1,054 views

சாந்தமாக உள்ளே வந்த அன்பினி சித்திரை காளி அவதாரம் எடுத்திருந்தாள் அவள் கண்ட காட்சியில். அக்னி அமர்ந்துக் கொண்டு லேப்டாப்பில் என்னவோ செய்து கொண்டிருக்க, அவன் பக்கத்தில் மிடுக்கான ஒப்பனையில் ஒரு பெண் நின்றிருந்தாள். அவன் திரையைக் காட்டி ஏதோ சந்தேகம் கேட்க பக்கத்தில் குனிந்து நின்ற பெண் அவன் கையை உரசி திரையைத் தொட்டு ஏதோ பதில் சொன்னாள். 
 
 
பார்த்ததும் பற்றிக் கொண்டது அன்பினியின் பொறாமை தீ. அவள் அங்கு நிற்கிறாள் என்பதை உணர்ந்தவன் கண்டுகொள்ளாமல் வேலையை கவனிக்க, பக்கத்தில் நின்றிருந்த பெண், “யார் நீங்க?” என்றாள் அவளை இதற்கு முன் பார்க்காததால்.
 
 
பதில் சொல்லாத அன்பினி கணவனை உஷ்ணத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, “எக்ஸ்க்யூஸ் மீ யார் நீங்க?” என்று மீண்டும் அப்பெண் கேட்க,
 
“நிஷா! நான் சொன்ன ஃபைலை ரெடி பண்ணிட்டு வாங்க.” என்று அனுப்பி வைத்தான் அவளை.
 
 
தன்னைத் தாண்டி செல்லும் அந்தப் பெண்ணை எவ்வளவு முடியுமோ அவ்வளவு காரத்தோடு முறைத்து விட்டாள் அன்பினி. மனைவியின் பார்வையில் அக்னிக்கு லேசாக சிரிப்பு வந்துவிட்டது. இருந்தும் கண்டு கொள்ளாமல் அவன் வேலையை கவனித்தான்.
 
“யார் இவ?” மேஜை மீது இரண்டு கையையும் ஊனிக் கொண்டு அன்பினி கேட்க, அமைதியாக இருந்தான் அக்னி.
 
“சொல்றியா இல்ல ஆபீசையே பதில் சொல்ல வைக்கட்டுமா!” என்றதும் கடுமையாக முறைத்தவன்,
 
“அதே ஆபீஸ் நீ அடி வாங்கி அவமானப்படுறதையும் பார்க்கும்.” என்றான். சொன்னவன் வேலையை கவனிக்க, முறைப்பதை விடவில்லை அன்பினி. 
 
“என்னை கேள்வி கேட்கிற அளவுக்கு அவளுக்கு இங்க உரிமை இருக்கா?” என்றவளை அலட்சியம் செய்தான் பதில் அளிக்காமல்.
 
அன்பினியின் பொறுமை காணாமல் போய்விட தானே களத்தில் இறங்க வெளியில் செல்ல, ஓடிச் சென்று தடுத்தான் அக்னி.
 
வளைந்து கொடுக்காத அன்பினி பார்வையால் சுட்டெரிக்க, “இங்க ஏதாவது பிரச்சனை பண்ண நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” அவன் சூடாக பேச,
 
“ஓ! சாருக்கு அவ அவ்ளோ முக்கியமான ஆளா.” என்றாள் விலகி நின்று.
 
அக்னி பேசாமல் அமைதி காக்க, “நான் ஆஃபீஸ் வராத கேப்புல எனக்கு போட்டியா ஒருத்தி வந்துட்டாளா. பார்க்குறேன் ரெண்டு பேரும் இனி எப்படி ஒன்னா இருக்கிறீங்கன்னு.” என்று வெளியேற,
 
“ஜீவா எமர்ஜென்சியா ஒரு மாசம் லீவு. அதுவரைக்கும் இருக்கட்டும்னு புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்கேன்.” விளக்கம் கொடுத்தான் அக்னி. 
 
