
திமிர் 23
வரிகள் இல்லாத குத்து இசை தெறித்தது அவன் நடனத்தில். அணிந்திருந்த கோட் தரையில் கிடக்க, கருப்பு நிற ஷூ இரண்டும் எங்கு இருக்கிறதோ! கை பட்டனைக் கழற்றிவிட்டு, முட்டிவரை ஏற்றி ஆடியவன் உடல் முழுவதும் வேர்வை. உடன் ஆட வந்த அனைவரையும், போட்டிக்கு எடுத்துக்கொண்டு ஓட வைத்தவன் ஆட்டத்தை நிறுத்துவதாக இல்லை. நாக்கை மடக்கிக் கீழ்ப்பற்களுக்குள் ஒளித்தவன் மதுவின் போதையில் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்தபடி வந்தவள் கை இரண்டையும் கட்டிக்கொண்டு நின்றாள்.
அவன் மீதிருந்த அவன் சொந்தங்களின் பார்வை அவள் மீது மாறியது. அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாது, தன் வார்த்தையை மீறிக் குடிகாரனாக மாறி ஆட்டம் போடும் தன்னவனைத் தோல் உரிக்கப் பார்த்தாள். அவள் வரவை அறியாது, சட்டை பட்டன் மூன்றைக் கழற்றி விட்டுக் குத்தாட்டம் போட்டான். எப்போதும் அவனுடன் சேர்ந்து ஆடும் ஆதி, இந்த முறை கமுக்கமாக இருந்து கொண்டான் ஒரு திட்டத்திற்காக. அதை அறியாதவன் அண்ணனை இழுத்து ஆட்டம் போட, ஆர்ப்பாட்டம் அதிகரித்தது அங்கு.
“இப்படிச் சிக்கிட்டாரே!”
“இதுக்குத்தான் கூட்டிட்டுப் போனியா?”
“கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே உங்க ஆளு. ஆக்டிங் மட்டும் தான் நான்.”
“மரியாதையா இங்க இருந்து போயிடு. இருக்க வெறிக்கு ரெண்டு பேரையும் தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன்.”
“ஹலோ அண்ணி…”
“வாய மூடுடா!”
“ரைட்”
“பாட்ட நிறுத்தச் சொல்லு!”
“கடுப்பாகிடுவாரு!.”
“இப்ப நிறுத்தச் சொல்லல, நான் கடுப்பாகிடுவேன்!”
“சாரி அண்ணி…”
அவனைக் கண்டு பல்லைக் கடித்தவள், தானே சென்று சத்தத்தை நிறுத்த, “ஏய்! எவன்டா அது? போடுடா பாட்ட.” உளறினான்.
“சார்…”
“டேய்! எவனோ பாட்டை நிறுத்திட்டான். சங்குலயே நாலு மிதி மிதிச்சிப் போடச் சொல்லுடா.”
“ரொம்ப ஓவர் ஆயிடுச்சு, பேசாம வாங்க.”
“என்னாது ஓவரா! இன்னும் நாலு ரவுண்ட் இருக்குடா. அதுவரைக்கும் ஸ்டெடியா இருப்பேன்.” எனும் பொழுதே தள்ளாடியவனைத் தாங்கிப் பிடித்தவன், நெருங்கி வரும் மதுணிகாவைக் கண்டு, “சொன்னால் கேளுங்க சார்.” என்றான்.
அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டவன், “என்னாடா என்னா! ஒன்னு உட்டேன், செவுளு அந்துடும். நாப்பது ரவுண்டு போனாலும் தாங்குற பாடிடா.” என்றவன் முன் வந்து நின்றாள்.
“காதலி!”
கண் சிமிட்டிப் பல் இளித்து, “நான் காதலன், காதலி நீ…” பாடிக்கொண்டு அவள் தோள் மீது கை போட்டுத் தள்ளாடியவன், “வாடி செல்லம், எல்லாருக்கும் உன்னை இன்ட்ரடியூஸ் பண்றேன்.” அழைத்துச் சென்றான்.
