Loading

“ஐ ஹேட் யூ டாலு!” பாவையின் காதினுள் கிசுகிசுத்தபடி, முத்தங்களை அள்ளித் தெளித்தான் தஷ்வந்த்.

மஹாபத்ராவை இறுக்கி அணைத்து, தன்னுடன் புதைத்துக் கொண்டவன், முதுகில் இரு விரலால் கோலமிட, அவள் திணறினாள்.

ஒவ்வொரு தொடுகைக்கும், “ஐ ஹேட் யூ அ லாட்!” என்று கடுமையுடனே கூறி, அவளைத் தீண்டிட, ஒரு கட்டத்திற்கு மேல், அவளால் தாங்க இயலாமல் தள்ளி விட்டாள்.

விழிகள் ஏனோ கண்ணீரைத் தாங்க வேண்டும் எனக் கெஞ்ச, அதனை முயன்று அடக்கியவளை, புருவ சுளிப்புடன் ஏறிட்டான் தஷ்வந்த்.

“என்ன ஆச்சு டாலு?” ஒன்றும் தெரியாதவன் போல கேட்ட தொனியில் மஹாபத்ராவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.

“இப்ப எதுக்கு ‘ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ’ ன்னு காதுக்குள்ள ஓதிட்டு இருக்க?” கோபமாகக் கேட்க வந்த பெண்ணவளின் குரல் ஒரு வித வலியில் கமறலாகவே வெளிவந்தது.

அதனைக் கண்டுகொண்டு, வெற்றி நகை வீசியவன், “உனக்கு தான் லவ்… ஐயோ சாரி சாரி…” என வாயில் கை வைத்துக் கொண்டவன், “உனக்கு தான் அந்த வார்த்தையே பிடிக்காதே டாலு. நீ பாட்டுக்கு நாலு பேரை விட்டு அடிக்க விட்டுட்டா, அன்னைக்கு ஏதோ என் நல்ல நேரம் பொழைச்சுட்டேன். எல்லா நேரமும் பாடி தாங்கும்ன்னு சொல்ல முடியாதுல. அதுவும் போக, இப்ப என் மனசுல என்ன இருக்கோ அதை தான சொல்ல முடியும்?” என அசட்டையாகக் கூறினான்.

அவளோ பதில் பேச இயலாமல் முறைத்து வைக்க, மீண்டும் அவளை நெருங்கி தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன், “எனக்கு உன் கூட இருக்கணும். ஆனா, எந்த கமிட்மெண்ட்டும் இல்லாம! யூ ஆர் ஆல்வேஸ் மை ஃபிஸிக்கல் பார்ட்னர் டாலு. இப்போ டைம் வேஸ்ட் பண்ணாம, வந்த வேலையை பாப்போமா?” என்றான்.

‘எனக்கு உன் கூட இருக்கணும். ஆனா, எந்த கமிட்மெண்ட்டும் இல்லாம, யூ ஆர் ஜஸ்ட் மை பாய் ஃப்ரெண்ட் அதுக்குமேல எதுவும் இல்ல.’ என்ற அவளின் வார்த்தைகளை, அவளுக்கு சுடும் வண்ணம், அவன் பாணியில் கூறி இருக்க, அவளுக்கு ‘ஃபிஸிக்கல் பார்ட்னர்’ என்ற வார்த்தையை  கேட்கவே பிடிக்கவில்லை.

“பழி வாங்குறியாடா?” பல்லைக்கடித்து அவள் கேட்டிட,

“சே… என்ன இருந்தாலும் ஒரு காலத்துல உன் மேல பித்து பிடிச்சு அலைஞ்சுருக்கேன் டாலு. உன்னை கஷ்டப்படுத்துனா அது என்னை நானே கஷ்டப்படுத்துற மாதிரி.” என வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன்,

“இப்போ முழுசா உனக்கு பிடிச்ச மாதிரி நான் மாறிட்டேன் டாலு. நோ கமிட்மெண்ட்ஸ், நோ லவ், ஜஸ்ட் லைக் தட் ரிலேஷன்ஷிப்க்கு நானும் ரெடி ஆகிட்டேன். என்ன ஒரு கொசுறா கல்யாணம் ஆகிடுச்சு. பட் டோன்ட் மைண்ட். இது ஜஸ்ட் கயிறு தான. எப்ப வேணாலும் கழட்டிக்கலாம்.” வெகு சாதாரணமாக அவன் பேசியதில், அவளுக்கு அதிர்வு தான்.

“வாயை மூடு தஷ்வா!” கத்தி விட்டவள், அவன் விழி உயர்த்திப் பார்க்கவும் தான் தன்னிலை உணர்ந்து, இதழ்களை பற்களால் கடித்துக் கொண்டாள்.

