563 views

 

 

அழகு சுந்தரத்தின் வீட்டில் கேட்கும் சத்தத்தில் இடி விழுந்தாலே கவலை கொள்ளாத அனைத்து அப்பார்ட்மெண்ட் கதவுகளும் திறந்து கொண்டது. மின் தூக்கி கொஞ்சமும் படியேறி கொஞ்சமும் என நான்கு பிளாக் கொண்ட அந்த முழு அபார்ட்மெண்ட்டே அவர் வீட்டு வாசலில் நின்றது. 

 

இரவு நேர உணவை தயார்படுத்தாத இரு வக்கீல்களும் வெளியில் சென்று சாப்பிடலாம் என வீட்டை காலி செய்திருக்க, இந்த கலவரம் தெரியாமல் போனது. ரகுவரனை சுற்றி வளைத்த இல்லத்தரசிகளை சுற்றி வளைத்தார்கள் அங்கிருந்த அனைவரும்.

 

 

நடந்ததை அவசரமாக விசாரித்தவர்கள் பாதிப்பேர் அவர்களை திட்டவும் மீதி பேர் ஆதரவு கரமும் நீட்டினார்கள். ஐம்பது பேர் பேசிய இடத்தில் ஐநூறு பேர் பேசும் அளவிற்கு சம்பவம் பெருசானது. தங்கள் வீட்டு பெண்மணிகள் அடித்துக் கொள்வதை பார்த்து ஸ்டேட்டஸை மறந்த ஆண்களும் ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டனர்.

 

“நீங்க தயவு செஞ்சு நியாயத்தை பேசாதீங்க சார். உங்க நியாயம் என்னன்னு எனக்கு தெரியும்.”

 

“அப்படி என்ன என்னோட நியாயத்தை பார்த்துட்டிங்க, சொல்லுங்க சார்.”

 

“அன்னைக்கு பார்கிங் ஏரியால ரூல்ஸ் பிரேக் பண்ணி கார நிறுத்துனது நீங்க தான.”

 

“நான் ஒன்னும் வேணும்னே நிறுத்தல சார். எனக்கு முன்னாடி நிறுத்துன சரவணன் சார் அப்படி நிறுத்திட்டு போயிட்டாரு.”

 

“இது என்ன சார் வம்பா இருக்கு! உங்க ரெண்டு பேர் சண்டைக்கு நடுவுல என்னை எதுக்கு இழுக்குறீங்க. நான் எப்பவும் என்னோட இடத்துல சரியா கார நிறுத்திடுவேன்.”

 

“இல்ல சார், அன்னைக்கு நீங்க ஒழுங்கா கார பார்க் பண்ணல அதனாலதான் நான் இவர் இடத்துல பார்க் பண்ண வேண்டியதாகிடுச்சு. அது புரியாம லூசு மாதிரி பேசுறாரு இவரு.”

 

“யோவ்! யாரைப் பார்த்துய்யா லூசுன்னு சொல்ற? காசு போட்டு கார வாங்கி அதை எப்படி பார்க் பண்ணனும்னு கூட தெரியாத நீ தான்ய்யா லூசு.”

 

“யாரு ஒழுங்கா பார்க் பண்ணலன்னு கூட தெரியாம பேசுற நீதாயா முழு லூசு.”

 

“சார் ரெண்டு பேரும் சண்டை போடுறதை முதல்ல நிறுத்துங்க.” இருவரையும் தடுத்து நிறுத்த ஒருவர் உள்ளே வர, “சண்ட வந்ததுக்கு காரணமே சரவணன் சரியா கார பார்க் பண்ணதால தான் சார். நீங்க அவரையும் கொஞ்சம் கண்டிச்சு வைங்க.” நாலாவது நபரை ஐந்தாவது நபர் கண்டிப்பதாக நினைத்து உசுப்பி விட்டார்.

 

 

தன் மீது குற்றம் சுமத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாத சரவணன் அவரை வம்புக்கு இழுக்க எண்ணி, “அவர தப்பு சொல்றீங்களே நீங்க ஒழுங்கா இருக்கீங்களா சார்.” கேள்வி கேட்டார்.