“ஆல் வெள்ளை வேட்டிஸ், ப்ளீஸ் லிசன். இவதான் என்னோட குயின். இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுக்குக் கல்யாணம். இந்த அழகிய நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.” என அவள் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன், “இவ வந்ததுக்கு அப்புறம், என் வாழ்க்கை இன்னும் அழகாய் தெரியுது. எல்லாரும் லவ் பண்ணுங்க. அப்பதான் லைப் ஜாலியா இருக்கும். லவ்ல இவ்ளோ சந்தோஷம் இருக்குன்னு தெரியாம, காலத்த வேஸ்ட் பண்ணிட்டேன். நமக்காக ஒரு பொண்ணு, எதுவுமே வேண்டாம் அவன் போதும்னு சொல்றதைக் கேக்கும் போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.” கொஞ்சியவனை எவ்வளவு முறைக்க முடியுமோ அவ்வளவு முறைத்தாள்.
“என் காதலிக்கு நான் குடிச்சால் பிடிக்காது. அதனால இனிமே குடிக்க மாட்டேன். இது உங்க எல்லார் மேலயும் சத்தியம்.” என அனைவரையும் அதிரவிட்டவன், “கடைசியா ரெண்டு ரவுண்டு” எனக் கண் சிமிட்டினான்.
அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த கற்பகம், கூட்டத்தைக் கலைக்க எண்ணிச் சாப்பிட அழைத்தார். அனைத்துக் கூட்டம், பிரியாணியை நோக்கிப் படையெடுக்க, “காதலி…” எனக் கட்டி அணைக்க முயன்றவனைத் தள்ளி விட்டாள்.
“ஏன்டி?”
“உன்னைக் குடிக்க வேண்டாம்னு தான சொன்னேன்!”
“நான் குடிக்கலையே.”
அவன் வார்த்தையைக் கேட்டவள் பற்களை நரநரக்க, “இவன் மேல சத்தியமா…” என ஓரமாக நின்றிருந்த ஆதிகேஷை இழுத்துத் தலையில் அடித்துச் சத்தியம் செய்தான்.
பிரியா கலகலவென்று சிரிக்க, “விடு, நான் போறேன்.” என்றாள்.
“ஏய்! என் பொண்டாட்டிய யார் என்ன சொன்னது?” என அங்கிருந்த கூட்டத்தைக் கேட்டவன், “நீயா பிசாசு…” அனுவை நோக்கிக் கேட்டான்.
நடந்ததெல்லாம், பார்க்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பித் தந்தையைப் பார்க்க, அமைதியாக இருக்கும்படி கண்ணைக் காட்டினார்.
“ஏண்டி பைத்தியம்! நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க. உங்க அப்பன்கிட்டச் சொல்லி வேற இளிச்சவாயனைப் பிடிக்கச் சொல்ல வேண்டியது தான.”
“அகம்பா…”
“அழகி…” என அன்னையை நோக்கி வந்தவன், “ஒரு அழகான, அன்பான மருமகளைக் கூட்டிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் கூடப் புத்தி இல்லாம இந்தப் பிசாசு தான் வேணும்னு அடம் பிடிக்கிறீங்க. இது ரத்தத்தைக் குடிக்கிற ரத்தக் காட்டேரி. என் ரத்தத்தை மட்டும் இல்ல, உங்க ரத்தத்தையும் சேர்த்துக் குடிச்சிடும்.” என்றவனை அறைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர் ஆதியும், கமலும்.
“விடுடா என்னை.”
“பேசாம உள்ள வாடா.”
“நீ எதுக்குடா என் பொண்டாட்டிய மிரட்டுன. எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? அவளை அடிக்கக் கை ஓங்குற. வெட்டிடுவேன் கைய.”
“வாங்க சார்”
“அவ உனக்கு அண்ணினா, நான் அண்ணன்டா… வாங்க அண்ணான்னு மரியாதையா கூப்பிடு.” எனப் பிரியா மீது மோதி நின்றான்.
“அண்ணி!” என்றவன் ஓரமாக இருந்த போட்டோகிராபரை அழைத்து, “அண்ணி கூட ஒரு போட்டோ எடுடா” என நெருங்கிச் செல்ல, அவளோ பயந்து ஓடினாள்.
