அத்தியாயம் 21
உத்ரா என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதைப் பார்த்த, துருவ், அவனே அவள் இதழ்களை வசியம் செய்ய, அதில் அவள் தான் மொத்தமாய் தொய்ந்து போனாள்.
ஆரம்பித்து விட்ட துருவிற்கு, இந்த முத்தத்தை முடிக்க மனமே வரவில்லை.
அவளை விட்டு விலகினால், மீண்டும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி அவளிடம் இருந்து பிரித்து வைக்கும் மனதிடம் இருந்து தப்பிக்க, அவள் இதழின் வழியேவே அவள் உயிரையும் உறிஞ்சி எடுத்தான்.
மூன்று வருட, காதலையும், பிரிவையும், தாபத்தையும் ஒற்றை முத்தத்திலேயே அவளுக்கு உணர்த்த முயன்றான் அவனை மறந்து.
அப்படியும் அவனுக்குள் அவளுக்கு தன்னை நினைவில்லை. இப்படி செய்வது தவறு என்று ஒரு புறம் முணுமுணுத்தாலும், காந்தமாய் அவளுடன் ஒட்டிக்கொண்டான்.
சட்டென்று அவள் கூறிய ‘விமனைசர்’ என்ற வார்த்தை அவனுள் தீயாய் சுட, விருட்டென்று அவளை விட்டு விலகினான்.
துருவின் நெடு நீண்ட, முரட்டு முத்தத்தில், மூச்சு விடத் திணறினாலும், அவளுக்கு அவனை தள்ளவே தோன்றவில்லை.
அவனுள் புதைந்து, எழுந்திடவே அவளுக்குள் ஆவல் பிறந்தது.
தன்னிடம் முத்தம் கொடுக்க சவால் விட்டு விட்டு அவனே அவளுக்கு பாடம் எடுப்பதை நினைத்தவளுக்கு கிறக்கத்தில் மயக்கமே வந்துவிட்டது.
அவன் பின்னந்தலை முடியை இறுக்கமாகப் பற்றி தன்னை மறந்தவள், அவனின் திடீர் விலகளில் நிலைகுலைந்து போனாள்.
பெரிய பெரிய மூச்சுக்களை விட்டு கொண்டு, முகம் எல்லாம் சிவந்து நின்றவளை கண்டவன், அவளை வருத்திவிட்டோமோ என்று தன்னையே நொந்தான்.
அவன் விலகியதில் அவனையே உத்ரா புரியாமல் பார்க்க, துருவ் “சாரி” என, நகர போக, உத்ரா “எதுக்கு சாரி” என்று கேட்டாள்.
அவன் தன்னை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்ற கோபத்தில் பல்லைக்கடித்து கொண்டு, “இனிமே இந்த மாதிரி ஸ்டுப்பிட் மாதிரி பேசிகிட்டு இருக்காத உத்ரா. என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. உனக்கு என்னை ஞாபகம் இல்லைன்னு நான் தள்ளி தள்ளி போறேன். ஆனால் நீ இப்படி என்னை சீண்டி விட்டு என்னை உன்கிட்ட விமனைஸர் மாதிரி நடந்துக்க வைக்காத உத்ரா…”கத்தினான்.
அவள் தான், அவனின் கூற்றில் கிறக்கம் தெளிந்து திகைத்தாள்.
சற்று நேரத்திற்கு முன்பு, பூக்களைத தூவி,
பனிச்சரிவில் நிற்க வைத்தவன்
சட்டென்று இதயத்தில் நெருப்பையும் கொட்டுகிறாயடா…!
உன் உருவத்தை மறந்த நான்…
என்னுள் நீ விட்டு சென்ற உணர்வுகளை மறக்கவில்லையடா.
மனதினுள் நீ நிரப்பி சென்ற காதலை மறந்த நான்…
அந்த காதல் விட்டு சென்ற தடத்தை மறக்கவில்லையடா.!
கழுத்தில் நீ அணிவித்த பொன்தாலியை மறந்த நான்…
அது என் கழுத்தில் வருகையில் நீ தந்த ஸ்பரிசத்தை மறக்கவில்லையடா…
உன் அன்பை மறந்த நான்…
நீயே என் அன்பு என்று உரைக்கும் போது
அதை மறுக்கவும் இல்லையடா…
ஏனோ எனக்கு நீ யாரோவாக தோன்றியது மாறி…
உனக்கு நான் யாரோவாக தோன்றுவது என்ன விந்தையோ…?
இப்பொழுது எனக்கு இந்த சந்தேகம் தான்…!
பழையதை மறந்த நான்
புதிதாய் உன்னை காதலிக்க நினைக்கிறேன்.
புதியதை ஏற்காத நீ
பழைய காதலியை என்னுள் தேடுகிறாய்…
இப்போது மறதி எனக்கா, இல்லை உனக்கா…
என் ஊனோடு உறைந்தவனே!!!!
என்று மனதில் பெரும் புயல் அடிக்க, ஆடாமல் அசையாமல் துருவையே வெறித்து கொண்டிருந்தாள்.
அவள் பார்வை அவனை என்னவோ செய்ய, அதற்கு மேல் அவளை பார்க்க இயலாமல், அவன் திரும்பி நடக்க, அப்பொழுது அர்ஜுன், உத்ராவிற்கு போன் செய்தான்.
அதன் பிறகே, தன்னை சமன்படுத்தி கொண்டு, அதனை எடுத்தவள் “சொல்லு அர்ஜுன்” என்க, இவ்வளவு நேரம் அனைவருக்கும் மாற்றி மாற்றி போன் அடித்து ஓய்ந்தவன் கடுப்பில் அவளிடம்,
“எதுக்கு எல்லாரும் போன் வச்சிருக்கீங்க… போன் பண்ணுனா எடுக்க மாட்டிங்களா? துருவ் எங்க” என்று கேட்க,
உத்ரா, என்னவோ சரி இல்லை என்று நினைத்து, “இங்க தான் இருக்காரு” என்றதில், துருவும் என்னவென்று பார்த்தான்.
அர்ஜுன், நடந்ததை சொன்னதும், உத்ரா “வாட்” என பலமாய் அதிர்ந்தாள்.
“நாங்க உடனே வரோம்…” என்று விட்டு, துருவிடம் பதட்டத்துடன் “சஞ்சுவை காணோமாம்” என்று சொல்ல, அவனும் திகைத்து விட்டான்.
பின், அனைவரும், சஞ்சு காணாமல் போன இடத்திற்கு விரைய, அங்கு, மீரா அழுது கொண்டிருக்க, அர்ஜுன் போலீசிடம் விவரம் சொல்லிக்கொண்டிருந்தான்.
துருவ் “என்னாச்சு அர்ஜுன்” என்று கேட்க, மீரா, மேலும் அழுதாள்.
உத்ரா “மீரா அழாத… யாரு கடத்துனாங்கனு பார்த்தியா” என்று கேட்க, அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
துருவ் அந்த போலீசிடம் எல்லா செக் போஸ்ட்டையும் மடக்கி தேட சொல்ல சொல்லிவிட்டு, மீராவின் அருகில் வர, அவள் முகத்தை மூடி அழுத படி,
“நான் கொஞ்சம் கவனமா இருந்துருக்கும் அர்ஜுன்… நான் தான் சரியா பார்த்துக்கல.” என்று கண்ணீரில் கரைய,
அர்ஜுன், “என்ன மீரா இது… பிறந்ததும் சாகப்போனவனை காப்பாத்தி இந்த அளவு வளர்த்துருக்க, அவன் உயிரோட இருக்குறதே உன்னால தான். நீ அமைதியா இரு.
அவனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. போலிஸ் கண்டுபிடிச்சுடுவாங்க. இல்லைனாலும் நம்ம எப்படியும் அவனை கண்டுபிடிச்சுடலாம்” என்று அவளை தோளில் சாய்த்துக் கொண்டு அவனும் கண் கலங்கினான்.
உத்ரா, ஏதோ யோசனையுடன், “ரிஷி தான் இப்படி பண்ணி இருக்கணும் நான் அவனுக்கு போன் பண்றேன்” என்று சொல்ல, துருவ் அவளை தடுத்து, “அவன் பண்ணிருக்க மாட்டான்” என்க,
உத்ரா புருவம் சுருக்கி “அப்போ யாரு? சைதன்யாவா.” என்று பார்க்க அவன் “காஞ்சனா” என்றான்.
அவனின் ஆட்களுக்கு போன் செய்து, அவளை ஒரு இடம் விடாமல் தேட உத்தரவிட்டான்.
அஜய், “அவள் தான் பண்ணிருப்பானு எப்படி சொல்ற துருவ்?” என்று கேட்க, அவன் உத்ராவை பார்த்தான்.
உத்ராவும் யோசித்து விட்டு, “சிம்பிள்… சஞ்சுவோட அம்மாவை அந்த காஞ்சனா கொன்னுட்டாள். இப்போ, சஞ்சு ரிஷியோட பையன்னு தெரியவும், அவன் நம்மகிட்ட அவன் இருக்குறது பொறுக்காம, லீகலா அவனை நம்மகிட்ட இருந்து பிரிக்க நினைப்பான். ஆனால் இந்த கேஸ் கோர்ட்டுக்கு போனால், காஞ்சனாவோட தப்பு வெளிய வந்துடும்… சோ, அவள் சஞ்சுவை” என்று நடுங்கிய குரலில் சொல்ல, மீரா கதறி அழுதாள்.
உத்ராவுக்கும் அழுகை முட்டிக்கொண்டு வர, ஆனால் இது அழுக சரியான நேரம் இல்லை என்று உணர்ந்தவள்,
மீராவிடம், “ப்ளீஸ் மீரா, அழுகாத…” என்று சமன்படுத்த, துருவ் அவளிடம்
“சஞ்சுவை அவளால ஒன்னும் பண்ண முடியாது மீரா… அப்படி அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவளை எப்படியும் உயிரோட விடமாட்டோம்னு அவளுக்கு நல்லாவே தெரியும். சஞ்சு உயிரோட இருக்குறவரைக்கும் தான் அவளுக்கு பாதுகாப்பு.” என்று சொல்ல, அவள் “அண்ணா” என்று அவன் மேலேயே சாய்ந்து அழுதாள்..
அவன் பரிவாய் அவள் தலையை வருடி கொடுத்து, “நீ முதல்ல அழுகைய நிறுத்து…” என்று சொல்ல, அவள் கேட்கவே இல்லை.
அர்ஜுனும், “மீரா கொஞ்சம் அமைதியா இரு… சஞ்சு கிடைச்சுடுவான்.” என்று சொல்ல அஜய், விதுன், சுஜி மூவரும் அவளை சமாதானப்படுத்தினர்.
உத்ரா, மீராவை இழுத்து, “ப்ச் இப்போ வாயை மூட போறியா இல்லையா… இப்படி நீ அழுதுகிட்டே இருந்தா கடத்துனவங்களே உன்கிட்ட வந்து குடுத்துட்டு போய்டுவாங்களா. வாயை மூடிக்கிட்டு போய் உக்காரு” என்று கத்த, அவள் அரண்டே விட்டாள்.
அர்ஜுன், “உதி அவளே” என்று பேச வர, “என்ன உனக்கும் தனியா சொல்லணுமா? அவளை வீட்டுல விட்டுட்டு வா…” என்று அவனுக்கு அழுத்தமாய் கட்டளை இட, மீரா அழுகையை அடக்கிக்கொண்டு “இல்ல நான் இங்கயே இருக்கேன்” என்றாள் கேவலுடன்.
“நீ இங்க இருக்குறதுனா, போய் தனியா அழுதுட்டு வா. உன் அழுகை சத்தம் எனக்கு கேட்டுச்சு…” என்று மேலும் உத்ரா மிரட்ட, அவள் பாவமாய் அர்ஜுனை பார்த்தாள்.
அர்ஜுன், எதுவும் பேசமுடியாமல் முழிக்க, துருவ் “போதும் விடு…” என்று உத்ராவிற்கு கண்ணை காட்ட, அவளும் அமைதியாகி விட்டாள்.
”ஷப்பா இப்போதான் தெரியுது, ஏன் துருவ் இவள்கிட்டே சுள்ளு சுள்ளுன்னு விழுகுறான்னு.. இவளை இப்படித்தான் கண்ட்ரோல் பண்ணமுடியும் போல’ என்று நினைத்தவளுக்கு துருவ் பேசியது ஒரு தைரியத்தை கொடுத்தது. எப்படியும், சஞ்சுவை காப்பாற்றிவிடலாம் என்ற உறுதியும் பிறந்தது.
பின், அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் நிற்க, செக் போஸ்டிலும் யாரும் அகப்படவில்லை.
வெகு நேரம் அங்கேயே நின்றிருக்க உத்ரா, மீராவிடம், “யாரு கடத்துனதுன்னு பார்த்தியா?” என்று கேட்க, கண்ணீருடன் இல்லை என்று தலையாட்டினாள்.
துருவ் “இங்க சந்தேகப்படுற மாதிரி யாரையாவது பார்த்தியா. யாராவது உன்னை ஃபாலோ பண்ற மாதிரி இருந்துச்சா…” என்று கேட்க, அவள் அதற்கும் இல்லை என்று தலையாட்டினாள் விசும்பலுடன். உத்ரா அவளை முறைக்கவும், வாயை மூடிக்கொண்டாள்.
சுஜிதான் “போதும், உதி அவளை ரொம்ப மிரட்டாத. இந்த நேரத்துல அழுகை தான் வரும். உன்னை மாதிரி கல்லு மாதிரியா இருப்பாள்…” என்று அதட்டி விட்டு, மீராவுக்கு தண்ணீரை வாங்கிக் வந்து கொடுத்தாள்.
உத்ரா பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டு துருவை பார்க்க, அவன் அர்ஜுனிடம், “நீயும் யாரையும் பார்க்கலையா அர்ஜுன்…” என்று கேட்க, அப்பொழுது தான் மீராவுக்கு அர்ஜுன் எப்படி சரியாக அங்கு வந்தான் என்றே தோன்றியது.
“ஆமா அர்ஜுன் அப்போ நீங்க எப்படி இங்க வந்தீங்க…?” என்று கேட்க,
துருவே “அவன்தான், காலைலயும், சாய்ந்தரமும், உங்க ரெண்டு பேருக்கும் பாடி கார்டா உங்க பின்னாடியே தான் வருவானே…” என்றவன் அர்ஜுனிடம் திரும்பி,
“உன் கண்பார்வைல இருக்குற நால தான் நான் கார்ட்ஸ் கூட போடல.
. நீயும் எப்படி பார்க்காம இருந்த அர்ஜுன்” என்று கேட்க, அவனுக்கு தான் ஐயோ வென்றிருந்தது.
எப்பொழுதும் சரியாக வந்துவிடுபவனுக்கு இன்று எனப் பார்த்து, வேலை நெட்டி முறித்தது.
அப்படியும், அதை ஒதுக்கி விட்டு அவன் வருவதற்குள், இப்படி நடந்து விட்டது, என்று கூற, மீராவுக்கு தான், அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாய் இருந்தது. அர்ஜுனை, கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.
மற்றவர்கள் ‘எங்களுக்கு கூட தெரியாம இந்த வேலைய பாத்தியாடா’ என்று பார்க்க, உத்ரா அர்ஜுனை தீயாய் முறைத்தாள்.
இவனுக்கு தான் நான் முக்கியம் இல்லையே அப்பறம் எதுக்கு இவன் அர்ஜுன் கூட நெருக்கமா இருக்கான், என்று வீம்பாய் நினைத்தவள், வலுக்கட்டாயமாக மனதைத் திருப்பி, சஞ்சுவை காப்பாற்றுவதை பற்றி யோசிக்கலானாள்.
கிட்டத்தட்ட, சஞ்சு கடத்தட்டப்பட்டு நான்கு மணி நேரம் ஆனது, இதற்கிடையில் வீட்டில் அனைவருக்கும் தெரிந்து அவர்கள் பதட்டமானது மட்டும் தான் மிச்சம்.
அந்த ஏரியாவில் சிசிடிவியும் இல்லாததால், என்ன நடந்தது, யார் வந்தார்கள் என்று கூட கண்டறிய முடியவில்லை.
காஞ்சனா பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் கால்களும் எதுவும் வரவில்லை… நேரம் ஆக ஆக எல்லாருக்கும் பதட்டம் அதிகம் தான் ஆனது.
விதுன் “அந்த ரிஷியும் சைதன்யாவும் எங்க இருக்காங்கனு பார்க்கலாமா” என்று கேட்க,
துருவ் “அவங்களை பத்தியும் எந்த டீடெயில்ஸும் கிடைக்கல…” என்று சொல்ல,
அஜய், “எந்த க்ளுவுமே இல்லாமல் எப்படி கண்டுபிடிக்கிறது” என்று தலையில் கை வைத்தான்.
மீராவுக்கு தான் அழுகை பொத்து கொண்டு வந்தது. அர்ஜுன் மீராவிடம், “மீரா, ஏதாவது யோசிச்சு பாரு… உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா.” என்று கேட்க, அவளும் யோசித்தாள்.
உத்ரா, “இல்ல, கடைக்காரன் கிட்ட பேசும்போது, கார் ஏதாவது உன்னை கிராஸ் பண்ணி போச்சா. கண்டிப்பா ஏதாவது ஒரு சத்தமாவது உனக்கு கேட்ருக்கணும்ல மீரா” என்று கேட்க,
அவள், “இல்ல உத்ரா… நான் கடைக்காரன்கிட்ட காசு குடுக்கும் போது, எனக்கு எந்த சத்தமும் கேட்கல. என் பக்கத்துல தான் நின்னுகிட்டு இருந்தான். ஒரு 2 நிமிஷம் கூட இருக்காது, திரும்பி பார்க்கும்போது அவனை காணோம்.” என்று சொல்ல
துருவ் யோசித்த படியே, மீராவிடம், “நீ பணம் குடுத்துட்டு திரும்பும் போது, சஞ்சுவை காணோம். பட் திரும்பும்போது, வெஹிகிள் எதுவுமே க்ராஸ் ஆகலையா” என்று கேட்க, மீராவுக்கு அழுகையை வந்தது.
“இல்ல அண்ணா எனக்கு எதுவுமே தெரியல… அங்க யாருமே இல்ல” என்று கதறி அழுதாள்.
அர்ஜுன், “சரி மீரா, கண்டுபிடிச்சுடலாம் அழுகாத” என்று சொல்ல,
அவள் “எப்படி அர்ஜுன், எதுவுமே தெரியாம எப்படி கண்டுபிடிக்கிறது. எனக்கு பயமா இருக்கு” என்று நடுங்க, எல்லாரும் குழம்பி போய் இருந்தனர்.
அப்பொழுது உத்ராவிற்கு அன்நோன் நம்பரில் (unknown நம்பர்) இருந்து போன் வர, அவள் போனையே பார்த்து, மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்தாள்.
துருவ் “கண்டிப்பா காஞ்சனாவா தான் இருக்கும். இல்ல அவனை கடத்துனவனா இருக்கும்.” என்று சட்டென்று போலீசுக்கு போன் செய்து, இவள் போனை ட்ராக் செய்ய சொன்னான்.
உத்ரா போனை ஸ்பீக்கரில் போட, துருவ் நினைத்தது போலவே அது காஞ்சனா தான்.
“என்ன உத்ரா, உன் அண்ணன் மகனை காணோம்னு முழிச்சுகிட்டு இருக்கியா… அவன் என்கிட்ட தான் பத்திரமா இருக்கான்… இப்போ வரை.
ஆனால் இனிமே எப்படினு தான் தெரியாது” என்று நாராசமாக சொல்ல, உத்ரா, கொலைவெறியில் இருந்தாள்.
துருவ் கடுங்கோபத்தில் “வேணாம் காஞ்சனா… அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு. உன் சாவு ரொம்ப கொடூரமா இருக்கும்…” என்று உறும,
காஞ்சனா “யாரு என் அண்ணன் மகனா பேசுறது… சு சு… முதல்ல, நீ உன் நண்பன் பையனையும், உன் ஆசை காதலியையும் காப்பாத்த பாரு… அப்பறம் என்னை கொலை பண்றதை பத்தி பார்க்கலாம்.” என்று பாவப்படா,
உத்ரா, “உனக்கு என்ன வேணும்” என்று பல்லைக்கடித்து கொண்டு கேட்டாள்.
அவள், “எனக்கு நீ தான் வேணும்… உன்னை காப்பாத்த தான, துருவ் அவ்வளவு பண்ணுனான். இப்போ, அவன் இருக்கும் போதே, உன்னை ஒண்ணும் இல்லாம ஆக்கணும்.” என்று கத்தியவள்,
பின், “நீ இங்க வரணும்..
நீ மட்டும். அப்படி நீ வந்தா, இந்த பையனை விட்டுடறேன்…” என்று சொல்ல, துருவ் வேண்டாம் என்று தலையசைத்தான்.
உத்ரா, “எங்க வரணும்னு சொல்லு நான் வரேன்… ஆனால் சஞ்சுவுக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது” என்று கண்டிப்பாய் கூற,
“உனக்கு இன்னும் 48 மணி நேரம் டைம் தரேன். அதுக்குள்ளே நான் இருக்குற இடத்தை கண்டுபிடிச்சு, நீ இங்க வந்தா.
இவன் முழுசா இருப்பான். உனக்கு க்ளுவும் குடுத்துருக்கேன். முடிஞ்சா கண்டுபிடிச்சு வா. இதுல போலீஸ் தலையிட்டுச்சு இப்பவே இவனை கொன்னுடுவேன். 48 மணி நேரத்துல ஒரு நிமிஷம் தாண்டுனாலும், இவன் ஒவ்வொரு பார்ட்ஸையும் கழட்டி உனக்கு பார்சல் பண்ணுவேன்” என்று நக்கலாய் கூற, அதனைக் கேட்டு, மீரா வெடித்து அழுதாள்.
மற்றவர்களுக்கும் உள்ளுக்குள் நடுங்கியது தான். உத்ரா, கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்தி கொண்டு, அவளிடம் பேச வர,
காஞ்சனா, “48 மணி நேரத்துக்குள்ள என்னை நீ கண்டுபிடிச்சா நம்ம மீட் பண்ணலாம்” என்று விட்டு போனை வைத்து விட்டாள்.
துருவ்க்கு போன் செய்த போலீஸ் காலை ட்ராக் செய்ய முடியவில்லை என்று சொல்லிவிட்டு, மேலும், தாங்களும் ரகசியமாய் அனைத்து இடங்களிலும் தேடுவதாய் சொன்னது.
உத்ரா, எந்த க்ளுவும் இல்லாமல் எப்படி கண்டுபிடிக்கிறது… என்று தளர்ந்து போய் அமர, துருவ் “கண்டிப்பா ஏதாவது க்ளூ இருக்கும்… அவனை கடத்துன இடத்துல போய் பார்க்கலாம்” என்று சொல்ல, அனைவரும் அங்கு சென்றனர்.
ஆனால் அங்கே எந்த க்ளுவும் கிடைக்கவில்லை.
தேடி தேடி அலுத்து போகையில் சுஜி சட்டென்று, “உதி எனக்கு ஒரு ஐடியா. மீரா தான் ரோடுப்பக்கம் பார்க்காம திரும்பி நின்னாள். ஆனால் அந்த பலூன் வித்துக்கிட்டு இருந்தவன் ஏதாவது பார்த்துருக்கணும்ல. இல்ல, அவனும் கூட அவளோட ஆளா இருந்துருக்கலாம்ல” என்று சொல்ல,
விது “வாழ்க்கையிலேயே இன்னைக்கு தான் உன் மூளையை யூஸ் பண்ணிருக்க” என்று நக்கலடித்ததும் சுஜி அவனை முறைத்தாள்.
துருவ் உடனடியாய், அந்த பலூன் வியாபாரியை தேட போகலாம் என்று சொல்லிவிட்டு, அஜய் விதுனிடம் “பக்கத்து சர்ரௌடிங்ஸ்ல சந்தேகப்படற மாதிரி ஏதாவது பில்டிங் இருக்கானு பாருங்க” என்று அனுப்ப, இரவு நேரம் ஆனதால், அர்ஜுனை சுஜியையும் மீராவையும் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு செல்ல சொன்னான்.
மீரா நானும் வருகிறேன் என்று அடம்பிடிக்க, “அந்த கடைக்காரனை கூட்டிட்டு வந்து உன் முன்னாடி நிறுத்துறேன் மீரா, இப்போ வீட்டுக்கு போ.” என்று ஒரு வழியாய் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டான்.
பின், அவன் உத்ராவை அழைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் செலவழித்து, அந்த பலூன் வியாபாரியின் முகவரியை கண்டுபிடித்தான்.
அவனின் வீடு கடல் அருகில் ஒரு குப்பத்தில் இருந்தது. நெருக்கி நெருக்கி இருந்த வீடுகளில், இருவரும் ஒருவாறாக, அவன் வீட்டைக் கண்டறிந்து உள்ளே போக, அங்கு நைந்த ஒரு பாவாடையில் பால் மணம் மாறாத ஒரு சிறு பெண் தான் இருந்தாள்.
“அந்த கடைக்காரனின் மகளாக இருக்கலாம்…” என்று உத்ரா துருவிடம் சொல்ல,
அவன் “அப்பா எங்கம்மா” என்று கேட்டான்.
அந்த பெண் திருதிருவென முழித்து விட்டு, “அப்பா, கடல் கிட்ட, போட்ல தான் இருப்பாங்க” என்று சொல்லிவிட்டு, “வாங்க காட்டுறேன்…”என்று அழைத்துப் போனாள்.
அங்கு ஒரு படகைக் காட்டி, “இதுல படுத்துருப்பாரு… ஆனால் குடிச்சுட்டு தூங்குறனாள எந்திரிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு, ஓடி விட்டாள்.
உத்ரா, “சுத்தம், இவன் குடிச்சுருந்தா எப்படி துருவ் இவன் கிட்ட விவரம் கேட்குறது” என்று புரியாமல் கேட்க,
துருவ் “குடிச்சதை தெளியவச்சுட்டு தான்” என்று விட்டு, அவனை அலேக்காக தூக்கி, கடலில் அவன் தலையை முக்கினான்.
அதில் அவன் உறக்கம் கலைந்து கத்த, துருவ் அவன் வாயைப் பொத்தி, “கத்துன அப்படியே கடல்ல தூக்கி போட்டுடுவேன்…” என்று மிரட்ட, அதில் அவனுக்கு மொத்த போதையும் இறங்கியது.
” சார் சார் யாரு சார் நீங்க…” என்று பதறிப் போய் கேட்க, துருவ் நேராக விஷயத்திற்கு வந்தான்.
“இன்னைக்கு ஒரு பொண்ணு ஒரு சின்ன பையனோட வந்து உன்கிட்ட பலூன் வாங்குனாளா” என்று கேட்க, அவன் தலையை சொரிந்து,
“சார் நிறைய பேர் என்கிட்ட வாங்குனாங்க. நீங்க யாரை கேக்குறீங்க” என்று கேட்க, உத்ரா, அந்த பள்ளியின் பெயரை சொல்லி, அதன் அருகில் வாங்கியவளை கேட்க, அவன் சிறிது யோசித்து விட்டு, “ஆமா” என்று சொன்னதும்,
துருவ் “அந்த பையன், நீ அந்த பொண்ணுகிட்ட காசு வாங்கும் போது தான் கடத்தப்பட்ருக்கான். அவனை கடத்தும் போது நீ அவனை கண்டிப்பா பாத்துருக்கணும். இல்ல பாத்தும் பார்க்காத மாதிரி இருந்துருக்கும்” என்று கை முட்டியை மடக்க,
அவன் மிரண்டு “சார் எனக்கு எதுவும் தெரியாது சார்… அப்படி யாரையுமே நான் பார்க்கல” என்று சொல்ல, அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தான்.
அதில் அவன் “சார் சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார்… என் பொண்ணு மேல சத்தியமா சார்” என்று சொல்ல, உத்ராவிற்கு அவன் போய் சொல்கிறான் என்று தோன்றவில்லை.
அவனை துருவ் மேலும் அடிக்கப் போக, அவனை தடுத்து, “விடுங்க துருவ்…” என்று விட்டு, சோர்வாய் திரும்பி நடக்க, அந்த பலூன் வியாபாரி ஏதோ யோசித்து விட்டு, “சார்” என்று அழைத்தான்.
பின் அவனே, “அந்த பையனை கடத்துனதை நான் பார்க்கல. ஆனால் அந்த பொண்ணு என்கிட்ட பணம் குடுத்து நான் சில்லறை குடுக்கும் போது, அந்த பையன் கொஞ்சம் தள்ளி நடந்து விளையாடிட்டு தான் இருந்தான்.
அங்க ஒரு சின்ன சந்து இருந்துச்சு, அதுக்குள்ள தான் அவன் போன மாதிரி இருந்தது. ஆனால் நான் உடனே அங்க இருந்து கிளம்பிட்டேன்…
வேற எதுவும் எனக்கு தெரியல சார்” என்று பாவமாய் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்து கொண்டனர்.
பின் திரும்பி நடக்கப் போகையில் உத்ரா மீண்டும் அந்த பலூன் விற்பவனின் அருகில் வந்து, பளாரென அறைந்து, அவனுக்கு சிறிது பணத்தை கொடுத்தாள்.
அவன் பேந்த பேந்த முழிக்க, “இனிமே நீ குடிக்கறதை நான் பார்த்தேன். நிஜமாவே வந்து உன்னை கடல்ல போட்டுடுவேன். உன் பொண்ணுக்கு நல்ல டிரஸ் வாங்கிக்குடுத்து ஒழுங்கா படிக்க வை… புரியுதா” என்று கர்ஜிக்க, அவன் பேசக்கூட முடியாமல் தலையாட்டினான்.
துருவும், உத்ராவும், வேகமாக சஞ்சு கடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்து கொண்டு இருந்தனர்.
உத்ரா, “அந்த சந்துக்குள்ள இருந்து தான் அவனை கடத்திருக்கணுமோ” என்று கேட்க, துருவ் “அப்படித்தான் இருக்கணும்… அங்க போய் தேடி பார்த்தா ஏதாவது க்ளூ கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்று சொல்ல, அவளும் இறுக்கமாய் ம்ம் என்று தலையாட்டினாள்..
ஓரிடத்தில் காரை நிறுத்திய துருவ் “அழு உதி” என்றான்.
உத்ரா அவனைப் புரியாமல் பார்க்க, “எவ்ளோ நேரம் அழுகையை அடக்குவ அழுதுரு. அழுது முடிச்சுட்டு… ஃபிரீ மைண்டட் ஆ யோசி” என்று சொல்ல, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த பயத்தையும், அழுகையையும் கொட்டினாள்.
துருவிற்கும் சஞ்சுவுக்கு என்ன ஆனதோ என்ற பயம் மனதை அழுத்த, அவனுக்கும் கண்ணீர் வந்தது..
அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி கொள்ள, மனதில் இருந்ததை அழுகையாய் வெளிப்படுத்தியதா? இல்லை ஒருவர் மற்றவர்க்கு தந்த அணைப்பு தந்த தைரியமா என்று தெரியவில்லை. இருவர் மனதும் இப்போது தெளிவாக இருந்தது. ஒரு சுறுசுறுப்போடு இருவரும், அங்கு வந்து சேர்ந்தனர்.
இங்கு, அர்ஜுன் மீராவை கூட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று அவளை சமாதானப்படுத்தினான்.
அவள், “சஞ்சு கிடைச்சுருவான்ல அர்ஜுன்? அவன் கிடைச்சுட்டா, நான் நான் உங்ககிட்டயே குடுத்துட்றேன். நீங்களே பார்த்துக்கோங்க. ஆனால் அவனை கண்டுபிடிச்சுடுங்க அர்ஜுன் ப்ளீஸ். உங்களை இழந்த மாதிரி நான் அவனையும் இழக்க விரும்பல அர்ஜுன்” என்று தன்னை மறந்து அழுக, அர்ஜுனுக்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
அர்ஜுன், அவளை இறுக்கி அணைத்து, “அவன் உனக்கு சொந்தமானவன்டா. நான் அவனை உன்கிட்ட” என்று சொல்ல வருகையில், விதுன் அங்கு வந்தவன் இவர்களின் நிலையை பார்த்து விட்டு,
அஜயிடம், “பாரு பங்கு இவன் இதான் சாக்குன்னு அவளை கட்டிபுடுச்சுக்கிட்டு இருக்கான்… ஏன் தள்ளி நின்னு சமாதானப்படுத்துனா அவன் கேட்கமாட்டாளாமா” என்று கேலி செய்ய,
அஜய், “விடுடா, சஞ்சு கிடக்கிற வரைக்கும் தான் அவனுக்கு இந்த ஆஃபர். அப்பறம் அண்ணி மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிடுவாங்க” என்று முணுமுணுக்க, சுஜி, இருவர் முதுகிலும் சப்பென்று அடைத்தாள்.
“உங்களை துருவ் ப்ரோ வெளிய போய் பார்க்க சொன்னாங்கள்ல, இங்க என்னடா, பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று அவளும் உள்ளே எட்டி, அங்கு நடப்பதை பார்த்ததும்,
“இதை போய் ஏண்டா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று முறைத்தாள்.
அஜய், “ம்ம் தலையெழுத்து இதை பார்க்கணும்னு இருக்கு… அவன் கார் சாவியை எடுத்துட்டு வந்துட்டான்” என்று கதவை தட்டி, அவனிடம் கார் சாவியை வாங்கிவிட்டு வெளியில் வந்தனர்.
சுஜியும் நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி, அவளும் உடன் சென்றாள்.
செல்லும் வழியில், விதுன் “அஜய் எனக்கு இந்த இடத்தை பார்த்தா டவுட் ஆ இருக்கு…” என்று சொல்ல, அந்த புதருக்கு அருகில் சென்று பார்த்தவர்கள், அங்கு ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து அதை நோக்கி சென்றனர்.
மெதுவாய் அடி மேல் அடி வைத்து மூவரும் சத்தம் வரும் திசையில் செல்ல, அங்கு, திருட்டுத்தனமாய் ஒரு ஜோடி காதல் செய்து கொண்டு இருந்தது.
அதனைப் பார்த்து விட்டு, அஜயும், சுஜியும் விதுனை முறைக்க, அவன் பாவமாக, “கடத்தல் பண்ற இடத்துல எல்லாம் இதுங்க காதல் பண்ணுனா. அப்பறம் கடத்தலுக்கு என்ன பங்கு மரியாதை” என்று கேட்க, அவனை குனிய வைத்து கும்மி விட்டு மீண்டும், பயணத்தை தொடர்ந்தனர்.
இப்போது சுஜி, ஒரு இடிந்த மண்டபத்தை பார்த்து, “பங்கு எனக்கு இங்க தான் டௌட் ஆ இருக்கு. உள்ள போய் பாப்போமா” என்று கேட்க, மூவரும், உள்ளே சென்றனர்.
அந்த இடம் பார்க்கவே திகிலாக இருந்தது. கடும் இருட்டு வேறு… போனில் லைட்டை அடித்து கொண்டு மூவரும் செல்ல,
அங்கு ஒரு கருப்புப் போர்வை அணிந்த ஒரு உருவம், சடாரென அவர்கள் முன்னே வர, விது “ஐயோ பேய்” என்று கத்தியதில் ஆ வென கத்திக்கொண்டே மூவரும் ஆளுக்கொரு திசையில் ஓடினர்.
அத்தியாயம் 22
அந்த உருவத்தைப் பார்த்து, பேய் என்று பயந்து ஆளுக்கொரு திசையில் ஓடி, தூணின் பின்னால் சென்று நின்று மெதுவாய் எட்டிப் பார்த்தனர்.
அந்த உருவம், மெல்ல, போர்த்தியிருந்த சால்வையை விலக்கி, நடுங்கிய கைகளுடன், கழுத்தில் போட்டிருந்த தாயத்தை பிடித்துக் கொண்டு, ஏதோ ஜெபிக்க ஆரம்பித்தது.
மூவரும் நன்கு உற்று பார்த்த போது தான் தெரிந்தது. அது, அந்த மண்டபத்தின் வாட்ச்மேன் என்று.
அவனை இவர்கள் பேய் என்று நினைக்க, அந்த வாட்ச்மேன் இவர்களை பேய் என்று நினைத்து, கண்ணை மூடி நடுங்கி கொண்டிருந்தார்.
அதன் பிறகே, மூவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு அந்த நபரின் முன்னால் நிற்க, இப்போது அந்த வாட்ச்மேன் “பேய்” என்று அலறினார்.
அஜய், “அட சே. நிறுத்து. யோவ் ஏன்யா இப்படி வந்து எங்களை பயமுறுத்துனதும் இல்லாமல், எங்களையே பேயுன்னு வேற சொல்றியா” என்று திட்ட,
விது “ஆமா கீழ பாரு எங்களுக்கு காலு கூட இருக்கு…” என்றதில், அவன் ஒரு கண்ணை மட்டும் திறந்து, ஆண்கள் இருவரையும் ஆராய்ச்சி செய்தவன், சுஜி பரவ பரவ மிடி போட்டு இருந்ததைப் பார்த்து, “இது பேய் இது பேய்” என்று அலறினார்.
சுஜி, “யோவ்… நல்லா பாருய்யா எனக்கும் கால் இருக்கு” என்று பாவாடையைத் தூக்கி காட்டியதும் தான் அவன் நம்பினான்.
அஜய், “நீ பேய்ன்னு இவனுக்கு கூட தெரியுது பஜ்ஜி” என்று அவளிடம் முணுமுணுக்க, சுஜி அவனை முறைத்து விட்டு அமைதியாய் இருந்து விட்டாள்.
பின், அவனிடம் சஞ்சுவைப் பற்றி விவரம் கேட்க, “அவர் நான் காலைல இருந்து இங்க தான் தம்பி இருக்கேன். இங்க யாரும் வரல. அப்டிலாம் இங்க கடத்தி எல்லாம் வைக்க முடியாது. அந்த மாதிரி எதுவும் நடக்கக்கூடாதுனு தான் இங்க என்னை காவலுக்கு போட்ருக்காங்க…” என்று சொல்லிவிட்டு,
“மனுச்சுடுங்க தம்பி, எனக்கு இருட்டுனா பயம்.. எப்பவும் வர்ற இன்னொருத்தன் இன்னைக்கு வரல, அதான் பயந்துட்டேன்.” என்றதும், மூவரும் சரி என்று வெளியே வந்தனர்.
அப்பொழுது துருவ் போன் செய்து, ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது என்று சஞ்சுவை கடத்திய இடத்திற்கு வர சொல்ல, மூவரும் அங்கு சென்றனர்.
பலூன் வியாபாரி சொன்னதை கேட்டு, அந்த இடத்திற்கு வந்து பக்கத்தில் சந்து இருக்கிறதா என்று பார்த்த துருவும் உத்ராவும், ஒருவர் மட்டும் போகக்கூடிய, ஒரு குட்டி சந்து ஒன்று அங்கு இருந்ததை கண்டனர்.
இங்கிருந்து தான் அவனை கடத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், அங்கு சென்று தேடிப் பார்க்க, அங்கு ஒரு பர்ஸ் மட்டும் இருந்ததை கண்டனர்.
உத்ரா, “இந்த பர்ஸ் தான் க்ளூவா துருவ்” என்று கேட்க, அவன் “இருக்கலாம்” என்று அதனை திறந்துப் பார்க்க, அதில் ஒருவனுடைய வோட்டர் ஐடி இருந்தது.
மேலும், அதில் கொஞ்சம் பணமும், சினிமா டிக்கெட்டும் இருந்தது. உடனே அதில் இருந்த முகவரிக்கு ஐவரும் விரைந்தனர்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, அந்த முகவரியை கண்டறிந்து காலிங் பெல்லை அடிக்க, இரவு நேரம் ஆனதால், தூக்க கலக்கத்தில் ஒரு கர்ப்பிணி பெண் தான் கதவைத் திறந்தாள்.
அவளைப் பார்த்ததும், எல்லாரும் யோசனையாய் முகத்தை சுருக்க, அவள் சற்று மிரண்டு, கதவை முழுதாய் திறக்காமல், “யாரு நீங்கல்லாம்… உங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்க, உத்ரா, “இங்க சதீஸ் யாரு” என வினவ, அவள் மேலும் பயந்து “என் வீட்டுக்காரர் தான்… எதுக்கு கேட்குறீங்க” என்று முழித்தாள்.
துருவ் அந்த பர்ஸை அந்த பெண் முன் நீட்டி, “இது உங்க ஹஸ்பண்ட் ஓடதுதான” என்று கேட்க, அவள் விழி விரித்து, “ஆமா, இந்த பர்ஸ் உங்களுக்கு எப்படி கிடைச்சுது…” என்று ஆச்சர்யமாய் கேட்க,
உத்ரா, “ம்ம் உங்க வீட்டுக்காரர், ஒரு பையனை கடத்தல் பண்ணுன இடத்துலதான்” என்றாள் நக்கலாக.
அவள் அரண்டு, “என்ன உளறுறீங்க… அவர் அப்படிலாம் பண்ணமாட்டாரு.” என்று மறுக்கையில், துருவ் “உன் புருஷனை வெளிய வரச்சொல்லு..
அவன் என்ன பண்ணுனானு அவன்கிட்டயே கேட்டுக்குறோம்” என்று அதட்டினான்.
அவளோ “அவரு இங்க இல்ல. வேலை விஷயமா,ரெண்டு நாளைக்கு முன்னாலேயே ராஜஸ்தான் போய்ட்டாரு. இப்படி யாருமில்லாத நேரத்துல பிரச்சனை பண்ணுனா நான் போலீசை கூப்புடுவேன்” என்று பயந்து கொண்டே மிரட்ட,
உத்ரா, “என்ன கதை விடுற… அவன் ராஜஸ்தான் போயிருக்கான்னா. இந்த பர்ஸ் பெசன்ட் நகர்ல எப்படி கிடைக்கும்” எனக் கோபமாய் கேட்டாள்.
அந்த பெண், “இந்த பர்ஸை ஒரு வாரத்துக்கு முன்னாடி எவனோ பிக் பாக்கெட் அடிச்சுட்டான். நாங்க போலீஸ்ல கூட காம்ப்ளயின் குடுத்துருக்கோம். நீங்க வேணும்னா கேட்டுப்பாருங்க” என்று சொல்ல, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அவள் பொய் சொல்வது போலவும் தெரியவில்லை.
உத்ரா, சோர்வாக “நீ சொல்றது உண்மைதானா. அந்த சதீஸ் இப்போ இங்க இல்லையா “என்று கேட்க, அவள் “ஆமா, அவரு ராஜஸ்தான்ல தான் இருக்காரு. நீங்க கூட போன் பண்ணி கேளுங்க” என்று சொல்ல, துருவ் அவன் இருக்கும் இடத்திற்கு போன் செய்து, அவன் அங்கு தான் இருக்கிறான் என்று உறுதிப்படுத்திக்கொண்டான்.
பின், அந்த பெண்ணிடம் “சாரி மா. ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்” என்று சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று மற்றவரிடம் கண்ணை காட்டினான். இப்படியாக காஞ்சனா சொன்ன நேரத்தில் 7 மணி நேரம் கடந்தது.
அஜய், “சே! தேவை இல்லாம, அங்க போய் நம்ம டைம் வேஸ்ட் பண்ணிட்டோமோ. இப்படி சுத்தல்ல விட்டுட்டாள்” என்று புலம்ப,
துருவ் மீண்டும், அந்த பர்ஸை எடுத்து, அதில் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க, அதில் இருந்த சினிமா டிக்கெட்டின் பின் பகுதில் ஒரு போன் நம்பர் இருந்ததை கவனித்தான்.
அதை அவன் உத்ராவிடம் காட்ட, அவள் “இதான் க்ளுன்னு நினைக்கிறேன்” என்றதில், அவன் அந்த நம்பரை ட்ராக் செய்ய சொல்லிவிட்டு, அந்த எண்ணிற்கு போன் செய்ய, அதனை எடுத்த ஒருவன், “யாரு” என்று கேட்டதும், துருவ் “நீங்க யாரு சார்” என்று பேச்சுகொடுத்தான்.
அவன் “ஹெலோ நீங்க தான் போன் பண்ணுனீங்க நீங்க தான் யாருன்னு சொல்லணும்” என்று திமிராய் பேச, துருவும் அவனிடம் இடைக்காக பேசினான்.
