Loading

கயல் எதிர்பாராத நேரத்தில், ஒரு கார் அவளைக் கடத்திக் கொண்டு செல்ல, கயல் “அஸ்வின்” எனக் கத்தினாள்.

அஸ்வினுக்கோ சில நொடிகள் ஒன்றுமே ஓடவில்லை.

அவளைக் கடத்தி சென்ற கார், நேராக ஒரு இடிந்த வீட்டினுள் செல்ல, அதில் இருந்து இறங்கிய சீனிவாசன் கயலை இழுத்து வந்து, அவளது கையையும் காலையும் கட்டி போட்டார்.

கயலுக்கோ அவர் யாரென்று தெரியாததால், “யாரு நீ? விடு என்னை” என்று அவரிடம் இருந்து தப்ப முயன்றும் அது முடியாமல், “விடு என்னை! உனக்கு என்ன வேணும்” என்று கத்தினாள்.

அப்படியே அருகில் பார்க்க அங்கு கார்த்தி மயங்கிய நிலையில் கட்டி போட்டு இருப்பதைக் கண்டதும், “கார்த்தி கார்த்தி… கார்த்தி எந்திரி கார்த்தி” என்று அவனைக் கத்தி எழுப்பினாள்.

சீனிவாசன் தான் இளக்கார நகையுடன் “அந்த ஜீவாவை ஒண்ணும் இல்லாம ஆக்குறது எவ்ளோ நாள் கனவு தெரியுமா இது…  இப்போ… இப்போ நீங்க ரெண்டு பேரும் இல்லாம அவன் பைத்தியக்காரனா அலைய போறான்” என்று வெறியுடன் கூற, அவளுக்கு அப்போதும் புரியவில்லை.

சீனிவாசன் கையில் துப்பாக்கியை எடுத்து, கார்த்தியின் புறம் குறி காட்ட, கயல் பதறி, “நோ நோ ப்ளீஸ் வேணாம் அவனை விட்டுடு… ப்ளீஸ்.” எனக் கெஞ்ச,

அவரோ, “அப்போ உன்னை முதல்ல சுடவா…” என்று அவளை நோக்கி குறி வைக்க, அப்போது தான் அஸ்வின் அங்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும் சற்று நிம்மதி ஆனவள், “அஸ்வின் எங்களை காப்பாத்து அஸ்வின்…” என்க,

அவன் “அப்பா நான் தான் பார்த்துக்குறேன்னு  சொன்னேன்ல நீங்க ஏன் கடத்துனீங்க…” என்று சலித்தான்.

அவனின் “அப்பா” என்ற வாசகத்தில், அதிர்ந்த கயல், அவர் தான் சீனிவாசன் என உணர்ந்து கொண்டாள்.

“இந்த ரெண்டு பேரையும் கொன்னா தான் என் மனசு ஆறும்.” என்று கயலை சுட போக,

அவள், “அஸ்வின் அவரை நம்பாத அஸ்வின். உன் அம்மா இறந்ததுக்கு காரணமே அவருதான். உங்க அம்மா ட்ரீட்மெண்ட்க்கு ஜீவா கட்டுன பணத்தை கையாடல் செஞ்சு, உங்க அம்மாவை கடைசியா ஒரு தடவை கூட பார்க்கவிடாம பண்ணுனது இவரு தான். தயவு செஞ்சு என்னை நம்பு” என்று கெஞ்ச, அப்போது தான் கார்த்தி மெல்ல கண் விழித்தான்.

தான் எப்படி இங்கு வந்தோம் என்று புரியாமல் பார்த்தவன், ஒரு வாக்கிங் சென்று வரலாம் என்று வீட்டை விட்டு வெளியில் வந்தது மட்டும் தான் நினைவு இருக்கிறது. மேலும் கயலை கட்டி போட்டிருப்பதையும், அவளை நோக்கி சீனிவாசன் துப்பாக்கியுடன் நிற்பதையும் பார்த்தவன் அதிர்ந்து போக, சீனிவாசன், “அஸ்வின் இவளை எப்படி ட்ரெயின் பண்ணிருக்கான் பாரு அவன். உன்கிட்டயே என்னை பத்தி தப்பா பேசுறா” என ஏற்றி  விட,

