Loading

அத்தியாயம் 22:

நேரம் செல்ல செல்ல, ஆரவின் அணைப்பு இறுகியதே தவிர, தளர்வின்றி போக, வான்மதிக்கு மூச்சு முட்டியது.

அதில், அவனிடம் இருந்து பிரிய முயன்றவளால் நகரக் கூட இயலாமல் போக, விழி திறவாமலேயே, பிடியை விலக்காமலேயே “இப்டியே இரு கண்ணம்மா ப்ளீஸ்… ஒரு டூ மினிட்ஸ்க்கு…” என்றவனின் வார்த்தைகள் தெளிவில்லாமல் வெளிவந்தாலும், அதனைப் புரிந்து கொண்டவள், சில நொடிகள் அசையாமல் இருந்தாள்.

பின் ஆரவே, மீண்டுமொரு முறை அவள் காதோரம் “லவ் யூ கண்ணம்மா!” என விழிகளில் காரணமின்றி துளிர்த்த நீரை மறைத்தபடி நேசத்துடன் உரைத்து விட்டு, அவளை சுற்றி வளைத்திருந்த கரங்களை மெதுவாக விலக்கினான்.

அவன் விலகியதுமே, மேனி சிலிர்க்க சிவந்த தேகமதை இதழ் கடித்து அடக்கியடி அவன் மடியில் இருந்து எழுந்தவளுக்கு, கால்கள் தள்ளாடியது.

பிடிமானம் இன்றி, அவளை ரசித்திருந்தவனின் திண்ணிய தோள்களையே பற்றிக் கொண்டவள், அவனின் குறுகுறு பார்வை கண்டு மேலும் சிவந்து, கரங்களை சட்டென எடுத்துக் கொண்டாள்.

ஆனாலும் அவனின் சிவந்த விழிகள் அவளை சிறிதாய் வருத்த, ‘நான் தான அழுதேன். இவரு கண்ணு ஏன் சிவந்து இருக்கு.’ என்ற வினாவிற்கு விடை புரியாதவளாய், அதனை கேட்கவும் தயங்கிட, ஆரவ் அவள் விழிகளை எதிர்கொள்ள இயலாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டான்.

பின் அவனே, “செம்மயா பசிக்குதுடி. நான் போய் ஏதாச்சு குக் பண்றேன்.” என்றவன் அடுக்களைக்குள் புகுந்து கொள்ள, அவளுக்குத் தான், மனம் திறந்து காதல் உரைத்ததில் மனம் சற்றே இலகுவானது.

அதில், மற்றதை புறம் தள்ளியவள், சிறிது நேரம் இஷாந்துடன் விளையாடிட, பிறகு அவனையும் தூக்கிக்கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

அங்கு அப்போது தான், குருமா வைத்து முடித்தவன், சப்பாத்திக்கு மாவை எடுத்து வைக்க, அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பியவள், “நான் கேட்கணும்ன்னு நினைச்சேன். அதுக்கு அப்பறம் உங்க அத்தையை நீங்க பார்க்கலயா ஆரவ்?” எனக் கேட்டாள்.

மகனைக் கண்டதும், அவன் கன்னத்தை கொஞ்சலுடன் கிள்ளிய ஆரவ், வான்மதியின் கேள்வியில் பெருமூச்சு விட்டு,

“அன்னைக்கு மேரேஜ் முடிஞ்சதும் அத்தையை நல்லா திட்டிட்டேன். மாமாவுக்கு சென்ட்ரல்ல ஒர்க். அடுத்த ஒரு வாரத்துலயே டிரான்ஸ்ஃபர் கிடைச்சதுல, எல்லாரும் ஆந்திரா சைட் போய்ட்டாங்க. இப்ப வரை அத்தை கால் எதையும் அட்டென்ட் பண்ணல. நான் எடுக்கலைன்னதும் கவிக்கு கால் பண்ணி சொல்லி இருக்காங்க. அப்போ தான் எனக்கும் தெரியும்.” என்றான் லேசாய் எழுந்த வருத்தத்துடன்.

“ஒரு தடவை கால் அட்டெண்ட் பண்ணலாம்ல ஆரவ்…” என கண்ணை சுருக்கி கேட்ட வான்மதியிடம்,

“ப்ச், அட்டெண்ட் பண்ணி என்ன சொல்ல சொல்ற? நீங்க பார்த்து கல்யாணம் பண்ணி வைச்ச பொண்ணு ஓடிப்போயிட்டான்னா?” என ஆதங்கத்துடன் நிறுத்த, சில நிமிடம் அங்கு பெருத்த அமைதி தான் நிலவியது.

அதனை கலைக்காமலேயே, சப்பாத்தி மாவிற்கு தண்ணீர் ஊற்றி பிசைய போனவனை வான்மதி தடுத்தாள்.

“ஆரவ், உங்க கையை காட்டுங்க.” என அவன் கையை பற்றி பார்த்தவள், அவனின் புறங்கை மொழி முழுதும் காயமாக இருப்பதைக் கண்டு,

“என்ன ஆரவ் இது. இப்படி தோல் எல்லாம் உரிஞ்சு இருக்கு. எப்படி ஆச்சு?” எனக் கேட்டாள் பதற்றத்துடன்.

அதில் அவனும் சற்று தடுமாறி, “அன்னைக்கு வண்டில இருந்து விழுந்தேன்ல. அதுல பட்டுருக்கும்டி.” என கையை உருவிக்கொள்ள விழைந்தான்.

“இல்லையே. இந்த காயத்தை நான் இப்போ தான் பாக்குறேன்” அவள் அவனின் காயத்தில் பெயர்ந்திருந்த இடத்தை வருடியபடி கூற,

“நீ சரியா கவனிச்சுருக்க மாட்ட மதி.” என அவனும் வாதிட, அவனை நிமிர்ந்து முறைத்தவள், “உண்மைய சொல்லுங்க ஆரவ். மறுபடியும் வண்டில போய் விழுந்து வைச்சீங்களா என்ன?” எனக் கேட்டாள் கோபத்துடன்.