“இந்த ஆபீஸ்ல எத்தனையோ ஆம்பளைங்க இருக்காங்க. அவங்க எல்லாரையும் விட்டுட்டு புதுசா ஒருத்திய தான் வைக்கணுமா.” முறைப்பை இன்னும் விடாமல் அன்பினி கேட்க, சிரிப்பு தான் வந்தது அக்னிக்கு.
 
அவை லேசாக உதட்டில் தெரிய, வேகமாக பாய்ந்து சட்டையைப் பிடித்தவள், “என்னடா சிரிக்கிற. என்னை பார்த்து யாருன்னு கேக்குறா. வாய ஒடச்சிடுவேன் சொல்லி வை.” என்றதும் சத்தமிட்டு சிரித்தான் அக்னி. 
 
 
கோபத்தில் மூக்கு மட்டுமல்ல முகம் முழுவதும் சிவக்க, தன் கைக்கு வலிக்கும் வரை அடித்தாள் அவனை. வெளியில் சிலரது பார்வைக்கு அவை பட்டது. சிரிப்போடு கதவை சாற்றியவன், “நான் யாரையாது கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னடி பண்ணுவ.” கேட்டான் விளையாட்டாக.
 
 
பதில் சொல்ல விரும்பாத அன்பினி அவனை விட்டு விலகி நிற்க, சத்தம் வராமல் சிரித்தவன் தன்னுடன் சேர்த்தான் அணைத்து. அவள் அவனை பார்க்காமல் வேறு புறம் முகத்தை திருப்ப, “அன்பு ஐ லவ் யூ.” என்றான். 
 
கேட்டவள் முகத்தை திருப்பாமல் அப்படியே இருக்க, அவனும் பார்வையை எடுக்கவில்லை மனைவியிடம் இருந்து. வெகு நேரங்கள் கடந்தும் இருவரும் அப்படியே இருக்க, “அன்பு ஐ லவ் யூ.”  மீண்டும் அக்னி கூற,
 
“அப்புறம் எதுக்கு இன்னொருத்திய கல்யாணம் பண்ண போன.” என்றவள் குரல் அடிபட்ட வலியை பிரதிபலித்தது.
 
“என்னை பாரு பதில் சொல்றேன்.” என்றதும் அவன் முகத்தை அன்பினி பார்க்க,
 
“அன்னைக்கு நீ சொன்ன மாதிரி தான். இன்னும் உன் மேல கோபம் குறையலன்னு மூளை சொல்லுது. ஆனா மனசு உன்ன பக்கத்துலயே வச்சுக்கணும்னு அடம் பிடிக்குது. என் விஷயத்துல நீ பொறாமைப்படும் போது உடம்பு முழுக்க சில்லுனு இருக்கு. ஆனா நீ பண்ணதை நினைக்கும் போது இதே உடம்பு எரியுது.” என்றவன் அவள் முகத்தை வேகமாக பற்றி,
 
“எதுக்குடி என் வாழ்க்கை குள்ள வந்த. நான் உன்ன சந்தோஷமா பார்த்துக்க மாட்டேன். உன் அப்பா மேல இருக்க கோபத்தை உன்கிட்ட  காட்டணும்னு தோணுது. என் அம்மாவை அழ வைச்சவனோட பொண்ண கல்யாணம் பண்ணிட்டன்னு எரிச்சலா இருக்கு.” என்றான் காதலையும் வெறுப்பையும் கலவையாக்கி. 
 
மேற்கொண்டு பேசாமல் அக்னி அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருக்க, கைகளை தட்டி விட்டவள் இருக்கையில் அமர்ந்தாள். அன்பினி கோபமாக இருக்கிறாள் என்று நினைத்தவன், “சாரி” என்க,
 
கையை தலைக்கு தாங்கியவள் திரும்பி அமர்ந்தாள். பெருமூச்சு விட்டவன் அவள் அருகில் அமர்ந்து மன்னிப்பு வேண்ட,
 
 
“அட போடா! நான் கூட முகத்தை திருப்பினதும் கிஸ் பண்ணி ரொமான்டிக் வேர்ல்டுல டிராவல் பண்ண வைக்க போறன்னு தப்பா நினைச்சுட்டேன். கடைசில அஞ்சு பைசாவுக்கு தேராத  டயலாக்க பேசி பல்ப் கொடுத்துட்டு சாரி வேற.” என்று சலிப்பாக  கூறியதும், முறைத்தான்.
 
