519 views

 

 

ஆகிவிட்டது தம்பதிகள் இருவரும் முழுமையாக பேசி இரண்டு நாட்கள். இருவரும் பிள்ளைகளிடம் மட்டுமே பேச்சை வளர்க்க, பெரியவர்கள் சுமுகமாக செல்ல அறிவுரை கூறினார்கள். ஏற்க மறுத்த தம்பதிகள் முகத்தைக் கூட பார்ப்பதை தவிர்த்தார்கள். குறிப்பாக மகிழினி ரகுவரன் எழுவதற்கு முன்னால் கிளம்பி விடுகிறாள். இரவு தாமதமாக வருபவள் பிள்ளைகளிடம் பேசிவிட்டு, வேலை இருப்பதாக நழுவி விடுகிறாள். 

 

 

பின்னால் செல்லாமல் பிள்ளைகளோடு தன் வட்டத்தை சுருக்கிக் கொண்டான் ரகுவரன். மூன்றாம் நாள் விடியல் ஞாயிறாக இருக்க, இன்றும் பறந்து விட்டாள் மற்றவர்கள் எழும் முன். அன்னையோடு சுற்றி தெரியும் மகிழ்வரன் ஏக்கம் கொண்டு அழ, சாந்தி அழைத்தார் மருமகளை.

 

 

இரண்டாவது முறை அழைக்கும் பொழுது எடுத்தவள் அமைதி காக்க, “நடந்ததை மாத்த முடியாது மகி. இனிமே இந்த மாதிரி நடக்காம பார்க்கிறது தான் உங்க ரெண்டு பேரோட வேலை. உங்களுக்குள்ள நடக்கிற பிரச்சனைல குழந்தைங்க பாதிக்கப்படக்கூடாது. உடனே வீட்டுக்கு கிளம்பி வா.” என வைத்து விட்டார்.

 

அடுத்ததாக ரகுவரனிடம் சென்றவர், “நீங்க சொல்ற எல்லாத்தையும் எல்லா நேரமும் மானு நம்பிட்டு இருக்க மாட்டா. அவளுக்கு இதுதான் உலகம்’னு புரியிற வயசு வந்துடுச்சு. சாமர்த்தியமா மறைச்சதா நினைச்ச நீங்களே தெரியப்படுத்திடாதீங்க. அவளுக்காகவாது சகஜமா இருக்க பாருங்க.” என்றவர் மேற்கொண்டு சொல்ல எதுவும் இல்லை என்று கிளம்ப, மருமகளுக்காக கால்கள் தடைப்பட்டு நின்றது.

 

 

“மகி வாழ்க்கையில நிறைய இழந்துட்டா. இழக்கவே கூடாதுன்னு உறுதியா அவ நினைக்கிற ரெண்டு பேர் நீயும் உன் பொண்ணும். தெரிஞ்சே உங்க ரெண்டு பேத்துக்கும் இப்படி ஒரு கஷ்டத்தை அவ கொடுத்திருக்க மாட்டா. அவளோட இயல்பு தன்னையும் மீறி இந்த விஷயத்துல செயல்பட்டு இருக்கு அவ்ளோ தான். 

 

தன்னால தான் மானுக்கு இப்படி ஆச்சுன்னு ஏற்கனவே அவ ரொம்ப மன உளைச்சல் இருப்பா.

இந்த நேரத்துல உன்னோட துணை அவளுக்கு அவசியம் தேவை. மனசளவுல ரொம்ப நொந்து போய் இருக்கான்னு மட்டும் புரியுது. முடிஞ்ச வரைக்கும் என் மருமகளை அழ விடாம பார்த்துக்க. அவ தன்னோட அழுகைய யாருக்கும் காட்டாம மறைச்சு வைக்கணும்னு நினைச்சு தன்னையே காயப்படுத்திப்பா.” என்றவர் ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு நகர்ந்தார்.

