Loading

அத்தியாயம் 1

 

எழிலைப் பற்றி இந்திரஜித்திற்கு எப்படி தெரியும் என்று புரியாதவளாய் சில நிமிடங்கள் அதிர்ந்திருந்தாள்.

அவளுக்கும் நடவந்தவற்றை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்திரஜித் தடாலடியாக திருமணம் செய்ததில் தான், கோபத்தில் எதையும் பகிரத் தோன்றவில்லை அவளுக்கு.

இப்போதும் ஒரே குழப்பம். தன் தாய்க்கும் தமக்கைக்கும் கூட தெரியாத விஷயத்தை எப்படி தெரிந்து கொண்டான் என்று குழம்பியவள், இதழ்களைக் கடித்து மௌனமானாள்.

“என்ன ரூப்ஸ் சைலண்ட் ஆகிட்ட?” அவன் அர்த்தப்பார்வை வீச,

“உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள் சலனமற்று.

“எழில் சொன்னான்…” என்றதோடு நிறுத்திக்கொள்ள, அவளுக்கு உள்ளுக்குள் ஆத்திரம் எரிமலையாக வெடித்தது.

“எழில் மாமாவா சொல்லுச்சு.” இன்னும் நம்பாத தொனியில் கேட்டவளின் தோரணையை ஆராயாமல் தலையசைத்தான்.

அவளால் சிறிதும் நம்ப இயலவில்லை. காதலித்த பெண்ணின் கணவனிடமே, அவன் மனைவியை காதலித்ததாக கூறியவனின் மீதிருந்த சிறிதளவு பாசமும் இப்போது வற்றிப்போனது. அவனிருந்த சூழ்நிலையை இந்திரஜித்திற்கும் விளக்கத் தோன்றவில்லை. அவனுக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை போலும்! ஆனால், பெண்ணவளால் அப்படி எடுத்துக்கொள்ள இயலவில்லை.

முயன்று உணர்வுகளை அடக்கியவள்,  மீண்டும் மௌனம் சாதிக்க, அவனும் அதற்கு மேல் துருவவில்லை.

அவ்வமைதியை விரும்பாதவனாக “சரி, கிளம்பலாமா?” எனக் கேட்டு விட்டு எழப் போக, அவள் மணலை அளந்தபடி, “நானும் எழில் மாமாவும் விரும்புனோம்” என்றாள் அமைதியாக.

ஏற்கனவே தெரிந்த தகவல் தான் என்றாலும், தன்னவளின் வாயால் கேட்கும் போது, அதிகமாக வலிக்கவே செய்தது இந்திரஜித்திற்கு. அதனை மறைத்துக்கொண்டு, “ஓ!” என்றான்.

“வைஷுக்காவுக்கு கல்யாணம் ஆனதும் ரெண்டு பேரும் வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருந்தோம்.” அவள் மேலும் விளக்கம் கொடுக்க, “ம்ம்…” என்றதோடு முடித்துக்கொண்டான்.

“ஆனா… கொஞ்சம் பிரச்சனை ஆனதுனால ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் அதிகமாகி, பிரிஞ்சுட்டோம்.” என்னும் போதே லேசாய் குரல் கரகரத்தது சத்யரூபாவிற்கு.

“என்ன பிரச்சனை? உன்னை லவ் பண்ணிட்டு அவன் ஏன், வைஷுவை கல்யாணம் பண்ணிக்கிட்டான் சத்யா…?” அவளை ஆழ்ந்து பார்த்தபடி இந்திரஜித் வினவ, அவனது ‘சத்யா’ என்ற அழைப்பு அவளுக்கு அந்நியமாய் தோன்றியது.

“ஒ… ஒண்ணும் இல்ல. கிளம்பலாம்.” என்று எழப்போனவளின் கையைப் பற்றியவன், “பதில் சொல்லாம எந்திரிச்சா என்ன அர்த்தம்…” என்றான் முறைப்பாக.

“நீங்க என் மேல கோபப்படுறதுல நியாயமே இல்ல இந்தர். நம்ம கல்யாணம் ஒண்ணும் பிளான் பண்ணி நடக்கல. உங்ககிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டு நடக்குறதுக்கு… நீங்க அதுக்கான வாய்ப்பும் கொடுக்கல.” என்று தன் போக்கில் பேசிக்கொண்டே போக, அவனுக்கு புரியவில்லை.

“இப்போ நான் எங்க கோபப்பட்டேன் ரூப்ஸ்…?” புருவம் சுருக்கி அவன் கேட்டதில், “இப்போ கோபப்பட்டீங்க தான…? சத்யான்னு கூப்பிட்டீங்க…” உள்ளே சென்ற குரலில் கூறினாள்.

அவனது கோபம் அவளை பாதிக்கிறது… என்று உணர்கையில் அவன் இதழ்களில் சிறு முறுவல்.

“கோபமா இருக்கும் போது தான் சத்யான்னு கூப்பிடுவேனா தியா… அப்போ அப்போ எனக்கு என்ன பேர் தோணுதோ அதை கூப்பிடுவேன். அதை வச்சுலாம் என் மைண்ட்செட்ட கெஸ் பண்ணக்கூடாதாக்கும்” என்று குறும்பாய் கூறியவனுக்கு, உண்மையாகவே அவளை விட்டு வெகுதூரம் விலகிய உணர்வு தான். அதனாலேயே சத்யா என்றழைத்து விட்டு, இப்போது அவளை சமன் செய்தான்.

“அப்போ கோபம் இல்லையா?” விழி நிமிர்த்தி அவள் கேட்டதில், கண்ணை மூடி மறுப்பாக தலையசைத்தான்.

“எப்போ தெரியும்…” கோபம் இல்லை என்றதும் சற்றே நிம்மதியான மனதை பற்றி ஆராயாமல் அவள் வினவ,

“மறுவீடு போனப்ப.” என்றான் இந்திரஜித்.

“ஓ!” என்றவள் சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, “அப்பவே ஏன் கேட்கல…?” என்றாள்.

“கேட்க தோணல” எனத் தோளைக் குலுக்கிக்கொண்டவன், ஆர்ப்பரிக்கும் கடலை பார்வையிட்டான். அவன் மனதும் கூட அதே போல தான் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

தொண்டையை சரி செய்து கொண்டவன், “சரி, சொல்லு. என்ன பிரச்சனை?” எனக் கேட்டான் தீவிரமாக.