 
 
அதை கவனித்தவள் தாடையைப் பற்றி, “ஆங்கிரி பேர்ட் உனக்கு ஒன்னும் ஹார்மோன்ஸ் ப்ராப்ளம் எதுவும் இல்லையே.” என்று சந்தேகமாக பார்க்க, அவள் தலையில் கொட்டினான். 
 
 
வலிக்காத தலையை ஆழமாக தேய்த்து, “வலிக்குது.” என்றாள். அன்பினி தலையில் கை வைத்தவன், “இங்கயா வலிக்குது” என்று கேட்க, அவள் பாவமாக தலையசைத்தவுடன் அந்த இடத்தில் மீண்டும் கொட்டினான்.
 
எழுந்து நின்றவள் அவனை சகட்டுமேனிக்கு அடிக்க ஆரம்பிக்க தடுப்பதாய் பாவனை செய்து சில அடிகளை கொடுத்தான் அக்னி.
 
இருவரும் தனி உலகில் உறவுகளின் பிரச்சினைகளைப் பேசாமல் தங்களுக்குள் இருக்கும் காதலை காட்டிக் கொண்டிருக்க, “அடிமை” என்றாள் பழைய நினைப்பில்.
 
கோபம் கொள்ளாதவன், “சொல்லுங்க மேடம்” என்றான் குழைவாக.
 
அவனை விட்டு விலகியவள் இருக்கையை நகர்த்தி அமர்ந்தாள். அன்பினி செய்கை எதற்கு என்று புரிந்து கொண்டவன் தன் இருக்கையில் அமர, முன்பு திருட்டுத்தனமாக ரசித்த அக்னியை இன்று வெளிப்படையாக ரசித்தாள். பார்வை வரம்பு மீறி போக வெட்கம் வந்து தலையை குனிந்து கொண்டான் அக்னி.
 
“நான் உன்னை சைட் அடிச்சது தெரியும் தான.” என்ற கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான். 
 
“ஃபிராடு!” என்றவள் அலுவலகத்தை காதல் சின்னமாக மாற்றி விட்டாள். முன்பு அவர்கள் எங்கெல்லாம் சண்டை போட்டார்களோ அங்கெல்லாம் மீண்டும்  காதலை தரவிறக்கம் செய்ய, கடைசியாக நின்றார்கள் முதல் முதலில் சந்தித்த படிக்கட்டில். 
 
படிக்கட்டின் ஓரத்தில் அமர்ந்தவள் அவன் கன்னத்தில் அடித்து, பதிலுக்கு தன் கன்னத்தை காட்டினாள். எப்படி அடிப்பானோ என்ற பயத்தில் அவள் கண் மூட வலிக்காத அடியை கொடுத்தான் முத்தத்தால். 
 
“கை பிடிச்சுக்கோ மாமா.” என்றவள் அவனோடு சேர்ந்து ஒவ்வொரு படிக்கட்டையும் தாண்ட, தூக்கிக்கொண்டு அவள் சொல்லாத ஆசையையும் நிறைவேற்றினான். 
 
 
ஆட்கள் இருக்கும் இடத்தில் இருவரும் எதுவும் நடக்காதது போல் நடிக்க,   முத்த அனுபவம் நிகழ்ந்த இடத்தில் நின்றார்கள். அன்றைய நினைவு இருவரையும் ஆட்கொள்ள, பிரவேசித்தார்கள் அக்னியின் துயில் கொள்ளும் அறையில். 
 
வரும் வெட்கத்தை அவனுக்கு காட்டாமல் இருக்க,”ரொமான்ஸ் பண்ண போறமா ஆங்கிரி பேர்ட்.” என்றாள். 
 
கேள்விக்கான பதிலை உரைக்காமல் துகிலுரிக்க துவங்கினான் ஆடை தாண்டி மேனியை. கூச்சம் தாங்காமல் அவள் அவனோடு அன்று சரிந்தது போல் மெத்தையில் சரிந்தாள். 
 