 

எதிர் தரப்பில் இருந்தவர் கொதித்தெழுந்து நெஞ்சை நிமித்த, “அன்னைக்கு பிரேயர் நடக்குற இடத்துல எச்சி துப்பிட்டு ஒழுக்கத்தை பத்தி நீங்க பேசாதீங்க.”

 

 

“நான் மட்டுமா எச்சி துப்புற? இங்க இருக்க எல்லாரும் வாக்கிங் போகும்போது அதைத்தான பண்றீங்க.”

 

 

“பொதுவா எல்லாரும்னு கைய காட்டாதீங்க சார். நான் அந்த மாதிரி ஒரு நாளும் பண்ணதில்லை.” புதிதாக ஒருவர் நேர்மையாக இருப்பதால் பொங்கி எழ,

 

“நீங்க ஒருத்தர் மட்டும் அப்படி இருந்தா போதுமா எல்லாரையும் இருக்க சொல்லுங்க.” அவரையும் சண்டை போட தூண்டி விட்டனர் ஒருவர் ஒருவராக.

 

“நான் எதுக்காக சார் எல்லார்கிட்டயும் சொல்லணும்? அது என்னோட டூட்டி கிடையாது. நான் ஐடி ல வேலை பார்க்குற டீசன்டான ஃபேமிலிய சேர்ந்தவன். எச்சி துப்புறது இங்க இருக்க லோக்கல் ஆளுங்க பண்ற வேலை. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

 

 

“ஹலோ மிஸ்டர்! வார்த்தைய ஒழுங்கா பேசுங்க. யாரை பார்த்து லோக்கல் ஆளுங்கன்னு சொல்றீங்க?”

 

“இப்ப நீங்க எதுக்காக சார் வேணும்னு வந்து பேசுறீங்க? அப்போ நீங்க தான் எச்சிய துப்புறீங்களா…?”

 

 

“நான் எச்சி துப்புனதுக்காக பேச வரல. எதுக்காக எல்லாரையும் லோக்கல்னு சொல்றீங்கன்னு கேட்கிறேன்.”

 

 

“நான் எச்சி துப்புனவங்களை தான கேட்டேன் உங்களுக்கு எதுக்கு கோபம் வருது?”

 

“நீங்க ஒன்னும் அப்படி பேசல சார். பொதுவா சொன்னீங்க நானும் பொதுவா கேட்டேன்.”

 

“இப்ப நீங்க ரெண்டு பேரும் எதுக்குப்பா புதுசா பிரச்சனை பண்றீங்க?”

 

“நாங்க ரெண்டு பேரும் சாதாரணமா பேசிட்டு இருக்கோம். இவங்களை மாதிரி அல்பமா கார் பார்க்கிங் பத்தி பேசல.” எச்சில் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த இருவரும் சுயநலமாக ஒரு அணியில் சேர்ந்து கொள்ள, கார் பார்க்கிங் பிரச்சினை மீண்டும் தலை தூக்கியது.

 

 

அமைதி காத்த அந்த தரப்பினர் எச்சில் தரப்பினரிடம் வாக்குவாதங்கள் செய்ய, அப்பார்ட்மெண்ட் செக்கரட்டரி உள்ளே வரும் அளவிற்கு சென்று விட்டது.

 

 

அப்பாவி போல அவர் தெரியாத்தனமாக இங்கு இருக்கும் ஆட்களை மேய்த்துக் கொண்டிருக்கிறார். முதலில் கத்திக் கொண்டு இருந்தவரிடம் காரணம் கேட்க, அவர் ஒருவரை கைகாட்டினார். பொறுமையாக அவரிடமும் காரணத்தைக் கேட்க, அவர் ஒருவரை கை காட்டினார். கை காட்டும் வேலை அரை மணி நேரத்திற்கு மேலாக சென்றது.

 

 

அழுத்து விட்டார் பஞ்சாயத்து பண்ண வந்த செகரட்டரி. கடைசியாக எச்சில் பஞ்சாயத்துக்கு வந்தார். பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில், “இவ்ளோ நாள் இந்த விஷயத்தை எதுக்காக என்கிட்ட சொல்லாம இருந்திங்க? தினமும் கிளீன் பண்றவங்க இப்படி எச்சி துப்பி வச்சிருக்காங்களேன்னு என்கிட்ட சண்ட போடுறாங்க. அப்பவே இதை என்கிட்ட சொல்லி இருந்தா நான் தீர்த்து இருப்பேன்.” என அவர் பங்கிற்கு துள்ளி குதித்தார்.