“ஏன்டா, உன் பொண்டாட்டி என்னைப் பார்த்துப் பயந்து ஓடுறாங்க. நான் அவ்ளோ கொடூரமாவா இருக்கேன். இல்லயே! என் செல்லம் அழகா இருக்கடான்னு அடிக்கடி கொஞ்சுவாளே.”
“போதும் அகம்பா, உள்ள போ…” என்றார் கற்பகம்.
அமர்ந்து கொண்டிருக்கும் அன்னையின் முன் மண்டியிட்டவன், “ஏம்மா அவளை உனக்குப் பிடிக்கல. அவள் ரொம்ப நல்லவள். நான் நிறையக் கஷ்டப்படுத்திட்டேன். என்ன பண்ணாலும், என் மேல இருக்கற காதல் துளி கூட அவ கண்ணுல குறைஞ்சதில்லை. அப்படிப்பட்டவளை, எப்படி நான் விடுவேன்? மதுணி என்னை மட்டும் இல்லம்மா, உன்னையும் நல்லாப் பார்த்துப்பா. என்னைத் தவிர இந்த உலகத்துல எதுவுமே முக்கியமில்ல அவளுக்கு. நிறையக் கஷ்டப்பட்டிருக்காம்மா… ரொம்பச் சந்தோஷமாய் பார்த்துக்கணும்னு ஆசைப்படுறேன். அவ என்கூட இருந்தா நானும் ரொம்பச் சந்தோஷமா இருப்பேன். உன் பையனோட சந்தோசம் முக்கியம் இல்லையா உனக்கு.” கேட்க, மகனை அழுத்தமாகப் பார்த்தார்.
இதற்கு மேலும் இடம் கொடுத்தால், தங்கள் காரியம் தடைப்படும் என்றுணர்ந்த சங்கரன், மினிஸ்டருக்குக் கண்ணைக் காட்டினார். அவரோ மகனுக்குக் கண்ணைக் காட்டி இளைய மகனை அழைத்துச் செல்லக் கூற, பிரியாவையும் அவள் குடும்பத்து ஆள்களையும் கவனிக்கக் கமலை அனுப்பி விட்டனர். அகம்பன் பின்னால் செல்ல நினைத்த மதுணிகாவைத் தரதரவென்று இழுத்துச் சென்றாள் அனு.
***
அகம்பனைத் தவிர்த்து அனைவரும் இருந்தார்கள். என்னவென்று தெரியாமல், அனு இழுத்த இழுப்பிற்கு வந்தவள் அமைதியாக நிற்க, மினிஸ்டர் நவரத்தினம் கண்ணைக் காட்டினார். அங்கிருந்த பெரிய பெரிய பெட்டிகளைத் திறந்தான் ஆதிகேஷ். தங்கமும், வைரமும் மின்னிக் கொண்டிருந்தது பணத்திற்கு நடுவில். அவளையே பார்த்தபடி கற்பகம் அமர்ந்துகொள்ள, கர்வம் மிகுந்த பார்வையோடு அவள் முன்பு நின்றாள் அனுசியா.
“இதுக்காகத் தான இங்க வந்து நடிச்சிட்டு இருக்க. எல்லாம் உனக்காகத் தான். இன்னும் வேணும்னாலும் கேளு. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற அகம்பனுக்காகக் கொடுக்கிற விலை. இந்தத் திருச்சியைத் தவிர எவ்ளோ கேட்டாலும், எங்களாலயும் அங்கிளாலயும் கொடுக்க முடியும். வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டுத் தல தெறிக்க ஓடிடு.”
“இவ பார்க்குறதைப் பார்த்தா போதாது போல அனு.”
“தெரியும்பா, வெளிய இருக்கறதையும் எடுத்துட்டு வரச் சொல்லுங்க.” என்றதும் பத்துப் பெட்டிக்கு மேல் அவள் முன்பு.
அதனையும் திறந்து காட்டிக் கர்வம் துளிர, “இதையெல்லாம் எண்ணிப் பார்க்கவே உன் வாழ்க்கை போதாது. எடுத்துட்டுக் கிளம்பிட்டே இரு. உன்னை வளர்த்த அந்தப் பரதேசிகிட்டப் போவியோ, கண் காணாத இடத்துக்கு ஓடுவியோ, அது உன்னோட விருப்பம். அகம்பன் கண்ணுல படக்கூடாது.” என்ற ஆதிக்கு, அவள் முகம் பார்த்துப் பேசத் துணிவில்லாது எங்கோ பார்த்துப் பேசினான்.