 

 

சாந்தி சொன்ன விஷயங்கள் ரகுவரனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அவன் தன் மனைவியை முழுதாக பார்த்து இரண்டு நாளுக்கு மேலாகிவிட்டது. கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறாள் என்பதை இந்த நொடி உணர்ந்தவன் அவள் மீது இருக்கும் கோபத்தை மறக்க முடிவெடுத்தான்.

 

 

அவள் பக்கம் இருக்கும் நியாயம் புரிந்தாலும் ஒரு நொடி தவறில் பிள்ளையின் வாழ்வு வீணாகி இருக்கும் என்ற எண்ணம் தான் பிடிவாதம் பிடிக்க காரணம். ஒருவேளை அசம்பாவிதம் நடந்திருந்தால் அவளையும் தானே அவை பாதித்திருக்கும் என்பது ரகுவரனின் கூற்று. 

 

வீடு வந்து சேர்ந்தவள் மகனை பொறுப்பேற்றுக்கொள்ள, மனைவியின் முகம் நோக்கினான். வாடி போயிருந்தது அவன் ஆசை கொண்ட முகம். என்றும் அடாவடியாய் பேசுபவள் குறைந்த ஓசையில் பேச, புரிந்து கொண்டான் சங்கடத்தில் தவிக்கிறாள் என்று.

 

 

அதை அதிகரிக்க விரும்பாதவன் அவள் பார்வையில் இருந்து மறைய, கண்மூடி தன்னை நிதானித்தவள் மகனோடு பேச்சை வளர்த்தாள். மாமன்களோடு வெளியில் சென்றிருந்த மான்விழியும் அவளோடு ஒட்டிக்கொள்ள, சின்ன மாற்றம் அவள் செய்கையில்.

 

 

மதிய நேர சாப்பாட்டை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் லட்சுமி. தன் குடும்பம் என்று இருந்தால் இருவரின் கோபமும் குறையும் என அவர்கள் நடவடிக்கை எடுக்க, என்றும் இல்லாத தனிமையில் இருவரும் தவித்தார்கள்.

 

 

நேரமாவதால் பிள்ளைகள் இருவரும் சாப்பாட்டை கை காட்ட, அவன் வருவான் என காத்துக் கொண்டிருந்தாள் மகிழினி. தன்னை தூது விட்டு அனுப்புவாள் என்ற எதிர்பார்ப்பில் அறையில் இருந்தான் ரகுவரன். இருவரும் மௌனம் என்னும் முகமூடியில் உலா வர, “அம்மா தம்பிக்கு ரொம்ப பசிக்குதாம் சாப்பாடு போட்டு கொடுங்க.” என்றாள் மான்விழி.

 

அவன் இருக்கும் அறை பக்கம் கூட மனைவியின் பார்வை செல்லவில்லை. தன் வீடு அவளுக்கு அன்னியமானது போன்ற உணர்வு. மன சங்கடத்தோடு பிள்ளைகள் இருவருக்கும் சாப்பாடு பரிமாற, ஊட்டி விடச் சொல்லி அடம் பிடித்தார்கள்.

 

உள்ளிருந்தவனுக்கு அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. குடும்பம் இருக்கும் இடத்திற்கு வந்து விட, கணவனின் வருகையை அறிந்து கொண்டவள் தலை குனிந்து கொண்டு பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டாள்.

 

மனைவியின் நடவடிக்கையை உணர்ந்து கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது. இந்த தலைகுனிவு அன்று தான் சொன்ன வார்த்தைக்காக என்பதை அறிந்து ஆழமாக பார்த்தான். அவள் தலை நிமிரவே இல்லை. 

 

“அம்மா நாளைக்கு எனக்கு பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு, ரெண்டு பேரும் வாங்க.” காதில் விழுந்தாலும் பதில் சொல்லும் நிலையில் இல்லாதவள் ஊட்டி விடும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தாள்.

 

மீண்டும் சொல்லிய மான்விழி கவனிக்க ஆரம்பித்தது தாய் முகத்தை. சாப்பிடுவதை நிறுத்தியவள் தந்தையிடம், “அப்பா அம்மா எதுக்கு தலை குனிஞ்சிட்டு இருக்காங்க.” கேட்டிட, வெகு நேரமாக மனைவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையை மாற்றாமல் இருந்தான்.