அதற்கு பதில் கூற இயலாமல், ஆமோதிப்பாக தலையாட்டியவனை அனலாக சுட்டவள், “அன்னைக்கு தான சொன்னேன் வண்டில போகாதீங்கன்னு.” என்று பேச ஆரம்பிக்கும் போதே, “விடுடி. இதெல்லாம் ஒரு காயம்ன்னு.” என சமாளிக்க முயன்றவன், அவளை திசை திருப்பும் பொருட்டு, “இன்னைக்கு இன்னும் கிஸ் க்ளாஸ் எடுக்கலடி.” என்றான் கண் சிமிட்டி.

அவனை அழுத்த விழிகளுடன் ஏறிட்டவள், “என்னை டிஸ்ட்ராக்ட் பண்ண ட்ரை பண்ணாதீங்க ஆரவ்.” என்று அவன் செய்யும் களவை கண்டு கொண்டவளைக் கண்டு, ஆரவ் பற்வரிசை வசீகரமாய் மினுக்க நகைத்தான்.

“ரொம்ப ஷார்ப்பா இருக்கடி நீ.” என அவளின் கன்னம் கிள்ள வந்தவனை, சட்டென தட்டி விட்டவள், இஷாந்தை அவனிடம் கொடுத்து விட்டு, மருந்தை எடுத்து வந்தாள்.

“கையை காட்டுங்க.” என அவன் கையை எடுத்து மருந்து போட்டவள், அவன் அவளையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டு, “உங்களுக்கு வலிக்கலையா?” என்றாள் விழி உயர்த்தி.

“ம்ம்ஹும்…” என இடவலமாக தலையசைத்தவன், ‘இதை விட மனசுல டஜன் கணக்குல வலி இருக்குடி.’ என்று தனக்குள்ளேயே கூறி விட்டு, வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதட்டில் பரவ விட்டவன், அவள் மருந்திட்டு விட்டு கையை கழுவிக் கொண்டு வந்ததும், “ஒன் பாம் கிஸ்…?” என்றான் கீழ்க்கண்ணால் அவளை ஊடுருவியபடி.

“ஹான்?” என அவள் விழிக்க, “பாம் கிஸ்ன்னா உள்ளங்கையில முத்தம் குடுக்கணும்டி.” என ரசனையுடன் கூறியவன், சில்லிட்டு இருந்த அவளின் ஒரு கையைப் பிடித்து, உள்ளங்கையில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

தன்னிச்சையாக கண்களை மூடிக்கொண்டவள், கையையும் மூட எத்தனிக்க, அவன் விட்டால் தானே!

“ஆரவ் கூசுது…” என வான்மதி நெளிய, “ஒன் மோர் கண்ணம்மா…” என மறுகையையும் பற்றி அழுத்தமாக முத்தமிட்டான், இஷாந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டே.

இவர்களை கண்ட இஷாந்த் தான், வேகமாக அவனும் வான்மதியின் கையை பிடிக்க வர, இப்போது இருவரும் சிரித்து விட்டனர்.

“டேய்… நீ ஏன்டா பங்குக்கு வர்ற?” என ஆரவ் விழி சுருங்க மகனிடம் சண்டை பிடிக்க, அவளுக்கோ வெட்கமாகி விட்டது.

“ஆரவ்… என்ன நீங்க பேபிகிட்ட போய் இதெல்லாம்…” என அவனைப் பாராமல் புன்னகையுடன் திரும்பிக் கொள்ள, “ஆமா, நான் பேசுறது தான் அவனுக்கு புரிய போகுது பாரு.” என்று முறைத்தவன், “அப்படியே புரிஞ்சாலும், ஐ டோன்ட் கேர்.” என்றான் உதட்டை மடித்து.

அதில், நிமிர்ந்து முறைக்க முயற்சித்து, அது முடியாமல் சிரித்து விட்டவள், “சப்பாத்தி மாவு எப்படி ரெடி பண்ணனும்ன்னு சொல்லுங்க நான் பண்றேன்” என்றாள்.

அவனோ, சிரிப்பை அடக்கியபடி, “அதெல்லாம் வாயால சொல்லிக் குடுத்தா நல்லாவா இருக்கும். பிராக்டிகல் – ஆ தான் சொல்லி தரணும்” என்று குறும்பாய் கூறியதில்,

அவனை புருவம் உயர்த்தி முறைத்து பார்த்தவள், “இந்த சீன் எல்லாம் நானும் நிறைய படத்துல பார்த்து இருக்கேன். நீங்க வாயாலேயே சொல்லி குடுங்க போதும்” என்றாள் நாக்கை துருக்கி.

போலியாய் இதழ் குவித்து சிலுப்பியவன், “போடி…” என கடிந்து விட்டு, “கொஞ்சம் உப்பு போடு, எண்ணெய் ஊத்து” என்று செய்முறை சொல்லிக்கொண்டிருந்தான்.

அவளும், பக்குவமாய் அவன் சொல்வது போன்றே செய்ய, இடை இடையே முகத்தை துடைக்கிறேன் என மாவையும் கன்னத்தில் ஆங்காங்கே அப்பிக்கொள்ள, அவனின் கருவிழிகள் மாவை விட்டு விட்டு, அவளின் கன்னத்தில் பதிந்தது.

“அப்பறம் என்ன பண்ணனும் ஆரவ்?” எனக் கேட்டுக்கொண்டே வான்மதி நிமிர, மீசை வேர் பதிக்கும் அளவு, அவளின் கன்னத்தில் ஆழமாக முத்தமிட்டு இருந்தான்.

இத்தனை நாளாக, சொல்லிவிட்டே செய்தவன், திடுதிப்பென முத்தமிட்டதும், அதிர்ந்து கிறங்கியவளின், கன்னத்தில் கொடுத்த முத்தத்தை விடுத்து, மெதுவாக இதழும் மீசையும் கொண்டு வருடியவன், “இதுக்கு பேர் தான் சர்ப்ரைஸ் கிஸ் கண்ணம்மா.” என்றான் குரலில் போதை வழிய.

“ஆரவ் ப்ளீஸ்…” என்றே அவளின் இதழ்கள் ஏதோ முணுமுணுக்க, இஷாந்த் தான், ஆரவின் கன்னத்தைத் தட்டி, அவனின் முகத்தை அவன் புறம் திருப்பினான்.

அதில் தன்னிலை வந்தவன், “உங்களுக்கும் கிஸ் வேணுமா டார்லிங்.” என்று அவனுக்கும் முத்தமிட்டவன், “அப்பாக்கு?” என்று மகனிடம் கன்னத்தை காட்டினான்.