“இதுல என்னென்ன இருக்குன்னு நீங்களே ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுத்துடுங்க.”
“நான் சொல்லலப்பா, இவ பணத்துக்காக வந்தவன்னு.” எகத்தாளமாகச் சிரித்தவள் அனைத்து விவரத்தையும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்க, அமைதியாக வாங்கிக் கொண்டாள்.
கற்பகம் அதிர்வில் அவளைப் பார்க்க, அகம்பனின் அண்ணனுக்கும், தந்தைக்கும் அதே நிலைதான். கையில் இருக்கும் காகிதத்தில் இருக்கும் விவரத்தை முழுதாகப் படித்தவள், “இந்தா அனு” என அவளிடம் நீட்டினாள்.
ஒன்றும் புரியாது புருவத்தைச் சுருக்கியவளிடம், “இது எல்லாத்தையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். இது மட்டும் இல்ல, அகாவோட சொத்து எல்லாத்தையும் உனக்குத் தரேன். அதுவும் போதலனா சொல்லு, மினிஸ்டர் நவரத்தினம் சம்பாதிச்ச எல்லாத்தையும் ஒரு ரூபாய் குறையாம உனக்குத் தருவாரு. வாங்கிட்டு அகாவை விட்டுப் போயிடு.” என்றாள்.
“ஒண்ணுமே இல்லாத அனாதை நாயி, நீ எனக்குச் சொத்துத் தரியா. அங்கிள் சொத்தை ஆட்டையப் போட்டுட்டேன்னு சொல்லாமல் சொல்றியா.”
“நான் ஒன்னும் இல்லாதவளா இருக்கலாம். நீ எதுக்காக இவ்ளோ விலை கொடுக்கறியோ, அது என் கூட இருக்கு. அந்த அன்புக்கு முன்னாடி இதெல்லாம் எறும்பு அளவுக்குக் கூட வராது. இந்த செகண்ட், நான் நினைச்சா மினிஸ்டர் சொத்து மொத்தத்தையும் என் பேருக்கு மாத்த முடியும்.” ஏளனமாகக் கூறியவள் மினிஸ்டர் பக்கம் திரும்பி,
“உங்க பையன் மாத்திக் கொடுத்திட மாட்டாரு?” எனப் புன்னகைத்தாள்.
“நீங்க என்னோட காதலுக்கு விலை பேசுறீங்க. என் உயிரைத் தவிர வேற எதுவுமே அதுக்கு ஈடு கொடுக்க முடியாது. அகாவுக்காக உயிரைக் கொடுப்பேன்னு சொல்லு, விட்டுக் கொடுத்துட்டுப் போறேன்.” என அங்கிருந்து நகர்ந்தவள் அமைதியாக அமர்ந்திருக்கும் கற்பகத்தை நோக்கி,
“ஒரு அம்மாவா நீங்க தோத்துப் போயிட்டீங்க.” என்றாள்.
“நில்லு! உன் உயிரை எடுத்துத் தான் என் மகளுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னா அதுக்கும் நான் ரெடியா இருக்கேன்.”
“என்ன சார் மிரட்டுறீங்களா? என் மேல ஒரு கீறல் விழுந்தால் கூட, இப்படி ஒருத்தர் வாழ்ந்தாருன்ற அடையாளம் தெரியாத அளவுக்கு என் அகா செஞ்சிடுவான். உங்களால என்னையும், என் காதலையும் ஒன்னுமே பண்ண முடியாது.”
“உன்னை நிம்மதியா வாழ விட மாட்டேன்.”
“நீ வாழ விட வேண்டிய அவசியமில்லை. இப்பவே நாங்க ரெண்டு பேரும் ரொம்பச் சந்தோஷமா தான் வாழ்ந்துட்டு இருக்கோம்.” என்று விட்டு நகர்ந்தவள் மீது அளவு கடந்த குரோதத்தை வளர்த்துக் கொண்டாள்.