 

 

“சார் இதையெல்லாம் சொல்லிட்டு இருக்கிறதா எங்களுக்கு வேலை. செகரட்டரி’னு  நீங்க எதுக்காக இருக்கீங்க? யார் என்ன பண்றாங்கன்னு பார்க்கிறதை விட்டுட்டு எங்களை வந்து கேள்வி கேக்குறீங்க.” என்றிட, நியாயம் பேச வந்தவர் தன் நியாயத்தை கேட்க ஆரம்பித்து விட்டார்.

 

 

சம்பவம் நடந்து சரியாக மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. சம்பவம் தான் முடிந்த பாடில்லை. அங்கிருந்த அனைவரில் பெரும்பாலானோர் நாற்பது வயதை கடந்தவர்கள் என்பதால் தொடர் மூச்சு உருவாகி பேச்சை நிறுத்த வைத்தது. பேச்சுக்கள் குறைந்து பெருமூச்சுக்கள் அதிகமானதால் நிசப்தம் ஏற்பட்டது அழகுசுந்தரத்தின் வீட்டில்.

 

 

மிடில் கிளாஸ், லோ கிளாஸ், ஐகிளாஸ் என்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அனைவரும் கௌரவத்தின் முகமூடியை போட்டுக்கொள்ள, பேச்சுக்கள் நாகரிகமாக வந்தது. பதமாக ஒருவர் மாற்றி ஒருவர் போலி புன்னகையோடு வார்த்தைகளை அள்ளி தெளிக்க, செக்கரட்டரி பொறுமையாக நீதிபதி வேலையை செய்தார்.

 

 

முதலில் இருந்து ஒருவர் மாற்றி ஒருவர் கையை காட்ட, எச்சில் துப்பியவரிடம் கடைசியாக வந்து நின்றது. உள்ளுக்குள் பயந்த செக்கரட்டரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை கண்டித்தார். கூட்டத்தோடு கூட்டமாக துப்பி கொண்டவர்கள் தனித்து நின்றதால் பேச்சை நிறுத்தி விட்டனர்.

 

 

அடுத்ததாக கார் பார்க்கிங் பஞ்சாயத்திற்கு வந்தது. பெரிய மனிதர்கள் நாகரீகமாக இனிமேல் அந்த தவறு நடக்காது என்று விட, அடுத்ததாக வாக்கிங் பிரச்சனைக்கு வந்து நின்றது. இந்தப் பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்று அங்கிருந்த அனைவரும் குழம்பும் அளவிற்கு பேச்சோடு பேச்சாக நுழைந்து இருந்தது. அதையும் முடித்துக் கொடுத்தவர் வேறு என்னவென்று கேட்க, தண்ணீர் பிரச்சனைக்கு வந்து நின்றது.

 

 

இந்தப் பிரச்சினை இங்கு தலை தூக்க வில்லை என்றாலும் இதுதான் சாக்கென்று அங்கு வாழும் அனைவரும் செக்ரட்டரியை குறை சொல்ல ஆரம்பித்தனர். பஞ்சாயத்து குறை தீர்க்கும் மன்றமானது. இனிமேல் தண்ணீர் பஞ்சம் வராது என்ற உறுதி மொழியை கொடுத்தவர் அடுத்த பிரச்சனையை கேட்டார்.

 

 

பிரச்சனையை ஆரம்பித்த இல்லத்தரசிகள் பல்லை இளித்தார்கள். கணவன்மார்கள் அனைவரும் மனைவிமார்களை முறைக்க, அவர்களோ தங்களுக்குள் நடந்த பஞ்சாயத்தை அமைதி மார்க்கமாக சொல்ல ஆரம்பித்தார்கள். கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அனைவருக்கும் தலை சுற்றியது. இதற்காகவா இவ்வளவு நேரம் ஆடிக் கொண்டிருந்தோம் என எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து காரி துப்பிக் கொண்டனர்.

