தெம்மாங்கு 22
மாலைப் பொழுதில், மயங்காத நிலையில் அமர்ந்திருந்தாள் பெண் அவள். வயிற்றில் இருக்கும் குழந்தையின் வரவு, மெல்ல அவளோடு உறவாடிக் கொண்டிருக்கிறது. காலையிலிருந்து அவளை விடாது துரத்திக் கொண்டிருந்த வாந்தியும், மயக்கமும் சற்று ஓய்வெடுக்க, வெளித் திண்ணையில் அமர்ந்திருக்கிறாள்.
மதிய உணவைச் சமைத்து வைத்தவன், “கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடுறேன் மா. வாந்தி வருதுன்னு சாப்பாட்டை ஒதுக்கி வைக்காம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றவன் இவ்வளவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
அவனை நினைத்துக் கலங்குகிறாளா? என்றால் இல்லை. அவன் மீதான சிறு அக்கறை கூட இல்லை தேனிசை தேவிக்கு. எல்லாம் கையை மீறி நடந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், குமரவேலனுடன் இவள் பயணித்து பதினான்கு நாள்கள் ஆகிறது. இத்தனை நாள்களில் அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தது என்னவோ ஒரு சில தருணங்கள் மட்டுமே.
சூரியன் வருவதற்கு முன்னால் தண்ணீரைத் தாரை தாரையாகத் தலையில் ஊற்றிக் கொள்பவன், அதன்பின் அவளுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பான். மறுப்பு எதுவும் சொல்லாதது மட்டுமே, இந்த இரு வாரங்களில் இவளுக்குள் நடந்த மாற்றம். தன் பிள்ளைக்காகப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்.
அன்று ஏன் புகாரைத் திரும்ப வாங்கினான்? என்பதே இவள் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம். ‘அப்படிக் குமரவேலன் செய்ததற்குப் பின்னால், என்ன காரணம் இருக்கும்?’ என்ற ஆராய்ச்சியிலேயே இத்தனை நாள்களையும் கடத்தினாள்.
‘சட்டத்திற்கு முன்னால் இவர்களை நிறுத்துவதற்கு ஏன் இவ்வளவு தயங்குகிறான்? அன்று தந்தையிடம் பேசும்பொழுது அவன் முகத்தில் தோன்றிய கோபம், சிறிது வெளிப்பட்டிருந்தால் கூட அந்தப் புகாரை வாங்கி இருக்க மாட்டான். தந்தைக்காக, அவர் மீது உள்ள பாசத்திற்காக, வாங்கி விட்டானா?’ என்ற கேள்விக்குப் பதில் தெரிய வேண்டும் தேனிசை தேவிக்கு.
பலமுறை அதைக் கேட்க நினைத்து, இவனிடம் எதற்குப் பேச வேண்டும் என்று மௌனமாக இருக்கிறாள். பலத்த சிந்தனைகளுக்கு நடுவில், அன்புக்கரசனின் இருசக்கர வாகனம் வரும் ஓசை செவியில் விழ, அவன் வருவதை உறுதி செய்து கொண்டவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“ஏன்மா, வெளிய உட்கார்ந்து இருக்க?” என்றவனுக்குப் பதில் கொடுக்காதவள் முகத்தைக் கண்டு, புருவம் நெருக்கி வண்டியில் இருந்து இறங்கினான்.
முகம், கை, கால்களைக் கழுவி விட்டுத் தன் நண்பனுக்கும், தாத்தனுக்கும் வாங்கி வந்த பூவை வைத்தவன் விளக்கு ஏற்றினான். வேலையில் கண்ணாக இருந்தாலும், அடிக்கடி வெளியில் இருப்பவளை ஆராய்ச்சி செய்யத் தவறவில்லை. பலத்த சிந்தனையில் இருப்பவளிடம், ‘எப்படி இதைக் கொடுப்பது?’ என்று கையில் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பூ வாங்கிய பொழுது மல்லிகைப் பூவைப் பார்த்தவன், அவளுக்காக வாங்கி வந்திருக்கிறான். வெளி வேலையாகச் சென்றவன் கண்ணில், நிறைமாதமாக இருக்கும் பெண் ஒருவர் விழுந்திட, அப்பெண்ணின் தோற்றம் தான் இந்த மாற்றத்திற்கான காரணம். தாய்மையின் அழகில், பூரித்துப் போயிருந்த அப்பெண்ணின் தலையில் பூவும், கையில் வளையல்களும் நிரம்பி இருந்தது.