அவன் ஏதோ விளையாட்டுக் காட்டுவதை போல, கிளுக் என சிரித்தவன், ஆரவின் கன்னத்தில் லேசாய் முளைத்த பற்களை கொண்டு எச்சில் செய்தான்.

பின், அவனை வான்மதியின் அருகில் நகர்த்தி “அம்மாக்கு…” என அவளைக் காட்ட, இத்தனை நேரமும் இருவரையும் கண்ணெடுக்காமல் ரசித்திருந்தவள், இவ்வழைப்பில் சற்றே தடுமாறினாள்.

இதுவரை அவனும் சரி அவளும் சரி இஷாந்த்திடம் அவளை அம்மாவென்று கூறி எல்லாம் கொஞ்சியது இல்லை. என்னதான், ‘இஷாந்தின் அம்மா நான் தான்’ என்று அவள் உறுதியாக கூறினாலும், ஒரு வித தயக்கம் இருந்து கொண்டே இருந்தது அவனை அப்படி அழைக்க வைக்க… பின் அவன் பேசத் தொடங்கியதும், அதுவே சகஜமாகி விடும் என அதன் போக்கில் விட்டவளுக்கு, இப்போது கண்ணைக் கரித்தது.

இஷாந்த் தான் உடனே, “ம்… ஆ…” என மழலை மொழியில் அவளை அழைக்க எத்தனித்தவன், ஆரவ் முத்தமிட்ட கன்னத்திலேயே அவனும் எச்சில் செய்யப் போக, “டேய். அது என் பிளேஸ். அந்த கன்னத்துல குடுடா.” என தடுக்காமல் போலியாய் அதட்டினான்.

அதெல்லாம் அவனுக்கு புரியவில்லை. ஆனால், வான்மதிக்கு நெஞ்சை பிசைய, அந்நேரம் அவனின் குறும்பிலும் இதழ்கள் மெல்ல புன்னகை பூத்தது.

மகனிடமும் முத்தத்தை பெற்றுக் கொண்டவள், பேசினால் கூட இந்த உணர்வும், இந்த ரம்மிய சூழ்நிலையும் கலைந்து விடுமோ என்றெண்ணி, மௌனமாகவே அந்நாளைக் கடத்தினாள்.

அவனும் அதன் பிறகு அவளை தொந்தரவு செய்யவில்லை. அவளுக்கே உரித்தான உணர்வுகளை உணர வைக்க தனிமை கொடுத்தான்.

மறுநாள், எப்போதும் போல பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர். இப்போது வான்மதியும் சற்று இலகுவாகி இருக்க, அவ்வப்பொழுது ஆரவை நிமிர்ந்து பார்த்தபடியும் பின் குனிந்து கொள்வதுமாகவும் இருந்தாள்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன், அவள் முன்னே நின்று “என்னவாம்…?” என ஒரு புருவம் உயர்த்தி எகத்தாளமாகக் கேட்டான்.

ஒரு நொடி அவனின் பாவனை ரசிக்க வைத்தாலும், அதனை மறைத்து, “ஒண்ணும் இல்லையே!” என்றாள் மறுப்பாக.

“ப்ச், எதுக்கு என்னை பார்த்துக்கட்டே இருக்க. ஏதாவது சொல்லனுமா?” என்று அவளை ஆராய்ந்தபடி கேட்க, அவள் முகத்தை சுருக்கிக்கொண்டு, “நேத்து குடிச்சீங்களா?” எனக் கேட்டாள்.

ஆரவோ புரியாமல் விழி சுருக்கி, “இல்லையேடி” என்றிட, நிமிர்ந்து பார்வையால் சுட்டவள், “பொய் சொல்லாதீங்க ஆரவ்” என்றாள்.

அவனுக்குத் தான் புன்னகை சூழ, “ஏய் பைத்தியம். நிஜமா நான் குடிக்கலைடி.” என்றதில், நம்பாத பார்வை பார்த்திட, “நம்புடி. நான் அரிச்சந்திரனோட அப்டேட்டட் வெர்ஷன்.” என்று முத்தமிடுவது போல் உதட்டைக் குவித்தான்.

சற்றே சிவந்தவளுக்கு, சிரிப்பும் வர, இருந்தும் தன்னை அடக்கிக்கொண்டு, “அப்பறம் ஏன் உங்க கண்ணு சிவந்து இருக்கு?” என உதட்டை சுளித்து வினவ,

அதில் அவன் தான் முகம் மாறி, எச்சிலை விழுங்கியபடி, “நைட்டு தூக்கம் வரல” என ஏதோ வாய்க்கு வந்ததை உளறிவிட்டு, “லேட் ஆச்சுடி. கிளம்பலாம்” என்றான் அவளை பாராமல் தவிர்த்து.

“சோ, தூக்கம் வராம? என்ன பண்ணீங்க? குடிச்சீங்க அப்படி தான” கோபத்துடன் கேட்டவளை, அழுத்தமாக பார்த்தவன், “நான் குடிக்கல. இனிமே குடிக்கவும் மாட்டேன். நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்” என இறுக்கத்துடன் உரைத்தவனின் தோரணையே, ‘இன்னொரு வார்த்தை இதை பற்றி பேசினால், பொறுமை இழந்து விடுவேன்’ என்றதை உணர்த்த, அத்துடன் வாயை மூடிக் கொண்டாள்.

அலுவலகம் சென்றதுமே, வான்மதி கவினின் முன் தான் நின்றாள்.

“இனிமே அவருகிட்ட வண்டியை கொடுக்காதீங்க சார்.” என உத்தரவாகக் கூறியவளை, அவன் குழப்பத்துடன் ஏறிட்டு, ‘வண்டியா? அது இன்னும் சர்விஸ் முடிஞ்சு வரவே இல்லையே’ என்று தனக்குள் நொந்தவன், “எவரு கிட்ட?” என்றான் கிண்டலாக.