அன்பினியை ஆழ்ந்து நோக்கியவன் நெருங்கி செல்ல… கண்களை மூடி கட்டுப்படுத்தினாள் வெட்கத்தை. உதட்டில் மிதமான சிரிப்பு அவள் செய்கையில். உணர்ந்து கொண்டவள் முகத்தை கைகளால் மூட, “ம்ம்ம்!” என்றவன் எடுத்து விட்டான். 
 
இருந்தும் கண்களை திறக்காமல் அடம் பிடித்துக் கொண்டிருக்க, உணர்ந்தாள் அவன் மூச்சுக்காற்று நெருங்கி வருவதை. மூடி இருக்கும் கண்களில் பல சுருக்கங்கள் இறுக்க கூடியதால். என்னவோ எதிர்பார்த்து அன்பினி மயங்கிக் கொண்டிருக்க,
 
“ஆஆஆ… அம்மா!” என கத்திக்கொண்டு கண் திறந்தாள். 
 
சாய்ந்து படுத்திருந்த அக்னி சத்தமிட்டு சிரிக்க, “உன்ன நம்பி கண்ண மூடினேன் பாரு என்னை சொல்லணும். இப்படியாடா கடிப்ப நாயி.” என்று அவன் கடித்த கன்னத்தை தடவிக் கொண்டு திட்டினாள். 
 
“ஆபீஸ்ல ரொமான்ஸ் கேக்குதா உனக்கு கிளம்புடி!” என்றவன் அவளை தள்ளிவிட,
 
“இவ்ளோ நேரம் தெரியலையா உனக்கு .” என்று கோபம் தீரும் வரை அடித்தாள். 
 
வயிற்றில் ஏறி அமர்ந்தவள், “ஒழுங்கா ஒரு கிஸ் கொடு நான் கிளம்புறேன்.” என்று அடம் பிடித்து நெருங்கி செல்ல, தள்ளி விட்டான்.
 
இரண்டு முறை பொறுமை காத்தவள், “என்னடா?” கோபமாக கேட்க,
 
“நான் தான் மனுஷனே இல்லையே அப்புறம் எதுக்கு என்கிட்ட வர.”  காலையில் அவள் பேசிய வார்த்தை இப்போது ஞாபகம் வர, கோபம் கொண்டான்.
 
“சாரி!” 
 
“ஒன்னும் வேணாம். என்னை காதலிச்சதை நினைச்சு அசிங்கமா வேற இருக்குல உனக்கு.” என்று குழந்தை போல் சொல்லிக் காட்டி கோபம் கொண்டவனை மிரட்டி அடக்கினாள் முத்தத்தால்.
 
***
 
அன்று முழுவதும் அன்பினி அலுவலகத்தில் தான் இருந்தால். வேலை அனைத்தையும் முடித்தவன் அவளோடு வீட்டிற்கு கிளம்ப, அவளின் கைபேசி ஒலித்தது.
 
பாட்டியின் பெயரை பார்த்தவள் அதை எடுக்காமல் கட் செய்ய, “யாரு” என்றான் அக்னி.
 
அவள் பதில் சொல்லும் முன் மீண்டும் போன் அடித்தது. பெயரை பார்த்தவன், “எடுத்துப் பேசு ஏதாவது எமர்ஜென்சியா இருக்க போது.” என்றான். 
 
 
அக்னியில் மாற்றத்தை ரசித்தவள் ஆர்வத்தோடு எடுக்க, செல்வகுமார் கத்திக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. குழப்பத்தோடு அக்னியை திரும்பி பார்க்க, அவன் பார்வையால் என்னவென்று விசாரித்தான். குழப்பமான மனநிலையில் ஃபோனை ஸ்பீக்கரில் போட, “இத்தனை வருஷமா உங்களை நான் தான் பார்த்துக்கிட்டேன். அந்த நன்றி கூட இல்லாம உங்க பொண்ணு கூட சேர்ந்துக்கிட்டு  கும்மாளம் அடிக்கிறீங்க. அப்படியே பொண்ணு வீட்டுக்கே போக வேண்டியது தானே எதுக்கு இன்னும் இங்க இருக்கிறீங்க.” என்று செல்வகுமார் பேசும் சத்தம் கேட்டது. கூடவே நந்தினி மாமியாருக்காக பரிந்துரைத்துப் பேச அவரையும் திட்டிக் கொண்டிருந்தார் செல்வக்குமார். 
 
