Loading

வானம் – 21

 

தொடுதிரையில் மின்னிய எண்களைக் கண்டதும் அவளது கண்கள் விரிந்தன. மறந்து விட்டதாய் அவள் நினைத்திருந்தது அவளது நினைவடுக்கில் ஆழமாய் பதிந்துப் போயிருக்கின்றன என அந்த எண்ணே பறைசாற்றியது. 

 

முதலில் அழைப்பை அவள் ஏற்காமல் விட, மீண்டும் மீண்டும் அழைப்பு விடாமல் அடித்தது. கண்களை இறுக மூடி மூச்சை இழுத்து விட்டு அழைப்பை ஏற்றாள் தேவிகா. 

 

“ஒரே ரிங்ல என் கால அட்டெண்ட் பண்றவ இப்போ என் கால அட்டெண்ட் பண்ணவே அஞ்சு நிமிஷம் ஆகுதுல்ல தேவி” என்ற வார்த்தைகளில் இருந்த வலி அவள் மனதை பிசைந்தது. 

 

“ப்ளீஸ் சுரேஷ். கடந்த காலத்த பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல. அப்போ நீ தான் என்னை விட்டுட்டு போன! உன்மேல அவ்ளோ கோபம் இருந்துச்சு. ஆனா இப்போ… ப்ளீஸ், மேற்கொண்டு என்னை எதுவும் பேச வைக்காத! இதுதான் நீயும் நானும் பேசறது கடைசியா இருக்கணும்” என மூச்சை இழுத்துப் பிடித்து பேசி முடித்தாள் தேவிகா. 

 

“எப்படி டி நம்ம காதல மறக்க சொல்ற? உன் மனச தொட்டு சொல்லு, இன்னும் உன் மனசுல எனக்கு இடம் இல்லனு. கல்யாணம் ஆகி புள்ளைய சுமந்துட்டா மட்டும் என்னை மறந்துட்டு அவன நீ காதலிக்கிறனு ஆகிருமா தேவி?”

 

அவளால் அதற்கு உடனே பதிலளிக்க முடியவில்லை. அதனை தனக்கு சாதகமாக்கி அவன் பேசத் தொடங்கினான். 

 

“என்னை உன்னால மறக்க முடியாது. அது எனக்கு நல்லா தெரியும், அப்புறம் ஏன் என்னை அவாய்ட் பண்ற? 

 

இத்தன நாளா உன்னை எப்போ பார்ப்பேன்னு எப்படி தவிச்சேன் தெரியுமா! எனக்குனு ஒரு வேலைய அமைச்சுக்கிட்டு உன்கிட்ட ஓடி வரணும்னு துடியா துடிச்சேன். அதுக்கு இத்தன மாசம் ஆகிருச்சு. உன்னை ஆசயா பார்க்க வந்தேன், ஆனா நீ… ம்… கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுதுல்ல… இப்ப எத்தனாவது மாசம்?” கடைசி கேள்வியில் கேலி இழையோடியது. 

 

பற்களை நறநறவென கடித்தவள், “மொத இந்த கேள்விய கேட்க உனக்கு எந்த அருகதையும் கிடையாது சுரேஷ். இதான் நம்ம கடைசியா பேசறதா இருக்கட்டும். குட் பாய்” என்றவள் அடுத்த நொடியே அலைப்பேசியை அணைத்து விட்டாள். 

 

இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. அவள் வாழ்வில் முடிந்ததாய் நினைத்த அத்தியாயம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்க அதனை எதிர்கொள்ள முடியாமல் தவித்தாள். 

 

என்னதான் சுரேஷ் மீது கோபமாய் இருந்தாலும் அவன்மீது கொண்ட காதல் இன்னும் அடிமனதினோரம் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது. தலைவலி படுத்தி எடுக்க படுக்கையில் சாய்ந்தாள் தேவிகா. 

 

அதன்பிறகு மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கினான் சுரேஷ். அவனை ஒதுக்கவும் முடியாமல் தொடர்ந்து பேசவும் முடியாமல் தவித்ததெல்லாம் சில நாட்கள் தான். 

