1,726 views

 

விஷயம் தரணீஸ்வரன் பெற்றோர்கள் காதிற்கு சென்றது. மனம் அடைந்த உற்சாகத்தில் தயாளன் வானத்தில் பறக்காத குறையாக துள்ளி குதித்தார். கால் இருக்கும் நிலைமைக்கு இது தேவையா என மருமகள் கடிந்து கொள்ள, அவளைப் பக்கத்தில் அழைத்தவர் மனமார ஆசீர்வாதம் செய்தார்.

ஆதிலட்சுமி வாய்விட்டு எதையும் சொல்லவில்லை. சில நிகழ்வுகள் மகிழ்வையும் தாண்டிய பொக்கிஷங்கள். மருமகள் கொடுத்ததை தனக்குள் வைத்துக் கொண்டார்.

சவால் விட்டது போல் மகனை மாற்றி கொடுத்துவிட்டு மருமகள் சென்று விடுவாளோ என்ற பயம் அவருக்குள் அதிகம். அதனால் தான் மகனை ஒதுக்கி வைப்பது போல் நடித்துக் கொண்டிருந்தார். தன் ஆதரவு இல்லாததை அறிந்து அவள் மனம் இன்னும் அவனோடு செலவிட தோன்றும் என்று. அவர் நினைத்த அத்தனை பயத்திற்கும் மகுடம் வைத்துவிட்டாள் மருமகள்.

“உனக்கு என்ன வேணும்னு கேளு. நீ கேக்குறது என் உயிரா இருந்தா கூட கொடுக்க தயாரா இருக்கேன். நான் உனக்கு பண்ணது பெரிய துரோகம். தெரிஞ்சே தான் பண்ணேன் என் மகனுக்காக. ஒரு பெண்ணா நான் தோத்து இருந்தாலும் அம்மாவா ஜெயிச்சிட்டேன். என் குல வாரிச மட்டும் நீ தரல என்னோட சந்தோசம், நிம்மதி, வாழ்க்கை எல்லாத்தையும் திருப்பி கொடுத்து இருக்க. கேளு என்ன வேணுமோ.”

“என்ன கேட்டாலும் கொடுப்பீங்களா?”

“சத்தியமா” என்றார் ஆதிலட்சுமி.

சலனமின்றி மாமியாரை பார்த்து, “இப்போதைக்கு எதுவும் வேணாம் ஆனா ஒரு நாள் நிச்சயம் கேட்பேன். அப்போ எந்த மறுப்பும் சொல்லாம எனக்கு செஞ்சு கொடுங்க.” என்றாள்.

மருமகளின் பேச்சில் வார்த்தையில் பொடி இருப்பதை உணர்ந்து கொண்டவர் எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தலையசைத்தார். விஷயம் சுகன்யாவிடம் பகிரப்பட்டது. உடனே ஓடி வந்தார் மகளை பார்க்க. என்னதான் வசதியான குடும்பத்தில் மகளைக் கட்டிக் கொடுக்க நினைத்தாலும் அவளின் வாழ்வை நினைத்து கலங்காத நாள் இல்லை.

தவறு செய்து விட்டதாக தினமும் கடவுளிடம் அழுது தீர்த்தவருக்கு இன்று தான் மோட்சம் கிடைத்திருக்கிறது. ஆசை தீர கொஞ்சி மகிழ்ந்தவர் மகளை வீட்டிற்கு அழைத்தார். மொத்தமாக தடை விதித்து விட்டான் மருமகன். அத்தையின் செல்ல கோபத்தை தீர்ப்பதற்காக அவரையும் மச்சானையும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

ஜீபூம்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டில் இருக்கும் அனைவரும் சிரித்து பேசுவதை வைத்து ஏதோ மகிழ்வாக இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. அதனால் அதுவும் மகிழ்வுடன் அவர்களுடன் கலந்து கொள்ள, தரணீஸ்வரன் வீடு கலகலப்பானது.

***

“லயா” என கட்டிக் கொண்டவன் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தான் இருவரையும். உள்ளே வந்ததிலிருந்து அகல்யா அங்கு தான் நின்று கொண்டிருக்கிறாள்.

வயிற்றை தடவி ரசித்தவள் அவை மேடிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வெட்கப்பட்டாள். வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தவன் பொறுக்க முடியாமல் கட்டிக்கொள்ள,

“என்ன பாப்பா வேணும் ஈஷ்வா” கேட்டாள் ஆசையாக.