“எங்களுக்குள்ள நேரடியா பிரச்சனை இல்ல. அத்தை மாமா தான் எங்களோட பெரிய பிரச்சனையே. அவங்க வீட்டுக்கு மருமகளா போக எனக்கு விருப்பம் இல்ல.” தனது கை ரேகையை ஆராய்ச்சி செய்தபடியே கூறினாள் சத்யரூபா.

“ஏன், அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலையா…” இந்திரஜித் குழப்பமாக கேள்வித் தொடுக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் எண்ணங்கள் மூன்று வருடங்கள் பின்னோக்கி நகன்றது.

_______

“எலி… டேய் எலி மாமா.” ஊருக்கே கேட்கும் படி கத்திக்கொண்டே எழிலழகனின் வீட்டினுள் நுழைந்தாள் சத்யரூபா.

தலையணையால் காதைப் பொத்தியபடி உறக்கத்தைத் தொடர்ந்த எழிலழகனை உலுக்கியவள், “எந்திரி எலி. கோவிலுக்கு கிளம்ப வேணாமா?” என்று சத்தத்தை அதிகப்படுத்த, அதில் உறக்கம் கலைந்த எழில், “கோவிலுக்கு எதுக்கு வேஸ்ட்டா போய்க்கிட்டு, இங்க நின்னே வேண்டிக்க சது. நேரடியா கடவுள் கிட்டயே போய் சேர்ந்துடும்” என்று கிண்டலடித்தபடி எழுந்து அமர்ந்தான்.

அதில் அவனை முறைத்தவள், “ரொம்ப குசும்பு மாமா உனக்கு. ஏதோ பொறந்த நாள் ஆச்சேன்னு சும்மா விடுறேன். என சிலுப்பிக்கொண்டவள், அத்தை மாமா வீட்ல இல்லையா? எனக் கேட்க,

“வெளியூருக்கு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. இரு. ரெடியாகிட்டு வரேன்.” என்றவாறு குளியலறைக்கு சென்றான்.

“அட தெரிஞ்சுருந்தா உனக்கு இனிப்பு செஞ்சு கொண்டு வந்துருப்பேனே.” என குறைபட்டுக்கொண்டவள், அவசரமாக அடுக்களைக்கு சென்றாள்.

சில வருடங்களுக்கு முன்பு வரை, அவன் பிறந்த நாளுக்கு தாமரை இனிப்பு செய்து கொடுத்து விடுவார். ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் எழுந்ததும் முதல் வேலையாக எழில் வீட்டிற்கு வந்து விடுவாள் சத்யரூபா. சொல்லப்போனால், அவள், அவன் வீட்டிற்கு வருவதே அன்று ஒரு நாள் மட்டும் தான்.

அதற்கே ஆனந்தி, “என் புள்ளைக்கு நான் செஞ்சு குடுத்துக்குவேன். நாங்க என்ன எதுவும் இல்லாமலா இருக்கோம்.” என்று குத்திய பின்பு, அவன் வீட்டிற்கு ஒரு பருக்கையைக் கூட அவள் கொண்டு வருவதில்லை.

தாமரையும், “அவள் என்னமோ சொல்லிட்டு போறா சத்யா. எழிலு ஆசைப்படும்ல” என சமன் செய்தாலும், “அவனுக்கு வேணும்ன்னா, இங்க வந்து சாப்பிடட்டும்” என்று மறுத்து விட்டாள்.

சில நேரம், அவள் வீட்டிற்கு வருவதற்கு கூட ஆனந்தி தடை செய்து பார்த்தார் தான். ஆனால், எழிலுக்காக பொறுத்துக்கொண்டாள்.

அவன் குளித்து முடித்து வருவதற்குள், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கேசரி தயாரித்தாள்.

“அடுப்படில என்ன உருட்டிட்டு இருக்க சது…” என வாசம் பிடித்துக்கொண்டே வந்தவன், “வாவ்… வாசமே ஆள தூக்குது போ! நீ எனக்கு சுவீட் குடுத்தே ரொம்ப வருஷம் ஆகுது தெரியுமா சது.” என்று சிலுப்பியபடி, கேசரியை பதம் பார்த்தான்.

அதில் முகம் சுருங்கியவள், அப்போதும் கூட, தான் வராமல் போனதற்கு அவனது தாய் தான் காரணம் என்று சொல்லாமல் விட்டு விட்டாள்.

சொல்லி அவனை வருத்தப்படவைப்பானேன்… என்ற எண்ணமே, பின்னாளில் அவனை வெகுவாய் வருத்தவும் வைத்தது.

சிறுவயதில் இருந்தே, மாமன் மீதும், அவரின் குடும்பத்தின் மீதும் அதிக ஒட்டுதல் எழிலழகனுக்கு. சத்யாவின் தந்தை இழப்பில், அவர்களை விட அதிகம் உடைந்தது எழில் தான். தன் மகன் அதிகமாக அண்ணன் குடும்பத்துடன் உறவாடுவது பிடிக்காமல், அவனது பெற்றோர் ஆறாம் வகுப்பு முதலே, விடுதியில் சேர்த்து விட்டனர்.

அப்போதிருந்தே விடுமுறைக்கு மட்டும் தான் ஊருக்கு வருவான். அப்படி வரும்போதும், முக்கால் வாசி நேரங்கள், சத்யாவின் வீட்டில் தான் கழியும். ஒரு அளவிற்கு மேல் கண்டிக்க இயலவில்லை ஆனந்திக்கும் ஐயப்பனுக்கும். அவனுக்கும், பெற்றோரின் சுயநல குணம் தெரியவில்லை. பணத்தை வைத்து ஆட்களை எடை போடுபவர்கள், ஐயப்பனின் குடும்பத்தினர்.

ஒரு விஷயம் நடைபெற வேண்டும் என்றாலும், நடைபெற கூடாது என்றாலும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக் கூடியவர்கள். அதே குணம் ஆனந்திக்கும் தொற்றிக்கொண்டது. விவரம் தெரியும் வயதிலிருந்தே குடும்பத்தினரிடம் இருந்து தள்ளியே இருந்து பழக்கப்பட்ட எழிலுக்கும், மனிதர்களின் வக்கிர புத்தி புரியாமல் போனது. அதனால் மடிந்து போனது, அவனது காதலும் தான் என்று இன்றளவும் கூட அவனுக்கு தெரியாது.

