
காதல் -22
பனிச்சாரல் வீசிக் கொண்டிருந்த நேரம்.. குளிர் தாங்காமல் உடலை குறுக்கிக் கொண்டு அந்த அடுக்களையில் ஒடுங்கி கொண்டு படுத்திருந்தாள் சாயாலி..
காலை விடிந்தது தெரிந்தும் எழ முடியாமல் கண் மூடி கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் மனக்கண் முன் கொண்டு வந்தவளுக்கு அந்த குளிரோடு சேர்த்து பயத்திலும் உடல் நடுங்க ஆரம்பித்தது.
கண் விழித்து பார்த்தால் அத்தனையும் கனவாக இருக்கக் கூடாதா என்று பேராசை கொள்ளும் அளவிற்கு மாறிப் போனாள் சாயாலி.
ஆனால் விதியை மாற்றி அமைக்கும் சக்தி ஒருவருக்குக் இல்லையே.. நடந்தது நடந்த படியே இருக்க, அதை எதிர்கொள்ளும் சக்தியை மட்டும் கொடு என்று மனதார ஆண்டவனை வேண்டி கொண்டு கண் விழித்தாள்.
வேலை தலைக்கு மேல் இருந்தது. இரவு ஒரு நர்ஸை துணைக்கு வைத்திருந்தான் மறவன். நேற்று அவருக்கு சிறிதாக அசைவு வந்ததோடு சரி , அதன் பின் அவர் அசையவில்லை.. இப்படி சில நேரம் மட்டும் மட்டும் அசைந்து கொடுத்து சற்று நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருந்தார் சிந்தாமணி.
காலையில் அவனாக டீ போட்டு குடிக்கும் பழக்கம் கொண்டவன் .. எழுந்ததும் ஃப்ரெஷ் ஆகி விட்டு நேராக அடுக்களைக்கு தான் வந்தான்.. அதே நேரம் தான் அவளும் துயில் கலைந்து எழுந்தாள்..
மெல்லிய துப்பட்டாவை கீழே விரித்து அதன் மேல் படுத்து இருந்தது தெளிவாக தெரிந்தாலும்.. மனதை கல்லாக்கி கொண்டு ” இவ்வளவு நேரம் தூங்கிறதுக்கு தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேனா , நல்லா மகாராணி மாதிரி தூங்குற.. ” என அவன் சத்தம் கேட்டதும் திடிகிட்டு எழுந்தவள் .. இடை தாண்டி சரிந்த கூந்தலை தூக்கி கொண்டையிட்டு வேகமாக அவனது தாயின் அறையை நோக்கி ஓடினாள்.
அவர் படுத்திருந்த பெட் உரைகளை எல்லாம் மாற்றி .. சுடு தண்ணீர் வைத்து அதில் சிறிதாக மஞ்சள் தூளை கலந்து , ஒரு டவலை கொண்டு வந்து முழுவதுமாக சிந்தாமணியை துடைத்து எடுத்தாள்.
இத்தனை நாளும் செவிலியர் பார்த்துக் கொண்டாலும்… வீட்டில் ஒருவர் பார்ப்பது போல இருக்காது அல்லவா.. அவரது ஒவ்வொரு தேவையையும் பார்த்து பார்த்து செய்து வந்தாள் சாயாலி..
அதை எல்லாம் மறவன் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவனுக்குள் இருந்த வெறி மட்டும் சற்றும் அடங்கவில்லை..
அன்று காலையிலேயே எழுந்து சிந்தாமணியை சுத்தப்படுத்தி விட்டு, அலங்கோலமாக இருந்த வீட்டை சுத்தப் படுத்த தொடங்கினாள்.. வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் , பால்கனியும், கார்டன் மற்றும் பூஜை அறை என ஒரு இடம் விடாமல் மூச்சு வாங்க சுத்தம் செய்து விட்டு மணியை பார்க்க மதிய வேலையே வந்து விட்டது..