பெண்ணுக்கான மகிழ்வு என்றாலும், ஆண் அறியாததா! இதுபோன்ற நேரத்தில் அவள் மனம் எவ்வளவு மகிழ்வாக இருக்கிறதோ, அந்த அளவிற்குப் பிள்ளையும் மகிழ்வாக இருக்கும் என்பதை அறிந்தவன், அவளை இதிலிருந்து வெளிவர வைக்க முயற்சிக்கிறான். எப்பொழுதும் அழுத்தமாக அமர்ந்திருக்கும் தேனிசையின் நடவடிக்கையில், சிறு மாற்றம் நிகழ்ந்தால் கூட உள்ளிருக்கும் தன் நண்பனின் உயிருக்குப் பலம் கொடுக்கும் என்று நம்புகிறான்.
நடந்த சம்பவத்திலிருந்து முழுவதுமாக வெளிவந்து, பிள்ளையின் நினைப்பை மட்டுமே அவள் சுமக்க வேண்டும். அந்த நினைவுதான் அவளையும், வயிற்றில் வளரும் சிசுவையும் நன்முறையில் திருப்பிக் கொடுக்கும். பலகட்ட யோசனைகளுக்குப் பிறகு அவளை நெருங்கியவன்,
“ம்மா…” என்றழைத்தான்.
திரும்பிப் பார்க்கமாட்டாள் என்றறிந்தும் அழைத்தவன், ஓரிரு நொடிகள் காத்து விட்டு, “தல வாரி இந்தப் பூவ வச்சுக்கம்மா” என்றதும் திரும்பியவள் விழிகளில் தெரிந்த ரௌத்திரத்தில் உயர்த்தி இருந்த கையைக் கீழே இறக்கினான்.
உதடுகள் படபடவென்று துடிக்க, நாசித் துவாரத்தில் மூச்சுக்காற்று அனல் அடித்தது. கோபத்தில் அகண்ட விழிகளில், சிகப்புக் கோடுகளும், அதில் சில நீர்த்துளிகளும். முகம் இறுக்கமான பாறையானது. பல்லைக் கடித்துக் கொண்டு அவனை ஏறிட்டவள்,
“என்ன நினைப்புல இருக்க? எனக்குப் பூ வாங்கிக் கொடுக்க என் புருஷனுக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. நீ என் புருஷன் இல்ல.” என அவன் கையில் இருந்த பூவை விசிறி அடித்தாள்.
“புருஷனா உனக்கு இதை வாங்கித் தரலம்மா. மாசமா இருக்கும்போது பொண்ணுங்க மனசு சந்தோஷமா இருந்தா, குழந்தையும் சந்தோஷமா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்படித் தினமும் இடிஞ்சு போன மாதிரி உட்கார்ந்து இருக்கிறதால என்ன கிடைக்கப் போகுது? நீ இப்படி இருக்குறதை அன்பு கூட விரும்ப மாட்டான்.”
“அதுக்காகச் சீவிச் சிங்காரிச்சு, மினுக்கிட்டு இருக்கச் சொல்றியா?”
“மினுக்கிட்டு இருக்கச் சொல்லலமா. சாயங்காலமானா முகம் கழுவு. தலை வாரிப் பொட்டும், கொஞ்சமா பூவும் வச்சுக்கோன்னு சொல்றேன்.”
“புருஷன் இல்லாத விதவை, எப்படி நீ சொன்னதெல்லாம் வச்சிப்பா?”
“உன் புருஷன் உனக்குப் பூவையும், பொட்டையும் கொடுக்கல. பிறந்ததுல இருந்தே உனக்கான உரிமை அது. படிச்ச பொண்ணு நீயே இப்படிப் பேசலாமா?”
“இப்போ உனக்கு என்ன வேணும்?”