அவள் தான், ஒரு கணம் விழித்து விட்டு, பின் தயக்கத்துடன் “ஆ ஆரவ்கிட்ட.” என்றதில்,

“ஆ. ஆரவ்ன்னு இங்க யாரும் இல்லையே. எனக்கு தெரிஞ்ச ஆரவ்க்கு இன்ஷியலும் ஆ இல்லை. நீ யாரை சொல்ற?” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

அதற்கு பதில் கூறாமல் முறைத்து விட்டு, நகர எத்தனித்தவள், அவனின் கையைக் கண்டு அப்படியே நின்று விட்டாள். ஆரவ்க்கு போன்றே அவனின் புறங்கையிலும் காயமாக இருக்க, அதனைக் கூர்மையாக பார்த்தவள், கவினை புருவம் சுருக்கி ஆராய, அவன் வேகமாக கையை டேபிளுக்கு அடியில் மறைத்துக் கொண்டான்.

யோசனையுடன் வெளியில் வந்தவள், எதிர்ப்பட்ட ஹேமாவிடம், “ஆரவும், கவின் அண்ணாவும் அடிதடி சண்டை எதுவும் போட்டாங்களா” எனக் கேட்க, அவளோ விழித்து, “என்னது அடிதடி சண்டையா? அப்படி எதுவும் இல்லையே மதி.” என்றாள் குழம்பி.

“ஓ! இல்ல ரெண்டு பேர் கையும் காயமா இருந்துச்சு. அதான் கேட்டேன்.” என்றவள் வேலையை தொடர, ஹேமா தான், இருவரிடமும் வந்து அவர்களின் கையை பார்த்து அதிர்ந்தாள்.

“ஏண்டா இப்படி காயமா இருக்கு?” அவள் புரியாமல் வினவ, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “சொல்லி தொலைங்கடா” என்றாள் கடுப்பாக.

அந்நேரம், சுதாகர் அங்கு வர, ஹேமாவைக் கண்டதும் வந்த வேலையை மறந்து விட்டு, அவளை நோட்டமிட, அவளும் இத்தனை நேரம் பொங்கியதை மறந்து விட்டு, ‘ஐ… நம்ம ஆளு. ஆபிஸ் பியூன் மாதிரி தினமும் வந்து நமக்கு காட்சி தரானே.’ எனக் குதூகலிக்க, அப்போது தான், அவன் புறங்கையிலும் காயம் இருப்பதை கண்டு துணுக்குற்றாள்.

மூவரையும் சந்தேகமாக பார்த்தவள், சிந்தனையுடன் வெளியில் வந்து வான்மதியிடம், “மதி. உன் அண்ணன் கையிலயும் காயமா தான் இருக்கு. மூணு பேர் போக்கே சரி இல்ல. ஆரவ நல்லா நாலு கும்மு கும்மி விசாரி.” என போகிற போக்கில், ஆரவை கோர்த்து விட்டு சென்றாள். வான்மதிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

அன்று மதியம், எப்போதும் போல், ஆரவின் அறையிலேயே, அனைவரும் உணவு உட்கொள்ள, லயாவும் தினமும் அலுவலகம் வந்து உதவி செய்கிறேன் பேர்வழி என, அவர்களுடனே இருந்தாள்.

ஆரவ், “நீ டெல்லி கிளம்பல…?” என நக்கலாகக் கேட்க,

“அஸ்கு புஸ்கு. உனக்கு டைவர்ஸ் வாங்கி குடுக்காம நான் போகமாட்டேன்.” என்று அழகு காட்டிட, அவளை முறைத்தவன், “பெஸ்ட் ஆஃப் லக்” என்க, வான்மதி குனிந்த தலை நிமிராமல் உணவை உட்கொண்டாள்.

அவளை கேலியுடன் பார்த்த லயா, “உன் பொண்டாட்டி அமைதியா இருக்கிறதை பார்த்தா அவளுக்கு ஓகே தான் போல டைவர்ஸ்க்கு. என்ன மதி கரெக்ட் ஆ?” என அவள் வாயைக் கிளற, அதில் மெதுவாய் நிமிர்ந்தவள், “அவருக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே” என்றாள்.

“டேய். அவளுக்கும் ஓகே வாம். நீ என்ன சொல்ற?” என லயா ஆரவிடம் வினவ, அவனோ வான்மதியை பக்கவாட்டில் திரும்பி முறைத்து விட்டு, “அவளுக்கு ஓகேன்னாலும் எனக்கு ஓகே இல்ல.” என்றான் அழுத்தமாக.

அதில் வான்மதியின் இதழ்கள் புன்னகையைத் தத்தெடுக்க, லயா அவளின் புன்னகையில் சற்றே நிம்மதியாகி கவினுக்கு கண்ணைக் காட்டினாள்.

அவன் தயக்கத்துடனே, “டேய்… மச்சான்… அன்னைக்கு நீ மட்டும் தான எனக்கு சத்தியம் பண்ணுன? உன் பொண்டாட்டி எப்போடா பண்ணுவா?” என கோபமாக கேட்பது போல கேட்க,

ஆரவ் ஒரு கணம் வான்மதியை அளந்து விட்டு, “அவகிட்ட சத்தியம் வாங்குறது உன் தலைவலி…” என்றான் தோளைக் குலுக்கி.

“சத்தியம் பண்ணனும்ன்னு அவசியம் இல்ல. என் புருஷனையும் என் பையனையும் விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்.” என்று அழுத்தம் திருத்தமாக கவினைப் பார்த்து வான்மதி கூறிட, அதில் மூவரின் இதழ்களும் மர்மமாக புன்னகைத்துக் கொண்டது.

அத்தியாயம் 23

ஹேமா தான், வாயில் சாதத்தை வைத்துக்கொண்டு அதனை விழுங்கவும் இயலாமல், மறு வாய் வைக்கவும் இயலாமல், ‘இவனுங்க என்ன தான் பேசுறானுங்க.’ என்று புரியவும் செய்யாமல் நால்வரையும் மாறி மாறி பார்த்திருந்தாள்.

அவள் பேச வரும் முன்னே, கதவை புயல் வேகத்தில் திறந்து கொண்டு உள்ளே வந்த தன்விக், அனைவரையும் தீயாக முறைத்தான்.