 
வாக்குவாதங்கள் எல்லை இல்லாமல் கடந்து போக அன்னபூரணி அழும் சத்தம் கேட்டது. பாட்டின் அழுகுரலில் அன்பினியின் கண்கள் கலங்கிவிட, கார் பயணப்பட்டது செல்வகுமாரின் வீட்டை நோக்கி. 
 
 
காரில் அமர்ந்தவன் அவளை மட்டும்  போக சொன்னான். உள்ளே சென்ற அன்பினி தந்தையிடம் வாக்குவாதம் புரிய, “இது அவங்க வீடு அவங்களை வெளிய போக சொல்ல நீங்க யாரு. முதல்ல நீங்க இந்த வீட்டை விட்டு போங்க.” என்றதும் மகளை அடிக்க கை ஓங்கினார் செல்வகுமார்.
 
ஓங்கிய கைகள் பாதியில் நின்றது அக்னி வளைத்து பிடித்ததால். அவனைப் பார்த்ததும் கோபத்தில் வயதை மீதி ஆர்ப்பரிக்க ஆரம்பித்தார். அக்னி அவமானப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது அன்பினி,
 
“போதும் நிறுத்திக்கோங்க! என் புருஷனை மரியாதை இல்லாம பேசுறதை பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். அப்பா’ன்னு மரியாதை தர காப்பாத்திக்கோங்க.” என்றாள்.
 
“யாருக்கு யாரு அப்பா. என் ரத்தம் எனக்கு எதிரா நிக்காது. நீ எனக்கு தான் பொறந்தியான்னே சந்தேகமா இருக்கு.” என்றதும் அவர் சட்டையை பிடித்தான் விக்ரம்.
 
 
வரும் வழியில் அண்ணனை அழைத்து உடனே வரும்படி உத்தரவிட்டாள். பதறி அடித்து வந்தவன் தந்தையின் வார்த்தை கேட்டு கொதித்து விட்டான். 
 
“உங்கள மாதிரி ஒருத்தருக்கு பொண்ணா இருக்கறதை விட எவனுக்கோ பொண்ணா இருக்கலாம் என் தங்கச்சி.” என்று அடிக்காத குறையாக பேசிவிட, முகம் கருகி நின்றார் செல்வகுமார்.
 
“போதும் என்னால எந்த சண்டையும் வர வேணாம். நான் எங்கயாது போயிடுறேன்.” அழுகையோடு அன்னபூரணி கூற,
 
“நீங்க எதுக்காக போகணும். உங்க பேரன் நான் இருக்க. இவர் வேணா வெளிய போகட்டும். ” என்றான் விக்ரம்.
 
“வேணாம்பா யாரும் என்னால வெளிய போக வேணாம். வயசான காலத்துல எல்லாருக்கும் பாரமா இருக்கேன். நானே கிளம்பிடுறேன்.” என்றவர் அழுகையோடு கிளம்ப தயாராக,
 
 
“அன்பு பாட்டிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா.” கட்டளையிட்டான் அக்னிசந்திரன்.
 
 
மனம் நிறைந்த அன்பினி ஆனந்தத்தோடு புறப்பட்டாள் அன்னபூரணியை அழைத்துக் கொண்டு. 
 