 

ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிக்க தொடங்கி இருந்தவள் தற்போது சுமூகமாய் அவனோடு அளவளாடும் அளவிற்கு கொண்டு வந்திருந்தான். அவனது வருகையால் சித்தார்த்துடனான உறவில் சிறு விரிசல் ஏற்படத் துவங்கி இருந்தது. 

 

முதலில் குற்றவுணர்வோடு அவனிடம் பேச முடியாமல் தவிர்த்தவள் அதன்பின் மசக்கை, உடல் அசதி என காரணங்களை காட்டி முற்றிலும் பேசுவதைத் தவிர்த்தாள் தேவிகா. 

 

கர்ப்பகாலம் என்பதால் சித்தார்த்-ம் மேற்கொண்டு துருவாமல் அவளது போக்கிலே விட்டுவிட்டான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரில் வந்து சந்திக்க அப்போது மட்டும் ஓரிரு வார்த்தைகளில் அவனோடு உறவாடுவாள். 

 

“டாக்டர் கொடுத்த நேரம் நெருங்க நெருங்க எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு தேவி. நீயும் பாப்பாவும் என்கிட்ட திரும்ப வந்துருவீங்கள்ள” என அவளது கரத்தை தன் கரத்தில் புதைத்துக்கொண்டு கண்களில் பரிதவிப்போடு வினவினான் சித்தார்த். 

 

சுகப்பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக கூறி அறுவைச்சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருந்தார் அவளது மகப்பேறு மருத்துவர். படுக்கையில் சாய்ந்து படுத்திருவளின் அருகே அமர்ந்திருந்தவனுக்கு தான் அதிகமாய் பதட்டம் தென்பட்டது. 

 

அவள் பதிலளிக்கும் முன், “அவளே தெம்பா இருக்கா. நீ ஏன் டா இப்படி பதட்டப்பட்டு அவளையும் பயப்பட வைக்கிற! மொத நீ கீழ போய் நர்ஸ் சொன்ன மெடிசன் எல்லாம் வாங்கிட்டு வா” என கற்பகம்மாள் மகனை விரட்டவும் அவளை பிரிய மனமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தான் சித்தார்த். 

 

அவன் அறையை விட்டு வெளியேறியவுடன், “அவன் சொன்னத நினைச்சு நீயும் பதட்டப்படாத தேவி. அதான் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லனு சொல்லிட்டாங்கள்ள. நீ தைரியமா இரு. அவன் இங்க இருந்தா அவனும் பயந்து உன்னையும் பயப்பட வச்சுருவான், அதான் அவன வெளிய அனுப்பிட்டேன்” என அவளது தலையை தடவிக்கொண்டே கூறவும் அவளது இதழ்கள் சிறு புன்னகையை தத்தெடுத்தது. 

 

தன் கணவனுக்கு துரோகம் இழைக்கிறோமோ என எண்ணி கலங்கும் நேரத்தில் எல்லாம் சுரேஷ் ஏதேஏதோ கூறி அவளை சமாதானப்படுத்திவிட தற்போது அவனின் அன்பில் மனமுடைந்தவளுக்கு இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. 

 

அன்று மாலையே சித்தார்த்தின் கைகளில் தவழ்ந்தாள் இதழிகா. தனது மகளை கையில் ஏந்திய நொடி அவனது கண்கள் தேவிகாவை தான் வருடிக் கொடுத்தன. குழந்தையோடு அவளருகே சென்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, “நம்ம தேவதைய பாரு மா” என அவள்முன் குழந்தையை நீட்டினான். 

 

அவளது கண்களில் கண்ணீர் வழிந்தோட அதை ஆனந்தக்கண்ணீர் என அங்கு சுற்றி இருந்தோர் நினைக்க அவள் மட்டுமே அறிவாள் அது அவனுக்கு இழைத்த துரோகத்தினை எண்ணி வந்த கண்ணீரென! 

 

இரண்டு நாட்கள் அவள் கூடவே இருந்து அவளைக் கவனித்துக் கொண்டவன் மருத்துவமனையில் இருந்து அவள் தாய் வீடு கிளம்ப மனைவியையும் மகளையும் பிரிய மனமில்லாமல் கிளம்ப எத்தனித்தவனை மருத்துவர் அவனை அழைப்பதாக கூறவும் மருத்துவரின் அறைக்குச் சென்றான் சித்தார்த். 