அவ்வப்பொழுது ஊருக்கு வருபவனிடம், தாய் தந்தையைப் பற்றி தவறாக பேசக் கூடாது என்றே சத்யாவும் பல்லைக்கடித்து கொண்டு இருக்க பழகி விட்டாள்.

இப்போது, இருவரும் தஞ்சை பெரிய கோவிலுக்கு தான் பயணம் செய்தனர்.

“எலி… சீக்கிரம் வீட்டுக்கு போகணும். இன்னைக்கு வைஷுக்கா வரேன்னு சொல்லிருக்கா. அவளுக்கு மாப்ள பார்க்க, அக்கம் பக்கத்துல சொல்லி வச்சுருக்கேன். மேட்ரிமோனிலயும் குடுத்து வைக்கணும்.” அவனுடன் புல்லட்டில் பயணித்தபடி தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தாள்.

“ம்ம்… உன் அக்கா வரப்போற புருஷன்கிட்டயாவது பேசுவாளா சது.” என்று எழில் கேலி செய்ய, “ஏன் மாமா அவளை கிண்டல் பண்ணுற” என்றாள் சிரிப்புடன்.

“பின்ன என்ன, என்கிட்ட அவள் மூஞ்சி குடுத்து கூட பேச மாட்டுறா. சொந்த அத்தை பையன் தான. பேசுனா என்னவாம். என்னமோ எவனையோ பார்த்த மாதிரி தலையை குனிஞ்சுட்டு போறா.” என்று சலித்தான்.

“அவளுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் மாமா. யார்கிட்டயும் டக்குனு பேச மாட்டா. உனக்கு தெரியும்ல.” என்று பேசிக்கொண்டே கோவிலுக்கும் வந்து சேர்ந்தனர்.

மனமுருக கடவுளை வேண்டிவிட்டு, காலாற நடக்கும் போது, “நீ எப்ப தஞ்சாவூருக்கு போற எலி.” எனக் கேட்டாள்.

“இன்னும் ரெண்டு நாள் லீவ் இருக்கு சது.” என்றவனிடம், “அப்போ, இடைல அக்காவை பொண்ணு பார்க்க வந்தா, நீயும் வந்துடுவ தான மாமா.” என்றாள் விழிகளை உருட்டி.

மென்மையாய் புன்னகைத்தவன், “அவளை பேக் பண்ணி புகுந்த வீட்டுக்கு அனுப்புற வரை, நான் உன் கூடவே தான் இருப்பேன்டா.” எனக் கண் சிமிட்டிட, “என் அக்காவ பேக் பண்றதுல உனக்கு தான் ரொம்ப சந்தோசம் போ!” என வாரினாள் சத்யரூபா.

“இருக்காதா பின்ன… புருஷன் குடும்பம்ன்னு ஆனதுக்கு அப்பறமாவது என்கிட்ட பேசுறாளான்னு பாக்கலாம்” என்றதில், இருவரும் நகைத்தனர்.

அந்நேரம், அவர்களை நோக்கி வந்தார் அண்ணாமலை. 45 ஐ தாண்டிய வயது.

“நல்லவேளை உங்களை இங்கயே புடிச்சுட்டேன்.” என்று வாயெல்லாம் பல்லாக வந்தவரைக் கண்டதும், சத்யாவும் புன்னகைத்தாள்.

“வெயில்ல பல்லு க்ளார் அடிக்குது மாமோய் கொஞ்சம் மூடுங்க…” நமுட்டு சிரிப்புடன் எழில் கேலி செய்ய, “எலி… சும்மா இரு” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு சத்யா அதட்டினாள்.

“அட… நான் ஒரு சந்தோசமான செய்தி சொல்றதுக்கு தான் வந்தேன். ஊர்ல போய் பாக்கணுமேன்னு நினைச்சேன். நல்லவேளை இங்கயே பார்த்துட்டேன்.” என்றவர், “சத்யா, வைஷாலி பாப்பாவுக்கு நல்ல சம்பந்தம் கிடைச்சிருக்கு” என்றார் மகிழ்வாக.

“நீங்க மொதல்ல மாப்பிள்ளையை பத்தி சொல்லுங்க. அப்பறம் அது நல்ல சம்பந்தமா இல்லையான்னு நாங்க சொல்றோம்” எழில் சற்று முறைப்புடன் கேட்டான்.

“நீங்களே பார்த்துட்டு ஆச்சர்யப்படுவீங்க தம்பி. பெரிய இடம்…” என்று மாப்பிள்ளையின் புகழ் பாட, சத்யாவும் பெண் பார்க்க வருமாறு சொல்ல சொன்னாள்.

பின், அவரும் மறுநாள் அழைத்துக்கொண்டு வருவதாக வாக்கு கொடுத்து விட்டு, “நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே தம்பி” என்று எழிலைப் பார்த்தார்.

அவன் என்னவென்று கேட்டதில், “நான் கூட, உங்க மாமா போனதும், மாமா பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு நினைச்சேன். சரி… ஆனந்தி அக்கா அதுக்குலாம் ஒத்துக்குமா.” என்று பேச்சு வாக்கில் கூறி விட்டு செல்ல, சத்யா அவரை முறைத்தாள்.

“இவங்களுக்கு எதையாவது உளறுறதே வேலையா போச்சு எலி. உன் கூட ஊருக்குள்ள பேசுனா தான், ஒடனே கண்ணும் காதும் வச்சு கண்டதை பேசுறாங்கன்னா, இப்ப இப்படி உளறுறாங்க. எரிச்சலா இருக்கு.” என்று முகத்தை சுருக்கிக்கொள்ள, எழிலின் முகத்தில் யோசனை ரேகைகள் படர்ந்தது.

சில நிமிட அமைதிக்கு பிறகு,”அவரு சொல்றது சரி தான சது.” நிறுத்தி நிதானமாக அவன் கேட்டதில், “என்ன சரி? அத்தை பையன்னா கல்யாணம் பண்ணி தான் ஆகணுமா மாமா…” அவளும் கடுப்பாக கேட்டாள்.