“எதுவும் வேணாம்மா. இந்த மாதிரிக் கோபப்படாத, அது போதும்.”
“அதுக்கு நீ இந்த மாதிரியெல்லாம் உரிமை எடுத்துக்காம இருக்கணும்.”
“சரிம்மா…” என்றவன் அவள் கீழே தட்டிவிட்ட பூவை எடுத்து வந்து அன்புக்கரசனின் புகைப்படத்தின் பக்கத்தில் வைத்தான்.
சலனம் இல்லாமல், “உள்ள போயாது உட்காரும்மா. கொஞ்ச நேரத்துல சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன்.” எனக் கூரை வீட்டிற்குள் நுழைந்தான்.
***
கௌரவத்தின் போர்வையில், மனிதத் தன்மையை இழந்து வாழ்ந்து கொண்டிருந்த பேச்சியப்பன், கடந்த சில நாள்களாக வீட்டை விட்டு வெளி வராமல் இருக்கிறார். வீட்டை விட்டு என்பதைவிட அவர் அறையை விட்டே வெளிவரவில்லை. காதால் கேட்ட சம்பவம் அப்படி! நொடியும் நண்பனிடம் அதுபோன்ற ஒன்றை எதிர்பார்க்காதவர், மொத்தமாகத் தன்னைத் தொலைத்து விட்டார்.
பேச்சியப்பனுக்குக் கௌரவம் முக்கியம் தான். தன் கௌரவத்தைத் தன் பிள்ளை காப்பாற்ற வேண்டும் என்று அவனைத் தன் பக்கம் வளைக்க நினைத்ததும் உண்மைதான். அதற்கு நடுவில் வந்த அன்புக்கரசனை ஒழித்துக்கட்ட விரும்பியதும் நிஜமே. ஆனால், ஒருபோதும் தன் பிள்ளையை இழக்க நினைக்கவில்லை.
தன் பக்கம் தன் பிள்ளை இல்லையே என்ற ஆதங்கம் தான், அவனிடம் சண்டையிட வைத்தது. தன் மீது காட்டாத அன்பை வேறு ஒருவனிடம், பெற்ற பிள்ளை காட்டுவதால் தான் அன்புக்கரசன் மீது வெறுப்பு ஏற்பட்டது. தன்னுடைய வாரிசு தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் இருக்க வேண்டும் என்ற சுயநலமே மகனிடம் பகையைச் சம்பாதித்தது.
இவையெல்லாம் பேச்சியப்பனின் வெளி பிம்பம். உள்ளுக்குள் மகனை நெருங்க முடியாமல், ஒவ்வொரு முறையும் தோல்வி வரும்பொழுது எல்லாம், யாருக்கும் தெரியாமல் மனம் கலங்குவது பேச்சியப்பனின் உள் பிம்பம். சிறிது தன்னை மாற்றிக் கொண்டிருந்தால் கூட, இப்படியான சேதாரங்களை இவரும், மகனும் சந்தித்திருக்க மாட்டார்கள்.
அதை உணராதவர், பெற்ற பிள்ளை மீது வைத்த பாசத்தை மட்டும் சிறிதும் குறைக்கவில்லை. நான்கைந்து பிள்ளைகளைப் பெற்றால் கூட பெற்றோர்களுக்கு அனைத்தும் சமம். அப்படி இருக்க, ஒற்றைப் பிள்ளையைப் பெற்று வைத்திருப்பவர் எப்படி அவனை விட நினைப்பார்?
அப்படியான மகனைக் கொல்ல நினைத்திருப்பதே பெரும் அதிர்வாக இருக்க, அது தன் நண்பனின் மூலம் நடந்திருக்கிறது என்பதை, ஜீரணிக்கவே முடியவில்லை இந்தத் தந்தையால். அதைவிடப் பெரிய துயரம், தன் மகனைக் கொல்ல நினைத்தவனையே காப்பாற்றி இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு, அணு அணுவாக அவர் உயிரைச் சோதித்துக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை, அன்புக்கரசன் மட்டும் மகன் சொன்னது போல் செய்யாமல் இருந்திருந்தால், இன்று தன் வாரிசை இழந்து தனி மரமாக நின்று இருப்போமே என்ற எண்ணம், ஆட்டிப்படைத்து விட்டது அவர் உள்ளத்தை. அன்புக்கரசனோடு தன்னை எடை போட்டுத் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் முதல் முறை.