பெருவிரல் கொண்டு அவ்விதழ்களுக்கு விடுதலை கொடுத்தவன், “நான் உன்னை மாதிரி அரோகன்ட் கிடையாது பத்ரா. ரொம்ப ரொம்ப சாஃப்ட். இப்ப கூட, நீ என்னை லவ் பண்றேன்னு சொன்னா, எல்லாத்தையும் மறந்துட்டு, உன்னை மறுபடியும் லவ் பண்ணவும் நான் ரெடி தான்.” என்று ஓரப்பார்வையில் அவளை ஆராய, அவள் திகைத்தாள்.

ஆக, தன் வாயால் நடந்ததையும், தன் காதலையும் கூற வைக்க தான் இத்தனையும்! நொடிகள் நிமிடங்களாகிய பின்பும் அவளிடம் மௌனமே வெளிப்பட,

“ஐ நோ! உன்னால லவ் பண்ண முடியாது. அதுக்கு தான், ஈஸியா நம்ம உறவை டிஃபைன்ட் பண்ணுனேன் மை டியர் ஃபிஸிக்கல் பார்ட்னர். உனக்கும் என் மேல ஒரு க்ரஷ். எனக்கும் உன் மேல க்ரஷோ க்ரஷ். அதுவும் காலேஜ் டைம்ல பார்த்ததை விட, இப்போ…” என்றவாறு அவளை மேலும் கீழும் அமர்த்தலாக பார்வையிட்டவன், “வேற லெவல்ல இருக்க டாலு. ஐ காண்ட் வெய்ட்.” என்றான் மோகம் கொஞ்சும் குரலில்.

பற்களை நறநறவெனக் கடித்தவள், “ஆனா, நீ அப்போ பார்த்தமாதிரி இல்ல” என்றாள் எரிச்சலாக.

“இஸ் இட்? எப்படி இருக்கேன் டாலு.” எனக் கைகளை விரித்து, “முன்னாலும் பின்னாலும் திரும்பியவன், ஜிம் பாடி ஆகிட்டேனா?” சில்மிஷத்துடன் கேட்டவனிடம், “எல்லாமே மாறிடுச்சு தஷ்வா. அதுல உன் இன்னசன்ட்டும் அடக்கம்!” என்றவளின் குரலில் இனம் புரியா வருத்தம்.

அதை உணர்ந்தாலும், ஒதுக்கித் தள்ளியவன், “எல்லாமேன்னா…? நீ இன்னும் மாறலையே பத்ரா. என் காதலும்…” என்று ஆரம்பித்தவன், அத்துடன் நிறுத்தி விட்டு, “காலம் எல்லாத்தையும் மாத்தும்ன்னு சொல்றது மடத்தனம்ன்னு இப்போ நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்.” வார்த்தைகளில் வலி மிக கூறி விட்டு, இறுகிய முகத்தை பெருமூச்சு விட்டு சரி செய்தான்.

நொடிப் பொழுதில் முக பாவனைகளை மாற்றுபவனை அப்போதும் வியப்புடன் பார்த்தவளிடம், “ஆர்கியூ பண்றதுன்னா, நிறைய பண்ணனும் டாலு. பட், அது நமக்கு தேவை இல்ல. ஜஸ்ட் என்ஜாய் திஸ் மொமெண்ட். அது தான உன் தியரி. அண்ட், இப்போ என் தியரியும் கூட!”
என்றவன், கண்ணிமைக்கும் நேரம், அவள் அதரங்களை சுவைத்தான்.

மஹாபத்ரா தான், அவன் நெருக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல், விலக்கவும் இயலாமல் குழப்ப நிலையில் கண் மூடி நிற்க, மேலும் முன்னேறியவன், ‘ஐ ஹேட் யூ’ வை மட்டும் விடவில்லை.

ஒவ்வொரு முறை அப்படி கூறும் போதும், அவள் மேனி இறுகி பின் இயல்பாவதை உணர்ந்தவன், என்ன நினைத்தானோ, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவளுடன் இணையத் தொடங்கினான்.

தங்களுக்குள் காதலை தேட வேண்டாம் என்றவன், இரவு முழுக்க அவளிடம் காதலை மட்டுமே தேடினான். அத்தேடலில், மென்மையில் கலந்த காதலை ஒவ்வொரு நொடியும் அவன் காட்டிட, அதில் அவளும் உலகம் மறந்தாள்.

தேகத்தின் தேடல் முடிந்தாலும், காதல் தேடல் ஓயவில்லை அவனுக்கு. களைப்புற்று அவன் மார்பையே மஞ்சமாக்கி உறங்கிக் கொண்டிருந்த மஹாபத்ராவையே வெறித்துக் கொண்டிருந்தான் உறக்கம் வராமல். அவன் உறக்கம் தொலைந்து தான் வருடங்களாகி விட்டதே!

