்வரன் கேட்டார்.
“எல்லாம் காரணமாகத் தான் ங்க” என்று பதிலளித்தார் மனைவி.
“சரி ம்மா!” என அனைவரும் உண்டு முடித்தனர்.
கையைக் கழுவி விட்டு வந்த பிரித்வியிடம்,” டேய் இருடா! உட்கார். ரூபா! நீயும் வா” என்று மகனுக்கு அருகிலிருந்த நாற்காலியில் மருமகளை அமர வைத்தார் சகுந்தலா.
இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் லயா.
சமையலறையில் சென்று உப்பு, வர மிளகாய் எடுத்து வந்து இருவருக்கும் திருஷ்டி சுற்றினார்.
அவர் எதற்காக இதைச் செய்கிறார்? என்பது தனக்குச் சட்டென்று புரிந்து விட , நாணம் கொண்டு கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் அதிரூபா.
அவனுக்குப் புரியவில்லை போலும்!
“ஏன் ம்மா திடீர்னு திருஷ்டி எடுக்குறீங்க?” என்று அன்னையிடம் கேட்டான் பிரித்வி.
“ம்ம்! உங்களைப் பார்த்தால் எனக்கே கண்ணுப்படுது. அதான் டா”என்றார்.
” லயா ! நீயும் இரு” என்று அவளுக்கும் சேர்த்து திருஷ்டி கழித்து விட்டு,
“இப்போ போயிட்டு வாங்க” என்று மூவரையும் வழியனுப்பி வைத்தார்.
“ரெண்டு பேர் முகமும் தெளிவாக இருக்கு ங்க” என்று கணவரிடம் பகிர்ந்து கொண்டார் சகுந்தலா.
“ஆமா சகு! அவங்க இறங்கி வர்ற அப்போவே எனக்கும் புரிஞ்சது” என்றார் மகேஸ்வரன்.
இருவருக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி விட்டது என்பது வீட்டினர் அனைவருக்கும் புரிந்தது.
“அதி , லயா! நான் உங்களைக் காரில் கூப்பிட்டுப் போய் ட்ராப் பண்ணிடறேன்” என்று அவ்வருவரையும் தன் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டான்.
முதலில் லயாவை அவளது கல்லூரியில் இறக்கி விட்டான் பிரித்வி.
“பை அண்ணா! அண்ணி” என்று உள்ளே சென்று விட்டாள்.
” அதி! இறங்கி முன் சீட்டுக்கு வா” என்று மனைவியை அழைத்தான்.
அவளும் புன்னகையுடன் இறங்கி வந்து தன்னவனுடன் அமர்ந்து கொண்டாள்.
“காரை ஸ்டார்ட் பண்ணுங்க” என்று மெல்லிய குரலில் கணவனிடம் கூறினாள் அதிரூபா.
“ஒரே ஒரு முத்தம் கொடு அதி!” என்று அவளது இதழ்களை நிமிண்டிக் கேட்டான் பிரித்வி.
“ஆஃபீஸூக்குப் போகனும். ஞாபகம் இருக்கா?”
“நல்லா ஞாபகம் இருக்கு ம்மா”
அவனது கெஞ்சலில் இதழ் விரித்துக் குறுநகை புரிந்தவளோ, கணவனுடைய இதழ்களை ஆளுமை செய்தாள் அதிரூபா.
மனைவியின் அதரங்கள் தந்த இதத்தைக் கொஞ்ச நேரம் அனுபவித்தவன் , இதழ்கள் பிரிந்ததும், அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டே காரை இயக்கினான் பிரித்வி.
🌸🌸🌸
“உள்ளே வாங்க” என தன் மற்றும் மனைவியின் பெற்றாரை வீட்டிற்குள் அழைத்தான் தன்வந்த்.
காசிநாதன் மற்றும் மாதுரிக்கோ மகளைப் பற்றி எதுவும் குற்றம் வாசிப்பதற்காக அழைத்திருக்கிறானோ என்ற கலக்கம் நிறைந்திருந்தது.