இதற்கிடையில் அவன் இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய, போனை கட் செய்து விட்டு, அவன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர். அங்கு சென்று அவனை கண்டுபிடித்து துருவ் வெளு வெளுவென வெளுக்க, அவனி “சார்… யாரு சார் நீங்க எதுக்கு என்னை அடிக்கிறீங்க?” என்று கேட்க,
துருவ் “அந்த சின்ன பையனை எதுக்குடா கடத்துன” என்று வினவியதும், அவன் பேந்த பேந்த முழித்து விட்டு,
“சார் எனக்கு எதுவும் தெரியாது.” என்று ஓட ஆரம்பித்தான்.
துருவ் அவனை துரத்திப் பிடித்து, மீண்டும் அடிக்க,
“சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது. ஒருத்தவங்க போன் பண்ணி, இந்த பர்ஸை அந்த இடத்துல போட சொன்னாங்க. அவ்ளோதான் எனக்கு தெரியும் வேற எதுவும் தெரியாது சார்” என்று கெஞ்ச, அவர்கள் பின்னே ஓடி வந்த உத்ராவும், ஒன்றும் புரியாமல், துருவைப் பார்த்தாள்.
அவன் “ப்ச் அவள் நம்மளை ரொம்ப குழப்ப ட்ரை பண்றாள்.” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, ரிஷி உத்ராவிற்கு போன் செய்தான்.
அவள் குழப்பமாக போனை எடுக்க, அவனோ “எங்கடி என் பையன்? எங்க வச்சுருக்க அவனை. உயிரோட தான் வச்சுருகியா. இல்லை சொத்துல அவனுக்கும் பங்கு குடுக்கணுமேன்னு மொத்த குடும்பமும் சேர்ந்து அவனை கொன்னுட்டிங்களா” என்று காச்மூச் என்று கத்த,
உத்ரா, “என்ன உளறுற ரிஷி. நான் என்ன பண்ணுனேன் அவனை… அந்த காஞ்சனா தான் அவனை கடத்தி வச்சுக்கிட்டு எங்களை அலைய விடுறா.. உனக்கு அவள் எங்க இருக்கானு தெரியும்ல. தயவு செஞ்சு அவள் இருக்குற இடத்தை சொல்லு” என்று கெஞ்சலாய் கேட்டாள்.
“சும்மா நடிக்காத, நீயே அவனை எங்கயோ மறைச்சு வச்சுக்கிட்டு, அம்மாவை கொலை பண்ணுவேன்னு மிரட்டி தலை மறைவா இருக்க வச்சுட்ட. என்னையும் ஒரு இடத்துல அடைச்சு போட்டு வச்சு என்னையும் சேர்த்து கொல்ல பார்த்திருக்க” என்று தன் போக்கில் பேச, அவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.
துருவ் “ரிஷி. முட்டாள் தனமா பேசாத, இங்க நாங்க சஞ்சுவை காணோம்னு தான் தேடிகிட்டு இருக்கோம். உனக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லு” என்று அவன் பங்கிற்கு கேட்க,
அதற்கு ரிஷி “டேய் துரோகி..நீயும் அவள் கூட கூட்டு தானடா. அவளை பார்க்கவும் இத்தனை வருஷமா பழகுன எங்களுக்கு துரோகம் பண்ணதும் இல்லாம, இத்தனை வருஷமா என் பையனை என்கிட்டே இருந்து பிரிச்சு வச்சுட்டீல” என்று அவனிடம் கோபம் கொள்ள, உத்ராவுக்கு கடுங்கோபம் வந்தது.
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது ரிஷி. ஒன்னு சொல் புத்தி இருக்கணும், இல்லை சுய புத்தி இருக்கணும். இது ரெண்டுமே இல்லைன்னா இப்படி தான் கெட்டு நாசமா போகணும்.” என்று போனை வைத்து விட்டு, சோர்வுடன் அங்கேயே அமர்ந்து விட்டாள்.
துருவ் அவள் அருகில் வந்து, “உதி, இன்னும் டைம் இருக்கு. கண்டு பிடிச்சுடலாம்… சீக்கிரமாவே..” என்று சமன்படுத்த, உத்ராவுக்கு காஞ்சனாவிடம் இருந்து இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு இங்கு வரவேண்டும் என்று குறுஞ்செய்து வந்தது. அதனை பார்த்து அதிர்ந்தவள் துருவிடம் அதனை காட்ட, அவனும் சன்னமாய் அதிர்ந்தான்.
பின், ஒரு நொடி கூட வீணாக்காமல், அவன் கையில் கிடைத்த அந்த போன் ஆசாமியை பிடித்து அடிக்க, அவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை.
சுஜிதான்,”ப்ரோ அந்த பர்ஸுல ஒரு க்ளூ இருந்துச்சு அதை வச்சு தான் இவனை கண்டுபிடிச்சோம். அப்போ, இங்கயும் எதோ ஒரு க்ளூ இருக்கணும்ல” என்று சொல்ல,
அஜய், “ஆமா துருவ், அந்த போன் நம்பர் வச்சுதான் இவனை கண்டுபிடிச்சோம். மே பி அந்த நம்பர் இருக்குற போன்ல ஏதாவது இருக்கலாம்ல” என்று ஐடியா சொல்ல, துருவ் அவனிடம் அந்த போனை வாங்கிப் பார்த்தான்.
ஆனால் அந்த போனில் எல்லாமே அழிக்கப்பட்டு இருந்தது. அந்த போன் ஆசாமியிடம், “இந்த போன்ல இருந்த கான்ட்டேக்ட், மெசஜ்ஸ் எல்லாம் எதுக்குடா டெலிட் பண்ணிருக்க. யாருடா உன்னை இப்படி பண்ணச்சொன்னது” என்று அவன் சில்லுமூக்கை உடைக்க,
அவன் பயந்து, “சார்… நான் ராஜேஷ் எக்ஸ்போர்ட் கம்பெனில தான் வேலை பார்த்துகிட்டு இருந்தேன். பத்து நாளைக்கு முன்னாடி, அங்க நான் சில பொருளை கையாடல் பண்ணிட்டேன்னு என்னை வேலைய விட்டு தூக்கிட்டாங்க.
கைல பணமே இல்லைனு வேற வழி இல்லாமல், இந்த பர்ஸை பிக் பாக்கெட் அடிச்சேன். அப்பறம் நான் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு திரும்ப வந்து உட்காரும்போது, அந்த டேபிள்ல இந்த போனும், கொஞ்சம் பணமும் இருந்துச்சு.
ஒரு பேப்பர்ல நான் அடிச்ச பர்ஸ இந்த இடத்துல போட்டுட்டு வரணும்னும், இந்த போன்ல இருக்குற சிம்மை யாரவது போன் பண்ணுனதும், கழட்டி போட்டுட்டு, போனையும் தூக்கி போட்றணுமும் எழுதி இருந்துச்சு…
அதே மாதிரி நீங்க போன் பண்ணுனதும், இதை கழட்டி போடலாம்னு தான் நினைச்சேன். ஆனால் எதுக்கு போனை தூக்கி போடணும்னு நான் போடல” என்று சொல்ல, துருவிற்கு வேண்டும் என்றே தங்களை சுத்தலில் விட தான் இப்படி செய்திருக்கிறாள் என்று புரிந்தது.
மேலும், அவன் செய்த தவறு, நேற்று சினிமாவிற்கு போய் விட்டு, அங்கு தொலைபேசி எண் கேட்டதால், தான் வைத்திருந்த போனில் இருந்த நம்பரை அவனிடம் கொடுத்து விட்டு, ஞாபகத்திற்காய், அதனை அதில் எழுதி வைத்தது தான்.
அதில்தான் இப்போது, காஞ்சனா மாட்டிக்கொண்டாள். அவள் நினைத்தது… அந்த பிக் பாக்கட்காரனை தேடியே அவர்களின் நேரம் முடிந்து விடும் என்று தான். ஆனால் இவ்வளவு ஈசியாக மாட்டுவான் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.
இப்பொழுது என்ன செய்வது என்று யோசிக்க, உத்ரா, “துருவ் போன்ல தான் எதுவும் கிடைக்கல, ஆனால் ஏன் இவனே க்ளூவா இருக்கக்கூடாது.” என்று யோசித்து சொல்ல,
துருவ் சட்டென்று “அவன் வேலை பார்த்த ராஜேஷ் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு போகலாம்” என்றதில் அங்கு விரைந்தனர்.
இன்னும் அவள் சொன்ன நேரத்தில் 55 நிமிடங்கள் தான் இருந்தது.
பரபரவென அனைவரும் அந்த கம்பெனிக்கு செல்ல, அங்கு அனைவரிடமும் விசாரித்தில் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அப்பொழுது விது தான், அனைவரிடமும் “டேய் டேய் அந்த பேய் டா” என்று கத்த, துருவ் புரியாமல் யாரு என்று பார்த்தான்.
அஜய் “ஆமா நேத்து நைட் பார்த்த அந்த வாட்ச்மேன்.” என்று துருவ் உத்ராவிடம் விவரம் சொல்லி அவரைப் பிடித்து நிறுத்தினர்.
அவர் “அடடே நீங்களா தம்பி… அந்த பையனை கண்டுபிடிச்சுடீங்களா” என்று கேட்க, அஜய் இதுவரை நடந்ததை அவரிடம் சொன்னான்.
உத்ரா, “இங்க பக்கத்துல தான் அவனை மறைச்சு வச்சுருக்கனும்னு நினைக்கிறேன். ஏதாவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க அண்ணா” என்று கேட்க,
அவர் யோசித்து விட்டு, “இங்க அப்படி எதுவும் நடக்கலைம்மா…” என்று சொல்ல, துருவ் அதில் சமாதானம் ஆகாமல், “இங்க குடோன் ஏதாவது இருக்கா” என்று கேட்க, “குடோன் இருக்கு தம்பி, ஆனால் அங்க எல்லா இடத்துலயும் கேமரா இருக்கு. தப்பு நடக்க வாய்ப்பே இல்லை” என்றார்.
துருவ் “நான் அந்த ஃபுட் ஏஜ் ஐ பாக்கணும்” என்று சொல்ல,
அவர் “இல்லை தம்பி அதெல்லாம் யார்கிட்டயும் காட்டமாட்டாங்க. அதுவும் எம்.டி ஓட அனுமதி வேணும். இன்னைக்கு வேற சார் வரல” என்று சொல்ல, அவனின் எண்ணை வாங்கி, அவசரமாய் துருவை அவனுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, அவனிடம் உதவி கேட்டான்.
அந்த ராஜேஷும் போனிலேயே அவனின் பதட்டம் உணர்ந்து, ஃபுட் ஏஜை காட்ட சொன்னான்.
பின், வீடியோவில் பார்க்க குடோனில் எந்த தவறான சம்பவமும் நடக்கவில்லை என்று உணர்ந்து எல்லாரும் தவித்து நிற்க, துருவ் கூர்மையாய் பார்த்து “ஒரு நிமிஷம் இங்க ஸ்டாப் பண்ணுங்க” என்று வீடியோவை நிறுத்த சொன்னான்.
அதில் ஒரு கேமரா மட்டும் வாசலை பார்த்து இருக்க, அங்கு நான்கு நபர்கள் நடந்து அந்த கம்பெனியை தாண்டி போவது தெரிந்தது.
உடனடியாய் முந்தைய நாள் ஃபுட் ஏஜை பார்க்க, அதில் சந்தேகப்படும் படியாய் எதுவுமே இருக்க வில்லை.
என்னடா இது இப்படி கொழப்புது என்று தன்னை நொந்தவன், அந்த வாட்ச்மேனிடம், “இங்க பக்கத்துல ஏதாவது இடம் இருக்கா” என்று கேட்க,
அவர், “இல்ல தம்பி, இங்க ஒரு பொட்டல் தான் இருக்கு. அங்க இந்த மாதிரி பசங்க வந்து அப்போ அப்போ தண்ணி அடிப்பாங்க. அது நம்ம இடம் இல்லாதனால யாரும் எதுவும் சொல்ல முடியல. இதை தாண்டி இங்க வேற எதுவும் இல்லை” என்று சொல்ல,
துருவ் விடாமல், “பக்கத்துல வேற ஏதாவது ஊருக்கு போற வழி, இந்த மாதிரி ஏதாவது இருக்கா கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க” என்று கேட்க, அவர் “இல்ல தம்பி இங்க எதுவும் இல்லை” என்று தீர்மானமாய் கூறினார்.
அந்த நேரத்தில் அஜயும், விதுனும் அந்த பொட்டலில் சென்று பார்த்து விசாரித்து வந்தனர். ஆனால் எதுவும் கிடைக்கத்தான் இல்லை. இன்னும் கால்மணி நேரம் தான் இருந்தது.
உத்ராவிற்கு நம்பிக்கையே கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வந்தது.
சஞ்சுவை காப்பாத்தவே முடியாதா… என்று கண்ணீர் விட்டவளுக்கு, அந்த காஞ்சனாவிடம் தெரியாமல், தன் அம்மாவையும், அண்ணனையும், இழந்தோம். இப்போது தெரிந்தே அண்ணன் மகனையும் இழக்க போகிறோமோ என்று குமுறினாள்.
துருவிற்கும் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினான். அவளை தேற்றவும் தோன்றாமல் அப்படியே நிற்க,
அந்த வாட்ச்மேன், “தம்பி ஒரு விஷயத்தை மறந்துட்டேன். இங்க இருந்து ஒரு 5 கிலோ மீட்டர் தள்ளி தான் இந்த கம்பெனியோட பழைய குடோன் இருந்துச்சு. ஆனால் அங்க ஃபயர் ஆக்சிடென்ட் ஆனதுல, அந்த இடத்தை யூஸ் பண்றது இல்லை.” என்று சொல்லி முடிக்க கூட இல்லை.
ஐவரும் விறுவிற வென அங்கு விரைந்தனர். நிச்சயமாய் சஞ்சுவை அங்கு தான் வைத்திருக்க வேண்டும். என்று நினைத்து அங்கு அருகில் செல்லுகையில், காஞ்சனா உத்ராவுக்கு போன் செய்து, “பரவாயில்ல கண்டுபிடிச்சுட்ட. ஆனால் இவன் உனக்கு உயிரோட வேணும்னா நீ மட்டும் தனியா தான் வரணும்.” என்று சொல்ல, அவள் “நான் மட்டும் போறேன்” என்றாள்.
துருவ் “வேணாம் உதி. நீ தனியா போனாலும், அவள் ரெண்டு பேரையும் எதாவது பண்ணுவாள். உள்ள நிறைய ஆளுங்க இருக்காங்க. நானும் வரேன்” என்று சொல்ல,
அவள் “சஞ்சு விஷயத்துல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது துருவ்” என்றாள் உறுதியாக.
துருவ் “ஆனால், உன் விஷயத்துல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது உதி” என்று தவிப்புடன் கூற,
அவள் அவனைப் பார்த்து, விரக்தியாய் புன்னகைத்து, “என்னைக்கு நான் உங்களை மறந்தேனோ அப்போவே உங்களை பொறுத்த வரை நான் செத்துட்டேன். இனிமே புதுசா சாக என்ன இருக்கு” என்று விட்டு, விறுவிறுவென அங்கு விரைந்தாள்.
அதில் துருவோடு சேர்த்து மற்றவர்களும் பலமாய் அதிர்ந்தனர்.
‘என்ன வார்த்தை சொல்லி விட்டாள்’ என்று துருவ் நடுங்கிய இதயத்துடன் தலையை அழுந்தக் கோதி, பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு, அடுத்து அடுத்து செய்ய வேண்டிய வேலையை செய்தான், மின்னல் வேகத்தில்.
அந்த பாதி எரிந்த நிலையில் இருந்த குடோனுக்குள் சென்ற உத்ரா, அங்கு தடி தடியாய் நிறைய ஆட்கள் இருப்பதைப் பார்த்து கொண்டு, சஞ்சுவுக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது என்று தவிப்புடன் உள்ளே சென்றாள்.
அங்கு, காஞ்சனாவும் சைதன்யாவும், அவளை கொலைவெறியுடன் பார்த்து கொண்டு இருந்தனர். இருவர் செய்த வேலை தான் இவை எல்லாம்.
உத்ரா அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு, “சஞ்சு எங்க?” என்று கோபத்துடன் கேட்க,
காஞ்சனா, அழுது கொண்டு ஓரமாய் நின்றிருந்த சஞ்சுவ இழுத்து கழுத்தில் கத்தியை வைத்தாள்.
அதில் பதறிய உத்ரா, “வேணாம் காஞ்சனா அவனை ஒன்னும் பண்ணிடாத, உனக்கு கோபம் என் மேல தான…” என்று பதற,
அவள் ரௌத்திரத்துடன் “உன் மேல மட்டும் இல்ல. உன் மொத்த குடும்பத்து மேலயும் தான். உன் அம்மா மேல தான் எனக்கு முதல் கோபமே. என்னவோ, ஊர்ல கிடைக்காத பொண்ணு கிடைச்சுட்ட மாதிரி, அந்த மொத்த குடும்பமும், உன் அம்மாவை தாங்கு தாங்குன்னு தாங்குச்சு.
உன் அம்மா என்னன்னா, தங்கச்சி வாழ்க்கை கெட்டு போச்சுன்னு கொஞ்சம் கூட கவலைப்படாம எனக்கே அட்வைஸ் பண்ணுனாள். அதுபோக, அந்த கருணாகரனுக்கு என்னை பார்த்தாலே பிடிக்கல. அவங்களுக்குலாம் பாடம் சொல்லிகுடுக்கணும்னு தான், மயூரியை மாடில இருந்து தள்ளி விட்டேன். என் அதிர்ஷ்டம் அவள் செத்துட்டாள்.” என்று சொல்ல, உத்ராவிற்கு தன் அன்னையை நினைத்துக் கண் கலங்கியது.
மேலும் காஞ்சனாவே தொடர்ந்து “உன் அண்ணன் ஒரு அப்பாவி. நான் என்ன சொன்னாலும் நம்புனான். அந்த பொண்ணு பேர் என்ன சந்தனாவா சாதனவா…
அவள் என்கிட்ட வந்து, என்னை ரிஷிக்கூட சேர்த்து வைங்கன்னு அழுதாள். நான் அவளை அடிச்சு விரட்டிட்டேன்.
பின்ன, நான் இவ்ளோ பண்ணி, கடைசில அவனுக்கு குடும்பம் குட்டின்னு வந்துட்டா, நான் நடுத்தெருவில தான நிக்கணும்…” என்று நக்கலாய் சொல்லிவிட்டு,
“அவளை விரட்டிட்டு நான் நிம்மதியா தான் இருந்தேன். ஆனால் இந்த ரிஷிக்கு தான் திடீர்னு கிறுக்கு பிடிச்சுருச்சு.
அவன் என்கிட்டயே வந்து, மத்த பொண்ணுங்ககிட்ட பழகுன மாதிரி நான் அவள்கிட்ட பழகல… எனக்கே தெரியாம தப்பு நடந்துருச்சு. ஆனால் நான் அப்படி பண்ணிருக்க கூடாதுன்னு இப்போ தோணுது அவள் ஞாபகமாவே இருக்கு… நான் அவளை கல்யாணம் பண்ணிக்கவான்னு என்கிட்டேயே கேட்டான்.
அப்போ எனக்கு எப்படி இருக்கும்… அதான் அவளை தேடி, அவளை கொலை பண்ணி, அவள் எங்கேயோ ஓடி போய்ட்டாள்னு ரிஷிக்கிட்ட சொல்லி நம்ப வச்சேன்.
ஆனால் அந்த மீரா, இப்படி இந்த சனியனை காப்பாத்துவாள்ன்னு நான் நினைக்கல. கொஞ்ச நாள் அமைதியா இருந்த ரிஷி, அப்பறம் மறுபடியும் அவளைத் தேட ஆரம்பிச்சான்.
அப்பதான் அவனுக்கு அவன் குழந்தை மட்டும் உயிரோட இருந்தது தெரிஞ்சுச்சு. அவனையும் தேடி கன்டுபிடிச்சவன், அவனை நானே வாங்கி வளர்க்க போறேன். கோர்ட்ல கேஸ் போட போறேன்னு முட்டாள்தனமா பேசுனான்.
அதான், அவனையும் ஒரு இடத்துல அடைச்சு வச்சு, இவனை வச்சு, உன்கிட்ட சொத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி, இவனை கொலை பண்ணிட்டு, இந்த பழியை உன் மேல போட போறேன்.
அவன் நீ பையனை கொன்ன கோபத்துல, உன்னை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவான். அந்த துருவ் கடைசி வரை உன்னை நினைச்சு உயிரோடயே சாவான்” என்று அவளின் திட்டங்களை பெருமையாய் சொல்லி முடிக்க, உத்ராவிற்கு மலைப்பாய் இருந்தது.
காஞ்சனா ரிஷி தப்பிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் தப்பித்ததும் தான், இரண்டு மணி நேரத்திற்குள் இங்கு வரச்சொன்னாள்.
எவ்வளோ பிளான் போட்டுருக்காள் என்று நினைத்தவளுக்கு ரிஷியை நினைத்து அவன் இவ்வளவு ஏமாந்து இருக்கானே என்று அழுவதா இல்லை, ரொம்ப மோசம் இல்லை சிறிது நல்லவன் தான் என்று சிரிப்பதா என்றே தெரியவில்லை.
இப்பொழுது இவர்களின் சூழ்ச்சியில் இந்த சின்ன பிஞ்சு மாட்டிக்கொண்டதே என்று நொந்தவள்,
“அவனை விட்டுடு காஞ்சனா. அவள் என்ன பாவம் பண்ணுனான்” என்று கெஞ்ச,
அவள் சிரிப்புடன், அவன் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினாள்.
பின், “அந்த பத்திரத்துல சைன் போடு” என்று சொல்ல, அவள், “நான் சைன் போடறேன் அவனை விட்டுடு.” என்று சொல்லிவிட்டு, அதில் கையெழுத்திட்டாள்.
சைதன்யா “இன்னும் உனக்கு ஒரு டாஸ்க் இருக்கு உதி டார்லிங். உன்னை நான் அடையணும்னு நினைச்சேன். ஆனால் அந்த துருவ் என்னை இப்படி கையாலாகாதவன் ஆக்கிட்டான். இப்போ நான் நினைச்சதை மத்தவங்க மூலமா பண்ண வைக்க போறேன்” என்று சொல்லி, அவனின் ஆட்களுக்கு கையை காட்ட, அவர்கள் இவளை மோசமான பார்வை பார்த்துக் கொண்டு நெருங்கினர்.
உத்ரா அவர்களை அடிக்க போக, சைதன்யா “உன் வித்தையை இங்க காட்டுன… இவன் தலை துண்டாகிடும்” என்று சொல்ல, சிலையாகி நின்றாள்.
அது சில நொடிகள் தான், அவள் கையை தொட அவர்கள் நெருங்குகையில் புயலென உள்ளே நுழைந்து, அவர்களை பறக்க விட்டான் துருவ், கண்ணில் தீப்பிழம்போடு.
திடீரென இதை எதிர்பார்க்காமல் இருவரும் தடுமாற, அந்த இடைவெளியை உபயோகப்படுத்தி, சட்டென்று சஞ்சுவை உத்ரா அவள் கைக்குள் கொண்டு வந்து விட்டாள்.
துருவ் அங்கிருந்த ஆட்களை அடித்து நொறுக்க, சைதன்யா அவசரமாய் வெளியில் செல்லப் பார்த்தான்.
அஜய், விது, சுஜி மூவரும் அவனை சுற்றி வளைத்து “எங்கடா ஓடுற…” என்று மறிக்க, விது அவனை ஓங்கி அறைந்தான்.
அஜய் அவன் பங்கிற்கு அவனை அடிக்க, சுஜி, “இவன் திரும்ப அடிக்க முடியாதுன்னு தான, இவனை அடிக்கிறீங்க.பயந்தாகொள்ளிங்களா” என்று நக்கலடிக்க,
அஜய் அவளை முறைத்து, “நான் அன்னைக்கு ஃபார்ம்ல இல்லை அதான் அடிக்கல. இப்போ அடிக்கிறேன் பாரு” என்று அங்கு இருந்த ஒரு அடியாளை அடிக்க போக, இவனுக்கு முன் அவன் அடித்ததில், அஜய் சுற்றி அங்கிருந்த பொருளை இடித்துக்கொண்டு மீண்டும் சுஜி மேலேயே வந்து விழுந்தான்.
சுஜிக்கு தான், அவனின் அருகாமை ஏதோ செய்ய, அவனையேப் பார்த்து கொண்டிருந்தாள்.
அஜய், சாவகாசமாய் அவள் மேல் படுத்துக் கொண்டு, “நான் அடிச்சேன் பாத்தியா…” என்று கேட்க,
சைதன்யாவை பிடித்திருந்த விது, தலையில் அடித்துக் கொண்டு “நீ அடிச்சது, துருவ் ஏற்கனவே அடிச்சு மயங்கி இருந்தவனைடா…” என்று விட்டு,
“அட ச்சே! முதல்ல எந்திரி” என்று சொல்ல, அப்பொழுது தான் அவன் தான் இருக்கும் நிலை உணர்ந்து அவசரமாய் எழுந்தான்.
சுஜிக்கு, கன்னமெல்லாம் சிவந்திருக்க, அஜயைபோ4 பார்க்க இயலாமல் தலையை குனிந்திருந்தாள்.
அஜய், இதெல்லாம் உணராமல், “கீழ என்ன தேடுற பஜ்ஜி” என்று குனிந்து பார்க்க, அவள் அவனை முறைக்க, விது, சுஜியிடம், “இந்த பெட்ரோ மாக்ஸ் லைட்டே தான் உனக்கு வேணுமா” என்று முணுமுணுத்தான்.
பின், திரும்பி துருவை பார்க்க, அவன் உத்ராவை யாரும் அடித்து விடக் கூடாது என்று அவளை அணைத்து கொண்டு சண்டையிட அவள், நெளிந்தபடி,
“என்னை விட்டுட்டு சண்டை போடுங்க” என்றாள்.
அவன், “நீ எப்படி அப்படி சொல்லலாம்…” என்று கோபமாக கேட்க, அவள் “நான் உண்மைய தான சொன்னேன்” என்று திரும்பி கொண்டாள்.
“நீ என் மேல வச்சிருந்த காதல் தான் செத்துருச்சுன்னு நான் அன்னைக்கு சொன்னேன். நான் உன்மேலே வச்ச காதல் இன்னும் அப்படியே தான் இருக்கு” என்று அழுத்தமாக கூற,
அவள் “இப்போ ஞாபகம் வரலைனா நான் உங்களை இப்போ காதலிக்கலைனு அர்த்தமா” என்று கேட்டாள்.
அவன், “நீ என்னை பத்தி தப்பா நினைச்ச, அப்பறம் உன்னால எனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு பரிதாபம் தான் பட்ட. அப்போ இது எப்படி காதலாகும்…” என்று எதிர்கேள்வி கேட்டான்.
விது அவர்கள் அருகில் வந்து அவர்களை பிரித்து விட்டு, “இவனுங்களோட சண்டை போடுங்கடான்னா உங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க”.. முறைக்க,
துருவ் அவனை சப்பென்று அறைந்து, “அதை பிரிச்சு விட்டு தான் கேப்பியா” என்று முறைக்க, அவன் கன்னத்தில் கையை வைத்து கொண்டு,
“ஆமா நம்ம பிரிக்கலைன்னாலும், அப்படியே ரெண்டும் கொஞ்சி குழாவிடுங்க பாரு…” என்று புலம்பினான் முறைப்புடன்.
அத்தியாயம் 23
துருவ் அடித்ததில் “கொஞ்சமாவது, லவரோட அண்ணன்னு மரியாதை இருக்கா” என்று விது முறைக்க,
துருவ் கை முஷ்டியை சுற்றிக்கொண்டு, “என்ன மரியாதை வேணுமா?” என்று நக்கலாக கேட்க, அவன் அங்கிருந்து ஓடியே விட்டான்..
துருவ் உத்ராவிடம் சஞ்சுவை வெளியில் கூட்டிக்கொண்டு போக சொல்லிவிட்டு, அவனை தாக்க வந்தவர்களை தாக்கினான்.
அந்த நேரத்தில், காஞ்சனா, ஒரு துப்பாக்கியை எடுத்து, உத்ராவை நோக்கி குறிவைத்து, அவள் கண்ணிமைக்கும் நேரத்தில், வெடுக்கென சஞ்சுவை அவள் கையில் வாங்கி, அவன் நெற்றியில் வைத்து அழுத்தினாள்.
அனைவரும் அதிர்ந்து பார்க்க, துருவ் அவளை நோக்கி கால் எடுத்து வைக்க, அவள் “இன்னொரு அடி எடுத்து வச்ச, இவன் மூளை செதறிடும்” என்று மிரட்டியதில் செய்வதறியாமல் நின்றனர்.
அவள் “உங்க எல்லாரையும் இன்னைக்கு சுட்டு தள்ளப்போறேன்” என்று நாராசமாக சிரித்து சஞ்சுவின் நெற்றியில் ட்ரிக்கரை அழுத்தப்போக, அப்பொழுது, பின்னிருந்து அவளை கத்தியால் யாரோ குத்தியது போல் இருந்தது.
துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, சிவந்த கண்களுடன் அவள் திரும்ப, அங்கு ரிஷி நிற்பதை பார்த்து அதிர்ந்து விட்டாள் காஞ்சனா.
காஞ்சனாவை பற்றி எப்படியாவது ரிஷிக்கு புரியவைக்க வேண்டும் என்று, துருவ் தான் அவன் ஆட்களை விட்டு, ரிஷியை தூக்கி வரச்சொன்னான்.
ரிஷி, முதலில் திமிறினான். பின், உள்ளே தான் சஞ்சுவும் இருக்கிறான் என்று சொல்லி ஒருவாறாக, வெளியில் இருந்த ஆட்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, ரிஷியையும் ஒரு இடத்தில் நிறுத்தி இருந்தனர்..
அப்பொழுது அவன் காஞ்சனா பேசிய அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். தான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று நினைத்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.
வெகுநேரம் அப்படியே பிரம்மை பிடித்தது போல் இருந்தவன், சஞ்சுவை அவள் சுட போவது தெரிந்ததும், அங்கிருந்த கத்தியை எடுத்து குத்தி விட்டான்.
காஞ்சனா நீயா இப்படி செய்தாய் என்று அதிர்ந்து நோக்க, அவன் “அம்மா மாதிரி நினைச்சேனேடி உன்னை. நீ என்ன சொன்னாலும், என்ன செஞ்சாலும் அது என் நல்லதுக்காகத்தான்னு நினச்சு, என் தங்கச்சி, என் குடும்பம், என் நண்பன் எல்லாரையும் எவ்ளோ கஷ்டப்படுத்துனேன்..ஆனால் நீ” என்று பல்லைக் கடித்து கொண்டு கோபத்துடன் கூறியவன், மீண்டும் அவளை குத்தினான்.
அதில் அவள் மொத்தமாய் சரிந்து விழுந்து தன் இத்தனை கால ஆட்டத்தையும், மூச்சையும் நிறுத்திக் கொண்டாள்.
ரிஷி வந்ததை உத்ரா அறியவில்லை… அவன் காஞ்சனா பற்றி தெரிந்து கொண்டது அவளுக்கு மகிழ்ச்சியே. ஆனால் இப்படி அவளை கொலை செய்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அந்த நேரம் சரியாக, அர்ஜுனும் மீராவும் போலீசுடன் அங்கு விரைய, அவர்களும் நடந்ததை கண்டு அதிர்ந்தனர். ரிஷி கையில் கத்தியை பார்த்து விட்டு, போலீசார் அவனை கைது செய்தனர்.
துருவ் அவசரமாக, அவனை காப்பாற்ற, “அவன் பையனை காப்பாத்த தான் இப்படி பண்ணுனான்” சொல்லிவிட்டு, வக்கீலுக்கு போன் செய்ய போக, ரிஷி அவனைத் தடுத்தான்.
“நான் ஜெயிலுக்கு போறேன் நண்பா. நான் தப்பு பண்ணும்போதெல்லாம் என்னை காப்பாத்தி எனக்காக நீ நிறைய பண்ணிருக்க… அதுனால உன் பேரும் சேர்ந்தே கெட்டுப்போயிருக்கு. இப்பவும் என்னை காப்பாத்த தான் நினைக்கிற நண்பா. ஆனால் உன் அன்புக்கும், நட்புக்கும் எனக்கு தகுதியே இல்லடா” என்று கண் கலங்க கூற, துருவ் அவனை அணைத்து கொண்டான்.
“லூசு மாதிரி பேசாத நண்பா… நீ என்ன பண்ணாலும் என்னைக்கும் என் நண்பன் தாண்டா” என்று கமறிய குரலில் கூறியவனுக்கு தெரியும், அவன் பெற்றோரை கொலை செய்ததற்கும், உத்ராவை விபத்து ஏற்படுத்தியதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.
ரிஷி, அவனைக் கட்டிக்கொண்டு “எனக்கு இது போதும்டா…” என்றவன், உத்ராவைப் பார்க்க, அவர்களின் அன்பில் உருகி, ரிஷியை கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தவள் அருகில் சென்றவன்,
“சாரி உதி… நான் உனக்கு என்னைக்குமே நல்ல அண்ணனா இருந்ததே இல்லைல. ஆனால் இப்போ கூட நீ என் பையன் எப்படியும் போகட்டும்ன்னு நினைக்காம, உன் அண்ணன் பையன்னு அவனை காப்பாத்தத்தான் நினைக்கிற. இப்போகூட, ஒரு நல்ல அண்ணனா உன்கூட இருக்க முடியல…” என்று சொல்ல அவள் வெடித்து அழுது “அண்ணா” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.
மற்றவர்களும், இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது? யாருக்கு ஆறுதல் சொல்வது? என்று புரியாமல் நின்று கொண்டிருந்தனர்.
உத்ரா, “இவள்லாம் சாக வேண்டியவைதான் அண்ணா. இவளை கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போகணுமா. நான் உன்னை எப்படியும் வெளிய எடுத்துருவேன் அப்பறம் நீ என்கூடையே இரு.” என்று சொல்ல, அவன் தீர்மானமாய் மறுத்து விட்ட்டான்.
“இப்போகூட நீங்க என் மேல இவ்ளோ அன்பு வச்சுருக்குறதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உதி. இந்த ஒரு சந்தோசம் போதும் என் ஆயுசு முழுக்க, இனிமே ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனா கூட உங்களை பார்க்க நான் வரமாட்டேன். என்னை நம்புன பொண்ணுக்கு நான் கொடுத்த தண்டனைக்கு எனக்கு நானே குடுத்துக்குற தண்டனை இது… தயவு செஞ்சு என்னை புருஞ்சுக்கோங்க” என்று உத்ராவிடமும், துருவிடமும் கெஞ்சியவன், சஞ்சுவின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு,
அவனிடம், “எங்க ரெண்டு பேருக்குமே எங்க அம்மா கூட வளர குடுத்து வைக்கல. இப்போ உனக்கும் நான் அந்த சந்தோசத்தை தரல என்னை மன்னிச்சுருடா.” என்று விட்டு அவனை உத்ராவிடம் கொடுத்து, “என் அத்தை உன் அத்தையை வளர்த்த மாதிரி உன் அத்தை உன்னை வளர்ப்பா.. கண்டிப்பா நீ என்னை மாதிரி இருக்க மாட்ட” என்று அவன் தலையை வருடி சொல்லிவிட்டு, கிளம்ப போனவன், திரும்பி,
துருவிடம், “வேந்தா, என் தங்கச்சியை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ. நீங்க என்னை பார்க்கலைனாலும் நீங்க சந்தோசமா இருக்கிறதை நான் எங்கயாவது இருந்து பார்த்துகிட்டு தான் இருப்பேன்” என்று சொல்லிவிட்டு, மற்றவர்களை பார்க்க, அவனுக்கு சிறு வயது நியாபகம் தான் வந்தது.
அதிலும் அர்ஜுனும் அவனும் ரொம்ப க்ளோஸ். ஆனால் நாளடைவில் அவர்கள் உறவில் விரிசல் வந்துவிட்டது.
இப்போது அர்ஜுனையும் அஜய் விதுனையும் கட்டி அணைத்து மன்னிப்பு கேட்டவன், போலீசாருடன் சென்று விட்டான்.
எல்லாருமே ஒரு மாதிரியான உணர்ச்சியின் பிடியில் இருந்தனர். இந்த கலவரத்தில் சைதன்யா அங்கிருந்து தப்பித்து வெளியில் போனதை யாரும் கவனிக்கவே இல்லை.
மீரா, சஞ்சுவைத்
தூக்கி கொண்டு, அவனை மீண்டும் கண்ட சந்தோஷத்தில் அழுது கரைந்தாள்.
பின், அங்கிருந்து, அனைவரும் கிளம்பி வீட்டிற்கு சென்று நடந்ததை கூறினர். அங்கேயும் ரிஷியை நினைத்து, அனைவரும் கண்ணீர் விட்டனர்.
பின், ஒருவாறு தன்னை சமன் படுத்திகொண்டு, சஞ்சுவை ஆளாளுக்கு தூக்கி வைத்து கொண்டு, சாப்பாடு கொடுக்க என அவனை தாங்க, லக்ஷ்மியும் அவன் செய்யும் சேட்டையை எல்லாம் உத்ராவிடம் சொல்லி, நீயும் இப்படித்தான் பண்ணுவ உதி… அப்படியே அவன் அத்தை மாதிரி இவன் என்று பெருமையாய் சொல்ல, மீராவுக்கு தான் மனது ஒரு மாதிரி இருந்தது.
அவள் மகனாய் வளர்த்தவன். இன்று தனக்கு அவன் மேல் எந்த உரிமையும் இல்லையா என்று வருந்த, அர்ஜுனும் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான்.
பின், அவன் உத்ராவிடம் கண்ணை காட்ட, அவள் மீராவை பார்த்து விட்டு, சஞ்சுவை தூக்கி வந்து, அவள் கையில் கொடுத்தாள்.
மீரா புரியாமல் பார்க்க, “என்னைக்குமே சஞ்சு மேல எங்க எல்லாரையும் விட உனக்கு தான் உரிமை அதிகம்… நீ அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இல்லைனாலும், உனக்கு இங்க இருக்க பிடிச்சாலும் இல்லை இங்க இருந்து போகணும்னு நினைச்சாலும், இவனும் உன்கூட தான் வருவான். நான் இவனுக்கு அத்தையா இருக்கிறதை விட, நீ இவனுக்கு அம்மாவா இருக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோசம் மீரா. எந்த காரணத்தை கொண்டும், இங்க இருக்குற யாரும் இவனை உன்கிட்ட இருந்து பிரிக்க மாட்டோம்” என்று சொல்ல, அவள் அழுதுகொண்டே உத்ராவை தாவி அணைத்து கொண்டாள்.
உத்ராவுக்கும் கண் கலங்க, அவளை ஆதரவாய் அணைத்து கொண்டாள்.
அஜய் அங்கு வந்தவன், சஞ்சுவை அவன் கையில் வாங்கி கொண்டு, “இவன் என்ன குழந்தையா. இல்லை கொழுக்கட்டையா ஆளாளுக்கு நீ வச்சுக்க நீ வச்சுக்கன்னு ஒவ்வொருத்தர்கிட்டயா குடுக்குறீங்க.” என்று முறைக்க, மீரா சிரித்தே விட்டாள்.
பின், அவன் சஞ்சுவிடம், “நீ வாடா ராசா… இவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் நம்ம விளையாடலாம்” என்று சொல்ல, சஞ்சு, “மாமா, டாம் அண்ட் ஜெரி” என்று சுஜியை கையை காட்டி இருவரையும் சண்டை போட சொன்னான்.
விது, “பாருடா பங்கு, பச்சை மண்ணுலாம் உங்களை வச்சு எண்டர்டைன் பண்ணுதுங்க உனக்கு எப்போடா லைட் எரியும்” என்று கேட்க, அவன் புரியாமல் “என்ன லைட்டு” என்று கேட்டான்.
விது, “தலையெழுத்து.” என்றவன் சுஜியை பாவமாக பார்த்தான். பிறகே சுஜிக்கு நேற்றிலிருந்து வீட்டிற்கு செல்லவே இல்லை என்று உறைக்க, அவசரமாய் கிளம்பினாள்.
விது, அஜயிடம் “டேய் நீ அவளை ட்ராப் பண்ணிட்டு வா” என்று கூற, அஜய், “ஏன் அவளுக்கு வழி தெரியாதாக்கும்” என்று நக்கலடித்தான்.
விது, ‘இப்படி தனியா போனாவாவது இவனுக்கு லைட் எரியும்ன்னு நினைச்சு சொன்னா இவன் இதுக்குலாம் சரிப்பட்டு வரமாட்டான் போலயே.’ என்று யோசித்து விட்டு, அவனை வற்புறுத்தி அவளுடன் அனுப்பி வைத்து, சுஜிக்கு பெரிய ஆப்பாக வைத்தான்.
மீரா சந்தோசத்துடன் சஞ்சுவை தூக்கி கொண்டு அவள் அறைக்கு செல்ல, அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த துருவ் அங்கிருந்து கிளம்ப முயன்றான். ஆனால் லக்ஷ்மியும், அன்னமும் சாப்பிட்டு தான் போகவேண்டும் என்று அவனை கட்டாயப்படுத்தி இருக்க வைக்க, உத்ரா அமைதியாய் இருந்தாள்.
பின், எதேச்சையாய் திரும்ப, அங்கு அர்ஜுன் அவளை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்ததை கண்டு, இவன் ஏன் நம்மள முறைக்கிறான்… என்று முழிக்க,
அவன் லட்சுமியிடம், “அம்மா நீங்க சாப்பாடை ரெடி பண்ணுங்க. நான் துருவை என் ரூம்க்கு கூட்டிட்டு போறேன்” என்று அவனை இழுத்துக்கொண்டு மேலே போக, உத்ராவும் அவர்கள் பின்னே சென்றாள்.
அர்ஜுனிடம், “என்ன பங்கு”, என்று அவள் கேட்டுகூட முடிக்கவில்லை… அவளை அர்ஜுன் கிழிகிழியென கிழித்தான்.
“உன்கிட்ட இப்போ இந்த செண்டிமெண்ட் சீன் யாராவது கேட்டாங்களா…?” என்று முறைக்க,
அவள் “நீ தானடா… மீராவை சமாதானப்படுத்த சொன்ன” என்று சொல்ல, அவன் கோபமாக, “சமாதானப்படுத்துன்னு நான் சொன்னேனா…? அவளை பாருன்னு தான் கண்ணை காட்டுனேன். நானே சஞ்சுவை வச்சுதான் அவளை கரெக்ட் பண்ணலாம்னு நினைச்சுருந்தேன்… நீ தேவை இல்லாம டயலாக் பேசி இப்படி அநியாயமா பிரிச்சுவிட்டுட்டியே. இப்போ அவள்கிட்ட போய் பேசுனா என்னை கண்டுக்க கூட மாட்டாள்.” என்று பார்வையாலேயே சுட்டெரித்தான்.
உதி அசடு வழிந்து கொண்டு, “ஈஈஈ சாரி பங்கு… ஒரே செண்டிமெண்ட் சீனா இருந்துச்சா. அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். நான் வேணா திரும்ப போய் சஞ்சுவை உனக்கு தரமாட்டேன்னு சொல்லி வாங்கிட்டு வந்துடவா” என்று கிளம்ப ஆயத்தமாக,
அர்ஜுன், “கொலை பண்ணிடுவேன் உன்னை… அப்பறம் யாரும் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஒழுங்கா நீயே ஏதாவது ஐடியா குடு.” என்று மிரட்ட,
அவள் ‘ஹக்கும். என் ஐடியாவை வச்சு என் ஆளையே கரக்ட் பண்ண முடியல..இதுல மீராவை இந்த ஜென்மத்துல கரெக்ட் பண்ண முடியாது…’ என்று முனங்கியவள் அர்ஜுன் என்ன என்று கேட்டதும், “உனக்கு சூப்பர் ஐடியா நான் யோசிச்சு சொல்றேன் பங்கு” என்று அங்கிருந்து நழுவி விட்டாள்.
