Loading

சஜித்தால் அத்தனை இயல்பாக அக்ஷிதா கூறிய விஷயங்களைக் கடக்க இயலவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையையே திசைதிருப்பி விட்ட, அவளது குடும்பத்தினர் மீது தான் ஆத்திரமாக வந்தது.

உத்ஷவிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வர, “உன் பெரியப்பன் எங்கடி இருக்கான். சொல்லு… அவன் பர்ஸ் வைக்க சட்டை கூட இல்லாத மாதிரி, அவன் வீட்ல இருக்குற எல்லாத்தையும் சுருட்டிட்டு வந்துடலாம். கூடவே, உன்னை அடிச்ச கையையும் உடைச்சுட்டு வரலாம்” என்று பொங்கினாள்.

விஹானா, “கரெக்ட் டார்லிங். அந்த ஆளு, வேணும்ன்னே பீஸ் குடுக்காம இருந்து இருக்கான். அதுக்கு அப்பறம் உன் அப்பாவை பார்த்தியா டார்ல்ஸ்?” எனக் கேட்க,

“இல்ல… வீட்டை விட்டு அனுப்புனதும் ஒரு தடவை போய் பார்த்தேன். ஆனா, அதுக்கு அப்பறம் என்னை பார்க்கவே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு.” என்றதும், உத்ஷவி “ஏனாம்?” எனக் கேட்டாள்.

“நான் திருடுனது அவருக்கு அவமானமா இருக்காம்.” என்றதும் உத்ஷவி, “உன் அப்பன் என்ன பைத்தியக்காரானா?” என்றாள் கடுப்பாக.

அதில் சத்தமாக சிரித்த அக்ஷிதா, “இதே கேள்வியை தான் நானும் கேட்டேன் டார்ல்ஸ். ‘யோவ்… நீ என்ன பேங்க்ல மேனேஜராவா இருந்த. ப்ளடி ஃபெல்லோ’ன்னு திட்டிட்டு வந்துட்டேன். அதுக்கு அப்பறம் அந்த ஆளைப் போய் பாக்கவே இல்லை.” என்றவளின் சிரிப்பு கூட சஜித்தை சுட்டது.

“இதைக் கூட சிரிச்சுக்கிட்டே தான் சொல்லுவியா? போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்து இருக்கலாம்ல?” மனம் உருகுவது அவனுக்கே பிடிக்கவில்லை.

உடனே பாவனையை மாற்றிய அக்ஷிதா, அழுவது போல முகத்தை வைத்துக் கொண்டு, “இந்த பெர்ஃபார்மன்ஸ் போதுமா காட்ஸில்லா…” எனக் கேட்டு கலாய்த்து, “எந்த போலிஸ்ட்ட போறது? அவங்க மட்டும் எனக்கு சிவப்பு கம்பளம் விரிச்சா வரவேற்பாங்க.” என்றிட, அவன் பல்லைக்கடித்தான்.

அவர்களை அமைதியாய் வேடிக்கைப் பார்த்த ஸ்வரூப் அவ்தேஷ், “சந்தர்ப்ப சூழ்நிலை எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குறது இல்லை தான். அதுக்காக, திருடுறத நியாயப்படுத்த முடியாது. நீங்க செய்றது பெரிய தப்பு, அதுக்குப் பின்னாடி எந்த சூழ்நிலை இருந்தாலும்…” என்றவன், சஜித்தை அழுத்தமாய் பார்த்து “டோன்ட் ஜஸ்டிபை ஹெர்” (அவளை நியாயப்படுத்தாத) என்று கடுமையுடன் அதட்டினான். 

அதில் சஜித் வாயை மூடிக் கொள்ள, உத்ஷவி அவனை முறைத்தாள்.

‘ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா இருப்பான் போல…!’ என சிலுப்பிக் கொண்டதில், அக்ஷிதாவிற்கு ஆறுதலாகப் பேச வந்த ஜோஷித்தும் அதனைக் கை விட்டான்.

