Loading

அந்த உருவத்தைப் பார்த்து, பேய் என்று பயந்து ஆளுக்கொரு திசையில் ஓடி, தூணின் பின்னால் சென்று நின்று மெதுவாய் எட்டிப் பார்த்தனர்.

அந்த உருவம், மெல்ல, போர்த்தியிருந்த சால்வையை விலக்கி, நடுங்கிய கைகளுடன், கழுத்தில் போட்டிருந்த தாயத்தை பிடித்துக் கொண்டு, ஏதோ ஜெபிக்க ஆரம்பித்தது.

மூவரும் நன்கு உற்று பார்த்த போது தான் தெரிந்தது. அது, அந்த மண்டபத்தின் வாட்ச்மேன் என்று.

அவனை இவர்கள் பேய் என்று நினைக்க, அந்த வாட்ச்மேன் இவர்களை பேய் என்று நினைத்து, கண்ணை மூடி நடுங்கி கொண்டிருந்தார்.

அதன் பிறகே, மூவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு அந்த நபரின் முன்னால் நிற்க, இப்போது அந்த வாட்ச்மேன் “பேய்” என்று அலறினார்.

அஜய், “அட சே. நிறுத்து. யோவ் ஏன்யா இப்படி வந்து எங்களை பயமுறுத்துனதும் இல்லாமல், எங்களையே பேயுன்னு வேற சொல்றியா” என்று திட்ட,

விது “ஆமா கீழ பாரு எங்களுக்கு காலு கூட இருக்கு…” என்றதில், அவன் ஒரு கண்ணை மட்டும் திறந்து, ஆண்கள் இருவரையும் ஆராய்ச்சி செய்தவன், சுஜி பரவ பரவ மிடி போட்டு இருந்ததைப் பார்த்து, “இது பேய் இது பேய்” என்று அலறினார்.

சுஜி, “யோவ்… நல்லா பாருய்யா எனக்கும் கால் இருக்கு” என்று பாவாடையைத் தூக்கி காட்டியதும் தான் அவன் நம்பினான்.

அஜய், “நீ பேய்ன்னு இவனுக்கு கூட தெரியுது பஜ்ஜி” என்று அவளிடம் முணுமுணுக்க, சுஜி அவனை முறைத்து விட்டு அமைதியாய் இருந்து விட்டாள்.

பின், அவனிடம் சஞ்சுவைப் பற்றி விவரம் கேட்க, “அவர் நான் காலைல இருந்து இங்க தான் தம்பி இருக்கேன். இங்க யாரும் வரல. அப்டிலாம் இங்க கடத்தி எல்லாம் வைக்க முடியாது. அந்த மாதிரி எதுவும் நடக்கக்கூடாதுனு தான் இங்க என்னை காவலுக்கு போட்ருக்காங்க…” என்று சொல்லிவிட்டு,

“மனுச்சுடுங்க தம்பி, எனக்கு இருட்டுனா பயம்.. எப்பவும் வர்ற இன்னொருத்தன் இன்னைக்கு வரல, அதான் பயந்துட்டேன்.” என்றதும், மூவரும் சரி என்று வெளியே வந்தனர்.

அப்பொழுது துருவ் போன் செய்து, ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது என்று சஞ்சுவை கடத்திய இடத்திற்கு வர சொல்ல, மூவரும் அங்கு சென்றனர்.

பலூன் வியாபாரி சொன்னதை கேட்டு, அந்த இடத்திற்கு வந்து பக்கத்தில் சந்து இருக்கிறதா என்று பார்த்த துருவும் உத்ராவும், ஒருவர் மட்டும் போகக்கூடிய, ஒரு குட்டி சந்து ஒன்று அங்கு இருந்ததை கண்டனர்.

இங்கிருந்து தான் அவனை கடத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், அங்கு சென்று தேடிப் பார்க்க, அங்கு ஒரு பர்ஸ் மட்டும் இருந்ததை கண்டனர்.

உத்ரா, “இந்த பர்ஸ் தான் க்ளூவா துருவ்” என்று கேட்க, அவன் “இருக்கலாம்” என்று அதனை திறந்துப் பார்க்க, அதில் ஒருவனுடைய வோட்டர் ஐடி இருந்தது.

மேலும், அதில் கொஞ்சம் பணமும், சினிமா டிக்கெட்டும் இருந்தது. உடனே அதில் இருந்த முகவரிக்கு ஐவரும் விரைந்தனர்.

ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, அந்த முகவரியை கண்டறிந்து காலிங் பெல்லை அடிக்க, இரவு நேரம் ஆனதால், தூக்க கலக்கத்தில் ஒரு கர்ப்பிணி பெண் தான் கதவைத் திறந்தாள்.