கணவனின் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், எதுவும் கேட்கவில்லை இந்திரா. அவர் மட்டுமல்ல, அந்த வீட்டின் முதியவரும் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பலமுறை சந்திக்க முயன்று விட்டார் பொன்ராசு. எதற்கும் இடம் கொடுக்காமல், இருட்டு அறையில் தன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.
“சாப்பிட வரீங்களா?”
…
“உங்களத் தாங்க, சாப்பிட வாங்க.”
“பசிக்கல.”
“எவ்ளோ நாள் தான் இதையே சொல்லப் போறீங்க. சாப்பிடாம இருந்தா மட்டும் எல்லாம் சரியாகிடுமா? வந்து சாப்பிடுங்க.”
“வேணாம்”
“சரி”
மனைவியின் பதிலில் அவர் முகம் பார்த்த பேச்சியப்பனுக்கு, இன்னும் யோசனைகள் கூடியது. கடந்த சில நாள்களாக இந்திரா இதுபோன்றுதான் இவரிடம் நடந்து கொள்கிறார். ‘மனைவிக்கு என்ன ஆனது?’ என்று சிறு நொடி யோசித்தவர், “நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்.” என்றிட, எதுவும் பேசாமல் நின்றிருந்தார் இந்திரா.
“என்னன்னு கேளு”
“சொல்லுங்க”
“நம்ம மகனுக்கு அந்தப் பொண்ணு வேணாம்.”
“எந்தப் பொண்ணு?”
“அதான் பொன்…” என நண்பன் பெயரை உச்சரிக்க வந்தவர் அதை உரைக்காமல் பேச்சை நிறுத்த,
“நம்ம பையனைத் தொலைச்சி ரொம்ப நாள் ஆகுது. இனி அவன் விஷயத்துல முடிவெடுக்குற உரிமை நமக்கு இல்ல. என் மகனோட எண்ணத்தை நான் முழுசாப் புரிஞ்சுகிட்டேன். அவனா நம்மளை ஏத்துக்கிற வரைக்கும், நம்ம நிலைமை இதுதான். ஆனா, அப்படி ஒன்னு நம்ம மரணத்துல கூட நடக்காதுன்னு நினைக்கிறேன்.” என்றவரின் குரல்வளை அடைத்தது.
கண் கலங்கும் மனைவியை மனம் நோகப் பார்க்க, “நீங்க பண்ண வரைக்கும் போதும். இனிமே என் மகன் விஷயத்துல தலையிடாதீங்க.” என அங்கிருந்து சென்று விட்டார்.
அமர்ந்திருந்த இருக்கையில், தலை வைத்தவர் விழிகள் அவரையும் அறியாமல் கலங்கியது. மனைவி சொல்லி விட்டுச் சென்றது போல், மரணத்தின் தருணத்தில் கூட தன் மகனின் அன்பு கிடைக்காதோ? என்று பயம் கொள்ள ஆரம்பித்தார் கௌரவத் தந்தை.
காலதாமதமான வருத்தத்திற்கு, குமரவேலன் எப்படிப் பொறுப்பேற்பான்? அனைத்தையும் முடிவு செய்துவிட்டுத் தான் இதில் முழுமையாக இறங்கியிருக்கிறான். தவறு செய்ததை விடத் தவறுக்காகத் துணை நின்றதே பேச்சியப்பன் மீதான பெரும் குற்றம். அந்தக் குற்றத்திற்கான தண்டனையை ஏற்க ஆரம்பித்து விட்டாலும், இவருக்கான மன்னிப்பை ஒரு போதும் தரத் தயாராக இல்லை நம் நாயகன்.