 

தனக்கான பதில் தந்தையிடமும் கிடைக்காமல் குழம்பிய பிள்ளை மாறி…மாறி பெற்றோர்களை பார்க்க, மகிழ்வரனும் அக்காவோடு சேர்ந்து கவனித்தான். உணவு உண்ணாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளை சந்திக்க முடியாமல் ஓடிவிட்டாள் அறைக்கு. 

 

இரவெல்லாம் தூக்கம் வரவில்லை ரகுவரனுக்கு.  எங்கும் அவள் முகமே காட்சி அளிக்க, பக்கத்தில் இல்லாத மனைவியை அதிகம் தேடினான். அவள் வேலையில் என்றும் தலையிட்டதில்லை ரகுவரன். முதன்முதலாக தடுத்து நிறுத்தியது இந்த வழக்கை தான். ஏற்கனவே இதில் தலையிட்டு பெரும் இழப்பை சந்தித்தவள் மீண்டும் அந்த நிலைமைக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே தடுத்தான். 

 

 

கூடவே செல்ல மகளின் வாழ்வையும் மனதில் வைத்து இந்த முடிவை எடுத்திருக்க, எடுத்த முடிவில் இப்படி ஒரு தடையை சந்திப்பான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அப்போது இருந்த கோபத்தில் வார்த்தையை விட்டவன் இப்போது தவிக்கிறான் அவளின் நிராகரிப்பில். யாருக்கும் என்றும் அடங்கிப் போனதில்லை மகிழினி. தன் வார்த்தையில் கோபம் இருந்தால் ஏட்டிக்கு போட்டியாக செய்திருப்பாள். 

 

 

ஒதுங்கி இருப்பது தான் படம் போட்டு காட்டியது அவள் மனதில் உண்டான வலியை. பிள்ளைக்காக மனைவியை காயப்படுத்தியவன் அவள் பிரிவில் வாடி போனான் இரவெல்லாம். தன்னிடம் பேசாமல் இருப்பது கூட அவனுக்கு வருத்தம் இல்லை. சொந்த வீட்டில் அந்நியன் போல் ஒதுங்கி நிற்பது தான் வலிக்கிறது அதிகம். 

 

விடியற்காலை நேரம் கண்கள் சொக்க ஆரம்பித்தது. அசந்து தன்னை அறியாமல் தூங்கும் நேரம் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. யார் வேலை என்பதை கண்டு கொண்டவன் விளக்கை போடாமல் அறையை விட்டு வெளியில் வர, அதிக சத்தம் கேட்டதால் பதட்டத்தோடு விழுந்த பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

கீழே அமர்ந்திருந்த அவளின் விழியில் கணவனின் கால் தடங்கள் தெரிய அப்படியே இருந்தாள். அவள் நுணுக்கங்களை கண்டுகொண்டவன் மேற்கொண்டு நடக்காமல் அதே இடத்தில் இருக்க, சிலையாகினார்கள் இருவரும். விட்டுக் கொடுக்க மனம் இல்லாதவர்கள் தங்கள் இடத்தில் அப்படியே இருந்தனர்.

 

தவறு செய்து விட்டதால் அடி எடுத்து வைத்தான் இறங்கி போவதற்கு. அவன் நகர்ந்ததும் இன்னும் தலை குனிந்தாள் மகிழினி. மனைவிக்கு ஏற்றவாறு  அமர்ந்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் கண்சிமிட்டாமல்.

 

மீண்டும் இரு உடல்களும் சிலையாக… உயிர் பெற்றவன் இறங்கிப் போனான்,

 

“பொண்டாட்டி” என்றழைத்து.

 

கையில் பிடித்திருந்த பாத்திரத்தில் கட்டியவளின் கண்ணீர் துளிகளை கண்டவன் தாடையில் கை வைக்க செல்ல, விலகி சென்றாள். 

 

“என்னை பாரு” என நெருங்கி செல்ல, வேகமாக எழுந்தவள் திரும்பி நின்று கொண்டாள்.