துருவ் அவள் சமாளிப்பை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டிருக்க, அர்ஜுன் அவனை முறைத்து, “நீ ஏண்டா சிரிக்கிற. உன் பொழப்பும் இங்க சிரிப்பா தான் சிரிச்சுக்கிட்டு இருக்கு… “என்று முறைக்க, அவன், உத்ரா முத்தம் கொடுத்ததை நினைத்து மேலும் சிரித்தான்.
அர்ஜுன் தான், ‘அய்யோயோ அவளுக்கு எல்லாம் மறந்துருச்சுன்னு நினைச்சு நினைச்சு இவன் லூசாகிட்டானோ… இந்த கலவரத்துலயும் சிரிக்கறான்’ என்று தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருக்க, உத்ரா திரும்பி வந்தவள், “அர்ஜுன் உன்னை மீரா கூப்பிடறாள்” என்று சொல்ல, விருட்டென்று மீரா அறைக்கு போனாள்.
அவன் சென்றதும் உத்ரா உள்ளே வந்து, துருவை பார்க்க, அவன் புருவத்தை உயர்த்தி என்ன என்று பார்த்தான்.
உத்ரா, அவனையே சிறிது நேரம் பார்த்து விட்டு, “ஐ லவ் யு” என்று சொல்ல, துருவ் அவளை கண்ணெடுக்காமல் பார்த்து விட்டு, வெளியே செல்ல போனான்.
உத்ரா கோபமாக “நான் உங்க
கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்” என்று சொல்ல,
துருவ், பெருமூச்சு விட்டு, “என்ன பேஸிஸ்ல என்னை லவ் பண்றேன்னு சொல்ற… என்னை பார்த்ததும் உனக்கு பிடிச்சுச்சா. இல்ல என்மேல உனக்கு லவ் ஃபீல் வந்துச்சா.
ஒருவேளை, நான் பேசுன எதையும் நீ கேட்காம இருந்திருந்தா என்னை லவ் பண்ணிருப்பியா?” என்று கூர்மையாய் கேட்க, அவள் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தாள்.
பின் அவனே, “எனக்கு நீ வேணும் உதி… என்னால உன்னை விட முடியாது. ஆனால் அதே நேரத்துல ஒரு சாஃப்ட் கார்னர்ல உன் லவ்
எனக்கு வேணாம்…” என்று சொல்ல,
உத்ரா, “நான் பரிதாபப்பட்டு லவ் பண்றேன்… இல்ல பழசெல்லாம் தெரிஞ்சு என்னால நீ கஷ்டப்பட்டுட்டன்னு நினைச்சு லவ் பண்றேன்னு நான் உங்கிட்ட சொன்னேனா. உன்னை தப்பா நினைச்சது உண்மைதான் ஆனால்…” என்றவள் பேசுவதை நிறுத்திக் கொண்டு,
“சரி, இப்போயும் நான் உன்னை உனக்காக தான் லவ் பண்றேன்னு உனக்கு ப்ரூஃவ் பண்ண நான் என்ன பண்ணணும்” என்று கேட்க, அவன் அமைதியாய் இருந்தான்.
உத்ரா, “இந்த ப்ராஜக்ட் முடிச்சு நீ கிளம்புறதுக்குள்ள, என் காதலை உன்னை உணரவைக்கிறேன். அப்போ நீ ஒத்துப்பியா.” என்று கேட்க, அவன், எதுவும் சொல்ல முடியாமல் நின்றான்..
பின், அவன், “நான் ஒருவாரத்துல ஊருக்கு கிளம்புறேன். நான் வந்தது ப்ரொஜெக்ட்காக இல்லை. உனக்காக தான். நான் வந்த வேலை முடிஞ்சுது…” என்று சொல்ல,
உத்ரா கடுங்கோபத்துடன். “இந்த ஊரை தாண்டி நீ எப்படி போறன்னு நானும் பார்க்குறேன்…” என்று சவாலாய் முறைக்க, துருவ் அவளின் மிரட்டல் காதலில், மெலிதாய் புன்னகைத்தான்.
ஆனால், அவளை அவனின் ஹனியாய் ஏற்றுக்கொள்ள ஏதோ ஒன்று அவனை தடுத்தது.
மீரா அறைக்கு சென்ற அர்ஜுன், அங்கு சஞ்சு உறங்கிக் கொண்டிருக்க, அருகில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருந்த மீராவை அழைத்தான்.
மீரா எழுந்து, அவனை என்னவென்று பார்க்க, அர்ஜுன் “எதுக்கு கூப்பிட்ட” என்று கேட்டதும், அவள் முழித்து “நான் எப்போ கூப்பிட்டேன்?” என்று புரியாமல் கேட்டாள்.
‘இவள் கூப்புடவே இல்லையா? அடிப்பாவி உதி. உன் ஆள் கூட பேசணும்னு நினச்சு என்னை இவள் கூட கோர்த்து விட்டுட்டியே இவள் பேசுனதையே பேசி என்னை டென்ஷன் பண்ணுவாளே’ என்று புலம்பி விட்டு,
“இல்ல நீ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு” என்று சமாளித்து விட்டு, “ஒரு ரெண்டு நாள் அவன் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்… ஸ்கூல்ல லீவ் சொல்லிக்கலாம்” என்க அவள் சரி என்று தலையசைத்தாள்.
பின் அவன், அவள் அருகில் வந்து, “இனிமே நான் உன்னை லவ் பண்றேன்னு டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். உன்கிட்ட பொறுக்கி மாதிரி நடந்துக்க மாட்டேன்… ஆனால்” என்று அவளை பார்க்க, அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள்.
அவனே மீண்டும் “ஆனால்… எனக்கு என் பிரெண்ட் மீரா வேணும்… எனக்கு திரும்ப கிடைப்பாளா” என்று கெஞ்சும் கண்களுடன் கேட்க, அவளால் அதற்கு மேல் அவனை காயப்படுத்த முடியவில்லை. சிரிப்புடன் சரி என்று தலையசைத்தாள்..
அவன் தான், ‘ஷப்பா ஏற்கனவே ஃப்ரெண்ட் ஆகி கரெக்ட் பண்ணவளை, மறுபடியும் ஃப்ரெண்ட் புடுச்சு கரெக்ட் பண்ண வேண்டியதா இருக்கு. என் ஸ்வீட் சீனிக்கட்டி, உன் வழியிலேயே போய் உன்னை மடக்குறேன் இரு’ என்று மனதில் நினைத்து கொண்டவன், அவளுடன் பேச்சு கொடுத்தான்.
சுஜியை வீட்டில் இறக்கி விட்டவனை, வெளியில் வந்த சுஜியின் அம்மா காயத்ரி பிடித்து கொண்டு, “உள்ள வந்துட்டு போப்பா” என்று கூப்பிட, அவனும் உள்ளே சென்றான்.
எப்பொழுதும் அங்கு வருபவன் தான். சுஜி ஏதாவது சொல்வது கேட்கவில்லை என்றால் அவனையோ இல்லை உத்ராவையோ கூப்பிட்டு தான் சொல்லுவார்.
சுஜியின் அப்பா ராகவன் தான் சிறிது முசுடு. அதிலும், ஏதாவது சேட்டை பண்ணி, கல்லூரியில் சஸ்பெண்ட் ஆகிக்கொண்டே இருக்கும் அஜயையும், உத்ராவையும் முறைத்து கொண்டே தான் இருப்பார்.
இதில், சுஜியும் சேர்ந்து தான் மாட்டுவாள்.
ஆனால், அவரிடம் கூட, இருவரையும் சுஜி விட்டு கொடுத்ததே கிடையாது. ராகவனும், அவளை ஒரு அளவுக்கு மேல் அதட்ட முடியாமல் அமைதியாக இருந்து விடுவார்.
இப்பொழுது ஹாலிலேயே அவர் அமர்ந்திருக்க , அஜய் ஆஹா இவர்கிட்ட வந்து சிக்கிட்டோமா என்று நினைத்து கொண்டு, “ஹாய் அங்கிள்” என்று இளிக்க, அவர் அவனை முறைத்து விட்டு, சுஜியிடம் “ஏன் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்க வேண்டியது தான…” என்று திட்ட, சுஜி, அவள் பங்கிற்கு ஈஈ என இளித்தாள்.
அவர் தலையில் அடித்து கொண்டு உள்ளே சொல்ல, காயத்ரி “அவரை விடுப்பா…” என்று அஜயிடம் நலம் விசாரித்தவர்.
சிறிது நேரத்தில் சுஜியின் கல்யாண பேச்சிற்கு வந்தார். சுஜி ஐயோ வென்று அவரை பார்க்க, அவர், “இவளை பாருப்பா இன்னும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல மாட்டேங்குறா… நீயாவது சொல்லலாம்ல.. மாப்பிள்ளை வீட்ல இருந்து எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்னு கேட்டுகிட்டே இருக்காங்க” என்று சொல்ல,
சுஜி, “மா.. இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என்று கேட்க, எப்போதும் அவள் பேச்சிற்கு எதிராய் பேசி அவளை மாட்ட வைக்கும் அஜய் அன்றும் அதனையே கடைபிடித்து,
“ஆண்ட்டி. இதெல்லாம் போய் அவள்கிட்ட என்ன கேட்டுகிட்டு, நீங்களே நல்ல நாளா பார்த்து ஃபிக்ஸ் பண்ண வேண்டியது தான” என்று சொல்ல, சுஜி அவனை முறைத்தாள்.
அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “சந்துருவும் நல்ல பையன்… சொந்தமா நிறைய பிசினெஸ் வேற பண்றாரு. அப்பறம் என்ன” என்று கேட்க,
காயத்ரி “அதை உன் பிரெண்டுகிட்ட சொல்லு.என்று சலிக்க, அவன்,
“ஹே பஜ்ஜி… அவன் கூட படத்துக்கு போறதுக்குலாம் ஓகே சொல்லுவ. கல்யாணத்துக்கு ஓகே சொல்ல மாட்டியா” என்று கேட்க, அவளுக்கு தான், கொஞ்சம் கூட அவனுக்கு எந்த வருத்தமும் இல்லையா. தான் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவே இல்லையா என்று மனதினுள் குமுறலுடன் அவனை வெறித்தாள்.
காயத்ரி, “அவள் யாரையாவது லவ் பண்றாளா அஜய்?” என்று அஜயிடம் கேட்டதும்,
அவன் “யாரு இவளா…” என்று சிரித்து விட்டு, “இவளுக்கு லவ் லாம் வராது ஆண்ட்டி. அப்படியே லவ் பண்ணாலும், அவன் ரெண்டே நாள்ல ஓடிடுவான். அந்த சந்துரு அப்பிராணிக்கே இவளை கல்யாணம் பண்ணி வச்சுடுங்க…” என்று மேலும் அவளை காயப்படுத்தினான்.
எல்லாத்தையும் விளையாட்டுத்தனமாய் எடுப்பவன், இதனையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாகவே எடுத்துக்கொண்டான்.
சுஜி, கண்ணில் அடக்கிய கண்ணீருடன்,” சரிமா… கல்யாண தேதி ஃபிக்ஸ் பண்ணுங்க” என்று சொல்ல, அஜய் அவளை ஆச்சர்யமாய் பார்த்து,
“வாவ்.. கங்கிராட்ஸ் பஜ்ஜி”, என்று அவள் கையைப் பற்றி குலுக்க, அவள் அழுகையை அடக்க முடியாமல் அறைக்குள் சென்று குளியறையில் புகுந்து, ஷவரை திறந்து விட்டாள். அதன் அடியில் நின்றவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை..
நினைவில்லை
என்பாயா நிஜமில்லை
என்பாயா நீ என்ன
சொல்வாய் அன்பே
உயிர் தோழன்
என்பாயா வழிபோக்கன்
என்பாயா விடை என்ன
சொல்வாய் அன்பே
சாஞ்சாடும் சூரியனே
சந்திரனை அழவைத்தாய்
சோகம் ஏன் சொல்வாயா
செந்தாழம் பூவுக்குள் புயல்
ஒன்று வர வைத்தால்
என்னாகும் சொல்வாயா
உன் பேரை
சொன்னாலே உள்
நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
ஒன்றா இரண்டா
ஒரு கோடி ஞாபகம் உயிர்
தின்ன பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில்
விழுந்தேன் எங்கே நீ என்
நண்பா
வெகுநேரம் தண்ணீரின் அடியிலேயே நின்று விட்டு, இனிமேலும் அவன் தன்னை புரிந்து கொள்வான் என்று நினைப்பது முட்டாள் தனம் என்று உணர்ந்து, அவனை மறக்க வேண்டும் என்று தனக்குள் உறுதியெடுத்து கொண்டாள்.
துருவின், அந்த பெரிய வீட்டின் மதில் சுவரை கஷ்டப்பட்டு ஏறி குதித்தாள் உத்ரா.
குதித்தவள் கையை தட்டி கொண்டு, ‘நம்மளை பார்க்க நம்ம லவர் வருவாளே. கதவை திறந்து வைப்போம்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா இவனுக்கு.’ என்று அவனை திட்டி கொண்டு, பைப் மேலே ஏறி அவன் அறைக்கு சென்றாள்.
அங்கு அவன் லண்டனில் இவள் கொடுத்து விட்டு போன உடையை கட்டிக்கொண்டு, படுத்திருந்தான்.
உத்ரா, “இவன் ஃபீலிங்ஸ்க்கு ஒரு அளவில்லாமல் போய்கிட்டு இருக்கு” என்று கடுப்படிக்க, அவள் பின்னே வந்த அஜயும், விதுவும், “நீ லவ் பண்றதுக்கு எங்களையும் ஏன் பங்கு இப்படி படுத்துற…” என்று பாவமாய் சொல்ல,
விது.. “ஆமா… உதி அன்னைக்கு இவன் வீட்டுக்கு வந்து வாங்குன அடியே இன்னும் மறக்கல. இன்னைக்கு எந்த வில்லனும் வரமாட்டானே” என்று கேட்டதும் ,”ப்ச், பேசாம வாங்கடா…” என்று விட்டு, அவன் அறையின் ஜன்னல் வழியே குதிக்கப் போனாள்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த, துருவ் அங்கு உத்ரா, ஜன்னல் வழியே உள்ளே வருவதை பார்த்து, “இவளை” என்று அவளருகில் சென்று முறைத்தான்.
அவனைக் கண்டதும் திருதிருவென முழித்தவள், பின், “அதான் உள்ள வரோம்னு தெரியுதுல ஹெல்ப் பண்றது” என்று சொன்னதும், அவளை முறைத்து விட்டு, அவளை அப்படியே தூக்கி, உள்ளே நிற்க வைத்தான்.
அவள் தான், அவனின் கை தீண்டலில் உருகி நிற்க, துருவ் அவளின் சேட்டையில் அவனை மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
ஜன்னல் வழியே அடித்த காற்றில், அவள் கூந்தல் அவள் முகத்தை மறைக்க, அதனை எடுத்து காதோரம் சொருகினான்.
அதில் அவள் சிவக்க, ஜன்னல் வழியே, அஜயும், விதுனும் “டேய் பொண்ணுங்களை மட்டும் தான் தூக்குவியாடா… கொஞ்சம் எங்களையும் தூக்கி விடுடா.” என்று கதற,
துருவ் ‘நானே என்னை மறந்து என்னைக்காவது தான் ரொமான்ஸ் பண்றேன்… அப்பவும் இவனுங்க வந்து கெடுத்துடுறானுங்க…’ என்று அவர்களை முறைத்து தூக்க போக, அன்று போல் இன்றும் சடசடவென வீட்டினுள் சத்தம் கேட்டது.
அதில் மிரண்ட இருவரும், துருவிடம், “யப்பா ராசா நீ கையை விடு, நாங்க இப்படியே குதிச்சு வீட்டுக்கு ஓடிடறோம்” என்று மீண்டும் வெளியில் தலை தெறிக்க ஓடினர்.
அத்தியாயம் 24
விதுவும், அஜயும் மீண்டும் ஜன்னல் வழியே வெளியில் குதித்து ஓட, துருவ் “டேய் டேய்… நில்லுங்கடா” என்று கத்தியதை கூட காதில் வாங்கவில்லை.
உத்ரா, வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.
துருவ் “இவனுங்களை எல்லாம் எப்படி நீ கூட வச்சுருக்க” என்று கேட்க, அவள் மேலும் சிரிக்க ஆரம்பித்தாள்.
வெளியில் மீண்டும் சத்தம் கேட்க, உத்ராவின் சிரிப்பை சற்று ரசித்து விட்டு, பின், ஷ்ஷ் என்று அவளை அமைதியாய் இருக்க சொல்லி விட்டு, வெளியில் சென்று பார்த்தான்.
உத்ராவும், யாரென பார்க்க, அங்கு அர்ஜுன் தான் நின்று கொண்டிருந்தான்.
உத்ரா, “அடக்கடவுளே இவனை பார்த்தா அவனுங்க பயந்து ஓடுனானுங்க” என்று கலகலவென சிரித்தாள்.
அர்ஜுன், உத்ராவை அங்கு எதிர்பார்க்காமல், பேந்த பேந்த முழித்து, “இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்க,
அவள் “இதென்ன கேள்வி நான் என் லவரை பார்க்க வந்தேன்…” என்று சொன்னதும், அர்ஜுன் அவளை வியப்பாய் பார்க்க, துருவ் அவளை முறைத்தான்.
பின், உத்ராவிடம், “நீ எதுக்கு இங்க வந்த.?” என்று கேட்க,
“என்னை எதுக்கு கேக்குறீங்க. அவன் எதுக்கு வந்தான்னு அவனை கேளுங்க…” என்று சிலுப்பிக் கொள்ள,
துருவ் “நான் தான் அவனை வரச்சொன்னேன்…” என்றதும், அவள் குழம்பி “எதுக்கு” என்று கேட்டாள்.
அர்ஜுன், “அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. பர்சனல்” என்று சொன்னதும் தான் தாமதம்.
அவனை அடி அடியென அடித்து “அதென்னடா எனக்கு தெரியாம உனக்கு மட்டும் பெர்சனல். இந்த ஆஸ்திரேலியாகாரன் கூட சேர்ந்து ஓவரா சீன் போடுறியா. நானும் பார்த்துகிட்டே இருக்கேன்… ரெண்டு பெரும் ரொம்ப டூ மச் ஆ போறீங்க. இனிமே இவன் கூட உன்னை பார்த்தேன்” என்று அவனை மிரட்டினாள்.
அர்ஜுனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“உனக்கு ஏன் இவ்ளோ பொறாமை?” என்று கேட்க, அவள் முகத்தை சுருக்கி கொண்டு, “எனக்கு என்ன பொறாமை. ரெண்டு பேரும் என்னமோ பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு,
துருவிடம், நான் ரிஷியை பத்தி பேச தான் வந்தேன். என்றாள் அவனைப் பாராமல்.
துருவ் என்ன என்று பார்க்க, அவள், “அவனை பெயில்ல எடுக்க லாயர் கிட்ட சொன்னேன். ஆனால் அவன் எதுக்குமே ஒத்து வரமாட்டுறான். இவனை என்ன பன்றதுன்னு தெரியல. நீங்க சொன்னா அவன் கேட்பான்.” என்று துருவ் முகத்தை பார்க்க,
அவன் “நான் பேசியிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா… நான் திட்டியும் பார்த்துட்டேன். கெஞ்சியும் பார்த்துட்டேன். ஆனால் அவன் சொன்னதையே தான் சொல்றான். இங்க வந்தாலும், எனக்கு குற்ற உணர்ச்சியா தான் இருக்கும்… எனக்கு தனிமை தான் வேணும். இனிமே என்னை யாரும் பார்க்கவராதீங்கன்னு சொல்றான்..” என்றான் சலிப்பாக.
உத்ராவும் பெருமூச்சு விட்டு, “சரி. கொஞ்ச நாள் போகட்டும். அவன் மனசு மாறுதான்னு பார்க்கலாம்.”. என்று விட்டு,
“நான் கிளம்புறேன்” என்று சொல்ல, அர்ஜுன், “இரு நானும் வரேன் சேர்ந்து போகலாம்.” என்றான்.
அவள் அவனை முறைத்து விட்டு, “தேவையில்லை… உன் ஃப்ரெண்ட் கூட கொஞ்சி குழாவிட்டு நீ பொறுமையா வா. நான் எதுக்கு உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆ.”என்று முகத்தை உம்மென்று வைக்க,
அர்ஜுன், “ஹே லூசு. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். உனக்கு தெரியாம நான் என்ன பண்ண போறேன்…” என்று அவளை சமாதானப்படுத்த, அவள் துருவை தான் முறைத்தாள்.
துருவ் அவளை அமைதியாய் பார்க்க, அர்ஜுன் அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
அவள் அதனை எல்லாம் காதில் வாங்கவே இல்லை.
துருவ் “அர்ஜுன் நீ கிளம்பு.” என்று சொல்ல, அவன் முழித்துக் கொண்டு நின்றான். துருவ் நான் பார்த்துக்கறேன் என்று கண்ணைக் காட்டியதும் தான் கிளம்பினான்.
அர்ஜுன் கிளம்பியதும், உத்ரா அருகில் வந்த துருவ் “இப்போ என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்க,
அவள், “உனக்கு நான் மட்டும் தேவை இல்லை. என் கிட்ட மட்டும் பேசமாட்ட. எதுவும் சொல்லமாட்ட. ஆனால் என் அத்தை பசங்க, அண்ணனுங்ககிட்ட மட்டும் எல்லாம் சொல்லுவ. என் மூலமா தான உனக்கு அவனுங்களை தெரியும். அதென்ன என்னை மட்டும் அவாய்ட் பண்றது.” என்று சற்று பிசிறிய குரலிலே கேட்டாள்.
அதில் பதறியவன், “என்ன உதி இது…” என்று அவள் தோளைத் தொட வர, அதனை தட்டி விட்டு விட்டு, வெளியில் சென்றாள்.
உண்மையில் அவளுக்கு, துருவ் அவளை அவாய்ட் செய்வதும், மற்றவர்கள் அதிலும் அர்ஜுன், எதற்கெடுத்தாலும் துருவிடமே பேசுவதும் அவளுக்கு எல்லாரிடம் இருந்து அவளை தனிமைபடுத்துவது போல் இருந்தது.
துருவ் அவளிடமும் சாதாரணமாய் பேசி இருந்தால், அவளுக்கு ஒன்றும் தெரிந்து இருக்காது. ஆனால், இப்பொழுது, எல்லார் மீதும் கோபம் வந்தது.
காரில் வந்ததை கூட மறந்து விட்டு, அவள் பாட்டிற்கு ரோட்டில் நடக்க, அங்கு அஜயும், விதுவும் மறுபடியும் துருவ் வீட்டிற்கு போகலாமா? அடிவாங்க உடம்பில் தெம்பு இருக்கிறதா? என்று யோசித்து கொண்டு நின்றிருந்தவர்கள் இவள் வருவதைக் கண்டதும், காரை எடுத்து கொண்டு, அவளை நிறுத்தினர்.
அஜய், “உதி ஏன் நடந்து போற, எதுவும் பிரச்சனை இல்லைல?” என்று கேட்க,
“அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க. போய் அவன் கிட்டயே கேளுங்க.” என்றாள் கோபமாக.
அஜய், “என்னாச்சு உதி… அவன்கூட சண்டை போட்டியா என்ன?” என்று கேட்க, இதில் விது வேறு, “ஏன் உதி… இப்படி சுவரேறி குதிச்சு அவனை கஷ்டப்படுத்திட்டு வர்ற” என்று மாறி மாறி கேட்டவர்களுக்கு உண்மையில், அவள் அவனிடம் காதலிக்கிறேன் என்று சொன்னது தெரியவில்லை. அவள் தான் இன்னும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் என்றே தான் நினைத்தனர்.
உத்ரா, கடுங்கோபத்துடன், “ஆமாடா. எனக்கு வேற வேலை இல்ல பாரு. நான் தான் அவனை கஷ்டப்படுத்துறேன். அவன் கூடவே எல்லாரும் போய்டுங்க”என்று திரும்பி நடக்க, எப்போதும் இவளிடம் இப்படி ஒரு குரலை இதுவரை கேட்காததால், இருவரும் பதறி, அவளிடம் செல்ல,
அவளோ “என் பின்னாடி வந்தீங்க அப்பறம் என் அண்ணன் யாரையும் பார்க்கமாட்டேன்னு ஜெயில்ல இருக்குற மாதிரி. நானும் எங்கயாவது போய்டுவேன்…” என்று மிரட்டியதில் இருவரும் அதிர்ந்தே விட்டனர்.
அவர்கள் துருவிடம் விஷயத்தை சொல்ல, அவன் காரில் அவளை வழிமறித்தான்.
அவள் அங்கிருந்து தள்ளி நடக்க, மீண்டும் வந்து வழிமறித்தான்.
அவள், “ப்ச் என்ன வேணும் உங்களுக்கு..” என்று கோபமாக கேட்க,
“இப்போ என்ன உனக்கு நான் இங்க இருந்து, எல்லாரும் என்கிட்டே பேசுறது தான பிரச்சனை…” என்றவனை உறுத்து விழித்தவள்,
அவன் அருகில் வந்து, “என்னம்மோ என் எண்ணத்துல கூட நீ தான் இருக்கன்னு அன்னைக்கு வசனம் பேசுன… இவ்ளோ தான் நீ என்னை புருஞ்சுக்கிட்டது.
இப்போ இல்லை… என்னைக்கு நான் உன்னை மறந்தேனோ அன்னைல இருந்து நீ என்னை தப்பாதான் புருஞ்சுருக்க.
ஆமாடா நான் உன்னை தப்பா தான் நினைச்சேன். எனக்கு நீ யாருனு கூட தெரியாது. உன்னை பத்தி நான் கேள்விப்பட்ட விஷயமும் நல்லதா இல்ல. என்கிட்ட நீ நடந்துகிட்ட முறையும் சரி இல்லை. அப்போ நான் உன்னை எப்படி நினைக்கிறது ஹான்…” என்று கேள்வியாய் கேட்டவள், அவன் சட்டையை பிடித்தாள்.
“என்னம்மோ மறந்துட்டேன் மறந்துட்டேன்னு சொல்ற. எதைடா மறந்தேன்…” என்று தேம்பியவள்,
அவள் அணிந்திருந்த செயினை காட்டி”, இதோ நீ போட்டுவிட்ருக்கியே இந்த செயினை மறந்தேனா. நீ சொல்லி குடுத்த பிசினெஸ மறந்தேனா. என்னையைவே அறியாமல், எனக்குள்ள வர்ற உன் ஆட்டிடியூட மறந்தேனா. சொல்லு நான் என்ன மறந்தேன்…?” என்று கத்தினாள்.
துருவ் செய்வதறியாமல் திகைத்து நிற்க,
அவள்,” இதான் பிரச்சனைன்னு நீ இத்தனை வருஷமா கஷ்டப்பட்டுருக்க. உனக்கு என்னை தெரிஞ்சுருந்தும், உன்னால எனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு என்னை விட்டு தள்ளி இருந்த. ஆனால் நான்… என்ன பிரச்னைன்னே தெரியாம, என் மனசு யாரை தேடுதுன்னு தெரியாம, எவ்வளவோ சாதிச்சும், எதுக்கு வெறுமையா உணருறோம்னே தெரியாம, எத்தனை நாள் பைத்தியக்கார மாதிரி, ரூம் குள்ள அடைஞ்சு கிடந்துருக்கேன் தெரியுமா…
எத்தனை நாள் ஏன் தூங்காம இருக்கோம்னே தெரியாம… மனசுல நிம்மதி இல்லாம விடிய விடிய முழிச்சு இருந்துருக்கேன் தெரியுமா.
நான் நல்லா தூங்கி 3 வருஷம் ஆகுது. அன்னைக்கு நான் உன்னை இங்க முதல் தடவை பார்த்தேனே அப்போ தான் எனக்கே தெரியாம மனசுல ஒரு நிம்மதி.
ஏதோ பல நாள் இழந்தது திரும்ப கிடைச்ச மாதிரி ஒரு திருப்தி. அது ஏன்னு எனக்கு புரியல.
ஆனால் அன்னைக்கு நான் நிம்மதியா தூங்குனேன்.அதுக்கு அப்பறமும்… உன்கிட்ட ஏதோ ஒன்னு என்னை உன் பக்கம் இழுக்க தான் செஞ்சுச்சு.
ஒருவேளை நீ என்கிட்ட நல்ல மாதிரியா நடந்துருந்தா, நல்ல சிச்சுவேஷன்ல உன்னை பார்த்திருந்தா, அப்போவே உன்மேல இருக்குற உணர்வை உணர்ந்துருப்பேனோ என்னவோ…
ஆனால் சத்தியமா சொல்றேன். நான் சொன்ன எதுவும் மனசுல இருந்து சொல்லல. உன்னை அந்த மாதிரி திட்டிட்டு நான் நாலு நாள் தூங்கவே இல்ல. எதுக்குமே எனக்கு காரணமும் தெரியல.
எனக்கு என்னடா தெரியும். நான் உன்னை மறந்தேன்னு… எனக்கு என்ன தெரியும் நான் உன்னை லவ் பண்ணிருப்பேன்னு…”
“ஆனால்… என் மூளை தானடா உன்னை மறந்துச்சு. என் மனசும், என்கிட்ட நீ விட்டுட்டு போன உன்னோட உணர்வுகளும் என்கிட்ட அப்டியே தான இருந்துச்சு.
உன்னை என்னால அடையாளம் தெரிஞ்சுக்க முடில ஆனால் உணர முடிஞ்சுதே… உன்னை உணரமாட்டேன்னு நினைச்சு தான நீ என்னை விட்டுட்டு போன.
அப்போ என் காதல் உனக்கு அவ்ளோ ஈஸியா போச்சாடா.
நீ பழசை பத்தி சொன்ன போதும் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. இப்பவும் இல்லை.
ஆனால் என் மனசு உன்னை முழுசா நம்புச்சுடா. உன்னை தப்பா நினைச்சுருந்தா எப்படிடா நான் நம்புவேன்.
ஒரு தடவையாவது நீ சொல்றது உண்மையானு உன்கிட்ட கேட்டிருக்க மாட்டேன். ஆனால் நான் கேட்கலையே…” என்று சோர்வுடன் சொன்னவள், கண்ணில் வழிந்த நீரை அழுந்த துடைத்து கொண்டு,
“அப்போவே நான் உன்னை லவ் பண்றேன். நான் உன்னை நம்புறேன்னு சொல்லிருப்பேன்… ஆனால் எனக்கு உன்மேல கோபம்.
அப்போ கூட நீ நான் வேணும்னு நினைச்சு வரல. என்மேல உரிமை எடுத்துக்க வரல. எனக்கு உன் காதலை புரிய வச்சு, எனக்கு ஞாபகப்படுத்தணும்னு நீ வரல.
சண்டை போட்டுகிட்டாவது என் கூட இருன்னு தான நீ என்கிட்டே அப்போ ப்ரொபோஸ் பண்ணுன. அது இப்போ என்ன ஆச்சு.
எங்க நான் செத்து கித்து போயிருவேனோன்னு நினைச்சு தான் இப்போகூட வந்துருக்க… மூணு வருஷமா நான் காரணமே தெரியாம செத்துக்கிட்டு தானடா இருந்தேன்.
நீ என்கூட அப்போ இருந்துருக்கணும்லடா. உன்னை நம்பமாட்டேனு… உன்னை திட்டிருந்தாலும், அடிச்சுருந்தாலும் நீ எப்படிடா என்னை விட்டு போயிருந்துருக்கலாம்.
அப்போ நீ போட்டு விட்ட, இந்த தாலிக்கு என்னடா மரியாதை. இல்ல நான் உன்மேல வச்ச காதலுக்கு என்னடா மரியாதை”என்று மனதில் இருக்கும் வேதனையைக் கொட்டி மூச்சு வாங்கினாள்.
“இப்போ கூட உனக்கு என்னை முழுசா ஏத்துக்க முடியாது. ஏன்னா இப்ப… நான் உனக்கு உத்ரா தான். உன் ஹனி இல்ல.
எனக்குள்ள தான் உன் ஹனியும் இருக்காள்ன்னு நீ புரிஞ்சுக்க போறதும் இல்ல.” என்றவள், அவ்வளவு நேரம் என்ன ஆனதோ என்று பதறி அங்கு வந்து அவள் பேசியதை கேட்டிருந்த, அர்ஜுன் அஜய், விதுனை காட்டி,
“அதுசரி. இத்தனை வருஷமா என்கூட இருந்த இவனுங்களே என்னை புருஞ்சுக்கல. உன்னை மறந்துட்டேன்னு நான் எவ்ளோ ஃபீல் பண்ணுவேன்னு இவனுங்களே யோசிக்கல. நீ மட்டும் யோசிக்கவா போற…” என்று சலிப்பாக சொல்லி விட்டு, துருவை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
மற்றவர்கள் அவள் மனதை அறியாமல் போனோமே என்று தன்னையே நொந்து கொண்டு நிற்க, துருவிற்கு அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதை தீயாய் சுட்டது.
‘என்ன காரியம் செய்து விட்டேன். அவள் சொல்வது உண்மைதானே. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த விஷயத்தை கவனக்குறைவாக மறந்தாலே, என்ன நடந்தது என்று நினைவு படுத்துவதற்குள் எவ்வளவு மன அழுத்தம் ஆகும்.
முழுதாய் ஆறு மாத காலத்தையும் மறந்து, மனதில் அவள் சொன்ன வலியுடன் எவ்வளவு வேதனை பட்டிருப்பாள்.
தான் இந்த நேரத்தில் தானே அவளுக்கு தைரியம் சொல்லி ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். தைரியமான பெண்ணாய் இருந்ததால், அதனை ஒருவாறு கடந்து வந்து விட்டாள். இல்லை என்றால்..’ என்று யோசித்து பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது.
மேலும், ‘அவளை தான் ஏன் இப்படி உணராமல் போனோம்… என்னை அவளுக்கு ஞாபகமே இல்லை என்றாலும் என்னை அவள் நம்பினாளே. முட்டாள்தனம் செய்துவிட்டேனே. என் ஹனியை நானே புரிந்துகொள்ளாமல் விட்டு விட்டேனே’ என்று அங்கேயே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
அஜய், தான் அவன் அருகில் வந்து “சாரி துருவ்… எல்லாமே என்னாலதான். நான் தான் தேவையில்லாமல் உன்னை பத்தி அவள்கிட்ட அப்படி தப்பா சொன்னேன்.
நான் உன்னை பத்தி கேள்விப்பட்டதை தான் சொன்னேன். வேணும்னு பண்ணல துருவ். சாரி. நான் உன்னை பத்தி தப்பா சொல்லாமல் இருந்திருந்தா அவளும் உன்னை தப்பா நினைச்சுருக்க மாட்டாள். நீயும் அவள் காதலை புருஞ்சுருப்பல்ல.”என்று வருத்தமாய் சொல்ல,
விது, “என்னடா நீ… உனக்கு தெரியாம நடந்த விஷயத்துக்கு நீ எப்படி காரணம் ஆவ. நீ என்ன தெரிஞ்சா சொன்ன” என்று சமாதானமாய் சொல்வது போல் பேசியவன், அவனை குனிய வைத்து கும்மு கும்மு என்று கும்மி,
“சும்மா இருந்தவள்கிட்ட, இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி, இப்படி ரெண்டு பேருக்கும் சண்டை இழுத்து விட்டுட்டு செண்டிமெண்ட் ஆ பேசுனா உன்னை விட்ருவோம்னு நினைச்சியா…” என்று முறைக்க,
அர்ஜுன், “இவனை என்னடா பண்ணலாம்…” என்று விதுவிடம் கேட்டு விட்டு, துருவிடம், “துருவ்… அவள் உன்னை போட்டோல பார்த்து ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸ் தான் ஆனாள். ஆனால் இவன் பார்த்த வேலைதான் அவளை குழப்பி விட்டுட்டான்…” என்று அவன் பங்கிற்கு அவனை கும்மினான்.
அஜய், “டேய் நான் என்னடா பண்ணுவேன். இவனை பத்தி விசாரிச்சப்ப அப்படி தான் சொன்னாங்க. நான் என்ன பண்ணுவேன்” என்று பாவமாய் கேட்டான்.
அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவனை இருவரும் துரத்தி துரத்தி அடிக்க, துருவ் அவர்களை தடுத்தான்.
“என் மேல தான் எல்லா தப்பும். நான் தான் அவளை சரியா புருஞ்சுக்கல.” என்று வருத்தத்துடன் கூறினான்.
அவனை மூவரும் சேர்ந்து சமாதானம் செய்ய, அர்ஜுன், “விடுடா. இனிமே அவளை விட்டு போகணும்னு நினைக்காத” என்று சொல்ல, துருவ் அமைதியாய் உத்ரா சொன்னதையே யோசித்து கொண்டு இருந்தான்.
அதில் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
பின், விது, “பங்கு, இவன் யோசிக்கிறத பார்த்தா அடுத்த பஞ்சாயத்தை கூட்டுவான் போல. தூக்குங்கடா” என்று இருவரிடமும் சொல்ல, மூவரும் அவனை அப்படியே தூக்கி காரில் அமர வைத்தனர்.
துருவ் “டேய் என்னடா பண்றீங்க விடுங்கடா” என்று கத்த கத்த, அவனை காரினுள் போட்டதும், அர்ஜுன், “சாரி பங்கு. என் அத்தை பொண்ணை விட்டு போனாலும் போய்டுவ. அதனால உன்னை ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ண போறோம்” என்று சொல்லி, அவர்களின் வீட்டை நோக்கி காரை செலுத்தினர்.
துருவ், “அடேய் நான் எங்கயும் போக மாட்டேண்டா. நான் சும்மாதாண்டா யோசிச்சுகிட்டு இருந்தேன். முதல்ல காரை நிறுத்து” என்று மீண்டும் கத்த, அஜய் காரை நிறுத்தவே இல்லை. துருவ் மிரட்டி பார்த்தும், அஜய் மண்டையில் அடித்து பார்த்தும் அவன் கேட்கவே இல்லை.
வீடு வந்தும் துருவை காரிலிருந்து, மூவரும் தூக்கி கொண்டு தான் வந்தனர்.
“கருமம் பிடிச்சவங்களா இறக்கியாவது விடுங்கடா, நான் வந்து தொலையிறேன்” என்று தலையில் அடிக்க, நீர் அருந்தலாம் என்று அறையில் இருந்து வெளியில் வந்த மீரா, இவர்களை புரியாமல் பார்த்தாள்.
பின், அர்ஜுனிடம், “என்ன ஆச்சு அர்ஜுன்… ஏன் இப்படி அண்ணாவை தூக்கிட்டு வர்றீங்க… அடி எதுவும் பட்டுருக்கா?” என்று பதட்டமாய் கேட்க,
அவனை இறக்கி விட்டவன் “உன் அண்ணனை நாங்க கடத்திட்டு வந்துருக்கோம். இங்க இருந்து எங்க பெர்மிசன் இல்லாமல் அவன் ஆஃபீஸ் கூட போக முடியாது” என்று கெத்தாக சொல்ல,
அவள் சிரித்து விட்டு, “இப்போ அண்ணா, பழைய ஃபார்ம்க்குக்கு வந்து உங்களை அடிக்க ஆரம்பிச்சாரு . நீங்க யாரும் எந்திரிக்கவே முடியாது. வந்துட்டாரு வசனம் பேச.” என்று அவனை நக்கலடிக்க, அர்ஜுன் அவளை முறைத்தான்.
மற்றவர்கள் இங்க என்னடா நடக்குது என்று பார்க்க, அஜய் அர்ஜுனிடம் “அண்ணியை எப்படா கரெக்ட் பண்ணுன சொல்லவே இல்ல” என்று மெதுவாய் கேட்க,
விதுன், “மீரா நீயா பேசுற..
என்ன ஒரு ஆச்சர்யம். அப்போ உனக்கும் அர்ஜுனுக்கு அடுத்து கல்யா” என்று சொல்ல வருவதற்குள் அவன் வாயை பொத்தி, இருவரையும் தனியாக அழைத்து போன அர்ஜுன் பதறி
“சத்தமா சொல்லாதடா. நானே பட்டிங் டிங்கரிங் பண்ணி அவளை நார்மலா பேச வச்சுருக்கேன். இப்போதான் அவள் என் மூஞ்சியை பார்த்தே பேசுறா. மறுபடியும் காதல், கல்யாணத்தை பத்தி பேசி அதுல மண்ணள்ளி போட்றாதீங்கடா” என்று கதற,
இருவரும், ” உனக்காடா இந்த நிலைமை. சோ சேட்” என்று வாயை பொத்திக் கொண்டு சிரித்தனர்.
மீரா, என்னாச்சு இவங்களுக்கு என்று அவர்களை புரியாமல் பார்த்து கொண்டு நிற்க, இவர்களின் அலப்பறையில் துருவ் அவர்களை முறைத்து கொண்டிருந்தான்.
பின், துருவிற்கு ஒரு அறையை காட்டி தூங்க சொல்ல, அவன் “ப்ச் அர்ஜுன் நான் வீட்டுக்கு போறேன் என் திங்க்ஸ்லாம் அங்க தான் இருக்கு..” என்று சொல்ல,
அர்ஜுன் “அதெல்லாம் நாளைக்கு எடுத்துக்கலாம். நீ இனிமே இங்க தான் இருக்க. ஒழுங்கா என் அத்தை பொண்ணை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு அவளை கூட்டிகிட்டு நீ எங்க வேணும்னாலும் போ. அதுவரை நீ எங்ககூட தான் இருக்க.” என்று பொய்யாய் மிரட்டி விட்டு போனவனுக்கு, அவன் மட்டும் தனியாய் இருப்பதில் விருப்பமே இல்லை.
எப்படியாவது அவனை வீட்டிற்கு வர வைக்கவேண்டும் என்று நினைத்தவன் இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி கொண்டான்.
மறுநாள் காலையில், உறக்கம் கலைந்து எழுந்த உத்ராவிற்கு, எழுந்திருக்கவே முடியவில்லை.
ஏதோ பாரமாய் இருப்பது போல் தோன்ற, கண்ணைக் கசக்கி, முழித்து பார்த்த உத்ரா, அருகில் அவளை சொகுசாக கட்டிக்கொண்டு படுத்திருந்த துருவை கண்டு அதிர்ந்து விட்டாள்.
மீண்டும் ஒரு முறை கண்ணை கசக்கி பார்த்தவள், உண்மையிலேயே அவன் அருகில் இருப்பதை கண்டு, அவனை உலுக்கினாள்.
அவன்” ப்ச் கொஞ்ச நேரம் தூங்கு ஹனி” என்று அவளை இழுத்து அவன் மேல் போட்டு கொண்டு தூங்க
அவள் “அப்படிலாம் இங்க யாரும் இல்ல… முதல்ல விடுங்க என்னை” என்று திமிர,
அவன் ‘ஒன்னு வாடா போடான்னு திட்றா… இல்ல ரொம்ப மரியாதை குடுக்கறா…’ என்று தனக்குள் சிரித்து கொண்டவன்,
அவளை விட்டு விட்டு, “சரி நீ போ… நான் தூங்குறேன்” என்று தூங்க போக, அவள் அவன் முடியை பிடித்து இழுத்து “ஒழுங்கா எந்திரிச்சு வெளிய போ… நீ எதுக்கு இங்க வந்த?” எனக் கேட்டாள் கண்ணில் தீப்பொறியுடன்.
அவன், “என் ஹனி ரூம்க்கு நான் வந்துருக்கேன்… இதுக்குலாம் காரணம் சொல்லனுமா” என்று குறும்புடன் கேட்டான்.
அவனின் ஹனி என்ற அழைப்பு அவளை என்னமோ செய்ய, பிடிவாதமாய் மனதைத் திருப்பி, “முதல்ல வெளிய போக போறியா இல்லையா… யாரவது பார்த்தா அவ்ளோ தான். எப்படி உள்ள வந்தீங்க” என்று அவள் கத்தி கொண்டிருக்கையிலேயே, அவள் அறை வழியே வந்த அர்ஜுன் என்ன சத்தம் கேக்குது என்று கதவை திறந்து பார்க்க,
அப்பொழுது, “நான் எப்படி வந்தேன்னு சொல்றேன் ஹனி.” என்று துருவ் அவளை மீண்டும் அவன் மேல் இழுத்து போட்டுக்கொண்டிருந்தான்.