***
வெளியே மரக்கட்டில் போட்டுப் படுத்துக் கொண்டிருந்தவன், நல்ல உறக்கத்தில் இருந்தான். வெட்ட வெளியில் படுக்க ஆரம்பித்து வெகு நாள்கள் ஆகியும், பழக்கப்படவில்லை நம் நாயகன். கடந்த இரண்டு நாளாகத் தான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இப்போதாவது தூங்கும் புண்ணியம் தனக்குக் கிடைத்ததே என்ற மகிழ்வில் படுத்துக் கொண்டிருந்தவனைப் பார்க்க, வருண பகவானுக்குப் பிடிக்கவில்லை போல. நன்றாகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவன் முகத்தில், மழைத்துளிகள் வீச ஆரம்பித்தது.
சின்னத் துளிகள் என்பதால், அவன் உறக்கம் கலையவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் பெரிய மழைத்துளிகள் மேலே விழ, அரக்கப்பறக்க எழுந்தமர்ந்து வானத்தை முறைத்தான். அவன் முறைப்பிற்கு அஞ்சாத வருண பகவான், ஆக்ரோஷமாக அடித்துத் துவைக்க ஆரம்பித்தார் மழையை.
குமரன் வெளியில் படுத்துக் கொண்டிருப்பதால், கதவைத் தாழ் போட மாட்டாள் தேனிசை. பாதி நனைந்த போர்வையைச் சுருட்டித் திண்ணையின் ஓரம் வைத்தவன் உள்ளே நுழைந்தான். நல்ல உறக்கத்தில் இருப்பவளைத் தொந்தரவு செய்யாது கதவு ஓரமாகப் படுத்துக் கொண்டான். சாரல், வாசல் கதவைத் தாண்டி உள்ளே அடிக்கத் துவங்கியது. எழுந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்து படுத்தான். அரை மணி நேரம் கடந்த பின் விட்ட தூக்கம் தொடர்ந்தது.
நல்ல தூக்கத்தில் இருந்தவளுக்கு முதுகு வலி எடுத்தது. இப்பொழுதெல்லாம் நேராகப் படுப்பதில்லை தேனிசை தேவி. மூன்று மாதம் வரை நேராகப் படுத்தாலும், பிரச்சனை இல்லை என்றிருந்தார் மருத்துவர். இருப்பினும், பின்னாளில் அதைப் பழக்கப்படுத்திக் கொள்ளச் சிரமமாக இருக்கும் என்பதால், இப்போது இருந்தே ஒரு பக்கமாகப் படுக்கத் துவங்கி விட்டாள்.
வலது பக்கம் படுத்துக் கொண்டிருந்தவளை, இடது பக்கம் திரும்பிப் படுக்கச் சொல்லி முதுகுத்தண்டு தொந்தரவு செய்தது. கடினப்பட்டு இமைகளைப் பிரித்தவள் இடது பக்கம் திரும்ப, பார்வையில் விழுந்தான் குமரவேலன். கூடவே கதவு சாற்றி இருப்பதைக் கண்டு தவறாகப் புரிந்து கொண்டவள், பக்கத்தில் இருந்த சொம்பைத் தூக்கி அடித்தாள்.
அது அவன் நெற்றியில் பட்டுக் கீழே விழ, வலியில் அரண்டு முழித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நொடி கழித்துத் தேனிசை தேவியைக் கண்டு எழுந்து நிற்க,
“என்ன தான்டா உனக்குப் பிரச்சனை? எதுக்காக என்னை இப்படித் தினம் தினம் சாவடிக்கிற? உன்ன உள்ள வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தான. அன்னைக்கு யோக்கியன் மாதிரிப் பேசின. இப்ப உள்ள வந்து படுத்ததும் இல்லாம, கதவைச் சாத்தி வச்சிருக்க. நாளைக்குப் பக்கத்துல வந்து படுப்ப. ஏன்னு கேட்டா, உனக்குப் பாதுகாப்புன்னு சொல்லுவ. நீ என்கிட்ட இப்படி நெருங்குறதைச் சகிச்சுக்க முடியல. கோபத்துல அன்னைக்கு மாதிரி நான் ஏதாச்சும் பண்றதுக்குள்ள, மரியாதையா வெளிய எழுந்து போ…” எனத் தலை முடியைப் பிடித்துக் கொண்டு கத்தினாள்.