பாதி தூரம் சென்றவள் திரும்பிப் பார்த்தாள் ஆதிகேஷ் திவஜை. அவள் பார்வை தன்மீது பட்டதும் வேறு பக்கம் திரும்பியவன் செவியில், “என் அண்ணனைக் காசுக்காக விக்க மாட்டேன்னு சொன்ன தம்பிய, இதைவிட யாராலயும் அசிங்கப்படுத்த முடியாது. இந்த விஷயம் அகாக்குத் தெரியாமல் பார்த்துக்கோங்க. தாங்கிக்கிற தெம்பு அவருக்கு இருக்காது.” என்று விட்டுச் சென்றவள், நான்கு அடி அடித்திருந்தால் கூட அவ்வளவு வலி இருந்திருக்காது கேட்டவனுக்கு.
***
நடந்த எதையுமே அறியாது மது போதையில் உருண்டு கொண்டிருந்தான் அகம்பன். வெகு நேரம் அவனை எழுப்பித் தோற்றுப் போனவள் தண்ணீரை வீசி அடிக்க, “குடை கொண்டு வாங்கடா.” என்று விட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தான்.
“எந்திரிடா…”
“ஏய்…”
“எந்திரிக்கப் போறியா இல்லையா?”
“தூக்கம் வருதுடி!”
“இங்க எவ்ளோ பெரிய கலவரம் நடக்குது, உனக்குத் தூக்கம் வருதா? மரியாதையா எந்திரி.”
காட்டுக் கத்தலாகக் கத்தியும் கண் விழிப்பதாக இல்லை அவள் காதலன். பொறுத்தவள் பொங்கி எழுந்து விட்டாள், ஒரு வாளித் தண்ணீரை மேலே ஊற்றி. அரக்கப் பறக்க எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துக் குழம்பினான். இடுப்பில் கை வைத்துக் கொண்டு மேலும் கீழும் மூச்சை இழுத்து விடும் காதலியைக் கண்டு,
“அம்மு…” கிறக்கமாகச் சிரித்தான்.
வாளியை அவன் மீது தூக்கி அடித்தவள், “எதுக்குடா குடிச்ச?” கேட்க, “சத்தியமா இல்ல.” என அவள் தலை மீது சத்தியம் செய்ய வந்தான்.
பிடித்து மெத்தையில் தள்ளிவிட்டவள், “இனி உனக்கும், எனக்கும் எதுவும் இல்லை. என் மூஞ்சிலயே முழிக்காத.” என அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் கோபம், இருந்த மயக்கத்தைத் தெளிய வைத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென்று முழித்திருந்தான். தன் பின்னால் வருவான் என்று ஏமாந்து போனவள், “நாளைக்குக் காலையில நான் சென்னைக்குக் கிளம்புறேன்.” என ஆட்டுக்குட்டி போல் பின்னால் ஓடி வர வைத்தாள்.
“இப்ப என்னடி ஆகிப்போச்சு, எதுக்கு இவ்ளோ கோவப்படுற?”
“இதுக்கு மேல என்ன ஆகணும்? நான் வேண்டாம்னு சொல்லியும் குடிக்கிறனா, அப்ப என்னை விடக் குடி தான முக்கியம். முக்கியமில்லாத இடத்துல எதுக்கு இருக்கணும்? நான் சென்னைக்குப் போறேன். நீ இங்க நல்லா குடிச்சுட்டுக் கும்மாளம் போடு.”
“இங்கப் பாரு மதுணி, இதெல்லாம் பார்ட்டில சகஜம். நான் தினமும் குடிக்கிற குடிகாரன் இல்லை. ஜஸ்ட் பார்ட்டிஸ் குடிகாரன். இத்தனை நாள் குடிச்சிட்டு இருந்தவன், இப்பக் குடிக்கலன்னா மாறிட்டான், அது இதுன்னு உன்னைத்தான் குத்தம் சொல்லுவாங்க. அதுக்காகத் தான்டி கொஞ்சமே கொஞ்சம் தொண்டைய நனைக்கிற அளவுக்குக் குடிச்சேன்.”