“உனக்கு என்ன பாப்பா வேணும் லயா”

“கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் பெண் குழந்தை. இப்போ ஆண் குழந்தை.”

ஆசையாக புன்னகைத்தவன் கன்னத்தில் இதழ் பதித்து, “அது என்ன இப்போ?” வினவினான்.

திரும்பாமல் கண்ணாடியை பார்த்துக் கொண்டு கணவனின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவள், “எல்லாம் என் புருஷன் வந்ததால. உங்களை மாதிரி உங்க மகன் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.” என்றாள்.

“என்னை மாதிரி வேணாம். குழந்தை உன்ன மாதிரி பிறக்கட்டும்.”

வாய் வார்த்தையாக கேட்காமல் கண்ணாடி வழியாக புருவம் உயர்த்த, “நான் சரியில்லாதவன் என் குழந்தை அப்படி இருக்க வேணாம். உன்ன மாதிரி நல்ல மனசோட அறிவா, அழகா, பாசமா, அன்பா இருக்கட்டும்.” கணவனின் வார்த்தையில் சிறு தோய்வு இருப்பதை கண்டு கொண்டாள்.

வயிற்றை சுற்றி இருக்கும் கையை இறுக்கி இன்னும் தன்னோடு நெருங்க வைத்தவள், “என்னை பாருங்க.” என்றிட, தலை குனிந்து நின்றிருந்தவன் நிமிர்ந்து கண்ணாடி வழியாக பார்த்தான்.

“எனக்கு உங்கள மாதிரி தான் வேணும். கண்ணு, மூக்கு, முகம் மட்டும் இல்ல குணமும் உங்களை மாதிரி இருக்கணும். நான் நேசிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் உங்களோட குறையும் நிறையா தெரியுது. இன்னொரு தடவை இந்த மாதிரி பேசாதீங்க.”

“நடந்தது இல்லன்னு ஆகிடுமா. நாளைக்கு என் குழந்தை பிறந்து வளர்ந்ததுக்கு அப்புறம் யாராது ஒருத்தர் உங்க அப்பா இப்படி பண்ணிட்டு இருந்தான் தெரியுமான்னு சொன்னா என் பிள்ளை என்னை என்ன நினைக்கும்.”

“என்ன நினைக்கும்?”

“இப்படி ஒரு அப்பாக்கு பிள்ளையா பிறந்துட்டோம்னு நினைச்சு அசிங்கப்படும்.”

கணவன் பக்கம் திரும்பியவள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, “அசிங்கப்படுற அளவுக்கு அப்படி என்னங்க பண்ணிங்க. குடிச்சிட்டு யார்கிட்டயாவது சண்டை போட்டிங்களா.” அவன் மறுப்பு தெரிவித்து தலையசைத்தான்.

“தன்ன உணராத நிலையில யார்கிட்டயாது தப்பா நடந்துக்கிட்டிங்களா” இல்லை என்றவன் நெற்றியில் முத்தம் வைத்து,

“யார் கூடயாது தப்பா இருந்தீங்களா” என கேட்டாள்.

உடனே பதறியவன் வேகமாக மறுக்க வர, “இதெல்லாம் பண்றவங்க கூட தப்பானவங்கன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. சில மனுச ரூபத்துல இருக்க மிருகத்தை தவிர மீதி இருக்க எல்லாரும் ஏதோ ஒரு சூழ்நிலையில தான் தப்பு பண்றாங்க. அது தப்புன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம திரும்பவும் அதே தப்ப பண்ணும் போது தான் நம்ம மனுஷன்ற தகுதிய இழக்கிறோம். என் புருஷன் அந்த மாதிரி இல்ல.” என்று கன்னத்தை இழுத்தசைத்து மகிழ்ந்தவள்,

“அதனால நம்ம குழந்தை கண்டிப்பா  உங்களை அசிங்கமா பார்க்காது.” என்றாள்.

“லவ் யூ லயா”

“லவ் யூ’ங்க.” என்ற மனைவிக்கு முத்தம் கொடுக்க வரும் நேரம் கதவை திறந்து கொண்டு வந்து நின்றான் ஜீபூம்பா.