லயா விழி விரித்து, “தன்வி. நீ இன்னும் சாகலையா? நான் உன்ன காணோம்ன்னு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி பண்ணிட்டேனேடா” என்று வாயில் கை வைக்க,

“ஏன் அதை ஊர் முழுக்க ஒட்ட வேண்டியது தான. ஒரு மனுஷன் ரெண்டு நாளா உங்க முன்னாடி வரலையே. அந்த பச்சை மண்ணு எங்க எவகிட்ட சிக்கி இருக்குன்னு கண்டுபிடிக்காம, கொய்யாலைங்க சாப்பிட்டுக்கிட்டா இருக்கீங்க” என்று மேலும் கீழும் மூச்சு வாங்கினான்.

ஆரவோ, “எவகிட்ட மாட்டி இருக்க நீ?” என சந்தேகமாக பார்க்க,

அவனோ, வழியாத நீரை துடைத்த படி, “மச்சான் என்னை காப்பாத்துடா. என்னை புடிச்சு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்கடா” என்றான் கவினின் தோளில் முகத்தை புதைத்து.

அதில் ஐவருமே திகைக்க, ஹேமா நெஞ்சை பிடித்தாள்.

“என்னது கல்யாணம் ஆகிடுச்சா? அப்போ எனக்கு பட்டு சேலை எங்கடா?” என்று அவள் கவலையில் குறியாக இருக்க, அவளை கடுப்பாகி முறைத்த தன்விக், “இங்க வாழ்க்கையே அந்தரத்துல தொங்குதுன்னு சொல்றேன். பன்னாடை உனக்கு பட்டு சேலை வேணுமா” என்றதில்,

கவின், “என்னடா சொல்ற? உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சா?” என்றான் புரியாமல்.

“அட ஆமா டா. திடீர்னு அப்பா போன் பண்ணி வர சொன்னாரு. நானும் போயிட்டு உடனே வந்துடுலாம்னு தான் உங்ககிட்ட சொல்லாம போனேன். அங்க போனா, எனக்கு ஜாதகத்துல கட்டம் சரி இல்ல, கட்டடம் சரி இல்லன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க.” என்று சோகமாக கூறியதில், வான்மதி தவிர மற்றவர்கள் சிரித்து விட்டனர்.

ஆரவ், “கங்கிராச்சுலேஷன்” என வாழ்த்து கூற, “டேய்… வயித்தெரிச்சலை கிளப்பாதடா. இந்த மைனா படத்துல போலீஸோட பொண்டாட்டியா ஒரு பொண்ணு வருமே. எப்போ வீட்டுக்கு வருவன்னு சைக்கோ மாதிரி…

அந்த மாதிரி தாலி கட்டுன நிமிஷத்துல இருந்து, எனக்கு டைவர்ஸ் வேணும். டைவர்ஸ் வேணும்ன்னு என்னை டார்ச்சர் பண்றா மச்சான்.” என்றவன், கவனிடம் திரும்பி, “மச்சி, என் ரெசியூம சிங்கிள்ல இருந்து டிவோர்ஸ்ட்ன்னு அப்டேட் பண்ணுடா” என்றான் கண்ணில் விரல் வைத்து.

லயாவோ, “ஏண்டா டைவர்ஸ் கேட்குறா? ஒருவேளை வேற யாரையாவது லவ் பண்றாளோ?” எனக் கேட்க, “சே சே அதெல்லாம் இல்ல” என்று உடனடியாக மறுத்தான்.

“உனக்கு மாதிரி அவளுக்கும் திடீர் கல்யாணம்ன்றனால அக்செப்ட் பண்ணிக்க மாட்டுறாளோ” ஹேமா குழப்பமாக கேட்க, “அட இல்லடி. அதெல்லாம் இல்ல.” என்றான் வேகமாக.

கவின் கடுப்பாகி, “டேய். என்னடா எதை கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்ற. இதெல்லாம் இல்லைன்னு உனக்கு எப்படி தெரியும்” என எகிற,

“ஐயோ! அவ என் அத்தை பொண்ணுடா. அவளுக்கு லவ் எல்லாம் இல்லன்னு எனக்கே தெரியும். அது போக, எப்படியும் அவளை என் தலைல தான் கட்டுவாங்கன்னு எனக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும். வெளிப்படையா சொன்னது இல்லைன்னாலும், வீட்ல சின்ன வயசுலயே பேசி வைச்சது தான்.” என்றவன் நண்பர்களின் முறைப்பைக் கண்டு நெளிந்தான்.

ஹேமா கன்னத்தில் கை வைத்து, “அடப்பாவி. இதுவரை இப்படி ஒரு டிராக் ஓடுறதை சொல்லவே இல்லையேடா நீ. உண்மைய சொல்லு. வீட்ல தான் கல்யாணம் பண்ணி வைச்சங்களா. இல்ல நீயே எங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டியா?” என்று முறைக்க,

“ப்ச். நீ நினைக்கிற அளவுலாம் இல்லடி. அத்தை பொண்ணுன்னாலும் நானே அவளை லீவ் டைம்ல தான் பார்ப்பேன். நீங்க கூட ஊருக்கு வர்றப்போ அவளை பார்த்து இருப்பீங்க. அவளும் இங்க தான் வக்கீலா இருக்கா. பட் லவ் எல்லாம் இல்ல.” என்றான் வேகமாக.

லயா, “ஓ! லவ் இல்லைல. அப்போ டைவர்ஸ் பண்ணிடு” என்று வார, அதில் திக்கென்று விழித்தவன், “அது… அது… லவ் தான் இல்ல. அதுக்காக…” என திணறினான்.

“ம்ம்… அதுக்காக?” ஆரவ் அடக்கப்பட்ட சிரிப்புடன், இன்னும் அவனை சோதிக்க, “லவ் தான் இல்ல. பாசம், அன்பு, நேசம் இதெல்லாம் இருக்குல்ல” என்று பல்லைக்காட்ட, ஆரவ் புருவம் உயர்த்தினான்.

வான்மதி பொங்கிய சிரிப்புடன், “அப்போ ஏண்ணா அவங்க டைவர்ஸ் கேட்குறாங்க?” எனக் கேட்க,

“அது தான எனக்கும் தெரியல” என பாவமாக பார்க்க, ஹேமா, “சரி சரி. உன் அன்பு பாசம் நேசம் கொண்ட உன் அத்தை பொண்ணை காட்டு, எங்க அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ பார்க்குற மாதிரி இருக்காளான்னு பாக்குறோம்” என்று லயாவிற்கு ஹை ஃபை கொடுக்க,

“இந்த உலக அழகிங்க தொல்லை தாங்க முடியல” என முணுமுணுத்தபடி, அவன் போனை எடுத்து காட்டினான்.