 

தன்னை நிதானித்தவன் அவள் நிழலோடு நிழலாக நிற்க, இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டாள். தோள் மீது கை வைத்தவன், “சாரி” என்றான்.

 

அடுத்த நொடி அந்த இடத்தில் இல்லை மகிழினி. ஓட்டம் பிடித்தவள் கதவை சாற்றிக் கொண்டாள். விரட்டிப் பிடிக்க முயன்றவன் கதவுக்கு முன்னால் நின்று கொள்ள, இருவருக்கும் நடுவில் வேலியாக நின்றது மரக்கதவு

 

***

மான்விழி பிறந்தநாள் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இருவரும் சகஜமாகவில்லை. சாந்தி அறிவுறுத்தலுக்கு பின் முழுதாக ஒதுங்கிக் கொள்ளாதவள் ஓரளவு பிள்ளைகளோடு பேச ஆரம்பித்தாள். ரகுவரன் இருக்கும் இடத்தில் மட்டும் தலை நிமிராமல் கடந்து விடுவாள். 

 

 

அவனுக்கும் ஆகிவிட்டது இரண்டு வாரங்கள் மனைவியின் குரலையும் முகத்தையும் உணர்ந்து. என்னவோ ஏக்கம் அவனை முழுமையாக சூழ்ந்து கொண்டது. காலை அவனுக்கு முன்னால் எழுந்து விடுபவள் கண்ணில் சிக்காமல் ஆட்டம் காட்ட, மாலை நேரம் தாமதமாக வீட்டுக்கு வருவாள். இரவு நேரம் தப்பிக்க முடியாததால் இல்லாத வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வதுபோல் நேரம் கடத்த, மகிழ்வரன் உறங்கும் நேரம் அன்னையை அதிகம் தேடினான்.

 

 

மான்விழியும் அன்னையோடு பேசாமல் தவிக்க தொடங்க, பிள்ளைகளின் ஏக்கத்தை புரிந்து கொண்டவன் ஒதுங்கிக் கொண்டான் குடும்பத்திடமிருந்து. மனைவி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அவன் செய்ய,  நாட்கள் ஓட்டம் பிடித்து விட்டது.

 

***

 

 

 

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு இரவு வரை மட்டுமே அவர்களை சேர்த்து வைக்கும் பாலமாக இருந்தது. இன்று சனிக்கிழமை இரவு. எப்படி கடப்பது என்று இருவருக்கும் தெரியாமல் திண்டாடி போக, பிள்ளைகள் விளையாட்டுக்கு அழைத்தது. மகிழினி வேலை இருப்பதாக நழுவிக் கொள்ள, மனம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தான் ரகுவரன்.

 

 

வெகு நேரம் ஆகிவிட்டதால் பிள்ளைகளை தூங்க வைக்கும் நோக்கோடு பால் எடுத்துச் சென்றாள். கதவைத் திறந்ததுமே கணவனின் முகம் தெரிய, தலை குனிந்து கொண்டாள். ஏற்கனவே அவள் காட்டும் விலகலை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பவன் இதைக் கண்டு இன்னும் மனதுக்குள் மறுகிப் போக, கணவன் இருப்பதால் பேசாமல் பிள்ளைகளை நோக்கி கொண்டு வந்ததை நீட்டினாள்.

 

 

விளையாட்டில் இருந்ததால் அன்னையின் செய்கைகளை கண்டு கொள்ளாமல் இருக்க, ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தான் கட்டியவளை. சிறிது நேரத்தில் மான்விழி கண்டுகொண்டு அன்னையிடமிருந்து தனக்கானதை வாங்கிக் கொள்ள, மகிழ்வரன் அடம் பிடித்தான் வேண்டாம் என்று.

 

கண்டிக்க முடியாத சூழ்நிலையில் அவள் அப்படியே நின்றிருக்க, “அம்மா எதுக்காக எப்ப பாரு கீழயே பார்த்துட்டு இருக்கீங்க?” கேட்டது மான்விழி.