இதில் மறவனது அறையை மட்டும் சுத்தப்படுத்தும் எண்ணத்தை கை விட்டிருந்தாள்.. பின்னே அவனது மனைவிக்கு மட்டும் தானே அந்த அறையில் அனுமதி.. அவள் தான் இந்த வீட்டின் வேலைக்காரி ஆகிற்றே.. முயன்ற அளவிற்கு அவன் பேசிய வார்த்தைகளை எல்லாம் மென்று விழுங்கி கொண்டு அந்த வீட்டில் உலாவிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் மதிய உணவு நேரமும் வந்து விட.. வீட்டு வேலை செய்த கலைப்பில் அதை மறந்து விட்டு, நடுகூடத்தில் இருக்கும் சோபாவில் அப்படியே தலை சாய்த்தவள் உறங்கியும் போனாள்.
இரவு குளிரில் காரணமாக உறக்கத்தை தழுவாது இருந்த அவளது விழிகள் ஓய்வு கிடைத்தவுடன் ஆழமாக அதை தேடிக் கொண்டது…
அரை மணி நேரம் சென்ற பிறகு வீட்டிற்குள் வந்தான் மறவன்.. நடு வீட்டில் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கேற.. அழுத்தமான காலடிகளுடன் அவள் அருகில் வந்தான்.
அமைதியான முக பாவனையோடு அவள் உறங்கிக் கொண்டிருக்க, ” இப்படி அப்பாவி மாதிரி முகத்தை வச்சு தானே டி என்ன ஏமத்துன.. எப்படி டி இவ்வளவு பெரிய உண்மையை என் கிட்ட இருந்து மறைச்ச ” என வேதனை கலந்த வருத்தத்துடன் பேசியவன்..
அருகில் இருக்கும் பூஜாடியை எடுத்து சோபா முன்னிலையில் இருக்கு டீபாயில் ஓங்கி அடிக்க.. அதில் இருந்த கண்ணாடிகள் எல்லாம் சில்லு சில்லாக உடைந்து நொறுங்கியது..
அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்தவள் முன்னாள் இருக்கும் தன் கணவனை அதிர்ந்து பார்த்தாள்..
” பட்ட பகல்ல அப்படி என்ன மகாராணிக்கு தூக்கம்.. இந்த வீட்ல தூங்கி எந்திரிக்கவா உன்ன கூட்டிட்டு வந்தேன்.. ” என சிங்கம் போல கர்ஜிப்பவனை தடுக்க முடியாமல் கண்ணீர் மல்க பார்த்து வைத்தாள் சாயாலி.
” இன்னும் அஞ்சே நிமிஷத்துல இந்த கண்ணாடியை எல்லாம் கிலீன் பண்ணிட்டு எனக்கு லஞ்ச் எடுத்துட்டு வா ” என சட்டமாக சோபாவில் அமர்ந்து கொண்டான்.
அப்போது தான் அவளுக்கே நினைவு வந்தது.. மதிய உணவு செய்யாமல் அசதியில் உறங்கியது.. முகத்தில் எதையும் காட்டாமல் அவன் சொல் படி முதலில் அந்த கண்ணாடி துண்டுகளை எல்லாம் அவள் சுத்தப் படுத்திக் கொண்டிருக்க.. அதே நேரம் டிவியை ஆன் செய்து விட்டு பார்வையை அதில் பதித்தான்.
” இன்று விருது வழங்கும் விழாவில்.. புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ் காதலன் வருகை தராமல் இருந்தது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.. விருது வாங்குவதற்கு அவர் வராததால் அவருடைய இல்லத்திற்கு விருதை அனுப்பி வைக்க முடிவு செய்து இருக்கின்றனர் ” என செய்தியாளர் அறிவித்து விட்டு.. அந்த நிகழ்ச்சியில் தமிழ் காதலன் பெயர் கூறுவதையும் அந்த இடம் வெற்றிடமாக இருப்பதையும் கண்டு அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற..
