Loading

        மகிழுந்தை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்தார் கதிரவனின் அன்னை அமுதவள்ளி. அமுதவள்ளி வந்த தோரணையே ஏதோ விவகாரம் நடக்கப் போகிறது என்கிற அச்சத்தை அனைவருக்கும் கொடுத்தது.

 

      பதற்றத்தை உள்ளுக்குள் புதைத்து புன்னகையோடு அவளை வரவேற்றாள் மிருதுளா.

 

       “வாம்மா! என்ன சொல்லாம கொள்ளாம இந்த நேரத்துல வந்துருக்க?” 

 

      அதற்கு அமுதவள்ளி பார்த்த பார்வையில் எகத்தாளம் எக்கச்சக்கமாக எகிறி கிடந்தது.

 

     “இந்த நேரத்துல ஏன் வந்தேன்னு கேக்குறியா? இல்ல எதுக்கு வந்தனு கேக்குறியா? நாளைக்கு காலைல முக்கியமான விஐபி வீட்டு பங்க்ஷன் ஒன்னு இங்க இருக்கு. அதான் இங்க வந்தேன். இல்லனா அழைக்காத வீட்டுக்கு நான் ஏன் வரப்போறேன்.” என்று முதல் பேச்சே குதர்க்கமாய் வந்து விழ, மிருதுளா சற்றே எரிச்சல் அடைந்தாலும் வெளிக்காட்டவில்லை.

 

    “இந்த இராத்திரில தனியா வந்துருக்கியேனு அக்கறைல கேட்டா ரொம்ப தான் பண்ற? வந்ததும் ஆரம்பிக்காத ம்மா.” என்றபடி அவளது கையிலிருந்த பையை வாங்கிக் கொள்ள, அதற்கு அவளோ “ம்க்கும்” என்று முகத்தை சுழித்து கழுத்தை ஒரு வெட்டு வெட்டி திருப்பிக் கொள்ள, மிருதுளா தலையில் அடித்துக் கொண்டு உள்ளே விடுவிடுவென சென்று விட்டாள்.

 

      நிரஞ்சனோடு அலுவலக விஷயங்கள் பேசுவதுபோல் அமர்ந்திருந்த ராம்குமாரும் சக்கரவர்த்தியும் அப்பொழுது தான் அவளை கவனித்தது போல், “வாங்க அத்தை!”, “வாங்க சம்மந்தி!” என முறையே வரவேற்றனர். 

 

     அதற்கு சிறு தலையசைப்போடு அமுதவள்ளி நிரஞ்சனை ஏறிட, நிரஞ்சன் என்ன செய்வதென்று தெரியாது மெலிதாக புன்னகைத்து வைக்க, அவளோ முகத்தை சுழித்து வீட்டைச் சுற்றி பார்வையை சுழல விட்டாள்.

 

      “என்ன ஏத்தம் இந்தம்மாவுக்கு. மகளதான் திட்டுதுனு பார்த்தா மாப்பிள்ளை, சம்மந்திக்கும் மரியாதை தர மாட்டேங்குது. நாம லைட்டா சிரிச்சா மூஞ்சிய சுழிக்குது. பாவம் கதிர்! ஆனா தப்பிச்சுட்டான்.” என மனதிற்குள் எண்ணிக்கொண்ட நிரஞ்சன் ராம்குமாரிடம் விடைபெற்று அங்கிருந்து போனால் போதுமென்று விறுவிறுவென்று சென்று விட்டான்.

 

     சக்கரவர்த்தி மரியாதை நிமித்தமாக “சம்மந்தி நல்லாருக்காரா சம்மந்தி?” என்று விசாரித்தார்.

     

    “ம்ம் நல்லாருக்கார் நல்லாருக்கார். இத்தனை நாள் ஒரு ஃபோன் கூட பண்ணாத அக்கறை என்னை பார்த்ததும் பொங்கிடுச்சோ?” என குதர்க்கமாக பேசிய அமுதவள்ளியை கண்டு முகம் சுழிக்கத்தான் தோண்றியது. 

 

    ஆனால் சக்கரவர்த்தி மென்மையாக சிரித்துக் கொண்டு, “நானும் சம்மந்தியும் வாரத்துல ஒரு தடவை ஒரு மணி நேரம் பேசிக்கிறது உங்களுக்கு தெரியாதில்லயா! அதான் வார்த்தைய சூடா கொட்டுறீங்க. ரொம்ப லேட்டாகிடுச்சு போய் சாப்பிடுங்க சம்மந்தி.” என்றுவிட்டு அவரது பெயரில் இருக்கும் அமுதம் பேச்சில் துளிக்கூட இருக்காது என்பதனை நன்கறிந்தவர் அவளது பதிலுக்கு காத்திருக்காது தனது அறையை நோக்கிச் சென்றார்.