 

 

அதைக் கூட உணராத அந்த ஐம்பது நபர்கள், “நீங்களே சொல்லுங்க இதுல யாரு மேல தப்பு இருக்குன்னு” என அவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

 

 

அனைத்து கணவன்மார்கள் மனதிலும், ‘உங்களை இந்த அளவுக்கு பேச விட்டு வேடிக்கை பார்க்கிறோம் இல்ல… எங்க மேல தான் தப்பு’ என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டிருந்தது.

 

 

வெளியில் செல்லும் தைரியம் இல்லாததால் செக்ரட்டரியை மாட்டி விட்டனர் தீர்ப்பு வழங்கும் படி. கண்ணைக் கட்டிய பிரச்சனையை தீர்க்க வேண்டியவர் விழியை நன்கு அசைத்து, “இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமான அந்த ரெண்டு பேரையும் இங்க கூட்டிட்டு வாங்க.” என்றார்.

 

 

இல்லத்தரசிகள் அனைவரும் முதலில் தேடியது அழகுசுந்தரத்தை தான். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் ரகுவரனை தேட ஆரம்பித்தார்கள். அவனும் கண்ணுக்கு புலப்படவில்லை. சலசலப்பு உருவானது கூட்டத்தில். பிரச்சனைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்து வரும்படி ஆணை பிறப்பிக்கப்பட, ஆண் சிங்கங்களும் பெண் சிங்கங்களும் தேடி அலைந்தது வீட்டை. 

 

 

 

அந்த இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை முழுவதுமாக அலசி ஆராய்ந்தது வந்த கூட்டம் அனைத்தும். பெருமூச்சு விட்டு ஓய்ந்தவர்கள் பழைய நிலைமையில் அமர, “பேசாம அவருக்கு போன் பண்ணுங்கப்பா.” என்றார்கள் ஒரு சிலர்.

 

 

இவ்வார்த்தை கேட்டதும் அலறிய அழகுசுந்தரம் பேன்ட் பாக்கெட்டில் இருக்கும் போனை எடுக்க முடியல, மேலிருக்கும் சுவர் தடுத்து அமர்ந்து விட்டார். அவரை முறைத்துக் கொண்டு ரகுவரன் பக்கத்தில் அமர்ந்திருக்க, “முறைக்காதப்பா நானே பாவம்.” என்றார்.

 

 

அதற்குள் அங்கிருந்தவர்கள் கைப்பேசியில் தூதுவிட, சத்தம் வீட்டிற்குள் கேட்டது. ஓசை வரும் பாதையில் ஐநூறு நபர்களும் இடித்துக் கொண்டு திரும்பிப் பார்க்க, கிச்சனுக்குள் சத்தம் கேட்டது. பெரிய தலைகள் ஒரு சிலர் அங்கு விரைய, சிலிண்டர் வைக்கும் இடத்தில் ஓசை ஆணித்தரமாக வந்தது.

 

 

ஏதோ அணுகுண்டு சத்தத்தை கேட்டது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பெரிய தலைகள் சாமியை வேண்டிக் கொண்டு கதவை திறக்க, சிலிண்டரை துணைக்கு பிடித்துக் கொண்டு ஒரு பக்கம் ரகுவரனும் மறுபக்கம் அழகுசுந்தரமும் அமர்ந்திருந்தார்கள்.

 

 

அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டு மற்றவர்களிடம் விஷயத்தை பகிர, குரங்கு கூட்டம் போல் அந்த சிறு இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். இங்கும் மாட்டிக்கொண்டோம் என்ற கவலையில் வெளிவந்தார்கள் இருவரும். 

 

 

“உங்க ரெண்டு பேருக்கும் பொறுப்பே இல்லையா. எங்க வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டு உங்க குடும்பத்து பிரச்சினைய தீர்க்கலாம்னு இத்தனை பேரும் வந்திருக்கோம் இப்படி ஐஸ் பாய் விளையாடிட்டு இருக்கீங்க.” சிக்கியவர்களை முழுவதுமாக முற்றுகையிட்டனர் அங்கிருந்த படைவீரர்கள். 