அவளைப் பார்த்ததும், எல்லாரும் யோசனையாய் முகத்தை சுருக்க, அவள் சற்று மிரண்டு, கதவை முழுதாய் திறக்காமல், “யாரு நீங்கல்லாம்… உங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்க, உத்ரா, “இங்க சதீஸ் யாரு” என வினவ, அவள் மேலும் பயந்து “என் வீட்டுக்காரர் தான்… எதுக்கு கேட்குறீங்க” என்று முழித்தாள்.

துருவ் அந்த பர்ஸை அந்த பெண் முன் நீட்டி, “இது உங்க ஹஸ்பண்ட் ஓடதுதான” என்று கேட்க, அவள் விழி விரித்து, “ஆமா, இந்த பர்ஸ் உங்களுக்கு எப்படி கிடைச்சுது…” என்று ஆச்சர்யமாய் கேட்க,

உத்ரா, “ம்ம் உங்க வீட்டுக்காரர், ஒரு பையனை கடத்தல் பண்ணுன இடத்துலதான்” என்றாள் நக்கலாக.

அவள் அரண்டு, “என்ன உளறுறீங்க… அவர் அப்படிலாம் பண்ணமாட்டாரு.” என்று மறுக்கையில், துருவ் “உன் புருஷனை வெளிய வரச்சொல்லு..
அவன் என்ன பண்ணுனானு அவன்கிட்டயே கேட்டுக்குறோம்” என்று அதட்டினான்.

அவளோ “அவரு இங்க இல்ல. வேலை விஷயமா,ரெண்டு நாளைக்கு முன்னாலேயே ராஜஸ்தான் போய்ட்டாரு. இப்படி யாருமில்லாத நேரத்துல பிரச்சனை பண்ணுனா நான் போலீசை கூப்புடுவேன்” என்று பயந்து கொண்டே மிரட்ட,

உத்ரா, “என்ன கதை விடுற… அவன் ராஜஸ்தான் போயிருக்கான்னா. இந்த பர்ஸ் பெசன்ட் நகர்ல எப்படி கிடைக்கும்” எனக் கோபமாய் கேட்டாள்.

அந்த பெண், “இந்த பர்ஸை ஒரு வாரத்துக்கு முன்னாடி எவனோ பிக் பாக்கெட் அடிச்சுட்டான். நாங்க போலீஸ்ல கூட காம்ப்ளயின் குடுத்துருக்கோம். நீங்க வேணும்னா கேட்டுப்பாருங்க” என்று சொல்ல, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவள் பொய் சொல்வது போலவும் தெரியவில்லை.

உத்ரா, சோர்வாக “நீ சொல்றது உண்மைதானா. அந்த சதீஸ் இப்போ இங்க இல்லையா “என்று கேட்க, அவள் “ஆமா, அவரு ராஜஸ்தான்ல தான் இருக்காரு. நீங்க கூட போன் பண்ணி கேளுங்க” என்று சொல்ல, துருவ் அவன் இருக்கும் இடத்திற்கு போன் செய்து, அவன் அங்கு தான் இருக்கிறான் என்று உறுதிப்படுத்திக்கொண்டான்.

பின், அந்த பெண்ணிடம் “சாரி மா. ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்” என்று சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று மற்றவரிடம் கண்ணை காட்டினான். இப்படியாக காஞ்சனா சொன்ன நேரத்தில் 7 மணி நேரம் கடந்தது.

அஜய், “சே! தேவை இல்லாம, அங்க போய் நம்ம டைம் வேஸ்ட் பண்ணிட்டோமோ. இப்படி சுத்தல்ல விட்டுட்டாள்” என்று புலம்ப,

துருவ் மீண்டும், அந்த பர்ஸை எடுத்து, அதில் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க, அதில் இருந்த சினிமா டிக்கெட்டின் பின் பகுதில் ஒரு போன் நம்பர் இருந்ததை கவனித்தான்.

அதை அவன் உத்ராவிடம் காட்ட, அவள் “இதான் க்ளுன்னு நினைக்கிறேன்” என்றதில், அவன் அந்த நம்பரை ட்ராக் செய்ய சொல்லிவிட்டு, அந்த எண்ணிற்கு போன் செய்ய, அதனை எடுத்த ஒருவன், “யாரு” என்று கேட்டதும், துருவ் “நீங்க யாரு சார்” என்று பேச்சுகொடுத்தான்.

அவன் “ஹெலோ நீங்க தான் போன் பண்ணுனீங்க நீங்க தான் யாருன்னு சொல்லணும்” என்று திமிராய் பேச, துருவும் அவனிடம் இடைக்காக பேசினான்.