 

தன்முன் இருந்த மருத்துவ அறிக்கையை பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர், “வாங்க சித்தார்த், நான் சொன்ன விசயத்த உங்க மனைவிகிட்ட கன்வே பண்ணிட்டீங்களா சித்தார்த்?” என்றார். 

 

அவன் மௌனமாய் இருக்கவே, “இத அவங்ககிட்ட இருந்து மறைக்கிறது ரொம்ப தப்பு சித்தார்த். ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே நான் உங்ககிட்ட கேட்டேன். அவங்க கர்ப்பப்பை இருக்கிற கண்டிஷனுக்கு இன்னொரு குழந்தைய தாங்கற சக்தி இல்ல. அதுனால தான் கூடவே குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கலாமானு! ஆனா நீங்க அதுக்கு மறுக்கவும் தான் நான் எதுவும் மேற்கொண்டு பேச முடியல. 

 

இன்னொரு குழந்தைய என்னதான் தவிர்க்க நினைச்சு நம்ம முன்னெச்சரிக்கையா இருந்தாலும் குழந்தை உண்டாக வாய்ப்புகள் இருக்கு. ஆப்ரேஷன் நேரத்துல உங்க மனைவி ரொம்ப பதட்டமாகுவாங்கனு சொல்லி என்னை சொல்ல விடாம தடுத்துட்டீங்க. இதுவே நான் என் பிரபஷனுக்கு பண்ற தப்பு. எதுவா இருந்தாலும் சம்பந்தப்பட்ட பேஷன்கிட்ட நேரடியா சொல்லணும். ஆனா உங்களோட ரெக்வஸ்ட்னால தான் நான் சொல்லாம தவிர்த்தேன். ஆனா குடும்பக்கட்டுபாடு பண்ணவும் நீங்க சம்மதிக்காம இருக்கிறது உங்க மனைவியோட உடல்நிலைக்கு நல்லது இல்ல சித்தார்த்” என்றார். 

 

“நீங்க சொல்றது எனக்கு புரியுது டாக்டர். அவளோட உடல்நிலைக்கு ஒரு ஆப்ரேஷன தாங்கறதே கஷ்டம்னு நீங்க தான சொன்னீங்க! அது தெரிஞ்சும் நான் எப்படி இதுக்கு சம்மதம் சொல்ல முடியும். அதுனால தான் நான் மறுத்தேன் டாக்டர்” என்றவனிடம், 

 

“உங்க மனைவிமேல நீங்க வச்சுருக்கிற அன்பு புரியுது சித்தார்த். ஆனா இது நம்ம கைய மீறின விசயம். அவங்க உயிருக்கே ஆபத்தா மாறும்போது அதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது தான் புத்திசாலித்தனம்” என்றார் மருத்துவர். 

 

“நான் வாசெக்டமி பண்ணிக்கிறேன் டாக்டர்” என்றவனை ஓரிரு நிமிடங்கள் அமைதியாக பார்த்தார் மருத்துவர். “நல்லா யோசிச்சு தான் சொல்றீங்க இல்லயா?” என்றவரின் பார்வை கேள்வியாய் அவன்மேல் பதிந்தது. 

 

“இது நான் நீங்க சொன்னவுடனே எடுத்த முடிவு தான் டாக்டர். ஆனா அப்போ இருந்த சூழ்நிலைல சொல்ல முடியல. அதான் இப்போ சொல்றேன்” என்றவனை மெட்சுதலாய் பார்த்தார் மருத்துவர். 

 

“ஓகே சித்தார்த். உங்களோட முன்னெடுப்பது ரொம்ப பெரிய விசயம். இதுலயே உங்க மனைவிய நீங்க எவ்ளோ காதலிக்கிறீங்கனு புரியுது. வாசெக்டமிகாக நீங்க இங்க உடனே அட்மிட் ஆகணும்னு அவசியம் இல்ல. ஒரே நாள்ள நீங்க நார்மலாகி வீட்டுக்கு கிளம்பிறலாம். நீங்க கொஞ்சம் சீக்கிரமாவே அத பண்ணிறது பெட்டர். 