 

     அதற்கும் அமுதவள்ளி ஏதோ முணுமுணுக்க, ராம்குமார் அவளை அழுத்தமாய் பார்த்ததில் வாயை மூடிக் கொண்டாள்.

 

      வாய் சக்கரவர்த்தியிடம் பேசியிருந்தாலும் கண்கள் வீட்டைச் சுற்றி அலைப்பாய்ந்த படியே இருந்ததை ராம்குமார் கவனிக்க தவறவில்லை. ஆதலால் அடுத்து அமுதவள்ளி என்ன செய்வாள் என்பதனை ஓரளவு கணித்தவன் எங்கும் அசையாது அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

 

     அவனை துளியும் பொருட்படுத்தாத அமுதவள்ளி தனது மூட்டு வலியையும் கருத்தில் கொள்ளாது படிகளில் ஏறத் துவங்கவும் மிருதுளா அங்கு வரவும் சரியாக இருந்தது.

 

     ராம்குமார் கண்களால் அவளது அம்மாவை சுட்டிக் காட்டி ஏதோ சமிஞ்கை செய்யவும் சுதாரித்த மிருதுளா வேகமாக தாயின் பின்னே சென்றாள்.

 

    “அம்மா! மூட்டு வலிய வச்சுக்கிட்டு எங்கம்மா மேல போற? உனக்கு ரூம் கீழ இருக்கு.”

 

    அவளுக்கு பதிலுரைக்காது அவள் மேலே செல்வதில் குறியாய் இருக்கவும் ராம்குமார் கதிரவனுக்கு “சுவிட்ச் ஆஃப் தி லைட்ஸ். டோன்ட் ட்ரை டூ கம் அவுட் ஃபார் 15 மினிட்ஸ்.” என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டு தானும் அவர்களை தொடர்ந்தான்.

 

      நிரஞ்சனின் மூலமாய் தகவலறிந்த கதிர் ஏற்கனவே கடுப்பில் இருக்க, ராம்குமாரிடமிருந்து வந்த தகவல் அவனை மேலும் கடுப்பேற்றியது.

 

     கைப்பேசியை பார்த்து தலையை பிடித்தபடி மெத்தையில் பொத்தென்று அமர்ந்தவனை கண்ட அழகி அவனது கைப்பேசியை வாங்கி பார்க்கவும் ராம்குமாரிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது. அவனது கோபத்திற்கான காரணம் புரிய, தனக்கும் அதில் உடன்பாடு இல்லையெனினும் ராம்குமாரின் சொல்லை மீற முடியாது அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு ஜன்னல்களை திறந்துவிட்டாள்.

 

    நிலவின் வெளிச்சம் ஜன்னல்கள் வழியே அறைக்குள் விழுந்தது. உறங்கும் அதிரனை கண்டு பெருமூச்சு விட்டபடி மெல்ல கதிர் அருகில் வந்து அமர்ந்தாள். அவனிடமிருந்து சூடான மூச்சுக்காற்று வெளியேறிக் கொண்டிருந்ததை அவள் உணருமளவிற்கு அவனது கோபம் இருந்தது.

 

    மெல்ல அவனது கையைப் பற்றினாள்.

 

    “எதுக்குடி லைட்ட ஆஃப் பண்ண?” என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்பது நிலவின் அரை வெளிச்சத்தில் தெரிந்தது. அதுவே அவனது கோபத்தின் அளவை கூற, அழகி பெருமூச்செறிந்தாள்.

 

    “கதிர்! எனக்கும் இதெல்லாம் பிடிக்கல தான் கோவம் வருது தான்.”

 

     “ஏதோ தப்பு செஞ்சுட்டு ஒளிஞ்சுக்கிட்ருக்குற மாதிரி இருக்கு டி. இப்படி வந்து ரூம்குள்ள உக்காந்துக்கிட்ருக்குறது.”

 

    “எனக்கும் அப்படித்தான் இருக்கு கதிர்.”

 

   “பின்ன என்னடி? இப்பவே நான் போய் கதவ திறந்து நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறத அவங்கக்கிட்ட சொல்றேன்.” என்று எழுந்தவனை கைப்பிடித்து அழகி தடுத்தாள்.