இதற்கிடையில் அவன் இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய, போனை கட் செய்து விட்டு, அவன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர். அங்கு சென்று அவனை கண்டுபிடித்து துருவ் வெளு வெளுவென வெளுக்க, அவனி “சார்… யாரு சார் நீங்க எதுக்கு என்னை அடிக்கிறீங்க?” என்று கேட்க,

துருவ் “அந்த சின்ன பையனை எதுக்குடா கடத்துன” என்று வினவியதும், அவன் பேந்த பேந்த முழித்து விட்டு,

“சார் எனக்கு எதுவும் தெரியாது.” என்று ஓட ஆரம்பித்தான்.

துருவ் அவனை துரத்திப் பிடித்து, மீண்டும் அடிக்க,

“சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது. ஒருத்தவங்க போன் பண்ணி, இந்த பர்ஸை அந்த இடத்துல போட சொன்னாங்க. அவ்ளோதான் எனக்கு தெரியும் வேற எதுவும் தெரியாது சார்” என்று கெஞ்ச, அவர்கள் பின்னே ஓடி வந்த உத்ராவும், ஒன்றும் புரியாமல், துருவைப் பார்த்தாள்.

அவன் “ப்ச் அவள் நம்மளை ரொம்ப குழப்ப ட்ரை பண்றாள்.” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, ரிஷி உத்ராவிற்கு போன் செய்தான்.

அவள் குழப்பமாக போனை எடுக்க, அவனோ “எங்கடி என் பையன்? எங்க வச்சுருக்க அவனை. உயிரோட தான் வச்சுருகியா. இல்லை சொத்துல அவனுக்கும் பங்கு குடுக்கணுமேன்னு மொத்த குடும்பமும் சேர்ந்து அவனை கொன்னுட்டிங்களா” என்று காச்மூச் என்று கத்த,

உத்ரா, “என்ன உளறுற ரிஷி. நான் என்ன பண்ணுனேன் அவனை… அந்த காஞ்சனா தான் அவனை கடத்தி வச்சுக்கிட்டு எங்களை அலைய விடுறா.. உனக்கு அவள் எங்க இருக்கானு தெரியும்ல. தயவு செஞ்சு அவள் இருக்குற இடத்தை சொல்லு” என்று கெஞ்சலாய் கேட்டாள்.

“சும்மா  நடிக்காத, நீயே அவனை எங்கயோ மறைச்சு வச்சுக்கிட்டு, அம்மாவை கொலை பண்ணுவேன்னு மிரட்டி தலை மறைவா இருக்க வச்சுட்ட. என்னையும் ஒரு இடத்துல அடைச்சு போட்டு வச்சு என்னையும் சேர்த்து கொல்ல பார்த்திருக்க” என்று தன் போக்கில் பேச, அவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

துருவ் “ரிஷி. முட்டாள் தனமா பேசாத, இங்க நாங்க சஞ்சுவை காணோம்னு தான் தேடிகிட்டு இருக்கோம். உனக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லு” என்று அவன் பங்கிற்கு கேட்க,

அதற்கு ரிஷி “டேய் துரோகி..நீயும் அவள் கூட கூட்டு தானடா. அவளை பார்க்கவும் இத்தனை வருஷமா பழகுன எங்களுக்கு துரோகம் பண்ணதும் இல்லாம, இத்தனை வருஷமா என் பையனை என்கிட்டே இருந்து பிரிச்சு வச்சுட்டீல” என்று அவனிடம் கோபம் கொள்ள, உத்ராவுக்கு கடுங்கோபம் வந்தது.

“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது ரிஷி. ஒன்னு சொல் புத்தி இருக்கணும், இல்லை சுய புத்தி இருக்கணும். இது ரெண்டுமே இல்லைன்னா இப்படி தான் கெட்டு நாசமா போகணும்.” என்று போனை வைத்து விட்டு, சோர்வுடன் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

துருவ் அவள் அருகில் வந்து, “உதி, இன்னும் டைம் இருக்கு. கண்டு பிடிச்சுடலாம்… சீக்கிரமாவே..” என்று சமன்படுத்த, உத்ராவுக்கு காஞ்சனாவிடம் இருந்து இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு இங்கு வரவேண்டும் என்று குறுஞ்செய்து வந்தது. அதனை பார்த்து அதிர்ந்தவள் துருவிடம் அதனை காட்ட, அவனும் சன்னமாய் அதிர்ந்தான்.

பின், ஒரு நொடி கூட வீணாக்காமல், அவன் கையில் கிடைத்த அந்த போன் ஆசாமியை பிடித்து அடிக்க, அவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை.