 

ஏன் சொல்றேனு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றவரிடம் “புரியுது டாக்டர், இன்னும் டூ வீக்ஸ்ல உங்கள வந்து மீட் பண்றேன்” என்றவன் அங்கிருந்து கிளம்பினான் சித்தார்த். 

 

தேவிகாவை அறுவைச்சிகிச்சை அரங்கிற்கு அழைத்துப் போகும் முன்பே அவளுக்கு கர்ப்பப்பையில் இருக்கும் பிரச்சினையை பற்றி தெரிவித்திருந்தார் மருத்துவர். இன்னொரு கர்ப்பத்தை தாங்கும் சக்தி இல்லை என்பதை கூறியவர் மீறி குழந்தை உண்டானால் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தாக முடியலாம் என்றவர் குடும்ப கட்டுப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தவும் அவளது உடல்நிலையை காரணம் காட்டி மறுத்திருந்தான் சித்தார்த். 

 

ஏற்கெனவே ஒரு அறுவை சிகிச்சையை அவள் உடல் தாங்க வேண்டிய சூழ்நிலையில் மேலும் அவளை வதைக்க அவன் மனம் விரும்பவில்லை. அதற்கு தீர்வு காண நினைத்தவன், தான் ஏன் வாசெக்டமி செய்து கொள்ளக் கூடாது என எண்ணியவன் உடனே முடிவும் செய்திருந்தான். 

 

தன் உயிரை ஒன்பது மாதங்கள் சுமந்து வயிற்றை கூறுபோட்டு தன் மகவை பெற்றெடுத்தவள் முன் இது பெரிய விசயமாகபடவில்லை அவனுக்கு. 

 

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், புது சூழ்நிலையை ஏற்கவும் தேவிகாவிற்கு நேரம் எடுத்தன. அதனை மனதில் கொண்டு இந்த விசயத்தையும் அவளிடம் கூறாமல் விட்டுவிட்டான் சித்தார்த். 

 

அவனே மருத்துவமனை சென்று வாசெக்டமி செய்து கொண்ட பின் தான் தன் தாய் தந்தையருக்குமே தெரிவித்திருந்தான். முதலில் அதிர்ச்சி அடைந்தவர்களை சமாதானப்படுத்தியவன், “இன்னும் இது தேவிக்கு தெரியாது. அவ இங்க வந்தோனே நானே பொறுமையா ஒரு நாள் சொல்லிக்கிறேன்” என்றுவிட அவர்களும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. 

 

மூன்று மாதங்கள் கழித்து தன் புகுந்தகம் வந்தாள் தேவிகா. ஆனால் சித்தார்த்தின் மனைவி தேவிகாவாக இல்லாமல் முற்றிலும் சுரேஷின் காதலியாக மாறிப் போயிருந்தாள். 

 

இரவு கண் விழித்து குழந்தையையும் பார்த்துக் கொண்டு தன்னையும் கவனித்துக்கொள்ள அவள் சிரமப்படுவதைக் கவனித்தவன் அவளுக்கு உதவியாய் இருக்க முதலில் மறுத்தவள் பின் எதுவும் பேசாமல் அமைதியானாள். 

 

ஒருநாள் குழந்தை உறங்கும்நேரம் அவள் படுக்கையில் சாய்வாய் அமர்ந்திருக்க அவள் அருகே அமர்ந்தவன், “சாரி தேவி, ரொம்ப சிரமமா இருக்கா” என்றவன் அவள் கைகளை ஆறுதலாய் தன் கைகளோடு பிணைத்திருந்தான். 

 

அவள் மறுப்பாய் தலையை மட்டுமே அசைக்க, “இப்போலாம் நாம தனியா பேசக்கூட நேரம் அமைய மாட்டேங்கிது. நம்மளோட நேரம் முழுக்க குட்டிமா கூடவே போகுதுல்ல” என்றதற்கும் அவள் தலை மட்டுமே ஆடியது. 

 

“இப்படி ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்து பேசி எவ்ளோ நாள்ளாச்சு” என்றவனின் கண்களில் ஏக்கம் தென்பட அதனைக் கண்டவளுக்கு குற்றவுணர்வாய் இருக்க மெல்ல மெல்ல அவனது கைகளில் இருந்து தனது கைகளை மெதுவாக விலக்கிக் கொண்டாள். 