 

   “கைய விடு அழகி! என்னைக்கா இருந்தாலும் தெரியத்தானே போகுது. அது இன்னைக்கு தெரியட்டும்.” என கையை உதறிக்கொண்டு ஒரு எட்டு வைக்க,

 

    “போடா போ. போய் எல்லாத்தையும் சொல்லி அண்ணிக்கும் அண்ணனுக்கும் கெட்ட பேர் வாங்கிக்குடு.” என்ற அழகியின் மெதுவான ஆனால் அழுத்தமான குரல் அவனை தடுத்தது.

 

     “நம்மள பத்தி சொன்னா அவங்களுக்கு எப்படி கெட்ட பேர் வரும்?” என அவன் திரும்பினான்.

 

    “நாம இப்ப எங்க இருக்கோம்? ராம்குமார் அண்ணா வீட்ல தானே. அதுவும் நீயும் நானும் ஒரே ரூம்ல இருக்கோம். உங்கம்மா உன்னை தேடி தான் மேல வராங்க. இப்ப போய் நீ கதவ திறந்தன்னா நம்ம ரெண்டு பேரையும் தப்பா நினைக்குறது மட்டுமில்லாம அண்ணா அண்ணியும் இதுக்கு உடந்தைனு தப்பா தானே நினைப்பாங்க. அண்ணி கூட தான் உங்கம்மா நல்லவிதமா பேசுறாங்க. அது மொத்தமும் இப்ப நீ கதவ திறந்தன்னா மாறிப்போயிடும். நம்மள தப்பா நினைக்கிறது பேசுறது மட்டுமில்லாம அண்ணா அண்ணியையும் பேசுவாங்க. சக்கரவர்த்தி அப்பாவ மரியாதை இல்லாம பேசுவாங்க. அது அவங்களுக்கு எவ்வளவு பெரிய சங்கடம். நம்மளால அவங்க எல்லாரும் தலைக் குணியணுமா சொல்லு கதிர்?” என நிதாணமாக அவனுக்கு புரியும்படி எடுத்துரைத்த அழகி அவனது கரம் பற்றினாள்.

 

    “ப்ளீஸ் கதிர்! உன் கோவம் நியாயமானது தான். எனக்கும் தான் கோவம் இருக்கு. ஆனா அதை காட்ட இது சரியான நேரமும் இல்ல இடமும் இல்ல. கொஞ்சம் அமைதியாகு.”

 

     அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு பொட்டில் அடித்தாற்போல் புரிய, அவளது கரத்தை தன் கரங்களுக்குள் அடக்கி, “நான் இதை யோசிக்கவேயில்ல டி. தேங்க்ஸ் டி. என் கோவத்தால அக்கா மாமாவுக்கு சங்கடத்தை குடுக்க தெரிஞ்சேன். ரொம்ப தேங்க்ஸ் டி.” என்றான்.

 

        அவன் இதழ்கள் மெலிதாக வளைவதை கண்டவள் நிம்மதி பெருமூச்சுவிட்டு தானும் இதழ் வளைத்தாள். 

 

     “சரி வா வந்து உட்கார்! உங்கம்மா என்ன பண்றாங்கனு பார்ப்போம்.” என்றிட, இருவரும் அதிரன் உறக்கத்தை கலைத்திடா வண்ணம் மெதுவாக மெத்தையில் அமர்ந்தனர்.

 

    இருவரது கவனமும் வெளியில் என்ன நடக்கிறது என்பதில் இருந்தாலும் இருவரது கரமும் ஒன்றை ஒன்று பற்றியபடியே இருந்தன.

 

     மெதுவாக மேலே ஏறி வந்த அமுதவள்ளி அழகியும் கதிரும் இருந்த அறையை கடந்து கதிரின் அறைக்குச் செல்ல, பின்னேயே மிருதுளாவும் “அம்மா ஏன் இப்ப அவன் ரூமுக்கு போற?” என்று கத்தியபடிச் சென்றாள்.

 

    ராம்குமார் அவர்களை தொடராது அழகியின் அறை முன்னேயே நின்று கொண்டான்.

 

    கதிரின் அறையை திறந்த அமுதவள்ளியை அவனில்லா வெற்று அறையே வரவேற்க, திரும்பி மிருதுளாவை கேள்வியாகப் பார்த்தாள்.

 

   “அவன் எங்க டி?”

 

   “அவன் ஊர்ல இல்ல. இதை கீழயே கேட்டுருந்தா சொல்லியிருப்பேன்ல. தேவையில்லாம மூட்டு வலியோட மாடி ஏறி, தேவையா உனக்கு?”