சுஜிதான்,”ப்ரோ அந்த பர்ஸுல ஒரு க்ளூ இருந்துச்சு அதை வச்சு தான் இவனை கண்டுபிடிச்சோம். அப்போ, இங்கயும் எதோ ஒரு க்ளூ இருக்கணும்ல” என்று சொல்ல,

அஜய், “ஆமா துருவ், அந்த போன் நம்பர் வச்சுதான் இவனை கண்டுபிடிச்சோம். மே பி அந்த நம்பர் இருக்குற போன்ல ஏதாவது இருக்கலாம்ல” என்று ஐடியா சொல்ல, துருவ் அவனிடம் அந்த போனை வாங்கிப் பார்த்தான்.

ஆனால் அந்த போனில் எல்லாமே அழிக்கப்பட்டு இருந்தது. அந்த போன் ஆசாமியிடம், “இந்த போன்ல  இருந்த கான்ட்டேக்ட், மெசஜ்ஸ் எல்லாம் எதுக்குடா டெலிட் பண்ணிருக்க. யாருடா உன்னை இப்படி பண்ணச்சொன்னது” என்று அவன் சில்லுமூக்கை உடைக்க,

அவன் பயந்து, “சார்… நான் ராஜேஷ் எக்ஸ்போர்ட் கம்பெனில தான் வேலை பார்த்துகிட்டு இருந்தேன். பத்து நாளைக்கு முன்னாடி, அங்க நான் சில பொருளை கையாடல் பண்ணிட்டேன்னு என்னை வேலைய விட்டு தூக்கிட்டாங்க.

கைல பணமே இல்லைனு வேற வழி இல்லாமல், இந்த பர்ஸை பிக் பாக்கெட்  அடிச்சேன். அப்பறம் நான் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு திரும்ப வந்து உட்காரும்போது, அந்த டேபிள்ல இந்த போனும், கொஞ்சம் பணமும் இருந்துச்சு.

ஒரு பேப்பர்ல நான் அடிச்ச பர்ஸ இந்த இடத்துல போட்டுட்டு வரணும்னும், இந்த போன்ல இருக்குற சிம்மை யாரவது போன் பண்ணுனதும், கழட்டி போட்டுட்டு, போனையும் தூக்கி போட்றணுமும் எழுதி இருந்துச்சு…

அதே மாதிரி நீங்க போன் பண்ணுனதும், இதை கழட்டி போடலாம்னு தான் நினைச்சேன். ஆனால் எதுக்கு போனை தூக்கி போடணும்னு நான் போடல” என்று சொல்ல, துருவிற்கு வேண்டும் என்றே தங்களை சுத்தலில் விட தான் இப்படி செய்திருக்கிறாள் என்று புரிந்தது.

மேலும், அவன் செய்த தவறு, நேற்று சினிமாவிற்கு போய் விட்டு, அங்கு தொலைபேசி எண் கேட்டதால், தான் வைத்திருந்த போனில் இருந்த நம்பரை அவனிடம் கொடுத்து விட்டு, ஞாபகத்திற்காய், அதனை அதில் எழுதி வைத்தது தான்.

அதில்தான் இப்போது, காஞ்சனா மாட்டிக்கொண்டாள். அவள் நினைத்தது… அந்த பிக் பாக்கட்காரனை தேடியே அவர்களின் நேரம் முடிந்து விடும் என்று தான். ஆனால் இவ்வளவு ஈசியாக மாட்டுவான் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.

இப்பொழுது என்ன செய்வது என்று  யோசிக்க, உத்ரா, “துருவ் போன்ல தான் எதுவும்  கிடைக்கல, ஆனால் ஏன் இவனே க்ளூவா இருக்கக்கூடாது.” என்று யோசித்து சொல்ல,

துருவ் சட்டென்று “அவன் வேலை பார்த்த ராஜேஷ் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு போகலாம்” என்றதில் அங்கு விரைந்தனர்.

இன்னும் அவள் சொன்ன நேரத்தில் 55 நிமிடங்கள் தான் இருந்தது.

பரபரவென அனைவரும் அந்த கம்பெனிக்கு செல்ல, அங்கு அனைவரிடமும் விசாரித்தில் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அப்பொழுது விது தான், அனைவரிடமும் “டேய் டேய் அந்த பேய் டா” என்று கத்த, துருவ் புரியாமல் யாரு என்று பார்த்தான்.

அஜய் “ஆமா நேத்து நைட் பார்த்த அந்த வாட்ச்மேன்.” என்று துருவ் உத்ராவிடம் விவரம் சொல்லி அவரைப் பிடித்து நிறுத்தினர்.

அவர் “அடடே நீங்களா தம்பி… அந்த பையனை கண்டுபிடிச்சுடீங்களா” என்று கேட்க, அஜய் இதுவரை நடந்ததை அவரிடம் சொன்னான்.