 
அன்னையைப் பார்த்ததும் ஆனந்தத்தோடு வரவேற்ற பரமேஸ்வரி கூடவே அக்னியும் இருப்பதை பார்த்து திகைத்தார். விஷயம் முழுவதையும் கேட்டவர் மனம் கலங்கி அழுகையில் கரைய, “அம்மாடி அழாத ஒரு கட்டத்துக்கு மேல பெத்தவ பாரமா தான் இருப்பா. என்னைக்கோ வரவேண்டிய நிலைமை இது. கொஞ்சம் தள்ளி போய்டுச்சு அவ்ளோ தான்.” வருத்தத்தை மறைத்துக் கொண்டு விரக்தியாக சிரிக்க,
 
“என்னால தானம்மா உங்களுக்கு இந்த நிலைமை. ஒரு பொண்ணா இத்தனை வருஷம் உங்களை பத்தி கவலைப்படாம சுயநலமா வாழ்ந்துட்டேன். உங்களுக்கு ஆறுதல் சொல்ற தகுதியை கூட நான் இழந்துட்டேன்.” என்று வருத்தப்பட்டார் பரமேஸ்வரி. 
 
 
ஒருவர் மாற்றி ஒருவர் அழுகையோடு சமாதானம் செய்து கொள்ள, “பாட்டி!” என்ற விக்ரமின் குரல் கேட்டது. 
 
அவனைப் பார்த்ததும் அக்னி வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட, திவ்யா, அன்பினி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ‘விளங்குமா இது’ என்று. 
 
உள்ளே வந்தவன், “புதுசா பேரனை பார்த்ததும் இந்த பேரனை மறந்துட்டு வந்துட்டீங்க.” என்று குறைபட்டுக் கொண்டான். 
 
 
***
 
அலையடித்து ஓய்ந்தது போல் இருந்தது செல்வகுமார் வீடு. அன்னை சென்ற கோபம், தன்மகன் தன்னை எதிர்த்துப் பேசிய கோபம் இரண்டையும் விட  அன்னபூரணியை அக்னி அழைத்துச் சென்ற கோபம் தான் அதிகமாக இருந்தது அவருக்கு. தன்னிடமிருந்து முதலில் கம்பெனியை பறித்தவன் பின் மகள், மகனை தொடர்ந்து அன்னையையும் பறித்துக் கொண்டதாக வெதும்பினார்.
 
அவனை எப்படியாவது பழித்திருக்க வேண்டும் என்ற குருட்டு புத்தியில் மகேஷை அழைத்தார். வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த நினைத்த மகேஷ் அவரை தூண்டிவிட்டு நாகராஜோடு கும்மாளம் போட்டான்.  
 
ஒரு வாரம் அழகாக கடந்தது. அன்னையோடு இத்தனை வருடம் வாழாத வாழ்வை அற்புதமாக வாழ ஆரம்பித்து விட்டார் பரமேஸ்வரி. மணிவண்ணன் மாமியாரோடு நன்கு பழகிப்போக திவ்யா றெக்கை முளைக்காத குறையாக பாட்டியோடு சுற்றிக் கொண்டிருந்தாள். அன்பினிக்கு பெரும் பாரம் குறைந்தது போல் இருந்தது பாட்டியின் மகிழ்வை பார்த்து. 
 
 
இந்த ஒரு வார காலத்தில் இருவருக்குள்ளும் நல்ல அன்னியோன்யம் பிறந்திருந்தாலும் இன்னும் அன்பினி ஒதுங்கி தான் இருக்கிறாள் அவனை விட்டு. நெருங்கி காதலை சொல்வதோடு சரி கணவனாய் அன்பு காட்ட மறுக்கிறான் அக்னி. அதை அன்பினியும் விரும்பவில்லை என்றாலும் அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து தன் சேட்டைகளை செய்து கொண்டிருந்தாள். 
 
 
நந்தினி, விக்ரம் இருவரும் அன்னபூரணியை பார்ப்பதற்கு தினமும் வர துவங்கினார்கள். விக்ரமை பார்த்து விட்டால் அக்னியின் முகம் கடுகடுக்கும்.  அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்த விக்ரம் தங்கையின் கணவனை பார்த்து விட்டால் உடனே கிளம்பி விடுவான். 
 