அர்ஜுன் அதிர்ந்து, டக்கென்று வெளியில் வந்து விட்டான்.
அப்பொழுது கர்ணன் அங்கு வர, உத்ரா அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனை பார்த்து விட்டு, “ஏண்டா இங்க நிக்கிற.” என்று கேட்க,
அவன் பதறி “அது வந்துப்பா…” என்று யோசித்தவன், “ஹான் எக்சர்சைஸ் பண்றேன்” என்று கையை காலை ஆட்டினான்.
அவர் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, உத்ரா அறைக்கு செல்ல போக, அவன் “அப்பா” என்று ‘ஹை பிட்ச்’ இல் கத்தினான்.
அவர் மிரண்டு “ஏண்டா இப்படி கத்துற.,.” என்று கேட்க, அவன் கதவை மறைத்து கொண்டு, “இங்க எங்கப்பா போறீங்க…” என்று கேட்க, “உதிக்கிட்ட வேலை விஷயமா ஒன்னு பேசணும் அதான் போறேன்.” என்று சொல்ல அவன் “அது அவள் தூங்குறாள்… அப்பறம் பேசுங்க” என்று சமாளித்தான்.
கர்ணன், “நான் எழுப்பி சொல்லிட்டு போறேண்டா.” என்று விடாமல் அங்கேயே நிற்க,
“என்னப்பா நீங்க… அவள் எவ்ளோ வேலை பார்த்துட்டு அசந்து தூங்குறாள். இப்படி தூங்குறவளை எழுப்புறீங்க… பாவம் பா உதி.” என்று போலியாய் கண்ணை கசக்க, கர்ணனுக்கு என்ன ஆனது இவனுக்கு என்று தான் இருந்தது. யோசித்துக்கொண்டு அங்கிருந்து நகர போக,
அப்பொழுது என்று பார்த்து அஜய், “என்ன இங்க மீட்டிங்கு” என்று கேட்க, கர்ணன் நடந்ததை சொல்லவும்,
“அட என்னப்பா நீங்க… அவளை எழுப்பி விட்டு சொல்லிட்டு போகாம. இவன் பேசுறதை கேட்டுகிட்டு இருக்கீங்க.” என்று உள்ளே போக எத்தனித்தான்.
அர்ஜுன் தான் ‘ஐயோ இவன் வேற சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறானே…’ என்று மனதில் புலம்பிக் கொண்டு அவனை தடுக்க, அவன் வலுக்கட்டாயமாக கதவை திறந்து அவர்கள் இருக்கும் நிலையை கண்டு பேந்த பேந்த முழித்தான்.
பின், அர்ஜுனை பாவமாகப் பார்க்க, கர்ணன் அஜயை “வழியை விடு” என்று முன்னேற போக, டக்கென்று கதவை சாத்திவிட்டு,
“எதுக்குப்பா உள்ள போறீங்க?” என்று அஜய் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான்.
கர்ணன் கடுப்பாகி, “இப்போதானடா சொன்னேன்.” என்று சொல்ல,
அவன் “அவள் பச்சை மண்ணு மாதிரி தூங்குறாப்பா அவளை போய் எழுப்புறேன்னு சொல்றீங்க. இந்நேரம் எங்க அத்தை இருந்தால், இப்படி அவள் தூங்குறப்ப எழுப்புவாங்களா” என்று வராத கண்ணீரை துடைத்து கண்ணில் விரல்களை வைத்து நின்றான்.
கர்ணன் தான் இதில் மிரண்டு, ‘இவனுங்க இதை போய் லட்சுமிகிட்டயும் மச்சான்கிட்டயும் சொன்னானுங்கன்னா… ரெண்டு பேரும் நம்மள உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க’ என்று நினைத்துக் கொண்டு,
“யப்பா நான் பெத்த ரத்தினங்களா… போய் வேலைய பாருங்க. இனிமே நான் யாரு தூங்குனாலும் எழுப்ப மாட்டேன்.” என்று பாவமாய் சொல்லிவிட்டு சென்று விட்டார்.
முதலில் அர்ஜுன் கத்தும் போதே, உத்ரா பதறி, “ஐயோ மாமா வந்துட்டாரு துருவ் முதல்ல எந்திரிங்க. மாமா பார்த்தா என்ன நினைப்பாங்க.” என்று சொல்ல,
அவன் “என்ன நினைப்பாங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைப்பாங்க…” என்றதும்,
அவள் “நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இல்ல…” என்று சிலுப்பிக்கொண்டாள்.
பின், “ப்ச், மாமா உள்ள வந்துட போறாங்க துருவ்” என்று சொல்ல, அவன், “அதுக்குதான் வெளிய உன் அருமை அத்தை மகனுங்க இருக்கானுங்கள்ல அவனுங்க சமாளிப்பாங்க…” என்று சொல்லிவிட்டு, கர்ணன் சென்று விட்டதை அறிந்து கொண்டு, அவள் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு வெளியில் வந்தான்.
வந்தவனை அர்ஜுனும் அஜயும் முறைத்து, “உன்னை அந்த ரூம்ல தானடா இருக்க சொன்னோம்… இங்க என்னடா பண்ற” என்று கேட்க,
அவன் நெளிப்பு விட்டுக் கொண்டு, “நீங்க தான உங்க அத்தை பொண்ணை கரெக்ட் பண்ண சொன்னீங்க. அந்த வேலைய தான் பார்க்குறேன்.” என்று தோளை குலுக்கி அசால்டாக சொல்லி விட்டு,
“அப்பறம், டெய்லி காலைல இப்படி வந்து ரூம் வாசல்ல நின்னுடுங்க. யாரவது பார்த்துட்டா அப்பறம் எனக்கு கூச்சமா இருக்கும் ஓகே வா” என்று இருவர் தலையிலும் தட்டி குஷியாக அவன் அறைக்குச் சென்றான்.
அர்ஜுனும் அஜயும் தான் ‘அப்போ நீ தினமும் இங்க தான் தூங்க போறியா’ என்று முழித்து கொண்டு நின்றனர்.
அஜய், அர்ஜுனிடம், “அவன் ஒழுங்கா அவன் வீட்லயே இருந்துருப்பான். இப்போ என்ன பிரச்சனைய இழுக்க போறானோ… வேலியில போன ஓணானை வீட்டுக்குள்ள வரவச்சு வீட்டுல எல்லார்கிட்டயும் தர்ம அடி வாங்க போறோம்” என்று புலம்ப,
அர்ஜுன் அந்த நேரத்திலும், “அது வீட்ல இல்லடா வேட்டியில” என்று சரி செய்ய, அஜய் அவனை “இப்போ இது ரொம்ப முக்கியம்” என்று முறைத்தான்.
காலையிலேயே மீரா, தான் அனைவர்க்கும் சமைத்து கொண்டிருந்தாள். துருவும் அங்கு இருப்பது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அர்ஜூனுக்கும் என்ன பிடிக்கும் என்று அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த படியால், அவனுக்கு பிடித்ததாக சமைத்தாள், லட்சுமி வேண்டாம் என்று மறுத்தும்.
லட்சுமியும் கர்ணனும் எழுந்ததுமே அர்ஜுன், துருவ் கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருப்பான் என்று சொல்லி விட்டான்.
உத்ரா, இவன் எப்படி இங்க வந்தான் என்று புரியாமல் இருந்து விட்டு, பின், ‘இதென்ன சிதம்பர ரகசியமா இந்த வீணா போன வெளங்காதவனுங்க தான் இங்க கூட்டிட்டு வந்துருக்கணும்.’ என்று கடிந்து,
“இவன் இஷ்டத்துக்கு வான்னா வரணும் போன்னா போகணுமாக்கும். எனக்கு ஞாபகம் வரட்டும்னு தான வெயிட் பண்ணுன. எப்படியாவது… எல்லாத்தையும் நியாபகப்படுத்திட்டு தான் உன்கிட்ட காதலை சொல்லுவேன்’ என்று தனக்குள் முடிவெடுத்துக்கொண்டாள். அது நடக்கவே போவதில்லை என்று அறியாதவளாய்.
அஜய்க்கு சுஜியின் ஞாபகமாய் இருந்தது. எப்பொழுதும் காலையில் அவள் அனுப்பும் காலை வணக்கம் குறுஞ்செய்தியும், சிறிது நேரத்தில், “சீக்கிரம் ஆஃபீஸ் கிளம்பு…” என்று கட்டளையாய் வரும் குறுஞ்செய்தியும் இன்று வராததால் என்ன ஆனது அவளுக்கு என்று யோசித்தவன், அவளை அழைத்துக்கொண்டு அலுவலகம் செல்லலாம் என்று சாப்பிடாமல் கூட, அவள் வீட்டிற்க்கு சென்று விட்டான்.
அங்கு, சுஜி முயன்று சாதாரணமாய் அம்மா அப்பாவிடம் பேசி கொண்டிருக்க, அஜய் வந்து ஹார்ன் அடித்தான்.
அவள் வெளியில் வந்து அஜயை யோசனையை பார்த்து விட்டு என்ன என்று கேட்க,
அவன் “கிளம்பிட்டியா வா போகலாம்” என்றான்.
“எங்க” என்று கேட்டவளிடம், “ஆஃபீஸ்க்கு தான்… இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டேன். அதான் உன்னை பிக் அப் பண்ணலாம்னு வந்தேன்.” என்று சொன்னதும்,
அவள், “இல்ல சந்துரு வரேன்னு சொன்னாரு மேரேஜ் பத்தி பேச. பேசிட்டு அவரே ட்ராப் பண்றேன்னு சொன்னாரு. சோ நீ கிளம்பு” என்றாள்.
அஜயோ, “அவன் எதுக்கு உன்னை ட்ராப் பண்ணனும்…” என்று கோபமாக சொன்னவன், சற்றுத் திணறி “மேரேஜ் பத்தி அவங்க பேசட்டும் நீ வா” என்று வம்படியாக அழைக்க, அதில் கடுப்பானவள்,
“ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு. சந்துரு தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போறவரு. அவருக்கு என் மேல எல்லா ரைட்ஸும் இருக்கு உன்னை விட… நான் அவர் சொல்றது தான் கேட்க முடியும் நீ கிளம்பு” என்று கண்ணில் வழிந்த நீரை அவனுக்கு காட்டாமல் திரும்பி நடந்தாள்.
அஜய்க்கு தான் ஒன்றுமே ஓடவில்லை. ‘அதெப்படி என்னை விட இவள் மேல் அவனுக்கு உரிமை இருக்க முடியும். என்னை விட அவளுக்கு அவன் முக்கியமாக போய்ட்டானா. அப்போ, அவள் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லையா…’ என்று குழம்பி கொண்டிருந்தவன், காரை அலுவலகம் நோக்கி செலுத்தி நிறுத்தியவனுக்கு அவளின் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று வார்த்தை மனதை வெகுவாய் சுட்டதை அதிர்ச்சியுடன் நினைத்தான்.
வீட்டில், மீராவே அனைவர்க்கும் பரிமாற, அர்ஜுன் அவனுக்காக அவள் செய்ததை ரசனையுடன் அவளை பார்த்து கொண்டே சாப்பிட்டான். லட்சுமி அவனுக்கு வேண்டுமென்றே பூரியை வைக்க, மீரா டக்கென்று, “அவருக்கு பூரி பிடிக்காது” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள்.
அர்ஜுன், ‘அச்சோ நம்ம ஆளு இப்படி மாட்டிக்கிருச்சே’ என்று மனதினுள் சிரிக்க, லட்சுமி நக்கலாக,” என் பையனுக்கு பூரி பிடிக்காதுன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்க, அவள் பேந்த பேந்த முழித்தாள்.
உத்ராவும், துருவும் முன்னாடியே கிளம்பி சைட்டிற்கு செல்ல, துருவ் அவளை “ஹனி” என்று அழைத்தான். அவள் அவனை பார்க்காமல் வெளியில் வேடிக்கை பார்க்க,
“ஹனி” என்று மீண்டும் அழைத்தான்.
இப்படி அவன் அழைத்துக் கொண்டிருக்கையிலேயே இடம் வந்து விட, காரை விட்டு இறங்கி உள்ளே போனாள்.
துருவ் வேகமாக காரை நிறுத்தி, உள்ளே சென்று “ஹனி நான் சொல்றதை கேளேன்… ப்ளீஸ் டி” என்று கெஞ்ச,
அவள், “ஜஸ்ட் கால் மை நேம். இந்த ஹனி சனி எல்லாம் வேணாம்” என்று முதலில் சொன்னது போல் சொல்ல, அவன் குறும்பாக “நான் அப்டித்தான் ஹனி சொல்லுவேன்” என்று கண்ணடித்தான்.
அவள் அவனை முறைத்து விட்டு, மீண்டும் உள்ளே போகையில், அந்த கட்டிடத்தில் இருந்து, சில பல, செங்கல்கள் அவள் மேல் விழ போவதை கண்ட துருவ் “உதி” என்று கத்தி, விருட்டென்று அவளை தள்ளினான்.
அத்தியாயம் 25
துருவ் “உதி” எனக் கத்திகொண்டே, உத்ரா மேல் செங்கல் விழுகாமல், அவளை தள்ளி, அவனும் வெளியில் செல்ல போகையில் அவன் கால் மட்டும் மாட்டிக்கொண்டது.
கீழே விழுந்தவனின் காலில் செங்கல் விழுந்து, ரத்தக் களறி ஆகியது.
சில நொடிகளில் நடந்து விட்ட, இச்சம்பவத்தைக் கண்டு உத்ரா அதிர்ந்து நிற்க, பின், வேகமாக துருவின் அருகில் சென்று,
“துருவ் மை காட்” என்று அவன் காலை பார்க்க, அவன் கால்களில் செங்கல்கள் மலை போல் குவிந்திருந்தது.
துருவ் வலியில் முகத்தை சுருக்க, உத்ராவிற்கு அழுகையே வந்து விட்டது. உடனே அங்கிருந்த ஆட்கள் அந்த கற்களை அப்புறப்படுத்த, உத்ரா, “துருவ் துருவ்” என்று அழுதுகொண்டே அழைத்தவளுக்கு என்ன செய்வதென்று கூட தெரியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
துருவ் அந்த நிலையிலும் “ஒண்ணும் இல்ல ஹனி லைட்டாதான்” என்று சொல்லும்போதே, வலியில் மயங்கி இருந்தான்.
அன்று தான் திருமணம் முடிந்து வேலையில் சேர்ந்திருந்த உத்ராவின் பி ஏ ராஜாவின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல,
உத்ரா, “துருவ் என்னை பாருங்க துருவ். ப்ளீஸ் என்னை பாருங்க…” என்று அழுது கரைந்தாள்.. உடனடியாய் அர்ஜுனின் மருத்துவமனைக்கே அழைத்து செல்ல,
அங்கு உத்ரா, “அர்ஜுன்… துருவ் டா. என்னை காப்பாத்த போய் கால்ல ரொம்ப அடி பட்டுடுச்சு. எந்திரிக்கவே மாட்டுறாரு டா. ஏதாவது பண்ணுடா” என்று கதறி அழுக, அர்ஜுனும் சில நொடிகள் அதிர்ந்து விட்டு, விறுவிறுவென, இதற்கென்ற ஸ்பெஷல் மருத்துவரை வர வைத்து, சிகிச்சை அளித்தான்.
விதுன், அஜய், மீரா மூவரும் நடந்ததை கேள்வி பட்டு உடனே அங்கு வர, உத்ரா, அழுதுகொண்டிருந்ததை கண்டு அவளருகில் சென்றனர்.
அஜய், “அவனுக்கு ஒன்னும் ஆகாது உதி கால்ல தான அடிபட்டுருக்கு சரி ஆகிடும்” என்று சமன்படுத்த, அவள் “எவ்ளோ ரத்தம் தெரியுமா… மயங்கியே விழுந்துட்டான். அப்போ எவ்ளோ வலிச்சுருக்கும்.” என்று முகத்தை மூடி கொண்டு அழுக,
விதுன், “உதி அழுகாதடா. தலையில விழுகாம இருந்துருச்சேன்னு நினைச்சு சந்தோசப்படு… அவன் சீக்கிரமே ரெக்கவர் ஆகிடுவான்.” என்று அவளை அமைதி படுத்த முயற்சிக்க, அவள் கேட்கவே இல்லை.
பின், அர்ஜுன் வந்து, “அவனுக்கு ஒரு கால்ல மட்டும் ஃபிரேக்ச்சர்.” என்று சொல்ல, அவள் மேலும் அழுக ஆரம்பித்தாள்.
அர்ஜுன், “ப்ச் உதி இது ஒரு மாசத்துல சரி ஆகிடும். வேற மேஜர் இஞ்சுரிலாம் எதுவும் இல்லை…” என்று சொல்ல, அவள் அவனை முறைத்து, “அப்போ இது மேஜர் இஞ்சுரி இல்லையா” என்று கோபமாக கேட்டாள்.
விதுன் அவள் மண்டையில் பட்டென்று அடித்து, “ஸ்கூல் படிக்கிறப்ப, வண்டி ஓட்ட கத்துக்கிறேன்னு சொல்லி, என்னை கீழ தள்ளி விட்டு, ரெண்டு காலும் ஃபிராக்ச்சர் ஆகி, நாலு மாசமா நடக்க முடியாம இருந்தப்ப, நல்லா ஜாலியா என்னை வச்சு என்ஜாய் பண்ணுன. இப்போ மட்டும் உனக்கு அழுகை வருதா” என்று முறைக்க,
அவள், தலையை தடவி கொண்டே, “நீ எதையும் தாங்கும் இதயம். ஆனால் துருவ் பாவம்… வலிக்கும்” என்று முகத்தை சுருக்கி கூற, அர்ஜுன், அவன் பங்கிற்கு அவள் தலையில் அடித்து,
“நீ பண்ணுன பில்டப்ல, நான் பெரிய பெரிய டாக்டரை எல்லாம் வரவைச்சு ட்ரீட்மெண்ட் பார்த்தா. அவனுக்கு ஒண்ணுமே இல்ல.” என்று முறைத்து விட்டு, பின் ‘சும்மாவே ஆடுவான்… இப்போ கால்ல அடிப்பட்டுருக்க சாக்கை வச்சு என்ன என்ன ரொமான்ஸ் பண்ண போறானோ’ என்று முணுமுணுத்தான்.
மீரா தான், எப்படித்தான் இவர்களால் மட்டும், பெரிய விஷயங்களை கூட சாதாரணமாய் பேசி, மனதை அமைதி படுத்த முடிகிறதோ என்று வியந்து விட்டு,
அர்ஜுனிடம், “அப்போ நீங்க பெரிய டாக்டர் இல்லையா அர்ஜுன். எதுக்கும் அண்ணாவை ஒரு நல்ல டாக்டர்கிட்ட காட்டணும்” என்று நமுட்டு சிரிப்புடன் கிண்டலடிக்க, அவன் உன்னை காப்பாத்திருக்கவே கூடாதுடி… என்று முறைத்து காலையில் நடந்ததை நினைத்தான்..
லட்சுமி, “என் பையனுக்கு பூரி பிடிக்காதுன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்க, அதில் திரு திருவென முழித்தவள் அர்ஜுனை பாவமாக பார்த்தாள்.
அவளின் பாவமான முகத்தில், வழுக்கி விழுந்த இதயத்தை அமைதி படுத்தி, அவளை சோதிக்க விடாமல் “அன்னைக்கு நாங்க எல்லாரும் ஹோட்டல் போனோம்மா. அங்க எனக்கு பூரி பிடிக்காதுன்னு சொன்னேன் அதை வச்சு சொல்றாள் போல” என்று அவளை பார்த்து கொண்டே சொல்ல, அவள் ஹப்பா தப்பிச்சோம் என்று உள்ளே ஓடி விட்டாள்.
அதனை நினைத்து சிரித்தவன், உத்ராவை துருவை பார்க்க அனுப்பினான். இரு கால்களிலும் கட்டு போட்டு படுத்திருந்தவனை கண்டவளுக்கு இதயமே வலிப்பது போன்று இருந்தது.
மெல்ல, கண் விழித்தவன், அழுது கண்ணெல்லாம் சிவந்து போயிருந்த உத்ராவை பார்த்து, “உதி…” என்று அழைக்க,
அவள், “ரொம்ப வலிக்குதா துருவ்…” என்று கண் கலங்கினாள்.
“ஹே பொண்டாட்டி… இதென்ன அழுகை. எனக்கொண்ணும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்…” என்று அவளை சமாதானப்படுத்த,
அவள் “என்னை காப்பாத்துறதுக்காக இன்னும் நீ என்னதான் பண்ணுவ…” என்று சோர்வுடன் கேட்டாள்.
அவன் அவளை முறைத்து, “இன்னும் என்னலாம் பண்ணமுடியுமோ அதெல்லாம் பண்ணுவேன்… என் உயிரையும் குடுக்கணும்னா அதையும் குடுப்பேன். ஏன்னா… எனக்கு என்னை விட நீ மட்டும் தான் முக்கியம்” என்று சற்று கோபத்துடன் சொல்ல, உத்ரா, அவனையே ஆச்சர்யமாய் பார்த்தாள்.
பின்,சிறிது நேரம் அவள் அமைதியாய் இருக்க, துருவ் அவள் கையை எடுத்து அவன் கைக்குள் வைத்து கொண்டு, “பொண்டாட்டி” என்று மென்மையாய் அழைக்க, அவளுக்கு தான் உயிர் வரை சென்று ஊடுருவியது அந்த வார்த்தை.
அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் “லவ் யு ஹனி” என்று காதலோடு சொல்ல, அவள் அவனையே பார்த்தாள்.
துருவ் “ஏதாவது சொல்லு ஹனி” என்க,
அவள் “என்ன சொல்லணும்” என்றாள் முகத்தை சுருக்கி.
“லவ் யூ தான்” என்று குறும்புடன் லண்டனில் அவள் சொன்னது போலவே சொன்னான்.
அவள் வேறு எங்கோ பார்த்து கொண்டு, “லவ் யு” என்று அவனை போலவே சொல்ல,
“இவ்ளோ ரொமான்டிக் ஆ யாராலயும் ப்ரொபோஸ் பண்ண முடியாது பொண்டாட்டி” என்று நக்கலடித்தான்.
உத்ரா அவனை முறைக்க, துருவ் மெலிதாய் முறுவலித்து விட்டு, பின், தீவிரமாக “எப்படி இது நடந்துச்சு உதி. சைட்ல இப்படித்தான் அஜாக்கிரதையா இருக்கிறதா. ஒர்க்கேர்ஸ் மேல விழுந்துருந்தா இல்ல, வேற எதாவது கிளையண்ட் மேல விழுந்துருந்தா என்ன ஆகியிருக்கும். எப்படி நீ இதை கவனிக்காம விட்ட. இது எதேச்சையா நடந்துச்சா இல்ல பிளான் பண்ணி யாரவது பண்ணுனாங்களா” என்று புருவத்தை சுருக்கி அவளை அதட்டும் குரலில் கேட்க, அப்பொழுது தான் அவள் இதையே யோசித்தாள்.
“இல்ல துருவ்… இந்த மாதிரி எல்லாம் இதுவரை நடந்தது இல்லை. மேனேஜர் கூட ரொம்ப நம்பிக்கையாவனவரு தான்…” என்று சொல்ல,
அவன் அவளை நிறுத்தி, “முதல்ல, இது விபத்தா இல்ல இதுக்கு பின்னாடி வேற யாரவது இருக்காங்களான்னு பாரு. அங்க இருக்குற ஒர்க்கர்ஸ் எல்லாரையும் விசாரி… ரைட் நொவ்” என்று கட்டளையாய் சொல்ல, அவள் ராஜாவை அழைத்து விசாரிக்க சொன்னாள்.
துருவோ “நான் உன்னை போய் பாருன்னு சொன்னேன்” என்று அழுத்தி சொல்ல,
“உங்களுக்கு ஹெல்ப்க்கு?”
“நான் பார்த்துகிறேன்… நீ போய் இந்த பிரச்னையை சரி பண்ணு.” என்று சொன்னதும், அவனை விட்டு விட்டு எப்படி போவது என்று தயங்கியவள் பின், இவன் இந்த பிரச்னையை சரி பண்ற வரை நம்மளை விட மாட்டான்… என்று நினைத்து விட்டு, கிளம்பினாள்.
ராஜா தான் ஆச்சர்யத்தின் உச்சியின் நின்றான். நம்ம மேடமா இது… என்று வாயை பிளந்து நின்று இருந்தவனை “நீ அப்பறமா ஷாக் ஆகிக்க… முதல்ல கிளம்பு” என்று அவனையும் அழைத்து கொண்டு சென்றாள்.
அஜய், துருவிடம் “இதெல்லாம் சைதன்யா வேலையா இருக்குமோ” என்று கேட்க,
அர்ஜுன், தீர்மானமாக “அவன் பண்ணிருக்க மாட்டான்” என்று சொல்ல,
மீரா, “எப்படி இவ்ளோ நம்பிக்கையா சொல்றீங்க அர்ஜுன் “என்றாள்.
“அவன் சுயநினைவோடை இருந்தாதான் இதெல்லாம் பண்ணுவான்” என்று அசால்டாக கூற, மற்றவர்கள் அதிர்ந்து பார்த்தனர்.
விது, “என்னடா சொல்ற… என்னாச்சு அவனுக்கு…” என்று கேட்க, அர்ஜுன் துருவை பார்த்தான்.
பின், “அன்னைக்கு அவன் எஸ்கேப் ஆனதும், அன்னைக்கு நைட்டே துருவ் அவனை பிடிச்சு அடிச்சு உண்டு இல்லைன்னு ஆகிட்டான். இப்போ அவன் இங்க தான் இருக்கான். இப்ப அவனுக்கு கையும் வேலை செய்யல… படுத்த படுக்கையா தான் இருக்கமுடியும்.
அதோட.. அவனுக்கு ஸ்ட்ரோக் வேற வந்ததுல அவனால பேசவும் முடியாது.” என்று சொல்ல, அனைவரும் அரண்டு போய் பார்த்தனர்.
மீரா, “இதெல்லாம் தப்பு இல்லையாண்ணா” என்று தயங்கி கொண்டு கேட்க,
துருவ் கோபமாக “என்ன தப்பு… அவனை அப்படியே விட்டா, உதியை சும்மா விடமாட்டான். உதியை அழிக்கணும்னு நினைக்கிற எவனையும் நான் சும்மா விட மாட்டேன்.” என்று ரௌத்திரத்துடன் சொன்னவன்,
அஜயிடம் “நீ உதி கூட இரு. இன்னும் ரெண்டு மணி நேரத்துல இந்த சம்பவம் எப்படி நடந்துச்சுன்னு எனக்கு தெரியணும்.” என்று அவனை அனுப்பி விட்டு, மீராவிடம், ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட வேலையை அலுவலகம் சென்று பார்க்க சொன்னான். அவனின் குரலில் அவன் சொன்னதை மறுக்க, யாருக்கும் தைரியம் இல்லை.
அவர்கள் சென்றதும், விதுவிடம் ஏதோ சொல்லவர, அவன் “ஆமா எல்லாரையும் அனுப்பிட்டு, நீ தனியா எப்படி மேனேஜ் பண்ணு.. நான் உன்கூட இருக்கேன்.” என்று பெருந்தன்மையாய் கூறினான்.
“இப்போ உன்னை யாரு கிளம்ப சொன்னா. போய் ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வந்து ஜூஸ் போட்டு குடு. போ” என்று அவனை வேலை வாங்க,
அவனோ ‘தங்கச்சி வாழ்க்கைக்காக என்னலாம் பண்ண வேண்டியது இருக்கு.’ என்று விட்டு வெளியில் சென்றான். ஆனால் துருவ் மறுத்தும், அவனுக்காக அன்புடனே அனைத்தும் செய்தான்.
உத்ரா கட்டட வேலை நடக்கும் இடத்தில், அந்த சூப்பர்வைசரை பளாரென அறைந்தாள்.
“இப்படி அடுத்தவங்க தலைல விழுகுற மாதிரி செங்கலை கொண்டு வந்து வைப்பீங்களா. கொஞ்சமாவது மூளைன்னு ஒன்னு இருக்கனும்…” என்று பல்லைக்கடிக்க,
அவர் “இல்ல மேம்… நான் இங்க ரவுண்ட்ஸ் வந்தப்போ இங்க இந்த செங்கல் மூட்டை இல்ல. இன்னைக்கு புதுசா வந்த ஒருத்தன்தான் தெரியாம இங்க வச்சுட்டான் போல” என்று சொல்ல,
அவள் “புதுசா வந்தா அவனுக்கு என்ன வேலை குடுக்கணுமோ அதை குடுக்கணும்.” என்று அனைவரிடமும் விசாரித்தவளுக்கு அந்த புதியவரின் கவனக்குறைவாலேயே இதெல்லாம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு, அவனையும்,வேலை தெரியாதவனை வேலைக்கு வைத்தவரையும் வேலையை விட்டு தூக்கி விட்டு அலுவலகம் சென்றாள்.
அப்பொழுது தான், அலுவலகம் சென்ற சுஜிக்கு சைட்டில் விபத்து என்று தெரிந்ததும் யாருக்கு என்ன ஆனதோ என்று பதற, உத்ராவையும், அஜயையும் பார்த்ததும் தான் நிம்மதி ஆனது.
அவர்களிடம் நடந்ததை அறிந்தவள், துருவிற்க்காக வருத்தப்பட்டு, பின், மாலையில் சென்று பாப்போம் என்று நினைத்து கொண்டு வேலையை தொடர்ந்தாள்.
அஜய், சுஜியை பார்க்கவும், அவனுக்கு அவள் காலையில் பேசியதும் அவள் திருமணமும் நியாபகம் வர ஒரு மாதிரி நிம்மதி இன்றியே அலைந்தான்.
அவளிடம் பேச போகையில், உத்ரா அவனுக்கு ஏதோ வேலை கொடுத்து வெளியில் அனுப்பி விட்டாள்.
அவன் சென்றதும், சுஜி உத்ரா அறைக்கு வந்தாள்.
அங்கு வேலை விஷயமாக உத்ரா, மீராவுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, சுஜியை கண்டதும் என்ன என்று பார்த்தாள்.
சுஜி, “ஒர்க் இருக்கா உதி… நான் வேணும்னா அப்பறம் வரவா” என்று கேட்க,
உத்ரா “என்ன சுஜி எதுவும் இம்போர்ட்டண்ட் ஆ” என்று கேட்டதும்,
ம்ம் என தலையாட்டியவள் “எனக்கு மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்” என்று சொல்ல,
உத்ரா சந்தோஷத்தில் “ஹே சூப்பர் பங்கு… ஆனால் ஒரு மாசத்துலயா? ரொம்ப கம்மி டைமா இருக்கு. பட் செம்மையா செலிப்ரேட் பண்ணிடலாம். என்ன என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு” என்று சந்தோசமாக பேச, மீராவும், அவளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
சுஜி மெதுவாய் புன்னகைத்து, “நான் ஆஃபீஸ்க்கு வரமுடியாது உதி” என்று சொல்ல, உத்ராவிற்கு நடக்கும் எதுவும் தெரியாததால்,
“ப்ச் நீ போய் என்ஜாய் பண்ணு சுஜி. கல்யாணம், ஹனிமூன்லாம் முடிச்சுட்டு பொறுமையா வா.” என்றாள்.
சுஜி, வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு, “இல்ல உதி… நான் இனிமே இங்க வரமாட்டேன்” என்று அழுத்தி சொல்ல, உத்ரா புரியாமல், “ஏன் சுஜி. கல்யாணத்துக்கும் இங்க வராம இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்க,
மீரா, “உன்னை வேலைக்கு போகவேணாம்னு சொல்லிட்டாங்களா” என்று கேட்டாள்.
சுஜி, இல்லை என்று மறுப்பாய் தலையாட்டி, “கல்யாணத்துக்கு அப்பறம் நானும் சந்துருவும் ஜெனிவா போக போறோம். அங்க தான் இனிமே இருக்க போறேன்” என்று சொல்ல, உத்ரா இதை எதிர்பார்க்க வில்லை.
வீட்டிலும், ஏன் நண்பர்கள் பட்டாளம் கூட ஆண்களாய் இருக்க, சுஜி மட்டுமே பல விதத்திலும் அவளுடன் ஒன்றி விட்டாள்.
அவள் மனது விட்டு பேசுவது அவளிடம் மட்டுமே. சில வருடங்களே என்றாலும், அவள் உத்ராவின் வாழ்வில் மிக முக்கிய அங்கமே. இப்படி திடீரென தன்னை விட்டு செல்வாள் என்று எதிர்பாராதவள், என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, மீராவுக்கும் வருத்தமாக இருந்தது.
இங்கு வந்ததில் இருந்து, அவளிடம் எதையாவது பேசி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாள். நல்ல தோழியாகவும் மாறிவிட்டவள் சட்டென்று கிளம்புகிறேன் என்று சொன்னதும் அவளும் திகைத்து நின்றாள்.
இருவரின் மனதையும் நன்கு அறிந்தவள் வலுக்கட்டாயமாக தன்னை சரி செய்து கொண்டு,
“ஹே இப்போ என்ன இங்க இருக்குற ஜெனிவா தான போறேன்… எப்போ எல்லாம் உங்களை பார்க்கணும்னு தோணுதோ… அப்போ எல்லாம் இங்க வந்துடுவேன். டெயிலி வீடியோ கால் பேசலாம்.” என்று சிரித்து கொண்டு சொல்ல,
உத்ரா “நீ கண்டிப்பா போகணுமா சுஜி” என்று சொல்லிவிட்டு, அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் போது இப்படி அரை வேக்காடுத்தனமாய் பேசக்கூடாது என்று நினைத்து,
“எனக்கு ரொம்ப சந்தோசம் பங்கு. ஒரு மாசம் இங்க தான இருப்ப. இந்த மாசத்தை நல்லா என்ஜாய் பண்ணலாம்… ஹ்ம்ம்” என்று சொன்னதும், சுஜி அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.
“ஐ வில் மிஸ் யு உதி… இனிமே என் லைஃப்ல உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கண்டிப்பா கிடைக்க மாட்டாங்க. உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். எப்படி உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்க போறேன்னு தெரியல” என்றவளுக்கு காதல் வலியும் சேர்ந்தே நெஞ்சை அடைத்தது.
உத்ராவும் அவளுடன் சேர்ந்து கண் கலங்க, மீரா தான் இருவரையும் சமாதானப்படுத்தினாள்.
பின், சுஜி வேலை இருக்கிறது என்று, துருவையும் பார்த்து விட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
அதன் பிறகே, அலுவலகம் வந்த அஜய், அலுவலகம் முழுக்க அவளை தேடி விட்டு, அவளைக் காணாமல் போக, மீராவிடம் சென்று கேட்டான்.
அவள் ஏதோ வேலையில் மும்முரமாக இருக்க, உத்ராகிட்ட கேளுங்க என்று சொல்லி விட, உத்ராவை பார்க்க போகையில் அவள் மருத்துவமனை சென்று விட்டாள் என்று தெரிந்ததும், சுஜியும் உடன் சென்றிருப்பாள் என்று நினைத்து, மருத்துவமனைக்கு சென்றான்.
அர்ஜுனும், விதுவும் வெளியில் பேசிக்கொண்டிருக்க, அஜய் வந்தவன்,
“உதி இங்க தான் இருக்காளா?” என்று கேட்க, “ஆமா உள்ளதான் இருக்கா” என்று சொன்னதும், சிறிது நேரம் வெளியில் நின்றவனுக்கு, சுஜியைப் பற்றி கேட்க ஏதோ தடுத்தது.
அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று நினைத்தவன் அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் கதவை தட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.
உள்ளே, உத்ரா நடந்ததை அவனிடம் சொல்ல, துருவ் ஏதோ யோசித்து விட்டு, “எதுக்கும் கேர்ஃபுல் ஆ இரு உதி. எனக்கு ஏதோ தப்பா இருக்கு” என்றதும்,
அவள் அசால்டாக”சும்மா எதையாவது யோசிக்காம ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துகிறேன்” என்று அதட்டி சொன்னதும் தான், தன் யோசனையை நிறுத்தி விட்டு, ‘ஷ் ஆ’ என்று காலைபிடித்தான்.
அதில் அவள் பதறி “என்னாச்சு துருவ்…” என்று அருகில் போக, சட்டென்று அவளை இழுத்து தோள் மேல் சாய்த்து
“எதுக்கு இவ்ளோ தள்ளி நின்னு பேசுற” அவள் நெற்றியில் முத்தமிட, அதில் அதிர்ந்து சிவந்தவள்,
“என்ன பண்றீங்க துருவ் விடுங்க. இது ஹாஸ்பிடல்…” என்று அவனிடம் இருந்து விலக முற்பட., அவன் பிடியில் இருந்து நகரக்கூட முடியவில்லை.
அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “இப்படி ஒரு ஹாஸ்பிடல்ல தான் உன்னை தொலைச்சேன் உதி. இப்போ அதே மாதிரி ஒரு ஹாஸ்பிடல ல நீ என்கூட இருக்க…” என்று அழுத்தமாய் அவள் கன்னத்திலும் முத்தமிட அவள் திணறினாள்.
பின் “எப்படி எப்படி… லிப் டு லிப் கிஸ் அடிச்சுருவேன்னு என்னையவே மிரட்டுறியா… ஹ்ம்ம்” என்று புருவத்தை உயர்த்தி நக்கலாக கேட்டு கொண்டு,
“பட் நான் மிரட்டலாம் மாட்டேன். டைரக்ட் ஆ ஆக்ஷன் தான்” கண்ணடித்து, அவள் இதழை நெருங்கிட, அவளின் விழிகளும் தன்னால் மூடிக் கொண்டது.
அஜய் உள்ளே செல்கையில், அர்ஜுனும் விதுவும் அவனை தடுத்து கொண்டே உள்ளே செல்ல, அங்கு நடந்த காட்சியை கண்டு பேந்த பேந்த முழித்தனர்.
இவர்களை கண்டதும், துருவிடம் இருந்து சட்டென்று அவள் விலக, துருவ் மூவரையும் தீயாய் முறைத்தான்.
அஜய், ‘இங்க என்னடா நடக்குது’ என்று பார்க்க, அர்ஜுன், ‘இது ஹாஸ்பிடலா என்னாடா’ என்று முறைக்க,
விது, ‘ ஒரு அண்ணன்காரன் முன்னாடியே இவன் இவ்ளோ பண்றானே…’ என்று தலையில் கை வைத்தான்.
உத்ராவுக்கு தான் யார் முகத்தையும் பார்க்கவே முடியவில்லை.
ஐயோ என்று துருவை முறைத்தாள். அவன் இவளை கண்டுகொள்ளாமல், “என்னடா பிரச்சனை உங்களுக்கு..
மனுஷனை நிம்மதியா லவ் கூட பண்ணவிடமாட்டீங்களா.” என்று கடுப்படித்தான்..
அஜய், “நல்லா பண்றடா நீ… நான் பஜ்ஜி இருக்காள்னு நினைச்சு இங்க வந்தேன்…” என்று சொல்ல, ஆண்கள் மூவரும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
அஜய், உத்ராவிடம், “சுஜி எங்க உதி” என்று கேட்க,
அவள் புரியாமல் பார்த்து “அவள் உங்கிட்ட எதுவும் சொல்லலையா” என்று கேட்டாள்.
அஜய் “என்ன சொல்லலையா” என்று குழப்பமாக கேட்க, அவள் நடந்ததை சொன்னதும், அவன் உறைந்தே விட்டான்.
மற்றவர்களுக்கும் இது புதுசெய்திதான்.
அவர்களும் அதிர, உத்ரா, “என்ன எல்லாரும் ஷாக் ஆகுறீங்க… இங்க வந்து துருவை பார்த்து உங்ககிட்ட விஷயத்தை சொல்றேன்னு சொன்னாளே. அவள் இங்க வரவே இல்லையா” என்று கேட்க,
விது, “அவள் வந்தாள் உதி. அப்போ அர்ஜுன் ரௌண்ட்ஸ் போய்ட்டான். துருவ் தூங்கிட்டு இருந்ததால அப்பறம் வந்து பார்க்குறேன்னு சொல்லிட்டு உடனே கிளம்பிட்டாள் எதுவுமே சொல்லல” என்று சொன்னதும்,
அவள் சாதாரணமாக, “ஓ ஒருவேளை ஹாஸ்பிடல்ல இருக்குறனாள சொல்லல போல. அப்பறம் வந்து சொல்லுவாள்” என்று சொல்ல,
அஜய், “அவள் எதுக்கு ஜெனிவா போகணும்…?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டான்.
உத்ரா, “என்னடா பேசுற. கல்யாணத்துக்கு அப்பறம் அவள் சந்துரு கூட தான இருக்க முடியும்” என்று அதட்ட.,
“அவள் போறேன்னு சொன்னா நீயும் சரினு சொன்னியா உதி… அப்படி அவள் யாரையும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். ஏதாவது பண்ணு உதி” என்று அவளை இழந்து விடுவோமோ என்று நடுங்கிய குரலில் கூறினான்.
“உனக்கென்ன பைத்தியமா? நான் என்ன பண்ண முடியும் இதுல. ஏற்கனவே அவளை அவங்க அப்பா வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பனும்னு நினைச்சப்போ நம்ம தான் அவளை அங்க போக விடாம இங்க இருக்க வச்சோம்.
அதுலயே அவருக்கு நம்ம மேல செம்ம காண்டு. ஆனால் கல்யாண விஷயத்துல நம்ம என்னடா பண்ணமுடியும். அதுலயும் அவளுக்கு நல்ல லைஃப் கிடைக்கும் போது நான் எப்படி அதை தடுக்கமுடியும்” என்று உத்ரா நியாயம் கேட்க,
அஜய், “என்ன நல்ல லைஃப்? அவன் கூட இருந்தா அவள் நல்லாருப்பாளா… அவனுக்கு என்ன தெரியும் அவளை பத்தி.” என்று கேட்க,
துருவ் “ஓ அப்போ உனக்கு எல்லாமே தெரியுமா…” என்று நக்கலாக கேட்டான்.
அஜய், “ஏன் தெரியாது… என்னை விட அவளை பத்தி யாருக்கும் தெரியாது. என்னை விட யாரு அவளை நல்லா பார்த்துப்பா” என்று சொன்ன பிறகே தான் என்ன சொன்னோம் என்றே உணர்ந்தவன், அப்பொழுதுதான் அவளின்றி அவனுள் அணுவும் அசையாது என்று உணர்ந்து கொண்டான்.
விது, “யப்பா ராசா… இப்போவது உனக்கு பல்ப் எறிஞ்சுச்சே” என்று பெருமூச்சு விட,
அர்ஜுன், “இப்போ எரிஞ்சு… ஏண்டா. அவளை பத்தி நல்லா தெரியும்னு சொல்ற அப்போ அவள் உன்னை லவ் பண்றது மட்டும் எப்படி தெரியாம போச்சு” என்று கோபமாக கேட்க,
உத்ரா தான் “ஹே என்ன நடக்குது இங்க யாரு யாரை லவ் பண்றா” என்று புரியாமல் கேட்க, துருவ் தான் நடந்ததை கூறினான்.
அஜயும் அப்பொழுது தான் அவன் செய்த முட்டாள்தனத்தை புரிந்துக் கொண்டு விருட்டென்று வெளியில் சென்றான்.
உத்ரா தான், “இந்த சுஜி பக்கி ஒரு வார்த்தை சொல்லிருந்தா, இவனை மண்டைல அடிச்சு நானே கல்யாணம் பண்ணி வச்சுருந்துருப்பேனே.” என்று புலம்பி கொண்டிருந்தாள்..
பின், அர்ஜுன், வேலையைப் பார்க்க சென்று விட, விதுன் வெளியில் துருவிற்கு உபயோகப்படுத்தும் வீல் சேரில் சேரில் கண் மூடி சாய்ந்திருந்தவன், திடீரென ஏதோ எறும்பு கடிப்பது போல் இருக்க, ஆ வென அலறி கொண்டு எழுந்தான்.