 

“தேவி உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும். இப்போ நான் சொல்லப் போற விசயம் உனக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா இவ்ளோநாள் உன்கிட்ட மறைச்சதுக்கு மொதல்ல என்னை மன்னிக்கணும் நீ” என்றான். 

 

அவனின் கூற்று புரியாமல் அவனை நோக்கியவளைக் கண்டு, தான் கூறப்போகும் விசயத்தை அவள் எவ்வாறு எடுத்துக் கொள்வாள் என்ற பதட்டம் உண்டானது சித்தார்த்திற்கு. 

 

 

வானம் – 22

 

அவனின் பதட்டத்தைக் கண்டவள், “என்ன விசயங்க?” என்க, “அதுவந்து…” என அவன் கூற வரும் வேளையில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இதழிகா லேசாக முனுக ஆரம்பித்தாள். 

 

இருவரும் தாங்கள் பேச வந்த விசயங்களை புறம் தள்ளிவிட்டு மகளை பார்க்கத் தொடங்கினர். அதன்பின் இருவருக்குமே தனிமை என்பதே அமையாமல் இருக்க சித்தார்த்-ம் ‘தற்போது தான் அவளே கொஞ்சம் உடல்நலன் தேறி வருகிறாள். பொறுமையாய் கூறிக் கொள்ளலாம்’ என சற்று தள்ளிப் போட்டான். 

 

அவன் என்ன கூற வந்தான் என்ற யோசனை அவளுக்கும் இருந்தாலும் அதனைக் கேட்க கூட முடியாமல் நேரம் றெக்கைக் கட்டி பறந்தது. பசி, உறக்கம் என அத்தனையும் மாறுபட துவங்கி இருக்க அத்தோடு சுரேஷுடனான நெருக்கம் வேறு அவளை குற்றவுணர்வில் தவிக்க வைக்கவும் தானுண்டு தன் மகளுண்டு என குறுகிய வட்டத்தினுள் தன்னை சுருங்கிக் கொண்டாள் தேவிகா. 

 

அவ்வபோது அவளுடனும் குழந்தையுடனும் சித்தார்த் நேரம் செலவிட்டாலும் பெரும்பாலான நேரத்தை இதழிகாவே திருடிக் கொள்ள தம்பதியராய் அவர்களுக்குள் இயல்பான விரிசல் ஏற்பட்டிருந்தது. இருவருமே அதனை பெரிதுபடுத்தாமல் இருக்க அதனை தனக்கு சாதகமாக்கினான் சுரேஷ். 

 

ஒருகட்டத்தில் குழந்தையை விட்டுவிட்டு அவனோடு செல்ல துணிந்திருந்தாள் தேவிகா. வழக்கம்போல் அன்றும் சித்தார்த் வேலை விசயமாக வெளியே சென்றிருக்க, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள் இதழிகா. 

 

கற்பகம்மாள் சமையலறையில் இருக்க, ராமமூர்த்தியும் வெளியே சென்றிருந்தார். தன் மகளருகே சென்றவள், “என்னை மன்னிச்சுரு குட்டி. நீ என்கூட வளர்றத விட உன் அப்பாகிட்ட வளர்றது தான் சரி மா. அவரு உன்னை எந்த சூழ்நிலையிலும் கலங்க விட மாட்டாரு. எனக்கு தான் அவரோட வாழ கொடுத்து வைக்கல. உன்னை இளவரசியா வளர்ப்பாருன்னு தான் உன்னை இங்க விட்டுட்டு போறேன். இந்த அம்மாவ மன்னிச்சிரு மா” என்றவளின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. 

 

“உன் அப்பாகூட வாழ்ற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு குற்றவுணர்வா இருக்கு. காலம் முழுக்க அவரையும் வதைச்சு நானும் கஷ்டப்பட்டு வாழற வாழ்க்கை அவருக்கு வேண்டாம் குட்டி. அம்மா உன்னை விட்டுட்டு போறேன்னு என்மேல உனக்கு கோபம் எழலாம். ஆனா உன் அப்பாவோட நீ இருக்கிறது தான் உனக்கு பாதுகாப்பானது குட்டி. லவ் யூ மா” என அவளது கன்னத்தில் அவளது இதழோடு போட்டிக்கொண்டு கண்ணீரும் முத்தமிட்டன. 