அதற்கு மாறாக, “என்ன சொல்லக் காத்திருக்கானோ?” என்று மனைவியிடம் முணுமுணுத்தார் சதாசிவம்.
“அவனே சொல்லட்டும் ங்க” என்று அவரை அமைதிப்படுத்தினார் வானதி.
பதைபதைப்புடன் மகளின் முகத்தைப் பார்த்தார் மாதுரி.
காஜல் வாய் திறப்பதற்குள், “பயப்படாதீங்க அத்தை. நானே சொல்றேன்” என்றவன் மனைவியின் கரத்தைப் பற்றிக் கொண்டு நடு நாயகமாக வந்து நின்றான் தன்வந்த்.
மகனுடைய செயலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள் சதாசிவமும், வானதியும்.
“எங்களுக்குக் குழந்தைப் பிறக்கப் போகுது!” என்று ஆரவாரத்துடன் கூறினான்.
அதைக் கேட்டதும் தாமதிக்காமல், ஆர்ப்பரித்த உணர்வுகளுடன் மகளை உச்சி முகர்ந்தார் மாதுரி.
காஜலின் தந்தையான காசிநாதனுக்கோ ஆனந்தத்தில் விழிகள் கலங்கிறது.
அதே போல தங்களுக்கு நிறைவான சந்தோஷத்தை அளித்த மகனை ஆரத் தழுவிக் கொண்டார் சதாசிவம்.
பெற்றோருடன் நின்றிருந்த மருமகளிடம் சென்று, “தாங்க்ஸ் டா ம்மா” என்று நன்றியைத் தெரிவித்தார் வானதி.
“இப்போதாவது வீட்டுக்கு வரலாம்ல டா?” என்று மகனிடம் ஆற்றாமையுடன் வினவினார் சதாசிவம்.
“கண்டிப்பாக அங்கே தான் வருவோம் அப்பா. அதுக்கு முன்னாடி இங்கே இரண்டு நாள் இருந்துட்டு வர்றோம். இப்போ ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்று கையாலேயே அனைவருக்கும் இனிப்பைக் கொடுத்தான் தன்வந்த்.
அவனது மாற்றத்தைக் கண்டு தன்வந்த்தின் தந்தையே வியந்து தான் போனார். ஆனால் அது மகனுடைய குழந்தையின் வரவினால் தான் என்பதையும் உணர்ந்தும் கொண்டவர், வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னதே போதும் என்று அமைதியாகி விட்டார் சதாசிவம்.
அன்று முழுவதும் மாதுரியும் , வானதியும் போட்டிப் போட்டுக் கொண்டு காஜலைத் தாங்கினர். அதைக் கவனித்துக் கொண்டே, தன் அப்பாவிடமும், மாமனாரிடமும் சகஜமாகப் பேசிக் கொண்டு இருந்தான் தன்வந்த்.
“கவனமாக இருக்கனும்மா” என்று காஜலுக்கு அறிவுறுத்தினர் மாதுரி மற்றும் வானதி.
ஒரு வருடம் முடியும் தருவாயில் அவள் கருவுற்றிருப்பது அதை விட , தூய நீர் போல தெளிந்து காணப்பட்ட முகத்தைப் பார்த்ததும் வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை அவ்விரு பெண்மணிகளுக்கும்.
அவர்கள் சென்றதும், மனைவியைக் கட்டிலில் அமர்த்திய தன்வந்த் அவளிடம் மண்டியிட்டு, ” இவ்வளவு நாள் உனக்குக் கொடுத்த கஷ்டத்துக்கு எல்லாம் சாரி காஜல்” என்று மன்னிப்புக் கேட்டான்.
அவளது திகைத்தப் பார்வையில் சிரித்தவனோ, “என்னடா அதுக்குள்ள திருந்திட்டான்னு பார்க்கிறியா?” என்று கேட்டான்.