வெகு நாட்கள் கழித்து ஆழ்ந்த துயில் கொண்ட மஹாபத்ரா, உறக்கத்திலேயே தன்னவனைக் கரங்களால் துவாழ, அருகில் வெறும் தலையணை தான் வீற்றிருந்தது.

படக்கென எழுந்தவள், அலைபேசியில் நேரத்தைப் பார்க்க, காலை ஐந்து மணி எனக் காட்டியதில், ‘இந்த நேரத்துல எங்க போனான்…?’ என சிந்தித்தபடி தேடினாள்.

நழுவிய போர்வை வேறு, அவளது நிலையை அப்பட்டமாக உரைக்க, தன்னை மீறி முறுவலித்தவள், ‘ட்ரெஸ்ஸை கண்டபடி தூக்கி எறிஞ்சுருக்கான் ஐடியட்!’ எனத் திட்டிக் கொண்டாள் செல்லமாக.

ஆடைகளை தேடி அணிந்து விட்டு, குளியலறையில் எட்டிப் பார்க்க அங்கும் அவனில்லை. அதற்கு மேல் பொறுக்க இயலாமல், அவனுக்கு போன் செய்திட, அவனோ எடுக்கவே இல்லை.

கிட்ட தட்ட பதினைந்து முறை அழைத்து விட்டாள். ஒவ்வொரு அழைப்பிலும் அவளுக்கு தான் மனம் பதறியது. “பிக் அப் பிக் அப்…” என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே இருக்க, கடைசி தடவையாக எடுக்கவில்லை என்றால், அவன் பணி புரியும் மருத்துவமனைக்கே சென்று விடும் எண்ணத்தில் மீண்டும் அழைத்தாள்.

மருத்துவமனையில் தனது அறையில் தலையில் கைகளை புதைத்து அமர்ந்திருந்தான் தஷ்வந்த். ஏனோ அவனுக்கு மனமே சரி இல்லை. மஹாபாத்ராவை பிரியும் முன், இருவருக்கும் ஏற்பட்ட கூடலின் போது கூட இதே மனநிலை இருந்தது.

ஆனால், திருமணத்திற்கு முன்பு, அவளை நெருங்குகிறோமே என்ற குற்ற உணர்வில் தான் அப்படி இருக்கிறது என்று தன்னை தானே அப்போது சமாதானம் செய்து கொண்டான். அவனது உணர்வுகள் சரியென்பது போன்றே மஞ்சுளாவின் குழந்தை காணாமல் போனதும், மஹாபத்ரா தன்னை பிரிந்ததும் நிகழ்ந்தது.

இப்போதும் அதே உணர்வில் சிக்கித் தவித்தவனுக்கு, அதிலிருந்து விடுபடும் வழி தான் தெரியவில்லை.

அலைபேசியில் ஒளிர்ந்த மஹாபத்ராவின் எண்ணைப் பார்த்தப்பின்பும் அதை எடுக்க கூட தோன்றவில்லை அவனுக்கு. பின், இறுதி ரிங்கில் எடுத்தவன், “ம்ம்” என்று மட்டும் கூற, அவளோ பொங்கி விட்டாள்.

“அறிவிருக்கா உனக்கு? இந்த நேரத்துல சொல்லாம கொள்ளாம எங்க போன?” எனக் கத்தத் தொடங்க, “உங்கிட்ட நான் ஏன் சொல்லணும்?” என்று நிதானமாகக் கேட்டான்.

அதில் அவள் சட்டென அமைதியாகி விட, “எந்திரிச்சதும் என்னை தேடுனியா?” அக்குரல் அவளை என்னவோ செய்தது.

“ம்ம்…” அவள் முணுமுணுக்க, “ஏன் டாலு… நீ எல்லாம் முடிஞ்சதும் என்னை கழட்டி விட்ட மாதிரி, நான் உன்னை யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்டுட்டேன்னு நினைச்சுட்டியோ?” அதே நிதானம் இக்கேள்வியில்.

பதில் கூறாமல் பட்டென போனை அணைத்து விட்டவளுக்கு, விழிகளில் நீர் கோர்த்தது.

எப்போதும் போல ஆஷாவின் கைப்பற்றி அமர்ந்திருந்த மதனுக்கு, அவளைக் கருணைக்கொலை செய்ய சொன்ன மருத்துவர் மீது கொலைவெறியே வந்தது. மஹா மட்டும் சரியென்று கூறி இருந்தால், இந்நேரம் முருகனைக் கொன்றிருப்பான்.

‘இப்படியே என்கூட இருந்துடு ஆஷா. உன்னை நான் பத்திரமா பாத்துக்குறேன்’ மனத்தினுள்ளேயே மானசீகமாக அவளுடன் பேசிக் கொண்டிருந்தவன், மெல்ல அவள் கையை விட்டு விட்டு எழுந்திருக்க, அப்போது அமிஷும் உள்ளே வந்தான்.