 

கற்பகம்மாளிடம் சென்றவள், “அத்த, பக்கத்துல கடை வரைக்கும் போய்ட்டு வந்தறேன்” என்க, “சரி, பார்த்து போய்ட்டு வா மா” என்றார் அவர். 

 

கனத்த மனதோடு அங்கிருந்து கிளம்பினாள் தேவிகா. ஒரு மணிநேரம் ஆகியும் தனது மருமகள் இன்னும் வீடு திரும்பவில்லையே என்ற கலக்கத்தில் தனது மகனுக்கு அழைப்பு விடுத்தார் கற்பகம்மாள். 

 

அடுத்த பத்து நிமிடத்தில் தன் வீட்டில் இருந்தான் சித்தார்த். அவனது முகத்தில் அத்தனை பதட்டம். “என்னமா சொல்ற, அவ எங்க போய்ற போறா… பக்கத்துல தான போறதா சொன்னா, வந்துருவா. நீயும் பதட்டமாகி என்னையும் ஏன் பதட்டப்பட வைக்கிற” என்றவனின் வார்த்தைகளில் பதட்டம் தொனித்தது. 

 

“இல்ல கண்ணா. அவ நம்பருக்கு எவ்வளவோ முறை ட்ரை பண்ணி பார்த்துட்டேன். கால் போகவே மாட்டேங்குது. காலம் கெட்டு கெடக்குது கண்ணா. ஒன்னு கெடக்க ஒன்னாகிருச்சுனா. மனசு கெடந்து தவிக்குது டா… பாப்பா வேற அழுதுட்டே இருக்கா. புட்டி பால் கொடுத்தாலும் குடிக்க மாட்டேங்கிறா, எனக்கு என்னவோ பயமா இருக்கு டா” என்றவரின் குரல் உடைந்திருந்தது. 

 

“சரி மா, பதட்டப்படாத. நீ இதழி மா’வ பார்த்துக்க. நான் போய் தேடி பார்க்கிறேன்” என்றவன் அன்று இரவு வரைக்கும் வண்டியிலேயே அலைந்து திரிந்தான். நேரம் ஆக ஆக, மனதில் பதட்டம் அதிகரிக்கத் தொடங்க, இறுதியில் காவல்நிலையம் சென்றான். 

 

தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தவன், “பச்சக்குழந்த அம்மா இல்லாம அழுதுட்டே இருக்கு சார். ப்ளீஸ், முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் கண்டுப்பிடிக்க முயற்சி பண்ணுங்க சார்” என கண்ணீர் மல்க நிற்க அவனின் நிலை உணர்ந்த காவல் ஆய்வாளர், “எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்றோம் பா. தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கனு எல்லார்ட்யும் நீங்களும் முடிஞ்ச வரைக்கும் விசாரிங்க” என்றார். 

 

பகல் முழுவதும் அவன் அதை தானே செய்தான். தனக்கு தெரிந்த வரையில் அனைவரிடமுமே விசாரித்து விட்டான். தேவிகாவின் பெற்றோரும் விசயமறிந்து அவனது வீட்டிற்கு வந்துவிட்டனர். 

 

இரண்டு நாள்கள் தொடர் தேடுதல் வேட்டையால் அவளது இருப்பிடத்தைக் கண்டறிந்தனர் காவல்துறையினர். அவளை காவல் நிலையம் அழைத்து வந்தவர்கள் சித்தார்த்திற்கு தகவல் தெரிவித்துவிட மொத்த குடும்பமும் அங்கு சூழ்ந்தனர். 

 

அவளைக் காணாத இந்த இரு நாட்களில் அவன் அரைஉயிராய் வாடி வதங்கி இருக்க, அவனைக் கண்டவுடன் அவன் அருகே செல்ல முயன்றவளைத் தடுத்த சுரேஷ் அவளது கரத்தோடு தனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான். 