கூடவே அவனுக்கு கையில் வலி வேறு எடுக்கத் துவங்க, அது அவன் முகத்திலும் பிரதிபலித்தது.

அதனை உணர்ந்த ஸ்வரூப், உத்ஷவியையும் அக்ஷிதாவையும் பார்த்து, “உனக்கும் இவளுக்கும் ஒரு வேலை இருக்கு… போய் பக்கத்து ரூம்ல வெய்ட் பண்ணுங்க.” என்றிட,

‘ஆடு ஆடு… இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்குறேன்.’ என்று அவனைப் பொரிந்தபடியே அக்ஷிதாவை இழுத்துக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றாள் உத்ஷவி.

“அப்ப நானு?” என விஹானா விழித்துக் கொண்டு நிற்க, “இவன் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். நீ இங்கயே இருந்து பார்த்துக்க.” என்று ஜோஷித்தைக் கை காட்ட, “இவனுக்கு சேவை செய்யத்தான் எங்க அம்மா என்னை பெத்துப் போட்டாங்களாக்கும்.” என முணுமுணுத்தாள்.

“அதை நீ உன் அம்மாகிட்ட தான் கேட்கணும்…” என ஜோஷித் உடனடியாகப் பதில் கூற, “உனக்குமா லிப் ரீடிங் தெரியும்” என்று நொந்து போனாள்.

சஜித்திற்கு ஏதோ போன் வந்ததில், அவன் பேசிக்கொண்டே வெளியில் செல்ல, ஸ்வரூப் இறுகிய முகத்துடன் ஜோஷித்திற்குத் தலையணையை சரி செய்து படுக்க வைத்தான்.

ஜோஷித் தான் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இத்தனை நாட்கள் கொண்ட கோபமும் எரிச்சலும் அவனுக்கே அதிகப்படியாய் தோன்றியது. அவனது பார்வையை உணர்ந்தாலும் நிமிராமல், பக்கத்து அறைக்குச் சென்று விட்டான் ஸ்வரூப்.

‘இன்னைக்கு இவனை சுட்டதுக்கு, அன்னைக்கு அப்பாவை கொல்ல வந்தவனை சுட்டுருந்தா இவ்ளோ பிரச்சனையே இல்லைல.’ என சலித்துக் கொண்டவனுக்கு, அவர்களுக்குள் நிகழும் மௌனப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வழி தெரியவில்லை.

அதே நேரம், விஹானா அவன் மீது தீப்பார்வை வீச, அதனை அசட்டையுடன் ஏறிட்டவன், “என்ன சீட்டர்… கண்ணுல ஃபயர் விட ட்ரை பண்ணிட்டு இருக்க?” என சாவகாசமாக சாய்ந்தபடி கேட்க, அவளுக்கோ கோபம் கொப்பளித்தது.

“நானா சீட்டர். நீ தான்டா சீட்டர். ஷவிகிட்ட போட்டு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, உண்மையை உளறி வச்சுட்ட. உன்னால தான் அவள் என்கிட்ட கோச்சுக்கிட்டா, அக்ஷி தீக்குள்ள மாட்டிக்கிட்டா.” என்று மூச்சிரைத்தாள்.

அவன் அதனைக் கண்டுகொள்ளாமல், வழக்கம் போல ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்க, ஐயோ என்றிருந்தது அவளுக்கு.

“நீ எனக்கே எப்ப டிமிக்கி குடுக்கலாம்ன்னு நேரம் பார்த்துட்டு இருக்க. உங்கிட்ட நான் ஏன் உண்மையா இருக்கணும் சீட்டர். உண்மையை கட்டிக் காக்கவும் ஒரு தகுதி வேணும்.” என சுள்ளென உரைத்ததில், விஹானா முறைத்தாள்.

அதன் பிறகு அவனிடம் பேசாமல் அமைதி காத்தவள், புகையை சுவாசிக்க இயலாமல் மூக்கைப் பொத்திக் கொண்டாள்.