வந்த செல்லப்பிராணியை கண்டு தரணீஸ்வரன் முறைக்க, அகல்யா சத்தமிட்டு புன்னகைத்தாள். அண்ணன் கோபத்தை கண்டு கொள்ளாதது மெத்தையில் ஒய்யாரமாக படுக்க,

“என் பிள்ளை பிறக்குறதுக்குள்ள இவனுக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டி வைக்கணும் லயா. எப்ப பாரு நம்மளை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கான் கரடி.” என்றான் நொந்து கொண்டு.

“விடுங்க, இனிமே ஜீபூம்பா இல்லனாலும் ஒன்னும் இங்க நடக்காது.”

பதட்டமாகி மனைவியை அரக்கபறக்க பார்த்தவன், “லயா” என்றிட, “கொன்னுடுவேன்! ஒழுங்கா பிள்ளைக்கு அப்பாவா இப்பவே ரைம்ஸ் எல்லாம் படிச்சு வச்சுக்கோங்க. ” என்று விட்டாள் அவனின் திட்டம் அறிந்து.

“நான் இன்னும் புருஷன் பாடத்தையே ஒழுங்கா படிக்கல லயா” என முகத்தை ஆடவன் தொங்க போட,

“எது நீங்க படிக்கலையா….? போயிடுங்க பேசாம” முறைத்தாள்.

“இங்க பாருடா குட்டி உங்க அம்மா என்னை எப்படி சொல்றான்னு. அப்பா பாவம்னு எடுத்து சொல்லுடா.”

“நீங்க காட்டு கத்து கத்துனாலும் இப்போ உங்க குழந்தைக்கு ஒன்னும் கேட்காது.”

“யாரு சொன்னா கேட்காதுன்னு? காது வேணா கேட்காம இருக்கலாம் என் உணர்வு கண்டிப்பா புரியும். வெளிய வந்ததும் முதல் வேலையா உன்கிட்ட சண்டை போட போதா இல்லையான்னு பாரு.”

“என் பிள்ளை அம்மா பிள்ளை.” என்றவள் வயிற்றுக்கு விரல்களால் முத்தம் கொடுக்க,

“இல்ல அப்பா புள்ள.” என்றான் தரணீஸ்வரன்.

“ஆம்பள பசங்க என்னைக்கு’ங்க அப்பா செல்லமா இருந்திருக்கு.”

“ஓஹோ! அதுக்கு தான் மேடம் இப்பவே பையன்னு சீட் போட்டு வைக்கிறீங்களா. இப்ப சொல்றேன் கேட்டுக்க இந்த குழந்தை பெண் குழந்தையா தான் பிறக்கும். என் பொண்ணும் நானும் வேர்ல்ட் பெஸ்ட் டேட் அண்ட் லிட்டில் பிரின்சஸா இருக்க போறோம் அதை நீ பார்க்க போற.”

“நடந்தா தான நான் பார்க்க.” என்றவள் கேலியில் அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன், “பாருடா குட்டி அம்மா எப்படி சிரிக்கிறான்னு. நீங்க அம்மா மாதிரி அழகான பெண் குழந்தையா அப்பா கிட்ட வருவீங்களாம். அப்பா உங்கள ராணி மாதிரி பார்த்துப்பேனாம். என் அம்மாக்கும் என் லயாக்கும் கொடுக்காத எல்லாத்தையும் அப்பா உனக்கு கொடுக்க காத்திருக்கிறேன்.” என்று வயிற்றில் முத்தமிட, உள்ளம் மகிழ்ந்து சிரித்தாள் அகல்யா.

அகல்யாவிற்கு சற்று ஓய்வு தேவைப்படுவதால் வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு செய்து கொடுத்தான் தரணீஸ்வரன். பள்ளி வேலையை முடித்துவிட்டு அவன் கம்பெனி சென்றுவிட, மருமகள் வேலையை குறைப்பதற்காக ஆதிலட்சுமியும் செல்ல ஆரம்பித்து விட்டார். தயாளன் யார் உதவியும் இன்றி நடக்க பழகிவிட்டதால் சிறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார் மருமகளுக்கு.

சில மாற்றங்கள் இரவோடு இரவாக ஒருவரின் வாழ்வை வசந்தமாக்குவது போல் அகல்யா என்ற வழி வருகையால் தரணீஸ்வரன் வாழ்க்கை வழி வசந்தமானது. மதுவிலிருந்து முழுவதுமாக குணமாகி விட்டாலும் மனதில் அந்த எண்ணம் தோன்றாமல் இல்லை தரணீஸ்வரனுக்கு.