 

   “எங்க போயிருக்கான்?”

 

   “யாரோ தறிக்காரர பார்த்து டிசைன் கொடுக்கணும்னு காஞ்சிபுரம் வரை போயிருக்கான். வர மூனு நாளாகும்னு சொன்னான். ஆமா நீ ஏன் அவன பத்தி கேக்குற?”

 

    அவளுக்கு பதில் கூறாது திரும்பிய அமுதவள்ளி அவன் அறையை சுற்றி நோட்டம் விட்டுவிட்டு அவனது மேசையில் இருந்த பொருட்களை எடுத்து ஆராயத் துவங்கினாள்.

 

    “அம்மா! என்னம்மா பண்ற? அவன் ரூம்ல அவன் இல்லாதப்ப என்னத்த தேடுற?” என்று மிருதுளா சற்றே எரிச்சலாக வினவினாள்.

 

     பதில் கூறாது தேடுவதிலேயே அவளது அன்னை முனைப்பாகயிருக்க, 

     ” அம்மா! என்னத்த தேடுற நீ?” என கையைப் பற்றிய மிருதுளாவை அமுதவள்ளி முறைத்தாள். 

 

    “கையை விட்றி!” 

 

    “முடியாது ம்மா. என்ன தேடுறனு சொல்லு முதல்ல.”

 

     “உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல.”

 

     “அப்ப நானும் உன் கைய விட முடியாது.” என்றவளை அமுதவள்ளி எரித்து விடுவது போல் பார்த்தாள்.

     

     “நீ பாட்டுக்கு கலைச்சுப் போட்டுட்டு போய்டுவ. அவன்கிட்ட யார் திட்டு வாங்குறதாம். அவன் ரூம்ல எல்லா திங்க்ஸையும் ஒரு ஆர்டர்ல வச்சுருப்பான். டேபிள்ல இருக்குற பேனாவ லைட்டா நகத்தி வச்சாலே கண்டுபிடிச்சு நான் இல்லாதப்ப என் ரூம்குள்ள உனக்கென்ன வேலைனு அந்த கத்து கத்துவான். நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இப்படி கலைக்குற? இங்க பாரும்மா உன் நல்லதுக்கு தான் சொல்றேன். ஏற்கனவே நீங்க அவன பண்ண டார்ச்சர் தாங்க முடியாம தான் இங்க வந்து தங்கி இப்ப அவனுக்குனு ஒரு தொழில தொடங்கியிருக்கான். இப்படி அவன் இல்லாத நேரத்துல வந்து அவன் ரூம்ல ஏதோ தேடுனனு தெரிஞ்சுது இங்கயும் தங்காம வேற எங்கயாவது போயிடுவான். போறவன் சும்மா போக மாட்டான். இத்தனை வருஷம் பேசாதவன் அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்னையும் அப்பாவையும் நிக்க வச்சு கேள்விக் கேட்டுட்டு தான் போவான். அவனுக்கு உங்க மேல இருக்குற கோவம் கொஞ்சம்கூட குறையல. இப்படியெல்லாம் செஞ்சு அவன இன்னும் கோவமாக்கி என் வீட்டுலேர்ந்தும் போக வச்சுறாத ம்மா. அவ்வளோ தான் சொல்லுவேன்.” என்று மிருதுளா ஒரு போடு போட்டதும் தான் அமுதவள்ளி தேடுவதை விடுத்தாள்.

 

     ஒரு நிமிடம் சிந்தித்தவள், “இப்ப விடறேன். ஆனா நான் கண்டுபிடிக்க வந்தத கண்டுபிடிக்காம மட்டும் விட மாட்டேன்.” என்றாள்.

 

    “கண்டுபிடிக்க வந்தியா? அப்படியென்ன கண்டுபிடிக்க வந்த?”

 

     “அதை கண்டுபிடிச்சப்புறம் சொல்றேன். ஆனா நான் கேள்விப்பட்டது மட்டும் உண்மையா இருந்துச்சு அவனையும் சும்மா விட மாட்டேன். உன்னையும் சும்மா விட மாட்டேன்.” என்று அமுதவள்ளி அடிக்குரலில் உரைத்து முறைத்தாள்.

