Loading

21

சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால், தன் அன்னைக்கு சமையலறையில் உதவி செய்துக் கொண்டிருந்த மிதிலாவோ ஏதோ தீவிர யோசனையில் இருந்தாள்.

“என்ன மிது யோசனை? நானும் நீ வந்ததுல இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன், ஏதோ யோசனையிலேயே இருக்க?” என்றார் பூங்கோதை.

“ஒன்னுமில்ல ம்மா…” என அவள் வாய் கூறினாலும் அவள் முகமே காட்டிக் கொடுத்தது அவளின் யோசனையை.

அத்தோடு அதனை விட்டு விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் பூங்கோதை.

மிதிலாவின் மனதில் தன் தங்கையைப் பற்றி தான் ஓடிக் கொண்டிருந்தது.

தனக்கு தெரியாமல் அவள் ஏதோ செய்கிறாள் என்ற எண்ணம் இரண்டு தினங்களாக அவள் மனதில் சந்தேகம் ஓடிக் கொண்டிருந்தது.

இன்று அதனை நிரூபிக்கும் விதமாக அவளின் செயல்கள் இருந்தது. அவளின் நண்பர்கள் அனைவரையும் மிதிலாவிற்கும் தெரியும். இருவரும் எங்கு செல்வது என்றாலும் ஒன்றாகவே தான் செல்வர். அவ்வாறு இருக்கையில் இன்று தன் தங்கை தன்னிடம் வாய்க்கு வந்த காரணத்தைக் ஒப்பித்து விட்டு தனியாக கிளம்பியது போல் தோன்றியது.

அவளின் நினைவுகள் இன்று காலை நடந்ததை நினைவூட்டிப் பார்த்தது.

விடுமுறை என்பதால் மிதிலா எப்பொழுதும் போல் அதிகாலையில் எழுந்து கொள்ளாமல் படுக்கையிலேயே கண் முழித்துப் படுத்திருந்தாள்.

எப்பொழுதும் அவள் எழுப்பினால் மட்டுமே எழும் நறுமுகை இன்று அவளாகவே சீக்கிரம் எழுந்து குளிக்க செல்ல, அவளை அதிசயமாக பார்த்தாள் மிதிலா.

தன் அக்காவின் பார்வையை உணர்ந்தும் அவள் கண்டு கொள்ளாமல் குளித்து முடித்து விட்டு வந்து வெளியே செல்வதற்கு ஏற்ப உடையை மாற்ற, படுக்கையில் படுத்திருந்த மிதிலா,

“தண்ணிய உன் முகத்துல ஊத்துனா கூட எந்திரிக்க மாட்ட. இன்னிக்கு என்னவொரு அதிசயம்! சீக்கிரம் எழுந்திரிச்சதும் இல்லாமல் வெளிய கிளம்பிட்ட குண்டச்சி?” என்றாள் தன் தங்கையைப் பார்த்து.

“இன்னிக்கு பிரெண்ட்ஸ் வெளிய போகலாம்னு சொன்னாங்க க்கா… அதான் கிளம்பிட்டு இருக்கேன்” என அவள் புறம் திரும்பாமலே பதில் கூற,

“சொல்லி இருந்தா நானும் கிளம்பிருப்பேன்ல டி குண்டச்சி” என்றாள் மிதிலா.

“இல்ல, பரவாயில்ல டி குட்டச்சி. நீ ரெஸ்ட் எடு, நான் மதியத்துக்குள்ள வந்துருவேன்” என்றவள் கிளம்ப,

“சரி, வா நான் ட்ராப் பண்றேன்” என அவள் எழுந்து முகம் கழுவ போக,

“வேண்டாம் டி குட்டச்சி, நானே ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன். பிரெண்ட் வெய்ட் பண்ணுவா, லேட் ஆச்சு. போய்ட்டு வரேன், டா டா” என்றவள், அவசரமாக கிளம்ப,

அவள் முகம் கழுவி விட்டு வருவதற்குள் அவள் கிளம்பி இருந்தாள். அதன்பின் தான் அவளுக்கு சந்தேகம் அதிகமானது. தன் தங்கை தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்று!

அவள் யோசனையுடனே பால்கனிக்கு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவள் மனமோ அலைபாய்ந்து கொண்டிருக்க, அவள் விழிகளோ கொளுத்தும் வெயிலை வெறித்துக் கொண்டிருந்தது.

உள்ளே நறுமுகையின் சத்தம் கேட்க, பால்கனி கதவின் வழியே எட்டிப் பார்த்தாள் மிதிலா.

அப்பொழுது தான் அவள் உள்ளே வந்திருப்பாள் போலும். பூங்கோதையிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க தன் சிந்தனைகளை திசைத் திருப்பினாள்.

அவளின் அன்னை இன்று காலையில் கூறிய விசயம் வேறு மனதை அரித்துக் கொண்டிருந்தது. இதுவரை அவளின் திருமணத்தைப் பற்றி பேச்சை எடுக்காமல் இருந்த சுந்தரேசன் சமீப காலமாக தன் மனைவியிடம் மூத்த மகளின் திருமணத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்.

இதனைப் பற்றி ஓரளவு பூங்கோதையும் இவள் காதில் போட்டு வைத்தார்.

திருமணம் என்றவுடன் அவளின் ராம் தான் அவள் கண்முன் வர, தன் தந்தையிடம் இதனைப் பற்றி எவ்வாறு பேசுவது என யோசிக்கலானாள்.

தன் அக்கா ஏதோ யோசனையுடனே அமர்ந்திருப்பதைக் கண்ட நறுமுகை, அவள் எதிரே வந்து அமர்ந்து “என்ன குட்டச்சி, ரொம்ப தீவிர யோசனைல இருப்ப போல? எந்த நாட்டை பிடிக்க இவ்ளோ யோசனை?” என்றாள்.

“ஏன் ஏதாவது யோசிச்சா அது எந்த நாட்டையாவது பிடிக்கத் தான் இருக்குமா?” என நக்கலாக அவள் வினவ,

“ஓ… அப்போ என்ன யோசனைனு சொன்னா நான் என்னால ஆன தீர்வுகள சொல்லுவேன்!” என சாகவாசமாக கால் மேல் கால் போட்டு அவள் அமர,

“நீ எனக்கு தீர்வு சொல்றது இருக்கட்டும். இன்னிக்கு பிரெண்ட்ஸ் கூட நல்லா என்ஜாய் பண்ணியா?” என்றாள் மிதிலா. அவள் பார்வை அவள் கூறும் பதிலுக்காக காத்திருந்தது.

“ம்… அதெல்லாம், நல்லா ஊர் சுத்திட்டு தான் வந்தேன். சரி, நான் போய் ஜூஸ் குடிச்சுட்டு வரேன், அம்மா ஜூஸ் போடுறாங்க” என்றவள் அந்த இடத்தை காலி செய்ய, அவளின் சந்தேகம் வேகமாக பதிலளித்துவிட்டு ஓடும் தன் தங்கையின் செயல்களில் உறுதியானது.

“கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தான ஆகணும். அப்போ பார்த்துக்கிறேன் உன்னை” என்றவள், எழுந்து வீட்டினுள் சென்றாள் மிதிலா.

கோயம்பத்தூர் விமான நிலையம்

பரபரப்பாக இருந்த அந்த விமான நிலையத்தில் காத்திருந்தனர் ஊர்மிளாவும் நித்திலவள்ளியும்.

நித்திலவள்ளியின் கரங்களில் இருந்த தர்ஷினி சுவாரஸ்யமாக சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் 2 மணிக்கு தரையிறங்கும் விமானத்திற்காக காத்திருந்தனர்.

சற்று முன்பு தான் சற்று நேரத்தில் விமானம் தரையிறங்க போவதாக அறிவுப்பு அளித்திருக்க தன் பெற்றோரை வரவேற்க, காத்திருந்தாள் நித்திலவள்ளி.

கதிரவனுக்கு வேலை இருந்ததால் இவர்கள் இருவரும் அவர்களை அழைக்க வந்திருந்தனர்.

பத்து நிமிட காத்திருப்புக்கு பின் தூரத்தில் வந்து கொண்டிருந்த தன் மாமனை கண்டு கொண்ட தர்ஷினி, “ஐய்… மாமா…” என அவள் குதூகலத்துடன் கூற,

அவளின் சத்தத்தில் அவள் பார்வை சென்ற திசையை நோக்கினர் நித்திலவள்ளியும் ஊர்மிளாவும்.

அங்கு தன் ட்ராலி பேக்கை தள்ளியவாறே வந்து கொண்டிருந்தான் துகிலன். அவன் பின்னே ராஜாராமும் அம்பிகாவும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

ஊர்மிளாவின் கண்கள் முன்னால் வருபவனை கண்களால் நிரப்பிக் கொண்டிருந்தன.

தன் தலையை கோதியவாறே மற்றொரு கையில் பேக்கை தள்ளிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த துகிலனின் பார்வையில் விழுந்தாள் ஊர்மிளா.

அவன் கண்கள் அவளை ரசனையுடன் நோக்கின. அவனுக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு நிறத்தில் அவள் தேகத்தில் அந்த புடவை பாந்தமாய் ஒட்டியிருக்க, சிறு கிளிப் மூலம் அடக்கி இருந்த முடிகள் தென்றலின் உதவியால் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அத்தனை அழகையும் மீறி அவள் கண்களில் தெரிந்த காதலில் துகிலன் மொத்தமாய் விழுந்து விட்டான்.

“இப்படி வந்து கொல்றாளே!” என அவன் இதழ்கள் முணுமுணுக்க, அவளோ அவர்கள் அருகில் வந்த பின் அவனைக் கண்டு கொள்ளாமல் தன் அத்தை, மாமாவிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் ஏன் மா இந்த வெயில்ல பாப்பாவ வேற தூக்கிகிட்டு இங்க வந்தீங்க? நாங்களே ஒரு டாக்சி பிடிச்சு வந்திருப்போம்ல” என்றார் ராஜாராம்.

“பரவாயில்ல மாமா, இங்க வந்ததுக்கு அப்புறம் நாங்களும் வெளிய எங்கையும் போகல. அதான், நாங்களே உங்கள பிக்கப் பண்ண வந்தோம்” என பதிலளித்த ஊர்மிளா,

“வாங்க, கார் பார்க்கிங்ல இருக்கு” என்றவள், பார்க்கிங் நோக்கி நடக்க துவங்க தங்களின் பேத்தியை கொஞ்சியவாறே ராஜாராம் வர, தன் தாயிடம் பேசிக் கொண்டே வந்தாள் நித்திலவள்ளி.

அவர்கள், அவர்கள் வேலையில் மூழ்கி இருக்க தன் வேலையை காட்ட ஆரம்பித்தான் துகிலன்.

முன்னே நடந்து சென்றவளை மற்றவர்கள் கவனிக்கா வண்ணம், அவளின் கரங்களைப் பற்றி தன் பக்கம் இழுக்க, அவளோ தடுமாறி அவன் மீது மோதி நின்றாள்.

“ஏன், மேடம் எங்கள எல்லாம் கவனிக்த மாட்டீங்களோ! உங்க அத்தை, மாமா மட்டும் தான் கண்ணுக்கு தெரியறாங்களா” என்றான் கடுப்பான குரலில்.

அவனின் கடுப்பில் இவள் புன்னகைக்க, “எனக்கு பிடிச்ச கலர்ல புடவை கட்டிட்டு வந்தா மட்டும் பத்தாது, என்னையும் கொஞ்சம் கவனிக்கணும்” என்றான் துகிலன் கிசுகிசுப்பான குரலில்.

“ஹலோ, ஹலோ… ஓவரா கனவு காணாதீங்க, எனக்கு பிடிச்ச கலர் இது, அதான் கட்டுனேன்” என்க,

“ஓ… அப்படியா! அப்போ நான் வரும் போது எதுக்கு முழுங்கிற மாதிரி பார்த்த?” என்றான் கண்களில் கேலியுடன்.

“ஏதோ பார்த்து ஒரு வாரம் ஆச்சே, அதான் பார்த்தேன். மத்தப்படி வேற ஒன்னும் இல்ல” என்க,

“ஓ… அவ்ளோ தானா!” என அவன் கேட்கும் போது, காரின் அருகில் வந்திருந்தனர்.

காரை ஊர்மிளா எடுக்க, “ரமி, கீய கொடு. நான் கார் ஓட்டறேன்” என்றான் துகிலன்.

“இல்ல, பரவாயில்ல. நீங்க இப்போ தான பிளைட்ல டிராவல் பண்ணீங்க, நான் கார் ஓட்றேன். நீங்க கார்ல ஏறுங்க” என்க, தர்ஷினியை தூக்கிக் கொண்டு முன்பக்கமாக ஏறி அமர்ந்தான் துகிலன்.

மற்ற மூவரும் பின்னால் அமர்ந்து கொள்ள, ஊர்மிளா தங்கள் இல்லத்தை நோக்கி காரை செலுத்தத் தொடங்கினாள்.

ஊர்மிளா, இருபத்தி மூன்று வயது. படித்தது பொறியியல். தற்பொழுது மகளிர் விடுதியில் தங்கி சென்னையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனமொன்றில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்ப்பவள்.

கதிரவனின் சொந்த ஊர் கோயம்புத்தூர். அவனின் பெற்றோர் ஆர்.எஸ் புரத்தில் தான் உள்ளனர். தன் அண்ணனுக்காக தான் தற்பொழுது நித்திலவள்ளி தன் கணவனுடன் இங்கு வந்து குடியேறியுள்ளாள். அவளுக்கு உதவிக்காக தான் விடுமுறையில் தன் அண்ணன் வீட்டில் வந்து தங்கி உள்ளாள் ஊர்மிளா.

தன்னவள் கார் ஓட்டும் அழகை கண்களால் பருகியவாறே தன் அக்கா மகளுடன் கதைத்துக் கொண்டிருந்தான் துகிலன்.

பின்னே அமர்ந்திருந்த மூவரும், பேசிக் கொண்டு வர அவர்களின் பேச்சு ரகுநந்தனின் பக்கம் வந்தது.

நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்ட அம்பிகா, “அவனுக்கு இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் பண்ணலனா இன்னும் மூணு வருஷம் கல்யாணம் தள்ளிப் போகும்னு நம்ம குடும்ப ஜோசியர் சொன்னாரு நித்தி” என்றார்.

‘ஓ… இதான் அம்மா உடனே இங்க வந்ததன் பிண்ணனியா!’ என நினைத்துக் கொண்டான் துகிலன்.