அவ்வளவு எளிதாக விடக்கூடிய விஷயம் இல்லை அவை. மனைவிடம் இருந்து வெகு நாட்களாக தன் மன எண்ணங்களை மறைத்துக் கொண்டிருக்கிறான். இன்று அந்த மறைவுக்கு வேலை இல்லாமல் போனது. குழந்தை விஷயம் தெரிந்ததிலிருந்து மனம் முழுவதும் தந்தையாக போகும் தருணத்தை கொண்டாட காத்திருப்பதால்… உயிர் இல்லாத மதி மயக்கும் போதையை உதறித் தள்ளினான்.

என்னதான் அகல்யா தன்னை ஏற்றுக் கொண்டாலும் மனதளவில் தன் முதல் திருமணம் பெரிய சுமையாக இருப்பதை அவன் அறிவான். தன்னுடைய உலகத்தை மாற்றியவள் மனதில் இருக்கும் சங்கடத்தை தீர்க்க முடியாவிட்டாலும் அவற்றைவிட அதிகமான இன்பத்தை நிறைக்க எண்ணியவன் அவளவனின் கண் அசைவு முதற்கொண்டு அனைத்தையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டான்.

தன்னுடைய விருப்பம் இரண்டாம் பட்சம் ஆக மனைவியின் விருப்பம் முதலாவது ஆனது. மருத்துவரின் உதவியை நாடி தினமும் அவள் செய்யும் அனைத்திற்கும் துணை நின்றான். பிள்ளையின் நலனுக்காக என்றாலும் மனைவி மீது தான் அதிக அக்கறை இருந்தது. மூன்று மாதம் நிறைவு செய்த கரு நான்காம் மாத வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற முறை மருத்துவமனை சென்றவன் உணர்வுகள் சொல்லில் அடங்காதவை பிள்ளையை பார்த்து. நாளெல்லாம் மருத்துவ அறிக்கையை வைத்துக் கொண்டு கனவு கண்டு கொண்டிருக்கிறான். என்ன பிள்ளை என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருந்தாலும் தன்னுடைய ஆசை போல் மகளே பிறக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்  வைத்தான் கடவுளிடம்.

***

ஜீபூம்பா பட்டு சட்டையில் மின்னி கொண்டிருக்க அதன் பக்கத்தில் வெள்ளை நிறத்தில் பட்டு நின்று கொண்டிருந்தது. எல்லாம் தரணீஸ்வரன் ஏற்பாடு. தேடிப்பிடித்து அதற்கு ஒரு ஜோடியை கொண்டு வந்து விட்டான்.

ஐந்தாம் மாதம் ஸ்கேன் ரிப்போர்ட்டை கையில் வைத்து ரசித்துக் கொண்டிருந்தவனை வெறுப்பேற்றியது அதை  பிடுங்கிக் கொண்டு. பலமுறை தரணி கெஞ்சி கேட்டும் கொடுக்காத ஜீபூம்பா அதை தன்னோடு வைத்துக் கொள்ள, தன் பிள்ளையை பிடுங்கிக் கொண்ட ஜீபூம்பா மீது கோபம் கொண்டவன் உடனே பட்டுவை ஜோடி சேர்த்து பழி தீர்த்து விட்டான்.

இவர்களிடம் வந்து சிக்கிக்கொண்ட பட்டுவும் பாவமான முகத்தோடு பட்டு பாவாடையில் நிற்க, தரணீஸ்வரன் வீட்டில் ராஜ அலங்காரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீட்டில் சொந்தங்களுக்கு பஞ்சமில்லை. தயாளன் முழுதாக நடக்க ஆரம்பித்து விட்டதால் இன்னும் விழாவை பிரம்மாண்டமாக நடத்துகிறார்கள்.

ஆதிலட்சுமி செல்ல மருமகளுக்கு இன்று வளைகாப்பு. ஏழாம் மாதம் தொடக்கத்திலேயே வைத்து விட்டார்கள். அகல்யா உண்டானதில் இருந்து இதை எப்பொழுது வைப்போம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தான் தரணீஸ்வரன். அவர்கள் வழக்கத்தில் ஒன்பதாம் மாதம் தான் வளைகாப்பு. மகன் கொடுத்த தொல்லை தாங்காமல் ஏழாம் மாதத்தில் வைத்து விட்டார்.