கார்த்தி கோபத்துடன், “நிறுத்துங்க. கயலை ஒன்னும் பண்ணிடாதீங்க. உங்களுக்கு கோபம் என்மேலேயும் அண்ணன் மேலயும் தான அவளை விட்ருங்க.” என்றவன்,

சீனிவாசனை நோக்கி “என்னை மலைல இருந்து தள்ளிவிட்டது பத்தலையா உனக்கு. அன்னைக்கே என் அண்ணாகிட்ட இதை சொல்லிருந்தா உன்னை இந்நேரம் உயிரோடயே விட்டிருக்க மாட்டாரு.” என்று பல்லைக்கடித்து கூற, அதில் கயல் திகைத்து விட்டாள். அஸ்வினும் அதே நிலையில் தான் இருந்தான்.

“ஆமாடா… நான் தான் உன்னை மலைல இருந்து தள்ளிவிட்டேன். நீயா தற்கொலை பண்ணிப்பன்னு நினைச்சேன். ஆனால் நீ முடிவை மாத்திட்ட. அதான் நானே உன்னை தள்ளிவிட்டேன்.” என்றதும்,

கார்த்தி, “நான் தற்கொலை பண்ணிப்பேன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று ஒரு மாதிரியாக பார்த்து கேட்க,

அவர் நக்கல் சிரிப்புடன், “நீ லவ் பண்ணுனியே ரீட்டா. அவள் எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான். நான் உன்னை லவ் பண்றமாதிரி நடிச்சு ஏமாத்தி, உன்னை தற்கொலை பண்ணிக்க வைக்க சொன்னேன்.” என்றதில் “அடப்பாவி” என்ற ரீதியில் கார்த்தியும் கயலும் அவரை வெறித்தனர்.

அஸ்வின் கடுப்பாகி, “அப்பா… உங்களை நான் அவனை எதுவும் பண்ணவேண்டாம்னு தான சொன்னேன். எதுக்கு இப்படி பண்ணுனீங்க” என்று சற்று அதட்டி கேட்க,

அவர் பாவமாக முகத்தை வைத்து, “எல்லாம் உனக்காக தான் அஸ்வின். இவனை கொன்னுட்டா அந்த ஜீவா ஒன்னும் இல்லாம ஆகிடுவான். இவன் நினைப்புல தடுமாறுவான். அப்போ அவனை கொன்னுட்டு, அவன் சொத்தெல்லாம் உன் பேருக்கு மாத்தணும்னு நினைச்சேன். உன்னை அம்போன்னு விட்டவனை…” என்றவரை தடுத்து நிறுத்தியவன்,

“அப்பா,  எனக்கு அவன் மேல கோபம் தான். ஆனால் என் அம்மாவை காப்பாத்த தேவைப்படாத பணம், இப்போ மட்டும் எனக்கு எதுக்கு. பணத்துக்காகவா நான் அவனை கஷ்டப்படுத்தணும்னு நினைச்சேன்.” என்று தலை முடியை அழுந்தக் கோதியவன் “முதல்ல ரெண்டு பேரையும் விடுங்க.” என்றான் எரிச்சலாக.

சீனிவாசன் “முட்டாள்தனமா பேசாத அஸ்வின். இதுக்காகத்தான இத்தனை நாள் வெய்ட் பண்ணுனோம். இப்போ அவனை அழிக்க வாய்ப்பு கிடைச்சும் அதை விட சொல்றியா. இவளை நான் கொல்லத்தான் போறேன்” என்று கயலை சுட போக, அஸ்வினுக்குத் தான், கயல் பேசியதும் கார்த்தி பேசியதும் குழப்பத்தைக்  கொடுத்தது.

பட்டென்று அவரின் துப்பாக்கியை தள்ளி விட்டவன், “அப்பா, அவங்களை விடுங்க. அவன் மேல இருக்குற கோபத்தை நான் அவன் கிட்ட காட்டிக்கிறேன்” என்றவனுக்கு தான் தான் என்ன நினைக்கிறோம் என்றே புரியவில்லை. சீனிவாசன் சொன்னதை கேட்காததும், அவன் சென்று கார்த்தியின் கட்டை அவிழ்க்க முயல, சீனிவாசன், துப்பாக்கியை அஸ்வினின் நெற்றியில் வைத்தார்.