‘ஜஸ்டு மிஸ்ஸு’ என்பது போல விழித்த மதனைக் கண்டு, “என்னடா?” என்றான்.

“ஒண்ணும் இல்லையே” மதன் சமாளித்து விட்டு, “வேற ஸ்பெஷலிஸ்ட் கிடைச்சாங்களா அமி?” எனக் கேட்டான் கண்ணில் வேதனையை நிரப்பி.

“ப்ச்… யாருக்கு ரிப்போர்ட் அனுப்புனாலும் ஒரே பதில் தான்டா. ஆனா, டாக்டர் ஒரு விஷயம் சஜஸ்ட் பண்ணாரு… அதை பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன். மஹூ உனக்கு கால் பண்ணுனாளா?” எனக் கேட்டான் வாடலுடன்.

“ம்ம். எப்பவும் காலைலயே போன் பண்ணி ஆஷா பத்தி விசாரிப்பா…” என்றவனுக்கும் சங்கடமாக இருந்தது.

அவள் அமிஷுடன் பேசுவதே இல்லை. அமிஷ் போன் செய்தாலும் நிதின் மட்டுமே பேசுவான். சில நாட்களாக அவனையும் அவள் பேச விடுவதில்லை என்று புரிந்து வருந்தியவன், “ஏன் அமி?” எனக் கேட்டான்.

கண்ணை சிமிட்டி தன்னை அடக்கிக் கொண்டவன், “அவள்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும். நான் சொல்றதை நீயே கேட்டுட்டு எனக்கு பதில் சொல்லு மதன்.” என்றவன், விவரத்தைக் கூறி விட்டு வெளியேற, மதனுக்கு அவனைப் பார்த்தாலும் பாவமாக தான் இருந்தது.

‘இந்த மஹா ஏன், அனைவரையும் தவிர்க்கிறாள்…’ என ஆயாசமாகவும் இருந்தது. மதனிடம் கூட ஆஷா பற்றி விசாரிப்பாளே தவிர, அவளைப் பற்றி விசாரித்து விட்டால், அழைப்பைத் துண்டித்து விடுவாள்.

உடனே அவளுக்கு போன் செய்யாமல், “உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும் மஹா. ஆஷாக்கு எதுவும் இல்ல. சோ டென்ஷன் ஆகாம கால் பண்ணு” என்று குறுஞ்செய்தி அனுப்பி, அவளை முதலில் நிதானப்படுத்திக் கொண்டான்.

அந்த செய்தியைக் கண்டதும், மென்முறுவல் பூத்தவள், மதனுக்கு அழைத்து “சொல்லு” என வினவ,

“மஹா… ஆஷாவோட மெடிக்கல் ரிப்போர்ட்டை நிறைய ஸ்பெஷலிஸ்ட்கிட்ட அமி  அனுப்புனானாம். ஆனா யாரும் நல்லதா எதுவும் சொல்லல போல. அதான், இப்போ ஏதோ ஒரு டாக்டர் கோமா ஸ்டேஜ் பத்தி ரிசர்ச் பண்ணி, ஒரு கோமா பேஷண்ட்ட சரி பண்ணுனாராம். இப்போ அதே மாதிரி கோமால இருக்குற பேஷண்ட்க்கும் நிறைய பேருக்கு நல்லா இம்ப்ரூவ்மென்ட் இருக்காம். ஆனா, ப்ராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணியே கொஞ்ச வருஷம் தான் ஆகுதாம். அதான், நம்பி ஆஷாவோட ரிப்போர்ட்ஸ அனுப்பலாமா வேணாமான்னு அமி கேட்க சொன்னான்.” என்று கூறி முடித்தான்.

“ஓ! எங்க இருக்காராம் அந்த டாக்டர்? டீட்டைல் அனுப்பி விடு.” என்றவளிடம், “அதை பத்தி அமி இன்னும் விசாரிக்கல போல மஹா. அவன் ரொம்ப எக்ஸ்பீரியஸ் ஆன ஸ்பெஷலிஸ்ட்டா தேடிட்டு இருக்கான். அதான் இந்த டாக்டர பத்தி சொன்னதும் பெருசா ஆர்வம் காட்டல.” என்றான்.

“ஒரு ட்ரை பண்ணி பார்க்கலாம் மதன். ரிப்போர்ட்ஸ் தான அனுப்ப போறோம். எனக்கு விசாரிச்சுட்டு சொல்லு” என்று விட்டு போனை வைத்தாள்.

அதை அமிஷிடம் கூறியதும், அவனும் முருகனிடம் பேச, அவரோ “அப்போ நான் உடனே ரிப்போர்ட்ஸ் அனுப்பி வைக்கிறேன் அமிஷ்.” என்றவர், அனுப்பியும் விட்டார்.