வெகு வருடங்கள் கழித்து சுப நிகழ்ச்சி நடைபெறுவதால் ஒரு ஆள் பாக்கி இல்லை ஊருக்கே பத்திரிக்கை வைத்து விட்டார்கள். மண்டபத்தில் நடத்த கணவன் விருப்பம் தெரிவிக்க, தோட்டத்தில் நடக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தாள் அகல்யா.

மனைவியின் ஆசையை நிறைவேற்ற எண்ணியவன் பெரிய செட் அமைத்திருக்கிறான். இன்றைய நாள் அவளுடைய நாள் என்பதால் அவளுக்கு பிடித்தமான உணவு முதல் கொண்டு பூக்கள் வரை எல்லாம் அவள் பார்வைக்கு. பார்க்கத்தான் இன்னும் வரவில்லை அகல்யா.

மனைவியின் அலங்காரத்தை ரசித்துக் கொண்டிருக்கிறான் தரணீஸ்வரன். அழகு கலை நிபுணர்களை அழைத்து வந்தவன் மனைவியை செதுக்கி கொண்டிருக்கிறான். வந்திருந்தவர்கள் நொந்து கொள்ளும் அளவிற்கு அவன் கட்டளைகள் இருக்க, “போதுங்க பாவம் அவங்க.” தடுத்தாள் அகல்யா.

“சும்மா இரு லயா உனக்கு ஒன்னும் தெரியாது.” என்றவன் அவன் விரும்பியது போல் மாற்றி விட்டான் மனைவியை.

மேடையில் அமர்ந்தவள் வெட்கத்தில் சிவந்துவிட்டாள். ஒவ்வொரு நிகழ்வும் அவள் சொல்லி கணவன் மூலம் நிறைவேறியது. முதல் நலங்கை வைக்க பெரியவர் ஒருவர் வர,

“அவங்க வைக்கட்டும்” என்று விட்டாள்.

சுற்றி இருந்த அனைவரும் அதைக் கேட்டு வரபு மீறி கேலி செய்ய, கண்டுகொள்ளாமல் கணவனை அழைத்தாள். புன்னகை முகமாக முதல் நலங்கை அவனே வைத்தான். இருவரின் முகத்திலும் தெரியும் வெட்கத்தை புகைப்பட கலைஞர்கள் மறக்காமல் பதிவு செய்து கொள்ள, ஒருவர் பின் ஒருவராக நலங்கு வைத்து கர்ப்பிணிக்கு உணவு கொடுத்தார்கள்.

எல்லாம் முடிந்த பின் புகைப்படம் எடுக்கும் வேலை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்க, “தரணி ரொம்ப நேரம் அவளை கஷ்டப்படுத்தாத. எடுத்த வரைக்கும் போதும் மீதிய நாளைக்கு எடுத்துக்கலாம் உள்ள கூட்டிட்டு வா.” தடுத்து அழைத்து வந்தார் ஆதிலட்சுமி.

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அகல்யாவின் முகம் சரியில்லை. முதலில் அதை கவனிக்காதவன் பின் கவனித்து, “என்ன லயா?” என விசாரித்தான்.

பதில் சொல்லாமல் மறுப்பு தெரிவித்தவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, “டயர்டா இருக்காடா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறியா.” என்றான் அக்கறையாக.

மறுப்பு சொல்லாமல் தலையசைத்த அகல்யா அறைக்கு சென்றாள். மெத்தையில் படுக்க வைத்தவன், “கொஞ்ச நேரம் தூங்கு லயா. நான் கீழ இருக்க வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன்.” என்று நகர பார்க்க, கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள் அகல்யா.

“என்னடா?”

“எங்கயும் போகாதீங்க என் கூடவே இருங்க.” என்று அவனை தன்னோடு படுக்க வைத்தவள் அவன் மார்போடு சேர்ந்து கொண்டாள்.

மனைவியின் செய்கையில் வித்தியாசத்தை உணர்ந்தவன் எதுவும் கேட்காமல் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, “என்னங்க” என ஓசை கொடுத்தாள்.

தட்டிக் கொடுப்பதை நிறுத்தாதவன், “உன் மனசுல என்ன இருக்கோ அதை மறைக்காம சொல்லு லயா. நீ இந்த மாதிரி நடந்துக்குற பொண்ணு இல்ல. இன்னைக்கு நடந்த பங்க்ஷன்ல நீ சங்கடப்படுற மாதிரி எதாச்சும் நடந்துருச்சா.” மனைவியின் சோர்ந்த பாவனைகளில் குழம்பியவன் ஒருவழியாக கேட்டுவிட்டான்.