 
அன்று அன்பினி பேசிய பிறகு மணிவண்ணன் எண்ணங்களில் பல மாற்றம். இதுவரை மனைவியை வீட்டில் அடைத்து வைத்த பாவத்திற்காக தன் அலுவலகத்தை நிர்வாகிக்க கூறினார். முழு மனதோடு மறுத்துவிட்டார் பரமேஸ்வரி. அவருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்தது. குடும்பத்திற்காக அவை ஒதுக்கி வைக்கப்பட, அக்னி அந்த கம்பெனியை கொடுக்கும் வரை எதிலும் தலையிடக்கூடாது என்று முடிவாக மறுத்தார். மகன் கேட்பதாக இல்லை.
 
 
திங்கட்கிழமை கோட் வாசலில் நின்றிருந்தார் செல்வகுமார். அவரோடு மகேஷ் நின்றிருந்தான் இன்று அக்னியின் தோல்வியை பார்த்து ரசிக்க. நாகராஜ் மறைமுகமாய் தாக்கிக் கொள்ளலாம் என்று வராமல் இருக்க,
 
“என்ன செல்வகுமார் எங்கிட்ட இருந்து கம்பெனியை வாங்கிடுவீங்களா.” என்றவாறு வந்தான் அக்னி.
 
“கண்டிப்பா வாங்கிடுவோம்.” என்ற மகேஷை பார்த்து நகைத்த அக்னி,
 
“நீ என்னடா குடிக்க போகாம இந்த பொழப்பு கெட்டவர் கூட கும்மாளம் போட்டுட்டு இருக்க. கம்பெனில பாதி சார் தரேன்னு சொன்னாரா.” என்றான் கேலியாக. 
 
அவரவர் வழக்கறிஞர்கள் வாதிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல, தொடங்கப்பட்டது அக்னி மீதான புகார் வழக்கு. செல்வகுமாரின் தரப்பு வழக்கறிஞர் நேர்மையாக வாதாட, அத்தனையும் தவிடு பொடியானது அக்னியின் வழக்கறிஞர் வாதத்தால். 
 
 
அக்னியின் உண்மை முகம் தெரிந்த அன்று எப்படி அதிர்ந்து இருந்தாரோ அதே நிலையில் தான் இருந்தார் செல்வகுமார். அவரைப் பார்த்து புன்னகைத்தவன் அருகில் வர, 
 
“என்ன செல்வகுமார் இதை எதிர்பார்க்கலையா!” என்றான் புன்னகையை விடாமல்.
 
“டேய்! நீ என்ன பண்ணாலும்  சரி. இந்த கம்பெனிய அங்கிள் பேருக்கு மாத்தாம விட மாட்டேன்.” என்று மகேஷ் துள்ளிக் கொண்டிருக்க, அவன் சட்டையை பிடித்து காரில் தள்ளினான் அக்னி.
 
 
அவன் இறங்கப் போராட கதவை லாக் செய்தவன், “டேய்யா!இந்த வாய் தான சொல்லுச்சு” என்று நிறுத்தாமல் அங்கு பாக்சிங் செய்து கொண்டிருக்க பல் உடைந்து ரத்தம் ஊத்தியது. 
 
“என்ன பிளான் ல அவர் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க. நீ என்ன வேணா பண்ணிட்டு போ ஆனா என் விஷயத்துல மூக்க நுழைச்ச…”என்று இழுத்தவன் அவன் மூக்கையும் பதம் பார்க்க ரத்தம் ஆர்ப்பரித்தது. 
 
 
வாங்கிய அடியில் அவன் சுருண்டு படுத்துவிட கதவைத் திறந்த அக்னி ஓங்கி உதைத்தான். செல்வம் குமார் காலடியில் அவன் விழ, கெத்தாக காரில் இருந்து இறங்கினான் அக்னிசந்திரன்.
 