“பண்ணுனா என்ன தப்புடா. நியாயமா இதை நான் தான் யோசிச்சு இருக்கணும். எனக்கு இப்படி ஒரு ஆங்கிள் தோணவே இல்லை பாரேன்.” என்று தலையை தட்டிக்கொண்டான்.

இடுப்பில் கை வைத்து முறைத்த சத்யா, “இப்ப என்ன… அக்காவை நீ கல்யாணம் பண்ணிக்க போறியாக்கும்” எனக் கேட்டதில்,

“அதுக்கு அவள் ஒத்துக்கணுமே. அவளே ஐடில வேலை பார்க்குறா. அப்போ அதே ஃபீல்டுல தான எதிர்பார்ப்பா. அது மட்டும் இல்ல, கல்யாணத்துக்கு அப்பறமும் என்னை பார்த்து தலையை குனிஞ்சுக்கிட்டே இருந்தா, நான் ரொம்ப பாவம் சது.” என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டதில், சத்யாவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“ரொம்ப கஷ்டம் எலி.” சத்தமாக சிரித்து விட்டவளை கண்ணெடுக்காமல் பார்த்தவன், “நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா சது.” என பட்டென்று கேட்டதில், அவள் அதிர்ந்து விட்டாள்.

“என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா மாமா?” எனத் திகைத்தவளுக்கு முதலில் கண் முன் தோன்றியது ஆனந்தியும் ஐயப்பனும் தான்.

“தெரிஞ்சு தான் பேசுறேன் சது. உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா?” எனக் கேட்டான் கையைக் கட்டிக்கொண்டு.

“இது என்ன கேள்வி. உன்னை எனக்கு எப்பவுமே பிடிக்கும். ஆனா… கல்யாணம்?” என்று குழம்பிப் போனவளை, அமைதியாக ஏறிட்டவன்,

“எனக்கும் உன்னை பிடிக்கும் சது. இதுவரை நானும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்துல பார்த்தது இல்லை. ஆனா இப்போ அப்படி பார்த்தா தப்பு இல்லைன்னு தோணுது. இப்போ இந்த செகண்ட்ல இருந்து நான் உன்னை லவ் பண்றேன் சது.” என்றவனின் முகத்தில் குறும்பும் வனப்பும் கூடிப் போனது.

“லவ்வா?” பேந்த பேந்த விழித்த சத்யரூபா தான், “நீ ஒரு மார்க்கமா தான் இருக்க எலி. வா கிளம்பலாம்.” என்று போலியாய் முறைத்தபடி அங்கிருந்து கிளம்பிட, அவளுக்குள்ளும் சில பட்டாம்பூச்சிகள் படபடவெனப் பறக்கவே செய்தது.

அவளை வீட்டில் இறக்கி விட்ட எழில், “என் பொறந்த நாள் அன்னைக்கு லவ் ஓகே ஆகணும்ன்னு இருந்துருக்கு பாரேன்.” என சிரிப்பை அடக்கிக்கொண்டு கூற,

“எதே? நான் இன்னும் ஓகேவே சொல்லல.” என்றாள் விழிகளை விரித்து.

“ஓ… நீ சொல்ல மாட்டேன்னு வேற சொல்லுவியா. சரி அப்போ இப்பவே நோ சொல்லிடு.” என முடிவாக வண்டியில் அமர்ந்திருந்தவனுக்கு, அவள் தன்னை மறுக்க மாட்டாள் என்ற கர்வம் அதிகமாகவே இருந்தது.

சத்யரூபாவிற்கு தான் மறுத்துப் பேச எதுவோ தடுத்தது. பிறந்தது முதல், தன்னுடன் இருப்பவன், இறுதி வரை தன்னுடன் பயணித்தால்… என்ற ஆர்வம் பொங்கியதோடு, தாயையும் அருகில் இருந்து பார்த்துக்கொள்ளலாம் என்ற ஆசையும் கூடிக்கொள்ள, அந்நொடி அவனது பெற்றோரைப் பற்றி சுத்தமாக மறந்து போனாள்.

“முதல்ல அக்கா கல்யாணம் நல்லபடியா முடியட்டும். அதுக்கு அப்பறம் இதை பத்தி பேசலாம்.” என்று சமாளித்தவளை அவன் விடவில்லை.

“இதை பத்தின்னா எதை பத்தி சது?” மூக்கை சுருக்கி புரியாதவன் போல பேசியதில், “உனக்கு தெரியாதாக்கும்” என்று சிணுங்கினாள் நளினமாக.

“ப்ச். தெரியாதே… எதை பத்தின்னு விளக்கமா சொல்லு சது” என்று குறும்பாய் கேலி செய்திட, “போ மாமா…” என வெட்கம் கொண்டு வீட்டினுள் ஓடினாள் சத்யரூபா.

அவன் முகத்திலும் மலர்ந்த புன்னகை. திடீரென நெஞ்சில் பூத்த காதலை தனக்குள் பொக்கிஷமாக பாதுகாத்துக் கொண்டான்.

திட்டமிட்டு காதலிக்கவில்லை என்றாலும் கூட, அதன்பிறகான நாட்கள் இருவருக்கும் ரம்மியமாக நகன்றது. ஏற்கனவே சத்யரூபாவின் மீது உயிரை வைத்திருப்பவன் தான். இப்போதோ, அவளே அனைத்துமாகிப் போனாள்.

சத்யரூபாவிற்கும், அப்புது காதல் பிடித்திருந்தது. முக்கியமாக எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் போனது.

காதல் புறாக்களாய் ஊருக்குள் வலம் வந்தாலும், இருவரும் காதல் உணர்வுகளை வெளியில் காட்டிக்கொண்டது இல்லை.

பேச்சிலும் செயலிலும் எப்போதும் போலவே ஒருவரை ஒருவர் வாரி, அன்பை பரிமாறி, முன் போன்றே உறவைத் தொடர்ந்தனர்.

வைஷாலிக்கு திருமணம் நடைபெறும் வரை, அவர்களின் காதலை யாரிடமும் பகிர இருவருக்கும் விருப்பமில்லை.

அப்படியும், கடைக்கு செல்லும் போதோ மற்ற இடங்களிலோ ஒரு சிலர் அவர்களிடம் கேட்டே விடுவர், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஜோடியா என்று. அதற்கு இருவரும் மறுத்ததில்லை.