     

     உள்ளுக்குள் “தெரிஞ்சுருக்குமோ?” என சற்றே துணுக்குற்றாலும் வெளிக்காட்டாத மிருதுளா, “நீ என்னத்த கேள்விப்பட்டியோ? உன் டிடெக்ட்டிவ் வேலைய காலைல பாரு. இப்ப வந்து சாப்பிட்டு படு. ரொம்ப டைமாச்சு.” என்று கையைப்பிடித்து வெளியே அழைத்து வந்து கதிரின் அறையை சாற்றி தாழிட்டாள்.

     

     ராம்குமார் அமுதவள்ளியின் செயலில் சற்றே கோபமுற்று அவளை முறைக்க, தான் வந்த காரியம் தோல்வியடைந்ததை நினைத்து எரிச்சலுற்றபடியே அமுதவள்ளி கீழே இறங்கினாள். 

     

     மிருதுளா வேகமாக வந்து அவனது கையை அழுத்திவிட்டு அழகியும் கதிரும் இருந்த அறையை பார்வையால் சுட்டிவிட்டு தாயின் பின் ஓட, அவன் மெல்ல இருமுறை அவர்கள் இருந்த அறையை தட்டினான்.

 

    அறையின் உள்ளிருந்த அழகியும் கதிரும் வெளியே என்ன நடந்திருக்கும் என்பதனை ஓரளவு ஊகித்திருந்தனர். கதவு தட்டும் ஓசைக்கேட்டு எழுந்து வந்த கதிர் மெல்ல கதவை திறக்க, சட்டென்று உள்ளே நுழைந்த ராம்குமார் உடனே கதவை சாற்றி தாழிட்டான். 

    

    “என்னாச்சு அண்ணா? அண்ணியோட அம்மாவுக்கு டவுட் வந்துடுச்சா?” என அழகி பதற்றமாக வினவினாள்.

    

    அதிரன் உறங்குவதைக் கண்ட ராம்குமார் உதட்டில் விரல் வைத்து இருவரையும் அமைதியாய் இருக்கும்படி அறிவுறுத்தி பலகணிக்கு செல்லலாம் என்று சமிஞ்கை செய்ய, மூவரும் பலகணிக்கு வந்தனர்.

    

    “என்னாச்சு அண்ணா?” என அழகி வினவ, கதிரோ அடக்கப்பட்ட கோபத்துடன் அமைதியாக தனது மாமாவை பார்த்திருந்தான். 

 

     ராம்குமார் தனது மாமியார் வந்ததிலிருந்து செய்த அழிச்சாட்டியங்களையும் பேசிய பேச்சுகளையும் ஒன்று விடாது விவரித்தான்.

 

    அதனை கேட்ட அழகிக்கும் கதிருக்கும் தாங்கள் ஊகித்தது சரியாகிப்போனது சற்றே கவலையை தந்தது. அழகி கவலை ததும்ப கதிரை நோக்க, அவனது முகமோ இறுகிக் கிடந்தது.

 

   “நானும் வேணாம் வேணாம்னு ஒதுங்கி போறேன். இனியும் போனா சரியா இருக்காது போலயே.” என்ற கதிர் அழகியின் கவலையை அதிகரிக்கச் செய்திருந்தான்.

 

   “மச்சான்! எதுனாலும் கொஞ்சம் நிதானமா செய்!” என்று ராம்குமாரும் கவலைத் தொனித்த குரலில் கூறினான்.

 

   “இல்ல மாமா! அதிரடியா ஏதாவது செஞ்சா தான் என் பக்கம் வர மாட்டாங்க. சீக்கிரமே செய்யுறேன்.” என்று முகம் இறுகி உறுதியாய் உரைத்த கதிரை கண்டு மற்ற இருவராலும் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

 

    அவனது தோளில் தட்டிவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனித்த ராம்குமார், “மாமா!” என்ற கதிரின் விளிப்பில் செல்லாமல் நின்றான்.

 

    “நானும் அழகியும் இங்க இருக்குறது சரியா இருக்காது. இருந்தா உங்களுக்கும் நல்லதில்ல அதிரனுக்கும் அது நல்லதில்ல. அதனால நாங்க அழகி வீட்டுக்கு போறோம்.” 

 

   “இந்த நேரத்துலயா? காலைல போங்க டா.”

 

    “இல்ல மாமா! காலைல சரி வராது. நாங்க போயிட்டு எங்க அம்மா போனதுக்கு அப்புறம் வரோம்.”

 

    “சரி இப்ப எதுல போவீங்க?”