 
“என் அம்மா கையெழுத்து போட்ட டாக்குமெண்ட் இப்போ என் கையில. அதனால நீ எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லுபடி ஆகாது. அவங்க உன் பேருக்கு மாத்தி கொடுத்ததும் உன்கிட்ட இருந்து என் பேருக்கு மாத்துனதும் நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஊர் உலகத்தை பொறுத்த வரைக்கும் என் தாத்தா என் அம்மாக்கு எழுதிக் கொடுத்த உயில் மட்டும் தான் பேசும். இதை எடுக்கத்தான் அன்னைக்கு நீ வீட்டுக்கு கூப்பிட்டதும் உடனே வந்தேன். நீ குளிக்க போன கேப்புல தேடி எடுத்தேன். அது மட்டும் இல்ல கம்பெனியில இதனால் வரைக்கும் நீ எம் டி அதிகாரத்துல கையெழுத்து போட்ட எல்லா பத்திரங்களும் இப்ப என்கிட்ட. தேவை இல்லாம முட்டி மோதி அசிங்கப்படாம வயசான காலத்துல அடங்கி இருக்கு பாரு.” என்றவன் வெற்றி பெற்ற மகிழ்வோடு சென்றான்.
 
 
அக்னியின் செயல் வீட்டில் இருந்த அனைவருக்கும் தெரியவந்தது. மற்றவர்கள் அமைதியாக இருக்க பரமேஸ்வரி தான் மகனை திட்ட ஆரம்பித்தார். எதற்கும் அசரதவன், “நீங்க அந்த கம்பெனியை நிர்வகிக்கணும். அதை அந்த செல்வகுமார் பார்க்கணும். அது மட்டும் தான் உங்க மகனோட ஆசை. முடிஞ்சா பெத்த பிள்ள ஆசையை நிறைவேத்த பாருங்க.” என்றதோடு பேச்சை நிறுத்திக் கொண்டான்.
 
 
 
***
 
“அன்பு!” என்று பலமுறை அழைத்து விட்டான் அக்னி. கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்தாள் அன்பினி.
நேற்று இரவு வந்தவன் வேலை இருப்பதாக சொல்லி உடனே கிளம்பி விட்டு காலையில் தான் வீடு வந்து சேர்ந்தான். அந்தக் கோபத்தில் அன்பினி உதாசீனம் செய்ய,
 
“ஏய்! உன்ன தாண்டி காது கேட்கலையா.” என்று கத்தினான்.
 
அவள் கண்டு கொள்ளாமல் சென்று விட்டு அரை மணி நேரம் கழித்து தான் மீண்டும் அறைக்கு வந்தாள். அவள் செய்கையில் கடுப்பான அக்னி தன் பின் அலைய வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
 
 
அந்த நேரம் நிஷா குறுஞ்செய்தி அனுப்பியிருக்க, தலையாட்டி தனக்குள் குஷி ஆகியவன், “சொல்லுங்க நிஷா!” என்று ஓரக் கண்ணால் அன்பினியை பார்த்தான்.
 
 
அவள்  கண்டுகொள்ளாமல் இருக்க, “இருக்கட்டும் நிஷா இதுல என்ன இருக்கு. நேத்து முழுக்க எனக்காக தூங்காம வேலை பார்த்தீங்க உங்கள மாதிரி ஒரு ஸ்டாஃப் கிடைக்க நான் ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும்.” என்று இப்போது ஓரக்கண்ணால் மனைவியை நோட்டமிட, முறைத்துக் கொண்டு நின்றாள் அவனை.
 
சிரிப்பு முட்டிக்கொண்டு வர, அவள் கண்டுபிடிக்காமல் இருக்க திரும்பிக் கொண்டவன், “அப்படியா!  தேங்க்யூ நிஷா. இப்ப வரைக்கும் யாரும் என்னோட ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் பத்தி இவ்ளோ புகழ்ந்தது இல்ல.” என்றவன் பின்னந்தலையில் தலையணை வந்து விழுந்தது.
 
திரும்பி அவளை முறைப்பதை போல் பாவனை செய்தவன், “சரிங்க நிஷா நீங்க பார்த்து பத்திரமா வாங்க ஆபீஸ்ல பேசிக்கலாம்.” என்று வராத அழைப்பை வைத்தவன் தனக்குத்தானே,
 
“பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும். என்ன பொண்ணுடா…” என்றிட அவன் கழுத்தை பின்னால் இருந்து வளைத்து பிடித்தாள் அன்பினி.
 
 
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
40
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    1 Comment

    1. Supera erunthuchu akka wait for nxt epii😍😍