 

 

முற்றுகையிட்ட படைவீரர்களிடம் போர் தொடுக்க விரும்பாத ரகுவரன் பக்கத்தில் இருக்கும் அழகுசுந்தரத்தின் தலையில் பாய்ந்து கொட்டினான். வயதானவர் அப்படியே பூமிக்குள் அடங்கிப் போவது போல் தரையோடு தரையாக தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.

 

***

 

“மகி உன் புருஷன் கட்சி ஏதாவது ஆரம்பிக்க போறாரா?”

 

“ஆஹான்!” என்றவள் இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கினாள்.

 

“கட்சி ஆரம்பிக்கிற திட்டம் வருங்காலத்துல இருக்கான்னு கேட்கிறேன்.”

 

“புரியல மேடம், எதுக்காக இப்ப இதை கேக்குறீங்க?”

 

“எதுக்கா? உன் புருஷன் இங்க இருக்க எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு மாநாடு நடத்துறதை பார்த்தா தன்னால கேட்க தோணுது.”

 

 

இருவரும் இரவு உணவிற்காக வெளியில் சென்று விட்டு இப்பொழுதுதான் உள்ளே நுழைகிறார்கள். வந்ததும் வராததுமாக புருஷனை பற்றிய கேலி பேச்சுக்களை கேட்க, இன்னும் சரியாக விளங்கவில்லை அவளுக்கு.

 

 

“ரகுக்கு அரசியல்வாதிகளை கண்டாலே சுத்தமா பிடிக்காது. அவன் எதுக்காக கட்சி ஆரம்பிக்க போறான்.”

 

“எனக்கென்னமோ தலைவன் பதவிக்கு ரொம்ப தகுதியான ஆளா உன் புருஷன் இருப்பாருன்னு தெரியுது.”

 

“எதுக்காக ரகுவ இப்ப வறுத்துட்டு இருக்கீங்க? அவனே பாவம் என்னை எப்படி சமாளிச்சு கூட்டிட்டு போறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கான், நீங்க வேற.”

 

“உன் ஆளு தவிச்சிட்டு எல்லாம் இல்ல… நல்லா ராஜ தோரணையா மைக்கு போட்டு பேசிட்டு இருக்காரு பாரு…” என்றவர் மகிழினியை திருப்பினார்.

 

 

வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் கணவனை. மனைவி தன்னை பார்ப்பது தெரியாமல் மாநாட்டிற்கு வருகை தந்த தலைவன் போல் பேசிக்கொண்டிருந்தான் சபைக்கு நடுவில்.

 

சிலிண்டருக்கு துணையாக காவலுக்கு நின்ற இருவரையும் பிடித்தவர்கள் காரணம் கேட்க, ரகுவரன் அவர்களை வெளுத்து விட்டான். கூட்டம் ஆடிய ஆட்டம் எல்லாம் காணாமல் போனது அவன் ஆட்டத்திற்கு முன்பு. பம்பிய கூட்டம் அவனை சமாதானப்படுத்த, இயல்பு நிலைக்கு திரும்பி விட்டான் தன் நிலையை எண்ணி. கோபம் எந்த அளவிற்கு வந்ததோ அதே அளவிற்கு சிரிப்பும் முட்டிக்கொண்டு வந்தது.

 

அதிலும் என்றோ நடந்த விஷயத்திற்கு இன்று பொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்று எண்ணியே அழுத்துப்போனான். அதையெல்லாம் கண்டு கொள்ளாதவர்கள் நேரம் கடந்து தாஜா செய்தனர் ரகுவரனை.

 

 

குட்டு வாங்கிய அழகுசுந்தரம் அவனிடம் நெருங்காமல் விலகி இருக்க, மாதர் சங்கம் ஒரு வழியாக வென்று விட்டது. பெரும்பாலானோர் அவரவர் வீடுகளுக்கு திரும்பி விட, சிறு அளவு கூட்டம் அவனை சுற்றி. வீட்டில் அமர வைக்க இடம் பத்தாததால் அப்பார்ட்மெண்ட் பார்க்கிற்கு வந்து விட்டனர்.