இருவரும் புகைப்படங்களையும் தன்விக்கையும் பார்த்து மாறி மாறி முறைத்து “டேய், லீவ் டைம்ல மட்டும் தான் பார்ப்பேன்னு சொன்ன. என்னடா… வளைச்சு வளைச்சு ரெண்டு பேரும் செல்ஃபி எடுத்து இருக்கீங்க” என்க, கவின் “எங்க காட்டு” என அவனும் பார்த்தான்.

‘காலரி’ முழுக்க, அவனின் அத்தை பெண்ணுடன் நிற்கும் புகைப்படங்களே இருந்ததில் கவின், “டேய்… இவ்ளோ நாளா சிங்கிள்ன்னு என்னை ஏமாத்தி, என்னையும் சிங்கிளாவே இருக்க வைச்சுட்டியேடா துரோகி.” என்று மூச்சிரைக்க,

அவனோ “நீ வேற ஏண்டா. ஜஸ்ட் அத்தை பொண்ணுன்னு போட்டோ எடுத்தேன். அது தப்பா” என்றான் உதறலாக.

ஆரவும், அந்த போனை வாங்கி பார்க்க, வான்மதியும் எட்டிப் பார்த்தாள். பார்த்த கணத்தில் அவள் விழிகள் விரிய, “மோனிஷா? இவளா உங்க அத்தை பொண்ணு” என்றாள் ஆச்சர்யமாக.

“உனக்கு இவளை தெரியுமா?” தன்விக் வினவ,

“ம்ம். இவ ஸ்கூல்ல இருந்து என் பெஸ்ட் ப்ரெண்ட்…” என்றவள், “நான் வேணும்ன்னா பேசிப் பார்க்கட்டா அண்ணா?” எனக் கேட்டாள்.

அவனோ மிரண்டு, “எதுக்கு அவள் அதுக்கும் சேர்த்து என்னை உதைக்கவா?” என்றிட, “சே சே அப்படி எல்லாம் பண்ண மாட்டா. நான் பேசுறேன்.” என்றதில்,

ஆரவ், “அதான் இவ பேசுறேன்னு சொல்றாள்ல. வா… உன் லவ் இல்லாத அத்தை பொண்ணை பார்த்துட்டு வருவோம்” என்று தோள் மீது கை போட்டு கிட்டத்தட்ட பலியாடாக இழுத்துச் சென்றான்.

தன்விக்கும் ஒரு அபார்ட்மெண்டில் தான் வாசிக்க, ஆறு பேரும் வீட்டினுள் நுழைந்தனர்.

தன்விக், “ரூம்குள்ள தான் இருக்கா. டைவர்ஸ் தந்தா தான் ரூமை விட்டு வெளிய வருவேன்னு தர்ணா போராட்டம் பண்ணிட்டு இருக்கா மதி.” என்று கிசுகிசுக்க, அதில் வாயை பொத்தி சிரித்தவள், மோனிஷாவின் அறைக்கு சென்றாள்.

வான்மதியைக் கண்டதும், கோபத்தில் இருந்த மோனிஷாவின் முகம் மினுமினுக்க, ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டாள்.

“மதி… நீ என்னடி இங்க?” எனப் புன்னகையுடன் கேட்க,

வான்மதி தான், “கல்யாணம் ஆச்சுன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல. நீ என்னை கேள்வி கேக்குறியா?” என்றாள் முறைப்புடன்.

அதில் அவள் முகம் மீண்டும் இருண்டிட, “உனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

ஒரு கணம் தயங்கிய வான்மதி, “தன்விக் அண்ணாவோட ப்ரெண்ட தான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்” என்றாள் மெதுவாக.

மோனிஷா தான் சற்றே அதிர்ந்து, “கல்யாணமா? எப்போ மதி? சொல்லவே இல்ல. நீ யாரை சொல்ற?” எனக் கேட்டாள் குழப்பமாக.

“ஆரவ்…” அவள் அவன் பெயரை மட்டும் உதிக்க,

“ஆரவ் அண்ணாவையா கல்யாணம் பண்ணிருக்க. ஆனா, அவங்களுக்கும் இது செகண்ட்…” என்று ஆரம்பித்தவள், நிலை உணர்ந்து நிறுத்திக்கொண்டு,

“வாவ். செம்ம ஹேப்பி மதி. ஏன் என்கிட்ட சொல்லல. ஆரவ் அண்ணாவை ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்து இருக்கேன். தன்வி மாமாவும், அவங்களை நினைச்சு ஊருக்கு வரும்போதெல்லாம் புலம்புவான். பட், இதை அந்த பக்கியும் என்கிட்ட சொல்லல பாரேன்.” என மகிழ்ந்தவள், அவளின் விவாகரத்தின் போது முழுக்க முழுக்க அவளுடன் தான் இருந்தாள்.

விக்ராந்தின் மீது நடக்கும் வழக்கையும், அவள் தான் நடத்திக் கொண்டிருக்கிறாள். ஆனால், இன்னும் அவன் அதில் சிக்காமல் தண்ணீர் காட்டிக்கொண்டு தான் இருக்க, இந்நிலையில் தோழியின் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல் எண்ணி அவளுக்கு நிம்மதியே ஏற்பட்டது.

“என்னை விடு. தன்வி மாமான்னு வாய் நிறைய சொல்ற? அப்பறம் ஏன் டைவர்ஸ் கேட்குற மோனி?” என வான்மதி முறைப்பாய் கேட்க,

அதில் வாடியவள், “ஒன்னும் இல்ல விடு.” என்றாள்.

“ப்ச் சொல்லு. பாவம் அண்ணா ரொம்ப ஃபீல் பண்றாங்க தெரியுமா?” என்றதில், அவளிடம் அமைதி நிலவ, “வாயை திறந்து சொல்லு மோனி” என்றாள் அதட்டலாக.

“அது… அது… கொஞ்சம் பயமா இருக்கு மதி.” என்றவளை புரியாமல் பார்த்தவளிடம்,

“நான் வக்கீல் தான். எத்தனையோ பிரச்சனைய தைரியமா ஃபேஸ் பண்றேன் தான். ஏன், தினமும் ஏதாவது புது புது பிரச்சனை உள்ள மக்களை சந்திக்கிறேன் தான். தன்வி மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் தான். ஆனா… இது எல்லாத்தையும் மீறி… எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு மதி.