“அந்த டாக்டர் பத்தின டீட்டைல்ஸ்?”அமிஷ் கேட்டதும், “அவர் பேர் தஷ்வந்த். நியூரோ ஸ்பெஷலிஸ்ட். மே பி எக்ஸ்பீரியன்ஸ் கம்மியா இருக்கலாம். பட், ஹி இஸ் சோ இன்டலிஜெண்ட். அதான், நானும் உங்களுக்கு அவரை ஃரெபர் பண்றேன்.” என்றதும், அமிஷும் மதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மதன் போனை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல, அந்நேரம் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் மந்த்ரா.

அவள் வரவை உணர்ந்து, அவள் புறம் கண்ணைத் திருப்பாமல் அமர்ந்திருந்த அமிஷை ஒரு முறை பார்த்து விட்டு, “கூப்பிட்டீங்களா சார்?” எனக் கேட்டாள் ஆங்கிலத்தில்.

“எஸ்… மந்த்ரா. சிட்.” என அமிஷிற்கு அருகில் இருக்கையைக் காட்ட, “இட்ஸ் ஓகே சார் சொல்லுங்க” என்று நின்று கொண்டாள்.

அதில் நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், மீண்டும் பார்வையை திருப்பிக்கொள்ள, முருகன் தொடர்ந்தார்.

“இவர் மிஸ்டர் அமிஷ். டெல்லில பீடியாட்ரிஷியனா இருக்காரு…” என்று அறிமுகப்படுத்த, ‘இவன் பேர் அமிஷ்ன்னு நீ சொல்லி தான் எனக்கு தெரியும் பாரு…’ என்று மனதினுள் முருகனை வறுத்தாள்.

“அமிஷ்… இவங்க மந்த்ரா. கைனகாலஜிஸ்ட். ஹைதராபாத்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ சென்னைக்கு வந்து 4 டேஸ் ஆகுது.” என்று விளக்கம் கொடுக்க, ‘யோவ் இப்ப எதுக்குயா தெரிஞ்ச எங்களுக்கே இன்ட்ரோ குடுத்துட்டு இருக்க…’ என்று வெறியாய் முறைத்து வைத்தான்.

இருவரும் ஃபார்மாலிட்டிக்கு கூட ஒரு ஹாய் சொல்லிக்காமல் இருந்ததில், முருகன் விழித்து விட்டு, பின், மந்த்ராவிடம் “உங்களை ஏன் வரசொன்னேன்னா, இவரோட ஃபியான்ஸி ஆஷா லாஸ்ட் சிக்ஸ் இயர்ஸா கோமால இருக்காங்க. நீங்க ரௌண்ட்ஸ் போகும் போது, மார்னிங் அண்ட் ஈவினிங் அவங்களையும் ரொட்டின் செக் – அப் பண்ணனும்.” என்று கூறிட, அவளோ திகைத்தாள்.

‘சீனியர்க்கு என்ன ஆச்சு?’ என்ற அதிர்வு ஒரு புறமும், ‘அவள் இவனுக்கு ஃபியான்ஸியா’ என்ற தவிப்பு ஒரு புறமும் தாக்க, “சீனியர் ஆஷாக்கு என்ன ஆச்சு?” என அமிஷிடம் நேரடியாகவே கேட்டு விட்டாள்.

அவள் கேட்டதும் தவிர்க்க இயலாமல் “ஆக்சிடெண்ட்!” என்றான் அவளைப் பாராமல்.

“எப்போ?” என்றவளின் மனதில் ஆறு வருடம் ஆகி விட்டது என்றால், ஒருவேளை தன்னைக் காண வரும் நாளன்று விபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் ஓடியது.

இப்போதும் கூட அவன் காதலை பொய்யென வாதாடாத தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.

எந்த நொடி அவன் மீது இப்படிபட்ட காதல் பரவியது என அவளும் அறியவில்லை.

“ஆறு வருஷத்துக்கு முன்னாடி…” என பதில் அளித்தவன், அதற்கு மேல் பேச்சுக் கொடுக்காமல், எழுந்து வெளியில் சென்று விட்டான்.

இம்முறை அவளுக்கு கோபம் வந்து விட்டது. ‘என்னவோ, நான் இவனை காதலிச்சு கழட்டி விட்ட மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டு போறான். நியாயமா இதெல்லாம் நான் பண்ணனும். என்னை காதலிக்கிறேன்னு பின்னாடியே சுத்திட்டு, உருக உருக டயலாக் பேசிட்டு, இன்னைக்கு வேற ஒருத்திக்கு ஃபியான்சின்னு சுத்திட்டு இருக்கான்…’ என்று கடுகடுத்தாள்.