அதில் அஸ்வின் “அப்பா” என்று திகைக்க,

“அப்பாவா? நான் என்ன உன் அம்மாவை கல்யாணம் பண்ணுனேனா அப்பான்னு கூப்பிட்றதுக்கு. அவளோட சொத்தெல்லாம் அடையணும்னு நினைச்சேன். ஆனால் அவள் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி, என்னை அவளுக்கு அடிமையாவே இருக்க வச்சா. உன் அண்ணனை கொன்னுட்டு, அந்த சொத்தெல்லாம் உன் பேருக்கு மாத்தி, அதை அனுபவிக்கலாம்னு நினைச்சேன்.

ஆனால் நீ… ‘நான் பார்த்துக்கறேன் நான் பார்த்துக்குறேன்னு’ கடைசில எனக்கே எதிரா எல்லாத்தையும் பண்ற. இவங்க ரெண்டு பேரோட சேர்ந்து நீயும் போய் சேரு” என்றதில் அவன் தான் துரோகத்தின் பிடியில் சிக்கித் தவித்து போனான்.

இத்தனை வருடமாய், தந்தைக்கு ஈடாய் தன்னுடன் இருந்தவர், கேவலம் பணத்திற்காக தான் தன்னை உடன் வைத்து, தன் அண்ணனுக்கு எதிராக தன்னை திருப்பி விட்டிருக்கிறார் என புரிந்தவனுக்கு, கயல் கூறிய அனைத்தும் உறைத்தது.

அவரைத் தடுக்கக் கூட தோன்றாமல் அப்படியே சிலையாகி நின்றவனை, கயல், “அஸ்வின் இப்போவாச்சு உனக்கு புரிஞ்சுதுல, உன் அண்ணா எந்த தப்பும் பண்ணல. இந்த ஆளை சும்மா விடாத” என்று முறைக்க,

அவர் வாய் விட்டு சிரித்து, “என்னை சும்மா விடுறத்துக்கு இவன் முதல்ல உயிரோட இருக்கணும்” என்று ட்ரிக்கரை அழுத்த எத்தனிக்க, எங்கிருந்தோ பறந்து வந்த கம்பு ஒன்று அவர் கையில் இருந்த துப்பாக்கியை தள்ளி விட்டது.

அனைவரும் அந்த கம்பு வந்த திசையைப் பார்க்க, அங்கு சாட்சாத் நம் ஜீவாவேதான் பாக்கெட்டில் கை வைத்து நடந்து வந்தான். அவனைக் கண்டதும் தான் கயலுக்கு  உயிரே திரும்பி வந்தது போல் இருந்தது. சீனிவாசன் அவனை எதிர்பாராது ஒரு நொடி தடுமாறி தாக்க வர, அவரின் கையை பிடித்து முறுக்கியவன்,

“அஸ்வின் அவங்க கட்டை அவிழ்த்து விடு” என்று கட்டளையிட, அவனோ கீ கொடுத்த பொம்மை போல், இருவரையும் அவிழ்த்து விட்டான்.

கயல் ஓடிச் சென்று ஜீவாவின் தோளைப் பிடித்து கொள்ள, ஜீவா, அவரின் கையை முறுக்கிய படியே “இது… என் அம்மாவுக்கு ட்ரீட்மெண்ட் நடக்க விடாம தடுத்து, அவங்களை கடைசியா ஒரு தடவை கூட பார்க்க விடாம பண்ணுனதுக்கு…” என்றவன் அவரின் மற்றொரு கையை வளைத்து எலும்பு நொறுங்கும் படி இறுக்கினான்.

சீனிவாசன் வலியில் கத்த கத்த, “இது, கார்த்தியை கொலை பண்ண பார்த்ததுக்கு…” என்று விட்டு, அவரின் கையை விட, இரண்டு கையிலும் எலும்பு விலகியதால் அவர் வலியில் துடித்து அப்படியே அமர்ந்து விட்டார்.