உன் வீட்ல உனக்கு என்ன குறை சொல்லு… பணம் இல்லையா. பாசம் இல்லையா. படிப்பு இல்லையா. அழகு இல்லையா. எல்லாமே இருந்தும்… ஒரு சைக்கோவால நீ எவ்ளோ கஷ்டப்பட்ட…? லவ்க்கும் லஸ்ட்க்கும் வித்தியாசம் தெரியாத சேடிஸ்ட்கிட்ட மாட்டிக்கட்டிட்டு, நீ பட்ட அவஸ்தையை நான் கண் முன்னாடி பார்த்தும், எனக்கும் பயம் வரலைன்னா தான் ஆச்சர்யம்.

நான் தன்வி மாமாவை தப்பு சொல்லல. அவன் நல்லவன் தான். ஆனா… இந்த திடீர் கல்யாணமும், மேரேஜ் லைஃப்னால நீ அனுபவிச்ச பிஸிக்கல் டார்ச்சரும் எனக்கு ஞாபகம் வந்து பயமும் வந்துருச்சு மதி. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அதான் டைவர்ஸ் கேட்டேன்.” என்று கூறி முடித்தவள் முகத்தை தொங்க போட்டு அமர்ந்திருக்க,

வான்மதி தான், “உன்னை சப்புன்னு அறையலாம்ன்னு தோணுதுடி. எதை எதோட கனெக்ட் பண்ற? இதான் உன் பிரச்சனைன்னா தன்வி அண்ணாட்ட சொல்லிருக்கலாமே. அவரே உன்னை புருஞ்சுப்பாரு. நீ என்னன்னா, போயும் போயும் அந்த விக்ராந்த் ஓட போய் இவங்களை கம்பேர் பண்ற.” என்று பல்லைக்கடித்து அதட்டியவள்,

“பட்ட நானே, இப்போ கல்யாணம் பண்ணி நல்லா தான் இருக்கேன். எல்லாத்தையும் மறக்க நினைக்கிறேன். நீ கையில கிடைச்ச நல்ல லைஃபை, தேவையில்லாமல் கெடுத்துக்காத அவ்ளோ தான் சொல்லுவேன். எதுவா இருந்தாலும் தன்வி அண்ணாகிட்ட பேசு. இல்லன்னா, ஆரவ்கிட்ட சொல்லி நான் தன்வி அண்ணாட்ட இதை பத்தி எடுத்து சொல்ல சொல்றேன்.” என்றிட, அவள் பதறினாள்.

“வேணாம் வேணாம். நானே பேச ட்ரை பண்றேன். அப்பறம் ஏன் என்கிட்ட சொல்லலைன்னு அவன் சண்டைக்கு வருவான்.” என்றதில் கேலியாய் புன்னகைத்த வான்மதி, “கண்டதை யோசிக்காம ரிலாக்ஸா இரு” என்று மேலும் தோழிக்கு அறிவுரையை வழங்கிட, அப்போது தான், தன்விக்கின் நண்பர்களும் வந்திருக்கிறார்கள் என்று அறிந்தவள், வெளியில் வந்து அனைவரையும் வரவேற்றாள்.

ஹேமாவும் லயாவும் ஒரு சேர “வாழ்த்துக்கள்” என்க, அதில் வெட்க புன்னகை பூத்தவள், “தேங்க்ஸ். டூ மினிட்ஸ். காபி கொண்டு வரேன்.” என்று வேகமாக அடுக்களைக்கு சென்றவளை எட்டாம் அதிசயமாய் பார்த்திருந்தான் அவளின் கணவன்.

“எப்படி மதி. நேத்துல இருந்து இடி விழுந்தவ மாதிரி இருந்தா. இப்போ எப்படி இந்த சேஞ்ச்?” என வியப்பாக கேட்க,

“அவள் கொஞ்சம் குழப்பத்துல இருந்தா, இப்போ சரி ஆகிட்டா.” என்று முடித்து விட்டவளை அவன் குழப்பமாக பார்த்து, “புரியல?” என்றான்.

அதில் வான்மதி சங்கடமாக ஆரவைப் பார்க்க, அவனும் ஒரு கணம் அவளை கூர்மையாக ஊடுருவி விட்டு, “உன் டைவர்ஸ் கேஸ்க்கு ஹெல்ப் பண்ணது இந்த மோனிஷாவா மதி?” என சரியாக கேட்க, அவள் ஆமோதிப்பாக தலையாட்டினாள்.

“அதுக்கும் என்கிட்ட டைவர்ஸ் கேட்டதுக்கும் என்னடா சம்பந்தம்?” என இன்னும் புரியாமல் தன்விக் வினவ,

வான்மதி, “அது… என் விஷயத்துனால அவ கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டா. அதான்…” என இழுத்ததில், ஆரவிற்கு புரிந்து விட, அப்போதும் தன்விக், “இப்பவும் எனக்கு புரியல மதி.” என்றான் குழப்பத்துடன்.

லயா தான், “புரியலைன்னா உன் பொண்டாட்டிக்கிட்ட கேளுடா. அவகிட்ட கேட்க துப்பில்ல. இங்க வந்து இந்த பச்சை மண்ணை கேள்வி கேட்டுட்டு இருக்கான்.” என்று கடிந்தவள்,

“மதி. உன் பையன் என் கையை உடைச்சுடுவான் போல. இவனை பிடி.” என்று அத்தனை நேரம் கையில் வைத்திருந்த இஷாந்தை அவளிடம் கொடுத்து அவளை திசை திருப்ப முயல, வான்மதி அவளை கனிவாய் பார்த்து விட்டு, அவனை வாங்கிக்கொண்டு மோனிஷாவிடம் சென்று விட,

ஹேமா தான் யோசனையுடன், “எனக்கும் புரியல” என்றாள்.

அதில் மற்ற மூவரும் அமைதி காக்க, கவின் மெல்லிய குரலில் நடந்ததை எடுத்துரைத்தான்.