உத்ரா, “இங்க பக்கத்துல தான் அவனை மறைச்சு வச்சுருக்கனும்னு நினைக்கிறேன். ஏதாவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க அண்ணா” என்று கேட்க,

அவர் யோசித்து விட்டு, “இங்க அப்படி எதுவும் நடக்கலைம்மா…” என்று சொல்ல, துருவ் அதில் சமாதானம் ஆகாமல், “இங்க குடோன் ஏதாவது இருக்கா” என்று கேட்க, “குடோன் இருக்கு தம்பி, ஆனால் அங்க எல்லா இடத்துலயும் கேமரா இருக்கு. தப்பு நடக்க  வாய்ப்பே இல்லை” என்றார்.

துருவ்  “நான் அந்த ஃபுட் ஏஜ் ஐ பாக்கணும்” என்று சொல்ல,

அவர் “இல்லை தம்பி அதெல்லாம் யார்கிட்டயும் காட்டமாட்டாங்க. அதுவும் எம்.டி ஓட அனுமதி வேணும். இன்னைக்கு வேற சார் வரல” என்று சொல்ல, அவனின் எண்ணை வாங்கி, அவசரமாய் துருவை அவனுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, அவனிடம் உதவி கேட்டான்.

அந்த ராஜேஷும் போனிலேயே அவனின் பதட்டம் உணர்ந்து, ஃபுட் ஏஜை காட்ட சொன்னான்.

பின், வீடியோவில் பார்க்க குடோனில் எந்த தவறான சம்பவமும் நடக்கவில்லை என்று உணர்ந்து எல்லாரும் தவித்து நிற்க, துருவ் கூர்மையாய் பார்த்து “ஒரு நிமிஷம் இங்க ஸ்டாப் பண்ணுங்க” என்று வீடியோவை நிறுத்த சொன்னான்.

அதில் ஒரு கேமரா மட்டும் வாசலை பார்த்து இருக்க, அங்கு நான்கு நபர்கள் நடந்து அந்த கம்பெனியை தாண்டி போவது தெரிந்தது.

உடனடியாய் முந்தைய நாள் ஃபுட் ஏஜை பார்க்க, அதில் சந்தேகப்படும் படியாய் எதுவுமே இருக்க வில்லை.

என்னடா இது இப்படி கொழப்புது என்று தன்னை நொந்தவன், அந்த வாட்ச்மேனிடம், “இங்க பக்கத்துல ஏதாவது இடம் இருக்கா” என்று கேட்க,

அவர், “இல்ல தம்பி, இங்க ஒரு பொட்டல் தான் இருக்கு. அங்க இந்த மாதிரி பசங்க வந்து அப்போ அப்போ தண்ணி அடிப்பாங்க. அது நம்ம இடம் இல்லாதனால யாரும் எதுவும் சொல்ல முடியல. இதை தாண்டி இங்க வேற எதுவும் இல்லை” என்று சொல்ல,

துருவ் விடாமல், “பக்கத்துல வேற ஏதாவது ஊருக்கு போற வழி, இந்த மாதிரி ஏதாவது இருக்கா கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க” என்று கேட்க, அவர் “இல்ல தம்பி இங்க எதுவும் இல்லை” என்று தீர்மானமாய் கூறினார்.

அந்த நேரத்தில் அஜயும், விதுனும் அந்த பொட்டலில் சென்று பார்த்து விசாரித்து வந்தனர். ஆனால் எதுவும் கிடைக்கத்தான் இல்லை. இன்னும் கால்மணி நேரம் தான் இருந்தது.

உத்ராவிற்கு நம்பிக்கையே கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வந்தது.

சஞ்சுவை காப்பாத்தவே முடியாதா… என்று கண்ணீர் விட்டவளுக்கு, அந்த காஞ்சனாவிடம் தெரியாமல், தன் அம்மாவையும், அண்ணனையும், இழந்தோம். இப்போது தெரிந்தே அண்ணன் மகனையும் இழக்க போகிறோமோ என்று குமுறினாள்.

துருவிற்கும் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினான். அவளை தேற்றவும் தோன்றாமல் அப்படியே நிற்க,

அந்த வாட்ச்மேன், “தம்பி ஒரு விஷயத்தை மறந்துட்டேன். இங்க இருந்து ஒரு 5 கிலோ மீட்டர்  தள்ளி தான் இந்த கம்பெனியோட பழைய குடோன் இருந்துச்சு. ஆனால் அங்க ஃபயர் ஆக்சிடென்ட் ஆனதுல, அந்த இடத்தை யூஸ் பண்றது இல்லை.” என்று சொல்லி முடிக்க கூட இல்லை.