எதிரில், வெள்ளை நிற கோர்ட் போட்டு, கையில் ஊசியுடன் ஒரு பெண் டாக்டர் நிற்க, அவன் கையை தேய்த்து கொண்டே,
“யாரு மேடம் நீங்க. எதுக்கு எனக்கு ஊசி போட்டீங்க” என்று கத்தி கேட்க,
அவள் “ஷ் இது ஹாஸ்பிடல் இங்க இப்படி கத்தக்கூடாது. இந்த டைம் உங்களுக்கு இந்த இன்ஜக்ஷ்ன் போடணும். அப்போதான் கால் சரியாகும்” என்று சொல்ல,
அவன் அவளை முறைத்து, “லூசா நீ பேஷண்ட் உள்ள இருக்கான். என் காலை பாரு நல்லா தான் இருக்கு.” என்று குதித்து காட்ட,
அவள் குழம்பி அவன் கையை காட்டி, ” இந்த பேஷண்ட் டேக் நீங்க போட்டுருக்கீங்க அப்போ நீங்க தான பேஷண்ட் ஆ இருக்கனும்.” என்று கேட்டதும், அப்போது தான், விதுன் அந்த டேகை பார்த்தான்.
துருவ் ‘இது வேற எரிச்சலா இருக்கு’ என்று சொல்லி, கையில் இருந்த பேஷண்ட் டேகை விதுவிடம் கொடுக்க, அவன் ஏதோ ஞாபகத்தில் அவன் கையில் போட்டிருந்தான்.
பின், அவன் “ப்ச் இதை போட்ருந்தா உடனே பேஷண்டா” என்று கோபமாக கேட்க,
அவள் “நீங்க வீல் சேர்ல இருந்தீங்க அதான் நான்” என்று தலையை சொரிந்தாள்.
அவன் மேலும் கடுப்புடன் கத்த, அதன் பிறகே அவளுக்கு செய்த தவறு புரிந்தது.
“சார் சார் சாரி சார்.. நான் இப்போதான் லாஸ்ட் இயர் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் சார். தெரியாம நடந்திருச்சு கத்தாதீங்க சார்” என்று கெஞ்ச,
அவன் “என்னது தெரியாம பண்ணுனியா. தெரியாம வேற ஏதாவது ஊசியை போட்ருந்தா என்ன ஆகியிருக்கும். இப்போ என்ன கருமத்தை போட்டுவிட்ட மயக்கமா வருது” என்று தள்ளாடி நிற்க,
அவள் “அது ஸ்லீப்பிங் இன்ஜெக்ஷ்ன் தான் சார் ..” என்று சொல்ல மேலும் கத்தினான்.
அதில் கடுப்பானவள் “ஹலோ சார் நான் என்ன விஷ ஊசியா போட்டேன். மயக்க ஊசி தான போட்டேன். ரொம்ப தான் கத்துறீங்க” என்று சொல்ல, அவன் அவளை தீயாய் முறைத்தான்.
அந்த நேரம் அர்ஜுன் அங்கு வர, “என்ன அனு… என்ன ஆச்சு” என்று கேட்க, அவள் அர்ஜுனை பார்க்கவும் மிரண்டு, “அது ஒன்னும் இல்ல சார்” என்று ஊசியை மறைத்தாள்.
விது “என்னது ஒன்னும் இல்லையா. டேய் உங்க ஆஸ்பத்திரிக்கு வந்தா இப்படித்தான் எல்லாருக்கும் ஊசி போட்டு கொலை பண்ண பார்ப்பீங்களா.” என்று சொல்ல,
அர்ஜுன், “என்னடா சொல்ற..” என்றதும் தான் அனுவிற்கு அவன் அர்ஜுனுக்கு தெரிந்தவன் என்றே தெரிந்தது.
அர்ஜுனுக்கு தெரிந்தால் தன்னை திட்டி சஸ்பெண்டே செய்து விடுவான் என்று விதுவிடம் “சொல்லாதீங்க ப்ளீஸ்” என்று கெஞ்ச, அவள் முகத்தில் என்ன கண்டானோ…
“ஒன்னும் இல்ல” என்று சொல்லி விட்டான்.
“ஒன்னும் இல்லாததுக்கா இப்படி கத்துன” என்று முறைத்து விட்டு செல்ல,
அனு தேங்க் காட்.. என்று நினைத்து விட்டு, “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று அங்கிருந்த நகர போக, அவன் அவள் கையை பிடித்தான்.
“என்னது தேங்க்ஸ் ஆ… இத்துனூண்டு தேங்க்ஸ்க்கா உன்னை போட்டுகுடுக்காம இருந்தேன். ரொம்ப தூக்கம் வரமாதிரி இருக்கு போய் டீ வாங்கிட்டு வா.” என்று கெத்தாக சொல்ல,
அவன் “வாட்… மீ டீ வாங்கணுமா. ஐ ஆம் அ டாக்டர். ஹொவ் கேன் யு” என்று நளினமாக பேச,
விது ” நீ போலி டாக்டர் தான… ஒரு ஊசியாவே உனக்கு குத்த தெரியல. இரு உன்னை அர்ஜுன் கிட்ட சொல்றேன்” என்றதும்,
“சார் சார் அர்ஜுன் சார் கிட்ட சொல்லிடாதீங்க சார். என்னை திட்டுவாங்க” என்று சொல்லிவிட்டு,
“உங்களுக்கு டீ தான வேணும் நானே என் கையால போட்டு உங்களுக்கு எடுத்துட்டு வரேன் சார்” என்று விறுவிறுவென சென்றாள்.
விது.. ‘அட அட… நமக்கு ஒரு அடிமை சிக்கிருச்சு. இங்க இருந்து போற வரை நல்லா டைம் பாஸ் பண்ணலாம்…’ என்று அவள் சென்ற திசையை பார்த்து சிரித்துக் கொண்டான்.
அத்தியாயம் 26
அனு “எல்லாம் என் நேரம்” என்று தன்னை நொந்து, விதுனுக்கு டீ வாங்கி வந்து கொடுக்க, அவனும், தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அதை வாங்கி குடித்தான்.
அனு மெதுவாக அங்கிருந்து நகர போக, அவளை பிடித்தவன், “எங்க ஓடுற. எனக்கு ரொம்ப தூக்கம் வருது. நான் தூங்கிட்டா பேஷண்ட் – அ யாரு பார்த்துகிறது. ஒழுங்கா இங்கயே இரு.” என்று சொல்ல,
அவள், “சார் எனக்கு டைம் ஓவர் ஆகிடுச்சு சார். இதுக்குமேல லேட்டா போனா எங்க அப்பா என்னை திட்டுவாரு சார்” என்று பாவமாக சொல்ல,
விது தான், ‘நம்மளை மாதிரியே பயப்படறாளே’ என்று நினைத்தவன், “சரி போ. காலைல இங்க சீக்கிரம் வந்துடனும் ஓகே வா” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, அவனின் மொத்த குடும்பமும் அங்கு வந்தது.
‘அய்யோயோ’ என்று பதறி விட்டு, அனுவை “போ போ” என்று கிளப்பினான்.
அவள் வந்தவர்கள் யார் என்று பார்த்து கொண்டே நிற்க, அன்னம், விது காதை பிடித்து திருகி, “ஏண்டா இவ்ளோ விஷயம் நடந்துருக்கு. யாருமே எங்க கிட்ட சொல்லல.” என்று திட்ட,
கருணாகரன்,. “கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு. உத்ராவை காப்பாத்த போய் துருவ்க்கு கால்ல ஃபிராக்சரே ஆகியிருக்கு. காலைல நடந்த விஷயம், நைட் ஆகிடுச்சு யாருமே எங்க கிட்ட மூச்சு கூட விடல. மீரா சொல்லித்தான் எங்களுக்கே தெரியுது. ஒரு போன் பண்ணி சொல்லக்கூடாது. எல்லாரை விட பெரியவன் தான நீ. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா…” என்று அவனை சரமாரியாக திட்ட,
இதில் லட்சுமி வேறு, “சரி நீயாவது அந்த தம்பியை பார்த்துக்க வேண்டியது தான. இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்று அனுவை பார்த்தார்.
அவள் தான் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாள்.
விது ‘இப்போதான் இவள்ட்ட ஹீரோயிசம் காட்டுனேன். அது உங்களுக்கு பொறுக்கலையா’ என்று நொந்து கொள்ள, அப்போது அர்ஜுன் வந்தவன், “ஆஹா சிக்கினோமா” என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேய, அவனுக்கும் சரமாரியாக திட்டுக்கள் விழுந்தது.
அனு தான், “நம்மளை பண்ணுன டார்ச்சர்க்கு இவனுங்களுக்கு நல்லா வேணும்…” என்று உள்ளுக்குள்ள சிரித்து கொண்டிருக்க, அர்ஜுன்,
“அம்மா. நான் விதுகிட்ட அப்போவே உங்களுக்கு போன் பண்ணி சொல்ல சொன்னேன். எனக்கு நிறைய வேலைமா. அதான் நான் போன் பண்ண முடியல” என்று தெளிவாக அவனை கோர்த்து விட, விது ‘சோலி முடிஞ்சுது’ என்று தலையை தொங்க போட்டான்.
ஆனால் நடப்பதை யூகித்து கொண்ட அனுவிற்கு தான் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கலகலவென சிரித்து விட்டாள்.
கருணாகரன் அவளை தீயாய் முறைக்க, அவள் அப்பொழுதும் சிரிப்பை நிறுத்தவே இல்லை. அர்ஜுன் “ஷட் அப் இடியட்… கிளம்பு முதல்ல” என்று பல்லைக்கடித்து கொண்டு கூற, அவள் வாயை பொத்தி விதுவை பார்த்து சிரித்து கொண்டு கிளம்பி விட்டாள்.
இப்பொழுது அனைவரும் உள்ளே செல்லப் போக, அர்ஜுன் அவர்களை தடுத்தான்.
“இப்போ அவன் தூங்கிகிட்டு இருக்கான் யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது” என்று சொல்ல, மற்றவர்கள் அவனை முறைத்து, “பரவாயில்லை நாங்க டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வரோம்” என்று முன்னேற, அவன் “இல்ல இல்ல அது… அவன் வந்து அது” என்று திணறினான்.
‘உள்ளே உதி வேறு இருக்கிறாளே. இவன் என்ன என்ன சில்மிஷங்கள் செய்து கொண்டிருக்கிறானோ.’ என்று தான் அவன் பயந்தான்.
அவன் நினைத்தது சரி தான் என்பது போல, உள்ளே துருவ் தூங்காமல், உத்ராவின் கையைப் பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
உத்ரா, கையை இழுத்துக் கொண்டு, “தூங்குங்க துருவ்… டேப்லெட் போட்ருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க” என்று சொல்ல,
அவன் மீண்டும் அவள் கையைப் பிடித்து அவன் கைக்குள் வைத்துக் கொண்டு, “தூக்கமே வரல உதி…” என்க,
“கால் வலிக்குதா துருவ். அதான் தூக்கம் வரலையா.” என்று அவன் அருகில் சென்றாள்.
அவளை கட்டிலில் அமர வைத்து அவள் மடியில் படுத்துக் கொண்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
உத்ரா கடுப்பாகி “இப்போ தூங்க போறீங்களா இல்லையா” என்று திட்ட, அவன் கேட்கவே இல்லை.
சிறிது நேரத்தில் அப்படியே பின்னால் சாய்ந்து உத்ரா தான் தூங்கியிருந்தாள்.
அவளைப் பார்த்து சிரித்தவன், மெதுவாக எழுந்து, அவன் படுக்கையிலே படுக்க வைத்து கொண்டு, அவன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.
அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த அனைவரும், அதை திகைப்புடன் பார்க்க, அர்ஜுனும் விதுனும் ‘இன்னைக்கு நமக்கு சங்கு கன்ஃபார்ம்’ என்று பயந்து கொண்டு நின்றிருந்தனர்.
கருணாகரன் உத்ராவை பார்த்து விட்டு, லக்ஷ்மியை முறைக்க, அவர், “உதி” என்று அவளை உலுக்கப் போனார்.
துருவ் வேகமாக அவரை தடுத்து, “அவளை எழுப்பாதீங்க. தூங்கட்டும்” என்று சொல்ல, அவர் செய்வதறியாமல் கருணாவை பார்த்தார்.
பின் அன்னம், “இப்போ எப்படி இருக்குப்பா. தெய்வம் மாதிரி வந்து என் பொண்ணை காப்பாத்திட்ட தம்பி.” என்று கண் கலங்க,
லட்சுமி, “சாப்ட்டியாப்பா” என்று கேட்க, அவன் ‘சாப்பிட்டேன்’ என்று தலையாட்டினான்.
அர்ஜுனிடம் “அவனுக்கு என்ன சாப்பாடு குடுத்த” என்று கேட்க, அவன் கடையில் வாங்கி கொடுத்தேன் என்று கூறவும், அவனை திட்டினர்.
“நாங்க இருக்கும் போது, எதுக்கு கடையில வாங்கி குடுத்த” என்று, அவரே அவனுக்கு கொண்டு வந்த பாலில் ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தார்.
அவன் வேணாம் என்று மறுக்க, லட்சுமி, “அர்ஜுன் அஜய் மாதிரி நீயும் என் பையன் தான்பா. குடி” என்று குடுக்க, அவனுக்கு தான் என்னவோ போல் இருந்தது.
தயங்கிக் கொண்டே, அதனை வாங்கி குடித்ததும், அர்ஜுனிடம் “எப்போ டிஸ்சார்ஜ்?” என்று கேட்க, அவன் “ஒரு வாரமாவது பெட் ரெஸ்ட் எடுக்கணும்மா” என்றான்.
அவர் “சரி, நீங்க வீட்டுக்கு போங்க, நானும் அப்பாவும் இங்க இருக்கோம்.
.” என்று சொல்ல, துருவ் வேணாம் .. என்று தடுத்தும், அவர்கள் கேட்கவே இல்லை.
இந்த கலவரத்தில் என்ன சத்தம் என்று உத்ரா முழிக்க, மொத்த குடும்பம் அங்கு நிற்பதை பார்த்து பேந்த பேந்த முழித்தாள்.
லட்சுமி, “இதான் நீ அடி பட்டிருக்க பிள்ளையை பார்க்குற லட்சணமா…” என்று திட்ட, கருணா அவளை முறைத்தார்.
சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தவள் ‘நம்ம எப்படி தூங்குனோம்’ என்று குழம்ப, லட்சுமி அவளை வீட்டிற்கு கிளம்ப சொன்னார்.
அவள் “இல்லை நான் இங்க இருக்கேன் நீங்க போங்க” என்று சொல்ல,
“நீ இங்க இருந்து தூங்கனது போதும்.. கிளம்பு முதல்ல,” என்று கண்டிப்பாக கூற, அவளுக்கு அவனை விட்டு போகவே மனம் இல்லை. அவனையே பாவமாக பார்த்து விட்டுக் கிளம்பினாள்.
வீட்டில் சஞ்சுவை தூங்க வைத்து கொண்டிருந்த மீராவிடம் சென்ற அர்ஜுன், “உன்னை யாரு துருவ் ஹாஸ்பிடல்ல இருக்கான்னு வீட்ல சொல்ல சொன்னது. அவன் வேற கைய காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறான். இன்னைக்கு ஜஸ்ட் மிஸ் வீட்ல மாட்ட தெரிஞ்சோம்.” என்றவன்,
“இல்ல இல்ல மாட்டியாச்சு… கருணா மாமா பார்வையே சரி இல்லை. எப்படியும் காலைல விடிஞ்சதும் ஒரு விசாரணை கமிஷன் இருக்கு” என்று தன் போக்கில் புலம்பி கொண்டிருந்தவனை புரியாமல் பார்த்தாள் மீரா.
“என்ன அர்ஜுன் ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கீங்க. உடம்பு ஏதாவது சரி இல்லையா” என்று அவன் நெற்றியில் கை வைத்து பார்க்க,
அவன் முறைத்து “வீட்ல சொன்னதை என்கிட்டயாவது போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல, நான் உதியை அங்க இருந்து கிளம்ப சொல்லிருப்பேன். இப்போ என்ன ஆக போகுதோ” என்று தலையில் கை வைக்க, மீரா திரு திருவெனவிழித்து, “நீங்க ஏதோ திட்டுறீங்கன்னு தெரியுது. ஆனால் எனக்கு எதுவுமே சத்தியமா புரியல” என்று பாவமாக சொன்னாள்.
அவள் பாவனையில் பக்கென்று சிரித்தவன், நடந்ததை சொல்ல, மீரா, “இப்போ வீட்ல தெரிஞ்சா என்ன பிரச்சனை. என் அண்ணன் மாதிரி ஒரு மாப்பிள்ளை எந்த கண்டத்துல போய் தேடுனாலும் கிடைக்காது. அதுவும் இல்லாம, துருவ் அண்ணா உத்ராவை கல்யாணம் பண்ணி இருக்காரு. அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு அவள் மேல” என்று வாய் கிழிய பேச,
அவளையே சிறிது நேரம் பார்த்திருந்த அர்ஜுன், அப்போ “உன்னையும் நான் லவ் சொன்னப்பவே கல்யாணம் பண்ணி இருந்தா, என்னை விட்டு போயிருந்திருக்க மாட்டீல.” என்று அழுத்தமாய் கேட்க, அவள் பேச்சற்று அவனையே பார்த்திருந்தாள்.
பின் அவனே, “சரி அதை விடு. நடக்காத விஷயத்தை பத்தி எதுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு…” என்று சலித்து கொள்ள, உத்ரா அர்ஜுனையும், மீராவையும் சாப்பிட அழைத்தாள்.
மீரா இறுகிப் போய் அங்கு வர, உத்ரா, “இதுங்க பிரச்சனையை எப்படி சரி பண்றது” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து தான், அவளுக்கு அஜய் நினைவே வந்தது. “மீரா அஜய் வந்துட்டானா” என்று கேட்க, அவள் “இல்லையே நான் சாயந்தரம் வந்ததுல இருந்து அஜயை பார்க்கவே இல்ல” என்று சொல்ல, அர்ஜுன் வேகமாக அவனுக்கு போன் அடித்தான்.
அவன் தான் எடுக்கவே இல்லை. உடனே சுஜிக்கு அழைக்க அவளின் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது விது அவசரமாய் அங்கு வந்து, “டேய் உன் தம்பிக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சுருச்சாடா…” என்று கத்த, மற்றவர்கள் அவனை புரியாமல் பார்த்தனர்.
உத்ரா, “என்னடா ஆச்சு” என்று கேட்டதும், விது கடுங்கோபத்தில், “என்ன ஆச்சா, நான் மட்டும் கரெக்ட் டைம்க்கு போகலைன்னா. உன் அத்தை பையன் அற்பாயுசுல போய் சேர்ந்துருப்பான்…” என்று கடுப்படிக்க,
அர்ஜுன் “என்னடா சொல்ற எங்க அவன்?” என்று பதறியதும், “கார்ல தான் இருக்கான்.” என்று சொல்ல, அங்கு சென்று பார்த்தனர்.
எதையோ இழந்தது போலவே தலையை தொங்க போட்டு கொண்டு அமர்ந்திருந்தான்.
அப்பொழுது தான் விது வந்து நடந்ததை சொன்னான். அவன் வீட்டிற்கு செல்லும் வழியில், அஜயின் கார் சீரில்லாமல் செல்வதை கண்டு அவன் பின்னே செல்ல, அப்பொழுது மரத்தில் மோதி அவன் கார் நின்றது.
அந்த நேரம் எதிரில் லாரி ஒன்று வர, அப்பொழுதும் அவன் காரை விட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்ததை கண்டு விது தான் அவனை இழுத்து கொண்டு வெளியில் வந்தான். ஒரு நொடி தாமதமாகி இருந்தாலும், இந்நேரம் லாரிக்கு அடியில் காருடன் நசுங்கி இருப்பான் என்று சிறிது நடுக்கத்துடன் விது சொல்ல, அனைவரும் பதறினர்.
உத்ரா, “லூசாடா நீ. கவனத்தை எங்க வச்சுக்கிட்டு கார் ஓட்டுற” என்று கடிந்து கொள்ள,
அர்ஜுன், “டேய் வாயை திறந்து பேசுடா. என்ன ஆச்சு உனக்கு” என்று கேட்க, அவன் எதுவும் சொல்லாமல் அறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டான்.
என்ன செய்வது என்று புரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, பின், எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்து கொள்ளலாம் என்று உறங்க சென்றனர்.
வெகு நேரம் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்த உத்ராவிற்கு மனது ஏதோ போல் இருந்தது. உடனே துருவைப் பார்க்க வேண்டும் என்று பரபரவென்று வர, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் அர்ஜுன் அறை கதவை தட்டினாள்.
அவன் தூக்க கலக்கத்தில் வந்து என்னவென்று கேட்க, அவள் “உன் ஹாஸ்பிடல் பிளான் குடு…” என்று கேட்டாள்.
அவன் புரியாமல் “எதுக்கு” என்று வினவ,
“இல்லை எந்த பக்கம் சுவர் ஏறி குத்திக்கனும்னு பார்க்கத்தான். அதுவும் இல்லாமல் துருவ் ரூம்க்கு போறதுக்கு வேற வழி இருக்கான்னு பார்க்கணும்” என்று வெகு தீவிரமாக பேச, அர்ஜுன் அவளை கொலை வெறியுடன் பார்த்தான்.
“ஒழுங்கா போய் தூங்கு. அவனை நாளைக்கு பார்த்துக்கலாம். ஏற்கனவே வீட்ல என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம குழம்பி போயிருக்கேன்” என்று கடுப்படிக்க,
அவள் “பங்கு. நீ இப்போ துருவை பார்க்க எனக்கு ஹெல்ப் பண்ணுனா. நான் மீராவை உன் கூட சேர்த்து வைக்க சூப்பர் பிளான் ஒன்னு சொல்லுவேன்” என்று சொல்ல, அவன் விழி விரித்து “நிஜமாவா உதி” என்று கேட்டான்.
“சத்தியமாக பங்கு” என்று அவன் தலையில் அடித்து சத்தியம் செய்தவள்,
“எந்த சுவர் ஏறி குத்திக்கணும்னு சொல்லு பங்கு” என்று விடாமல் கேட்க, அவன் வழி சொன்னதும், ஹையா என்று நடந்த கலவரத்தில் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே அர்ஜுன் அறையில் தூங்கி கொண்டிருந்த விதுனை எழுப்பி, இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல போனாள்.
அர்ஜுன் அவளைத் தடுத்து.. “எருமை ஐடியா சொல்லிட்டு போ” என்று கேட்டதும்,
அவள், “அட என்ன பங்கு நீ… பச்ச புள்ளையா இருக்க. அவள் முன்னாடி வேற ஒரு பொண்ணுகிட்ட ரொம்ப க்ளோஸ் – ஆ இருக்குற மாதிரி பில்டப் குடு. அப்பறம் பாரு. பொஸஸ்ஸிவ்நெஸ் ஜாஸ்தியாகி அவளே இந்த ஜாதகம் மண்ணாங்கட்டி எல்லாம் மறந்துட்டு உன்கிட்ட ஓடோடி வந்துடுவா” என்று சொல்ல,
அர்ஜுன், “இது சரியா வருமா உதி” என்று சந்தேகமாக கேட்க, “கண்டிப்பா பிளான் சக்சஸ் ஆகும்” என்றதில் அர்ஜுன் குஷியானான். அவள் அவன் காதலில் மண்ணை அள்ளி போட்டதை அறியாமல்…
பின், அவள் கிளம்ப போக, மறுபடியும் அவளை தடுத்தவன்,
“பட் எனக்கு தான் கேர்ள் பிரெண்ட்ஸ் யாருமே இல்லையே. அப்பறம் எப்படி” என்று கேட்க,
விது தூக்க கலக்கத்திலேயே “ப்ச் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லைன்னா என்ன. அதான் உன் ஹாஸ்பிடல்ல நிறைய ஃபிகர்ஸ் இருக்கே. அதுல ஒன்னை கரெக்ட் பண்ணுடா. சும்மா நச நச ன்னு பேசிகிட்டு இருக்கான்” என்று இப்பொழுது அவன் தலையில் அவனே மண்ணை வாரிப் போட்டான்.
அர்ஜுன் அப்பொழுதும் “யார் இருக்கா அப்படி” என்று யோசிக்க, உத்ரா, இவன் நம்மள விட மாட்டான் போலயே என்று கடுப்பாகி விட்டு, “அதான் இன்னைக்கு துருவ்க்கு நீ மருந்து எழுதும் போது, உன் பக்கத்துல ஒரு பொண்ணு நின்னுகிட்டு இருந்துச்சே அந்த பொண்ணை கரெக்ட் பண்ணு.
.” என்று சொல்லி விட்டு, விதுவை இழுத்து கொண்டு போக,
அர்ஜுன் “ஹே நீ அனுவையா சொல்ற…” என்று கத்தினான். ஆனால் அதை கேட்கத்தான் அங்கு யாரும் இல்லை.
அஜய் பால்கனியில் நின்று விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான். இன்று சுஜியின் காதலையும் கூடவே தனக்கு அவள் மேல் உள்ள காதலையும் உணர்ந்து கொண்டவன்,அவளை காண வீட்டிற்கு செல்ல, அங்கு அவளுக்கு கல்யாணத்திற்கு பட்டு சேலை செலக்ஷன் நடந்து கொண்டிருந்தது.
அதிலும் சந்துரு அவள் மேல் ஒவ்வொரு புடவையாக வைத்து பார்க்க, அவள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் எதையும் தடுக்கவும் முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அங்கு வந்து இதனை பார்த்த, அஜய்க்கு கோபம் தான் வந்தது. சுஜியின் அம்மா அவனைக் கண்டதும் வரவேற்று இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் முடிவாகி இருப்பதால், இப்போது இருந்தே எல்லாம் வாங்க ஆரம்பித்து விட்டோம் என்று சந்தோசமாய் சொல்லி விட்டு சந்துரு விடம், “மாப்பிள்ளை. இவனால் தான் சுஜி இந்த கல்யாணத்துக்கு சம்மதமே சொன்னாள்…” என்று எரியும் தீயில் எண்ணையை ஊற்ற, அஜய் தன்னையே நொந்து கொண்டான்.
சுஜி அஜயை ஏறெடுத்தும் பார்க்காமல், எங்கோ பார்வையை பதிக்க, இதுவரை அவளை இப்படி ஒரு நிலையில் காணாதவனுக்கு என்னால் தானே இதெல்லாம் என்று வருத்தமாக இருந்தது.
சந்துரு சுஜியிடம் உரசிய படியே பேச, அஜய்க்கு அவனின் மேல் கோபம் கோபமாக வந்தது. நான் சுஜியிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, யார் அனுமதியும் கேட்காமல், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
அவள் கையை உதறி விட்டு, “என்ன பண்ற அஜய்… அங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க.” என்று அதட்ட,
அவன் “என்ன நினைப்பாங்க. இதுவரை நான் உன் கையை பிடிச்சதே இல்லையா” என்று எதிர்கேள்வி கேட்டான்.
“அப்போ வேற, இப்போ”
“இப்போ இப்போ என்ன சுஜி…? இப்பயும் என்னை தவிர உன் மேல யாருக்கும் உரிமை இல்ல. உன்னை யாருக்கும் நான் விட்டு குடுக்க மாட்டேண்டி. எனக்கு நீ வேணும். ஐ நீட் யு மேட்லி.” என்று கத்த, அவன் கன்னத்தில் இடியாய் அவள் கை இறங்கியது.
அதில் அவன் அதிர்ந்து அவளை பார்க்க, அவள், “இன்னொருத்தருக்கு நிச்சயமான பொண்ணுகிட்ட இப்படி தான் வந்து பேசுவியா. சென்ஸ் இல்ல உனக்கு. ஹான்… ? உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம். நீ எதுக்கு என் மேல உரிமை காட்டணும். யாருடா நீ எனக்கு.” என்று கோபமாக கேட்க,
அவன் அதே கோபத்தில், “நான் தான்டி உனக்கு எல்லாம்… நான் உன்னை லவ் பண்றேன். நீ தான் என் பொண்டாட்டி” என்று சொல்ல, அவள் கலகலவென சிரித்து,
“உனக்கு எது எதுல விளையாட்றதுன்னு விவஸ்தையே இல்லையா. உன்னை லவ் பண்றதுக்கு நான் பாழுங்கிணத்துல விழுந்து செத்துடலாம். லூசுத்தனமா பேசிகிட்டு இருக்க…” என்று அவன் சொன்னதையே அவனுக்கு குரல் கமற ரிப்பீட் செய்ய, அவன் திகைத்து நின்றான்.
பின், அவளே “என்னைக்கு என் காதலை நீ காமெடின்னு நினைச்சியோ அப்பவே நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். இங்க இருந்து போய்டு… என் வாழ்க்கைல இருந்தும்” என்று கண்டிப்பாய் சொல்லி விட்டு உள்ளே சென்றவள், ‘லவ் பண்றானாம் லவ்வு. அதை திமிரா வேற வந்து சொல்றான். உன்னை ஒரு மாசத்துக்காவது வச்சு செய்றேன் இரு…’ என்று உள்ளுக்குள் அவனை வறுத்து கொண்டிருந்தாள். அவள் பேசியதை கேட்டு தான் அஜய் காரை கவனம் இல்லாமல் ஓட்டியது.
“தொம்” என்று மருத்துவமனை சுவற்றில் இருந்து உத்ரா குதிக்க, விது தான், “இவள் கூட டெயிலி இதே ரோதனையா போச்சு… முதல்ல இவளோட அண்ணன் பதவியை ராஜினாமா பண்ணனும். அப்போ தான் உசுரோட இருக்க முடியும் போல” என்று புலம்பிக் கொண்டே அவனும் குதித்தான்.
பின், துருவுக்கு பக்கத்துக்கு அறையில், கர்ணனும் லக்ஷ்மியும் இருக்க, விதுவை யாரும் வராமல் பார்த்துக்க சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக, விது.. “ஹே நான் என்ன அண்ணனா என்னடி.” என்று திட்ட வருகையில், அவள் அதை காதில் வாங்காமல் சென்று விட்டாள்.
உள்ளே சென்ற உத்ரா கால் வலியில் முனங்கி கொண்டிருந்தவனை கண்டு, வேகமாக அருகில் சென்று, “துருவ் என்ன ஆச்சுடா…” என்று பதறி கொண்டு கேட்க, அவன் விழித்து,
“இங்க என்ன உதி பண்ற இந்த நேரத்துல.” என்று புரியாமல் கேட்டான்.
“ப்ச் முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு. ரொம்ப வலிக்குதா. தூங்குனியா இல்லையா. லைட்டா காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு” என்று படபடப்பாய் பேச,
துருவ் “எனக்கு ஒன்னும் இல்ல ஹனி. லைட்டா வலிச்சுச்சு அவ்ளோதான்…” என்றதும் அவள் அதனை கண்டுகொள்ளாமல்,
வெளியில் நின்ற நர்ஸை அழைத்து, வலிக்கு மருந்து கொடுக்க சொல்ல, அவள், “சார்க்கு இன்ஜெக்ஷன் போட வந்தேன் மேம். ஆனால் சார் எந்த இன்ஜெக்ஷனும் போடவே விடல, அர்ஜுன் சாரும் மாத்திரை மட்டும் குடுக்க சொன்னாரு” என்று சொன்னதும், துருவை முறைத்தவள்,
“நீங்க இன்ஜெக்ஷ்ன் எடுத்துட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு, அவனை திட்டினாள்.
“ஒழுங்கா ஊசி போட்டா தான சரியாகும். இப்படி வலியில புலம்பிகிட்டே படுத்திருக்க…” என்றவள், நர்சிடம் ஊசியை வாங்கி, அவளை வெளியே அனுப்பி விட்டு, “திரும்பு” என்று அவனிடம் இடுப்பை காட்ட சொன்னாள்.
அவன், “வேணாம் உதி வலிக்கும்” என்று முகத்தை சுருக்க,
“இவ்ளோ அடி பட்டு காலே உடைஞ்சுருக்கு. இந்த ஊசி தான் உனக்கு வலிக்குதாகும்… ஒழுங்கா திரும்பு.” என்று அவன் கத்த கத்த ஊசியை போட்டு விட்டாள்.
பின், அவன் வாயைப் பொத்தியவள், “எதுக்குடா இந்த கத்து கத்துற. நான் என்ன உனக்கு டெலிவரியா பார்க்குறேன்” என்று முறைக்க, அதில், அவன் அவளை பார்த்து மெலிதாய் சிரித்தான்.
ஆனால்… முதலில் நடந்தது எல்லாம் அவளுக்கு நியாபகம் இல்லை. அவன் சொன்னதும் தற்போது அவளுக்கு நினைவு இல்லை. தன்னிச்சையாக தான் எல்லாமே செய்தாள். அதனை அவனும் புரிந்தே இருந்தான்.
பின் அவளை ரசனையுடன் பார்த்து விட்டு, “எதுக்கு உதி வந்த” என்று கேட்க,
அவள், “என்னன்னே தெரியல. உன்னை பார்க்கணும் போல இருந்துச்சு. நீ என்னை தேடுவியோன்னு தோணுச்சு அதான் வந்தேன்… நான் வந்ததும் சரியா போச்சு. இல்லைன்னா விடியிற வரைக்கும் இப்படி முனங்கிகிட்டே படுத்துருப்பீல. இந்த அத்தையும் மாமாவும் பெருசா உன்னை பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு தூங்குறாங்க” என்று பொரிய,
அவன் மனதில் அவளைக் கொஞ்சி கொண்டு “இல்லை உதி அவங்க நான் கம்பெல் பண்ணதுனால தான் போய் தூங்குனாங்க. இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாங்க” என்று சொன்னதும்,
அவள் “சரி நீ தூங்கு.” என்று அவனை மடியில் கிடத்தினாள்.
அவளையே பார்த்திருந்த துருவ் “உதி” என அழைத்து, ஏதோ பேச வருகையில் சட்டென்று நிறுத்தியவன், “உதி ஏதோ சத்தம் கேக்குதுல” என்று கூர்மையாக கவனிக்க, அவளும் கவனித்து விட்டு, “ஆமா துருவ்… காலடி சத்தம் மாதிரி கேக்குது. விது வரானோ” என்று யோசித்து கேட்க, அவன் இல்ல என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே ஒரு உருவம் திடும் என கத்தியுடன் உள்ளே வந்து, துருவ் மீது பாய்ந்தது.
துருவ் அதனை தடுத்து, அவன் கையை பிடிக்க, உத்ரா, “யாருடா நீ” என்று அவனை பிடித்து இழுத்தாள்.
அந்த உருவம், அவளை அங்கு எதிர்பார்க்காமல் திகைத்தது அதன் உடல் அதிர்விலேயே தெரிய, இருவரிடமும் இருந்து தப்பித்து, அங்கிருந்த ஜன்னல் வழியே வெளியில் சென்றது.
உத்ரா அவன் பின்னே ஓட போக, துருவ் “வேணாம் உதி. அவன் தப்பிச்சுருப்பான் விடு..” என்று சொல்ல,
உத்ரா, “யாரு துருவ் அது. உங்களை கத்தியால் குத்த வந்தான். கடவுளே நீங்க தூங்கி கிட்டு இருந்தீங்கன்னா என்ன ஆகியிருக்கும். இல்ல நான் வரலைனா…” என்று புலம்பியவளுக்கு கண்ணீரும்,மேலும் இதனை செய்தவனை கண்டுபிடித்து உண்டு இல்லை என்று ஆக்க வேண்டும் என கோபமும் வந்தது.
துருவ் தான் அவளை அணைத்து அமைதிபடுத்தி, “யாரு இந்த புது பிரச்சனை” என்று புருவத்தை சுருக்கி யோசித்தான்.
அத்தியாயம் 27
மறுநாள், மருத்துவமனையில் வீட்டினர் அனைவரும் முன்பும் உட்சபட்ச கோபத்தில் அர்ஜுனிடம் கத்திக்கொண்டிருந்தாள் உத்ரா.
“என்னடா ஹாஸ்பிடல் நடத்துற? எவனோ உள்ள வந்து கொலை பண்ண பாத்துருக்கான். ஒரு செக்கியூரிட்டி கூட இல்லையா.”
அர்ஜுன், “அவன் வந்த பக்கம் ஹாஸ்பிடல் செட் – அப் வேலை நடந்துகிட்டு இருக்கு உதி. அதுவும் இல்லாமல், சிசிடிவிய ஹேக் பண்ணிட்டு வந்துருக்கான்.
அவன் உள்ள வந்ததையும் வெளிய போனதையும் யாருமே பார்க்கலைனு சொல்றாங்க” என்று சொல்ல,
“அப்போ நான் நேத்து பார்த்தது என்ன ஆவியா. சும்மா காரணம் சொல்லாத. நான் துருவை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். நீயும் உன் ஹாஸ்பிடலும்” என்று முணுமுணுக்க,
அவனோ கோபமாக, “நான் என்ன பண்ணுவேன். செக்கியூரிட்டிலாம் எக்ஸ்டராவா போட்டு தான் வச்சுருக்கேன். அது போக, துருவோட கார்ட்ஸும் இங்க தான இருந்தாங்க. இதுக்கு மேல வேற என்ன பண்ண முடியும்… இப்போ அவன் மெடிகேஷன்ல இருக்கணும். ட்ரிப்ஸ் ஏத்தணும். இப்போ வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போக முடியாது.” என்று கத்த, இவளும் சேர்ந்து கத்த என்று இருவரும் அடிதடி சண்டை மட்டும் தான் போடவில்லை.
மீரா தான் அஜயிடம், “அஜய் நீங்க போய் ரெண்டு பேரையும் அமைதியா இருக்க சொல்லுங்க. பெரிய சண்டை ஆகிட போகுது.” என்று பதட்டத்துடன் கூற,
அவன் “அட நீங்க வேற அண்ணி… இப்போ இதுங்களுக்கு இடைல நம்ம போனா நம்மளை வச்சு டார்ச்சர் பண்ணுங்க.” என்று அசட்டையாக சொன்னதும்,
அவளே போய் அர்ஜுனிடம், “அர்ஜுன் ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க.” என்று அவனை அமைதிபடுத்தினாள்.
“என்ன பொறுமையா இருக்க… இவளுக்கு தான் ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி பேசுறா. நான் என்ன ஹாஸ்பிடல்ல சேஃப்டி இல்லாமையா வச்சுருக்கேன்.” என்று பொரிய..
உத்ரா, “ஆமா… சேஃப்டி இருந்தா, எப்படி அவன் உள்ள வந்துருக்க முடியும். சரி அப்படி வந்தவனை எப்படி யாருமே பார்க்காமல் இருந்தாங்க…” என்று மேலும் சண்டைக்கு எண்ணெய் ஊற்ற,
மீரா, “நீயாவது அமைதியா இருவேன் உதி…” என்று கெஞ்ச, இருவரின் சண்டையும் பெரியதாக தான் போனது.
இதில் கடுப்பான துருவ் தான், “கொஞ்சம் நிறுத்தறீங்களா.” என்று கடுமையாக சொல்லிவிட்டு,
அஜய் விதுவிடம், “நேத்து நைட் இங்க இருந்த எல்லா செக்கியூரிட்டிஸ்கிட்டயும் மறுபடியும் விசாரிங்க. அண்ட் எப்படியும் பக்கத்துல ஏதாவது கேமரா இருக்கும். அதுல ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு போலீஸ் பார்க்குறேனு சொல்லிருக்காங்க அதையும் என்னன்னு விசாரிங்க.” என்று அவர்களை அனுப்பி விட்டு,
அர்ஜுனிடம், “நீ போய் வேலைய பாரு” என்று அனுப்ப,
அவன் “துருவ் நான்…” என்று பேச வந்ததில், “உன்னை போன்னு சொன்னேன்…” என்று அதட்டவும், உத்ராவை முறைத்து விட்டு வெளியில் சென்றான்.
பின், உத்ராவிடம், “நீ ஆஃபிஸ்க்கு போ…” என்றதும்,
அவள் “நான் எங்கயும் போகல” என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் பல்லைக்கடித்து கொண்டு, “ஐ டோல்ட் யூ டு கோ டு தி ஆஃபீஸ்…” என்று கடுமையாக கூறவும், முகத்தை சுருக்கிக் கொண்டு அவளும் வெளியில் சென்று விட்டாள்.
பெரியவர்கள் நால்வர் தான் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். என்ன தான் எல்லாரும் அன்பும், நட்புமாக இருந்தாலும் அனைவருக்கும் பிடிவாதம் அதிகம்.
இதில் அவர்களுக்கு சண்டை வந்தால், அந்த இடமே ரணகளம் ஆகி விடும். அவர்களை அடக்குவது என்பது வீட்டில் இருப்பவர்களுக்கே முடியாத காரியம்.
கருணாவிற்கு மட்டும் தான் பயப்படுவார்கள் என்றாலும், அவர் சொல்வதையும் எதிர்மறையாக தான் செய்வார்கள் இந்த வானர கூட்டம்.
ஆனால், துருவின் ஒற்றை வார்த்தையில் நால்வரும் அவனுக்கு அடங்கியது பெரும் அதிசயமாக தான் இருந்தது அக்குடும்பத்தினருக்கு.
ஆனால் அவர்களுக்கு தெரியாத இன்னொரு விஷயமும் இருக்கிறது.
இவர்களுக்குள் சண்டை வந்தாலும், அதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கும்…
அதாவது ஒரு தப்பை மறைக்க, சண்டை போடுவது போல் போட்டு, அனைவரையும் குழப்பி அவர்கள் செய்த தவறை அவர்களை மறக்க வைத்துவிடுவார்கள்.
இப்பொழுதும், இந்த சண்டை நாடகம். ‘நைட் நேரத்தில் நீ எப்படி எதுக்கு இங்க வந்த’ என்று வீட்டினர் கேட்டால் தான் செத்தோம் என்று தான் அவர்களை கேள்வி கேட்க முடியாத படி இருவரும் சண்டை இட்டு கொண்டனர்.
இதில் மீரா தான் பாவம். இவர்களின் திருவிளையாடல்களை அறியாமல், துருவிடம், “பாவம் அண்ணா ரெண்டும் பேரும் சண்டை போட்டுக்கிட்டாங்க…” என்று பாவமாய் சொல்ல,
அவனுக்கு தான் இவர்களின் அனைத்து செயலும் அத்துப்படியாய் தெரியுமே.
‘இவள் எப்படி தான் இதுங்களோட காலம் தள்ள போறாளோ…’ என்று பாவம் பார்த்தவன், தனக்கும் அதே நிலைமை தான் என்று சிரித்து கொண்டான்.
விதுவும் அஜயும் மருத்துவமனை முழுதும் விசாரித்து, ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று பார்க்க, அப்பொழுது ஒரு சிறு பையனுக்கு ப்ரெஸ்ஸர் செக் செய்து கொண்டு நர்ஸிடம் சில மருந்து பெயர்களை சொல்லிக்கொண்டிருந்தாள் அனு.
அஜயிடம் “நீ அந்த பக்கம் போய் விசாரி நான் இந்த பக்கம் போறேன்” என்று அனுவை பார்த்து கொண்டு சொல்ல, அவனும் சென்று விட்டான்.
அனு அருகில் சென்ற விது, “ஹே போலி டாக்டர். என்ன இந்த சின்ன பையன் வாழ்க்கையில விளையாடிகிட்டு இருக்க…” என்று சத்தமாக கேட்க, அங்கிருந்த அனைவரும் ஒரு முறை இவளை திரும்பி பார்த்து விட்டு சென்றனர்.
அனு கோபமாக “சார். நான் போலி டாக்டர்லாம் இல்லை” என்று முறுக்கி கொண்டு அவனை கண்டுகொள்ளாமல், நர்ஸிடம் அந்த பையனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை சொல்ல, அவள் ஒவ்வொரு மருந்து பெயர் சொல்லும்போதும், விது “இது எதுக்கு இது எதுக்கு” என்று கேட்டு கொண்டே இருந்தான்.