 

 

வயதில் முன் பின் இருக்கும் பெரியவர்கள் தங்கள் வசதிக்கேற்றவாறு அமர்ந்து கொள்ள, அனைவருக்கும் கேட்கும் படி இல்லாத மைக்கை பிடித்துக் கொண்டு கடந்த காலத்தை சொல்லிக் கொண்டிருக்கிறான் ரகுவரன்.

 

 

“என்ன மகி பார்க்க பார்க்க அரசியல்வாதி மாதிரி தெரியுறாருல…” என சிரிக்கும் ரேகாவை முறைத்துப் பார்த்தவள், “ரகு ரெண்டு நாள் பிள்ளைகளை விட்டுட்டு என் பின்னாடி சுத்துறதே எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்கு. இதுல ஓயாம இத்தனை பேர கூட்டு சேர்த்துட்டு கும்மி அடிக்கிறதை பார்க்க சத்தியமா நம்ப முடியல. இந்த ரகுவரன் இங்க இருக்க எல்லாருக்கும் ரொம்ப நல்லவனா தெரிவான்ல…” கடைசி வாசகம் சொல்லும் பொழுது ஆழ்ந்து சிரித்துக் கொண்டாள் தனக்குள்.

 

 

“அவங்களுக்கு மட்டும் இல்ல உனக்கும் ரகு நல்லவன் தான.”

 

“நல்லவன் தான். ஆனா, சில நேரம் ரொம்ப நல்லவனா இருக்குறதும் பிரச்சனை.”

 

“புரியல?”

 

“வாங்க நம்ம வீட்டுக்கு போய் பேசலாம். இங்க நான் இருக்குறது தெரிஞ்சா வம்பு இழுத்து எல்லாருக்கும் ஷோ காட்ட ஆரம்பிச்சிடுவான்.”

 

 

***

 

தன்னருகில் இருக்கும் மகளை பாச மிகுதியில் பார்த்துக் கொண்டிருந்தான். வந்த மான்குட்டி இன்னும் எதுவும் புரியாமல் பேச தயங்க, “என்னடா தங்கம் இப்போ உனக்கு தெரியனும்?” அவனே பேச்சை ஆரம்பித்தான்.

 

“அப்பா என்னை ஒரு அண்ணன் கார்ல கூட்டிட்டு போனாங்க, நான் எப்படி இங்க இருக்கேன்?”

 

“எப்படி இங்க இருக்கன்னு நீ தான் தங்கம் அப்பாக்கு சொல்லணும்.”

 

குழம்பிய மனதை இன்னும் ரகுவரன் பேச்சால் குழப்ப, வெகு நேரமாக பேசவில்லை மான்விழி. மகளின் முகபாவணையில் கதறி துடித்தான். கூடவே தன்னால் தான் இந்த அளவிற்கு குழம்பு இருக்கிறாள் என குற்றம் சாட்டி கொண்டவன் மனதளவில் வெறுத்துப் போனான்.

 

 

இருவர் பேசிக் கொள்வதை மகிழினி அறையில் இருந்தவாறு கேட்க, தொந்தரவு செய்யாமல் மீதமிருந்த அனைவரும் விலகி இருந்தனர். வெகு நேரம் யோசித்தும் மானுக்கு பதில் கிடைக்காமல் போக தந்தையை பாவமாக பார்த்தது.

 

“அன்னைக்கு ஒரு நாள் என்னை எதுக்காக தனியா குளிக்க சொல்றீங்கன்னு கேட்டல தங்கம்” அன்றைய தினத்தை மகளுக்கு நினைவு படுத்த, குழப்பத்தோடு தலையசைத்தாள்.

 

“அதுக்கான பதில் தான் காலையில ஒரு அண்ணா வந்து உன்னை கூட்டிட்டு போனது.” முதல் அடியை எடுத்து வைத்தவன் மகள் முகத்தை ஆராய, முற்றிலும் குழப்ப ரேகை சூழ்ந்திருந்தது. 