அரசல் புரசலாக இவ்விஷயம் ஆனந்தியின் காதுக்கு வந்ததே வினையாகி போனது.

அவரோ நேரடியாக எழிலிடமே கேட்டு விட்டார். முதலில் தடுமாறிய எழில், பின், “ஏன்மா, நீங்க கேள்விப்பட்டது உண்மையா இருந்தா என்ன பண்ணுவீங்க?” எனக் கேட்டான்.

அதில் எரிச்சல் மிகுந்தாலும், அடக்கிக்கொண்டு, “உனக்கு பிடிச்சதை மீறி இந்த வீட்ல ஏதாவது நடக்குமாப்பா.” என சமாளித்தார்.

அவனுக்கும் உண்மையைக் கூற வாய் வரை வந்தது தான். ஆனாலும், வைஷாலியின் திருமணத்தை மனதில் வைத்து, “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைம்மா. அப்படியே சத்யாவை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா கூட, கண்டிப்பா உங்ககிட்ட வந்து கேட்பேன்.” என்று இருவேறு பதில்களாக கொடுத்து விட்டு போனான்.

ஐயப்பன் தான், சிறிது யோசனையுடன், “எனக்கு எதுவோ சரியா படல ஆனந்தி. திடீர்ன்னு அந்த புள்ளய கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் வருவான். ஏதோ, சும்மா உன் அண்ணன் குடும்பத்தோட உறவாடிட்டு இருக்கானேன்னு அமைதியா இருந்தா எல்லாம் கை மீறி போய்டும் போல.”
என்றார்.

“அதான் அவன் ஒண்ணும் இல்லன்னு சொல்றான்ல” என்ற ஆனந்தியிடம், “ஒருவேளை ஏதாவது இருந்தா? இதை நாசூக்கா கட் பண்ணி விட்டுடு.” என்று பணித்து விட்டு வெளியில் சென்றார்.

ஆனந்தியும் ஒரு திட்டத்தை தீட்டி விட்டு, சத்யாவின் வீட்டிற்கு சென்றார்.

அத்தியாயம் 22

சுடிதார் தைக்கும் வேலையாக இருந்த சத்யரூபா, ஆனந்தியைக் கண்டதும் முதலில் திகைத்து பின் வியந்தாள்.

தந்தை இறந்த பிறகு, இந்த வீட்டிற்கு அவர் வந்ததே இல்லையே. தாமரைக்கும் ஒரே மகிழ்வு தான்.

“வா ஆனந்தி. இப்பவாவது உனக்கு வரணும்ன்னு தோணுச்சே. உட்காரு” என்று பாயை எடுத்து விரித்திட,

“நான் வர்றதுக்கும் நேரம் காலம்ல்லாம் இருக்குல்ல அண்ணி.” என்றவர் வீட்டை சுற்றி பார்வையிட்டார்.

“சரி இரு. காபி எடுத்துட்டு வரேன்” என்று தாமரை எழப்போக, “இருங்க இருங்க… முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன்.” என்றவர், “எங்க அண்ணன் தான் இல்லாம போய்ட்டாரு. என் அண்ணன் பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணை என் வீட்டு மருமகளா ஆக்கிக்கணும்ன்னு உறுத்திக்கிட்டே இருக்கு அண்ணி.” என்றார் வாய் நிறைய.

சத்யரூபாவிற்கே பெரும் வியப்பு தான். தனது அத்தையா இது? என மலர்ந்தவளுக்கு, அவரது உண்மை குணம் அப்போது தெரியவில்லை.

“ரொம்ப சந்தோசம் ஆனந்தி.” என தாமரை மகிழ்ந்து “வைஷாலிக்கு இப்ப தான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சு இருக்கோம்” என்றார்.

அதில் திருதிருவென விழித்த சத்யாவிற்கு, அய்யயோ என்றிருந்தது.

ஆனால், ஆனந்தி தான், “எழிலுக்கு கல்யாணம் ஆக இன்னும் ரெண்டு வருஷம் ஆகும் அண்ணி. அதுக்கு அப்பறம் தான் அவனுக்கு கல்யாண யோகம் இருக்குன்னு ஜோசியர் சொன்னாரு. நீங்க வைஷுவுக்கு முடிங்க. அதான் சத்யா இருக்காளே.” என்று அவள் வயிற்றில் பாலை வார்க்க, சத்யாவிற்கு அனைத்தும் கனவு போல இருந்தது.

தாமரையும், “உன் விருப்பம் ஆனந்தி. எனக்கு எதுவா இருந்தாலும் சந்தோசம் தான்.” என்றார் உற்சாகமாக.

ஆனந்தியோ, “அப்போ என் விருப்பப்படி செய்ய வேண்டிய முறையெல்லாம் செஞ்சுடுங்க அண்ணி.” என மெல்ல தூண்டில் போட, தாமரையும் “அதுக்கு என்ன ஆனந்தி. எல்லாம் முறைப்படி செஞ்சுடலாம்.” என வேகமாகக் கூறிட, சத்யா அப்போது தான் மாய உலகில் இருந்து மெல்ல வெளியில் வந்தாள்.

“செய்ய வேண்டியதுன்னா? என்ன செய்யணும் அத்தை.” சற்று நிறுத்தி கேள்வி எழுப்ப,

“என் அண்ணன் வீட்ல இருந்து எதுவும் கேட்க கூடாதுன்னு எனக்கும் ஆசை தான் சத்யா. ஆனா, உன் மாமா வீட்ல அப்படி எடுத்துப்பாங்களா.” என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டதில், அவள் கூர்மையாய் பார்த்தாள்.

ஆனந்தி மேலும் தொடர்ந்து, “எப்படியும் வைஷாலிக்கு கம்மியாவா செய்வீங்க. அதை விட அதிகமா செஞ்சுட்டா போச்சு.” என்று அசட்டையாக கூறிட, தாமரை, “நீ என்ன வேணும்ன்னு சொல்லு எல்லாமே செஞ்சுடலாம்” என்றார் வேகமாக. அவருக்கு, தனது பெண்ணை எழிலுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது.

“ம்மா!” சத்யாவின் அதட்டலில் வாயை மூடிக் கொண்டவரை அழுத்தமாக முறைத்தவள், “நீங்க தெளிவா சொல்லுங்க அத்தை. என்ன செய்யணும்?” எனக் கையைக்கட்டி கொண்டு வினவினாள்.