முதலில் அவள் செயல் புரியாமல் நின்றவன், புரிந்து கொண்டு விரக்தியாகப் பார்த்தான். அந்தக் கண்களைப் பார்த்திருந்தால் கூட, பேசிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்து இருப்பாள் தேனிசை தேவி. கலங்கத் துடிக்கும் கண்களைக் கட்டுப்படுத்தியவன் உள்ளத்தில், அன்புக்கரசன் முகமும், கடைசியாக அவன் சிரித்த சிரிப்பும் நிழலாடியது. மனம் நோகப் புகைப்படத்தில் இருக்கும் தன் நண்பனிடம், மனக்குமுறல்களை வைத்தவன் சத்தமில்லாமல் வெளியே சென்றான்.
வேகமாக எழுந்து வந்தவள், கதவை ஓங்கிச் சாற்றி விட்டுத் தாழ்ப்பாள் போடப் போக, லேசான தூறல் விழிகளில் விழுந்தது. கதவைப் பிடித்திருந்த கைகள், தன் செயலை அப்படியே நிறுத்தியது. அவன் உள்ளே வந்த காரணத்தைப் புரிந்து கொண்டு மனம் வருந்தியவள், திரும்பி அவனைப் பார்க்க, வெளியில் வந்தவன் திண்ணையில் அமர்ந்து சுவரில் தலையைச் சாய்த்துக் கொண்டு கண் மூடியபடி அமர்ந்திருந்தான்.
தவறு செய்து விட்டதை முழுமையாக உணர்ந்தவள், எப்படிப் பேசுவது என்று தெரியாமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டாள். குளிரூட்டும் நீர்த் துளிகள் வெளியே அளவில்லாமல் கொட்டத் துவங்கியது. அதன் எதிரில் அமர்ந்திருந்தவனுக்கும், உள்ளே அமர்ந்திருந்தவளுக்கும் சற்றும் பொருந்தவில்லை இந்தச் சூழ்நிலை. பேசிய வார்த்தைகளின் வீரியம் இப்போதுதான் மனதைச் சுட்டது. கேட்டவனுக்குச் சொல்லில் அடங்காத ஆயிரம் வலிகள் உள்ளத்தைச் சூழ்ந்தது.
வருத்தத்திற்கு நடுவில், அதிகரிக்கும் மழைத்துளி செவிகளில் விழ, “மழை அதிகமா வருது, கூர வீட்ல போய் படுத்துக்க.” என எழுந்து வந்து கூறினாள்.
“வேணாம்மா, நீ உள்ள போய்த் தூங்கு.”
“இல்ல… மழை ரொம்ப அதிகமா வருது.”
“பரவால்லம்மா. இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும்.”
“இப்படிப் பிடிவாதமா உட்காருறதுக்குப் பதிலா உள்ள போகலாம்ல. இல்லனா முதலே அங்க போய் படுத்து இருக்கலாம்.”
“இருட்டானாலே ஒரு பயம் வந்துடுதும்மா. உன்னையும், பிள்ளையையும் விட்டுட்டுத் தூரமாப் போக தைரியம் வரல. நீ போய்த் தூங்கு. செத்த நேரத்துல விடிஞ்சிடும். வேலையைப் பார்க்கப் போயிடுவேன்.”
குமரவேலனின் வார்த்தை ஒவ்வொன்றும், அவள் உள்ளத்தில் பதிந்து பாரத்தை ஏற்றியது. இருளில் நண்பனைத் தொலைத்தவன், அந்த இருளைக் காண அஞ்சிக் கொண்டிருக்கிறான் என்பது சற்று விளங்கியது. அவசரப்பட்டுப் பேசிய வார்த்தையைத் திரும்ப வாங்க முடியாமல் தவித்தவள்,
“உள்ள வந்து உட்கார்ந்துக்க…” என மெல்லிய குரலில் தலையைத் தாழ்த்திக் கொண்டு கூறினாள்.
அதுவரை கண்மூடி அமர்ந்திருந்தவன், விழி திறந்து அவள் முகம் பார்த்து, “இதுக்கு எதுக்குமா சங்கடப்படுற? நான் எதுவும் தப்பா எடுத்துக்கல. என்னால உன் தூக்கம் கெட்டுப் போயிடுச்சு. எதையும் யோசிக்காம நிம்மதியா படுத்துத் தூங்கு.” என மீண்டும் கண் மூடிக் கொள்ள, அவனை விட்டு நகர வெகு நேரம் தேவைப்பட்டது தேனிசை தேவிக்கு.