ராஜாராம் தன் மகளைப் பார்க்க, “ம்மா, இப்பவே இதப் பத்தி பேசணுமா… வீட்டுல போய் பேசிக்கலாம்” என அவள் அந்த பேச்சை அத்தோடு கத்தரிக்க,

அம்பிகாவோ விடுவதாயில்லை. “இல்ல நித்தி, இந்த மூணு வருஷம் அவன அவன் போக்குல விட்டாச்சு. இனியும் நம்ம அப்படி இருக்க முடியாது” என்றார் அம்பிகா. அவர் குரலில் தெரிந்த தீர்மானத்தைக் கண்டு ராஜாராம் தன் மகளிடம், ‘மேலும் பேச வேண்டாம்’ என சைகையில் தெரிவிக்க நித்திலவள்ளியும் பேசாமல் அமைதி காத்தாள்.

கணவனும் மகளும் அமைதியாக இருப்பதைக் கண்ட அம்பிகா, ஊர்மிளாவிடம் பேச்சைத் தொடங்கினார்.

“சென்னை எப்போ வர்றதா இருக்க ஊர்மி?” என்க,

”என் அம்மாவோட அடுத்த டார்கெட் ரமி’யா, கடவுளே! இன்னும் என்ன என்ன பண்ண காத்திருக்காங்களோ” எனப் புலம்ப,

அவனின் புலம்பல் அவள் காதிலும் விழுந்தது. இதழில் புன்னகையை அடக்கியவள், தன் வருங்கால மாமியாருக்கு பதில் கூறிக் கொண்டே வண்டியை ஓட்ட,

சிறிது நேரம் பொறுமை காத்த துகிலன், “அம்மா… அவ தான் வண்டி ஓட்றால்ல, அவக்கிட்ட என்ன நோண்டி நோண்டி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க. நீ வண்டிய முன்னாடி பார்த்து ஓட்டு ஊர்மி” என அவளையும் சேர்த்து கடிந்தவன், தர்ஷினியை பார்க்க அவளோ, தன் மாமனுக்கு ஹை பை கொடுத்தாள்.

அதனைக் கண்ட அம்பிகாவோ, “என்னிக்கு தான் டா என்னை பேச விட்ருக்கீங்க. ஒன்னு உன் அப்பா எதையாவது சொல்லி என் வாய அடக்கிருவாரு, இல்லனா நீ ஏதாவது சொல்லி அடக்கிறது. என்னை எங்க தான் பேச விடறீங்க?” என கோபமாய் அவர் புலம்ப,

‘அப்போ இன்னவரை நீ பேசுனது எந்த கணக்கு ம்மா’ என மனதினுள் தான் கூறிக் கொண்டான் துகிலன்.

பின்னே இதனை வெளியே கேட்டு வைத்து அதற்கு ஒரு புலம்பலை யார் கேட்பது. அதற்கு அமைதியாகவே இருந்து கொள்வது தேவலாம் என அவன் வாயை மூடிக் கொள்ள, தன் மாமனின் முக பாவனைகளைப் பார்த்து சிரித்தாள் தர்ஷினி.

“நீயும் என்னை கேலி பண்ணாத டார்லிங்…” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற,

“மூஞ்ச பாவமா வச்சுக்கிட்டா உடனே பச்சைப் புள்ளை கூட நம்பிருமா என்ன! என் தர்ஷூ குட்டி விவரமாக்கும்” என்றாள் ஊர்மிளா நக்கல் தொனியில்.

“பெத்ததும் சரியில்ல, வாய்ச்சதும் சரியில்ல… உப்…” என சலித்துக் கொள்ள, தர்ஷினியோ “வாச்சதுனா என்ன மாமா?” என கேட்டு வைத்தாள்.

“அதுவா டார்லிங், உன் அத்தைக்காரி இருக்கா பாரு. அவ தான் வாச்சது” என அவள் காதில் இவன் முணுமுணுக்க, “ஓ… அப்போ எனக்கு வாச்சது யாரு?” என அதன் அர்த்தம் தெரியாமல் வினவ, பே…”என முழிப்பது துகிலனின் முறையாயிற்று.

“குழந்தைக்கிட்ட என்ன பேசுனாலும் கொஞ்சம் யோசிச்சு பேசணும் டாக்டர் சார். இல்லைனா இப்படி தான் ஏடாகூடமா கேள்வி வரும்” என ஊர்மிளா முறைக்க, அசடு வழிந்தான் துகிலன்.

‘வசந்தம் பிளாட்ஸ்’ எனப் பொறிக்கப்பட்ட கேட்டின் வழியே உள்ளே நுழைந்தது கார்.

நித்திலவள்ளி தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு முன்னால் செல்ல தர்ஷினியும் தன் தாத்தாவிடம் தாவி இருந்தாள்.

இவர்கள் இருவருக்கும் தனிமை கிடைத்திருக்க அதனை தனக்கு சாதகமாக்கி கொண்டான் துகிலன்.

காரை பார்க் செய்துவிட்டு ஊர்மிளா காரிலிருந்து இறங்க, சற்று தள்ளி நின்றிருந்த துகிலன் தன் பார்வையால் அவளை அளவெடுத்துக் கொண்டிருக்க, அவனின் பார்வை மாற்றம் அவளுக்கு நாணப்பூக்களை தூவ கண்களை நிலத்தில் பதித்தவள் அவன் அருகே வந்தாள்.

“ஒன் வீக் கழிச்சு பார்க்கிறவன் கண்ணுக்கு இப்படி பூ மாதிரி குளுமையா என் முன்னாடி வந்து நின்னா இந்த டாக்டரோட ஹார்ட் பீட் என்னாகிறது ரமி?” என தன் இதயத்தருக்கே கையை அழுத்தி அவன் கிறக்கத்துடன் கூற,

அவன் இதயத்தின் அருகே தன் கைகளை வைத்தவள், “டாக்டர் சார், ஹார்ட் பீட் அதிகமா இருந்தா ஏதாவது பிராப்ளமா இருக்கும். பி.பி, சுகர் இதெல்லாம் இருக்கானு ஒரு தடவை செக் பண்ணி பார்த்துருங்க” என்றவள் அவனைக் கடந்து செல்ல முற்பட, அவள் கரங்களை பற்றி அவளை முன்னேற விடாமல் தடுத்தான் துகிலன்.

அவளோ, “கைய விடுங்க துகி. யாராவது பார்த்திற போறாங்க” என அவள் விலக,

“இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல ரமி! நான் பாவமா தெரியல” என முகத்தை குழந்தை போல் பாவமாக வைத்துக் கொண்டு வினவ, ஒரு நொடி அவன் முகத்தை நின்று பார்த்தவள், “அப்படி ஒன்னும் தெரியலயே டாக்டர் சார்” என்றவாறே அவனிடமிருந்து விலகி மின்தூக்கியின் அருகே சென்றாள்.

“ரமி…” என்றவாறே அவன் பின்னால் ஓடிவர, அதற்குள் அவள் மின்தூக்கியினுள் சென்றிருக்க அவசர அவசரமாக அவன் உள்ளே நுழைந்தான்.

“ரமி…” என்றவனின் வார்த்தைகள் ஸ்லோ மோஷனில் குறைந்து அதிர்ந்து விழித்தான் துகிலன் உள்ளிருப்போரைக் கண்டு.

 

22

இருகரங்களையும் தன் மார்பின் குறுக்கே அணைத்த வண்ணம் நின்றிருந்தான் ரகுநந்தன். ஏற்கெனவே மின்தூக்கியினுள் அதிர்ச்சியில் ஊர்மிளா விழி விரித்து நின்றிருக்க, “ரமி…” என்று ஓடிவந்து மின்தூக்கியினுள் நுழைந்த துகிலனின் வார்த்தைகள் காற்றில் நார்த்தனமாடத் தொடங்கின.

தன் கண்களைக் கசக்கி விட்டு மீண்டும் பார்க்க, “ஆறடி உயரத்தில ஒருத்தன் நிற்கிறனே! கண்ணுக்கு தெரியலயா என்ன? கண்ணைக் கசக்கிற” என நக்கல் தொனியில் புருவம் உயர்த்திக் கேட்கும் தன் அண்ணனைக் கண்டு, கனவல்ல நிஜம் தான் என்று உணர்ந்து அசடு வழிந்தான் துகிலன்.

“காதலிக்கும் போது சுத்தி இருக்கிறவங்க யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க போல!” என ரகுநந்தனின் அருகே நின்றிருந்த சிரஞ்சீவி தன் இருப்பைக் காட்ட கூற,

“அண்ணா நீயுமா…!” என்றவன், ஆண்களுக்கும் வெட்கம் வரும் என நிரூபித்தான் துகிலன்.

“நாங்க தான் கரடி மாதிரி உள்ள நுழைஞ்சுட்டோம் போல டா, நம்ம வேணும்னா வெளிய போய்க்கலாமா?” என ரகுநந்தன் சிரஞ்சீவியிடம் வினவ,

“அய்யோ, ரகு ரொம்ப ஓட்டாதடா…” என சிணுங்கினான் துகிலன்.

“டேய், இதெல்லாம் உன் ரமி பண்ணா பரவாயில்ல. நீ ஏன்டா இந்த கருமத்த பண்ணி எங்கள சாவடிக்கிற” என்றவன், ‘உன் ரமி’ என்ற வார்த்தையை அழுத்தி சொன்னான் ரகுநந்தன்.

“அதுவந்து டா…” என அவன் தலை கீழே குனிய,

“எம்மா, தாயே… எனக்கு துகிலன் துகிலன்னு ஒரு தம்பி இருந்தானே, அவன எங்கையாவது நீ பார்த்த?” என சிரிப்புடனே கேட்ட ரகுநந்தனை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.

அவன் மூன்று வருடங்களுக்கு பின் இன்று தானே அவளிடம் பேசுகிறான். அதனால் ஏற்பட்ட ஆச்சரியம் அவள் விழிகளில் தெரிய, அதனை அங்கிருந்த மூவருமே உணர்ந்தனர்.

“ஸாரி ஊர்மி. எங்க நான் உன்கிட்ட திரும்ப சகஜமா பேசுனாலும் உன் வருங்கால மாமியார் கல்யாணப் பேச்ச திரும்ப ஆரம்பிச்சுருவாங்களோனு தான் பேசல, சாரி” என மன்னிப்பு வேண்ட,

“அப்போ, இப்ப பேசறத பார்த்தா மட்டும் அத்தை எதுவும் சொல்ல மாட்டாங்கனு நினைக்கிறீங்களா அத்தான்” என்றவளுக்கு, காரில் வரும் போது அம்பிகா பேசியது நினைவில் வந்தது.

“இனி என்ன சொன்னாலும் அது தான் நடக்காதே. கூடிய சீக்கிரம் என் ஜானுவோட நம்ம வீட்டுக்கு வரப் போறேன், மொத பொண்டாட்டி இருக்கிறப்போ ரெண்டாவதா உன்னை கட்டிக்க உன் மாமியார் ஒத்துக்குவாங்களா என்ன!” என அவன் நக்கலாக வினவ,

“டேய் அண்ணா… என் பொழப்புல மண்ணை வாரி போட்றாத டா, அதான் அண்ணி உனக்காக காத்திருக்காங்களே! அது போதாதா?” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

“இவன நம்பி உன் கழுத்த நீட்டுன அவ்ளோ தான் ஊர்மி. உன் அத்தானா உனக்கு ப்ரீ அட்வைஸ் பண்றேன், இவன கழட்டி விட்டுரு” எனக் கூற,

துகிலனோ, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஊர்மிளாவை பார்க்க, “உன்னைப் போய் லவ் பண்ணேன் பாரு. ரகு அத்தான் சொல்றது கரெக்ட் தான், லெட்ஸ் ப்ரேக் அப்” எனும் போதே ஏழாவது தளத்தில் மின்தூக்கி நிற்க திறந்த கதவின் வழியே அவள் வேகமாக வெளியேறினாள்.

துகிலனோ, “ரமி…” என்றவாறே பின்னால் ஓட, ரகுநந்தன் புன்னகை உறைய அவர்களைப் பார்த்து கொண்டே தன் நண்பனுடன் தன் பிளாட்டை நோக்கி நடக்கலானான்.

“வந்தவுடனே ஏன்டா அவன் வாழ்க்கைல விளையாடுற” என்றான் சிரஞ்சீவி.

“சும்மா தான் டா… நீ ஒன்ன மறக்கலனு நினைக்கிறேன் டா, ஊர்மிக்கும் எனக்கும் நிச்சய தட்டு மாத்திற வரை போய் நின்னது தெரியும் தான? எல்லாம் தெரிஞ்சும் தான் இப்போ துகி அவள விரும்புறான், அந்த காதல் என் அம்மாவே குறுக்க நின்னாலும் எதிர்க்கிற தைரியத்தை கொடுக்கணும். அவன நம்பி வரப் போறவ இத எதிர்ப்பார்ப்பா தான, அதான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். என் தம்பி கில்லாடி தான், ஆனா அம்மானு வந்துட்டா என்னை மாதிரி அவங்கள எதிர்க்கிற துணிவு அவனுக்கு சுத்தமா இல்ல. பார்த்துக்கலாம், என்ன வந்தாலும்” என தோளைக் குலுக்கியவன், பிளாட்டைத் திறந்தான்.

துகிலன் – ஊர்மிளா காதல் விசயம் தெரிந்தால் தன் வீட்டில் பெரிய பூகம்பம் வரும் என அவன் எதிர்ப்பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட இருந்தவளை தம்பி காதலித்தால் எந்த குடும்பத்தில் தான் ஏற்றுக் கொள்வார்கள்.

அது பெரியவர்களாக நிச்சயிக்கப்பட்டது என்றாலும் இவர்கள் இருவரின் எதிர்ப்போடு நடந்தது எனக் கூறினாலும் அதனை இவ்வுலகம் நம்ப வேண்டுமே!

ஆக மொத்தம் இவர்களின் காதலுக்கும் பெரிய பூகம்பமே காத்திருந்தது.

“என்ன டா இது இந்த சிரஞ்சீவிக்கு வந்த சோதனை. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடைல நான் வந்து முழிச்சுக்கிட்டு நிக்கிறேன்” எனப் புலம்பிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து நறுமுகை கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

ரகுநந்தன் தன் அறையில் இருந்து வெளியே வர, ஷோஃபாவில் அமர்ந்திருந்த சிரஞ்சீவி ‘இப்போ இந்த பச்சை மிளகா என்ன பிரச்சனைய கொண்டு வந்துருக்காளோ!’ என்றபடியே அவளைப் பார்க்க,

அவளோ தான் கொண்டு வந்த கவரில் இருந்ததை தலைகீழாக கீழே கொட்ட அதிலிருந்து பல இதயம் பொறிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளும், சில டைரிகளும் இருந்தது.