ஆனால், உண்மையில் ஆஷாவின் நிலை எண்ணி வருத்தமே எழுந்தது. கல்லூரி காலத்திலும், எப்போதும் புன்னகையுடனே வலம் வருபவள். மனதில் எவ்வித வஞ்சத்தையும் வளர்த்துக் கொள்ளாதவள். ‘மஹாபத்ரா மாதிரி ஆஷா கிடையாது. அவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை’ என்று தான் தோன்றியது.

அதே யோசனையுடன் வெளியில் வந்தவளை, அப்போது தான் மதன் பார்த்தான்.

“மந்த்ரா? நீ இங்க என்ன பண்ற?” சற்றே வியப்புடன் அவன் கேட்டதில், “மதன் அண்ணா… எப்படி இருக்கீங்க?” என்று முகம் மலர்ந்தாள்.

மாதவ் தவிர அனைவரிடமுமே தொடர்பு அறுந்திருந்தது. மதன் தான், “அட, தமிழ்லாம் பேசுற?” என்றதில்,

“மாதவோட ட்ரெயினிங் அண்ணா. நான் அவனுக்கு தெலுங்கு டீச்சர். அவன் எனக்கு தமிழ் டீச்சர்.” என்று சிரித்ததில் அவனும் நகைத்தான்.

அமிஷ் தான், அதில் பாதி புரியாமல் விழித்து விட்டு, “நான் ஆஷா ரூம்க்கு போறேன்.” என்று நகர்ந்திட, சரியாக மதனுக்கு மஹாபத்ரா போன் செய்தாள்.

அதில், அவன் பேசியபடி வெளியில் செல்ல, மந்த்ராவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

நேராக ஆஷாவின் அறைக்கு வந்தவளை அமிஷ் புரியாமல் பார்க்க, “செக் அப்…” என்றவள், ஆஷாவைப் பார்த்தாள்.

பார்க்கவே பரிதாபத்துடன், ஏகப்பட்ட வயர்களுடனும் படுத்திருந்தவளைக் கண்டு கண்ணே கலங்கி விட்டது.

“சே… கடவுள் நல்லவங்களை தான் ரொம்ப சோதிப்பாரு. அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி பாக்குற எல்லாரும் நல்லா தான் இருக்காங்க…” என எரிச்சல் பட்டுக் கொண்டே, அவளை சோதித்தாள்.

தெலுங்கில் அவள் புலம்பியது அவனுக்கும் புரிந்திட, “யாரை சொல்ற?” எனக் கேட்டான் கடுமையாக.

நிச்சயமாக அந்த எரிச்சல் மஹாபத்ரா மீது தான். அவளால் தானே, தஷ்வந்த் அவனுடைய தமக்கையின் குழந்தையை இழந்தான். அவளால் தானே, தலையில் அடிபட்டு வெகு நாட்கள் மருத்துவமனையில் இருந்ததோடு அல்லாமல், அவளது பிரிவிலும், குழந்தையை தொலைத்த குற்ற உணர்விலும் சிதைந்து தற்கொலை வரை சென்றான். அவளால் தானே, அவனுக்குள்ளேயே இறுகி உடைந்து அவள் நினைவில் வெந்து போனான். அவளால் தானே, நண்பர்களைக் கூட காணாமல், தனிமையில் தேய்கிறான். அனைத்தும் அவளால்… ஆனால், அவள் எங்கோ நிம்மதியாக இருக்க, உடன் இருப்பவர்களுக்கு அல்லவா இத்தனை வேதனை!

“நான் யாரையோ சொல்றேன். உங்களுக்கு என்ன?” அவள் முறைப்பாகக் கேட்க, “செக் – அப் பண்ணிட்டா, கிளம்புறியா?” என்றான் உணர்வற்ற குரலில்.

அதில் முற்றிலும் தன்னிலை இழந்தவள், “போகாம இங்க பஜனையா பாட போறேன். உங்களுக்கு லவ் பண்ணி விளையாட நானா கிடைச்சேன். நீங்க தான் தேவை இல்லாம, என் பின்னாடி சுத்தி, டைம் வேஸ்ட் பண்ணுனீங்க. இப்ப என்னனா அந்த டாக்டர் ஆஷாவை ஃபியான்ஸின்னு சொல்றாரு? உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க? என்னையும் தஷுவையும் பார்த்தா உங்களுக்கும் உன் அருமை நண்பிக்கும் விளையாட்டுப் பொருள் மாதிரி இருக்கா. விருப்பப்பட்டா கைல எடுத்து விளையாடுறது, தேவை இல்லைன்னா, தூக்கிப் போட்டு உடைச்சுடுறது!” என்று மூச்சிரைக்க கத்தினாள்.

அவளை அமைதியாக ஏறிட்டவன், “சாரி” என்றிட, அவளோ வியப்பாக பார்த்தாள், என்ன ஒரு அதிசயம் என்று.