அவன் பேசிய வார்த்தைகள் அவனையே சுட்டதோ என்னவோ, சிகரெட்டை பாதியில் அணைத்து விட்டவன், “நீ ஏன் ராகேஷ்கிட்ட வேலை பார்த்த?” எனக் கேட்டான். மென்மையும் ஆதங்கமும் கலந்தே வந்த கேள்வி தான் அது என்று புரிந்தாலும், ஏனிந்த ஆதங்கம் என்று தான் அவன் உணரவில்லை.

“இதென்ன கேள்வி. வேலை கிடைச்சுது வேலை பார்த்தேன்.” என நக்கலாகக் கூறியவள், கண்ணை மறைத்த சிறு முடிகளை அள்ளி பின்னால் தள்ளிக்கொண்டாள்.

தோள்பட்டை வரையில் மட்டுமிருந்த அவளது அளவான கூந்தலைக் கண்ணில் நிரப்பியவன், “இந்த டாக்குமெண்ட் விஷயத்தைப் பத்தி உனக்கு தெரியும் தான? இது சம்பந்தமா வேற ஏதாவது உங்கிட்ட பேசுனானா?” எனத் துருவினான்.

“உனக்குத் துணைக்கு தான் உன் அண்ணன் என்னை விட்டுட்டு போயிருக்கான். பெரிய சிஐடி ரேஞ்சுக்கு என்னை விசாரிக்க இல்லை.” என்று வெடுக்கென கூறியதில்,

கேலிப்புன்னகை வீசியவன், “இங்க என்ன பேய் பிசாசா இருக்கு. இல்ல, நான் படுத்த படுக்கையா இருக்கேனா? ஏதோ கொஞ்சம் டயர்ட். அதுவும் உன் பிரெண்டு குடுத்த டாப்லட்னால தான். அதுக்காக மட்டும் அவன் உன்னை விட்டுட்டு போகல. உன் வாயால உண்மையை தெரிஞ்சுக்கவும் தான்…” என்றான் அமர்த்தலாக.

“ஒரு உண்மையும் எனக்குத் தெரியாது… போனாப் போகுதுனு இருந்தேன்ல என்னை சொல்லணும். நான் போய் என் டார்லிங்ஸ் கூடவே இருக்கேன்.” என்று வெளிக்கதவைத் திறக்க முயல, அதுவோ வெளிப்புறம் தாழிட்டு இருந்தது.

“டோர் லாக் ஆகியிருக்கு?” என அவள் முட்டை விழிகளை விரித்து ஜோஷித்தைப் பார்க்க, அவனோ “நான் தான் சொன்னேனே. உன்னை சீக்ரட்டா விசாரிக்க தான் இங்க விட்டுட்டு போயிருக்கான்னு…” என தோள்களைக் குலுக்கிட, அவளுக்கு எரிச்சல் மண்டியது.

“நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு எழவும் தெரியாதுடா. ஏண்டா சாவடிக்கிறீங்க.” என்றவள் அழுது விடுவது போல முகத்தை வைக்க, அவளைத் தீவிரத்துடன் ஏறிட்டவன்,

“உங்களுக்கு எதுவுமே தெரியாமையா, அவனுங்க உங்களை சாவடிக்க நினைக்கிறாங்க. கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணு விஹானா.” என்று அதட்டலுடன் கூறியதில், அவளுக்கும் அப்போது தான் அது உறைத்தது.

அதன் பிறகு அவளும், புருவம் சுருக்கி தீவிர யோசனைக்குச் சென்றாள்.

—–

உத்ஷவயையும் அக்ஷிதாவையும் மடிக்கணினியின் முன்பு அமர வைத்த ஸ்வரூப், அதில் சில புகைப்படங்களைக் காட்டினான்.

“லுக் கேர்ள்ஸ். இவங்க எல்லாரும் கடத்தப்பட்டவங்க. இதுல ஒருத்தன் மட்டும் தான் நிறைய தடவை கிராமத்தைத் தாண்டி வெளிய போய் வந்துருக்கான். மத்த எல்லாரும் அவங்க கடத்தப்பட்ட 20 நாளுக்கு முன்ன வரை கூட கிராமத்தை விட்டு நகரவே இல்லை.