“ஆமாம் ங்க” என்று வயிற்றை மெல்ல வருடியவாறே கேட்டாள் காஜல்.
“நீ நம்மக் குழந்தையை வச்சு சொன்னதும் அவனுக்காக மாறனும்னு நினைச்சேன். ஆனால் இப்போ எனக்காகவும், உனக்காகவும் மாறனும்னு தோணுச்சு.அதை ஏன் தள்ளிப் போடனும்னு உடனே ஃபாலோவ் பண்ணிட்டேன்” என்று இயல்பாக கூறியவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள் காஜல்.
பின்னர், அவனது செவியில் அழுத்தமான குரலில், “ஐ லவ் யூ தன்வந்த்!” என்று முதல் முறையாக தன் காதலை மனப்பூர்வமாக கணவனிடம் வெளிப்படுத்தினாள் காஜல்.
அதில் புளகாங்கிதம் அடைந்தவனோ,
“லவ் யூ, தாங்க்யூ சோ மச் …ம்மா!” என்று மனைவியின் நெற்றியில் செல்ல இதழ் பதித்தான் தன்வந்த்.
“இனிமேல் நேரடியாக மோதுவீங்க தான?” என்று கேட்டாள் காஜல்.
“சந்தேகமா? அதைக் கன்ஃபார்ம் பண்ணிடலாம். இரு” என்று தன் செல்பேசியில் இருந்து பிரித்விக்கு அழைத்தான்.
இதே சமயம் காரை ஓட்டிக் கொண்டிருந்தவனோ, “தன்வந்த் கால் பண்றான் அதி!” என்று மனைவியிடம் சொல்லி விட்டு அவனது அழைப்பை ஏற்றான்.
“பிரித்வி”
“என்ன தன்வந்த்?”
“என்னோட இல்லீகல் பிஸினஸை எல்லாம் கை விட்டுட்டு, லீகல் ஆக நடத்துற பிஸினஸை வச்சு உன் கூட தொழிலில் நேரடியாகப் போட்டிப் போடப் போடனும்னு ஃபிக்ஸ் ஆகிட்டேன். உனக்கு எப்படி வசதி?” என்று தடாலடியாக கேட்டான்.
அதைக் கேட்டு அவனை மெச்சிய பிரித்வியோ, “நானும் ரெடி தான் தன்வந்த். வெயிட்டிங் அண்ட் ஆல் தி பெஸ்ட்” என்று கூறி அழைப்பை வைத்தான் பிரித்வி.
தனது வார்த்தைகளுக்கு மதிப்பளித்தக் கணவனுடைய முகத்தை முத்தங்களால் அர்ச்சித்தாள் காஜல்.
🌸🌸🌸
இங்கோ ,
“எதுக்கு வெயிட்டிங்? என்னாச்சு ங்க?” என்று பதறிப் போய்க் கேட்டாள் மனைவி.
அவளை ஆதூரமாகப் பார்த்தவனோ, “எல்லாம் பாசிட்டிவ் ஆன விஷயம் தான் அதி” என்று தன்வந்த் கூறியதைச் சொன்னான்.
“ம்ம்.இனி ரெண்டு சின்ராசையும் கையிலேயே பிடிக்க முடியாது” என்று கலகலவென சிரித்தபடியே தன்னைக் கிண்டல் செய்தவளின் கன்னத்தில் முத்தமிட்டு அமைதியாகச் செய்தான் பிரித்வி.
இவர்களது இன்பமான இல்லறத்தை நிறைவு செய்வதற்காக பிரித்வி மற்றும் அதிரூபாவின் மகவின் வரவு அமையட்டும்.
– சுபம்
நன்றி 🙏💕
🌸இது சின்னக் கதை தான். இதற்கு மேல் எழுத யோசிக்கவில்லை. இந்தக் கதைக்கு எபிலாக் வேணுமா நண்பர்களே?🌸