கால் வலி எடுத்ததால், அங்கிருந்து நகர்ந்தவளுக்கு உறக்கம் வரவில்லை. பலத்த யோசனைகளோடு அப்படியே அமர்ந்திருந்தாள். தூங்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டவன், அதற்கு மேல் வற்புறுத்தாமல் அப்படியே அமர்ந்திருக்க, திரும்பித் தன்னைப் பார்த்தவனைக் கண்டு, “ஒன்னு கேட்கலாமா?” கேட்டாள்.
“ம்ம்”
“எதுக்கு கேஸை வாபஸ் வாங்குன?”
“தெரியலம்மா.”
“இந்தப் பதிலை நான் எப்படி எடுத்துக்கட்டும்?”
“அவங்களை எப்படித் தண்டிக்கிறதுன்னு சத்தியமாய் தெரியலம்மா. உன்னையும், குழந்தையையும் ஒரு மணி நேரம் கூட விட்டுட்டுப் போக முடியாத சூழ்நிலையில நான் இருக்கேன். இதுல அங்க இங்க கேஸுக்காக அலஞ்சிட்டு இருக்க முடியுமா?”
“இதுதான் உண்மையான காரணமா?”
“இப்போ உனக்கு ரெண்டு மாசம் ஆகுறதால வீரியம் இருக்கலாம். இதே நிறை மாசமா இருந்தா, எப்போ என்ன ஆகும்னு பதட்டமா இருக்கும். அந்த நிலை எதிர்ல இருக்குறவனுக்குச் சாதகமாத் தெரியும். அவனுங்க எல்லாம் மனசாட்சி இல்லாதவனுங்க. அந்த மாதிரி நேரத்துல என்னை நம்ப நான் தயாரா இல்லை. அன்னைக்குச் சொன்ன மாதிரிதான், என் அன்பு சாவுக்கு நீதி கிடைக்க வேண்டாம். அவன் பிள்ளை இந்த மண்ணைத் தொட்டா போதும். இந்த உசுருக்குள்ள உசுரா வச்சிப் பொத்திப் பாதுகாத்துடுவேன்.”
பேசியவன் மனம் பொறுக்கச் சற்று அமைதி காக்க, கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு என்னவோ செய்தது உணர்வுகள். அதை அடக்க முடியாமல்,
“எத்தனை நாளைக்கு அவனுங்ககிட்ட இருந்து ஓட முடியும்? இந்தக் குழந்தை நல்லபடியா பிறந்தாலும், அதுக்கப்புறம் தனியா எங்கயாது விட்டு தான ஆகணும்?” எனக் கேட்டாள்.
“சட்டத்தால வாங்கித் தர முடியாத பாதுகாப்பை என் அப்பா மூலமா வாங்கிட்டேன். இந்நேரம் அவருக்கும், அவருக்குத் தெரிஞ்சுருச்சுன்னு உன் அப்பாக்கும் தெரிந்திருக்கும். கௌரவம், தனக்குச் சமமான கௌரவத்தோட போட்டி போடாது. ரெண்டும் ஒன்னுக்கொன்னு சலிச்சது இல்லை. ரெண்டும் தன் பிள்ளைங்களைப் பாதுகாக்கத் தவிக்கும். அந்தத் தவிப்புக்கு நடுவுல என் அன்புவோட பிள்ளையப் பாதுகாத்திடுவேன்.”
குமரவேலனின் எண்ணம் சரியே. கருப்பன் செய்த செயல் பேச்சியப்பனுக்குத் தெரிந்தால், என்ன செய்யவும் துணிவார் என்பதால்தான் அன்புக்கரசனைக் கொல்ல அனுப்பியதாக நம்ப வைத்தார். தேனிசை தேவி கழுத்தில் தாலி கட்டிய பின், குமரவேலனைப் பகையாகக் கூட நினைக்க விரும்பவில்லை பொன்ராசு. ஏனென்றால் அவனின் தந்தை பேச்சியப்பன்… அத்தோடு சிதைந்து போன தன் கௌரவத்தைப் பேச்சியப்பன் வீட்டு மருமகள் என்ற கௌரவத்தால், சரி செய்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் அன்று கருப்பனிடம், இந்த வீட்டு மருமகன் குமரவேலன் என்று உரைத்திருந்தார்.