“உன்மேல இருக்குறது லவ்ன்னு என்னை நானே கன்ஃபியூஸ் பண்ணிக்கிட்டேன் மந்த்ரா. ஆஷாவுக்கு ஆக்சிடென்ட் ஆனதும் தான் தெரிஞ்சுது, உன் மேல இருக்குறது வெறும் க்ரஷ். அவள் மேல இருக்குறது தான் லவ்ன்னு. இந்த ஜென்மத்துல இவள் தான் என் லைஃப். அவள் முழிச்சாலும் இல்ல அப்டியே…” என்னும் போதே அவனுக்கு தொண்டையை அடைத்தது.

“எப்படினாலும், நான் இவளை விடுறதா இல்ல.” என்றான் முடிவாக.

அவளுக்கோ நடப்பதை ஜீரணிக்கவே இயலவில்லை. வெறும் க்ரஷ் என்றா கூறுகிறான்? எப்படி இத்தனை சாதாரணமாக தன் மீதிருந்த காதலை தூக்கி எறிந்து விட்டான். அவன் கண்களில் காதல் தெரிந்ததே! அது பொய்யுன்னு மனசு நம்ப மறுக்குதே! அவள் உள்ளுக்குள் மருகினாள்.

“நீங்க லவ் பண்றீங்க சரி… கோமால இருக்குற உங்க ஃபியான்ஸி லவ் பண்றங்களா என்ன?” என நடுக்கத்துடன் கேட்டவளிடம், “அவளும் என்னை தான் லவ் பண்றா. ஐ நோ! விளக்கம் போதுமா கிளம்பு!” என்றிட, மந்த்ராவிற்கு தான் பெரிய அடியாய் விழுந்தது.

ஆனாலும், இப்போதும் இந்த நொடியும், அவன் மீதே காதல் பல்கி பெருகுவதில் நிலைகுலைந்து, விறுவிறுவென சென்று விட்டாள்.

மஹாபத்ராவிடம் பேசி விட்டு உள்ளே வந்த மதனுக்கு தான் அதிர்ச்சியில் கால்கள் தளர்ந்தது. ஆஷா அவனை விரும்புவதாகக் கூறுவதை நம்ப இயலாமல் பேயறைந்தது போல நின்றவன், மெல்ல உள்ளே வந்து, “அ… அமி, நிஜ… நிஜமாவே ஆஷா உன்னை விரும்புறாளா?” எனத் திக்கி திணறி கேட்டான்.

ஆஷாவை வெறித்தபடி “ம்ம்…” என்றதில், “உங்கிட்ட சொன்னாளா?” மீண்டும் நம்ப இயலாமல் கேட்டான்.

“என்கிட்ட சொல்லல. ஆனா தெரியும்.” என்றவனை மதன் புரியாமல் பார்க்க, அங்கே கப் போர்டில் அடுக்கி வைத்திருந்த ஆஷாவின் பொருட்களோடு சில நாட்குறிப்புகளையும், சில கிரீட்டிங் கார்டுகளையும் எடுத்துக் காட்டியதில், அப்பட்டமாக தெரிந்தது அவள் அமிஷின் மீது கொண்ட காதல்.

கோமாவில் இருந்தவளின் பொருட்களை எடுக்க வீட்டிற்கு செல்லும் போது தானே, இவை எல்லாம் அமிஷிற்கும் தெரிந்தது. தன்னை அவள் காதலித்ததே அவனுக்கு பெரும் அதிர்வு தான். ஒவ்வொரு முறை, தான் மந்த்ரா பற்றி பேசும் போது, அவளது குரலும் முகமும் மாறியது, இப்போது சிந்திக்கும் போது தான் புரிந்தது.

அப்போதே முடிவெடுத்து விட்டான், எக்காரணம் கொண்டும் தன் தோழியை விடக்கூடாதென்று. ஆனால், அவளை காதலிக்க இயலுமா என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. மந்த்ராவின் மீது கொண்ட நேசம், இன்றளவும் மாறாமல் மணம் வீசிக் கொண்டிருக்க, முயன்று அவளை மறக்க முயன்றவன், ஆஷாவின் மீது மட்டுமே கவனத்தை செலுத்தினான்.

மதனுக்கு தான் நெஞ்செல்லாம் புண்ணாகியது. என்றுமே ஆஷாவிற்கும் அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று தெரியும் தான். எப்படியும் அவளிடம் மறந்து கூட அவன் காதலை உரைக்கப் போவதில்லை தான். ஆனாலும், அவளது காதலை எண்ணி எழும் வலியை தான் தாங்க இயலவில்லை.

‘எப்போதும் அவள் தன்னவளில்லை…’ என்ற உண்மையை மனதில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், என்ற உறுதியை எடுத்துக் கொண்டவனுக்கு காதல் கொண்ட மனது தீயில் இட்ட புழுவாய் துடித்தது.