 

 

முள்வேலியில் பயணிக்கும் அபாய ஒலி அவனுக்குள் எழ, “நீ இப்போ உலகத்துக்கு குழந்தை இல்லை. இன்னைக்கு நடந்த சம்பவம் மாதிரி இனிமே உனக்கு நடக்கலாம், நடக்காமலும் போகலாம். அப்போ எல்லாம் நீ தைரியமா இருக்கத்தான் இன்னைக்கு நானே ஒரு அண்ணாவை வைச்சு உன்னை கடத்த சொன்னேன்.”  என்றதும் பயத்தில் முகம் மாறியது மான்விழிக்கு.

 

 

மகளை சேர்த்தணைத்துக் கொண்டவன், “நீ நினைக்கிற மாதிரி இல்ல தங்கம். சும்மா அப்பாவே உன்னை தைரியப்படுத்த இப்படி ஒரு டிராமாவ பண்ணேன். இன்னைக்கு ஒருத்தர் வந்து உன்னை தூக்கிட்டு போகும்போது நீ சண்டை போடாம அழுத தான” என்றதும் லேசாக கண்ணில் நீர் கோர்த்து தலையசைத்தது குட்டி.

 

“அந்த அழுகை உன்ன விட்டு போகணும்னு தான் பண்ண சொன்னேன். அப்படி நீ தைரியமா சண்டை போடணும்னா எல்லாத்தையும் உனக்கு நீயே பண்ணிக்கணும். அப்பா இருக்காங்க அம்மா இருக்காங்கன்னு ஒருபோதும் எங்களை சார்ந்து இருக்கக் கூடாது. அடுத்த தடவை உன்னை யாராவது இந்த மாதிரி தொட வந்தா உன்னால முடிஞ்ச வரைக்கும் சண்டை போடணும்.” 

 

நடந்த தீங்கை நன்மையாக மாற்றும் முயற்சியில் அவன் இறங்க, “அப்பா நான் கார்ல ஏறுனதும் பைட் பண்ணேன். அவங்க என்னமோ தூணிய மூக்குல வச்சாங்க அப்புறம் எனக்கு ஞாபகம் இல்ல.” மகள் சொல்லி கேட்டதும் கலங்கிய கண்ணை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டான்.

 

ரகுவரனின் நிலை உணர்ந்த சாந்தி பேத்தி அறியாமல் தைரியம் கூற, புன்னகையை பரிசளித்தான் தான் பார்த்துக் கொள்வதாக. 

 

“அது வேற ஒன்னும் இல்ல தங்கம்… அப்பா தான் கொஞ்சமா உனக்கு தூக்கம் வர மாத்திரைய ஸ்ப்ரே பண்ண சொன்னேன்.” என்றதும் பயந்த மான்குட்டி எதற்கு என்று கேட்க வர,

 

“இதுவும் உனக்காக தான் தங்கம்” என்றான் முந்திக்கொண்டு.

 

“அம்மா அப்பா இல்லாம நீ நிறைய இடத்துக்கு தனியா போக வேண்டி இருக்கும். அப்ப யாராவது  இந்த மாதிரி துணிய முகத்து கிட்ட கொண்டு வந்தா…முடிஞ்ச வரைக்கும் மூச்சை இழுத்து பிடிச்சு கொஞ்சமாச்சும் தப்பிக்க பார்க்கணும்.”

 

“மூச்சு விடலன்னா மான்குட்டி…” என்றதும் மகளின் வாயைப் அடைத்தவன், “அப்படியெல்லாம் பேசக்கூடாது தங்கம். நிறைய மூச்சுப் பயிற்சி யோகாசனங்கள் இருக்கு. அதையெல்லாம் அப்பா உனக்கு கத்து தரேன். ஏன்னு கேள்வி கேட்காம நீ கத்துக்க தான் இந்த ஏற்பாட்ட பண்ணது.” இல்லாத செயலுக்கு இவனாகவே  விளக்கம் கொடுத்தான்.

 

 

நீண்ட விளக்கமும் சில நேரம் தவறுக்கு துணை போகும் என்பதால் அத்தோடு பேச்சை முடிக்க எண்ணியவன், “தங்கம், போய் உன் அம்மாவ கூட்டிட்டு வரியா அப்பா மேல ரொம்ப கோபமா இருக்கா.” என்றான் திசைத்திருப்ப.