அவரின் காலை ஓங்கி மிதித்து, ஜவ்வை விலக வைத்தவன், “இது, என் தம்பியைவே எனக்கு எதிரா தூண்டி, அவனுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணுனதுக்கு.” என்ற படி, அவரின் மற்றொரு காலை உடைத்து, “இது என் ஸ்வீட் ஹார்ட் – அ கடத்துனதுக்கு” என்றவன், அங்கிருந்த கம்பை எடுத்து அவர் தலையில் நங்கென அடித்து, “இது என் கயலை கொல்லணும்னு நினைச்சதுக்கு…” என்று மீண்டும் அவர் தலையில் அடிக்க, கயல் தான் மிரண்டு, “ஜீவா விடுங்க.” என அவனைத் தடுத்தாள்.

“இவனை எல்லாம் இப்படியே விட கூடாது கயல்… கண்ட துண்டமா வெட்டி நாய்க்கு போடணும்” என்று கர்ஜிக்க, அந்த சீனிவாசனின் அடியாட்கள் எல்லாம் தப்பித்து வெளியே ஓடியே விட்டனர்.

கயல் தான், “வேணாம் ஜீவா! அவரை கொன்னுட்டு அந்த பாவம் நம்மளை சேர வேணாம்” என்க,

“இவனை கொல்றதுலாம் பாவமே இல்ல…” என மீண்டும் அடிக்க போகையில்,

“ஜீவா நான் சொல்றதை கேப்பேன்னு சொல்லிருக்கீங்க… விடுங்க அவரை” என்றாள் கண்டிப்பாக.

அவளை முறைத்தவன், கம்பை கீழே போட, இந்த ரணகளத்தில் சீனிவாசன் மயங்கியே இருந்தார்.

அஸ்வின் எதுவுமே பேசத் தோன்றாமல், அப்படியே நிற்க, கார்த்தி, “அண்ணா நீங்க எப்படி இங்க வந்தீங்க?” என்று கேட்டதில்,

அவன் “உன்னை கடத்திட்டு போனதை வாட்ச்மேன் பார்த்து, எங்கிட்ட சொன்னான். இவன் அடிக்கடி இங்க வர்றதை நான் பார்த்துருக்கேன். அதான் ஒரு கெஸ்ல இங்க வந்தேன்” என்றவன் அஸ்வினைப் பார்க்க, அவன் சட்டென்று வெளியில் சென்றான் அவனைப் பாராமல்.

கயல் அவனிடம் பேசுமாரு ஜீவாவுக்கு கண்ணை காட்ட.. ஜீவா பெருமூச்சு விட்டு, அஸ்வினிடம் வந்தான்.

“அஸ்வின்” என அழைத்த தமையனை திரும்பியும் பாராது, அஸ்வின் தான் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான். ஜீவா அவன் தோளை தொட்டு, “அஸ்வின்! என்மேல இன்னும் உனக்கு கோபம் போகலையா?” என்று வினவ,

“உன்மேல கோபப்பட நான் யாரு… எனிவெய்ஸ் சாரி ஃபார் எவரித்திங். உன் வைஃப்கிட்டயும் சொல்லிடு” என்று அங்கிருந்து நகர போக, ஜீவா அவனை அணைத்துக் கொண்டான்.

“ப்ச் விடு!” என்று அவன் தள்ளப்போக, ஜீவா தான் விடவே இல்லை.

“நீ என் தம்பிடா. நீ என்னை அண்ணனா நினைச்சாலும் இல்லைன்னாலும் நான் உன்னை என்னைக்கும் விட மாட்டேன்…” என்ற ஜீவாவின் வார்த்தைகளில் அழுத்தமும் அன்பும் மிதக்க, அதில் அஸ்வினுக்குத் தான் கண்ணீர் வந்தது. அவன் தோளில் புதைந்தவன், தன் தவறை உணர்ந்து அழுக ஆரம்பித்தான்.

அதனைக் கண்டு பதறிய ஜீவா, “அஸ்வின் என்ன இது?” என்று அவனைத் தேற்ற, “சாரி அண்ணா!” என்றான் அழு குரலில்.

அவனின் அண்ணன் என்ற அழைப்பில் குறுநகை புரிந்த ஜீவா, அவன் முதுகை தடவிக் கொடுக்க, கயல் சிறு சிரிப்புடன் இருவரையும் பார்த்திருக்க, கார்த்திக்கு தான், ஏதோ ஜீவாவை விட்டு வெகு தூரம் சென்றது போன்ற உணர்வு. என்ன இருந்தாலும் தான் மாற்றான் தாயின் மகன் தானே… என்று ஒரு எண்ணம் தோன்றிட, ஆனாலும் அஸ்வின் அவனுடன் சேர்ந்தது அவனுக்கு மகிழ்ச்சியையே தந்தது.