அவளது திமிரில் கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், அதனை அடக்கிக்கொண்டு, “வைஷாலிக்கு எப்படியும் வெளியூர்ல தான் மாப்பிள்ளை பார்ப்பீங்க. இங்க, இருக்குற வீடு தோட்டத்தை எல்லாம் நீயும் கல்யாணம் பண்ணி வந்துட்டா யாரு பார்ப்பா?” என்றவரை பார்வையால் எரித்தவள், “அதுக்கு…?” என்றாள் பல்லைக்கடித்து.

அவர் நேரடியாக தாமரையைப் பார்த்து, “இதை எல்லாம் வரதட்சணையா குடுத்துடுங்க அண்ணி. யாருக்கு குடுக்க போறீங்க, அங்க சுத்தி இங்க சுத்தி உங்க பொண்ணுக்கு தான.” என பதவிசாக கூற,

“எல்லாத்தையும் உங்க கிட்ட குடுத்துட்டு எங்க அம்மா சாப்பாடுக்கு என்ன பண்ணுவாங்க அத்தை.” கோபத்தை அடக்க இயலாமல் எகிறினாள்.

“பொண்ணுங்களை காலா காலத்துல கட்டிக்கொடுத்ததுக்கு அப்பறம், அவங்களுக்கு என்ன இருக்கு சத்யா. ரெண்டு பொண்ணுங்க வீட்லயும் மாறி மாறி இருந்துட்டு, கூழோ கஞ்சியோ குடிச்சுட்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்.” என்று சலிப்புடன் கூறியதில், அவளுக்கு ஆத்திரம் எல்லையைக் கடந்தது.

“என் அப்பா, அவங்களுக்குன்னு இருக்க வீடும், விவசாயம் பண்ணி பொழச்சுக்குற அளவு வயலும் வச்சுட்டு போயிருக்காரு அத்தை. அதை யாரோ ரோட்டுல போறவங்ககிட்ட குடுத்துட்டு, எங்க அம்மா பிச்சை எடுக்கணும்ன்ற அவசியம் இல்லை.” என்று சுள்ளென கூற,

“என் பையன் உனக்கு ரோட்டுல போறவனா?” ஆனந்தி அவளை மடக்கினார்.

அவளும் கோபத்தில், “ஆமா… இதெல்லாம் குடுத்து தான், உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா, அப்படி பட்ட கல்யாணம் எனக்கு தேவையே இல்லை. இதுவரை நீங்க இங்க வந்தது இல்லைல தான. இனிமேலும் வராதீங்க. வெளில போங்க முதல்ல.” என்று கத்தி விட்டாள்.

தாமரை பதறி, “சத்யா அமைதியா இரு” என்றதில், “நீ முதல்ல உள்ள போம்மா”. என அதட்டியவள், ஆனந்தியின் புறம் திரும்பி, “கூழும் கஞ்சியும் குடிச்சுட்டு வாழணுமாம்ல. சாவடிச்சுடுவேன். என் அம்மாவுக்கு என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். மூடிட்டு கிளம்புங்க.” என விரல் நீட்டி எச்சரித்திட, ஆனந்தி கோபப்பார்வை வீசி விட்டு சென்றார்.

சத்யாவின் வீட்டிலிருந்து வந்த அவளது சத்தத்தின் மூலம், ஆனந்தியைக் கண்டபடி பேசி விட்டாள் என்ற புரளியே அதிகம் பரவியது. கோபத்தில் அவள் விட்ட வார்த்தைகள் அவளுக்கு எதிராக சதி செய்ய, எழிலுக்கோ ஒன்றுமே புரியவில்லை. வீட்டில் ஆனந்தி வேறு வாயைப் பொத்திக்கொண்டு அழுது தீர்த்திட,

“அம்மா… என்னதான் நடந்துச்சு… நீங்க ஏன் அங்க போனீங்க.” என்று கேட்டவனிடம்,

“எனக்கும் சத்யாவை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு ஆசை வந்துச்சுப்பா. அதான், பொண்ணு கேட்டு போனேன். கல்யாணத்துக்கு அப்பறமும், வயல் வேலை எல்லாம் பார்த்து உடம்பை கெடுத்துக்காத ஆள் போட்டுக்கலாம். அண்ணியையும் நம்மளே வச்சுக்கலாம்ன்னு சொன்னேன். வைஷுக்கு கல்யாணம் ஆனா, அவள் கூட கொஞ்ச நாள் இருக்க ஆசைப்படுவாங்க. வயசான காலத்துல தனியா இருந்து கஷ்டப்படவேணாம்ன்னு தான்ப்பா சொன்னேன். அவள் அதை புருஞ்சுக்காம, என்னென்னமோ பேசிட்டா.

அண்ணன் வீட்டுக்கு ஆசையா போன என்னை, வீட்ட விட்டு வெளில போக சொல்லிட்டா. உன் மாமா இருந்திருந்தா என்னை இப்படி விட்டுருப்பாரா. இந்நேரம், மகள்ன்னு கூட பார்க்காம அடிச்சுருப்பாரு.” என்று அழுது புலம்பி அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்தினார்.

தாய் பேசியதை அப்படியே நம்பி விட்ட எழிலுக்கு, சத்யாவின் மீது கோபம் வந்தது.

ஆனந்திக்கு சத்யாவின் குணம் அத்துப்படி. தந்தை இறந்தபிறகு, வீட்டை முழுப் பொறுப்புடன் பார்த்துக்கொள்பவள், வைஷாலிக்கு தேவையென்றால், செலவை பற்றி யோசியாமல் செய்வாள். தஞ்சாவூர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வைஷாலிக்கு, அங்கு கோச்சிங் சரியாக இல்லாத காரணத்தால், வம்படியாக சென்னைக்கு சென்று வேறு கல்லூரியில் படிக்க சொல்லி வற்புறுத்தினாள்.

“வேணாம் சத்யா. வீண் செலவு. இங்க இருந்தே படிச்சுக்குறேன்” என்று வைஷாலி மறுத்தும், அவள் கேளாமல், சொன்னதை செய்தும் விட்டாள். அங்கு பழக்கமானவர்கள் தான் இந்திரஜித்தும் நீரஜாவும்.