“எதுக்கு இப்போ, நடுவீட்டுல வந்து குப்பைய கொட்ற?” என்றான் சிரஞ்சீவி.

“ம்… வேண்டுதல்” என்றவள், “ரெண்டு பேரும் காலேஜ்க்கு எதுக்கு வர்றீங்க? பாடம் சொல்லித் தரத் தான? ஆனா, நீங்க சொல்லிக் கொடுத்த பாடத்தை எந்த லட்சணத்துல புரிஞ்சுக்கிட்டாங்கனு கொஞ்சம் பாருங்க” என்றாள் கோபத்தில் கன்னம் சிவந்து.

இருவரும் அதனை எடுத்துப் பார்க்க, சிலது ரகுநந்தனுக்கு காதல் கடிதங்களும், சிலது சிரஞ்சீவிக்கும் வந்திருந்தன.

“இதுல, எனக்கு அட்வைஸ் பண்றது மனச அலைப்பாய விடக் கூடாதுனு” என அவள் இதழ்கள் முணுமுணுக்க, அது நன்றாக சிரஞ்சீவியின் காதில் விழுந்தன.

“அப்போ இந்த லெட்டர்க்கு எல்லாம் நான் வொர்த்தானு தான் அன்னிக்கு அந்த லுக்கு விட்டியா?” என நேரடியாக கேட்க,

“ஆமா… ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல, நந்தா மாமாவுக்கு லவ் லெட்டர் வந்தா பரவாயில்ல. உங்களுக்குலாம் லெட்டர் தர்றாங்க பாரு, ச்சே… ச்சே என்ன டேஸ்ட்… ரசனையே இல்லாதவங்க” என அவள் தன் மென்டார் என்றும் பாராமல் மனதில் தோன்றியதை வெளியே பட்டென்று கூற,

அதில் ரகுநந்தன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். சிரஞ்சீவியோ அவளைப் பார்த்து முறைக்க,

“உண்மைகள் சில நேரம் கசக்கத் தான் செய்யும் சிரஞ்சீவி சாரே!” என இடைவரை குனிந்து பணிவது போல் நக்கல் காட்டியவள்,

“என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ, எனக்கு தெரியாது… இப்படி லூசுத் தனமா உங்க பின்னாடி சுத்திக்கிட்டு அரியரா வச்சுக்கிட்டு இருக்கிற இந்த லூசுங்கள கொஞ்சம் திருத்தற வழியப் பாருங்க” எனக் கீழே கிடந்த பொருட்களைக் காட்டிக் கூறியவள்,

வெளியே செல்ல எத்தனித்து பின் திரும்பியவள், “எவளாவது இழிச்சுட்டு வந்து உங்ககிட்ட பேசறானு நீங்களும் இழிச்சீங்க, பல்ல பேத்துருவேன்” என்றவள்,

“நானாவது பல்ல தான் பேப்பேன். என் அக்கா வந்தா வெளுக்க மாத்தோட தான் வருவா மாமோய்!” எனக் கத்திவிட்டு ஓடினாள் நறுமுகை.

சிரஞ்சீவியோ அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அவள் கூறிய தினுசில் புன்னகை முகமாய் நின்றிருந்தான் ரகுநந்தன்.

“டேய், உன் கொழுந்தியா உன்னை சொல்லிட்டு போறதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா என்னையும் ஏன்டா சேர்த்து சொல்லிட்டு போறா? அவளுக்கு நான் மென்டாரா! இல்ல அவ எனக்கு மென்டாரா!” எனக் கூறியவனைக் கண்ட ரகுநந்தன்,

“அவ குழந்தை டா… எப்படி செல்லமா விரட்டிட்டு போறா பாரு” எனக் கூறியவனை விழிப் பிதுங்க பார்த்தான் சிரஞ்சீவி.

“எது பல்ல பேக்கிறதும், வெளுக்க மாத்தோட வரேனு சொன்னதுமா?” எனக் கேட்க,

“அவ உன்னையும் தன் குடும்பத்து ஆளா நினைக்கிறா போல, அதான் இந்த கோபம்” என்க,

“அதுசரி. நீ உன் பொண்டாட்டி கையால அடி வாங்கிக்கோ, இல்ல உன் கொழுந்தியா கையால அடி வாங்கிக்கோ. ஆனா நான் என்னடா பாவம் பண்ணேன்?” என அவன் மூக்கால் அழுக, அப்பொழுது உள்ளே வந்த துகிலன்,

“யாரு டா அந்த பார்பி கேர்ள்…?” என்றவாறே சாகவாசமாக உள்ளே நுழைய, அவன் கேள்வியில் முதலில் கோபம் கொண்டது சிரஞ்சீவி தான்.

அவன் முறைப்பதைக் கண்ட துகிலன், ‘ஏன் ஜீவி அண்ணன் நம்மள இப்படி முறைக்கிறாரு’ என அவன் பார்க்க,

“என்ன டா சொன்ன பார்பி கேர்ளா! இத அவ மட்டும் கேட்டு இருந்தா செக்ல போட்டு ஆட்டு ஆட்டுனு உன்னை ஆட்டிருவா” என சிரித்தான் ரகுநந்தன்.

“அவ்ளோ டெரர் பீஸ்ஸா… யாரு, தெரிஞ்ச பொண்ணா?” என்றான் துகிலன்.

“ஜானுவோட தங்கச்சி டா…” என ரகுநந்தன் கூற, அவன் இதழ்கள் விசில் அடித்தது.

“அட எனக்கு மொற பொண்ணா! ச்சே… இப்படி ஒரு அழகான பிகர் நம்ம அண்ணிக்கு தங்கச்சியா இருப்பானு தெரியாம போச்சே!” என வருத்தம் கொள்ள, ஏனோ வந்த கோபத்தை அடக்கிய சிரஞ்சீவி தன் அறைக்குள் சென்றான்.

அதனை துகிலன் கவனிக்கவில்லை என்றாலும் ரகுநந்தன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

“வா ஊர்மி…” என ரகுநந்தனின் பார்வை துகிலனைத் தாண்டி செல்ல, “ரமியா…!” என அதிர்ந்தவாறே அவன் பின்னால் திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லாததைக் கண்டு தன் அண்ணனை முறைத்தான்.

“ஏன் டா பொய் சொன்ன?” என்க, “அப்புறம், அதான் உனக்கு ஏற்கெனவே ஆளு இருக்குல்ல. அப்புறம் எதுக்கு டா என் கண்ணம்மாவ சைட் அடிக்கிற?” என்றான் ரகுநந்தன்.

“என்னது கண்ணம்மாவா…” என அவன் விழி விரிய, “என் ஜானுவுக்கு அவ தான் முதல் குழந்தை டா. அப்போ எனக்கும் அவ தான குழந்தை, அவ எனக்கு கண்ணம்மா தான்…” என்க, ஏதோ கேட்க திரும்ப வந்த நறுமுகையின் காதிலும் இந்த வார்த்தைகள் வந்து விழுந்தன.

அவள் கால்கள் அப்படியே திரும்பி செல்ல எத்தனித்தன. “உன் காதலுக்கு ஏத்தவரு தான் உன் ராம் டி குட்டச்சி” என அவள் இதழ்கள் முணுமுணுக்க, அவள் தங்கள் பிளாட்டிற்கு சென்றாள்.

துகிலனோ, “அண்ணா ரொம்ப பாசத்த பிழிஞ்சு எடுக்காத டா…” என்க, “சரி, அதவிடு. அப்பாவும் அம்மாவும் என்ன பண்றாங்க?” என்றான் எதிரே மூடி இருந்த எதிர் பிளாட்டின் கதவைப் பார்த்து.

“வந்தோனே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேனு படுத்தாங்க. அதான் நான் இங்க வந்துட்டேன், ஆனா அம்மா இந்த தடவை ஏதோ முடிவோட தான் வந்துருக்காங்க ண்ணா…” என்றான் துகிலன்.

“நானும் ஒரு முடிவோட தான் இருக்கேன் டா…” என்க, “என்ன ண்ணா சொல்ற? என்ன முடிவு?” என்க, ரகுநந்தன் கூறியதைக் கேட்டு அதிர்ந்து விழித்தான் துகிலன்.

“ரகு இது சரியா வருமா?” என அவன் வயிற்றில் ஓடிய பயபந்துக்களை அடக்கிய வண்ணம் வினவ,

“தெரியல. ஆனா என் முடிவ நான் மாத்திக்கிறதா இல்ல டா, இப்ப நானும் ஜீவியும் அந்த வேலையா தான் போய்ட்டு வந்தோம்” என்றான் ரகுநந்தன்.

“ஆனா, ஒரே நாள்ள இது சாத்தியமா டா?” எனக் கேட்பவனைப் பார்த்து, “தெரியல” என உதட்டைப் பிதுக்கினான் ரகுநந்தன்.

“இறங்கியாச்சு, பார்த்துக்கலாம் என்ன நடந்தாலும்” என அவன் சர்வசாதாரணமாக கூற,

“எனக்கு இது சரியா வருமானு தெரியல ண்ணா… அண்ணி முதல்ல இதுக்கு ஒத்துக்குவாங்களா?” என்றான் துகிலன்.

“அவக்கிட்ட யாரு பெர்மிசன் கேட்டது” என்றவன், சுவற்றை வெறித்துக் கொண்டிருக்க,

“அப்புறம்…!” என விழி பிதுங்கி நின்றான் துகிலன்.

“அவளுக்கு தெரிஞ்சா அம்மாவ விட பேயாட்டம் ஆடுவா டா. அவள சமாளிக்க இப்போ நேரம் இல்ல, நான் முதல்ல பொறுமையா தான் இத ஹேண்டில் பண்ண யோசிச்சேன் டா. ஆனா, இப்ப இருக்கிற சூழ்நிலைல அது சரிபட்டு வரும்னு தோணல. காலம் தாழ்த்த தாழ்த்த என் ஜானு என்னை விட்டு போய்ருவாளோனு கொஞ்சம் பயமாவும் இருக்கு” என்ற தன் அண்ணனைக் கண்டு என்ன சொல்வது என்றுத் தெரியாமல் முழித்தான் துகிலன்.

அவனே மேலும் தொடர்ந்தான். “இதுநாள் வரை என் அம்மாவுக்கு தான் நான் நல்ல பிள்ளையா இல்ல, இப்போ எடுக்கப் போற முடிவால என் ஜானுவுக்கும் நான் கெட்டவனா தெரியலாம். ஆனா, எனக்கு இத தவிர வேற வழி தெரியல” என்றவனின் கண்களில் வேதனை கலந்திருந்தது.

“கொஞ்சம் பொறுமையா இருக்கலாமோனு தோணுது டா” என்றான் துகிலன்.

“இன்னும் எவ்ளோ வருஷம் டா? இது படமோ இல்ல கதையோ இல்ல டா, காலம் முழுக்க உனக்காக நான் காத்திருப்பேனு சொல்ல. நிஜ வாழ்க்கைல இதெல்லாம் தாண்டி தான் வந்தாகனும், அம்மாவ எதிர்த்து அந்த நிச்சயத்தை நிறுத்துனதுக்கு தான் இன்னும் தண்டனை அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன். என் ஜானுவையும் நான் இழக்க விரும்பல டா. போதும், காத்திருந்தது. பாதினாலு வருஷம் காத்திருப்புக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்” என உறுதியாய் கூறிய தன் அண்ணனைப் பார்த்த துகிலன், தான் இனி என்ன கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் தன் அண்ணன் இல்லை என்பதைப் புரிந்து கொண்டவன், “ஆண்டவா, அவன் வாழ்க்கைல இனியாவது சந்தோஷங்கள் அமையணும்” என வேண்டுதல் வைத்தான்.

தன்னறைக்குள் இருந்த சிரஞ்சீவிக்கோ தன்னையே புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

பின் மனதை ஒருநிலைப்படுத்தி சற்று பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு வெளியே வந்தான்.

“அவன் பண்ணப் போற விசயத்துல உங்களுக்கும் பங்குண்டோ?” எனக் கேட்ட துகிலனைக் கண்டு புரியாமல் பார்க்க,

“இப்போ தான் எல்லாத்தையும் சொன்னான். இது ஒரே நாள்ள எடுக்கக் கூடிய முடிவா ரெண்டு பேரும் நினைச்சுட்டீங்கள்ள” என்றவனின் குரலில் என்ன இருந்தது எனக் கணிக்கக் கூட முடியவில்லை.

“என் நண்பன் என்ன பண்ணாலும் அதுக்கு நான் துணையா இருப்பேன்” என்றவன் வெளியே கிளம்பி செல்ல, ரகுநந்தனோ பால்கனிக்கு சென்று வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அவனும் எதிர் பிளாட்டிற்கு சென்று விட்டான். ரகுநந்தனோ ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாய் யாருக்கோ அலைப்பேசியில் தொடர்பு கொண்டு, அதன்பின் அந்த நபருக்காய் காத்திருக்க ஆரம்பித்தான்.

செவ்வானம் கடலன்னையின் மடியில் தழுவ ஆரம்பித்திருக்க, நிலவவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டு உலகை நோக்கி வரத் துவங்கிய செம்மாலைப் பொழுது.

பூங்காவில் தன் நண்பர் பட்டாளுங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள் மிதிலா.

அவள் கண்களை சிறு துப்பட்டா ஒன்றால் கட்டப்பட்டு இருக்க, தன் குட்டி நண்பர்களைக் கைகளால் தேடத் துவங்கி இருந்தாள்.

மஞ்சளும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் சல்வார் அவள் தேகத்தை தழுவ, அவளின் துப்பட்டா அவளின் இடையில் கட்டப்பட்டு இருந்தது.

அவளை அந்த மாலைப் பொழுதில் தன் பால்கனியில் இருந்து ரசித்துக் கொண்டிருந்த ரகுநந்தனுக்கு அந்த நேரம் அவள் இடையை தழுவும் அந்த துப்பாட்டாவின் மேல் பொறாமை எழுத் துவங்கியது.

அவளின் நண்பர்கள் அவளுக்கு போக்கு காண்பித்துக் கொண்டே அவளைச் சுற்றி ஓட அவள் கரங்களோ அவர்களைத் தேடி காற்றில் அலைப் பாய்ந்துக் கொண்டிருந்தது.