 

அவள் பதில் கூறாமல் மௌனம் காக்க, “அம்மா” என்று அழைத்துக் கொண்டிருந்தாள்.

 

“அப்பா இப்போல்லாம் ரொம்ப நேரமா அம்மா கீழயே பார்த்துட்டு இருக்காங்க எதுக்கு?” தந்தையானவனும் பதில் சொல்லாமல் மௌனம் காத்தான்.

 

 

சந்தேகத்திற்கான பதில் கிடைக்காததால் பெற்றோர்கள் இருவரையும் அன்றைய தினம் போல் பிள்ளை கவனிக்க ஆரம்பித்தது. அதைக் கூட கண்டுகொள்ளாமல் இருவரும் அதே நிலையில் இருக்க, “அம்மா மான்குட்டி தப்பு பண்ணிடுச்சா… அதான் மான்குட்டி கிட்ட நீங்க பேச மாட்டறிங்களா” என்றாள்.

 

 

பிள்ளையின் பேச்சில் கண்கள் வருத்தத்தில் சுருங்க, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள். தன் மீது தான் ஏதோ தவறு என்று குற்றம் சுமத்திக்கொண்ட குழந்தை மன்னிப்பு வேண்ட, தவித்தது தாயுள்ளம். 

 

அக்காவின் பேச்சில் விளையாட்டை கைவிட்ட மகிழ்வரன் அன்னையை உசுப்ப ஆரம்பித்தான். இளசுகள் இரண்டும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டு பெற்றோர்களை பேச வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாமல் மகிழினி வெளியேற பார்க்க, மனைவிக்கு இடம் கொடுத்து வெளியேறி விட்டான் ரகுவரன்.

 

***

 

ஊரே நல்ல உறக்கத்தில் இருக்க இரவு முழுவதும் தனித்தனி அறையில் முழித்துக் கொண்டிருந்தார்கள். ஞாயிறு என்றாலே கலாட்டாவாக இருக்கும் அவர்களின் வீடு அமைதியில் நாளை தொடங்க, குடும்பத்தில் இருப்பவர்கள் கண்டும் காணாமலும் நகர்ந்தார்கள். ஆகாஷிற்கு மட்டும் மகிழினியின் சோர்ந்த முகம் வருத்தத்தை கொடுத்தது.

 

 

அந்த வருத்தம் மச்சான் மீது கோபமாக மாற, நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் காட்ட. உணவு மேஜை அதற்கான இடமாக மாற, ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை போட்டுக் கொண்டனர். பிள்ளைகள் ஏற்கனவே சாப்பிட்டு விட்டதால் வெளியில் விளையாடிக் கொண்டிருக்க, மகிழினி இல்லாமல் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

 

சாப்பிட அழைத்த அத்தைக்கு சாக்கு சொல்லியவள் தாமதமாக கீழ் இறங்கி வர, “ஆமாண்டா உன் அக்காவோட வாழ எனக்கு விருப்பம் இல்லை. விவாகரத்து பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச நாள் தான் நானும் என் பிள்ளைகளும் இங்க இருப்போம்.” என பேச்சை முடித்தான்.

 

எதிர்வாதம் புரிய வந்த ஆகாஷ் அக்காவின் வருகையால் அமைதி காக்க, நடந்ததை அறியாதவள் கணவனின் வார்த்தையில் சாப்பிடாமல் திரும்பி விட்டாள் தங்கள் இல்லத்திற்கு.

 

மகள் மீது கொண்ட பாசத்தை முழுமையாக அறிந்தவள் ஆயிற்றே!  அரைகுறையாக கேட்டவள் இதுதான் கணவனின் முடிவு என்று தானே முடிவு எடுத்துக் கொண்டாள். 

 

‘அந்த அளவுக்கு என் மேல வெறுப்பா ரகு உனக்கு. ஒரு பொண்ணா இன்னொரு பொண்ணு சிக்கி சின்னாபின்னம் ஆகுறதை பார்க்க முடியாம தான் திரும்பவும் உனக்கு தெரியாம இதுல இறங்கினேன். சத்தியமா எதிர்பார்க்கல இந்த அளவுக்கு போகும்னு. என் பொண்ணுக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா அடுத்த நிமிஷம் நானும் உயிரோட இருந்திருக்க மாட்டேன். அப்படி இருக்க தெரிஞ்சு அவள இதுல சிக்க வச்சிருப்பேனா?