அஸ்வின் அழுது முடிக்கும் வரை காத்திருந்தவன், அவன் இப்போதைக்கு முடிப்பது போல் இல்லை என புரிந்ததும். அவனை விலக்கி “டேய் ஒரு போலீஸ்காரன் இப்படியா அழுவாங்க. விடுடா…!” என்று அவனை சமன்படுத்த, அவனும் சற்று தன்னை தேற்றி கொண்டு கயலைப் பார்த்தான்.

தலையை குனிந்து கொண்டு, “சாரி அண்ணி” என்று சொன்னதும், அதில் விழி விரித்த கயல்,  “பாருடா, நான் அண்ணின்னு இப்போதான் தெரியுதா” என்று நக்கல் செய்ய, அதில் முகம் சுருங்கினான்.

“அட நான் சும்மா சொன்னேன் அஸ்வின். அண்ணிகிட்ட சாரி எல்லாம் சொல்ல தேவை இல்ல.” என்று  சொல்லும்போதே, சீனிவாசன் மயக்கம் கலைந்து எழும்ப, அதனை கவனித்த கார்த்தி, ஜீவாவிடம் “அண்ணா” என அழைத்து அவரை கை காட்ட, ஜீவா கோபத்துடன் அவன் புறம் செல்லப் போனான்.

அஸ்வின், அவனைத் தடுத்து “இவனை நான் பார்த்துக்கறேன்.. நீங்க மூணு பேரும் கிளம்புங்க” என்று சீனிவாசனை வெறியாய் முறைக்க, ஜீவாவும், அவனை தண்டிக்க முழு தகுதியும் அவனுக்கு மட்டுமே இருக்கிறது என உணர்ந்து, இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான், அஸ்வினையும் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வர வேண்டும் என்ற கட்டளையுடன்..

வீட்டில் கல்லூரி முடிந்து வந்த பூவரசி, கார்த்தியை காணாமல் குழம்ப, வாட்ச்மேன் அவனை கடத்திய செய்தியை சொன்னதும் திகைத்து விட்டாள். ‘கடவுளே அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது. கார்த்திய காப்பாத்து’ என்று மனதில் மருகி கொண்டு, அனைத்து தெய்வத்தையும் வேண்டி கொண்டிருந்தவள், மூவரும் வீட்டினுள் வருவதை கண்டு தான் நிம்மதி ஆனாள்.

கார்த்தியை கண்டதும் அணைத்துக் கொள்ள வேண்டும் என தனக்குள் எழுந்த ஆவலை எண்ணி திகைத்து விட்டு, கயலிடம் “என்ன ஆச்சு கா?” என்று பதட்டமாய் வினவ, அவள் அவளிடம் நடந்ததை சொல்லி சமாதானப்படுத்தினாள். பின், ஜீவா அவன் அறைக்கு சென்றிட, கயலும் அவனைத் தொடர்ந்து அவன் பின்னே சென்றாள்.

கார்த்தி தான், மனம் ஒரு மாதிரி இருக்க உம்மென்று இருந்தான். பூவரசி அவனிடம் “உனக்கு ஒன்னும் இல்லைல. வாட்ச்மேன் அண்ணே உன்னை கடத்திட்டாங்கன்னு சொன்னதும் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா…” என்று சொன்னதும், அவளையே பார்த்தவன், தன் முதல் காதலை நினைத்து முகம் சுண்டினான்.

அதில் அவள் அவனுக்கு வலிக்கிறதோ என நினைத்து, “என்னய்யா கால் வலிக்குதா…?” என்று பதறி,

“நீ போய் படு! நான் உனக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்…” என்று விறுவிறுவென அடுக்களைக்குள் செல்ல, கார்த்தி தான், அவளின் அன்பில் உருகிப் போனான்.