சோ, வெளில அதிக ஆக்ஸஸ்ல இருந்தது அசோக். ஒருத்தன கடத்தணும்ன்னா, எப்படியும் கொஞ்ச நாளாவது அவனை ஃபாலோ பண்ணிருப்பாங்க தான. அதனால, கடைசி ஒரு மாசத்துல அவன் போய் வந்த இடத்துல இருந்த சிசிடிவி ஃபுட்ஏஜஸ் இது.” என்று வேறொரு ஃபோல்டரைத் திறந்தான்.

“இந்த வீடியோஸ் எல்லாத்தையும் கவனமா வாட்ச் பண்ணுங்க.” என்றதும், அக்ஷிதா, “அவனைக் கடத்துனது இந்த வீடியோல தான் இருக்கா?” எனக் கேட்க,

“இல்ல… யாருமே கடத்தப்பட்டாங்கன்றதுக்கு எந்த ஆதாரமும் இல்லை. வீடியோ எதுலயும் சிக்கல.” என்றான்.

“அப்போ, இதுல என்ன வாட்ச் பண்றது?” என்று உத்ஷவிப் புரியாமல் கேட்க, “அசோக்கை எப்படியும் எவனாவது வாட்ச் பண்ணிருப்பான். அப்படி ரிபீட்டடா வீடியோல தெரியிற ஆட்கள், ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சா கூட அதை அப்சர்வ் பண்ணு.” எனக் கட்டளையிட்டதும், அவள் பலவீனமாகத் தலையசைத்தாள்.

அதில் அதிருப்தி கொண்டவன், “வாட்?” என விழி இடுங்கக் கேட்க,

“எல்லாம் ஓகே தான். ஆனா எனக்கு ஏதாவது திருடணும்ன்னு டாஸ்க் இருந்தா தான், முழு கவனத்தோட அப்சர்வ் பண்ணுவேன். சும்மா பார்க்க சொன்னா…” என்று உதட்டைப் பிதுக்கிட, சஜித் ‘சுத்தம்’ எனத் தலையில் கை வைத்தான்.

ஸ்வரூப் தான், அவளைத் தீயாக முறைத்து விட்டு, “கடத்துனவங்களை கண்டுபிடிக்கிறதே ஒரு டாஸ்க் தான?” என்று காட்டத்துடன் கேட்க,

“அதுனால எனக்கு என்ன யூஸ்? நான் ஏன் இதைப் பண்ணனும்? அவனுங்களைக் கண்டுபிடிச்சு நீ நல்ல பேர் வாங்கிப்ப, நல்ல பேர் மட்டுமா வாங்குவ, இதை காரணமா வச்சு காசும் சம்பாரிப்ப.” என அவனை சந்தேகக் கண்ணுடன் பார்த்தாள்.

அவளுக்கு ஒன்றும், அவன் மக்களுக்காக நல்லது செய்வதும், ஊர் மக்களுக்கொன்றென்றால் உடனடியாக செயல்படுவது எதுவும் நம்பகத்தன்மையுடன் இல்லை. சுயநலம் இல்லாத பிறவியெல்லாம் இந்த உலகத்திலேயே இல்லை என ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருப்பவளுக்கு, இந்த மூன்று ஆடவர்களும் ஏலியன் போலத்தான் தெரிந்தனர்.

ஸ்வரூப்பிற்கு கோபத்தை அடக்குவதே பெரும்பாடாக இருந்தது. கேசத்தை அழுந்தக் கோதி, சினத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டவன், “ரொம்பப் பேசாம நான் சொன்னதை மட்டும் செய்.” என்றான் அதிகாரமாக.

“நீ செய்ற எல்லாத்துக்கும் நான் கடைசியா செட்டில் பண்ணிடுறேன்.” என்று சேர்த்துக் கூற, “தட்ஸ் ஃபைன்…” என ஒப்புக்கொண்டவள், மடிக்கணினியைப் பார்த்துத் திகைத்தாள்.