ஐவரும் விறுவிற வென அங்கு விரைந்தனர். நிச்சயமாய் சஞ்சுவை அங்கு தான் வைத்திருக்க வேண்டும். என்று நினைத்து அங்கு அருகில் செல்லுகையில், காஞ்சனா உத்ராவுக்கு போன் செய்து, “பரவாயில்ல கண்டுபிடிச்சுட்ட. ஆனால் இவன் உனக்கு உயிரோட வேணும்னா நீ மட்டும் தனியா தான் வரணும்.” என்று சொல்ல, அவள் “நான் மட்டும் போறேன்” என்றாள்.

துருவ் “வேணாம் உதி. நீ தனியா போனாலும், அவள் ரெண்டு பேரையும் எதாவது பண்ணுவாள். உள்ள நிறைய ஆளுங்க இருக்காங்க. நானும் வரேன்” என்று சொல்ல,

அவள் “சஞ்சு விஷயத்துல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது துருவ்” என்றாள் உறுதியாக.

துருவ் “ஆனால், உன் விஷயத்துல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது உதி” என்று தவிப்புடன் கூற,

அவள் அவனைப் பார்த்து, விரக்தியாய் புன்னகைத்து, “என்னைக்கு நான் உங்களை மறந்தேனோ அப்போவே உங்களை பொறுத்த வரை நான் செத்துட்டேன். இனிமே புதுசா சாக என்ன இருக்கு” என்று விட்டு, விறுவிறுவென அங்கு விரைந்தாள்.

அதில் துருவோடு சேர்த்து மற்றவர்களும் பலமாய் அதிர்ந்தனர்.

‘என்ன வார்த்தை சொல்லி விட்டாள்’ என்று துருவ் நடுங்கிய இதயத்துடன் தலையை அழுந்தக் கோதி, பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு, அடுத்து அடுத்து செய்ய வேண்டிய வேலையை செய்தான், மின்னல் வேகத்தில்.

அந்த பாதி எரிந்த நிலையில் இருந்த குடோனுக்குள் சென்ற உத்ரா, அங்கு தடி தடியாய் நிறைய ஆட்கள் இருப்பதைப் பார்த்து கொண்டு, சஞ்சுவுக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது என்று தவிப்புடன் உள்ளே சென்றாள்.

அங்கு, காஞ்சனாவும் சைதன்யாவும், அவளை கொலைவெறியுடன் பார்த்து கொண்டு இருந்தனர். இருவர் செய்த வேலை தான் இவை எல்லாம்.

உத்ரா அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு, “சஞ்சு எங்க?” என்று கோபத்துடன் கேட்க,

காஞ்சனா, அழுது கொண்டு ஓரமாய் நின்றிருந்த சஞ்சுவ இழுத்து கழுத்தில் கத்தியை வைத்தாள்.

அதில் பதறிய உத்ரா, “வேணாம் காஞ்சனா அவனை ஒன்னும் பண்ணிடாத, உனக்கு கோபம் என் மேல தான…” என்று பதற,

அவள் ரௌத்திரத்துடன் “உன் மேல மட்டும் இல்ல. உன் மொத்த குடும்பத்து மேலயும் தான். உன் அம்மா மேல தான் எனக்கு முதல் கோபமே. என்னவோ, ஊர்ல கிடைக்காத பொண்ணு கிடைச்சுட்ட மாதிரி, அந்த மொத்த குடும்பமும், உன் அம்மாவை தாங்கு தாங்குன்னு தாங்குச்சு.

உன் அம்மா என்னன்னா, தங்கச்சி வாழ்க்கை கெட்டு போச்சுன்னு கொஞ்சம் கூட கவலைப்படாம எனக்கே அட்வைஸ் பண்ணுனாள். அதுபோக, அந்த கருணாகரனுக்கு என்னை பார்த்தாலே பிடிக்கல. அவங்களுக்குலாம் பாடம் சொல்லிகுடுக்கணும்னு தான், மயூரியை மாடில இருந்து தள்ளி விட்டேன். என் அதிர்ஷ்டம் அவள் செத்துட்டாள்.” என்று சொல்ல, உத்ராவிற்கு தன் அன்னையை நினைத்துக் கண் கலங்கியது.

மேலும் காஞ்சனாவே தொடர்ந்து “உன் அண்ணன் ஒரு அப்பாவி. நான் என்ன சொன்னாலும் நம்புனான். அந்த பொண்ணு பேர் என்ன சந்தனாவா சாதனவா…

அவள் என்கிட்ட வந்து, என்னை ரிஷிக்கூட சேர்த்து வைங்கன்னு அழுதாள். நான் அவளை அடிச்சு விரட்டிட்டேன்.

பின்ன, நான் இவ்ளோ பண்ணி, கடைசில அவனுக்கு குடும்பம் குட்டின்னு வந்துட்டா, நான் நடுத்தெருவில தான நிக்கணும்…” என்று நக்கலாய் சொல்லிவிட்டு,

“அவளை விரட்டிட்டு நான் நிம்மதியா தான் இருந்தேன். ஆனால் இந்த ரிஷிக்கு தான் திடீர்னு கிறுக்கு பிடிச்சுருச்சு.