 

உனக்கு உன் பொண்ண ரொம்ப பிடிக்கும்னு தெரியும். ஆனா, என்னை இந்த அளவுக்கு வெறுப்பன்னு தெரியாது. என் கூட இருந்தா உன் பிள்ளைகளுக்கு பாதுகாப்பா இருக்காதுன்னு தான இந்த முடிவெடுத்து இருக்க. உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன் நீ கேட்டது உன்னை தேடி வரும்.’ அவளாகவே கணவன் கேட்காததை கொடுக்க முடிவெடுத்தாள்.

 

***

 

மதியம் சாப்பிடாதவள் இரவு உணவையும் தவிர்த்து அறைக்குள் அழுது கொண்டிருந்தாள். பிள்ளைகள் இருவரும் அன்னையைக் கேட்டு அடம் பிடிக்க, பூட்டி இருக்கும் அறை கதவை தட்டினான் ரகுவரன். வெகு நேரம் கழித்து கதவை திறந்தவள் கணவனை பார்த்து தலை குனிந்து கொள்ள, 

 

“நான் பேசின வார்த்தைக்காக எனக்கு தண்டனை கொடு. குழந்தைங்க கிட்ட அதை காட்டாத. நான் இருக்கிறது உனக்கு சங்கடமா இருக்குன்னு புரியுது. இனிமே அந்த தொந்தரவு இருக்காது.” என்றவன் எங்கோ கிளம்பினான்.

 

 

இரவு கிளம்பியவன் மறுநாள் காலை வீட்டிற்கு வந்தான். தன் உயிர்கள் மூவரும் உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்து அவர்களிடம் சென்றவன் கோபம் கொண்டான் முகத்தை மட்டும் மூடிக்கொண்டு தூங்கும் மனைவியின் செய்கையால். 

 

தன்னை அறியாமல் தூக்கத்தில் கூட முகத்தை காட்ட விரும்பவில்லை மனைவி என்றறிந்து தன் மீதே கோபம் கொண்டவன் வந்த சுவடு தெரியாமல் வெளியேறி விட்டான். இரண்டு நாட்கள் ஆகிய பின்னும் வீட்டிற்கு வரவில்லை.

 

 

இவர்களுக்கு நடுவில் குழந்தைகள் தான் சிக்கிக் கொண்டது பரிதாபமாக. கூடவே இருந்து பாசத்தை கொடுத்த பெற்றோர்கள் காட்டும் விலகலை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தவர்கள் பாட்டியிடம் தஞ்சம் புகுந்தார்கள். இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணியவர்கள் காத்திருந்தார்கள் அவர்களின் வருகைக்காக.

 

***

 

“மகி உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க? இப்போலாம் நீ வீட்ல சரியா சாப்பிடுறதே இல்லை. புருஷன் கூட சண்டை போட்டா உடம்ப கவனிக்க கூடாதுன்னு ஏதாச்சும் சட்டம் இருக்கா என்ன! நானும் இன்னைக்கு சரியாகிடுவீங்க நாளைக்கு சரியாகிடுவீங்கன்னு நிறைய நாள் வெயிட் பண்ணிட்டேன். ரெண்டு பேரும் திருந்துற மாதிரி  தெரியல.” 

 

“எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல அத்தை.” 

 

“வாய் மட்டும் தான் அப்படி சொல்லுது மகி. சும்மா இருக்கும்போதெல்லாம் சேர்ந்து இருக்கிறதுக்கு பேரு தாம்பத்தியம் இல்லை. பிரச்சனைக்கு நடுவுல எப்படி பிரியாம இருக்கோம் என்றதுல தான் தாம்பத்தியத்தோட வெற்றி இருக்கு.”