“டேய் டைனோசர், இது என்னடா ஒவ்வொரு வீடியோவும் ஒரு மணி நேரம் காட்டுது. இதை எல்லாம் நான் பார்த்து முடிக்கிறதுக்குள்ள எனக்கு வயசாகிடும்.” என மிரள, அதனைக் கண்டுகொள்ளாதவன், அவளது அலைபேசியை நீட்டினான்.

“இதுல என் நம்பர் ஸ்டோர் பண்ணிருக்கேன். ஏதாவது தகவல் தெரிஞ்சா கால் பண்ணு…” என்றதும், அதனை பட்டெனப் பிடுங்கியவள், “லாக் எப்படி எடுத்த?” எனக் கேட்டு முறைத்தாள்.

சஜித் தான், “மிஞ்சி போனா டாணா இருக்கும், இல்லன்னா இசட் இருக்கும். இது ஒரு பாஸ்வர்டா” எனக் கிண்டலாகக் கூற, அவனையும் சேர்த்து முறைத்து வைத்தாள்.

அக்ஷிதாவிற்கு இப்போதே கண்ணைக் கட்டியது. “ஷவி தான் அப்சர்வ் பண்றதுல எக்ஸ்பெர்ட். நான் இங்க உட்காந்து என்ன பண்ணப் போறேன்…” என ஆரம்பிக்க, சஜித், “அவள் தூங்காம வாட்ச் பண்றாளான்னு வாட்ச் பண்றது தான் உன் வேலை.” என்றதில், ‘பே’ என விழித்தாள்.

அவர்களிடம் வேலையைக் கூறி விட்டு இரு ஆடவர்களும் வெளியில் செல்ல, உத்ஷவித் தன்னை நொந்து ஸ்வரூப் சொன்னதைச் செய்தாள்.

ஆனால், சந்தேகப்படும் படி எதுவும் இல்லாது போக, ஒரு அளவுக்கு மேல் கண்கள் தானாக மூடியதில், திடுக்கென விழித்தாள்.

கண்ணைக் கசக்கி வீடியோவில் கவனத்தைப் பதித்தவளுக்கு, ஒரு க்ளிப்பிங் உறக்கத்தைப் பறித்துச் சென்றது.

அதனைக் கூர்மையுடன் பல முறைப் பார்த்தவளுக்கு குழப்பம் தோன்றியது. அதில், அவசரமாக உறங்கிக் கொண்டிருந்த அக்ஷிதாவை எழுப்ப, அவளோ அசையவே இல்லை. அதில் ஸ்வரூப்பிற்கு போன் செய்து வரக்கூற, அடுத்த பத்து நிமிடத்தில் அவனும் சஜித்தும் வந்து விட்டனர்.

“என்ன விஷா? அசோக் பத்தி எதுவும் தெரிஞ்சுதா?” என ஆராயும் பார்வையுடன் வீடியோவைப் பார்க்க,

“இல்ல ஸ்வரூப். அசோக் பத்தி எதுவும் தெரியல. ஆனா, இந்த வீடியோவைப் பாரேன்.” என்று ஒரு ஃபுட்ஏஜைக் காட்ட, அதில் அசோக் மளிகை ஜாமான் வாங்கிக் கொண்டிருந்தான்.

சஜித்தோ ஒன்றும் புரியாமல், “அவன் ஷாப்பிங் பண்றதுல என்ன இருக்கு?” என்று கேட்டதோடு, குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்த அக்ஷிதாவை, தலையில் நறுக்கென கொட்டி எழுப்பினான்.

அதில் அவளும் வலியில் கத்தி உறக்கம் கலைந்து எழுந்து விட்டு, “நீங்க பண்ற டார்ச்சர்ல, அவன் மளிகை ஜாமான் வாங்குறத கூட சந்தேகமா பார்க்க ஆரம்பிச்சுட்டா.” என்று தலையை சொரிந்தாள்.

“ஐயோ… நீங்க மூணு பேரும் அசோக்கை மட்டும் தான் பாக்குறீங்க. அவனுக்கு பின்னாடி கடையில இருக்குற ஆளுங்களை பாருங்கன்னு சொன்னேன்” என்றதும் மூவரும் அங்கு பார்த்தனர்.