“அதெல்லாம் எதுவும் இல்லைங்க.”

“அப்புறம் என்னம்மா? டெலிவரி டைம் நெருங்க போறதை நினைச்சு பயமா இருக்கா.”

இதற்கும் இல்லை என்று பதிலை சொன்னாள் அவனை கட்டி அணைத்து. மெத்தையில் படுக்க வைத்தவன் மனைவியை பார்த்தவாறு சாய்ந்து படுத்துக்கொள்ள, “என் தேவதைக்கு என்ன மன குழப்பம். எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு லயா. நீ சொன்ன அடுத்த நிமிஷம் அது என்னவா இருந்தாலும் இருக்காது.” என தைரியம் கொடுத்தான்.

“என்னை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்?”

“இதுக்கு அவசியம் பதில் சொல்லணுமா”

“சொல்லுங்க, நான் தெரிஞ்சுக்கணும்.”

“இந்த உயிர் உன்னோடுது லயா. சொல்லப்போனா எனக்கு நீயும் ஒரு அம்மா. லயா இல்லாத நாளே என் வாழ்க்கையில வரக்கூடாது. ஏன்னா அவ இல்லாம ஒரு மணி நேரம் கூட என்னால கடத்த முடியாது. உன் உயிர் போறதுக்கு முன்னாடி என் உயிர் போயிடனும்.”

“என்னங்க! நமக்கு என்ன வயசு ஆகுது அதுக்குள்ள சாவ பத்தி பேசிட்டு இருக்கீங்க.”

“சாவ கூட லயா இருந்தா சந்தோஷமா எதிர்கொள்வன்னு சொல்ல வரேன். ஒரு பெரிய நம்பிக்கை உன்ன தாண்டி எனக்கு எதுவும் ஆகாதுன்னு. வாழ்க்கையில எந்தவிதமான கஷ்டம் வந்தாலும் நீ கூட இருந்தா போதும் கடந்து வந்திடுவேன்.” என்ற கணவனின் இதழை பிடித்துக் கொண்டாள் தன் இதழால்.

அவள் கொடுக்கும் முத்தத்தில் காதலை விட ஏக்கம் அதிகமாக இருப்பதைப் போல் உணர்ந்தவன் ‌தன் இதழை துணை சேர்த்து தைரியப்படுத்தினான். சிறிது நேரத்தில் அவளின் விழி நீர் வழிவதை உணர்ந்தவன் அவசரமாக பிரித்து,

“என்னம்மா!” என பதற, “யாரு வந்தாலும் என்னை விட்டுட்டு போயிட மாட்டீங்களே ஈஷ்வா.” என்றாள் அழுகையை நிறுத்தி.

“அழாத லயா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என கண்களை துடைத்து விட, “பதில் சொல்லுங்க” அவன் பதிலை தெரிந்து கொள்வதில் குறியாக இருந்தாள்.

“யாரு லயா நமக்கு நடுவுல வரப் போற.”

“வந்துட்டா”

“வாய்ப்பே இல்ல அதுக்கு”

“ஏன் இல்ல? உங்க முன்னாள் மனைவி சிவானி இருக்காங்களே.”

வேகமாக அவளின் கன்னத்தை பிடித்தவன், “மனைவின்னு சொல்லாத லயா அது உன்னோடது. அந்த ஸ்தானத்தை அவளுக்கு கொடுத்தா உன்ன நான் அசிங்கப்படுத்துற மாதிரி. இப்ப எதுக்கு அவ பேச்சு?” என்றான் கோபத்தோடு.

“எதுக்காக பேசுறன்னு உங்களுக்கு தெரியாது, அப்படித்தான!” என்றவளை விட்டு விலகி படுத்தான்.

“அவ வீட்டுக்கு வந்ததை நான் பார்த்த மாதிரி நீங்களும் பார்த்தீங்கன்னு தெரியும்.” என்றதற்கு எந்த அதிர்வையும் காட்டாதவன் தன் நிலை மாறாமல் இருந்தான்.

“எதுக்காக பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தீங்க?”

…..

“உங்களை தாங்க கேட்கிறேன் பதில் சொல்லுங்க. எதுக்காக என் வீட்டுக்குள்ள வந்தன்னு துரத்தி விடாம ஏன் அமைதியா இருந்தீங்க.”