அந்த கூட்டத்தில் நறுமுகையும் இருந்தாள். “என்ன பிடி பொன்வண்டு” என அவள் கரங்களில் சிக்காமல் சில்வண்டு ஓடிக் கொண்டிருக்க,

“டேய், சில்வண்டு… இப்போ நீ மாட்டப் போற பாரு” என அவனைத் தடுமாறியவாறே தேடிக் கொண்டிருந்தவள் எதிரே வந்த பெண்மணியின் மீது மோதி நின்றாள்.

அந்த பெண்மணியோ, “வயசுப் பிள்ளை விளையாடற விளையாட்டப் பாரு” என முணுமுணுத்தவாறே விலகிச் செல்ல, அவரின் முணுமுணுப்பு அவளின் காதிலும் விழுந்தது.

தன் கண் கட்டை அவிழ்த்து அவர் யாரென்று பார்க்கும் போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தர்ஷினி, “அம்மாச்சி…” என்ற அழைப்புடன் அவரை நோக்கி ஓடி வந்தாள்.

அந்த பெண்மணியின் முதுகுப்புறம் மட்டுமே தெரிய, அவர் முகத்தைப் பார்க்கும் வண்ணம் சற்று தள்ளி நின்று பார்த்தவள் அதிர்ந்தாள்.

அம்பிகா… ‘இவங்க எப்போ இங்க வந்தாங்க?’ என்ற கேள்வி அவள் மனதில் ஓட, அவரோ தன் பேத்தியைத் தூக்கிக் கொண்டு அவளைப் பார்த்து, “வயசு பொண்ணு தானம்மா நீ… வயசுக்கு ஏத்த மாதிரி இருக்கப் பாரு, வாண்டுகளோடு சேர்ந்து கண்ணாமூச்சி ஆடற வயசா என்ன?” என்றவர்,

“கலிகாலம். என்ன தான் பொம்பளைப் பிள்ளைய வளர்த்து வச்சுருக்காங்களோ. ஆம்பிளை, பொம்பளை பாரமா நடக்கிற இந்த பார்க்ல இப்படி வந்து தான் கண்ணைக் கட்டிக்கிட்டு விளையாடணுமா?” என நொடித்தவாறே தன் பேத்தியுடன் செல்ல, தன் அம்மாச்சி மிதிலாவை ஏதோ திட்டுவதைக் உணர்ந்த தர்ஷினி, “அம்மாச்சி… அவங்க என் பிரெண்ட்” என்றாள்.

“வயசுக்கேத்த பிரெண்ட்ட பிடி” என்றவர், தன் பேத்தியைத் தூக்கிக் கொண்டு அவளைக் கடந்து சென்றார் அம்பிகா.

அவர் முகம் அவளுக்கு சட்டென்று ஞாபகம் வராவிட்டாலும் அதன்பின் பரிச்சயமான முகமாகத் தோன்ற, அதே நேரம் தர்ஷினியின் அம்மாச்சி என்ற அழைப்பை வைத்து அவர் ரகுநந்தனின் அம்மா என்பதை புரிந்து கொண்டாள்.

“யாரு டி குட்டச்சி இந்த அம்மா? வந்த வேலைய பார்க்கிறத விட்டுட்டு உன்னை ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கு?” என்றவாறே அவள் அருகே வந்தாள் நறுமுகை.

“விடு டி குண்டச்சி, இதெல்லாம் கண்டுக்க கூடாது” என்க, அவளை அதிசயமாகப் பார்த்தாள் நறுமுகை.

அவள் பார்வையை புரிந்து கொண்டவள், “டே சில்வண்டு” என்றவாறே அவனிடம் செல்ல, “இந்நேரம் அந்த அம்மா முடிய ஆய்ஞ்சு இருப்பாளே குட்டச்சி. எதுவும் பேசாம அமைதியா போறா, சரியில்லயே!” என நினைத்தவள் தன் அக்காளைப் பார்க்க, அவளோ சில்வண்டிடம் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தாள்.

இதனை அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ரகுநந்தன்.

தன் தாய் ஏதோ தன்னவளை திட்டி உள்ளார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் இவளின் அமைதியைக் கண்டு தான் அவன் மனம் ஜெர்க்கானது. “இவ தெரிஞ்சனால தான் அமைதியா இருக்காளா? இல்ல, சரி பொழச்சு போகட்டும்னு விட்டுட்டாளா… இருக்காதே, இந்நேரம் ஜானு அம்மா முடிய பிடிச்சு ஆய்ஞ்சு இருக்கணுமே!” என நறுமுகை போலவே அவனும் யோசித்தான்.

ஆனால் இத்தனைக்கும் காரணமானவளோ சில்வண்டிடம், அவன் கையில் வைத்திருந்த தேன் மிட்டாய்க்கு சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தாள்.

 

23

கோயம்பத்தூர் – ராம் நகர்

சீதா கல்யாணத்தையொட்டி அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆலயத்தின் நுழைவுவாயிலில் வாழைமரத் தோரணங்களால் அலங்கரிப்பட்டிருந்தது. ராமர் பட்டாபிஷேக உற்சவர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னால் மக்கள் சீர் வரிசைகளுடன் வந்தனர். இருதரப்பினர் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என, ராமனை மகனாகவும் மருமகனாகவும் பாவித்து, பக்தியும் பாசமும் கலந்த பரவசத்தில் திளைத்து இருந்தனர்.

பட்டாபிஷேக ராமர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின் திருமண வைபவச் சடங்குகள் நடைபெற்றன. கன்னிகாதானம், சூர்ணிகை, பிரவரம் ஆகியன வாசிக்கப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!

பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர
(சீதா கல்யாண)

பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால
(சீதா கல்யாண)

பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம
(சீதா கல்யாண)

என்ற தியாகராஜரின் வரிகள் மெல்லிசையாய் அனைவரின் காதிலும் ஒலித்துக் கொண்டிருக்க,

இளஞ்சிவப்பு வண்ண காஞ்சிப்பட்டில், தங்க ஜரிகைகள் மேலோட, நெற்றியில் புரண்ட கற்றை முடியை அவளின் வெண்டை விரல்கள் ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தன.

இடைவரை நீண்ட கூந்தலில் மல்லிகைப் பூச்சரம் குடி கொண்டிருக்க, கோவிலின் உள் நுழையும் போது ஜூவோதஸ்தம்பத்தை(கோவிலின் நிலவுப்படி) தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்ட போது அதில் ஒரு சரம் மல்லிகை அவளின் முன்பகுதியை தழுவி சரசமாட, அவள் நெஞ்சாங்கூட்டில் மேல் ஒட்டிக் கொண்டிருந்த தங்க ஆரம் அசைந்தாடியது.

அவளின் இதயத்துடிப்பு வேகமாக அடித்துக் கொண்டது. எழுந்ததில் இருந்தே அவளின் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்க அதன் அர்த்தம் தெரியாமல் அவள் குழம்பிக் கொண்டிருந்தாள்.

கோவிலுக்குள் நுழையாமல் ஏதோ யோசனையில் இருக்கும் தன் அக்காளை உலுக்கினாள் நறுமுகை.

“குட்டச்சி, என்ன யோசனை டி?” என்க, ‘ஒன்றுமில்லை’ என்றவள் அந்த ராமர் கோவிலிற்குள் உள்நுழைந்தாள்.

அவள் கூடவே, சுந்தரேசனும் பூங்கோதையும் உள்நுழைந்தனர்.

அதே வண்ண பட்டுப் புடவை தான் நறுமுகையும் அணிந்திருந்தாள். ஆனால் தான் அணிந்திருந்த புடவையை விட சற்று ஜரிகை குறைவாக உள்ளதாகவே பட்டது மிதிலாவிற்கு.

கோவிலுக்கு கிளம்பும் போது தன் அன்னை கொடுத்த புடவையை கையில் வைத்துக் கொண்டு அவள் கேள்வியாய் அவரைப் பார்க்க, “நல்ல விசேஷத்துக்கு போகும் போது பட்டுப்புடவை கட்டுனா தான நல்லா இருக்கும்” என்ற அவர் பதிலில் இவளுக்கு திருப்தி இல்லை என்றாலும் நறுமுகையும் தன் அன்னை கொடுத்த புடவையை மறுபேச்சின்றி வாங்கி அணிந்து கொள்ள, அவளும் எதுவும் பேசாமல் அதனைக் கட்டிக் கொண்டு வந்தாள் மிதிலா.

உள்ளே சன்னிதானத்திற்குள் குடும்பத்தோடு உள்நுழைந்தனர். அவள் உள்நுழையும் போதே அவன் கண்ணில் பட்டு விட்டாள்.

தங்க ரதத்தைப் போல் காஞ்சிப்பட்டில் எழிலோவியமாய் நடந்து வந்து கொண்டிருந்தவளை இமைக்க மறந்திருந்தான் ரகுநந்தன்.

அவன் பார்வை சென்ற திக்கை சிரஞ்சீவி பார்க்க, மிதிலா தன் குடும்பத்தோடு அந்த கோவிலுக்குள் வந்து கொண்டிருந்தாள்.

கர்ப்பக் கிரகத்தில், மாங்கல்யதாரணம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

ஶ்ரீராமர் – சீதா திருமணக் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்க, அதனை கண்டவளுக்கு மனம் நிறைவாக இருந்தது. தன் சிப்பி இமைகளை மூடி, தன் நெஞ்சிற்கு அருகில் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் ஶ்ரீராமர் – சீதாவை கண்ணில் நிரப்பிக் கொள்ள, அதே நேரம் அவர்களின் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெறத் துவங்கின.

பச்சை பட்டாடை உடுத்தி தங்க, வைர நகைகளுக்கிடையே சீதா தேவி புதுமணப் பெண்ணாய் ஜொலித்துக் கொண்டிருக்க அந்த காட்சியை தன் மனதினுள் நிரப்பிக் கொண்டாள் மிதிலா.

அவள் கண்களை மூடி வேண்டிக் கொண்டு இமைகளைத் திறக்க, அவள் அருகே நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தாள்.

பட்டு வேஷ்டி சட்டையில், அலைஅலையான கேசங்கள் அந்த இளந்தென்றலில் அசைந்தாட அவளைத் தான் அவன் கண்கள் காதலுடன் நோக்கிக் கொண்டிருந்தது.

‘இவர் எப்போ இங்க வந்தாரு?’ என யோசனையுடன் பார்த்தவள், பின் தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பார்த்தாள்.

அவள் அருகிலே நறுமுகை நிற்க, அவளுக்கு பக்கத்தில் சுந்தரேசனும் பூங்கோதையும் நின்றிருக்க, அவர்களுக்கு எதிரே ஊர்மிளாவும் துகிலனும் நின்றிருந்தனர்.

அவர்களுக்கு அருகில் ரகுநந்தனின் பெற்றோரும், நித்திலவள்ளி தன் கணவன், குழந்தை சகிதமாக நின்று சாமி தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, இவளுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனப் புரியாமல் விழித்தாள்.

ஶ்ரீராமர் – சீதா திருக்கல்யாணம் நிறைவடைய, அவர்கள் அருகில் வந்த ஐயர் ஒருவரின் கையில் இரு மாலைகள் இருக்க, அதனை ரகுநந்தனிடம் நீட்டினார்.

அதில் ஒன்றை வாங்கிக் கொண்டவன், மற்றொன்றை அவளை வாங்குமாறு கண்ணசைவில் தெரிவிக்க, மகுடிக்கு கட்டுண்ட பாம்பைப் போல் அவனின் காதல் நிரம்பிய விழிகளின் கட்டளையை இவள் நிறைவேற்றி வைத்தாள்.

அவள் கழுத்தில் அந்த மாலையை அணிந்து, அவள் அணிவிக்கப் போகும் மாலைக்காக அவன் தலைகுனிய, அனிச்சை செயலாய் அவள் கரங்கள் தன்னால் அவன் கழுத்தில் மாலையிட்டன.

ஐயர் மந்திரங்கள் ஓதியவாறே, திருமாங்கல்யத்தை ரகுநந்தனின் கரங்களில் கொடுக்க அதனை வாங்கி அவளின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, ஶ்ரீராமர் – சீதா சன்னிதானத்திலே கலியுக ஜானகியை தன்னுடையவளாக்கிக் கொண்டான் அவளின் ராமன்.

ஶ்ரீராமர் – சீதா திருக்கல்யாண உற்சவத்திற்கு வந்திருந்த திரளான மக்கள், இந்த கலியுக ராமன் – ஜானகியின் திருமணத்திற்கு அட்சதைகள் தூவி ஆசிர்வதித்தனர்.

தன் மகளின் திருமணத்தை தன் கண்களால் நிரப்பிக் கொண்டிருந்தனர் சுந்தரேசனும் பூங்கோதையும். தன் அக்காவின் நீண்ட கால ஆசை, அவளின் விருப்ப தெய்வங்களின் சன்னதியிலேயே அதுவும் அவர்களின் திருக்கல்யாண உற்சவத்திலே நடந்தது மனநிறைவைக் கொடுக்க அவர்கள் இருவரையும் சந்தோசத்தோடு நோக்கினாள் நறுமுகை.

ஆனால் அவர்களுக்கு எதிர்புறமாக நின்றிருந்த ராஜாராம் – அம்பிகா தம்பதியினர் அதிர்ச்சியில் இருந்தனர். நித்திலவள்ளியோ அதிர்ச்சியுடனே தன் கணவனைப் பார்க்க, கதிரவனோ மனநிறைவான பார்வையை புதுமண தம்பதினர் மேல் செலுத்திக் கொண்டிருந்தான்.

துகிலனும் ஊர்மிளாவும், அனைத்தும் நல்லபடியாக நடந்தேறிய திருப்தியில் நிற்க,

மாலையோடு தன் கழுத்தில் சில நொடிகளுக்கு முன் அவன் கட்டிய மாங்கல்யத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மிதிலா.

அவளின் உணர்ச்சியை இன்னதென்று விவரிக்க இயலா நிலையில் இருந்தது. சீதா திருக்கல்யாணத்தை காண வந்தவளுக்கு தன் கல்யாணம் நிறைவேறியதால் அதிர்ச்சி, பயம், கோபம், காதல், முறைப்பு என அத்தனை உணர்ச்சிகளையும் அவள் முகம் தத்தெடுத்திருந்தது.