பேச்சியப்பனுக்கு உண்மை தெரிந்த பின், தன் நட்பைக் காப்பாற்றிக் கொள்வதை விட மகனின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் அதிகம் பயந்தார் பொன்ராசு. நினைவு தெரிந்த நாளிலிருந்து கௌரவ நண்பனோடு பழகிக் கொண்டிருப்பவர் அல்லவா! ஒரே பிள்ளையை, அதுவும் கருப்பன் கொல்ல நினைத்ததை ஏற்றுக்கொள்ள மாட்டார். பதிலுக்கு எதையாவது செய்து, தன் மகனை இழப்பதற்கு முன்பாகப் பேசித் தீர்த்துவிட வேண்டும் என்றுதான் பேச்சியப்பனைச் சந்திக்க முயன்றது.
இனி குமரவேலனை நெருங்கினால், தன் மகனுக்குத் தான் ஆபத்து என்றுணர்ந்து முழு முட்டுக்கட்டையாக நிற்கிறார் மகனுக்கு. இவை கோழைத்தனம் என்று புரிந்தாலும், இதுதான் தனக்குத் தேவை என்று செயல்படுத்தி விட்டான் அன்புக்கரசனின் ஆருயிர்த் தோழன்.
“நீ பண்ற எதையும் என்னால ஏத்துக்க முடியல. உன் நண்பனுக்கு உண்மையான நண்பனா நீ இருந்தது உண்மைனா, இந்நேரம் சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஜெயிலுக்கு அனுப்பி இருக்கணும். எவ்ளோ போராட்டம் நடத்தியாவது அவங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கணும். அதை விட்டுட்டு இப்படி அவங்களுக்குப் பயந்து வாழ்றது சரின்னு தோணல.”
“நெஞ்ச நிமிர்த்திட்டு, என்னைத் தாண்டி தான் என் நண்பனுக்கு எதுவாயிருந்தாலும் நடக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் நான். பேச்சு, செயலுக்கு உதவாதும்மா. யார் என்னை எப்படி நினைச்சாலும் கவலையில்லை. எந்த வீட்ல, கால் வைக்கத் தகுதி இல்லாத நாய்னு சொல்லி அவமானப்படுத்தி அனுப்புனாங்களோ, அந்த வீட்டுக்குள்ள அவன் புள்ளைய மதிப்பா நுழைய வைக்கிறது மட்டும்தான் எனக்கு வேணும். அவனக் கொன்னவன் முன்னாடி அவன் புள்ளைய நிக்க வச்சு, அணு அணுவாய் கொல்லுவேன்.” என்றவன் விடிந்த விடியலை வரவேற்க எழுந்து நின்று,
“நீ வேணா பாரும்மா, இது கண்டிப்பா ஒரு நாள் நடக்கும். அப்போ என் நடவடிக்கை எல்லாத்துக்கும் பதில் கிடைச்சுடும்.” என அவன் குளிக்கச் சென்று விட்டான்.
எம்மாதிரியான விளக்கங்களைக் கொடுத்தாலும், குமரவேலன் செயலை ஜீரணிக்க முடியவில்லை தேனிசை தேவியால். இவனின் இந்த எண்ணம், அவளைப் பொறுத்தவரை கோழைத்தனம். இவனைப் பொறுத்தவரை சாமர்த்தியத்தனம். இருவருக்கும் நடுவில் உதிக்கப் போகும் அன்புவின் பிள்ளை தான், எந்தப் பக்கம் சரி என்று தீர்மானிக்க வேண்டும்.
அவன் வாரிசு தீர்மானிக்கப் போகும் முடிவில் தான், குமரவேலனின் வாழ்வின் வெற்றி இருக்கிறது. ஆருயிர் நண்பனின் வாரிசு குமரவேலனைத் தோற்கடிக்குமா?