 

அவனது செயலைக் கண்டவனுக்கு மீதி ஒட்டியிருந்த உயிரும் உயிரற்றுப் போனது. கற்பகம்மாள் தான் காளி அவதாரம் எடுத்து விட்டார். தேவிகாவின் அருகே சென்றவர் மாறி மாறி அவளது கன்னங்களில் அறைவிட அவரைத் தடுக்க முயன்ற சுரேஷை பார்வையாலே எரித்தார். 

 

“அடிபாவி, இப்படி என் மகன் வாழ்க்கைய பாழாக்கிட்டியே டி. அவன் உனக்கு என்ன டி கொற வச்சான்? உன்னை காணாம்னு இந்த ரெண்டு நாளா பசி, தூக்கம் இல்லாம அர உசுரும் கொற உசுருமா நடமாடிட்டு இருந்தானே டி. அவனுக்கு எப்படி டி உன்னால இப்படி ஒரு துரோகத்த பண்ண முடிஞ்சுது. 

 

அந்த பிஞ்சு குழந்தை முகத்தை பார்த்துமா உனக்கு இப்படி பண்ண தோணுச்சு” என்றவர், 

 

“அய்யோ என் மகன் வாழ்க்கையே நாசமா போச்சே… என்ன பண்ணுவேன் நான். அவன பெத்த வயிறு பத்தி எரியுதே, இந்த கேடுகெட்டவ நல்லா இருக்கணும்னா அவன் தன்னையே சிரமப்படுத்தி குடும்பக்கட்டுபாடு பண்ணிக்கிட்டான்… அவ பாவம்மா இன்னொரு ஆப்ரேஷன எப்படி தாங்குவானு தன்னையே சிரமப்படுத்திக்கிட்டானே. அய்யோ என் மகன் வாழ்க்கை போச்சே!” என தலையில் அடித்துக்கொண்டே மயங்கி விழ, காவல்நிலையமே சிறிது நேரம் பதட்டமாய் காணப்பட்டது. 

 

கற்பகம்மாள் கடைசியில் கூறியது அங்கிருந்து அனைவருக்குமே அதிர்ச்சி என்றால் தேவிகாவோ சிலையாய் மாறிப் போனாள். 

 

‘இவ்வளவு நாளாய் அவர் என்னிடம் கூற முயன்றது இதைத் தானா!’ என ஸ்தம்பித்து நின்றிருக்க அவளது அன்னையும் அவரது பங்கிற்கு அவளது கன்னத்தை பதம் பார்த்தார். அவள் எதற்கும் எதிர்வினையாற்றாமல் அதிர்ச்சியில் உறைந்திருக்க அங்கிருந்த காவலர்கள் தான் அனைவரையும் அமைதிப்படுத்தினர். 

 

கற்பகம்மாளிற்கு மயக்கம் தெளிவித்து தண்ணீர் பருக கொடுக்க அதனை குடிக்க மறுத்தார். சித்தார்த்தோ உயிரற்ற கூடாய் நின்றிருக்க, காவல் ஆய்வாளர் தான் தன்னுடைய விசாரணையை ஆரம்பித்தார். 

 

“ஏம்மா பச்ச கொழந்தைய இப்படி தவிக்க விட்டுட்டு இப்படி ஒரு காரியத்த பண்ணிட்டு வந்து நிக்கிறியே… காதலன் தான் வேணும்னா கல்யாணத்துக்கு முன்னாடியே ஓடிப் போய் தொலஞ்சுருக்கலாம்ல. இப்போ ஒருத்தரோட வாழ்க்கைய அழிச்சுட்டு பச்ச கொழந்தய விட்டுட்டு போற அளவுக்கு அவன் மேல காதல் முத்திருச்சா!” என்றவரின் வார்த்தைகளில் கோபம் தெறித்தாலும் தனது வார்த்தைகளை மிக அழுத்தமாய் பதிவிட்டார். 

 

“என்னை மன்னிச்சுருங்க சார். அவர… அவர…” எனும்போதே வார்த்தைகள் வர மறுத்தன. 

 

“அந்த மனுஷன் உன்னை மன்னிச்சா நீ இப்படியே கெளம்பலாம். இல்லனா உன்னை ஜெயில்ல தான் தூக்கிப் போடணும்” என்றார் கறாராய். 

 

சித்தார்த்தின் அருகே செல்ல முயன்றவளை சுரேஷ் மீண்டும் தடுக்க அவனது கரங்களை உருவி விட்டவள் சித்தார்த்தின் முன் நின்றாள். 