தன்னவளின் கரம் பற்றி கோவிலை மூன்று முறை வலம் வந்தான் ரகுநந்தன். எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவனின் செயலுக்கு இவள் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்க, அங்கிருந்த ஜீவன்களுக்கு ஒன்றும் புரியாமல் குழம்பினர்.

தன் பெற்றோரின் அருகே தன் மனைவியுடன் சென்ற ரகுநந்தன், தன் தந்தையிடம் “உங்க ஆசீர்வாதம் எங்களுக்கு வேணும் ப்பா…” என காலில் விழப் போக, தன் கணவனுடன் தன் மாமனார் மாமியார் காலில் விழப் போனாள் மிதிலா.

அவர்களைத் தடுத்த ராஜாராம், “கோவில்ல சாமியோட பாதத்தை தவிர மனுஷங்க பாதத்துல விழக் கூடாது ரகு. எங்க ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என அவர் ஆசீர்வதிக்க,

அவர்கள் தங்கள் காலில் விழப் போவதைக் கண்ட அம்பிகா ஓரடி பின்னால் நகர்ந்து இருந்தார். அவர் முகத்தில் கோபம் அப்பட்டமாய் தெரிய, அதன்பின் ரகுநந்தன் தன் மாமனார், மாமியாரின் அருகே தன் மனைவியின் கரம் பிடித்து அழைத்து வந்தான்.

“தேங்க்ஸ் மாமா… யாருமே இப்படி திடுதிப்புனு தன் மகள் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. உங்களுக்கும் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அது என்னால நிறைவேறாம போய்ருச்சு, என்னை மன்னிச்சுருங்க மாமா” என்றவன்,

“எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை, மாமா” என அவர்கள் காலில் விழப் போக,

அவர்களை இருவருமே தடுத்தனர். “ராமர் – சீதா திருக்கல்யாண உற்சவத்துல என் மகள் கழுத்துல நீங்க தாலி கட்டி இருக்கீங்க, இத விட பெரிய முகூர்த்த நாள்ளயோ இல்ல பெரிய மண்டபத்துலயோ கல்யாணம் வச்சு இருந்தாலும் இந்த மனநிறைவ எங்களுக்கு கொடுத்து இருக்காது. இப்ப எங்க மனம் நிறைஞ்சு இருக்கு மாப்பிள்ளை” என அவர் மனதார கூறி தன் மகளின் கேசத்தை வருடி விட்டார்.

இதனை அனைத்தையும் அவர்கள் அருகே இருந்த அம்பிகாவும் கேட்டுக் கொண்டு இருக்க, “ஆக, குடும்பத்தோட முடிவு பண்ணி தான் உங்க மகள என் மகன் தலைல கட்டி வச்சீங்களா? நீங்க எல்லாம் ஒரு பெரிய மனுஷன். கேவலமா இல்ல, இப்படி எல்லாம் உங்க மகளுக்கு புருஷன தேடறதுக்கு சொல்லி குடுத்து வளர்த்து இருப்பீங்க போல. அதான் அவளும் என் மகன வளைச்சுப் போட்ருக்கா” என கோபமாய் பேச,

இதுவரை அமைதியாய் இருந்த மிதிலா தன் பெற்றோரை குற்றம் சொல்லவும் அவரை எரிக்கும் பார்வை பார்த்தாள் மிதிலா.

“வாய் இருங்கிறதுக்காக வாய்க்கு வந்தது எல்லாம் பேசக்கூடாது அத்தை. என்னை பெத்தவங்கள குறை சொல்லத் தெரிஞ்ச உங்கள அதே மாதிரி இதே இடத்துல உங்க மகனோட வளர்ப்ப பத்தியும் என்னால பேச முடியும். ஆனா அமைதியா இருக்கேன்னா இது பொது இடம், நம்ம குடும்ப சண்டைய நாலு பேரு வேடிக்கைப் பார்க்ககூடாதுனு தான் அமைதியா இருக்கேன். ஆனால் உங்களுக்கு அதப் பத்தி எல்லாம் கவலை இல்ல போல, என்னைப் பெத்தவங்கள குறை சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கானு முதல்ல பாருங்க. என் அனுமதி இல்லாமலே தான் உங்க மகன் என் கழுத்துல தாலி கட்டி இருக்காரு, அவர்கிட்டயே கேளுங்க நான் சொல்றது உண்மையா இல்லையானு” என்றவள்,

தன் பெற்றோரின் அருகே சென்றாள். “கடைசில நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்கள்ள” எனும் போது அவளை அணைத்துக் கொண்ட சுந்தரேசன்,

“உன்கிட்ட சொல்ல முடியாத சூழ்நிலை மிது ம்மா… உனக்கு எந்த கஷ்டமும் வர விட மாட்டாரு மாப்பிள்ளை, அவரோட சந்தோசமா வாழணும் ம்மா நீ” என்க,

அவளோ எந்த பதிலும் பேசாமல் முகத்தை கல்லாக்கி கொண்டு ஜடமாய் நின்றிருந்தாள்.

பின்னர் ரகுநந்தன் தன் மனைவியின் கரம் பற்றி, வெளியே அழைத்துச் சென்று அங்கிருந்த காரில் அவளுடன் ஏற, அவர்களின் பின்னால் இரு குடும்பத்தாரும் சென்றனர்.

ராஜாராமிற்கு தன் மகனின் திடீர் திருமணம் அதிர்ச்சியை அளித்தாலும் அவனின் மனதிற்கு பிடித்தவளைத் தான் திருமணம் செய்துள்ளான் என்ற ஒன்றே மனநிறைவைத் தர, அவர் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

ஏற்கெனவே கோபத்துடன் இருந்த அம்பிகாவிற்கு தற்பொழுது தன் கண் முன்னே தன் மகனின் திடீர் திருமணம் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

நித்திலவள்ளிக்கோ என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்தாலும் இந்த திடீர் திருமணத்தைப் பற்றி தன் கணவனுக்கு ஏற்கெனவே தெரியுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.

இதில் துகிலன் – ஊர்மிளா ஜோடி மட்டுமே ரகுநந்தன் – மிதிலா திருமணத்தில் மனநிறைவாக இருந்தனர்.

இதனை அனைத்தையும் தன் நண்பனுக்கு துணையின்று செய்த சிரஞ்சீவியோ, ஏதோ யோசனையிலேயே இருந்தான்.

ஆளாளுக்கு ஒவ்வொரு விதத்தில் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, இதற்கெல்லாம் நாயகியோ கல்லாய் சமைந்திருந்தாள்.

காரில் ரகுநந்தனும் மிதிலாவும் பின் இருக்கையில் அமர்ந்திருக்க முன்னிருக்கையில் டிரைவருடன் சிரஞ்சீவி அமர்ந்திருந்தான்.

சுந்தரேசன் தன் மனைவி மகளுடன் ஒரு ஆட்டோ பிடித்து வர, துகிலன் ஒரு காரில் தன் குடும்பத்தாரை கூட்டிக் கொண்டு வந்தான்.

மிதிலாவின் கரங்களை தன் கரங்களுடன் அவன் பிணைந்திருக்க, அதிலிருந்து தன் கரங்களை பிரித்துக் கொண்டாள் மிதிலா.

அவனோ அவள் முகம் பார்க்க, அவளோ எவ்வித உணர்ச்சியும் இன்றி வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள்.

இதனை அவன் எதிர்ப்பார்த்தது தான். ஆனால் அவளை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்று தான் அவனுக்கு தெரியவில்லை.

துணிந்து செயலில் இறங்கி இருந்தாலும் தன்னவளை நினைத்து பயபந்து அவன் அடிவயிற்றில் உருண்டு கொண்டு தான் இருந்தது.

அன்று நிர்மலாவுடன் பேசிவிட்டு நறுமுகையை ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்துவிட்டு நேராக இன்று திருமணம் செய்த ராமர் கோவிலிற்கு தான் சிரஞ்சீவியை அழைத்து வந்திருந்தான்.

கோவில் நிர்வாகத்திடம் தங்களின் திருமணத்திற்கு அனுமதி கேட்டவன், அருகில் வர இருந்த சீதா திருக்கல்யாண உற்சவத்தையும் அவன் ஏற்கெனவே அறிந்து இருந்ததால் உற்சவம் முடிந்த பின் அதே சன்னதியில் தங்களின் திருமணம் நடக்க அனுமதி வேண்டினான்.

அவர்களும் அனுமதி கொடுக்க, அடுத்ததாக இருவருக்கும் திருமண துணிகள் எடுக்க டவுன்ஹால் சென்றனர் நண்பர்கள் இருவரும்.

சிரஞ்சீவி முதலில் தயங்க, “இத தவிர என் ஜானுவ என் வாழ்க்கைல கொண்டு வர வேற வழி தெரியல டா… என்ன நடந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு தான் இந்த முடிவுக்கு வந்தேன்” என ரகுநந்தன் கூற,

“எல்லாம் சரி டா. முகி வீட்டுல இத எப்படி எடுத்துக்குவாங்கனு தெரியலயே” என்க,

“என் மாமனார், மாமியார்கிட்ட சம்மதம் வாங்கிறது என் பொறுப்பு. அவங்க சம்மதத்தோட தான் எங்க கல்யாணம் நடக்கும், அதே நேரம் என் அப்பா, அம்மா முன்னாடி தான் எங்க கல்யாணமும் நடக்கும்” என உறுதியாய் கூற, அதன்பின் சிரஞ்சீவியும் எதுவும் பேசாமல் அவனுக்கு வேலைகளில் உதவி புரிந்தான்.

ரகுநந்தனுக்கு பட்டு வேஷ்டி சட்டை எடுத்தவர்கள் முகூர்த்த புடவை எடுக்கும் போது இரு புடவைகளைப் பார்த்தான்.

“இரண்டு புடவை எதுக்கு டா?” என்க, “ஜானுவுக்கும், முகிக்கும் டா” என்றவன், இருவருக்கும் ஒரே நிறத்தில் எடுத்தாலும் மிதிலாவிற்கு முகூர்த்த பட்டென்பதால் சற்று விலை உயர்ந்த ரகத்தில் எடுத்திருந்தான் ரகுநந்தன்.

ஜரிகை வேலைப்பாடுகள் சற்று குறைந்த, அதே நேரத்தில் நறுமுகைக்கு பொருத்தமான புடவையை தேர்ந்தெடுத்ததும் அவனே.

புடவை எடுத்த கடையிலேயே சற்று பணம் கொஞ்சம் அதிகம் கொடுத்து அன்று மாலையே இரு புடவைகளுக்கும் மேட்ச்சாக ஜாக்கெட்டுகள் தைக்க ஏற்பாடு செய்தான் ரகுநந்தன்.

அவனின் ஏற்பாடுகளைக் கண்டு மலைத்து போய் இருந்தான் சிரஞ்சீவி.

மிதிலாவின் எதிர்ப்பு வலுவாக இருக்கும் என எதிர்ப்பார்த்திருக்க, ரகுநந்தனோ “அவ கண்டிப்பா இதுக்கு ஒத்துக்குவா” என்றான்.

“உங்க ரெண்டு பேரையும் புரிஞ்சுக்கவே தனியா கோச்சிங் கிளாஸ் போகணும் போல” எனப் புலம்பிய சிரஞ்சீவி அதனை இன்று செயலில் காட்டி இருந்த ரகுநந்தனை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

அவனின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு கீ கொடுக்கும் பொம்மை போல் மிதிலா நடந்து கொண்டது தான் இந்த ஆச்சரியத்திற்கு காரணம்.

‘வசந்தம் பிளாட்ஸ்’க்குள் கார் நுழைந்தது.

திருமணமான புது தம்பதியினர் முதல்முறையாக மணமகனின் இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், ரகுநந்தனின் பிளாட்டிற்கு சென்றனர்.

ஆனால் அம்பிகாவோ, அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் மகளின் பிளாட்டிற்குள் சென்று விட்டார்.

அதன்பின், நித்திலவள்ளியை சமாளித்து ஆரத்தி எடுக்க வைத்தாள் ஊர்மிளா.

ஊர்மிளாவை கடிந்து கொண்டாலும் தன் அண்ணனையும், அண்ணன் மனைவியையும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றாள் நித்திலவள்ளி.

தர்ஷினியோ சுற்றி இருந்தவர்களை கண்டு கொள்ளாமல் தன் மாமனின் கரங்களில் இருந்தாள்.

தர்ஷினியை ஒரு கையில் தூக்கியவாறே தன்னவளின் கரம் பற்றி தங்களின் வீட்டிற்குள் வலதுகால் எடுத்து வைத்து உள் நுழைந்தான் ரகுநந்தன்.

பூஜையறை என தனியாக அங்கு இல்லாததால், பூங்கோதை தன் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த ஒரு சாமி புகைப்படத்தை ஹாலில் உள்ள செல்பில் வைத்து சிறிது நேரத்திலே ஒரு இன்ஸ்டன்ட் பூஜையறையை உருவாக்கி இருந்தார்.

அதற்கு தன் மகளை விளக்கேற்ற சொல்ல, அவளும் யார் எது கூறுகிறார்களோ அதனை மறுப்பு தெரிவிக்காமல் செவ்வனே செய்வித்தாள்.

அதன்பின் ஊர்மிளா பாலும் பழமும் எடுத்து வந்து பூங்கோதையிடம் கொடுத்து, “அம்மா நீங்க மூத்தவங்க. நீங்களே அத்தானுக்கும் அக்காவுக்கும் பால் பழம் கொடுங்க” என்க,

தன் கணவனின் முகம் பார்த்தார் பூங்கோதை.

அவர் கண்ணசைவில் சம்மதம் தெரிவிக்க, பால் பழம் கொடுத்தார் புதுமண தம்பதினருக்கு.

அதன்பின் அங்கேயே கிட்சனில் ஊர்மிளாவும், பூங்கோதையும் சமையல் செய்யத் துவங்க, நித்திலவள்ளியோ அதற்கு மேல் அங்கு நிற்காமல் தன் வீட்டிற்கு வந்திருந்தாள்.

அப்பொழுது வெளியே போய்விட்டு வந்த கதிரவனின் கரங்களில், கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் சில தின்பண்டங்கள் இருக்க, அதனைக் கண்டு முறைத்தவள் “எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு தான நடந்திருக்கு?” என்றாள்.

“இப்போ இதப் பத்தி பேசற நேரம் இல்ல நித்து, உனக்கு அங்க வர விருப்பம் இல்லைனா விட்ரு. ஆனா என்னைத் தடுக்காத” என்றவன், எதிர் வீட்டினுள் நுழைய நித்திலவள்ளியோ செல்லும் தன் கணவனையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

ஊர்மிளா பூங்கோதையிடம் பேசியவாறே வேலை செய்ய, “நீ நித்துவோட நாத்துனாரா ம்மா?” என்றார் பூங்கோதை.