ஒரு கட்டத்தில் கடுப்பானவள், “என்ன சார் நீங்க சும்மா சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க. அப்பறம் எனக்கு மறந்துரும்” என்று விழிகளை உருட்டிக்கொண்டு சொல்ல,
அவன் தான் “என்னாது மறந்துருமா… அப்போ நீ எதையும் தெரிஞ்சு சொல்லல. எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணிட்டு வந்து ஒப்பிச்சுகிட்டு இருக்கியா. நீ கன்ஃபார்ம் ஆ போலி டாக்டர் தான்” என்று நக்கலடிக்க,
அவள் “சார். எனக்கு தெரியும் சார்.” என்று கத்தி சொல்லி விட்டு, அவன் அருகில் மெதுவாக, “இந்த மருந்துங்க பேரு தான் சார் வாயிலேயே நுழைய மாட்டேங்குது. அதை மட்டும் தான் சார் மனப்பாடம் பண்ணுனேன். அர்ஜுன் சார் கிட்ட சொல்லிடாதீங்க சார்.” என்று கெஞ்சினாள்.
‘பட்சி தானா வந்து மாட்டுதே..’ என்று நினைத்துக் கொண்டு,
“ஓ அப்போ இது அர்ஜுனுக்கு தெரிஞ்சா உன்னை திட்டுவானா” என்று குதூகலமாய் கேட்க, அவள் தான் அய்யோயோ நம்மளா தான் உளறிட்டோமா என்று திருதிருவென முழித்தாள்.
விது, “நீ என்ன பண்ற… இங்க இருக்குற செக்கியூரிட்டிஸ் அப்பறம் நேத்து நைட் இங்க இருந்தவங்க எல்லார்கிட்டயும், சந்தேகப்படற மாதிரி யாரும் வந்தங்களானு கேட்டுடுவா” என்று விவரம் சொல்லி அனுப்ப,
“சார் நான் எதுக்கு சார் போய் கேட்கணும்”
“சரி நான் போய் அர்ஜுன் கிட்ட உன்னை பத்தி சொல்றேன்”
“சார் சார் எதுக்கு கோபப்படறீங்க. இவ்ளோ கோபம் உடம்புக்கு ஆகாது சார்… பிளட் ப்ரெஸ்ஸர் வரும், அப்பறம் சுகர் வரும். அப்புறம் இதுனால ஹார்ட் அட்டேக் வந்தா கூட தெரியாதாம் சார்” என்று அவனை பயமுறுத்த,
அவன் மிரண்டு “இவள் நம்மள கொலை பண்ணாமல் விட மாட்டாள் போலயே. சரி தாயே நான் கோபப்படல நீ போய் சொன்னதை செய்” என்று அனுப்பினான்.
அவள் மீண்டும் வந்து, “நீங்க போலீஸ் – ஆ சார். ரகசியமா விசாரணை பண்றீங்களா.” என்று ரகசியமாக கேட்க, அவன் முறைத்த முறைப்பில் அங்கிருந்து ஓடி விட்டாள்.
வெளியில் நின்று விசாரித்து கொண்டிருந்த அஜய், அங்கு சுஜி வரவும், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் இவனை கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல போக, அஜய், “சுஜி” என்று அழைத்து,
“சாரி சுஜி. நான் வேணும்னு உன்னை ஹார்ட் பண்ணல. நிஜமாவே நான் நீ சொன்னதை சீரியஸ் – ஆ எடுத்துக்கல. இங்க வேற நிறைய பிரச்சனை நடந்துக்கிட்டே இருந்துச்சா அதான் எனக்கு எதையும் உணர முடியல. சாரி பஜ்ஜி. என்னால நீ இல்லாமல் இருக்க முடியாது பஜ்ஜி. ஏதோ மாதிரி மனசுலாம் வலிக்குது. என்னை மண்ணுச்சுரு பஜ்ஜி” என்று உருக்கமாக கேட்க,
அவள் “டூ லேட்… இப்போ வந்து சொல்ற, அன்னைக்கு நீ தான என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்ன. அப்போ கூட உனக்கு என் மேல லவ் இல்லைல. என்னால நீ இல்லாம மட்டும் எப்படி இருக்க முடியும்.
ஆனால்.. இப்போ எல்லாமே ஃபிக்ஸ் ஆகிருச்சு. வீட்டுல போய் இதை மாத்தியும் சொல்ல முடியாது. என்னால உன்னை மன்னிக்கவும் முடியாது. சரியான நேரத்துல எடுக்காத முடிவுகளினாலே தான் நிறைய பேரோட வாழ்க்கையே கேள்வி குறி ஆகி இருக்கு. இப்போ அந்த லிஸ்ட்ல நீயும் இருக்க..” என்று கண்ணீர் மல்க பேசி விட்டு உள்ளே சென்றாள்.
அவள் சென்ற திசையவே உணர்ச்சியற்று பார்த்து கொண்டிருந்தான் அஜய்.
முன்ன போல என்கூட நீ சிரிப்பாயா..
என்னை போல நீயும் என்னை நினைப்பாயா
தேடி வந்து நீ தான் என்னை மன்னிப்பாயா
ஆயுசுக்கும் இல்ல என்னை தண்டிப்பாயா
அந்த ஆத்தாங்கரையில நுரையா நானும் இருப்பேன் டி
நீ காப்பாத்தலைன்னா காத்தா மறைஞ்சு போவேண்டி
இது எப்போ உனக்கு புரியுமாடி எனக்கு தெரியல
அடி எதுக்கு புள்ள பொணக்கு என் மேல
நான் உனக்குன்னு தான் பிறந்த ஆம்பள..
அடி எதுக்கு புள்ள பொணக்கு என் மேல..
உள்ளே, துருவ் லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டு, மீராவையும் வேலை வாங்கி கொண்டிருந்தான்.
அப்பொழுது உள்ளே வந்த சுஜி, துருவை முறைத்து, “உங்க ஒரு கால மட்டும் இல்லை ரெண்டு காலையும் உடைச்சுருக்கணும் ப்ரோ” என்று கோபத்துடன் பேச,
துருவ் புருவத்தை உயர்த்தி அவளை பார்த்து விட்டு லேப்டாப்பில் மூழ்கினான்.
மீரா ‘இப்போ இவளுக்கு என்ன ஆச்சு’ என்று குழம்பி “என்ன சுஜி பேசுற” என்று அதட்ட,
“என்ன உன் அண்ணனை பேசவும் உனக்கு கோபம் வருதா. உன் அண்ணன் என்ன பண்ணுனாரு தெரியுமா… என்க,
மீரா, என்னவென்று கேட்டாள்.
“என் கல்யாணத்தை நிறுத்திட்டாரு.” என்று சொல்ல, அவள் அதிர்ந்து விட்டாள்..
“என்னது கல்யாணம் நின்னுடுச்சா” என்று அதிர்ச்சியாய் கேட்க, அவள் “ஆமா” என்று முகத்தை சுருக்கி துருவைப் பார்க்க,
அவன், “கல்யாணம் நின்னதுனால தான இங்க வந்துருக்க.அதுவும் சந்தோசமா. அப்பறம் எதுக்கு இந்த கோபம் டிராமா” என்று கேட்டதும்,
“ப்ரோ நீங்க கல்யாணத்தை மட்டும் நிறுத்தி இருந்தாலும், பரவாயில்லை. எனக்கும் அஜய்க்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எங்க அப்பாவையே மிரட்டிருக்கீங்க. சும்மாவே அவருக்கு அவனை கண்டாலே பிடிக்காது. இதுல நீங்க வேற இப்படி பேசுனதுல அவரு நீ கல்யாணமே பண்ணிக்கலைனாலும் பரவாயில்லை. ஆனால் அஜய மட்டும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு ஒத்த கால்ல நிக்கிறாரு..” என்று பாவமாய் சொல்ல,
மீரா “என்னது அஜய்கும் உனக்கும் கல்யாணமா?” என்று ஆச்சர்யமாய் கேட்டாள்.
சுஜி தான் “ஏன் ப்ரோ மீரா ஒரு ஆச்சர்யக்குறியாவே இருக்காள்…” என்று கேட்க, அவன் “அவள் அப்படிதான்” என்று புன்னகைக்க
“இந்த கதையில இவள் மட்டும் தான் தனியா ஒரு ட்ரேக்ல போறாள். இவள் எப்போ மிங்கில் ஆகி, அர்ஜுன் கல்யாணம் நடந்து, அப்பறம் வீட்ல சொல்லி, எங்க அப்பாவை சரி பண்ணி, கல்யாணம் பண்ணி ஷப்பா இப்போவே கண்ணை கட்டுது…” என்று தலையை சுற்றி சோபாவில் அமர்ந்தாள்.
மீரா அவளை முறைக்க, துருவ் சிரித்துக் கொண்டு, “இந்த வானர கூட்டத்தை சமாளிக்க நீ தான் சரியான ஆளுன்னு நினைச்சா நீ இதுக்கே டயர்ட் ஆகுற…” என்று கேட்க,
அவள் “அட நீங்க வேற ப்ரோ… இந்த பிசாசுகளை சமாளிக்கலாம் நம்மளால முடியாது. பெட்டெர் அதுங்க என்ன பண்ணுதுங்களோ அதை அப்படியே நம்மளும் ஃபாலோ பண்ணிட்டா நம்ம தலை தப்பிக்கும். அப்படித்தான் இத்தனை வருஷமா ஓட்டிக்கிட்டு இருக்கேன்.” என்று சலித்து விட்டு,
பின், “ஆமா ப்ரோ அந்த சந்துரு கிட்ட என்ன சொன்னீங்க… அவன் உடனே கல்யாணம் வேணாம்னு ஜெனிவா போய்ட்டானாம்.” என்று கேட்க,
துருவ் “தெரியல, உதி தான் பேசுறேன்னு சொன்னாள். என்ன பேசுனான்னு நான் இன்னும் கேட்கல. உங்க அப்பாகிட்ட மட்டும் தான் நான் பேசுனேன்” என்றதும்,
அவள் “அடப்பாவிகளா அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த வேலைய பார்த்தீங்களா…” என்று வாயை பிளந்தாள்.
வாசலில் அஜய், “இல்லை 5 பேரும்…” என்று ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான்.
இது அனைத்தும், இவர்களின் வேலை தான். இரவோடு இரவாக திருமணத்தை நிறுத்தி, சந்துருவை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு, சுஜி அப்பாவிடம் பேசினார்கள்.
அவனைப் பார்த்தவள் திரு திரு வென முழித்து விட்டு, ‘இப்போ தான் வெளிய சோக பாட்டு போட்டு நின்னுகிட்டு இருந்தான். அப்போ அதெல்லாம் பொய்யா கோபால்’ என்ற ரீதியில் அவனைப் பார்க்க, அவன் சுஜியைவே பார்த்து கொண்டிருந்தான்.
பின் சட்டென்று திரும்பியவள், துருவிடம், “ப்ரோ. எங்க அப்பவே ஒத்துக்கிட்டாலும் இவனை கல்யாணம் பண்ணிக்க நான் ஒத்துக்க மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,
உத்ரா ‘துருவ் சாப்பிட்டானா இல்லையா’ என்று பார்க்க மருத்துவமனை வர, அவன் கையில் லேப்டாப் வைத்திருப்பதை பார்த்து விட்டு,
“எனக்கு தெரியும் நீ ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க மாட்டன்னு… எதுக்கு இப்போ லேப்டாப்ப மடியில் வச்சுருக்க உனக்கு வேலை இருந்தா அதை மீராகிட்ட குடுக்க வேண்டியது தான. குடு அதை” என்று அதனை வெடுக்கென்று பிடுங்கி, அணைத்து வைத்தாள்.
“இந்த டைம் பெயின் இன்ஜெக்ஷ்ன் போட்ருக்கணுமே போட்டாச்சா “என்று கேட்க, துருவ் அவளின் ஆர்ப்பாட்டத்தை ரசித்து கொண்டு இல்ல என்று தலையாட்டினான்.
அதில் கடுப்பானவள் “இந்த ஹாஸ்பிடல்ல யாருக்குமே பொறுப்பு இல்ல…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அர்ஜுனும் விதுவும் வர,
அர்ஜுனிடம், “என்ன தாண்டா ஹாஸ்பிடல் நடத்துற நீ. ஒரு ஊசி கூட கரெக்ட் டைம்க்கு போட மாட்டிங்களா.” என்று கத்த, எங்கே இவர்கள் மறுபடியும் சண்டையை தொடங்கி விடுவார்களோ என்று மிரண்டு மீரா,
“இப்போ என்ன ஊசி தான நான் போய் நர்ஸை வரச்சொல்றேன்” என்று தலை தெறிக்க வெளியே ஓடினாள்.
சுஜி தான், ஐயோ பாவம் இந்த அடிமை. என்று நினைத்து விட்டு, “உதி இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல…” என்று கேட்க,
அவள் “ஆமா… இந்நேரம் நீ அஜய்யை லவ் பண்றது தெரிஞ்சு உங்க அப்பா உன்னை தூக்கி போட்டு மிதிச்சுருக்கணுமே இன்னும் நீ உயிரோடையா இருக்க” என்று கேட்க, அவளுக்கு தான் புரை ஏறியது.
“பாவிகளா கல்யாணத்தை நிறுத்துனதும் இல்லாமல், என்னை கொலை பண்ண வேற பிளான் பண்றீங்களா” என்று பாவமாய் கேட்டு விட்டு, “அப்படி என்னதாண்டி பேசுன அந்த சந்துருகிட்ட, அப்பாவுக்கு வேற தெரிஞ்சு செம்ம கோபத்துல இருக்காரு” என்று வினவ,
“அதை நீ அஜய் கிட்ட கேட்டுக்கோ” என்று சொல்லவும், அஜய் அவளை பார்த்து உதட்டைக் கடித்து சிரித்தான்.
பின், துருவ்க்கு ஊசியை போட்டு விட்டு, மீண்டும் அனைவரும் உள்ளே ஆஜர் ஆக, துருவ், அஜய் விதுவிடம், “இங்க விசாரிச்சதுல ஏதாவது, க்ளூ கிடைச்சுதா” என்று கேட்டான்.
அஜய் “எல்லாரும் தெரியலன்னு தான் சொல்றாங்க” என்று சொல்ல, துருவ் விதுவை பார்க்க,
அவன் “ஒரு அடிமை ஒன்னு எனக்காக வேலை பார்க்க போயிருக்கு. இப்போ வந்துடும் வெய்ட் பண்ணுங்க” என்று கெத்தாக சொல்ல,
அஜய் தான் “நீயே ஒரு அடிமை… உனக்கு ஒரு அடிமையா” என்று நக்கலாக கேட்டதில், அவனை முறைத்தான்.
சிறிது நேரத்தில் அனு துருவின் அறைக்குள் நுழைய, அங்கு நிறைய பேர் இருப்பதை பார்த்து விட்டு பேந்த பேந்த முழித்தாள்.
அர்ஜுன் இவள் ஏன் இங்க வர்றா என்று யோசிக்க, விது.. “ஹே அடிமை… விசாரிச்சியா” என்று கேட்க, அவள் அர்ஜுனை பார்த்து ம்ம் என்று தலையாட்டினாள்.
மற்றவர்கள் இவள் தான் அந்த அடிமையா என்று பார்க்க, அவள் அர்ஜுன் திட்டுவானோ என்று அவனை பாவமாக பார்த்தாள்.
அர்ஜுன் “என்ன விசாரிச்ச?” என்று கேட்டதும், அவள் ஒரு பெரிய சார்ட் பேப்பரை எடுத்து, அனைவர் முன்பும் விரித்தாள்.
எல்லாரும் இவள் ஏதோ முக்கியமாக சொல்ல போகிறாள் என்று கூர்மையாய் கவனிக்க, அவள் அந்த சார்ட் பேப்பரில் கையை வைத்து, அர்ஜுனிடம் “இங்க தான சார் அந்த மிஸ்டர் எக்ஸ் குதிச்சுருக்கான்…” என்று காட்ட, அவன் ஆமா என்றான்.
பின் விதுனிடம் திரும்பி, “இங்க தான நின்னுகிட்டு இருந்த செக்கியூரிட்டிஸ் டியூட்டில இருந்த ஸ்டாஃப் எல்லார்கிட்டயும் விசாரிக்க சொன்னீங்க. அது போக அங்க இருந்து அப்படியே வந்தா, இந்த ரூம் வந்துடும். கரெக்ட் தான சார்” என்று கேட்க, அவனும் “ம்ம் ஆமா ஆமா கரெக்ட் தான் நீ மேல சொல்லு…” என்று ஆர்வமாக கேட்டான்.
உத்ரா ஆர்வத்தை அடக்க முடியாமல், “யாரவது பார்த்தாங்களா அவனை” என்று கேட்க,
அவள் “பொறுங்க மேடம் இப்படி எல்லாம் இடைல கேள்வி கேட்டா எனக்கு மறந்துரும்” என்று மீண்டும் அந்த சார்ட் பேப்பரை பார்த்தாள்.
உத்ரா தான், “இவனோட அடிமை இவனை மாதிரியே இருக்கு…” துருவிடம் முணுமுணுக்க,
அவன், “எனக்கு என்னமோ இவள் எதுவும் சொல்லுவாள்னு தோணவே இல்லை…” என்று சொன்னதும்,
“நான் இதை விது அவனோட அடிமைன்னு சொன்னதுமே கண்டுபிடிச்சுட்டேன் துருவ்” என்றதில், இருவரும், சிரித்து கொண்டனர்.
அவர்களை பார்த்த அனு, விதுவிடம் “சார் இங்க எவ்ளோ முக்கியமான விஷயம் போய்கிட்டு இருக்கு. இவங்க என்னன்னா இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. என்ன சார் இது…” என்று நெற்றியில் கை வைக்க,
அவன் “ப்ச் ரெண்டு பேரும் சும்மா இருங்க” என்று அதட்டிவிட்டு, “நீ சொல்லு” என்றான்.
அவள் மேலும், “அங்க இருந்த செக்கியூரிட்டிஸ்கிட்ட கேட்டேன். யாருமே பார்க்கலையாம்” என்றதும் அவளை அனைவரும் முறைக்க அவள் மேலும், “ஆனால் இங்க இருந்த ஸ்டாஃப் கிட்ட கேட்டேன்” என்று சொல்லி நிறுத்தவும் . அனைவரும் ஏதோ சொல்ல போகிறாள் என்று அவளையே பார்க்க, அவள் கிளுக் என சிரித்து விட்டு, “பட் அவங்களுக்கும் எதுவும் தெரியல…” என்று சொன்னதும் தான் தாமதம், சுஜி அவள் கையை பிடித்து வளைத்தாள்.
உத்ராவிடம் “பங்கு இவளை என்ன பண்ணலாம்” என்று கேட்க,
உதி, “நீ என்ன பண்ற, இவள் கையை சிக்ஸ்டி ஃபைவ் போட்டுடு. காலை, கொழம்பு வச்சுட்டு… இவள் மூளை இருக்குல்ல அதை அப்படியே ஃப்ரை பண்ணி” என்று சொல்ல சொல்ல,
அனு மிரண்டு “யக்கா யக்கா அப்படி எதுவும் பண்ணிடாதீங்கக்கா…” என்று கெஞ்சி விட்டு, விதுவை பார்க்க, அவன் ‘இதுங்ககிட்ட போய் உன் வாய் ஜாலத்தை காட்டுனீல. நல்லா வாங்கு’ என்று முறைத்தான்.
பின் அவள் அர்ஜுனிடம் “சார் சார்… என்னை விட சொல்லுங்க சார். உண்மையாவே ஒரு க்ளூ இருக்கு” என்றதும்,
அர்ஜுன், அவர்களிடம் இருந்து அவளை காப்பாத்தி “சொல்லு,” என்றான்.
அவள் மறுபடியும் சார்ட் பேப்பரை பார்த்து, “அதாவது இந்த பில்டிங்க்கு பின்னாடி” என்று பேச வர, அஜய், அந்த சார்ட் பேப்பரை எடுத்து சுக்கு நூறாய் கிழித்து, “இப்போ மட்டும் நீ எதுவும் சொல்லல. இங்க கொலையே விழும்” என்று மிரட்டவும் தான்,
அவள் “சார் எதுக்கு சார் அதை கிழிச்சீங்க. அதுல தான் சார் க்ளூவே இருக்கு…” என்று விழி விரித்து சொல்ல,
விது “என்ன கலாய்க்கிறியா” என்று கேட்டதும்,
அனு “ஐயோ இல்ல சார்… நிஜமாவே நான் அதுல ஒரு வண்டி நம்பர் எழுதி இருந்தேன். அதான் நேத்து வந்தவனோட வண்டி நம்பர்ன்னு எதிர்த்த பில்டிங்ல ஒரு தாத்தா சொன்னாரு.
அவர்கிட்ட நான் எப்பவும் பேசுவேன். அவருக்கு நைட்லாம் தூக்கம் வராது அதுனால வெளியில தான் உட்காந்துருப்பார அதான் அவர்கிட்ட கேட்டப்போ… அவரு தான் இந்த நம்பர் குடுத்தாரு.” என்று சொல்ல, மற்றவர்கள் அஜயை முறைத்தனர்.
துருவ் அனுவிடம் “அதெப்படி வண்டி நம்பர் இவ்ளோ கரெக்ட் ஆ சொல்ல முடியும்” என்று வினவ,
அவள் “நான் அதையும் தாத்தாகிட்ட கேட்டேன் சார். அவன் வண்டியில இருந்து இறங்கும் போது அவன் டிரஸ்ல இருந்து கத்தி கீழ விழுந்துச்சாம். அதுனால, அவர் ரொம்ப உன்னிப்பா பார்த்ததுல தான் வண்டி நம்பர் மனசுல பதிஞ்சுருன்னு சொன்னாரு.
அப்பறம் கொஞ்ச நேரத்திலேயே அவன் வண்டி எடுத்துட்டு கிளம்பிட்டான் அப்டின்னு சொன்னாரு” என்று வெகுளியாய் அவர்களுக்கு பிரச்சனையின் ஒரு முடிச்சை அவிழ்க்க,
மறுபடியும் அஜயும் விதுவும் அந்த சார்ட் பேப்பரை சேகரித்து, ஒரு வழியாய் அந்த வண்டி என்னை கண்டறிந்து, போலீசிடமும் கூறினர்.
உத்ரா அர்ஜுனிடம் கண்ணை காட்ட, அர்ஜுன், அனு கையை பிடித்து கொண்டு, “தேங்க்ஸ் யூ சோ மச் அனு. எங்களுக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணிருக்க தெரியுமா” என்று அவளிடம் கொஞ்சும் குரலில் மீராவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு பேச, மீராவின் முகம் சுண்டியது.
இங்கு விது அர்ஜுன் கையை பார்த்து விட்டு, “இப்போ ஏன் இவன் இவள்கிட்ட இப்படி பேசிகிட்டு இருக்கான்” என்று மீராவை பார்க்க, அவன் நடப்பதை புரிந்து கொண்டு, “என்னாது… இவளை தான் இவன் கரெக்ட் பண்ண போறானா” என்று பேந்த பேந்த முழித்து கொண்டு நின்றான்.
அஜய் சுஜியை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல, அவள்” விடுடா” என்று கத்துவதை எல்லாம் காதில் வாங்காமல் காரில் சென்று அமரவைத்து, வண்டியை கிளப்பினான்.
சுஜி, “இப்போ விட போறியா இல்லையா… காரை நிறுத்து” என்று கத்த, காரை நிறுத்தியவன், அவளை பார்த்து கொண்டே, மெல்ல அவள் அருகில் நெருங்க, அவனின் இந்த புது பார்வையைக் கண்டு சுஜிக்கு தான் உடலெல்லாம் நடுங்கியது.
அவளை நெருங்கியவன், அவன் இதழ்களால் அவள் கன்னத்தை உரச, அதில் மொத்தமாய் கரைந்தாள்.
பின், அஜய், அவள் காதருகில் சென்று அவளை ரொமான்டிக் ஆக ஒரு பார்வை பார்த்து கொண்டு, “ஊஹிபுக்கி” என்று சொல்ல, அவள் கடுப்பாகி, “இப்போகூட உனக்கு கிண்டலா தான் இருக்குல்ல” என்று அவனை மொத்து மொத்து என மொத்தினாள்.
இங்கு, அனுவிடமே பேசிக்கொண்டிருந்த, அர்ஜுனை கண்டு மீராவுக்கு ஏதேதோ உணர்வுகள். உத்ராவிடம் பேசும்போது அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மற்ற பெண்களிடம் பேசும்போது, அவளே அறியாமல் கோபமும் அழுகையும் வந்தது.
அதில் அவள் விருட்டென்று வெளியில் செல்ல, விது வலுக்கட்டாயமாக, அர்ஜுன் கையை அனுவின் கையில் இருந்து எடுத்து, “அதான் அவள் போய்ட்டால்ல. போய் மீராவை பாருடா” என்று கடுப்பாக சொல்லிவிட்டு, அனுவை முறைத்து விட்டு அவன் வெளியில் சென்றான்.
பின், அனுவும் என்ன இவனுங்களா வந்து பேசுனாங்க இப்ப ஆளாளுக்கு கிளம்பிட்டானுங்க… என்று முழித்து விட்டு, அவளும் கிளம்பினாள்.
துருவ் ஏதோ யோசனையில் இருப்பதை கண்ட உத்ரா, “என்ன துருவ் யோசனை” என்று கேட்க,
“உதி… எனக்கு என்னம்மோ இது சின்ன பிரச்சனையா முடியும்னு தோணல. எதுக்கும் எல்லாருமே ரொம்ப கேர்ஃபுல் ஆ இருங்க…” என்றதும்,
அவள், அவனை புரியாமல் பார்க்க, அவன், “கண்டிப்பா அன்னைக்கு வந்தவன் உனக்கு தெரிஞ்சவனா தான் இருக்கணும். இல்லைன்னா உன்னை பார்த்ததும் ஓடிருக்க மாட்டான்” என்று சொல்ல, உத்ரா, “அப்படியும் இருக்குமோ” என்று யோசித்தாள்.
பின், “யாரா இருக்கும் துருவ். அதுவும் எனக்கு தெரிஞ்சவன் மூலமா உங்களை கொலை பண்ணனும்னு நினைக்கிறவன்” என்று கேட்க, அவன் தீர்க்கமாய் யோசித்து விட்டு,
என் கெஸ் கரெக்ட் னா… இதுக்குலாம் காரணம் அவனா தான் இருக்கனும். கரண் பிரகாஷ்…” என்று சொல்ல, அவள் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து,
“சாவடிச்சுருவேன் உன்னை. இன்னும் நீ பிளாஷ்பேக் முடிக்கலையா… ஒரு ஆறு மாசத்தை மறந்ததுக்குள்ள இத்தனை ஃபிளாஸ் பேக்க உடம்பு தாங்காதுடா…” என்று பாவமாக சொல்ல, துருவ் வாய் விட்டு சிரித்து விட்டான்.
உத்ரா அவனை முறைத்து, “இன்னும் என்ன என்ன என்கிட்டே சொல்லாம இருக்க” என்று கேட்க, அவன் அவளை இழுத்து மடியில் போட்டு கொண்டு,
“உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன் ஹனி” என்றான் கிசுகிசுப்பாக.
“எ எ என்னது…”
துருவ் அவள் கன்னத்தில் கோலம் போட்டுக்கொண்டே,
“அது… என்னன்னா… அன்னைக்கு ஷிப்ல.” என்று இடைவெளி விட,
அவள் மிரண்டு, “ஷிப் ல” என்று கேட்டாள்.
“உனக்கு தாலி செயின் போட்டு விடவும், எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சா… சோ…” என்று இழுக்க..
அவள் எச்சிலை விழுங்கி கொண்டு, “சோ” என்றதும்,
“ஐயோ அதை போய் நான் எப்படி சொல்லுவேன்… வெட்க வெட்கமா வருது.” என்று அவளின் தோளில் முகத்தைப் புதைத்தான்.
அவள் கோபமாக, “இப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்ல போறியா இல்லையா…” என்று கேட்க,
“என்ன நடக்கலை அதான் அன்னைக்கே எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சே” என்று சற்று அசட்டையாக சொல்ல,
அவள் விழி விரித்து “எல்லாமேன்னா ?” என்று கேள்வியாய் கேட்க,
அவன் குறும்புடன் “எல்லாமே தான்” என்று கண்ணடித்ததில் அவள் அரண்டு போய் அவனை பார்த்தாள்.
அத்தியாயம் 28
துருவ் கூறிய விஷயத்தில், உத்ரா அரண்டு போய் அவனை பார்க்க, அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவள் மிரண்ட விழிகளில் இதழ்களை ஒற்றி எடுத்தான்.
“சான்ஸே இல்ல ஹனி… நீசெம்ம கட்…” என்று குறும்பு வழிய சொன்னவனின் வாயைப் பொத்திய உத்ரா அவனிடம் இருந்து விலகி,
“நீ சும்மா பொய் சொல்ற. நான் நம்பமாட்டேன்.” என்று சிலுப்பிக் கொண்டாள்.
துருவ் மீண்டும் அவளை இழுத்து அருகில் அமர வைத்து விட்டு,”நீ நம்புற மாதிரி நான் ஒரு மேட்டர் சொல்லவா…” என்று கேட்க,
அவள் தான் ‘இவன் ஸ்லாங்கே சரி இல்லையே. கேட்போமா வேணாமா’ என்று யோசித்தாள்.
“என்ன ஹனி… சொல்லவா” என்று மீண்டும் அழுத்தி கேட்க, சரி என்று தலையாட்டினாள்.
துருவ் அவள் இடையில் வருடிக்கொண்டே, “உன் இடுப்புல கியூட்டா ஒரு…” என்று சொல்லும்போதே,
“போதும் போதும் போதும் நான் நம்புறேன்… நீ ஒன்னும் சொல்லவேண்டாம்” என்று உத்ரா கெஞ்ச, அவன் சிரித்து கொண்டே, “இன்னும் சொல்லவே இல்லை. நான் சொல்லிமுடிச்சுடறேன்” என்று ஆரம்பித்தான்.
அவள் முகத்தை மூடிக் கொண்டு “அச்சோ ப்ளீஸ் வேணாம் துருவ். ப்ளீஸ்…” என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
அவன் அவளையே ஆழமாய் பார்த்திருக்க, கண்ணைத் திறந்தவள் அவனின் கண்களை பார்த்து விட்டு, அவள் கைகளை தோள்களில் மாலையாக போட்டு,
“நீ பொய் சொல்றன்னு எனக்கு தெரியும். ஒருவேளை அப்படி ஏதாவது நடந்திருந்தாலும், என் முழு சம்மதத்தோட தான் நடந்துருக்கும்… என் துருவ்க்கு அவரோட ஹனியை எப்பவுமே கஷ்டப்படுத்த தெரியாது.” என்று மெலிதாய் சிரித்துக் கொண்டு கூற, அவன் அவளின் புரிதலில் விழி விரித்து,
“அதெப்படிடி நான் உன்னை ஏமாத்தும்போதும் என்னை நம்புன. இப்போ நான் யாருன்னு கூட தெரியாம இருக்கும்போதும் என்னை நம்புற…” என்றவன், அவளை இழுத்து இறுக்கமாக அணைத்து கொண்டு, “லவ் யு ஹனி… லவ் யூ” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருந்தான்.
அவனின் அணைப்பில் தன்னை மறந்தவள், அவன் நெஞ்சில் சாய்ந்து, அந்த இதத்தை கண்ணை மூடி அனுபவிக்க, துருவ் “உதி, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா…” என்ற கேள்வியில் கண் விழித்தாள்.
அவன் தாபத்துடன், “அன்னைக்கு மாதிரியே நான் இப்பவும் இருப்பேன்னு சொல்ல முடியாது உதி. உன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால முடியலடி… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா ஹனி.” என்று காதலுடனும், அவள் தனக்கு இப்பொழுதே வேண்டும் என்ற பிடிவாதத்துடனும் கேட்க, அவள் “அதான் மூணு வருஷத்துக்கு முன்னாடியே ஆகிடுச்சே” என்று லேசாக புன்னகைத்தாள்.
“ப்ச், அது வீட்டில யாருக்கும் தெரியாதுல. இப்போ எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கோபமாக ஆரம்பித்து சற்று கெஞ்சலாக முடிக்க,
தலையை ஆட்டி “பண்ணிக்கலாம்” என்ற உத்ரா, “ஆனால் கொஞ்ச நாள் போகட்டும். இப்போ என்ன அவசரம்” என்றாள் அவனைப் பாராமல்.
அவனோ “என்ன அவசரமா… அடியேய் என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா…” என்று விட்டு, பின், “சரி எனக்கு கால் சரியாகவும் பண்ணிக்கலாமா?” என்று கேட்க, அவள், அவனின் புலம்பலை ரசித்துப் பின் திருதிருவென விழித்து,
“அது ஒரு மாசத்துல சரி ஆகிடும். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்” என்றாள்.
“ஒரு மூணு மாசம்”
“இல்ல இன்னும் கொஞ்ச நாள்…” என்று தயங்க,
அவன் அவளை ஒரு பார்வை பார்த்து “ஆறு மாசம்” என்று கேட்க, அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
அதில் பெருமூச்சு விட்டு, “ஒரு வருஷம்” என்று கேட்க,
உத்ரா “இதை பத்தி அப்பறம் பேசுவோமே. முதல்ல உங்களுக்கு உடம்பு சரியாகட்டும்…” என்று அவனை விட்டு விலகப் போனவளின் கையை இறுக்கமாக பற்றியவன் அழுத்தமாக, “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீயே சொல்லு?” என்று கோபத்துடன் கேட்டான்.
அவள் மெதுவாக, “எனக்கு உங்க நியாபகம் வந்ததுக்கு அப்பறம்…” என்று சொல்ல, அவன் திகைத்து விட்டான்.
“என்ன உதி இது முட்டாள்தனம்… இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்” என்று கண்டிப்புடன் கேட்க,
உத்ரா அவனைப் பாராமல் “நீ தான என்கிட்ட சொன்ன. எனக்கு நியாபகம் வந்தாதான நான் உன்னை லவ் பண்றதை ஒத்துப்பேன்னு” என்று அவனிடமே எதிர்கேள்வி கேட்டாள்.
அவன் அவளை முறைத்து, “அப்போ இருந்த என் மனநிலை அப்படி. நீ என்னை தப்பா நினைச்சு, ஒரு பரிதாபத்துல என்னை லவ் பண்றேன்னு சொல்றியோன்னு நினைச்சேன்.
ஆனால் அதை தான் இல்லைன்னு நீ எனக்கு புரியவச்சுட்டியே உதி. நானும் புருஞ்சுகிட்டேன்ல. சொல்லப்போனா தப்பு என் மேல தான். நான் உன்கூட என்ன நடந்தாலும் இருந்து புரிய வச்சிருக்கணும். இப்போ தான் நான் எல்லாத்தையும் உணர்ந்துட்டேனே.. அப்பறம் ஏன் உதி இப்படி பேசுற…” என்று கோபமாக ஆரம்பித்து, சலிப்பாக முடித்தான்.
உத்ரா, அவன் அருகில் சென்று, “நீ சொன்னதுக்காக மட்டும் இல்லை துருவ். இப்போ இருக்குற மனநிலையில் உனக்கு உன் நியாகம் இல்லைனாலும் பரவாயில்லைன்னு தோணலாம்.
நாளைக்கு இதே மாதிரி மனநிலை இருக்காதே. ஒருவேளை எனக்கு எதுவுமே நியாபகம் வரலைனா?
கொஞ்ச நாள் கழிச்சு நீ என்கிட்ட உன் பழைய ஹனியை தான தேடுவ. அப்போ என்னால உங்கிட்ட நான் நானா இருக்க முடியாது.
மூணு வருஷத்துக்கு முன்னாடி உன்னை எப்படி காதலிச்சேன், எப்படி நம்புனேன், இதெல்லாம் எனக்கு தெரியல.
அப்போ நான் வேற. ஆனால் கண்டிப்பா இப்போ நான் பழைய உத்ரா இல்லை. அது எனக்கே தெரியும்..அப்பா இறந்ததுக்கு அப்பறம்… வீட்டு பிரச்சனை… பிசினெஸ் பிரச்சனைன்னு…” என்று ஆரம்பித்தவள்,
“ப்ச். அதெல்லாம் உனக்கே தெரியும். எப்படியும் நீ என்னை வாட்ச் பண்ணிக்கிட்டு தான இருந்துருப்ப… அதுல நான் நிறையவே சேஞ்ச் ஆகிட்டேன்.
ஆனால் ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன். அப்போ நான் உன்னை எவ்ளோ லவ் பண்ணேன்னு எனக்கு தெரியாது. ஆனால் இப்போ நான் உன்னை அதை விட அதிகமா தான் லவ் பண்றேன். அதை நான் உன்கிட்ட எக்ஸ்போஸ் பண்ற விதம் கூட சரியா தப்பான்னு தெரியல. நான் உங்கிட்ட பழைய மாதிரி இல்லாமல் வித்தியாசமா நடந்துக்குறேன்னான்னு கூட எனக்கு தெரியல…” என்று கண்ணில் நீர் உருண்டோட பேசியவள்,
அவன் தோளில் சாய்ந்து கொண்டு, கமறிய குரலில் “பட் நீ கொஞ்ச நேரம் என்கூட இல்லைன்னாலும் எனக்கு என்னமோ பண்ணுது துருவ்.
உன் பக்கத்துல இப்படி உரசிகிட்டே இருக்கணும் போல இருக்கு. உன்னை விட்டு கொஞ்சம் விலகுனாலும், என் உடம்புல இருந்து ஏதோ ஒரு பார்ட் இல்லாத மாதிரியே இருக்கு. இதெல்லாம் கடைசி வரைக்கும் வேணும் துருவ்… உன் ஹனியா இருந்தா மட்டும் தான் உன்னால முழு மனசோட என்கூட வாழ முடியும்.
இல்லைன்னா, இன்னும் நான் உன்னை யாரோவா தான் நினைச்சுருக்கேன்னு தான் நினைப்ப…” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்க்க, அவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தான்.
அவனின் இந்த நிலைதான் அவளுக்கு உள்ளுக்குள் பயத்தை கொடுத்தது.
“துருவ் என் மேல கோபமா… நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா” என்று பாவமாய் கேட்க,
அவன் பதிலேதும் சொல்லாமல், மணியைப் பார்த்து விட்டு, “3 மணிக்கு வீடியோ கால் கான்ஃபெரன்ஸ் இருக்கு. மீரா எங்க…? அவளை வர சொல்லு.. இம்பார்ட்டண்ட் கிளையண்ட்” என்று சம்பந்தமில்லாமல் பேச, அவள் பேந்த பேந்த முழித்தாள்.
அவள் முழியை பார்த்து விட்டு, “உனக்கும் டைம் ஆச்சு ஆஃபிஸ்க்கு கிளம்பு.” என்று சொன்னவன்,
“அப்பறம், அந்த வண்டி நம்பர் பத்தி விசாரி… அது யாரு என்னன்னு ஈவினிங்குள்ள எனக்கு தெரியணும்.” என்று கட்டளைகளைக் கொடுத்து விட்டு, லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அதில் மூழ்கினான்.
உத்ரா தான் மருகிக்கொண்டு நின்றாள். அவன் கோபமாக பேசி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சாதாரணமாக பேசியது தான் அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
பின் அவளுக்கு போன் வந்ததில், அவனைப் பார்த்துக்கொண்டே வெளியில் வந்து விட்டாள்.
வெளியில், மீராவுக்கு மனது, எரிமலையாய் வெடித்தது.
‘அது எப்படி நான் இருக்கும்போது அவர் அந்த பொண்ணு கையை பிடிக்கலாம்’ என்று நினைத்தவளின் மனசாட்சியே,
‘உன்னையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது மத்த பொண்ணுங்களையும் பார்க்க கூடாதுன்னா அப்போ அவன் என்னதான் பண்ணனும்’ என்று எக்களிக்க,
‘அதுவும் உண்மைதானே. அவன் வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டும்’ என்று எப்பொழுதும் போல் அவள் தேய்ந்த டேப் ரெக்கார்டரை ஓட விட, அர்ஜுன் அவளை நோக்கி வந்தான்.
வந்தவன் அவளைப் பார்த்து விட்டு, “என்ன மீரா, கண்ணு கலங்கி இருக்கு. தூசி எதுவும் விழுந்துருச்சா” என்று நக்கலாக கேட்க,
அவள் ‘நான் அழுகுறது உனக்கு நக்கலா இருக்கா’ என்று மனதினுள் திட்டிக்கொண்டு அவனை தீயாய் முறைத்தாள்.
அதில் அவன் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு நிற்க, அப்பொழுது என்று பார்த்து முக்கியமாக ஏதோ சந்தேகம் கேட்க வந்த அனு, “அர்ஜூன் சார்… இந்த டவுட் கொஞ்சம் க்ளியர் பண்ணுங்க” என்று கேட்க, அவனும் இதான் சாக்கு என்று மீராவையும் நகரவிடாமல், அனு போதும் போதும் என்ற அளவுக்கு விளக்கம் சொன்னதில்,
அவள் தான் ‘என்ன ஆச்சு நம்ம டாக்டர்க்கு. எப்பவும் ஒரு நிமிஷம் கூட அதிகமா பேசமாட்டார். இப்போ ஏன் ஒரு மாதிரி வித்தியாசமா நடந்துக்கிறாரு’ என்று நினைத்துக்கொண்டே மீராவை பார்க்க,
அவள் இவளை பார்வையால் சுட்டெரிப்பதிலேயே, ‘ரைட்டு. இவனுங்க லவ்க்கு நம்மளை ஊறுகாய் ஆக்குறாய்ங்க போல.’ என்று சுதாரித்தவள்,
பின், ‘ப்ச் நமக்குத்தான் லவ்லாம் செட் ஆகல. அவங்களுக்காவது பிக் அப் ஆகட்டும்.’ என்று அமைதியாய் இருந்தாள்.
சிறிது நேரத்தில் அவள் சென்றதும், மீராவை வெறுப்பேற்றியதில் குளிர்ந்து போய் நின்றிருந்த அர்ஜுன்,
பின், அவளை ரொம்ப சோதிக்கவேண்டாம் என்று நினைத்து, “மீரா… அனு” என்று சொல்ல போக,
அவள் “நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கோங்க அர்ஜுன்… உங்களுக்கு எல்லா விதத்திலயும் அவள் தான் பொருத்தமா இருப்பாள்.” என்று சொல்லிவிட்டு, “மீட்டிங் இருக்கு நான் போய் அண்ணாவை பார்க்குறேன்” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அர்ஜுன் அவள் பேசியதில் அதிர்ந்து போய் நிற்க, இங்கு விதுனும் அவள் பேசியதை கேட்டு உச்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தான்.
அதில் அர்ஜுன் தோள் மேல் கையை போட்டு, “மச்சான் அனு உனக்கு தங்கச்சி மாதிரி டா. உன் ஃபோகஸ் எல்லாம் மீரா மேல தான் இருக்கணும்” என்று சற்று பாவமாக சொல்ல,
அர்ஜுன் அவனை முறைத்து, “டேய். அவள் ஏதோ உளறிட்டு போறாள்ன்னா. நீ வேற. இந்த உதி இருக்காளே… ஐடியா குடுக்குறாளாம் ஐடியா…” என்று பல்லைக்கடித்து கொண்டு கூற, விது நிம்மதியான மனதினை புரிந்து கொள்ளாமல், அனுவை கிண்டல் செய்யலாம் என்று அவளை பார்க்க சென்றான்.
அங்கு அவள், இரண்டு மருந்தினை கையில் வைத்து கொண்டு, சிரிஞ்சில் எதை ஏற்றலாம் என்று யோசித்துக் கொண்டு நிற்க,
விதுன், “எப்போ பாரு ஏதோ ஒரு குழப்பத்துலயே தான் இருப்பாள் போல…” என்று தனக்குள் சிரித்து கொண்டு,
“என்ன போலி டாக்டர். இன்னைக்கு யாரை கொலை பண்ணலாம்னு யோசிக்கிறியா” என்று நக்கலாக கேட்க,
அவள், “சார் போலி டாக்டர் போலி டாக்டர்ன்னு சொல்லாதீங்க சார். அப்பறம் என்னை டாக்டர்ன்னு யாரும் ஒத்துக்க மாட்டாங்க…” என்று முகத்தை சுருக்க,
அவன் “அப்பவும் யாரும் ஒத்துக்க மாட்டாங்க…” என்று கிண்டலாக சிரித்தான்.