இருந்த கோபத்தின் அளவு உச்சத்தைத் தொட்டது அவன் வார்த்தையில். சட்டைக் காலரை எட்டிப் பிடித்தவள், நாற்றம் தாங்காமல் பின்னுக்குத் தள்ளிவிட்டு, “உவ்வேக்! குடலைப் பிரட்டுது. இதுதான் நீ கொஞ்சமே கொஞ்சம் குடிச்ச லட்சணமா? நீ என்ன சொன்னாலும் சரி, காலையில இங்க இருந்து கிளம்புறது கிளம்புறது தான்.” எனத் தன் அறைக்குள் புகுந்தவள், பின்னே வந்தவனைத் தரதரவென்று வெளியே இழுத்துத் தள்ளிக் கதவைச் சாற்றிக் கொண்டாள்.
“அம்மு! அடியே, இதெல்லாம் ரொம்ப ஓவரு. ஒரு நிமிஷம் கதவைத் திற.”
“திறக்க முடியாது!”
“இன்னைக்கு ஒன்னும் இல்லையா?”
“நானே இருக்க மாட்டேன்னு சொல்றேன், ஒன்னும் இல்லையான்னு கேக்குற.”
“அதுக்குத் தான்டி கேட்கிறேன். ஏதாச்சும் பண்ணிச் சமாதானம் ஆகிடலாம். இனிமே உன் பேச்சை மீறிக் குடிக்க மாட்டேன்.”
“மரியாதையா போயிடு!”
“சரி எதுவும் பண்ண வேண்டாம். கட்டிப்புடிச்சுட்டுச் சமத்தா தூங்கலாம். கதவைத் தொற செல்லம்.”
அவன் எவ்வளவு கெஞ்சிக் கதறியும் மனம் இறங்கவில்லை மதுணிகா. சாற்றிய கதவு சாற்றியபடி இருந்தது. தட்டிப் பார்த்துச் சேர்ந்தவன், கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். சத்தம் கேட்டு அங்கு வந்த கமல் வாய் பொத்திச் சிரிக்க, “உன்னால தான்டா எல்லாம்.” என ஓங்கிக் கன்னத்தில் அடித்தான்.
வாங்கிய அடியை விட, அவன் சொன்ன வார்த்தைதான் கோபத்தைக் கிளறியது. அந்த அதிர்வு மாறாது அப்பாவியாக, “நான் என்ன பண்ணேன்?” கேட்டான்.
“அவளைக் கூட்டிட்டுப் போடான்னு சொன்னேன்ல. பாதிலயே கூட்டிட்டு வந்து என் குடும்பத்தைக் கலைச்சிட்டியேடா. கடைசி வரைக்கும் உனக்குப் பொண்ணே கிடைக்காதுடா.”
“நீங்கதான் கத்திக் காரியத்தைக் கெடுத்துட்டீங்க.”
“பேசாம போடா இங்க இருந்து.”
“அவன் கூட சேர்ந்து நீங்களும் போயிடுங்க.”
“மதுணி செல்லம்!”
“அதான் போகச் சொல்லிட்டாங்களே, அப்புறம் எதுக்கு சார் செல்லம், வெல்லம்னு.”
“சாவடிச்சிடுவேன்!”
“அண்ணி, கேட்டீங்களா?”
அவசரமாக அவன் வாயை மூடியவன், “ஏன்டா பரதேசி…” எகிற, “உங்களை இப்படிப் பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்கு சார்.” பரவசமாகக் கூறினான்.
“அவளைச் சமாதானம் பண்ணிட்டு வந்து உன்னைக் கவனிச்சிக்கிறேன்.” என்றவன் எவ்வளவு போராட்டங்கள் நடத்தியும் ஒரு பலனும் இல்லை.
பெற்ற மகனின் போராட்டத்தைப் பார்த்துக் கொண்டு பெற்றவர்கள் இருவரும் தங்கள் அறைக்குச் சென்று விட, குற்ற உணர்வோடு உடன் பிறந்தவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ஆதிகேஷ்.
“சார், ஆதி சார் உங்களைப் பார்த்துட்டு இருக்காரு.”
“அவன் கிடக்கறான். அவன் மட்டும் உஷாரா, குடிக்காமல் நல்ல பேர் வாங்கிட்டான்.”
“அவருக்குப் பொழைக்கத் தெரிஞ்சிருக்கு.”