“ஆமா ம்மா…” என்றவள், “உங்கள அம்மானு கூப்பிடலாம்ல ம்மா?” என அவள் தயங்க,”தாராளமா கூப்பிடும்மா… என் மக உங்க வீட்டு மருமகள்னா நீ எனக்கும் மக முறை தான் மா” என்க,

புன்னகை செய்தாள் ஊர்மிளா. “திடுதிப்புனு மாப்பிள்ளை தம்பி கல்யாணத்தப் பத்தி பேசவும் கொஞ்சம் பயம் வந்துருச்சு, ஆனா என் மகளுக்கு ஆதரவா அந்த வீட்டுல சிலர் இருக்கிறது தெரிஞ்சோனே தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு மா” என ஒரு தாயாய் அவர் கூற,

“கவலப்படாதீங்க ம்மா… எல்லாம் சீக்கிரம் சரியாயிரும், அத்தை மட்டும் தான் கொஞ்சம் கோபக்காரவங்க. மத்தப்படி இந்த வீட்டுல மிது அக்காவுக்கு எந்த குறையும் இருக்காது” என்றவள் வேலைகளைத் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்திலே உணவு பதார்த்தங்கள் தயாராகிவிட, முதலில் மணமக்களை அமர்த்தி உண்ண வைத்தனர்.

அதன்பின் மற்றவர்கள் உண்க, நறுமுகையோ தன் அக்காவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

அவளோ எதுவும் பேசாமல் எதிரே இருந்த அறைக்குள் நுழைய, அது ரகுநந்தனின் அறை என்பது அங்கு சுவற்றில் வீற்றிருந்த புகைப்படம் காட்டிக் கொடுத்தது.

அந்த புகைப்படத்தை அவள் கரங்கள் வருடிக் கொண்டிருக்க, “அக்கா…” என்ற வண்ணம் வந்த நறுமுகையை ‘என்ன’ என்ற வண்ணம் பார்த்தாள் மிதிலா.

“கோவமா…?” என அவளை அணைக்க, அதிலிருந்து விலகிய மிதிலா ஜன்னலின் திரைச்சீலையை விலக்கியவாறே, “உன்மேல எனக்கு என்ன கோபம் முகி?” என்றாள்.

அந்த வார்த்தையே அவளின் கோபத்தை பறைசாற்ற, “சாரி க்கா… எனக்கு நேத்து தான் மாமா உங்க திடீர் கல்யாண ஏற்பாட பத்தி சொன்னாரு, எனக்கு என்ன பண்றதுனு தெரியல” என்க,

“மாமா…” என்றவளின் இதழ்கள் கசப்பான புன்னகையை வெளியிட்டது.

ஒரே நாளில் தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவன்புறம் திருப்பி விட்டான் என்பதே அவளுக்கு கோபத்தை கொடுத்தது.

தன் தங்கைக்கு மாமா அவன், தன் பெற்றோருக்கு மருமகன் அவன். ஆனால் தனக்கு?…

அவளால் எந்த விடையும் கூற முடியவில்லை.

ஜன்னல் வழியே தெரிந்த வானத்தை அவள் வெறித்துக் கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே வந்த ரகுநந்தன் “முகி, ஜானுவ கூட்டிட்டு வா… நம்ம வீட்டுக்கு போகணும்” என்றவன் தன்னவளின் முகத்தைப் பார்க்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினான்.

இதோ அடுத்த சில நொடிகளில் தன் மகளையும் மருமகனையும் ஆரத்தி எடுத்து வரவேற்றார் பூங்கோதை.

நான்கு மணி நேரத்திற்கு முன்பு இந்த வீட்டை விட்டு கிளம்பும் போது, அடுத்த நான்கு மணி நேரத்தில் இந்த வீட்டிற்குள் நீ உன் கணவனுடன் வலது கால் எடுத்து வைத்து வருவாய் என யாராவது கூறி இருந்தால் கேலியாய் அவர்களைப் பார்த்து சிரித்திருப்பாள் மிதிலா.

ஆனால் தற்பொழுதோ, அது தானே நடந்தேறும் போது கசப்பான புன்னகையை மட்டுமே அவளால் வெளியிட முடிந்தது.

‘இனி இந்த வீட்டிற்கு தான் விருந்தாளி மட்டும் தானே…’ என நினைக்கும் போது, தன் மார்பில் தொங்கிய தாலியைப் பார்த்தவள், ‘இந்த தாலி ஒரு பொண்ணோட வாழ்க்கைய எப்படி மொத்தமா ஒரே நாள்ள தலைகீழா மாற்றிப் போடுகிறது?’ என நினைத்துக் கொண்டாள்.

தன் அருகே அமர்ந்திருந்தவனின் முகத்தை அவன் தாலி கட்டிய நொடிகளுக்கு பின் பார்க்கவே இல்லை அவள்.

அவளின் மனக்குமறல்கள் அவனுக்கு கேட்டதோ என்னவோ, அவள் கரங்களை அழுத்தி ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என சொல்லாமல் சொல்லிய அந்த அழுத்தம் அந்த நேரத்தில் அவளுக்கு தேவையான ஒன்றாக இருந்தாலும், அதனைக் கூறியவன் மேல் கோபம் மட்டுமே எழுந்தது.

ஆனால் எதனையும் வெளிப்படுத்த முடியா வண்ணம், போலி புன்னகையை சுமந்து கொண்டு அமர்ந்திருந்தாள் அந்த பெண்ணவள்.

 

24

அறையில் அமர்ந்திருந்த ரகுநந்தனுக்கோ இதயம் பலமாக துடிக்க ஆரம்பித்தது.

காலையில் இருந்து நடந்தவைகள் அனைத்திலும் பொம்மை போல் போலி புன்னகையுடன் தன் பணியை செவ்வனே செய்த மிதிலாவை இன்னும் சற்று நேரத்தில் தனிமையில் ஒரே அறையில் சந்திக்கப் போகின்றோம் என்ற ஒன்றே அவன் இதயத்தை வேகமாக துடிக்க வைத்துக் கொண்டிருந்தது.

அந்த அறையை சுற்றிலும் பார்வையை சுழல விட்டான் ரகுநந்தன். அறை மிகவும் சுத்தமாக, அதே நேரத்தில் ஆங்காங்கு நறுமுகையும் மிதிலாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அந்த அறையை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது தான் அவன் கண்ணில் பட்டது அந்த புகைப்படம். கம்ப்யூட்டர் டேபிள் மேல் இருந்த அந்த சிறு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான்.

அவனும் ஜானுவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது. அதனை தன் கரங்களால் வருடி விட்டவன், அதனை திருப்பி பார்க்க அதில் அவனை அவள் பிரிந்த நாளின் தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த நாளைக் கண்டவனுக்கு அதிர்ச்சி மேலிட்டது. இன்றைய தேதி தான் அதில் இருந்தது. அவர்கள் பிரிந்து இன்றோடு பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்திருந்தது.

திருமண ஏற்பாடுகள் பற்றிய யோசனையில் இருந்தவனுக்கு இது ஞாபகத்தில் இல்லாமல் போகியிருந்தன.

அவர்கள் பிரிந்து பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்த அதே நாளில் மீண்டும் தம்பதிகளாக இணைந்துள்ளனர் என்பதை அவன் நினைக்கும் போது அவன் மனதினுள் உண்டான உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை.

அவன் கண்கள் சந்தோசத்தில் மிளிர்ந்தது.

அவர்கள் இருவரின் பதினான்கு ஆண்டு காத்திருப்பிற்கு அதே நாளில் அல்லவா வெற்றி கிடைத்திருக்கிறது. அவன் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள் இரண்டும் ஒரே தேதியில்.

அந்த புகைப்படத்தை அங்கேயே வைத்துவிட்டு பால்கனிக்கு சென்றான் ரகுநந்தன்.

எந்தவித அலங்காரமும் வேண்டாம், மிதிலா எப்பொழுதும் போல் இருக்கட்டும் என இவன் கூறி இருந்ததால் அறையிலும் கூட பூ அலங்காரம் தவிர்க்கப்பட்டு இருந்தது.

ஆனால் அனைத்தும் முறைப்படி நடக்க வேண்டும் என்று நல்ல நேரம் தொடங்கிய பின் மிதிலாவை அறைக்கு அனுப்புவதாக கூறி இருக்க, ரகுநந்தன் அறையில் இருந்த போது தான் அந்த புகைப்படத்தை பார்த்தான்.

பால்கனியில் நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

.
.

அன்று துகிலனிடம் தன் திருமண ஏற்பாடுகளைப் பற்றி கூறிய பின், சுந்தரேசனுக்கு அலைப்பேசியில் தொடர்பு கொண்டான் ரகுநந்தன்.

“சொல்லுங்க தம்பி” என்றார் அழைப்பை ஏற்று.

“அங்கிள், உங்க கிட்ட முக்கியமான விசயம் ஒன்னு பேசணும். நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா?” என்க,

“சொல்லுங்க தம்பி, இப்போ வேலை எதுவும் இல்ல” என்றார் சுந்தரேசன்.

“நேர்ல பார்த்து பேசணும் அங்கிள்” என்க, “இப்போ வீட்டுல தான் இருக்கேன் தம்பி, வாங்க பேசலாம்” என்றார் அவர்.

“இல்ல அங்கிள், இத வீட்டுல பேச முடியாது. ப்ளீஸ் அங்கிள், உங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லைனா என் பிளாட்க்கு வர முடியுமா… இல்லனா வெளிய எங்கயாவது மீட் பண்ணலாம் அங்கிள்” என ரகுநந்தன் தயங்க,

“ஓ.கே பா… இன்னும் கொஞ்சம் நேரத்துல அங்க வரேன்” என்றவர், சிறிது நேரத்திலே அங்கு வந்து சேர்ந்தார் சுந்தரேசன்.

இருவரும் எதிரெதிர் ஷோஃபாவில் அமர்ந்திருக்க, சிரஞ்சீவி தன் அறையின் கதவில் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.

முதலில் ரகுநந்தன் தான் பேச்சை ஆரம்பித்தான்.

“நான் இப்போ சொல்லப் போற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும் அங்கிள், ஆனா முறைப்படி வந்து உங்கக்கிட்ட நான் பேச முடியாத சூழ்நிலை” எனத் தொடங்க,

அவரோ அவனை புரியாத பார்வைப் பார்த்தார்.

அவனே மேலும் தொடங்கினான். “உங்க பொண்ண நான் விரும்புறேன் அங்கிள். என் வாழ்க்கைய முழுக்க அவளோட வாழணும்னு ஆசைப்படறேன். இது நான் இப்போ எடுத்த முடிவு இல்லை, பதினாலு வருஷத்துக்கு முன்னயே எடுத்த முடிவு” என்க,

அவருக்கு அதிர்ச்சி இருந்தாலும் அவன் சொல்வதைக் கேட்கத் தொடங்கினார் சுந்தரேசன்.

“சின்ன வயசுலயே ஜானுவ எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுக்கு அப்புறம் நீங்க வேலை காரணமா இங்க இருந்து வீடு மாத்தி போய்ட்டீங்க. அதுக்கு அப்புறம் என்னால முடிஞ்ச அளவு உங்கள தேடினேன், ஆனா அந்த வயசுல என்னால கண்டுப்பிடிக்க முடியல.

என் படிப்பு முடிஞ்சோனே திரும்பவும் நான் கோயம்புத்தூர் வந்துட்டேன். அதுவும் என் ஜானுக்காக தான், என்னோட இத்தனை வருட தேடலுக்கு இப்போ தான் விடை கிடைச்சுருக்கு. எந்த சூழ்நிலையிலையும் என் ஜானுவ நான் கைவிட மாட்டேன் அங்கிள், உங்க பொண்ண எனக்கு தர சம்மதமா அங்கிள்” என்றான் ரகுநந்தன்.

அவரோ, சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்தவர், “நீங்க சொல்றதுல இருந்தே உங்க காதல் எனக்கு புரியுது தம்பி. ஆனா இது என் பெண்ணோட வாழ்க்கை, அவளோட சம்மதமும் இதுல வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை என் ஜானு, என் ஜானுனு நீங்க சொல்றதுல இருந்தே உங்க காதல் எனக்கு புரிஞ்சாலும் உங்க குடும்பத்துலயும் இந்த காதலுக்கு சம்மதம் சொல்லணும், அதே நேரம் என் பெண்ணோட சம்மதமும் வேண்டும்” என்றார் சுந்தரேசன்.

அவரைப் பொறுத்தவரை ரகுநந்தன் நல்லவன். அவர் கேள்வி பட்டவரை அவனைப் பற்றி நல்ல தகவல்களே கிடைத்திருக்க, இப்பொழுது அவனின் நேர்மையான குணமும் பிடித்து இருந்தது.

“என் பேமிலில இத ஏத்துக்க மாட்டாங்க அங்கிள். அப்பா, தம்பி எல்லாருமே எனக்கு ஆதரவா இருந்தாலும் அம்மாவுக்கு என்மேல இதுனால கொஞ்சம் கோபம் இருக்கு” என்றவன், மூன்று வருடங்களுக்கு முன் நடந்தவைகளை கூறியவன்,

“எங்க கல்யாணம் நடந்தா என் தம்பியும் ஊர்மியும் சேர்வாங்க அங்கிள். இல்லைனா எங்க நாலு பேரோட வாழ்க்கையும் கேள்வி குறியாகிரும்” என்றவன்,

“ஜானுகிட்ட இப்போ கேட்டா என் மேல உள்ள கோபத்துல கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா அங்கிள். ஆனா எனக்கு வேற வழி தெரியல, எங்க காதலுக்காக காலம் முழுக்க காத்திருக்க நான் தயார்… ஆனால், சூழ்நிலைகள் எங்களுக்கு எதிரா இருக்கும் போது எனக்கு இத தவிர வேற வழி தெரியல” என்றான் ரகுநந்தன்.

“என் பொண்ணும் உங்கள விரும்புறாளா தம்பி?” என கேள்வியாய் பார்த்தவருக்கு, தங்களின் காதலை பற்றி மேலோட்டமாக அவரிடம் கூறினான்.

அவர் இதனை எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவரின் அதிர்ச்சியான முகமே காட்டிக் கொடுத்தது.