 

    “நான் வெளியூர் போயிட்டேன்னு மிருதுளா சொல்லியிருக்கு. என் வண்டிய எடுத்துட்டு போனா அம்மாவுக்கு டவுட் வரும். நிரஞ்சன் இப்பதானே கிளம்புனான் அவன வர சொல்லிக்கிறேன்.”

 

    சற்று யோசித்த ராம்குமார், “இல்ல டா வேணாம்! அதிரன வச்சுக்கிட்டு சரி வராது. அழகிக்கும் இன்னும் உடம்பு முழுசா சரியாகல. அப்பாவோட கார் ஷெட்டுக்குள்ள நிக்கிது. அதை உங்கம்மா பார்த்துருக்க வாய்ப்பில்லை. சோ நீங்க மூனு பேரும் அதுல போங்க. நான் சாவி எடுத்துட்டு வந்து தரேன்.” என்றான்.

 

     கதிரும் அதற்கு மேல் மறுக்காது சரி என்றிட, ராம்குமார் சாவி எடுத்துவர செல்ல, அழகி கவலையோடு அவனைப் பார்த்தாள்.

 

   “அழகி வந்து உன் மாத்திரையெல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கோ.” என்ற கதிர் வேகமாக உள்ளே வந்து அழகியின் பொருட்களை எடுத்து வைக்க துவங்க, அழகியும் அமைதியாக தன்னுடைய பொருட்களை எடுத்து வைத்தாள்.

 

    கதிரும் மெல்ல கதவை திறந்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று மாற்றாடைகள் இரண்டும் அவனது லேப்டாப்பையும் ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டு வந்தான்.

 

    அழகி எதுவும் பேசாது அமர, கதிரும் அவளருகில் அமர்ந்து ஆதரவாய் அவளது கையைப் பிடிக்க, அவள் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

 

     இன்றுதான் அவள் அவளது காதலை சொன்னாள். அந்த மகிழ்ச்சியை முழுமையாய் அனுபவித்து முடிக்கவில்லை அதற்குள் ஒரு பிரச்சினையா? என்ற கவலை இருவருக்குமே இருந்தது.

 

    கவலையை மீறி கதிரின் மூளை தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டிருந்தது. அழகியும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

 

    அவர்களது சிந்தனையை கலைக்கும் விதமாய் அறைக்கதவு தட்டப்பட, கதவை திறந்த பொழுது ராம்குமாரும் மிருதுளாவும் சாவியோடு நின்றிருந்தனர்.

 

     மிருதுளா தவிப்பாய் இருவரையும் பார்த்திருக்க, அதிரனை தோளில் தூக்கி போட்டுக் கொண்ட கதிர், அழகியை ஒரு கரத்தில் பிடித்துக் கொண்டு வெளியே வந்து தனது மாமாவிடமிருந்து சாவியை பெற்றுக் கொண்டான்.

 

    “அவங்க போனதுக்கு அப்புறம் கால் பண்ணுங்க.” என்றவன் அழகியின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டு கீழே இறங்கினான். அந்த அழுத்தத்தில் என்ன நடந்தாலும் பற்றிய கையை இறுதி வரை விடமாட்டேன் என்கிற உறுதி இருந்ததை உணர்ந்த அழகியின் கண்கள் கலங்கின. அவனையே வைத்த விழி எடுக்காது பார்த்தபடி அவனோடு சென்றாள்.

 

      சக்கரவர்த்தியின் மகிழுந்தை ராம்குமார் கொடுத்த சாவி கொண்டு திறந்து அதிரனை பின்னிருக்கையில் படுக்க வைத்த கதிர், தங்களது பைகளையும் பின்னேயே கீழே வைத்துவிட்டு, அழகி அமர முன்னிருக்கைக் கதவை திறந்துவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.

 

    அழகி அமர்ந்ததும் மகிழுந்தை இயக்கி வேகமாக அழகியின் வீட்டை நோக்கி செல்ல துவங்கினான்.

 

    சிறிது தொலைவு அமைதியாக அவனையே பார்த்திருந்த அழகி, “என்ன செய்ய போற கதிர்?” என்று கேட்டாள்.

 

    திரும்பி அவளை பார்த்தவன், “நானே நேரா போய் அவங்கக்கிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதப் பத்தி சொல்லப் போறேன்.” என்றிட, கொஞ்சமாய் மகிழ்ந்தாலும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை எண்ணி கவலைக் கொண்ட அழகி அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

 

    கதிரும் மகிழுந்தின் வேகத்தைக் குறைத்து சீரான வேகத்தில் செல்லத் துவங்கினான்.

 

 

     

 

    

    

 

 

    

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்