தன்விக்கும் ஹேமாவும் அதிர்ச்சியில் சில நொடிகள் அசையவே இல்லை. தன்விக், ஆரவைத் தாவி கட்டிக்கொண்டு, “ஏன்டா சொல்லல. இவ்ளோ நடந்து இருக்கு… அந்த பொண்ண ஏண்டா அனுப்பி விட்ட.” என்றவனுக்கு, நண்பனின் வலியே அப்போது தான் உறைத்தது.

இருவரின் கடந்த காலம் பற்றியும் மேலோட்டமாக தான் ஆரவ் கூறி இருந்தான். ஆனால், ஹேமாவிற்கு விக்ராந்த் என்ற பெயரைக் கேட்டதுமே முகம் அருவருப்பில் தோய,

“அவள் லைஃபை பத்தி நீ முழுசாவே சொல்ல வேணாம் கவி. அவன் பேர கேட்டாலே புரியுது, அவள் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பான்னு.” என்றவளுக்கு சினம் தலைக்கு ஏறியது.

“நான் கிளம்புறேன்” என்றவள், ஆரவை பாராமல் கிளம்பி விட, கண்ணோரம் சிறு நீரும் துளிர்த்தது அவளுக்கு.

“ப்ச்… லயா… அவளை பாரு.” என ஆரவ் வருந்திட, “விடுடா. அவள் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவா.” என்றவள், தன்விக்கை பார்க்க அவன் முகமோ தெளிவின்றி கலங்கி இருந்தது.

‘ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல ஸ்டார்ட் பண்ற லைஃப் கூட இன்டரஸ்டிங் – ஆ இருக்கும்டா’ என தேவையற்று ஆரவை ஏற்றி விட்டு, அவன் வாழ்க்கையில் இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்தி விட்டோமே என தன்விக் தன்னை நொந்து போக, ஆரவ் அவன் முதுகை தட்டி, “எல்லாமே முடிஞ்சுருச்சு. இதை இப்படியே விட்டுட்டு தன்வி” என்றான் அதட்டலாக.

“எப்படிடா? எல்லாமே முடிஞ்சுருச்சா? முடிஞ்சுருச்சுன்னு இன்னும் நீ நம்புறியா?” அவன் தவிப்புடன் கேட்க, ஆரவ் தேகம் இறுக, “முடியும்… எல்லாத்தையும் சீக்கிரமே முடிச்சுருவேன்.” என்றான் முகத்தில் ஜொலித்த ரௌத்திரத்துடன்.    

தன்விக் பெருமூச்சுடன், “மதிக்கு தெரியுமா? நீ லவ் பண்ணது… மத்த விஷயம் எல்லாம்?” எனக் கேட்க, மறுப்பாக தலையசைத்தான்.

“எப்போடா சொல்ல போற?” ஆதங்கத்துடன் தன்விக் வினவ, “சொல்ற ஐடியா இல்ல” என்றான் அசட்டையாக.

அதில் தன்விக் தான், கவினையும் லயாவையும் நோக்கி, “என்னடா இது?” என்று வருத்தம் மிக சைகை செய்ய, கவின் ‘அவன் பார்த்துப்பான்’ என்று கண்ணசைத்தான்.

அந்நேரம், கையில் காபி கோப்பையுடன் மோனிஷா வர, உடன் வந்த வான்மதியை கண்டதும் நொடிப் பொழுதில் கோப முகத்தை மறைத்து, இதழ்களில் புன்னகையைத் தவழ விட்ட ஆரவ், “இஷுவை குடு கண்ணம்மா. கை வலிக்க போகுது.” என அவள் மறுக்க மறுக்க வாங்கி கொண்டான்.

“ஹேமா எங்க ஆரவ்?” வான்மதி கேட்டதில், “வீட்ல இருந்து போன் வந்துச்சு அதான் போய்ட்டா” என்றான் பொய்யாக.

மோனிஷாவைக் கண்டதும் கலங்கி இருந்த கண்ணை துடைத்துக் கொண்ட தன்விக், அவளை பார்க்காமல் காபியை மட்டும் எடுத்துக்கொள்ள, சூழ்நிலையை இலகுவாக்க லயா தான்,

“எம்மா… இனிமேவாச்சு டைவர்ஸ் கேட்காம இருப்பியா.” என்று மோனிஷாவை நக்கலடிக்க, அவள் அசடு வழிந்தாள்.

கவினும், “ஒருவேளை வக்கீலுக்கு கேஸ் எதுவும் கிடைக்கல போல லயா. அதான் அவங்க கேஸை அவங்களே நடத்த பிளான் பண்றாங்க போல.” என்று கேலி செய்ய,

“அப்படி எல்லாம் இல்ல அண்ணா.” என்று சிணுங்கிய மோனிஷா, “அப்படி கேஸ் நடத்துணும்ன்னா நான் ஏன் டைவர்ஸ் கேட்க போறேன். இவனை போட்டு தள்ளிட்டு, கொலை கேசா நடத்துனா இன்னும் ஸ்ட்ராங் – ஆ இருக்கும்ல” என்று தன்விக்கை கிண்டலடிக்க,

அவன் தான், “அடிப்பாவி… உன்ன கட்டுன பாவத்துக்கு என்னை போட்டு வேற தள்ளுவியா?” என அவளை அடிக்க துரத்தியதில் சிரிப்பலை பரவ, சூழ்நிலையும் இலகுவானது.

ஆரவ் தான், சுற்றி நடப்பதை உணராமல் வான்மதியின் மீது ரசனைப் பார்வையை பதித்து இருக்க, அவளும் அவனை தான் இமைக்காமல் பார்த்து விட்டு, “என்ன” என்று புருவம் உயர்த்தி வினவினாள்.

அவன், மென்னகையுடன் காற்றில் இதழ் குவித்து, “ஒன் ஸ்வீட் கிஸ்?” என வாயசைக்க, சிவந்து போனவள், “ஆரவ்… எல்லாரும் இருக்காங்க.” என்று பல்லைக்கடித்து அவளும் வாயசைக்க, “ஐ டோன்ட் கேர்…” என்று மூக்கை சுருக்கி கண்கள் சிமிட்டியவனை, வெகுவாய் ரசித்திருந்தது வான்மதியின் விழிகள். 

தேன் தூவும்!
மேகா!

Next ud on monday🤩

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
54
+1
228
+1
3
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.