அசோக்கின் பின்னால் சற்று தூரத்தில் தெரிந்த காட்சியைத் தான் உத்ஷவி சுட்டிக் காட்டினாள்.

அதில் நீலச் சட்டை அணிந்த ஒரு இளைஞனும், பிங்க் நிறச் சட்டையணிந்த நடுத்தர வயதுடைய ஆளும் நின்றிருந்தனர். அவர்களின் ஒரு பாதி தான் தெரிந்தது. அதுவும் தெளிவின்மையுடன் தான்.

பிங்க் நிறச் சட்டையணிந்தவன், நீல சட்டைக்காரனை அவனுடன் வரச் சொல்லி அழைக்க, அவனோ மறுத்தான்.

அப்போது, திடீரென அவனது உடல் அதிர, மறுபேச்சின்றி பிங்க் சட்டையின் பின்னால் இயல்பாகச் சென்றான். இதனைக் கண்டவர்கள் புரியாமல் நிற்க, உத்ஷவி “இவன் என்ன பண்ணுனான்னு தெரியல. முதல்ல வர மாட்டேன்னு சொன்ன ப்ளூ சட்டைக்காரன், அப்பறம் ஒரு ஷேக் ஆகிட்டு, அந்த ரோஸ் சேட்டைக்காரன் பின்னாடியே போய்ட்டான்.” என்றாள் குழம்பி.

ஸ்வரூப், “இவனை கடத்திட்டு போற மாதிரி கூட இல்லையே. நார்மலா கூட்டிட்டு போற மாதிரி இருக்கு அவன் விருப்பத்தோட. வெய்ட் இவன் தொலைஞ்சு போனவன் லிஸ்ட்ல இருக்கானான்னு பாக்குறேன்…” என்று தெரிந்த உருவத்தை வைத்து லிஸ்டை சரி பார்க்க, அப்படி ஒருவன் கடத்தப்பட்டது போன்றே தெரியவில்லை.

“இவன் நம்ம லிஸ்ட்லயே இல்லையே…” என்ற சஜித் நெற்றியைக் குழப்பத்துடன் தேய்க்க, உத்ஷவியோ, “ஒருவேளை ஹிப்னோடைஸ் பண்ணி கூட்டிட்டு போறானோ, லைக் நோக்கு வர்மம் அந்த மாதிரி ஏதாவது…?” என்று கன்னத்தில் கை வைத்து வினவினான்.

அக்ஷிதாவோ மிரண்டு, “அய்யயோ சைனாக்காரன் டாங்லி மாதிரி ஒருத்தனை ஊருக்குள்ள இறக்கி இருப்பானோ…? பார்த்தாலே நான் பொசுங்கிடுவேனே.” என பீதியைக் கிளப்பியவளுக்கு, ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தில் வரும் டாங்லியைக் கண்டாலே அச்சம் எழும்.

அதில் இரு ஆடவர்களும் அவளை அற்பப் பதர் போல பார்த்து வைக்க, உத்ஷவி தான், நாற்காலியில் நன்றாக சாய்ந்து, கையைத் தலைக்குக் கொடுத்து, “அப்படி எவனாவது வந்தா, இதோ இந்த டைனோசர் முன்னாடி வந்து நிற்க சொல்லலாம். இவன் பாக்குற பார்வையில, அவன் பீதியாகி ஓடிடுவான். சச் அ ஷார்ப் ஐஸ் யூ நோ.” என சிலாகிக்க, ஸ்வரூப் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி லேசான ரசனையை விழிகளில் ஏற்றிப் பெண்ணவளை ஏறிட்டான்.

முதலும் முடிவும் நீ!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
81
+1
3
+1
2

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  3. Indhu Mathy

   ஹிப்னோடைஸ் பண்ணி தான் கடத்துறாங்களா…. நம்ம டார்ல்ஸ் தான் அதை கண்டுபிடிச்சு இருக்காங்க…. 😎😎😎😎😎