அறைக்கு சென்ற கயல், பால்கனியில் நின்றிருந்த ஜீவாவின் அருகில் செல்ல, அவளைத் திரும்பி பார்க்காமலேயே, “இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன் கயல். என் ரெண்டு தம்பிகளும் என் கூடயே இருக்காங்க. ஐ ம் சோ ஹாப்பி…” என்றவன் அவள் புறம் திரும்பி,

“இப்போ எனக்கு எல்லாமா நீயும் என்கூட இருக்க. எனக்கு எனக்கு” என்று உணர்ச்சியின் பிடியில் தவித்தான்.

“நான் இழந்ததுலாம் எனக்கு கிடைக்கும்ன்னு நான் நினைச்சதே இல்ல கயல். ஆனால் இப்போ எனக்கு லவரா வைஃபா அம்மாவா நீ கிடைச்சுருக்க” என்று தலையை சாய்த்து சொல்ல, அதில் அவனை திகைப்புடன் பார்த்தாள்.

அவன் குறுஞ்சிரிப்புடன், “லவ் யூ எப்போ சொல்லுவ ஸ்வீட் ஹார்ட்” என்று அவளை நெருங்கியபடி கேட்க, அவள் பின்னால் நகர்ந்தபடி, “இன்னும் நீங்க கேட்கவேண்டியது நிறைய இருக்கு” என்றாள் வெட்கம் நிறைந்த குரலில்.

“எஸ்! கடைசி வரைக்கும் நீ என்ன சொல்றியோ அதை மட்டும் தான் நான் கேட்கப்போறேன். சோ, லவ்வை சொல்லிட்டு என்ன வேணாலும் சொல்லு ஸ்வீட் ஹார்ட். ஐ அம் யுவர் ஸ்லேவ்” என்னும் போதே, கயல் சுவற்றில் மோதி நின்றாள்.

அவன் இரு கைகளாலும் அவளை அணைகட்டி நிற்க, அவள் அவன் முகம் பார்க்க வெட்கி, கண்ணை மூட, ஜீவா அவள் இதழ் நோக்கி குனிந்தான். சட்டென்று அவனைத் தள்ளி விட்டவள், அவனுக்கு அழகு காட்டி விட்டு, தப்பித்து கீழே ஓட, ‘எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறன்னு நானும் பார்க்குறேன்டி’ என்று புன்னகைத்து விட்டு, கார்த்தியின் அறைக்கு சென்றான்.

அங்கு கார்த்தி, இலக்கில்லாமல் கையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, ஜீவா அவன் அருகில் சென்று அமர்ந்து, “சாப்டியா கார்த்தி?” என்று கேட்க, “ம்ம்” என்று தலையாட்டினான்.

ஜீவா அவன் முகத்தை நிமிர்த்தி, “என்னைக்கும் நான் உன் வாசு அண்ணா தான் கார்த்தி. என் லைஃப்ல எத்தனை பேர் வந்தாலும் நீ என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல் தம்பி தான். நான் இந்த வாழ்க்கையை உயிர்ப்போடு வாழ்ந்து, இவ்ளோ தூரம் வளர்ந்தது கூட, நீ அண்ணா அண்ணான்னு என்கூட இருந்ததனால தான். நீ இல்லைன்னா நான் இந்நேரம் இருந்துருக்கவே மாட்டேன்டா…” என்றவன், அஸ்வினுடன் பேசும்போதே, அவன் முகத்தை கவனித்து கொண்டு தான் இருந்தான்.

ஜீவாவின் கூற்றில் அகமகிழ்ந்தவன், அவனைத் தாவி அணைத்து கொண்டு, “லவ் யு அண்ணா” என்க,

ஜீவா சிரித்து விட்டு, “இதை உங்கிட்ட சொன்னா உன் பிரெண்டு என்னை அடிக்க வருவா” என்று நக்கலடிக்க, அதில் அவனும் இணைந்து நகைத்தான்.

பின், “அந்த சீனிவாசன் தான் உன்னை மலைல இருந்து தள்ளி விட்டதை ஏன் என்கிட்ட சொல்லல கார்த்தி.” என்று கேள்வியாய் கேட்க, அவன் “உங்களுக்கு எப்படி அண்ணா தெரிஞ்சுது?” என்றான் புருவம் சுருக்கி.