இதே, சத்யாவிற்கு தேவை என்றால், அதை பல முறை யோசித்தே செய்வாள். இந்த வரதட்சணையை வைஷாலிக்கு என்று கேட்டிருந்தால், கண்டிப்பா ஒத்துக்கொண்டிருப்பாள். அதனாலாயே இலாவகமாக பேசி, சத்யாவை பெண் கேட்டார் ஆனந்தி. அவர் எறிந்த கல் சரியாக வேலை செய்ய, இப்போது முழுதாய் அவர்கள் உறவு முறிவதற்காக காத்திருந்தார்.

உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்துடன் வயலுக்கு சென்று விட்டாள் சத்யரூபா.

அவளைத் தேடி எழிலும் அங்கு வந்து விட்டு, “உனக்கு அறிவிருக்கா இல்லையா சத்யா. ஏன் அம்மாகிட்ட அப்படி பேசுன?” என்று சீறினான்.

அந்நேரத்தில் பொறுமையாய் பேசிட அவனுக்கும் முதிர்ச்சி இல்லையோ என்னவோ.

“ஆமா ஆமா உன் அம்மாவுக்கு தான் நிறைய அறிவு பொங்கி வழியுதே.” என சாடியதில், “சது… வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தவங்களை வெளில அனுப்பியிருக்க.” என்றவனிடம், “அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியுமா உனக்கு?” என்றாள் கடுப்பாக.

“என்ன வேணாலும் சொல்லிருக்கட்டும், நீ பொறுமையா பேச வேண்டியது தான.”

“ஆக, நான் பேசுனது தான் தப்பு. இல்ல?”

“நான் ஒண்ணும் ரோட்டுல போறவன் இல்லை சது.” இறுகிய குரலில் எழில் கூறிட,

“யாரா வேணாலும் இருக்கட்டும். அதுக்காக இருக்கறதை எல்லாத்தையும் எழுதி குடுக்க முடியாது” என்றாள்.

புருவம் சுருக்கியவன், “யாரும் உங்கிட்ட எதுவும் கேட்கல.” என்றதில், “ஏன் உன் அம்மா எதுவும் முழுசா சொல்லலையா மாமா?” என எகத்தாளமாக கேட்டாள்.

“சொன்னாங்க. ஆனா, நீ தான் அவங்க பேசுனதை தப்பா புருஞ்சுக்கிட்ட.” என்றவனுக்கும், அவள் வெடுக்கென பேசி விடுவாள் என்று தெரியும். அவளுக்கும், எழிலுக்கு அவனது பெற்றோரை பற்றி புரிய வைக்க பொறுமை இல்லை.

“அப்போ நீ ரொம்ப கரெக்ட்டா புருஞ்சுக்கிட்ட. அப்படி தான” எரிச்சலுடன் சத்யா பேசியதில்,

“அவங்க அப்படியே உன் சொத்தை எழுதி கேட்டு இருந்தாலும் நீ என்ன செஞ்சுருக்கணும்? என்கிட்ட பேசி இருக்கணும் சது. என்னை பத்தி தெரிஞ்சும், உங்க பையனே வேணாம்ன்னு சொல்லி அனுப்பி இருக்க. ஒரு செகண்ட் கூட உனக்கு என் மேல இருக்குற காதல் உறுத்தலையா இல்லை நான் அவ்ளோ பெரிய சேடிஸ்ட்டா” என்றவனுக்கு ஆதங்கம் பொங்கியது.

அவளுக்கு இருக்கும் கோபத்தில் இந்த சிறுசிறு உணர்வுகள் எல்லாம் சுத்தமாக பாதிக்கவில்லை.

“உறுத்தல மாமா. உன் அம்மா அப்பா பத்தி தெரிஞ்சும் உன்னை காதலிச்சேன் பாரு என்னை சொல்லணும். நீ ஒண்ணும் பெரிய தியாகி மாதிரி, அப்பா இல்லைன்னு பாவப்பட்டு, மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லை மாமா. உன் அம்மாவும் என்னவோ பெரிய அப்பாடக்கர் மாதிரி வந்து அதிகாரம் பண்ண வேண்டிய தேவையும் இல்லை.”

“உன்னை காதலிச்சது பாவப்பட்டோ, என் மாமா இல்லைன்றதுனாலயோ இல்லை.” சிறிது சிறிதாக அவனும் உணர்வுகளை இழந்து கொண்டிருந்தான்.

“எது எப்படியோ, இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம் மாமா.” என்றாள் கையெடுத்து கும்பிட்டு.

“எல்லாத்தையும்ன்னா…” துக்கம் தொண்டையை அடைக்க கேட்டான் எழிலழகன்.

“எல்லாத்தையும் தான். இந்த காதல் கத்திரிக்காய் ஒரு எழவும் வேணாம். அது இருக்க போய் தான, இவ்ளோ பிரச்சனை.”

நொறுங்கிய மனதுடன், “முட்டாள் மாதிரி பேசாத சது. காதல்ன்னா ஆயிரம் பிரச்சனை வர தான் செய்யும். அதுக்காக” அவன் பேசி முடிக்கும் முன்னே,

“யப்பா சாமி. உன் குடும்பத்தோட தினமும் ஆயிரம் பிரச்சனையை சமாளிக்கிற அளவு எனக்கு தெம்பு கிடையாது. இனிமே மாமா பொண்ணை கல்யாணம் பண்றேன், கருமாரி பண்றேன்னு யாரும் உன் வீட்ல இருந்து வராதீங்க. சுயபுத்தி இருக்குற யாரும் உன் குடும்பத்தை…” எனப் பேசி கொண்டே வந்தவள், எழிலழகனின் விழிகள் கலங்கியதில் சட்டென பேச்சைக் குறைத்தாள்.

தான் அதிகப்படியாய் பேசி விட்டது புரிந்தாலும், கோபம் தீரவில்லை. அவனும் தாய்க்கு தானே ஆதரவாக பேசினான். அவர்களை பற்றி கூறினால் கூட, புரிந்து கொள்ளாமல் போனால், வாழ்க்கையே நரகமாகி விடுமே. அவளுக்கு மட்டுமா. அவளது தாய்க்கும் தான். அவரை வருத்தி எடுத்து விடுவார்கள் என்பது மட்டும் உறுதி.