பயத்தில் நடுங்கி போன சாயாலி.. கண்ணாடி துண்டுகளை அப்படியே போட்டு விட்டு அடுக்களைக்குள் செல்ல பார்க்க.. அதற்குள் சிந்தாமணி இருந்த அறையில் இருந்து ‘டம்…. ‘ என சத்தம் வந்தது..
திடீரென கேட்ட சத்தத்தில் சாயாலி பதறி கொண்டே உள்ளே ஓடினாள். அவள் ஓடுவதை பார்த்து மறவன் பயந்து பின்னே சென்றவன் உள்ளே தாய் இருந்த நிலைமையை கண்டு துடித்து போனான்.
மெத்தையில் இருந்து கீழே சரிந்து அங்குள்ள பொருட்களை எல்லாம் சிதறி விட்டு கீழே கிடந்தார் சிந்தாமணி..
” அம்மா….. ” என உள்ளே ஓடி சென்று தாயை தூக்கி மீண்டும் மெத்தையில் படுக்க வைத்தவன்.. அவருக்கு ஏதேனும் அடி பட்டுள்ளதா என ஆராய்ச்சி செய்தான்.
இதையெல்லாம் ஒரு ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சாயாலி.. தன் தாயை சரியாக படுக்க வைத்தவன் அடுத்த நொடி தன் மனைவியின் கன்னத்தில் ஐவிரலையும் பதித்து இருந்தான் மறவன்.
அடித்த அடியில் நிற்க முடியாமல் அவள் தள்ளாட… ” உன்னால என் அம்மாவை கூட ஒழுங்கா பார்த்துக்கிற முடியாத … அவங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தது ..உன்ன கொலையே பண்ணி இருப்பேன் ” என வெறி பிடித்தவன் போல கத்தியவனை… சட்டை செய்யாது ஏதோ யோசனையாக.. மறவன் முன்பு அவசரமாக சைகை செய்ய தொடங்கினாள்.
” கோமால உள்ளவங்க எப்படி கீழே விழுக முடியும் ” என கையை ஆட்டிய பின்பே , மறவனுக்கும் அது புரிந்தது…
வேகமாக தன் தாயை திரும்பி பார்க்க.. அவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. தன் கண்ணையே நம்ப முடியாமல் அவர் அருகில் ஓடி சென்று சிந்தாமணியை இறுக்கக் கட்டிக் கொண்டான் மறவன்….
அவரோ சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தார். ஆனால் பார்வை மொத்தமும் சாயாலியின் மீது தான் இருந்தது. நிலை குத்திய பார்வையில் நிற்க முடியாமல் குற்ற உணர்வோடு அவரையும் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள் சாயாலி..
அவரது கன்னத்தை பிடித்து.. ” அம்மா நான் உங்க மகன் மறவன் மா.. அம்மா நான் பேசுறது கேட்குதா மா .. மா …. இங்க பாருங்க மா ” என மறவன் எவ்வளவு முயன்றும் அவரது பார்வை கதவருகில் நிற்கும் சாயாலியை தான் தாக்கி கொண்டிருந்தது..
அவர் பார்வை சென்ற திசையை பார்த்தவனின் கண்கள் சிவப்பேற.. ” அம்மா அவளை உங்களுக்கு நியாபகம் இருக்க மா , நீங்க இந்த நிலைமையில இருக்க காரணம் அவ தான் மா … இத்தனை வருஷமா நான் அம்மா இல்லாம இருந்ததுக்கு காரணம் அவ தான் மா.. உங்களையும் இந்த உலகத்தை பார்க்க விடாம பண்ணதுக்கு காரணம் அவ தான் மா, மூர்த்தி அப்பா இத்தானை நாளா நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்காரு அதுக்கு கரானம் அவள் தான் மா , நீங்க எனக்கு கிடைச்சதே போதும் மா, நீங்க குணமாகி வந்து இவளை என்ன பண்ணனும்னு சொல்லுறீங்களோ அதை செஞ்சு முடிக்கிறேன் … ” என வன்மத்துடன் பார்த்து வைத்தான் ..