 

“சாரி அத்தை” 

 

“இதை என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல மகி. திட்டுனது உன் புருஷன் தான. இந்த வார்த்தைய அங்க சொல்லி உன் தரப்பு நியாயத்தை சொல்லி இருந்தா என்னைக்கோ பிரச்சன முடிஞ்சிருக்கும்.”

 

“நீங்களும் என்னதான் தப்பு சொல்றீங்க…” என்றதற்கு பின் பேச வரவில்லை அவளுக்கு.

 

“இதுல உன் மேல தப்பு இல்லன்னு சொல்ல முடியுமா மகி. அதை விடு மான்விழிக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா நிம்மதியாக இருந்திருப்பியா நீ. நடந்தது நடந்து போச்சு இனிமே நடக்காம பார்த்துக்க.” என்றவர் உள்ளே அமர்ந்திருக்கும் பரகுவரனை பார்த்துக் கொண்டு,  

 

“உன் புருஷன் பேசுனதும் சரியில்ல. பொண்டாட்டி தப்பே பண்ணி இருந்தாலும் அந்த அளவுக்கு வார்த்தையை உபயோகிக்காம இருந்திருக்கலாம். பொண்டாட்டி இல்லாம புள்ள வந்துடுச்சா அவனுக்கு? பிள்ளைங்க எவ்ளோ பாசமா இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல அவங்க வாழ்க்கைய நோக்கி நகர்ந்திடுவாங்க. ஆனா, பொண்டாட்டி அப்படி இல்ல. சாகுற வரைக்கும் புருஷனுக்காக மட்டுமே வாழ்வா. இதை தெரியாத ஆம்பளைங்களுக்கு புரிய வைக்கலாம். தெரிஞ்ச பேசுற ஆம்பளைங்களை என்ன சொல்லி திருத்துறது.” என்னிட, தலை குனிந்து கொண்டான்.

 

“இனிமே உங்க நாலு பேத்துக்கும் நீங்களே சமைச்சு சாப்பிட்டுக்கோங்க. உங்களால தினமும் சாப்பாடு வீணாகுது.” மருமகள் செய்யும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தவர் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் கண்டிப்பை காட்டினார்.

 

 

அத்தையின் பேச்சு பேச்சோடு மட்டும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள் மாமியார் உணவுக்கு தேவையான அனைத்தையும் வைத்து விட்டு சென்றதில். வருத்தம் சூழ்ந்த மனதோடு காலை உணவை தயாரித்தவள் மகளுக்காக மதிய உணவையும் செய்தாள்.  நடந்த அனைத்தையும் கவனத்தில் கொண்டிருந்த ரகுவரன் அவளுக்கு உதவி செய்யலாம் என்று சமையலறை நுழைய, வழக்கம் போல் தலை குனிந்து கொண்டாள்.

 

 

 

அவள் செய்கைகளுக்கு ஏற்ப தேவைப்படும் உதவிகளை செய்து கொண்டிருந்தான் பேச்சு கொடுக்காமல். பள்ளிக்கு தயாராகி வந்த மகள் அம்மாவின் கை மனம் என்பதால் குஷியாகி சாப்பிட அமர, மகளுக்கு அனைத்து சேவையையும் செய்து முடித்தான் தந்தை. அவன் வருவதற்குள் சமையலை முடிக்க எண்ணி வேகம் காட்டினாள். 

 

 

அவசரம் அதிகமானதால் நிதானத்தை இழந்தவள் தாலிப்பிற்கு கடுகை கொட்டினாள். வேகமாக பொரிந்து அவள் கையில் பட்டது. திடீரென்று சூடு பட்டதால் “அம்மா” என கை உதற, மனைவியின் சத்தத்தில் ஓடி வந்தான்.

 

 

பதட்டத்தில் அவள் கைப்பற்றி, “என்னடி பண்ணி தொலைச்ச… பொறுமையா வேலை பார்க்க தெரியாதா உனக்கு.” கைகளை ஆராய்ந்தான்.