 

“என்னை மன்னிக்க சொல்லறதுக்கு கூட எனக்கு அருகதை இல்லங்க. நீங்க எனக்காக இப்படி ஒரு காரியத்த பண்ணுவீங்கனு நான் எதிர்பார்க்கல” என்றவள் அவனது கரத்தைப் பற்ற தீப் பட்டது போல் உதறினான் சித்தார்த். 

 

“உங்களுக்கு துரோகம் பண்ணனும்னு நினைச்சு இப்படி பண்ணலங்க. குற்றவுணர்வோட உங்களோட வாழ முடியாம தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். எனக்காக நீங்க இப்படி ஒரு எடுத்துருக்கீங்கன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா…” என அவள் முடிக்கும்முன், 

 

“முன்னமே தெரிஞ்சிருந்தா என்ன பண்ணிருப்ப தேவி? அவன மனசுல வச்சுட்டு என்கூட கடமைக்கேனு வாழ்ந்துருப்பியா!” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வலி. 

 

“அது… அதுவந்து” என அவள் திக்கித் திணற, “அப்படி ஒன்ன மட்டும் நீ பண்ணிருந்தா அது என்னை உசுரோட புதைச்சதுக்கு சமம். இப்ப நீ பண்ணத விட அது எவ்ளோ கொடுமை தெரியுமா? அவன நினைச்சுட்டு என்கூட நீ…” மேற்கொண்டு பேச முடியாமல் பற்களை நறநறவென கடித்தவன் நேராக காவல் ஆய்வாளரிடம் சென்றான். 

 

“அவங்க வாழ்க்கைல நான் குறுக்கிட விரும்பல சார். என்னோட எப்ஐஆர வாபஸ் வாங்கிக்கிறேன். உங்களுக்கு ரொம்ப சிரமத்த கொடுத்துட்டேன். என்னை மன்னிச்சுருங்க சார்” என கைகூப்பினான் சித்தார்த். 

 

அவனின் வார்த்தைகளில் இருந்த தெளிவைக் கண்டவர் மேலும் வாதிட விரும்பாமல் அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினார். தனது தாயின் புலம்பலைக் கண்டு, “ம்மா, ப்ளீஸ். எதுவும் பேசாம வீட்டுக்கு வாங்க” என்றவனிடம் தேவிகாவின் பெற்றோர் மன்னிப்பு வேண்டினர். அவர்களிடம் எதுவும் பேசாமல் கடந்து சென்றான். 

 

அதன்பின் அவன் வாழ்வின் அர்த்தமாய் மாறிப் போனாள் இதழிகா. 

 

சித்தார்த் உடைய நாட் குறிப்பேடை அதற்குமேல் சரயுவால் படிக்க இயலவில்லை. கண்களில் நீர் குளமென தேங்க அவன் தன்னை நிராகரிப்பதற்கான காரணமும் புரிபட்டது. 

 

தன் வாழ்வில் பெரிய பொக்கிஷத்தை இழந்துவிட்டாள் தேவிகா என நினைத்தவளுக்கு அந்த பொக்கிஷத்தை தானும் இழுந்துவிடக்கூடாது என மனதில் உருப்போட்டுக் கொண்டாள். 

 

இத்தனை நாள் அவன்மேல் இருந்த காதல் இன்னும் கூடத்தான் செய்தது. 

 

அவன் வாழ்வில் நடந்தவைகளை ஆங்காங்கு சிறு குறிப்பாய் தான் எழுதி இருந்தான். ஆனால் அதனைப் படித்ததற்கே அவள் மனம் படாதபாடு பட்டது. 

 

அவனை உடனே பார்க்கவேண்டும் என மனம் உந்த தன்னருகே இருந்த பலகணியை சிறிது விலக்கி அவனது வீட்டைப் பார்த்தாள். இரவின் நிசப்தம் குடிகொண்டிருக்க நித்திராதேவியின் ஆட்சியில் அனைவரும் கட்டுண்டிருந்தனர். அவள் மனமோ அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. மீண்டும் டைரியை புரட்டத் தொடங்கினாள். 

 

_தொடரும்

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்