“கமலே…” பல்லைக் கடிக்க, இதற்கு மேல் இருந்தால் உயிர் தப்பிக்காது என்ற பயத்தில் ஓடிவிட்டான்.
“அடியே, தூங்கவாவது கதவைத் தொறடி. நல்லா புசுக்கு புசுக்குன்னு இருக்க. கட்டிப் பிடிச்சுத் தூங்குனாதான் நல்லா தூக்கம் வரும்.” எனப் பேசிச் சோர்ந்து போனவன் அந்தக் கதவிலேயே கண்மூடிக் கொண்டான்.
***
காலையில் கண் விழித்தவன், பெரும் பாடுபடுத்தும் தலைவலியைக் கூடப் பொருட்படுத்தாமல், தன்னவளை நோக்கி ஓடினான். அவள் இல்லாமல் காலியாக இருந்தது அறை. அவசரமாகப் படி இறங்கி வந்தவன், “எங்கடா அவ?” கமலிடம் கேட்க, “நான் இப்போதான் சார் வந்தேன்.” என்றான்.
“எதுக்குடா வந்த?”
எரிந்து விழுவது தெரியாது, “சிஎம் சார் கூட மீட்டிங் ஏற்பாடு பண்ண…” பயபக்தியாகப் பதில் கொடுத்தான்.
“உன்ன… அவ எங்கன்னு தேடுடா.” என்ற சத்தத்தைக் கேட்டுக்கொண்டு வந்த கற்பகம் உணவருந்த அமர்ந்து கொண்டார்.
ஏற்கெனவே அங்கு அமர்ந்திருந்த ஆதிகேஷ் அன்னையைப் பார்க்க, அவர் பார்வை மகன் மீது நிலைகுத்தியது. வாசல் வரை ஓடி வந்தவன், தோட்டத்தில் அமர்ந்திருக்கும் மதுணியைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவள் தோரணையே கோபத்தைப் பறைசாற்றியது. நேரடியாகச் சென்று மூக்குடைய விரும்பாமல், “அவகிட்டப் போய் பேச்சுக் கொடுடா.” கமலைத் தூது விட்டான்.
“இவரு போனா அடிப்பாங்கன்னு தெரிஞ்சி நம்பளைக் கோர்த்து விடுறாரு.”
“என்னடா, பொலம்பிட்டுப் போற?”
“விதி சார்!”
“பேசாம போடா…” என அவனை அனுப்பி வைத்தவன், “சப்” என்று கேட்ட ஓசையில் பட்டென்று திரும்பிக் கொள்ள, அடி வாங்கிய கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பாவமாக வந்து நின்றான் கமல்.
சிரிப்பு வந்தாலும் காட்டிக் கொள்ளாது அகம்பன் திவஜ் நிற்க, “இப்பச் சந்தோஷமா?” கேட்டுச் சத்தமாகச் சிரிக்க வைத்தான்.
அவர்களைத் தாண்டி உள்ளே வந்தவள் கைப்பிடித்தவன், “ரொம்பப் பண்ணாதடி! அதான் ராத்திரி பழி வாங்கிட்டல்ல.” என்றிட, “இப்போ உங்க சார் கைய விடல, அந்தக் கன்னமும் சிவந்திடும்.” கமலிடம் சொன்னாள்.
வாங்கிய அடியிலிருந்து இன்னும் தெளியாதவன், அடுத்த கன்னத்தையாவது காப்பாற்றிக் கொள்ள, “விடுங்க சார், என் அண்ணி கைய. அந்தக் கை பளார்னு அறைஞ்சா எப்படி வலிக்கும்னு வாங்குனவனுக்குத் தான் தெரியும். நீங்க நாலு இடத்துக்குப் போறவரு. இன்னைக்கு சிஎம் கூட வேற மீட்டிங் இருக்கு. யாரு நலங்கு வச்சாங்கன்னு கேட்கிற அளவுக்குக் கன்னத்தைச் சிவக்க வச்சிடாதீங்க.” வேகமாக எடுத்து விட்டான்.
“கமல்…”
“எஸ் அண்ணி மேடம்”
“இந்தக் குடிகார சார் ரூம்ல இருக்கற பார், மதியத்துக்குள்ள காணாமல் போயிடனும். இல்லன்னா நீ காணாமல் போயிடுவே.”