உண்மையில் சிந்தாமணி எழுந்து உண்மை அனைத்தையும் கூறினால் முதலில் துடிப்பது அவனாக தான் இருக்கும் .. அவன் உண்மை அறியும் நேரத்தில் அவனை விட்டு அவள் வெகு தூரத்திற்கு சென்று விடுவாள் என யார் உரைப்பது.
உடனே தனது நண்பன் குமரனுக்கு அழைத்து தன் தாயை பரிசோதிக்க வரக் கூறினான். நேரில் வந்து பார்த்த குமரன்.. ” சூப்பர் டா மறவா… உன் அம்மா உனக்கு பழைய படி திரும்ப கிடைச்சிட்டாங்க.. அம்மா ஃபுல்லா கியூர் ஆகிட்டாங்க.. இனி எந்த பிரச்சனையும் இல்லை.. இத்தனை நாளா படுத்த படுக்கையா இருந்ததினால கொஞ்சம் நார்மலா நடமாட டைம் எடுக்கும்.. நம்ம கொஞ்சம் கொஞ்சமா பிராக்டீஸ் கொடுக்கலாம்… முதல்ல இந்த விஷயத்தை அப்பா கிட்ட சொல்லு டா ரொம்ப சந்தோஷ படுவாரு.. அப்பறம் நல்லா ஹெல்தி பூட் எல்லாம் கொடுக்க ஸ்டார்ட் பண்ணுங்க.. பட் எல்லாமே மைல்டா இருக்கனும், ஹெவியான சாப்பாட்டை எல்லாம் அவாய்ட் பண்ணனும்” என சில மெடிசினை எழுதி கொடுத்து விட்டு அவன் கிளம்பி விட… சிறிது நேரம் கூட தாயை விட்டு பிரியாமல் அமர்ந்திருந்தான் மறவன்..
சாயாலி தான் வேகமாக அடுக்களைக்கு சென்று கஞ்சியை தயாரித்து கொண்டு அறைக்குள் வந்தாள். அவர்கள் அருகில் இருக்கும் டேபிலில் கஞ்சியை வைத்து விட்டு அவள் நிற்க.. சாப்பாட்டை பார்த்ததும் தாய்க்கு பசிக்குமே என மண்டையில் உரைக்க.. வேகமாக கஞ்சியை எடுத்து ஸ்பூனில் ஊட்டி விட சென்றான்.. ஆனால் வாயை திறக்கவில்லை சிந்தாமணி..
இத்தனை நேரமும் தூரத்தில் இருந்த சாயாலியை தற்போது தான் அருகில் பார்க்கிறார்.. ” மா கஞ்சி சாப்பிடுங்க மா… ” என ஸ்பூனை மீண்டும் அவரது வாய் அருகே கொண்டு செல்ல.. சிந்தாமணி வாயை திறக்கவில்லை..
மறவன் கையில் இருந்த கப்பை தாக்கமாக வாங்கி கொண்டவள்.. ஒரு சிப் கஞ்சியை எடுத்து சிந்தாமணிக்கு கொடுக்க… மெல்ல அவரது இதழ்களும் பிரிந்து கொஞ்சமாக கஞ்சியை பெற்றுக் கொண்டது.
அதை பார்த்த மறவனுக்கு அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் கோபம் தலைக்கேறியது….
வேகமாக அறையில் இருந்து வெளியே வந்தவன் முன்பு… மூர்த்தி கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தார். தன் தந்தையை இந்த நேரத்தில் இங்கு எதிர்ப் பார்க்காதவன்… ” அப்பா.. அது வந்து… ” என கூறி முடிக்கும் முன்னவே ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்து இருந்தார் மூர்த்தி.
சனா💖