பின், ஹேண்ட் பேகில் வெளியில் தெரிந்த டிபன் பாக்ஸை எடுத்தவன், “என்ன கொண்டு வந்துருக்க” என்று அதனைத் திறக்க,
“சார் அது என்னோடது சார்…” என்று பதறினாள்.
“ஆமா அப்பறம் என்னோடதுன்னா சொன்னேன். எனக்கு பசிக்குது. நீ கேன்டீன்ல சாப்டுக்கோ” என்று அந்த சாம்பார் சாதத்தை ஒரு வெட்டு வெட்டினான்.
அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு, அந்த சாம்பார் சாதத்தையே பார்க்க அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை.
சாப்பிட்டு முடித்ததும், காலை நீட்டி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன், “நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்க…” என்று சொல்ல, சுள்ளென்று முதுகில் யாரோ அடிப்பது போல் இருக்க, திரும்பியவன் அங்கு உத்ரா நிற்பதை கண்டதும், அசடு வழிந்தான்.
அவள் “இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க. அந்த வண்டி நம்பர் யாரோடதுனு கண்டு பிடிச்சாச்சாம்… வா போகலாம்” என்று அழைக்க,
அவனும் ‘கொஞ்ச நேரம் பெர்ஃபார்மன்ஸ் பண்ண விடுதுங்களா’ என அனுவை பார்த்து கொண்டே சென்று விட்டான்.
அனுவிற்கு தான் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. “ஷப்பா… குடும்பமாடா இது. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு எக்ஸ்டென்ஷன்ல இருக்கு…” என்று தலையில் அடித்து கொண்டவள்,
“இவனுக்கு தெரியாமல் ஒரு ஊசியை போட்டு விட்டு நான் படர அவஸ்தை இருக்கே… அய்யய்யயோ…” என்று சந்தானம் பாணியில் அவளை அவளே கிண்டல் அடித்து விட்டு கிளம்பினாள்.
இங்கு அஜய் காரில் சுஜியிடம் சரமாரியாக அடிகளை வாங்கினான்.
“உனக்கு இப்போ கூட கிண்டல் தான்ல… என் ஃபீலிங்ஸ் உனக்கு விளையாட்டா இருக்கு இல்ல” என்று கண்கலங்க கேட்க,
அதில் பதறியவன் அமைதியாக அவளைப் பார்த்து, “லூசு… நான் சொன்ன வார்த்தைக்கு கூகிள்ல என்ன அர்த்தம்ன்னு போட்டு பாரு” என்று சொல்ல ,
அவள் புரியாமல், வேகமாக இணையத்தில் பார்க்க, அதனை பார்த்தவள் முகம் செவ்வானமாக சிவந்தது.
அவள் சிவப்பை ரசித்தவன், “நீ தான் ரொம்ப லேட்… நான்லாம் ஃபர்ஸ்ட் மீட்டிங்லேயே அரேபிக்ல ப்ரொபோஸ் பண்ணிட்டேன்…” என்று குறும்புடன் கூறி விட்டு,
மீண்டும் அவளருகில் சென்று “ஊஹிபுக்கி பஜ்ஜி” என்று காதலுடன், அரேபிய மொழியில் ‘ஐ லவ் யு’ என்று கூற, அவள் வெட்கத்தில் அவனைப் பார்க்க முடியாமல் திரும்பி கொண்டாள்.
அவன் ரசனையுடன் பார்த்து விட்டு “ஆமா… இதை நீ இத்தனை வருஷமா செய்யவே இல்லையா” என்று கேட்க,
அவள் “அது, நீ என்னை எப்படியும் கலாய்ச்சு தான் சொல்லிருப்பான்னு நினைச்சு நான் பார்க்கவே இல்லை” என்று சிரித்தாள்..
பின் கோபமாக, “என்னை லவ் பண்ணாதான் அவன் ஒரே நாள்ல ஓடிப்போயிடுவானே. அப்பறம் இப்போ மட்டும் உனக்கு எப்படி லவ் வந்துச்சு” என்று முறுக்கி கொள்ள,
“ஹே நான் தான் சொன்னேன்ல, ஆரம்பத்துல இருந்தே எனக்கு உன்மேல க்ரஷ் இருந்துச்சு டி… அன்னைக்கு காலேஜ்ல முதல் தடவை பார்க்கும்போதே, என் மனசுல ஏதோ ஒரு மூலைல நீ வந்து ஸ்ட்ராங் ஆ உக்காந்துட்ட” என்று வெகு தீவிரமாக சொல்லிக்கொண்டிருக்க,
அவள் நக்கலாக, “ஆமா உன் மனசு என்ன பார்க்கா வந்து உட்கார்ந்து காத்து வாங்க…” என்று முறைக்க,
‘உன்கிட்ட போய் ரொமான்டிக் ஆ பேசுனேன் பாரு’ என்று முறைத்து விட்டு, “உன் மேல லவ் இல்லாமையா, உன்னை இழந்துட கூடாதுன்னு நைட் ஓட நைட்டா எல்லா வேலையும் பார்த்தோம்.” என்றான்.
அவள் “டேய் உன்னை கொன்னுடுவேன். லூசாடா நீங்க… ஒரு நாள் வெயிட் பண்ணிருந்தா நானே இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன். “என்று தலையில் கை வைக்க, அவன் புரியாமல் பார்த்தான்.
“முதல்ல நீயும் என்னை லவ் பண்ணலைன்னு நினைச்சு கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னமோ உண்மைதான்…
ஆனால் நேத்து நீ அப்படி வந்து பேசிட்டு போனதும் என்னால, நிம்மதியா இருக்கவே முடியல. நீயும் என்னை லவ் பண்றன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் அவனை கல்யாணம் பண்ணிக்க எனக்கு என்ன லூசா பிடிச்சுருக்கு…” என்று விட்டு,
மேலும், “நான் இன்னைக்கு தான், சந்துருகிட்ட பொறுமையா பேசி, அம்மாகிட்ட சொல்லி, அப்பாவுக்கு புரியவச்சு முதல்ல கல்யாணத்த நிறுத்திட்டு அப்பறமா உன்னை லவ் பண்றதை மெது மெதுவா சொல்லலாம்னு பிளான் போட்டு வச்சிருந்தேன். இப்படி அநியாயமா சிக்கல்ல மாட்டி விட்டுடீங்களேடா.” என்று பாவமாக சொன்னாள்.
அவன் தான் ‘அய்யோயோ நம்ம தான் அவசரப்பட்டுட்டோமா…’ என்று அவளிடம் “அதாவது நேத்து என்ன நடந்துச்சுன்னா” என்று சொல்லிவிட்டு மேலே பார்க்க, அவள் “என்ன பிளாஷ்பேக் ஆ..” என்று கேட்டு விட்டு, “நீ தான் இதை சொல்லாமல் இருந்த இப்போ நீயும் ஸ்டார்ட் பண்ணிட்டியா சொல்லும்… சொல்லித்தொலையும்.” என்றதும் அவன் முந்தைய நாள் இரவு நடந்ததை கூறினான்.
துருவை ஒருவன் தாக்க வந்ததற்கு பிறகு, உத்ரா, அர்ஜுனையும், அஜய்யும் வரசொல்லிவிட்டாள்.
அப்பொழுதே போலீசிற்கு தகவல் சொல்லி ஒரு மினி கூட்டமே அங்கு நடந்தது. அனைவரும் நடந்ததில் அதிர்ச்சியாகி விட்டு, பின் அதையே காமெடியாக பேசிக்கொண்டிருக்க, அஜய் தான் சுஜி பேசிய வார்த்தைகளின் தாக்கத்திலேயே இருந்தான்.
அவளை ரொம்பவும் வருத்தி விட்டோமே என்று இலக்கின்றி சிந்தித்துக் கொண்டிருந்தவனை உத்ரா, “டேய் உனக்கு என்னடா ஆச்சு..” என்றவள், துருவிடம் அவனுக்கு நடக்க இருந்த விபத்தை பற்றி சொன்னாள்.
அதனை கேட்டவன் அமைதியாக யோசிக்க, உத்ரா, “உனக்கு என்ன தான் பங்கு பிரச்சனை. சுஜியை போய் பார்த்தியா. உன் மனசுல என்னதான் இருக்கு” என்று கேட்டவளுக்கு அவனும் அவளை காதலிக்கிறானா என்றே தெரியவில்லை…
அஜய், “எனக்கு சுஜி வேணும். நான் அவளை லவ் பண்றேன். அதை நான் இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். ஆனால் என் முட்டாள்தனத்துனால தேவையில்லாத பிரச்சனை” என்று கண் கலங்க அங்கு நடந்ததையும், தன் கவனக்குறைவால் தான் விபத்து நடந்ததையும் கூறினான்.
அர்ஜுனும் விதுனும், “இது உனக்கு இப்போதான் தெரியுதாக்கும்” என்ற ரீதியில் முறைத்தனர். உத்ராவுக்கு தான் பெரும் ஆச்சர்யமாய் இருந்தது. அவன் மனதில் அவள் அவனையே மறக்கும் அளவுக்கு ஆழமாக இருப்பாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
பின், “என்கூடையே தானடா இருக்கீங்க அதெப்படிடா எனக்கே தெரியாம கம்மிட் ஆகுறீங்க…” என்று சந்தேகமாய் கேட்க,
விது கலகலவென சிரித்துக்கொண்டு உதியிடம், “உதி அவனுங்க கம்மிட் ஆனது உனக்கு தெரியலைன்னாலும் பரவாயில்லை. ஆனால் நீ கம்மிட் ஆனதே உனக்கு தெரியல பார்த்தியா அங்க நிக்கிற நீ ” என்று கலாய்க்க, உத்ரா அவனை வெட்டவா குத்தவா ரீதியில் வெறித்தனமாய் முறைத்தாள்.
இதை கேட்ட அர்ஜுன், அஜய்க்குமே சிரிப்பு வந்து விட, துருவ் தான், “எதை எதை கிண்டல் பண்றதுன்னு விவஸ்தையே இல்லை இவனுங்களுக்கு…” என்று அவர்களை அடக்கினான்.
பின் துருவின் திட்டப்படி, முதலில் சந்துருவிடம் சென்று உத்ரா, சுஜி, அஜய் காதலை பற்றிக் கூற, அவன்,
“இப்போ இதெல்லாம் ரொம்ப சகஜம். இதெல்லாம் ஒரு விஷயமா” என்று சாதாரணமாய் கூறினான்.
பின், அவள் ஸ்டைலில் அவனை மிரட்டி, “இப்பொழுது மட்டும் நீ கிளம்பவில்லை என்றால், இனி ஜென்மத்துக்கும் நீ ஃபாரின் போகமுடியாது” என்று அவனை நடுங்க வைத்தாள். வெளிநாட்டு மோகம் கொண்டவனோ அங்கிருந்து உடனே கிளம்பி விட்டான்.
பிறகு அர்ஜுன் சென்று, சுஜியின் பெற்றோரிடம் பேச, அவளின் அம்மா கூட ஒப்புக்கொண்டார். ஆனால் அவளின் அப்பா மசியவே இல்லை.
அர்ஜுனும், அஜயும் சலிப்பாக “இவர் என்னடா இப்படி பேசுறாரு. இவரை கொஞ்சமாவது சரி பண்ணுனா தான் நம்ம வீட்ல பேசமுடியும்” என்று துருவிடம் புலம்ப, அவன் வீடியோ கால் வரச்சொன்னான்.
பின், அவளின் அப்பாவிடம் அவனை பற்றி அறிமுகப்படுத்தி விட்டு, பேச ஆரம்பிக்க, அவர் அவன் சொல்வதை காதில் வாங்கவே இல்லை.
துருவுக்கும் பொறுமைக்கும் தான் சம்பந்தமே இல்லையே. சட்டென்று கோபமாக, “நீங்களா ஒத்துக்கிட்டா உங்க சம்மதத்தோட கல்யாணம் நடக்கும். இல்லைன்னா நீங்க இல்லாமையே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பேன்…” என்று அழுத்தமாக கூற, அவர் தான் இவனின் தீவிரத்தை கண்டு அதிர்ந்து விட்டார்.
அதன் பின், என்னையவே எப்படி மிரட்டலாம் என்று சுஜியிடம் கோபப்பட்டு, இப்பொழுது பிடிவாதமாய் இருக்கிறார் என்று அவன் சொல்லி முடிக்க, எவ்வளவு வில்லத்தனம் பார்த்துருக்குதுங்க.. என்று தலையில் கை வைத்தாள்.
அந்நேரம் உத்ராவிடம் இருந்து போன் வந்ததில் இருவரும் அலுவலகம் விரைந்தனர்.
அங்கு அவர்களின் குடோனில், துருவின் ஆட்கள், அந்த வண்டி ஆசாமியை பிடித்து வைத்திருக்க அங்கு சென்று அவன் யாரென்று பார்த்தவர்கள் அதிர்ந்து விட்டனர்.
அவன் உத்ராவின் பி.ஏ ராஜா.
உத்ரா கடுங்கோபத்துடன் அவனை அடிக்க, அவன் “மேம் சாரி மேம் நான் வேணும்னு பண்ணல மேம்…” என்று கெஞ்ச,
அவள் “யூ சீட்… என் கூட இருந்துகிட்டு எனக்கே குழி பறிக்கிறயா.” என்று மீண்டும் அவனை பளாரென அறைந்தாள்.
வீடியோ காலில் இவர்களைப் பார்த்து கொண்டிருந்த துருவ் “உத்ரா” என்று கண்டிக்கும் குரலில் கூறி விட்டு, ராஜாவிடம், “எதுக்கு இப்படி பண்ணுன…?”என்று கேட்க, அவன், அமைதியாய் இருந்தான்.
பின், மற்றவர்கள் அவனை போட்டு புரட்டி எடுக்கவும் தான், அவன் “சொல்லிடறேன் மேம்… ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி என் வைஃப் அ ஒருத்தன் கடத்தி வச்சுக்கிட்டு, துருவ் சாரை கொலை பண்ணனும்னு சொன்னான். அதுவும், என் மூலமா பண்ண வச்சு என்னை நீங்க தான் பண்ண வச்சீங்கன்னு உங்கள் மேல பலி போட சொன்னாங்க. என் வைஃப் இன்னும் அவங்ககிட்ட தான் மேம் இருக்காள்.
இதை நான் பண்ணலைன்னா. அவளை கொன்னுடுவேன்னு மிரட்டுனானுங்க. இப்போ கூட என்னை பார்த்துகிட்டு தான் இருப்பாங்க. ப்ளீஸ் மேம் எனக்கு என் வைஃப் வேணும்” என்று அழுது கரைந்தான்.
அர்ஜுன் தான் விதுவிடம், “பாவம்டா இவன், இவளுக்கு பி.ஏவா இருந்துகிட்டு, நிம்மதியா பொண்டாட்டி கூட குடும்பம் நடத்த முடியல…” என்று நக்கலடிக்க, அஜய் “அவனே பொண்டாட்டியை நினைச்சு ஃபீலிங்ல இருக்கான் ஏண்டா” என்று முறைத்தான்.
விதுவோ,”சிம்பிள் பங்கு… உனக்கு கல்யாணம் ஆகாம இருக்கேன்னு கவலை. அவனுக்கு கல்யாணம் ஆகியும் லவ் பண்ண விட மாட்டுறாங்களேன்னு கவலை.” என்று கேலி செய்தான்.
பின் உதி, ” யாரு இதெல்லம் பண்ண சொன்னது. உன் வைஃப இப்போ எங்க வச்சுருக்காங்கன்னு தெரியுமா” என்று அவனுக்கு தண்ணீரை கொடுத்து கொண்டு கேட்க, அவன் “தெரியாது” என்று தலையாட்டி விட்டு,
ஆனால் “இதெல்லாம் யாரு பண்றான்னு எனக்கு ஒரு கெஸ் இருக்கு மேம்…” என்றான்.
உத்ரா யாரென்று பார்க்க, அவன் “கரண் பிரகாஷ்” என்று சொன்னான்.
துருவ் சொன்ன அதே பெயரை அவனும் சொல்ல, அவள் துருவை அவன் யாரென்று பார்த்தாள்.
துருவ் யோசனையுடன் புருவத்தை சுருக்கி கொண்டு இருக்க,
சுஜி தான், “அய்யோயோ ப்ரோ பிளாஷ்பேக் சொல்லபோறீங்களா… நீங்க பத்து எபிசோட்ல இழுப்பிப்பீங்க” என்று நக்கலடிக்க,
அவன் அவளை முறைத்து விட்டு, “அவர் என் பிசினெஸ் எனிமி. அது போக, அவரு என்னை விட ரொம்ப சீனியர். அனுபவஸ்தர்.
ஆனால் சரியான குரங்கு புத்தி… முதல்ல, நானும் எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன்னு மரியாதை தான் குடுத்தேன். ஆனால் அவன், ஜெயிக்கணும்னா என்ன வேணாலும் பண்ணுவான்னு தெரிஞ்சதும் ஆஸ்திரேலியால அவன் பிசினஸை நான் முடக்கிட்டேன்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அந்த ஆளு இங்க வந்துட்டாரு. இப்போ நான் இந்தியா வந்தது தெரிஞ்சதும் என்னை பழி தீர்த்துக்க நினைக்கிறான்.” என்று சொல்ல,
உத்ரா, “அவன் எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கட்டும்… அவனுக்கு செம்மதியா இருக்கு.” என்று பல்லைக்கடித்து கொண்டு கூற,
துருவ் “ப்ச் உதி முதல்ல ராஜாவோட வைஃப எப்படி வெளிய கொண்டு வரதுன்னு பாரு..” என்று சொல்லிவிட்டு,
அவன் “இப்போ இங்க சாதாரண ஆள் இல்லை. ஆளுங்கட்சி மினிஸ்டர். கிரிமினல் பொலிட்டீஷியன்” என்று சொல்ல,
மற்றவர்கள் “அப்போ இவ்வளவு நேரமா நீ மினிஸ்டர் கரண் பிரகாஷ் பத்தியா பேசிகிட்டு இருந்த…” என்று அதிர்ந்து பார்த்தனர்..
விதுனும் அஜயும், “அடியாளுங்க கிட்ட அடி வாங்குனது பத்தாதுன்னு அரசியல்வாதிங்ககிட்டயும் அடி வாங்கணுமா…” என்று புலம்ப,
உத்ரா, துருவிடம், “அவன் பாட்டுக்கு ஆஸ்திரேலியால இருந்துருப்பான். அவனை அடிச்சு இங்க வர வச்சு, பெரிய ஆளா ஆக்கிவிட்ட பெருமை உன்னையே தான் சேரும் துருவ்” என்று கிண்டலடிக்க,
அவன் கோபமாக “எல்லாரும் கொஞ்சம் சீரியஸ் ஆ பேசுறீங்களா…” என்று அதட்டி விட்டு,
“முதல்ல, ராஜாவோட வைஃப ரெஸ்கியூ பண்ணனும்…” என்றவன் அஜய் சுஜியிடம் “நீங்க அந்த கரணோட ஆக்டிவிடீஸ் வாட்ச் பண்ணுங்க…” என்றான்.
விதுன் அர்ஜுனிடம், “ராஜாவோட போன் கால் ஹிஸ்டரி எல்லாத்தையும் செக் பண்ணுங்க… அவனுக்கு வந்த நம்பர்ஸ் எல்லாத்தையும் ட்ரேக் பண்ணுங்க. இப்போ ராஜா நம்ம கிட்ட மாட்டிகிட்டான்னு தெரிஞ்சதும், அந்த பொண்ணை கொலை பண்ண தான் பார்ப்பாங்க. நமக்கு டைம் ரொம்ப கம்மியா தான் இருக்கு.” என்று சொல்லிவிட்டு,
உத்ராவிடம், “ராஜா அங்கேயே இருக்கட்டும். நீ மட்டும் நான் சொல்ற இடத்துக்கு வா. நான் அங்க வந்துடறேன்” என்றான்.
உத்ரா, “விளையாடறியா… உன்னால எப்படி நடக்க முடியும்? நாங்க பார்த்துக்குறோம்” என்று சொல்ல சொல்ல அவன் கேட்கவே இல்லை.
உத்ராதான், அவனைக் கண்டு பல்லைக்கடித்தாள், அங்கு நடக்க இருக்கும் சரித்திரத்தில் இடம் பொறிக்கவிருக்கும் சம்பவத்தை அறியாமல்…
அத்தியாயம் 29
துருவ், அவன் சொன்ன இடத்திற்கு உத்ராவை போக சொல்ல, அவள், முதலில் மருத்துவமனைக்கு தான் வந்தாள்.
துருவ் அவளை முறைத்து, “நான் உன்னை…” என்று ஆரம்பிக்க,
“நீ கால் ஊண்டவே கூடாது துருவ். இப்போ எதுக்கு நீ வரேன் வரேன்னு சொல்லிக்கிட்டு இருக்க…” என்று உத்ரா திட்ட,
“நான் வந்தா தான் சரி வரும். ஒரு கால் நல்லாத்தான இருக்கு. நான் மெதுவா நடக்கிறேன்” என்றான் பிடிவாதமாக.
அவள் அவனை முறைத்து விட்டு, “சரி நீ வா… பட் நடக்காத” என்று வீல் சேரில் அமர வைத்து, அவனையும் சேர்ந்து தள்ளி கொண்டே, காருக்கு வர,
அவன் “ஹே கால்ல அடி தான பட்டருக்கு. காலே போன மாதிரி பில்ட்அப் குடுக்குற. இந்த வீல் சேர்லாம் வேணாம்…” என்று மறுக்க, மறுக்க, அவனை காரில் அவளே கை தாங்களாக அமர வைத்து விட்டு, வீல் சேரையும் காரினுள் போட்டாள்.
இவள் அலப்பறை இருக்கே… என்று புன்னகைத்தவன், பின், “அந்த கரண் பிரகாஷ் வீட்டுக்கு போ” என்று சொல்ல,
அவள் விழி விரித்து “மினிஸ்டர் வீட்டுக்கா. விளையாடறியா? அங்க கட்சி ஆளுங்க நிறைய பேர் இருப்பாங்க..அது போக, நம்ம சேர்ந்து அங்க போனோம்னா நம்ம கல்யாணத்துக்கு அந்த ஆள் கிட்ட ஆசீர்வாதம் வாங்க போனோம்னு பத்திரிக்கைகாரன் கிழிச்சு தோரணமா தொங்க விட்ருவான்.
சும்மாவே நம்ம ரெண்டு பேரை பத்தி தாறுமாறா எழுதுறானுங்க. இதுல என் பெரியப்பா வேற என்னை கொலை குத்தம் பண்ணுன மாதிரி முறைச்சு பார்த்துகிட்டே இருக்காரு. நானே அவர் கண்ணுல படாம சுத்திகிட்டு இருக்கேன். இதுல நீ வேற” என்று புலம்பி தள்ளினாள்.
அவன் சிறிது யோசித்து விட்டு, “இது நல்லாருக்கே. அப்போ கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும்… காரை ஸ்டார்ட் பண்ணு.” என்று அசட்டையாக கூற உத்ரா மறுத்தாள்.
அவன் “இப்போ நீ காரை ஓட்டுறியா. இல்ல நானே ஓட்டட்டுமா?” என்று கடுமையாக கேட்க,
உத்ரா, “ஆ ஊ… ன்னா திட்ட வேண்டியது. உராங் உடான்.” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு ஓட்டியவள், காரை அந்த மினிஸ்டர் வீட்டின் பின் பக்க வாசலில் நிறுத்தினாள்.
துருவ் ஏன் என்று கேட்க, “முன்னாடி வாசல்ல ஆளுங்க இருப்பாங்க.. நம்ம இந்த வாசல் வழியா போகலாம்.” என்று இறங்கி விட்டு, துருவை வீல் சேரில் அமர வைத்து தள்ளிக்கொண்டு முன்னேறப் போகையில் அங்கு நடந்த காட்சியை பார்த்து,
உத்ரா “என்னடா நடக்குது இங்க.” என்று கத்தினாள்.
துருவ் இவள் ஏன் இப்படி கத்துறா என்று அவனும் அங்கு பார்க்க, அவன் ‘இவன் இங்க என்ன பண்றான்…’ என்று குழம்பினான்.
இப்படி இவர்களின் குழப்பத்திற்கே காரணம் வேறு யாரும் இல்லை. நம்ம விதுன் தான்.
துருவ் அவனுக்கு வேலை குடுத்து அனுப்ப, விதுன் மருத்துவமனை வழியாக செல்ல, அப்போது அனு வண்டி பஞ்சர் ஆகி வண்டியையே பாவமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
விதுன், அவள் முன்னே சென்று காரை நிறுத்தி, “என்ன போலி டாக்டர். வண்டியை எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு குழப்பமா இருக்கா” என்று நக்கலடிக்க,
“சார் வண்டி பஞ்சர் சார்…” என்றாள் முகத்தை சுருக்கி.
“சரி வா நான் உன்னை டிராப் பண்றேன்”
“லேட்டா போனா அப்பா திட்டுவாங்க அதுனால உங்க கூட வரேன்” என்று சற்று பெருந்தன்மையாய் சொல்லிக்கொண்டு, அவன் காரில் ஏறினாள்.
விதுனும், கிடைத்த வாய்ப்பை தவற விடாமல், அவளைப் பற்றி கேட்டுக்கொண்டே வர, அவளும், அவள் அப்பா அம்மாவிற்கு ஒரே பெண் என்றும், அப்பாவுக்கு மிகுந்த பயம் என்றும் தெரிந்துகொண்டான்.
இப்படியே அவள் வீடும் வர, காரில் இறந்து இறங்கியவள், விதுனுக்கு பை என்று சொல்லி திரும்பையில், அங்கு கீழே இருந்த முள்ளை கவனிக்காமல், அதில் காலை வைத்து விட்டு “ஆ” என்று கத்தினாள்.
அதில் அவன் பதறி, இறங்கி வந்து அவள் காலை பார்க்க, பாதத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அவன் வேகமாக அவள் செருப்பை கழற்றி விட்டு, அவள் முன்னே ஒரு காலை மடக்கி அமர்ந்து, அவள் பாதத்தை அவன் முட்டியில் வைத்து, அந்த முள்ளை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அவளுக்கு வலியில் கண்ணீரே வர, அவனுக்கு தான் உள்ளுக்குள் ஏதோ ஆனது.
அவளை சமாதானப்படுத்தி, முள்ளை எடுக்க, அவள் அவன் தோளை பிடித்துக்கொண்டு நின்றாள்.
இது தான் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய காட்சியாய் வியந்து விட்டு, உத்ரா வேகமாக அவன் அருகில் சென்று “அண்ணா” என்று பாசமாக அழைக்க,
விதுன் “நம்மளை யாரு இவ்ளோ மரியாதையா கூப்புட்றது” என்று திரும்ப, அங்கு உத்ராவை பார்த்து, அதிர்ந்தான்.
“நீ என்ன பண்ற இங்க” என்று அவன் அதிர, அவள் “நீ என்ன ராசா பண்ணுற” என்று நக்கலாக கேட்டுவிட்டு, அனுவின் காலை அவன் பிடித்திருப்பதைப் பார்க்க, விதுன் டக்கென்று, அனுவின் எழுந்து நின்றான்.
உத்ரா அவனை ஒரு மாதிரியாக பார்க்க, விது “இல்ல உதி அவளுக்கு கால்ல முள்ளு குத்திருச்சா…அதான்” என்று அசடு வழிந்து விட்டு, அனுவை காரினுள் அமர வைத்து, கட்டு போட்டு விட்டான்.
உத்ரா தான் ” ஏண்டா, அறியாத வயசுல, நான் நடக்குற பாதைல முள்ளைப் போட்டு, என் கால ரத்தக்களரி ஆக்குவ… இப்போ எவளோ ஒருத்தி காலை பிடிச்சுக்கிட்டு இருக்க.” என்று கலாய்க்க,
அவன் மனது “அவள் யாரோ இல்லை என்… என்” என்றே குழம்பி நின்றது.
அவள் அவனை மேலும் கிண்டலடித்து விட்டு சற்று தள்ளி இருந்த அந்த பெரிய வீட்டின் வாட்ச்மேனிடம் மினிஸ்டரை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவர் “வீட்டு ஆட்கள் தவிர வேறு யாரையும் இந்த வாசல் வழியே அனுமதிப்பதில்லை மேடம்” என்றார்.
அவள் விசிட்டிங் கார்ட் காட்டியும் உள்ளே விடவே இல்லை. அவள் துருவை பார்த்து நீ ஏதாவது பேசேன் என்று பார்க்க,
“நம்ம முன் வாசல் வழியாவே போலாம் உதி… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
“உனக்கு என்ன பிரச்சனை. எனக்கு தான் பிரச்சனை” என்று நொந்து கொண்டு, மீண்டும் அந்த வாட்ச்மேனிடம் அனுமதி கேட்டாள்.
அப்பொழுது இவர்களை நோக்கி வந்த விது நடந்ததை அறிய, அனுவும் அவன் பின்னே வந்து, வாட்ச்மேனிடம் “என்ன பிரச்சனை” என்று கேட்ட்டாள்.
அவன், “மேடம்… இவங்க மினிஸ்டர பார்க்கணுமாம். இந்த வழியா போக கூடாதுன்னு சொன்னா கேட்க மாட்டுறாங்க. சார் வேற மீட்டிங்ல இருக்காரு” என்று சொல்ல,
அவள் “இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். அப்பா கிட்ட சொல்லி இங்க வரச்சொல்லுங்க” என்று மூவரையும் பார்த்து உள்ளே அழைத்தாள்.
அவர்கள் புரியாமல் பார்க்க, “நீங்க பார்க்க வந்த மினிஸ்டர் என் அப்பா தான். இந்த வழியா வேற யாரையும் அலோவ் பண்ணகூடாதுனு சொல்லுவாரு. பட் நீங்க எனக்கு தெரிஞ்சவங்கன்னு சொல்றேன் வாங்க” என்று என்னம்மோ அவர்களுக்கு உதவி செய்யும் ரேஞ்சில் அவர்களை உள்ளே கூட்டிச்செல்ல,
விது தான் “இவள் மினிஸ்டர் பொண்ணா. இவ்வளவு நேரம் நம்ம அரசியல்வாதி பொண்ணுகூடயா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தோம்…” என்று மிரண்டு விட்டு,
அவள் இதை மட்டும் ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை. தன்னை நம்பவில்லையோ என்று நினைத்தவன், நினைப்பை அழித்து விட்டு, அவள் அழைத்து சென்ற அறையில் சென்று அமர,
உத்ரா, “விது… பெரிய ஆளுடா நீ. மினிஸ்டர் பொண்ணையே உனக்கு அடிமையா வச்சுருக்க பெருமை உன்னையவே சேரும்” என்றாள் நக்கலாக.
அவன் அவளை முறைத்து, “சத்தமா சொல்லாத உதி. நானே ஷாக்ல இருக்கேன்” என்று புலம்ப, அப்போது குரலை கணைத்துக் கொண்டு, பட்டு வேஷ்டி சட்டையும், தோளில் துண்டுமாய், விறைப்பாக நடந்து வந்த கரண் பிரகாஷ், துருவைக் கண்டு சற்று திகைத்து, பின், இயல்பாகி, அவர்கள் முன்னே அமர்ந்து, “சொல்லுங்க என்ன விஷயம்.” என்று கேட்டார்.
அப்பொழுது அனு, அவர்கள் மூவருக்கும் ஸ்னேக்ஸ்ஸும், டீயும் கொண்டு வந்து கொடுக்க, விது,
“ஐயோ இவள் வேற நாங்க எதுக்கு வந்துருக்கோம்னே தெரியாம விருந்தோம்பல் பண்ணுறாளே” என்று புலம்பி விட்டு, அதனை எடுக்கப் போக,
உத்ரா அவன் கையை தடுத்து எதுவும் சாப்பிடாதே என்று கண்ணை காட்டினாள்.
அனு, அந்த டீயவே பார்த்து விதுவையும் பார்க்க, அவனுக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது.
உதி “அனுவுக்காக” என்று சொல்ல வர,
அவள் “எதிரி வீட்டில கை நனைக்க கூடாது” என்று முணுமுணுக்க அவன் “அப்போ காலை நனைக்கலாமா.” என்று கடுப்புடன் கூறினான்.
உத்ரா தான் “நீ என்ன உன் மாமனார் வீட்டுக்கா வந்துருக்க? பஜ்ஜி சொஜ்ஜிலாம் சாப்பிட… நம்ம சண்டை செய்ய வந்துருக்கோம்” என்று முறைத்தாள்.
கரண் அனுவை இவர்களை இப்படி உள்ளே விட்டு விட்டாயே அதுவும், அவர் குடும்பத்தினர் உபயோகிக்கும் இடத்திற்கு அழைத்து வந்து உபசரிப்பு வேறு என முறைத்து விட்டு, “உள்ள போ” என்று சொல்ல,
அவள் “அப்பா எனக்கு இவங்களை” என்று பேச வர, அவர் மேலும் அவளை அதட்டி உள்ளே அனுப்பினார்.
அவள் முகத்தை சுருக்கி கொண்டு உள்ளே செல்ல, விதுவுக்கு தான் கோபமாக வந்தது.
மீண்டும் கரண், “எதுக்கு இங்க வந்துருக்கீங்க” என்று கேட்க, துருவ் “அந்த பொண்ணை எங்க வச்சுருக்க” என்று கேட்டதும், அவர் அசட்டையாக “எந்த பொண்ணு” என்று வினவினார்.
துருவ், “ம்ம் என்னை கொலை பண்ண சொல்லி, ஒருத்தனோட பொண்டாட்டியை கடத்தி அடைச்சு வச்சுருக்கியே அந்த பொண்ணு தான்” என்று சொல்ல, அவர் விருட்டென்று எழுந்து,
“இங்க பாரு தேவை இல்லாம பேசிகிட்டு இருக்காத, மூணு பேரும் உள்ள வந்ததை யாருமே பார்க்கல. நான் பாட்டுக்கு உங்களை போட்டு தள்ளிட்டு இங்கயே புதைச்சுருவேன் அப்பறம் உங்க எலும்பு துண்டு கூட யாருக்கும் கிடைக்காது.” என்று மிரட்ட,
துருவ் விழியை உயர்த்தி, “முதல்ல உன் எலும்பு துண்டு கிடைக்குதான்னு பாப்போம்” என்று சொல்லி, அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் அருகில் சென்று அவன் வயிற்றில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான்.
அதில் கரண், “என்ன உள்ள வந்து ரௌடிசம் பண்ணுறீங்களா. நான் நினைச்சா, இந்த நாட்டுலயே நீங்க இருக்க முடியாது.” என்று கத்த,
உத்ரா, அவர் வாயில் பிளாஸ்டரை ஓட்டினாள்.
அவர் ம்ம் ம்ம் என்று கத்த, கத்த யாருக்குமே கேட்கவில்லை. அப்பொழுது எதேச்சையாக அனு அங்கு வந்தவள் நடந்ததை கண்டு அதிர்ந்து நிற்க, உத்ரா, அவளை இழுத்து, விது அருகில் அமர வைத்து, “இங்கயே உட்காந்துருக்க. உன் சத்தம் வெளிய வந்துச்சு” என்று மிரட்டியதில் அவள் அரண்டு விதுவை பாவமாக பார்க்க,
அவன் “இதுங்களுக்கு போய் உன்னை யாரு ஹெல்ப் பண்ண சொன்னது” என்று தலையில் அடித்தான்.
அங்கு நடப்பதை யாரும் பார்க்காத படிக்கு தடுப்பு போட்டிருக்க கட்சி ஆட்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.
அப்பொழுது என்று பார்த்து வீட்டினரும் யாரும் வீட்டில் இல்லை.
துருவ், “சொல்லு அந்த பொண்ணை எங்க வச்சுருக்க… ம்ம்” என்று கேட்க, அவர், “என்கிட்டே மோதாத… நான் சாதாரண ஆள் இல்ல.” என்று சைகையிலேயே அவனை மிரட்ட,
உத்ரா, அங்கிருந்த கத்தியை எடுத்து, அவன் கண்ணருகில் கொண்டு சென்று, “இப்போ நீ சொல்லல. உன் கண்ணை நோண்டி வெளிய எடுத்துருவேன்” என்றதில்,
அனு “ஐயோ அப்ப்பா” என்று கத்த, விது அவள் வாயை பொத்தினான்.
கரண் அசராமல் அசையாமல் அமர்ந்திருக்க, துருவ் “ம்ம் சோ நீ சொல்லமாட்ட… அப்படித்தான.” என்றவன், அர்ஜுனுக்கு போன் செய்து, சொன்ன வேலையை முடித்தாகி விட்டதா என்று கேட்க, அவன் பதில் சொல்லியதும், கரணிற்கு லைவாக அவனின் சொந்தமான பேக்டரி இடிந்து விழுந்ததை காட்டினான்.
அதில் அவர் கண்கள் கோபத்தில் ரத்தமென சிவக்க, அவன் அடுத்து அஜய்க்கு போன் செய்து விவரம் கேட்டான்.
அஜய், “மினிஸ்டரோட கீப் இங்க சேஃப் துருவ்” என்றதும், அவன் அவருக்கு இன்னொரு வீடியோவில், அந்த கரணின் ஊழல் சம்பந்தப்பட்ட வீடியோவை காட்டி , மேலும், அவரின் கீப்பின் வீட்டில், அவர் பதுக்கி இருந்த பணமும், கணக்கில் வராத அவரின் குற்றங்களும் துருவின் விரல் நுனியில் இருந்தது.
உத்ரா தான் நடப்பதை வாயை பிளந்து கொண்டு பார்த்தாள். இவ்வளவு வேலையை எப்படி பார்த்தான் நமக்கு கூட தெரியாம.. என்று வியக்க, கரணிற்கு அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போல் இருந்தது.
துருவ் “இப்போவே இதெல்லாம் சேனல்க்கு அனுப்புனா என்ன ஆகும் தெரியுமா. உன்னை பதிவியில இருந்து தூக்கி, அர்ரெஸ்ட் பண்ணி, உன் சொத்தை எல்லாம் பிடுங்கி… ப்ச்… ரொம்ப கஷ்டம்ல” என்று போலியாக பரிதாபப்பட,
அவர் கண்ணில் இப்போது தான் பயமே தெரிந்தது.
பின், “நான் சொல்கிறேன்” என்று தலையாட்ட, உத்ரா கத்தக்கூடாது என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு, வாயில் இருந்து பிளாஸ்திரியை எடுக்க, அவர் அந்த பெண்ணை அடைத்து வைத்திருக்கும் இடத்தை சொன்னதும், துருவ் உடனடியாக செயல் பட்டான்.
கரண் “உன்னை சும்மா விட மாட்டேன் துருவ். என்கிட்டயே மோதிட்டீல” என்று மிரட்டினார்.
அதில் அனு தான் தன் அப்பாவா இப்படி என்று சிலையாகி உறைந்திருந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. விது அவள் நிலையை உணர்ந்து அவள் கையை ஆதரவாக பிடித்து கொண்டான்.
வெகு நேரம் ஆனதே, இந்த நேரத்தில் கட்சி அலுவலகம் செல்ல வேண்டுமே என்று நினைத்து வேறு வழியில்லாமல், கட்சி ஆட்கள் உள்ளே வர, துருவ் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைத்து விட்டு, அவரிடம், “அப்போ மினிஸ்டர் சார். என்கிட்ட எல்லாமே பத்திரமா இருக்கு. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன்” என்று நக்கலாகக் கூற, அவரால் பதில் பேசவே முடியவில்லை அங்கு நடந்ததை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை.
அந்த பெண்ணை காப்பாற்றியாயிற்று என்று அர்ஜுன் சொல்ல, மூவரும் வெளியில் வந்தனர்.
உதிதான், “சே, மினிஸ்டர் வீட்டுக்குள்ளேயே புகுந்து விளையாடியாச்சு… செம்ம மாஸ் செல்லம் நீ” என்று துருவின் கன்னத்தை பிடித்து கிள்ள, அவன் சிரித்துக் கொண்டான்.
விது அனுவையே திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்தான். அவள் அழுவதை அவனால் தாங்கவே முடியவில்லை.
உண்மையில் அவள் வெகுளி. அனைவரையும் எளிதில் நம்பி விடுகிறாள் என்று இந்த சில காலத்திலேயே தெரிந்து கொண்டான்.
இப்படியாக, நாட்கள் செல்ல, கரண் துருவின் கண் பார்வையிலே தான் இருந்தார்.
உத்ரா குடும்பத்தினர், துருவை டிஸ்சார்ஜ் செய்து, அவன் வீட்டிற்கு செல்கிறேன் என்றதை எல்லாம் காதில் வாங்காமல் அவர்கள் வீட்டிற்கே அழைத்து சென்றது.
உத்ரா ஒரு புறமும், வீட்டினர் ஒரு புறமும் என்று அவனை அன்பில் குளிப்பாட்டினர் அனைவரும்.
குடும்பம், பிணைப்பு, சொந்தம் என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் இப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது. அந்த குடும்பத்துடன் மிகவும் ஒன்றி விட்டான்.
எந்த அளவுக்கு என்றால்… காலையில் கருணா வீட்டிற்கு சென்று அங்கு அவருடன் ஜாகிங் போவதில் இருந்து, அன்னத்திடம் ஏலக்காய் டீயை வாங்கி குடித்து அவரிடம் வம்பு வளர்ப்பதில் ஆரம்பித்து, மீண்டும் அர்ஜுன் வீட்டிற்கு வந்து, கர்ணனுடன் அரசியல், தொழில் என்று அலசுவதில் பயணித்து, காலை உணவின் போது, லக்ஷ்மியை ஐஸ் வைத்து, அவரை சீண்டிக்கொண்டே இருப்பதில் முடியும்.
அந்த ஒரு மாத காலத்தில் அந்த நாலு பெரியவர்களுக்கும் அவன் செல்லப் பிள்ளையாகி போனான்.
இதில், சிறியவர்களுக்கும் அவன் சொல்வது தான் வேதவாக்காக இருக்க, துருவ்க்கு தான் இந்த குடும்ப அமைப்பும், இந்த பாசங்களும் புதுமையாய் நிறைவாய் இருந்தது.
அதே நேரம் மென்மையாய் உத்ராவிடம் காதலை காட்டவும் தவறாதவன், அவள் அன்று பேசியதை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.
உத்ராவிற்கு, அவன் அமைதி என்னவோ செய்ய, அவன் ஏதாவது பேசுவான்… மறுபடியும் திருமணம் பற்றி பேசினால் ஒப்புக்கொள்ளலாம். என்ன ஆனாலும் அவன் என்னுடன் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து அவன் பின்னேயே சுற்றி கொண்டிருந்தாள். ஆனால் அவன் தான், திருமணத்தைப் பற்றி மறந்தும் கூட பேசவில்லை.
கருணா உதியிடம் ஒரு மாப்பிள்ளையின் புகைப்படத்தை காட்டி, அவனை பிடித்திருக்கிறதா என்று கேட்ட பொழுதும், அமைதி தான் காத்தான்.
உத்ரா, துருவை ஒரு பார்வை பார்த்து விட்டு, போட்டோவை பார்க்காமல் “எனக்கு வேலை இருக்கு பெரியப்பா அப்பறமா பார்க்குறேன்” என்று அங்கிருந்து நகன்று விட்டாள். இதை பெரியவர்களும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.
மற்ற ஜோடிகளுடைய நிலைமையோ வெகு மோசம்.
மீரா அர்ஜுனை கண்டுகொள்ளாமல் தவிக்க விட, சுஜி, அவள் அப்பாவை முதலில் ஒப்புக்கொள்ள வை.. அப்பறம் நம்ம லவ் பண்ணலாம் என்று முறுக்கிக் கொண்டு இருக்க, விது தான், அனுவைக் காண முடியாமல் உள்ளுக்குள் உடைந்தான்.
அன்று அவளை வீட்டில் பார்த்ததோடு சரி அதன் பிறகு அவள் மருத்துவமனைக்கும் வரவில்லை. என்ன இருந்தாலும் தன் தங்கையின் எதிரி குடும்பத்துப் பெண்ணிடம் எப்படி சென்று பேசுவது என்றும், இதனால், உத்ராவுக்கும் மற்றவர்களுக்கும் தான் பாதிப்பு வரும் என்றும் அவனுள் எழுந்த மெல்லிய காதலை அவனுக்குள் புதைத்துக் கொண்டான்.