நிலைமை தன் கை மீறி போனதை உணர்ந்தார். தன் மகளின் காதலுக்கு தானும் ஒரு விதத்தில் காரணம் எனப் புரிந்து கொண்டார்.

அவளுக்கு ராமனை பிடிக்கும் என தெரிந்தவர் தான். ஆனால் இந்த அளவு, அதுவும் அவளின் ராமிற்காக பதினான்கு ஆண்டுகள் அவள் காத்திருக்கிறாள் என்பது சற்றே அதிர்ச்சியைக் கொடுத்தது உண்மையே!

“இப்போ, நான் என்ன பண்ணனும் மாப்பிள்ளை?” என தன் சம்மதத்தை அவர் தெரிவிக்க, ரகுநந்தனின் முகம் அவரின் கேள்வியில் மலர்ந்தது.

“தேங்க்ஸ் மாமா…” என அவனும் உரிமையுடன் அழைக்க, இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிரஞ்சீவியோ, “எப்படி தான் இப்படி பேசியே மயக்குறானோ!” என தன் நண்பனைக் கண்டு வியந்தான்.

தன் திருமண ஏற்பாடுகளைப் பற்றி கூற, “ஆக, எல்லாத்தையும் தயார் படுத்திட்டு தான் என்கிட்ட சம்மதம் கேட்டீங்களா மாப்பிள்ளை?” என்றார் சுந்தரேசன்.

“ஸாரி மாமா… எனக்கு இத தவிர வேற வழி இல்ல, ஆனா உங்க சம்மதத்தோட தான் எங்க கல்யாணம் நடக்கும், அதே நேரம் என் குடும்பமும் அங்க தான் இருப்பாங்க. அவங்க முன்னாடி தான் உங்க பொண்ணு கழுத்துல நான் தாலி கட்டுவேன்” என்றான் ரகுநந்தன்.

“எல்லாம் சரி, ஆனா மிது இதுக்கு எப்படி சம்மதிப்பா மாப்பிள்ளை?” என்றார் சுந்தரேசன் குழப்பத்துடன்.

“அவளோட சம்மதத்தோட தான் எங்க கல்யாணம் நடக்கும் அங்கிள், நீங்க கோவிலுக்கு ஜானுவ கூட்டிட்டு வந்தா மட்டும் போதும்” என்க, அதன்பின் பொதுவாக பேசிவிட்டு சுந்தரேசன் அங்கிருந்து கிளம்பினார்.

அதன்பின், ஊர்மிளாவையும் துகிலனையும் அழைத்த ரகுநந்தன், சீதா திருக்கல்யாண உற்சவம் என்ற காரணத்தைக் கூறி குடும்பத்தார் அனைவரையும் கோவிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தான்.

கதிரவனிடம் தனியாக சென்று பேசினான். அவனும் மனமுவந்து வாழ்த்துகள் தெரிவித்து, தன் சம்மதத்தையும் கூற அடுத்தடுத்த வேலைகளுக்கு ஏற்பாடு செய்தான் ரகுநந்தன்.

சுந்தரேசன், தன் மனைவியிடமும் இளைய மகளிடமும் இதனைப் பற்றி கூற, ஏற்கெனவே ஓரளவு இதனை எதிர்ப்பார்த்து இருந்த நறுமுகை உடனே தன் சம்மதத்தைக் கூறினாள்.

ஆனால் பூங்கோதையோ, “ஏங்க நம்ம வீட்டுல நடக்கிற முதல் விஷேசம் நம்ம மிதுவோட கல்யாணம் தான், அத இப்படி திடுதிப்புனு ஏற்பாடு பண்ணியாச்சுனு சொன்னா எப்படிங்க?” என்றார்.

“எனக்கும் அந்த ஆசை இருந்தது தான் பூங்கோதை. ஆனா, மாப்பிள்ளை தன் நிலைய சொல்லி கேட்கும் போது என்னால மறுக்க முடியல. நமக்கு நம்ம பொண்ணோட சந்தோசம் தான் முக்கியம் பூங்கோதை, கல்யாணம் முடிஞ்சோனே ரிஷப்சன் வச்சு எல்லாரையும் கூப்பிடலாம்” என்றார் சுந்தரேசன்.

அரைகுறை மனதுடன் அவரும் சம்மதிக்க, ரகுநந்தன் கூறிய படியே மிதிலாவை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

ஆனால், சீதா திருக்கல்யாண உற்சவத்திற்கு பின் தன் மகளின் திருமணமும் நடக்க அவர் மனம் குளிர்ந்து போனார்.

ஆனால், அதே நேரம் மகளின் புகுந்த வீட்டாரை நினைத்து சற்று பயமும் வந்தது.

தன் மகளைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஆயிற்றே. எது நடந்தாலும் தன் மகளுக்கு மாப்பிள்ளையின் ஆதரவு இருக்கிறது என்ற ஒன்றே அவருக்கு நிம்மதியை அளித்தது.

திருமணமும் முடிந்து இதோ முதலிரவு வரை சென்று விட்டது.

பழைய நினைவுகளின் இருந்தவனை கதவு திறக்கும் சப்தம் கலைக்க, திரும்பி பார்த்தான் ரகுநந்தன்.

சிவப்பு வண்ண டிசைனர் புடவையில் ரவிவர்மாவின் ஓவியம் போல் அறையினுள் நுழைந்த தன் மனைவியைப் பார்த்தவன், அவள் அழகில் சொக்கி நிற்க, அவளோ அவனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

கையில் கொண்டு வந்திருந்த பால் சொம்பை அங்கிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு, தன்னுடைய கப்போர்டைத் திறந்து இரவு அணியும் உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“என்ன நடந்தாலும் சமாளிச்சு தான் ஆகணும் டா ரகு…” என தன்னைத் தானே தேற்றிக் கொண்டவன், அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தான்.

இரவு உடைக்கு மாறியவள், அவனைக் கண்டு கொள்ளாமல் பால்கனிக்கு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மிதிலா.

அவனால் எதுவும் செய்ய முடியாமல் கைகளை கட்டிக் கொண்டு அவளை வேடிக்கை மட்டுமே பார்க்க செய்தான் ரகுநந்தன்.

அவளுக்கு தனிமை தேவை என்று தான் அவன் ஒதுங்கி இருக்க, அவளுக்கோ அவளை நினைத்தே வெறுப்பாக இருந்தது.

ஒரே நாளில் தன்னை சுற்றி இருந்த உறவுகள் பொய்த்து விட்டதை நினைத்து அந்த பெண்ணவளின் மனம் பாடாய்பட, அதற்கு காரணமானவனின் மேல் கோபம் வர மறுத்தது.

அவன் காதலில் கட்டுண்டு அவன் கழுத்தில் மாலையிட்டவள் அவள் தானே! அந்த நொடி அவனின் காதலின் ஆளுமைக்குள் கட்டுப்பட்டவளாய் தான் எவ்வாறு மாறினோம் என தன்னை தானே வெறுத்துக் கொண்டாள் மிதிலா.

அவ்வளவு பலவீனமானவளா நான்! அவனின் காதலுக்காக தான் அவளும் பதினான்கு வருடங்கள் காத்திருந்தாள். ஆனால், இன்று அதே காதல் தான் தன் கரம் பற்றி இருக்கிறது. ஆனால் அது தன் பலவீனத்தை பயன்படுத்தி என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை அவளால்.

இத்தனை வருடங்களாய் தன் தங்கையுடன் இருந்த அறை, இன்று அவனுடன். அத்தனையும் ஒரே இரவில் தலைகீழாக மாறிவிட்டது.

அவள் மனம் இதனை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூட நேரம் கொடுக்கப்படவில்லை. அனைத்தும் அவர்களின் இஷ்டப்படி நடக்கிறது, அதற்கு தன் பலவீனமும் துணைப் போகின்றதை நினைத்து வஞ்சியவள் துவண்டு போனாள்.

அவள் காதலித்தவன் தான். ஆனால் மனதளவில் கூட திருமண வாழ்வைப் பற்றி நினைத்து பார்த்திரா நேரத்தில் அனைத்தும் நடந்தேற, இங்கு யாரை குற்றம் சொல்வது.

அந்த நாற்காலியிலேயே அவள் ஆழ்ந்து உறங்கி விட, அவளைப் பார்க்க வந்த ரகுநந்தனுக்கு அவளை அப்படியே அள்ளி தன் நெஞ்சோடு புதைத்துக் கொள்ள வேண்டும் என கரங்கள் பரபரத்தன.

அந்த நாற்காலியில் குத்துகாலிட்டு அமர்ந்தவாறே தலையை நாற்காலியில் சாய்த்து உறங்கும் தன்னவளைப் பார்த்தவன், அவள் உறக்கம் கலையாமல் அவளை மெதுவாக தூக்கிக் கொண்டவன், மெத்தையில் படுக்க வைத்தான்.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளை அள்ளி தன் மார்போடு அணைத்துக் கொள்ள தோன்றிய மனதை கட்டுப்படுத்தி, அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டவன் அவளின் அனுமதி இல்லாமல் அதே மெத்தையில் படுக்க தயங்கியவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு விட்டு,

கீழே பாய் விரித்து அதில் படுத்துக் கொண்டான் ரகுநந்தன்.

அதிகாலையிலேயே விழிப்புத் தட்ட, கண் விழித்தவள் தன் அருகே எப்பொழுதும் போல் குண்டச்சியைத் தேடியவளுக்கு தனக்கு நேற்று திருமணமானது நினைவு வர, அவள் கண்கள் தன்னவனை தேடியது.

கட்டிலில் இல்லாமல் இருக்க, அறையில் தேடினாள் மிதிலா.

அதன்பின் தான் அவன் கீழே படுத்துறங்குவதைக் கண்டாள், தலையணையில் ஒரு கையை பதித்து அதில் தன் தலையை தாங்கியவாறே அவள் புறம் திரும்பி படுத்திருந்தான் ரகுநந்தன்.

அவனைப் பார்த்தவளுக்கு, அவன் கேசத்தை கலைத்து விட துடித்த தன் கரங்களை அடக்கியவள் தான் தேடிய பொக்கிஷம் கிடைத்த நிம்மதியில் உறங்கிய அவனின் நிர்மலமான முகத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

எப்பொழுதும் அந்த புகைப்படத்தை பார்த்தே கண் விழித்து பழகியவளுக்கு, இன்று நிழலை அல்லாமல் அவனின் நிஜத்தை தன் கண்களால் நிரப்பிக் கொண்டிருந்தாள் மிதிலா.

அவன் மேல் உள்ள கோபம் அப்படியே தான் இருந்தது. ஆனால் அவன் மேல் உள்ள காதல்… அவன் மேல் கோபம் இருந்தாலும் கூட அவன் மேல் உள்ள காதல் மட்டும் குறையாமல் இருக்கிறதே என தன் மனதையே சாடினாள் அவள்.

விடியும் வரை அவனை ரசித்தவள், பின் நிதர்சனம் புரிய எழுந்து குளித்துவிட்டு வந்தாள்.

அவள் எழுந்த சப்தத்தில் எழுந்திருந்தான் ரகுநந்தன். அவன் எழுந்து அங்கிருந்த நாற்காலியில் அமர, குளித்துவிட்டு வந்தவள் அவனிடம் எதுவும் பேசாமல் வெளியே சென்றாள்.

அவன் முகம் கழுவ, குளியல் அறைக்குள் நுழைந்தவனின் கண்ணில் புது பிரஷ், சோப், துண்டு என அனைத்தும் தயாராக இருப்பதைக் கண்டவனுக்கு இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.

அவனும் முகம் கழுவி, வெளியே வர காஃபி கப்போடு நின்றிருந்தாள் அவனின் மனைவி.

தலைக்கு குளித்திருந்ததால் ஈரத் துண்டு அவளின் கூந்தலை அடக்க முடியாமல் அவள் தலையில் திணறிக் கொண்டிருக்க, சில முடிக் கற்றையில் நீர் வழிந்த வண்ணம் அவள் கழுத்துப் பகுதியை ஆக்கிரமித்து இருந்தன.

அவள் கட்டி இருந்த புடவை அவளின் தேக வனப்பை பறைசாற்ற, நெற்றியில் இருந்து புரண்ட முடிக்கற்றையின் நீர்த்துளி அவள் இதழ் தாண்டி தொண்டை வழியே கீழிறங்கிக் கொண்டிருந்தது.

அவன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்ட மஞ்சள் நாண் அவளின் சங்கு கழுத்தில் அத்தனை அழகாய் பொருந்தி இருக்க, நெற்றி வகிட்டில் இருந்த குங்குமம் அவளை பேரழகியாய் காட்டியது.

காலையிலேயே தன் அழகு மனைவியின் தரிசனத்தை தன் கண்களால் பருகிக் கொண்டிருக்க, அவளோ தான் கொண்டு வந்த காஃபியை அங்கிருந்த டேபிளின் மேல் வைத்துவிட்டு தன்னுடைய கையில் இருந்த காஃபி கப்பை மெத்தையில் அமர்ந்து ருசிக்கத் தொடங்கினாள்.

அவனும் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தவாறே காஃபியை பருகிக் கொண்டிருக்க, காஃபியை குடித்துக் கொண்டிருந்தவளுக்கு கீழே விரித்திருந்த பாய் கண்ணில் பட,

தன் காஃபி கப்பை டேபிளின் மேல் வைத்துவிட்டு, பாயை சுருட்டி எடுத்தாள்.

அதனை தனக்கு சாதகமாக மாற்றி நொடிப் பொழுதினில் காஃபி கப் இடம் மாறி இருந்தது.

அவள் கப்பை எடுக்கும் போது அவன் முகம் பார்க்க, அவனோ எதுவும் அறியா சிறுப்பிள்ளை போல் தன்னவள் அருந்திய காஃபியை ருசி பார்த்துக் கொண்டிருக்க, அவளோ எதுவும் பேசாமல் அந்த காஃபியை குடித்தாள்.

அதன்பின் கப்பை அவளிடம் நீட்டியவன், “காலைலயே செம டேஸ்ட்டான காஃபி இன்னிக்கு தான் பா குடிச்சுருக்கேன், ப்பா… என்ன ருசி!” என நாக்கை சுழட்டி மீண்டும் ருசி பார்ப்பது போல் செய்தவன், நெட்டி எடுக்க, அவளோ அவனை முறைத்த வண்ணம் அறையை விட்டு வெளியேறினாள்.

அதன்பின் அவனுக்கான உடையை அவன் நண்பனின் மூலம் அனுப்பி வைத்தாள் மிதிலா.