அவன், “எனக்கு நீ எதையோ மறைக்கிறியோன்னு தோணுச்சு. தென் அவன் மேலயும் சந்தேகம் இருந்துச்சு. என்னை யாரோ ஃபாலோ பண்ற மாதிரி எனக்கு தோணிகிட்டே இருந்ததுல, அவனை பத்தி விசாரிக்க டிடெக்டிவ்கிட்ட சொல்லிருந்தேன்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி தான், உன்னை மலைல இருந்து தள்ளி விட்டது, எஸ்டேட்ல ஃபயர் ஆக்சிடென்ட் பண்ணுனது எல்லாமே அந்த ஆளுன்னு தெரிஞ்சுது. அவனை அப்போவே கொல்லணும்ன்னு தான் தோணுச்சு தான்.

ஆனால் என்கிட்ட எப்படினாலும் வசமா மாட்டுவான்னு எதிர்பார்த்தேன்..அந்த நாள் இன்னைக்கு வந்துருச்சு” என்றவன், “நீ ஏன் மறைச்ச?” என்று மீண்டும் கேட்டான்.

அவன், “அஸ்வின் அண்ணாவுக்காக தான் மறைச்சேன்” என்று கூறியதில், அப்போது தான் வீட்டிற்கு வந்த அஸ்வின், கார்த்தியின் அறையில் தன் பெயர் அடிப்படவும் உள்ளே வராமல் வெளியில் நின்று விட்டான்.

ஜீவா கார்த்தியை புரியாமல் பார்க்க, “நான் சீனிவாசன் தான் இதை பண்ணுனதா சொல்லிருந்தா நீங்க கோபத்துல அவனை ஏதாவது பண்ணிருப்பீங்க. அஸ்வின் அண்ணா அப்போவும் உங்களை தான் தப்பா நினைச்சுருப்பாங்க. அதுபோக, அஸ்வின் அண்ணா சொந்தமா நினைக்கிறதே அந்த ஆளை  மட்டும் தான், அதுவும் இல்லாம போய்ட கூடாதுன்னு தான் சொல்லல.” என்று சொல்ல, ஜீவா அவனை பெருமையாக பார்த்தான்.

அஸ்வின், கண்கள் கலங்க, அங்கிருந்து ஹாலுக்கு செல்ல, கயல் “அஸ்வின் எப்போ வந்த?” என்று கேட்க, அவளின் குரல் கேட்டு ஜீவாவும் கார்த்தியும் வெளியில் வந்தனர்.

கார்த்தியை கண்டதும், அஸ்வின் அவனை அணைத்துக் கொள்ள, முதலில் திருதிருவென விழித்த கார்த்தி பின் புன்சிரிப்புடன் அவனை அணைத்து பாசமழையை பொழிய, சிறிது நேரத்தில் “கிளம்புகிறேன்” என்று சொன்ன அஸ்வினை ஜீவாதான் மிரட்டி, இனிமே என்னுடன் தான் இருக்கவேண்டும் என்றான்.

மறுநாள், தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு வருவதாக வாக்கு கொடுத்து விட்டு அவன் வீட்டிற்கு சென்றான்.

அன்று இரவு, அருகில் படுத்திருந்த கயலின் கன்னத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஜீவா, “ஸ்வீட் ஹார்ட்… இன்னைக்கு ரொம்ப ஹாட்டா இருக்க” என்று குறும்பாய் சொல்ல,

அதில் சிவந்தவள், அவன் வாயைப் பொத்தி “ஒழுங்கா தூங்குங்க… டைம் ஆச்சு” என்று திரும்பி படுக்க,

அவன் “என்னடி… நான் என்னைக்கு உனக்கு முத்தம் குடுக்காம தூங்கிருக்கேன்!” என்று அவள் இதழ்களை சிறைப்படுத்தி, அவளை சிவக்க வைத்தவன், “லவ் யு ஸ்வீட் ஹார்ட்…” என்க

அவள், எழுந்து அமர்ந்து, அவனை மடியில் படுக்க போட்டு, நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யு ஜீவா” என்று அவன் காதருகில் கிசுகிசுக்க அதில் விழி விரித்தவன், அவளை காதலாய் பார்க்க.. அவள் “தூங்குங்க” என்று அவனை தட்டிக் கொடுத்தாள்.

தன்னை விட்டு விலகி செல்லும் காரணம் புரியாது, அவளைப் பார்த்து கொண்டே கண்ணயர்ந்தான்.

நேசம் தொடரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
41
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்