“அவ்ளோ தூரம் எல்லாம் போக வேண்டாம் அண்ணி மேடம்.” அவசரமாக அவள் வார்த்தைக்குத் தடை போட்டவன்,
“டேய்! ரூமைக் கிளீன் பண்ணுங்கடா.” ஆள்களுக்கு உத்தரவு போட்டான்.
மகாராணி உத்தரவில், புருவம் உயர்த்தி மெச்சிக் கொண்டவன் இருக்கையில் திமிராக அமர்ந்துகொள்ள, அங்கிருந்த ஆள்கள் அகம்பனைப் பார்த்தனர். தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற மிதப்பில் கால் மீது கால் போட்டு அமர்ந்தவன் தன்னவளை நோக்கி இதழ் விரிக்க, பல்லைக் கடித்தாள்.
“இவங்க அக்கப்போருக்கு, நம்ம தீனி ஆகிடுவோம் போலயே.”
“கிளீன் பண்ணச் சொல்லு கமல்”
“அகம்பன் திவஜ் தீவுல இருக்கற அப்பாவிங்க, அவர் உத்தரவு தராம நகர மாட்டாங்க அண்ணி மேடம்.”
“அதைப்பத்தி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. கிளீன் ஆகணும், அவ்ளோதான்.”
அகம்பனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள், அவனைப் போல் கால் மீது கால் போட்டுக் கொண்டாள். அந்நேரம் படியிறங்கி வந்தாள் அனுசியா. நேற்று இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்தவள், அதற்குக் காரணமானவளைக் கண்டதும் சீற்றத்தோடு கற்பகம் பக்கத்தில் வந்தமர்ந்தாள்.
மீண்டும் மெச்சுதலான பார்வை அவனிடம். பதிலுக்குத் திமிர் பார்வை வீசியவள், கைகளையும் கட்டிக் கொண்டாள். இதழ் வளைக்காமல், மூச்சுக்காற்றை வெளியிட்டு மெல்லச் சிரித்த அகம்பன் திவஜ், “ம்ம்” எனக் கண்ணை மட்டும் அசைக்க, தடதடவென்று வேலைகள் துவங்கியது.
அங்கிருந்த மூவரின் பார்வையும் இருவரையும் சுற்றி வந்தது. அவனின் மெச்சுதலும், இவளின் திமிரும் போட்டி போட்டுக் கொண்டு அறைக்குள் இருந்த மது பாட்டில்கள் அனைத்தையும் ஓடவிட்டது. மொத்தமும் காலியாகும் வரை அமைதியாக அமர்ந்திருந்தவள், “ம்க்கும்!” எனக் கொனட்டி விட்டுச் செல்ல, பற்கள் பளபளக்கச் சிரித்தான்.
“பார்த்தீங்களா ஆன்ட்டி, உங்க பையனை எப்படி அடிமையாக்கி வச்சிருக்கான்னு. அகம்பன் மாற்றத்தை வெளில இருக்கறவங்க கண்டு பிடிச்சிட்டா அங்கிளோட அரசியல் வாழ்க்கைக்கே ஆபத்து.”
“என்ன சொல்லறதுன்னு தெரியல அனு. எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு.”
“நேத்துப் பண்ணது தப்போன்னு தோணுது.” என்றவன் மீது கவனத்தைத் திருப்பியவள் கோபத்தைக் காட்டாது, “உங்களை இப்படிக் குற்ற உணர்ச்சில துடிக்க வைக்கிறதுதான் அவளோட பிளான். அவ வலையில உங்க தம்பி விழுந்த மாதிரி நீங்களும் விழுந்துடாதீங்க.” என்றாள்.
குழப்பத்தில் ஆதிகேஷ் தட்டில் கோலம் போட, தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மினிஸ்டர். மூவரின் மனத்திலும் குழப்பம் இருப்பதை உணர்ந்தவள்,
“அவ ரொம்பத் தெளிவா இருக்கா ஆன்ட்டி. அவளை டைரக்டா மோத முடியாது. இன்டைரக்டா அட்டாக் பண்றேன் பாருங்க.” என்றிட, அவள் எண்ணம் சிறிதும் இல்லை அங்கிருந்தவர்களுக்கு.