 

சூடு பட்ட எரிச்சல் கூட மறந்து போனது கணவனின் வருகையால். அவனிடமிருந்து கைகளை விலக முயற்சிக்க, “ப்ச்! கைய காட்டுடி. கவனத்த எங்க வச்சிட்டு வேலை பார்க்குற.” திட்டினான்.

 

 

அவள் விடாமல் விலகிக் கொண்டே இருக்க, திட்டிக் கொண்டிருந்தவன் கடுப்பாகினான். “என்னடி உனக்கு இப்ப பிரச்சனை” என முகம் நோக்க, குனிந்து கொண்டிருக்கும் கட்டியவளின் முகம் தான் நிஜத்தை உணர வைத்தது.

 

அதன்பின் வார்த்தை வரவில்லை அவனிடம் இருந்து. முகம் நோக்கிக் கொண்டிருந்தவன் முழுவதும் நொந்து போனான் தரையில் கொட்டும் மனைவியின் கண்ணீரில். தன்னை பார்க்கிறான் என உணர்ந்து அசையாமல் அவள் நிற்க, கையைப் பிடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“இன்னும் எவ்ளோ நாள் இதே மாதிரி இருக்க போற? நான் பேசுனது உன் மனச ரொம்ப காயப்படுத்தி இருக்குன்னு புரியுது. அதுக்கான தண்டனையா நீ என்ன பண்ணாலும் தாங்கிக்கிறேன். இந்த மாதிரி மட்டும் இருக்காத பொண்டாட்டி ப்ளீஸ்.” 

 

…..

 

“என்னை பாருடி…”

 

…..

 

“பொண்டாட்டி “

 

…..

 

“தப்பா பேசிட்டேன்டி சாரி.”

 

 

…..

 

“இவ்ளோ பேசுறேன்ல திரும்பி பார்த்தா தான் என்ன?” என்றவன் முகத்தை நிமிர்த்த முயற்சித்தான்.

 

 

 

இடம் கொடுக்காமல் தன் முடிவில் தெளிவாக இருந்தாள் மகிழினி. இவனும் தன் பேச்சில் மாற்றம்  கொள்ளாது  தொடர்ந்து மன்னிப்பை வேண்டிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் அடம் பிடிக்கும் மனைவியின் செய்கையில் ஆத்திரம் கொண்டு கபோர்ட்டில் ஓங்கி அடித்தான். 

 

 

சத்தத்தில் அலறிய மகிழினி விலகி நிற்க, தன்னிடம் வேகமாக இழுத்தான். அழுகை அதிகமாகி அவனோடு ஒன்றி நின்றவள் விடுபட போராட, “இனிமே என் முகத்தை பார்க்க மாட்ட அப்படித்தான. இந்த ரகுவரன பார்க்காம சந்தோஷமா இருக்க முடியுமா உன்னால.” என இறுக்கி பிடித்தான். 

 

 

இப்பொழுதும் தலைகுனிந்து நிற்கும் மனைவியின் செய்கையில் நிதானத்தை தவறவிட்டவன் வேகமாக அவளிடம் இருந்து விலகி கைகளை காயப்படுத்திக் கொண்டான். ஆக்ரோஷமாக கேட்கும் சத்தத்தில் பதறியவள் கணவனின் கை தொடப்போகும் நேரம் சத்தம் கேட்டு உள்ளே வந்ததாள் மான்விழி.

 

 

“அப்பா”

 

மகள் குரல் கேட்டதும் செய்து கொண்டிருந்ததை நிறுத்தியவன் கண்மூட, “மானு நீ பாட்டி கிட்ட போ.” என்றாள் மகிழினி.

 

 

நடப்பதை புரிந்து கொண்ட மான்விழி நகராமல் தந்தையை பார்த்துக் கொண்டிருக்க, “மானு கிளம்பு.” கட்டளையிட்டாள் பிள்ளைக்கு.

 

 

பயத்தோடு அங்கிருந்து பிள்ளை வெளியேறியதும், “ர…” எனப் பேச்சை ஆரம்பிக்க, மின்னல் என மறைந்தான் வீட்டை விட்டு ரகுவரன்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
23
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்