பொங்கிய வேதனையையும், எழுந்த அதிகப்படியான கோபத்தையும் கையை மூடி அடக்கிய எழிலழகன், “கடைசியா கேட்குறேன். என் காதல் உன்னை பாதிக்கவே இல்லையா சது.” இறைஞ்சும் குரலில் கேட்டதில், அவளுக்கும் சுருக்கென வலித்தது.

இந்த முடிவை எடுப்பது அவளுக்கும் சாதாரணம் இல்லையே. கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு, “பாதிக்குது மாமா. ஆனா, காதலுக்காக குடும்பத்தை இழக்குற அளவு பாதிக்கல.” என்றாள் பட்டென.

இரும்பாய் இறுகியவனுக்கு, காதல் வலி நெஞ்சை பிய்த்து எடுத்தது. ‘நான் ஒண்ணும் குடும்பத்தை இழக்க சொல்லலையே’ தன்மீது அமிலத்தை வீசுபவளின் மீது வஞ்சம் உருவெடுத்தது.

“நல்லா கேட்டுக்கோ சத்யா. இனிமே, நமக்குள்ள காதல், ப்ரெண்ட்ஷிப், டேஷ்ன்னு எதுவுமே இல்ல. ஆனா, கண்டிப்பா உனக்கு வலிக்க வைப்பேன். என் மாமா பொண்ணை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு கூட்டிட்டும் போவேன். இது நடக்கும்.” என்று இரத்த சிவப்பாய் மாறி போன விழிகளுடன் சபதம் எடுத்து விட்டு போனான் எழில்.

கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது அவனுக்கு. அவளுக்கும் தான்.

வீட்டிற்கு சென்று மூச்சு முட்ட அழுது தீர்த்தாள் சத்யரூபா.

இப்போதும் கண்ணைத் தாண்டி வெளிவரத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், இதழ்களை அழுந்தக் கடித்தபடி கடலலைகளை பார்த்தாள்.

இந்திரஜித்தோ எதுவுமே பேச இயலாத நிலையில் அமர்ந்திருந்தான். ஒரு நொடியில் காதலை தூக்கி எறிந்து விட்டவளைக் கண்டு சற்று பயமே எழுந்தது. தவறு இழைக்காத எழிலுக்கே இந்த நிலைமை என்றால், தான் செய்த தில்லாலங்கடி வேலையெல்லாம் தெரிந்தால், உறவை முடித்துக்கொண்டு சென்று விடுவாளோ… என நொந்து போனவனுக்கு, இதயம் சீரில்லாமல் துடித்தது.

பின், சமாளிக்கலாம். நம்மளால முடியாததா. என மனதை தேற்றி விட்டு, மனையாளை ஓரக்கண்ணில் பார்வையிட்டான்.

“தப்பு உன்மேலேயும் இருக்கு ரூப்ஸ்.” அவன் கண்டிப்பாக கூறியதில், கணவனின் புறம் திரும்பியவள், லேசாக முறைத்தாள்.

“எழிலுக்கு சூழ்நிலையை புரிய வச்சு இருக்கலாம்.” இந்திரஜித்திற்கு எழிலை நினைத்தால் சற்று பாவமாக கூட இருந்தது.

“என்ன புரிய வைக்கணும் இந்தர்…? உங்களுக்கு என் அத்தை மாமா பத்தி தெரியாது. ஒருவேளை நான் எழில் மாமாகிட்ட அவங்களை பத்தி சொல்லி இருந்தா, ஆணவ கொலை பண்ண கூட தயங்க மாட்டாங்க. அவ்ளோ வக்கிர புத்தி. அதனால தான, உங்க அண்ணன் மண்டபத்தை விட்டு போனப்ப கூட நான் எழில் மாமாவை கேட்காம உங்ககிட்ட அக்காவை கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.

ஆனா, அவள் என்னென்னா, என் தலைல மிளகா அரைச்சுட்டு அவன் பின்னாடி போய்ட்டா. எப்படியோ போய் பட்டு புரியட்டும். அப்பறம் புருஞ்சு என்ன ஆக போகுது. எழிலுக்கே அவன் பெத்தவங்களை பத்தி தெரியல. வைஷுக்காவுக்கு அவங்களோட கேரக்டர் எல்லாம் சுத்தமா தெரியாது. கடைசிவரை அடிமையாவே வாழட்டும்.” என்று சினத்துடன் சீறினாள்.

“தெரியணும் தெரியணும்ன்னா. சொன்னா தான தெரியும்டி. பாவம் வைஷு.” எனப் பதறி போனவனுக்கு தோழியை எண்ணி கலக்கமாக இருந்தது.

சத்யாவோ தோளை குலுக்கிக்கொண்டு, “அவங்க அவங்க விரும்பி போன வாழ்க்கை. அதை அவங்களே பார்த்துக்கட்டும்” என்று அசட்டையாக கூறி விட்டு, எழுந்தாள்.

“கல்நெஞ்சக்காரி…” என மனைவியை திட்டி விட்டு,

“இருந்தாலும், எழில்கிட்ட நீ பேசி இருக்கணும்” என்று மீண்டும் கூறியதில், பொறுமை இழந்த சத்யா, “யோவ்… இப்ப என்னையா பிரச்சனை உனக்கு. அவ்ளோ பாவமா இருந்தா, என்னை டைவர்ஸ் பண்ணிட்டு அவன்கூட கல்யாணம் பண்ணி வைக்கிறியா?” என இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

“எதே?” என மிரண்டவள், அவசரமாக அவள் இடையைப் பற்றி அவனருகே இழுத்தான்.

“சாவடுச்சுடுவேன்” என அவளை போலவே எச்சரித்தவன், “என்னை விட்டு போக, நீயே நினைச்சாலும் உனக்கு வாய்ப்பு கிடையாது தியா. ஹட்ச் டாக் மாதிரி, நீ எங்க போனாலும் ஐ வில் ஃபாலோ யூ! மைண்ட் இட்.” எனக் கண்டிப்புடன் கூறியவனின் குரலில் காதலும் அதிகளவில் கலந்திருந்தது.

அதில் திகைத்த சத்யரூபா தான், மெல்லிடையில் பதிந்த அவனது கரங்கள் ஏற்படுத்திய குறுகுறுப்பில் நெளிந்து கொண்டிருந்தாள்.

அலைபாயும்
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
32
+1
189
+1
8
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.