ஒரு நாள் இரவு, வழக்கம் போல, வீட்டிற்கு தெரியாமல், நைட் ஷோ படத்திற்கு போக, அஜய், விதுன் உத்ரா மூவரும் வீட்டின் சுவர் ஏறி குதிக்க, வெளியில் துருவ் இவர்களை திமிராக பார்த்து கொண்டு நின்றிருந்தான்.
இன்று தலைவர் படம் ரிலீஸ் என்று மூவரும் காலையில் இருந்து பேசிக்கொண்டிருக்கையில் இப்படி ஏதாவது செய்வார்கள் என்று தெரிந்து கொண்டவன், முன்னேற்பாடாக அங்கு வந்து நின்றான்.
கையில் போனுடன் வீட்டின் பெரியவர்களுக்கு போன் செய்ய போக, அவர்கள் அவனிடம் கெஞ்சி கூத்தாடி, மீண்டும் வீட்டினுள்ளேயே சென்றனர்.
உத்ரா, முகத்தை சுருக்கிக் கொண்டு, அவனுக்கு பழிப்பு காட்ட, அவன் அவள் கையைப் பிடித்து முறுக்கி, “இனிமே ஏதாவது சுவத்துல ஏறி குதிச்சுக்கிட்டு இருந்த, அப்பறம் அந்த சுவத்துலயே உன்னை கயறு கட்டி தலைகீழா தொங்க விட்ருவேன்…” என்று மிரட்ட,
அவள் “நீ ரொம்ப ஓவரா பண்ற துருவ். உனக்கு எங்க பெரியப்பாவே பரவாயில்லை…” என்று பாவமாக சொல்ல, அவன் அவளின் தோள் மேல் கை போட்டு, “உனக்கு படம் தான பார்க்கணும். வா” என்று அந்த வீட்டில் இருந்த ஹாம் தியேட்டரிலேயே மூவருக்கும் படத்தையும் போட்டு விட்டு, வெளியில் வந்தான்.
பால்கனியில் அர்ஜுன், வானத்தை வெறித்து கொண்டு நின்றிருக்க, துருவ் “இப்படியே யோசிச்சிகிட்டே இருந்தா எப்படி… மீராகிட்ட ஏதாவது பேசு” என்று சொல்ல,
அவன் “ப்ச் என்ன பேசுறதுன்னு நிஜமா எனக்கு தெரியல துருவ்…” என்றான் சலிப்பாக.
“வேற ஏதாவது ஜோசியர் கிட்ட செகண்ட் ஒபினியன் கேட்கலாமா…?” என்று வினவிட,
அர்ஜுன் மறுப்பாய் தலையாட்டி, “அப்படி அவரு எதுவும் இல்லைன்னு சொல்லி அப்பறம் அவள் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை…” என்று தோளைக் குலுக்க, அப்படியே அவர்கள் யோசித்து கொண்டிருக்க, படத்தில் கவனம் செலுத்த முடியாமல் வெவ்வேறு மனநிலையில் பாதியில் வந்த மூவரும், “என்ன இங்க மாநாடு” என்று கேட்க, நடந்ததை அறிந்ததும் அவர்களும் என்ன செய்வதென்று யோசித்தனர்.
சிறிது நேரத்தில், உத்ரா “பங்கு ஒரு ஐடியா” என்று கத்த, அர்ஜுன், “உன்னை கொன்னுடுவேன்… இப்படித்தான் அன்னைக்கு ஐடியா சொல்லி, அனு கூட க்ளோஸ் ஆ இருக்க சொன்ன. அவள் என்னன்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கன்னு அசால்ட்டா சொல்லிட்டா” என்று முறைக்க,
அவள் அசடு வழிந்து விட்டு “இந்த ஐடியா கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்” என்று சொல்ல, அர்ஜுனுக்கும் இதான் சரி என்று தோன்றியது.
இதனை நாளையே செயல்படுத்த வேண்டும் என்று நினைத்து, “நாளைக்கு நீயே என்னை கல்யாணம் பண்ணிக்க அர்ஜுன்னு சொல்ல வைக்கிறேன் டி” என்று சபதம் எடுத்து கொண்டான்.
அஜய், “இந்த சுஜி அப்பாவை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல…” என்று புலம்ப,
துருவ் “நீ அவர்கிட்ட பேசி பாரு இல்லைன்னா பொண்ணை தூக்கிடலாம்” என்று கேலி செய்ய, அஜய், “அவர் பொண்ணை தூக்குறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் அது வீட்டுக்கு தெரிஞ்சுச்சு அவங்க என்னை தூக்கிருவாங்க” என்று பம்ம,
உத்ரா “பேசாம, உன் மாமனார் கால்ல சாஷ்டாங்கமா விழுந்துடு டா.” என்று சொல்ல, அஜய் அவளை முறைத்தான்.
அர்ஜுன், “என்ன உதி இன்னைக்கு உனக்கு ஐடியா மழையா பொழியுது. அஜய் நீ உதி சொன்ன மாதிரி பண்ணிடு” என்று ஊக்குவிக்க, அஜய் மிரண்டு, “டேய் அதுக்காக அவரு கால்ல போய் விழுக சொல்றியா..” என்றான்.
உதி, “நியாயமா நீ பண்ணுன வேலைக்கு சுஜி உன்னை அவள் கால்ல விழுக வச்சிருக்கணும்…” என்று முறைக்க,
அஜய் சிறிதாய் வெட்கப்பட்டுக் கொண்டு, “அப்டினா நான் உடனே விழுந்துடுவேனே” என்று நெளிய, அர்ஜுன், “பங்கு, உன் மாமனார் கால்ல நான் கூட விழுகுறேன் ஆனால் இந்த வெட்கம் மட்டும் படாதடா சகிக்கல…” என்று கிண்டலடித்தான்.
உதி “ம்ம் லவரோட கால்ல விழுகுறவன் அவள் அப்பா கால்ளையும் போய் விழு. உனக்கு பச்சை கொடியாவது காட்டுவாரு..” என்று நக்கலடிக்க, அவன் பாவமாக “பண்றேன் பண்ணி தொலைக்கிறேன்” என்று தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றான்.
அர்ஜுனும் மீரா நினைவில் உள்ளே செல்ல, நடக்கும் எதையுமே கவனியாமல், அர்ஜுன் சொன்ன அனு என்ற ஒரு பெயரிலேயே மொத்த அணுவிலும் நிறைந்திருந்தவளின் நினைவில் சிக்கி தவித்தான் விதுன்.
உத்ரா, இவன் ஏன் பேயறைஞ்ச மாதிரி நிற்கிறான்… என்று அவனை உலுக்க, தன்னிலைக்கு வந்தவன், வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று சொல்ல, அவள் “இந்த நேரத்துல எதுக்குடா போற… காலைல போ” என்று சொல்லியும் காதில் வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.
உதி என்னாச்சு இவனுக்கு என்று புரியாமல் துருவை பார்க்க, துருவ் அமைதியாய் அவன் சென்ற திசையை பார்த்தான்.
மறுநாள் காலையிலேயே, கருணா சிறியவர்களை அழைத்து.. திருமணத்தை பற்றிப் பேசி, திட்ட ஆரம்பித்தார்.
கர்ணனும் “உதி… உன் கல்யாணத்தை பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா. ஏன் பிடிவாதம் பிடிக்கிற. நீ தான் இப்படி பண்றன்னு பார்த்தா இவனுங்களும் அதே தான் பன்றாங்க.” என்க,
உதி துருவைப் பார்த்து கொண்டே, “அது கொஞ்ச நாள் போகட்டும் மாமா” என்றாள்.
கருணா “இப்படி தான் நீ ஒரு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்க. நான் மாப்பிள்ளை பார்த்துட்டேன். உனக்கு அடுத்த மாசம் கல்யாணம்” என்று குண்டை தூக்கி போட, நால்வரும் அதிர்ந்து விட்டனர்.
துருவை முறைத்து, “இதுக்காவது ஷாக் ஆகுறானா பாரேன்… கல்நெஞ்சக்காரன்” என்று புலம்பி அடுத்து என்ன சொல்லலாம் என்று யோசித்து கொண்டிருந்தவள் திடும் என,
“ஐயோ எனக்கு கல்யாணம் ஆனா விது செத்துருவான்” என்று சொல்ல, இப்போது அதிர்வது மொத்த குடும்பத்தின் முறையானது.
இதில் விது தான், “அடிப்பாவி… என்னை எதுக்குடி கோர்த்து விடற…” என்று பாவமாக பார்க்க,
லட்சுமி, “உதி என்ன பேசுற” என்று அதட்ட, அவள் “நான் உண்மைய தான் சொல்றேன் அத்தை” என்றாள்.
மற்ற மூவரையும் பார்த்து, “என்ன பங்கு அமைதியா இருக்கீங்க. நம்ம ப்ராமிஸ் பத்தி சொல்லுங்க” என்று சொல்ல,
அஜய் “இவள் எந்த ப்ராமிஸ் பத்திடா பேசுறா” என்று கேட்க, அர்ஜுன், “நம்ம ஒரு நாளைக்கு பத்து ப்ராமிஸ் பண்ணுவோம். அதுல ஒன்னு கூட நம்ம செஞ்சது கிடையாது. அதுல இவள் எதை சொல்றான்னு தெரியலையே…” என்று புலம்ப,
துருவ் “ஃபிராடு ஏதோ பிளான் பண்ணிட்டா…” என்று சிறு சிரிப்புடன், சுவாரசியமாக நடப்பதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான்.
உத்ரா விடாமல், “அதான் பங்கு சின்ன வயசுல, விது, மொட்டை, கல்யாணம், ப்ராமிஸ்” என்று பிய்த்து பிய்த்து பேச,
விது, “பங்கு… என்ன பங்கு இவள்… ஏதோ ஒரு வார்த்தை ஒரு லட்சம் ப்ரோக்ராம் மாதிரி ஒவ்வொரு வார்த்தையா பேசுறா. உங்களுக்கு ஏதாவது புரியுது?” என்று கேட்க, அர்ஜுனும் அஜயும் ஒரு எழவும் புரியல என்று தலையாட்டினர்.
பொறுமையை இழந்த பெரியவர்கள் விவரமாக கூற சொல்ல, உதி தலையை மேலே பார்த்து,
“அப்போ எனக்கும் அஜய்க்கும் ஒரு 3 வயசு, விதுக்கும் அர்ஜூனுக்கும் 5 வயசு. எனக்கு மொட்டை போடலாம்னு எல்லாரும் பழனி போயிருந்தோம் உங்களுக்கு நியாபகம் இருக்கா.” என்று கேட்க,
விது அவளிடம் “மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததே உனக்கு ஞாபகம் இல்லை. இதுல மூணு வயசுல நடந்ததுலாம் உனக்கு நியாபகம் இருக்காக்கும்” என்று நக்கலடிக்க,
உதி “மூடிக்கிட்டு கதையை கேளு…” என்று பல்லைக் கடித்து கொண்டு கூறிவிட்டு,
“நான் எதுல விட்டேன்…” என்று கேள்வியாய் கேட்க, துருவ் “ம்ம் பழனில…” என்று எடுத்து கொடுத்தான்.
அவள் “எஸ், அப்போ எனக்கு மொட்டை அடிச்சதை பார்த்து, என் அண்ணன்… அதான் விது ஒரே அழுகை.” என்று கண்ணில் விரலை வைத்து நிற்க, அனைவரும் அவளை புரியாமல் பார்த்தனர்.
“அவன் அழுகறதை பார்த்து அர்ஜுன் தேம்பி தேம்பி அழுதான். நாங்கல்லாம் அழுகுறதை பார்த்து அஜய்…” என்று சிறிய இடைவெளி விட்டு, “உருண்டு பிரண்டு அழுதான்…” என்று சோகமான குரலில் கூற, துருவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
பின், உத்ராவே “அப்போ விதுன் என்ன பண்ணுனான்னு உங்களுக்குலாம் நியாபகம் இருக்கா” என்று கேட்க, பெரியவர்கள் இல்லை என்று தலையாட்டினர்.
மனதினுள் “ஹப்பா அதான் எனக்கு வேணும்…” என்று நினைத்துக் கொண்டு,
“விது வேகமா போய் மொட்டை அடிக்கிறவர்கிட்ட இருந்து கத்தி வாங்கி, அவனே அவன் தலையை மொட்டை அடிச்சிகிட்டான். அது போக, அர்ஜூனுக்கும் அஜய்கும் சேர்ந்து மொட்டை அடிச்சு விட்டான். எதுக்குன்னு சொல்லுங்க..” என்று கேட்க, பெரியவர்கள் ஒன்றும் புரியாமல் “எதுக்கு” என்று கேட்டனர்.
“எனக்கு ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதுல அவங்க மூணு பேருக்குமே பங்கு இருக்குன்னு காட்டத்தான்…
அப்போ தான், அந்த சம்பவம் நடந்துச்சு. இதுவும் சரித்திரத்தில பொறிக்க பட வேண்டிய சம்பவம் தான்” என்று வராத கண்ணீரைத் துடைத்து கொண்டு, தீர்க்கமாக நின்று, சும்மா இருந்த அர்ஜுனிடம்
“என்னை தடுக்காத அர்ஜுன். நான் எல்லாத்தையும் சொல்லணும் என்னை பேச விடுங்க” என்று அவள் பாட்டிற்கு பேச, அர்ஜுன் திருதிருவென விழித்து, “நான் ஒண்ணுமே பண்ணலையே பங்கு” என்று தலையை சொரிந்தான்.
உத்ரா, “அன்னைக்கு… விதுன் ஒரு முடிவோட, எங்க மூணு பேரையும் சுத்தி நிற்க வச்சு, நல்லதோ கெட்டதோ அது நம்ம நாலு பேருக்கும் சேர்த்து தான் நடக்கணும்.
வளர்ந்ததுக்கு அப்பறம் நம்ம கல்யாணம் கூட ஒரே நாள்ல தான் நடக்கணும் அப்டின்னு அவனோட மொட்டை தலையில அடிச்சு சத்தியம் வாங்கிட்டான். இப்போ சொல்லுங்க, அந்த சத்தியத்தை காப்பாத்தாம நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்னா அப்பறம் என் அண்ணன் என் அண்ணன்…” என்று வேண்டும் என்றே நடுங்கிய குரலில் அதற்கு மேல் பேச முடியாதவாறு நிறுத்த, மற்ற மூவரும் தான்,
“அடிப்பதாகத்தி… இப்படி எங்களையும் கோர்த்து விட்டுட்டியே” என்று பேந்த பேந்த முழித்து கொண்டு நிற்க, துருவ் வாய் விட்டு சிரித்து விட்டான்.
அத்தியாயம் 30
உத்ரா கூறிய கதையில் துருவ் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தான் என்றால், மற்ற மூவரும் அவளை கொலை வெறியுடன் நோக்கினர்.
உத்ரா, துருவை சிரிக்காதே என்று கண்ணை காட்ட, அவன் அடங்கவே இல்லை.
லட்சுமி தான் உத்ராவின் காதை திருகி, “வாயை திறந்தாலே பொய் தான். நீ தப்பிக்கிறதுக்கு இவனுங்களை மாட்டிவிடறியாக்கும்” என்று சொல்ல,
அவள் பாவமாக, “அத்தை. நான் நிஜமா தான் சொல்றேன். நாங்க எல்லாரும் ஒரே நாள்ல ஒரே மேடைல ஒரே முகூர்த்தத்துல தான் கல்யாணம் பண்ணிக்கணும் சபதம் எடுத்துருக்கோம்…” என்று சொல்ல,
துருவ் “அதுக்கு என்ன… உன் கல்யாணத்துக்குள்ள இவனுங்களுக்கு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா போச்சு. இல்ல அங்கிள்” என்று கருணாவிடம் அபிப்ராயம் கேட்டான்.
மூவரும், “டேய் எட்டப்பா. நீயுமாடா.” என்று முறைத்தனர்.
உத்ரா, ‘இவன் என்ன பிளேட்டை மாத்துறான்’ என்று நினைத்து விட்டு, பெரியப்பா, “நீங்க என்ன வேணா பண்ணுங்க. ஆனால் எங்க நாலு பேருக்கும் ஒரே நாள்ல தான் கல்யாணம் நடக்கணும்” என்று உறுதியாக சொல்ல, கர்ணனும் கருணாவும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, சரி சென்று விட்டு சபையை கலைத்தனர்.
உத்ரா, “யப்பா” என்று அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர, அர்ஜுனும், அஜயும் அவளை அடி பிண்ணி எடுத்தனர்.
உத்ரா, அவர்களிடம் இருந்து தப்பித்து, துருவிடம் சென்று, “உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க.” என்று கேட்க,
அவன், “உன்னை தான் நினைச்சுகிட்டு இருக்கேன் இதுல என்ன ஹனி டவுட்…” என்று அவளை ரசனையாய் பார்த்து கொண்டு கேட்க,
ஆன்னா ஊன்னா ரோமியோ ரேஞ்சுக்கு லுக் விட வேண்டியது என்று முறைத்து விட்டு, “பெரியப்பா எனக்கு கல்யாணம்ன்னு சொல்றாரு. நீங்க அமைதியா இருக்கீங்க” என்று கேட்டதும்,
துருவ், “என்ன சொல்லணும்” என்று விழி உயர்த்தி கேட்டான்.
உத்ரா, அமைதியாய் இருந்து விட்டுப் பின், “அன்னைக்கு என் மனசுல இருந்ததை தான் நான் சொன்னேன். ஆனால்… துருவ்” என்று பேச வர,
அவன், “ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சு ஹனி… வா போகலாம்” என்று அவளை இழுத்து நெற்றியில் முத்தமிட்டு வெளியில் நடந்தான்.
அவன் என்னதான் நினைத்திருக்கிறான். என்று புரியாமல், “கல்யாணத்தை பத்தி பேசமாட்டுறான் பொசுக்கு பொசுக்குன்னு முத்தம் மட்டும் குடுக்குறான்…” என்று அவனை திட்டிக்கொண்டு அவன் பின்னே சென்றாள்.
அர்ஜுன், “கடவுளே இந்த பிளான் மட்டும் ஒர்க் அவுட் ஆச்சுன்னா… என் தம்பிக்கு மொட்டை அடிச்சு காவடி தூக்க வைக்கிறேன்” என்று கும்பிட,
அஜய், “டேய்… உன் லவ் சக்சஸ் ஆகுறதுக்கு நான் ஏண்டா மொட்டை அடிக்கணும்.” என்று பாவமாய் கேட்டுவிட்டு,
“இங்க பாரு இனிமே யாரும் லவ்க்கும் யாரும் ஹெல்ப் பண்ண வேணாம். ஹெல்ப் பண்றேன்ற பேர்ல எல்லாரையும் பிரிச்சு விட்டாச்சு. நான் போய் என் மாமனாரை பார்க்குறேன். நீ போய் மீரா அண்ணியை சரி பண்ணு…” என்று விதுனை உடன் அழைக்க, அவன் வெளியில் வேலை இருக்கிறது என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
அர்ஜுன், முகத்தை சோகமாக வைத்து கொண்டு, அவள் முன் நின்றான்.
அவள் அவனைப் புரியாமல் பார்த்து குழம்பி, “என்ன ஆச்சு அர்ஜுன். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. கீழ கருணா அப்பா என்ன பேசிகிட்டு இருந்தாங்க” என்று கேட்க,
அவன் “ப்ச்… என் கல்யாண விஷயத்தை தான் பேசுனாங்க” என்று சொன்னதும், அவளுக்கு நெஞ்சை அடைத்தது.
இருந்தும், அவன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று அவசரமாய் கடவுளிடம் ஒரு மனு ஒன்றை போட்டு விட்டு, “பொண்ணு பார்த்தாச்சா அர்ஜுன் யாரு.. அனு வா” என்று கேட்க,
அவன் “தெரியல… அந்த பொண்ணு என்னை வேணான்னு சொல்லிடுச்சு” என்று சொன்னதும்,
மீரா, புருவத்தை சுருக்கி “என்ன வேணாம்னு சொல்லிட்டாங்களா ஏன் உங்களுக்கு என்ன குறைச்சலாம்” என்று சற்று கோபமாக கேட்டாள்.
அர்ஜுன், “எனக்கு ஒன்னும் இல்ல. என் ஜாதகத்துல தான்…” என்றதும், அவள் என்னவென்று பார்த்தாள்.
அவன், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியில், “என் ஜாதகப்படி, என்னை கல்யாணம் பண்ணுனா அந்த பொண்ணு செத்துருமாம்…” என்று சொல்ல, மீரா அதிர்ந்து விட்டாள்.
“அதான், கீழ எல்லாரும் பேசிகிட்டு இருந்தோம். நல்லவேளை நீ என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல…” என்று சொன்னதும் தான் தாமதம், மீரா, அனைத்தும் மறந்து,
“என்ன பேசுறீங்க அர்ஜுன், அது எப்படி அவள் உங்களை வேணான்னு சொல்லலாம். ஜாதகம் மண்ணாங்கட்டி ன்னு… உங்களை மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க அவள் குடுத்து வச்சிருக்கணும்.
ப்ச் அவள் என்ன உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றது. நான் இருக்கும் போது நீங்க எதுக்கு வேற எவ கிட்டயோ அசிங்கப்படணும்… ஹ்ம்?
நான் உங்களை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் அர்ஜுன்” என்று சொன்னதும்,
அவன், “புரியாம பேசாத மீரா. என்னை கல்யாணம் பண்ணுனா உன் உயிருக்கு ஏதாவது ஆகிடும். அப்பறம், நான் எப்படி உன்னை விட்டுட்டு இருப்பேன்…” என்று போட்டு வாங்க,
அவள் அவன் அருகில் வந்து, “உங்க கூட ஒரு நாள் வாழ்ந்தாலும், எனக்கு போதும் அர்ஜுன்… நீங்க இருக்கும் போது, உங்க பாசத்தை மீறி, அந்த எமன் கூட என்னை நெருங்க முடியாது..” என்று தன்னை மீறி அவள் உளறி கொட்ட,
அர்ஜுன், அவளை ஆழமாய் பார்த்து கொண்டு, “நீ சொன்னதுல உனக்கு மாற்று கருத்து எதுவும் இல்லையே… இது எல்லாருக்கும் பொருந்தும் தான” என்று கேட்க, அவன் குரலை உணராது, தீர்க்கமாக “ஆமா” என்று தலையாட்டினாள்.
அர்ஜுன் அவளை விலக்கி, “அப்போ இந்த காரணத்தை வச்சு, நீ என்னை விட்டு விலகுறதுக்காக நான் உன்கிட்ட இதெல்லாம் சொன்னால் நீ ஒத்துப்பியா?” என்று கூர்மையாக கேட்க, மீரா, உறைந்து விட்டாள்..
அதன்பிறகே, அவளுக்கு நிலைமையே உரைத்தது.
அர்ஜுன் தொடர்ந்து, “ஏன் அமைதி ஆகிட்ட மீரா… பேசு. உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? நீ மட்டும் எல்லா முட்டாள் தனத்தையும் நம்பி, என்னை ஒதுங்கி இருப்ப எனக்கு எதுவும் ஆக்கக்கூடாதுன்னு… ஆனால் நான் மட்டும் நீ எப்படி போனாலும் பரவாயில்லைனு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும். அப்படித்தான?
என்னடி நினைச்சுகிட்டு இருக்க என்னை பத்தி… ஹான்… ?” என்று கோபமாக கேட்டவன், தன்னை சிறிது அமைதி படுத்திக் கொண்டு, அவள் தோளை இறுகப் பற்றி,
“நீ என்னை விட்டுட ஒதுங்கி போறதுக்கு இதான் காரணம்னு எனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடியே தெரியும்… அப்போவே நான் உன்கிட்ட வந்து உன்னை சமாதானப்படுத்தி, உங்கிட்ட இப்போ நீ சொன்னியே அதெல்லம் சொல்லிருப்பேன்.
ஆனால்… நீ கண்டிப்பா அதை காதுல வாங்க மாட்ட. ஏன்னா நீங்க மட்டும் தான் எங்களை ஆத்மார்த்தமா லவ் பண்றீங்க. நாங்கல்லாம் சும்மா உடம்புக்காக கல்யாணம் பண்ணிட்டு, நீ செத்துட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிப்போம்” என்று பல்லைக்கடித்துக் கொண்டு சொல்ல, அவள் கேவி அழுதாள்.
பின் அர்ஜுன், சோர்ந்த குரலில், “எனக்கு ஜாதகத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல மீரா… நீ சொன்னியே அதே தான் எனக்கும்.
ஒரு நாள் வாழ்ந்தாலும் அது உன் கூட மட்டும் தான்… யு நோ. நம்ம யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கடைசில செத்து தான் போவோம். மரணம் எல்லாருக்கும் பொதுவானது.
அடுத்த நிமிஷம் நம்ம உயிரோட இருப்போமா இல்லையான்னு நமக்கு தெரியாது மீரா. நீ என்னை விட்டு விலகிப்போனா நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருப்பேனா இல்லையே.
எப்டினாலும், நான் தினமும் செத்துக்கிட்டு தான இருக்க போறேன்…” என்று கமறிய குரலில் கூறி விட்டு,
“நான் சொன்னது பொய் தான். எனக்கு எந்த பொண்ணும் பார்க்கல, அனு கூட சும்மா உன்னை டீஸ் பண்றதுக்காக தான் பேசுனேன். இந்த வீட்டுல யாருக்கும் ஜாதகம் பார்க்குற பழக்கம்லாம் இல்லை.
என் அத்தை அதான், உதி அம்மா கல்யாணத்தோட ஜாதகம் பார்க்குறதையே விட்டுட்டாங்க. ஏன் தெரியுமா…?
அத்தைக்கும் மாமாவுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஜோசியக்காரன், ரெண்டு பேரும் தீர்க்காயுசோட ஒற்றுமையா இருப்பாங்கன்னு சொன்னானாம்.
ஆனால் அத்தை, கொஞ்ச வருஷத்துலயே இறந்து… அப்போ அது ஏன் பலிக்கல மீரா…? ஜோசியம் சொல்றது நடக்கும்னு நீ நம்புனா அந்த ஜோசியத்தால என் அத்தையை ஏன் திரும்ப கொண்டு வர முடியல…” என்று தலையை அழுந்த கோதிக் கொண்டு,
“இப்பயும் நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் சொல்லல… உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் நீ என்னை நினைச்சு பயந்துகிட்டே இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்லை.
உன் மன திருப்திக்காக வேற ஜோசியர்கிட்ட செகண்ட் ஒபினின் கேட்கவும் எனக்கு உடன்பாடு இல்லை.
எனக்கு நீ நீயா எனக்கு வேணும். உன் அன்பயும் பாசத்தையும் மீறி கடவுளை மீறி… நம்ம தினமும் கடவுளை கும்பிடறதை மீறி… நம்மளை சுத்தி இருக்குற எல்லாரோட ஆசீர்வாதத்தை மீறி… எனக்கு எதுவும் நடக்காதுன்னு நீ நம்பனும்.
நீயே தான் அதை உணரணும். அது வரை நான் வெய்ட் பண்ணுவேன் மீரா. உன் இஷ்டம் புருஞ்சுக்குறதும் புருஞ்சுக்காததும்…” என்று அங்கிருந்து சென்று விட்டான்.
மீரா தான் எதையுமே உணர முடியாதவாறு வெகு நேரம் அவன் சென்ற திசையையேப் பார்த்து கொண்டிருந்தாள்.
கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டவள் கண்ணை துடைத்து கொண்டு, அர்ஜுன் மருத்துவமனைக்கு சென்றாள்.
அஜய், சுஜியின் வீட்டிற்கு செல்ல, அங்கு அவளின் அம்மா, அஜயிடம் “அவரு உள்ள தான் இருக்காரு..” என்று சைகை காட்ட, அவன் சரி நான் போய் பாக்குறேன் என்று அவரின் அறைக்கு சென்றவன், “மாமா” என்று பாசமாய் கூப்பிட, அவர் அவனை ஒரு மாதிரியாக பார்த்தார்.
அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “நான் பண்ணது தப்பு தான் மாமா. ஆனால் சுஜியை எனக்கு ரொம்ப பிடிக்கும்… நான் அவளை பத்திரமா பார்த்துப்பேன்” மேலும் அவர் பேச வருவதையும் கேட்காமல், பேசியே அவரை கரைக்க சிறிது நேரத்தில் காலிலேயே விழுந்து விட்டான்.
அதில் அவர் பதறி, “அட என்ன மாப்பிள்ளை நீங்க என் கால்ல விழுந்துகிட்டு” என்று சொல்ல, அவன் “என்னாது மாப்பிள்ளையா… யோவ் இதை ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி சொல்லிருந்தா, என் மானமாவது மிஞ்சிருக்கும்ல” என்று மனதில் புலம்ப,
அவர், “துருவ் தம்பி என்கிட்டே வந்து பேசுனாரு பா. அந்த தம்பி பேசுனத்துக்கு என்கிட்டே மன்னிப்பு கேட்டுச்சு. அப்பறம் அந்த தம்பி எவ்ளோ பெரிய ஆளுன்னு நான் விசாரிச்சேன். அவரே என்கிட்டே வந்து பேசுனதும் நானும் யோசிச்சேன்… நேத்தே சுஜிகிட்ட உங்க வீட்டு பெரியவங்களோட வந்து பேச சொன்னேனே. அவள் சொல்லலையா” என்று கேட்க,
அவன் “அடிப்பாவி…” என்று அவளை திட்டி விட்டு, மேலும் ” இந்த துருவ் கால்ல விழுகப்போறேன்னு தெரிஞ்சும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டுட்டானே…” என்று திட்டிக்கொண்டும் தனக்காக அவன் மன்னிப்பு கேட்டு இருக்கிறான் என்று நெகிழ்ந்து கொண்டு அலுவலகம் சென்றான்.
அங்கு சுஜி தீவிரமாய் வேலை பார்த்து கொண்டிருக்க, மெதுவாய் அவள் பின்னே சென்று அவள் இடையை சுற்றி வளைத்தான்.
சுஜி மிரண்டு, “அஜய் இது ஆஃபீஸ் என்ன பண்ற” என்று திணற,
“ஏண்டி பஜ்ஜி… உங்க அப்பா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாருன்னு ஏண்டி சொல்லல” என்று கேட்க,
அவள், சந்தோசமாக அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, “நேத்து நைட் தாண்டா சொன்னாரு. உன்கிட்ட காலைல வந்து சொல்லலாம்னு நினைச்சேன். நீ தான் லேட்டா வந்துட்ட” என்றதும், அவன், அவளை முறைத்து “உன் வீட்டுக்கு தான் போயிட்டு வந்தேன் உன் அப்பாகிட்ட பேச” என்றான்.
அவள் விழி விரித்து “எதுக்குடா…” என்றதும் அவன் நடந்ததை சொன்னதும், அவள் வயிறு வலிக்க சிரிக்க ஆரம்பித்தாள்.
“அடப்பாவி, இப்படியா பண்ணுவ. உதி ஐடியா குடுத்தா உனக்கு எங்க போச்சு புத்தி… ஹா ஹா ஹா” என்று அவள் சிரிக்க, அஜய், அவள் சிரிப்பில் தொலைத்தவன், அவளை புதிதாய் பார்ப்பது போல் பார்க்க, அவள் டக்கென்று சிரிப்பதை நிறுத்தி விட்டு, கண் கலங்கி,
“எனக்காகவாடா என் அப்பா கால்ல விழுந்த.” என்று தேம்பி கொண்டு கேட்க, அவன் பதறி “ஹே பஜ்ஜி என்ன இது… என் மாமனார் கால்ல தான விழுந்தேன். அவரு மாப்பிள்ளைன்னு சொன்னனால தான் எந்திரிச்சேன். இல்லைன்னா அவரு காலை பிடிச்சுக்கிட்டு விட்டுருந்துருக்கவே மாட்டேன்” என்று குறும்பாய் சொல்ல அவள் மேலும் கலங்கினாள்.
அவன் வீட்டினர் காலிலே ஆசீர்வாதம் வாங்க கூட விழுகாதவன் என்று அவள் அறிந்ததே. அப்படி பட்டவன், அவன் மரியாதை எல்லாம் நினைக்காமல் இப்படி செய்தது அவளுக்கு அழுகையவே வர வைத்தது.
அவள் மேலும் “இருந்தாலும் நீ கால்”, என்று பேச வர, அஜய் பாவமாக “விடு பஜ்ஜி, நானே ஒரு தடவை தான் கால்ல விழுந்தேன். அதை நீ ஓராயிரம் தடவை சொல்லிக்காட்டாத” என்று சொல்ல, அவள் பக்கென்று சிரித்து விட்டாள்.
அவளை இழுத்து, சுவற்றோரம் நெருக்கி நின்றவன், “ஊஹிபுக்கி பஜ்ஜி” என்று காதலாய் சொல்ல, அவள் சிரித்துக் கொண்டு, “நீ இதை விடவே மாட்டியா…” என்று போலியாக சலித்து கொள்ள,
“ம்ஹும் விட மாட்டேன்.” அவள் இதழ்களை பார்த்துக்கொண்டு நெருங்கியவனை, தள்ளியவள், “கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புன்னு யாரோ சொல்லுவாங்க” என்று கேலியாய் கேட்க,
அஜய், “யாரு பஜ்ஜி அப்படி சொன்னது… அது எவனாவது கேனையா இருப்பான்” என்று புன்னகைத்து, “இதெல்லாம் தப்பு இல்ல பஜ்ஜி” என்று கிசுகிசுத்து விட்டு அவன் வேலையை செவ்வனே செய்தான்.
உத்ரா அறையில் வேலை விஷயமாக அவளுடன் பேசிக்கொண்டிருந்த துருவ் எதேச்சையாக cctv வீடியோவை பார்க்க, அதில் இவர்கள் அடிக்கும் கூத்து தான் வந்தது.
உத்ரா அதை பார்க்கும் முன்பு டக்கென்று அந்த கேமராவை அணைத்து விட்டான்.
உத்ரா, என்ன என்று பார்க்க, அவன் “நத்திங்…” என்று அவன் வேலையை பார்த்தான்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த அஜய், துருவைக் கட்டி பிடித்து, “நீ போய் அவருகிட்ட பேசுனனு ஏண்டா என்கிட்ட சொல்லல. உன்னை யாருடா அவருகிட்ட மன்னிப்புலாம் கேட்க சொன்னது” என்று சொல்ல,
உத்ரா புரியாமல் பார்த்தாள்.
அதன் பின்னே, அவன் சுஜியின் அப்பாவை பார்த்து அன்று பேசியதற்கு மன்னிப்பு கேட்டு, அவரை ஆக வைத்தான், என்று அறிந்து உத்ரா அவனை வியந்து பார்க்க, அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், அஜயை தள்ளி நிறுத்தி,
“இங்க எல்லா இடத்துலயும் கேமரா இருக்குல்ல” என்று சம்பந்தம் இல்லாமல் பேச, ஒரு நொடி புரியாமல் பார்த்தவன், பின் கண்ணை மூடி, ‘ஐயோ கிஸ் அடிக்கும் போது கேமராவை மறந்துட்டோமே’ என்று தலையில் கை வைத்தான்.
உத்ரா, “என்ன கேமரா? துருவ் இங்க எல்லா இடத்துலயும் கேமரா இருக்குல்ல…” என்று குழம்ப, அவன் அஜயை பார்த்து நக்கலாக சிரித்தான்.
அஜய், விட்டால் போதும் என அங்கிருந்து ஓடியே விட்டான். உத்ரா, “என்ன இவனுங்க புரியாத மாதிரியே பேசுறானுங்க” என்று நினைத்து கொண்டிருக்கையிலேயே, அவளுக்கு ஒரு செய்தி வந்தது.
அடுத்த வாரம், அவளுக்கு நம்பர் 1 பிசினெஸ் விமன் அவார்ட் பங்ஷன் நடக்க இருப்பதாக கூற, அந்த அவார்டை இன்டர்நேஷனல் பிசினெஸ்மேன் துருவேந்திரன் தான் அவளுக்கு கொடுக்க இருப்பதாகவும், கூற, அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
துருவிடம் விஷயத்தை பகிர்ந்து, துள்ளிக் குதித்தவளை சிறு சிரிப்புடன் பார்த்தவன் தான் இந்த ஏற்பாடை செய்திருந்தான்.
மேலும் சில பல ஏற்பாடுகளையும்…
அவளை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, “காங்கிரேட்ஸ் ஹனி” என்று சொல்ல, அவள் அவனை இறுக்கமாக அணைத்து கொண்டாள்.
“தேங்க்ஸ் துருவ்… நீ மட்டும் இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமே இல்ல.” என்று சொல்ல,
அவன், “இதெல்லாம் உன் ஹார்ட் ஒர்க்னால நடந்தது தான்…” என்று மறுக்க,
அவள் “ப்ச் இல்ல… நீ மட்டும் என்னை மோட்டிவேட் பண்ணலைன்னா என்னால இவ்ளோ பண்ணிருக்கவே முடியாது. பட் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லைனாலும் ஐ கேன் ஃபீல் இட்” என்று மறுக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன், அவளை பேச முடியாதவாறு இதழ்களை சிறை செய்து விட்டான்.
அவனின் முத்தத்தில் திளைத்தவளை சில நேரம் கழித்து விடுவித்தவன், அவளையே ரசனையுடன் பார்க்க, அவள் அவனை பார்க்க முடியாமல், அவன் நெஞ்சிலேயே சாய்ந்தாள்.
அந்த விழா முடிந்ததும்… திருமணத்திற்கு அவனை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு பின், வெளியில் வேலை இருப்பதாக அவள் கிளம்ப, துருவும் அவன் அறைக்கு செல்ல போனான்..
அப்பொழுது அஜய் கையில் ஒரு போனையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து,
“என்ன பண்ற” என்று கேட்க,
அவன், “இது சுஜி போன் துருவ்… இப்போ தான் என்கிட்டே பேசிட்டு, கார்ல ஏதோ திங்ஸ் இருக்குன்னு எடுக்க போனா. ரொம்ப நேரமா வரலைன்னு, அங்க போய் பார்த்தா, அவள் போன் கீழ விழுந்து இருக்கு. மறந்துட்டு கீழ போட்டுட்டாளான்மனு இங்க வந்து பார்க்கலாம்ன்னு வந்தேன்” என்று அவன் கண்கள் ஒரு வித பதட்டத்துடன் அவளை தேடி அலை பாய, துருவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
அந்த நேரத்தில், அர்ஜுன், துருவிற்கு போன் செய்து, “துருவ்… மீரா என்னை பார்க்க வரான்னு சொன்ன. எங்க டா இன்னும் காணோம்” என்று கேட்டான்.
காலையிலேயே அவள் அர்ஜுன் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக துருவிடம் சொல்லி இருந்தாள்.
அவள் குரலில் என்றும் இல்லாத உற்சாகத்தை உணர்ந்தவன் அப்பொழுதே, அர்ஜுனிடம் கூறி இருந்தான்.
ஆனால் இந்நேரம் அவள் சென்றிருக்க வேண்டுமே என்று நினைத்தவன், மீராவுக்கு அழைக்க, போன் ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது.
அர்ஜுனிடம் அவள் வீட்டில் இருக்கிறாளா என்று பார்க்க சொல்ல, அர்ஜுனுக்கு பயத்தில் கை கால் எல்லாம் உதற ஆரம்பித்தது.
அந்த நேரத்தில், விதுன் அஜய்க்கு போன் செய்து, “டேய், அனு அனுவை யாரோ கடத்திட்டு போறாங்கடா. வண்டியை ஃபாலோ பண்ணிட்டு போனேன். ஆனால் ஆனால் அவளை காணோம்டா” என்று கண்ணீருடனும், பதட்டத்துடனும் கூற,
அஜய் “அவளை ஆள் அப்பாவோட எதிரிங்க கடத்தி இருக்கலாம் நீ ஏண்டா பதறுற…” என்று புரியாமல் கேட்க,
அவன் “அவனுங்க என்னை தான் அடிக்க வந்தானுங்க. அப்பறம் அவள் அவள் என் கூட பேசிகிட்டு இருக்கறதை பார்த்து தாண்டா அவளை தூக்கிட்டு போய்ட்டாங்க” என்றவன், நடந்ததை நினைத்து பார்த்தான்.
உத்ரா வேறு எல்லாருடைய திருமணமும் ஒரே நாளில் நடக்க வேண்டும் என்று சொல்லிவிட, அவள் பொய்யாய் சொல்லி இருந்தாலும், அவளுக்கு அந்த ஆசை இருப்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.
அவளுக்காகவாவது எப்படியாவது திருமணத்திற்கு தயாராக வேண்டும் என்று நினைத்து தான் அர்ஜுனும், அஜயும் இவ்வளவும் செய்தனர்.
விதுனும் ஒரு முறை அனுவிடம் சென்று பேசுவோமா ஆனால் என்ன பேசுவது என்று குழம்பி கொண்டு, இறுதியில் அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று அவள் கல்லூரிக்கு சென்றான்.
அங்கு அனுவோ அவள் அப்பா இவ்வளவு தவறு செய்கிறவரா என்று அதிர்ந்து இருந்தவள், விதுனும் தன்னை தவறாக நினைக்கிறானோ என்று வெம்பினாள். இரண்டு நாட்களே என்றாலும், அவனிடம் அவள் மனது நன்றாக ஒட்டிக்கொண்டது.
அவள் கல்லூரியில், விதுனை மறக்க முடியாமல், அவன் ஞாபகத்திலேயே தான் ஏன் இருக்கிறோம் என்று உணராமலும் எங்கோ வெறித்து கொண்டிருக்க,
“அனு” என்று விதுன் அழைத்தான்.
விதுனை பார்த்ததும் அவள் சோகமெல்லாம் மாயமாகி, முகம் மலர, அவள் முகத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு.
ஆனால் அது சில நொடிகள் தான், சட்டென்று “எப்பொழுதும் ஏதாவது பட்ட பெயர் வைத்து கூப்பிடுபவன் இன்று யாரோ பேர் சொல்லி அழைப்பது அவளுக்கு கண்ணீரை தான் கொடுத்தது..” கலங்கிய கண்களை அவனிடம் இருந்து மறைத்து கொண்டு, உள்ளே செல்ல போக,
அவள் முன்னே வழி மறித்து நின்றவன் “அனு… நான் உன்கிட்ட பேசணும்.” என்று சொல்ல, அவள் “என்கிட்ட பேச என்ன இருக்கு…” என்று அவனை பாராமல் கேட்டாள்.
விதுன் “அனு… நான்… அன்னைக்கு.” என்று உளறியவன், “உன் அப்பா பண்ணுன தப்புக்கு நீ ஏன் இப்படி இருக்க…” என்று சம்பந்தம் இல்லாமல் பேச, அவளுக்கு அப்பொழுது தான், அவள் அப்பா செய்கிற தவறு அவளை தாக்குவதை விட, அவனை பாராமல் இருந்ததே அவளை தாக்கியது என்று உணர்ந்து கொண்டவள் சிலையாகி நிற்க,
அப்பொழுது தான் தான், ஒரு ரௌடி கும்பல், விதுனை தாக்க வந்தது.
ஆனால், அனுவை அருகில் பார்த்து “அவனோட ஆளை தூக்குங்கடா” என்று கத்திக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை தூக்கி கொண்டு சென்றனர்.
துருவிடம் விஷயத்தை சொல்ல, ஒன்றும் புரியாமல் இருந்தவன் ஏதோ யோசித்து விட்டு விறுவிறுவென, உத்ராவின் காருக்கு செல்ல, அங்கு, அவளின் கார் கதவு திறந்திருந்தது.
அவள் வெளியிலும் செல்ல வில்லை. எங்கும் அவளை காணவும் இல்லை. அதன் பிறகே, ஆண்கள் நால்வரும் நான்கு பெண்களையும் கடத்தி இருக்கிறார்கள் என்றே புரிந்து செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
உறைதல் தொடரும்…
-மேகா
Ellarukum serthu periya aapu vachiteengale sister. Adutha ud seekiram kuduthudunga.👌👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰😍😍😍🤩🤩🤩😍