அவன் என்கிட்டயே வந்து, மத்த பொண்ணுங்ககிட்ட பழகுன மாதிரி நான் அவள்கிட்ட பழகல… எனக்கே தெரியாம தப்பு நடந்துருச்சு. ஆனால் நான் அப்படி பண்ணிருக்க கூடாதுன்னு இப்போ தோணுது அவள் ஞாபகமாவே இருக்கு… நான் அவளை கல்யாணம் பண்ணிக்கவான்னு என்கிட்டேயே கேட்டான்.

அப்போ எனக்கு எப்படி இருக்கும்… அதான் அவளை தேடி, அவளை கொலை பண்ணி, அவள் எங்கேயோ ஓடி போய்ட்டாள்னு ரிஷிக்கிட்ட சொல்லி நம்ப வச்சேன்.

ஆனால் அந்த மீரா, இப்படி இந்த சனியனை காப்பாத்துவாள்ன்னு நான் நினைக்கல. கொஞ்ச நாள் அமைதியா இருந்த ரிஷி, அப்பறம் மறுபடியும் அவளைத் தேட ஆரம்பிச்சான்.

அப்பதான் அவனுக்கு அவன் குழந்தை மட்டும் உயிரோட இருந்தது தெரிஞ்சுச்சு. அவனையும் தேடி கன்டுபிடிச்சவன், அவனை நானே வாங்கி வளர்க்க போறேன். கோர்ட்ல கேஸ் போட போறேன்னு முட்டாள்தனமா பேசுனான்.

அதான், அவனையும் ஒரு இடத்துல அடைச்சு வச்சு, இவனை வச்சு, உன்கிட்ட சொத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி, இவனை கொலை பண்ணிட்டு, இந்த பழியை உன் மேல போட போறேன்.

அவன் நீ பையனை கொன்ன கோபத்துல, உன்னை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவான். அந்த துருவ் கடைசி வரை உன்னை நினைச்சு உயிரோடயே சாவான்” என்று அவளின் திட்டங்களை பெருமையாய் சொல்லி முடிக்க, உத்ராவிற்கு மலைப்பாய் இருந்தது.

காஞ்சனா ரிஷி தப்பிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் தப்பித்ததும் தான், இரண்டு மணி நேரத்திற்குள் இங்கு வரச்சொன்னாள்.

எவ்வளோ பிளான் போட்டுருக்காள் என்று நினைத்தவளுக்கு ரிஷியை நினைத்து அவன் இவ்வளவு ஏமாந்து இருக்கானே என்று அழுவதா இல்லை, ரொம்ப மோசம் இல்லை சிறிது நல்லவன் தான் என்று சிரிப்பதா என்றே தெரியவில்லை.

இப்பொழுது இவர்களின் சூழ்ச்சியில் இந்த சின்ன பிஞ்சு மாட்டிக்கொண்டதே என்று நொந்தவள்,

“அவனை விட்டுடு காஞ்சனா. அவள் என்ன பாவம் பண்ணுனான்” என்று கெஞ்ச,

அவள் சிரிப்புடன், அவன் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினாள்.

பின், “அந்த பத்திரத்துல சைன் போடு” என்று சொல்ல, அவள், “நான் சைன் போடறேன் அவனை விட்டுடு.” என்று சொல்லிவிட்டு, அதில் கையெழுத்திட்டாள்.

சைதன்யா “இன்னும் உனக்கு ஒரு டாஸ்க் இருக்கு உதி டார்லிங். உன்னை நான் அடையணும்னு நினைச்சேன். ஆனால் அந்த துருவ் என்னை இப்படி கையாலாகாதவன் ஆக்கிட்டான். இப்போ நான் நினைச்சதை மத்தவங்க மூலமா பண்ண வைக்க போறேன்” என்று சொல்லி, அவனின் ஆட்களுக்கு கையை காட்ட, அவர்கள் இவளை மோசமான பார்வை பார்த்துக் கொண்டு நெருங்கினர்.

உத்ரா அவர்களை அடிக்க போக, சைதன்யா “உன் வித்தையை இங்க காட்டுன… இவன் தலை துண்டாகிடும்” என்று சொல்ல, சிலையாகி நின்றாள்.

அது சில நொடிகள் தான், அவள் கையை தொட அவர்கள் நெருங்குகையில் புயலென உள்ளே நுழைந்து, அவர்களை பறக்க விட்டான் துருவ், கண்ணில் தீப்பிழம்போடு.