 

அவன் நினைத்தது போல் பிள்ளை காரணம் கேட்க, “உன் பிறந்த நாள் அதுவுமா அப்பா இந்த மாதிரி பண்ணதுல அம்மாக்கு கோபம் வந்துடுச்சு. இதுல உனக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா என்ன பண்ணுவன்னு என்கூட சண்டை போட்டுட்டா. அதனாலதான் வீட்ல இருக்க எல்லாரும் சோகமா இருக்காங்க. அப்பா உன்னோட நல்லதுக்காக தான தங்கம் இப்படி பண்ணேன்.” முகத்தை சோகமாக வைத்தான்.

 

 

தந்தையின் தாடையை பற்றியவள், “நீங்க என்னோட நல்லதுக்கு தான அப்பா பண்ணீங்க. அம்மா கிட்ட மான்குட்டி சொல்லி புரிய வைக்கும்.” என தைரியம் கொடுத்தவள் தாயைத் தேடிச் சென்றாள்.

 

இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டதால் தன் போக்கில் அழுது கொண்டிருந்தவள் மகள் வரவை அறிந்து கண் துடைத்தாள். வந்த பிள்ளை தந்தைக்காக  மன்றாட, பிள்ளையின் பேச்சில் அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. கட்டுப்படுத்த முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு மகிழினி அழ,

 

“அப்பாவ திட்டாதீங்கம்மா. அப்பா நான் தைரியமா இருக்கணும்னு தான இப்படி பண்ணாங்க.

இனிமே மான்குட்டி எல்லார்கிட்டயும் பைட் பண்ணும். ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். உங்களை யாராவது டச் பண்ண வந்தா கூட மான்குட்டி டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டு காப்பாத்தும். ப்ளீஸ் அம்மா அப்பாவ திட்டாம…மான்குட்டி பர்த்டேவ செலப்ரேட் பண்ணலாம் வாங்க.” இதற்குத்தான் கடத்தப்பட்டோம் என்பதை கூட முழுதாக உணர்ந்து கொள்ளாத மழலை சமாதானப்படுத்தியது அன்னையை.

 

 

சிறுசுகளைத் தவிர பெரியவர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத வடுவாகியது அன்றைய தினம். பிள்ளைக்காக சிரித்த முகமாக காட்டிக்கொண்டவர்கள் கிடைக்கும் நொடியில் வருத்தத்தை தெரிவித்தார்கள். எப்படியோ சாமர்த்தியமாக அனைத்தையும் மறைத்தவன் ஒரு வழியாக அன்றைய நாளையும் நிறைவு செய்தான். 

 

ஒவ்வொரு வருடமும் இந்த நாள் இரவு தம்பதிகளின் தனிச்சிறப்பு. திருமண நாளை கொண்டாடுவார்கள் ஊரே உறங்கிய பின். இரவு நேரம் வந்ததும் இருவருக்கும் மனதில் அந்த எண்ணம் உதிக்க, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் தவித்தார்கள்.

 

ஒரே படுக்கை அறை இன்று சங்கடமானது. பிள்ளைகளுக்காக ரகுவரன் வழக்கம் போல் படுக்க, பக்கத்தில் படுக்க மனம் வரவில்லை மனைவிக்கு. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மெத்தையில் அமர்ந்தவள் உடலெல்லாம் நடுங்கியது. 

 

 

உடனே எழுந்து விட்டாள் வெட்பம் தாங்காமல். அந்நியமாக தெரிந்தான் ரகுவரன். காரணமே இல்லாமல் அழுகை அவளை கைது செய்ய, தனி அறைக்குச் சென்றவள் தன்நிலை மறந்து மயங்கும் வரை அழுது கொண்டிருந்தாள். சிறிதும் மனைவி பக்கம் திரும்பாதவன் பிள்ளை உறங்கும் வரை தட்டிக் கொடுத்தான்.

 

தந்தையானவன் மகள் மீது பார்வையை பதிக்க, நித்திரையில் இருந்த குழந்தையின் மனதில் கடத்தல் சம்பவம் நிழல் படமாக ஓடிக்கொண்டிருந்தது. எங்கெங்கோ சுற்றி தன்னை கடத்தியவர் சொன்ன அந்த வார்த்தை மனதில் ஓடியது.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
15
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்