இங்கோ மஹாபத்ரா தான் யோசனையில் ஆழ்ந்தாள். ஆஷாவை பரிசோதிக்க போகும் மருத்துவர் தஷ்வந்தாக இருக்கும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

தான் வந்திருக்கும் வேலை முடியும் வரை, மதனுக்கும் அமிஷிற்கும் இந்தியா வந்தது தெரியக் கூடாது. ஆனால், தஷ்வந்த் ஆஷாவைப் பார்க்க சென்றால், அமிஷிடம் இல்லையென்றாலும் மதனிடம் நிச்சயமாக தான் இங்கிருப்பதை கூறி விடுவான். மதனும் உளறி விடுவான்… என்று குழம்பிப் போனாள்.

காலை ஐந்து மணிக்கு சென்றவன், இரவு எட்டு மணி அளவில் தான் வீட்டிற்கு வந்தான். வந்தவனின் முகமும் குழப்பத்தில் தான் இருந்தது.

ஆஷாவின் ரிப்போர்ட்டை அவனும் பார்த்தானே! அதில் அவளது புகைப்படமும், பிற விவரங்களும் இருக்க, அவனுக்கும் கஷ்டமாகவே இருந்தது.

அவனே பேசட்டும் என்று அவள் காத்திருக்க, ‘வாயை திறந்து இதையாவது சொல்லட்டும்’ என அவனும் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான்.

நேரம் செல்ல செல்ல, தஷ்வந்த் தன்னிடம் கேட்கப்போவதில்லை என்று தெரிந்து விட்டது. ‘அழுத்தக்காரன்…! இவ்ளோ அழுத்தம் ஆகாதுடா!’ என மனதினுள் அவனை திட்டி விட்டு, “ரிப்போர்ட்ஸ் பார்த்தியா?” எனக் கேட்டாள்.

‘ப்பா… முத்து உதிர்ந்துட போகுது.’ அவனும் மானசீகமாக சலித்து விட்டு,

“ம்ம்” என்றான்.

“ஹோப் இருக்கா?” கேட்கும் போதே குரல் நடுங்கியது அவளுக்கு.

வேதனை தோய்ந்த முகத்தை பிரதிபலித்த பெண்ணவளை, அவனும் வருத்தத்துடன் ஏறிட்டான்.

“கொஞ்சம் கஷ்டம் தான். பட், உடனே முடிவெடுக்க வேணாம். கொஞ்ச நாள், நான் ட்ரீட்மெண்ட் குடுத்துப் பாக்குறேன். இவ்ளோ மோசமா ஹெட் இன்ஜியூரி ஆகுற அளவு என்ன ஆச்சு?” தஷ்வந்த் ஆதங்கத்துடன் கேட்க,

“ஆக்சிடெண்ட்” என்றாள் ஜன்னலில் எங்கோ வெறித்தபடி.

சரியாக, அவளை விட்டுப் பிரிந்த நாள், நிதின் காணாமல் போன நாளில் தான் ஆஷாவிற்கும் விபத்து ஏற்பட்டிருந்தது. அவளுக்கு விபத்து ஏற்பட்ட நாளைக் கண்டதுமே அவனுக்கும் அது புரிந்து விட,

“அன்னைக்கு ஆஷாவுக்கு ஆக்சிடெண்ட் ஆனதுனால தான் போனியா?” எனக் கேட்டான்.

என்றைக்கு என்று அவளுக்கும் புரிந்தது. ஆனால், பதில் சொல்லவில்லை.

அதுக்கும், தன்னை அப்படி ஒரு நிலைக்கு தள்ளியதற்கும் என்ன சம்பந்தம் என்று தான் புரியவில்லை அவனுக்கு. அதே கேள்விக்கணைகளுடன் அவளை நோக்க, அதனை விடுத்து, “ட்ரீட்மெண்ட் எவ்ளோ எக்ஸ்பென்சிவா இருந்தாலும் நோ ப்ராப்ளம். பட், அவள் எனக்கு திரும்ப வேணும்.” என்றாள்.

“வேணும் வேணாம்ன்னு நம்ம மட்டும் முடிவு பண்ண முடியாது பத்ரா. நமக்கு மேல கடவுள் ஒருத்தர் இருக்காரு…” என்று தஷ்வந்த் சுள்ளென கூறிட, அவள் முகம் சிறுத்து விட்டது.

அதில் அவனுக்கும் நிலைகொள்ளவில்லை. “முடிஞ்ச அளவு ட்ரை பண்ணலாம் டாலு. ஹோப் ஃபார் த பெஸ்ட்!” என அவளது கரங்களைப் பற்றி தனக்குள் வைத்துக் கொண்டவன், அதற்கு ஒரு முத்தத்தையும் கொடுத்து, “ஐ ஹேட் யூ டாலு” என்று கண் சிமிட்டிக் கூறிட, அத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து முறைத்தாள் மஹாபத்ரா.

காயம் ஆறும்!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
35
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்