திடீரென இதை எதிர்பார்க்காமல் இருவரும் தடுமாற, அந்த இடைவெளியை உபயோகப்படுத்தி, சட்டென்று சஞ்சுவை உத்ரா அவள் கைக்குள் கொண்டு வந்து விட்டாள்.

துருவ் அங்கிருந்த ஆட்களை அடித்து நொறுக்க, சைதன்யா அவசரமாய் வெளியில் செல்லப் பார்த்தான்.

அஜய், விது, சுஜி மூவரும் அவனை சுற்றி வளைத்து “எங்கடா ஓடுற…” என்று மறிக்க, விது அவனை ஓங்கி அறைந்தான்.

அஜய் அவன் பங்கிற்கு அவனை அடிக்க, சுஜி, “இவன் திரும்ப அடிக்க முடியாதுன்னு தான, இவனை அடிக்கிறீங்க.பயந்தாகொள்ளிங்களா” என்று நக்கலடிக்க,

அஜய் அவளை முறைத்து, “நான் அன்னைக்கு ஃபார்ம்ல இல்லை அதான் அடிக்கல. இப்போ அடிக்கிறேன் பாரு” என்று அங்கு இருந்த ஒரு அடியாளை அடிக்க போக, இவனுக்கு முன் அவன் அடித்ததில், அஜய் சுற்றி அங்கிருந்த பொருளை இடித்துக்கொண்டு மீண்டும் சுஜி மேலேயே வந்து விழுந்தான்.

சுஜிக்கு தான், அவனின் அருகாமை ஏதோ செய்ய, அவனையேப் பார்த்து கொண்டிருந்தாள்.

அஜய், சாவகாசமாய் அவள் மேல் படுத்துக் கொண்டு, “நான் அடிச்சேன் பாத்தியா…” என்று கேட்க,

சைதன்யாவை பிடித்திருந்த விது, தலையில் அடித்துக் கொண்டு “நீ அடிச்சது, துருவ் ஏற்கனவே அடிச்சு மயங்கி இருந்தவனைடா…” என்று விட்டு,

“அட ச்சே! முதல்ல எந்திரி” என்று சொல்ல, அப்பொழுது தான் அவன் தான் இருக்கும் நிலை உணர்ந்து அவசரமாய் எழுந்தான்.

சுஜிக்கு, கன்னமெல்லாம் சிவந்திருக்க, அஜயைபோ4 பார்க்க இயலாமல் தலையை குனிந்திருந்தாள்.

அஜய், இதெல்லாம் உணராமல், “கீழ என்ன தேடுற பஜ்ஜி” என்று குனிந்து பார்க்க, அவள் அவனை முறைக்க, விது, சுஜியிடம், “இந்த பெட்ரோ மாக்ஸ் லைட்டே தான் உனக்கு வேணுமா” என்று முணுமுணுத்தான்.

பின், திரும்பி துருவை பார்க்க, அவன் உத்ராவை யாரும் அடித்து விடக் கூடாது என்று அவளை அணைத்து கொண்டு சண்டையிட அவள், நெளிந்தபடி,

“என்னை விட்டுட்டு சண்டை போடுங்க” என்றாள்.

அவன், “நீ எப்படி அப்படி சொல்லலாம்…”  என்று கோபமாக கேட்க, அவள் “நான் உண்மைய தான சொன்னேன்” என்று திரும்பி கொண்டாள்.

“நீ என் மேல வச்சிருந்த காதல் தான் செத்துருச்சுன்னு நான் அன்னைக்கு சொன்னேன். நான் உன்மேலே வச்ச காதல் இன்னும் அப்படியே தான் இருக்கு” என்று அழுத்தமாக கூற,

அவள் “இப்போ ஞாபகம் வரலைனா நான் உங்களை இப்போ காதலிக்கலைனு அர்த்தமா” என்று கேட்டாள்.

அவன், “நீ என்னை பத்தி தப்பா நினைச்ச, அப்பறம் உன்னால எனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு பரிதாபம் தான் பட்ட. அப்போ இது எப்படி காதலாகும்…” என்று எதிர்கேள்வி கேட்டான்.

விது அவர்கள் அருகில் வந்து அவர்களை பிரித்து விட்டு, “இவனுங்களோட சண்டை போடுங்கடான்னா உங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க”.. முறைக்க,

துருவ் அவனை சப்பென்று அறைந்து, “அதை பிரிச்சு விட்டு தான் கேப்பியா” என்று முறைக்க, அவன் கன்னத்தில் கையை வைத்து கொண்டு,

“ஆமா நம்ம பிரிக்கலைன்னாலும், அப்படியே ரெண்டும் கொஞ்சி குழாவிடுங்க பாரு…” என்று புலம்பினான் முறைப்புடன்.

உறைதல் தொடரும்.
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
51
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.