சிரஞ்சீவியோ, அவனின் உடையை கொண்டு வந்து கொடுத்தவன், “இன்னிக்கு எனக்கு காலேஜ்ல கொஞ்சம் வொர்க் இருக்கு டா… நான் கிளம்புறேன், உனக்கும் மிதுவுக்கும் ஒன் வீக் லீவ் சொல்லிறேன்” என்க,

“இன்னிக்கே காலேஜ் போகணுமா டா?” எனக் கேட்டவனுக்கு, “ஆமாம்…” என தலையசைத்தவன், “போய்ட்டு வரேன்” என அவன் கிளம்ப, யோசனையுடனே வெளியே சென்ற தன் நண்பனைப் பார்த்தான் ரகுநந்தன்.

அதன்பின், காலை உணவு உண்ண அமர, அனைவருக்கும் மிதிலா பரிமாற ரகுநந்தனோ தன் தட்டில் வைத்த உணவில் ஒரு வாய் எடுத்து தன்னவளைப் பார்த்தான்.

அவளோ மற்றவர்களுக்கு உணவு பரிமாறி விட்டு, அவன் இன்னும் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு அவனைப் பார்க்க, அவனோ அந்த உணவை அவள் புறம் நீட்டினான்.

அவளோ வாங்க மறுத்து, முகத்தை திருப்பிக் கொள்ள மற்றவர்கள் அதனைக் கண்டும் காணாமலும் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.

இவளோ, வாங்க மறுக்க அவனோ, ‘நீ வாங்கவில்லை என்றால் நானும் உண்ண மாட்டேன்’ என்ற ரீதியில் அமர்ந்திருக்க, பொறுத்து பார்த்தவள், தான் அந்த உணவை வாங்கி கொள்ளா விட்டால் அவன் நிச்சயம் சாப்பிட மாட்டான் என்பதை புரிந்து கொண்டு மெதுவாக ஆ… காட்டினாள்.

புன்னகையுடன் அவன் தன் கையில் எடுத்த உணவை அவளுக்கு ஊட்டிவிட்டவன், அதன்பின் தான் உண்ண ஆரம்பித்தான்.

அவன் ஊட்டிய உணவு தொண்டைக் குழியை விட்டு இறங்க மறுத்தது. தன் பலவீனத்தை உணர்ந்தவளால் அதனை ஏற்க முடியாமல் தவித்தாள்

அவன் மனம் நோகக் கூடாது என, அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவளுக்கு அது பலவீனமாக உணர வைத்தது.

அவன் அருகில், அவன் காதலில் தான் மொத்தமாக மாறி விடுகிறோம் என்பதை, அவளின் பலவீனமாக உணரத் தொடங்கி இருந்தாள் மிதிலா.

உணவு உண்டப் பின், சுந்தரேசனிடம் “மாமா, நாங்க எங்க பிளாட்க்கு போகலாம்னு இருக்கோம் மாமா…” எனக் கூற,

“அதுவந்து மாப்பிள்ளை, மறுவீட்டு விருந்து… எல்லாம் இருக்கு” என தயக்கத்துடன் கூற,

“எல்லாமே முறைப்படி நடக்கும் மாமா… ஆனா, அது என் குடும்பத்தாரோட சம்மதத்தோட நடந்தா நல்லா இருக்கும்னு தோணுது. அதான் இப்போதிக்க இந்த சடங்கெல்லாம் வேண்டாமே, நாங்களும் இங்க தான இருக்கோம். ரெண்டு நிமிஷத்துல நீங்க அங்க வரதுனாலும் வரலாம், இல்ல மிது இங்க வரணும்னாலும் உடனே வரலாம்…” என்க,

புதுமண தம்பதினருக்கு, தனிமைக் கொடுக்க எண்ணி சுந்தரேசனும் சம்மதம் தெரிவித்தார்.

மிதிலாவின் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் நறுமுகை.

உள்ளே வந்த மிதிலா, “நான் இனி இந்த வீட்டு விருந்தாளி மட்டும் தான…” என உடைந்த குரலில் கூற,

தன் அக்காளை கட்டிக் கொண்டாள் நறுமுகை. “இதே பிளாட்ல தான இருக்க போற க்கா… நினைச்ச அடுத்த செகண்ட் நம்ம வீட்டுக்கு நீ வரலாம், நானும் உன்னைப் பார்க்க அங்க வருவேன் க்கா…” என்க,

“நான் உனக்கு அக்கால்ல…” என கேட்கும் தன் அக்காவைப் பார்க்க, அவளின் கண்கள் குளமானது.

“என்ன குட்டச்சி இது!” என அவளை அணைத்துக் கொள்ள,

“போடி… உனக்கு தான் இப்போ மாமா கிடைச்சுட்டாருல்ல, என்னை எதுக்கு கட்டிப் பிடிக்கிற?” என அவளை தள்ள,

“பாருடா… என் செல்ல பொண்டாட்டியே எனக்கு இன்னொரு ஆப்பரும் பண்றா… எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல கண்ணம்மா, உன் அக்காவோட சேர்த்து உன்னையும் பார்த்துக்கிற அளவு என் உடம்புல சக்தி இருக்கு” என உள்ளே வந்த ரகுநந்தன் கூற,

அவனை எரிக்கும் பார்வைப் பார்த்தாள் மிதிலா.

“உனக்கு ஓ.கே ன்னா எனக்கு டபுள் ஓ.கே ஜானு மா… என்ன சொல்ற, உன் தங்கச்சி என்னை கட்டிக்க சம்மதமா” என ஒற்றைப் புருவம் தூக்க,

அவளோ அங்கிருந்த பொருட்களைக் கொண்டு அவனை அடிக்கத் துவங்கினாள்.

நறுமுகையின் பின் ஒளிந்து கொண்ட ரகுநந்தன், “உன் அக்கா இப்படிலாம் அடிப்பானு தெரியாம போச்சே கண்ணம்மா… ச்சே, பேசாம உன்னை கட்டிருக்கலாம்” என உதடு சுளிக்க,

“குட்டச்சியே உங்களுக்கு ஓவர், இதுல நான் வேற கேட்குதாக்கும்” என நறுமுகை ஒருபக்கம் அவனை சாத்த,

மிதிலா ஒருபக்கம் அவனைத் தாக்க, இருவரின் அடியையும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.

இதுவரை அழுது கொண்டிருந்த அக்கா, தங்கை அதனை மறந்து தன்னை அடிப்பதில் குறியாய் இருக்க அதனைக் கண்ட ரகுநந்தனின் இதழ்கள் மலர்ந்தன.

அதன்பின் இருவரிடமிருந்தும் தப்பித்து வந்தவன், பின் மிதிலாவை கூட்டிக் கொண்டு தங்களின் பிளாட்டிற்கு சென்றான் ரகுநந்தன்.

அவர்கள் இருவரும் ஜோடியாய் வீட்டினுள் நுழைவதை எதிர் வீட்டில் இருந்த அம்பிகா பார்க்க, அவர் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“அம்மா டீ…” என நித்திலவள்ளி அவர் முன் டீ கப்பை நீட்ட, “எல்லாரையும் இங்க வரச் சொல்லு” என்றார் கோபமாய்.

அவரின் குரலிலே அனைவரும் ஹாலில் ஆஜராக, துகிலனை கேள்வியுடன் பார்த்தார்.

அவனோ, ‘அய்யோ அம்மா ஏதோ வில்லங்கமா கேள்வி கேட்க போறாங்க… தப்பிச்சுரு டா துகி’ எனக் கூறிக் கொண்டிருக்கையிலேயே,

“நீயும் ஊர்மியும் தான நேத்து எங்கள எல்லாம் கோவிலுக்கு போயே ஆகணும்னு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனது. அது உன் அண்ணன் ஏற்பாடா?” என்றார் அம்பிகா.

“இப்போ எதுக்கு அம்பிகா அதப் பத்தி பேசிக்கிட்டு. அதான் நடக்கணும்னு இருந்து இருக்கு, நடந்துருச்சு. இப்போ பேசி என்ன ஆகப் போகுது?” என்ற தன் கணவனைப் பார்த்து முறைத்த அம்பிகா,

“நான் அவன்கிட்ட தான் கேள்வி கேட்டேன், உங்கக்கிட்ட இல்ல” என்றவர், “சொல்லு…” என தன் மகன்புறம் திரும்பினார்.

“அதுவந்து ம்மா. ராமர் கோவில்ல நேத்து ஸ்பெஷலான அபிஷேகம் இருக்குனு கேள்வி பட்டேன், அதான் உங்கள எல்லாம் கூட்டிட்டு போகலாம்னு…” என அவன் கூறும் போதே,

‘நான் உன் பதிலை நம்ப மாட்டேன்’ என்ற பார்வைப் பார்த்தார் அம்பிகா.

அதனைக் கண்டவன், அத்தோடு அமைதியாகி விட, “உன்னை அவனுக்கு கட்டி வச்சு எங்க வீட்டு மருமகளாக்க நாங்க நினைச்சா, நீ என்னடான்னா அவன் கட்டிக்கிட்டு வந்தவளுக்கு போய் ஆரத்தி எடுத்து விருந்து வைக்கிற” என ஊர்மிளாவைப் பார்க்க,

“அத்தை… அத்தான் மிது அக்காவ காதலிக்கும் போது எப்படி அத்தை என்னை கல்யாணம் பண்ணிக்குவாரு, மீறி குடும்பத்துக்காக பண்ணிக்கிட்டாலும் என் கூட அவரால சந்தோசமா வாழ முடியுமா? இது என் வாழ்க்கை அத்தை, அத நான் தான் முடிவு பண்ணனும்” என அவள் பட்டென கூற,

“ஊர்மி… என்ன பேசறனு தெரிஞ்சு தான் பேசறியா?” என நித்திலவள்ளி குறுக்க வர,

“ப்ளீஸ் அண்ணி… நீங்க அத்தான கட்டிக்கச் சொல்லும் போது எனக்கும் நம்ம அத்தை வீட்டுக்கு தான போக போறோம் அப்படினு சம்மதம் சொன்னேன். ஆனா, எப்போ அத்தானுக்கு எங்க கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னாரோ அப்பவே அந்த ஆசைய என் மனசுல இருந்து அழிச்சுட்டேன். திரும்பவும் உங்களுக்காகவோ, இல்ல அத்தைக்காகவோ சம்மதம் சொல்ல நான் ஒன்னும் குழந்தை இல்ல அண்ணி. என் வாழ்க்கைய பத்தி நீங்க கவலப்பட வேண்டாம்” என்றாள் ஊர்மிளா.

“என்னங்க நீங்க பேசாம நிக்கிறீங்க? அவ என்னென்ன பேசறா பாருங்க” என நித்திலவள்ளி தன் கணவனிடம் முறையிட,

தன் தங்கை இப்பவாவது வாய் திறந்து பேசினாளே என உள்ளுக்குள் சந்தோசப்பட்ட கதிரவன், “அவ சொல்றதுல என்ன தப்பு நித்து?… நான் ஏற்கெனவே உன்கிட்ட சொல்லிட்டேன், இனியும் இதப் பத்தி பேச வேண்டாம்” என்றான் கதிரவன்.

“என்ன மாப்பிள்ளை, உங்களுக்கும் ஏதாவது சொல்லி தன் பக்கம் இழுத்துட்டானா என் மூத்த மகன்?” என்றார் கோபமாய்.

“சாரி அத்தை… நீங்க என்ன நினைச்சாலும் பரவாயில்ல, என்னைப் பொறுத்தவரை ரகு மச்சான் பண்ணதுல எந்த தப்புமே இல்ல. மனசுல ஒருத்திய நினைச்சுட்டு என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டி இருந்தா வீணாப் போறது உங்க வாழ்க்கையோ இல்ல உங்க மக வாழ்க்கையோ இல்ல அத்தை. என் தங்கச்சியோட வாழ்க்கை தான், இப்போ தான் மச்சான் ஆசப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாருல்ல, இனியாவது அவங்கள ஆசிர்வதித்து வீட்டுக்கு கூப்பிடுங்க அத்தை. இதான் நீங்க பண்ண வேண்டிய ஒரே விஷயம்” என்க,

தான் கூற முடியாததை தன் மருமகன் கூறியதைக் கண்டு ராஜாராமிற்கு மனம் நிம்மதி ஆனது.

ஆனால் அம்பிகாவோ வீம்பு பிடிவாதம் பிடித்தார். “என்னை சம்மதம் கேட்டா அவளைக் கட்டிக்கிட்டான். நான் ஏன் அவள மருமகளா ஏத்துக்கணும், எப்பவும் நான் அவள மருமகளா ஏத்துக்க மாட்டேன்” என்க,

இதற்கு மேல் பேசினால் அது விரலுக்கிறைத்த நீர் என்பதை புரிந்து கொண்ட கதிரவன், எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

துகிலனும் ஊர்மிளாவும் அங்கிருந்து சென்றுவிட, தன் மகளிடம் “நீ ஏன் நித்தி, அந்த மிதிலா பொண்ணு இந்த பிளாட்லயே இருக்கிறத என்கிட்ட சொல்லல?” என்றார் கோபமாய்.

“எனக்கே போன வாரம் தான் தெரியும் ம்மா…” என அவள் குரல் தாழ்த்தி கூற,

“அன்னிக்கு அந்த பொண்ண பார்க்ல பார்த்தப்போ அடையாளம் தெரியல. நேத்து கோவில்ல குடும்பத்தோட பார்த்தப்போ தான் அடையாளம் தெரிஞ்சுது, ஆனா அந்தப் பொண்ண எப்படி உன் அண்ணன் கண்டுபிடிச்சான். அவ வேற, என் அனுமதி இல்லாம தான் உங்க மகன் என் கழுத்துல தாலி கட்டுனான்னு கதை விடறா, என்ன நடக்கிறது இங்க?” என்றார் கோபமாய்.

“எனக்கு அதப் பத்தி தெரியாது ம்மா…” என்றவள், தன் வேலையைப் பார்க்க செல்ல,

“ரொம்ப டென்ஷன் ஆகாத அம்பிகா… உடம்பு முடியாம போய்ரும்” என தன் மனைவியை அவர் சமாதானப்படுத்த,

“உடனே சென்னை போக டிக்கெட் புக் பண்ணுங்க” என்றவர், எழுந்து அறைக்குள் செல்ல, தன் மனைவியை எவ்வாறு சமாளிப்பது எனத் தெரியாமல் முழித்தார் ராஜாராம்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்