….

“அப்போ அவ இன்னும் உங்க மனசுல இருக்கான்னு தான அர்த்தம்.”

கடைசி வார்த்தையில் உணர்ச்சிகளை கொட்டினான் அவளை திரும்பி முறைத்து. மனைவி முகத்தில் தெரியும் வருத்தத்தை கண்டு அதை கைவிட்டவன், “அவ எனக்கு யாரு லயா. எவளோ ஒருத்தி என் வீட்டு வாசல்ல நின்னா நான் எதுக்காக கவலைப்படனும். இன்னைக்கு என் மனைவியோட வளைகாப்பு. என் கவனம் மொத்தமும் அவ மேல தான் இருந்துச்சு. அதைத் தாண்டி யாரையும் கவனிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை.” என்றான் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.

இன்று விழா நடக்கும்போது சிவானி வீட்டு வாசலில் நின்றாள். அதை கண்டு கொண்ட தரணீஸ்வரன் எதையும் பார்க்காதது போல் தன் வேலைகளை கவனிக்க, கணவனை போல் பார்த்த அகல்யா தான் திடுக்கிட்டாள். சிவானியின் வரது அதுவும் தன் வீட்டின் முன்னால் நிகழ்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால்.

தரணீஸ்வரன் அவளை துரத்தி இருந்தால் கூட ஓரளவிற்கு மனம் ஆறி இருக்கும். அதை செய்யாமல் இருக்கும் கணவனின் நடவடிக்கையில் லேசாக பயம் தொற்றிக் கொள்ள, மனம் வருந்தி கேட்டு விட்டாள். அவன் கொடுத்த விளக்கத்தின் உண்மை புரிந்தாலும் மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் தவிக்க,

“உங்க குழந்தை மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க அவ மேல உங்களுக்கு எந்த பாசமும் இப்ப இல்லன்னு.” கேட்டாள்.

தன் தலை மீது கை வைத்தவன், “எனக்கு என் மனைவி, பிறக்க போற என் குழந்தைய தவிர வேற யாரு மேலயும் பாசம் இல்லை. என்னை நம்பாம இந்த மாதிரி கேட்காத லயா ரொம்ப வலிக்குது. வீட்டு வாசல்ல மட்டும் இல்ல என் எதிர்ல வந்து நின்னு இருந்தா கூட நான் யாரோ ஒருத்தியா தான் கடந்து வந்திருப்பேன். தயவு செஞ்சு என் மனச நோகடிக்கிற மாதிரி பேசாத.” என்றான் உள்ளம் உருகி.

பதில் வாதம் புரியாமல் அகல்யா அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “எனக்கு பிறக்கப் போற பாவத்தை தவிர என் குழந்தை வேற எந்த பாவமும் பண்ணலடி. அது மேல சத்தியம் பண்ண சொல்லாத. என் குழந்தை பிறக்கும்போது நல்லபடியா பிறக்கட்டும். என் குழந்தைக்கு நான் ஒரு நல்ல அப்பாவா இருக்கனும்னு ஆசைப்படுறேன் லயா.” என்று விட்டு எழுந்து கொண்டான் அங்கிருந்து கிளம்ப.

அகல்யா எழுந்து கணவனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, “என்னை சந்தேகப்படுறல லயா. உன்ன விட்டுட்டு அவ கூட போயிடுவேன்னு எப்படி நினைச்ச. பிறந்த குழந்தைக்கு அம்மா முகம் மட்டும் தான் நல்லா தெரியும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி எனக்கு நீ மட்டும் தான் தெரியுற. என்னால உன்னை தாண்டி எதையும் யோசிக்க முடியல.” என்றதும் கட்டிக் கொண்டாள் கணவனை.

இருக்கும் மனவேதனைக்கு வீம்பு பிடிக்க விரும்பாதவன் தன்னை அவளோடு இணைத்துக் கொள்ள, இருவர் மனதிலும் வலியோடு நிறைந்த காதல் வேகமெடுத்தது. கணவனின் மனம் புரிந்தாலும் எங்கு யாராவது அவனை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயம் அவளுக்குள் அதிகமாக இருந்தது.

சில நேரம் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை உள் உணர்வுகள் புரிய வைக்கும் என்பதை பின்னொரு நாளில் உணர்ந்து கொள்வாள் அகல்யா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
64
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *